ஏகத்துவம் – பிப்ரவரி 2011

மார்க்கத்தை மறந்ததால் ஆட்சியை இழக்கும் அரபுத் தலைவர்கள்

துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய நாடான எகிப்தின் ஆட்சி ஃபிர்அவ்னிடமிருந்து மீட்கப்பட்டு மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.

அல்குர்ஆன் 7:137

பின்னர் அந்நிய சக்திகளிடமிருந்து மீட்கப்பட்டு முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திடம் வழங்கப்பட்டது. இந்தச் சமுதாயங்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் அவர்களிடமிருந்த ஏகத்துவக் கொள்கை தான்.

இந்த ஏகத்துவத்தை மறந்ததால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள துனிஷியாவில் இதுவரை 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய ஜைனுல் ஆபிதீன் என்பவர் நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்.

அதுபோல் ஏகத்துவக் கொள்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட எகிப்தையும் ஃபிர்அவ்னை விடக் கேடாக ஆட்சி செய்கின்ற அதிபர் ஹோஸ்னி முபாரக், கலவரத்தை அடக்குவதற்காக முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் கைது செய்து சிறையிலடைத்தும் கொண்டிருக்கின்றார். இந்தக் கொடுமைகளை நிறுத்தி ஹோஸ்னி முபாரக் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

இந்தப் புரட்சி தங்கள் நாடுகளிலும் தொற்றிக் கொண்டு விடுமோ என்று பயப்படுகின்ற இஸ்லாமிய நாடுகள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தாங்கள் நாடுகளில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————————————————–

களை பறிப்போம் பயிர் காப்போம்

தவ்ஹீது பிரச்சாரத்தில் கால் பதித்து கால் நூற்றாண்டைத் தாண்டி விட்டாலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை நாம் கண்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. அல்லாஹ்வின் கிருபையால் இந்த இயக்கம் ஆல் போல் தழைத்து விட்டது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பேரியக்கம் கிளைகளைக் கண்டிருக்கின்றது. இப்படி ஒரு வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்ற அதே வேளையில் ஒரு பெருங் கவலையும் நம்மை ஆட்கொள்கின்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் சர்வ சாதாரணமாக வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்கின்றனர். பெண் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்கின்றனர். இதை ஒரு பாவமாகக் கூடக் கருதவில்லை.

சிலர் பெண் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் தாங்கள் மணமுடிக்கும் பெண்ணுடைய வீட்டில் வைக்கும் விருந்துகளைக் கண்டு கொள்வதில்லை. “நாங்கள் மாப்பிள்ளை வீட்டு சார்பில் விருந்து வைத்துக் கொண்டோம்; பெண் வீட்டுக்காரர்கள் அவர்கள் சார்பில் விருந்து வைத்துக் கொண்டார்கள். நாங்கள் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை’ என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள்.

ஏகத்துவக் கொள்கையின் வளர்ச்சிக்கு உரமாகவும் ஊனாகவும் அமைந்தது தான் வரதட்சணை ஒழிப்புப் பிரச்சாரமாகும். பெண் வீட்டுக்காரர்களைப் பிடித்து உலுக்குவதும், அவர்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதும் வரதட்சணை என்ற கொடுமை தான்.

ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்றால்,

பெண்ணுக்கு நகை கொடுக்க வேண்டும்

தொகை கொடுக்க வேண்டும்

சீர் வரிசைகள் கொடுக்க வேண்டும்

விருந்து வைக்க வேண்டும்

இவையெல்லாம் சமூக நிர்ப்பந்தங்கள். பெண் வீட்டுக்காரர்கள் மீது சுமத்தப்பட்ட பாரங்கள். எழுதப்படாமல் அவர்கள் தலை மீது சுமத்தப்பட்ட பாறைகள். இந்த நிர்ப்பந்தங்களை சுட்டெறிக்கப் புறப்பட்ட தீப்பந்தம் தான் தவ்ஹீத் ஜமாஅத்! சமூக நிர்ப்பந்தம் என்ற விலங்கை உடைக்க வந்த விடுதலை உணர்வு தான் தவ்ஹீத் ஜமாஅத்.

பெண் வீட்டுக்காரர்களின் கைகளில் போடப்பட்ட விருந்து என்ற விலங்கை, கை காப்பை உடைக்க வேண்டிய தவ்ஹீதுவாதிகள் ஊமையாகி நிற்கின்றனர்.

“விருந்து வைக்கக் கூடாது என்று நாங்கள் பெண் வீட்டில் சொல்லி விட்டோம்; அவர்கள் கேட்கவில்லை’ என்ற சொத்தையான பதிலைத் தருகின்றனர். ஒரு காலத்தில் பெண் வீட்டார் வரதட்சணை தரவில்லை என்றால் அதற்காக திருமணத்தையே முறித்தனர். கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்தினர். அசத்தியத்தில் அப்படி ஒரு துணிச்சல்!

ஆனால் இன்று அதே பெண் வீட்டில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக, ஒரு சமூக நிர்ப்பந்தத்தை ஒழிப்பதற்காக, “பெண் வீட்டில் விருந்து வைத்தால் உங்கள் பெண்ணே வேண்டாம்’ என்று சொல்வதற்கு தவ்ஹீதுவாதிகளுக்குத் துணிச்சல் இல்லை; தெம்பில்லை!

“அவர்கள் வைக்கிறார்கள்; நாங்கள் என்ன செய்வது?’ என்ற அசட்டுத்தனமான, அலட்சியமான பதிலைத் தருகிறார்கள். அசத்தியத்தில் இருந்த அந்தத் துணிச்சல் இன்று சத்தியத்தில் இல்லாமல் போய் விட்டது.

இதில் வேதனை என்னவெனில், நபிவழித் திருமணம் என்று சொல்லிக் கொண்டு, மண்டபம், விருந்து போன்ற அனைத்து செலவுகளிலும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இதை இரு வீட்டார் அழைப்பு என்று வேறு அழைப்பிதழில் வெட்கமில்லாமல் போட்டுக் கொள்கின்றனர்.

இத்தகைய திருமணங்களை நடத்தும் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார், நாங்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக்கும் திருமண சபைகள், விருந்து வைபவங்கள் போன்றவற்றில் தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெட்கமின்றி கலந்து கொண்டு, வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு வருகின்றனர்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

அல்குர்ஆன் 4:140

இதுபோன்ற ஈனச் செயலைத் தான் இந்த வசனம் கண்டிக்கின்றது என்பதை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

ஏதோ, தவ்ஹீதில் அடியெடுத்து வைத்த புதிய தலைமுறையினர் இந்தத் தவறைச் செய்தால் கூட, தவறுதலாக நடந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாம். தவ்ஹீதில் பழுத்த பழங்கள் இப்படி அழுகிப் போவதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

திருமணத்தில் தான் தவ்ஹீதுவாதிகள் இப்படித் தடம் புரள்கின்றனர் என்றால் மரண விஷயத்திலும் இது போன்று தடம் புரண்டு விடுகின்றனர்.

தவ்ஹீதுவாதிகளின் குடும்பத்தில் உறவினர் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸா தொழுகையில் எந்த விசாரணையும் இன்றி கலந்து கொள்கின்றனர். இறந்தவரின் கொள்கை என்ன? அவர் ஏகத்துவவாதியா? அல்லது இணை வைத்தவரா? என்று விசாரணை கமிஷன் அமைக்கத் தேவையில்லை. இறந்தவர் தவ்ஹீதுக் கொள்கைக்கு எதிர்ப்பாக இருந்தாரா? மரணம் வரை தர்ஹாவுக்குச் சென்றவரா? மவ்லிது ஓதியவரா? என்ற வெளிப்படைகளை கூடப் பார்க்காமல் போய் ஜனாஸாவில் கலந்து கொள்கின்றனர்.

சில கட்டங்களில் இறந்தவர் தவ்ஹீதுவாதி! ஆனால் தொழுவிப்பவர் இணை வைப்பாளர்! இதுபோன்ற தொழுகைகளிலும் உறுத்தல் இல்லாமல் தொழுது விட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் ஐவேளை தொழுகையிலும் இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுகின்றனர்.

இது போன்றவர்கள் நமது அமைப்பில் பங்கெடுப்பார்களானால் அவர்கள் பச்சைப் பயிர்கள் அல்லர்! பகிரங்கக் களைகள் ஆவர். நெல் மணிகள் அல்லர்! சாவிகளும் சருகுகளும் ஆவர். இவர்களால் இயக்கம் அழியுமே தவிர ஆல் போல் தழைக்காது.

இந்தக் களைகளை இனங்கண்டு பறிப்போமாக! அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் தவ்ஹீதுப் பயிரைக் காப்போமாக! பொறுப்பேற்றிருக்கும் புது நிர்வாகம் இதில் ஒரு புது ரத்தம் பாய்ச்சட்டுமாக!

————————————————————————————————————————————————————–

அறிஞர்களின் பார்வையில் அலகாபாத் தீர்ப்பு

அனுபம் குப்தா….

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குள் மறைந்து கிடக்கும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக நியமிக்கப்பட்ட லிபரஹான் கமிஷனின் வழக்கறிஞர்.

லிபரஹான் கமிஷன் தனது அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முன்னாலேயே அதை விட்டு விலகி விட்டார். இதற்குக் காரணம், அறிக்கையில் அடங்கியிருக்கும் பதிவுகள் தொடர்பாக, கமிஷன் தலைவர் நீதிபதி லிபரஹானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான்.

பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டிருக்கிறார் அனுபம் குப்தா!

லிபரஹான் கமிஷனில் பத்து ஆண்டுகள் வழக்கறிஞராகச் செயல்பட்டார். அயோத்தியா இயக்கத்தின் அதி தீவிர ஆதரவாளர்கள் இவரின் குறுக்கு விசாரணையில் குறுக்கொடிந்து போனார்கள்.

செப்டம்பர் 30, 2010 அன்று நீதிபதி சுதிர் அகர்வாலின் 5098 பக்கங்கள் கொண்ட தீர்ப்பையும், எஸ்.யூ. கானின் 285 பக்கத் தீர்ப்பையும், தரம்வீர் சர்மாவின் 1181 பக்கத் தீர்ப்பையும் படித்துப் பார்த்து அவை ஒவ்வொன்றையும் மற்றொன்றுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்த ஒரு சில வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர்.

இவரிடத்தில் ஃப்ரண்ட் லைன் பத்திரிகையின் நிருபர்கள் வெங்கடேசன், வெங்கடேஷ் ராம கிருஷ்ணன் ஆகியோர் கண்ட பேட்டியை இப்போது பார்க்கப் போகின்றோம்.

கேள்வி: இந்த மூன்று நீதிபதிகளின் தீர்ப்பைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகின்ற கருத்து என்ன?

நீதிமன்றம் வழங்கிய இறுதி நிவாரணத்தில் நாடு மூழ்கிக் கிடக்கின்றது. இப்போது நாட்டின் கவனம் நீதிமன்றத்தை விட்டும் திருப்பப்பட்டு விட்டது.

சுதந்திரம் பெற்ற மதச் சார்பின்மை உலகை விட்டும் முழுமையாக விலகி ஏதோ தங்களை வேறொரு தனி ஓர் உலகத்தில், யுகத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டே சுதிர் அகர்வாலும், ஷர்மாவும் தீர்ப்பளித்திருக்கின்றனர் என்று முழுமையாக நம்புகிறேன்.

தான் ஒரு தீவிர இந்து மதப் பற்றாளர் என்று நீதிபதி ஷர்மா தெளிவாகக் குறிப்பிடுகின்றார். அவர் வைக்கின்ற வாதங்கள் அனைத்தும் அயோத்தியா பக்தர்கள் லிபரஹான் கமிஷன் முன் தெரிவித்த வாதங்களின் எதிரொலிகள்.

உதாரணத்திற்கு, இந்த வழக்கில் வைக்கப்பட்ட வாதங்களில் ஒன்றான, “பாபரி மஸ்ஜித் கட்டடத்தை பள்ளிவாசல் என்று அழைக்கலாமா? கூடாதா?’ என்ற விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

“பள்ளியைக் கட்டுவதற்குக் காரணம் எதுவாகவும் இருக்கட்டும். பாபரி மஸ்ஜிதின் மனாரா மற்ற பள்ளிகளுடன் ஒத்திருக்கின்றதா? என்ற விவகாரமாக இருக்கட்டும். இதில் சர்ச்சை செய்வது வீண்! அதை ஒரு பள்ளிவாசலாகத் தான் நாம் கருத வேண்டும்” என்று நீதிபதி சுதிர் அகர்வால் குறிப்பிடுகின்றார்.

நீதிபதி ஷர்மாவோ ஒவ்வொரு கண்ணோட்டமாக உள்ளே சென்று, “இது இஸ்லாமிய கொள்கை நெறிப்படி கட்டப்படவில்லை. அதனால் இது பள்ளிவாசலே இல்லை” என்று குறிப்பிடுகின்றார். இது நம்மை அப்படியே தூக்கி வாரிப் போடுகின்றது. காரணம், இது லிபரஹான் கமிஷன் முன்னால் சங் பரிவாரக் கும்பல் வைத்த அதே வாதம் தான்.

இப்போது இதற்கு எதிராக அவர்களிடம், “இது பள்ளி இல்லை என்றால் அதை நீங்கள் ஏன் எதிர்க்கின்றீர்கள்? ஏன் அதற்காக ஓர் இயக்கத்தைத் துவக்கினீர்கள்? அதை ஏன் உடைத்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அது பள்ளிவாசலே இல்லை என்ற வாதம் உண்மையில் ஒரு கேலிக் கூத்தாகும்.

ராமர் அங்கு பிறந்தார், கோயிலை இடித்து விட்டுத் தான் பள்ளி கட்டப்பட்டது, இது ஓர் அந்நிய நாட்டு அடக்குமுறையாளர்களின் அடக்குமுறைச் சின்னம் என்று மக்கள் நம்பி விட்டுப் போகட்டும். இதை ஒரு பள்ளிவாசல் இல்லை என்று சொல்வது முற்றிலும் பொருத்தமற்ற வாதமாகும். பிரச்சனையே இது பள்ளிவாசல் என்பதால் தான். பள்ளி இல்லை என்றால் அது அர்த்தமற்றதாகி விடும்.

