ஏகத்துவம் – பிப்ரவரி 2014

தலையங்கம்

மகன் என்றால் மகிழ்ச்சி மகள் என்றால் இகழ்ச்சியா?

தமிழகத்தில் “தொட்டில் குழந்தை’ என்ற திட்டத்தை முதன் முதலில் 1992ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகளைத் தொட்டிலிலாவது வீசட்டும் என்ற நோக்கில் இது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது.

கன்றைப் பிரிந்த பசு, குட்டியைப் பிரிந்த ஆடு, குஞ்சைப் பிரிந்த கோழி போன்ற உயிரினங்கள் கூட கத்தி, கதறி அழுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பாசப் பிணைப்பு! நேச இணைப்பு!  அந்த உயிரினங்கள் தங்கள் குட்டிகளை அம்போவென்று விட்டு விட்டுப் போய்விடுவதில்லை. தனது சந்ததிகள் சொந்தக் காலில் நிற்கின்ற வரை, தங்கள் உணவை தாங்களே தேடிக் கொள்கின்ற வரை அவற்றைப் பாலூட்டி, உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன.

ஆனால் பாழும் மனித இனம் தான், இந்த லட்சணத்தில் இது பகுத்தறிவு இனமாம்; இந்த இனம் தான் பெற்ற குழந்தைகளைப் பாழும் கிணற்றிலும் பாதாளச் சாக்கடைகளிலும் வீசி எறிகின்றது.

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்த ஐந்தறிவு மிருகங்களில் வளர்ப்புப் பிராணிகளாகட்டும், அல்லது காட்டு விலங்குகளாகட்டும். தங்களுக்குப் பிறந்த குட்டிகளை, தாங்கள் பொறித்த குஞ்சுகளை ஆண், பெண் என்ற பேதம் பார்ப்பதில்லை. வஞ்சனையில்லாமல் பாசப் பிணைப்போடும் நேச உணர்வோடும் வளர்க்கின்றன. ஆணா? பெண்ணா? என்று பார்க்காமல் தன்னுடைய பிள்ளை என்பதை மட்டுமே பார்க்கின்றன. ஆனால் மனித மிருகமோ தரம் பிரித்துப் பேதம் பார்க்கின்றது. இந்த அட்டவணையைப் பாருங்கள்:

தொட்டில் குழந்தை திட்டத்தில் பெறப்பட்ட குழந்தைகள்

ஆண்டு              ஆண்         பெண்        மொத்தம்

2009                                       5                             80                          85

2010                                       4                             60                          64

2011                                       5                             42                          47

2012                                       4                             27                          31

2013                                       2                             27                          29

மொத்தம்                   20                         236                        256

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உள்ள வேறுபாட்டையும் வித்தியாசத்தையும் பாருங்கள். இந்தத் திட்டத்தின்படி அரசுத் தொட்டிலில் அனாதையாக விடப்படும் குழந்தைகளில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண் குழந்தைகள். அதாவது, ஒருசில ஆண் குழந்தைகளைத் தவிர மீதி அனைவருமே பெண் குழந்தைகள் தான். இந்த வேதனை சொல்லி மாளாது.

அண்மையில் தர்மபுரியில் ஒரு தாய், இல்லை… நாயை விடவும் கீழான, பெண்ணுருவில் அமைந்த பேய், தனது 9 மாதப் பெண்குழந்தையைக் கொன்று விட்டாள்.

இதனைத் தொடர்ந்து மகளிர் கிராம சபை தனது கூட்டத்தைக் கூட்டி, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் தொட்டில் குழந்தை திட்டத்தில் கொண்டு வரப்படும் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தது. தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அதற்கான உத்தரவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும். பிறப்பித்துள்ளார். இந்தச் செய்தி கடந்த ஜனவரி 13 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளியானது.

 தர்மபுரியில் உள்ள 251 பஞ்சாயத்துகளிலும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருமண உதவித் திட்டம் போன்ற திட்டங்களைத் தெளிவுபடுத்தி விளக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் இருப்பதாகவும், அதில் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் 1000க்கு 913 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்.

பெண் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் அழிக்கப்படுகின்ற அக்கிரமத்தையும் அநியாயத்தையும் தான் இந்தப் புள்ளிவிபரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பெண் குழந்தைகள் ஏன் இப்படி தொட்டி-லும் தொட்டியிலும் வீசியெறியப்படுகின்றார்கள்? அல்லது ஒரேயடியாக ஏன் தொலைத்து ஒழிக்கப்படுகின்றார்கள்?

பெண் என்றால் செலவு, அதனால் அது ஓர் இழவு என்று கருதப்படுகின்றது. வரதட்சணை தான் இதற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது. இதை உணர்ந்து தான் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண உதவித் திட்டத்தைப் பிரச்சாரம் செய்யச் சொல்கின்றார்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது…

அல்குர்ஆன் 81:8, 9

மறுமை நாளில் நடக்கும் விசாரணையின் போது, அது கொல்லப்பட்டதற்கான காரணத்தைக் கேட்கும் போது, அந்தக் குழந்தை உண்மையைப் போட்டு உடைக்கும். அப்போது வரதட்சணை வாங்குவோர், கொடுத்தோர் மட்டுமல்ல! அதற்குக் கூட்டாக இருந்தவர்கள், அந்தத் திருமணத்தில் போய் கலந்து கொண்டவர்கள் அத்தனை பேருமே இறைவனிடம் மாட்டிக் கொள்வார்கள்.

அதனால் தான் தவ்ஹீத் ஜமாஅத் அதுபோன்ற தீமைகளைப் புறக்கணிக்கச் சொல்கின்றது. இவ்வாறு புறக்கணிப்பதால் மறுமையில் அல்லாஹ்விடம் மாட்டாமல் தப்பித்து விடுவர். இது மறுமையில் கிடைக்கும் நன்மையாகும்.

இதுபோன்ற புறக்கணிப்புகளால் பெண்ணினம் அழிவதை விட்டும் காக்கப்படும். இது உலகம் சீராக இயங்குவதற்கு உதவும். இல்லையேல் அல்லாஹ் படைத்த இயற்கை சமன்பாடு முற்றிலும் அழிந்து விடும். ஆணினம் பெருகி பெண்ணினம் அழிந்து விடும். உலகம் செயல்படாமல் ஸ்தம்பித்துவிடும்.

பெண்ணைக் காக்கின்ற அந்தப் புரட்சிப் பணியை தவ்ஹீத் ஜமாஅத் கடைப்பிடிக்கின்ற தூய இஸ்லாத்தின் மூலம் மட்டும் தான் செய்ய முடியும்.

இஸ்லாம் வருவதற்கு முன்னால் அரபக நிலை அப்படித் தான் இருந்தது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தென அவன் கருதும்) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16:58, 59

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வந்து அந்த நிலையைத் தலைகீழாக மாற்றினார்கள். உலக நாடுகள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காமல் இதற்கு எந்தவொரு தீர்வையும் ஒருபோதும் காணவே முடியாது.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                  தொடர்: 7

மனிதனைக் கடவுளாக்கும் மடமைக் கொள்கை

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்தைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கஸ்ஸாலியின் “அல்மன்னூன் பிஹா அலா கைரி அஹ்லிஹா’ என்ற நூலை விமர்சனம் செய்யும் போது இப்னு தைமிய்யா அவர்கள் கூறுவதாவது:

“தன் சக்திக்கு ஏற்ப மனிதன், இறைநிலைக்கு ஒப்பாவது தான் தத்துவவியல்” என்று சூபிகள் கூறுவது தான் இதுவரை நாம் கண்ட விஷயங்களிலேயே மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். உண்மை, தனித்தன்மை, செயல்பாடுகளில் அல்லாஹ்வுக்கு அடியானை ஒப்பாக்குகின்ற சூபிகளின் இந்த நிலைப்பாட்டில் ஒரு கூட்டம் அவர்களுடன் உடன்பாடு கொள்கின்றது. அந்தக் கூட்டத்தில் கஸ்ஸாலியும் ஒருவர். அத்வைதக் கருத்தைப் பேசக்கூடியவர்களும் அவருக்குப் பின்னால் நடைபோடுகின்றனர்.

மனிதன் அல்லாஹ்வைப் போன்றவன் என்கின்றனர். “அவனைப் போன்றது எதுவும் இல்லை’ (அல்குர்ஆன் 42:11) என்று அல்லாஹ் சொல்கிறானே என்று கேட்டால், “அல்லாஹ்வைப் போன்று அமைந்திருக்கின்ற மனிதனைப் போன்று எதுவுமில்லை’ என்று ஓர் அபத்தமான விளக்கத்தை அளிக்கின்றனர்.

வானத்தில் கோள் அசைகின்றது என்றால் தனக்கு மேல் உள்ள ஒரு சக்தியை (அல்லாஹ்வை) பார்த்து தான் அசைகின்றது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

இதன்படி ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு ஒப்பாக முடியும். வானத்தின் கோள் அல்லாஹ்வுடன் அல்லது அல்லாஹ்வுக்கு நிகரான அறிவுடன் ஒப்பாகின்றது என்ற விபரீத சிந்தனை உருவாகும். இப்படியோர் ஆபத்தான, அபாயமான கொள்கையை இவர்கள் உருவாக்கியுள்ளனர் என்று இப்னு தைமிய்யா குறிப்பிடுகின்றார்கள்.

மேலும் அவர்கள் கூறுகின்ற விமர்சனம் வருமாறு:

மறைவான ஞானத்திற்கும் நேரடி ஞானத்திற்கும் இவர்கள் வித்தியாசமான ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

ஐம்புலன்களால் உணரப்பட்டால் அது நேரடி ஞானம். அறிவால் மட்டும் விளங்கப்பட்டால் அது மறைமுக ஞானம். இதுதான் இவர்கள் கொடுக்கும் விளக்கமாகும்.

அல்மிலல் வன்னிஹல் நிஹாயத்துல் இக்தாம் என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிடுவது போன்று, இது ஷியாக்களின் இறை மறுப்புக் கொள்கையாகும். அல்லது சூஃபியாக்களின் இறை மறுப்புக் கொள்கையாகும்.

இந்தக் கேடுகெட்ட கொள்கையாளர்களுக்கு அகமிய ஞானவான்கள் என்ற மறுபெயரும் உண்டு.

இஸ்மாயிலிய்யா என்ற சாரார் உண்டு. இவர்கள் ஷியாக்களின் இறை மறுப்புக் கொள்கையைக் கொண்டவர்கள். திருக்குர்ஆனின் யூசுப் அத்தியாயத்திற்கு இவர்களுடைய கொள்கையின் அடிப்படையில் கஸ்ஸாலி விளக்கமளித்துள்ளார் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

இந்தக் கொள்கையில் தான் சூபிஸத்தைச் சார்ந்த இறை மறுப்புக் கொள்கையாளர்களுடன் அத்வைதக் கொள்கையாளர்கள் ஒன்றாக இணைகின்றனர்.

இவர்களின் சித்தாந்தம் தெளிவான மனித அறிவுக்கும் மார்க்க ஆதாரத்திற்கும் நேர் முரணாக அமைந்திருக்கின்றது.

ஆனால் கஸ்ஸாலியோ, பாவங்களை விட்டுத் தூய்மையான ஓர் இமாமின் அறிவு ஞானத்தை நோக்கி கைகாட்டி விடுகின்றார். அந்த இமாம், பாதுகாக்கப்பட்ட ஓர் ஆசானைக் கைகாட்டுகின்றார். அவ்விருவரில் ஒவ்வொருவரும் தான் யாரைக் கைகாட்டி விட்டாரோ அவர் நபிமார்களின் அந்தஸ்தை விட பிரமாண்டமான, பிரமாதமான அந்தஸ்தைப் பெற்றவர் என்று வாதிட்டுக் கொள்கின்றனர்.

ஆனால் அவ்வாறு கைகாட்டப்படுபவர், கைதேர்ந்த பொய், அறியாமை, அநியாயம் நிறைந்த அக்கிரமக்காரப் பேர்வழியாகத் தான் திகழ்கின்றார். இவர்களின் இந்தப் போக்கிரித்தனங்களை அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவன்.

இவர்கள் புளுகித் தள்ளுகின்ற அதிகமான பொய்கள் அறியாமையாகவும் வழிகேடாகவும் தான் இருக்கின்றன. அந்த வழிகேடும் சாதாரணமான வழிகேடு கிடையாது. அந்த வழிகேட்டைத் தான் அவன் சத்தியம் என்று விளங்கி வைத்திருக்கின்றான். அதற்கு நேர்மாற்றமாக வருகின்ற எந்தக் கருத்தையும் அவன் அறவே நம்புவதில்லை. இதுதான் அந்த ஆசாமி அடைந்த உன்னதமான உச்ச நிலையாகும்.

மனோ இச்சையைப் பின்பற்றக்கூடிய கிறித்தவர்களில் அதிகமானவர்கள் எத்தகைய வழிகேட்டில் இருக்கின்றார்களோ அதே வழிகேட்டில் தான் இவர்களும் இருக்கின்றார்கள்.

மொத்தத்தில் கோளாறு இவர்களுடைய அறிவிலும், அறிவார்ந்த விஷயங்கள் என்று அவர்கள் எதைக் குறிப்பிடுகிறார்களோ அவற்றிலும் தான் உள்ளது.

ஓர் அறிவாளி விளங்கிக் கொள்ள முடியாத சில அறிவார்ந்த விஷயங்களும் இருக்கின்றன என்ற இவர்களது வாதத்திலும் அதே கோளாறு உள்ளது.

இதுதான் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள், தர்உத் தஆருலுல் அக்ல் வன்னக்ல் என்ற நூலில் குறிப்பிடுகின்ற விஷயமாகும்.

இஸ்லாமிய உலகில் அச்சிடப்பட்டு வெளியான இந்த நூல்களில் கஸ்ஸாலி கக்கிய இந்தக் கருத்துக்களைப் படித்தீர்கள் என்றால் அவருடைய கொள்கை, சிந்தனை, வழிமுறை, அறிவு ஞானம் ஆகியவற்றை நீங்கள் நன்கு புரிந்து கொள்ளலாம்.

இப்னு தைமிய்யா அவர்கள் கஸ்ஸாலியைப் பற்றி மேற்கண்ட நூல் அல்லாமல் ஏனைய நூல்களில் எழுதியதை ஆய்வு செய்தால் அது பல பாகங்களைத் தொட்டுவிடும்.

ஆனால் நான் கஸ்ஸாலியின் நிலையைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு எது அவசியமாகப் படுகின்றதோ அந்த எடுத்துக்காட்டுகளுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அதே சமயம் கஸ்ஸாலியோ தான் எழுதிய அனைத்துக் கருத்துக்களை விட்டும் திருந்தி, மனம் வருந்தி புகாரி, முஸ்லிம் என்ற ஆதாரப்பூர்வமான நூல்கள் மற்றும் அபூதாவூத் போன்ற நூற்களின் பக்கம் திரும்பி விட்டார். இதை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் உறுதி செய்திருக்கின்றார்கள். கஸ்ஸாலியின் இஹ்யா உலூமித்தீன் தொடர்பான விமர்சனத்தின் போது இந்த விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னால் வரும்.

பெரும்பாலான மக்கள் நம்முடைய இந்த நோக்கங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

அப்படியே விளங்கினாலும் மக்களிடத்தில் தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள். கஸ்ஸாலி போன்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாத விமர்சனம் செய்வதாக நம்மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்துகின்றார்கள்.

“அல்லாஹ்வின் பண்புகள் தொடர்பான வசனங்களில் மாற்று விளக்கம் கொடுக்கின்ற, மாற்று விளக்கம் கொடுக்காத விரிவுரையாளர்கள்” என்ற எனது நூலின் முன்னுரையில் கூறுவதாவது:

இறந்தவர்களின் விசுவாசத்தை கொஞ்சமாகவோ கூடுதலாகவோ நாம் விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லை. நாம் விமர்சிப்பதெல்லாம் அவர்கள் தங்களுக்குப் பின் விட்டுச் சென்ற நூல் ஆக்கங்களையும் அதில் பதிவாகியிருக்கின்ற அசத்தியம், வழிகேடுகள் பற்றித் தான்.

அவற்றைத் தெளிவுபடுத்துவது நம்மீது இன்றியமையாத கடமையாகும். இல்லையெனில் அல்லாஹ்வையும் அவனது வேதத்தையும் அவனது தூதரையும் வழிமுறையையும் அவர்களது சத்தியத் தோழர்களையும் நல்வழி நடந்த அனைவரையும் ஏமாற்றியவர்களாகி விடுவோம்.

