ஏகத்துவம் – பிப்ரவரி 2009

தலையங்கம்

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை

ஜனவரி 4, 2009 அன்று சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநிலச் செயற்குழுவில், முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கரை தலைமைக் கழகப் பேச்சாளராகப் பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்ததை மாநில செயற்குழு ஒருமனதாக ஒப்புக் கொண்டது. அவர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே ஓர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு வந்தது. அதற்காக 38 நாட்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு, மீண்டும் பொறுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் மீண்டும் ஷகீலா என்ற பெண் பாக்கர் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றார். அதுவும் ஆதாரப்பூர்வமாக அமைந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு பாக்கர் தகுதியற்றவர் என்று கருதி, அவர் மீண்டும் அந்தப் பொறுப்புக்குத் தேர்தலில் போட்டியிட்டு வராமல் பார்த்துக் கொண்டது. அத்துடன் அவரை அழைப்புப் பணிக்குப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவிலும் இருந்தது.

பொதுக்குழு மூலம் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்ற பின்பு அந்த நிர்வாகமும் இதே காரணத்துக்காக அழைப்புப் பணியில் பாக்கரைப் பயன்படுத்தாமல் இருந்தது. இந்த மறைமுக நடவடிக்கை அனைத்துமே பாக்கரின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதால் தான்.

ஆனால் பாக்கருக்கு இதைப் புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை! தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக அவர் வெட்கப்படவுமில்லை! மாறாக, கிளைகளுடன் தொடர்பு கொண்டு, மாநிலத் தலைமை தன்னை ஒதுக்கி வைப்பதாகப் புலம்பிக் கொண்டிருந்தார். தலைமைக்கு எதிராகக் கிளைகளைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.

“ஷகீலாவின் குற்றச்சாட்டு ஓர் அப்பட்டமான நாடகம்; அது ஓர் அவதூறு! பாக்கரின் வளர்ச்சி  பிடிக்கவில்லை என்பதால் அவரை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட துருப்புச் சீட்டு’ என்றெல்லாம் பாக்கரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கதை கட்டிக் கொண்டிருந்தனர்.

பாக்கரின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால், கோயம்பேடு முதல் கோவில்பட்டி வரை நந்தினியுடன் சல்லாபப் பயணம் சென்ற பாக்கர் கையும் களவுமாகப் பிடிபட்ட நேரத்தில் அவரை தூக்கி எறிந்திருக்கலாம். மாநில, மாவட்ட அழைப்பாளர்கள் அனைவரும் அதைத் தான் வேண்டினார்கள். ஆனால் பாக்கர் திருந்துவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தோம்.

இந்த உண்மையை பாக்கரும், அவரது ஆதரவாளர்களும் வசதியாகவே மறந்து விட்டு, “வளர்ச்சி பிடிக்கவில்லை’ என்ற பொய்க் குற்றச்சாட்டை வாந்தியெடுத்து வருகின்றனர்.

இதன் பின்னரும் பாக்கரிடம் மாநில தாயீக்கள், “ஜமாஅத்தின் கண்ணியம் கருதி நான்கு மாதங்கள் ஒதுங்கியிருக்கும்படி கேட்கின்றனர்.

ஆனால் பாக்கர் அதற்கு இணங்கவில்லை. அவர் இணங்கினாலும் அவருடன் இருந்த சிலர் அவரை இணங்க விடவில்லை.

ஜமாஅத்தின் நிலைபாட்டிற்கு எதிராகவும், பாக்கருக்கு ஆதரவாகவும் முன்னாள் மாநிலச் செயலாளர்கள் முனீர், சித்தீக் ஆகியோர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இக்பால், ஷிப்லி, அபூபைஸல் ஆகியோர் மாநில நிர்வாகக் குழுவிலிருந்து விலகுகின்றனர்.

இறுதியில் பாக்கரையும் அவரது ஆதரவாளர்களையும் சேலம் செயற்குழு நீக்கம் செய்கின்றது. பாக்கரை நீக்கம் செய்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இரண்டாக உடைந்து விடும், ஒரு பெருங்கூட்டம் தன் பக்கம் வந்து சேர்ந்து விடும் என்று அவர்கள் கண்ட கனவு பகல் கனவாய் போனது; பாலைவனக் கானலாய் ஆனது.

பாக்கர் விவகாரம் பெண் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்! பளிச்சென்று கண் முன்னால் தெரிகின்ற தெளிவான விவகாரம்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பார்களே! அது போன்ற பட்டவர்த்தனமான விஷயம்! இதற்குப் பின்னரும் இவருக்குப் பின்னால் யாரேனும் செல்கிறார்கள் என்றால் அது தெளிவான வழிகேடு! தனிமனித வழிபாடு!

பாக்கர் விஷயம் உணர்வு வார இதழ் மற்றும் பிரச்சாரங்களில் தெளிவாக விளக்கப்பட்டு விட்டது. இதற்குப் பிறகு மாநிலத் தலைமை அவர் விஷயமாக எதுவும் எழுதப் போவதில்லை. அவரது தரப்பு வரம்பு மீறினால் மட்டுமே அதற்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும் என்று முடிவெடுத்துள்ளது. அந்த முடிவைத் தான் ஏகத்துவமும் மேற்கொள்ளப் போகின்றது.

பாக்கரின் நீக்கத்திற்குப் பிறகு இந்த இதழ் வெளியாவதால் அது பற்றிய சில விளக்கங்களை இங்கு வழங்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது. குறிப்பாக, தனி மனித வழிபாட்டைப் பற்றி இவ்விதழ் விளக்கவுள்ளது.

பாக்கருடன் இருப்பவர்கள் தியாகம் பற்றிப் பேசுகின்றனர். அந்தத் தியாகத்தையும் அடையாளம் காட்டுவது ஏகத்துவத்தின் கடமையாகின்றது.

இதல்லாமல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதி, அழைப்பாளரிடம் இருக்க வேண்டிய முன்மாதிரிப் பண்புகள் போன்றவற்றையும் இவ்விதழ் விளக்கவுள்ளது.

பாக்கர் போன்று யாரும் நீக்கப்படலாம். ஆனால் ஏகத்துவம் என்ற கொள்கை இறந்து விடாது என்பதை மையமாகக் கொண்டு இந்த விளக்கங்களை இவ்விதழ் வழங்குகின்றது.

இதன் பின்னர் பாக்கர் விவகாரத்தை ஏறிட்டுப் பார்க்காமல் தன் வழக்கமான பயணத்தை ஏகத்துவம் மேற்கொள்ளும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.

———————————————————————————————————————————————–

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

ஒரு நாட்டை அல்லது ஒரு சமுதாயத்தை ஆளுகின்ற சட்டம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த புனிதச் சட்டமாக இருக்கலாம்; அல்லது மக்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்ட மனிதச் சட்டமாக இருக்கலாம். அதே போன்று ஒரு சங்கத்தை, கழகத்தை, அமைப்பை ஆளுகின்ற துணைச் சட்டமாக இருக்கலாம். எந்தச் சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்திற்கு முன் அனைவரும், ஏழை – பணக்காரன், ஆள்பவர் – ஆளப்படுவோர், ஆண் – பெண், நிர்வாகி – உறுப்பினர் அனைவரும் சமம் என்ற நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒரு சங்கம், அமைப்பு, கழகம் என்று வருகின்ற போது அதன் உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணை – துணைச் செயலாளர்கள் அனைவரும் அந்த அமைப்பின் சட்டங்களுக்கு முன் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும்.

இல்லையெனில் அந்த நாடு அல்லது அந்தச் சங்கம் அழிந்து போகும். இதை நாம் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும் படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள்.

உடனே உஸாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்தவன் திருடி விடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்ததும், பலவீனமானவன் திருடி விடும் போது அவனுக்குத் தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் வெட்டியிருப்பேன்என்று சொன்னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டார்;- மேலும் மணம் புரிந்தும் கொண்டார்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்

நூற்கள்: புகாரி 4304, 3475, 3733, முஸ்லிம் 3196, 3197

சட்டத்திற்கு முன் பாகுபாடு காட்டப்படுவதைத் தம்மால் சகித்துக் கொள்ள முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்துவதையும், தன் மகள் ஃபாத்திமாவாக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டேன் என்று முழங்குவதையும் இந்த ஹதீஸில் காண்கிறோம்.

வித்தியாசம் காட்டிய வேத சமுதாயம்

சட்டத்தின் முன் பாகுபாடு, தன் சமுதாயத்தையே அழித்து விடும் என்று உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், சாயந்திர நேரம் உரையாற்றி சரியான பிடி பிடித்து விடுகின்றார்கள். தன் சமுதாயத்தைத் தொற்றிப் பிடித்துச் சாகடிக்க வரும் இந்தப் புற்று நோயை அவசரமாகத் தமது அரிய உரை மூலம் அறுத்தெறிகின்றார்கள்.

உங்களுக்கு முன்னிருந்தவர்கள் அழிந்தது சட்டத்திற்கு முன் காட்டிய பாகுபாடு தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டையும் ஹதீஸில் நாம் காண முடிகின்றது.

யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தார் இடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதுஎன்று பதிலளித்தார்கள்.

உடனே (யூத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் “நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும் வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்று தான் அதில் கூறப்பட்டுள்ளதுஎன்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் “விபசாரிகளுக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்பட வேண்டும்என்று கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார்.

அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடுஎன்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத் தான் செய்கிறதுஎன்று சொன்னார்கள்.

உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3635

யூத சமுதாயம் நாசமானதற்குக் காரணம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதியை அது தகர்த்தெறிந்தது தான் என்பதற்கு இதை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டை நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட ஹதீஸ்களின் வெளிச்சத்திலிருந்து இஸ்லாமிய சமுதாயம், தங்களது மார்க்கச் சட்டத்திலும் சரி! அல்லது தங்களுக் கென்று வகுத்துக் கொண்ட சங்க, கழக துணைச் சட்டங்களிலும் சரி! எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது.

ஏழைக்கு ஒரு நியதி; பணக்காரனுக்கு ஒரு நியதி! உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நியதி; கீழ் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நியதி என்ற பாகுபாட்டை யாருக்கும் காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால் அந்த நாடு அந்தச் சமுதாயம், அல்லது சங்கம் அழிவைத் தான் சந்திக்கும்.

எந்த ஒரு நாடும், சமுதாயமும், சங்கமும் இது போன்ற ஒரு நெருக்கடியைச் சந்திக்காமல் இருக்காது; இருக்கவும் முடியாது. காரணம் மனிதர்கள் என்பதால் தான். மனிதர்களிடம் இது போன்ற தவறுகள் ஏற்படத் தான் செய்யும். அப்படியொரு நெருக்கடிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் விதிவிலக்கல்ல!

நாம் சந்தித்த இந்த நெருக்கடியை விளக்குவதற்கு முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றிய ஒரு   சிறிய அறிமுகத்தைப் பார்த்துக் கொள்வோம்.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்!

அல்குர்ஆன் 3:110

இந்தத் தன்மைகளைத் தன்னகமாகக் கொண்டே இந்த ஜமாஅத் தனது அழைப்புப் பணியின் பயணத்தைத் தொடர்கின்றது.

  • * ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத இரும்புக் கொள்கை
  • * குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் பின்பற்றத்தக்கவை என்ற அடிப்படைக் கொள்கையில் அறவே வளைந்து கொடுக்காத தன்மை!
  • * தனிமனித வாழ்வில் கற்பு மற்றும் காசு பணத்தில் தூய்மை

இன்னும் இது போன்ற இலட்சியங்களில் கடுகளவு கூட அலட்சியம் காட்டாத இறுக்கப் போக்குக் கொண்ட அமைப்பு தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இதனால் மக்களின் கழுகு விழிப் பார்வைகளுக்கும், கடினமான விமர்சனங்களுக்கும் இந்த ஜமாஅத் ஆளாகின்றது. நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் நமது ஜமாஅத்தினரை விட மற்றவர்கள் மிக அதிகமாகவே கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த ஜமாஅத் அனைத்துத் துறைகளிலும் தூய்மையைக் கடைப்பிடிக்கின்றது. இதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டை இங்கே கூறுவது பொருத்தமாக அமையும்.