நீதிபதி டி.வி. ஷர்மா

ஷர்மாவின் தீர்ப்பில் ஏற்கனவே நான் அனுபவத்தில் அறிந்து வைத்திருந்த வாதங்களே அதிகம் பிரதிபலித்தன. ஒளிவு மறைவு இல்லாத, மழுப்பாத, கலப்பற்ற, பொருந்தாத அடிப்படை வாத இந்து மதக் கண்ணோட்டத்திலேயே அவரது தீர்ப்பு எதிரொலிக்கின்றது.

நீதிபதி சுதிர் அகர்வால்

நீதிபதி சுதிர் அகர்வால் நீண்ட ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றார். தான் எழுதிய தீர்ப்பின் மூலம் ஒரு நினைவுச் சுவடியைப் படைத்திருக்கின்றார். தீர்ப்பின் இருபத்தியொரு வால்யூம்களிலும் தெளிவான ஒரு எழுத்தோட்டம், கட்டுக்கோப்பு இழையோடியிருக்கின்றது.

இத்தனையையும் நாம் கூறினாலும் அவர் ஓர் ஊறிய மதவாதி! ஷர்மாவைப் போன்று அவரும் ஒரு தீவிர இந்து மத நம்பிக்கையாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நீதிபதி எஸ்.யூ. கான்

நீதிபதி சிப்கத்துல்லாஹ் கான், தனது தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்ட முக்கிய சாராம்சங்களில் இதர இரு நீதிபதிகளை விட்டும் முற்றிலும் வேறுபடுகின்றார். இவரது தீர்ப்பில் (275வது பக்கம்) எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவாக நிலத்தைப் பிரிக்கின்ற விவகாரத்தில், “(வழக்கில் சம்பந்தப்பட்ட) ஏதாவது ஒரு சாராருக்கு அவர்களின் முழுமையான தனி பயன்பாட்டுக்கும் அனுபவத்திற்கும் நிலத்தை ஒதுக்க வேண்டும்  என்பது கட்டாயமல்ல! விரும்பத்தக்கது தான்” என்று குறிப்பிடுகின்றார்.

பள்ளியின் மைய மாடம் முஸ்லிம்களின் அனுபவத்தில் தான் இருந்தது. வெளியில் உள்ள ராம் சபுத்ரா மட்டுமே இந்துக்களின் அனுபவத்தில் இருந்தது என்று ஒப்புக் கொண்டாலும் அதை அவர் முஸ்லிம்களுக்கு அளிக்காமல் இந்துக்களுக்கு அளித்திருக்கின்றார்.

“பிற இனத்துடன் இரண்டறக் கலந்து, முன் யோசனைக்கு இடம் கொடுக்காமல் கையில் கிடைக்கின்ற சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டு சுதாரிப்புடன் வாழ்கின்ற இனம் தான் உயிர் வாழ முடியும்” என்ற சார்லஸ் டார்வின் தத்துவத்தை மேற்கோள் காட்டி பள்ளியின் மைய மாடத்தை இந்துக்களுக்கு ஒதுக்கி, தான் அளித்த தீர்ப்பை நியாயப்படுத்துகின்றார்.

வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், சிறுபான்மை சமுதாயத்தின் ஒருவராக இருந்து கொண்டு வாழ்வதற்காகப் பெரும்பான்மை சமுதாயத்தின் உணர்வுடன் கண்டிப்பாக ஒன்றிப் போயாக வேண்டும் என்று தெரிவிக்கின்றார்.

இந்த டார்வின் தத்துவத்தைப் பின்பற்றியதன் விளைவாக, அல்லது பெரும்பான்மைக்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றியதன் விளைவாக இவர் தனது தீர்ப்பில் குவிமாடத்தை இந்துக்களுக்கு வழங்கியதன் மூலம் இந்தக் கட்டடத்தின் அமைப்பையும் நிலத்தின் வரைபடத்தையும் தலைகீழாகப் புரட்டியிருக்கின்றார். ஒரு சொத்தைப் பிரிப்பதற்குரிய அடிப்படைக் கொள்கையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறார்.

டார்வின் ஒருபோதும் பெரும்பான்மையினரின் ஆதிக்க வெறிக்கு ஆதரவாக இருந்ததில்லை. டார்வினின் புனித விளக்கம் என்ற நூல், டார்வினும் அவரது குடும்பத்தினரும் அடிமைத்தனம் மற்றும் இன வாதத்தை ஒழிப்பதில் எவ்வளவு உறுதியாக இருந்தனர் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது.

கேள்வி: இடிக்கப்பட்ட பாபர் பள்ளிக்குக் கீழ் ராமர் கோயில் இருந்ததா? அல்லது தற்காலிகக் கோயில் எழுப்பப்பட்ட அதே இடத்தில் தான் ராமர் பிறந்தாரா என்ற வரலாற்றுப்பூர்வமான கேள்விகளுக்கு நீதிமன்றம் விடை காண முடியாதா? அது நீதிமன்றத்திற்கு அசாத்தியம் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

ஆம்! ஆனால் இல்லை! ஒரு குறிப்பிட்ட விவகாரம் குறித்து இரு தரப்பினரும் மோதிக் கொள்கின்ற போது அது தொடர்பாக நீதிமன்றத்தைக் குறை சொல்ல முடியாது. ஆயினும் நீதிமன்றத்திற்கு முன் பல்வேறு வழிமுறைகள், பரிகாரங்கள் இருக்கின்றன.

வரலாறு தொடர்பாக இரு தரப்பினரும் போரிடும் போது இதற்கு இப்படித் தான் தீர்வு. அதற்கு அப்படித் தான் தீர்வு என்று ஒரு முடிவுக்கு வருவது அசாத்தியம் என இந்த விஷயத்தில் நீதிமன்றம் தெரிவித்திருக்கலாம்.

லிபரஹான் கமிஷனுக்கு முன்பாக சாட்சியளிக்க வந்த உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங்கிடம் நான் எழுப்பிய கடைசிக் கேள்வி, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சம்பந்தமாகத் தான்.

ராமர் கோயிலுக்கு ஆதரவாக லிபரஹான் கமிஷன் முன் கல்யாண் சிங் தாக்கல் செய்தது தொல்லியல் ஆய்வுத் துறை அளித்த அறிக்கையின் கடைசி அத்தியாயத்தைத் தான்.

அந்த அறிக்கையின் முற்பகுதியில் கூறப்பட்ட செய்திக்கும் பிற்பகுதியில் கூறப்பட்ட செய்திக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் இருந்தது.

இந்துக் கோயில்களின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்த தூண்கள், பெரும் பெரும் கட்டடத் துண்டுகள் அனைத்தும் மிகுந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பின.

தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கற்பனை வாதங்கள் அனைத்தும் அப்போதைய பி.ஜே.பி. அரசாங்கத்திற்குத் தக்க உருவாக்கப்பட்டிருந்தன.

அறிவியல் ஆய்வு என்ற பெயரில் அரசாங்கத்தின் தொல்லியல் துறை அரசியல் துஷ்பிரயோகத்திற்காகப் பயன்பட்டதும் பலியானதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

வரலாறு மற்றும் தொல்லியல் துறை ரீதியிலான பித்தலாட்டங்களை இவ்வழக்கில் சாட்சி சொன்ன இடதுசாரி சிந்தனையாளர்கள் தோலுரித்துக் காட்டினர். இது நீதிபதி அகர்வாலிடம் அறிவு மற்றும் உணர்வுப்பூர்வமான பாரபட்சமான பார்வையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக அவர்கள் கம்யூனிஸ்ட்களாக, மார்க்ஸிஸ்ட்களாக இருப்பதே குற்றம் என்பது போல் நீதிபதி அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

வரலாறு அல்லது தொல்லியல் துறை விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் கூட உருப்படியாகத் தீர்வு காணுமா? என்பது ஒரு கேள்விக் குறி தான்.

எனினும் நீதிமன்றத்திற்கு முன்பு இந்த விவகாரம் வரும் போது அதை விட்டும் நீதிமன்றம் விலகிக் கொள்ள முடியாது. ஆனால் அதை அறிவார்ந்த அடக்கத்துடன் நீதிமன்றம் கையாள வேண்டும்.

தொல்லியல் துறைக்கு எதிரான ஆட்சேபணையை மதிப்பீடு செய்வதில் இந்த அறிவடக்கத்தை அகர்வாலின் தீர்ப்பில் காண முடியவில்லை. தொல்லியல் துறையின் அறிக்கைக்கு எதிராக சாட்சி சொன்ன சூரஜ் பான், டி. மண்டல் மற்றும் இன்னபிற அறிஞர்களை சுத்த கம்யூனிஸ்ட்கள், மார்க்ஸிஸ்ட்கள், முஸ்லிம்களின் கைக்கூலிகள் என்று கடுமையாகச் சாடி அவர்கள் மீது அகர்வால் தனது ஆத்திரத்தை அள்ளிக் கொட்டியிருக்கின்றார்.

நீதித்துறையின் நடுநிலைத் தன்மையை அகர்வால் தன்னுடைய இந்து மதச் சிந்தனைக்கு சரணடையச் செய்து விட்டார்.

கேள்வி: நீதிமன்றம் தனக்கு முன்னால் இருக்கும் இந்த வழக்கின் பிரச்சனையை, மத நம்பிக்கையின் அடிப்படையில் என எப்படி விளங்கிக் கொண்டது?

வழக்கு எண்: 4, தீர்வு காண வேண்டிய பிரச்சனை எண்: 11, “வழக்கில் உள்ள இந்தச் சொத்து ராமர் பிறந்த இடமா?” என்று தான் கேட்கின்றது.

தெளிவாகவே இது வரலாற்று உண்மை தொடர்பான கேள்வி! அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் அசாத்தியமான பணி தேவைப்படுகின்றது. அதனால் இந்தப் பிரச்சனையின் கேள்வியை, பொதுவாக “இந்துக்களின் மத நம்பிக்கை, சம்பிரதாயங்கள்படி இந்த வழக்கில் உள்ள சொத்து ராமர் பிறந்த இடமா?” என்பதாக அமைத்துக் கொண்டார்.

அவர் தனது தீர்ப்பில் இந்தப் பிரச்சனையின் கேள்வியை எப்படி மாற்றியிருக்கின்றார்? உருத்தெரியாமல் ஆக்கியிருக்கின்றார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! இது அவரது தீர்ப்பில் இடம்பெறுகின்ற அபாயகரமான பகுதியாகும்.

கேள்வி: 1989ல் ராமர் சிலை சார்பில் தியோகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகளின் அணுகுமுறை சரியானது தானா?

வழக்கின் வாதியாக, வழக்காளியாக சிலையை ஆக்குவது ரோமர்களின் சட்டத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட நடைமுறையாகும்.

மத நம்பிக்கை கொண்ட மக்களின் நீண்ட நலனைக் கருத்தில் கொண்டு, சிலைகளுக்கு ஒரு சட்டப்பூர்வமான கற்பனைப் பாத்திரத்தை வரலாற்று ரீதியாகக் கொடுப்பது அவசியம் என்று கருதப்பட்டது. அப்போது தான் கடவுளுக்காக வேண்டி அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் வசதியாகும்.

இந்துக் கடவுள்களுக்கு அல்லது சிலைகளுக்கு நீதிமன்றத்தில் வந்து வழக்காடும் சட்டத் தகுதி உண்டு என்பதில் அறவே சந்தேகமில்லை. இந்த அளவில் நீதிமன்றத்தின் கருத்து சரியானது தான். ஆனால், “சிலை இருந்த இடத்திற்கும் சட்டத் தகுதி உண்டு; அதுவும் சட்டப்பூர்வ வாதி” என்று நீதிபதி சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை. நீதித்துறை வரலாற்றில் இதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை.

அகர்வால் மற்றும் ஷர்மா ஆகியோரின் தீர்ப்பில் அவர்களின் மத வெறியைப் படம் பிடித்துக் காட்டுவதற்கு இந்தக் கருத்து அடங்கிய வரிகளே போதும்.

கேள்வி: 1961ல் தாக்கல் செய்த சுன்னத் ஜமாஅத் வழக்கை, காலம் கடந்தது என்று நீதிபதிகள் எவ்வாறு அறிவித்தனர்? 1989ல் ராமர் தன் நண்பர் என்று தியோகி நந்தன் மூலம் தாக்கல் செய்த வழக்கை காலம் கடந்தது அல்ல என்று எப்படி நியாயப்படுத்துகின்றனர்?

சட்டத்துறையில் கால வரம்பு என்பது மிகப் பெரிய நுணுக்கமான விஷயமாகும். உண்மையில் ஒருவர் மற்றொருவரின் சொத்தை அபகரித்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர் 12 வருடங்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகினார் என்றால் அவருக்குக் கால வரம்புச் சட்டப்படி நீதிமன்றம் நீதி வழங்காது.

இந்தச் சட்டம் பழைய வழக்குகளைத் தாக்கல் செய்வதைத் தவிர்க்கின்றது; தடுக்கின்றது. தன் சொத்தின் மீது, தானே கவனம் செலுத்தாதவர்களைக் காப்பதற்கு இந்தச் சட்டம் மறுக்கின்றது.

1989ஆம் ஆண்டு வழக்கைப் பொறுத்த வரை நீதிபதி அகர்வால் (பாரா 2, 617ல்) இவ்வழக்கு தாக்கல் செய்வதற்குரிய காரணத்தை (Cause of action) அறிவது கடினமாக உள்ளது என்று தெரிவிக்கின்றார்.

(ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமென்றால், தான் வழக்கு தொடுப்பதற்குரிய காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டும். இதற்குத் தான் (Cause of action) என்றழைக்கப்படுகின்றது.)

