ஏகத்துவம் – பிப்ரவரி 2012

தலையங்கம்

உருவாகட்டும் ஊருக்கு ஓர் அழைப்பாளர்

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவக் கொள்கை சென்றடையாத ஊர் இல்லை என்ற அளவுக்கு அபாரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவிற்கு அழைப்பாளர்கள் இல்லை என்பது ஆழ்ந்த கவலையளிக்கக் கூடிய செய்தியாகும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

இந்தக் கட்டளைக்குப் பயந்து தான் நாம் ஏகத்துவக் கொள்கையை ஏற்று அசத்தியத்திலிருந்து விடுபட்டோம்; விடுதலையானோம். இவ்வாறு விடுபடுவதும் விடுதலையாவதும் நமக்கு மட்டும் தானா? நாளை வரக்கூடிய தலைமுறைக்கு இல்லையா?

பொருளாதாரத்தைத் திரட்டுகின்ற நாம், நமக்காக மட்டும் திரட்டுவதில்லை. நாளை வரக்கூடிய நம்முடைய சந்ததிக்கும் சேர்த்துத் தான் திரட்டுகின்றோம். இவ்வுலக வாழ்க்கைக்குக் கொடுக்கக் கூடிய இந்த முக்கியத்துவத்தை மறுமைக்குக் கொடுக்க வேண்டாமா?

இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.

அல்குர்ஆன் 93:4

அல்லாஹ் குறிப்பிடும் இந்த மறுமைக்கு நாம் என்ன முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோம்? பூஜ்யம் என்பது தான் பூரண பதிலாக அமைகின்றது.

ஏகத்துவத்தை நமது சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் அழைப்பாளர்களை உருவாக்குவதற்காகத் தலைமையின் கட்டுப்பாட்டில் இஸ்லாமியக் கல்லூரி, தவ்ஹீத் கல்லூரி போன்றவை இருக்கின்றன.

எங்களூரில் ஏகத்துவம் வளர்ச்சி கண்டிருக்கின்றது; ஆனால் தாயீ தான் இல்லை, தாயீக்களை அனுப்பி வையுங்கள் என்று கொள்கைவாதிகள் கோரிக்கை வைக்கின்றனர். தாயீ – அழைப்பாளர் அனுப்பவில்லை என்றதும் குறைபடுகின்றனர்; கோபப்படுகின்றனர்.

ரமளான் மாதத்தில் தாயீக்களின் தேவையும் தேட்டமும் பன்மடங்காகப் பெருகி விடுகின்றது. அப்போதும் தலைமை கை விரிக்கும் போது அவர்களின் ஆத்திரத்திற்கும் ஆதங்கத்திற்கும் அளவே இல்லை. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் ஒவ்வொரு மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் போதும், இஸ்லாமியக் கல்லூரிக்கு, தவ்ஹீது கல்லூரிக்கு ஆளனுப்பி வையுங்கள் என்று தலைமை ஓயாமால் கூவிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இதைக் கிளைகள் காதில் கேட்டுக் கொள்வதும் இல்லை. உள் வாங்குவதும் இல்லை.

இந்த நிலை நீடித்தால் என்னவாகும்? நாம் வளர்த்த நம்முடைய உயிரினும் மேலான இந்த ஏகத்துவக் கொள்கையை நமது காலத்திலேயே, நம் கண் முன்னாலேயே அழித்து விட்டுப் போக வேண்டியது தான். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

உறுதியாக நூற்று, பின்னர் நூற்றதைத் துண்டு துண்டாக ஆக்கியவளைப் போல் ஆகாதீர்கள்! ஒரு சமுதாயத்தை விட இன்னொரு சமுதாயம் அதிக எண்ணிக்கையில் உள்ளது என்பதற்காக உங்கள் சத்தியங்களை மோசடியாகப் பயன்படுத்தாதீர்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களைச் சோதிக்கிறான். நீங்கள் முரண்பட்டது பற்றி கியாமத் நாளில் அவன் உங்களுக்குத் தெளிவுபடுத்துவான்.

அல்குர்ஆன் 16:92

சிரமப்பட்டு ஒரு நூலை நூற்று, பின்னர் அதைத் துண்டு துண்டாக ஆக்கியவரைப் போல் ஆகி விடாதீர்கள் என்று அல்லாஹ் கூறுவது போல் நாம் உருவாக்கிய இந்த ஏகத்துவக் கோட்டையை நம் கைகளால் தகர்த்தெறிந்து சுக்குநூறாக்கி விடக்கூடாது.

நாம் கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கை நாளைய தலைமுறையினருக்குப் போய்ச் சேர வேண்டுமானால், தாயீக்கள் பற்றாக்குறை தீர வேண்டுமானால் உடனடியாக ஒவ்வொரு கிளையிலிருந்தும் ஒரு மாணவனை, மார்க்கக் கல்வி பயில்வதற்காக அனுப்பியாக வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் அவருக்குரிய பொருளாதாரத்தை கிளையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி உருவாக்கினாலே தவிர தாயீக்களின் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாது. நாளைய தலைமுறையினருக்கு இந்தக் கொள்கையைக் கொண்டு போய்ச் சேர்க்கவும் முடியாது.

இன்று நாம் மிகப் பெரிய சிரமத்திற்கும் சிக்கலுக்கும் இடையே மர்கஸ்களை, அழைப்பு மையங்களை நிறுவுகின்றோம். இந்த அழைப்பு மையங்கள் ஏகத்துவக் கொள்கையின் அடித்தளங்கள். ஆனால் அவற்றில் அழைப்பாளர்கள் இல்லாவிட்டால் அவை உயிரற்ற சடலங்களாகி விடும்.

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள், இஸ்லாமிய மையமான கஅபாவை நிறுவி விட்டு இறைவனிடம் கையேந்துகின்றார்கள்.

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்

அல்குர்ஆன் 2:129

அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்று, நபி (ஸல்) அவர்களை தூதராக அனுப்பி அந்த அழைப்பு மையத்தை அதன் அடிப்படைக் கொள்கையின் பக்கம் திருப்பி விடுகின்றான்.

ஓர் அழைப்பாளர் இருப்பாரானால் அழைப்பு மையத்திற்கு ஒரு வாடகைக் கட்டடத்தைக் கூட பிடித்துக் கொள்ளலாம். ஆனால் அழைப்பாளரை வாடகைக்குப் பிடிக்க முடியாது. அழைப்பாளர் இல்லாத மர்கஸ், மாலுமி இல்லாத கப்பல்! அடிக்கின்ற காற்றில் எந்தத் திசையை நோக்கியும் அது திருப்பப்படும்; அலைக்கழிக்கப்படும். இதைக் கவனத்தில் கொண்டு அழைப்பாளர்களை உருவாக்குவோமாக!

வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்புகளை மட்டும் படித்து விட்டு அழைப்புப் பணியைத் தொடரலாம்; தொடர்கின்றோம். ஆனால் குர்ஆன், ஹதீஸ் அரபு மொழியில் அமைந்திருப்பதால் அதில் ஆழ்ந்த ஞானம் அவசியம் இருக்க வேண்டும். மாற்றுக் கருத்துடையவர்கள் வாதங்களை எடுத்து வைக்கும் போது அதற்கு நாம் தக்க பதிலைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தப்பும் தவறுமாக அர்த்தம் கொடுத்து தவ்ஹீதை விட்டு மக்களைத் தடம்புரளச் செய்யும் நிலை ஏற்பட்டு விடும்.

எனவே அசத்தியவாதிகளைச் சந்திக்கும் போது அவர்கள் தூக்கி வருகின்ற ஆயுதங்களை விட வலுவான ஆயுதங்களைத் தூக்கி வர வேண்டும். தூய இஸ்லாத்தைக் காக்க வேண்டும்.

அன்று ஒவ்வொரு நபித்தோழரும் இந்த ஏகத்துவத்தைக் காக்கத் தங்கள் இன்னுயிரை ஈத்தனர். இன்று நாம் உயிரை இழக்கின்ற நிலை ஏற்படவில்லை. அப்படி வந்தால் உயிரையும் விடுவோம். ஆனால் இப்போதுள்ள தேவை குறைந்தபட்சம் இந்தக் கொள்கையைக் காக்க நம் குடும்பத்திலிருந்து ஒருவரையாவது அனுப்ப வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின்  பாடத்திட்டங்களின் படி இங்கு படித்தவர்களின் இவ்வுலக வாழ்க்கை இருண்டு விடாது. இங்கு படித்த மாணவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தால் அது இருண்டு விடவில்லை, ஒளிரத் தான் செய்கின்றது. இவ்வுலக வாழ்க்கையுடன் சேர்ந்து மறுமை வாழ்க்கையும் ஒளிர்கின்றது. அதனால் இந்தக் கல்வியைப் பயின்றால் இவ்வுலக வாழ்க்கை பாழாகி விடும் என்று யாரும் கருத வேண்டாம்.

உலகக் கல்வியைக் கற்றால் உலக வாழ்க்கை மட்டும் சிறக்கும்; அவருடைய பொருளாதாரம் வளம் பெறும். அப்படி அவர் அனுமதிக்கப்பட்ட வழியில் பொருளாதாரத்தைத் திரட்டுவதில் தவறேதுமில்லை.

அல்லாஹ் இந்தப் பொருளாதாரத்தைப் பற்றிக் கூறும் போது, ஹைர் – நன்மை என்று குறிப்பிடுகின்றான்.

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

அல்குர்ஆன் 2:180

பொருளாதாரத்திற்குக் குறிப்பிடும் அதே “ஹைர்’ என்ற வார்த்தையை கல்வி ஞானத்திற்கும் குறிப்பிடுகின்றான்.

தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.

அல்குர்ஆன் 2:180

இதற்கு ஏன் அல்லாஹ் இந்த வார்த்தையைக் குறிப்பிட வேண்டும்?

அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 3009

ஓர் அழைப்பாளர் மூலம் யார் யாரெல்லாம் நேர்வழி பெறுகின்றாரோ அத்தனை பேரின் நன்மைகளும் அவர்களின் கணக்கில் குறைக்கப்படாமல், அந்த வழிகாட்டிக்குக் கிடைக்கின்றது என்றால் இதென்ன சாமான்யமான, சாதாரணமான நன்மையா? அபரிமிதமான, அளப்பரிய நன்மையாகும். அந்தப் பாக்கியத்தை அடைய குடும்பத்திற்கு ஒருவரை அனுப்பி வைப்போம்.

—————————————————————————————————————————————————————-

இறுதிநபித்துவ எதிர்ப்பு வாதங்கள்

அண்மையில் நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 11.12.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இறுதி நபித்துவம் என்ற தலைப்பில் ஆற்றப்பட்ட உரை:

மிர்ஸா குலாம் போன்ற பொய்யர்கள் தோன்றுவதற்கு சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் தான் காரணம்.

முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் வஹீ வந்தது; அவர்களுக்குப் வேறு யாருக்கும் வஹீ வரவில்லை என்று நம்பிய மக்களை, நபியவர்களுக்குப் பின் பலருக்கும் வஹீ வரும் என்று நம்ப வைத்தார்கள். நான்கு இமாம்களையும் நபி (ஸல்) அவர்களின் இடத்தில் கொண்டு போய் வைத்தார்கள்.

“கல்பை (உள்ளத்தை) பளிங்கு போல் ஆக்கி விட்டால் அங்கு அல்லாஹ்வின் கஷ்ஃப் எனும் அகஞானம் தோன்றி விடும். அத்தகையவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் வந்து பேசுவான்” என்று இவர்களால் மிகவும் மதிக்கப்படுகின்ற, கல்விக் கடல் என்று போற்றப்படுகின்ற கஸ்ஸாலி எழுதி வைத்துள்ளார். இவ்வாறு எழுதி வஹீயின் வாசலைத் திறந்து விட்ட அவரை, மக்களின் தலைவர் என்று இவர்கள் மெச்சுவதுடன், “எங்களின் உள்ளங்களை இவரைப் போல் பிரகாசிக்கச் செய்வாயாக!’ என்று பிரார்த்தனையும் செய்கின்றனர்.

மிர்ஸா குலாம் தன்னை நபி என்றதற்கு ஆத்திரப்படும் இவர்கள், யாகுத்பா என்ற பாடல் வரிகளில் முஹ்யித்தீனைக் கடவுளாக்கி ஏற்றிப் புகழ்வதுடன் முஹ்யித்தீன் என்று அவரை அழைத்து திக்ர் செய்கின்றனர்; வணங்குகின்றனர்.

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தை களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்.

நூல்: யாகுத்பா

தன்னை ஒரு நபி என்று வாதித்த மிர்சாவைக் கண்டிக்கும் நீங்கள், முஹ்யித்தீனை அல்லாஹ்வாக ஆக்கி, அவரை உதவிக்கு அழைக்கின்ற உங்கள் ஜமாஅத்தினரை ஏன் கண்டிக்கவில்லை?

நான் நபி என்று சொன்ன காதியானி காஃபிர் என்றால், “அனல் ஹக் – நான் தான் ஹக் (அல்லாஹ்)” என்று சொன்ன மன்சூர் ஹல்லாஜ் யார்?

 (நூல்: அல்பஹ்ஜதுஸ் ஸனிய்யா, பக்கம் 136)

இவனுக்கு எப்படி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்) என்று சொல்கிறீர்கள்?

அபூயஸீத் அல்புஸ்தாமி என்பவனை மவ்லிது துஆ ஓதும் போது நினைவு கூர்கின்றீர்களே!

“நான் தூய்மையானவன்; நான் தூய்மையானவன். என்னுடைய விஷயம் எவ்வளவு மகத்துவமானது? என் ஜிப்பாவில் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை” என்று கூறியவன் தானே இந்த அபூயஸீத் அல்புஸ்தாமி.

நூல்: அபூயஸீத் அல்புஸ்தாமி, பக்கம்: 49, ஷத்ராதுத் தஹப், பாகம் 2, பக்கம் 142

“அவன் (அல்லாஹ்) என்னைப் புகழ்கின்றான்; நான் அவனைப் புகழ்கின்றேன். அவன் என்னை வணங்குகின்றான்; நான் அவனை வணங்குகின்றேன்”

நூல்: ஃபுசூஸுல் ஹிகம், பாகம்: 1, பக்கம் 83

இப்படிக் கூறிய முஹ்யித்தீன் இப்னு அரபியை, ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்கின்றீர்களே!