தவ்ஹீது ஜமாஅத் உருவாவதற்கு முன்பு அதிகமான இஸ்லாமிய மாத இதழ்கள் வெளிவந்தன. அந்த மாத இதழ்களில் அதிகமான இடத்தை ஆக்கிரமித்தது பீடிக் கம்பெனி விளம்பரங்கள் தான். தவ்ஹீது ஜமாஅத் உதயமானதும் அதன் சார்பில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பெயர்களில் வார, மாத இதழ்கள் உதயமாயின. ஆனால் அந்த இதழ்களில் ஒன்றில் கூட பீடி விளம்பரத்தைக் காண முடியாது. அப்படி ஒரு தூய்மையை தவ்ஹீது ஜமாஅத் அப்போதிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது.

இன்றைய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ள தாயீக்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆக், ஜாக் போன்ற இயக்கங்களில் இருந்தவர்கள். அந்த இயக்கத்தில் உள்ள பொறுப்பாளர்களிடம் பெண் தொடர்பான குற்றச்சாட்டு வந்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தாயீக்கள் குரல் கொடுத்தனர். அவர்களுடைய குரலுக்குப் பதில் கிடைக்காதது மட்டுமல்ல! குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இது போன்ற காரணங்களால் தான் இந்த அழைப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அடுத்து அவர்கள் கண்ட சமுதாய அமைப்பு தமுமுக! அதிலும் இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிலிருந்தும் வெளியேறினர். அதன் பின்னர் கண்ட அமைப்பு தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்!

அதனால் இது போன்ற குற்றச்சாட்டுக்கள், குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்பதில் இதன் தாயீக்கள் குறியாகவும் வெறியாகவும் இருந்தனர். இது தான் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் பற்றிய ஒரு சுருக்க அறிமுகம்!

கோயம்பேட்டிலிருந்து கோவில்பட்டி வரை

இப்படிப்பட்ட இயக்கத்தில் தான் இதன் மாநில பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்தன. வந்த குற்றச்சாட்டுக்களில் ஆதாரப்பூர்வமாக வந்தது, கோயம்பேடு முதல் கோவில்பட்டி வரையிலான ஒரு பேருந்துப் பயணம்!

அண்ணியை அல்லது கொழுந்தியாவை தன் இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் செல்லும் அக்கிரமக் கலாச்சாரத்தை எதிர்த்து மிகக் கடுமையாகக் குரல் கொடுக்கும் தவ்ஹீது ஜமாஅத்தில், அதன் பொதுச் செயலாளர் ஒருவர், நந்தினி என்ற பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு கோயம் பேட்டிலிருந்து கோவில்பட்டி வரை பயணம் செய்கின்றார்.

இந்தக் கண்ணராவியைக் கண்ணாரக் கண்ட குமரி மாவட்ட சாட்சி ஒருவர் மாநில நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதுகிறார்.

மாநில நிர்வாகம் இதை விசாரணை செய்கின்ற போது, அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு பாக்கர் மறுத்து விடுகின்றார்.

ஆனால் அடுத்தடுத்து அவர் முன் வைக்கப்பட்ட சான்றுகள் அவரது சத்தியத்தைப் பொய் சத்தியமாக்கின.

பின்னர் பேருந்தில் அவ்வாறு பயணம் செய்ததை அவரே ஒப்புக் கொள்கின்றார். அவரது ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு அவர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் தண்டனை பற்றி நிர்வாகக் குழு விவாதிக்கின்றது.

  1. நிரந்தர நீக்கம்
  2. தற்காலிக நீக்கம்

கடைசியில் தற்காலிக நீக்கமே முடிவானது.

திருச்சி செயற்குழு

தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தாலும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் பதவியில் இருப்பவரின் செயல்பாடுகள் போலவே அமைந்தன. இதற்குக் கடுமையான கண்டனங்களும், காட்டமான எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில் திருச்சியில் மாநில செயற்குழு கூடுகின்றது. இதற்கு முந்தைய நாள் மாலையில் மாநில நிர்வாகக் குழு கூடுகின்றது.

பாக்கர் மீது எடுத்த நடவடிக்கை போதுமானது; அவருக்குக் கொடுத்த தண்டனை போதுமானது; எனவே அவர் மீண்டும் நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து விவாதத்திற்கு வருகின்றது.

அப்போது, தாயீக்களாக உள்ள மாநில நிர்வாகிகள், இந்தத் தண்டனை போதாது என்றும், மற்ற நிர்வாகிகள் இந்தத் தண்டனை போதும் என்று இரு வேறு கருத்துக்களைப் பதிவு செய்தனர். இறுதியில் தண்டனை போதும் என்ற முடிவே இறுதியானது.

மறு நாள் காலையில் செயற்குழு கூடியது. அதில் மாநில நிர்வாகக் குழுவின் முடிவு எடுத்து வைக்கப்பட்டது.

“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துணை விதி (பை லா) சட்டத்தில், இது போன்ற பாலியல் புகார் வந்தால் அவர் மீது என்ன நடவடிக்கை, அவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து ஏதுமில்லை. அப்படியொரு விதி ஏதுமில்லாததால் நாம் இப்போது பாக்கர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் இனி மேல் நாம் இதற்கென ஒரு விதியை வகுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் இது போன்ற தவறுக்கு ஆளாகும் நபர்கள் மீது தெளிவான நடவடிக்கை எடுத்து விடலாம்’ என்று அப்போதைய மாநிலத் தலைவர் செயற்குழுவில் விளக்கினார்.

அத்துடன், இனி மாநில, மாவட்ட, நகரப் பொறுப்பு வகிக்கும் எவரேனும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்து அது பிரச்சனையானால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதுடன், மீண்டும் அவர் ஒரு போதும் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தீர்மானத்தையும் அந்தச் செயற்குழுவில் கொண்டு வந்தார்.

பாக்கரை மீண்டும் சேர்த்துக் கொண்டதையும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை தீர்மானத்தையும் செயற்குழு ஏற்றுக் கொண்டது.

காரசாரமான விவாதத்திற்கும், காட்டமான கேள்விக் கணைகளுக்கும் காத்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஜமாஅத்தின் நன்மை மற்றும் ஒரு தனி நபரின் மானம் மரியாதையைக் கவனத்தில் கொண்டு இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விட்டனர்.

தலைமைக்குக் கட்டுப்பட்டு மாநில நிர்வாகத்திலிருந்த தாயீக்களும் மற்ற தாயீக்களும் இந்த விஷயத்தில் அமைதி காத்தனர்.

இதன் பின்னர் தான் ஷகீலா என்ற பெண்மணியின் குற்றச்சாட்டு வருகின்றது. முதலில் மொட்டையாக, பிறகு முகவரியுடன் முழுமையாக எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு, பாக்கருக்கு எதிராக வருகின்றது.

தலைமை அலுவலகத்தில், பாக்கரை அவரது அறையில் சந்திக்கச் சென்ற போது அவர் தன்னிடம் சில்மிஷம் செய்தார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டு சுமத்துகின்றாள். குற்றம் சுமத்துகின்ற அந்தப் பெண்ணுக்கு பாக்கர் தான் பொற்றுப்பாளர் – கார்டியன்.

இதற்காக இப்போது மீண்டும் ஒரு விசாரணை! முடிவில் பாக்கர் அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்தது உறுதியானது. அந்தத் தனிமை, விபச்சாரம் நடந்தது என்று கூறக்கூடிய அளவுக்குத் தனிமை அல்ல; ஆனால் சில்மிஷங்கள் செய்வதற்கு வாய்ப்புள்ள தனிமை!

இப்போது திருச்சி செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒரு முறை திரும்பப் படித்துக் கொள்வோம்.

“மாநில, மாவட்ட, நகரப் பொறுப்பு வகிக்கும் எவரேனும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்து அது பிரச்சனையானால் அவர் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதுடன், மீண்டும் அவர் ஒரு போதும் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார்”

இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் பாக்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தற்காலிக நீக்கமல்ல; நிரந்தர நீக்கம்!

இந்த நடவடிக்கையில் ஒரே ஒரு அம்சம் தான் கவனிக்கப்பட்டது.

கீழ்மட்டத்தில் கிளைப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் இந்தத் தவறைச் செய்தால் அந்தக் கிளை உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப் பட்டவரை நீக்கும் அல்லவா? இது தான் கிளைகளில் நடந்து கொண்டும் இருக்கின்றது.

அதே அளவுகோல் தான் மாநிலத்தில், மேல்மட்டத்தில் இருப்பவருக்கும்! அவர் தவறு செய்யும் போது இந்த அளவு கோல் தான் வைக்கப்பட வேண்டும். அந்த அளவுகோலின் அடிப்படையில் பாக்கர் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இயக்கத்தின் சட்டத்தில் அனைவரும் சமம் என்ற நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த எச்சரிக்கை, கண்டனம் கருத்தில் கொள்ளப்பட்டு, சட்டத்தின் முன் உள்ள பாகுபாடு தவிர்க்கப் பட்டுள்ளது.

இங்கே ஒரு கேள்வி எழலாம். இதற்கு ஏன் இத்தனை கால தாமதம்? கால அவகாசம்? அதிரடியாக அன்றைக்கே தூக்கி வீசியிருக்கலாமே! என்பது தான் அந்தக் கேள்வி!

ஒரு நோயாளியின் வயிற்றில் கட்டி இருப்பதை மருத்துவர் கண்டறிகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த மருத்துவர் உடனே அதை அறுவை சிகிச்சை செய்ய முன் வரமாட்டார். முதலில் அதை ஊசி, மருந்து, மாத்திரை மூலமே குணப்படுத்த முயல்வார். இதே முயற்சி தான் பாக்கர் விஷயத்தில் கொள்ளப்பட்டது. இது மாத்திரைக்குக் குணமாகும் நோயல்ல! இதற்குத் தேவை அறுவை சிகிச்சை தான், அதிரடி நடவடிக்கை தான் என்பதை உணர்ந்து அதை தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் இறுதியில் நிறைவேற்றியது. இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதியை நிலைநாட்டியது.

———————————————————————————————————————————————–

அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரி

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!

அல்குர்ஆன் 3:110

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 3:104

இந்த வசனங்களின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் இப்பணியைச் செய்கிறோம் என்று உரிமை கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் அவ்வாறு உரிமை கொண்டாடும் தகுதி அவர்களுக்கு இல்லை என்பதை அவர்களின் பணிகளிலிருந்தும், செயல்பாடு களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு தப்லீக் இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். இவர்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற ஒட்டுமொத்த பணியையும் குத்தகைக்கு எடுத்தது போன்று பேசுவார்கள். மக்கள் எதை நன்மை என்று ஒத்து, உடன்பாடு கொண்டிருக்கிறார்களோ அதையே ஏவுவார்கள்.

உதாரணத்திற்கு ஐங்காலத் தொழுகையை ஏவுவார்கள். இது நன்மை என்பதில் எந்தவொரு முஸ்லிமும் கருத்து வேறுபாடு கொள்ளவே இல்லை. அதனால் தொழாதவனைத் தொழுகைக்கு அழைக்கும் போது அவன் அதில் எதிர்ப்பு காட்டுவதும் இல்லை.

இவர்கள் வட்டியை விட்டும் முஸ்லிம்களைத் தடுப்பார்கள். வட்டி ஒரு தீமை என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அதனால் வட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் கூட வட்டியை விட்டுத் தடுக்கும் போது எதிர்ப்பதில்லை.

ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களை, தர்ஹா வழிபாட்டை விட்டுத் தடுக்கும் போது அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தப் பிரச்சாரத்தைச் செய்வோரைக் கொலை செய்யவும் துணிகின்றனர். ஏன்?

தீமையான தர்ஹா வழிபாட்டை அவர்கள் நன்மை என்று கருதுவதால் தான்.