“ராமருக்காக அவரது நண்பர் தியோகி நந்தன் அகர்வால் (ராம் லல்லா) வழக்கு தொடர்வதை அவசியமாக்கும் எந்த ஓர் அச்சுறுத்தலும் இல்லை. அதனால் வழக்கு தொடுப்பதற்குரிய உரிமை அவருக்கு ஏற்படவில்லை” என்று அகர்வால் மீண்டும் 2, 630 பாராவில் தெரிவிக்கின்றார்.

அவரது இவ்விரு கருத்துக்களும் அவரது துறையின் திறமையை வெளிப்படுத்துகின்ற அதே வேளையில், 1989 வழக்கைத் தாக்கல் செய்வதற்குத் தகுந்த காரணத்தை (Cause of action) தியோகி நந்தன் அகர்வால் தெரிவிக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி விடுகின்றது.

இந்த வழக்கின் தன்மை இவ்வாறிருக்கும் போத சிவில் சட்ட நடைமுறை, ஆணை எண்: 7, விதி 11ன்படி, இந்த வழக்கு எவ்விதத் தயக்கமும் தாமதமும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டிய வழக்காகும்.

ஆனால் நீதிபதி அகர்வால் மேற்கண்ட காரணத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, இது காலம் கடந்தது என்று முஸ்லிம்கள் செய்த ஆட்சேபணையைத் தள்ளுபடி செய்திருக்கின்றார். இது ஒரு நயவஞ்சகத்தனமாகும்.

அவரது கருத்துப்படி, ஒரு சொத்துக்கு உரிமை (விளம்புகைப் பரிகாரம்) கோரி வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமானால் Limitation Act (கால வரம்புச் சட்டம்) விதி 58ன்படி ஒருவரது உரிமை பறிக்கப்பட்டிருக்க வேண்டும். அது தான் அவருக்கு வழக்கு தொடுப்பதற்குரிய உரிமையை அளிக்கின்றது.

(உதாரணத்திற்கு, என்னுடைய நிலத்தில் இன்னொருவர் கட்டடம் கட்டுகின்றார் என்றால் என்னுடைய உரிமை பறிக்கப்படுகின்றது. இது எனக்கு வழக்கு தொடுக்கும் உரிமையை அளிக்கின்றது. ஆனால் அதே சமயம், பாதிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்களுக்குள்ளாக வழக்குத் தொடுக்கப்பட வேண்டும்.)

1989ல் ராம் லல்லாவின் உரிமைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்றால் இல்லை. அவரது உரிமை ஏதேனும் பறிக்கப்பட்டதா என்றால் நிச்சயமாக இல்லை.

ஒரு பேச்சுக்கு ராம் லல்லாவின் உரிமை பறிக்கப்பட்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக 1989ல் வழக்கு தொடர முடியுமா? என்றால் முடியாது. காரணம், பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அதாவது 1949லிருந்து 1952க்குள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் ராம் லல்லாவுக்காக 1989ல் தியோகி நந்தன் அகர்வால் வழக்கிற்குள் வந்திருக்கின்றார். அவ்வாறு வந்தது செல்லாது என்று தான் நீதிபதி சுதிர் அகர்வால், தானே கூறிய கால வரையறைப்படி அதைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

ஆனால் 1989ல் எந்தவிதமான உரிமையும் ராம் லல்லாவுக்குப் பாதிக்கப்படவில்லை; பறிக்கப்படவில்லை. காரணம், “(அவர் பிறந்த இடமே கடவுள் ஸ்தானம், கடவுளுக்கு எல்லையே இல்லை) கடவுளுக்கு எதிராகக் கால வரையறைச் சட்டம் துவங்கவே இல்லை” என்று கூறி, தான் கூறிய கால வரைச் சட்டத்திற்கு நேர்முரணாக 1989 வழக்கு செல்லும் என்று தீர்ப்பளிக்கின்றார்.

இவரது எதிரும் புதிருமான தீர்ப்பு வழக்கின் தன்மையை முற்றிலும் மாற்றி விட்டது.

வாத அடிப்படையில் பார்த்தால், வழக்கு தாக்கல் செய்வதற்குரிய காரணத்தைச் சொல்லாத ஒரு காரணத்துக்காகவே இது தள்ளுபடி செய்யப்பட வேண்டிய வழக்காகும்.

நிரந்தர மைனர்?

நீதிபதிகள் அகர்வாலும், ஷர்மாவும் இந்துக் கடவுள் சிலை ஒரு நிரந்தர மைனர் என்ற கருத்தை ஒப்புக் கொள்கின்றனர். நீதிபதி கான் இதை ஒப்புக் கொள்ளவில்லை.

கால வரைச் சட்டம் சிலருக்கு விதிவிலக்கு அளிக்கின்றது.

அந்த விதிவிலக்கில் மைனர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், பைத்தியக்காரர்கள் ஆகியோர் அடங்குவர்.

எனவே கடவுளின் நண்பர் தியோகி நந்தன் அகர்வால், ராமருக்காக 1989ல் தாக்கல் செய்த வழக்கைக் காப்பாற்றுவதற்காக ராமர் சிலையை நிரந்தர மைனர் என்று அகர்வாலும், ஷர்மாவும் ஆக்கியிருக்கின்றார்கள்.

முதல் தீர்ப்புக்கு முரணான தீர்ப்பு

1926ஆம் ஆண்டு சிதார்மால் பஞ்சு லால் வழக்கில் நிரந்தர மைனர் தொடர்பான ஆட்சேபணை இதே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் வந்தது. “ஒரு சிலைக்கு நிரந்தர மைனர் என்ற தகுதி உண்டு” என்ற தத்துவத்திற்கு எதிராகத் தான் இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மதம் மற்றும் அறக்கட்டளை இந்துச் சட்டம் என்ற நூலிலிருந்து எஸ்.யூ. கான் இதற்கு மேற்கோள் காட்டுகின்றார். இது ஓர் ஆதாரப்பூர்வமான நூல்.

நீதிபதி பி.கே. முகர்ஜி எழுதிய இந்த நூலிலிருந்தே அகர்வாலும் ஷர்மாவும் தங்களின் சில முடிவுகளுக்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகின்றனர்.

அந்த நூல் தான், “இந்துக் கடவுள் சிலையையும் மைனரையும் ஒப்பிடுவது தவறானது மட்டுமல்ல. வழக்கின் போக்கையே வேறு பாதைக்கு மாற்றிவிடக் கூடியது” என்று குறிப்பிடுகின்றது.

இதன் அடிப்படையில் தான் நீதிபதி கான் இந்த விஷயத்தில் மற்ற இரு நீதிபதிகளுக்கு முற்றிலும் மாறுபடுகின்றார். நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராமருக்கு மைனர் தகுதி அளித்த தற்போதைய தீர்ப்பு அது ஏற்கனவே அளித்த தீர்ப்புக்கு நேர் மாற்றமானதாகும்.

வக்ஃப் வாரியத்தின் வழக்கு

நீதிமன்றம் இரண்டு காரணங்களுக்காக வக்ப் வாரிய வழக்கைத் தள்ளுபடி செய்கின்றது. அந்த இரண்டு காரணங்களை இப்போது பார்ப்போம்.

காரணம்: 1

பகுதி அனுபவ உரிமை

வக்ப் வாரிய வழக்கைப் பொறுத்த வரையில் இந்த வழக்கில் அனுபவ உரிமையைக் கோருவது மட்டும் தான் சரியான பரிகாரமும், நிவாரணமும் ஆகும்.

அனுபவப் பாத்தியதை பறிக்கப்படும் போது நீதிமன்றத்தில் முக்கியமாகக் கோர வேண்டிய பரிகாரம் அனுபவ உரிமை மீட்பு தான்.

அதற்குத் துணைப் பரிகாரமாக சொத்துரிமையை, விளம்புகைப் பரிகாரத்தைக் (Declaration) கோரலாம். வக்ப் வாரிய வழக்கு இப்படித் தான் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் இந்த வழக்கைத் தொடர்வதற்குக் (Cause of Action) 1949 டிசம்பர் மாதம் பள்ளியில் சில இந்துக்கள் சிலைகளைக் கொண்டு வைத்தது தான். இந்த அத்துமீறிய செயல் முஸ்லிம்களுடைய அனுபவ உரிமையைப் பறித்து விட்டது. அனுபவ உரிமை மீட்பு கோரி வழக்குத் தொடர வேண்டுமானால் கால வரைச் சட்டப்படி 12 வருடங்களுக்குள்ளாக வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

“சிலைகளைக் கொண்டு போய் வைத்ததால், முஸ்லிம்கள் முழுமையாகத் தங்கள் அனுபவ உரிமையை இழக்கவில்லை. (பகுதி அனுபவ உரிமை முஸ்லிம்களிடம் இருந்து கொண்டிருக்கின்றது) 12 வருடம் என்ற கால வரைச் சட்டப்படி அனுபவ உரிமை கோரி வழக்குத் தொடர வேண்டுமானால் முஸ்லிம்கள் அந்த அனுபவ உரிமையை முழுமையாக இழந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் முழுமையாக அனுபவ உரிமையை இழக்கவில்லை. அதனால் 12 வருடம் என்ற காலை வரைச் சட்டப்படி அனுபவ உரிமை கோரி வழக்கு தொடர முடியாது” என்று சுதிர் அகர்வால் தெரிவிக்கின்றார்.

அகர்வாலின் இந்தக் கண்டுபிடிப்பு சுத்தப் பொய்யும், அபத்தமும் ஆகும். 1949 டிசம்பர் மாதம் சிலையைக் கொண்டு வைத்ததால் தான் முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதுக்கு வர முடியாமல் ஆயினர். அது தான் உண்மை எனும் போது, முஸ்லிம்களிடம் எந்த அடிப்படையில் 1949க்குப் பிறகு அனுபவ உரிமை இருக்கின்றது?

காரணம்: 2

கால தாமதம்

இந்த வழக்கு, காலம் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

இந்த வழக்கு அனுபவ உரிமையை (Possession) முதன்மையாகக் கோருகின்றது என்பதை இந்த நீதிபதிகள் பார்க்காமல் அதை அப்படியே தூரத் தள்ளிவிட்டு, அதன் துணைக் கோரிக்கையான விளம்புகைப் பரிகாரத்தை (Declaration) பிரதான கோரிக்கையாக (திட்டமிட்டு) பார்த்திருக்கின்றனர்.

சொத்துரிமை கேட்டு வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய கால வரையறை (பழைய சட்டப்படி) ஆறு ஆண்டுகளாகும்.

(குறிப்பு: அனுபவ உரிமை கோரி வழக்கு தாக்கல் செய்வதற்குரிய கால வரையறை தான் 12 ஆண்டுகள். சொத்துரிமை கோரி வழக்கு தாக்கல் செய்வதற்கு பழைய சட்டப்படி 6 ஆண்டுகள். தற்போதைய சட்டப்படி 3 ஆண்டுகள் ஆகும்.)

“சர்ச்சைக்குரிய பகுதி பாபரி மஸ்ஜித்; அதில் இந்துக்களுக்கு உரிமை இல்லை” என்று முஸ்லிம்கள் கோரியிருந்தனர். இதை ஓய்ப்பதற்கு நீதிபதிகள் முஸ்லிம்களின் அனுபவ உரிமையை முதலில் ஓய்க்கின்றனர். அது எப்படி?

  1. 1949ல் இந்துக்கள் சிலைகளை வைத்த பின் அதை ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்று அறிவித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145, 146 பிரிவுகளின் கீழ் அதை நடுவர் Attachment செய்து விடுகின்றார். எப்போது ஒரு சொத்து Attachment செய்யப்பட்டு விடுகின்றதோ அது சட்டப்பூர்வமான பாதுகாப்பிற்குள் வந்து விடுகின்றது. இந்த அடிப்படையில் இந்த வழக்கில் அனுபவ உரிமை (Possession) கோரி வழக்கு தாக்கல் செய்வது அவசியமில்லை என்று ஆகி விடுகின்றது. நீதிபதிகள் இந்த Attachment-ஐ பெரிய ஆதாரமாக எடுத்துக் கொண்டு முதலில் முஸ்லிம்களின் அனுபவ உரிமையை ஓய்த்து விடுகின்றனர்.
  2. எப்போது சட்டப்பூர்வமான பாதுகாப்பில் உள்ள சொத்துக்கு அனுபவ உரிமை கோரும் வழக்கு இல்லை என்றாகி விடுகின்றதோ அப்போது சொத்துரிமை பிரகடனம் (Declaration) மட்டும் போதும் என்றாகி விடுகின்றது. சொத்துரிமைப் பிரகடனம் கோரும் வழக்கை 6 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு முஸ்லிம்கள் 6 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யத் தவறியதால் அந்த வழக்கு காலம் கடந்தது என்ற அடிப்படையில் செல்லாததாகி விடுகின்றது.

நீதிபதிகள் இவ்வாறு முதலில் அனுபவ உரிமை, இரண்டாவது சொத்துரிமை என்று இரண்டு உரிமைகளையும் ஓய்த்து விட்டனர்.

என்னுடைய பார்வையில் இவ்வழக்கில் அனுபவ உரிமை குறித்து எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி சாதாரண கேள்வியல்ல. அது மிகப் பெரிய விஷயமாகும். இதைச் சாதாரண பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்துகின்ற குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145, 146 என்ற குறுகிய பிரிவுகளைப் பயன்படுத்தித் தீர்க்கக்கூடிய அளவுக்கு இது சாதாரண விஷயமல்ல.

1949 டிசம்பரில் முஸ்லிம்கள் இழந்த அனுபவ உரிமையை Attachment என்ற அடிப்படையில் மட்டும் பார்த்திருப்பது மிக மிகக் குறுகிய கண்ணோட்டமாகும்.

கேள்வி: 1986ல் பாபரி மஸ்ஜிதின் வாயிற் கதவு பூட்டைத் திறக்கும்படி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் கதவைத் திறந்தது தான் 1992ல் பள்ளி உடைக்கப்படுவதற்குக் காரணமானது. அந்த உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை இந்த அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்புகள் தள்ளுபடி செய்து விட்டன. சட்ட விரோத உத்தரவைக் கண்டு கொள்ளாதது நியாயமா?