மிர்ஸாவை நபி என்று நிலைநிறுத்துவதற்குக் காதியானிகள் மேற்படி நபர்கள் சொன்னதையும் அவர்கள் எழுதிய நூற்களையும் தான் சான்றாகக் கொண்டு வருகின்றனர். எனவே சு.ஜ. எனப்படும் இவர்களுக்கு காதியானிகளைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

இறுதி நபித்துவக் கொள்கையில் உறுதியாக நிற்பது தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான். நாங்கள் நபித்தோழர்களைக் கூட பின்பற்றக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஸஹாபாக்களை மதிப்போம்; ஆனால் பின்பற்ற மாட்டோம்.

இவ்வளவு ஏன்? நபி (ஸல்) அவர்களைக் கூட இறைத் தூதர் என்ற நிலையில் அவர்கள் நமக்குக் கூறிய விஷயங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதாவது மார்க்க விஷயங்களில் அவர்களைப் பின்பற்றியே தீர வேண்டும். கோதுமை, பேரீச்சம்பழம் போன்ற உணவு விஷயங்கள், ஆடைகள், வாகனங்கள் போன்ற உலக விஷயங்களில் அவர்களைப் பின்பற்றத் தேவையில்லை என்று தெளிவாக விளங்கி வைத்திருக்கின்றோம். இதற்கு முஸ்லிமில் வரும் ஹதீஸ் தெளிவான சான்றாகும்.

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் “(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்துவருகிறோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்” என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் “உதிர்ந்துவிட்டன’ அல்லது “குறைந்து விட்டன’.

அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், “நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே” என்று சொன்னார்கள்.

(நூல்: முஸ்லிம் 4712)

இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசும் போது, காதியானிகளுக்கு எதிராக முதன் முதலில் போர்க்கொடி தூக்கியது தவ்ஹீத் ஜமாஅத் தான்; கோவையில் 1994ஆம் ஆண்டில் காதியானிகளுடன் 9 நாட்கள் விவாதம் நடத்தினோம். அந்த விவாதத்தில் காதியானிகள் எழுப்பிய கேள்விகளை தவ்ஹீத் ஜமாஅத் எப்படி எதிர்கொண்டது? அதில் ஈஸா (அலை) சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு காதியானிகள் மண்ணைக் கவ்வுகின்ற அளவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அணியினர் நுணுக்கமான விளக்கங்களைக் கொடுத்தனர் என்பதை விளக்கிப் பேசினார்.

இந்த கூட்டத்தில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளமும், எழுச்சியும் 1997ஆம் ஆண்டு இதே இடத்தில் நடைபெற்ற, “நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சனைகளும்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட எழுச்சியை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.

அவ்வளவு தான். உலமாக்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. உடனே ஸைபுத்தீன் ரஷாதி என்பவரை அழைத்து வந்து 06.01.2012 அன்று பதில் கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் நமக்கு எதிரான வக்கிரமத்தையும் வயிற்றெரிச்சலையும் கொட்டித் தீர்த்தார்கள்.

97லும் இதுபோன்று ஒரு கூட்டத்தைப் போட்டு, இதே ஸைபுத்தீன் ரஷாதியைத் தான் அழைத்து வந்து வசை மாறிப் பொழிந்தார்கள். அன்று கூட்டம் முடிந்தவுடன் தவ்ஹீது சகோதரர்கள் ஸைபுத்தீன் ரஷாதியிடம் கேள்வி கேட்கச் சென்ற போது நைசாக நழுவிச் சென்று விட்டார். அவரை விவாதத்திற்கு அழைத்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

அப்போது நாம் மறுப்புக் கூட்டம் போடவிருந்த தருணத்தில் மேலப்பாளையத்தில் தொடர் கொலைகள் நடந்தன. ஷம்சுல்லுஹா ரஹ்மானி, ஸய்யது இப்ராஹீம் போன்றோர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதனால் அதற்கு மறுப்புக் கூட்டம் போட முடியாமல் போனது. அன்று ஓடிய ஸைபுத்தீன் ரஷாதி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் தலைகாட்டினார்.

சவால் விட்டு ஓடிக் கொண்டிருந்த ஷேக் அப்துல்லாஹ் கோமாளியாவது கடைசியில் ஒருவாறாக பொறியில் சிக்கிக் கொண்டார். விவாதத்திற்கு வந்து விட்டார். ஆனால் இன்று வரை பொறியில் சிக்காமல் நமக்கு எதிராக ஊர் ஊராக சவால் விட்டுவிட்டு, தப்பித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய எத்தர் ஸைபுத்தீன் ரஷாதி தான். மேடையில் நாக்கூசாமல் பொய் பேசுவார்.

இந்தக் கூட்டத்திலும் கேனயன், கிறுக்கன், மொள்ளமாரி, முடிச்சவிக்கி, பெட்டை, இப்லீஸ், தஜ்ஜால் என்று நாலாந்தர ரவுடியின் பாணியில் கத்தி விட்டுப் போனதைத் தவிர நாம் வைத்த வாதங்களுக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

மறுப்பு தெரிவித்து பேசிய ஸைபுத்தீன் ரஷாதி, மகன் இறந்தாலும் பரவாயில்லை, மருமகள் விதவையாக வேண்டும் என்று நினைக்கும் கொடூர மாமியாரைப் போல் பேசினார்.

முஸ்லிம் நூலில் இடம் பெறும் நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸையே மறுத்து விட்டுப் போயிருக்கின்றார். மவ்லவி என்ற பெயரில் மாநபியவர்களின் ஹதீஸை, அதிலும் குறிப்பாக உலக விஷயம், மார்க்க விஷயம் என்ற வித்தியாசத்தைக் காட்டுகின்ற அதி உன்னதமான ஹதீஸை மறுக்கின்ற இந்தப் பயங்கரவாதியை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே அவர் நமக்கு எதிராகக் கக்கிய விஷக் கருத்துக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றது.

தவ்ஹீதுக்கு எதிரான பிரச்சாரத்தில் இவர் எப்படிப்பட்டவர் என்பதை தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதி மக்களிடம் தவ்ஹீதுவாதிகள் அடையாளம் காட்டுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இந்தப் பதில் உரையை இங்கு வழங்குகின்றோம்.

—————————————————————————————————————————————————————-

இலக்கணமும் தலைக்கனமும்

இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் மவ்லவி ஷம்சுல்லுஹா ரஹ்மானி பேசும் போது, திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களில், “நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று ஈஸா (அலை) அவர்கள் கூறும் வாசகத்திற்கு கோவை விவாதத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தைச் சுட்டிக் காட்டி, இந்த விளக்கம் தான் ஈஸா மரணித்து விட்டார் என்ற காதியானிகளின் வாதத்திற்குப் பேரிடியாக அமைந்தது என்று பேசினார்.

அந்த விளக்கம் இதோ:

ஈஸா நபி மரணிக்கவில்லை

திருக்குர்ஆன் 19:30-32 ஆகிய வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர். எனவே, இம்மொழி பெயர்ப்பில் எது சரியானது என்பதை விரிவாக நாம் ஆராய்வோம்.

ஏனெனில் தவறான மொழி பெயர்ப்பின் அடிப்படையில் ஈஸா நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குக் காதியானிகள் இதைச் சான்றாகக் காட்டுகிறார்கள். சரியான மொழி பெயர்ப்பின் படி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தை நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவ்வசனங்கள் தரவில்லை.

  1. நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். எனக்கு வேதத்தை அவன் வழங்கினான். மேலும், என்னை நபியாகவும் ஆக்கினான். (திருக்குர்ஆன் 19:30)
  2. நான் எங்கிருந்த போதும் என்னை பாக்கியம் பெற்றவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருள்ளவனாக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். (திருக்குர்ஆன் 19:31)
  3. மேலும், எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் (ஆக்கினான்.) என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (திருக்குர்ஆன் 19:32)

மேற்கண்டவாறு இந்த வசனங்களை சிலர் மொழி பெயர்த்துள்ளனர்.

தவறான கொள்கை உடையவர்கள் இந்த மொழி பெயர்ப்பின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்புகின்றனர்.

இரண்டாவது வசனத்தில் “நான் உயிருள்ளவனாக இருக்கும் போது தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்” என ஈஸா நபி கூறியதாகக் கூறப்படுகிறது.

ஈஸா நபி அவர்கள் உயிருடன் உயர்த்தப்பட்டு வானில் இருந்தால், அவர்கள் எப்படி ஸகாத் கொடுக்க முடியும்? அவர்கள் ஸகாத் கொடுக்க முடியவில்லையானால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பது தான் பொருள். ஏனெனில் உயிருடன் இருக்கும் வரை தமக்கு ஸகாத் கடமை என்று ஈஸா நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். இது தான் அந்த சாரார் எடுத்து வைக்கும் வாதம்.

இம்மூன்று வசனங்களில் முதல் இரண்டு வசனங்களுக்குச் செய்யப்படும் பொருளில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. மூன்றாவதாக நாம் குறிப்பிட்டுள்ள 19:32 வசனத்திற்குத் தான் எல்லா தமிழ் மொழி பெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன.

எனவே 19:32 வசனத்தின் சரியான பொருள் என்னவென்று பார்ப்போம்.

இவ்வசனத்தில் “வ பர்ரன் பிவாலிததீ” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. “எனது தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பது இதன் பொருள்.

செய்பவன் + ஆக + உம் (செய்பவனாகவும்) என்பதில் “உம்’மைப் பொருளை எங்கே தொடர்புபடுத்துவது என்பதில் தான் பலரும் கவனக் குறைவாக இருந்துள்ளனர்.

“உம்’மைப் பொருளைப் பொறுத்த வரை தமிழ் மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படுவதில்லை. அரபு மொழியில் கருத்துக் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும் கருதுகிறேன் என்ற தமிழ் வாக்கியத்தில் நல்லவனாகவும், வல்லவனாகவும் என இரண்டு “உம்’மைப் பொருள்கள் இடம் பெற்றுள்ளன. அரபு மொழியில் இதே வாக்கியத்தைக் கூற வேண்டுமானால் “கருதுகிறேன் இப்ராஹீமை நல்லவனாகவும், வல்லவனாகவும்” என்ற வரிசைப்படி அமையும்.

“நல்லவனாகவும்’ என்பதை தொடர்புபடுத்துவதற்குரிய இடம் தமிழ் மொழியில் பின்னால் இடம் பெற்றிருக்கும். ஆனால், அரபு மொழியில் முன்னால் இடம் பெற்றிருக்கும்.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, மூன்றாவது வசனத்தை (19:32) ஆராய்வோம்.

“என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்” என்பதை எங்கே தொடர்புபடுத்த வேண்டும் என்று தேடினால் இரண்டு இடங்களில் அதைத் தொடர்புபடுத்த முடியும்.

என்னை நபியாகவும் ஆக்கினான் என்று 19:30 வசனம் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக “என்னை நபியாகவும் என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் அவன் ஆக்கினான்” என்ற கருத்து கிடைக்கிறது.

இப்படித் தான் பெரும்பான்மை அறிஞர்கள் தொடர்புபடுத்துகின்றனர்.

 “என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும்’ என்ற சொற்றொடரை இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட 19:31 வசனத்தின் இறுதியிலும் தொடர்புபடுத்த முடியும்.

“நான் உயிருடையவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்ற கருத்து இதிலிருந்து கிடைக்கும்.

நாம் இரண்டாவதாகக் கூறியபடி தொடர்புபடுத்துவது தான் மிகவும் சரியானதாகும்.

“உம்மை’ப் பொருளாக இடம் பெறும் சொற்களை அதற்கு அருகில் உள்ள இடத்தில் தான் தொடர்புபடுத்த வேண்டும். அருகில் தொடர்புபடுத்த முடியாத நிலை ஏற்பட்டால் தான் தொலைவில் தொடர்புபடுத்த வேண்டும் என்பது இலக்கண விதியாகும்.

“என் தாயாருக்கு நன்மை செய்பவனாக’ என்பது 19:32-வது வசனம். அதற்கு முந்தைய வசனமாகிய 19:31-ல் தொடர்புபடுத்த வழியிருக்கும் போது அதைப் புறக்கணித்து விட்டு அதற்கும் முன்னால் சென்று 19:30 வசனத்தில் தொடர்புபடுத்துவதை இலக்கணம் அறிந்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

“நான் உயிருள்ளவனாகவும், என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் ஸகாத் கொடுக்குமாறு கட்டளையிட்டான்” என்பது தான் சரியான பொருளாகும்.

எனவே, ஈஸா நபி அவர்கள் உயிருடன் இருப்பது மட்டுமின்றி தாயாருக்கு நன்மை செய்பவராகவும் இருந்தால் தான் அவர் மீது ஸகாத் கடமையாகும். அவர் எப்போது உயர்த்தப்பட்டு விட்டாரோ அப்போது அவரால் தாயாருக்கு நன்மை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது…

இது  தர்ஜுமாவில் 19:30-32 வசனங்கள் தொடர்பாக எழுதப்பட்டுள்ள விளக்கம்!

கோவையில் காதியானிகளுடன் நடைபெற்ற விவாதத்தில் இந்த விளக்கத்தைக் கூறிய பிறகு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதை ஷம்சுல்லுஹா ரஹ்மானி தனது உரையில் குறிப்பிட்டார்.

இதற்கு நகர மஜ்லிசுல் உலமா சார்பில் நடைபெற்ற மறுப்புக் கூட்டத்தில் பேசிய ஸைபுத்தீன் ரஷாதி, தர்ஜுமாவில் இடம் பெற்ற இந்த அர்த்தத்தை ஆட்சேபித்து இரண்டு கேள்விகளை எழுப்பினார்.

  1. ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவரது தாயார் இறந்து விட்டால் ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?
  2. ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் போது, அவரது தாயார் உயிருடன் இருக்க மாட்டார். அப்போது ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?

இவை தான் அவர் எழுப்பிய இரு கேள்விகளாகும். இவ்வாறு கேள்வி எழுப்பியதன் மூலம் மேற்கண்ட வசனத்திற்கு நாம் கொடுத்த அர்த்தம் தவறு என்று கூறுகின்றார்.