இஹ்யா உலூமித்தீன்

இஹ்யா உலூமித்தீன் என்று பெயர் சூட்டப்பட்ட கஸ்ஸாலியின் நூல் தொடர்பாகக் களமிறங்கி, காரியமாற்றிய முஸ்லிம்களின் கலீபாக்களில் உண்மையான கலீபாவும், அக்கால மக்களின் அருமைத் தலைவருமான இப்னு தாஷிபீன் அவர்களின் வளமிக்க வரலாற்றுப் புரட்சியை உங்களிடம் பரிமாற விரும்புகின்றேன். அந்தப் புரட்சியைத் தான் எனது இஹ்யாவின் விமர்சன நூல் தலைப்”பூ’வாக சூடிக் கொண்டுள்ளது.

அமீருல் முஃமினீன் இப்னு தாஷிபீன் புறத்திலிருந்து இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள் என்று இதற்குப் பெயரிட்டேன். அல்லாஹ் அந்தப் பெருமனிதரை தனது அருள்மிகு சுவனத்தில் புகச் செய்வானாக!

வரலாற்று நூல்களில் இந்நூலுக்கு எதிராகத் தப்பும் தவறுமான விமர்சனம் பதியப்பட்டுள்ளது. புரட்டர்கள், கிழக்கத்திய புளுகர்கள், மற்றும் அவர்களின் புரட்டல் புளுகலை ரசிக்கக்கூடிய எடுபிடிகள் அத்தனை பேரும், “இஹ்யா உலூமித்தீனை அமீருல் முஃமினீன் எரித்ததற்குக் காரணம் அரசியல் தான்’ என்ற பொய்யான கருத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு இந்நூல் மூலம் பதிலளிக்க விரும்புகின்றேன்.

நல்ல விளக்கமும் நல்ல சிந்தனையும் உள்ளவர், சரியான கொள்கைப் பிடிப்புள்ளவர், அல்லாஹ்வையும் அவனது மார்க்கத்தையும், அவனது தூதரின் சுன்னத்தையும் சரியாக மதிப்பீடு செய்தவர், பொய் புரட்டு பித்தலாட்டங்களை விட்டு விலகியவர் என்னுடைய ஆய்வில் நான் கூறிய காரணங்களை சற்று ஆய்வு செய்து பார்ப்பாரானால் இந்தப் புரட்டர்களின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என்று தெளிவாக விளங்கிக் கொள்வார்.

அந்தக் காரணங்களை இப்போது நான் கூறுகின்றேன்.

  1. முராபிதீன் என்றழைக்கப்பட்ட அன்றைய சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையுடைய உலமாக்கள் இஹ்யாவுக்கு எதிராக ஃபத்வா, மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

(சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று இந்த நூலாசிரியர் குறிப்பிடுவது நம் நாட்டில் உள்ள பரேலவிகள் அல்லர்.)

ஒவ்வொரு கால கட்டத்திலும் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது என்ற அடிப்படைப் பணி இத்தகைய உலமாக்களால் தான் செயல்பட்டது; நிலைகொண்டது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது தான் அனைத்து அடிப்படைகளுக்கு அடிப்படையாகும். அது பிரமாண்டமான பணியுமாகும். இது ஒரு சமுதாயத்தில் சரியாகச் செய்யப்பட்டால் அந்தச் சமூகத்தின் காரியத்தை அல்லாஹ் சீராக்கி விடுகின்றான்.

அந்தச் சமுதாயத்தின் ஆட்சியாளர்களும் குடிமக்களும் உறுதியாகச் செயல்படுகின்றனர். அதனுடைய மார்க்கமும் கொள்கையும் சரியான பாட்டையில் பயணிக்கின்றது.

இந்த அடிப்படை தொலைந்து போனால், குர்ஆன் ஹதீசுடைய ஆலிம்கள் மறைந்து போனால், அந்நிய, அசத்தியக் கருத்துக்கள் அந்தச் சமுதாயத்தில் படையெடுத்து வந்து விடுகின்றது.

முராபிதீன் காலத்தில் வாழ்ந்த குர்ஆன், ஹதீஸ் ஆலிம்கள் அசத்தியத்தில் ஐக்கியமாவது அபூர்வமான விஷயம்.

இஹ்யா எனும் நூலின் உள்ளே இடம்பெற்ற கருத்துக்கள் இஹ்யாவுக்கு எதிரான அவர்களுடைய மார்க்கத் தீர்ப்பைத் தெளிவுபடுத்தும்.

இஹ்யா நூலிலுள்ள கருத்து அந்த ஆலிம்களின் எந்த ஒரு சொந்த நலனுக்கும் சவால் விடுக்கவில்லை.

அதனால் இஹ்யாவுக்கு எதிரான மார்க்கத் தீர்ப்பு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொதுவானவர்களுக்கும் நன்மையை நாடுதல் என்ற அடிப்படையில் தான் அமைந்தது.

முராபிதீன் உலமாக்கள் இப்படி உண்மையை மக்கள் மன்றத்தில் போட்டு உடைத்தது தான் பித்அத்காரர்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. அதன் விளைவாகத் தான் இஹ்யாவை எரித்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகப் பொய்க் குற்றச்சாட்டைக் கட்டவிழ்த்து விட்டனர். பித்அத்காரர்களின் முழுநேரப் பணியே பொய் சொல்வதும், சரியான விஷயங்களை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து விடுவதும் தான். அந்த வேலையை இங்கும் செய்திருக்கிறார்கள். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இப்னு தாஷிபீன் வாழ்க்கைக் குறிப்பு

இப்னு தாஷிபீன் வாழ்க்கையைப் பற்றி ஹாபிழ் தஹபீ அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

அவர் ஒரு வீரர்; தியாகி; அர்ப்பணிப்பாளர்; நீதமானவர்; நேர்மையாளர்; மார்க்க பக்தியாளர்; ஒழுக்கமிக்கவர்; நல்லவர். உலமாக்களை கண்ணிப்படுத்துபவர்; அவர்களிடம் ஆலோசனை கலப்பவர்.

அவருடைய காலத்தில் ஃபிக்ஹ் கலை நூல்கள், சிறு சிறு சட்டத் தொகுப்புகள் இல்லாமல் போய்விட்டன. இதன் விளைவாக ஹதீஸ் மற்றும் வரலாறுகளில் மக்கள் ஆர்வமில்லாமல் ஆகிவிட்டனர். தத்துவவியல் மிகவும் கேவலமான கல்வியாகக் கருதப்பட்டது. தர்க்க அடிப்படையில் அமைந்த இறையியல் (இல்முல் கலாம்) காரி உமிழப்பட்டது; கோபத்திற்குள்ளானது.

முன்னோர்கள் அடையாளப்படுத்தியதற்கு ஏற்ப இல்முல் கலாம் ஒரு பித்அத் என்ற சிந்தனை இப்னு தாஷிபீன் உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்தது. அதனால் அவர் அது விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாகவே களம் இறங்கிவிட்டார்.

இம்மாதிரியான நூல்கள் எழுதுவதையும் இயற்றுவதையும் மிக வன்மையாகக் கண்டித்ததுடன் அவற்றை எரிக்கவும் உத்தரவிட்டார். கஸ்ஸாலியின் ஆக்கங்களையும் எரிக்கும்படி உத்தரவிட்டார். அதை மூடி மறைப்பவர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை விடுத்தார். சிறு சிறு ஏடுகள், ஆக்கங்களை எழுதுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நீண்ட ஆயுளும் வழங்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலாஃ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?

ஸீனத், அல்இர்ஷாத் மகளிர் கல்வியகம், மேலப்பாளையம்

யாரைத் திருமணம் முடிக்கவேண்டும்?

தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் அழகு, செல்வம், குலப்பெருமை, பெற்றோரின் பாரம்பரிய கலாச்சாரங்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி கொள்கையை முன்னுரிமைப்படுத்துவதற்கு மறந்துவிட்டனர். யாரைத் திருமணம் முடிக்கவேண்டும்? எதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும்? நபிகளார் கூறிய வார்த்தைகள் இதோ…

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

  1. அவளது செல்வத்திற்காக.
  2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  3. அவளது அழகிற்காக.
  4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்.

நூல்: புகாரி 5090

இந்த ஹதீஸை அறியாத தவ்ஹீத்வாதிகள் இருக்க இயலாது. ஆனால் இதை மறந்தது ஏன்? இதை செயல்படுத்தத் தயங்குவது ஏன்? பணக்காரப் பெண்ணை திருமணம் முடித்தால் பிற்காலத்தில் சொத்து கிடைக்கும். சொந்த பந்தங்களைப் பகைத்துக் கொண்டு திருமணம் முடிக்காமல் காத்திருக்கும் பெண்களைத் திருமணம் முடித்தால் என்ன கிடைக்கப் போகின்றது என்ற சுயநலமே இதற்குக் காரணம்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்திற்கு தீர்ப்பளித்துவிட்டால் அதில் இறைநம்பிக்கை கொண்டோருக்கு எந்தத் தனிப்பட்ட சுயவிருப்பமும் இருக்கக்கூடாது.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்டமாட்டான்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:24

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டுவிட்டார்.

அல்குர்ஆன் 33:36

ஒரு மணமகளைத் தேர்ந்தெடுக்கும் போது எதைக் கவனிக்கவேண்டும் என்று நபிகளார் குறிப்பிட்டுக் காட்டினார்களோ அதைத் தவிர மற்ற அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பெண்ணின் பெற்றோர்கள் அந்தஸ்தில் தாழ்ந்தவர்களாக, சமுதாயத்தில் சாமான்யர்களாக, கூலித் தொழிலாளியாக இருந்து அவர்களின் மகள் ஏகத்துவத்தைப் பல வருடங்களாக ஏற்று, கொள்கையில் உறுதியானவளாக இருந்தாலும் அவள் நிராகரிக்கப்படுகின்றாள்; மணமகளாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு தகுதியற்றவளாக ஆகிவிடுகின்றாள்.

அதிகமான ஆண்கள் அழகு, செல்வம், பாரம்பரியத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அழகு, செல்வம், பாரம்பரியம், அந்தஸ்து இவை அனைத்துமே மனிதனால் கொடுக்க இயலாத, இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடையாகும். இதை வைத்து ஏற்றத்தாழ்வு கற்பிப்பதோ, குறை காண்பதோ இறைவனின் படைப்பை குறை காண்பதற்கு ஈடானதாகும்.

மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

அல்குர்ஆன் 95:4

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:26

சத்தியத்தை ஏற்றுக் கொண்ட பெண்களின் நிலை

ஏகத்துவத்தின் ஒவ்வொரு கட்டளையையும் செயல்படுத்துவதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரையும் பகைத்து, கொள்கையில் ஊறித் திளைத்து,  இறை உதவி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். செலவில்லாமல் திருமணம் நடக்கும் என்பதற்காகத் தவ்ஹீதுக்கு வந்த பெண்களின் நோக்கம் இனிதே திருமணத்தில் நடந்து முடிகின்றது. சத்தியக் கொள்கைக்காக வந்த பெண்களின் நிலையோ அவர்களுடைய கொள்கைக்கே சோதனையாக நிற்கின்றது.

இவர்கள் கண்முன்னே இப்படிப்பட்ட திருமணங்களை நடத்தி, எரிகின்ற நெருப்பில் எணணெயை ஊற்றுகின்றனர். இத்தோடு இவர்களை சோதனை விட்டதா? இல்லை. உற்றார் உறவினர்கள் இணை வைப்பவர்கள் போன்றோர் “இவர்களை நம்பியிருந்தால் காலம் முழுவதும் இப்படியே இருந்துவிட வேண்டியது தான். ஆதலால் எங்கள் கொள்கைக்கு வந்து விடு. அல்லது இணைவைப்பவனுடன் இணைந்து விடு” என்று கூறி அப்பெண்களை சத்தியத்திலிருந்து திசைதிருப்பப் பார்க்கின்றனர்.

ஈமான் உள்ளே நுழைந்துவிட்டால் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? அசத்தியத்தை ஏற்குமா? அல்லது அசத்தியவாதியுடன் இணையுமா? திருமணத்திற்காக மட்டுமே ஏகத்துவத்திற்கு வந்திருந்தால் என்றோ அவள் இணை வைப்பாளனை மணந்திருப்பாள்.

கொள்கைவாதிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்ற ஆஸியா (அலை), ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்களின் பாணியில் ஏகத்துவத்தை உணர்ந்தவள் அற்ப சுகத்திற்காக, உலக ஆசைகளுக்கு மயங்கி, சுயநலத்தை விரும்பி மார்க்கத்தை காற்றில் பறக்கவிடுவாளா? இல்லை.

திருமறையின் மூலம் இறைவனின் வல்லமையை உணர்ந்து, எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பானன். அவன் ஆகு என்று கூறினால் அது ஆகிவிடும் என்று கூறி சத்தியக் கொள்கையில் உறுதியாக நின்று, குர்ஆன் வசனங்களை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றாளே இவளை அசத்தியவாதியிடம் அனுப்புவதற்கு இவர்களுக்கு எப்படி மனம் வந்தது?

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோரும் அல்ல.

அல்குர்ஆன் 60:10

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போரை தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

அல்குர்ஆன் 58:22

ஏகத்துவவாதிகளே! திருமணம் முடிந்தால் சத்திய கொள்கையில் உள்ள ஆண்மகனைத் தான் முடிப்பேன் என்று உங்களின் ஈமானை உரசிப் பார்க்கின்ற வகையில் இப்பெண்கள் வைக்கும் வேண்டுகோளுக்கு, எதிர்பார்ப்புக்கு என்ன பதிலளிக்கப் போகின்றீர்கள்?

சத்தியக் கொள்கைக்காக, பிறந்த ஊரை விட்டு தங்கள் தாய் தந்தையர், மனைவி மக்கள், சொத்து சுகங்கள் ஆகிய அனைத்தையும் தியாகம் செய்து விட்டு எதுவுமே இல்லாத ஏழைகளாக ஹிஜ்ரத் செய்தார்களே அந்த நபித்தோழர்களின் உறுதி எங்கே? நாம் எங்கே? கொள்கைக்காக எதையும் தியாகம் செய்ய முன்வரும் அவர்கள் எங்கே? நாம் எங்கே?

அவ்வாறு உறுதியாக இருந்திருந்தால் மார்க்கத்தைப் புறந்தள்ளி விட்டு அழகிற்கும், செல்வத்திற்கும், குலப்பெருமைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம்.  இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்திருந்தால் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

  1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது.
  2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
  3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறைமறுப்பிற்கேத் திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் விசப்படுவதைப் போன்று வெறுப்பது.

நூல்: புகாரி 21

ஏகத்துவத்தை கொள்கையாகக் கொண்ட இளைஞர்களே! உங்களுடைய இலக்கு தான் என்ன?

எங்கே செல்கிறீர்கள்? இது அகிலத்தாருக்கு, உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.

அல்குர்ஆன் 81:26-28

எனவே நம்மையும் நம்முடைய குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். மன இச்சைகளைத் தவிர்த்து, குர்ஆன் ஹதீஸின் ஒளியில் நம்முடைய இம்மை வாழ்க்கையை அமைத்து அதில் மறுமைக்கான நற்பலன்களை தேடுவது மிகவும் அவசியமானதாகும்.

யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம். யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.

அல்குர்ஆன் 79:37-41

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

அல்குர்ஆன் 52:21

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்யமாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 10

தவறுக்குத் தூண்டும் தனிமை சந்திப்புகள்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நபியவர்கள் இந்த மனித சமூகத்திற்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள்.

ஆண்களோ பெண்களோ நாம் எவ்வளவு தான் ஒழுக்கமானவர்களாக இருந்தாலும் நம் மீது ஒழுக்க ரீதியாகப் பிறர் சந்தேகப்படுவதற்குரிய வாய்ப்புக்களிலிருந்தும், நம்மை ஒழுக்கத்திலிருந்து நெறி தவழச் செய்கின்ற காரியங்களிலிருந்தும் தவிர்ந்து வாழவேண்டும் எனவும் இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது.

நாம் தூய்மையாக இருப்பது மட்டும் நமக்குப் போதாது. நமது தூய்மையைக் களங்கப்படுத்துகின்ற வாய்ப்புக்களையும் அதற்குரிய காரண காரியங்களையும் தவிர்க்க வேண்டும் என நபியவர்கள் நமக்கு பல்வேறு அறிவுரைகளையும் பல்வேறு எச்சரிக்கைகளையும் வழங்கியுள்ளார்கள்.

அதில் மிக முக்கியமான அறிவுரை, பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளில் அந்நிய ஆண்கள் எவரும் நுழைந்துவிடக்கூடாது என்ற கட்டளையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: புகாரி 5232

இந்தச் செய்தியில் பெண்களுக்குத் தானே சட்டம் சொல்லப்படுகிறது; தனித்திருக்கும் ஆண்களிடம் பெண்கள் தாராளமாக, தனியாகச் சென்று வரலாம் என முடிவெடுத்துவிடக் கூடாது. ஆண்களுக்குச் சொல்லும் எல்லாச் சட்டமும் இஸ்லாத்தில் பெண்களுக்கும் பொருந்தும்.