இந்த விவகாரத்தில் எஸ்.யூ. கானின் தீர்ப்பு ஒரு சிறப்புத் தகுதியைப் பெறுகின்றது. பூட்டுக்களைத் திறக்கும்படி மாவட்ட நீதிபதி போட்ட உத்தரவு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தவறான காரியமாகும் என எஸ்.யூ. கான் குறிப்பிடுகின்றார்.

ஆனால் ஷர்மாவோ தன்னுடைய 9 பக்கங்கள் கொண்ட தனித் தீர்ப்பில், “இந்துக்கள் ஏற்கனவே 1950லிருந்து அந்தப் பகுதியின் அனுபவத்தில் இருக்கிறார்கள் என்பதாலும் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டு விட்டதாலும், அந்த உத்தரவு இந்துக்களின் கட்டுப்பாட்டைப் பராமரிப்பதாலும் அது சரியான உத்தரவு தான்” என்று உறுதிப்படுத்துகின்றார்.

இதன் மூலம் ஷர்மா 1949ல் நடந்த சட்ட விரோதச் செயலையும், 1992ல் நடந்த சட்ட விரோதச் செயலையும் சட்டப்பூர்வமாக்கி விடுகின்றார்.

1986ஆம் ஆண்டு உத்தரவு ஓர் இடைக்கால உத்தரவு! வழக்கின் முக்கியப் பிரச்சனையே தீர்க்கப்பட்டு விட்டதால் அதற்கு இனி எந்த வேலையும் இல்லை என்றாகி விட்டது. அதனால் நீதிபதி சுதிர் அகர்வால் எந்தக் கருத்தும் சொல்லாமல் தந்திரமாக நழுவி விடுகின்றார்.

கேள்வி: அரசியல் சட்டம் 25ன் வரையறைகள் என்ன? இந்தச் சட்டம் மதத்தைப் பிரச்சாரம் செய்வதற்கும், அம்மதத்தைப் பின்பற்றி நடப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கின்றது. அந்தச் சட்டத்திற்குக் கீழ் இடம்பெறுகின்ற மத நம்பிக்கைக்குள் மதத்தின் முக்கியமான சித்தாந்தங்கள் எல்லாம் அடங்குமா?

அரசியல் சட்டம் 25 முழு அதிகாரம் படைத்த உரிமையைக் கொண்டிருக்கவில்லை. அது ஓர் வரையறுக்கப்பட்ட உரிமையைத் தான் கொண்டிருக்கின்றது. இதன் கீழ் வருகின்ற உரிமை, அரசியல் சட்டத்தின் மற்ற அடிப்படை உரிமைகளுக்குக் கண்டிப்பாகப் பொருந்தியாக வேண்டும். மதத்தின் பெயரால் எதைச் செய்தாலும் இந்தச் சட்டப் பிரிவு 25 வந்து தடுத்துக் காப்பாற்றி விடும் என்று கருதி விடக் கூடாது. அது அரசியல் சட்டத்தின் மற்ற அடிப்படை உரிமைகளுடன் உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கு எல்லா மதத்தினருக்கும் இந்தச் சட்டம் சுதந்திரத்தை அளிக்கின்றது. இந்தச் சட்டத்தை இந்துக்களுக்கு மட்டும் தான் என்று எல்லை நிர்ணயிப்பது அரசியல் சட்டத்தின் முக்கியத்தன்மையையே சிதைத்து விடும். இந்துக்களுக்குச் சமமாக முஸ்லிம்களும் அந்தச் சட்டப் பிரிவு 25ன் படி உரிமைகளைப் பெறுகின்றனர்.

இந்தச் சட்டத்தின் விதியைப் பயன்படுத்தி ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களை மற்ற மதத்தின் மீது திணித்து விட முடியாது.

எங்கே அந்த 2.77 ஏக்கர் நிலம்?

அலகாபாத் நீதிமன்றத்தின் கூறு கெட்ட, கூழ்முட்டை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகோரா, குழந்தை ராமர், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சாராருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

சட்ட நிபுணர்கள், அரசியல் விமர்சகர்கள் போன்றோரும் நீதிபதிகள் குறிப்பிடுவது 2.77 ஏக்கர் நிலத்தைத் தான் என்று விளக்கமளிக்கின்றனர்.

ஆனால் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று வாதிகளும் இதைத் தவறு என்கின்றனர்.

காரணம், தொடரப்பட்ட வழக்கு ஒரேயொரு துண்டு நிலம் தொடர்பாகத் தான். அது தோராயமாக 130 அடி நீளமும், 80 அடி அகலமும் கொண்ட 10,660 சதுர அடி நிலம் தான். இது தான் சர்ச்சைக்குரிய இடம். இதைப் பிரித்து, பிய்த்துக் கொடுத்தால் ஒவ்வொரு தரப்புக்கும் கிடைக்கப் போவது சுமார் 3500 சதுர அடி நிலம் தான். இங்கு 2.77 ஏக்கர் நிலம் எப்படி வந்தது?

ராம் கதா பூங்கா என்ற பெயரில் ஒரு சரித்திரப் பூங்காவை அமைக்கப் போகின்றோம்; சுற்றுலா வளர்ச்சி மற்றும் புனித யாத்திரிகர்களின் வசதிகளை மேம்படுத்தல் என்ற போர்வையில் அப்போதைய உத்தரபிரதேச கல்யாண் சிங் அரசு, 7.10.1991 மற்றும் 10.10.1991 ஆகிய தேதிகளில் பாபரி மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.

பின்னர் அந்த நிலத்தை ராம ஜென்ம பூமி நியாஸ் என்ற ராம ஜென்ம பூமி டிரஸ்டிடம் உ.பி. அரசு குத்தகைக்கு விட்டது. இதை எதிர்த்து ஆறு ரிட் மனுக்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இம்மனுக்களில் முக்கியமானது, பாபரி மஸ்ஜித் வழக்கின் மனுதாரரான முஹம்மது ஹாஷிம் அவர்களின் மனுவாகும்.

உ.பி. அரசின் அந்த உத்தரவைத் தடுத்து நிறுத்தி அலகாபாத் உயர்நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தடையை அக்டோபர் 1991ல் வழங்கியது.

இறுதியில் பள்ளி இடிக்கப்பட்ட பிறகு, உ.பி. அரசின் நிலம் கையகப்படுத்தும் ஆணையை 11.12.1992 அன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனுதாரர்களின் வாதங்களை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், “இந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பள்ளியை இடித்த இடத்தில் கோயில் கட்டலாம் என்ற தீய நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டது தான் இந்த அரசாங்க ஆணை’ என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இது தான் 2.77 ஏக்கர் உருவான பின்னணியாகும். அன்றிலிருந்து தான் 2.77 ஏக்கர் எல்லோரது மனதிலும் இடம் பிடித்தது. இந்த அடிப்படையில் தான் அலகாபாத் உயர்நீதிமன்றமும் 2.77 ஏக்கர் நிலத்தைப் பங்கு வைக்க வேண்டும் என்று சொல்கின்றது. ஆனால் இந்த நிலம் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை உள்ளடக்கவில்லை. ஆனால் அதே சமயம் சர்ச்சைக்குரிய ராம் சபுத்ரா (ராமரின் பாத மேடை), சீதா ரசோய் (சீதாவின் சமையலறை) ஆகியவற்றின் சில பகுதிகள் பாபரி மஸ்ஜித் இடத்தின் 10600 சதுர அடிக்குள் வருகின்றது.

எனவே 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரிய பகுதியே இல்லை எனும் போது அந்த நிலத்தைப் பிரிப்பது, பள்ளி, கோயில் கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மூன்று வழக்காளிகளும் கூறுகின்றனர். எனவே இந்த அடிப்படையிலும் இது தவறான தீர்ப்பு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பாபரி மஸ்ஜித் இடத்தைச் சுற்றியுள்ள 67.703 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு 1993ஆம் ஆண்டு கையகப்படுத்தியது என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.

————————————————————————————————————————————————————–

இப்படியும் சில தஃப்ஸீர்கள்      தொடர்-2

ஆகுக என்றால் ஆகாது (?)

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

இறைவன் என்பவன் எதையும் செய்து முடிக்கும் வல்லவன், மகா ஆற்றலுடையவன் என்று அனைத்து முஸ்லிம்களும் அவனது வல்லமையை, சக்தியை சரியாக புரிந்து வைத்துள்ளனர். இறைவனுக்கு இணை கற்பிக்கும் பலரின் செயல்பாடுகள் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாய் அமைந்திருந்தாலும் இறைவன் எதற்கும் வல்லமையுள்ளவன் என்ற நம்பிக்கையில் யாரும் குறை வைப்பதில்லை. அவனுடைய ஆற்றலை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை.

இறைவன் தனது ஆற்றலைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான்.

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து “ஆகுஎன்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.

அல்குர்ஆன் 2:117

எதையும் இறைவன் படைப்பதாக, நிகழ்த்துவதாக இருந்தால் அவன் ஆகு என்று கூறினாலே போதும்; உடனே அது ஆகிவிடும் என இறைவன் மக்களுக்குத் தன் ஆற்றலை விளக்கிக் கூறுகின்றான்.

இறைவன் ஒன்றைப் படைப்பதற்கு அல்லது நிகழ்த்துவதற்கு, “ஆகு’ என கூறுவதே அவனுக்கு போதுமானது என்றே பாமர இஸ்லாமியர்களும் புரிந்துள்ளனர்.

பாமரர்களும் சரியாகப் புரிந்துள்ள மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் என்ற பெயரில் இமாம் கஸ்ஸாலி கூறுவதைக் கேட்டால், படித்தால் இறைவனின் ஆற்றல் பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு அது வேட்டு வைப்பதாக உள்ளது. இதோ அந்த அற்புத விளக்கம் (?)

இவ்வசனத்தின் வெளிப்படையான பொருள் சாத்தியமற்றதாகும். ஏனெனில் (இறைவன் ஒன்றை நாடும் போது அதை நோக்கிக் கூறும்) ஆகு என்ற அவனுடைய சொல், ஒன்று உருவாகுவதற்கு முன்னரே அதை நோக்கிச் சொல்லப்படுவதாக இருந்தால் அது அசாத்தியமானதாகும். காரணம் இல்லாதது அது படைக்கப்படும் வரை உரையாடலைப் புரிந்து கொள்ளாது. அந்தப் பொருள் இருக்கும் போது அவ்வாறு (சொல்லப்படுவதாக) இருந்தால், இருப்பது உருவாக்கப்படுவதை விட்டும் தேவையற்றது.

நூல்: இஹ்யாவு உலூமித்தீன் வ அஹூ தக்ரீஜுல் ஹாஃபிழில் இராக்கி

பாகம்: 1, பக்கம்: 198

கஸ்ஸாலி இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை விளக்கினால் இக்கருத்தின் அபத்தம் புரிய வரும்.

இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால் ஆகு என்று கூறுவதே அவனுக்குப் போதுமானது என இறைவன் மேற்கண்ட வசனத்தில் கூறினான் அல்லவா? அதற்கு விளக்கம் கூறும் போது, “இவ்வாறு இறைவன் கூறுவது சாத்தியமே இல்லை’ என்கிறார்.

ஏனெனில் ஒன்றை நோக்கி “ஆகு’ என்று கூறுவதாக இருந்தால் அது முன்னால் இருந்தால் தான் அவ்வாறு கூற முடியும். கண் முன்னே இல்லாததை நோக்கி ஆகு என்று எவ்வாறு கூற முடியும் என படைத்த இறைனை நோக்கியே கேள்வி எழுப்புகிறார்?

“ஒரு வாதத்திற்கு இருப்பதை நோக்கி இறைவன் ஆகு என்று கூறுவான் என விளக்கமளித்தால் அதுவும் தவறு தான். ஏற்கனவே இருப்பதை நோக்கி ஆகு என ஏன் கூற வேண்டும்? ஏற்கனவே இருப்பதை நோக்கி ஆகு என கூறத் தேவையில்லையே? அது தான் இருக்கின்றதே’ என்கிறார்

“இவ்வசனத்திற்கு எப்படிப் பொருள் கொண்டாலும் கருத்து தவறாகவே இருக்கின்றது. எனவே இவ்வசனத்தின் பொருளை அப்படியே நம்பாமல் ஏதோ இறைவன் தனது ஆற்றலை பற்றிச் சொல்கிறான் எனப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார்.

மனிதர்களின் நிலையை எவ்வாறு மதிப்பிடுவோமோ அந்த நிலைக்கு இறைவனை வைத்துப் பார்க்கிறார் இந்தக் கல்விக் கடல் (?).

இல்லாத ஒன்றை நோக்கி இறைவன் பேசுகின்றான், அவற்றுக்குக் கட்டளையிடுகின்றான் என்பதே இவர் இவ்வாறு விளக்கம் அளிப்பதற்குக் காரணமாய் இருக்கின்றது.

இல்லாத ஒன்றை நோக்கிப் பேசுவது மனிதர்களுக்குச் சாத்தியமற்றதே. ஆனால் யாவற்றையும் படைத்தாள்கின்ற இறைவன், இல்லாததை நோக்கியும்  உரையாட ஆற்றலுள்ளவன். அவனைப் பொறுத்த வரை பகல், இரவு, பெரியது, சிறியது, இருப்பது, இல்லாமலிருப்பது எல்லாம் ஒன்றே.

இறைவனைப் பொறுத்த வரை இல்லாதது என்ற ஒன்றே கிடையாது. இல்லாதது என்பவையும் அவனுடைய நாட்டத்தில் இருக்கக் கூடியதே,

இறைவன் என்பவன் எதை நோக்கியும் பேச ஆற்றுலுள்ளவன் என்ற அடிப்படையைக் கூட கருத்தில் கொள்ளாமல் இறைவனின் வார்த்தை அர்த்தமற்றது என்ற அபத்தமான கருத்தை விளக்கம் என்ற பெயரில் கொட்டுகிறார்.