எனவே இவ்வாறு தர்ஹா வழிபாட்டைத் தடுக்கும் பணியை தப்லீக் ஜமாஅத் ஒரு போதும் செய்வதில்லை. அந்தப் பணியை தவ்ஹீது ஜமாஅத் மட்டுமே செய்கின்றது.

தவ்ஹீதில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கின்ற மற்ற இயக்கங்களும் இந்தப் பணியைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற இரு அடிப்படைகளைத் தாண்டி ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் இவர்கள் இந்தப் பணிக்குத் தகுதியற்ற வர்களாகி விடுகின்றனர்.

தவ்ஹீது ஜமாஅத் மட்டுமே இந்தத் தகுதியைப் பெற்றிருக்கின்றது என்பதால் அதன் ஒவ்வொரு அழைப்பாளரின் செயல்பாடும் மக்களின் ஆந்தைப் பார்வைக்கு உள்ளாகின்றது.

எனவே இந்த இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு அழைப்பாளரும் தங்களுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திறந்த புத்தகமான திருநபியவர்கள்

நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அவசரப் படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்து விட்டுக் கடந்து சென்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!எனக் கூறினார்கள். அவ்விருவரும் “சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்)-அல்லாஹ்வின் தூதரே!என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்என்று தெளிவுபடுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: புகாரி 2038, 2039, 3281, 6219

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையை எந்த அளவு திறந்த புத்தகமாக வைத்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தம் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பார்ப்பவர்களிடம் ஷைத்தான் விளையாடி விடக் கூடாது என்பதால் அவர்களை அழைத்து, இது என் மனைவி என்று தெளிவு படுத்துகின்றார்கள்.

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இவ்வளவு பேணுதலாக இருக்கும் போது, நாம் எந்த அளவுக்குப் பேணுதலாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மார்க்கம் தடுத்திருக்கின்ற காரியங்களான இணை வைத்தல், வட்டி, கொலை போன்ற பெரும்பாவங்களை விட்டும் ஓர் அழைப்பாளன் முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

இணை வைப்பு நடக்கும் நிகழ்ச்சிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கப்படும் திருமணங்கள், வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் கூட இருக்கக் கூடாது.

அந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகத் திகழ வேண்டும். குறிப்பாக “பெண்’ விவகாரத்தில் ஒழுக்கம் மிக்கவராக இருக்க வேண்டும்.

செல்போனில் செக்ஸ் பேச்சு

ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசினால் கூட கவனமாகப் பேச வேண்டும். அந்தப் பெண்ணுடன் பேசுகின்ற அந்தப் பேச்சு, மற்றவர்களுக்கு முன்னால் பேசப்படும் போது குறை காணப்படாத அளவுக்கு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னால் பேசப்படுவதற்குத் தகுதியில்லாத ஒரு பேச்சை ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசினால் அது ஆபாசப் பேச்சாகும்.

ஆணும் பெண்ணும் சந்திக்காமல் தூரத்தில் இருந்து கொண்டு செல்போனில் பேசினாலும் அவர் அந்தப் பெண்ணுடன் தனியாக சந்தித்துப் பேசுவதைப் போன்றது தான்.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர்  எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப்  பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3006

செல்போனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இது தான் தீமைகளின் திறவுகோலாக அமைந்துள்ளது.

ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது அல்லது அருகருகே அமர்ந்து பேருந்தில் பயணம் செய்வது என்பதெல்லாம் ஓர் அழைப்பாளனை விட்டு விடுவோம்; சாதாரண முஸ்லிமுக்குக் கூட இது ஒரு பெரிய பாவ காரியமாகத் தெரியும். ஆனால் செல்போனில் ஆபாசமாகப் பேசுவதை சாதாரண காரியம் என்று கருதிக் கொண்டிருக்கின்றனர் என்பதால் இதை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

பாவத்தைப் பற்றிய பார்வை

இறை நம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர்       ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்து விடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தனது மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 6308

இதன்படி செல்போனில் ஆபாசமாகப் பேசுவதே ஓர் அழைப்பாளனுக்கு மலை போல் தெரிய வேண்டும்.

இது போன்று சர்வ சாதாரணமாகத் தெரியும் பாவமான சினிமா பார்ப்பது போன்ற தீமையும் ஓர் அழைப்பாளனுக்கு மலை போல் தெரிய வேண்டும்.

இந்தச் சிறு சிறு பாவங்கள் மலை போல் தெரிய ஆரம்பித்து விட்டால் விபச்சாரம், பொருளாதார மோசடி போன்ற பெரும் பாவங்களுக்கு ஓர் அழைப்பாளன் ஆளாக மாட்டான். ஆளாகவும் கூடாது.

ஏனெனில் அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரியாவான். இந்த இயக்கத்தில் ஆலிம்கள் மட்டும் அழைப்பாளர்கள் அல்லர்!

ஒவ்வொரு மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளும், ஒவ்வொரு செயல் வீரரும் ஓர் அழைப்பாளரே!

அவர்கள் இந்தப் பண்புகளைக் கொண்ட மணிகளாக, மாணிக்கங் களாகத் திகழ வேண்டும். சொல்லால் அழைக்கும் பணியை விட, செயலால் அழைக்கும் அழைப்புப் பணியே வலுவானதாகும். இதையே அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

அல்குர்ஆன் 41:33

தனிமனித வழிபாடு

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

அல்குர்ஆன் 3:144

இது திருக்குர்ஆனின் ஓர் அற்புதமிக்க வசனமாகும். இந்த வசனத்தின் முன் பின் வசனங்களை வைத்து இது உஹதுப் போர்க் களத்தின் போது அருளப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உஹதுப் போர்க்களத்தில் தான் கொல்லப்பட்டதாகச் செய்தி பரவுகின்றது.

(உஹதுப் போரில்) அபூசுஃப்யான் முன்வந்து “(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கின்றாரா?” என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளிக்க வேண்டாம்என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். மீண்டும், (உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்என்று கூறி விட்டார்கள்.

பிறகு, “கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டு விட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி) “இவர்களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள்என்று சொன்னார். (புகாரி 4043)

இந்தப் போர்க் களம் முஸ்லிம்களுக்குப் பெரும் கவலை அளித்த போர்க்களமாகும். நபித்தோழர்கள், “இனி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நாம் வாழ்ந்தென்ன பயன்? முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முடிந்தவுடன் இந்த மார்க்கமும் முடிந்து விட்டது’ என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் இந்த வசனத்தை அருளுகின்றான்.

தூதர் முஹம்மது இறந்து விடலாம்; ஆனால் அவர் கொண்டு வந்த தூதுச் செய்தி இறக்காது என்று இந்த வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

அன்று ஓர் ஒத்திகை மரணம்

உண்மையில் உஹதுப் போர்க்களம் ஓர் ஒத்திகைக் களம் என்றே சொல்ல வேண்டும்.

அதிரடியாக எதிரிகளை எப்படிச் சந்திப்பது? என்பதற்கு இராணுவ வீரர்களுக்கு முற்கூட்டியே போலி எதிரிகளை வைத்துப் பயிற்சி ஒத்திகை நடைபெறும்.

ஒரு பேச்சாளர் தொலைக் காட்சியில் பேசப் போகின்றார் என்றால் அதற்காக அவர் ஒத்திகை பார்த்துக் கொள்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் இந்த மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? என்ற ஓர் ஒத்திகையை, ஒரு வித்தியாசமான பயிற்சியை நபித்தோழர்களுக்கு, நபியவர்களின் வாழ்நாளிலேயே அல்லாஹ் நடத்திக் காட்டுகின்றான்.

அத்துடன், முஹம்மது கடவுள் அல்லர்! அவர் மனிதர் தாம். அவர் இயற்கையாக மரணத்தைத் தழுவுவார்; அல்லது கொல்லப்படுவார். இந்த இரண்டை விட்டும் தப்பி, சாகாவரம் பெற்றவர் என்று விளங்கி விடாதீர்கள் என்ற ஏகத்துவப் பாடத்தையும் அந்த மக்களுக்குப் படித்துக் கொடுக்கிறான்.

தூதர் இறந்து விட்டாலும் தூதுச் செய்தி இறக்காது. அந்த தூதுச் செய்தி குர்ஆன்! அது ஒரு போதும் மரணிக்காது. அது சாகாவரம் பெற்ற சத்திய வேதம்! அதனால் தூதர் இறந்தவுடன் நீங்கள் வந்த வழியே, அதாவது அசத்திய வழிக்குத் திரும்பி விடாதீர்கள்; அப்படிச் சென்று விட்டால், மதம் மாறி விட்டால் அதனால் அல்லாஹ்வுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதையும் இந்த வசனம் கூறுகின்றது.

தூதர் இறந்த பின்னும் மதம் மாறாமல் இருந்தால் நீங்கள் நன்றியுடையவர்கள்; அந்த நன்றியுடையோருக்கு நான் நற்கூலி வழங்குவேன் என்றும் அல்லாஹ் உறுதியளிக்கின்றான்.

இத்துடன் அல்லாஹ் ஒரு முன்னறிவிப்பும் செய்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பு சிலர் மதம் மாறுவார்கள் என்பதே அந்த முன்னறிவிப்பு!

இப்போது அந்த மத மாற்றத்தையும் அதற்குக் காரணமான மரணத்தையும் பார்ப்போம்.

உண்மை மரணம்

உஹதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தது போன்ற ஒத்திகை நடந்தது. இப்போது உண்மையில் மரணித்து விடுகின்றார்கள். அவர்கள் இறந்ததும் உமர் (ரலி) அவர்கள் எழுந்து, நபியவர்கள் இறக்கவில்லை என்று உரையாற்றுகின்றார்கள்.

அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருந்த நபித் தோழர்களுக்கு மத்தியில் உமர் (ரலி) உரையாற்றத் தொடங்கினார்கள்.

அந்த உரையில் “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் உயிருடன் எழுப்புவான்.  இறந்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தவர்களின் கை கால்களை வெட்டி விடுவார்கள். இது தான் என் மனதில் படுகின்ற கருத்தாகும்” என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள் இறந்ததை ஒத்துக் கொள்ள மறுத்த நபித்தோழர்களின் உள்ளங்களுக்கு உமர் (ரலி) யின் இந்த உரை ஓர் ஒற்றடமாக அமைந்திருந்தது.

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததும் நபித்தோழர்கள் தங்களை மறந்த நிலையில் ஆகி விட்டார்கள்.  பாசமிகு தாய்ப் பறவையின் கதகதப்பான அரவணைப்பில் கிடக்கும் குஞ்சுகள் தாய்ப் பறவை இறந்துவிட்டால் எவ்வாறு தவியாய்த் தவிக்குமோ அது போன்ற தவிப்பிற்கு அவர்கள் உள்ளானார்கள்.  இந்த நேரத்தில் உமர் (ரலி) அவர்களின் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாகவும், அருமருந்தாகவும் அமைந்தன.

அமைதியாகக் கிடக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீண்டும் தங்களை அரவணைக்க வரப் போகின்றார்கள் என்ற ஆதரவில், அற்புதம் நிகழப் போகின்றது என்ற நம்பிக்கைக் கடலில் அமிழ்ந்து போய் விட்டார்கள்.  “அவர்கள் இறந்திருப்பது நிரந்தரமாக அல்லவே அல்ல! அது தற்காலிகமாகத் தான்’ என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட அழுத்தமான நம்பிக்கை ஏற்படக் காரணம் அவர்களின் முன்னால் நின்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல!  இவரது நாவில் சத்தியம் ஓடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் யாரைப் பார்த்து சொன்னார்களோ அந்த உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அடுத்தக் கட்டத் தலைவர் என்ற தகுதியைப் பெற்ற இனிய தோழராவார்.

அதனால் தான் அவர்களுடைய வார்த்தைகள் சோக மயத்தில் நிற்கும் நபித் தோழர்களை வயப்படுத்தும் அளவுக்கு வைரங்களாக அமைந்து விட்டன.

இறைத்தூதர் இறந்து விட்டார்; அபூபக்ரின் விளக்கம்!

