ஏகத்துவம் – பிப்ரவரி 2015

தலையங்கம்

அசத்தியத்தின் பதில் அசையாத மவுனமே!

கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க மாநாடு என்ற பெயரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் மேலப்பாளையம் மஜ்லிசுல் உலமா சபை இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தினர்.

இதில் கலந்து கொண்ட ஸைபுத்தீன் ரஷாதி பேசும்போது அவருக்கே உரிய பாணியில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

நமது ஜமாஅத்தில் கூடவே இருந்து குழிபறித்த ஹாமித் பக்ரீயும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். தன்னைப் போன்ற ஒரு பொய்யர் கிடைத்த கொள்ளை மகிழ்ச்சியில் தலைகால் புரியாத சந்தோஷத்தில், “தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஆலிம்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஆலிம்கள் வெளிவருவதற்குத் தக்க காரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஸைபுத்தீன் சரியான ரீல் விட்டார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கடந்த 11.01.2015 அன்று மேலப்பாளையம் பஜார் திடலில் “என்னைக் கவர்ந்த ஏகத்துவம்’ என்ற தலைப்பில், சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து விலகி சத்தியத்தில் சங்கமித்த ஆலிம்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும், ஏகத்துவ எழுச்சிப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்டம் என்று தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கி எழுந்ததோ மாநாட்டிற்கான கூட்டம்.

ஆலிம்களுக்கான இந்நிகழ்ச்சிக்கு, அழைப்பு கொடுக்கப்பட்ட ஆலிம்கள் ஐம்பது பேர். கலந்து கொள்ள இயலாமல் போனவர்களைத் தவிர்த்து 37 பேர் இதில் பங்கேற்றனர்.

ஆலிம்களின் கோட்டையான, மன்பவுல் உலூம் கல்லூரியைத் தாயகமாகக் கொண்ட லால்பேட்டையிலுள்ள மன்பஈக்கள் பலர் தவ்ஹீதுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

இதுபோன்று பைஜிகள், பாகவிகள், மிஸ்பாஹிகள், உஸ்மானிகள், தாவூதிகள், காஸிமிகள், ரியாஜிகள், தேவ்பந்தி, ஜமாலி, ஹஸனி, இல்ஹாமி, சிராஜி, கைரி, ஸஆதி, குறிப்பாக மஹ்ழரிகள் என்று பல்வேறு மதரஸாக்களில் பயின்று பட்டம் பெற்ற ஆலிம் பெருமக்கள் தங்களை தவ்ஹீத் ஜமாஅத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டு அதன் அழைப்பாளர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தவ்ஹீத் ஜமாஅத் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த ஜமாஅத்தை விட்டு வெளியே சென்றவர்கள் ஒரு சில துரோகிகள் மட்டும் தான். ஆனால் சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து விலகி தவ்ஹீதில் இணைந்த ஆலிம்கள் ஏராளமானோர் என்ற உண்மை இந்தக் கூட்டத்தின் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே தெரிய வந்தது.

இப்படியோர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஸைபுத்தீன் ரஷாதிக்கு நாம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தாக வேண்டும். ஸைபுத்தீன் சொன்ன பொய்களுக்கு இந்தப் பொதுக்கூட்டம் வார்த்தை ரீதியிலான பதிலாக இல்லாமல் செயல்பூர்வமான பதிலடியாக அமைந்தது. ஆலிம்கள் காலியாவது தவ்ஹீதுக் கூடாரத்தில் இல்லை, உங்கள் கூடாரத்தில் தான் என்று ஸைபுத்தீன் வகையறாவுக்குத் தெரிவித்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்குப்பட்டி அப்துல் கபூர் உஸ்மானி என்ற ஆலிமிடம், உஸ்மானிய்யா மதரஸாவின் ஆசிரியர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நீங்களாக விரும்பி உங்கள் பெயரைக் கொடுத்தீர்களா? அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தினர் அவர்களாக உங்கள் பெயரைப் போட்டுக் கொண்டார்களா?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர், “நான் தவ்ஹீத் ஜமாஅத்தில் பொறுப்பில் இருக்கிறேன். என் பெயரெல்லாம் தானாக வந்து விடும்” என்று பொட்டில் அடித்தாற்போல் பதிலளித்துள்ளார். பதிலளித்தது போலவே இந்நிகழ்ச்சியில் வந்து பங்கு கொள்ளவும் செய்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் என்பது தேர்தல் நேரத்தில் வாசலைத் திறந்து வைத்து, கிரண்பேடி போன்ற சந்தர்ப்பவாதிகளை வாரிச் சுருட்டும் பிஜேபி போன்ற அரசியல் கட்சியல்ல! மறுமையை, தூய மார்க்கத்தை லட்சியமாகக் கொண்ட அமைப்பாகும். பெயருக்காகவோ, விளம்பரத்திற்காகவோ இங்கு யாருடைய பெயரையும் போட வேண்டிய அவசியமில்லை. உண்மை என்னவெனில், ஆலிம்கள் தாமாகத் தான் சத்தியத்தைத் தெரிந்து முன்வந்துள்ளனர்.

இதில் கலந்து கொண்ட மவ்லவி அப்துல் காலிக் பைஜி அவர்கள் தவ்ஹீதுக்கு வந்ததற்குரிய காரணம் களியக்காவிளை விவாதம் தான்.

அப்துல் காலிக்கிற்கு களியக்காவிளை விவாதம் திருப்புமுனை என்றால் மவ்லவி அபூபக்கர் சித்தீக் ஸஆதிக்கு திருச்சி விவாதம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.இஜ்மாவுக்கு ஆதாரமாகக் குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை, சுன்னாவிலிருந்து ஒரு ஹதீஸைக் காட்டுங்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டும், ஸைபுத்தீன் மவுனம் காத்தார். அதுதான் அபூபக்கர் சித்தீக் ஸஆதியை தவ்ஹீதிற்குக் கொண்டு வந்தது.

ஸைபுத்தீன் ரஷாதி அவர்களே! விவாதத்தில் நீங்கள் காத்த மவுனம் தான் என்னை தவ்ஹீதில் கொண்டு வந்து சேர்த்த காரணம் என்று ஸைபுத்தீன் ரஷாதிக்கு, அபூபக்கர் சித்தீக் ஸஆதி அளித்த பதில் சத்தியத்தின் நெத்தியடியாக அமைந்தது.

ஹாமித் பக்ரி என்பவர் சுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கையைக் காதலித்து இங்கிருந்து வெளியேறவில்லை. மாறாக, ஜமாஅத்திற்கு எதிராகச் செய்த துரோகத்திற்காக, தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு அதனால் அங்கு போய் ஐக்கியமானவர். ஆனால் சுன்னத் வல்ஜமாஅத்திலிருந்து விலகி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆலிம்களோ சத்தியத்தை ரசித்து, ருசித்து இங்கு வந்துள்ளனர் என்ற உண்மையையும் மக்களுக்கு அல்லாஹ் உணர்த்திக் காட்டினான்.

கேரள மாநிலம் காந்தபுரம் அபூபக்கர் முஸல்லியார் என்பவர் அசத்தியவாதிகளின் தலைவராக இருப்பவர். அவர் கோவையில் விவாதம் செய்ய வருகிறேன் என்று சொல்லிவிட்டு, பின்னர் வராமல் பின்வாங்கினார். இது தான் திருப்பூர் ரஹ்மத்துல்லாஹ் பாக்கவி அவர்கள் தவ்ஹீதுக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது என்பதை அவரது உரையிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்கத் தவறக்கூடாது. பொதுவாக எந்த விவாதம் நடந்தாலும் அதில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைவது போன்று தான் இருக்கும். இரு தரப்புமே நாங்கள் தான் வென்றோம் என்று வாதிடுகின்றார்கள். ஆனால் அபூபக்கர் சித்தீக் ஸஆதி, அப்துல்காலிக் பைஜி போன்றோர் சத்தியத்திற்கு வந்து சேர்வதன் மூலம் விவாதங்களின் வெற்றியை நாம் முடிவு செய்யலாம்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:258)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று அசத்தியத்தின் பதிலே அதன் மவுனம் தான். ஆனால் சத்தியத்தின் அடியோ நெத்தியடியாக விழுகின்றது. இறுதியில் அசத்தியம் நொறுங்கிவிடுகின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)

உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளதுஎன்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17:81)

—————————————————————————————————————————————————————-

ஹதீஸ்களை மறுப்பது மத்ஹபுவாதிகளே!

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

குர்ஆன், ஹதீஸ் தான் இஸ்லாத்தின் அடிப்படை! இரண்டில் எந்த ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுத்தாலும் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறிவிடுவான்.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 59:7

நபிகள் நாயகம் ஒன்றைச் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதே ஒரு முஸ்லிமின் கடமை. நபிகள் நாயகம் சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்பவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது.

இந்தக் கொள்கை பிரகடனம் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாரக மந்திரமாக, தமிழகத்தில் பன்னெடுங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் நம்மை எதிர்த்தது, அடித்தது, உதைத்தது ஆகிய அனைத்தும் இந்தக் கொள்கையை உரக்கச் சொன்னதன் விளைவாகவே தவிர சொந்தப் பகையினால் அல்ல!

முன்னோர்களைப் பின்பற்றாதீர்கள், பெரியோர்களைப் பின்பற்றாதீர்கள், இமாம்களை, சஹாபாக்களைப் பின்பற்றாதீர்கள். நபிகள் நாயகம் அவர்களை (ஹதீஸ்களை) மட்டும் பின்பற்றுங்கள் என்று நாம் சொன்னதாலேயே இவர்கள் நம்மை எதிர்த்தார்கள், நமது பிரச்சாரத்தை ஏற்க மறுத்தார்கள்.

இத்தகையவர்கள் இன்று நம்மை நோக்கி, “ஹதீஸை மறுப்பவர்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஒரு செய்தி குர்ஆனுடன் முரண்படுகிறது. எனவே இது நபிகள் நாயகத்தின் கூற்றல்ல என்று சொல்பவர்கள் ஒரு போதும் ஹதீஸை மறுத்தவர்களாக மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு அற்றவர்களாக இந்தப் போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் நம்மை விமர்சிக்கின்றார்கள்.

இதில் வியப்பிலும் வியப்பு என்ன தெரியுமா?

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைத் தெளிவுபடுத்தாமல் மக்களிடையே பிரச்சாரம் செய்வதே தவறு. அதையும் தாண்டி நபிகள் நாயகத்தின் பெயரால் துணிந்து பல ஹதீஸ்களைப் புதிது புதிதாக இட்டுக் கட்டிச் சொல்வது நரகில் தள்ளும் நாச காரியம். அதை மனஉறுத்தலின்றி செய்யும் சைபுத்தீன் ரஷாதி வகையறாக்களும் ஹதீஸ்களை மறுப்பவர்கள் என்று நம்மை விமர்சிப்பது தான் நமக்கு பெரும் வியப்பை அளிக்கின்றது.

காரணம், இந்த விமர்சனத்தை முன்வைப்பதற்குக் கொஞ்சமும் தகுதியற்றவர்களாகவே போலி சுன்னத் வல்ஜமாஅத்தினர் காட்சியளிக்கின்றார்கள்.

உண்மையில் நாம் ஹதீஸை மறுப்பவர்களில்லை என்பது தனி விஷயம். நபிகள் நாயகம் குர்ஆனுக்கு முரணாகப் பேச மாட்டார்கள்; ஆனால் இன்ன ஹதீஸ் குர்ஆனுடன் முரண்படுகிறது; எனவே இதை நபிகள் நாயகம் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று சொல்வது ஒரு போதும் ஹதீஸை மறுப்பதாகாது.

ஆனால் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் நேரடியாகவே பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கின்றார்கள். அவர்கள் மறுக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை என்பதே உண்மை.

புறக்கணிப்பதும் மறுப்பதே!

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

இந்த வசனம் சொல்வதென்ன?

ஒரு வசனம் எந்தக் கருத்தை வலியுறுத்துகிறதோ அதைப் புறக்கணிக்கும் வகையில் நடப்பது அந்த வசனத்தை மறுக்கும் செயல் என இவ்வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான். அது போலவே ஹதீஸில் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கும் போது அதை தமது செயலால் புறக்கணிப்பதும் ஹதீஸை மறுக்கும் செயலேயாகும்.

குறிப்பாக ஹதீஸ்களில் ஒரு செயல்  தடை செய்யப்பட்டிருக்க அதையே மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றுவதும், அனுமதிக்கப்பட்ட செயல்களை மனோ இச்சைப் பிரகாரம் தடைசெய்வதும் தெளிவாக ஹதீஸ்களை மறுக்கும் செயலாகும்.

இதை சுன்னத் வல்ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் மிக நிறைவாகவே செய்கிறார்கள்.

கப்ர் வழிபாடு       

இஸ்லாத்தில் கப்ர் வழிபாட்டிற்குத் துளியும் இடமில்லை. கப்ர் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடை செய்து பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. கப்ர் வழிபாடு செய்வதைக் கடுமையாகப் பல ஹதீஸ்கள் எச்சரிக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 1330

கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: முஸ்லிம் 1765

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்),

நூல்: முஸ்லிம் 1764

இத்தனை நபிமொழிகள் கப்ர் கூடாது என்று தடை செய்திருக்க அதை இஸ்லாத்தின் பெயராலேயே அரங்கேற்றுகிறார்கள் எனில் இது ஹதீஸை மறுக்கும் செயலில்லையா?

கப்ர் தொடர்பான நபிகள் நாயகம் கூறிய ஆதாரப்பூர்வமான பல நபிமொழிகளை மறுத்தால் மட்டுமே கப்ர் வழிபாடு செய்ய முடியும்.

பள்ளிவாசல் வளாகத்திலேயே கப்ர் கட்டி வழிபாடு செய்வதும், அதற்கு விழா எடுப்பதும் அதற்கு இஸ்லாத்தின் சாயம் பூசுவதும் ஹதீஸ்களை மறுக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன?

இதனடிப்படையில் கப்ர் வழிபாடு செய்பவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என சைபுத்தீன் ரஷாதி வகையறாக்கள் கொதித்து எழுந்துள்ளார்களா? அவ்வாறு கொதித்தெழுந்திருந்தால் உண்மையில் இவர்களுக்கு ஹதீஸின் மேல் அப்பழுக்கற்ற அக்கறை உண்டு என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கும் செயலுக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும், அவர்களின் அனாச்சார நிகழ்வுகளை ஆதரிப்பவர்களாகவுமே இருந்தார்கள், இப்போதும் இருக்கிறார்கள்.

மக்ரிப் முன் சுன்னத்

அனைத்து பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் தொழுகை உண்டு என்பது நபிமொழி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டுஎன்று மூன்று முறை கூறிவிட்டு, “விரும்பியவர் (அதைத் தொழுது கொள்ளட்டும்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி)

நூல்: புகாரி 624

இந்த ஹதீஸின் பிரகாரம் சுப்ஹ், லுஹர், அஸர், மக்ரிப், இஷா என எல்லா தொழுகைக்கும் முன் சுன்னத் உண்டு என்பது தெளிவாகிறது.

மேலும் மக்ரிபிற்கு முன் சுன்னத் உண்டு என்பது தெளிவாகவே வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்‘ (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும்போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும்தான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி)

நூல்: புகாரி 1183

மக்ரிபிற்கு முன் சுன்னத் உண்டு விரும்பியவர் தொழலாம் என்று நேரடியாக இந்த நபிமொழி தெரிவிக்கின்றது. சிலர் இயலாமையினால் முன் சுன்னத் தொழவில்லை எனில் அது வேறு விஷயம். ஆனால் மத்ஹபினர் மக்ரிபிற்கு முன் சுன்னத் தொழக்கூடாது என்று சட்டமே வகுத்துள்ளனர்.