இந்த லட்சணத்தில், “இறைவா, கஸ்ஸாலிக்கு நீ கல்வியை வழங்கியதைப் போன்று எங்களுக்கும் கல்வியை வழங்குவாயாக” என்று மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்கள் பிரார்த்தனை புரிவது அறியாமையின் உச்சக்கட்டமாகவே தோன்றுகிறது,

சுருக்கமாகச் சொன்னால், இறைவனுக்கு எவ்வாறு பேச வேண்டும் என தெரியவில்லை என்ற விஷக்கருத்தை சொல்லாமல் சொல்கிறார் இமாம் (?) கஸ்ஸாலி.

நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:14

இல்லாததை நோக்கி இறைவனால் பேச இயலாது என்று கூறி இறைவனை பலவீனமானவனாகத் தானும் எண்ணி, மக்களையும் அவ்வாறு எண்ணம் கொள்வதற்குத் தூண்டுவதாக இவ்விளக்கம் இல்லையா?

இறைவனின் ஆற்றலையே கேள்விக் குறியாக்கக்கூடிய வகையில் விளக்கமளித்துள்ளார் கஸ்ஸாலி. இறைவனின் ஆற்றல் பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறியக் கூடியதாக உள்ளது இந்த விளக்கம்.

இவரது விளக்கம் அந்த வசனத்தை நன்கு விளங்கிட நமக்கு உதவுமா? அல்லது நம்மைக் குர்ஆனிலிருந்து தூரப்படுத்துமா? என்பதைச் சிந்திக்க வேண்டும். இமாம்களின் தவறுகளை நியாயப்படுத்தும் குறைமதியினர் இதற்குப் பதில் கூற வேண்டும்.

கவ்ஸருக்கு விளக்கம்?

(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.

அல்குர்ஆன் 108:1

கவ்ஸர் என்றால் நீர்த்தடாகம் எனவும், அதையொட்டிய பல நிகழ்வுகளையும் நபிகளார் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான்,  “ஜிப்ரீலே, இது என்ன?” என்று கேட்டேன்.

இது அல்கவ்ஸர்என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4964

மறுமை நாளில் மக்களின் தாகத்தைப் போக்குவதற்காக இறைவன் நபிகளாருக்கு “கவ்ஸர்’ எனும் நீர்த்தடாகத்தை வழங்குவான். அவர்களின் சமுதாய மக்கள் யாவருக்கும் அதிலிருந்து நபிகளார் நீரருந்த வழங்குவார்கள். ஒரு சிலர் இதில் நீரருந்த முடியாதவாறு தடுக்கப்படுவார்கள்.

இன்னும் இது போன்ற ஏராளமான விளக்கங்களை நபிகளாரின் பொன்மொழிகளில் காணமுடிகின்றது.

ஆக கவ்ஸர் என்றால் நீர்த்தடாகம் என்பது தெளிந்த நீரோடையைப் போன்று தெளிவான விஷயமாகும்.

இப்போது இமாம்கள் கவ்ஸருக்கு அளித்துள்ள விளக்கங்களை காண்போம்.

ஹஸன் என்ற அறிஞர் கூறுகிறார் : கவ்ஸர் என்றால் குர்ஆன் ஆகும்.

நூல்: இமாம் சுயூத்தி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்:  701

கவ்ஸர் என்பது இறைவன் நபிகளாருக்கு வழங்கிய நபித்துவம், இதர நன்மைகள், அல்குர்ஆன் ஆகியவைகளாகும் என இக்ரிமா அவர்கள் கூறுகிறார்கள்,

நூல்: இமாம் சுயூத்தி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்:  702

சொர்க்கத்தில் உள்ள நதியாகும். அதன் இரு ஓரங்களிலும் முத்துக் கலசங்கள் உள்ளது. அதிலே நபிகளாரின் மனைவிமார்கள் இருப்பார்கள்.

நூல்: இமாம் சுயூத்தி அவர்களின் அத்துர்ருல் மன்சூர்

பாகம்: 15,  பக்கம்:  701

கவ்ஸர் என்பதற்கு இமாம்கள் என்போர் தங்கள் விருப்பப்படி விளக்களித்துள்ளதை அறியலாம். ஒருவர் குர்ஆன் என்கிறார், ஒருவர் நபித்துவம் என்கிறார். மற்றொருவர் சொர்க்கத்தில் உள்ள நதி என்கிறார். மேலும் நபிகளாரின் மனைவிமார்களும் அங்கே இருப்பார்களாம்?

சம்பந்தமே இல்லாமல் நபிகளாரின் மனைவிமார்களை எதற்காக இத்துடன் இணைக்கிறார் என்பதை யூகிக்க இயலவில்லை.

நபிகள் நாயகம், கவ்ஸர் என்பது நீர்த்தடாகம் என விளக்கியிருக்கும் போது, அதைக் குறிப்பிடாமல் தங்கள் இஷ்டத்துக்கு விளக்கம் கூற வேண்டிய அவசியம் என்ன?

ஹதீஸ் அடிப்படையில் நின்று இமாம்கள் தங்கள் விளக்கங்களைக் கூறவில்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஹதீஸ் அடிப்படையில் தங்களின் விளக்கங்களைக் கூறியிருந்தால் அதை மனதார ஏற்போம். அதற்கு மாறாக அவர்களின் விளக்கம் இருக்குமெனில் அதை ஒருக்காலும் ஏற்காததுடன், அது தவறு என்று மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போமாக!

நரக சங்கிலி

பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.)

அல்குர்ஆன் 69:32

தீர்ப்பு நாளில் மனிதர்களை இறைவன் விசாரணை செய்து அவர்கள் உலகில் செய்த செயல்களுக்கேற்ப அனைவருக்கும் பதிவேட்டை வழங்குவான். சொர்க்கவாசிகளுக்கு வலது கையிலும் நரகவாசிகளுக்கு இடது கையிலும் அந்தப் பதிவேடு வழங்கப்படும்.

இவைகள் யாவும் இதற்கு முந்தைய வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

யாருக்கு இடது கையில் வழங்கப்படுமோ அவனது நிலை தான் மேற்கண்ட வசனத்தில் கூறப்படுகிறது.

எழுபது முழம் உள்ள சங்கிலியால் பிணைக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவான் என அவ்வசனம் கூறுகிறது.

இனி இதில் விளக்குவதற்கு ஒன்றுமே இல்லை என்றாலும் சில இமாம்கள் இந்தச் சங்கிலியையும் விட்டு வைக்கவில்லை. விளக்கம் தருவதில் சூரப்புலிகளான அவர்கள் இந்தச் சங்கிலியைப் பற்றி விளக்கம் தருகிறார்கள்.

அந்தச் சங்கிலியானது ஒருவனது பின் துவாரத்தில் நுழைந்து அவனது வாய் வழியாகவோ அல்லது அவனின் தலை வழியாகவோ வெளியே வரும் என எனக்குத் தகவல் கிடைத்தது.

நூல்: தஃப்ஸீரு அப்துர் ரஸ்ஸாக்

பாகம்: 3,  பக்கம்: 343

என்னே ஒரு கற்பனை! இந்தச் சங்கிலியைப் பற்றி இப்போது விளக்க என்ன அவசியம் நேர்ந்தது? இந்தத் தகவல் இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

இது போதாதென்று ஒரு முழம் என்பதையும் விலாவாரியாக விளக்கி விளாசுகிறார்கள்.

நரகவாசி பிணைக்கப்படும் சங்கிலி எழுபது முழம் கொண்டதாக இருக்கும் என இறைவன் தெரிவித்துள்ளான். ஒரு முழம் என்பதை இவ்வுலகில் நாம் எவ்வாறு கணக்கிடுவோமோ அது போன்று எழுபது முழமா? அல்லது ஒரு முழம் என்பதை வேறு விதத்தில் இறைவன் கணக்கிடுவானா என்பதை இறைவனும் இறைத்தூதரும் கூறாததால் இதைப் பற்றிய ஆய்வுக்குள் நாம் செல்ல வேண்டிய தேவையில்லை.

வேறு கணக்கு என்றிருந்தால் அதை இறைவன் நமக்குத் தெளிவாகவே விளக்கிக் கூறியிருப்பான். இதிலிருந்தே நாம் ஒரு முழம் என்பதை எவ்வாறு கணக்கிடுவோமோ அதைப் போன்று தான் எழுபது முழம் என்பதை விளங்கலாம்.  ஆனால் நவ்ஃப் என்ற அறிஞர் இதற்கு மாற்றமாக எந்த ஆதாரமுமின்றி தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.

நவ்ஃப் என்ற அறிஞர் அவ்வசனம் தொடர்பாக விளக்கும் போது ஒவ்வொரு முழமும் எழுபது காலடிகள் கொண்டதாக இருக்கும். ஒரு காலடி (தூரம்) என்பது உனக்கும் (அந்நாளில் அவர் கூஃபாவின் மைதானத்தில் இருந்தார்) மக்காவிற்கும் இடையில் உள்ள தூரத்தை விட வெகு தொலைவானதாகும் என நவ்ஃப் கூறியதை நான் செவியேற்றேன் என்று நுஸைர் என்பவர் கூறுகிறார்.

பார்க்க:  தஃப்ஸீரு அப்துர் ரஸ்ஸாக்

பாகம்: 3,  பக்கம்: 343

ஒரு முழம் என்பது எழுபது காலடிகள் தூரம் கொண்டதாம். ஒரு காலடி தூரம் என்பது கூட நாம் நினைப்பது கிடையாதாம். மக்காவிற்கும் கூஃபாவிற்கும் இடைவெளி தான் ஒரு காலடி தூரமாம்.

இதைப் போன்ற எழுபது முழம் கொண்ட சங்கிலியால் நரகவாசி பிணைக்கப்படுவான் என்று அந்த இமாம் விளக்கமளிக்கின்றார்.

இதை நபிகள் நாயகம் கற்றுத் தந்துள்ளார்களா? என்பதை சிந்திக்கத் தவறிவிட்டார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————————–

தொடர்: 11

ஸிஹ்ர் ஒரு விளக்கம்

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்களை மீண்டும் ஒருமுறை தொகுத்துப் பார்ப்போம்.

முதல் வாதம்

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக மனிதர்களில் இருந்தே அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாக இருந்ததால் இறைவனின் தூதர்கள் என்று மக்கள் நம்பவில்லை. மக்கள் நம்புவதற்காக மனிதனால் சாத்தியமாகாத சில அற்புதங்களை இறைவனின் தூதர்கள் என்பதற்கு உரிய சான்றுகளாக இறைவன் கொடுத்தனுப்பினான்.

மனிதர்கள் செய்ய முடியாத இந்தக் காரியங்களைச் செய்து காட்டுவதைத் தான் இறைத்தூதர் என்பதற்குச் சான்றாக அல்லாஹ் வழங்கினான் என்று இறைத் தூதர்கள் வாதிட்டனர்.

மனிதனுக்குச் செய்ய முடியாத ஒரு காரியத்தை சூனியக்காரர்களும் செய்தால் இறைத் தூதர்களின் அற்புதம் அர்த்தமற்றுப் போய்விடும். அற்புதம் செய்த உம்மையே அதிசயமான முறையில் மனநோயாளியாக்கி விட்டார்களே என்ற விமர்சனம் நபிமார்களை நோக்கி எழும்.

இந்தக் காரணத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்திருக்க முடியாது.

இரண்டாவது வாதம்

தாம் செய்ததை இல்லை என்று மறுக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்தின் மனநிலை பாதிப்பு இருந்தது என்று சூனியம் பற்றிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

இப்படி இருந்தால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை இறைத் தூதர் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மன நிலை பாதிப்பின் காரணமாக தன்னை இறைத் தூதர் என்கிறார்; இவராக எதையோ சொல்லி விட்டு இறை வேதம் என்கிறார் என்ற எண்ணம் தான் மக்களிடம் ஏற்படும்.

இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி அப்போதே தடைப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரத்திலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக அற்புதங்களை வழங்கி அருள் புரிந்த இறைவன் இறைத் தூதரின் மனநிலையைப் பாதிக்கச் செய்து இஸ்லாத்தின் பால் வராமல் மக்களை விரட்டியடிக்க மாட்டான்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி.

மூன்றாவது வாதம்

திருக்குர்ஆனை இறை வேதம் என்று மக்கள் நம்புவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக்கி அவர்கள் மூலம் மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் வேதத்தை வழங்கினான். (பார்க்க திருக்குர்ஆன் 29:48) அப்படி இருக்கும் போது வேதத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் மன நலம் பாதிக்கும் எந்த நிலையையும் ஏற்படுத்த மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கிறோம்.

நான்காவது வாதம்

நபிகள் நாயகத்தின் உள்ளத்தைப் பலப்படுத்திடவே குர்ஆனை சிறிது சிறிதாக அருளினோம் என்று அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 25:32)

ஒட்டு மொத்தமாகக் குர்ஆன் அருளப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்த போதும் அதை இறைவன் நிராகரிக்கிறான். ஒட்டு மொத்தமாக அருளினால் உள்ளத்தில் பலமாகப் பதியாது என்பதையே காரணமாகக் கூறுகிறான்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பலப்படுத்துவதன் மூலமே குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதற்கு முரணாக மேற்கண்ட ஹதீஸ்கள் அமைந்துள்ளன. எங்கோ ஒருவன் இருந்து கொண்டு ஆட்டிப் படைத்து இல்லாததை இருப்பதாகக் கருதும் அளவுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் பலவீனமாக இருந்தது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவே முடியாது.

ஐந்தாவது வாதம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் அல்ல என்று விமர்சனம் செய்த எதிரிகள் அவர்களைப் பைத்தியம் என்றும் சூனியம் வைக்கப்பட்டவர் என்றும் கூறினார்கள். ஆனால் இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுக்கிறான்.

சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது அல்லாஹ் அதைக் கண்டித்திருக்கிறான் என்றால் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட முடியாது என்பது விளங்கவில்லையா? குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் பொய்யானவை என்பது உறுதி.