உமர் (ரலி) அவர்களின் உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்ற எண்ணத்தில் உறைந்து போயிருந்த இந்த நேரத்தில், குழப்பமான இந்தக் கட்டத்தில் ஒரு குதிரையின் குழம்படிச் சப்தம் கேட்கின்றது.  இதமானவர் – இளகிய மனம் படைத்தவர் என்று எல்லோராலும் கூறப்படுகின்ற அபூபக்ர் (ரலி) அதன் மீது அமர்ந்து வருகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் சமயத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள், தாம் வசித்து வந்த சுன்ஹு என்ற பகுதியில் இருந்தார்கள்.  அப்போது தான் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி கிடைக்கின்றது.  மரணச் செய்தி கிடைத்த மாத்திரத்தில் தமது குதிரையைத் தட்டிக் கொண்டு மஸ்ஜிதுந்நபவியை நோக்கி வேகமாக வருகின்றார்கள்.

அவர்களின் பயணக் குதிரை மின்னல் வேகத்தில் தனது ஓட்டத்தைக் கொண்டிருந்த அவ்வேளையில் அவர்களின் மனக் குதிரை சோகத்திலிருந்த நபித் தோழர்களின் மன ஓட்டத்தைக் கண்டறிந்தது.  இந்த உண்மையை அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழும் செயல்கள் நமக்கு உணர்த்திக் காட்டும்.

குதிரை பள்ளியை அடைந்ததும் கூடியிருந்த கூட்டத்திடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் பள்ளிக்குள் சென்று ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைந்தார்கள்.  முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் உடலை நோக்கிச் சென்று அதைத் தழுவியிருந்த போர்வையை நீக்கினார்கள்.  முகிழ் கிழித்து வரும் முழுமதியைப் போன்று காட்சியளித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முகத்தில் முத்த மழை பொழிந்தார்கள்.  அவ்வளவு தான்!  அவர்களின் கண்கள் அருவியானது.

“அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இருக்கும் போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள்.  இறந்த பிறகும் நறுமணம் கமழ்கின்றீர்கள்” என்று எடுத்த எடுப்பில் சொல்கின்றார்கள்.  அவர்களின் இந்தச் சொல் கல்லாகப் பாய்ந்து, நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்ற நபித் தோழர்களின் தவறான நம்பிக்கையை ஒரு நிமிடத்தில் உடைத்தெறிகின்றது.

“என் உயிரைத் தன் கைவசம் வைத்திருக்கும் அந்த இறைவன் மீது ஆணையாக! ஒரு போதும் அல்லாஹ் இரண்டு மரணங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்.  உங்களுக்கென்று விதிக்கப்பட்ட மரணத்தை நீங்கள் சுவைத்து விட்டீர்கள்” என்றும் அபூபக்ர் (ரலி) கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து வந்து மீண்டும் மரணிப்பார்கள் என்ற கருத்தில் உமர் (ரலி) கூறிய இரு மரணத் தத்துவத்தை அபூபக்ர் (ரலி) அவர்களின் இந்த வார்த்தைகள் சுக்கு நூறாக்குகின்றன.  அது மட்டுமல்ல! இறந்து விட்ட நபி (ஸல்) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் நேர்முகமாக, உங்களுக்கு இரு மரணத்தைத் தரவில்லை என்று பேசுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தால் இதற்குப் பதிலளிக்காமல் மவுனமாக இருந்திருப்பார்களா? என்பதையும் இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

இவ்வாறு உணர்த்தி விட்டு நேராக உமர் (ரலி) அவர்களிடம் விரைந்து வருகின்றார்கள். வந்ததும் அவர்களை நோக்கி, “ஆணையிட்டு உரை ஆற்றுபவரே! அமர்க! அமர்க!” என்று கூறுகின்றார்கள். அபூபக்ர்           (ரலி) அவர்களின் இந்த வார்த்தைகளை உமர் (ரலி) கண்டு கொள்ளாமல் தனது உரையைத் தொடர்கின்றார்கள். இடைவிடாமல் தனக்கு இடம் கொடாமல் தனது உரையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவ்வேளையில் அபூபக்ர் (ரலி) இடைமறித்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி தனது உரையைத் துவக்கினார்கள்.

“யார் முஹம்மதை வணங்க நினைக்கின்றாரோ அவர் அறிந்து கொள்ளட்டும்.  நிச்சயமாக முஹம்மது (ஸல்) இறந்து விட்டார்கள். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான்” என்று கூறினார்கள். அதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின் வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.

நீரும் மரணிப்பவர்.  அவர்களும் மரணிப்பவர்களே!  (அல்குர்ஆன் 39:30)

முஹம்மது தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப் பட்டு விட்டால் வந்த வழியில் நீங்கள் திரும்பி விடுவீர்களா?     வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது.  நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் பரிசு வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அவ்வளவு தான்! உரத்த குரலில் மக்கள் அழத் துவங்கி விட்டார்கள்.  அது வரை அவர்கள் மவுனம் சாதித்துக் கொண்டிருந்தார்கள். அது வரை உமர் (ரலி)யின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அபூபக்ர் (ரலி)யின் உரையின் பக்கம் சென்று விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று உமர் (ரலி) கூறிய கருத்தை நம்பிக் கொண்டிருந்த மக்கள், அபூபக்ர் (ரலி) எடுத்து வைத்த வாதத்தின் உண்மையை உணர்ந்து சோகத்தின் உச்சிக்குச் சென்று விட்டார்கள்.

இங்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சோகமும், சோர்வும் கொண்டு நிற்கும் அம்மக்களிடம் இத்தகைய உண்மையை எடுத்து வைத்த விதம் ஒரு வித்தியாசமான அம்சமாகும். அவர்களிடம் மிளிர்கின்ற தனிச் சிறப்பு மிக்க ஆளுமையும் அவர்களிடம் குடி கொண்டிருக்கின்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணம் சாதாரண தலைவரின் மரணமல்ல! தமது ஆட்காட்டி விரலின் அசைவில் உயிர், உடல், உடைமை அத்தனையையும் அர்ப்பணிக்கின்ற ஒரு தியாகக் கூட்டத்தையே தன்னகத்தே கொண்ட தன்னலமற்ற தலைவரின் மரணமாகும்.

அப்படிப்பட்ட தலைவரைப் பறி கொடுத்து நிற்கும் அம்மக்களுக்கு மத்தியில், உணர்ச்சிப்பூர்வமான இந்த சோதனையான காலகட்டத்தில் தமக்கே உரிய நிதானப் போக்குடன் நிலை குலையாத தன்மையுடன் அறிவுப்பூர்வமான வகையில் ஆதாரங்களை எடுத்து வைத்து அந்த இஸ்லாமிய சமுதாயத்தை, ஏகத்துவத்தை விட்டுத் தடம் புரளாமல் காத்து நின்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

சாகா வரம் பெற்ற சத்திய வேதம்

“யார் முஹம்மதை வணங்குகி றாரோ அவர் அறிந்து கொள்ளட்டும் முஹம்மது (ஸல்) அவர்கள் நிச்சயமாக இறந்து விட்டார்கள்” என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பாருங்கள்.

நபித்தோழர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கும் அளவுக்கா கொள்கையில் பலவீனர்களாக இருந்தார்கள்? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அப்படியானால் இப்படி ஒரு கடினமான வார்த்தைப் பிரயோகத்தை அபூபக்ர் (ரலி) ஏன் கையாள வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று உமர் (ரலி) உரையாற்றியது மக்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இறப்பின்மை – சாகா தன்மை என்பது இறைவனுக்கு உரிய தனித் தன்மையாகும்.

நபி (ஸல்) அவர்கள் எழுந்து வருவார்கள் என்றால் அவர்கள் என்றும் வாழும் இறைத்தன்மை உடையவர்கள் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவார்கள். இதனால் நபி (ஸல்) அவர்கள் வணங்கப்படும் தகுதிக்கு உயர்த்தப்படும் பாதக நிலை ஏற்படும்.

எனவே அத்தகைய நிலையை உடைத்தெறியும் விதமாகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் தூர நோக்குடன் சிந்தித்து இந்தக் கடின வார்த்தைகளைப் பயன்படுத்து கிறார்கள். அத்துடன் நின்று விடாது அதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் மேற்கண்ட இரண்டு வசனங்களையும் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக அபூபக்ர் (ரலி) ஆலஇம்ரான் 144வது வசனத்தை ஓதிக் காட்டியவுடன் “இப்படி ஒரு வசனத்தை அல்லாஹ் இறக்கியிருப்பதை நாம் அறியாமல் இருந்து விட்டோமே! என்று நபித்தோழர்கள் எண்ணியிருக்கின் றார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் பிரிவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அபூபக்ர் (ரலி) இந்த வசனத்தை ஓதியதும் அது எல்லோருடைய நாவுகளிலும் ஆக்கிரமித்து அலங்கரிக்கத் துவங்கியது. அதை ஓதாத எந்த நபித்தோழரையும் நான் காணவில்லை. அதை அசை போடாத எந்த நபித்தோழரையும் நான் பார்க்கவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

அபூபக்ர் (ரலி)யிடமிருந்து இந்த வசனத்தைச் செவியுற்றதும் உமர் (ரலி) கூறும் வார்த்தைகள் இதோ:

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓத நான் கேட்ட போது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே அதிர்ச்சி அடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) ஓதிக் காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்து விட்டேன்” (புகாரி)

அபூபக்ர் (ரலி) இந்த வசனத்தை ஓதிய போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் விளங்கிக் கொண்டேன் என்று உமர் (ரலி) கூறுகின்றார்கள். அப்படியானால் உமர் (ரலி) அவர்களுக்கு இந்த விளக்கம் தெரியாமல் போனது ஏன் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இறந்த மறுநாள் அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னிலையில் உமர் (ரலி) மிம்பரில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களிடமே இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகின்றது.

“நமக்கெல்லாம் இறுதியாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள். அது வரை அவர்கள் உயிர் வாழ்வார்கள் என்றே நான் எதிர் பார்த்திருந்தேன். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்றாலும் மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான். அதன் மூலம் தான் அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் நேர்வழியைக் காண்பித்தான்” என்று உமர் (ரலி) பதில் அளிக்கின்றார்கள்.

இவ்வாறு உஹதுப் போர்க்களத்தில் ஒத்திகை மரணத்தில் அல்லாஹ் அருளிய அந்த வசனம், இப்போது முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையில் இறந்ததும் நபித்தோழர்களைத் தடம் புரளாமல் காத்தது. இதன் மூலம் இந்த இறைவேதம், தான் ஒரு சாகாவரம் பெற்ற வேதம் என்பதை நிரூபித்து நிற்கின்றது.

கொள்கையில் உறுதி மிக்க நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பும் கொள்கையில் குன்றாய் நின்றனர்; நிலைத்தனர். ஆனால் ஒரு கூட்டம் தடம் புரண்டது. அது தான் அல்குர்ஆன் தெரிவித்த மதமாற்ற முன்னறிவிப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், உமரை நோக்கி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1400

நாம் இந்த ஹதீஸில் கவனிக்க வேண்டிய விஷயம், மதம் மாறியவர்களைத் தான். இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இருக்கும் வரை மார்க்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இறந்ததும் மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். அதாவது முஹம்மது என்ற தனி நபருக்காக மார்க்கத்தில் இருந்தார்கள். அதனால் ஜகாத் கொடுத்தார்கள்.

அல்லாஹ் சொன்னான்; அவனது வேதம் அல்குர்ஆன் சொன்னது என்பதற்காக இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லை. அல்லாஹ்வுக்காகக் கொடுப்பவர்கள் முஹம்மது (ஸல்) இறந்த பின்பும் கொடுப்பார்கள் அல்லவா? அதனால் இவர்கள் தனிநபர் வழிபாடு செய்த தரங்கெட்ட வழிகேடர்கள்! அவர்களை எதிர்த்துத் தான் ஆட்சித் தலைவர் அபூபகர் (ரலி) அவர்கள் போர் தொடுத்தார்கள்.