அனைத்து நேர தொழுகைக்கான பாங்கிற்கும் அதன் இகாமத்திற்கும் இடையில் சிறிது இடைவேளை விடும் நிலையில் மக்ரிபிற்கு மட்டும் அவ்வாறு இடைவெளி விடுவதில்லை. “மக்ரிப் பாங்கு – 6:35, இகாமத் – உடன்’ என்று எழுதி வைத்திருப்பதுடன் ஒருவர் மக்ரிப் பாங்கு சொல்லி முடிக்கவும் மற்றொருவர் இகாமத் சொல்லத் துவங்கிவிடுவார்.

இதுவும் ஹதீஸை மறுக்கும் செயல் தானே! நபிகள் நாயகம் தெளிவாக மக்ரிபிற்கு முன் சுன்னத் உண்டு, விரும்பியவர் தொழலாம் என்று சொல்லியிருக்க அதற்குக் கொஞ்சமும் இடமளிக்காதவாறு நடந்து கொள்வது ஹதீஸை மறுக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன? இதற்கு ஹதீஸ்களை மறுக்கும் மத்ஹபினர் பதிலளிப்பார்களா?

பெண்கள் பள்ளிக்கு வரக்கூடாதா?

பெண்கள் பள்ளிக்கு வரலாமா? என்ற கேள்விக்கே இஸ்லாத்தில் இடமில்லை.

நபிகளாரின் காலத்தில் ஐந்து நேரத் தொழுகைக்கும் ஜமாஅத்துடன் பெண்கள் கலந்து கொள்வார்கள்.

பள்ளிக்கு வர பெண்கள் அனுமதி கேட்டால் அனுமதி மறுக்க கூடாது என்பது நபியின் உத்தரவு,

இமாம் தவறிழைக்கும் போது அதைச் சுட்டிக்காட்ட பெண்கள் கை தட்ட வேண்டும் என்ற தனிவழியை நபியவர்கள் கற்றுந் தந்தது (புகாரி 1234), குழந்தையின் அழுகுரல் கேட்டு தாயின் மனம் பரிதவிக்க கூடாது என்றெண்ணி நபிகள் நாயகம் தொழுகையைச் சுருக்கித் தொழுதது (புகாரி 707), ஆண்கள் அமர்வில் சீராக அமரும் வரை பெண்கள் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்த கூடாது என்ற நபியின் கட்டளை உள்ளிட்ட எண்ணிடலங்கா ஹதீஸ்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கின்றன.

சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், “ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: புகாரி 362

நம்பிக்கையுள்ள (மூமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்துகொள்ள முடியாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 578

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 865

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 5238

நபிகள் நாயகம், பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதித்த பின் அதைத் தடை செய்யும் அதிகாரம் யாருக்குமில்லை. அப்படி ஒருவர் தடை செய்வதாக இருந்தால் இத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஆனால் மத்ஹபினர் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்கின்றனர். மத்ஹபு நூல்களில் அவ்வாறு சட்டமும் இயற்றி வைத்துள்ளனர்.

தற்போது பெண்கள் பெருநாள் தொழுகைக்கு வருவதை நான் வெறுக்கிறேன். மேலும் ஜூம்ஆ மற்றும் கடமையான தொழுகைகளில் (பள்ளியில்) கலந்து கொள்வதையும் நான் வெறுக்கிறேன். வயோதிக பெண்கள் இஷா, பஜ்ர் பெருநாள் தொழுகைகளில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அபூஹனீபா கூறுகிறார்.

நூல்: அல்முஹீத், பாகம் 2, பக்கம் 208

நபிகள் நாயகம் பெண்கள் பள்ளிக்கு வருவதை அனுமதித்த பிறகு இவ்வாறு சட்டம் எழுதி வைப்பதும் அதனடிப்படையில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்வதும் ஹதீஸ்களை மறுக்கும் செயலேயாகும். இதற்கு மத்ஹபினர் என்ன பதிலை அளிக்கப் போகின்றனர்?

இப்படி மத்ஹபினர் ஹதீஸ்களோடு போர் செய்யும் வகையில் சட்டம் இயற்றியிருப்பது கொஞ்சம் நஞ்சமல்ல. எண்ணற்ற சட்டங்களை இயற்றியுள்ளார்கள். அது ஒவ்வொன்றையும் விரிவாக எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாமல் நீண்டு கொண்டே செல்லும். எனவே அவற்றில் சிலவற்றைப் பட்டியலாக, கேள்வி வடிவில் அறியத் தருகிறோம். இந்த ஒவ்வொன்றுக்கும் ஹதீஸை மறுப்பவர்கள் என நம்மை விமர்சிக்கும் மத்ஹபினர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.

* மவ்லித் ஓதுவது, மீலாது விழா கொண்டாடுவது கூடாது என்று ஹதீஸ்கள் (புகாரி 3445, 6830) இருக்க அதையே இஸ்லாத்தின் பெயரால் செய்வது ஹதீஸை மறுக்கும் செயலா? இல்லையா?

* ஒரே நேரத்தில் முத்தலாக் என்று சொல்வது ஒரே தலாக்காகவே கருதப்படும் என்று நபிமொழி (முஸ்லிம் 2689) இருக்க அதை மறுக்கும் வகையில் (மூன்று தலாக்காக கருதப்படும் என) சட்டம் இயற்றி வைத்திருப்பதை எந்த வகையில் சேர்ப்பது?

* ஜும்ஆவுக்கு ஒரு பாங்கு (புகாரி 912) என்று நபிமொழி சட்டம் சொல்ல அதற்கு மாற்றமாக இரண்டு பாங்கு வழிமுறையை ஏற்படுத்தியிருப்பது ஹதீஸை மறுக்கும் செயல் தானே?

* பெண்களுக்கு குலா எனும் விவாகரத்து உரிமை உண்டு என்று புகாரி 5273, திர்மிதி 1105 என ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பறைசாற்றும் போது பெண்களுக்கு குலா உரிமை இல்லை என்று ஹனபி மத்ஹப் கூறும் சட்டம், மேதாவிகளான உங்களுக்கு ஹதீஸை மறுப்பதாகத் தெரியவில்லையா?

* கடமையான தொழுகைக்கான இகாமத் சொல்லி விட்டால் அந்தத் தொழுகையைத் தவிர புதிதாக எந்தத் தொழுகையும் கிடையாது (முஸ்லிம் 1160) என்பது நபிமொழி. ஆனால் ஹனபி மத்ஹபினர் சுப்ஹ் தொழுகைக்கான இகாமத் சொல்லப்பட்டு ஜமாஅத் நடைபெற்று இரண்டாம் ரக்அத் முடியும் தருவாயில் போது கூட சுப்ஹின் முன் சுன்னத்தைத் தொழுகிறார்களே! அவ்வாறு தொழும்படி சட்டம் சொல்கிறார்களே! இது ஹதீஸை மறுக்கும் செயலாகத் தெரியவில்லையா?

இவை மட்டுமின்றி மத்ஹபைச் சார்ந்தவர்களின் நூல்களில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் விதமாகப் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தங்களுக்குத் தாங்களே பல அடிப்படைகளை வகுத்துக் கொண்டு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் நிலைப்பாட்டை அவர்களும் எடுத்துள்ளனர்.

அது பற்றிய குறிப்புகளையும் விபரங்களையும் காண்போம்.

பலிப்பிராணிக்கு அடையாளமிடுதல்

குர்பானியிடப்படும் பலிப்பிராணிகளுக்கு அடையாளமிடும் வழக்கத்தை நபிகள் நாயகம் அனுமதித்துள்ளதாகப் பல ஆதாரப்பூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன. அது பலிப்பிராணி என்பதைக் குறிக்கும் வகையில் சிறு கீறலிடப்படும். இதை இமாம் அபூஹனீபா அவர்கள் வெறுத்ததாகவும் அதுவும் ஒரு வகையில் பிராணியைச் சிதைப்பது தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். நான் அதை வெறுக்கிறேன். அதுவும் ஒரு வகையில் சிதைப்பது தான் என்று இமாம் அபூஹனீபா கூறுகிறார்.

நூல்: முஹல்லா 7:111

வியாபார ஒப்பந்தம்

வியாபார ஒப்பந்தம் செய்யும் இருவர் அவ்விடத்தை விட்டுப் பிரியாத வரை ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் தெரிவிக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும், வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!

அறிவிப்பவர் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

நூல்: புகாரி 2079

இமாம் அபூஹனீபா அவர்கள் இந்தச் செய்தியை மறுத்துள்ளதாக இப்னு அப்தில் பிர் அவர்கள் தமது நூலில் குறிப்பிடுகிறார்.

வியாபார ஒப்பந்தம் செய்யும் இருவரும் கப்பலில் அல்லது சிறைச்சாலையில் இருந்தாலோ, விலங்கிடப்பட்டிருந்தாலோ எப்படி அவ்விருவரும் பிரிவார்கள்? (பிரியாத வரை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு என்றால்) இவ்விருவருக்கிடையில் ஒரு போதும் வியாபார ஒப்பந்தம் நடக்காதே என்ற விளக்கத்தை அளித்து இந்தச் செய்தியை மறுத்துள்ளதாக இப்னு அப்தில் பிர் அவர்கள் குறிப்பிடுகிறார்.

பார்க்க: அத்தம்ஹீத் 14:13

அதற்குரிய ஆதாரம் இதோ:

நடைமுறைக்கு மாற்றமான ஹதீஸை மறுத்தல்

ஒரு நடைமுறை மக்களிடம் பரவலாக தொன்று தொட்டு இருந்து வருகிறது, அந்தப் பழக்கம் மக்களிடம் ஆழப்பதிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நடைமுறைக்கு மாற்றமாக ஒரு நபர் அறிவிக்கும் செய்தி வருமேயானால் அதை மறுக்க வேண்டும் என்பது அதிகமான ஹனபி மத்ஹபு அறிஞர்களின் கருத்து என ஹனபி மத்ஹபு நூல் சட்டம் சொல்கின்றது.

காலந்தொட்டு அந்த நடைமுறை இருக்கிறது எனில் அது ஏதாவது ஆதாரத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்ற மிகுதியான எண்ணத்தின் பேரில் இவ்வாறு சட்டம் சொல்கின்றனர்.

உதாரணத்திற்கு தொழுகையில் பிஸ்மில்லாஹ் கூறாமல் ஓதும் பழக்கம் மக்களிடம் நடைமுறையில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதற்கு மாற்றமாக பிஸ்மில்லாஹ் சப்தமிட்டு ஓதுவது பற்றி ஒரு ஹதீஸ் இருக்கிறது எனும் போது அந்த ஹதீஸை மறுத்து விட வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதோ அதற்குரிய ஆதாரம்:

சோதனைகள் சூழ்ந்ததாக இருக்கும் ஹதீஸை மறுப்பது பற்றியான சட்டம்

மறை உறுப்பைத் தொடுவதால் ஒளூ முறிவது, பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதுவது, ருகூவிற்குச் செல்லும் போதும் அதிலிருந்து எழுந்திருக்கும் போதும் இரு கைகளையும் உயர்த்துவது, பாத்திஹா அத்தியாத்தை ஓதுவது அவசியம் உள்ளிட்ட ஒருவர் அறிவிக்கும் செய்திகளை இதனடிப்படையில் ஹனபிகள் மறுக்கின்றனர்.

நூல்: பஹ்ருல் முஹீத் பாகம் 3, பக்கம் 403

குர்ஆனுக்கு முரண்பட்டால்…

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என நாம் கூறுகிறோம். இதன் காரணமாகவே ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று மத்ஹபினர் நம்மை விமர்சிக்கவும் செய்கிறார்கள். குர்ஆனுக்கு முரண்படும் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனும் அடிப்படையை மத்ஹப் நூல்களில் காண முடிகிறது.

 ஒரு ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டு பார்ப்பது அவசியமா என்பதைப் பற்றி ஹனபி சட்ட விளக்க நூலான பஹ்ருல் முஹீத் எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிடுதல் தொடர்பான சட்டம்

ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமில்லை. பெரும்பாலான ஹனபி அறிஞர்கள் ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம் எனவும், அவ்வாறு ஒப்பிடும் போது குர்ஆனுக்கு முரணாக எதுவும் இல்லை எனில் பிரச்சனை இல்லை. முரணாக எதுவும் இருந்தால் அந்தச் செய்தி நிராகரிக்கப்படும் என்கின்றனர்.

நூல்: பஹ்ருல் முஹீத், பாகம் 3, பக்கம் 407

குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுவதால் ஹதீஸை மறுப்பவர்கள் எனில் இந்த கருத்தைத் தானே பெரும்பாலான ஹனபி அறிஞர்கள் கூறியதாக மத்ஹபு நூல் கூறுகின்றது. அந்த ஹனபி அறிஞர்கள் அனைவரும் ஹதீஸை மறுப்பவர்கள் தானா?

இப்படி எண்ணற்ற விதிமுறைகளை வகுத்து அதனடிப்படையில் மத்ஹபினரும் ஹதீஸ்களை மறுக்கவே செய்கின்றனர்.

இவை அனைத்தும் ஹதீஸ்களை மறுக்கும் ரீதியிலான மத்ஹபினரின் செயல்பாடுகளையும் அவர்களது நூல்களில் கூறப்பட்ட சட்டங்களையும் கவனத்தில் கொண்டு கேட்கப்பட்டவையாகும். இவை ஒவ்வொன்றுக்கும் கண்டிப்பாகப் பதில் சொல்வதோடு மத்ஹபு சாராத பின்வரும் இரு கேள்விகளுக்கும் சேர்த்து மத்ஹபினர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மிஃராஜ் நிகழ்வு வஹீக்கு முன்பா?

மிஃராஜ் நிகழ்வு நபிகளாருக்கு இறைச் செய்தி அருளப்பட்ட பிறகு தான் நடைபெற்றது என முஸ்லிம்கள் அனைவரும் நன்கறிவோம். அனைத்து அறிஞர்களும் மாற்றுக் கருத்தின்றி ஏகோபித்து ஏற்றுக் கொண்ட முடிவாகும். ஹதீஸ் ஆதாரம் குறிப்பிடத் தேவையில்லை எனுமளவு நன்கு அறியப்பட்ட விஷயம்.

எனினும் புகாரியில் 7517ல் மிஃராஜ் நிகழ்வு நபிகளாருக்கு இறைச் செய்தி அருளப்படுவதற்கு முன்பு நடைபெற்றதாக ஹதீஸ் வருகிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

இறைச்செய்திக்கு முன்பு என சொன்னால் பின்பு எனக்கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டி வரும்.

பின்பு எனக் கூறினால் முன்பு எனக் கூறும் ஹதீஸ்களை மறுக்க வேண்டி வரும். இரண்டுமே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம்.

இது தொடர்பாக எந்த முடிவை எடுப்பது? இரண்டு ஹதீஸ்களில் எந்த ஹதீஸையும் மறுக்காமல் மத்ஹபினர் ஒரு முடிவை சொல்வார்களா? (ஸலபுகளும் இதற்குப் பதில் சொல்ல முன்வந்தால் நமக்கு மறுப்பேதுமில்லை)

மைமூனா ரலி திருமணம் இஹ்ராமிலா?