ஆறாவது வாதம்

திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறுகிறான். எதிரிகள் சந்தேகம் கொள்ள இடமில்லாத வகையில் பல ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்திருக்கிறான்.

இந்த நிலையில் நபிகள் நாயகத்துக்கு மன நோய் ஏற்பட்டால் அந்தப் பாதுகாப்பு உடைந்து விடுகிறது. அவர்களின் உள்ளம் தெளிவற்றதாக ஆகிவிடுகிறது. பாத்திரம் ஓட்டையாகி விட்டால் ஒழுகத் தான் செய்யும் என்று தான் மக்கள் கருதுவார்கள். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்த மாட்டான் என்பதால் இது பொய்யான செய்தியாகும்

இப்படி ஆதாரங்களை எடுத்துக் காட்டியே சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் மறுத்துள்ளோம்.

இந்த வாதங்கள் சிலவற்றுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்மாயீல் சலபி தெரிவித்த அனைத்துமே அபத்தமாக அமைந்துள்ளதையும் இத்தொடரில் நாம் நிரூபித்துள்ளோம்.

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

அந்த அறிவிப்புக்களில் எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அவற்றை ஏற்க முடியாது. சுற்றி வளைத்து சமாளித்தாலும், அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அவை ஏற்கத்தக்கதாக ஆகாது. மேலே நாம் சுட்டிக் காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இவை மோதுவது தான் முக்கியக் காரணம்.

மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கும் இஸ்மாயில் ஸலபி பதிலளிக்கின்றார். அதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.

————————————————————————————————————————————————————–

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை

தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களை சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களை தொழுகைக்கு அழைப்பது, அதிகமான வணக்கங்கள் புரிவது, பாவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது, சில மார்க்க விஷயங்களில் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம்.

இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாகச் செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியை பலர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான் அவர் நல்லவரா? கெட்டவரா என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்குத் தீங்கிழைக்கும் அரசியல்வாதிகள், கொலைகாரர்கள், திருடர்கள் போன்ற தீயவர்களிடம் கூட சில நன்மையான காரியங்களை பார்க்கத் தான் முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறிவிடுவதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம்.

இதே போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக் கடமைபட்டிருக்கின்றோம். இவர்களிடம் பல நன்மையான காரிங்கள் இருப்பதைப் போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளன.

இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள்

நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

குர்ஆன், நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளை செய்யக்கூடாது  என தடுக்கவும் செய்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த  அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பணியை, தீமையை ஒழிக்கும் பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது  தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாகச் சென்றுவிடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர்.

இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம்; தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை விட்டதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியைப் புறக்கணித்துவிட்டனர்.

நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலை தூக்குகின்றன. இந்தச் சிரமங்களை  எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கிவிட்டால் அது வேறு விஷயம்.

ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக்கொள்ளாமல் அதை மறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது.

சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை

இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி  இருந்தது. தமிழகத்தில் தவ்ஹீது வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்ததால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால் சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை மூட நம்பிக்கைகள் எல்லா அனாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தன.

தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணை வைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூட நம்பிக்கைகளில் மூழ்கியும் இருந்தனர். வட்டி, வரதட்சணை போன்ற பாவங்களை சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருந்தனர். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.

இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டு, தீமைகளுக்கு எதிராகக் குரல் ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.

சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்தத் தவறான கொள்கையே காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது. தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை.

தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே தான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாகக் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூடத் தடுமாறாமல் இவற்றைச் செய்துவிடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.

இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியை புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்குக் கொண்டு வரவும் முடியாது.

அடிப்படையில் கோளாறு

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். இந்தச் சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னவரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள்

தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையை தளர்த்திக் கொண்டனர்.

இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது. இவர்களின் கொள்கைப்படி பார்த்தால் இவர்கள் நம்மை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நமக்கு எதிராக முழு முயற்சியுடன் செயல்படுகின்றனர். எப்பாடு பட்டாவது நம்மை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தப்லீக் உலமாக்களும் கப்ரு வழிபாட்டை ஆதரிக்கும் பரேலவிகளும் கொள்கையில் மாறுபட்டவர்கள். தர்ஹா வழிபாட்டை அங்கீகரிக்காத தப்லீக் உலமாக்கள் பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவில்லை; போர்க்கொடி உயர்த்தவில்லை.

மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.

தப்லீக் அணியில் முன்னணி வகித்த கலீல் அஹ்மது கீரனூரியார் நமக்கு எதிராகப் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார். தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கலீல் அஹ்மது கீரனூரி நம்மை மேடையில் விமர்சித்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!

அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம், அல்ஹம்துலில்லாஹ்!

இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.

தனிமனித வழிபாடு

இஸ்லாம் அனுமதிக்காத தனிமனித வழிபாட்டை இவர்களிடம் காண முடியும். அமீர் ஸாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முஸாபஹா செய்யும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர்.

இந்த அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முஸாபஹா  செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முஸாபஹா செய்கின்றனர்.

இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது. அப்படி ஒருவர் உறுதியாக அறியப்பட்டாலும் கூட இவ்வாறு செய்து மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி, பெருமைப்படுத்திக் கொள்வது கூடாது.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்களோ, அவர்களால் இறைநேசர்கள் என்று சான்று வழங்கப்பட்ட அவர்களின் தோழர்களோ இவ்வாறு தங்களை மக்களிடம் பெருமைபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக மக்களுடன் மக்களாக எல்லோரையும் போன்றே வாழ்ந்தார்கள். பணிவை வெளிப்படுத்தினார்கள். சொல்லப்போனால் தங்களை மக்களுக்குப் பணியாற்றும் பணியாளர்கள் என்றே கருதி மக்கள நலப் பணிகளைச் செய்தனர்.

பெரியார் கதைகள்

இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக, பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தக் கப்ஸாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றை சிந்தித்துப் பார்த்தால் இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான விஷயங்களும் இருப்பதைக் காணலாம்.

மனித குலத்துக்குத் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமாகப் பரவி கிடக்கின்றன. அப்படியிருக்க இந்தப் புருடாக்கள் எதற்கு? இவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர அறிவாளிகளாக ஆக்காது.

கடமை தவறுபவர்கள்

ஒரு மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய  கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துவதைப் போன்று பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்தக் கடமைகளை ஒருவர் முறையாக நிறைவேற்றினாôல் இதுவும் வணக்கமாகிவிடுகின்றது. எனவே அதற்கு நன்மை உண்டு என்று மார்க்கம் கூறுகின்றது.

இஸ்லாத்தின் உபதேசங்கள், கொள்கை கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் ஆகிய அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகக் குறிப்பிட்ட சில நாட்களை ஒதுக்குவது மார்க்கத்தில் குற்றமில்லை. மாறாக இது ஒரு நன்மையான காரியமே. ஆனால் ஒருவர், தான் ஆற்ற வேண்டிய மற்ற கடமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்.

இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்கவில்லை. ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள் ஜமாஅத், நான்கு மாதம் பத்து நாட்கள், என்று வாரக் கணக்கில், மாதக் கணக்கில் நாள் ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறுகின்றனர்.

குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் இதில் வர இயலாதவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள், “நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது; குடும்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது; எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு வர இயலாது’ என்று கூறுவர். ஆனால் ஜமாஅத்தினர் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்றுவிடுகின்றனர்.

இவர்களின் இத்தகைய பிரச்சாரத்தால் பலர் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும். தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.

தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் இறைவன் மீது பழி போடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டுவிடுவதில்லை.

மேலும் தப்லீக் ஜமாஅத்தில் உள்ள பலர் எளிமை என்ற பெயரில் தங்களைத் தானே வருத்திக் கொள்கின்றனர். மார்க்கம் அனுமதித்த இன்பங்களை ஹராமாக்கிக் கொள்கின்றனர். அலங்கோலமான தோற்றத்தில் தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.

தப்லீக் ஜமாஅத் என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படாத ஒரு ஜமாஅத் என்பதை விளங்கிக் கொள்ள மேற்கண்ட ஆதாரங்களே போதுமானவையாகும்.

————————————————————————————————————————————————————–

பொருளியல்      தொடர்: 11

செல்வமும் இறை நம்பிக்கையும்

பரக்கத் என்ற அதிசயத்தைப் பற்றியும், அதைப் பெறுவதற்கான வழிகளையும் அதற்கான பிரார்த்தனைகளையும் குறிப்பிட்டுள்ளோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரக்கத்தை வேண்டி பல இடங்களில் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம், அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டை விட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபி (ஸல்) அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து “எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்என்று  கேட்ட போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே அவர்களுக்கு வழங்கியவற்றில் அவர்களுக்கு பரக்கத் செய்வாயாக. மேலும் அவர்களை மன்னித்து அவர்களுக்கு அருள்புரிவாயாகஎன்று கேட்டர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3805

“பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று சொன்னதும், நபி (ஸல்) அவர்கள் அதிகம் தருவாயாக என்று கேட்கவில்லை. மாறாக, அவருக்கு நீ எதைத் தந்தாயோ அதில் பரக்கத்தைத் தருவாயாக என்று தான் கேட்டார்கள். காரணம் அதிகம் தந்தால் கூட சில வேளை அதுவும் சோதனையாகி விடும் என்பதால் இப்படிக் கேட்டார்கள். மேலும் அவருக்கு மறுமை வாழ்விற்காகவும் கேட்டார்கள். இதை ஒருவன் நம்பினால் அவன் திருட மாட்டான். மோசடி செய்ய மாட்டான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வான்.

மதீனா நகரத்திற்காகவும் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திக்கிறார்கள்.

அல்லாஹ்வே மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதை விட இரண்டு மடங்கு மதீனாவிற்கு பரக்கத் செய்வாயாகஎன்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல்: புகாரி 1885

ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற போது மிகவும் துன்பப்பட்டார்கள். எந்த அளவிற்கென்றால் உண்ணுவதற்குக் கூட உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். அவர்கள் மட்டுமின்றி அங்கே வாழ்ந்த மதீனாவாசிகளும் கஷ்டப்பட்டார்கள். அந்த அளவிற்கு வறுமை! அப்படிப்பட்ட வறுமை நீங்க பிரார்த்தனை செய்தார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு செல்வம் கொழிக்க ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் அவர்களுக்குப் போக மீதத்தை மிச்சப்படுத்தும் அளவிற்கு செல்வம் வந்தது.

அதே போல அவர்கள் பயன்படுத்துகின்ற அளவுப் பாத்திரத்திற்காகவும் பிரார்த்தனை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ அருள்வளம் (பரக்கத்) அளிப்பாயாக! குறிப்பாக அவர்களது ஸாஉ, முத்து ஆகியவற்றில் நீ அருள்வளத்தை அளிப்பாயாக!

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2130

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரக்கத்திற்காகத் தான் அதிகம் பிரார்த்திருக்கிறார்களே தவிர, அதிகமாகத் தருவாயாக என்று கேட்டதில்லை. இதை ஒருவன் சிந்திப்பான் என்றால் அவன் பொருளாதாரத்தின் மீது பேராசை கொள்ள மாட்டான்.

அதே போன்று, மனிதனுக்கு மிக முக்கியமான காரியம் திருமணம். அந்தத் திருமணத்தில் கூட பரக்கத்தைத் தான் கேட்டுள்ளார்கள். அதைத் தான் இன்று மணமகனை வாழ்த்தும் பிரார்த்தனையாக நாமும் கேட்கிறோம்.  இவையெல்லாம் பரக்கத்திற்காக நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனைகள்.

மனிதனுக்கு மிக அவசியம் பரக்கத்தாகும். அது வந்து விட்டால் மற்றதெல்லாம் அவனுக்கு லேசாகி விடும்.

அதுபோல பரக்கத்தை அடைவதற்கான தகுதியையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் அதை அடைய முடியாது. மாறாக சில வழிகளைக் காட்டித் தந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இருக்க வேண்டும்.

செல்வத்தை அடைவதில் பேராவல் கூடாது

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு,  “ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரக்கத் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரக்கத் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததுஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1472

செல்வத்தில் பரக்கத் வேண்டுமானால், எப்போது செல்வம் வரும் என்று அதைத் தேடி அலையக் கூடாது. மாறாக வந்தால் வரட்டும் என்பது போல் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

செல்வத்தை உரிய முறையில் அடைதல்

யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக் கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரலி)

நூல்: முஸ்லிம் 1899

எனவே திருட்டு, மோசடி, லஞ்சம், ஏமாற்றுதல், சூதாட்டம் இவை மூலம் நாம் சொத்தை அடைந்தோமா அல்லது நேர்மையான முறையில் அடைந்தோமா எனபதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நேர்மையான முறையில் சம்பாதித்தால் தான் பரக்கத் செய்யப்படும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் வழங்கியதை பொருந்திக் கொள்ளுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தன் அடியானை அவனுக்கு வழங்கியதிலிருந்து சோதிக்கிறான். எவனொருவன் அல்லாஹ் பங்கிட்டுத் தந்ததை பொருந்திக் கொள்கிறானோ அவனுக்கு அல்லாஹ் தந்தவற்றில் பரக்கத் செய்கிறான். மேலும் விசாலமாக்குகிறான். எவன் பொருந்திக் கொள்ளவில்லையோ அவனுக்கு அல்லாஹ் பரக்கத் செய்யமாட்டான்.

நூல்: அஹமத் 19398

எனவே அல்லாஹ் எதைக் கொடுத்தாலும் அதில் நாம் திருப்தி அடைய வேண்டும். அது ஒரு சோதனையாகும். அல்லாஹ் தந்தால் அது கொஞ்சமானாலும் அதில் அவன் அதிக நன்மை தருவான் என்ற எண்ணம் வர வேண்டும். அப்போது தான் பரக்கத் கிடைக்கும்.