எனவே ஆண் மட்டும் தனித்திருக்கின்ற வீடுகளுக்கு எந்தப் பெண்ணும் தனியாகச் செல்லக் கூடாது. பெண் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளுக்கு ஆண்களும் செல்லக் கூடாது என்பதைத் தான் இந்தச் செய்தி நமக்கு உணர்த்துகிறது.

இன்று பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனைக்கு காரணமே, இது தான். ஆணோ, பெண்ணோ ஒழுக்கக் கேடாக நடந்துவிடுவார்கள் என்பதை விட அவர்கள் ஒழுக்கக் கேடாக நடந்திருப்பார்களோ என்ற சந்தேகம் தான் குடும்பங்களைச் சீரழித்துவிடுகிறது.

தனிமையில் இருக்கிற ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு ஓர் ஆண் சென்றால், சமூகத்தின் பார்வை எப்படி இருக்கின்றது?

இன்னார் எதற்கு கணவனில்லாத வீட்டில் நுழைகிறார்? இந்தப் பெண் ஏன் இதை அனுமதிக்கிறாள்? அடிக்கடி இங்கே இவர் வந்து செல்வதற்கு என்ன காரணம்? இந்த நபருக்கு இவளிடம் என்ன இருக்கிறது? என்றெல்லாம் பல கோணங்களில் சந்தேகத்திற்கு வழிவகுத்து விடுகிறது. இதுவே பிரச்சனைகளை உருவாக்கி விடுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்தச் செய்தி பிறர் மூலமாக கணவனின் காதுகளுக்குக் கிடைக்கின்ற போது அவன் தன் மனைவி மீது தேவையற்ற சந்தேகங்களை யூகிக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சந்தேகமே கணவன் மனைவி இருவருக்கிடையில் பிரிவினைக்கும் காரணமாக பல நேரங்களில் அமைந்துவிடுகிறது.

மேலும் மார்க்கம் அனுமதித்த வகையில் பேசுவதாக இருந்தாலும் கூட தனிமை என்னும் காரணம் அதைத் தவறாக்கி விடுவதைப் பார்க்கிறோம். இதைத் தான் நபியவர்கள் மேற்கண்ட செய்தியில் கணவரின் உடன் பிறந்த சகோதரனாக இருந்தாலும் கூட அவனிடத்திலும் அந்நியன் என்கிற உறவு முறையையே பேண வேண்டும் என்று எச்சரிக்கின்றார்கள்.

மனிதர்கள் பலவிதங்களில் இருக்கிறார்கள்.

நாம் தவறு செய்யக் கூடாது; இறைவனுக்குப் பயந்தவர்களாக இருக்க வேண்டும் என்று உண்மையில் இறைவனுக்குப் பயப்படும் ஆண்களும் பெண்களும் இருப்பார்கள்.

ஆண், பெண் ஆகிய இரண்டு பேரும் கெட்டவர்களாகவே இருப்பார்கள். இந்த ஆணும் அந்தப் பெண்ணும் தவறான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆண் நல்லவனாகவும் பெண் கெட்டவளாகவும் இருப்பதற்கு வாய்பிருக்கின்றது.

அதே போன்று பெண் நல்லவளாகவும் ஆண் கெட்டவனாகவும் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இந்த நான்கு வகையில் எந்த வகையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தனிமையில் இருப்பதால் நன்மை ஏற்படப் போவதில்லை.

இவர்களில் முதலாம் தரத்தில் இருக்கிற இறையச்சமிக்கவராகவும் தொழுகையாளியாகவும் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் விடாப்பிடியான நேர்மையான ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவரும் தனிமையில் சந்திப்பதற்கோ, பேசுவதற்கோ வாய்ப்புக் கிடைத்தால் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் நிச்சயம் தங்களது ஒழுக்கத்தைத் தொலைத்து விடுவார்கள். தங்களின் கற்புக்குக் குந்தகம் விளைவித்து விடுவார்கள். ஏனெனில் அவர்களுடன் ஷைத்தான் இருக்கிறான் என்பதை மறந்துவிடக் கூடாது.

கெட்டுப் போவதற்கென்று திரிகின்ற கூட்டத்தை விட்டு விடுவோம். கெட்டுப் போய்விடக் கூடாது என்று பேணுதலாக இருப்பவர்களைக் கூட சந்தர்ப்ப சூழ்நிலை கெடுத்து விடுவதை நடைமுறையில் பார்க்கிறோம்.

நாம் எவ்வளவு தான் நல்லவர்கள் என்று பெயர் எடுத்திருந்தாலும் ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் சந்தர்ப்ப சூழ்நிலை இலேசான சலனத்தை ஏற்படுத்திவிட்டால், நாம் இதுவரை கட்டிக் காத்த கண்ணியம் ஒரு நிகழ்வின் மூலம் நிர்மூலமாகி விடுவதைப் பார்க்கிறோம். இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் பணி புரிந்தவர்களின் மீது எழும் தொடர்ச்சியான பாலியல் குற்றச்சாட்டுக்களை இதற்கு ஒரு நிதர்சன சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

அதனால் தான் திருக்குர்ஆனில் நபி யூசுப் அவர்களின் வரலாற்றை அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான். ஒரு நபியை விடவா நாமெல்லாம் பரிசுத்தவான்கள்? ஒருக்காலும் அவ்வாறு இருக்கவே முடியாது.

மனிதனின் மனம் அலைபாயக் கூடியதாகத் தான் படைக்கப்பட்டிருக்கின்றது என்ற பேருண்மையை நாம் உணர வேண்டும். எப்போதும் ஒருவன் தனது மனதை ஒரே மாதிரியான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாது. சில சூழ்நிலைகளில் மனிதன் தடுமாறிவிடுகிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளாத பலர், தான் நல்லவன் என்ற காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, நான் அப்படிப்பட்டவனா? அப்படிப்பட்டவளா? என்று கேட்பதைப் பார்க்கிறோம். இன்னும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள்  குறித்து, என் மகன் அப்படிப்பட்டவன் கிடையாது, என் மகள் பத்தரை மாத்துத் தங்கம் என்றெல்லாம் பேசுவார்கள். அதற்குத் தான் நபியவர்கள், ஒருவர் எப்படிப்பட்ட ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும் சரிதான்; அவர்கள் தனித்து இருந்தால் அவர்களுடன் ஷைத்தான் மூன்றாவதாக இருப்பான் என்று எச்சரிக்கிறார்கள்.

இப்படித் தங்களையே பரிசுத்தம் என நினைப்பவர்களாக இருந்தாலும் உண்மையிலேயே உள்ளரங்கத்திலும் பரிசுத்தமாக நடப்பவர்களாக இருந்தாலும் ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருக்கின்ற போது அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பது தான் பிரச்சனைக்கான காரணமாகும்.

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது, அவர்கள் இருவரும் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுடன் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடைசியில் ஷைத்தான் தனிமையில் இருக்கிற இருவரிடமோ அல்லது ஒருவரிடமோ தனது வேலையைக் காட்டினால் அப்போது மூன்று பேரும் ஷைத்தானாக மாறிவிடும் சூழ்நிலையைப் பார்க்கிறோம்.

எனவே நான் நல்லவன், நான் நல்ல பெண் எனும் பேச்செல்லாம் ஏற்கத்தகுந்ததல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது முதலாவது புரிய வேண்டிய செய்தி!

இரண்டு பேருக்குள்ளும் எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை. இரண்டு பேரும் நல்லவர்கள் தான். வெறுமனே போய்விட்டு வருகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதாவது மார்க்கம் தடுத்த எந்தக் காரியத்தையும் இருவரில் எந்த ஒருவரும் செய்யவில்லை என்று வைத்துக் கொண்டாலும், இரண்டு பேர்களின் சந்திப்பையும் தொடர்பையும் பார்க்கின்ற பிறரின் பார்வை எப்படியிருக்கும்?

இவன் எதற்காக இவளுடன் வருகிறான்? இவள் எதற்கு இவனிடமிருந்து புத்தகத்தை வாங்கினாள்? என்று தான் சந்தேகிப்பார்கள். கணவனில்லாத வீட்டிலிருந்து அந்நிய ஆண் வந்தால் அதைப் பார்க்கிறவர்கள் நிச்சயம் சந்தேகிக்கத் தான் செய்வார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் பலவிதத்தில் பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சந்தேகத்தை ஒருவர் இருவர் என்று பலரிடமும் பரப்புபவர்களாகவும் மனிதர்கள் இருப்பதைப் பார்க்கிறோம்.

முதலில் பார்த்தவன் தான் பார்த்ததைத் தான் சொல்வான். ஆனால் அவனிடம் கேட்டவன் அதில் கொஞ்சம் சேர்த்துச் சொல்வான். கேட்டவனிடமிருந்து சொல்பவன் இன்னும் அதில் சேர்த்துச் சொல்லி, இப்படியே சென்று கடைசியில் சொல்பவன் அவர்களிருவரும் தவறு செய்வதை நானே எனது கண்ணால் பார்த்தேன் என்று சொல்லிப் பரப்பிக் கொண்டிருப்பான். எத்தனையோ நடைமுறை நிகழ்வுகள் இதற்குச் சான்றாக இருக்கின்றன.

நாம் ஏன் இதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதில்லை? கணவரில்லாத போது வீட்டுக்கு ஒருவர் வந்தால், “வீட்டிற்குள் வராதீர்கள்’ என்று சொல்வதற்கு ஏன் தயங்க வேண்டும்? அந்நியர் எவராக இருந்தாலும் கணவர் வெளியே சென்றிருக்கும் போது நம் வீட்டிற்கு வந்தால், “இப்போது கணவன் வீட்டில் இல்லை, போய்விட்டு கணவன் இருக்கும் போது வாருங்கள்’ என்று தனது பாதுகாப்பைப் பேணுகின்ற பதிலை கறாராகச் சொல்வதில் என்ன தயக்கம்?

இப்படிச் சொல்வதற்குக் கூச்சப்பட்டு, கடைசியில் வீட்டிற்குள் வந்தவரை வெளியில் உள்ளவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்து விடுவார்களானால் அதவும் நம்முடைய கற்புக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதைப் பயந்து கொள்ள வேண்டும்.

அதாவது, நாம் நல்லவர்களாக இருந்து தவறு நடக்காவிட்டாலும் சரி! நம்மில் யாரேனும் ஒருவருக்கு அதுபோன்ற எண்ணங்கள் ஷைத்தானால் தூண்டப்பட்டு விடலாம். அல்லது பிறர் நம்மைத் தவறாக எண்ணுவதற்கு நாமே காரணமாகிவிட்டால் அதுவும் நம்மைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஆண் நல்லவனாக இருந்து அந்தப் பெண் கெட்டவளாக இருந்தால், நல்லவனைத் தவறு செய்வதற்கு ஒரு பெண் தூண்டிவிட்டால் அந்த நல்லவன் நிச்சயம் கெட்டு விடுவான் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இப்படி நடப்பதையும் பார்க்கத் தான் செய்கிறோம். இவனது ஒழுக்கம், நற்பண்பு, அத்தனையும் ஒருசேரக் கெட்டுவிடுவதைப் பார்க்கிறோம்.

அதேபோன்று பெண் நல்லவளாக இருந்து ஆண் கெட்டவனாக இருந்தாலும் மெல்ல மெல்லப் பேசி, பிறகு அவள் மனதை ஈர்க்கும்படி நடந்து கடைசியில் அவன் அவளை சீரழித்துவிடுகிற நிலையையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

பெண் கெட்டவளாக இருந்தால் ஆணிடம் குலைந்து பேசி ஆணின் மனதைக் கவர்ந்துவிடுகிறாள்.

ஆண் கெட்டவனாக இருந்தால் பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சியில் முதலாவதாக ஈடுபடுவான். பிறகு தனிமையில் சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்துவான். பிறகு அவளுக்காகவே வாழ்வது போல் நடிப்பான். பிறகு அவளை தனது வலையில் வீழ்த்திவிடுவான். இப்படி ஆணும் பெண்ணும் கெட்டுப் போவதற்குரிய காரணங்களைப் பார்க்கிறோம்.

பெண்களை எந்த ஆண் புகழ்ந்து விட்டாலும் உடனே அந்த ஆணிடம் சரணடைந்து விடுவது பெண்களின் பலவீனம். இந்த பலவீனத்தையும் ஒரு கெட்ட ஆண் பயன்படுத்தப் பார்க்கிறான்.

ஆணின் பலவீனம் பெண் குலைந்து பேசுவதிலும், கண் சாடையிலும், பெண்ணின் சிரிப்பிலும் கூட இருக்கத் தான் செய்கிறது. பெண்ணின் பலவீனம் அவளைப் புகழ்வதில் இருக்கிறது.

ஆக, ஒருவரை இன்னொருவர் வீழ்த்தும் வகையில் ஒருவருக்கொருவர் கவர்ச்சியாக ஆணையும் பெண்ணையும் அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். மேலும் நம்மை வீழ்த்துகின்ற அபாயகரமான இந்த பலவீனத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

மேலே நாம் கூறியுள்ள இந்த விஷயங்களை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலிருந்தும் அவை பத்திரிக்கைகளில் வெளியாவதிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பரேலவிசத்தின் பயங்கரவாதம்

இறைத்தூதர் இறக்கவில்லையாம்

அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி.

அவர் அண்மையில் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் தான் உள்ளார்கள் என்ற ஒரு பயங்கர வாதத்தை வைத்துள்ளார். இது குர்ஆனுக்கு எதிரான யுத்தப் பிரகடனமாகும். அப்பட்டமான இறை நிராகரிப்பு வாக்குமூலமாகும்.

அவரது இந்தக் கூற்றை நம்பி, அவரது பாட்டையில் செல்பவர் நிரந்தர நரகப் படுகுழியில் வீழ்ந்து விடுவார் என்பதால் இந்த நரகத்தின் ஏஜெண்டிடமிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரது இந்த அபத்தங்களை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். அப்துல்லாஹ் ஜமாலியின் அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் திருத்தூதரான நபி அவர்கள் முஃமின்களுக்கு அவர்களின் உயிர்களை விடவும் மேலானவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:6)

இவ்வசனத்தின் மூலம் பயனுள்ள பல பாடங்களை அல்லாஹ் நமக்குச் சொல்லித் தருகிறான்.

தன்னை ஒரு முஃமின் என்று பறைசாற்றிக் கொள்ளும் ஒவ்வொருவரும் தன்னுடைய உயிரைவிடவும் உயர்ந்தவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும். அவ்வாறு மதிக்காதவன் உண்மையான முஃமின் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் போன்றவர்களல்ல. நமது உயிரை விடவும் உயர்ந்தவர்கள்.

ஆனால் நம்மிலே புறப்பட்டிருக்கின்ற ஒரு கூட்டம் நன்றாய் கதை அளந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் உள்ளங்களில் விஷ விதைகளைத் தூவப் பார்க்கின்றது. அவற்றில் ஒன்று:

நபிகள் நாயகம் (ஸல்) நம்மைப் போன்றவர்களே!

இதைக் கூறுகின்ற போது அவர்களின் தொனியில் அலட்சியம் தென்படுகின்றது. இதைக் கேட்கின்ற உண்மையான முஃமின் உள்ளம் புண்படுகின்றது.

இந்த அபத்தமான கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பதில் கொடுத்துவிட்டார்கள்.

உங்களில் யாரும் என்னைப் போன்றில்லை.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ, முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியது யாரைப் பார்த்து? ஸஹாபாப பெருமக்களைப் பார்த்து. ஸஹாபா பெருமக்கள் யார்?

நபிமார்களுக்கு அடுத்த மனித சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். இவர்களைப் பற்றி இறைவன் கூறுவதாவது:

இறைவன் இவர்களைப் பொருந்திக் கொண்டான். இவர்களும் இறைவனைப் பொருந்தினார்கள். (அல்குர்ஆன் 98:8)

இத்தனை சிறப்பும், உயர்வும் பெற்றுள்ள ஸஹாபா பெருமக்களே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்றில்லை என்கிறபோது, தற்போது புறப்பட்டிருக்கிற இக்கூட்டம் எம்மாத்திரம்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் நமக்குமிடையே இருக்கின்ற வேறுபாடுகள் ஏராளம். அதற்குண்டான ஆதாரங்கள் தாராளம்.

நமது விளக்கம்

அல்லாஹ்வின் தூதரை மதிப்பது என்றால் அவர்களுடைய கட்டளையை முழுமையாகப் பின்பற்றுவது தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

ஆனால் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கின்றோம் என்று சொல்கின்ற இந்த பரேலவிச (ஆ)சாமிகள் நபி (ஸல்) அவர்களது கட்டளைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் மாற்றுமதக் கலாச்சாரம் கூடாது என்று கூறினால் இவர்கள் கோயில் திருவிழாக்களைப் பின்பற்றி சந்தனக்கூடு, யானை வழிபாடு என அத்தனையும் செய்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை நாம் செயல்படுத்தினால் அதை இவர்கள் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அதைச் செயல்படுத்துபவர்களை நரம்புத் தளர்ச்சி என்று கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள். இவர்கள் தான் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிச்கிறார்களாம்.