அப்படியானால் நாம் இவர்களிடம், “வானத்திலிருந்து ஈஸா நபி ஸகாத் கொடுக்கின்றார்களா?’ என்று காதியானிகள் கேட்கும் கேள்வியைத் திரும்பக் கேட்கிறோம். அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில், “இந்த உலகத்தில்” என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, “நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு, ‘இந்த உலகத்தில் நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்’ என்று வைத்துக் கொள்ள வேண்டுமாம்.

இப்படி அந்தப் பதில் கூட்டத்தில் விளக்கம் கூறியிருக்கிறார்கள்.

“நான் இந்தப் பூமியில் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் ஸகாத் கொடுக்க வேண்டும்; வானத்தில் இருக்கும் போது ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை’ என்று ஈஸா நபி கூறியதாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்கிறார்கள்; மிர்ஸா குலாம் இப்படித் தான் சுய விளக்கம் கொடுத்தான் என்று நம்மை நோக்கி இந்த சு.ஜ.வினர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் தான் குர்ஆனுக்கு சுய விளக்கம் கொடுக்கின்றார்கள். இவர்கள் இஷ்டத்திற்கு எதையும் சேர்ப்பதற்கு குர்ஆன் என்ன மவ்லிது கிதாபா?

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 69:44, 45

ஏதாவது ஒரு வசனத்தையோ, ஏன் ஒரு வார்த்தையையோ கூட யாரும் துணிந்து இடைச்செறுகல் செய்யக் கூடாது; செய்யவும் முடியாது என்று கூறும் போது இதில் எப்படி, “ஃபித்துன்யா – இந்த உலகத்தில்’ என்று சேர்க்க முடியும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்துகொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு, “அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்தஎன்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருüய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன்னுடைய நபியையும்

நான் நம்பினேன்)

(இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில்)

நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொள்.

இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இவற்றைத் திரும்ப ஓதிக்காட்டுகிறேன்என்று நபி (ஸல்) அவர்கüடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (“நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்என்பதற்கு பதிலாக) “நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்என்று நான் சொல்லிவிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை; “நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்என்று சொல்என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள். (நூல்: புகாரி 6311)

தான் கற்றுக் கொடுத்த வார்த்தையில் மாற்றம் செய்வதற்குக் கூட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இவர்கள் துணிந்து குர்ஆனில் தங்கள் கைச்சரக்கை நுழைக்கின்றார்கள்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம்

“பூமியில் இருக்கும் போது’ என்று அர்த்தம் செய்வதற்குக் குர்ஆனிலிருந்து சான்றைக் காட்ட வேண்டும். அல்லது ஹதீஸிலிருந்து சான்றைக் காட்ட வேண்டும்.

அவ்விரண்டையும் விட்டு விட்டு, கைச்சரக்கைச் சேர்த்துச் சொன்னால் காதியானி மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் கூட எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? ஒரு விவாதக் களத்தில் இந்த வாதம் எப்படி நிற்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் உளறித் தள்ளுகின்றார்கள்.

இதிலிருந்து காதியானிகளின் கேள்விக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை, பண்டமும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்குர்ஆன் ஓர் அற்புதம்! இறுதி நாள் வரை அசத்தியத்தைக் கிள்ளி எறிகின்ற ஓர் அருள் வாக்கு!

இப்படி எவனாவது நபி என்று முளைத்தானென்றால் அதற்கும் அது தனக்குள் ஒரு பதிலை, பாதுகாப்பை வைத்திருக்கின்றது.

அந்த அடிப்படையில் மேற்கண்ட வசனத்திற்கு நாம் பொருள் செய்திருப்பது போன்று பொருள் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை.

அப்படியானால், மர்யம் (அலை) அவர்கள் மரணித்த பிறகு ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையா என்ற கேள்விக்குப் பதில் என்ன?

ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்படும் வரை மர்யம் (அலை) அவர்கள் உயிருடன் இருந்தார்கள். ஈஸா நபி உயர்த்தப்பட்ட பிறகு தான் அவர்களது தாயார் மரணித்தார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். மர்யம் (அலை) அவர்களின் மரணம் தொடர்பான வரலாற்றுக் குறிப்பை இந்த வசனத்திலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். அதனால் மர்யம் (அலை) அவர்கள் இறந்த பிறகு ஈஸா நபி எப்படி தொழுவார்கள்? ஸகாத் கொடுப்பார்கள் என்ற கேள்வியே அர்த்தமற்றதாகி விடுகின்றது.

இவர்களின் இரண்டாவது கேள்வி, ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் வரும் போது, அவரது தாயார் உயிருடன் இருக்க மாட்டார்களே, அப்போது ஈஸா நபிக்குத் தொழுகை, ஸகாத் கடமையில்லையா?

இந்தக் கேள்வியும் அர்த்தமற்றதாகும்.

ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இந்த உலகத்திற்கு வரும் போது அவர்களின் தாயார் இருக்க மாட்டார்கள் என்பது உண்மை.

அதனால் அவர்களுக்குத் தொழுகை இல்லையா? ஸகாத் இல்லையா? என்பது தான் கேள்வி.

இதற்கு நம்முடைய பதில், இல்லை என்பது தான்.

ஈஸா (அலை) அவர்கள், தன்னுடைய தாயாருடன் இருக்கும் போது எந்தத் தொழுகை கடமையாக இருந்ததோ, அந்தத் தொழுகை இல்லை. அவர்கள் தமது தாயாருடன் இருக்கும் போது எந்த ஸகாத் கடமையாக இருந்ததோ அந்த ஸகாத் இல்லை.

இப்போது முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தொழுகை தான் ஈஸா நபி திரும்ப வரும் போது கடமையாகும். இப்போது முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஸகாத் தான் ஈஸா நபிக்குக் கடமையாகும்.

அரபியில் ஸலாத் என்றால் தொழுகை என்று பொருள். அஸ்ஸலாத் என்றால் அந்தத் தொழுகை என்று பொருள்.

ஸகாத் என்றால் தர்மம். அஸ்ஸகாத் என்றால் அந்தத் தர்மம் என்று பொருள்.

எனவே இந்த அடிப்படையில் மேற்கண்ட வசனத்தில் இடம் பெறும் அஸ்ஸலாத், அஸ்ஸகாத் என்பது ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட அந்தத் தொழுகையையும் ஸகாத்தையுமே குறிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அவர்கள் மீண்டும் வரும்போது அந்தத் தொழுகையும் ஸகாத்தும் அவர்களுக்குக் கிடையாது. முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையும் ஸகாத்தும் தான் கடமையாக இருக்கும்.

ஈஸா நபிக்கு இருந்த தொழுகை, முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தொழுகையைப் போன்றது அல்ல என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாகவுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள் வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், “வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், “இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்க மாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்ற சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்என்று கூறிவிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 225

தாம் வாழ்ந்த காலத்தில் ஈஸா நபி அவர்கள் தொழுவிக்கும் இமாமாக இருந்தார்கள். இப்போது அவர்கள் முன்னின்று தொழும் இமாமாக இருக்கவில்லை. இந்த உம்மத்தைப் பின்பற்றியே தொழுகின்றார்கள். இதிலிருந்து அவர்களது தொழுகை வேறு, இந்தத் தொழுகை வேறு என்பதை விளங்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஈஸா நபியவர்கள் இந்தச் சமுதாயத்தில் (உம்மத்தில்) ஒருவராகத் தான் வருகின்றார்கள். நபியாக வரவில்லை. இது பாமரனுக்கும் தெரிந்த விஷயம்.

அதாவது, ஈஸா நபிக்கு அவர்களது ஷரீஅத் இப்போது இல்லை. முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஷரீஅத் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதைத் தான் வேண்டுமென்றே இந்த ஆலிம்கள் மறுக்கின்றனர்.

இந்த வசனம் காதியானிஸத்திற்குக் கல்லறை கட்டும் ஒரு வசனமாகும். இந்த வசனத்திற்கு நாம் செய்திருக்கும் பொருள் தான் சரியானது. அது தான் இலக்கணத்திற்கும் உட்பட்டதாகும். இதை இந்த ஆலிம்கள் மறுக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களின் தலைக்கனமும் திமிரும் தவிர வேறெதுவுமில்லை.

—————————————————————————————————————————————————————-

குர்ஆன் வழிகெடுக்குமாம்!

குருடர்கள் கூறுகின்றனர்!

ஏகத்துவப் பிரச்சாரம் துளிர் விடத் துவங்கிய மாத்திரத்தில் அதன் போதனையாளர்கள் சொன்னது ஒன்றே ஒன்று தான். “குர்ஆனைப் படியுங்கள்’ என்ற குரல் முழக்கம் தான் அது! அன்று அதற்கு ஆலிம் வர்க்கம் வரிந்து கட்டிக் கொண்டு, வாரியடித்துக் கொண்டு மக்களிடம் சொன்னது, “குர்ஆனைப் படிக்காதீர்கள்; அதை எல்லோரும் நேரடியாக விளங்க முடியாது’ என்று தான்.

ஆனால் காலப்போக்கில் மக்களிடம் குர்ஆன் தர்ஜுமா வாங்கும் பண்பு வளர்ந்தது. குர்ஆன் மொழியாக்கங்களுக்காக மக்களிடம் அதிகமான தேட்டமும் தணியாத தாகமும் கூடியிருந்தது.

புரட்டிப் பார்க்காமல் பரணில் பரக்கத்துக்காக மட்டும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த புனிதக் குர்ஆனின் மொழியாக்கம் புத்தகச் சந்தையில் புதிய விற்பனைப் பரிமாணத்தைக் கண்டிருந்ததால், “பாமரர்களுக்குப் புரியாது; படித்தவர்களுக்கு மட்டும் புரியும்’ என்று பாடம் நடத்திய ஆலிம் (?) வர்க்கம் குர்ஆனை மொழியாக்கம் செய்யப் புறப்பட்டது.

தங்களின் குர்ஆன் மொழியாக்கப் புத்தகங்களை சந்தையில் கொண்டு வந்து போட்டது. பணம் என்றதும், புரியாத குர்ஆன் புரிய ஆரம்பித்து விட்டது. இதிலிருந்து இவர்களின் நோக்கம் என்ன என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது.

இதில் வேதனை என்னவென்றால், “குர்ஆன் வழிகெடுக்கும்’ என்று நமக்கு எதிராகக் கொழுப்பெடுத்த பிரச்சாரம் செய்தனர். அதற்கு அல்குர்ஆன் வசனத்தையே ஆதாரமாகக் காட்டினர்.

கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் “இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மைஎன்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏக இறைவனை) மறுப்போர் “இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?” என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம் அல்லாஹ் பலரை வழி கேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர் வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழி கேட்டில் விடுவதில்லை.

அல்குர்ஆன் 2:26

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். குர்ஆன் வழிகெடுக்கும் என்று இவர்கள் கூறக் கூற, மக்கள் கூட்டம் கூட்டமாக தவ்ஹீதுக் கொள்கையின் பக்கம் குவிய ஆரம்பித்தனர்.

இங்கே அல்குர்ஆன், மக்களிடம் வெறுமனே வாழ்கின்ற வேதமாக அல்ல, ஆளுகின்ற வேதமாகப் பரிணமித்தது. குர்ஆன் விளங்காது என்று இவர்கள் சொல்லச் சொல்ல மக்கள் இதை விட்டு விலகி, இந்தப் பக்கம் வராமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்? மாறாக, அலை அலையாக தவ்ஹீது நோக்கி மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

இதிலிருந்து குறை, கோளாறு குர்ஆனில் இல்லை. இந்தக் குருடர்களிடம் தான் இருக்கின்றது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

(இவர்கள்) செவிடர்கள்; ஊமைகள்; குருடர்கள். எனவே இவர்கள் (நல் வழிக்கு) திரும்ப மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:18

அல்லாஹ் சொல்வது போன்று காதிருந்தும் செவிடர்கள்; வாயிருந்தும் ஊமைகள்; கண்ணிருந்தும் குருடர்கள்.

மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் இதே வேலையைத் தான் செய்தார்கள்.

இக்குர்ஆனைக் கேளாதீர்கள்! நீங்கள் மிகைப்பதற்காக அதில் (குழப்புவதற்காக) வீணான காரியம் செய்யுங்கள்!என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 41:26

எனினும் இவர்களது பிரச்சாரம் எடுபடவில்லை. அல்குர்ஆன் மிகைத்து மேலோங்கி விட்டது. இப்போதும் அது தான் நடக்கின்றது. ஆனால் இதை இந்த ஆலிம்கள் புரியவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பேசிய அதே வசனத்தைத் தான் இப்போதும் பேசுகின்றார்கள்.

இறுதி நபித்துவம் தலைப்பில் பேசிய பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த ஸைபுத்தீன் ரஷாதி, அல்குர்ஆனின் 2:26 வசனத்தைக் கூறி, குர்ஆன் விளங்காது என்று பேசினார். இந்த வசனத்தை ஓதி விட்டு அதற்குப் பொருள் செய்யாமல் நழுவினார்.

அன்று இதே கருத்தை அவர்கள் பேசும் போது தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒரு நூறு பேர் தான். ஆனால் இன்று பல நூறாயிரம் பேர். இவர்களுடைய பேச்சு எடுபடவில்லை என்பதற்கு இதை விட வேறு எடுத்துக்காட்டு எதுவும் இருக்க முடியாது. இதற்குப் பின்னும் மானம் கெட்டுப் போய் பேசுகின்றோமே என்ற உணர்வு கூட அற்றுப் போய் விட்டது.

உண்மையில் இந்த வசனம் குறிப்பிடுவது குர்ஆனைப் பற்றி அல்ல! அது கூறும் உதாரணத்தைத் தான்.

இவ்வசனத்தில் “இதன் மூலம் வழி கெடுப்பான்” என்று கூறப்பட்டுள்ளது. “இவ்வேதத்தின் மூலம்” என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.

ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு தான் “இதன் மூலம் வழி கெடுப்பான்’ என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே “இதன் மூலம்’ என்ற சொற்றொடருக்கு “இவ்வுதாரணத்தின் மூலம்’ என்று பொருள் கொள்வதே சரியாகும்.

“இதன் மூலம்’ என்ற சொற்றொடருக்கு “வேதத்தின் மூலம்’ என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.

மேலும் வழி காட்டுவதற்காகத் தான் அல்லாஹ் குர்ஆனை அருளினான்; வழி கெடுப்பதற்காக அல்ல. எனவே அவ்வாறு பொருள் கொள்வது கடும் குற்றமும், குர்ஆனுக்குக் களங்கம் கற்பிப்பதுமாகும்.