அல்லாஹ்வே பொறுப்பாளன் என்ற நம்பிக்கை

வறுமையை அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாம் தான் உங்களுக்கும் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்.

அல்குர்ஆன் 17:31

வாழ்வாதாரம் வழங்குவதற்கு நான் பொறுப்பெடுத்துக் கொண்டேன் என்று அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான். எனவே பிள்ளைகளைப் பெற்றவர்கள் செல்வத்தைத் தேட முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய வறுமை வந்து விடுமே என்று எண்ணி குழந்தைகளைக் கொல்லக் கூடாது. பரக்கத்தை அடைய இது ஒரு வழி!

இன்னும் எந்த அளவிற்கு இறைவனை நம்ப வேண்டுமென்றால் அனைத்து ஜீவனுக்கும் அவன் தான் பொறுப்பெடுத்துக் கொண்டான் என்று நம்ப வேண்டும். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

அல்குர்ஆன் 11:6

அப்படியானால் பறவைகள், விலங்குகளுக்கெல்லாம் உணவளிக்கும் அல்லாஹ் எனக்கும் நிச்சயம் வாழ்வாதாரத்தைத் தருவான் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும். அப்படி இருந்தால் நாம் அல்லாஹ்வின் அளப்பெரிய அபிவிருத்தியைப் பெறலாம். இது தொடர்பாக வரும் ஹதீஸைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஃமின் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அல்லாஹ் அவனுக்கு ஒரு பறவைக்கு உணவளிப்பதைப் போல உணவளிப்பான். அது காலையில் ஒட்டிய வயிற்றுடன் செல்கிறது. ஆனால் மாலையில் நிரம்பிய வயிறோடு தன் வீட்டிற்குத் திரும்புகிறது.

நூல்: திர்மிதி 2266

இது போன்ற சிந்தனை நமக்கு வந்தால் நாம் பணத்திற்கோ, செல்வத்திற்கோ ஒருபோதும் பேராசைப்பட மாட்டோம். மேலும் இந்தப் பொருளாதாரத்தில் அல்லாஹ் வழங்கும்  வாழ்வாதாரத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வோம்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் யாசகம் கேட்டு வருகிறார். கீழே சிறிது பேரீச்சம்பழங்கள் கிடக்கிறது. அவருக்கு அதை எடுத்துக் கொடுத்து விட்டு நபி (ஸல்) அவர்கள், “இதைப் பெற்றுக் கொள். இதை நீ இங்கே வாங்க வராவிட்டால் அது உன்னைத் தேடி வந்திருக்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான், பாகம்: 8, பக்கம்: 33

இதை நாம் நம்ப வேண்டும். ஏனென்றால் செல்வத்தைப் பொறுத்த வரை அதை அல்லாஹ் அன்றன்றைக்குரிய ரிஸ்க் அன்றன்றைக்கு முடிவு செய்வதில்லை. மாறாக அல்லாஹ் மனிதனை எப்போது படைத்தானோ அப்போதே அவனுக்குரிய ரிஸ்கை எழுதி விட்டான். எனவே அவன் எதை எழுதினானோ அது தான் கிடைக்கும். மாறாக வேறொன்றும் கிடைத்து விடாது என்ற ஒரு நம்பிக்கை நம்மிடத்தில் வரவேண்டும். இந்த அடிப்படை விதியை நாம் நம்பினால் நாம் பொருளாதார விஷயத்தில் வீழ்ந்து விட மாட்டோம்.

மரணம் ஒருவனைத் தேடுவதைப் போல ரிஸ்க் ஒரு அடியானைத் தேடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் எதனை அல்லாஹ் நமக்கு விதித்திருக்கிறானோ அது தான் கிடைக்கும். எதை அவன் நாடவில்லையோ அது கிடைக்காது என்று நாம் நம்ப வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு சபையில் அனைவருக்கும் தேனீர் தந்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவரிடத்தில் வரும் நேரத்தில் அது கை தவறி கீழே விழுந்து விடும்; அவருக்குக் கிடைக்காது. அப்படியானால் அவருக்கு அது கிடைப்பதற்கு அல்லாஹ் நாடவில்லை என்று தான் பொருள். அதற்காக வருத்தப்படக் கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரிஸ்க் தாமதமாகிறதே என்று எண்ணி விடாதீர்கள். ஒருவன் அவனுடைய இறுதி ரிஸ்க் அவனை அடையாமல் அவன் மரணிக்க மாட்டான்.

நாம் அதிகமாக ரிஸ்கைத் தேடிக் கொண்டிருப்போம். ஆனால் கிடைக்காது. தாமதமாகிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட நேரங்களிலே நாம் என்ன நினைக்க வேண்டுமென்றால் நமக்கு இன்றைய நாளில் அல்லாஹ் நாடவில்லை. கண்டிப்பாக வேறொரு நாளில் கிடைத்து விடும் என்று நம்பினால் நாம் கவலைப்பட மாட்டோம். ரிஸ்கைப் பொறுத்த வரை வெறும் உணவை மட்டும் ரிஸ்க் என்று நினைக்கிறோம். நாம் வாழ்வதற்குரிய அனைத்துமே ரிஸ்க்காகும்.

இவற்றையெல்லாம் நாம் இறைவனை நம்ப வேண்டும் என்பதற்காக மார்க்கம் கூறுகின்றது. இதையெல்லாம் ஒருவன் நம்புவானேயானால் அவன் எந்தவித கவலை, துன்பம் எதிலும் வருத்தப்பட மாட்டான். பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் இது ஒரு முக்கியமான நம்பிக்கை!

அதே நேரத்தில் விதியை நம்புகிறோம் என்று கூறி ஒன்றையும் தேடாமலும் இருந்து விடக்கூடாது. நம் சக்திக்கேற்றவாறு உழைக்க வேண்டும். பொருளாதாரத்தைத் தேட வேண்டும் என்றெல்லாம் மார்க்கம் வலியுறுத்துகின்றது. அவற்றை நாம் இத்தொடரின் துவக்கத்தில் ஏற்கனவே கண்டோம்.

எனவே கிடைக்காவிட்டால் விரக்தி அடையக் கூடாது என்பதற்குத் தான் இது போன்ற நம்பிக்கைகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————————–

ஸகாத்

அப்துந் நாசிர்

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இக்கட்டுரையில் 1. ஸகாத் கட்டாயக் கடமை 2. ஸகாத்தின் இம்மை மறுமை பயன்கள் 3. ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை ஆகியவற்றைப் பற்றி விரிவாகக் காணவிருக்கின்றோம்.

நம்முடைய இந்தத் தொகுப்பில் ஸகாத் பற்றி வரக்கூடிய பலவீனமான ஹதீஸ்களை நாம் குறிப்பிடவில்லை. இன்ஷா அல்லாஹ் வரக் கூடிய இதழ்களில் ஸகாத் பற்றிய பலவீனமான ஹதீஸ்களை ஒரு தொகுப்பாக நாம் வெளியிடுவோம்.

நம்முடைய சக்திக்குட்பட்டு, நம்முடைய ஆய்வின் அடிப்படையில் ஸஹீஹான ஹதீஸ்களையே இக்கட்டுரையில் நாம் இடம் பெறச் செய்துள்ளோம்.

ஸகாத் என்றால் என்ன?

ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான்.

ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.

இஸ்லாத்தின் ஒரு தூண்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்லாம்  ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

  1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 8

இறை நம்பிக்கையின் அடையாளம்

ஒருவன் அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கின்றான் என்பதற்குரிய அடையாளங்களில் ஒன்று ஸகாத்தை நிறைவேற்றுவதாகும். ஒருவனிடம் செல்வ வசதி இருந்தும் அவன் ஸகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயமாக அவனிடம் இறை நம்பிக்கை இல்லை என்பதற்கு அதுவே தெளிவான சான்றாகும். இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சான்று பகர்வதும், தொழுகையை நிலை நாட்டுவதும், ஸகாத் கொடுப்பதும், போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசு பொது நிதிக்கு) வழங்குவதும் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7556

கட்டாயக் கடமை

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)

இவ்வவசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவதாகும். ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் “இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸகாத் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.  (அல்குர்ஆன் 99:5)

நபியவர்களின் உபதேசம்

ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1395

ஸகாத் என்ற அற்புதக் கடமை வறுமை ஒழிப்பிற்குரிய ஒரு அற்புத ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித் தான் நபியவர்கள் வறுமையை விரட்டியடித்தார்கள். நபியவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் வறுமையை இல்லாமல் ஆக்கிக் காட்டினார்கள். ஸகாத்தின் முக்கியமான நோக்கம் வறுமையை இல்லாமல் ஆக்குவது தான் என்பதை முஆத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் செய்த உபதேசத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

செல்வத்தில் ஸகாத் தவிர வேறு கடமையில்லை

நம்முடைய செல்வத்திலிருந்து நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மம் ஸகாத் மட்டும் தான். இதனை நிறைவேற்றாவிட்டால் அதற்குரிய தண்டனையை நாம் மறுமையில் அனுபவித்தாக வேண்டும். ஏனைய தான தர்மங்கள் நாம் நம்முடைய செல்வத்திலிருந்து விரும்பிச் செய்பவையாகும். செய்தால் நமக்கு இறையருள் அதிகம் கிடைக்கும். செய்யாவிட்டால் தண்டனை கிடைக்காது. ஆனால் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டனை உண்டு. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு)  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)என்றார்கள்.

அவர் “இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிரஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், “இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” எனக் கேட்க, “இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிரஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், “இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிரஎன்றார்கள்.

 அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 46

ஸகாத் வழங்காதவர்களுடன் போர் தொடுத்தல்

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் ஸகாத் வழங்க மறுப்பவர்களிடம் போரிட்டாவது ஸகாத்தைப் பெற வேண்டியது ஆட்சியாளரின் கடமையாகும்.

ஒருவன் அல்லாஹ்வை நம்புகிறேன் என்று வாயால் மொழிந்த பிறகு  தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் நிறைவேற்றும் போது தான் வெளிப்படையில் அவனை ஒரு முஸ்லிம் என்று இஸ்லாமிய அரசாங்கம் தீர்மானிக்கும்.

வெளிப்படையில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தையும் நிறைவேற்றுபவர்கள் மீது போர் தொடுப்பதும், அவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதும் மாபெரும் குற்றமாகும். பின்வரும் வசனம் மற்றும் ஹதீஸ்கள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

புனித மாதங்கள் கழிந்ததும் அந்த இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.   (அல்குர்ஆன் 9:5)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காத வரை (இணை வைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 25

நபிவழியை நிலைநாட்டிய அபூபக்ர்

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு சிலர் ஸகாத்தை மறுத்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்காக அவர்களுடன் போர் தொடுத்தார்கள். இது நபிவழியின் அடிப்படையில் மிகச் சரியான நடவடிக்கையாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார்; தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர! அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், உமரை நோக்கி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்என்றார்கள்.

நூல்: புகாரி 1400

ஸகாத்திற்காகவே செல்வம் தரப்படுகிறது

நாம் சம்பாதிக்கும் செல்வம் என்பது முழுவதுமே நமக்குரியதில்லை. நம்முடைய தேவைக்கும் அதிகமாகத் தான் இறைவன் செல்வத்தைத் தருகிறான். எனவே இறைவன் நமக்குத் தரும் செல்வத்தில் ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளை நாம் முறையாக வழங்கி விட வேண்டும்.

அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.   (அல்குர்ஆன் 70:24, 25)

இறைவன் செல்வத்தை நமக்கு வழங்கியிருப்பதே ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் என்பதைப் பின்வரும் நபிமொழியும் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அபூ வாகிதில் லைஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மீது இறைச் செய்தி அருளப் பெற்ற (கால கட்டத்தில்) நாங்கள் அவர்களிடம் வருபவர்களாக இருந்தோம். அவர்கள் அதனை எங்களுக்கு அறிவிப்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்:

கண்ணியமானவனும், யாவற்றையும் மிகைத்தவனுமாகிய அல்லாஹ் கூறினான்: நான் செல்வத்தை வழங்கியிருப்பதே தொழுகையை நிலை நாட்டுவதற்காகவும், ஸகாத்தை நிறைவேற்றுவதற்காகவும் தான். ஆதமுடைய மகனிற்கு (செல்வத்தால்) ஒரு கணவாய் இருந்தாலும் அவன் இரண்டாவதும் தனக்கு இருப்பதற்கு ஆசைப்படுவான். அவனுக்கு இரண்டு கணவாய்கள் இருந்தால் அவன் அந்த இரண்டுடன் மூன்றாவதும் தனக்கு ஆவதற்கு ஆசைப்படுவான். ஆதமுடைய மகனின் வயிற்றை மண்ணைத் தவிர வேறு எதுவும் நிரப்பாது. பிறகு யார் பாவ மன்னிப்புக் கோரி மீள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்குகிறான்.