மேற்கண்ட வசனம் மற்றும் ஹதீஸின் பின்னணியில் தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ளவர்கள் தங்களிடம் தனிநபர் வழிபாடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, தர்ஹா வழிபாடு கூடும் என்றோ, அல்லது குர்ஆன் மட்டும் போதும் என்றோ ஒருவர் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) அப்போது அவர் கூறும் அந்தக் கருத்துக்கு நாம் சென்று விடுவோமா? ஒரு போதும் செல்ல மாட்டோம். அப்படிச் செல்லக் கூடாது என்பதற்காகத் தான் இந்த விளக்கம்!

இது போன்று தவ்ஹீது ஜமாஅத்தின் தலைவர்களில் ஒருவர் அடுத்தவரது சொத்தை அபகரித்து விட்டார்கள் என்பதற்காகவோ, அல்லது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியோ நீக்கப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்குப் பின்னால் ஒரு சிலர் செல்கிறார்கள் என்றால் அவர்களும் நிச்சயமாகத் தனிநபர் வழிபாடு செய்பவர்கள் தான்; வழிகேட்டில் செல்பவர்கள் தான்.

மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களை நோக்கி நாம் சொல்கின்ற குற்றச்சாட்டு, தனிநபர் வழிபாடு என்ற குற்றச்சாட்டுத் தான்.

உதாரணமாக, ஹனபி மத்ஹபினர் ஃபஜ்ருத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பிறகும் முன் சுன்னத் தொழுவது வழக்கம். “தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு எதுவும் தொழக் கூடாது’ என்ற நபிமொழியை ஆதாரமாகக் காட்டி இவ்வாறு தொழுவது கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஹனபி மத்ஹபினர் இந்த ஹதீஸை ஏற்காமல், “எங்கள் இமாம் அபூஹனீபா இப்படித் தான் சொல்லியிருக்கிறார்’ என்று சொன்னால் அதை நாம் தனிநபர் வழிபாடு என்கிறோம்.

ஹதீசுக்கு மாற்றமாக அமைந்த இந்த இமாம்களின் கருத்தை விட்டு விலகி தவ்ஹீதுக்கு வந்தோம். ஏன்? இதுவெல்லாம் தனிநபர் வழிபாடு என்பதால் தான்.

நாம் அது வரை பின்பற்றி வந்த அந்த இமாம்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்தவர்கள். அவர்களது ஆய்வில் ஏற்பட்ட குறைபாடுகளைத் தனிநபர் வழிபாடு என்று கூறி அந்த மத்ஹபுகளை விட்டு வெளியே வந்தோம்.

அப்படிப்பட்ட நாம், அல்லாஹ்வுடைய பயம் ஒருபுறம் இருக்கட்டும்; அடுத்தவர்கள் பார்ப்பார்களே என்ற பயமும் வெட்கமும் இல்லாமல் ஒழுக்கக் கேட்டில் வீழ்பவர்களுக்குப் பின்னால் செல்வது தனிநபர் வழிபாட்டிலும் தரங்கெட்ட வழிபாடாகும்.

ஏகத்துவத்தில் கடுகளவு பிடிமானம் உள்ளவர்களிடம் கூட இந்தத் தன்மை ஏற்பட்டு விடக்கூடாது. இந்தத் தனிநபர் வழிபாடு கொள்பவர்கள் தவ்ஹீதுவாதிகளாக இருக்க முடியாது. இது போன்ற வழிகேடுகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக்

அண்மையில் நம்முடைய ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட சிலர், ஒரு பாட்டைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்த பாக்கரை இப்படி அநியாயமாகத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது தான் அந்தப் பாட்டு! இதற்குரிய விளக்கத்தை “தியாகமா? துரோகமா?’ என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம்.

இங்கே நாம் காணப் போவது கஅப் பின் மாலிக் அவர்களின் வரலாறு! இது முழுக்க முழுக்க புகாரியில் இடம்பெறும் ஹதீஸாகும்.

நபித்துவம் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் மாபெரும் சோதனைக்குள்ளான கட்டத்தில், மதீனாவிலிருந்து ஹஜ் செய்ய வரும் மக்களிடம் சத்தியத்தைப் போதிக்கலானார்கள்.

மினாவில் முதல் (ஜம்ரத்துல்) அகபா என்ற இடத்தில், மதீனத்துத் தோழர்களுடன் அழைப்புப் பணி சந்திப்பு நடைபெற்றது. இதற்கு அகபா (கணவாய்) உடன்படிக்கை என்று பெயர் வழங்கப்படுகின்றது.

நபித்துவம் பெற்ற 11, 12, 13வது ஆண்டுகளில் இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற சந்திப்புகள் நடந்தன.

இதில் இரண்டாம் சந்திப்பின் போது இஸ்லாத்தை ஏற்றவர் தான் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள்.

அகபா உடன்படிக்கை போலவே வரலாற்றில் நிலைத்து நிற்பது பத்ருப் போர்! இந்தப் போர் திட்டமிட்ட போர் அல்ல! திடுமென நடந்த ஒரு திடீர் போர்!

சிரியா சென்று விட்டுத் திரும்ப வருகின்ற அபூசுஃப்யானின் வாணிபப் படையை வழிமறிக்க வந்த நபித்தோழர்கள் மீது அல்லாஹ்வால் வலிய திணிக்கப்பட்ட போர் தான் பத்ருப் போர்!

திருப்புமுனை மிக்க அந்தத் திருப்போரில் கலந்து கொண்ட அத்தனை நபித்தோழர்களும் தியாகிகளாயினர். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், திருப்தியையும் பெற்றனர்.

இதை நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

(ஹாத்திப் பின் அபீ பல்தஆ என்ற நபித்தோழர், மக்காவாசிகளான இணை வைப்போர் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத் திட்டங்கள் சிலவற்றை முன்கூட்டியே தெரிவித்துக் கடிதம் அனுப்பி, மாட்டிக் கொண்ட போது) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 4890)

அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்ட கஅப் பின் மாலிக், பத்ருப் போரில் கலந்து கொண்ட முராரா பின் ரபீஃ அல் அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல் வாகிஃபீ ஆகிய மூன்று பேரும் தபூக் போரில் கலந்து கொள்ளாததால் நபி (ஸல்) அவர்களால் 50 நாட்கள் ஊர் விலக்கி வைக்கப்படுகின்றார்கள்; சமூக பகிஷ்காரம் செய்யப் படுகிறார்கள்.

தியாகிகளான இம்மூவரும் தண்டிக்கப்பட்ட பின்னரும், “நாங்கள் தியாகிகள்; எங்களைத் தண்டிக்கலாமா? ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உறவை விட்டும் துண்டிக்கலாமா?’ என்று கேட்கவில்லை. கட்டுப்பட்டார்கள். இஸ்லாமிய ஜமாஅத்தை விட்டு வெளியே போய் விடவில்லை.

தவ்ஹீது ஜமாஅத் தலை தூக்குவதற்காக யார் தியாகம் செய்திருந்தாலும் அந்தத் தியாகத்தை, துரோகத்தால் அழித்துவிடக் கூடாது என்பதற்கு கஅப் பின் மாலிக்கின் சுயசரிதை ஒரு சுடர் விடும் பாடமும் படிப்பினையும் ஆகும்.

கஅப் பின் மாலிக், முராரா பின் ரபீஃ அல் அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல் வாகிஃபீ ஆகியோரைப் போன்று கட்டுப்படுவோம்; கட்டுப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் கட்டமைப்பையும் காப்போம் என்று கூறி அந்த சுய சரிதைக்குள் செல்வோம்.

பத்ருப் போரா? அகபா பிரமாணமா?

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தபூக் போரைத் தவிர நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப்) போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்து விட்டான்.

“இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்’ என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த “அகபா இரவில்’ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்குப் பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; “அல்அகபா’ பிரமாணத்தை விட “பத்ர்’ மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!

தகிக்கும் வெயிலில் தபூக் போர்

அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாத போது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ் நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒரு போதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின் போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று அதை மறைக்காமல் இருந்ததில்லை.

ஆனால், தபூக் போர் (நேரம்) வந்த போது அதற்காகக் கடும் வெயிலில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்தார்கள்.

எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும்

விட்டார்கள். “எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனை பேருக்கு இடமளிக்காது’ எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.

பழுத்துக் குலுங்கும் பேரீச்சம்பழங்கள்

(போரில் கலந்து கொள்ளாமல்) தலை மறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

தள்ளிய பயணம் தப்பிய பயணமே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.

நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லுவேன். எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்து விடுவேன்.

“(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப் படவேண்டும்?)’ என்று என் மனத்திற்குள் கூறிக் கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடு பட்டனர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் எனது பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை.

“நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன்’ என்று நான் (என் மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன்.

அவர்கள் அனைவரும் சென்ற பிறகு மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பாடும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) எனது நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது.

முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்று விட்டனர். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும் போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டி ருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் என்ன ஆனார்?” என்று கேட்டார்கள்.

பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அவரின் இரு சால்வைகளும் (ஆடை அணி கலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்து விட்டன” என்று கூறினார்.

உடனே, முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (அந்த மனிதரை நோக்கி), “தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.

மனதில் தோன்றிய பொய்

நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டிய போது கவலை என் மனதில் புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன்.

“நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?” என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் உதவி தேடினேன்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட போது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தை விட்டு விலகி விட்டது.

“பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது. (அல்லாஹ் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்)’ என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள்.

சாக்குச் சொன்ன சந்தர்ப்பவாதிகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். அதை அவர்கள் செய்த போது, (தபூக் போரில் கலந்து கொள்ளச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.

உண்மையே உரைத்தல்

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, “வாருங்கள்” என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன்.

அப்போது அவர்கள் என்னிடம், “(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

நான், “ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாதாயவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை; அல்லாஹ்வின் மீது ஆணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை” என்று கூறினேன்.

காத்திருக்கக் கட்டளை

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொல்லி விட்டார்” (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.

மீண்டும் தோன்றிய பொய்

பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின் தொடர்ந்து ஓடி வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமற் போய் விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லி விடலாமா என்று நான் நினைத்தேன்.

பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, “(தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கின்றார்களா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம். இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போலவே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) சொன்னார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டது தான் அப்போது அவர்கள் இருவருக்கும் சொல்லப்பட்டது” என்று கூறினார்கள்.

உடனே நான், “அவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முராரா பின் ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்” என்று பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன்.

பகிஷ்கரிக்கப்பட்ட பத்ரு ஸஹாபாக்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப் போய் விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்பூமியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன்.

இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். எனது இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர்.

பேச்சுக்கும் தடை

நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்து கொண்டும், கடை வீதிகளில் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேச மாட்டார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன்.

நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள்.

ஸலாமுக்கும் பதிலில்லை

மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்ற போது, நான் நடந்து போய் அபூ கத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் மதிற் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்குப் பதில் சலாம் சொல்லவில்லை.

உடனே நான், “அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன் வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயா?” என்று கேட்டேன். அதற்கு அவர் (பதில் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போலவே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவேயிருந்தார். மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன்.

அப்போது அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்து அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி)னேன்.

அரசனிடமிருந்து வந்த அழைப்பு

ஒரு நாள் மதீனாவின் கடைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், “கஅப் பின் மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?” என்று விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே அவர் என்னிடம் வந்து, “ஃகஸ்ஸான்’ நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி) விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்து விடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.

இதை நான் படித்த போது, “இது இன்னொரு சோதனை ஆயிற்றே!” என்று (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டு அதை எடுத்துச் சென்று அடுப்பிலிட்டு எரித்து விட்டேன்.

தாம்பத்யத்திற்கும் தடை

ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு தூதர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், “அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அவர், “இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரை விட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத் தூதர் உத்தரவு)” என்று கூறினார்.