இதைத் தான் குர்ஆனுடன் பொருத்திப் பார்த்து, குர்ஆன் வழிகெடுக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் குர்ஆன், மக்களை நேர்வழியில் பால் இழுத்துக் கொண்டிருக்கின்றது. குர்ஆனுடைய வேலையும் அது தான்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.

அல்குர்ஆன் 2:185

இதற்கு மாற்றமாகத் தான் இந்த ஆலிம்கள் விஷமப் பிரச்சாரத்தைச் செய்கின்றார்கள். நிச்சயமாக இவர்கள் அதில் தோற்றுப் போவதுடன், இந்த வாதம் இவர்களை நாளை நரகத்திற்குத் தான் அழைத்துச் செல்லும்.

குர்ஆன் மீது இவர்கள் வெறுப்பூட்டிய குற்றத்திற்கு ஆளாகின்றார்கள். இத்தகையவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் மறுமையில் இறைவனிடம் புகார் கொடுக்கின்றார்கள்.

என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்என்று இத்தூதர் கூறுவார்.

அல்குர்ஆன் 25:30

இதன் விளைவு என்ன? நரகம் தான். அல்லாஹ் காப்பாற்றுவானாக!

—————————————————————————————————————————————————————-

கல்விக் கடலா கஸ்ஸாலி?

“வானத்தின் ரட்சகா! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்தப் புதியவனின் உள்ளத்தை ஒளிரச் செய்!”

காலை மாலையில் நடைபெறும் மக்தபுகள் முதல், பட்டமளிப்பு விழா நடக்கும் பெரிய மதரஸாக்களின் மாணவர்கள் வரை ஒரு பிரார்த்தனையாகப் பாடுகின்ற பாடல் வரிகள் தான் இவை.

அறிவுக் கடல், கல்விக் கடல் என்று இந்த ஆலிம்களால் மெச்சப்படுகின்றவர் கஸ்ஸாலி!

இவர் கல்விக் கடலா? என்பதைக் கீழ்க்காணும் அவரது நூற்களில் இடம் பெறும் பதிவுகளைப் பார்த்து முடிவு செய்வோம்.

மெஞ்ஞானிகள் (ரகசியம்) ஹகீகத் எனும் வானில் உயர்ந்து அங்கே சஞ்சரிக்கும் போது உலகிலே அவர்கள் ஒரே (அல்லாஹ்வான) ஒருவனைத் தவிர வேறு எதையுமே காணவில்லையென ஏகோபித்து, ஒருமித்துக் கூறுகின்றனர். எனினும் சிலருக்கு இந்நிலை தெள்ளத் தெளிவாக அறிவியல் ரீதியாகப் புலப்படும். (அவர்கள் இந்த இரகசியத்தால் குழம்பிப் போக மாட்டார்கள்). இன்னும் சிலருக்கோ அவர்கள் இதன் உச்ச இன்பத்தையே சுவைத்து விடுவார்கள். அப்படியானவர்கள் “எல்லாம் ஒன்றே’ எனும் ஓர்மையில் மூழ்கித் திளைத்து ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து “வோறொன்று’ என்ற வார்த்தை – அதாவது பன்மை என்பதே அவர்களிடமிருந்து அடியோடு நீங்கி விடும். அவர்களின் விழிகளுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறொன்றும் புலப்படாது. அனைத்துமே அல்லாஹ்வாகவே தென்படும். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் ஒரு வகை போதையேற்பட்டதன் காரணத்தினாலேயே அவர்களில் சிலர் “நான்தான் அல்லாஹ்’ என்றும் வேறு சிலரோ “நானே அல்லாஹ். நான் தூய்மை மிக்கவன், வல்லமை மிக்கவன்’ என்றோ வேறு சிலர் “எனது ஜூப்பாவிலும் அல்லாஹ்வையன்றி வேறில்லை’ என்றோ கூறியிருக்கின்றார்கள்……

நூல்: மிஷ்காத்துல்அன்வார்

இதன் மூலம், காணும் பொருளெல்லாம் கடவுள் எனும் முஹ்யித்தீன் இப்னு அரபியின் வழிகெட்ட கொள்கையைத் தான் கஸ்ஸாலியும் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

அபூதுராப் தக்ஷபீ சில சீடர்களைக் கண்டு மகிழ்ச்சியில் ஆழ்ந்து விடுவார். அவரைத் தன்னருகில் அழைத்து அவருக்கு நல்லறம் செய்வார். ஆனால் அந்தச் சீடர் இறை வணக்கத்திலும் இறை தியானத்திலும் திளைத்திருப்பார். ஒரு நாள் அபூதுராப் அது போன்ற ஒரு சீடரிடம், “நீ அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?” என்று கேட்டார். “எனக்கு அவரைப் பார்க்க நேரமில்லை” என்று சீடர் பதிலளித்தார். “நீ அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தால் என்ன?” என்று அபூதுராப் திரும்பத் திரும்ப வலியுறுத்தவே அது அவரது கோபத்தைக் கிளறி விட்டது. “அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்து நான் என்ன கிழிக்க வேண்டியிருக்கிறது? நான் தான் அல்லாஹ்வைப் பார்த்து விட்டேன். அவன் அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பதற்குரிய அவசியம் இல்லாமல் ஆக்கி விட்டானே” என்று சீடர் கூறியதும் அபூதுராபுக்கு அது ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது.

அபூதுராப் கூறுகிறார்:

அவர் இவ்வாறு சொன்னதும் எனக்குக் கிளம்பி விட்டது. என்னை நான் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை நோக்கி, “உனக்கு நாசம் உண்டாகட்டும். மகத்துவமும் கம்பீரமும் மிக்க அல்லாஹ்வûக் கண்டு நீ ஏமாறுகின்றாய். நீ அல்லாஹ்வை எழுபது தடவை பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியை ஒரு தடவை பார்ப்பது உனக்கு மிகவும் பயனுடையதாகும்” என்று நான் அந்தச் சீடரிடம் சொன்னேன்.

இந்த வார்த்தையைக் கேட்டு அந்தச் சீடர் என்னை வெறுக்கலானார். “நீங்கள் எப்படி இவ்வாறு கூறுகின்றீர்கள்?” என்று என்னிடம் அவர் கேட்டார். “அல்லாஹ் தஆலா உன்னிடத்தில் உன்னளவுக்குத் தான் காட்சியளிப்பான். ஆனால் அபூயஸீத் அல்புஸ்தாமியிடம் அவர் அளவுக்குக் காட்சியளிப்பான் என்பதை நீ கவனிக்க வேண்டாமா?” என்று நான் பதிலளித்தேன்.

இதை விளங்கிய அவர் என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார். நான் அவரை அழைத்துச் சென்று அவரும் நானும் ஒரு திட்டில் நின்றிருந்தோம்.

வன விலங்குகள் வாழ்கின்ற காட்டில் ஒதுங்கியிருக்கும் அவர், அங்கிருந்து புறப்பட்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எதிர்பார்த்தது போன்றே அவர் எங்களைத் தாண்டிச் சென்றார். அப்போது அவர் தன் முதுகின் மேல் ஒரு தோல் ஆடையைப் புரட்டிப் போட்டிருந்தார்.

நான் அந்த இளைஞரிடம், “இவர் தான் அபூயஸீத் அல்புஸ்தாமி” என்று தெரிவித்தேன். அந்தச் சீடர் அவரைப் பார்த்த மாத்திரத்தில் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார். அவரை அசைத்துப் பார்த்தோம். அவர் இறந்தே போயிருந்தார். அவரை அடக்கம் செய்தோம்.

நான் அபூயஸீதிடம், “என்னுடைய தலைவரே! அவர் உங்களை நோக்கிப் பார்க்கத் தான் செய்தார். அந்தப் பார்வை அவரைப் பலி கொண்டு விட்டதே!” என்று கேட்டேன்.

“உண்மை அதுவல்ல! உங்களுடைய நண்பர் ஓர் உண்மையாளராக இருந்தார். அவருடைய உள்ளத்தில் ரகசிய ஞானம் குடிகொண்டிருந்தது. ஆனால் அது அவருக்கேற்ற தன்மையுடன் அவருக்கு உதயமாகவில்லை. அவர் நம்மைப் பார்த்ததுமே அவருடைய உள்ளத்தின் அகமிய ஞானம் வெளிப்பட்டது. அதை அவர் தாங்க முடியாதபடி நெருக்கடிக்கு உள்ளானார். காரணம் அவர் பலவீனமான பக்தர்; சீடர்! அதனால் தான் அவர் இறந்தே போய் விட்டார்” என்று அபூயஸீத் அல்புஸ்தாமி தெரிவித்தார்.

நூல்: இஹ்யாவு உலூமித்தீன்

இந்தச் சம்பவத்தில் தான் எத்தனை அபத்தங்களும் ஈமானுக்கு வேட்டு வைக்கின்ற விஷக் கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன என்பதைச் சற்று பார்ப்போம்.

  1. அல்லாஹ்வைப் பார்ப்பது மறுமையில் தான் நடக்கும். இவ்வுலகில் நடக்காது என்று அல்லாஹ் திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்லி விட்டான். ஆனால் இந்தக் கதையில் அபூதுராபின் சீடர் அல்லாஹ்வைப் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.
  2. “அல்லாஹ்வைப் பார்த்து விட்டு ஏமாந்து விடாதே!’ என்று அபூதுராப் என்ற ஷைத்தான் சொல்வது!

ஒரு பேச்சுக்கு அல்லாஹ்வைப் பார்த்தார் என்று வைத்துக் கொள்வோம். பாக்கியம் பெற்றவராகத் தானே ஆவார். அவர் எப்படி ஏமாற்றத்திற்குரிவர் ஆவார்?

  1. எழுபது தடவை அல்லாஹ்வைப் பார்ப்பதை விட அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்ப்பவன் சிறந்தவன் என்று இந்த ஷைத்தான் கூறுவது! இங்கு அல்லாஹ்வை விட எழுபது மடங்கு அபூயஸீத் அல்புஸ்தாமி உயர்ந்தவன் என்ற கருத்து விதைக்கப்படுகின்றது. (நவூதுபில்லாஹ்)
  2. அபூயஸீத் என்ற ஷைத்தானைப் பார்த்த மாத்திரத்தில் அந்தச் சீடர் மயக்கமாகி இறந்து விடுதல்.

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் பேரொளியைப் பார்த்து மயக்கமடைந்தது போன்று ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

அந்தச் சீடர் ஏற்கனவே அல்லாஹ்வைப் பார்த்தவர்(?). அப்போதெல்லாம் மயக்கம் ஏற்படாத அவருக்கு அபூயஸீத் அல்புஸ்தாமியைப் பார்த்தவுடன் மயக்கம் ஏற்படுகின்றது என்றால் அபூயஸீதை எந்த நிலையில் கொண்டு வைக்கின்றார்கள் என்று பாருங்கள்.

அபூயஸீத் அல்புஸ்தாமியை அல்லாஹ்வுக்கும் மேலாக வைத்து வழிபடுகின்ற இந்த அபூதுராபின் சம்பவத்தை, இந்தக் கப்ஸாவை தனது இஹ்யா உலூமித்தீன் என்ற நூலில் கஸ்ஸாலி பதிவு செய்திருக்கின்றார் என்றால் இவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இலட்சணத்தில், “இஹ்யாவைப் படிக்காதவன் “அஹ்யா’ (உயிருள்ளவர்களின்) பட்டியலில் இல்லை” என்ற புகழாரம் வேறு! இந்தக் குஃப்ரான கருத்தைப் பதிவு செய்த கஸ்ஸாலிக்கு, கல்விக் கடல் என்ற பட்டமும் பாராட்டும் வேறு!

இவரது நூலில் பரவியும் விரவியும் கிடப்பது, மலிந்தும் குவிந்தும் கிடப்பது “அத்வைதம்’ என்ற கேடு கெட்ட கொள்கை தான். ஏகத்துவம் என்ற மரத்தை ஆணி வோரோடு கெல்லி எறிகின்ற நச்சுக் கொள்கையைப் பதிவு செய்கின்ற இவர் எப்படி இமாமாக இருக்கமுடியும்? அவர் எழுதிய நூற்கள் எப்படி இஸ்லாமியப் பாட நூல்களாக இருக்க முடியும்?

இந்தக் கண்ணோட்டத்தில் இறுதி நபித்துவ விளக்கப் பொதுக்கூட்டத்தில் விமர்சனம் செய்ததைத் தான் இந்த ஆலிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

மற்றவர்களை விமர்சித்தால் கூட இவர்கள் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் கஸ்ஸாலியை விமர்சனம் செய்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அதன் வெளிப்பாடு தான் ஸைபுத்தீன் ரஷாதியின் மறுப்புக் கூட்டம்.

அந்த மறுப்புக் கூட்டத்தில் கஸ்ஸாலி பற்றிய கேள்விக்குப் பதிலளிப்பதாகக் கூறி ஆரம்பித்த ஸைபுத்தீன் ரஷாதி சுமார் 20 நிமிடங்கள் கஸ்ஸாலியின் புகழ் பாடினார். மனிதனின் கருத்துக்களில் தவறு இருக்கலாம் என்று இதில் மட்டும் ஒப்புக் கொள்கின்றார். உண்மையில் கஸ்ஸாலி விஷயத்தில் இப்படி, மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் இருந்தன என்று யாரும் எளிதில் நழுவி விட முடியாது என்பதை அவர் எழுதிய இஹ்யாவு உலூமித்தீன் என்ற நூலைப் படிப்பவர் யாரும் தெரிந்து கொள்ளலாம்.

காணும் பொருளெல்லாம் கடவுள் என்ற அத்வைதக் கொள்கை இந்த ஸைபுத்தீன் ரஷாதி கூறுவது போல் சாதாரண தவறல்ல. இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை, ஓரிறைக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கின்ற ஒரு பெரிய பாவச் சொல்லாகும். அல்லாஹ் மன்னிக்காத குற்றமாகும். இதைத் தான் ஸைபுத்தீன் ஏதோ சட்ட விஷயத்தில் ஏற்படும் சிறிய பிழை போல் சித்தரிக்கின்றார்.