அதே போன்று நபிகள் நாயகம் அவர்கள் மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராமின் போது திருமணம் செய்ததாகவும், இஹ்ராம் அல்லாத நிலையில் திருமணம் செய்ததாகவும் மாறுபட்ட ஹதீஸ்கள் வருகின்றன.

இஹ்ராமில் திருமணம் நடைபெற்றதாக புகாரி 4258லும், இஹ்ராம் அல்லாத நிலையில் திருமணம் நடைபெற்றதாக முஸ்லிம் 2757லும் ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகள்.

இரண்டு ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் ஒரு முடிவைச் சொல்ல மத்ஹபினரால் இயலுமா? அவர்கள் என்ன பதிலை அளித்தாலும், விளக்கம் கூறினாலும் நிச்சயம் ஒரு ஹதீஸை மறுக்க வேண்டி வரும். இதற்கு என்ன பதிலளிக்கப் போகிறார்கள்? ரஷாதிகள் பதிலளிப்பார்களா?

அபூஹனீஃபாவின் அணுகுமுறை

இமாம் அபூஹனிபா அவரிடம் அன்னாருடைய மாணவர் கேட்ட சில கேள்விகள் – அதற்கு இமாம் அவர்கள் அளித்த பதில்கள் ஆகியவை ஆலிம் வல் முதஅல்லிம் எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. (இது ஹனபி மத்ஹபு நூல்களில் மேற்கோடிட்டு காட்டப்படுகின்றது)

அதில் அவர்கள் காலத்தில் பரவிய ஒரு ஹதீஸைப் பற்றி அபூஹனீபா அவர்களிடம் கேட்கப்படுகிறது.

இறைவிசுவாசி விபச்சாரம் செய்தால் தொப்பி அவனது தலையிலிருந்து கழன்று விடுவதைப் போன்று இறைநம்பிக்கை கழன்று விடுகிறது. அவன் பாவமன்னிப்பு கோரினால் இறைநம்பிக்கை அவனிடமே திரும்பி விடுகிறது.

இதை நபிகள் நாயகம் கூறியதாக அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்படுகிறதே, இது பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று இமாம் அபூஹனீபா அவர்களிடம் கேட்கப்படுகிறது. அதற்கு இமாம் அவர்கள் இது குர்ஆனுக்கு முரண்படுகிறது, ஒரு இறைத்தூதர் குர்ஆனுக்கு மாற்றமாக பேசமாட்டார். குர்ஆனுக்கு மாற்றமாகப் பேசுபவர் இறைத்தூதரமாக இருக்க மட்டார். இந்தச் செய்தியை பொய் என்று சொல்வதால் நபியை பொய்ப்படுத்தியாகாது, நபியின் கூற்றை மறுக்கிறேன் என்று கூறினால் தான் மறுத்தவன் ஆவேன் என்று அபூஹனிபா அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதுபற்றி ஆலிம் வல்முதஅல்லிம் நூலில் பக்கம் 24, 25ல் பாரக்கலாம்.

இதனடிப்படையில் மத்ஹபினரும் ஹதீஸ்களை மறுக்கவே செய்கிறார்கள்.

ஹதீஸ் என்பது இஸ்லாத்தின் அடிப்படையல்ல என்று மறுப்பது வேறு. குர்ஆனுக்கு முரண்படுவதால் இது ஹதீஸ் அல்ல என்றுரைப்பது வேறு. இரண்டுக்குமிடையில் வித்தியாசம் உண்டு என்பதை உணர்த்துவதற்கே இதை இங்கு குறிப்பிடுகிறோம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 16

அல்லாஹ்வை விட அபூயஸீத் சிறந்தவராம்?

கஸ்ஸாலியின் அறியாமை

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பார்த்து வருகிறோம். அதில் அறிஞர்கள் வழங்கிய அதிகமான மார்க்கத் தீர்ப்புகள், ஆன்மீகம், மறைமுக ஞானம் என்ற பெயரில் இஹ்யாவில் இடம்பெற்றுள்ள அபத்தங்கள் பற்றி அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை நாம் பார்த்தோம்.

இப்போது, இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும் என்பதற்கான அடுத்த காரணத்தைப் பார்ப்போம்.

இஹ்யாவில் அடங்கியிருக்கும் தீய நச்சுக் கருத்துக்கள்

இஹ்யா உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை உயிரூட்டுதல்) என்ற இந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் குர்ஆன், ஹதீஸை இந்த நூல் உயிர்ப்பிக்கப் போகின்றது என்றே யாரும் நினைப்பார்கள். உள்ளே நுழைந்தால் தான் இது மார்க்கக் கல்வியைச் சாகடிக்கும் நூல் என்று விளங்கிக் கொள்வார்கள்.

குர்ஆன், ஹதீஸ் கூறுகின்ற போதனைகளை இது குழிதோண்டிப் புதைத்து விடும்.

குர்ஆன், ஹதீஸ் கூறுகின்ற ஞானத்தை, அகமிய ஞானம் வந்து உறுதி செய்தால் தான் அது சரியான ஞானம். இல்லையென்றால் அது அசத்தியம் என்ற கஸ்ஸாலியின் கூற்றை மேற்கோள் காட்டி இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதை முன்னர் பார்த்தோம். கஸ்ஸாலியின் இந்தக் கருத்து, தீனை விட்டு வெளியேற்றுவதற்கும், இறைமறுப்பிற்கும் உரிய இரண்டு அடிப்படைகளாகும் என்று இப்னு தைமிய்யா கூறியதையும் கண்டோம்.

அல்லாஹ்வைப் பார்க்காதே! அபூயஸீதைப் பார்!

இஹ்யாவிலிருந்து ஒரு முஸ்லிம் இதைப் படித்தால் போதும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருந்தால் அவர் இதை வைத்தே இஹ்யாவைத் தூக்கி எறிந்துவிடுவார்.

இஹ்யாவில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அபுத்துராப் அன்னக்ஷபீ என்பார் தன்னுடைய சீடர்களில் ஒருவருடைய செயல்பாட்டின் மூலம் கவரப்பட்டார். அதனால் அவரைத் தனது நெருக்கமானவராக ஆக்கி, அவரது நலன்களைக் கவனித்து வந்தார். சீடர் தொடர்ந்து இறை தியானத்திலும் அவனது தேடலிலும் மூழ்கியிருந்தார். நீ அபூயஸீதைப் பார்த்தால் என்ன? என்று ஒரு நாள் சீடரிடம் அபூ துராப் கேட்டார். “நான் வணக்கத்தில் ஈடுபட்டிருக்கிறேன்; என்னைத்  தொந்தரவு செய்யாதீர்கள்” என்று சீடர் பதில் தெரிவித்தார்.

“நீ அபூயஸீதைப் பார்த்தால் என்ன?’ என்று அபூதுராப் திரும்பத் திரும்ப நச்சரிக்கவும் சீடருக்குக் கோபம் வந்து விட்டது. அபூயஸீதிடம் எனக்கு என்ன வேலை? நான் அல்லாஹ்வைப் பார்த்து விட்டேன். அதனால் எனக்கு அபூயஸீதைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

இப்போது அபூதுராபுக்குக் கோபம் வந்து, “உனக்கு நாசம் உண்டாகட்டும்! அல்லாஹ்வைப் பார்த்து விட்டோம் என்ற ஏமாற்றத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அபூயஸீதை நிங்கள் ஒரு தடவை பார்ப்பது அல்லாஹ்வை எழுபது தடவை பார்ப்பதை விடச் சிறந்தது” என்று கூறினார்.

இந்த உலகத்தில் அல்லாஹ்வை யாரும் பார்க்க முடியாது. ஏனென்றால் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 6:103

மரணிக்காத வரை உங்களுடைய இறைவனை நீங்கள் பார்க்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலி

நூல்: இப்னுமாஜா 4067

நபி (ஸல்) அவர்கள் உட்பட யாரும் இந்த உலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. இங்கே இந்த இரண்டு ஆதாரங்கள் போதும்.

இதன்படி இந்த உலகில் எவரும் அல்லாஹ்வைக் காண முடியாது எனும் போது, அல்லாஹ்வைப் பார்த்தேன் என்று ஒரு சீடர் சொல்வதும், அதை ஆன்மீக குரு (?) ஆமோதிப்பதும் பகிரங்கப் புளுகும் புருடாவுமாகும்; குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை நேரடியாக மறுப்பதாகும்.

இந்த இஹ்யாவைத் தான் தமிழக உலமாக்கள் தங்கள் நெஞ்சத் தாமரையில் வேதமாக ஏந்தியுள்ளனர்.

இறைக்காட்சியே பேரின்பம்

ஒரு பேச்சுக்கு அல்லாஹ்வை இந்த உலகில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கின்றது என்றால் அதை விடச் சிறந்த பாக்கியம் வேறெதுவும் இருக்க முடியாது. இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட மிகப்பெரிய பாக்கியமாகும்.

மறுமையில் சுவனத்தில் உள்ள பேறுகளை விட வேறெந்த சிறந்த பேறும் இருக்க முடியாது. அவை அத்தனையும் விட படைத்த இறைவனைப் பார்ப்பது தான் பேரின்பம் என்று பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது (அவர்களிடம்) அல்லாஹ், “உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?” என்று கேட்பார்கள்.

அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)

நூல்: முஸ்லிம் 266

ரப்புல் ஆலமீனைப் பார்ப்பது, சுவனத்தில் அத்தனை பேரின்பங்களை விடவும் சிறந்தது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட பாக்கியத்தை விட, அல்லாஹ்வைப் பார்க்கும் பேரின்பத்தை விட அபூயஸீத் என்ற அற்ப மனிதனைப் பார்ப்பது சிறந்தது என்று அபூதுராப் என்பவர் சொல்கின்றார் என்றால் இந்த ஆசாமிகள் யார்? இவர்கள் இஸ்லாத்தின் பெயரால் அத்வைதம் என்ற மோசமான சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.

இந்த விஷக்கருத்தைப் பதிய வைத்து, முஃமின்களின் பாதையை மாற்றி விடுகின்ற வேலையைச் செய்கின்ற கஸ்ஸாலி யார்? இறை தரிசனத்தை வெறுப்பவன் வேறு யாராக இருக்க முடியும்?

இறை நிராகரிப்பு, இணை வைப்பு வார்த்தைகளைக் கொப்பளிக்கின்ற இந்த இஹ்யாவை ஆதரிப்பவர்கள் இஸ்லாத்தில் இருப்பதாகக் கற்பனை செய்ய முடியுமா? இவர்கள் ஏகத்துவவாதிகள் மீது இறைமறுப்பு சாயத்தைப் பூசுவது வேடிக்கையான விஷயமாகும்.

அறப்போரை அலட்சியம் செய்தவர்

இஹ்யாவில் பாட வாரியாகப் பார்த்தால் அதில் அதிகமான பாடங்களைக் கொண்டு வந்திருக்கிறார். வறுமை, துறவு, செவியேற்பதன் ஒழுக்கங்கள், தனிமை, மனதைப் பயிற்றுவித்தல், இரு ஆசைகளைத் தகர்த்தெறிதல் என்ற தலைப்புகளின் கீழ் அந்தப் பாடங்களை அளிக்கின்றார். பசியின் சிறப்பு, பசியின் பலன்கள் போன்றவையும் அவற்றில் அடங்கியிருக்கின்றது. இந்தப் பாடங்களை அவர் கூறாமல் விட்டிருந்தாலும் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப் போனால் அவற்றை விட்டு விடுவது தான் சிறந்த காரியமாகும்.

வேறு சில பாடங்கள், அதில் அடங்கியிருக்கும் அசத்தியக் கருத்தை எடுத்துச் சொன்னால் அது நீண்டு கொண்டே போகும்.

மார்க்க அடிப்படையிலான முஸ்லிம்களுடைய நூல்களில் ஜிஹாத் என்ற தலைப்பு இடம்பெறாமல் இருக்காது. காரணம், அந்த அளவுக்கு அதைச் சிறப்பித்து குர்ஆன் வசனங்கள், நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. இதுதான் இஸ்லாமிய சமுதாயத்திற்குரிய போராட்ட உணர்வாகும். (மார்க்கம் அனுமதித்த வழியில் இஸ்லாமிய அரசு செய்யும் ஜிஹாதை இது குறிக்கின்றது. இன்றைய காலத்தில் தவறான பொருளில் பயன்படுத்தப்படும் ஜிஹாத் அல்ல.)

கண்ட கண்ட பாடங்களை எல்லாம் கொண்டு வந்த கஸ்ஸாலி, இஸ்லாத்தின் உயிர்நாடியான ஜிஹாத் என்ற பாடத்தை, மார்க்க ஞானங்களுக்கு உயிரூட்டல் என்ற இந்த நூலில் ஏன் கொண்டு வரவில்லை? கஸ்ஸாலியின் பக்தகோடிகள் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள்? ஜிஹாத் என்ற வணக்கம், மார்க்கத்தை உயிர்ப்பிக்கவில்லை என்றால் வேறெது உயிர்ப்பிக்கப் போகின்றது?

பொதுவாக ஆலிம்கள் என்றால் அவர்களிடம் வீரம், துணிச்சல் எதுவும் இருக்காது. நாட்டாமை, பஞ்சாயத்துத் தலைவர், ஊர் முத்தவல்லி போன்றோரைப் பார்த்துப் பயந்து நடுங்குவது தான் ஆலிம்களின் குணாதிசயமாகிவிட்டது.

காவல்துறை, காக்கிச் சட்டைகளைக் கண்டால் ஆலிம்களின் அடிவயிறுகள் கலங்க ஆரம்பித்து விடும். அதிலும், நியாயமான கோரிக்கைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதையெல்லாம் ஆலிம்களிடம் எதிர்பார்க்கவே முடியாது. இந்த வீர உணர்வுகளை மங்கி, மழுங்கிப் போகக்கூடிய வேலையைத் தான் கஸ்ஸாலியின் துறவு போன்ற பாடங்கள் செய்கின்றன.

இப்போது நாம் இஹ்யா உலூமித்தீன் என்ற நூலில் இரு அட்டைகளுக்கு இடையே கொட்டி, குவிந்து கிடக்கின்ற, குடலைப் புரட்டுகின்ற நச்சுக் கருத்துக்களை அலசத் துவங்குவோம்.

ஒவ்வொன்றாக தோலுரித்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு எடுத்துக் காட்ட ஆரம்பித்தால் அதற்கு பல பாகங்கள் தேவைப்படும். ஒரு சில எடுத்துக்ôகட்டுக்களை, மேற்கோள்களைக் காட்டினால் போதும். அனைத்தையும் எடுத்துக் காட்டத் துவங்கினால் அதற்கு இந்தச் சிறு ஏடு தாங்காது.

மனோஇச்சையை விட்டு விட்டு, மார்க்க ஆதாரங்களை மட்டும் பார்ப்பவருக்கு இவையே போதுமானதாகும். இவர்களிடத்தில் அந்த ஆதாரங்கள் மட்டும் தான் பேசும். குர்ஆனுடைய நடைமுறையும் இது தான்.

பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

இந்தத் தலைப்புக்குள் செல்வதற்கு முன்னால், கஸ்ஸாலியின் ஆளுமையை, ஹதீஸில் அவருக்குரிய இடத்தை முதலில் பார்த்துக் கொள்வோம். இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வதற்குரிய தண்டனையை, அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களுடைய எச்சரிக்கையை நாம் காணலாம்.

நான் ஹதீஸைத் தெரிந்தவன் அல்லன். அதைக் கற்றவனும் அல்லன் என்று கஸ்ஸாலியே வலிய வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்.