நூல்: அஹ்மத் 20900

மலை உச்சியிலிருந்தாலும் ஸகாத் கொடுக்க வேண்டும்

இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் அரசாங்கமே முஸ்லிம்களிடமிருந்து ஸகாத்தை வசூலித்து விடும். ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடத்தில் இருந்தாலும், ஸகாத்தை வசூலிப்பதற்கு யாருமே இல்லையென்றாலும் அவனே முன்வந்து ஏழைகளுக்குரிய ஸகாத்தை வழங்கிவிட வேண்டும். இதிலிருந்து இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாட்டில் வாழ்பவர்களுக்கும் ஸகாத் கடமை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். மலை உச்சியில் இருந்தால் கூட ஸகாத்தை கட்டாயம் நிறைவேற்றிவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் (குழப்ப நேரங்களில்) தமது சிறிய ஆட்டு மந்தையுடன் இந்த மலைகளின் உச்சிகளில் ஒன்றில், அல்லது இந்தப் பள்ளத்தாக்குகளில் ஒன்றின் நடுவில் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை வழங்கி, மரணம் வரும் வரையில் தம் இறைவனை வழிபட்ட வண்ணம் வசித்து வருகிறார். மக்களில் இவரும் நன்மையிலேயே உள்ளார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3838

ஸகாத் வழங்குவோரின் சிறப்புகள்

செல்வ வசதியைப் பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றுவதன் மூலமே அவன் உண்மையான இறை நம்பிக்கையாளனாகவும், இறையச்சமுடையவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும், இறையருளுக்குச் சொந்தக்காரனாகவும், மறுமையில் வெற்றியாளனாகவும், நிரந்தரமான சொர்க்கத்திற்குரியவனாகவும் ஆகமுடியும் என்பதைப் பல்வேறு வசனங்களில் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது. இதன் மூலம் ஸகாத்தை நிறைவேற்றுபவர்களுக்குரிய சிறப்புகளை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

செல்வ வசதி பெற்ற ஒருவன் ஸகாத்தை நிறைவேற்றாமல் தன்னை ஒரு முஸ்லிம் என்று ஒரு போதும் சொல்லிக் கொள்ள முடியாது என்பதை இறை வசனங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன. ஒருவனிடம் அணு அளவு ஈமான் இருந்தால் கூட அவன் செல்வ வசதியைப் பெற்றிருந்தால் ஸகாத்தை நிறைவேற்றாமல் இருக்க மாட்டான் என்பதற்கும் திருமறை வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன.

உண்மையான இறைநம்பிக்கையாளர்கள்

அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் தாம், உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் பல பதவிகளும், மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

அல்குர்ஆன் 8:3, 4

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிறவர்களே இறை  நம்பிக்கை கொண்டவர்கள்.

 (அல்குர்ஆன் 5:56)

இது குர்ஆனின் – தெளிவான வேதத்தின் – வசனங்கள். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நற்செய்தியுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தை வழங்குவார்கள். மறுமையை அவர்களே உறுதியாக நம்புவார்கள்.  (அல்குர்ஆன் 27:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.  (அல்குர்ஆன் 9:71)

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.    (அல்குர்ஆன் 22;41)

வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.  (அல்குர்ஆன் 24:37)

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர் (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். (அல்குர்ஆன் 23:1-4)

இவ்வசனத்தைத் தொடர்ந்து இறை நம்பிக்கையாளர்களின் பல்வேறு பண்புகளை அல்லாஹ் பட்டியலிடுகின்றான். இறுதியில் அல்லாஹ் இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றியைக் குறிப்பிடுகின்றான்.

பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.   (அல்குர்ஆன் 23:10,11)

இறையச்சமுடையோர்; வெற்றியாளர்கள்

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதிநாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.  (அல்குர்ஆன் 2:177)

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். (முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிட மிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள்.  (அல்குர்ஆன் 2:1-5)

நேர்வழி பெற்றவர்கள்

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ் வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.  (அல்குர்ஆன் 9:18)

இறையருளுக்குரியவர்கள்

எனது அருள், எல்லாப் பொருட்களையும் விட விசாலமானது. (என்னை) அஞ்சி, ஸகாத்தும் கொடுத்து, நமது வசனங்களை நம்புகிற மக்களுக்காக அதைப் பதிவு செய்வேன்என்று (இறைவன்) கூறினான்.         (அல்குர்ஆன் 7:156)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:56)

மறுமையில் சாட்சியாளர்கள்

இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.   (அல்குர்ஆன் 22:78)

நன்மை செய்பவர்கள்

இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்கள். நன்மை செய்வோருக்கு நேர் வழியும், அருளுமாகும். அவர்கள் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அவர்கள் தாம் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.  (அல்குர்ஆன் 31:2-4)

ஸகாத்தை அல்லாஹ் வளர்க்கிறான்

இறைவனின் திருமுகத்தை நாடி நாம் ஏழைகளுக்கு ஸகாத்தை வழங்குவதினால் நமது செல்வம் ஒரு போதும் குறைந்து விடாது. நம்முடைய செல்வத்தில் இறைவன் மறைமுகமான பரகத்தைச் செய்வான். இம்மையிலும் மறுமையிலும் அதனை அல்லாஹ் பன்மடங்காகப் பெருக்கித் தருவான்.

மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.

அல்குர்ஆன் 30:39

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

அல்குர்ஆன் 2:276

நாம் இறைவனுக்காக ஸகாத்தை வழங்கும் போது அல்லாஹ் ஒன்றுக்கு எழுநூறாகவும் அதைவிட அதிகமாகவும் தருவான். மறுமையில் இதைவிட மிகப் பெரும் சுவனம் எனும் கூலியை அல்லாஹ் தரவிருக்கின்றான்.

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். 

அல்குர்ஆன் 2:261, 262

உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும்

தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 59:9

உங்கள் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும்  சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது. உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்! (நல் வழியில்) செலவிடுங்கள்! அது உங்களுக்குச் சிறந்தது. தனது உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோர் தான் வெற்றி பெற்றோர். 

அல்குர்ஆன் 64:15, 16

யாருடைய உள்ளம் கஞ்சத்தனத்திலிருந்து நீங்கியிருக்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள் என மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. நம்முடைய செல்வத்தைத் தகுதி உடையவர்களுக்கு வாரி வழங்குவதன் மூலமே கஞ்சத்தனத்திலிருந்து உள்ளத்தைப் பாதுகாக்க இயலும்.

நம்முடைய செல்வத்திலிருந்து நாம் ஸகாத்தை நிறைவேற்றும் போது நம்முடைய உள்ளம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. நம்முடைய உள்ளம் பரிசுத்தப்படுகிறது.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.  (அல்குர்ஆன் 9:103)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: பனூ தமீம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். “அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமான செல்வமுடையவன் மேலும் மனைவியும் குழந்தையும், விருந்தினர்களும் உடையவன். நான் (என்னுடைய செல்வத்தை) எவ்வாறு செலவு செய்ய வேண்டும்? நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதை எனக்கு அறிவியுங்கள்எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை வழங்குவாயாக. நிச்சயமாக அது பரிசுத்தமாக்கக்கூடியது. அது உன்னை பரிசுத்தப்படுத்தும். உன்னுடைய உறவினர்களை இணைத்து வாழ்வாயாக. யாசகம் கேட்பவர், அண்டை வீட்டார், மற்றும் ஏழை ஆகியோருக்கு (நீ உன்னுடைய செல்வத்தின் மூலம் செய்ய வேண்டிய) கடமை அறிந்து கொள்என்று கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குக் குறைத்துக் கூறுங்கள்என்று வேண்டினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உறவினருக்கும், ஏழைக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களுடைய உரிமையை வழங்கி விடுவீராக. நீர் ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்என்று கூறினார்கள். அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! (ஸகாத்தை வசூலிப்பதற்காக வரும்) உங்களுடைய தூதரிடம் ஸகாத்தை நான் ஒப்படைத்து விட்டால் (ஸகாத்தை நிறைவேற்றும் கடமையாகிய) அதிலிருந்து நான் நீங்கி அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் சார்நதவனாகி விடுவேனா? எனக்கு இது போதுமானதாகி விடுமா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதரவர்கள், “ஆம்! நீ என்னுடைய தூதரிடம் அதனை ஒப்படைத்து விட்டால் அதிலிருந்து நீ நீங்கியவனாகி விட்டாய். அதனுடைய கூலி உனக்குக் கிடைத்துவிடும். அதனை எவன் (மோசடி செய்து) மாற்றுகிறானோ அவன் மீதுதான் அதனுடைய பாவம் இருக்கிறதுஎன்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 11945

தன்னுடைய செல்வத்தையே பிறருக்கு வாரி வழங்குபவன் ஒரு போதும் அடுத்தவரின் செல்வத்தை அநியாயமான முறையில் எடுப்பதற்கு ஆசைப்பட மாட்டான். அவனுடைய உள்ளம் ஸகாத்தின் மூலம் பரிசுத்தமாகி விடும்.

செல்வத்தைப் பரிசுத்தப்படுத்தும்

ஸகாத் உள்ளத்தை மட்டும் பரிசுத்தப்படுத்துவதில்லை. அது நம்முடைய செல்வத்தையும் சேர்த்தே பரிசுத்தப்படுத்துகிறது. நம்முடைய செல்வத்திலிருந்து நாம் ஸகாத்தை நிறைவேற்றி விடும்போது அந்தச் செல்வம் பரிசுத்தமாகி விடுகிறது. அதன் பிறகு அதனை நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

தங்கத்தையும் வெள்ளியையும் யார் அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், “உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றதுஎன்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லைஎன்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத் 1417

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள் தாம்

அறிவிப்பவர்: அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1945

நாம் நம்முடைய செல்வத்திற்கு ஸகாத்தை வழங்கி விடுவதன் மூலம் நம்முடைய செல்வம் பரிசுத்தமானதாகி விடுகின்றது. ஸகாத்தின் மூலம் நம்முடைய செல்வம் பரிசுத்தமாவதன் காரணத்தினாலேயே நபியவர்கள் ஸகாத்தினை செல்வத்தின் அழுக்குகள் என்று குறிப்பிடுகிறார்கள்.

மகத்தான கூலி

தொழுகையை நிலை நாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்.

அல் குர்ஆன் 4:162

மறுமைக்கான டெபாஸிட்

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.

அல்குர்ஆன் 2:110

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 74:20

மறுமையில் கவலையில்லை

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 2:277

ஸகாத் பாவங்களை அழிக்கும்

இஸ்ராயீலின் மக்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தான். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட பன்னிரண்டு பேரை அனுப்பினோம். “நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, எனது தூதர்களையும் நம்பி, அவர்களுக்கு உதவியாக இருந்து, அல்லாஹ்வுக்கு அழகிய கடனையும் கொடுப்பீர்களானால் உங்கள் தீமைகளை உங்களை விட்டும் அழிப்பேன். உங்களை சொர்க்கச் சோலைகளிலும் நுழையச் செய்வேன். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். “உங்களில் இதன் பிறகு (என்னை) மறுத்தவர் நேரான வழியிலிருந்து விலகி விட்டார்என்று அல்லாஹ் கூறினான்.

அல்குர்ஆன் 5:12

சொர்க்கத்தில் நுழைவிக்கும்

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்க வேண்டும்என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர் சொர்க்கம் சென்று விடுவார்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)

நூல்: முஸ்லிம் 14, புகாரி 1396

உலகிலேயே சொர்க்கவாசியானவர்

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச் செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்என்று கூறினார்கள்.

அதற்கு அந்த மனிதர், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்கவும் மாட்டேன்என்று கூறினார்.

அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 15

நிம்மதியாக சொர்க்கம் செல்லலாம்

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் உரையாற்றும் போது நான் செவியுற்றேன். அவர்கள் கூறினார்கள்: (மக்களே) உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். உங்களுடைய ஐந்து (நேரத் தொழுகைகளை) தொழுது கொள்ளுங்கள், உங்களுடைய (ரமலான்) மாதத்தில் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள், உங்களுடைய செல்வத்தின் ஸகாத்தை நிறைவேற்றுங்கள், உங்களில் அதிகாரமுடையவர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) கட்டுப்படுங்கள், உங்களுடைய இரட்சகனின் சொர்க்கத்தில் நீங்கள் நுழைவீர்கள்.

நூல்: திர்மிதி 559

ஸகாத் கொடுக்காதவர்களின் மறுமை நிலையைப் பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.

————————————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா?

தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

திருமணம் செய்து கொள்ளத் தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். இறைவன் குறிப்பிட்டுக் காட்டிய நபர்களைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:23, 24

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் தாயின் சகோதரியுடைய மகளை இறைவன் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்களும் இதைத் தடை செய்யவில்லை. எனவே தாயின் சகோதரியுடைய மகளை மணந்து கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய தாயின் சகோதரியின் மகள் ஆகுமானவர் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம்.

அல்குர்ஆன் 33:50

? தொழுகைக்கு வெளியே தனியாக ஸஜ்தா செய்து பிரார்த்தனை செய்யலாமா?

ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள ஸஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் ஸஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 832

இறைவனிடம் இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது ஸஜ்தா என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகைக்கு உள்ளே தான் கியாம் (நிற்பது) ருகூவு (குனிதல்) போன்ற நிலைகள் இருக்கின்றன. எனவே தொழுகையில் நாம் செய்யும் ஸஜ்தாவைப் பற்றித் தான் நபி (ஸல்) அவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.

வேறொரு ஹதீஸில் தொழுகையில் உள்ள ஸஜ்தாவில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். ஸஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 824

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியே தனியாக ஸஜ்தா செய்து பிரார்த்தித்தாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக தொழுகைக்கு உள்ளே உள்ள ஸஜ்தாவில் பிரார்த்தனை செய்ததாகத் தான் ஆதாரங்கள் இருக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து) நிமிர்ந்ததும், “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா பைனஹுமா வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது” (இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்கிடையே இருப்பவை நிரம்ப, இதன் பின்னர் நீ நாடியவை நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள்.

அவர்கள் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்யும் போது, “அல்லாஹும்ம லக்க ஸஜத்து. வ பிக்க ஆமன்த்து. வ லக்க அஸ்லம்து. ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹு வ ஸவ்வரஹு, வ ஷக்க சம்அஹு வ பஸரஹு. தபாரக்கல்லாஹு அஹ்சனுல் காலிக்கீன்” (இறைவா! உனக்கே சிரம் பணிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப்பட்டேன். என் முகத்தைப் படைத்து வடிவமைத்து அதில் காதையும் கண்ணையும் திறந்து வைத்த (இறை)வனுக்கு முன் என் முகம் பணிந்தது. படைப்பாளர்களில் மிக மேலானவனான அல்லாஹ் சுபிட்சம் மிக்கவன்) என்று கூறுவார்கள்.

நூல்: முஸ்லிம் 1419

எனவே தொழுகைக்கு உள்ளே ஸஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். ஸஜ்தாவை மட்டும் தனியாகச் செய்து பிரார்த்தனை செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.