கஸ்ஸாலியைப் பற்றி ஸியர் அஃலாமின்னுபலா என்ற நூலில் ஹாபிழ் தஹபீ அவர்கள் புகழ்ந்த புகழ் மாலையை ஸைபுத்தீன் ரஷாதி கொஞ்ச நேரம் வாசித்துக் காட்டினார்.

யார் புகழ் மாலை சூட்டினால் என்ன?

யார் பாராட்டுப் பத்திரம் வழங்கினால் என்ன?

கஸ்ஸாலியின் நூல் கூறுவதென்ன? ஏகத்துவத்திற்கு நேர் எதிரான இறை மறுப்புக் கொள்கையான அத்வைதம். இந்தக் கொள்கையைப் பேசும் நூலைத் தூக்கி எறிவது தான் ஒரு சரியான முஸ்லிமின் நிலையாக இருக்க முடியும்? அதனை தவ்ஹீத் ஜமாஅத் நிலைநாட்டி வருகின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தச் செயலைத் தான் ஸைபுத்தீன் ரஷாதி என்ற பொய்யர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இவர் எடுத்துக் காட்டிய அதே ஸியரு அஃலாமின்னுபலா நூலில் இஹ்யா உலூமித்தீனைப் பற்றிக் குறிப்பிடுகையில், “மொத்தத்தில் அதில் பொய்யான ஹதீஸ்களே இடம் பெற்றிருக்கின்றன” என்று கூறப்படுகின்றது.

ஒழுக்கங்கள், போலி நடைமுறைகள், தத்துவ ஞானிகளின் துறவு நிலைகள், சூபிஸத்தின் கொலை பீடங்கள் மட்டும் இல்லையென்றால் அதில் அதிக நன்மை இருக்கின்றது.

அல்லாஹ்விடம் பயனுள்ள கல்வியைக் கேட்போமாக! பயனுள்ள கல்வி என்றால் என்ன? அது குர்ஆனில் இறங்கியதாகும்.

அல்லாஹ்விடமிருந்து தடை வராத ரசூல் (ஸல்) அவர்களின் சொல்லும் செயலும் ஆகும்.

என்னுடைய நடைமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என்னுடைய சகோதரனே! அல்லாஹ்வின் வேதத்தை ஆழ்ந்த கவனத்துடன் பற்றிப் பிடித்துக் கொள். புகாரி, முஸ்லிம், சுனன் நஸயீ, நவவீ இமாமின் ரியாளுஸ் ஸாலிஹீன், அவருடைய திக்ரு தொகுப்புகள் போன்றவற்றை முழுச் சிந்தனையுடன் பற்றிப் பிடித்துக் கொள்! நீ வெற்றி பெறலாம்.

தத்துவ ஞானிகளின் வறட்டுத் தத்துவங்கள், அவர்களின் வெற்று ஆன்மீகப் பயிற்சிப் பணிகள், பாதிரிகளின் பட்டினி தவம், தனிமை நாயகர்களின் உருப்படாத உளறல் பேச்சுக்களை நம்பி ஏமாந்து விடாதே என்று உன்னை நான் எச்சரிக்கின்றேன். அனைத்து நன்மையும் தூய, நேரிய மார்க்கத்தைப் பின்பற்றுவதில் தான் அடங்கியிருக்கின்றன. அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.

இறைவா! எங்களை நேரிய பாதையில் செலுத்துவாயாக!

இவ்வாறு ஸியரு அஃலாமின்னுபலாவில் ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறுகின்றார்கள்.

பொய்யர் ஸைபுத்தீன் இதையும் சேர்த்துப் படித்திருந்தால் கஸ்ஸாலியைப் பற்றிய தஹபீயின் முழு மதிப்பீடும் மக்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் இதைச் செய்யவில்லை. இவரும் இவரை அழைத்து வந்த மஜ்லிசுல் உலமாவினருக்கும் நோக்கமே கல்விக் கடல் (?) கஸ்ஸாலியைக் காப்பாற்றுவது தான். அதைத் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். இந்தத் தூய மார்க்கத்தைக் காப்பாற்றுவது அவர்களின் நோக்கமல்ல!

கஸ்ஸாலியின் நூலிலிருந்து அவர் யார் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். இதன் பின்னரும் அவரை இமாம் என்றும், அவருடைய ஞானத்தைப் போல் தனக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறுபவர்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் தான் இருக்கின்றார்கள் என்பது தெளிவான ஒன்றாகும்.

ஸைபுத்தீன் உட்பட இந்த உலமா சபையினர் அனைவரும் பரேலவிய சிந்தனைவாதிகள். இவர்களுக்கு ஏகத்துவக் கொள்கை என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மக்கள் இவர்களுடைய வலையில் விழுந்து விடக் கூடாது என எச்சரிக்கை செய்கிறோம்.

கஸ்ஸாலியைப் பற்றி சில அறிஞர்கள் கூறும் போது, அவர் கடைசி நேரத்தில் திருந்தி விட்டார் என்ற வாதத்தை வைக்கின்றனர். கஸ்ஸாலி திருந்தியிருந்தால் அவரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.

ஆனால் அதே சமயம், அவர் திருந்தி ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தால் அதை அவரே கூறியிருக்க வேண்டும். அவ்வாறு அவரிடமிருந்து அந்தக் கருத்து வராத வரை இந்த வாதத்தை நாம் ஏற்க முடியாது.

அவர் எழுதிய நூற்களை மேற்கோள் காட்டியே அவரது கொள்கை தவறு என்று நாம் விமர்சிக்கின்றோம். நாம் பார்ப்பது வெளிப்படையைத் தான். அவரது நூற்கள் மக்களை வழிகெடுத்து விடக் கூடாது என்பதால் அதை அடையாளம் காட்டுவது நம்முடைய மார்க்கக் கடமையாகும்.

—————————————————————————————————————————————————————-

அறிந்த செய்தியும் அறியாமை ரஷாதியும்

கே.எம். அப்துந் நாசிர்

இஸ்லாம் என்பது இறைவனுக்குரிய மார்க்கமாகும். இஸ்லாம் என்ற பெயரில் எந்த ஒரு சட்டத்தைக் கூறவும் நீக்கவும் இறைவனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

இஸ்லாம் இறை மார்க்கம் என்பதன் உண்மையான பொருள், இஸ்லாம் என்று எதை யார் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும். அல்லாஹ் கூறாத எந்த ஒன்றும் மார்க்கமாகக் கருதப்படாது. ஒன்றைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை.

(அல்குர்ஆன் 12:40)

இறைத்தூதரும் கூட இறைவனுடைய கட்டளைகளைத் தான் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுகின்றான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

(அல்குர்ஆன் 7:3)

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

 (அல்குர்ஆன் 6:106)

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 43:43, 44)

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களைத் தான் அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களை மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான். நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன் அதைக் கூட நிபந்தனையுடன் தான் கடமையாக்குகிறான். நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் நபிமார்கள் செய்தவற்றைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.

இதனை தெளிவாகப் பிரித்துக் காட்டுவது தான் ஸஹீஹ் முஸ்லிம் மற்றும் ஏனைய நூற்களில் இடம் பெற்றுள்ள “பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை” செய்வது தொடர்பான ஹதீஸ் ஆகும்.

நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தெளிவான கொள்கைகளுக்குப் பதில் சொல்ல முடியாத போலி முல்லாக்கள் தங்களுடைய மத்ஹபு வண்டவாளங்களை நியாயப்படுத்துவதற்காக, சரியான ஹதீஸ்களையும் கூட எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில் பலவீனமாக்கத் துவங்கி விட்டனர்.

எந்த ஒரு செய்தியையும் முறையான சான்றுகளைக் காட்டி பலவீனம் என்று நிரூபித்தால் அதனைத் ஏற்றுக் கொள்வதில் முதலாவதாக நாம்தாம் இருப்போம். அதே நேரத்தில் நபியவர்கள் செய்ததாக வரக்கூடிய சிறிய காரியமாக இருந்தாலும் பொய்யான காரணங்களைக் கூறி அதனை மாற்ற நினைத்தால் அத்தகையவர்களுக்கு முதல் எதிரியாகவும் நாம் நிற்போம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இறுதி நபித்துவம் என்ற தலைப்பில்   “நபியவர்கள் அல்லாஹ்விடமிருந்து நமக்கு போதித்தவை தான் மார்க்கம். அவர்கள் உலக விஷயங்களைப் போதிக்க வரவில்லை’ என்பதை “பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை” செய்வது தொடர்பான ஹதீஸ் கூறி விளக்கப்பட்டது..

இதற்கு மறுப்பளிக்கப் போகிறேன் என்று வந்த ஸைபுத்தீன் ரஷாதி என்பவர் இந்த ஹதீஸ் பலவீனம் என்று குறிப்பிட்டார். இது முஸ்லிமில் இடம் பெற்று இருந்தாலும் இதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.

இந்த ஹதீஸை பலவீனப்படுத்துவதற்கு அவர் கூறிய காரணங்கள் தான் மிகவும் பலவீனமானவையாகவும் அறியாமையின் வெளிப்பாடாகவும் இருந்தது. குழந்தைக்குப் புரையேறியதற்கான காரணத்தை பிறவிக் குருடி ஆய்வு செய்து கண்டுபிடித்ததைப் போன்று தான் இவரின் வாதங்கள் அமைந்துள்ளன. அவர் இரண்டு காரணங்களைக் கூறினார்.

  1. இது நபித்துவத்தின் தன்மைகளை தகர்க்கக்கூடிய வகையில் உள்ளது.
  2. இதன் அறிவிப்பாளர்களில் பலவீனமானவர்கள் உள்ளனர்.

இவை தான் அந்த இரண்டு காரணங்கள் ஆகும்.

இந்த ஹதீஸ் நபித்துவத்தின் தன்மைகளைப் பாதிக்கிறதா? என்பதை மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும் என்ற தனிக் கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அறிவிப்பாளர்கள் ரீதியாக அவர் கூறும் காரணங்கள் சரியானதா? என்பதை இதில் நாம் காண்போம்.

“குர்ஆனிற்கு அடுத்த படியாக உலகில் மிகச் சிறந்த நூற்கள் புகாரி, முஸ்லிம்’ என்று கூறும் மத்ஹப்வாதிகளில் ஒருவரான ஸைபுத்தீன் ரஷாதி, முஸ்லிமில் இடம் பெற்ற இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறுவது மிகவும் வியப்பானதாகும்.

அது மட்டுமில்லாமல் லயீஃப் என்பதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் மிகவும் வேடிக்கையானதாகவும், அறியாமையின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளது.

“பேரீச்ச மரங்களுக்கு ஒட்டுச் சேர்க்கை” செய்வது தொடர்பான ஹதீஸ் நான்கு ஸஹாபாக்கள் வழியாக முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கிலுமே ஏதாவது ஒரு அறிவிப்பாளரை போகிற போக்கில் பலவீனம் என்று வாதிக்கின்றார். அறியாத மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்பதைக் காண்போம்.

தல்ஹா பின் உபைதில்லாஹ்வின் அறிவிப்பு

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது, “இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர்என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லைஎன்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப் பற்றி (மதீனா விவசாயிகளிடம்) தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது.)

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அ(வ்வாறு செய்வ)தனால் அவர்களுக்குப் பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்துகொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததைவைத்து என்மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும், நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில், நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப் பற்றி பொய்யுரைக்க மாட்டேன்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் (4711)

இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஸிமாக் பின் ஹர்ப்” என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார் என்று “ஸைபுதீன் ரஷாதீ” கூறியுள்ளார்.

ஸிமாக் பின் ஹர்ப் பலவீனமானவரா?

ஸிமாக் அவர்களைப் பற்றிப் பாராட்டியும், குறை கூறியும் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன.

காரணம் இவர் தனது முதுமைக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அதனால் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். அந்த நேரத்தில் இவரைக் கண்டவர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.

முதுமைக்கு முந்தைய காலத்தில் மிகச் சரியாக அறிவிப்பவராக இருந்தார். அந்த நிலையில் இவரைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

இது போன்ற அறிவிப்பாளர்கள் எந்த ஹதீஸை மூளை குழம்புவதற்கு முன் அறிவித்தார்களோ அவை சரியான ஹதீஸ்களாகும்.

மூளை குழம்பிய பின் அறிவித்தவை பலவீனமானவை.

மூளை குழம்புவதற்கு முன்பா, பின்பா என்பது தெரியாவிட்டால் அவை முடிவு ஏதும் இன்றி நிறுத்தி வைக்கப்படும்.

இவர் மூளை குழம்பிய பின் இவரிடம் கேட்டவர் இக்ரிமா மட்டும் தான். ஸிமாக் வழியாக இக்ரிமா அறிவித்தால் அது பலவீனமானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் தீர்வு கண்டுள்ளனர்.

(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 4 பக்கம் 204)

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட ஹதீஸில் “ஸிமாக்”கிடமிருந்து அறிவிப்பவர் “அபூ அவானா” என்பவராவார். எனவே இந்த ஹதீஸ் மிகவும் சரியானதாகும். இதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

“ஸிமாக்”  என்ற அறிவிப்பாளர் முஸ்லிமில் 62 இடங்களில் இடம் பெற்றுள்ளார். அனைத்துமே “இக்ரிமா” அல்லாதவர்கள் வழியாக வரக்கூடிய அறிவிப்புகளாகும். இக்ரிமா அல்லாதவர்கள் வழியாக ஸிமாக்கின் அறிவிப்புகள் ஸஹீஹானவை என்பதால் தான் இமாம் முஸ்லிம் அவர்கள் அவர் இடம் பெறக்கூடிய 62 அறிவிப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். முஸ்லிம் அல்லாத திர்மிதீ, நஸாயீ, அபூதாவுத் போன்ற பிற நூற்களிலும் இவருடைய அறிவிப்புகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. அவை அனைத்துமே பலவீனம் என்று “ஸைபுத்தீன்” அறிவிப்பாரா?

பெரும்பாலான அறிவிப்பாளர்களுக்கு இரண்டு நிலைகள் இருக்கத் தான் செய்யும். அல்லது குறிப்பிட்ட ஒருவர் வழியாக வரும் அறிவிப்புகளில் தவறிழைத்திருப்பார். அவற்றை பிரித்தறிந்து அவர் எந்நிலையில் சரியாக அறிவித்துள்ளாரோ அந்த அறிவிப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் ஹதீஸ் கலையின் அடிப்படையாகும். அறிவு ரீதியிலும் சரியானதாகும்.