ஹதீஸில் எனக்குப் போதிய ஞானமில்லை என்று கானூன் அத்தஃவீல் என்ற தனது சிறிய ஏட்டில் குறிப்பிடுகின்றார்.

“ஹதீஸைக் கற்க முனைந்ததும், ஹதீஸ் துறை அறிஞர்களுடன் அமர்ந்ததும், புகாரி முஸ்லிமைப் பார்ப்பதும் தான் கஸ்ஸாலியின் இறுதிக்கட்ட வாழ்க்கையாக அமைந்தது. அவர் மட்டும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால் வெகு குறைவான காலத்தில் மற்றவர் அனைவரையும் ஹதீஸ் துறையில் விஞ்சியிருப்பார். ஆனால் ஹதீஸ் அறிவிப்பதற்குரிய வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தஹபீ அவர்கள் தமது ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

“மூஸா பின் இம்ரான் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேச்சை செவியுற்றது போன்று அவ்லியாக்களில் ஒருவர் செவியுற்றார்” என்றும், அதுபோன்ற மோசமான கருத்துக்களையும் கஸ்ஸாலி குறிப்பிடுகின்றார். அவரது இறுதிக்கட்ட வாழ்க்கையில் சூஃபிய்யாக்ளின் பாதை, நோக்கத்தை அடைய உதவாது என்று விளங்கி நபிவழியில் நேர்வழியைத் தேடத் துவங்கிவிட்டார். புகாரி, முஸ்லிமில் முழு ஈடுபாட்டுடன் அவர் இறங்கி விட்டார்.

நூலாசிரியர் மக்ராவியின் விளக்கம்

தனக்கு ஹதீஸில் ஞானமில்லை எனறு கஸ்ஸாலி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார். கஸ்ஸாலியின் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்கள், அவரது செய்திகள், வரலாறுகள், ஆக்கங்கள் போன்ற நூற்களை அக்குவேறு ஆணிவேறு அலசிய ஆய்வாளர்கள், கஸ்ஸாலி ஹதீஸ் கலையைக் கற்கவில்லை, படிக்கவுமில்லை என்று வாக்குமூலம் தருகின்றனர்.

தப்பும் தவறுமான சித்தாந்தங்களை பற்பல பாகங்கள் அடங்கிய நூற்களாக எழுதிக் குவித்த பிறகு தான் ஹதீஸ் கலையைக் கற்க ஆரம்பித்தார் என்று அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்கின்றனர்.

தனது வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் நபிவழியைக் கற்பதற்குரிய நேர்வழியைப் பெற்றார்; புகாரி முஸ்லிமைப் படித்தார்.

அல்லாஹ் அவரது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வானாக! முஸ்லிம்களுடைய கொள்கையிலேயே குழப்பத்தை விளைவித்த அவரது காரியங்களை அவன் கண்டு கொள்ளாமல் விடுவானாக என்றும் பிரார்த்திக்கின்றேன்.

நபிவழிக்குத் தொடர்பில்லாத, ஏன்? குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் நேர் முரணான விஷயங்களில், தான் இதுநாள் வரை மூழ்கி, முடங்கிக் கிடந்ததை எண்ணி அவர் வருத்தத்திற்கு வேதனைக்கும் உள்ளானார்.

கஸ்ஸாலியின் சீடர் சிகாமணிகள், பக்த கோடிகள் அவரது வாழ்க்கையின் முந்தைய பகுதிகளை விட்டு விட்டு, பிந்தைய பகுதிகளைப் பாடமாகக் கொள்வார்கள் என்று ஆதரவு வைக்கின்றேன்.

தனது சொந்த வாக்குமூலத்தின் மூலமும், கல்விமான்கள், ஆய்வாளர்கள் என்று சான்றளிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் மூலமும் அவர் மார்க்கக் கல்வியின் அடிப்படையைக் கூடத் தெரியாமல் இருந்திருக்கிறார் என்பதை கஸ்ஸாலியின் நேசர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

உயிரூட்டுகின்ற மார்க்கக் கல்வியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தலைப்பில், கருத்தில் நூல் இயற்றுகின்றார் என்றால் அவர் ஆதாரப்பூர்வமான புகாரி போன்ற ஹதீஸ்களின் அடிப்படையில் தான் இயற்றியாக வேண்டும்.

கஸ்ஸாலி இப்படி ஒரு நூலை இயற்றுவது ஒருபுறமிருக்கட்டும். மார்க்கக் கல்வியைக் கற்று, தன்னளவில் கூடப் பயன்பெற முடியாத ஒரு நிலையில் தான் அவரது காலம் கடந்து விட்டது என்பதை அவரது நேயர்கள் அறிந்து கொள்வார்கள் என்று உளப்பூர்வமாக நம்புகின்றேன்.

நபி மீது பொய்! நரகமே பரிசு!

இப்போது நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவருக்கு மார்க்கம் அடிக்கின்ற எச்சரிக்கை மணியைப் பார்ப்போம்.

காரண காரியங்கள் எதுவாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததை, அவர்கள் மீது எந்த ஒரு கட்டத்திலும் இட்டுக்கட்டிச் சொல்லக் கூடாது என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்தக் கருத்தில் உள்ளனர். நபி (ஸல்) அவர்கள் மீது திட்டமிட்டுப் பொய் சொல்வது பெரும்பாவமாகும்.

இவ்வாறு பொய் சொல்வோருக்கு நரகமே தங்குமிடம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிப்பது தான் இதற்குக் காரணம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 110, முஸ்லிம் 4

இது ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு பெரிய எண்ணிக்கையினர் அறிவிக்கின்ற “முதவாத்திர்’ என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

என் மீது பொய்யுரைக்காதீர்கள். என் மீது பொய் சொல்பவர் நரகில் நுழைவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: முஸ்லிம் 2

நபி (ஸல்) அவர்கள் மீது ஒருவர் பொய் சொல்லிவிட்டால், ஏதோ ஒரு பொய் என்ற மட்டில் அது நிற்பதில்லை. மாறாக, மார்க்கத்தில் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான ஒவ்வொரு செய்தியும் மார்க்கச் சட்டமாகக் கொள்ளப்படுகின்றது.

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்

நூற்கள்: புகாரி 1291, முஸ்லிம் 5

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வது பெரும்பாவமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்தக் கருத்தில் இருக்கின்றனர்.

இமாம் அப்துல்லாஹ் பின் யூசுப் அல்ஜுவைனி போன்ற அறிஞர்கள், “நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் (காஃபிர்கள்); அவரது தலை துண்டிக்கப்பட வேண்டும்” என்ற அளவுக்கு உச்சக்கட்டமாகக் கூறியுள்ளனர்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 20

பெண்ணின் குணம்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் பெண்கள் குறித்து மிக முக்கிய அடிப்படைகளைச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக் கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5184

இந்தச் செய்தியில் பெண்களுக்கு நபியவர்கள் வளைந்த விலா எலும்பை உதாரணமாகச் சொல்கிறார்கள்.  பிளாஸ்டிக் பொருளோ, இரும்போ வளைந்திருந்தால் நிமிர்த்தி விடலாம். வளைந்தேயிருக்கிற எலும்பை நிமிர்த்தப் போனால் அது நிச்சயம் உடையத்தான் செய்யும்.

பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று புரிந்து கொண்டு மனைவியை நிர்வாகம் செய்தால், விட்டுக் கொடுத்துப் போனால் அவளிடம் இன்பத்தை அடையலாம் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் அவளிடம் கோணல் இருக்கத் தான் செய்யும் என்று நபியவர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிடுகிறார்கள்.

அதே நேரத்தில் மார்க்கத்திற்குப் புறம்பானவைகள் இருந்தால், பாரதூரமான விஷயங்களாக இருந்தால் கண்டிக்க வேண்டுமே தவிர மற்றபடி குணங்களில் ஆண்களைப் போன்று பெண்களிடம் எதிர்பார்க்கவே கூடாது. கோள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். புறம் பேசிக் கொண்டே இருப்பார்கள். தொனத் தொனவென சின்னஞ்சிறிய விஷயங்களை பேசிக் கொண்டே இருப்பார்கள். அற்பத்திலும் அற்பமான விஷயத்தில் கூட பிரச்சனையைக் கிளப்புவார்கள். சந்தேகப்படுவார்கள்.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், கணவன் தனது தங்கைக்கு சட்டை எடுத்துக் கொடுத்தால் கூட தனது எதிர்ப்பை கணவரிடம் கடுமையாகக் காட்டுவாள். மனைவிக்குக் கணவன் எந்தக் குறையும் வைக்காவிட்டாலும் நீங்கள் எப்படி உங்களது தங்கச்சிக்கு சட்டை எடுத்துக் கொடுக்கலாம் என்று சண்டைக்கு வருவார்கள். அந்த நேரத்தில் ஆண்கள் ஒரு காதில் வாங்கிக் கொண்டு இன்னொரு காது வழியாக விட்டுவிட வேண்டும். இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு நாமும் சண்டை போட்டால் நிம்மதியை இழக்க வேண்டியதுதான். இப்படித்தான் எல்லா பெண்களும் இருப்பார்கள். நம் மனைவி நம்மிடம் கேட்டது போன்றே நமது தங்கையும் அவளது கணவனிடம் இப்படித்தான் சண்டை போடுவாள் என்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே அந்தந்த நேரத்திற்குத் தகுந்தாற் போல் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதானே தவிர மற்றபடி அவைகளை மனதில் போட்டு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

எனவே இவற்றையெல்லாம் ஒரு விவகாரமாக ஆக்கி, சண்டை போட்டுக் கொண்டு, கணவன் மனைவி பிரிய வேண்டிய சூழ்நிலைகளை ஏற்படுத்த எந்தத் தேவையும் இல்லை. இதற்குத்தான் நபியவர்கள் பெண்களிடம் வளைவு இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் போன்று இருக்க மாட்டார்கள் என்றும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

நபிகள் நாயகம் சொல்லித் தந்த அடிப்படையில் மனைவிமார்களை நிர்வகிக்கத் தெரியாதவர்கள் தான் சின்னஞ் சிறியதையெல்லாம் பிரச்சனைகளாக்கி, கடைசியில் விவாகரத்து வரை கொண்டு வந்துவிடுகிறார்கள். நமது ஜமாஅத்திற்கு வருகிற குடும்ப விவகாரங்களில் பெரும்பாலும் இதுபோன்ற உப்பு சப்பில்லாத பிரச்சனைகள் தான் காரணமாக இருக்கிறது.

இல்லாத பிரச்சனைகளுக்காக குடும்பங்களைப் பிரிக்கும் அளவுக்கு சண்டை போடுவதைப் பார்க்கிறோம். இப்படி சாதாரணமான காரணங்களுக்காக கணவன் மனைவி பிரிவதில் எந்த நியாயமும் கிடையாது. நம்மிடம் வருகிற கணவன் மனைவி குடும்ப பிரச்சனைகளை அலசினால், என்னைப் பற்றி இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்று மனைவியும், எனது நண்பர் வந்திருந்த போது டீ போட்டு தராமல் வேண்டுமென்றே உதாசீனப்படுத்தினாள் என்று கணவனும், ஒன்றுக்கும் உதவாத காரணங்களைத் தேடிக் கொண்டு கடைசியில் விவாகரத்து வரை போய்விடுகிறது.

எனவே ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது சில குறைகளுடன் தான் பெண் படைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று பெண்கள் ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டால் எடுத்த எடுப்பிலேயே கையை நீட்டி அடிக்கும் ஆண் வர்க்கத்தைப் பார்க்கிறோம். தன்னை ஒரு ஆண் என்று காட்டுவதற்காகவே பலர் மனைவிமார்களை அடிக்கிறார்கள். இது தவறானது. ஆனாலும் மார்க்கத்தில் அடிப்பதற்குக் கூட ஒரு சில இடங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. பகிரங்கமான அசிங்கத்தை ஆபாசத்தை கணவனிடத்தில் மட்டும் நடத்துகிற தாம்பத்யத்தை தவறான வழியில் ஈடுபடுத்தும் போது கணவன் மனைவியை அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. எனவே சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கைநீட்டி மனைவியை அடிப்பது மிகவும் தவறான நடைமுறை. மார்க்கம் ஒருக்காலும் இதை அனுமதிக்கவே இல்லை.

ஒருவன் தனக்குச் சமமான ஒருவருடன் போட்டிபோட்டால் சண்டையிட்டால் அதில் நியாயம் இருக்கிறது எனலாம். தன்னை விட உடல் அளவிலும் மனதளவிலும் பலவீனமானவளுடன் சண்டையிடுவது, அடிப்பது நியாயமில்லை. இன்னும் சொல்வதெனில், கணவனிடம் அடைக்கலம் பெற்றவளாகத்தான் மனைவி என்பவள் இருக்கிறாள். எனவே அடைக்கலத்தை பாதுகாப்பவனே உண்மைக் கணவன் என இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது. எனவே நபியவர்கள் இதையும் கண்டிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)

நூல்: புகாரி 5204

பகலில் கோபத்தில் மனைவியை அடித்துவிட்டு, நாணத்தை விட்டுவிட்டு இரவில் அவளுடன் இல்லறத்தில் ஈடுபடுகிறவர்களைப் பார்த்து “வெட்கமில்லையா?” என்று நபியவர்கள் கேட்கிறார்கள். மனைவியை அடிப்பவர்களுக்கு அறிவில் உரைப்பதற்காக, சூடு சுரணைக்காக இப்படி கேள்வி கேட்கிறார்கள்.

மனைவியை அடித்துவிட்டு அவளோடு தான் குடும்பம் நடத்த வேண்டும். அவள் சமைத்த உணவைத்தான் சாப்பிட வேண்டும். அவளுடன் தான் பேசிக் கொண்டிருக்க வேண்டும். இப்படி அவளிடம் தான் ஒன்றாக வாழ்கிறோம் எனில் ஏன் மனைவியை அடிக்க வேண்டும்? எதற்காக அடிக்க வேண்டும்? இப்படியெல்லாம் அடிப்பவன் ரோஷமிக்க கணவனில்லை என்று நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

ஆக, ஆண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது பெண்களின் தன்மைகளில் கூடுதல் குறைவுகள் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் எல்லாப் பெண்களும் இருப்பார்கள் என்று பிரச்சனை செய்யாமல் குடும்பத்தை நடத்திட வேண்டும். இதற்கு நல்ல சிறந்த உதாரணமாக நபிகள் நாயகத்தின் மனைவிமார்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லலாம்.

உலகிலுள்ள முஸ்லிமான, முஃமினான பெண்களில் நம்மை விடவும் நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் மேலானவர்கள், நல்லவர்கள் என்று நாமெல்லாம் நம்புகிறோம். அது சரிதான். நமது மனைவிமார்களை விட நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் இறையச்சம் மிக்கவர்கள்; ஒழுக்கத்தில் தலைசிறந்தவர்கள்; கணவனை மதித்து நடப்பவர்கள்; கட்டுப்படக் கூடியவர்கள் என்றெல்லாம் நம்புகிறோம். அதுவும் மிகச்சரியான நம்பிக்கை தான். இப்படியெல்லாம் நம்பப்படுகிற நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள், கணவனிடம் நடந்து கொள்கிற விதத்தில் மனைவி என்ற அடிப்படையில் நமது வீட்டுப் பெண்களைப் போன்று தான் இருந்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் போன்ற அந்தஸ்தெல்லாம் நம்மிடம் கிடையாது. மனைவியிடத்தில் கணவன் என்ற அந்தஸ்து மட்டும் தான் நம்மிடம் உண்டு. அதற்கு மேல் நமக்கும் நமது மனைவிமார்களுக்கும் இடையில் வேறு எந்த அந்தஸ்தும் கிடையாது. ஆனால் நபியவர்களோ நம்மைப் போன்று மனைவிமார்களுக்கு கணவன் என்ற அந்தஸ்துடனும், நம் எல்லோரையும் விடவும் சிறப்பான அல்லாஹ்வின் தூதர் என்று அந்தஸ்துடனும் வாழ்ந்தவர்கள்.