அதே சமயம் இவர்கள் விரலை வெட்டி விடுவோம் என்று சொன்னாலும், உயிரை எடுத்து விடுவோம் என்று சொன்னாலும் அதற்கு அஞ்சாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அந்த நபிவழியை செயல்படுத்துகின்றனர். யார் நபியை உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள்; யார் அவமதிக்கின்றார்கள் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மநாபி (ஸல்) அவர்கள் மனிதரே!

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் என்று நாம், நமது சுய விருப்பப்படி கூறுவது போல் ஒரு போலித் தோற்றத்தை இந்த பரேலவி பயங்கரவாதி ஏற்படுத்துகின்றார்.

உண்மையில் இது எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்ற கூற்றாகும்.

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணைகற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

இதைத் தான் நாம் கூறுகின்றோம். நமக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் உள்ள வேறுபாடு வஹீ என்ற இறைச்செய்தியாகும். அந்த உயர்ந்த தகுதியை இந்த உலகத்தில் அவர்களுக்குப் பின் வேறு யாரும் பெற முடியாது என்று அடித்துச் சொல்கிறோம். இப்படிக் குர்ஆன் கூறுகின்ற வேறுபாட்டுடன் புரிந்திருக்கின்ற நம்மைத் தான் சுய விருப்பத்தின் அடிப்படையில் கூறுவதாக விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர். இதிலிருந்து இவர்களது விஷமத்தனத்தை, விஷச் சிந்தனையைப் புரிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் இல்லை என்பதற்கு புகாரியிலிருந்து ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வந்துள்ளார்கள். அந்த ஆதாரத்திலும் அவர்கள் ஒரு பயங்கர மோசடியைச் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டு, மற்றொரு பகுதியை இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இது தொடர்பாக புகாரியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்!என்று (மக்களிடம்) கூறியபோது, “நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்என்றோ “உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்என்றோ கூறினார்கள்.

நூல்: புகாரி 1961

இந்த ஹதீஸ் புகாரியில் 1922, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 6851, 7241, 7242, 7299 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் பல இடங்களிலும் பதிவாகியுள்ளது.

இவை அனைத்திலும், எனக்கு என்னுடைய இறைவன் உணவளிக்கிறான்; குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுக்கின்றான் (அதாவது, நான் பட்டினி கிடக்கவில்லை) என்பதையும் சேர்த்தே சொல்கின்றார்கள். இதை வசதியாக, தங்களுக்குச் சாதகமாக மறைத்துவிட்டு ஹதீஸ் முதல் பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளனர். ஹதீஸில் உள்ளதை மறைப்பது மோசடியாகும்.

இத்தகைய மோசடி செய்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகள், நபிமார்களுடைய சாபமும் இறங்குகின்றது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:159

இதிலிருந்து இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்.

வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இவர்களாகவே நபி (ஸல்) அவர்கள் மனிதர் அல்ல என்று முடிவெடுத்துவிட்டு அதற்குத் தக்க குர்ஆன், ஹதீஸை வளைக்க முயற்சிக்கின்றனர். அதற்குத் தான் ஹதீஸின் ஒரு பகுதியை விட்டு விட்டு, மற்றொரு பகுதியை மட்டும் ஆதாரமாக எடுக்கின்றனர். ஆனால் அல்லாஹ் தெளிவாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்று ஆணித்தரமாகச் சொல்கின்றான்.

மர்யமுடைய குமாரர் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் கடவுளாக ஆக்கிவிட்டனர். இதை அல்லாஹ் கண்டிக்கிறான்.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

அல்குர்ஆன் 5:75

ஈஸா நபி அவர்களும், அவர்களது தாயாரும் மனிதர்கள் தான். அவர்களுக்குப் பசி, தாகம் இருந்தது. அதனால் உணவு சாப்பிட்டார்கள். சாப்பிட்ட அவர்கள் மல, ஜலம் கழித்தார்கள். அவ்விருவரும் கடவுளாக முடியாது என்பதற்கு இவ்விரு குறைபாடுகளையும் ஆதாரமாகக் காட்டுகின்றான். உணவு உட்கொள்ளுதல் என்பது நேர்முக ஆதாரம். சாப்பிட்டு விட்டு மலஜலம் கழித்தாக வேண்டும் என்ற மறைமுக ஆதாரத்தையும் மக்களுக்குப் புரியும் படி தெளிவாக இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதே விஷயத்தைத் தான் நபி (ஸல்) அவர்களுக்கும் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 25:7

நபி (ஸல்) அவர்களும் உணவு சாப்பிடுபவர் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இங்கு நபி (ஸல்) அவர்கள் உணவு சாப்பிடுபவர்கள் என்று நேரடியாகவும், மலஜலம் கழிப்பவர்கள் என்று மறைமுகமாகவும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

சாப்பிடுபவர் கடவுளாக இருக்க முடியாது என்ற ஆதாரம் இதில் பெறப்படுவதுடன் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்ற கருத்தையும் இவ்வசனம் தெளிவாக விளக்குகின்றது.

நபிவழிச் சான்றுகள்

அல்குர்ஆனில் இதுபோன்று ஏராளமான சான்றுகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றைக் கூறியுள்ளோம். இனி, ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம் என்பதற்குரிய சான்றுகளைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தம்மை மனிதர் என்று பல்வேறு இடங்களில் பதிவு செய்கின்றார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (லுஹ்ரையோ அஸ்ரையோ வழக்கத்திற்கு மாறாகத்) தொழுதார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகை யின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்துவிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்களிடம், “இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)என்றனர்.

உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும்போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, “உங்களில் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சஜ்தாக்கள் செய்யட்டும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 401

நபி (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டதை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.  தொழுகையின் ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்களுக்கு மறந்து போனதை இது தெளிவுபடுத்துகின்றது. “உங்களைப் போன்ற மனிதன் தான்; உங்களைப் போலவே நானும் மறக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது.

நூல்: புகாரி 813

இந்த ஹதீஸ் லைலத்துல் கத்ரு மறந்து போனதை விளக்குகின்றது.

இதுபோன்று புகாரி 482, 2358, 6967, 7169, 7181, 7185 ஆகிய ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்கள் மனிதர் தான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தெரிவிக்கின்றன.

அல்லாஹ்வே! முஹம்மது மனிதர் தான். மனிதர்கள் கோபப்படுவது போன்றே அவர் கோபப்படுகின்றார். நான் உன்னிடத்தில் ஓர் வாக்குறுதி பெற்றிருக்கிறேன். எனக்கு நீ அதில் மாற்றம் செய்ய மாட்டாய். யாரையாவது ஓர் இறைநம்பிக்கையாளரை நான் நோவினை செய்திருந்தால் அல்லது அவரைத் திட்டியிருந்தால் அல்லது அவரை அடித்திருந்தால் அதை அவருக்கு இறுதிநாளில் (அவரது பாவத்திற்கு) பரிகாரமாகவும், அதைக் கொண்டு அவரை உன்னிடம் நெருங்க வைக்கும் வணக்கமாகவும் ஆக்குவாயாக!என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4708

இந்த ஹதீஸ்கள் தெள்ளத் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் தான் என்று தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலும் ஆதாரங்களை இதே இதழில், “இணை கற்பித்தல்’ என்ற தொடரில் “மாநபியும் மனிதரே!’ என்ற தலைப்பில் காண்க!

நபி (ஸல்) அவர்கள் மனிதர் தாம், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் வஹீ எனும் இறைச் செய்தியாகும் என்பதை மேலே நாம் கண்ட வசனங்களும் ஹதீஸ்களும் இன்னும் ஏராளமான ஆதாரங்களும் உணர்த்துகின்றன.

ஆனால் இந்த பரேலவிச பயங்கரவாதிகள் நபி (ஸல்) அவர்களை மனிதத் தன்மையிலிருந்து உயர்த்தி, இறைத்தன்மைக்குக் கொண்டு செல்கின்றனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்என்றும் “அல்லாஹ்வின் தூதர்என்றும் சொல்லுங்கள்என்று கூறினார்கள்என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல்: புகாரி 3445

இந்த பயங்கரவாதிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கை எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இந்த லட்சணத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக மதிக்கிறோம், நேசிக்கிறோம் என்ற வெற்றுப் பேச்சு வேறு! இவர்களின் இந்த லட்சணத்தையும் இவர்கள் முன்வைக்கின்ற ஆதாரங்களின் லட்சணங்களையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? சவுதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள மேனேஜர், மஹர் கொடுத்து திருமணம் செய்வதற்கும் காசு கொடுத்து விபச்சாரம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

ஜாஃபர் சாதிக்

விபச்சாரம் செய்யும் போது காசு கொடுக்கப்படுவது போல் திருமணத்திற்காகப் பெண்ணுக்கு மஹர் கொடுப்பதும் ஒன்றாக இவருக்குத் தோன்றுகிறது. ஆனால் இரண்டுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

ஒவ்வொரு தடவை மனைவியுடன் சேரும் போதும் மஹர் கொடுப்பதில்லை. விபச்சாரம் செய்யும் ஒவ்வொரு தடவையும் அதற்கான கட்டணத்தை (?) கொடுக்க வேண்டும்.

யாரிடம் விபச்சாரம் செய்கிறானோ அவள் இவனுக்கு மட்டும் உரியவளாக மாட்டாள். இவனைப் போல் இன்னும் பலருக்குப் படுக்கை விரிப்பாள். ஆனால் மஹர் கொடுப்பதன் மூலம் ஒரு பெண் வேறு யாருக்கும் சொந்தமாகாமல் தடுக்கப்படுகிறாள். இந்த அடிப்படை வேறுபாடு புரியாமல் இப்படி அவர் கேட்டுள்ளார்.

விபச்சாரம் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதில் சொற்ப நேர இன்பம் பெறுவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. அந்த உறவு முடிந்தவுடன் இருவருக்குமான மொத்த உறவும் முடிந்து விடுகிறது. விபச்சாரத்தில் உடல் சுகம் அனுபவிப்பது ஒன்றே நோக்கம்.

ஆனால் இஸ்லாம் மஹர் கொடுத்து திருமணம் செய்யச் சொல்வதில் உடலின்பம் மாத்திரம் நோக்கமன்று. அத்துடன் அவர்களுடைய பந்தம் முடிந்து விடுவதுமில்லை. அதையும் தாண்டி ஏராளமான விஷயங்கள் இஸ்லாம் கூறும் திருமணத்தில் உள்ளன.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதின் மூலம் அவளின் முழுப் பாதுகாப்புக்கு அந்த ஆண் பொறுப்பாகிறான். அவன் சாகும் வரையிலும் அவளுக்காக உழைத்து, சம்பாதித்து அவளின் உணவு, இருப்பிடம், உடை, ஆரோக்கியம் போன்ற சகலத்திற்கும் பொறுப்பேற்று, அவளின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறான். அவள் மூலம், தான் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கும் அவனே பொறுப்பேற்று அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான்.

அதே போன்று அந்தப் பெண்ணும் தன் கணவனையும், குழந்தைகளையும் கவனிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறாள். இவை யாவும் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளது.

இவ்வாறு குடும்ப மகிழ்ச்சிக்காக ஒவ்வொருவரும் செயல்படும் நல்லதொரு சூழல், அமைப்பு திருமண பந்தத்தில் காணப்படுகிறது. மேலும் திருமண பந்தத்தில் அந்தப் பெண்ணுக்கும், அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது.

இவற்றில் எந்த ஒன்றாவது விபச்சாரத்தில் உண்டா?

திருமணத்தின் மூலம் ஆண், பெண் இருவருக்கும் மத்தியில் இனம்புரியாத நேசமும் பாசப்பிணைப்பும் உண்டாகிறது. இந்த நேசத்தை இறைவனே ஏற்படுத்துகிறான்.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 30:21

அதனால் கணவனுக்கு ஒரு துன்பம் என்றால் மனைவியும் மனைவிக்கு ஒரு துன்பம் என்றால் கணவனும் பரிதவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இத்தகைய கலப்பற்ற நேசம், பாசம் எல்லாம் நிறைந்திருந்திருக்கிற இஸ்லாம் கூறும் திருமணமும் காசுக்காக உடலை விற்பதும் ஒன்றா?

திருமண உறவின் மூலம் குழந்தைகள் பெற்று, அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்கள் மூலம் தங்களது சந்ததிகளைப் பெருகச் செய்து அதில் மகிழ்ச்சி அடைவதும் நோக்கமாக உள்ளது. இது தான் இயற்கை நியதியும், இறை நியதியுமாகும். சமூக அமைப்பைக் கட்டமைக்கக் கூடிய வழிமுறை திருமணமாகும். இந்தத் திருமணத்தால் சமூகத்திற்கு நன்மை தானே தவிர எந்த தீங்கும் ஏற்படுவதில்லை.

ஆனால் முறைகேடான ஆண்-பெண் உறவுகள் குடும்ப அமைப்பைத் தகர்க்கக் கூடியவையாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் ஈனச் செயலாகும்.

இவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. இன்று உலகையே அச்சுறுத்தும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸ் வருவதற்கு காரணமே முறைகேடான பாலியல் உறவுகள் தான் என்பதை அறியாதவர் எவரும் இல்லை.

 மன நோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாகக் கண்டித்து, தடை செய்துள்ளது

 சமூகத்திற்கு நன்மை பயத்து, சமூக அமைப்பை தழைக்கச் செய்யும் திருமணமும், சமூகத்தைச் சீரழித்து சின்னாபின்னமாக்கும் விபச்சாரமும் ஒரு போதும் சமமாகாது. இப்படி திருமணத்திற்கும் விபச்சாரத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

? பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்லமுடியாமல் போகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறுகிறார்கள். இது ஆதாரபூர்வமான ஹதீஸா?

உம்முல் ரய்யான்

பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்ல முடியாமல் போகும் என்ற கருத்தில் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை. இது அடிப்படை ஆதாரமற்றதும், மக்களால் புனைந்து சொல்லப்பட்டதுமாகும்.

பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் சொல்வது நபிவழியாகும். ஒருவர் பாங்கிற்கு பதிலளிக்காமல் பேசினால் அவர் பாங்கிற்கு பதிலளிக்கவில்லை என்ற அடிப்படையில் நபிவழியைக் கடைப்பிடிக்கவில்லை என்று ஆகும்.

ஆனால் இச்செயலைச் செய்ததால் அவரின் மரணத்தருவாயில் கலிமா வராது என்றெல்லாம் நபிகள் நாயகம் சொல்லவில்லை. மேலும் இதை விட பெரும் பெரும் பாவங்களைப் பற்றி நபிகளார் எச்சரித்துள்ளார்கள். அது போன்ற பெரும்பாவங்களை செய்தவருக்குக் கூட மரணத்தருவாயில் கலிமா வராது என்ற நிலையை நபிகளார் சொல்லவில்லை. எனவே இது நபியின் பெயரில் மக்களால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதையாகும்.

? மொத்த வருமானத்தில் செலவு போக மீதி உள்ளதில் மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு செய்ய வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் (செலவைக் கழிக்காமல்) மூன்றில் ஒரு பங்கு செலவு செய்ய வேண்டுமா?

முஹம்மது சைபுல்லாஹ்

முஸ்லிம்கள் தங்கள் செல்வங்களை மார்க்கப்பணி போன்ற நல்வழியில் செலவிட வேண்டும் என இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதற்கு மறுமையில் மிகப் பெரிய பரிசுகளை அளிப்பதாகவும் இறைவன் வாக்களிக்கின்றான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:261

நம்பிக்கை கொண்டோரே! பேரமோ, நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! (நம்மை) மறுப்போரே அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன்  2:254

அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன்மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 2:245

ஆனால் மார்க்கப் பணிக்காக தமது முழு வருமானத்தையோ அல்லது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கையோ கண்டிப்பாகச் செலவிட்டாக வேண்டும் என்று இறைவனோ, இறைத்தூதரோ எங்கும் கட்டளையிடவில்லை.

நமது குடும்பத்தாரைப் பிறரிடத்தில் கையேந்தும் படி விட்டு விட்டு, நமது சொத்துக்கள் முழுவதையும் தாரை வார்ப்பதை நமது மார்க்கம் கண்டிக்கவும் செய்கிறது.