ஒரு அறிவிப்பாளர் மீது யாராவது, ஏதாவது ஒரு குறையைக் கூறி விட்டால் அதை மறுத்து விட வேண்டும் என்ற பாணியில் புகாரியின் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யப் புகுந்தால்  புகாரியை 40 பக்க புத்தகத்தில் சுருக்கி விடலாம். ஸைபுத்தீன் ரஷாதீயின் விமர்சனம் அந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் அறிவிப்பு

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் “(வழக்கமாக) இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம்” என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் “உதிர்ந்துவிட்டன’ அல்லது “குறைந்து விட்டன’.

அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், “நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே” என்று சொன்னார்கள்.

(இவ்வாறே சொன்னார்கள்) அல்லது இதைப் போன்று சொன்னார்கள் என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அஹ்மத் பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஆகவே, (அந்த ஆண்டில்) கனிகள் உதிர்ந்துவிட்டன” என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது. (நூல்: முஸ்லிம் 4712)

இந்த அறிவிப்பில் “இக்ரிமா இப்னு அம்மார்” என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என ஸைபுத்தீன் வாதிக்கின்றார்.

இக்ரிமா பின் அம்மார் பலவீனமானவரா?

ஸைஃபுத்தீன் ரஷாதி மிகப் பெரும் பொய்யர் என்பதற்கும் அவர் கூறுபவற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கும்  அவரது இந்த விமர்சனமே போதுமான சான்றாகும். உண்மையை மறைத்து மக்களுக்குக் கூறுபவர் எப்படி உண்மையாளராக இருக்க முடியும்.

இக்ரிமா பின் அம்மார் என்ற அறிவிப்பாளரை ஏராளமான அறிஞர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அவற்றை இங்கு வரிசைப்படுத்தினால் மிகவும் நீண்டு விடும். எனவே சுருக்கத்தைக் கருதி அவற்றைக் கூறவில்லை.

இக்ரிமா பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் “யஹ்யா பின் அபீ கஸீர்” என்பவர் வழியாக அறிவிப்பவற்றை மட்டுமே பலவீனம் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இதை அப்படியே மறைத்து பொதுவாக அறிஞர்கள் அவரைக் குறைகூறியுள்ளது போல் ஸைபுத்தீன் நாடகமாடியுள்ளார்.

தஹ்தீபுல் கமால், பாகம்: 20, பக்கம்: 25ல் இக்ரிமா பின் அம்மாரைப் பற்றி ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ள விமர்சனங்களை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

இமாம் யஹ்யா பின் மயீன், இமாம் அஹ்மத் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். என்றாலும் இமாம் யஹ்யல் கத்தான் அவர்கள், யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக வரக்கூடிய ஹதீஸ்களிலே இவரை பலவீனமாக்கியுள்ளார்.

யஹ்யா பின் அபீ கஸீருடைய ஹதீஸில் மட்டும் குழம்பியுள்ளார் என்று இமாம் புகாரி கூறியுள்ளார்.

இக்ரிமா பின் அம்மார் உறுதியானவர். யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள அறிவிப்புகளில் குளறுபடிகள் உள்ளது என்று இமாம் அபூதாவூத் கூறுகிறார்.

யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள ஹதீஸ்களில் குழம்பியுள்ளார் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறியுள்ளார்.

யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக உள்ள ஹதீஸ்களிலே தவிர மற்றவற்றில் இவர் மீது பிரச்சனையில்லை என்று இமாம் நஸாயீ கூறியுள்ளார்.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்ண்ட ஹதீஸில் “அபூ அந்நஜாஸீ” என்பவரிடமிருந்து தான் இக்ரிமா பின் அம்மார் அறிவிக்கின்றார். எனவே இந்த ஹதீஸ் இரு நூறு மடங்கு ஸஹீஹானதாகும் என்பதில் எள்ளளவு சந்தேகம் கூட கிடையாது.

மேலும் “இக்ரிமா பின் அம்மார்” என்ற அறிவிப்பாளர் முஸ்லிமில் 38 இடங்களில் இடம் பெற்றுள்ளார். இவை அனைத்தும் பலவீனம் என்று இவர் ஒத்துக் கொள்வாரா? இன்ன பிற நூற்களிலும் இவரது அறிவிப்புகள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன.

அனஸ் மற்றும் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கு மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்த மக்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, “நீங்கள் (இவ்வாறு) செய்யாமலிருந்தால் நன்றாயிருக்குமே!என்று சொன்னார்கள். ஆகவே, (அவர்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். அதனால் அந்த மகசூலில்) நன்றாகக் கனியாத தாழ்ந்த ரகக் காய்களே காய்த்தன.

அப்போது அவர்களைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்றபோது, “உங்கள் (பேரீச்ச) மரங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “நீங்கள் இப்படி இப்படிச் சொன்னீர்கள். (அதனால் நாங்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது)என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னைவிட) நீங்களே நன்கு அறிந்தவர்கள்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் (4713)

இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹம்மாத் பின் ஸலமா” என்ற அறிவிப்பாளர் பலவீனம் என்று ஸைபுத்தீன் ரஷாதீ கூறுகிறார்.

ஹம்மாத் பின் ஸலமா பலவீனமானவரா?

“ஹம்மாத் பின் ஸலமா” என்ற அறிவிப்பாளரை ஏராளமான இமாம்கள் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர். அவற்றை இங்கே பட்டியலிட்டால் மிகவும் விரிவாகி விடும். இவர் வயோதிகர் ஆன போது மனனத் தன்மையில் குறையுடையவராகி விட்டார் என்று இமாம் பைஹகி கூறியுள்ளார். ஆனால் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் நம்பகத் தன்மையின் உச்சகட்டத்தில் உள்ளதாகும்.

இமாம் புகாரி அவர்கள் ஹம்மாத் பின் ஸலமா உடைய அறிவிப்புகளை துணைச் சான்றாக பதிவு செய்துள்ளார்கள். ஹம்மாத் பின் ஸலமா அவர்கள் ஸாபித் என்பவர் வழியாக அறிவிக்கும் (6439வது ஹதீஸ்) அறிவிப்பை முதன்மை ஆதாரமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

ஏனெனில் ஹம்மாத் பின் ஸலமா என்பவர் ஸாபித் என்பவர் வழியாக அறிவித்தால் அது மிக மிக உறுதியானதாகும் என பல ஹதீஸ் கலை வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட செய்தி “ஸாபித்” என்ற ஆசிரியரிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கக்கூடியதாகும். அதிகப்படியாக “ஹிஸாம் பின் உர்வா” என்ற மற்றொரு ஆசிரியர் வழியாகவும் அறிவித்துள்ளார்.

ஸாபித் என்பார் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவித்தால் அந்த அறிவிப்பு மிக உறுதியானதாகும் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.

ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிப்பவர்களில் மஃமர் என்பவரை விட ஹம்மாத் பின் ஸலமா மிகவும் உறுதியானவராவார் என இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.

ஸாபித் என்பாரிடமிருந்து அறிவிப்பவர்களில் ஹம்மாத் பின் ஸலமாவிற்கு மாற்றமாக யாராவது அறிவித்தால் ஹம்மாத் பின் ஸலமாவின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும் என இமாம் இப்னு மயீன் கூறியுள்ளார்.

ஹம்மாத் பின் ஸலமா என்பார் ஸாபித்திடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளைத் தவிர வேறு எதையும் மூலச் சான்றாக (முதன்மை ஆதாரம்) பதிவு செய்யவில்லை. பிற அறிவிப்பாளர்களில் ஒரு சாராரிடமிருந்து அவர் அறிவிப்பவற்றை துணைச் சான்றாக இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்.

இந்த விவரங்கள் தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம்: 3, பக்கம்: 11) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

எனவே மேற்கண்ட அறிவிப்பும் மிக மிகச் சரியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

அல்லாஹ் உண்மையை உண்மை என்றும், பொய்யைப் பொய் என்றும் நமக்கு அறியச் செய்வானாக! வழிகேடர்களின் வழிகேட்டிலிருந்தும் நம்மைப் பாதுகாப்பானாக!

—————————————————————————————————————————————————————-

மகரந்தச் சேர்க்கையும் மாநபி வாழ்க்கையும்

கே.எம். அப்துந் நாசிர்

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு நபிமார்களை அல்லாஹ் தேர்வு செய்தான். அவர்களை மக்களுக்கு முன்மாதிரிகளாக ஆக்கினான்.

நபிமார்களை மக்கள் பின்பற்றுவதைக் கடமையாக்கிய இறைவன், அதை ஒரு நிபந்தனையுடன் தான் கடமையாக்குகிறான். அதாவது, நபிமார்கள் இறைவன் புறத்திலிருந்து பெற்ற செய்திகளின் அடிப்படையில் வழிகாட்டினால் அதைத் தான் பின்பற்ற வேண்டும். இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் சுய விருப்பத்தின் பேரில் நபிமார்கள் செய்தவைகளைப் பின்பற்றுவது நமக்குக் கடமையாகாது.

நபிவழி – சுன்னா என்றால் என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன. ஒன்று வணக்க வழிபாடுகள். மற்றொன்று உலகம் சம்பந்தப்பட்ட காரியங்கள். வணக்க வழிபாடுளைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தால் அவை மார்க்கச் சட்டமாகி விடும். ஆனால் உலகக் காரியங்களைப் பொறுத்த வரை அவர்கள் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடைத்தாலும் அவை மார்க்கச் சட்டமாகாது. தாம் செய்ததுடன் அவர்கள் வாயால் கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கச் சட்டமாக ஆகும்.

ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது போன்ற காரியங்களை இரண்டாம் வகைக்கு உதாரணமாக நாம் குறிப்பிடலாம். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும், தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர். ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை.

தாடியும், தலைமுடியும் வணக்க வழிபாடுகளில் உள்ளவை அல்ல. எல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்துக் கட்டளையிட்டதால் அது சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை முடி வளர்க்குமாறு மற்றவர்களுக்குக் கட்டளை இடாததால் அது சுன்னத்தாக ஆகவில்லை.

மற்றொரு உதாரணத்தின் மூலமும் இந்த வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொண்டனர். இதனால் பேரீச்சம் பழத்தை உணவாக உட்கொள்வது சுன்னத் என்று யாரும் கூற மாட்டோம். ஆனால் நோன்பு துறக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறந்ததுடன் பேரீச்சம் பழத்தின் மூலம் நோன்பு துறங்கள் என்று அவர்கள் ஆர்வமூட்டியதால் அது சுன்னத்தாக ஆகி விடுகிறது.

எனவே மார்க்க விஷயங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதும் மார்க்கமாகும். அவர்கள் செய்ததும் மார்க்கமாகும். அவர்கள் அங்கீகரித்ததும் மார்க்கமாகும்.

உலக விஷயங்களைப் பொறுத்த வரை அவர்கள் கட்டளையிட்ட அனைத்தும் மார்க்கமாகும். ஆனால் அவர்கள் செய்தவை அனைத்தும் மார்க்கமாகாது. அது போல் அவர்கள் அங்கீகரித்தவை அனைத்தும் மார்க்கமாகாது. மாறாக அவர்கள்  செய்ததுடன் மற்றவர்களுக்கும் அது குறித்துக் கட்டளையிட்டால் மட்டுமே அவை மார்க்கமாக ஆகும்.

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத் தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதற்காக நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத் தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்கள் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

மகரந்தச் சேர்க்கையும் மாநபி விளக்கமும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இதைச் செய்யாதிருக்கலாமே?” என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்எனக் குறிப்பிட்டார்கள். (நூல்: முஸ்லிம் 4358)

மற்றொரு அறிவிப்பில், நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான்என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  (நூல்: முஸ்லிம் 4357)

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  (நூல்: முஸ்லிம் 4356)

பரீரா சம்பவமும் பகுத்தறிவுக் கேள்வியும்

மற்றொரு ஹதீஸும் இந்த அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது.

பரீரா என்ற பெண் முகீஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப்பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீஸ் அதிக அன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடியவில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறினார்கள். அப்போது பரீரா “இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “கட்டளையில்லை; பரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியானால் எனக்கு முகீஸ் வேண்டாம்என்று பரீரா கூறி விட்டார்.

நூல்: புகாரி 5283

கணவரைப் பிடிக்காத போது அவரிடமிருந்து விலகிக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தி பரீரா விலகிக் கொண்டார்.

கணவன் மனைவியர் சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் போது இருவரும் சேர்ந்து வாழலாமே என்று நாம் அறிவுரை கூறுவோம். பிரியும் உரிமை இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்துப் போகலாமே என்ற எண்ணத்தில் இவ்வாறு ஆலோசனை கூறுவோம். இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை கூறினார்களா? அல்லது இனிமேல் இந்த உரிமை கிடையாது என்ற அடிப்படையில் ஆலோசனை கூறினார்களா? என்று பரீராவுக்குச் சந்தேகம் வருகிறது.

எனவே தான் இது மார்க்கக் கட்டளையா? அல்லது உங்களின் சொந்தக் கருத்தா? என வினவுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எனக் கூறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விருப்பத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்.

வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை பரீரா ஏற்காததால் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கருதவில்லை. எந்த அறிஞரும் இவ்வாறு கருதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங்களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லை; வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் எனும் போது வஹீயுடன் தொடர்பில்லாத நபித் தோழர்களையோ, நல்லறிஞர்களையோ பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் எப்படி அனுமதி இருக்கும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வஹீ தொடர்பில்லாத நபித் தோழர்களின் சொற்களோ, செயல்களோ மார்க்கத்தின் ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறினால் நபித் தோழர்களை இழிவுபடுத்துவதாகப் பிரச்சாரம் செய்வது எந்த அளவுக்கு அறியாமை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்… இன்ஷா அல்லாஹ்!

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்          தொடர்: 12

அழுது புலம்பிய ஆதம் நபி?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்து, அவரிடமிருந்து அவருடைய மனைவியையும் படைத்து இருவரையும் சொர்க்கத்தில் தங்குமாறு உத்தரவிட்டான். சொர்க்கத்தில் தாங்கள் விரும்பியதை தாராளமாகப் புசிக்குமாறும், அதேவேளை குறிப்பிட்ட ஒரு மரத்தின் பக்கம் நெருங்கக்கூடாது என்றும் இறைவன் எச்சரிக்கை செய்தான்.

ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் இறைவன் தடுத்த மரத்தை அவ்விருவரும் நெருங்கி அதன் கனிகளைப் புசித்தார்கள். இறைவனுடைய கட்டளையை மீறினார்கள். எனவே இறைவன் கோபம் கொண்டு சொர்க்கத்திலிருந்து அவ்விருவரையும் வெளியேற்றி விட்டான். பிறகு தாங்கள் செய்த தவறுக்காக இறைவனிடம் மன்னிப்புக் கோரி, துஆ செய்தார்கள். இச்சம்பவம் திருக்குர்ஆனில் 2வது அத்தியாயம், 35, 36, 37 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.

ஆதம் நபி, இறைவனிடமிருந்து ஒரு பிரார்த்தனையை கற்றுக் கொண்டு, இருவரும் அந்தப் பிரார்த்தனை மூலம் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினார்கள் என்று அவ்வசனங்கள் கூறுகின்றன. ஆதம் நபி இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட பிரார்த்தனை எது என்று அந்த வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

ரப்பனா ளலம்னா அன்ஃபுஸனா வ இன்லம் தக்ஃபிர்லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்.

இது தான் அந்த துஆ!

பொருள் : “எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள்புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்”

ஆதம் அலை அவர்கள் செய்த பிரார்த்தனை இது தான் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இறைவனுடைய வசனத்திற்கு மாற்றமாக, முரணாக, ஆதம் நபி செய்த துஆ என்று வேறுபட்ட பல துஆக்களை விரிவுரையாளர்கள் தங்கள் நூல்களில் எழுதியுள்ளார்கள்; புழுகியுள்ளார்கள். அதன் விவரம் வருமாறு:

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை பூமியில் இறக்கிய போது அவர் கஃபாவை ஒரு வாரம் சுற்றினார்கள். கஃபாவிற்கு நேராக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அல்லாஹும்ம அன்த தஃலமு ஸிர்ரி வ அலானிய்யத்தி ஃபஅக்பில் மஃதிரதீ வ தஃலமு ஹாஜதீ ஃப அஃதினீ சுஅலி வ தஃலமு மா இன்தீ ஃபக்ஃபிர்லீ துனூபி அஸ்அலுக ஈமானன் யுபாஹி கல்பி வ யகீனன் ஸாதிகன்… என்ற பிரார்த்தனையைச் செய்தார். அப்போது அல்லாஹ் “ஆதமே! நீ என்னிடம் பிரார்த்தனை புரிந்தாய். நான் உனக்கு பதிலளித்து விட்டேன்” என வஹீ அறிவித்தான்.

பொருள்: இறைவா நீ எனது இரகசியத்தையும், வெளிப்படையானவற்றையும் அறிவாய். எனவே எனது காரணத்தை ஏற்றுக் கொள். எனது தேவையை நீ அறிவாய். எனவே நான் கேட்பதை வழங்கி விடு. என்னிடத்தில் உள்ளதை நீ அறிவாய். எனவே எனது பாவத்தை மன்னிப்பாயாக. எனது உள்ளத்தை வலுப்படுத்தும் ஈமானையும் உண்மையான உறுதியையும் இறைவா நான் உன்னிடம் கேட்கிறேன்…..

நூல் : அத்துர்ருல் மன்சூர், பாகம் 1, பக்கம் 315

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் நழ்ர் பின் தாஹிர் என்ற பொய்யர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று பல இமாம்கள் கூறியுள்ளார்கள்.

பார்க்க: அல்லுஅஃபாஉ வல் மத்ருகீன், பாகம் 3, பக்கம் 161

ஆதம் (அலை) அவர்கள் இப்படி ஒரு துஆ செய்தார்கள் என்று இட்டுக்கட்டப்பட்ட செய்தியைத் தவிர தகுந்த வேறு ஆதாரம் எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அது குர்ஆன் கூறும் செய்திக்கு மாற்றமாகவே ஆகும். ஏனெனில் ஆதம் நபி செய்த துஆ குர்ஆனிலேயே விளக்கப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றமாக வேறு ஒரு துஆவை ஓதினார்கள் என்று ஒரு செய்தி வருமேயானால் அது குர்ஆனுடன் மோதுகின்ற காரணத்தினாலே அந்த செய்தி நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

இது தவிர இன்னும் பல துஆக்கள் கட்டுக்கதைகளோடு பின்னிப் பிணைந்து, புனைந்து விரிவுரை நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது. அவற்றில் உதாரணத்திற்கு ஒரு கதை உங்கள் பார்வைக்கு….

200 வருடங்கள் பாவமன்னிப்பு

ஆதம் அலை அவர்கள் இருநூறு வருடங்கள் பாவமன்னிப்பு வேண்டினார்கள். இறுதியில் இறைவன் அவர்களுக்குச் சில வார்த்தைகளை வழங்கினான். அதை அவருக்கு சொல்லிக் கொடுத்தான். (அதன் விவரம்) ஆதம் நபி தனது உள்ளங்கையை நெற்றியில் வைத்து அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் அவரிடத்தில் வந்து ஸலாம் கூறினார். ஆதம் நபி அழுததினால் ஜிப்ரீலும் அழலானார்கள். பிறகு “ஆதமே உங்களை பீடித்துள்ள துன்பம் என்ன? எதற்காக இந்த அழுகை?” என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் நபி “ஜிப்ரீலே எப்படி நான் அழாமல் இருப்பேன்? சொர்க்கத்திலிருந்து இழிவான பூமியின் பக்கம், நிலையான வீட்டிலிருந்து இழிவான, அழிவுள்ள உலகை நோக்கி, அருள் நிறைந்த உலகிலிருந்து கேடு உள்ள உலகை நோக்கி, நிரந்தரமான உலகத்திலிருந்து அழியும் உலகத்திற்கு, என்னை எனது இறைவன் அனுப்பி விட்டானே! ஜிப்ரீலே இந்த துன்பத்தை நான் எப்படி அடக்கி கொள்வேன்” என கேட்டார்கள். உடனே ஜிப்ரீல் தமது இறைவனிடம் சென்று ஆதம் அவர்கள் கூறியதை தெரிவித்தார். பிறகு அல்லாஹ் “ஜிப்ரீலே நீ ஆதமிடம் சென்று (நான் கூறியதாக) நான் உன்னை எனது கரத்தால் படைக்கவில்லையா? என்று கேளும். அவர் “ஆம் இறைவா’ என்று கூறுவார். எனது ரூஹை நான் உன்னில் ஊதவில்லையா என்று கேளும். “ஆம் இறைவா’ எனக் கூறுவார். எனது வானவர்களை உனக்காக பணியச் செய்யச் சொல்லவில்லையா என்று கேளும். ஆம் இறைவா என்பார். சொர்க்கத்தில் தங்க வைக்கவில்லையா என கேட்க, ஆம் இறைவா என்பார். நான் உனக்குக் கட்டளையிட்டு அதை நீ மீறவில்லையா என கேளும்; அதற்கும் ஆம் என்பார். … இறுதியில் ஆதமே உனது சப்தத்தை, கெஞ்சுதலை நான் செவியுற்றேன். உனது பாரத்தைக் குறைத்து, உனது அழுகைக்காக நான் உனக்கு அருள் புரிகிறேன். இதோ லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக வபிஹம்திக அமில்து சூஅன் வ ளலம்து நஃப்ஸி ஃபர்ஹம்னனி இன்னக்க அன்த்த கைருர் ராஹிமீன். லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக வபிஹம்திக அமில்து சூஅன் வ ளலம்து நஃப்ஸி ஃதுப் அலைய்ய இன்னக்க அன்த்த தவ்வாபுர் ரஹீம் எனக்கூறுவீராக. என்று ஆதமிடம் தெரிப்பீராக” என இறைவன் கூறினான்.

நூல் : அத்துர்ருல் மன்சூர், பாகம் 1, பக்கம் 319

ஆதம் நபி இருநூறு வருடங்கள் பாவமன்னிப்பு கேட்டதாகவும், சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக நெற்றியில் கை வைத்து அழுததாகவும், இறைவன் ஆறுதல் கூறியதாகவும், இறுதியில் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று துவங்கும் ஒரு துஆவை இறைவன் கற்றுக் கொடுத்தான் எனவும் பல விஷயங்கள் இந்த கட்டுக் கதையில் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. (இதை அருகில் இருந்து பார்த்தது யாரோ தெரியவில்லை.) இதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. இது முழுக்க முழுக்க கப்ஸா தானே தவிர இதற்குக் குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஏற்கத்தக்க எவ்வித ஆதாரமும் இல்லை.

இது போன்ற கட்டுக்கதைகளை பதிவு செய்த இமாம்கள் அதே இடத்தில் இது கதை என்று இனங்காட்டியிருக்க வேண்டாமா? என்பதே நமது கேள்வி.

முஹம்மதின் பொருட்டால்…

இது சம்பந்தமாக இன்னொரு தவறான நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு மத்தியில் நிலவுகின்றது. அதாவது ஆதம் (அலை) இறைவனிடம் குறிப்பிட்ட தவறுக்காகப் பாவமன்னிப்பு கோரும் போது, முஹம்மதின் பொருட்டால் தன்னை மன்னிக்குமாறு இறைவனிடம் துஆ செய்தார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் சில விரிவுரை நூல்களில் இந்தத் தகவல் கூறப்படுகின்றது. ஆனால் இதுவும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

ஆதம் அலை பாவம் புரிந்த போது தனது தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, “இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்” என கூறினார். அப்போது, “முஹம்மது யார்?” என இறைவன் வஹீ மூலம் கேட்க, “நீ கண்ணியம் பொருந்தியவன். நீ என்னை படைத்த போது எனது தலையை உனது சிம்மாசனத்தை நோக்கி உயர்த்தினேன். அப்போது லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. உன்னுடைய பெயரோடு யாரை சேர்த்திருந்தாயோ அவரை விட உன்னிடம் மதிப்பு பெற்றவர் எவரும் இல்லை என அறிந்து கொண்டேன்” என கூறினார். அதற்கு அல்லாஹ், “ஆதமே! அவர் உமது சந்ததியிலிருந்து தோன்றும் நபிமார்களில் இறுதியானவர். அவர் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்” என இறைவன் வஹீ மூலம் கூறினான்.

நூல் : அத்துர்ருல் மன்சூர்

பாகம் 1, பக்கம் 312

இது சில ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றிருந்தாலும் அந்தச் செய்திகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகும். இட்டுக்கட்டி, பொய்யான தகவல்களைச் சொல்லும் அப்துர் ரஹ்மான் என்ற அறிவிப்பாளர் இதில் இடம்பெறுகிறார். அபூஹாதம், ஹாகிம், இப்னுல் ஜவ்ஸீ போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவராலும் இவர் ஹதீஸ்களை அறிவிக்கத் தகுதியற்றவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 6, பக்கம் 178)

அது மட்டுமின்றி இறைவன் திருக்குர்ஆனில் கூறிய பிரார்த்தனைக்கு மாற்றமாக இருப்பதினாலும் இது மறுக்கப்பட வேண்டியதாகும்.

எனவே இது போன்ற நம்பிக்கை முஸ்லிம்களுடைய உள்ளத்தில் இருக்குமானால் அது குர்ஆனுக்கு எதிரானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

விஷமா? விவிலியமா?

கிறங்கிப் போன கிறிஸ்தவ அணி

உண்மையும் பொய்யும் ஒன்றாகாது; ஒருபோதும் ஒத்திராது. உண்மையின் வேடத்தில் பொய் ஊடுறுவும் போது அதற்காக வைக்கப்படுகின்ற வேதியியல் பரிசோதனையில் பொய் வெந்து பஸ்பமாகி விடும். ஒரு வேதத்திற்கு வைக்கப்படுகின்ற வேதியியல் சோதனை என்ன? விவாதம் தான்.

அல்லாஹ்வின் பாதையில் அழைக்கும் பணியில் தேவைப்படுகின்ற மூன்று முக்கிய ஆயுதங்கள் விவேகம், அழகிய விளக்கவுரை, விவாதம் ஆகியவையாகும். முதல் இரண்டு ஆயுதங்கள் பயன்படாத போது கடைசி ஆயுதம் விவாதம்.

இன்று கிறித்தவர்கள் முஸ்லிம்களின் வீடுவாரியாகப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்கின்ற போது குர்ஆனில் ஈஸா (அலை) அவர்கள் தொடர்பாக இடம் பெற்றுள்ள வசனங்களைத் திரித்து, தில்லுமுல்லுகள் செய்து, கிறித்தவத்தைத் தான் இஸ்லாம் போதிக்கின்றது என்று திருகுதாளம் செய்கின்றனர்.

இப்போது இஸ்லாத்தைக் காப்பதற்காக விவாதம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துவது அழைப்புப் பணியின் முக்கிய அணுகுமுறையாகும். இதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் இப்போது செய்து கொண்டிருக்கின்றது.

இந்த விவாதக் களத்தில், தங்கள் வேத வாக்கு, பைபிள் என்ற விவிலியம் உண்மையென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அளித்த விஷத்தை கிறிஸ்தவர்கள் அருந்தி நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. இப்படி ஆக்கப்பூர்வமாக, செயல்பூர்வமாக அவர்கள் பதிலளிக்காததால் அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என்பதை இந்த விவாதத்தின் இடையே நடைபெற்ற “விஷப்’பரீட்சை எனும் வேதியியல் பரிசோதனை வெளிப்படுத்தியது.

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 28:64)

இவர்களின் விசுவாசத்தை விஷம் வென்று விட்டது. இவர்களின் இமாலய வேதாகம விசுவாசத்தை ஒரு சாதாரண விஷ பாட்டில் பிசுபிசுக்க வைத்து விட்டது. ஏன்? அவர்களின் வேதாகமம் உண்மையல்ல. பொய்யின் கலப்படம். அதைத் தான் இந்த விவாதக் களம் வெளிப்படுத்தியது.

இந்த முன்னுரையுடன் வாருங்கள்; சகோதரர் நாஷித் அஹ்மத் நடத்திய விவாத உலாவைப் பார்த்து விட்டு வருவோம்.