அப்படியெனில் நபியவர்களிடம் வாய் கூட திறந்து பேசாமல் அவர்களது மனைவிமார்கள் வாழ்ந்திருக்க வேண்டும். மிகவும் கவனத்துடன் நடந்திருக்க வேண்டும். அதாவது ஒரு கணவனிடத்தில் ஒரு மனைவி எவ்வளவு கட்டுப்பாடுடன் நடக்க வேண்டுமோ அதைவிடப் பன்மடங்கு கட்டுப்பாட்டுடனும் கவனத்துடனும் நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருக்க வேண்டும். ஆனால் இது விஷயத்தில் நாம் ஆய்வு செய்து பார்த்தால், நமது மனைவிமார்களைப் போன்று தான் நபியவர்களின் மனைவிமார்களும் நபியவர்களிடத்தில் சராசரியாக நடந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் வணக்க வழிபாடுகள், இறையச்சம் போன்றவற்றிலெல்லாம் நம்மை விடக் கூடுதலாக இருந்திருக்கிறார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வருகிற போது தமது கணவர், நபி என்பது கூட சில நேரங்களில் மறந்துவிடுகிறது.

அப்படி சம்பவங்கள் நடக்கும் போது நபியவர்கள் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருப்பதைப் போன்று நபியவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்து கொண்டதைப் போன்று நம்மிடம் நமது மனைவிமார்கள் நடந்திருந்தால் ஓங்கி அடித்துவிடலாம் என்பது போன்று கோபம் வரும். அந்தளவுக்கு நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருந்தும், நபியவர்கள் “நான் கணவனாகவும் நபியாகவும் உங்களுக்கு இருக்கிறேன்; என்னிடமே இப்படிச் செய்கிறீர்களா?” என்று மனைவிமார்களைப் பார்த்து கேட்டதில்லை. எதிர்த்ததாகத் தெரியவில்லை. சாதரணமாக எடுத்துக் கொண்டு தான் வாழ்ந்த காட்சிகளை ஆதாரங்களின் மூலம் தெரிந்து கொள்கிறோம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப்பேசி முடிவு செய்து கொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி (ஸல்) அவர்கள் முத-ல் வருவார்களோ அவர், நபி (ஸல்) அவர்களிடம் “கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதேஎன்று கூறிட வேண்டும். (வழக்கம் போல் ஸைனபின் வீட்டி-ருந்து தேன் சாப்பிட்டுவிட்டு நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், “இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்துவிட்டேன்என்று கூறிவிட்டு, “இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே!என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1 ஆவது இறைவசனம் அருளப்பெற்றது.)

நூல்: புகாரி 4912

நபியாகவும் கணவராகவும் இருந்த நபியவர்களிடம் இப்படி இறைவன் கண்டிக்கிற அளவுக்கு இந்த இரண்டு மனைவிமார்களும் நடந்து கொண்டுள்ளார்கள். இறைவன் தன்னைக் கண்டித்ததற்காக, இந்த இரண்டு மனைவிமார்களையும் இழுத்துப் போட்டு நபியவர்கள் அடித்தார்களா? இல்லை. இல்லவே இல்லை.

மார்க்கத்திலேயே நான் ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு என்னை வழிவகுத்து விட்டீர்களே! என்று கோபப்பட்டு மனைவிமார்களைக் கடிந்து கொண்டார்களா? இல்லை. எந்தக் கோபத்தையும் அவர்களிடம் காட்டிக் கொள்ளவே இல்லை. இதைப் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்கள். ஆக இப்படியெல்லாம் நபியவர்களிடம் அவர்களது மனைவிமார்கள் நடந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தொடர்: 3            ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

ஆதம் நபியை அவமதிக்கும் மவ்லிது

எம். ஷம்சுல்லுஹா

கடந்த இதழில், ஹுஸைன் மவ்லிது ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிப்பதையும், அலட்சியமாக ஆக்கியதையும் பார்த்தோம். இந்தத் தொடரில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இந்த மவ்லிது அவமரியாதை செய்வதைப் பார்ப்போம்.

தமிழக முஸ்லிம்கள் வேதமாக நினைக்கும் சுப்ஹான மவ்லிதின் துவக்கத்தில் ஆதம் நபி அவர்களின் படைப்பு சம்பவம் இடம்பெறுகின்றது.

ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு, கண்களைத் திறந்ததும் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் “லாயிலாஹ இல்லல்லாஹூ” என்பதுடன் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்றும் எழுதப்பட்டிருந்ததாம். “இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?” என்று ஆதம் (அலை) கேட்டர்களாம். அதற்கு இறைவன் “அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்” என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்ட போது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வந்ததாம். “இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக” என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.

இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்2:37)

இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று இந்த வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் பின்வரும் வசனத்தில் அந்த வார்த்தைகள் யாவை எனக் கூறப்பட்டுள்ளது.

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23)

ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவமன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.

இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும் போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் இந்த வசனம் கூறுவதிலிருந்து, ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக சுப்ஹான மவ்லிதில் இடம்பெற்ற செய்தி கட்டுக்கதை என்பதை அறியலாம்.

எல்லா மவ்லிதுக் கிதாபுகளுமே பொய் மூட்டைகள் தான் என்பதற்கு இந்தக் கதை ஓர் எடுத்துக்காட்டாகும்.

சுப்ஹான மவ்லிதில் இந்தக் கதையை இப்படிப் பொருத்திவிட்டு, அதே மவ்லிதின் பிற்பகுதியில் இடம்பெறும் ஹுஸைன் மவ்லிதில் இந்தக் கதையை சற்று மாற்றம் செய்து பொருத்தியிருக்கிறார்கள்.

முஹம்மது நபியை வஸீலாவாக, ஒரு சாதனமாகப் பயன்படுத்தி மன்னிப்பு கேட்பது போன்ற மூலக் கருவில் இந்தக் கதை ஒன்றிணைந்தாலும் அதன் உள்ளடக்கத்தில் முற்றிலும் வேறுபடுகின்றது.

ஆதமும் ஹவ்வாவும் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கும் போது ஜிப்ரயீல் (அலை) அவ்விருவரையும் தங்கம், வெள்ளியினால் கட்டப்பட்ட ஒரு கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள் என்ற கதையைக் கடந்த இதழில் கண்டோம். அதில் ஆதம் நபி செய்த பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

ஆதம் (அலை) பூமியில் இறங்கியதும் முன்னூறு ஆண்டுகள் அழுது தீர்த்தார்கள். அதன் பிறகு இந்தப் பெயர்களைக் குறிப்பிட்டு, “யா அல்லாஹ்! முஹம்மது, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன். யா மஹ்மூத்! யா அலீ! யா ஃபாத்திர்! யா முஹ்ஸின்! இஹ்ஸானைக் கையில் வைத்திருப்போனே! என்னை மன்னித்துவிடு! என்னுடைய பாவமன்னிப்பை நீ ஏற்றுக் கொள்” என்று ஆதம் (அலை) பிரார்த்தனை செய்தார்கள்.

சுப்ஹான மவ்லிதில் “இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக” என்று ஆதம் நபி பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹுஸைன் மவ்லிதில் மேற்கண்ட ஐந்து பெயர்களையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டில் எது உண்மை?

மேலும் இந்தக் கதையில் மேற்கண்ட ஐந்து பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பது ஆதம் நபிக்கு ரொம்பவும் முக்கியமல்லவா? அதனால் அந்தப் பெயர்களையும் அதற்கான விளக்கத்தையும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் தாமே முன்வந்து கற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகின்றது. ஆனால் சுப்ஹான மவ்லிதில் அல்லாஹ்வும் ஆதமும் நேரடியாகப் பேசிக் கொண்டதாக வருகின்றது? இந்த முரண்பாடுகளெல்லாம் மேற்கண்ட கதை கடைந்தெடுத்த பொய் என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

சுப்ஹானல் அஸீஸில் கஃப்பார் என்று துவங்கி, இந்த மவ்லிதுக் கிதாபு அவ்வளவு பொய்களை அடித்து விடுகின்றது. அது அளந்துவிட்ட பொய்களில் ஒரே மூலக் கருவைக் கொண்டு, உள்ளே முரண்பட்ட செய்திகளை இடத்திற்குத் தக்கபடி மாற்றம் செய்து, இரு இடங்களில் இரண்டு விதமாகப் பதிவு செய்யப்பட்ட இந்தப் பொய் முக்கியமானதாகும்.

இதை ஓர் எடுத்துக்காட்டாகவே இங்கு குறிப்பிடுகின்றோம். முக்கியமாக ஹுஸைன் மவ்லிதுக் கதையில் நாம் பார்க்க வேண்டிய விஷயம், ஆதம் (அலை) அவர்கள் இங்கு மட்டரகமாக மதிக்கப்படுவதைத்  தான்.

ஆதம் இல்லையேல் ஐவரும் இல்லை

சுப்ஹான மவ்லிதிலாவது ஆதம் நபியவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டால் துஆச் செய்ததாக வருகின்றது. அவ்வாறு கேட்பது குர்ஆன் வசனத்திற்கு மாற்றமானது என்பதைக் கண்டோம். ஆனால் இதையாவது ஓரளவு சகித்துக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஹுஸைன் மவ்லிதில் உள்ள கதையைச் சகிக்கவே முடியவில்லை.

காரணம், நபி (ஸல்) அவர்களுடன் சேர்த்து, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரின் பொருட்டால் ஆதம் நபி பிரார்த்தனை செய்ததாகச் சொல்கின்றார்கள்.

ஆதம் (அலை) அவர்களின் அந்தஸ்து என்ன? அவர்களது தரம் என்ன? ஆதம் நபி இல்லையென்றால் இந்த ஐவரும் இல்லை. அனைத்து மனித சமுதாயமும் இல்லை. அப்படிப்பட்ட அந்த மனிதகுல மூலவரை, முதல்வரை அவரது சந்ததியில் உள்ள பிள்ளைகள் பொருட்டால் பாவமன்னிப்பு கேட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றால் சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரில் கொள்ளைப்புற வழியாக வந்த கள்ள ஷியாக்களின் வேலையைத் தவிர்த்து இது வேறு யாருடைய வேலையாக இருக்க முடியும்?

ஆதம் நபியின் அருஞ்சிறப்புகள்

ஷியாக்களும், அவர்களது வாரிசுகளும் உருவாக்கிய மவ்லிது தான் இந்த மட்டரகமான கதையை அடித்து விட்டிருக்கின்றது. ஆதம் நபியைப் பற்றித் திருக்குர்ஆன் கூறும் போது, மலக்குகளையே திகைக்க வைத்த அற்புதத் திறனை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான் என்று கூறுகின்றது.

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்என்று அவர்கள் கூறினர். “ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, “வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 2:31-33

இப்படிப்பட்ட அபாரமான, அலாதியான அறிவாற்றல் கொண்ட ஆரம்ப மனிதரைத் தான் ஐவர் குழுவின் பொருட்டால் பாவமன்னிப்புக் கேட்க வைத்திருக்கின்றனர்.

ஆதம் (அலை) பற்றி நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுகின்ற செய்திகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றிரண்டை இப்போது பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), “நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்பார்கள். மக்கள் சிலர், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)என்று கூறுவார்கள். ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்ட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்) கோபம் கொண்டான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (ஆகவே,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 3340

அவர்கள் செய்த பாவம் மரத்தை நெருங்கியது மட்டும் தான். அதுவும் அவனது விதியின் அடிப்படையில் அமைந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள்தாமே!என்று மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம் (அலை) அவர்கள் “மூசா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் “எழுதிவிட்டஅல்லது “விதித்துவிட்டஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள்என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா (அலை) அவர்களைத் தோற்கடித்து விட்டர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4738

ஆதம் நபி செய்த அந்தப் பாவத்திற்காகக் கூட அவர்களைப் பழிக்க முடியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.

இப்படிப்பட்ட சிறந்த நபியைத் தான் இந்த ஷியா வர்க்கம் கொச்சைப்படுத்துகின்றது.

இந்த ஷியாக்களுடைய வேலையே தாங்கள் கடவுளாகக் கொண்டாடும் முஹம்மத் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகியோரைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அவ்வாறு தூக்கிப் பிடிக்கும் போது, மலக்குகள், நபிமார்களைக் காலில் போட்டு மிதித்தாலும் கவலைப்பட மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த ஐவர் மீது அவர்களுக்கு அளவு கடந்த வெறியூட்டப்பட்டுள்ளது.

ஐந்து கடவுளர்களும் அத்வைதக் கொள்கையும்

இந்தப் பாவிகள், மவ்லிதைப் பாடுகின்ற மவ்லவிகள், லெப்பைகள் அனைவரும் பஞ்சா என்ற ஐந்து கடவுள் கொள்கையை, அல்லாஹ் இணை வைப்பிலிருந்து பாதுகாத்துள்ள சுவனபதியிலிருந்தே துவக்குகின்றார்கள். அத்துடன் நில்லாமல் இதில் அத்வைதக் கொள்கையை எவ்வித சங்கடமும் இல்லாமல் சந்தோஷமாக நுழைக்கின்றனர்.

(அல்லாஹ்வாகிய) நான் மஹ்மூத் – புகழப்படக்கூடியவன்; இவர் முஹம்மது – புகழப்படக்கூடியவர்.

நான் அஃலா – மிக உயர்ந்தவன்; இவர் அலீ – உயர்வானவர்.

நான் ஃபாத்திர் – முன்மாதிரியின்றி படைப்பவன்; இவர் ஃபாத்திமா

நான் அல்முஹ்ஸின் – நன்மை செய்பவன்; இவர் ஹஸன் – நன்மை.

என்னிடம் இஹ்ஸான் – நன்மை உள்ளது; இவர் ஹுஸைன் – சிறிய நன்மை

இந்த ஐவரின் பெயரையும் அல்லாஹ்வுடைய பெயர்களுடன் பின்னிப் பிணைப்பதில் இந்த ஷியாக்கள் சரியான சதி வேலையைக் கையாள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வும் இந்த ஐவர் குழுவும் ஒன்று என்ற கேடுகெட்ட சித்தாந்தத்தைப் புகுத்துகின்றார்கள்.

மஹ்மூத் என்றால் புகழப்படக்கூடியவன் என்று பொருள். இதை அல்லாஹ்வுடைய பெயராக ஆக்குகின்றார்கள். முஹம்மது என்றாலும் அதே பொருள் தான். ஆனால் அது நபி (ஸல்) அவர்களின் பெயராகும். இதன் வேர்ச்சொல் ஹம்து என்பதாகும். இதிலிருந்து தான் மஹ்மூத், முஹம்மது என்ற வார்த்தைகள் பிறந்துள்ளன. அதாவது அல்லாஹ்வும் முஹம்மதும் ஒரே ஆள் தான் என்று வாதிக்கின்றனர்.