இதைப் போன்றே என் இரு சகாக்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உத்தரவு அனுப்பியிருந்தார்கள். ஆகவே, நான் என் மனைவியிடம், “உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!” என்று சொன்னேன்.

ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவு கொள்ள) நெருங்க வேண்டாம்” என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டே இருக்கிறார்” என்றும் கூறினார்.

என் வீட்டாரில் ஒருவர், “தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை புரிய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)” என்று கூறினார்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் சலுகை காட்டியிருக்கலாம்)” என்று கூறி விட்டேன். அதற்குப் பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன்.

சுப்ஹில் வந்த சுபச் செய்தி

எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) “பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொறுத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது.

அப்போது, “சல்உ’ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், “கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக் கொள்க!” என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்து விட்டது என்று நான் அறிந்து கொண்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்த போது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள்’ என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.

வழிநெடுகிலும் வாழ்த்தும் மக்கள்

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக் கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், “அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்’ என்று கூறலாயினர்.

நபிகளாரின் நல்வாழ்த்துக்கள்

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்ன போது, சந்தோஷத்தினால் முகம் மின்னிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சந்தோஷம் ஏற்படும் போது அவர்களது முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களது முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களது சந்தோஷத்தை நாங்கள் அறிந்து கொள்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் தூதரே! எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிடுவதற்காக) தர்மமாக அளித்து விடுகிறேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று கூறினார்கள்.

உண்மைக்குக் கிடைத்த உயர் பரிசு

“கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதை அடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்” என்று கூறினேன்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து எனது இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் காலத்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மன்னிப்பை வழங்கிய மகத்தான வசனம்

மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், “இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!” எனும் (9:117-119) வசனங்களை அருளினான்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒரு போதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்னவர்(களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போல நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளிய போது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான்.

“அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்களை நீங்கள் விட்டு விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள்! அவர்கள் அசுத்தமாவர். அவர்களின் தங்குமிடம் நரகம். இது அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான தண்டனை. நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்” என்று அல்லாஹ் கூறினான். (9:95, 96)

—————————————————————————————————————————————–

தியாகமா? துரோகமா?

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.எம். பாக்கருடன் இருக்கும் சிலர், “ஜமாஅத்திற்காக பாக்கர் பெரிய தியாகம் செய்திருக்கின்றார்; அப்படிப்பட்ட தியாகியை அநியாயமாக நீக்கி விட்டார்கள்’ என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். “நான் இந்த ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்தேன்’ என்று பாக்கரும் கூறிக் கொண்டிருக்கிறார்.

மண் டி.வி. விண் டி.வி.யானது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தியாகம் செய்தார்கள் என்று சொல்கிறோம். அதை அவர்களுடைய வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். நபித்துவத்திற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் செல்வந்தர்! நபித்துவம் வந்த பிறகு வறுமை நிலை! பெரும்பாலான நபித்தோழர்களின் நிலையும் இவ்வாறே இருந்தது. செல்வந்தர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டார்கள்.

இது போன்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் துவங்குவதற்கு முன்பு பாக்கர் வசதியில் இருந்து இப்போது வறுமையில் உழல்கின்றாரா? என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லி விடலாம். உண்மையில் இதற்கு நேர் மாற்றம் தான்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் துவங்குவதற்கு முன்னால் பாக்கர் வின் டி.வி.யில் இயக்குநர் கிடையாது. இப்போதோ அவர் அதில் ஓர் இயக்குநர்! எந்த அளவுக்கென்றால் இன்று நமது ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விடாமல் தடுக்கும் அளவுக்குச் செல்வாக்கு பெற்ற ஒரு இயக்குநர்! இந்த இயக்குநர் பொறுப்பு இந்த ஜமாஅத் துவங்கியதற்கு முன்பா? பின்பா?

ஜமாஅத்தின் டி.வி. நிகழ்ச்சிகளுக்காக லட்சக்கணக்கில் போட்டுக் கட்டினேன் என்று பாக்கர் கூறுகின்றார். அதுவும் தமுமுக காலத்திலிருந்து போட்டுக் கட்டினேன் என்கிறார்.

அவர் சொல்லும் நஷ்டக் கணக்கு அடிப்படையில் போட்டுக் கட்டியிருந்தால் பில்கேட்ஸால் கூட போட்டுக் கட்ட முடியாது.

ஆனால் தவ்ஹீது ஜமாஅத் மூலம் கிடைத்த விளம்பரம், நன்கொடைகள் அவரது நிகழ்ச்சிக்கு மட்டுமில்லாமல் அவரது வின் டி.வி.யின் வளர்ச்சிக்கும் பல பரிமாணங்களில் படிக்கட்டுகளாக அமைந்தன.

தவ்ஹீது ஜமாஅத்தின் நிகழ்ச்சி காரணமாக பட்டணத்திலிருந்து பட்டிதொட்டி வரையுள்ள கிளை உறுப்பினர்கள் சுவர்கள், தட்டிப் பலகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் செய்த விளம்பரங்கள் அதை மண் டி.வி. என்ற நிலையிலிருந்து விண் டி.வி.யாக உயர்த்தின.

தவ்ஹீது ஜமாஅத் ஆரம்பிப்பதற்கு முன்னால் வின் டி.வி.யில் நிகழ்ச்சி நடத்தும் வாடிக்கையாளராக இருந்த பாக்கர் இன்று அதே வின் டி.வி.யில் பங்குதாரர். தியாகம் என்றால் பக்கீராக ஆகியிருக்க வேண்டும். பங்குதாரர் என்ற தகுதி பொருளாதாரத்தின் வளர்ச்சியை உணர்த்துகின்றதா? அல்லது கட்டிய கைலியுடன் வெளியே நிற்கிறார் என்ற கையறு நிலையை உணர்த்துகின்றதா?

வந்தார்கள்! சென்றார்கள்!

தமுமுகவை விட்டு நாம் வெளியேற்றப்பட்டவுடன் பாக்கரும் வெளியே வந்தது ஒரு தியாகம் அல்லவா? என்று கூடக் கேட்கலாம்.

நம்மோடு வந்தது பாக்கர் மட்டுமல்ல! அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் ஆயிரக்கணக்கான அழைப்பாளர்கள், லட்சக்கணக்கான செயல் வீரர்கள், ஏகத்துவமே உயிர் மூச்சு என்ற சிந்தனை உள்ளவர்கள் அத்தனை பேரும் வந்தார்கள். தமுமுக பிரிவதற்கு முன்னால் ஜாக்கை விட்டு வெளியே வந்த போதும் அப்படித் தான் வந்தார்கள். வந்த அழைப்பாளர்கள் அத்தனை பேரும் பிரச்சாரக் களத்தில் அடி உதை வாங்கியவர்கள். பாக்கரை விடவும் அதிகம் தியாகம் செய்த அடிமட்டத் தொண்டர்கள் அவர்கள். மேலும் அல்லாஹ்வின் அருளால் இவர்கள் இன்றளவும் ஜமாஅத்திலேயே இருக்கிறார்கள். பாக்கரைப் போல் வந்து விட்டு வெளியே சென்று விடவில்லை.

தீவிரப் பிரச்சாரத்தில் தியாகம்

பிரச்சாரத்தில் அவர் பெரிய தியாகம் செய்திருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். இதிலும் அவரால் பாஸ் மார்க் வாங்க முடியாது. அதிகமான கூட்டத்திற்குச் சென்றவர் யார் என்று கணக்கெடுத்தால் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி தான் அதிக மதிப்பெண் வாங்குவார். அதற்குப் பிறகு மற்ற அழைப்பாளர்கள் அடுத்தடுத்த மதிப்பெண் வாங்குவார்கள்.

இதில் அடித்தட்டில் உள்ள தாயீக்கள் செய்யும் தியாகம் சாதாரணமானதல்ல!

பெருநாளன்று ஒருவர் தன் மனைவி மக்களுடன், தாய் தந்தையருடன் இருப்பதையே விரும்புவார். ஆனால் தவ்ஹீது ஜமாஅத்தின் தாயீக்கள் பெருநாள் அன்று வெளியூர்களுக்குச் சென்று பெருநாள் பேருரை நடத்தி விட்டு வருகின்றார்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆ உரையாற்றுவதற்காக அவர்கள் செய்கின்ற பயணம் மிகச் சிரமமான காரியமாகும். அத்துடன் பொதுக்கூட்டங்கள் ஆனாலும் சரி! ஜும்ஆ உரையானாலும் சரி! பெருநாள் உரையானாலும் சரி! அந்த உரைகளுக்காகக் குறிப்பெடுக்க ஒதுக்கும் நேரங்கள்! அதிலும் கம்ப்யூட்டர் வசதியில்லாதவர்கள் நூல்கள் மூலம் குறிப்பு எடுப்பதற்காகப் படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

பாக்கருக்கு ஒரு குறிப்பும் தேவையில்லை. அவரது பேச்சைக் கேட்ட மாத்திரத்திலேயே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இயக்கத்தின் வேர்கள் இரண்டு சாரார் ஆவர். ஒரு சாரார் தாயீக்கள்; மற்றொன்று மாவட்ட, நகரக் கிளை நிர்வாகிகள். இந்த வேர்கள் தான் தவ்ஹீது ஜமாஅத் என்ற மரத்தை எந்தப் புயலிலும் சூறாவளியிலும் சரிந்து, சாய்ந்து விடாமல் பாதுகாத்து நிற்கின்றன.

இதில் தாயீக்கள் என்ற சாரார் ஏழைகள்; பாட்டாளி வர்க்கத்தினர்! பாக்கர் அன்ட் கம்பெனியினர் போன்று காரில் பறக்கும் வசதி பெற்றவர்கள் அல்லர்!

சில சமயங்களில் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களில் பயணச் செலவுத் தொகை கூட போதிய அளவுக்குக் கிடைக்காமல் கைக்காசு செலவழித்து விட்டு வருபவர்கள். சில ஊர்களில் சரியான உணவின்றித் திரும்புபவர்கள். அதனால் பாட்டாளி தாயீக்களின் அழைப்புப் பணிக்கு முன்னால் பாக்கரின் பிரச்சாரம் ஒன்றும் பெரிய தியாகம் அல்ல!

ஆனால் வின் டிவி நிகழ்ச்சிகளில் பாக்கர் தனது உரைகளைத் திட்டமிட்டு ஒளிபரப்பிக் கொண்டதன் மூலம் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்று வேண்டுமானால் கூறலாம்.

செயல்பாட்டில் தியாகம்

இந்த இயக்கத்தின் வேர்களான மற்றொரு சாரார் மாவட்ட, கிளை நிர்வாகிகள். இவர்கள் இன்னொரு கண்ணோட்டத்தில் அழைப்பாளர் களும் கூட! இவர்களிடம் பிரச்சாரம் இல்லாவிட்டாலும் தங்களது செயல்பாட்டின் மூலம் மக்களைச் சத்தியத்தின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள்.

அந்தந்த ஊர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற் காகத் தங்கள் பிழைப்புகளை விட்டு விட்டு காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் ஒரு நாள் அல்லது பல நாட்கள் காத்து கிடந்து தவ்ஹீது ஜமாஅத்தின் வளர்ச்சிக் காகப் பாடுபடுகிறார்கள். சில சமயங்களில் சிறைச்சாலை களையும் சந்திக்கின்றனர். இவர்களின் இந்தத் தியாகத்திற்கு முன்னால் பாக்கரின் தியாகம் ஒன்றும் மேலானதல்ல!

அன்று சாமானியர் இன்று ஜமீன்தார்

இந்த இயக்கம் தொடங்குவதற்கு முன்பு மற்றவர்களைப் போலவே பாக்கரும் ஒரு சாமானியர்; சராசரி மனிதர்! ஆனால் இன்று ஒரு கோடீஸ்வரர்!

ரியல் எஸ்டேட், ஹஜ் சர்வீஸ், தொலைக்காட்சி என அவரது பொருளாதார வட்டம் விரிந்து விட்டது. அவருடைய வளர்ச்சிக்கு இந்த ஜமாஅத் பயன்பட்டிருக்கின்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் செல்வந்தர்களைத் தங்களது பிஸினஸ் வலையில் பிடித்துப் போட இந்த ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் பதவி வசதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது.