நீங்கள் குறிப்பிடுவது வஸிய்யத் தொடர்பாக உள்ள சட்டமாகும். ஒருவர் தன்னுடைய மரணத்திற்குப் பிறகு தனது சொத்தை நல்வழியில் செலவிட விரும்புகிறார் எனில் அவர் அதிகபட்சமாக எவ்வளவு தொகையை அளிக்கலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு எல்லையைக் குறிப்பிடுகிறார்கள். அதிகபட்சமாக தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை நல்வழியில் செலவிடுமாறு வஸிய்யத் செய்யலாம். அதை விட அதிகமாக செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “விடைபெறும் ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

அப்போது நான், “(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “வேண்டாம்என்று கூறினார்கள்.

நான் “(எனது செல்வத்தில்) பாதியை(யாவது தானம் செய்யட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள்.

நான் மூன்றிலொரு பங்கை(யாவது தானம் செய்யட்டுமா)?” என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடச் சிறந்ததாகும் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5668, 1296, 2742, 2744, 3936, 4409, 5354, 5659, 6373, 6733

ஒருவர் உயிருடன் வாழும் போது தனது சொத்தில் அல்லது தனது வருமானத்தில் அதிகபட்சம் மூன்றில் ஒருபங்கு செலவிடலாம் என்பதை இந்தச் சம்பவம் கூறவில்லை. மரணத்துக்குப் பிறகு ஒருவரது சொத்துக்கள் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பது பற்றியே இது பேசுகிறது. ஒருவரது மரணத்துக்குப் பிறகு அவரது வாரிசுகள் தான் அதிக உரிமை படைத்தவர்கள் என்பதால் அவர்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமாகாமல் வசிய்யத் எனும் மரண சாசனம் செய்யலாம்.

உயிருடன் வாழும் போதே தர்மம் செய்வதற்கு இரண்டரை சதவிகிதம் என்ற அளவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஜகாத் எனப்படுகிறது. இது அல்லாமல் நாமாக விரும்பி நமக்கோ நமது குடும்பத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் நல்லறங்களில் செலவிடுவது ஸதகா எனப்படுகிறது. இதற்கு அளவு நிர்ணயம் ஏதும் இல்லை.

இடையூறு அளிக்காத இனிய மார்க்கம்

மனித சமுதாயத்திற்கு வழியைக் காட்டி, மனிதனைத் தீமையில் விழாமல் காப்பது தான் மதமாகும். அது தான் மதம் மனிதனுக்குச் செய்கின்ற உதவியாகும். மனிதனுக்கு இந்த உதவியைச் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை; உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஜனவரி 14, தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. நல்ல விளைச்சலைக் கொடுத்ததற்காக பூமிக்கும், பூமிக்கு ஒளி கொடுத்த சூரியனுக்கும் வணக்கம் செலுத்துகின்ற நாள் தான் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பொங்கல் வந்தது; பொங்கினார்கள்; புசித்தார்கள் என்றால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்படுகிறார்கள். அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை.

பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை! பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பெயரில் பழைய பொருட்கள் அனைத்தையும் தீயிட்டுப் பொசுக்குகின்றார்கள். அதனால் எழுகின்ற புகை மூட்டம் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி, சுற்றி வாழ்கின்ற மனிதர்களின், இன்னபிற உயிர்களின் சுவாசக் குழாயைப் பாதிக்கச் செய்கின்றது. அவர்களை சுகாதாரக் கேட்டில் விழச் செய்கின்றது.

பழைய டயர்களைப் போட்டுக் கொளுத்தும் போது ஏற்படுகின்ற புகை சுற்றுச்சூழலில் மிகப் பெரிய மாசை ஏற்படுத்துகின்றது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என இந்த நாட்களில் வெடிக்கப்படும் பட்டாசு சப்தம் மனிதர்களையும் கால்நடைகளையும் பறவைகளையும் பாதிக்கச் செய்கின்றது. பொங்கலை அடுத்து வரும் நாள் மாட்டுப் பொங்கல். வயற்காட்டில் ஏரு பூட்டி, உணவு விளைச்சலுக்குக் காரணமாக இருந்த மாட்டிற்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக மாட்டை வணங்கும் நாள் தான் மாட்டுப் பொங்கல் எனப்படுகின்றது.

ஓரிறை என்பதைத் தாண்டி வணங்க ஆரம்பித்து விட்டால் கல்லையும், மண்ணையும், மரத்தையும், மாட்டையும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி வணங்குவதோடு நிறுத்தி விட்டால் அது அவர்களுடன் போய்விடுகின்றது.

பதம் பார்க்கும் மதப் பண்டிகை

மாட்டுப் பொங்கல் நாளிலும் அதைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அந்த மாடுகளை வதைக்கின்றனர். மாடுகளுக்கு போதைப் பொருளைக் கொடுத்து வெறியேற்றி அனுப்புகின்றனர். இதைத் தடுப்பதற்காகப் பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் போடப்பட்டு, நீதிமன்றமும் பல கட்டுப்பாடுகளுடன் இந்தக் கொடுமையை அனுமதித்துள்ளது.

மனிதனின் உணவு மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இறைவனால் படைக்கப்பட்ட மாட்டை, உணவுக்காக அறுப்பதைக் குறை சொல்பவர்கள், அதே மாட்டை இப்படி அணு அணுவாகச் சித்ரவதை செய்வது நகைப்பிற்குரிய  முரண்!

இதே போன்று பொங்கலை முன்னிட்டு சேவல் சண்டை நடத்துவதும் பரவலாக நடைபெற்று வருகின்றது. இரண்டு சேவல்களை மோத விட்டு, வெற்றி பெறும் சேவலின் சொந்தக்காரருக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். இதையொட்டி பந்தயம் கட்டி சூதாட்டமும் நடைபெறுகின்றது. இதற்காகவும் சேவல்களுக்கு போதைப் பொருள் கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் மோதும் சேவல்களுக்குக் கடுமையான காயம் ஏற்படுவதும், இரண்டு சேவல்களில் ஏதேனும் ஒன்று உயிரிழக்கும் அநியாயமும் நடக்கின்றது.

இந்த அடிப்படையில் பொங்கல் என்ற பெயரில் மனித இனத்தைத் தாண்டி விலங்கினங்களுக்கும் இடையூறு செய்கின்றனர். இப்படி மனிதர்களையும் பிற உயிரினங்களையும் பதம் பார்ப்பது தான் மதப் பண்டிகையா? பாதிப்பை ஏற்படுத்துவது தான் பண்டிகை நாளா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இஸ்லாம் ஒரு மதமல்ல, மார்க்கம். அது ஓர் இயற்கை மார்க்கமாகும். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இரண்டு பண்டிகைகளை வழங்கியுள்ளது. ஒன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள். இந்த நாளில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கி அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கின்றது. இன்னொரு பெருநாளான ஈதுல் அழ்ஹா அன்று ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வினியோகிக்கச் செய்கின்றது.

அன்றைய தினம் ஏழைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் ஏழைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஜகாத் போன்ற உதவிகளை வழங்குவதற்கு வகை செய்கின்றது. மதம், மார்க்கம் என்றால் அதன் பண்டிகைகள் இப்படிப் பிறருக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.

நிலமும் மாசு! நீரும் மாசு!

இறந்தவர்களை எரியூட்டுவதன் மூலம் நிலத்தை மாசுபடுத்துகின்றனர். நிலத்தை மாசுபடுத்துவதுடன் நில்லாமல் நீரையும் மாசுபடுத்துகின்றனர். இறந்தவர்களின் பிணங்களைக் கொண்டு வந்து நீரில் கரைத்து ஆற்று நீரை மாசுபடுத்துகின்றனர். புனிதக் குளியல் என்ற பெயரில் பல இலட்சம் பேர்கள் ஆற்றங்கரைகளில் வந்து மலஜலம் கழித்து அதை நாற்றங்கரையாக்கி விடுகின்றனர். அதன் பிறகு குளித்து கங்கையைக் கலங்கடிக்கின்றனர். இத்துடன் அங்கு செல்கின்ற பக்தர்கள் கையோடு கொண்டு சென்ற பிளாஸ்டிக் பைகள், இதர பொருட்களை வீசி நிலத்தையும் நீரையும் மாசுபடுத்துகின்றனர்.

ஆற்று நீர் தான் குடிநீராகக் குழாயில் வருகின்றது. இதைக் குடிப்போருக்கு வாந்தி பேதி, காலரா, கொள்ளை நோய் ஏற்பட்டு மரணத்தைத் தழுவுகின்றனர்.

மதம் மனிதனை வாழ வைக்கின்றதா? மாள வைக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. இதன் மூலம் நமக்குத் தெளிவாகின்ற விஷயம், மனிதனை சடங்குகளின் மூலமே சாகடிக்கும் இந்த மதங்கள் உண்மையானவையாக இருக்க முடியாது என்பது தான்.

இஸ்லாம் தான் இறந்தவர்களைப் புதைக்கச் செய்து நிலம் மாசுபடுவதைத் தடுக்கின்றது. மலஜலம் கழிப்பதற்கும் இஸ்லாம் ஒரு கட்டுப்பாட்டை விதித்து சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கச் செய்கின்றது. அத்துடன், மனித குலம் தன்னைத் தானே அழிவில் ஆழ்த்தக்கூடாது என்ற பொதுத்தடை விதித்து மனித குலத்தையும் அவனது சுற்றுப்புறத்தையும் காக்கின்றது. இதுதான் மார்க்கமும் வாழ்க்கை நெறியுமாகும்.

உத்தர காண்டத்தில் கோரத் தாண்டவம்

அண்மையில் உத்தர்காண்டில் வெள்ளப் பெருக்கு ஒரு கோரத் தாண்டவமாடியது. பலியான மனித உயிர்களின் புள்ளி விபரம் துல்லியமாக இதுவரை கிடைக்கவில்லை.

பெரும் உயிர்ச் சேதம், பொருட் சேதத்தை ஏற்படுத்திய இந்த வெள்ளத்திற்குக் காரணம் என்ன?

மலைப் பிரதேசத்தில் அந்த யாத்திரைத் தலம் அமைக்கப்பட்டது தான் காரணம். புனிதத் தலமாகக் கருதி யாத்திரீகர்கள் சதாவும் அங்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். வரக்கூடிய பக்தர்களைக் கவனத்தில் கொண்டு பெரும் லாட்ஜ்கள், உணவகங்கள் பெருக்கெடுக்க ஆரம்பித்தன. மலைப் பிரதேசத்திற்கென உரிய கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.

கட்டடங்களின் அணிவகுப்புகள், சட்டத்திற்குப் புறம்பான ஆக்கிரமிப்புகள், இவை அனைத்தும் பெருக்கெடுத்து வரும் நீர்வரத்துப் பாதைகளை அடைக்கின்றன. வெள்ளம் என்ன செய்யும்? நான் வரும் பாதையை நீ அடைத்தால் உன் பாதையில் நான் வருகின்றேன் என்று தனது தடத்தை மாற்றி, தாறுமாறாகச் சென்று இவ்வளவு பெரிய உயிர்ச் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி விட்டது.

இஸ்லாத்திலும் மக்கா, மதீனா போன்ற பகுதிகளில் புனிதத் தலங்கள், பள்ளிவாசல்கள் உண்டு. ஆனால் அங்கு மனித இனத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. காரணம் இந்தப் புனித ஆலயங்கள் இறைவனின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்டவையாகும்.

மார்க்கம் என்றால் அது மக்களுக்கு வழிகாட்டியாகும். அவர்களுக்கு வாழ்க்கையில் பாதுகாப்பைத் தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால் அது மார்க்கமல்ல.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமானஅல்லது “அறுபதுக்கும் அதிகமானகிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லைஎன்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 51

மனிதர்களின் கால்களைப் பதம் பார்க்கும் வகையில் பாதையில் கிடக்கும் முற்கள், கற்கள் போன்றவற்றை அகற்றுவது ஒரு முஸ்லிமின் இறை நம்பிக்கைகளில் ஒன்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

மார்க்கம் என்றால் மனிதனுக்கு வழிகாட்டி, நன்மை செய்வது தான் என்பதை அழகாகவும் அற்புதமாகவும் விளக்கிக் காட்டுகிறார்கள். இஸ்லாம் அல்லாத பிற மதங்களின் வழிபாட்டு முறைகள் எப்படி அடுத்தவர்களைப் பாதிக்கச் செய்கின்றது என்பதற்கு தினமணி நாளிதழில் “தேவையற்ற சடங்குகள்’ என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரை ஆதாரமாக அமைந்துள்ளது.

தேவையற்ற சடங்குகள்

அண்மையில் ஒருநாள் இரவு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் ஆனந்தமாக வந்த அந்த இளைஞர் இன்று மருத்துவமனையில் படுத்திருக்கிறார். காரணம் சிறு தேங்காய்ச் சிதறல்; சாலையில் கிடந்த சிதறு தேங்காயைக் கவனிக்காத சிறு கவனக்குறைவு. அதன் காரணமாக, அவரது குடும்பமே இன்று மருத்துவமனையில்.

வெள்ளிக்கிழமை இரவுகளில் நகரங்களில் வாகனம் ஓட்டுவோர் மிகவும் கவனத்துடன் இருந்தாக வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் சாலையில் சறுக்கி விழுந்து மருத்துவமனைக்குப் போக வேண்டியது தான்.

அந்த ஒரு நாள் இரவில் மட்டும் நகரத் தெருக்களில் பல்லாயிரக் கணக்கான பூசணிக் காய்களும் தேங்காய்களும் உடைக்கப்படுகின்றன. சாலை நடுவே கிடக்கும் திருஷ்டிப் பூசணிக் காயைக் கவனிக்காமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் அதோகதி தான்.

வாரம் முழுவதும் கடைகளில் நடைபெறும் வர்த்தகத்தில் கண்ணேறு ஏற்படாமல் தவிர்க்கவே இந்த திருஷ்டி கழிக்கும் சடங்கு நிகழ்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும் பூஜை முடித்தவுடன் இவை உடைக்கப்படுகின்றன. பூசணிக்காயை உடைப்பதிலும் தேங்காயைச் சிதறடிப்பதிலும் நமது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மிருகபலிச் சடங்கிற்கு மாற்றாக அறிமுகமான பூசணிக் காய் உடைப்பு இப்போது மனிதர்களை வதைக்கும் சடங்காக மாறியிருப்பதுதான் வேதனை.

அதுமட்டுமல்ல, வெள்ளிக்கிழமை இரவுகளில் சாலையில் உடைபடும் காய்களால் மட்டும் பல லட்ச ரூபாய் வீணாகிறது. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு தெருக்களில் உடைக்கப்படும் பூசணி, தேங்காய்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் தெருவில் எறியப்படும் பணத்தின் மதிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

முழுத் தேங்காய் வாங்கக் காசில்லாமல் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் “தேங்காய் பத்தை’ (துண்டுகள்) வாங்கும் ஏழைகள் நடந்து செல்லும் அதே சாலையில் சிதறிக் கிடக்கின்றன ஆயிரக்கணக்கான தேங்காய்கள்.

கிடுகிடுவென உயர்ந்துள்ள காய்கறி விலையைச் சமாளிக்க முடியாமல் நடுத்தரக் குடும்பங்களே காய்கறிப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டன. அதே சமயம், எந்தப் பயனும் இன்றி சாலையில் வாகனங்களால் அரைக்கப்பட்டு கூழாகிக் கிடக்கின்றன ஆயிரக்கணக்கான பூசணிக் காய்கள். இதை பொருளாதாரக் குற்றம் என்றும் கூறலாமல்லவா?

இதைவிட கொடுமையான இன்னொரு பழக்கம், இறுதி ஊர்வலத்தில் செல்வோர், சடலத்தின் மீது அணிவிக்கப்பட்ட மாலைகளைக் குதறி அதிலிருக்கும் பூக்களை சாலையில் வீசிச் செல்வது. எதற்காக இப்படிச் செய்கிறோம் என்பது அவர்களுக்கே புரியாத புதிர்.

இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்குக் கொண்டு செல்லும் போது சிற்றுயிர்களுக்கு உணவளிக்க பொரி வீசுவது கிராமங்களில் உருவான வழக்கம். ஒரு சடலத்தின் மீது பல மணி நேரம் அணிவிக்கப்பட்டிருந்த மலர் மாலைகளில் இருந்த பூக்களை போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வீசிச் செல்வது, எவ்வாறு அவரைப் போற்றுவதாக அமையும்? அது மாபெரும் சுகாதாரக் கேடல்லவா?

இத்தகைய தவறான பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே, நாம் நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான அடையாளமாகும்.

யாரோ ஒருவரது திருஷ்டி கழிய உடைக்கப்படும் பூசணியால், வேறு யாரோ சிலர் சாலையில் அடிபட வேண்டுமா? மரணித்தவரின் மீது அணிவிக்கப்பட்ட மலர்கள், சாலையில் செல்வோரின் முகச்சுளிப்புக்கு வித்திட வேண்டுமா? நாம் சிந்திக்க வேண்டும்.