பைபிள் இறை வேதமா? விவாதம் குறித்த ஒரு பார்வை

நாஷித் அஹமத்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த விவாதத்தில் கலந்து கொண்ட SAN என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாகப் பிரச்சாரம் செய்யும் வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைக் கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜாகிர் நாயக், மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை Comparitive study) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, ஜாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் Comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர். அதோடு, தாங்கள் விடுத்த விவாத அறைகூவலை ஏற்றுக்கொள்ளாமல் ஜாகிர் நாயக் பின்வாங்கி ஓடி விட்டார் என்று அவர்களது எழுத்துக்களிலும் அவர்கள் நடத்தும் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டு தாங்கள் தான் சத்திய மார்க்கத்தைச் சொல்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டனர் இவர்கள்.

(உண்மையில், ஜாகிர் நாயக் இவர்களுடன் விவாதிக்க முன்வரவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை இந்த விவாதத்தை முழுமையாகக் கவனிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். அது குறித்து இந்த கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.)

ஆக, இந்த SAN அமைப்பினர், தங்கள் மதத்தைப் பரப்புகிற தொழிலைச் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமியர்களையும் அதிக அளவில் சீண்டிப் பார்க்கும் வேலையை பல காலமாக செய்து வந்துள்ளனர். விவாதம் என்கிற பெயரில், இஸ்லாத்தை அதிக அளவில் விமர்சனம் செய்து, கிறிஸ்தவம் தான் தூய்மையான மார்க்கம் என்று நிலைநாட்ட முயல்வது இவர்களால் சர்வ சாதாரணமாக செய்யப்படும் வழிமுறை.

ஜாகிர் நாயக்கின் அமைப்பில் இருந்து விலகி தனி இயக்கம் (IREF) நடத்திக் கொண்டிருக்கும் அவரது மாணவர் இம்ரான் என்பவருக்கும் இந்த ஜெர்ரி தாமசுக்கும் நடந்த விவாதத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மேலும் கேரளா மாநிலத்தில், அதிகமான திருச்சபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்ற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம், குர்ஆனா? பைபிளா? என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில், பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர்ஆன் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் 28, 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டைக் கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கிலப் புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதற்கும் தயாரானார்கள்.

விவாதத்தைக் குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம், பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்கக்கூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணத்தால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?

பைபிளில் மனிதக் கையாடல் பல இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?

இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?

என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றாற்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.

ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவப் பார்வையாளர்களையும் கூட வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தைக் கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தைப் போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்தப் பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடையச் செய்தது. இதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது.

சரி! பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்தத் திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள். எப்படி?

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே! இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே! நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே! உங்கள் இறைவன் இவ்வளவு மட்ட ரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன.

இவைகளுக்கு முறையான பதில்களைச் சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள், அதற்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர்ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர்ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காமக் களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைப் பழங்களாகச் செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்லி தங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர்ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே!

விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்து கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படித் தான் பைபிளில் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதைக் கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்துப் பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர்ஆனிலும் தானே அடிமைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளது என்று சொல்லலாயினர்.

பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலைச் சொல்லாமல், குர்ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம்.

இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர்ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனித் தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர்ஆனைக் குறித்துக் கேளுங்கள்; இப்போது பைபிளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த நாம் இதற்குரிய மூல ஆதாரங்களைத் தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தோம்.

ஹதீஸ் என்று எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தால் இல்லை. விடாமல், அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை – பொய் சொல்கிறார்கள் என்றோம்.

பின்னர், “நாங்கள் உங்கள் தளத்தில் பார்த்தோம்’ என்றனர். நமது தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தைத் திறப்பது முடியாது. தவிர, இதைப் பேசி நேரத்தைக் கடத்தினால், பைபிள் குறித்து நாங்கள் அள்ளிப் போட வேண்டிய இன்னும் பல செய்திகளுக்கு நேரமில்லாமல் போய் விடும், ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதைத் தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்கக் கடமைப்பட்டவர்கள், அதைச் செய்யாமல், “உங்கள் குர்ஆனில் தவ்ராத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதே! இன்ஜீல் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே! அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (இயேசுவுக்கு) கொடுத்ததாகச் சொல்கிறானே! அப்படியானால், இந்தக் கால பைபிளில் மனிதக் கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது” என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை!

“பைபிள் இறை வேதம் தான் என்பதை, பைபிளைக் கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர்ஆனைக் கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர்” என்று ஒரு போடு போட்டோம்

மேலும், குர்ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும்

“இது உங்கள் சுய கருத்து, இதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா?’ என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, “எந்தக் குர்ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர்ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது” என்று வாதிக்கப்பட்டது.

ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தோம்.

இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்தக் கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக் கொள்கிறேன் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பைத் திசை திருப்பி,  “இதுதான் பைபிள்’ நூலில் அது தவறு, இது தவறு என்று சம்பந்தமில்லாமல் பேசத் துவங்கினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், குர்ஆனில், தவ்ராத் குறித்தும் இன்ஜீல் குறித்தும் எந்த வசனதிலெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவைகளை எல்லாம் நீண்ட பட்டியலாக தயாரித்துக் கொண்டு வந்து, ஒவ்வொரு வசனத்தையும் வாசித்து முதல் கேள்வி, இரண்டாம் கேள்வி என்று பட்டியல் போட்டனர்.

“நீங்கள் ஆயிரம் கேள்விகள் என்று பட்டியல் போட்டாலும், அதன் மூலம் நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் ஒன்றே ஒன்று தான். குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற தவ்ராத்தும் இன்ஜீலும் நாங்கள் இன்று வைத்திருக்கும் பைபிளும் ஒன்று என்பது தான் நீங்கள் சொல்ல வருகிற விஷயம். அது தவறு என்று நிரூபித்து விட்டோம். நீங்கள் அடுக்கிய பதினைந்து கேள்விகளின் நிலை இது தான்” என்று மிக எளிதாக விளக்கமளித்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்யது இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்பிரதிகள் எவ்வாறு இருந்தன? ஒவ்வொரு நூற்றாண்டிலும் அது எவ்வாறு மனிதக் கையாடல் மூலம் திருத்தப்பட்டன? எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின? என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூலப் பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர் கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட ஆதாரங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த ஆழமான ஆதாரங்களைக் கண்டு பாதிரிகள் குலைநடுங்கத் துவங்கினர் என்பது, விவாதத்தைக் கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது.

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும், உங்களையெல்லாம் விட மிகப் பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய “பைபிளில் நூறு தவறுகள்” போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களைத் தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களிலிருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

“உங்கள் சுய சிந்தனையை உபயோகித்துத் தான் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை. குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களிலிருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் என்ன? உங்களிடம் மறுப்பு இல்லை! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாகச் சொல்கிறீர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டும் குற்றச்சாட்டுக்கள் இல்லை! அதனால் தான் எங்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதிலும் இல்லை” என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், “பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை,

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

மாற்கு 16:17, 18

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:20

அதற்குக் கர்த்தர்: கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

லூக்கா 17:6

இந்த வசனங்களைக் காட்டி, எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் “பூ’ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர வேண்டாம். இதோ! இந்த பேப்பர் வெயிட் – இதை “பூ’ என்று ஊதித் தள்ளி விடுங்கள், நாங்கள் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக் கொள்கிறோம் என்று தெரிவித்தோம்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்த நாம், அதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து, “இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள்” என்றோம்.

இந்நேரம் வயிற்றில் புளியைக் கரைத்தது அவர்களுக்கு! ஆத்திரத்தில் எடுத்துக் குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ, எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே, நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டுக் காட்டுங்கள் என்று திருப்பிக் கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், “நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை! இதை அடுத்த வாரத் தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். அதே நேரம், இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்னையை முடித்துக்கொள்ளலாம்” என்றனர்.

இதற்குப் பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் இந்தப் பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்து “இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களைத் தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீங்கள் திரித்துள்ளீர்களா என்பதைத் தான் பரீட்சிக்கிறோம்” என்று பதில் அளிக்கப்பட்டது.

அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று இயேசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்தப் பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சுட்டிக் காட்டினோம்.

அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே, அந்தப் பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களைப் பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத் தான் வேண்டும். பைபிளும் அருந்தத் தான் சொல்கிறது என்று ஒரே போடாகப் போட்டனர் தவ்ஹீத் ஜமாஅத் அணியினர்.

வெலவெலத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத்த நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.

இறுதியாகப் “தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது”

“பைபிளில் உள்ள ஆபாசங்கள், முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்று எத்தனை விஷயங்களை அள்ளிப் போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலைச் சொல்லாமல் உங்கள் குர்ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிறீர்களே! குர்ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்பதைப் போன்று அன்றைக்கு நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களைத் தருவோம்” என்று கூறி முடிக்கப்பட்டது..

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கின்ற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்குத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

இந்த விவாதத்தின் மூலம் ஏகத்துவவாதிகளுக்குச் சில படிப்பினைகள் உள்ளன.

இது போன்ற விவாதத்தைச் சந்திக்க தவ்ஹீத் ஜமாஅத் முன்வந்துள்ள நிலையில், ஜாகிர் நாயக் போன்ற மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் பின்வாங்கினர் என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை என்றால் என்ன என்பதை அதன் ஆணி வேரிலிருந்தே தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிற நம்மைப் போன்ற ஒருவரால் தான் “குர்ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ எந்தக் கேள்வி என்றாலும் கேள்’ என்று துணிச்சலாக விவாதத்திற்கு அழைக்க முடியும். காரணம், குர்ஆன் எப்படி இறை வார்த்தையோ, அதே போன்று ஹதீசும் இறை வார்த்தை தான் என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ள நாம், இரண்டும் சமமான அந்தஸ்தில் உள்ளவை அல்ல என்பதையும் சேர்த்தே புரிந்து வைத்துள்ளோம். இதன் மூலம் குர்ஆனுக்குரிய முக்கியத்துவமும், ஹதீசுக்குரிய முக்கியத்துவமும் ஒரே நேர்கோட்டில் வைத்து அலசப்பட முடியாது என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

குர்ஆனைப் பாதுகாக்க நபி (ஸல்) அவர்களின் அன்றைய ஸஹாபாக்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு செய்த முயற்சிகளைப் போன்று ஹதீஸ்கள் விஷயத்தில் செய்யவில்லை. எனவே, ஹதீஸ் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக்கதையும் கூட இடைச்செறுகல்களாக மார்க்கத்தின் உள்ளே நுழைய ஆரம்பித்தன.

இந்தத் தூய மார்க்கத்தை அழித்து ஒழிப்பதையே தங்கள் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அல்லாஹ்வின் எதிரிகள், இது போன்ற கட்டுக்கதைகளை ஹதீஸ் என்று கூறி நம்மை நம்ப வைக்க முயற்சி செய்தனர். இதன் மூலம், உண்மையான இந்த மார்க்கத்தில் களங்கத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கணக்குப் போட்டனர்.

அவர்களின் அந்த கணக்கிற்குப் பலியான நம் சமூகத்தில் சிலர், ஹதீஸ் என்கிற பெயரில் எதைச் சொன்னாலும் அதை நம்புவதற்குத் தயாராயினர்.

அந்த வகையில், நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆனிலேயே சில வசனங்கள் மாற்றப்பட்டு விட்டன என்று ஹதீஸில் இடைச்செறுகலாகச் சேர்க்கப்பட்டதையும் ஹதீஸ் என்று நம்பினர்.

அல்லாஹ்வுக்கு இணையாக நபிமார்களுக்கும் மறைவான ஞானம் உண்டு என்று கூறி, குர்ஆனுக்கு எதிராக யுத்தம் செய்தாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.

நபி (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்களுடன் தனியாக இருந்தார்கள் என்று சில பொய்களைக் கட்டவிழ்த்து விட்டாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.

இன்னும் சொல்லப்போனால், நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதம் பைத்தியமாக இருந்தார்கள் என்று சொன்னாலும் கூட, சொல்லப்படும் செய்தியைக் குறித்து சிந்திக்காத இவர்கள், ஹதீஸ் நூல்களில் அல்லவா இது பதியப்பட்டுள்ளது, ஆகவே இதுவும் ஹதீஸ் தான் என்று நம்பினர்.

சொல்லப்படுகிற செய்தி உண்மையா, அது குர்ஆனுக்கு முரணா? அது நபிகளாரின் தன்மைக்கு உகந்த செய்தியா என்றெல்லாம் தங்கள் சிந்தனையை செலுத்தாமல், தாங்கள் இமாம்களாக நம்பிக் கொண்டு வந்தவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது என்ற ஒரே அளவுகோலைக் கொண்டு பார்க்கலாயினர்.

இத்தகையோரால், குர்ஆனுக்கு எதிரான விமர்சனங்கள் என்று கூறி தொடுக்கப்படும் மேற்கண்ட கேள்விகளை, கிறிஸ்தப் பாதிரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளை எதிர் கொள்ள இயலுமா? நிச்சயமாக இயலாது.

குர்ஆன் மட்டும் தான் மார்க்கம், குர்ஆனை உறுதி செய்கிற, குர்ஆனின் வரம்புகளைத் தாண்டாத ஹதீஸ்கள் மட்டுமே ஏற்கத்தக்கவை, இந்த இரண்டு அளவுகோல்கள் அல்லாத வேறு எதுவும் இஸ்லாமாகாது என்கிற கொள்கையை யார் கொண்டிருக்கிறாரோ, அவர்களால் தான் நெஞ்சுறுதியுடன் குர்ஆன், ஹதீஸ் குறித்த எந்த விவாதத்திற்கும் தயாராக முடியும் என்பதற்கு நடந்து முடிந்த இந்த விவாதமே சாட்சி.

எது இறை வேதம்? பைபிளா? குர்ஆனா? என்று ஒரே தலைப்பாக விவாதம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட நம் சமூகத்தினர் மத்தியில், பைபிள் குறித்த அலசலை தனித் தலைப்பாகவும், குர்ஆன் குறித்த அலசலை தனித் தலைப்பாகவும் தவ்ஹீத் ஜமாஅத் பிரித்து விவாதிக்க அழைத்ததன் மூலம், எதிர் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த முடிந்தது என்பதும் இந்த விவாதத்தின் மூலம் தெரிகின்ற உண்மை.

ஆக, எல்லா வகையிலும் இந்த விவாதத்தின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்தை தலை நிமிரச் செய்திருக்கிறான் அந்த ஏக இறைவன்! எல்லாப் புகழும் அவனுக்கே!