அவர் இந்த ஜமாஅத்தால் பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறாரா? அல்லது கீழ் நிலையில் வீழ்ந்திருக்கிறாரா? என்று பாருங்கள். உயர்ந்திருக்கிறார் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வோம். அப்படியென்றால் அதை எப்படி தியாகம் என்று சொல்ல முடியும்? இந்த ஜமாஅத்தின் மூலம் தான் அவர் பொருளாதார வளர்ச்சியும், வசதி வாய்ப்புகளும் கண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் அவருடைய இந்த பிசினஸ் வளர்ச்சி ஜமாஅத் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக வந்து நின்றது. அவர் நடத்தும் ஹஜ் சர்வீஸை, ஜமாஅத் நடத்துவதாக நம்பி ஏமாந்து, இதில் ஹஜ் செய்யச் சென்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட வசதிக் குறைவின் காரணமாக சுமத்திய கடுமையான பழிகளையும் கண்டனங்களையும் ஜமாஅத்  தன் தலையில் சுமக்க வேண்டியிருந்தது.

இவர் செய்கின்ற ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் ஜமாஅத் மீது தான் குற்றம் சுமத்தப்பட்டது. எனவே தான் இந்தப் பழியை ஜமாஅத் சுமக்க முடியாது என்று நிர்வாகம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அதை உணர்விலும் அறிவித்தது. அதை அறிவித்த மாத்திரத்தில் பாக்கர் தணல் புழுவானார்; தாங்க முடியாத கோபத்திற்கு ஆளானார்.

ஜமாஅத்தின் வளர்ச்சிக்குக் குறுக்கே வந்து நிற்கும் வியாபாரத்தை விட்டொழித்திருந்தால் அதைத் தியாகம் என்று கூறலாம். அல்லது ஜமாஅத்தை விட்டே விலகியிருந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யத் தவறியதால் இவர் இந்த ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்யவில்லை. துரோகம் தான் செய்திருக்கின்றார்.

தொடரும் துரோகப் பட்டியல்

இவர் செய்த துரோகங்களை எடுத்துப் பார்த்தால் அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

நாமெல்லாம் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்யும் போது அதில் வீடியோ ஒளிபரப் பப்படுவதைப் பார்க்க நேரிடும். நகைச்சுவைக் காட்சிகள் வரும் போது சிரித்தால் கூட, “நாமெல்லாம் தாயீ ஆயிற்றே! நாம் சிரிப்பதை யாரேனும் பார்த்து விட்டால்?’ என்ற உறுத்தல் வந்தவுடனே சிரிப்பு வந்த வேகத்தில் திரும்பிப் போய்விடும்.

ஆனால் இவரோ பேருந்தில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து அதுவும் 10 மணி நேரத்திற்குக் குறையாத பயணத்தில், ஒரு ஜமாஅத்தின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு செல்கிறார். இவ்வாறு அந்நியப் பெண் அருகில் இருந்து கொண்டு சரச சல்லாபத்துடன் செல்லும் போது அவரது மனம் உறுத்தவில்லை. ஜமாஅத்தின் கண்ணியம் காற்றில் பறக்குமே என்று கவலைப்படவில்லை. ஜமாஅத்தின் கண்ணியத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை; அதைப் பற்றி அவருக்குக் கவலையுமில்லை. இது ஜமாஅத்திற்குச் செய்த மிகப் பெரிய துரோகம்!

கொள்கை அடிப்படையில் நமது ஜமாஅத்தின் மீது குறை சொல்ல முடியாத எதிரிகள் கூட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜமாஅத்தை விமர்சிப்பதற்கு இவர் காரணமாக இருந்தார். நந்தினி பாக்கர் என்று ஜாக் மேடைகளில் விமர்சனம், மன்மதக் குஞ்சு என்று தமுமுகவினர் செய்த விமர்சனம் இவையனைத்தும் தனிப்பட்ட பாக்கரை மையமாக வைத்துச் செய்யப்படவில்லை. ஜமாஅத்தை மையப்படுத்தியே விமர்சிக்கப்பட்டது. இவ்வாறு ஜமாஅத்திற்கு இழுக்கைத் தேடித் தந்தது இவர் செய்த தியாகம் அல்ல, துரோகம் தான்.

இந்தத் துரோகத்தைப் பற்றி நிர்வாகக் குழுவில் விசாரிக்கையில், “அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தது அடுத்த துரோகம்! இப்படி இவர் செய்த துரோகங்களை வேண்டுமானால் பட்டியல் போடலாம். தியாகங்களைப் பட்டியல் போட முடியாது.

இறுதி செயலே உறுதி செய்யும்

இத்தனை துரோகங்கள் செய்த இவரை தியாகி என்று இவரது சகாக்கள் சொல்வது பச்சைப் பொய் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். சரி! அப்படி இவர் தியாகம் செய்தார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தியாகத்திற்கு மதிப்பும் மரியாதையும் கிடைப்பது அவரது இறுதிச் செயலை வைத்துத் தான். இறுதிச் செயல் தான் அதைத் தியாகம் என்று தீர்மானிக்கும்.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க் களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு இடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லைஎன்று (வியந்து) கூறினார்கள்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(கண்காணித்த) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி “அவர் நரகவாசிஎன்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப் பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 2898

பாருங்கள்! நபித்தோழர்கள் வியக்கின்ற அளவுக்குப் போர்க் களத்தில் சாதனையும் சாகசமும் புரிந்த இந்த வீரரின் முடிவு விபரீதமாக அமைந்தது.

இவர் தொடர்பாகத் தான் நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிமான ஒருவர் தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான்” என்று கூறுகின்றார்கள். (புகாரி 3062)

இதையொட்டியே “ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி 6493)

இந்த ஹதீஸ்களின் பின்னணியில், பாக்கருக்கு ஜமாஅத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருக்குமானால் இவர் மீது ஹாமீன் இப்ராஹீம் சுமத்திய குற்றச்சாட்டுக்களை…

பொதுமக்கள் முன்னிலையில் மறுத்து, தன்னை நிரபராதி என்று நிரூபித்திருக்க வேண்டும்.

அல்லது செயற்குழுவில் தன்னை நிரபராதி என்று நிரூபித்திருக்க வேண்டும்.

அல்லது ஜமாஅத்தை விட்டு கண்ணியமாக ஒதுங்கி இருந்திருக்க வேண்டும்.

இந்த மூன்றில் எதையேனும் தேர்ந்தெடுத்திருந்தால் அவர், “செய்தேன்’ என்று சொல்கின்ற தியாகத்திற்கு ஓர் அர்த்தம் இருந்திருக்கும்.

செய்த குற்றத்திற்காக ஜமாஅத் ஒரு தண்டனையைக் கொடுக்கும் போது, அகபா உடன்படிக்கை தியாகியான கஅப் பின் மாலிக், பத்ருப் போர் தியாகிகளான முராரா பின் ரபீஃ அல்அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல்வாக்கிஃபி போன்று அந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டார் என்றால் உண்மையில் அது தான் தியாகம்!

அவர் அமைதி காத்திருந்தால், அந்தக் கடைசி நிலையை வைத்து அவரது கண்ணியம் உயர்ந்திருக்கும். ஆனால் அதைச் செய்ய அவர் முன்வரவில்லை. அவர் முன்வந்தாலும் அவரது சகாக்கள் அவரை விடத் தயாரில்லை.

இன்று அவரது சகாக்கள், “ஒருவரது குறையை மறைக்க வேண்டும்; துருவித் துருவி ஆராயக் கூடாது’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த ஜமாஅத் பாக்கரின் குறையைக் கடைசி வரை மறைத்தது. ஜமாஅத்தின் கண்ணியம் கெட்டு விடக் கூடாது என்பதற்காக இவராக ஒதுங்கி விடுவார் என்று இவ்வளவு காலம் காத்திருந்தது. இறுதியில் ஜமாஅத்தை உடைக்கும் வேலையில் ஈடுபட்டவுடன் தான் நடவடிக்கையில் இறங்கியது.

கடைசி வரை இவரது தவறை மறைத்த ஜமாஅத்திற்கு நன்றியுடன் நடப்பதை விட்டு விட்டு, ஜமாஅத்திலிருந்து வெளியேறிய பாக்கர் தியாகம் செய்யவில்லை, துரோகமே செய்திருக்கின்றார்.

பாக்கர் தியாகம் செய்தவர் என்று சொல்லும் போது, அறியாத மக்கள் அதை நம்பி விடக் கூடாது என்பதற்காகவும், இனி மேல் ஜமாஅத்தில் உள்ளவர்கள் தனிமனித வழிபாட்டிற்குப் பலியாகி தடம்புரண்டு விடக் கூடாது என்பதற்காகவும் இந்தத் தலைப்பில் இப்படியொரு விளக்கத்தை வெளியிட வேண்டியதாயிற்று!

———————————————————————————————————————————————–

தொடர்: 2

ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?

ஆட்சியதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்று வாதிட்டு ஜனநாயகத்தை மறுப்பது எவ்வளவு மடமை என்பதை நாம் சென்ற இதழில் கண்டோம்.

இவ்வாறு வாதிடக் கூடியவர்கள் வணக்க வழிபாடுகளைச் செய்யும் போது அல்லாஹ் கூறியபடி செய்யாமல் தங்களின் மதகுருமார்கள் சொன்னபடி செய்வதன் மூலம் தங்கள் வாதத்திற்குத் தாங்களே முரண்படுகிறார்கள் என்பதையும் சென்ற இதழில் நாம் எடுத்து வைத்துள்ளோம்.

இந்த வாதத்தில் இவர்கள் பொய்யர்கள் என்பதை இவர்களின் நடவடிக்கைகளே அம்பலப் படுத்துவதை நாம் காணலாம்.

இவ்வாறு வாதிடும் இயக்கத்தினர் தமது இயக்கத்திற்காகவோ, அல்லது தமக்காகவோ ஒரு சொத்தை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சொத்தின் உரிமையாளரிடம் பணத்தைக் கொடுத்துப் பேசி முடித்தவுடன் அந்தச் சொத்து அவர்களுக்குரியதாகி விடும். இன்னும் உறுதிப்படுத்த நாடினால் இருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் குர்ஆனும், நபிவழியும் கூறுகின்றன.

ஆனால் சொத்தின் மதிப்புக்கு ஏற்ப முத்திரைத் தாள் வாங்குவதும், அந்த முத்திரைத் தாளில் அதை எழுத வேண்டும் என்பதும், எழுதிய பின் அதைப் பத்திரப் பதிவாளர் முன் பதிவு செய்வதும் மனிதர்கள் இயற்றிய சட்டமாகும். இந்த வாதத்தைச் செய்வோர் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட மனிதச் சட்டங்களை மீற வேண்டும். வெள்ளைத் தாளில் மட்டும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாதத்தைச் செய்யும் ஒருவர் கூட இப்படிச் செய்வதில்லை. எந்த அதிகாரம் மனிதர்களுக்கு இல்லை என்று கூறினார்களோ அந்த அதிகாரத்துக்குக் கட்டுப்படும் போது தங்கள் வாதம் பொய்யானது என்று தம்மையும் அறியாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

இது போன்ற வாதங்களைச் செய்பவர்கள் தமது அலுவலகத்துக்காகவோ அல்லது சொந்தப் பயன்பாட்டுக்காகவோ ஒரு கட்டடம் கட்ட நினைக்கிறார்கள். அல்லது ஒரு பள்ளிவாசலையே கட்ட நினைக்கிறார்கள்.

நமக்குச் சொந்தமான இடத்தில் நாம் விரும்பும் கட்டடத்தைக் கட்டிக் கொள்ளும் உரிமை இஸ்லாத்தில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மனிதச் சட்டங்கள் இதில் பல விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளன.