இதேபோல் அஃலா என்றால் மிக உயர்ந்தவன் என்று பொருள். இதை அல்லாஹ்வின் பெயராக ஆக்குகின்றார்கள். அலீ என்றால் உயர்ந்தவர். இதை அலீயின் பெயராக ஆக்குகின்றார்கள். இதன் வேர்ச்சொல் உலுவ்வுன் என்பதாகும். இதிலிருந்து தான் அஃலா, அலீ என்ற வார்த்தைகள் பிறந்துள்ளன. இதன் மூலம் அல்லாஹ்வும் அலீயும் ஒரே ஆள் என்று வாதிக்கின்றனர்.

அல்முஹ்ஸின் என்ற அல்லாஹ்வின் பெயரைக் கூறுகின்றார்கள். ஹஸன் என்பது ஹஸன் (ரலி) அவர்களின் பெயர். ஆக, அல்லாஹ்வும் ஹஸனும் ஒன்று என்ற கருத்தைத் திணிக்கிறார்கள்.

ஹுஸைனுக்கு மட்டும் அல்லாஹ்வுடைய பெயராகக் கொண்டு வரவில்லை. அப்படி ஒரு வார்த்தை இல்லை. அதனால் என்னிடம் ஒரு நன்மை உள்ளது என்று முடிச்சுப் போட்டு, அல்லாஹ்வையும் ஹுஸைனையும் ஒன்றாக்குகின்றனர்.

முஹ்ஸின், ஹஸன், ஹுஸைன் ஆகிய மூன்றுமே ஹுஸ்னுன் என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவையாகும். அவற்றையெல்லாம் குயுக்தியாக பொருத்தியவர்கள், ஃபாத்திமா என்ற வார்த்தையை மட்டும் அல்லாஹ்வுடைய எந்தப் பெயருடனும் பொருத்த முடியவில்லை. அதனால் ஃபாத்திர் என்ற அல்லாஹ்வுடைய பெயருடன் பொருத்துகின்றார்கள்.

ஃபாத்திமா என்ற பெயருக்கு ஏதுவாக ஃபாதிம் என்று தான் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் அவ்வாறு கொண்டு வரமுடியவில்லை. ஃபத்ம் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த ஃபாத்திமா என்ற வார்த்தைக்குப் பொருள், பால்குடியை மறக்கடித்தல் என்பதாகும்.

ஆனால் ஃபாத்திர் என்ற வார்த்தை, ஃபத்ரு – பிளத்தல், படைத்தல் என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்ததாகும். இங்குதான் அவர்களால் முடிச்சுப் போட முடியவில்லை. இவ்விரண்டும் வெவ்வேறு வார்த்தைகளாகும். இதனால் இவர்களது சதி வேலை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அத்வைதக் கொள்கை என்ற அபத்தம் அம்பலத்திற்கு வந்து விட்டது.

அல்லாஹ்வும் அடியார்களும் ஒன்று தான்; காணும் பொருள் எல்லாம் கடவுள் தான் என்பது அத்வைதக் கொள்கையாகும். இந்தக் கொள்கையை இஸ்லாமியக் கொள்கை என்ற பெயரில் சின்னஞ்சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குப் போதிக்கப்படுகின்றது. வீட்டில் உள்ள தாய்மார்கள், “அல்லாஹ் தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான்’ என்று பிள்ளைகளுக்குப் போதிக்கின்றனர். இது ஷியாக் கொள்கையின் வெளிப்பாடு தான். எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் இந்தக் கொள்கையைத் தகர்த்தெறிகிறான்.

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)

அவன் வானத்திற்கு மேல் இருப்பதாகப் பின்வரும் வசனம் தெரிவிக்கின்றது.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். (அல்குர்ஆன் 67:16)

அல்லாஹ், தூணிலோ துரும்பிலோ இல்லை என்று திருக்குர்ஆன் அடித்துச் சொல்கின்றது. எந்த மனிதருடனும், அடியானுடனும் அவன் ஒன்றாகக் கலக்கவோ, ஒருங்கிணையவோ மாட்டான். ஆனால் ஷியாக்களோ, அடியார்களான முஹம்மத் (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவரையும் அல்லாஹ்வையும் ஒன்றாக்குகின்ற விஷ வேலையைச் செய்கின்றனர். இந்தக் கேடுகெட்ட கொள்கை தான் ஹுஸைன் மவ்லிது என்ற பெயரில் பாடப்படுகின்றது.

அல்லாஹ்வின் மீது அப்பட்டமான பொய்

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களிடம், “(இந்த வார்த்தைகளின் மூலம்) உன்னுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து நீ மன்னிப்புக் கோரியிருந்தால் நான் அவர்களுக்கும் சேர்த்து மன்னித்திருப்பேன்” என்று வஹீ அறிவித்தான்.

இவ்வாறு இந்த மவ்லிது கூறுகின்றது. ஆதம் நபிக்கு இந்தச் செய்தியை அல்லாஹ் வஹீ அறிவித்திருந்தால் அதை ஆதம் நபியே கூறியிருக்க வேண்டும். அது திருக்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விரண்டிலும் அது வரவில்லை எனும் போது இது பொய்யான செய்தியாகும்.

ஆதமை நோக்கி அல்லாஹ் சொல்வதாக இப்படி ஒரு பொய்யைக் கூறுகின்றார்கள். உண்மையில் இது அல்லாஹ்வின் மீது சொல்கின்ற அப்பட்டமான பொய்யாகும். இதற்கு அல்லாஹ் கடுமையான தண்டனையை அளிக்கின்றான். இதைப் பின்வரும் வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் “எனக்கு அறிவிக்கப்படுகிறது’ எனக் கூறுபவன், “அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்’ என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். “உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!” (அல்குர்ஆன் 6:93)

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். “இவர்களே தமது இறைவனின் பெயரால் பொய்யுரைத்தோர்” என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. (அல்குர்ஆன் 11:18)

அல்லாஹ்வின் சாபத்தையும் இந்த அநியாயக்காரர்களுக்கு எதிரான சாட்சியத்தையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. இப்படிப்பட்ட தண்டனையையும் இறைச் சாபத்தையும் பெற்றுத் தருகின்ற ஹுஸைன் மவ்லிதைத் தான் மவ்லவிகள், லெப்பைமார்கள் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

நலம் நாடுவோம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

பிறர் நலம் நாடுவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை; இறை நம்பிக்கையின் அடையாளம்; இறையச்சத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்து இருக்கிறோம். இந்த அடிப்படையில் சமுதாயத்தின் அனைத்து மட்டத்தில் இருப்பவர்களும் பிறர் நலம் நாடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், குறிப்பிட்ட விஷயங்களில் பிறர் நலம் நாடுவதற்காக இஸ்லாம் கூறும் நன்மைகள் பற்றியும் கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

வியாபாரத்தில் நலம் நாடுதல்

பெரும்பாலும் வியாபாரத்தின் போது பிறர் நலம் பேணும் நற்செயல் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்கிறோம். கலப்படம் செய்வது, தரமற்ற பொருளை விற்பது, பதுக்குவது என்று பணம் சம்பாதிப்பதற்காக அநியாயமான செயல்களைச் செய்கிறார்கள். பிறரை எப்படியும் ஏமாற்றலாம் எனுமளவிற்குத் தீமையான நடவடிக்கைகள் சர்வ சாதரணமாக நடக்கின்றன. பொருட்களை விற்பவர்களாக இருந்தாலும் வாங்குபவர்களாக இருந்தாலும் எப்போதும் ஒருவருக்கொருவர் நன்மை செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்)  அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)

நூல்: புஹாரி (2079)

ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புஹாரி (2139)

கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி 2140

பள்ளிவாசலில் பிறர் நலம் நாடுதல்

எல்லா விதமான இடங்களிலும் பிறருக்கு நலம் நாடும் வகையில் இருக்க வேண்டும். அல்லாஹ்வை நினைத்து வணங்குவதற்கு அனைவரும் வரும் அவனது ஆலயத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிவாசலைப் பராமரிப்பதற்கு ஆள் இருப்பார்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது. அடுத்தவர்களுக்குத் துன்பம் தரும் காரியங்களைச் செய்துவிடக்கூடாது. வணக்க வழிபாடுகள் புரியும் மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடக்கும் குணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும்.

வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், “துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றனஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: முஸ்லிம் (974)

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ கடைவீதியிலோ தனியாகத் தொழுவதைவிட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்! ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகிறார்.  தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் நாடவில்லை.  தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளி வாசலுக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை! அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகிறது; அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகிறது!

உங்களில் ஒருவர் தொழக் கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர்! அங்கே, அவருக்கு காற்றுப் பிரிந்து, உளூ நீங்கிவிடாமலிருக்கும் வரை, (பிறருக்குத்) தொல்லை தரும் எதையும் அவர் செய்யாமலிருக்கும்வரை, “இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!என்று வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்! உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2119)

பிற உயிரினங்களுக்கு நலம் நாடுதல்

சக மனிதர்களுக்கு மட்டுமல்ல சுற்றி வாழும் மற்ற உயிரினங்களுக்கும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் தலைச்சிறந்த மார்க்கம் இஸ்லாம். இறைவன் அனுமதித்த அடிப்படையில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதும் இல்லை.

அதேசமயம், பகுத்தறிவு இல்லாத ஜீவன்கள் தானே என்று சொல்லிக் கொண்டு அவற்றை எப்படியும் துன்புறுத்தலாம்; வதைக்கலாம் என்று நினைத்துவிடக் கூடாது.

மற்ற உயிரினங்களிடம் கருணை காட்டுவதற்கும் நன்மைகள் இருக்கிறது. கொடுமைப்படுத்தும் காரியங்களை செய்பவர்களுக்கு அதற்குரிய தண்டனை இருக்கிறது என்பதை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்து விடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் செய்தால், ஒட்டகங்களைத் துரிதமாகச் செலுத்துங்கள். நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், (போக்குவரத்துச்) சாலையைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், அது இரவில் விஷ ஜந்துகள் உலவும் இடமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (3891)

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3159)

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது.  உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்😉 உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவிசெய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2363) முஸ்லிம் (2244)

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் “இளைஞர்கள் சிலரைஅல்லது “மக்கள் சிலரைக்கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்று விட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், “இதைச்  செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்என்று சொன்னார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

நூல்: புஹாரி (5515)

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள்.

நூல்: புஹாரி (5516)

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக (அவிழ்த்து) விடவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: புஹாரி (3482) முஸ்லிம் (2242)

பிறர் நலம் நாடுவது குறித்து இஸ்லாம் போன்று வேறு எந்தக் கொள்கையாலும் இந்தளவிற்குத் தெளிவாக விளக்கிவிட முடியாது. உண்மையைச் சொல்வதாக இருப்பின், இதுபோன்று எடுத்துரைக்கும் எந்தவொரு கொள்கையும் எங்கும் இல்லவே இல்லை.

காராணம், பிற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்; தீமை செய்யக் கூடாது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும், கண்ணோட்டத்திலும் இஸ்லாம் கவனத்தைச் செலுத்துகிறது. இதுவரை நாம் பார்த்த செய்திகள் கூட அவற்றுள் ஒரு பகுதிதான்.

இன்னும் பற்பல செய்திகள், கருத்துக்கள் இருக்கின்றன. இத்தகைய இஸ்லாமிய மார்க்கம் உலகில் தலைவிரித்தாடும் தீவிரவாதத்தை ஆதரிக்குமா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதுபற்றி சிந்தித்தால் நமக்கு கிடைக்கும் ஒரே பதில், இஸ்லாம் ஒருபோதும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை, அதை ஆதரிக்கவில்லை என்பது தான். இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவான ஒன்று என்பதை எவராலும் மறுக்க இயலாது.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்    தொடர்: 28

இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுவான் என்பதற்கு வழிகேடர்கள் சில வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அவற்றின் விளக்கங்களைப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற வசனங்களையும், ஹதீஸ்களையும் அவர்கள் காட்டும் போது, அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் காட்டிவிட்டு, மற்றொரு பகுதியை மறைத்து விடுகின்றனர். ஆனால் இவர்கள் காட்டும் ஆதாரங்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் அது இவர்களுக்கு எதிரான ஆதாரங்களாகவே அமைந்துள்ளதை விளங்க முடியும்.

(போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்கள் உங்களிடம் சமாளிக்கின்றனர். “சமாளிக்காதீர்கள்! நாங்கள் உங்களை நம்பப் போவதில்லை. உங்களைப் பற்றிய செய்திகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான்என்று (முஹம்மதே!) கூறுவீராக! உங்கள் நடவடிக்கையை அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவார்கள். பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்! நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

அல்குர்ஆன் 9.94

இந்த வசனத்திலும் பாதியை மறைத்துவிட்டு பார்த்தீர்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வைப் போன்று பார்க்கக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கிறார்கள் என்று நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகிறார்கள். ஆனால் முழு வசனத்தையும் படித்துப் பார்த்தால் அந்த வசனம்  நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

மேலும் நபிகளார் போருக்குச் செல்லாதவர்களிடம் ஏன் போரில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்ட போது அவர்கள் சொல்கின்ற காரணத்தை நபிகளார் நம்பவில்லை. அவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதால் அவர்கள் போருக்கு வராததற்குரிய காரணத்தைக் கண்டு பிடித்ததால் நபிகளார் நம்பவில்லை என்று நினைத்து விடக்கூடாது. அந்த வசனத்திலேயே இறைவன் நபிகளாரைப் பார்த்து, நீங்கள் சொல்லக்கூடிய காரணத்தை நம்ப மாட்டேன். ஏனென்றால், போருக்கு வராமல் பின் வாங்கிய காரணத்தை இறைவன் எனக்கு அறிவித்து விட்டான் என்று அவர்களிடம் சொல்லச் சொல்கிறான். இது, அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தானே காட்டுகின்றது.

இந்த வசனம் ஏன், எப்போது  இறக்கப்பட்டது என்பதை நாம் அறிந்தாலே நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லை என்பது தெளிவாகும். அந்த ஹதீஸ் பின்வருமாறு:

அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்உஸ்ரா‘ (எனும் தபூக்) போர், பத்ருப் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த அறப்போரிலும் ஒரு போதும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.

மேலும் (தபூக் போரில் கலந்துகொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பக-ல் நான் சொல்-விட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்தி-ருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முத-ல் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக் போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.

ஆகவே மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்து வந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுவிக்காமல் இருந்துவிடுவார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான். அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென  மக்களுக்குத் தடை விதித்ததி-ருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முசலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்முசலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதுஎன்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்து விடுவார்கள்என்றார்கள்.

ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.

(போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாம-ருந்தவர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

(நம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒரு போதும் நம்பவே மாட்டோம். உங்கள் விஷயங்களை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள், மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (9:94)  

நூல்: புகாரி 4677

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று பேரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமூக பகிஷ்காரம் செய்கிறார்கள். ஆனால் இதே போன்று போருக்கு வராமல் இருந்துவிட்டு, பொய்யான காரணங்களைச் சொன்னவர்களை அவர்கள் தண்டிக்கவில்லை.

நபியவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியும் என்றால் அவர்கள் கூறுவது பொய் என்று தெரிந்து அவர்களைக் கடுமையாகத் தண்டித்திருப்பார்களே! உண்மையைச் சொன்ன கஅப் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை விட பொய் சொன்னவர்களுக்குத் தான் அதிகமான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களை நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விடுகின்றார்கள். அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த பிறகு தான்  இவர்கள் பொய் சொல்லியுள்ளார்கள் என்பது நபியவர்களுக்குத் தெரிகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதற்குத் தான் இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

இதுபோன்ற வசனங்களையும், நாம் இதுவரை சொன்ன சம்பவங்களையும் வைத்துக் கொண்டு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்று வாதிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சொன்ன குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களிலிருந்தே நபிகளாருக்கு மறைவான விஷயங்களை அறியும் ஆற்றல் இல்லை. அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததின் மூலம் அவர்கள் அவற்றை அறிந்து கொண்டார்கள். அவர்களுக்கு எதுவெல்லாம் தெரியுமோ அவை அனைத்தும் நமக்கும் தெரியும் என்று நிரூபித்துள்ளோம்.