தினமணியின் இந்தக் கட்டுரையாளர் சில விஷயங்களுக்கு மதரீதியாக மாற்றுப் பரிகாரம் கூறுகின்றார். அவற்றில் நமக்கு உடன்பாடில்லை.

எனினும் பாதையில் கிடக்கும் சிதறு தேங்காயின் சில்லுகள் பாதங்களைப் பதம் பார்த்ததன் விளைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை நாம் கவனதில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று.

மனிதனைப் பதம் பார்க்கும் மதம் ஒருபோதும் இறை மார்க்கமாக இருக்க முடியாது என்பதையே இவை உணர்த்துகின்றன.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 19

மாநபியும் மனிதரே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது, தம்மை ஒரு மனிதன் என்ற அடிப்படையில் தான் அறிமுகம் செய்தார்கள்.

நானும் உங்களைப் போன்று ஒரு மனிதன் தான். உங்களுக்கு என்ன ஆற்றல், சக்தி, வல்லமை இருக்கிறதோ அதே போன்று தான் எனக்கும் இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற தேவைகள் அனைத்தும் எனக்கும் இருக்கிறது. பசி, நோய், தூக்கம், போன்ற அனைத்து பலவீனங்களும் எனக்கும் உண்டு. உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் எனக்கு இறைச் செய்தி வருகின்றது; உங்களுக்கு அது இல்லை. இதைத் தவிர நான் மனிதன் என்பதில் மாற்றமில்லை என்று சொல்லியே பிரச்சாரம் செய்தார்கள். இதை நாம் தொடர்ச்சியாக பார்த்துப் வருகின்றோம்.

நான் உலகம் சார்ந்த விஷயங்களில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னால் அதை நீங்கள் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. உங்களுடைய சிந்தனைக்கு – அறிவுக்கு மாற்றமாக இருக்குமென்றால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் மார்க்கச் சட்டங்களில் ஏற்படும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குத் தான் இறைவன் என்னை அனுப்பியிருக்கிறான். உலக விஷயங்களைப் பற்றிய அறிவு என்னை விட உங்களுக்குத் தான் அதிகம் இருக்கிறது என்று அந்த மக்களிடத்தில் சொன்னதையும் கடந்த இதழில் கண்டோம்.

மொத்தத்தில் நபியவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்னால் வாழ்ந்த நாற்பது வருடங்களிலும் சரி! தன்னை நபியென்று மக்களிடத்தில் அறிமுகப்படுத்தியதிலிருந்து மரணிக்கும் வரையுள்ள 23 ஆண்டுகளிலும் சரி! இந்த 63 வருடங்களில் எந்த ஒரு நொடிப்பொழுதிலும் தன்னை மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராக அறிமுகப்படுத்தியதேயில்லை. நான் அனைத்து ஆற்றலும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவன் என்றும் அறிமுகப்படுத்தியதில்லை. மனிதன் என்று தான் அறிமுகப்படுத்தினார்கள்.

இன்னும் சொல்லப்போனால், நபியவர்களுக்கு நம்மை விட அறிவு, சிந்தனை, ஞானம் அதிகம் தான் என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவர்கள் சுயமாகப் பேசுகின்ற பேச்சில் கூட அவ்வளவு தத்துவங்கள் அமைந்திருக்கும். ஆனால் அவர்களிடத்திலும் தவறுகள் ஏற்பட்டிருக்கிறதா? இல்லையா? அகிலங்களைப் படைத்த ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கு மட்டுமே தவறுகள், மறதிகள் ஏற்படாது.

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்கள் தான். மனிதனாகப் பிறந்து விட்டாலே அவனிடத்தில் தவறுகள் வரும் என்று தான் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஒருவனிடத்தில் தவறுகள் அதிகமாக இருக்கும். ஒருவனிடத்தில் குறைவாக இருக்கும். ஆனால் தவறுகள் வராமல் இருக்காது. அந்தப் பட்டியலில் நபியவர்களும் விதிவிலக்கல்ல. இதற்கு இன்னும் பல சம்பவங்களும் சான்றாக இருக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதும் தொழுகையைத் தொழுது முடித்தார்கள். (முடித்ததும்) “சற்று முன் உங்களில் எவரேனும் என்னுடன் ஓதினீர்களா?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர், “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!என்றார். “நீங்கள் (ஓதுவதால்) நான் ஓதுவதற்கு இடையூறாக உள்ளது என்று கூறிக் கொண்டிருக்கிறேன். (பிறகு ஏன் ஓதுகிறீர்கள்?)” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டது முதல் நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் மக்கள் ஓதுவதிலிருந்து விலகிக் கொண்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: திர்மிதி 287

இந்தச் சம்பவம் நமக்கு எதை நமக்கு உணர்த்துகின்றது என்றால் நபி (ஸல்) அவர்கள் மனிதத் தன்மையை விட்டும் அப்பாற்பட்டவர்களாகப் படைக்கப்படவில்லை. சர்வ அதிகாரங்களும் கொண்டவர்களாக – நினைத்ததையெல்லாம் செய்து காட்டக்கூடியவர்களாக, செய்து முடிப்பவர்களாகப் படைக்கப்படவில்லை. அவர்களே இப்படி என்றால் மற்ற மகான்களெல்லாம், அவ்லியாக்களெல்லாம் எப்படி இருப்பார்கள்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்)என்று கூறினார்கள்.

மக்கள், “தங்களையுமா அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்) என்னையும் தான். அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிரஎன்று கூறிவிட்டு, “எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5673

மேலும் இந்த ஹதீஸ் புகாரியில் 6463, 6467 ஆகிய ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தக்கூடிய பாடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஓர் இறைத் தூதர். அவர்கள் செய்த நன்மைகளுக்கு மறுமையில் மிகப்பெரிய அந்தஸ்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்களுக்கு முன்னால் எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படாத பல சிறப்புகளை நபிகளாருக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான். மற்ற மனிதர்களை விடப் பல நன்மையான காரியங்களை அதிகமாக ஆர்வத்துடன் தொடர்ச்சியாகச் செய்து வந்தவர்கள். தீமையான பேச்சுக்கள் மற்றும் தீய காரியங்கள், செயல்களை விட்டும் விலகி இருந்தவர்கள். அதுமட்டுமில்லாமல் மறுமையில் அவர்களுக்கென்று பல சிறப்புகளை அல்லாஹ் வழங்கவிருக்கிறான்.

இத்தகைய நன்மைகளையும், அதன் தரத்தையும் வைத்தே அவர்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இத்தகைய சிறப்புகளையும் அந்தஸ்துகளையும் பெற்ற நபியவர்கள், அவர்கள் செய்த நன்மையின் மூலம் மட்டும் வைத்து சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. அல்லாஹ்வின் கருணையால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியுமென்றால் நாம் நம்முடைய நிலைமையை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய நிலைமை இப்படியிருக்க நம் கண் முன்னால், அடக்கம் செய்யப்பட்ட மகான்கள் அவ்லியாக்களையெல்லாம் சொர்க்கவாசிகள் என்று எவ்வாறு கூறமுடியும்? அவ்வாறு கூறுவதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது? என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஷெய்கிடம் பைஅத் எடுத்தால் போதும். நம்முடைய தவறுகளெல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும். நாம் சுவனம் சென்று விடுவோம் என்று எதை வைத்துச் சொல்கிறார்கள்?

ஆக, எந்த மனிதராக இருந்தாலும், இறைத்தூதராக இருந்தாலும். நாம் நினைக்கின்ற நல்லடியார்கள், மகான்கள், அவ்லியாக்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய நல்லறங்களை வைத்து சுவனம் செல்ல முடியாது. இறைவனின் அன்பும் அருளும் இருந்தால் மட்டுமே சுவனம் புக முடியும். அவ்வளவு ஏன்? சுவனத்தின் வாசலில் நிற்க வேண்டுமென்றால் கூட அதற்கும் இறைவனின் அருள் கிடைக்க வேண்டும். சுவனத்தின் வாடையை நுகர வேண்டுமென்றாலும் கூட அதற்கும் இறைவனின் அருள் வேண்டும்.

ஆனால் நம்முடைய முஸ்லிம் சமுதாயம் மகான்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக யாரோ எழுதி வைத்த கட்டுக் கதைகளையெல்லாம் நம்பி தங்களுடைய அறிவை அடக்கு வைக்கின்ற காட்சியைப் பார்க்கிறோம். மகான்களெல்லாம் அல்லாஹ்வுடன் இரண்டறக் கலந்து விடுவார்கள்; அவனுடன் ஒன்றி விடுவார்கள்; அவ்வாறு ஒன்றி விட்டால் அவர்களுக்கு வேதனை, வலி போன்ற எதுவுமே தெரியாது என்றெல்லாம் கூறுவதைப் பார்க்கலாம்.

ஒரு நாள் மகான் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தாராம். அப்போது அவரது எதிரே வந்த ஒரு அழகான பெண்ணைக் கண்டதும் அவளைக் கட்டியணைத்தாராம். இதனைப் பார்த்த மக்கள், “என்ன இது? மகானே இப்படிப்பட்ட காரியத்தைச் செய்கிறாரே!” என்று சொன்னார்கள்.

அவர் சிறிது தூரம் சென்ற பின் கொல்லர் பட்டறையில் துருத்தியில் இருந்த, கொழுந்து விட்டெரியக்கூடிய தீயை அள்ளி அணைத்து முத்தமிட்டாராம். பிறகு அந்த மக்களைப் பார்த்து, “பார்த்தீர்களா? எனக்கு தீயும் பெண்ணும் ஒன்று தான். இரண்டையும் நான் வித்தியாசமாகப் பார்க்கவில்லை. அந்த மாதிரி நாங்கள் மாறிவிட்டோம். நாங்கள் வேறு படைப்புகள்” என்று கூறினாராம். இதைப் பார்த்து அந்த மக்கள் மகான்களுடைய மகிமையை, மதிப்பை, அந்தஸ்தைப் புரிந்து கொண்டார்களாம்.

இந்தக் கதை உண்மையா? இது குர்ஆன், ஹதீசுக்கு ஒத்து இருக்கிறதா? அல்லது இதில் ஏதேனும் லாஜிக் இருக்கிறதா? இந்த மாதிரி யாரும் யாருக்கு வேண்டுமானாலும் கதை எழுதலாம். நிஜத்தில் ஒரு மனிதன் நெருப்புக்கு முத்தம் கொடுக்க முடியுமா? ஓர் அந்நியப் பெண்ணைக் கட்டியணைத்தால் அவன் எப்படிப்பட்ட காமுகனாக இருப்பான்? ஆனால் இப்படியெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள்.

ஆனால் நபிகளார், “நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். நானும் சில குறைகள் உடையவனாகத் தான் இருக்கிறேன். உங்களிடத்தில் தவறுகள் நிகழ்வதைப் போலவே என்னிடத்திலும் தவறுகள் நிகழும். என்னாலும் உள்ளத்தை ஒருமுகப்படுத்த முடியாது. இறைவனுடன் ஒன்றாகக் கலக்க முடியாது. நான் அல்லாஹ்வின் தூதர் தான்; நான் செய்வது அழைப்புப் பணி தான். ஆனால் இதற்குக் கூட எனக்கு சொர்க்கம் கிடைக்குமா என்று தெரியாது. இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே சுவனம் கிடைக்கும்’ என்று சொன்னார்கள்.

ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் “என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், “சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன்என்றேன். அதற்கு “வேறு ஏதேனும் (கோருவீராக!)என்றார்கள். நான் “(இல்லை) அதுதான்என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக!என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 842

இந்த ஹதீஸில் நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன? நபியவர்கள், ரபீஆவைப் பார்த்து, “உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நீ கேள். அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்’ என்று தான் கேட்கிறார்கள். ஆனால் அவரோ, எனக்கு மறுமையில் சுவனத்தில் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கேட்கிறார்.

அதற்கு நபியவர்கள், “அதை என்னால் செய்ய முடியாது. நான் இறைவனின் தூதராக இருந்தாலும் மறுமையில் அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்குத் தான். எனக்கு மறுமையில் எந்த ஒரு அதிகாரமும் கிடையாது. நீ என்னுடன் இருக்க வேண்டுமானால் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடு’ என்றுதான் கூறுகிறார்களே தவிர, நான் மிகப்பெரிய அடியான்; நான் அல்லாஹ்வின் தூதர்; அதனால் மறுமையில் நீ என்னுடன் இருப்பதற்கு நான் உனக்கு அனுமதி தருகிறேன். அந்த அதிகாரம் எனக்கு இருக்கிறது. நான் அல்லாஹ்விடம். நீ என்னுடன் இருப்பதற்குப் பரிந்துரை செய்கிறேன் என்று சொன்னார்களா? இல்லையே! தம்மால் இதைச் செய்ய முடியாது என்று தான் கூறுகிறார்கள்.

ஆனால் அவ்லியாக்கள் பார்த்தாலே நம்மை சொர்க்கத்திற்குக் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்று  நாம்  நம்புகிறோம். அவர்களிடம் முரீது தீட்சை வாங்கினால் அல்லது அவர் ஒரு சீட்டை எழுதித் தந்தால் (அதற்கு சொர்க்கத்துச் சீட்டு என்று பெயராம்) நாம் மரணிக்கும் போது அந்தச் சீட்டையும் நம்முடன் சேர்த்தே அடக்கினால் முன்கர், நகீர் எனும் மலக்குமார்கள் நம்மிடம் வந்து அந்தச் சீட்டைப் பார்த்து விட்டு, “இவரை விட்டுவிடுங்கள். நோவினை செய்யாதீர்கள்’ என்று சொல்வார்களாம். இப்படி கட்டுக் கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். நாமும் அதைப் பற்றி கொஞ்சமும் சிந்திப்பதேயில்லை.

ஆக மொத்தத்தில் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும் போது நபியவர்கள் எல்லா நிலையிலும் மனிதத்தன்மை உடையவர்களாக இருந்தார்களே தவிர மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

அடுத்ததாக, நபியவர்களாகட்டும், மற்ற எந்த நபிமார்களாகட்டும், அல்லது மகான்கள், அவ்லியாக்களாகட்டும். யாராக இருந்தாலும் அவர்கள் இறைவனுடைய பணிகளான, குழந்தை பாக்கியம் தருவது, உணவு வழங்குவது, நோயைத் தீர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு சக்தியில்லை என்பதை நாம் விளங்கிக் கொண்டோம்.

அல்லாஹ் மனிதனுக்கென்று சில தகுதிகளை, அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றான். ஆனால் மற்ற எல்லா மனிதர்களும் செய்வது போலவே அவர்களும் செய்வார்கள். நமக்குப் பொருளாதாரம் அதிகமாக இருந்தால் நாம் யாருக்கேனும் கொடுத்து அவனது கஷ்டத்தை போக்கலாம். இந்த சக்தியை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கிறான்.

அல்லாஹ் நமக்கு மருத்துவத்தைக் கற்றுத் தந்தால் நாம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். இந்த மாதிரியான சில அதிகாரத்தை நமக்கு இறைவன் தந்திருப்பதைப் போன்றே நபிமார்களுக்கும் வழங்கியிருக்கிறான். அவரவருக்கு அல்லாஹ் எதைக் கொடுத்தானோ அதைச் செய்வார். அவ்வளவு தானே தவிர, இறைவன் மட்டும் தான் செய்வான் என்ற காரியங்களில் எந்த அதிகாரமும் நபிமார்கள் உட்பட யாருக்கும் கொடுக்கப்படவேயில்லை. குழந்தையைக் கொடுத்தல் என்கிற அதிகாரத்தை அல்லாஹ் யாருக்காவது கொடுத்திருக்கிறானா என்றால் யாருக்கும் அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை.

மருந்து, மாத்திரை, ஊசி, வேறு ஏதாவது ஒரு வகையான மருத்துவ முறை இல்லாமல் குணப்படுத்துகின்ற சக்தியை அல்லாஹ் யாருக்காவது கொடுத்திருக்கிறானா என்றால் அதுவும் இல்லை.

நோயைக் குணப்படுத்துகின்ற சக்தியை மனிதனுக்கு எப்படி கொடுத்திருக்கிறான்? ஒரு மாத்திரை மூலமாக, அல்லது ஒரு மூலிகை மூலமாக, அல்லது தைலம் மூலமாக, அக்குபஞ்சர் என்ற ஒரு ஊசி மூலமாக இப்படி ஏதாவது ஒரு முறையில் தான் நாம் ஒரு மனிதரைக் குணப்படுத்தும் ஆற்றலைத் தந்திருக்கிறானே தவிர எந்த ஒரு புறச்சாதனமும் இல்லாமல் கையைக் கட்டிக் கொண்டு, உனக்கு தலைவலி சரியாகிவிடும், வயிற்றுவலி சரியாகி விடும் என்று சொல்லி குணப்படுத்த முடியுமா? அதுபோன்ற அதிகாரத்தை யாருக்கேனும் தந்திருக்கானா? இல்லை.

இப்படி எந்த புறச்சாதனமும் இல்லாமல் இறைவன் மட்டும் தான் குணப்படுத்துவான். ஏதேனும் ஒரு சாதனத்தை, பொருளைப் பயன்படுத்தி குணப்படுத்தும் ஆற்றலைத் தான் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறானே தவிர இவற்றைப் பயன்படுத்தாமல் ஒரு நோயைக் குணமாக்குகின்ற சக்தியை நபிமார்கள், மகான்கள் உள்ளிட்ட யாருக்கும் கொடுக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

நபி மீது பொய்!     நரகமே தங்குமிடம்!

நபியின் பிறப்பு அற்புதங்கள்

அண்மையில் முஸ்லிம் இதயக்குரல் எனும் மாத இதழ், “அண்ணலின் பிறப்பே அற்புதம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. அதில் நபியவர்களின் பிறப்பு எந்தெந்த வகையில் அற்புதமாகிறது என்பதை விலாவாரியாக (?) விளக்கியிருந்தார்கள். நபிகளாரின் பிறப்பே ஓர் அற்புதம் என்பதை நிறுவ, பல பொய்யான வரலாற்றுத் தகவல்களையும் கட்டுக் கதைகளையும் கட்டுரை முழுக்க நிரப்பியிருந்தனர்.

உதாரணத்திற்கு சில…

நபிகளாரின் தாயார் ஆமினா அவர்கள் கருவுற்ற நேரத்தில் கனவில் ஆதம் (அலை) முதல் ஈஸா நபி (அலை) அவர்கள் வரை ஒவ்வொரு மாதமும் பல நபிமார்கள் ஒவ்வொருவராக வந்து நபிகள் நாயகம் பிறப்பதைப் பற்றி விதம் விதமாக நற்செய்தி சொன்னார்களாம்.

ஆமினா அவர்களுக்குப் பிரசவம் பார்க்க பிர்அவ்னின் மனைவியும் மர்யம் (அலை) அவர்களும் வந்திருந்தார்களாம்.

பிரசவ வேதனையின்றி இலகுவாக கத்னா செய்யப்பட்டு, சஜ்தா செய்தவராக, சுட்டு விரலை வானை நோக்கி உயர்த்தியவர்களாக நபிகள் நாயகம் பிறந்தார்களாம். இது மாத்திரம் அல்ல. பிறந்த பொழுதினிலே அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா என்று பேசியவாரே நபியவர்கள் வெளிவந்தார்களாம். கூடுதல் தகவல் நபிகள் நாயகத்தோடு சேர்த்து மொத்தம் பத்து பேர் குழந்தைப் பருவத்திலேயே பேசியிருக்கிறார்களாம்.

அது சரி!

இவ்வாறு நபியவர்களின் பிறப்பு பல வகையில் அற்புதமாகிறது என்று பல புழுகு முட்டைகளை இறக்கி வைத்தவாறு இவற்றில் எதற்கும் ஆதாரத்தையும் குறிப்பிடாமல் கட்டுரையைத் துவக்குகிறார்கள். ஒருவேளை கட்டுரையாளர் சிறு வயதில் தாம் கேட்ட, கேள்விப்பட்ட கதைகள் அனைத்தையும் இதில் எழுதியிருப்பார் போலும். அந்த அளவுக்குப் பல பொய்யான வரலாற்றுத் தகவல்களை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதில் இவர்கள் கூறிய எந்த ஒன்றுக்கும் தகுந்த எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

நபிகள் நாயகம் ஸஜ்தா செய்தவர்களாக, சுட்டுவிரலை வான் நோக்கி உயர்த்தியவர்களாகப் பிறந்தார்கள் என்ற தகவலை அபூநுஐம் அவர்கள் தலாயில் எனும் நூலில் பதிவு செய்துள்ளதாக இமாம் சுயூத்தி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (கஸாயிஸுல் குப்ரா, பாகம் 1, பக்கம் 82)

ஆனால் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அபூபக்கர் இப்னு அபீ மர்யம் மற்றும் யஹ்யா ஆகியோர் மிகவும் பலவீனமானவர்கள் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்கள். எனவே இது ஏற்கத்தக்கதல்ல.

கத்னா செய்யப்பட்டு நபிகள் நாயகம் பிறந்தார்கள் என்று அறிவிக்கப் படுபவற்றில் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதை இப்னுல் கய்யூம் (ஜாதுல் மஆத், பாகம் 1, பக்கம் 80) போன்ற பல அறிஞர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் குழந்தைப் பருவத்தில் பேசினார்கள் என்ற இவர்களது புழுகுதலுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் குழந்தைப் பருவத்தில் பேசிய நபர்களை நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (நூல்: புகாரி 3436)

இவர்களைத் தவிர வேறு யாரும் தொட்டில் பருவத்தில் பேசவில்லை என்று நபிகளார் கூறியிருக்க மொத்தம் பத்து பேர் தொட்டில் பருவத்தில் பேசியிருக்கிறார்கள் என்றும் நபிகள் நாயகமும் அவர்களில் ஒருவர் என்பதும் இந்த நபிமொழிக்குத் தெளிவாக முரண்படக் கூடியதாகும். தம்மை அந்த பட்டியலில் இணைத்துச் சொல்லாததே நபிகளார் குழந்தைப் பருவத்தில் பேசவில்லை என்பதற்குச் சான்றாகும்.

தன்னை வரம்பு மீறிப் புகழக்கூடாது என்ற நபிகளாரின் உத்தரவை மீறி இவ்வாறு பல கற்பனைக் கதைகளை, பொய்யான செய்திகளை போகிற போக்கிலே குறிப்பிட்டு விட்டு நபிகளாரின் பிறப்பு அற்புதம் என்று நிலைநாட்டப் பார்க்கிறார்கள். நபிகளாரின் பிறப்பு அற்புதம் என்பதை நிறுவ ஹதீஸ்களின்   பெயரால் அவர்கள் கூறியிருந்த ஒரு பொய்யான செய்தியை இங்கு காண்போம்.

நபியவர்களின் பிறப்பு ஓர் அற்புதம் என்பதை நிறுவ ஹதீஸின் பெயரால் அவர்கள் முன் வைக்கும் ஒரு சான்று நபியவர்கள் நம்மை போன்ற மனிதரல்ல. மாறாக, நபியவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற அவர்களது வாதமாகும். இவ்வொளியைத் தான் இறைவன் முதன்முதலாகப் படைத்தான் என்று கூறுவதன் மூலம் அண்ணலின் பிறப்பு அற்புதம் என்கிறார்கள். தங்களது வாதத்திற்கு ஆதாரமாகப் பின்வருமாறு ஒரு செய்தி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் முதன்முதலில் எப்பொருளைப் படைத்தான்?” என ஜாபிர் ரலி அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “நிச்சயமாக ஜாபிரே! சர்வ படைப்புகளுக்கு முன்பாக உமது நபியின் நூர் எனும் ஒளியை அல்லாஹ் தனது ஒளியிலிருந்து படைத்தான்” என்றார்கள்.

நூல்: “முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்”

இது ஒரு பொய்யான, நபிகள் நாயகத்தின் பெயராலும் மற்றும் இமாம் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். ஏனெனில் இப்படி ஒரு செய்தி முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் எனும் நூலில் எங்கும் கிடையாது. ஏன் இமாம் அப்துர் ரஸ்ஸாக் அவர்களின் வேறு எந்த நூலிலும் கிடையாது. இதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.

வானவர்கள் ஒளியிலிருந்து படைக்கப்பட்டார்கள் எனும் முஸ்லிமில் இடம் பெறும் செய்தியைப் பதிவு செய்து விட்டு அல்பானீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

ஜாபிரே! சர்வ படைப்புகளுக்கு முன்பாக உமது நபியின் நூர் எனும் ஒளியை அல்லாஹ் தனது ஒளியிலிருந்து படைத்தான் என்று மக்களின் நாவுகளில் பிரபலமாக அறியப்பட்ட செய்தி பொய்யானது என்பது இந்தச் செய்தியின் முலமாக தெரிகிறது. நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியும் தவறானது என்பதும் உறுதியாகிறது. ஏனெனில் இந்தச் செய்தி வானவர்கள் மட்டும் தான் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள். ஆதமோ அவர்களது சந்ததிகளோ ஒளியால் படைக்கப்படவில்லை என்று இந்தச் செய்தி தெளிவாக எடுத்துரைக்கின்றது. எனவே இந்த செய்தியின் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்காதே விழிப்புணர்வுடன் இரு.

நூல்: அஸ்ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா, பாகம் 1, பக்கம் 457

இமாம் சுயூத்தி அவர்களிடம் நபிகள் நாயகம் ஒளியால் படைக்கப்பட்டதாக செய்தி உள்ளதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தாங்கள் குறிப்பிட்ட செய்திக்கு நம்பத்தகுந்த எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லை என்று பதிலளித்துள்ளார்கள்.

இமாம் சுயூத்தி அவர்களின் அல்ஹாவி லில் ஃபதாவா, பாகம் 1, பக்கம் 313

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதன் முழுமையைக் கூறினால் இதைப் படிக்கின்ற எவரும் இது இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகம் கொள்ள மாட்டார் என்று சென்ற நூற்றாண்டு அறிஞரான அஹமத் பின் ஸித்தீக் அல் கிமாரி என்பவர் கூறியதாக தகியுத்தீன் என்பவர் கூறுகிறார்.

அல்ஹதியத்துல் ஹாதியா, பாகம் 1, பக்கம் 88

பாகிஸ்தானைச் சேர்ந்த ‘தர்ஜுமானுல் ஹதீஸ்’ என்ற மாத இதழின் ஆசிரியர், இஹ்ஸான் இலாஹி ழஹீர் என்ற அறிஞர் வரிக்கு வரி பார்வையிட்டு இவர்கள் கூறும் இந்தக் கதை முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் நூலில் இல்லை என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.

இவ்வளவு அறிஞர்கள் இப்படி ஒரு செய்தி அறவே இல்லை என்று தெளிவுபடுத்திய பின்னரும் இவர்கள் கூசாமல் இப்பொழுதும் புழுகுகிறார்கள் எனில் இந்த அறிவீனர்களை என்னவென்பது?

முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றது. ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாஹ்வுக்கும், ஆமீனாவுக்கும் மகனாக நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

ஈஸா (நபி) தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ, அப்படித்தான் நபி (ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபி (ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இது தான் குர்ஆன், ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

இன்னும் அவன் தான் மனிதனை (ஒரு குறிப்பிட்ட) நீரிலிருந்து படைத்தான்.

அல்குர்ஆன் 25:54

அவனை நாம் விந்திலிருந்து படைத்தோம் என்பதை மனிதன் அறிய வேண்டாமா?

அல்குர்ஆன் 36:77

இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப் பொருளாக விந்துத் துளியையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணால் படைக்கப்பட்டார்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்குத் தெளிவு படுத்துகின்றன.

களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அவன்) துவக்கினான்.

அல்குர்ஆன் 32:7

அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து, பின்னர் விந்திலிருந்து படைத்தான்.

அல்குர்ஆன் 35:11

இது போன்ற ஏராளமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

இதற்கு மாற்றமாக “முதலில் அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்தான். அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புக்களையும் படைக்கத் துவங்கினான்” என்று கூறுவது திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுவதாகும்.

களிமண்ணிலிருந்து மனிதப் படைப்பை (அல்லாஹ்) துவக்கினான்.

அல்குர் ஆன் 32:7

இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராயந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே “களிமண் தான்” என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களிமண் தான் மனிதப் படைப்பின் துவக்கம், ஆரம்பம் என்று அல்லாஹ் கூறிக் கொண்டிருக்க, “இல்லை! முஹம்மது (ஸல்) அவர்களின் ஒளி தான் ஆரம்பம்” என்று கூறுவது அல்லாஹ்வுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித்தனமாகவும் தோன்றவில்லையா? (நவூதுபில்லாஹ்)

அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும், நபி (ஸல்) அவர்கள் “ஒளியால் படைக்கப்பட்டார்கள்” என்று கூறவே இல்லை. நபி (ஸல்) அவர்களும் “தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான்” என்று கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படவில்லை.

மேலும் பின்வரும் செய்தியை சிந்தித்து பார்த்தால் நபியவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளார்கள் என்று இவர்கள் கூறும் செய்தி பொய்யானது என்பதை அறியலாம்.

இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஓளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ்ப்புறத்திலும் எனக்கு முன்னும், பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக!என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆ செய்பவர்களாக இருந்துள்ளார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் ஒளியால் உருவாக்கப்பட்டிருந்தாலோ, அவர்களே ஒளியாக இருந்திருந்தாலோ, இந்தப் பிரார்த்தனையை அடிக்கடி செய்திருக்க வேண்டியதில்லை. ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது இதைச் சொல்பவர்களின் நிலை என்ன?

நபியவர்களின் பிறப்பை அற்புதமாக்க இவர்கள் கூறும் செய்திக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

—————————————————————————————————————————————————————-

குளிர் தரும் போதனைகள்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

சத்தியத்தை விளங்கிக் கொள்வதற்கு ஏராளமான சான்றுகள் வானங்கள் மற்றும் பூமி முழுவதும் நிறைந்து இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று நம்மைச் சுற்றி நிகழும் பருவ மாற்றம் ஆகும். மழை, வெயில், குளிர் என்று மாறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலை மாற்றத்தைப் பற்றி முறையாக, சரியாகச் சிந்தித்தால் சத்தியத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் பரம்பொருளான இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும், அவனுக்கு மட்டுமே படைப்பினங்களின் மீது அபரிதமான ஆற்றல், பரிபூரணமான அதிகாரம் இருப்பதையும் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இன்னும் அவனால் அளிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கமே மண்ணுக்கேற்ற, மனிதனுக்கேற்ற மார்க்கம் என்பதையும் புரிந்து கொள்ளலாம். இந்த வகையில், குளிர் காலத்தைப் பற்றி யோசிக்கும் போதும் அதிலும் நமக்கு பல்வேறான போதனைகள் படிப்பினைகள் ஒளிந்து இருக்கின்றன. அவற்றை மார்க்கம் கூறும் விதத்தில் தெரிந்து கொள்வோம்.

குளிரிலிருந்து காப்பாற்றும் கால்நடைகள்

மனித இனத்தின் வாழ்க்கை சீரும் சிறப்பாக இருப்பதற்காகவே பூமியில் இருக்கும் அனைத்தையும் படைத்ததாக வல்ல இறைவன் திருமறையில் தெரிவிக்கிறான். இவ்வகையில், கால்நடைகளை நமக்காகப் படைத்ததாகவும் நம்மைக் குளிரிலிருந்து பாதுகாக்கக்கூடியவை அவற்றில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறான். இதன் மூலம், நமது இயல்பான வாழ்க்கையை பாதிக்கும் வகையில் குளிர் அதிகரிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திய இறைவன் அவ்வாறான நேரத்தில் அதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பையும் வசதியையும் வழங்கியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  இன்னும், அவன் நம்மீது கொண்டிருக்கும் இரக்கம், கருணையையும் அதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். மாலையில் ஓட்டிச் செல்லும் போதும், காலையில் ஓட்டிச் செல்லும் போதும், அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது. பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுள்ளவன். (அல்குர்ஆன் 16:5-7)

இறையாற்றலைப் புரியவைக்கும் பருவமாற்றம்

எல்லாப் பொருட்களிலும் இடங்களிலும் குளிரும், வெப்பமும் இருக்கின்றன. அதே சமயம் அவை கலந்திருக்கும் விகித அளவு கூடுதல் குறைவு கொண்டு வேறுபட்டதாக இருக்கும். குளிரைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்போது அதை வெப்பமான பொருள், வெப்பமான பகுதி என்று கூறுகிறோம். வெப்பத்தைவிட குளிர்ந்த தன்மை அதிகமாக இருக்கும் போது குளிர்ந்த பொருள் குளுமையான பகுதி என்று சொல்கிறோம்.

இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. கால சூழ்நிலையை மாற்றும் இறைவன் நாடினால், நம்மால் பார்க்கப்படும் பொருளை நாம் நினைக்கும் தன்மையில் இருப்பதாக மட்டும் வைத்து விட்டு அதன் ஒட்டுமொத்த தன்மையையும் அவனால் மாற்ற முடியும். நமது புலன்களுக்கு வெப்பமாகத் தெரியும் பொருளைக் குளிர்ந்ததாகவும், குளிர்ந்தததாக தெரியும் பொருளை வெப்பமானதாகவும் மாற்றும் வல்லமை ஆற்றல் அல்லாஹ்விற்கு இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. இதைப் பின்வரும் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்காதவற்றையும் உங்களுக்குத் தீங்கும் தராதவற்றையும் வணங்குகின்றீர்களா?”  என்று (இப்ராஹீம் நபி) கேட்டார். “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.) “நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!என்றனர். “நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடுஎன்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

அல்குர்ஆன் 21:66-70

இறை மறுப்பாளர்கள் மூட்டிய நெருப்பு அவர்களின் பார்வைக்கு சுட்டுப் பொசுக்கும் தன்மை கொண்டதாகத் தெரிந்தாலும் அதன் உண்மையான தன்மை மாற்றப்பட்டுவிட்டது. அதைக் குளிர்ந்த தன்மை கொண்டதாக அல்லாஹ் மாற்றிவிட்டான்.

இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம், குளிர் அதிகமாக இருக்கிறது என்று தினமும் தண்ணீரை சூடேற்றி வைத்துக் குளிக்கிறோம். ஜலதோசம் பிடித்துவிடக்கூடாது என்று வெந்நீரை குடிக்கிறோம். இப்படிப் பலவீனமாக இருக்கும் நாம் இதைப் புரிந்து கொண்டால் இறைவனின் ஆற்றலை அலட்சியப்படுத்திவிட்டு படைப்பினங்களிடம் உதவி தேடிப் படைபெயடுக்க மாட்டோம். ஒட்டுமொத்த இடத்தையும் நடுங்க வைக்கும் குளிராக மாற்றாமல் நம்மைக் காப்பாற்றிய இறைவனின் அருட்கொடையை பொருட்படுத்தாமல் அவன் மீது அச்சமில்லாமல் வாழமாட்டோம்.

உயிரைப் பறிக்கும் கடுங்குளிர்

இறைவன் ஒட்டுமொத்த மனித இனத்தையும் ஒரேயடியாக அழிப்பதற்கு இந்தப் பூமிக்கு நேரடியாக இறங்கி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அல்லது அதற்காக வானவர்களைப் படையெடுத்து அனுப்ப வேண்டிய தேவையும் இல்லை. நம்மைச் சுற்றியிருக்கும் குளிரைக் கொஞ்சம் கூட்டினால் போதும். மறுகணம் இங்கு எந்தவொரு ஜீவராசியும் இருக்காது. இதை மற்ற கோள்களுக்கும் பூமிக்கும் இருக்கும் வேறுபாட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

பூமியில் மட்டும்தான் ஜீவராசிகள் வாழ்வதற்கு ஏற்ப வெயில், குளிர், காற்று அனைத்தும் சரியான விதத்தில் இருக்கின்றன. குளிரைக் குறிப்பிட்டுச் சொல்வதெனில், சூரியனுக்கு வெகுதொலைவில் இருக்கும் கோள்களில் மனிதனுடைய இரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு கடுமையான குளிர் இருப்பதால் அங்கு மனித இனம் வாழ்வது சாத்தியமற்றது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதை ஏக இறைவனே தமது திருமறையின் மூலம் நமக்குச் சொல்லிவிட்டான். மேலும், இவ்வாறு பூமியில் நிம்மதியான வாழ்விடத்தைக் கொடுத்ததற்காக நன்றி செலுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறான்.

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தினோம். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:10

இனிமேலாவது, மற்ற கோள்களில் இருப்பது போன்ற கடுமையான குளிரைக் கொடுத்து நம்மை ஒட்டுமொத்தமாக அழிக்காமல் வைத்திருக்கும் ஏக இறைவனை வணங்கி அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக நாம் இருக்க வேண்டும். அவன் சொன்னபடி வாழ்பவர்களாக இருக்கவேண்டும். நமது வாழ்நாளில் குளிரைச் சந்திக்கும் நாழிகைகளில் இதன் மூலமும் இறைவன் நம்மை தண்டிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் போதனையை, பேருண்மையைப் பின்வரும் செய்தியைப் படிப்பதன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் என் சமுதாயத்தாரிடையே புறப்பட்டு வந்து, நாற்பது வரை தங்கியிருப்பான். (நாற்பது நாட்களா, அல்லது நாற்பது மாதங்களா, அல்லது நாற்பது ஆண்டுகளா என்பது எனக்குத் தெரியவில்லை.) அப்போது அல்லாஹ், மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்களை அனுப்புவான். அவர்கள் (சாயலில்) உர்வா பின் மஸ்ஊத் அவர்களைப் போன்றிருப்பார்கள். அவர்கள் தஜ்ஜாலைத் தேடி வந்து அழிப்பார்கள். பிறகு மக்கள் ஏழாண்டுகள் தங்கியிருப்பார்கள். அன்று எந்த இருவருக்குமிடையேயும் பகையுணர்வு இருக்காது. பிறகு அல்லாஹ் ஷாம் (சிரியா) நாட்டின் திசையிலிருந்து குளிர்ந்த காற்று ஒன்றை அனுப்புவான். அப்போது பூமியின் மீது தமது உள்ளத்தில் கடுகு மணியளவு நன்மை, அல்லது இறைநம்பிக்கை (ஈமான்) உள்ள எவரது உயிரையும் அது கைப்பற்றாமல் விட்டுவைக்காது. எந்த அளவுக்கென்றால், உங்களில் ஒருவர் மலைக்கு நடுவே நுழைந்து விட்டாலும் அங்கும் அது நுழைந்து அவரது உயிரைக் கைப்பற்றும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (தீமைகளை நோக்கி) விரைந்து செல்வதில் பறவைகளையும் குணத்தில் மிருகங்களையும் ஒத்த தீய மனிதர்களே எஞ்சியிருப்பார்கள். அவர்கள் எந்த நன்மையையும் அறியவுமாட்டார்கள். எந்தத் தீமையையும் மறுக்கவுமாட்டார்கள். அப்போது அவர்களிடையே ஷைத்தான் காட்சியளித்து, “நீங்கள் (எனக்குப்) பதிலளிக்க மாட்டீர்களா?” என்று கேட்பான். அந்த மக்கள், “நீ என்ன உத்தரவிடுகிறாய்?” என்று கேட்பார்கள். அப்போது ஷைத்தான், சிலைகளை வழிபடுமாறு உத்தரவிடுவான்.

இவ்வாறு அவர்கள் (சிலைவழிபாடு செய்துகொண்டு) இருக்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் தாராளமானதாய் இருக்கும். அவர்களின் வாழ்க்கை செழிப்பானதாக இருக்கும். பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அதைக் கேட்கும் ஒவ்வொருவரின் கழுத்தும் ஒரு பக்கம் சாயும்; மறுபக்கம் உயரும். (அதாவது சுய நினைவிழந்து மூர்ச்சையாகி விடுவார்கள்.) தமது ஒட்டகத்தின் தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருக்கும் மனிதர் ஒருவரே அந்தச் சப்தத்தை முதலில் கேட்பார். உடனே அவர் மூர்ச்சையாகி (விழுந்து) விடுவார். (இதையடுத்து) மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவர்.

நூல்: முஸ்லிம் 5635

உலகம் ஒட்டுமொத்தமாக அழியும் போது இந்தப் பூமியின் மீது முஃமின்களில் ஒருவர் கூட இருக்க மாட்டார். மோசமான தீமையான காரியங்களைச் செய்யும் மனிதர்களே அப்போது இருப்பார்கள். இவ்வாறு முஸ்லிம்களை இங்கு இல்லாமல் ஆக்குவதற்கு அல்லாஹ் ஷாம் நாட்டு திசையிலிருந்து குளிர்ந்த காற்றை அனுப்புகிறான் என்று முன்சென்ற செய்தியில் தெரிந்துகொண்டோம்.

இப்போது நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும், உலக அழிவின் அடையாளங்கள் நடக்கும் நேரத்தில் அனுப்பும் அதே குளிர்ந்த காற்றை அல்லாஹ்வினால் இப்போது அனுப்ப முடியாதா? அல்லது தற்போது இருக்கும் குளிரை அதுபோன்று மாற்றமுடியாதா? யோசித்துப் பாருங்கள். ஆனால், அவனை ஏற்றுக் கொள்ளாமல் அவனுக்கு மாறு செய்தாலும் அவ்வாறு அழிக்காமல் அவகாசம் அளிக்கிறான். இதற்குப் பிறகாவது, அனைவரும் இதை உணர்ந்து சரியான முறையில் செயலாற்ற வேண்டும்.

தனித்துவமான இஸ்லாமிய மார்க்கம்

இஸ்லாமிய மார்க்கம் இறைவனால் கொடுக்கப்பட்டதாக இருப்பதால் அது தனித்துவம் கொண்டதாக இருக்கிறது. இந்த மார்க்கம் மனித சமுதாயத்துக்கு நல்லதாக இருப்பதை ஏவும்; தீயதாக இருப்பதைத் தடுக்கும். மனிதர்களின் நலன் விரும்பும் மார்க்கம் இது மட்டுமே என்பதைப் பருவ மாற்றங்களின் போது இந்த மார்க்கத்தில் இடப்பட்டுள்ள கட்டளைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்தக் குளிர் காலத்திலும் மனிதர்களின் சூழ்நிலையைக் கவனித்து சட்டதிட்டங்களில் சிறப்பான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டை விட்டு வெளியே வந்தால் பற்கள் தட்டச்சு செய்யத் துவங்கிவிடும்; குளிரால் உடல் ஆட்டம் போட ஆரம்பித்துவிடும்; நோய்நொடிகள் வந்துவிடும் என்ற மோசமான நிலையிலும் ஒருவர் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று இஸ்லாத்தில் கூறப்படவில்லை. நமக்குத் துன்பத்தை, துயரத்தைத் தரும் வகையில் குளிர் வாட்டி வதைக்கும் போது வீட்டில் தொழுது கொள்ளலாம்.

இன்னும் சொல்வதெனில், தொழுவதற்கு கண்டிப்பாகக் குளிக்க வேண்டும் என்ற குளிப்பு கடமையான நிலையில் இருப்பவர்கள்கூட அதற்குப் பகரமாக தயம்மம் செய்து கொள்ளலாம். குளிர் தருணங்களை சமாளிக்க நமக்குத் தரப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்பதை மெய்ப்படுத்துகின்றன. இதற்குரிய சில ஆதாரங்களைக் காண்போம்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது “அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்‘ (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு “(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் “ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1240, 1241, 1242

ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் “அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்) சொன்ன (பின்வரும்) செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார்கள். (அம்மார் கூறினார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு தேவை நிமித்தம் (படைப்பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளியலுக்குத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே!என்று கூறிவிட்டுத் தம் கரங்களால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் தமது இடக் கரத்தால் வலக் கரத்தையும் இரு புறங்கைகளையும் முகத்தையும் தடவலானார்கள்.

நூல்: முஸ்லிம் 601

சொர்க்கத்தில் சேர்க்கும் குளிர்நேரத் தொழுகைகள்

குளிர் நிறைந்த நாட்களில் தொழுவதற்காகத் தயாராவதில் தான் நமக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தொழுவதற்கே ஒட்டுமொத்தமாக விதிவிலக்கு வழங்கப்படவில்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் தொழுவதற்கு சோம்பலாக இருக்கும். ஷைத்தான் நம்மை மற்ற நாட்களில் ஏமாற்றுவதைவிட இதுபோன்ற நாட்களில் கொஞ்சம் கூடுதலாகவே இறைவனை நினைப்பதை விட்டும் நம்மைத் தடுக்க முயற்சிப்பான். ஆகவே, குளிரைச் சாக்குபோக்காகச் சொல்லிக்கொண்டு தொழுகையை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் நம்மை ஆர்வமூட்டுவதற்காகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அற்புதமான நற்செய்தியை நவின்றுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பகலின் இரு முனைகளிலுள்ள ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இரு குளிர் நேரத் தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 1117

குளிர்காலத்திலும் சமுதாயப்பணி

திருக்குர்ஆன் படிப்பது, அழைப்புப்பணி செய்வது, பிறருக்கு உதவுவது, தீமைக்கு எதிராகக் களமிறங்குவது என்று மற்ற மாதங்களிலே நற்செயல்களில் கவனத்தோடு இருப்பவர்கள் குளிர்காலத்திலும் இவ்வாறு இருக்கவேண்டும்.

நாள்தோறும் நிறைவேற்றும் மார்க்கக் காரியங்களை மொத்தமாக விட்டுவிடாமல் சூழ்நிலைக்குத் தோதுவாக மாற்றி செம்மையாக நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டு, குளிர் அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி, நற்காôரியங்களைச் செய்வதை விட்டும் ஒதுங்கிக் கொள்ளக் கூடாது. இவ்வாறு குளிர்காலமாக இருப்பதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு மார்க்கக் காரியங்களிலும் சமூகப் பணிகளிலும் கவனக்குறைவாக இருப்பவர்கள் பின்வரும் செய்திகளில் இருந்து பாடம் பெறவேண்டும்.

கடும் குளிர் வீசும் காலத்திலும் நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மார்க்கத்திற்காகவும் மக்களுக்காகவும் உழைத்திருக்கிறார்கள்; சமூக நோக்கத்தோடு, தியாகச் சிந்தனையோடு செயல்பட்டுள்ளார்கள் என்பதை படிக்கும்போது குளிரின் பெயரைச் சொல்லி மூலையில் முடங்குபவர்கள் தங்களது நிலையைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யஸீத் பின் ஷரீக் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒரு மனிதர், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து போர்களில் ஈடுபட்டிருப்பேன்; கடுமையாக உழைத்திருப்பேன்என்று கூறினார். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீ அவ்வாறு செய்திருக்கவா போகிறாய்? அகழ்ப்போர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். கடுமையான காற்றும் குளிரும் எங்களை வாட்டிக்கொண்டிருந்தன. (ஹதீஸின் ஒரு பகுதி)

நூல்: முஸ்லிம் 3662

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையை தொழுது முடித்ததும் மதீனாவின் பணியாளர்கள் தண்ணீருள்ள பாத்திரங்களைக் கொண்டு வருவார்கள். அவ்வாறு கொண்டு வரப்படும் ஒவ்வொரு பாத்திரத்தினுள்ளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மூழ்கச் செய்வார்கள். சில வேளைகளில் குளிரான காலை நேரங்களிலும் அதைக் கொண்டு வருவார்கள். அப்போதும் அதனுள்ளே கையை மூழ்கச் செய்வார்கள்.

நூல்: முஸ்லிம் 4646

சொர்க்கமும் நரகமும்

நரகமும் சொர்க்கமும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் தமது திருமறையில் பல இடங்களில் பேசுகிறான். அவற்றைப் பற்றி குறிப்பிடும் போது சொர்க்கத்தில் இருக்கும் இன்பங்கள், நரகத்தில் இருக்கும் தண்டனைகள் போன்றவற்றை மட்டும் சொல்லாமல், அங்கு இருக்கும் காலச்சூழ்நிலையையும் சுட்டிக் காட்டுகிறான்.

சொர்க்கத்தில் கடுமையான குளிரும் இருக்காது; வாட்டி வதைக்கும் வெயிலும் இருக்காது. மாறாக, இரண்டும் சரியான விதத்தில் கலந்து இதமான காலநிலை நிலவும் என்றும், நரகத்தில் குளிர், குளுமை என்ற பேச்சுக்கே இடமில்லை; அங்கு அனல்காற்று வீசிக்கொண்டேயிருக்கும்; நெருப்பாலான வேதனைகள் தயார் செய்யப்பட்டிருக்கும் என்றும் எடுத்துரைக்கிறான்.

அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.

அல்குர்ஆன் 76:12, 13

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாக தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.

இடதுபுறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன? அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர். பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர். “நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது உயிர்ப்பிக்கப் படுவோமா?” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

அல்குர்ஆன் 56:41-48

எனவே, நாம் நரகத்திலிருந்து தப்பித்து, சொர்க்கம் செல்ல வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த உலக வாழ்க்கையில் மட்டுமல்ல! மறுமை வாழ்விலும் நமக்கு வரும் இன்ப துன்பங்களில் கால சூழ்நிலைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நரகத்தில் தள்ளும் காரியங்களை விட்டு விலகி சொர்க்கத்தில் சேர்க்கும் காரியங்களைக் கண்ணும் கருத்துமாகக் கடைபிடிக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் எந்தவொன்றையும் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ அல்லாஹ் படைக்கவில்லை. ஒவ்வொன்றுக்குப் பின்னும் அவை அமைக்கப்பட்டதற்கான காரணம் இருக்கிறது. எனவே, குளிர்காலம் போன்ற பருவ மாற்றத்தின் போது அவற்றை இரசிப்பது, அப்போது நேரும் துன்பங்களிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேடுவது என்று மட்டும் இல்லாமல் அவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் அழகிய போதனைகள் பெற்று நமது வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வதற்கு அது வாய்ப்பாக அமையும். அவ்வாறு வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெறுவதற்கு அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!