இவற்றை வைத்துக் கொண்டு நபிமார்களுக்கோ, மகான்களுக்கோ, அவ்லியாக்களுக்கோ மறைவான ஞானம் இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதுவரை நாம் அல்லாஹ்வைத் தவிர நபிமார்களுக்கோ மற்ற மனிதர்களுக்கோ மறைவான ஞானம் இல்லை என்பதற்கு இத்தனை ஆதாரங்களையும் பார்த்தோம்.

அடுத்ததாக,

இறைவன் பெரும்பாலான நபிமார்களுக்கு சில அற்புதங்களை செய்யக்கூடிய ஆற்றலை சில நேரங்களில் வழங்கியிருந்தான். அதில் சில நபிமார்களைப் பற்றித்தான் குர்ஆனில் சொல்லியிருக்கின்றான். ஆனால் அதிகமான நபிமார்களுக்கு நாம் நினைத்துப் பார்க்க இயலாத அற்புதங்களை வழங்கியிருக்கின்றான். அந்த அற்புதங்களைப் பார்க்கும் போது கண்டிப்பாக இவர்கள் மனிதப் படைப்பே இல்லை என்பது போன்று தெரியும்.

நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்க்கும் போது, இதுவரை நாம் நபிமார்களை சாதாரண மனிதப் படைப்பு, அவர்களுக்குப் பிரத்தியேக ஆற்றல் இல்லை என்று நினைத்திருந்தோம். ஆனால் நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்களே! அப்படியானால் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள்தானே! அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றதே! என்று தோன்றலாம்.

இதில் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கின்றது. நாம் இதற்கு முன் நாம் பார்த்தவற்றையும் இந்த அற்புதங்கள் நிகழ்த்திய சம்பவங்களையும் இணைத்துப் பார்த்தோமென்றால் நபிமார்களுக்கு தனிப்பட்ட முறையில் அற்புதங்கள் செய்வதற்கும் ஆற்றல் இல்லை என்பதும் தெளிவாகும்.

ஆனால் இவர்கள் தங்களுக்குத் தோதுவாக குர்ஆன் வசனங்களை வளைத்து நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பட்டியலிட்டு மக்களுக்குக் காட்டி, அதை இணை கற்பிப்பதற்கு பெரிய ஒரு ஆதாரமாகக் காட்டுவார்கள். இது சம்பந்தமான விஷயத்தில் நாம் தெளிவு பெற வேண்டியது கட்டாயமாகும். இதுவரை நாம் பார்த்ததற்கு மாற்றமாகத் தான் இந்த அற்புதங்கள் இருக்கும். இந்த இரண்டையும் எப்படி இணைப்பது? இரண்டையும் முரண் இல்லாமல் எப்படி விளங்கிக் கொள்வது? அதையும் நம்ப வேண்டும். இதையும் நம்ப வேண்டும். இரண்டையும்  முரண் இல்லாமல் எப்படி நம்புவது?

அவர்கள் அற்புதங்கள் என்ற வகையில் என்னென்ன ஆதாரங்களைக் காட்டுகிறார்கள்? அதை எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்? நபிமார்கள் அந்த அற்புதங்களைச் செய்த காரணத்தினால் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டுப் போயிட்டாôர்களா? அந்த அற்புதங்களைச் செய்ததினால் அவர்களுக்கு எல்லா ஆற்றலும் இருக்கின்றது என்று புரிந்து கொள்வதா? அவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாதென்றால் அதற்குரிய காரணங்கள், ஆதாரங்கள் என்ன? என்பதை நாம் இனி பார்க்க இருக்கின்றோம்.

அற்புதங்களைப் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு

நபிமார்களின் மூலமாக அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதற்குத் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அதே நேரத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களும் எந்த அற்புதத்தையும் செய்ய முடியாத அளவிற்கு சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள் என்பதற்கும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதில் தெளிவு இல்லாத காரணத்தினால் முஸ்லிம்களில் இரண்டு சாரார் வரம்பு மீறிச் சென்றதை நம்மால் காண முடிகின்றது.

அதில் ஒரு சாரார் திருக்குர்ஆனில் எங்கெல்லாம் அற்புதங்கள் என்று வருகின்றதோ அந்த வார்த்தைக்கு அற்புதங்கள் என்ற அர்த்தம் கிடயாது. அதற்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கின்றது என்று சொல்லி அற்புதங்களை மறுத்த ஒரு கூட்டம் இஸ்லாத்தின் பெயரால் முன்பு இருந்தார்கள். ஆனால் இப்போது அந்தக் கருத்தில் உள்ளவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.

இன்னொரு சாரார், நபிமார்களுக்கு நிகழ்ந்த அற்புதங்களைப் பார்த்து விட்டு இந்த அற்புதங்களைச் செய்த காரணத்தினால் ஒட்டுமொத்த நபிமார்களின் வாழ்க்கையே அற்புதம் தான். அவர்கள் எதைச் செய்தாலும் அற்புதம் தான். அவர்கள் மனிதர்களாக இருக்கவேயில்லை. அவர்களுக்கு எல்லாவிதமான இறைத்தன்மையும் இருக்கின்றது என்று சொல்லக்கூய ஒரு கூட்டம்.

அல்லாஹ் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தினான் என்பதற்குத் திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் நமக்குச் சான்று கிடைக்கின்றதோ அதெல்லாம் இறைவனுடைய நாட்டப்படி நடந்தது, நடத்திக் காட்டப்பட்டது. ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய அளவைத் தவிர மற்ற இலட்சக்கணக்கான சம்பவங்களுமே ஒரு சாதாரண மனிதனுடைய காரியமாகத் தான் இருக்கும். அவர்கள் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியாது என்று நம்ப வேண்டும். இது தான் சரியான நேர்மையான நியாயமான ஒரு முடிவாகும்.

அந்த அடிப்படையில், நபிமார்களுக்கு அற்புதங்கள் நிகழ்ந்தது என்பதை  கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக  வேண்டும். அவற்றை யாராவது மறுத்தார்களேயானால் அதிலும் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் போது மறுப்பார்களேயானால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாவர். அற்புதங்களை மறுத்தவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். ஏனென்றால் இவர்கள் குர்ஆன் வசனங்களை மறுத்தவர்களாவர். அதே போன்று, அற்புதங்கள் செய்ததினால் அல்லாஹ்விற்குரிய ஆற்றல் நபிமார்களுக்கும் இருக்கின்றது என்று நம்பினாலும் அவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். ஏனென்றால் இவர்கள் நபிமார்களை அல்லாஹ்வுக்கு நிகராக, சமமாக ஆக்கி இணை கற்பித்தவர்களாவர். ஆக இவை இரண்டும் நம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பயங்கரமான பாவங்களாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த அற்புதங்களைப் பொறுத்த வரைக்கும் அல்லாஹ் எதற்காக நிகழ்த்துகிறான் என்றால், அல்லாஹ் ஒரு மனிதரைத் தூதராகத் தேர்வு செய்து அனுப்புகிறான். தூதராக அனுப்பவதாக இருந்தால் கூட, வானத்திலிருந்து ஒரு மனிதரைத்  தூதராக அனுப்புவதாக இருந்தால் அற்புதங்கள் தேவைப்படாது. இப்போது நான் வானத்திலிருந்து ஒரு தூதரை நான் அனுப்பப் போகின்றேன் என்று சொல்லி நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வானத்திலிருந்து ஒரு தூதர் இறங்கி வந்தால் அப்போது அவர் தூதர் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. ஏனென்றால் அவர் நம்மைப் போன்று தாய் தந்தைக்கு பிறக்காமல், நம் (மனித) இனத்தைச் சாராதவராக இருப்பதினால் அவர் மீது யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். உலக மக்களும் அவரைத் தூதர் என்று ஏற்றுக் கொள்வதற்கு எந்த தயக்கமும் வராது.

ஆனால், அல்லாஹ் தூதரை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறான்? நம்மை போல ஒரு தாய் தந்தைக்குப் பிறந்து, சிறுவயதில் நாம் செய்கின்ற செயல்களைச் செய்து, பொதுவாக ஒரு மனிதராக வாழ்ந்த ஒருவரை தூதராகத் தேர்வு செய்து இந்தச் செய்தியை மக்களுக்கு சொல்லுமாறு சொல்கிறான். அவர் மக்களிடத்தில், “நான் இறைத்தூதர் என்னை நம்புங்கள்’ என்று சொன்னால் யாரும் அவரை நம்புவார்களா?

“நீ அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்கிறாய்? எங்களைப் போன்று தானே இருக்கிறாய்? உனக்கு மட்டும் அல்லாஹ்விடமிருந்து செய்தி வருகின்றது என்று சொல்கிறாய்? உனக்குச் சொன்ன செய்தியை இறைவன் எங்களுக்கும் சொல்ல வேண்டியது தானே? உன்னைத் தூதர் என்று சொன்னால் நாங்கள் எப்படி நம்புவது?. அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு செய்தியை வாங்கித் தருவதற்கு உன்னை நியமித்திருக்கிறான் என்றால் எங்களை விட உன்னிடம் வித்தியாசமாக என்ன இருக்கிறது? எங்களை விட படைப்பில் நீ வித்தியாசப்படுகிறாயா? எங்களிடம் இருக்கின்ற தன்மைகளில் ஏதாவது ஒரு தன்மையில் நீ வித்தியாசமாக இருக்கின்றாயா? ஒன்றுமே இல்லையே! எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் எங்களைப் போன்று தானே இருக்கின்றாய் என்று எல்லா மக்களும் சந்தேகப்படுவார்கள்.

அந்த மக்கள் தூதர்களை சந்தேகப்படக்கூடாது என்பதற்காகத் தான் இறைவன் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதை நிருபிப்பதற்காக இறைவனே செய்து காட்டக்கூடிய சில காரியங்களை, அற்புதங்களை சில நேரங்களில் அல்லாஹ் அவர்கள் மூலம் நிகழ்த்திக் காட்டுகின்றான்.

இந்த அற்புதங்களைச் செய்து காட்டவில்லையென்றால் இவர்களை எப்படித் தூதர்களாக நம்புவார்கள்? அற்புதங்கள் எதுவும் செய்து காட்டாமல் ஒருவர் தன்னைத் தூதர் என்று சொல்ல மக்களும் அதை நம்புவார்களானால் இன்றைக்கு எல்லோருமே தூதராக ஆக்கப்பட்டிருப்பார்கள். தூதர் இல்லாதவர்களையும், பொய்யான- போலியான தூதர்களையும் தூதர்கள் என்று நம்ப வேண்டிய ஒரு நிலை மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கும்.

மக்கள் இறைத்தூதர்களை, தூதர்கள் என்று ஏற்றுக் கொள்வதில் குழம்பி விடக்கூடாது என்பதற்காகத்தான் நபிமார்ககளுக்கு சில அற்புதங்களைக் கொடுத்து அனுப்புகின்றான்.

இன்னும் சில நேரங்களில் அவர்களைச் சார்ந்த மக்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அற்புதங்களை நபிமார்களுக்கு வழங்குவான். நபிமார்களுடன் அந்த மக்கள் இருப்பார்கள். அவர்கள் சிரமப்படுவார்கள். கஷ்டப்படுவார்கள். அதைத் தூதர்களிடம் வந்து முறையிடுவார்கள். நபிமார்கள், அல்லாஹ்விடம் துஆ செய்தவுடன் அற்புதமான முறையில் அவர்களுடைய பிரார்த்தனைக்கு ஒரு விளைவு ஏற்படும்.

இது எதனால் ஏற்படுகின்றது? அந்த மக்கள் அவரை  நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான். அந்த சிரமங்கள் நீங்குவதன் மூலமாக அவர்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். அந்த நம்பிக்கை கொண்ட மக்களுக்கு சில நேரங்களில் இப்படி ஒன்றிரண்டு அற்புதங்களைச் செய்து காட்டும் போது தான் அந்த மக்களுக்கு அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படாது. எந்த அற்புதமுமே செய்து காட்டாமல் சும்மாவே இருந்தால் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு சில காலத்திலலேயே இவர் என்ன? நம்மை போலத்தானே இருக்கிறார். இவரிடத்தில் நம்மை விட என்ன சிறப்பு இருக்கிறது? எந்த வித்தியாசத்தையும் இவரிடத்தில் காணோமே என்று ஷைத்தான் அவர்களுடைய உள்ளங்களில் தீய எண்ணத்தைத் தோன்றச் செய்து விடுவான். இதுபோன்ற எண்ணங்கள் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான்.

உதாரணமாக,  மூஸா நபி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

ஒரு காளை மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறிய போது “எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?” என்று கேட்டனர்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையதுஎன்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்என்று அவர்கள் கேட்டனர். “அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!என்று அவர் கூறினார்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அதன் நிறம் என்னஎன்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்என்று அவர்கள் கேட்டனர். “அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்என்றார்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையதுஎன்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்என்று அவர்கள் கூறினர்.

அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாததுஎன்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். “இப்போது தான் சரியாகச் சொன்னீர்என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.

நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்.

அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 2. 67-71)

மேற்கண்ட வசனத்தில் மூஸா நபி காலத்தில் ஒரு மனிதர் கொல்லப்படுகின்றார். அவரை யார் கொன்றார்கள் என்பது தெரியவில்லை. உடனே அங்கு வாழ்ந்த மக்கள் மூஸாவிடம் வந்து இந்த மனிதரை கொலை செய்தவார் யார் என்று தெரியப்படுத்துங்கள் என்று கேட்டனர். அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுகிறார்கள். ஒரு மாட்டை அறுத்து அந்த மாட்டின் ஒரு பகுதியால் அவரை அடிப்பீராக! அவர் உயிர் பெற்று, தன்னைக் கொன்றவரை அடையாளம் காட்டுவார் என்ற சொன்னவுடன் மூஸாவும் அவ்வாறே செய்தார். இப்படியாக ஒரு சம்பவம் அல்பகரா என்ற அத்தியாயத்தில் இடம் பெறுகின்றது.

இந்த அற்புதத்தை, அதாவது இறந்தவரை உயிர்ப்பித்த செயலை மூஸா நபி அல்லாஹ்வின் உதவியால் தான் செய்தார்களே தவிர தாமாகச் செய்யவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இறந்த ஒரு நபர் தானாக எழுந்து, “என்னைக் கொன்றவர் இவர்தான்’ என்று சொல்வது ஒரு அற்புதமான செயல்தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கள்ள வேடம் போடுபவர் யார்?

கபட நாடகம் ஆடுபவர் யார்?

உலகில் எங்கு குண்டு வெடித்தாலும், பயங்கரவாதச் செயல் நடந்தாலும் அதன் பழியும் பாவமும் முஸ்லிம்கள் தலையில் தான் விழுகின்றது.

உளவுத்துறை ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே ஊடகங்கள் புலனாய்வு என்ற பெயரில் புதுப்புது ஊகங்களை வெளியிட்டு, தங்களுக்குத் தோன்றுகின்ற தனிநபர்களை, இயக்கங்களை அந்த பயங்கரவாதச் சம்பவத்துடன் முடிச்சுப் போட்டு முடித்து விடுகின்றார்கள்.

முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தும் போக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது.

விமானத்தில், விமான நிலையத்தில், ரயிலில், ரயில் நிலையத்தில், பேருந்தில், பேருந்து நிலையத்தில், வணிகத் தலங்களில், மக்கள் கூடுகின்ற பொதுவிடங்களில் குண்டு வெடித்தவுடன் பயங்கரவாதப் பார்வை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் பாய்கின்றது; பதிகின்றது. ஒட்டுமொத்தத்தில் முஸ்லிம் சமுதாயமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றது.

இதைக் கவனத்திலும், கருத்திலும் கொண்டு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை, தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை தமிழகமெங்கும் நடத்தியது. ஊடகங்கள் இதை உற்று நோக்கின. அரசியல்வாதிகள் இதை உன்னிப்பாகக் கவனித்தார்கள். அரசியல் விமர்சகர்கள் ஆய்வுப் பார்வையைச் செலுத்தினார்கள். பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டன.

பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை வசிக்கும் வீடுகளில், வந்து செல்கின்ற வீதிகளில், சந்து பொந்துகளில், முச்சந்திகளில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், காவல்நிலையங்கள், பஸ், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம், இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? போன்ற தலைப்புகளில் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. ஆண்கள், பெண்கள் என பாரபட்சமில்லாமல் இதைப் படித்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். இப்போது எடுத்திருக்கும் இந்த முயற்சிகளை நீங்கள் எப்போதோ எடுத்திருக்க வேண்டும் என்று தங்கள் ஆதங்கத்தையும் பதிவு செய்தனர்.

இன்றைக்குத் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விமர்சனங்களில், விவாதங்களில், தீவிரவாதத்தை முஸ்லிம்களே எதிர்க்கிறார்கள் என்ற கருத்து திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லப்படுகின்றது. இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரம் மேற்கோளாகக் காட்டப்படுகின்றது.

மொத்தத்தில் மக்களைக் கவர்ந்த ஒரு மகத்தான முயற்சி, மார்க்கத்தின் மீது வீசப்பட்ட களங்கத்தை, கறையைக் கழுவுவதற்கான கண்ணியப் பணி, இப்படி ஒட்டுமொத்த தமிழகமே வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருக்கும் போது தனக்குப் பித்து ஏறி, சித்தம் கலங்கிப் போன ஜாக் இயக்கம் மட்டும் பொறாமையை வெளிப்படுத்தியிருக்கின்றது. தனது மாதப் பத்திரிகையில் அதைக் கொட்டித் தீர்த்திருக்கின்றது.

கபட நாடகம் என்று தலைப்பிட்டு, தலையங்கம் என்ற பெயரில் கொலையங்கம் தீட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை வெறி கொண்டமட்டில் கடித்துக் குதறியிருந்தது. குறிவைத்துத் தாக்கியிருந்தது. கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளித்திருந்தது.

ஒரு பேச்சுக்கு, ஒரு வாதத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி, ஜாக் வீசியிருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று வைத்துக் கொள்வோம். இப்போது செய்த பணி இஸ்லாத்தின் மீது திட்டமிட்டுச் சொல்லப்படுகின்ற களங்கத்தை, கறைகளை, துடைத்துத் தூர எறிகின்ற பணியாகும். இந்தப் பணியை இஸ்லாமிய சமுதாயத்தினரும், இதர மக்களும் வாழ்த்தி வரவேற்கின்ற இந்த வேளையில் இவர்கள் வாழ்த்த வேண்டாம். குறைந்தபட்சம் வம்புக்கு வராமல், வசைபாடாமல் இருக்கலாம்.

இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் மீது கொட்டித் தீர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொட்டித் தீர்த்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இஸ்லாத்தின் மீது உள்ள களங்கம் துடைக்கின்ற இந்தப் பணியைக் குறை சொல்லக் கிளம்பியிருக்கின்றார்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்ன?

ஏற்கனவே இவர்கள் பிறை விஷயத்தில் தூதரின் பிறையைப் பின்பற்றாமல் யூதப் பிறையைப் பின்பற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை ஏகத்துவத்தில் வெளியிட்டிருந்தோம். பிறையில் மட்டுமல்ல, பிற விஷயங்களிலும் இப்போது யூதத்தைத் தப்பாது பின்பற்றுகின்றார்கள் என்பது தான் இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

ஓர் அழைப்புப் பணியைக் குறை சொல்கின்றார்கள், குறை காணுகின்றார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நம்மைக் குறை கூறுவதற்கு எடுத்துக்காட்டிய வசனங்கள் அத்தனைக்கும் இவர்களே எடுத்துக்காட்டுக்களாக மாறியிருக்கிறார்கள் என்பது தான் இதன் பொருள்.

வெறும் மக்தப் மதரஸா மட்டும் நடத்திவிட்டு அழைப்புப் பணி என்று கூறி மாதா மாதம் டெல்லியில் உள்ள சவூதி தூதரகத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு பிழைப்பு நடத்தும் இவர்கள், தாங்களும் அழைப்புப் பணி செய்யாமல் அழைப்புப் பணி செய்பவர்களையும் குறை கூறும் வேலையைச் செய்கிறார்கள். இது கபட நாடகம் இல்லாமல், கள்ள வேடம் இல்லாமல் வேறு என்ன?

தவ்ஹீத் ஜமாஅத்திற்குக் கபட நாடகம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? கள்ள வேடம் போட வேண்டிய அவசியம் என்ன?

ஏதாவது ஒரு வகையில் கொலை, கொள்ளை, குண்டு வெடிப்புச் சம்பவம் என்று அந்தரங்க வேலையில் இறங்கி விட்டு, அதை மறைப்பதற்காக தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தியிருந்தால் அதைக் கபட நாடகம் என்று சொல்லலாம். ஆனால் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று கம்பீரமாக, தைரியமாகத் தனது பாதையில் பயமில்லாமல் பயணம் செய்கின்றது. எனவே எதற்காகக் கள்ள வேடம் போட வேண்டும்?

அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு முஸ்லிம்கள் அநியாயமாகத் தாக்கப்பட்டார்கள். அப்போது, நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லா முஸ்லிம்களுக்கும் எழுந்தது. பதிலுக்குப் பதில் என்றால் அது சமுதாயத்திற்குப் பெரும் பாதிப்பாக அமையும் என்பதால் அறவழிப் போராட்டங்கள் மூலம் சமுதாயம் தனது காரியத்தைச் சாதிக்கலாம் என்று ஜாக் தலைமையிடம் எத்தனையோ தடவை எடுத்து வைத்தோம். வலியுறுத்தினோம். சமுதாயத்திற்குக் குரல் கொடுப்பதற்கான சரமாரியான மார்க்க ஆதாரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டன.

ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி, அந்தச் சபையில் இதற்கு எந்தப் பதிலும் தரமாட்டார். ஆனால் பொதுக்கூட்டங்களில் பேசும் போது ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவற்றைக் கிண்டல் செய்து பேசுவார். அரசியல் ஆர்ப்பாட்டம் எல்லாம் நமக்குத் தேவையில்லை என்று பேசுவார்.

பாதிக்கப்பட்ட சமுதாயம் ஆயுதம் தூக்கிவிடாமல் அறவழிப் போராட்டங்கள் மூலம் காரியம் சாதிக்கலாம் என்று நாம் எடுத்து வைத்த வாதங்களைக் கேலி செய்ததன் மூலம், தீவிரவாதச் செயல்களுக்கு மறைமுக ஆதரவளித்தவர் ஜாக் தலைவர் கமாலுத்தீன் மதனி என்பதை யாரும் மறுக்க முடியுமா?

இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் சென்று வழிதவறிவிடக் கூடாது என்பதற்காகவே தமுமுக என்ற இயக்கம் கண்ட நம்மை குறை கூற இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது?

ஆர்ப்பாட்டம் வேண்டாம், அரசியல் வேண்டாம் என்று முழங்கியவர்கள் அதில் நிலையாக, உறுதியாக நிற்கவும் நிலைக்கவும் வேண்டுமல்லவா?

தவ்ஹீத் ஜமாஅத் – தமுமுக இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் ஏற்பட்டது எதனால்? சொத்துத் தகராறா? பதவித் தகராறா? அறவே இல்லை. தமுமுக தலைவர்களுக்கு அரசியல் பதவிகளில் ஆசை ஏற்பட்டது. அதற்குக் குறுக்கே நிற்பது  தவ்ஹீதுக் கொள்கை தான். அதனால் தவ்ஹீதுக் கொள்கை தமுமுகவின் வளர்ச்சிக்குத் தடைக்கல் என்று எழுதிக் கொடுத்து விட்டு, தவ்ஹீதுவாதிகளை வெளியேற்றினார்கள்.

அரசியல், ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்பது கமாலுத்தீன் மதனியின் நிலைப்பாடு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? நமக்கு மத்தியிலுள்ள பிரச்சனையே தமுமுக தான். அதற்கு இப்போது ஒரு முடிவு வந்து விட்டது என்று கருதி தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டாம்; விரோதம் பாராட்டாமல் இருப்போம் என்ற முடிவுக்குக் கமாலுத்தீன் மதனி வந்திருக்க வேண்டும. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, தமுமுகவுடன் கைகோர்த்து, தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராகச் செயல்பட்டார்.

தவ்ஹீத் ஜமாஅத் அரசியலில் போட்டியிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஆனால் தமுமுகவோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற பிழைப்பாட்டில் உள்ளது. அதற்காக மார்க்கத்திலும் வளைந்து கொடுப்பதற்குத் தயாராக உள்ளது. அப்படிப்பட்ட தமுமுகவுடன் கமாலுத்தீன் கைகுலுக்கிக் கொண்டார். கள்ள வேடம் போட்டது யார்? கபட நாடகம் நடத்தியது யார் என்று இப்போது தெரிகின்றதா?

அத்துடன் மட்டுமல்ல! பேரணி ஊர்வலத்தைக் கிண்டல் செய்தவர் மதுரையில் இவரே ஒரு பேரணியை நடத்திச் சென்றார்.

மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்! இது என்ன நியாயம்? அப்படியானால் கமாலுத்தீனிடம் குடிகொண்டிருப்பது என்ன? நம்மீது கொண்டிருந்த கசப்புணர்வும் காழ்ப்புணர்ச்சியும் தவிர்த்து வேறென்ன இருக்க முடியும்?

பாளை சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக பழ்லுல் இலாஹி என்பவரை அறிவிக்க வேண்டும் என்று கோரி மேலப்பாளையத்தில் ஜாக் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்தச் செய்தி 06.04.2006 தினமலரில் வெளியானது. இப்போது சொல்லுங்கள்! கள்ள வேடம் போட்டு, கபட நாடகம் நடத்துவது யார் என்று இப்போது சொல்லுங்கள்.

ஒருபக்கம் குர்ஆன் ஹதீசுக்கு மட்டும் கட்டுப்படுவோம் என்று முழங்குவார்கள். மறுபக்கம் அமீர் என்ற தலைமையை ஏற்று அரசியல், சமூக, மார்க்கப் பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த அகில உலக அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இவர்கள் வெளியிட்ட தன்னிலை விளக்கத்தில் குறிப்பிட்டார்கள்.

சவூதியில் சம்பளத்திற்காக குர்ஆன், ஹதீஸ் என்ற போதனை! தலைமை என்று வருகின்ற போது, மார்க்க விஷயத்திலும் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸைத் தூர எறிந்து விட்டுப் பேசுவது கள்ள வேடம் இல்லையா? கபட நாடகம் இல்லையா?

ஒரு பக்கம் குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற போதனை! மறுபக்கம், நபித்தோழர்களின் ஏகோபித்த முடிவை மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி மார்க்கத்தில் பக்கா குராபிகளை விடவும் கீழ்த்தரமாகச் சென்று, மார்க்கத்தில் மூன்றாவது அடிப்படையை நிறுவினார்கள். கள்ள வேடம் பூண்டு, கபட நாடகம் ஆடுவது யார் என்று இப்போது தெரிகின்றதா?

“கண்ணகிக்கு சிலை வைத்து, பூம்புகாரைப் புதுப்பித்தவர் அல்லவா நீங்கள்?’ என்று கருணாநிதி, கண்ணகிக்குச் சிலை வடித்ததைப் பாராட்டும் கவிதை வரிகளை அல்ஜன்னத் இதழின் பக்கங்களில் வெளியிட்டு, குர்ஆன் ஹதீஸ் மீதுள்ள பிடிமானத்தைப் பக்காவாகப் பிரகடனப்படுத்திய கமாலுத்தீன் போட்டது கபட நாடகத்ததைத் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்?

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய அனைத்து மட்டத்திலும், மாநிலம் முதல் கிளை வரையிலுள்ள அனைத்துப் பொறுப்பாளர்களில் யாரிடத்திலேனும் பொருளாதாரம், பாலியல் குற்றச்சாட்டுக்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தனது தூய்மையை நிலைநாட்டி வருகின்றது.

ஆனால் ஜாக்கின் நிலைமை என்ன? பொருளாதாரக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை, அதிலும் தன்பாலினக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக் கூட உயர் பதவி வழங்கி, உயரிய இடத்தில் வைத்து அழகு பார்க்கும் வேலையை ஜாக் செய்கின்றது. இப்போது சொல்லுங்கள்! கள்ள வேடம் போடுவது யார்? கபட நாடகம் ஆடுவது யார்? என்று இப்போது சொல்லுங்கள்!

இப்படி அரசியலிலும் ஆன்மீகத்திலும் இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிகள், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒற்றை நிகழ்ச்சி நிரலான தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தைக் கபட நாடகம் என்று எழுதுகின்றார்கள்.

கடந்த காலத்தில் ஜிஹாத் என்ற பெயரில் களமிறங்கி ஒரு சிலர் இன்று வரை சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், 1994ல் தமுமுக ஆரம்பிக்கப்பட்ட பிறகு, அறவழிப் போராட்டத்தில் நம்பிக்கையில்லாமல் வழிதவறிச் சென்றவர்கள்.

இந்திய நாட்டில் ஜிஹாத் கடமையில்லை என்பதையும், அப்பாவிப் பொதுமக்களையும் பெண்கள், குழந்தைகளையும் கொன்று குவிப்பதற்குப் பெயர் ஜிஹாத் அல்ல என்பதையும் மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் பல்வேறு பொதுக்கூட்டங்களிலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகளிலும் ஆணித்தரமாக நிரூபித்த பிறகு, அதை ஏற்றுக் கொள்ளாமல் மார்க்கத்திற்கு முரணான காரியங்களைச் செய்தவர்கள் இன்று நம்மீது பழிபோடும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே வாதத்தை இன்று ஜாக், தனது பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் வாந்தி எடுத்திருக்கின்றது.

ஜாக்கிற்கும் அதன் தலைமைக்கும் ஒரு பகிரங்க சவாலை ஏகத்துவம் விடுக்கின்றது. நீங்கள் சொல்கின்ற இந்தக் குற்றச்சாட்டில் உண்மையாளர்களாக இருந்தால் இதை நேருக்கு நேராக தக்க ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டுங்கள். தீவிரவாதக் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு இன்று வரை அடைக்கலம் கொடுப்பது யார்? என்பதை நாமும் அந்த விவாதத்தில் நிரூபிப்போம். இதற்குத் தைரியமிருந்தால் நேரடி விவாதத்திற்கு வாருங்கள். இல்லையேல் வாய் பொத்தி, வாலைச் சுருட்டிக் கொண்டிருங்கள் என்று இதன் மூலம் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.