கட்டப்படும் கட்டடத்தின் அளவு, பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள், கட்டடத்தின் உயரம் மற்றும் அடுக்குகள் அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு, பல மட்டங்களில் ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெறாமல் கட்டடம் கட்டக் கூடாது என்பது மனிதச் சட்டம்.

இப்போது இவர்கள் தமது வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? “எனது சொந்த இடத்தில் சொந்தக் கட்டடத்தைக் கட்ட நான் எவரிடமும் அனுமதி பெற மாட்டேன்’ என்று கூற வேண்டும். ஆனால் தமது வாதத்தைத் தாமே மீறும் வகையில் அந்த மனிதச் சட்டத்தை அப்படியே பேணுவதைக் காண்கிறோம். அல்லாஹ்வுக்கே அதிகாரம் என்பது இப்போது இவர்களுக்கு மறந்து போய் விடுகின்றது.

இவர்கள் தமது கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்காக வார, மாத இதழ்களை நடத்துகிறார்கள். இஸ்லாம் இந்த உரிமையை வழங்கியுள்ளது.

ஆனால் இவர்கள் அற்பமான தபால் சலுகை வேண்டும் என்பதற்காக இதழ்களின் பெயரைப் பதிவு செய்கிறார்கள். அதற்காகப் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுகிறார்கள்.

“மனிதச் சட்டங்களுக்குப் பணிந்து நாங்கள் அனுமதி வாங்கியுள்ளோம்’ என்பதைத் தெரிவிக்கும் வகையில் பதிவு எண்களைக் குறிப்பிடுகிறார்கள். சட்டம் இயற்றும் அதிகாரம் மனிதனுக்கு உள்ளதை அப்போது மட்டும் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்த வாதத்தைச் செய்பவர்களை ஒருவன் மோசடி செய்து விட்டால் இவர்கள் என்ன செய்கிறார்கள்? மனிதச் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படியோ அல்லது இந்திய உரிமையியல் சட்டத்தின் படியோ புகார் தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கின்றனர். மனிதச் சட்டங்களின்படி எங்களுக்கு நீதி வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகுவதன் மூலம் தங்கள் வாதம் அபத்தமானது என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.

“மனிதச் சட்டங்களை ஏற்றுக் கொண்டால் தான் மோசடி செய்யப்பட்ட பணம் எங்களுக்குக் கிடைக்கும் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை’ என்று கூற வேண்டியது தானே?

இவர்களின் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான். இலட்சக் கணக்கான ரூபாய் மதிப்புடைய பொருள் திருட்டுப் போய் விடுகின்றது. இஸ்லாமியச் சட்டத்தின்படி திருடனின் கையை வெட்ட வேண்டும். இந்தியாவில் சில மாதங்கள் சிறைத் தண்டனை தான் அளிக்கப்படும்.

அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமான சட்டம் தான் இந்தியாவில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். மனிதச் சட்டப்படியாவது எங்களுக்கு நீதி வழங்குங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடுகின்றனர். இவர்கள் செய்த வாதம் இப்போது என்னவானது?

ஹஜ் எனும் கடமையைச் செய்ய எந்த மனிதரிடமும் நாம் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் பாஸ்போர்ட், விஸா என்று பல்வேறு அனுமதிகளை வாங்கினால் தான் ஹஜ் செய்ய முடியும் என்று மனிதச் சட்டங்கள் கூறுகின்றன.

மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வருகிறார்களா? அல்லது மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு ஹஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்களா?

இவர்கள் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தித் தான் எல்லாவிதமான கொடுக்கல் வாங்கல்களையும் செய்கிறார்கள்.

தங்கம், வெள்ளி போன்றவை இயற்கையாகவே மதிப்புடைய பொருட்கள். அதன் மூலம் கொடுக்கல், வாங்கல் நடத்தினால் அதில் குறை ஏதும் சொல்ல முடியாது.

அல்லது பண்டமாற்று முறையில் கொடுக்கல் வாங்கல் நடத்தினால் அதையும் குறை கூற முடியாது. ஏனெனில் பண்டங்களுக்கு இயற்கையாகவே மதிப்பு உள்ளது.

ஆனால் ரூபாய் நோட்டுக்களுக்கு இயற்கையாக எந்த மதிப்பும் கிடையாது. 1000 ரூபாய் நோட்டுக்கு உரிய இயற்கையான மதிப்பு அதைத் தயாரிக்க ஆகும் செலவு தான்.

அதாவது 1000 ரூபாய் நோட்டைத் தயாரிக்க 10 ரூபாய் ஆகும் என்றால் அது தான் அந்தக் காகிதத்தின் மதிப்பு!

மனிதச் சட்ட அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி, “அந்தப் பேப்பரைக் கொண்டு வருபவனுக்கு 1000 ரூபாய் மதிப்புடைய பொருளைக் கொடுக்கலாம்’ என்று உத்தரவாதம் தருவதால் தான் அதற்கு செயற்கையாக மதிப்பு கூடுகின்றது.

ஒருவர் ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்திக் கொடுக்கல் வாங்கல் செய்யும் போதே, “மனிதச் சட்டங்களைப் பின்பற்றாமல் என்னால் வாழ முடியாது’ என்று வாக்குமூலம் தருகிறார்.

குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அடையாள அட்டை, சாலை விதிகள் என ஆயிரமாயிரம் விஷயங்களில் சட்டமியற்றும் அதிகாரம் மனிதனுக்கு இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இதற்குக் கட்டுப்படாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

யாரும் சொல்லாத தத்துவத்தை (?) சொன்னால் ஒரு கூட்டம் சேர்க்கலாம் என்பதற்காக மக்களை மடையர்களாக்குகிறார்களே தவிர எள்ளளவும் இவர்களது வாதத்தில் நேர்மையில்லை.

தேர்தலைப் புறக்கணிப்பதற்கு மட்டும் தான் இவர்களது வாதத்தை நடைமுறைப்படுத்த முடியுமே தவிர இதைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் இவர்களின் வாதம் செல்லத்தக்கதாக இல்லை.

தமது வாதத்தைத் தாமே மறுக்கும் இழிவு தான் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இந்த வாதத்தில் உள்ள இன்னும் பல தவறுகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

———————————————————————————————————————————————–

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச் சிறப்புகளை இதில் மட்டுமே நம்மால் காண முடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்டுகிறது.

திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் களையும் ஒருவர் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடைய முடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச் சிறப்பாகும்.

பேய் பிசாசு நம்பிக்கை உள்ளவர்களால் இரவில் தன்னந் தனியாகச் செயல்பட முடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாட முடியாது. பயம் இவர்களை கவ்விக் கொள்ளும். நிம்மதியை இழந்து கோழைகளாகத் திரிவார்கள்.

பில்லி சூனியத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் தனக்கு ஏதாவது சிறிய சிரமம் வந்து விட்டாலும் யாராவது சூனியம் வைத்து விட்டார்களோ என்று பதறுவார்கள். அறிவை இழப்பதோடு சம்பாதித்த பொருளையும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

பேய், பிசாசு, பில்லி, சூனியம், தகடு, தாயத்து போன்ற மூட நம்பிக்கைகளுக்கு இஸ்லாத்தில் எள் அளவு கூட அனுமதியில்லை.

பில்லி சூனியம், தர்ஹா வழிபாடு போன்ற அனாச்சாரங்களை நம்பாதவர்கள் தங்களது பொருளாதாரத்தையும் அறிவையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். சுய மரியாதையுடன் வீரர்களாக வலம் வருகிறார்கள்.

இது ஏகத்துவக் கொள்கையால் இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கின்ற நன்மைகளாகும்.

அனாச்சாரங்களுக்கு ஆணிவேர்

மூட நம்பிக்கைகளை நிலை நாட்டுவதற்காகப் புனையப்பட்ட கற்பனைக் கதைகளை அடிப் படையாகக் கொண்டு, இவை உண்மை என்று பலர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் செய்து காட்டும் தந்திர வித்தைகளை உண்மை என்று நம்பி ஏமாறுபவர்களும் உண்டு.

மேஜிக் என்று கூறி தந்திர வித்தைகளை மக்களுக்குப் பலர் செய்து காட்டுகிறார்கள். இவர்களது வித்தைகளைப் பார்க்கும் போது ஏதோ அற்புதங்களைச் செய்வது போல் நமக்குத் தோன்றுகிறது.

வித்தைகளை செய்து காட்டுபவர் இது கண்கட்டி வித்தை தான். இதில் எந்த அற்புதமோ மறைமுகமான சக்தியோ இல்லை என்று கூறும் போது இது பொய்யான வித்தை தான் என்று மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் இதே வித்தைகளை பில்லி சூனியம், மறைமுகமான சக்தி என்று கூறிச் செய்தால் மக்கள் அப்போதும் நம்பத் தயாராக இருக்கிறார்கள். ஏமாற்றப்பட்ட தங்களின் கண்களை மட்டுமே நம்புகிறார்கள். இந்த இடத்தில் குர்ஆன் ஹதீஸை வைத்து உரசிப் பார்த்து, சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

தங்களுடைய நோக்கங்களை அடைவதற்காகப் பேய் பிசாசு தன் மீது வந்து விட்டதாகக் கூறி நாடகமாடுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது நெருங்கிய உறவினர்களாக இருப்பதால் இவர்களின் மீதுள்ள நம்பிக்கையில் மூடநம்பிக்கையை உண்மை என்று பலர் கருதுகிறார்கள்.

இந்த மூட  நம்பிக்கைகள் பொய்யானவை என்பதற்கான போதிய ஆதாரங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து அறிந்த பிறகும் சிலருக்குச் சந்தேகம் வருகிறது. எனது தாய்க்குப் பேய் பிடித்திருக்கிறது. எனது சகோதரிக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது. தர்ஹாக்களுக்குச் சென்ற உடன் நோய் குணமாகி விட்டது. இதுவெல்லாம் எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? என்று சிலர் கூறுவதே இந்தச் சந்தேகத்திற்குக் காரணம்.

உறுதியான ஈமான் உள்ளவன் இவையெல்லாம் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தவறான நம்பிக்கைகளாக இருப்பதை மட்டும் கவனத்தில் கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு இவை பொய்யானவை என்று நம்புவான்.

இறைவன் எப்படிப் பொய் சொல்வான்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படிப் பொய் சொல்வார்கள்? என்று ஒருவன் நினைத்தால் அவன் இதுபோன்ற தவறான நம்பிக்கைகளுக்கு இடமளிக்க மாட்டான்.

மூடநம்பிக்கை மருத்துவம்

தங்களுக்கு அற்புத சக்தி இருக்கிறது என்று மக்களை நம்ப வைத்தால் தான் அதிகமான செல்வத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று போலி மந்திரவாதிகள் நினைக்கிறார்கள். வெறுமனே மருத்துவம் என்று கூறி சிகிச்சை செய்தால் பெரிய அளவில் இலாபத்தை ஈட்ட முடியாது என்று இவர்கள் கருதுகிறார்கள்.

எனவே மருத்துவம் செய்துவிட்டு நோய் நீங்கியதற்குத் தன்னுடைய தனிப்பட்ட ஆற்றல் தான் காரணம் என்று மக்களை நம்ப வைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் மந்திரவாதி கொடுத்த மருந்தாலும் சிகிச்சையாலும் தான் நோய் குணமாகிறது.

எந்த மருந்தும் இல்லாமல் வைத்தியம் செய்யும் முறை இன்றைக்குக் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. உடலில் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த உறுப்பை செயலுறச் செய்யும் நரம்பை தூண்டினால் கோளாறு சரியாகி விடும்.

இதை மருத்துவம் என்று கூறிச் செய்தால் பிரச்சனையில்லை. ஆனால் பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்துச் செய்கிறார்கள். இவர்களது முயற்சியால் பலன் கிடைப்பதால் இவர்கள் கூறுவது உண்மை என்று நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள்.

ஈமானை இழந்த கூட்டம்

மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தாரான இஸ்ரவேலர்கள் இறைவன் புறத்திலிருந்து பல சான்றுகளைக் கண்கூடாகப் பார்த்தார்கள். வல்ல இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்ற ஏகத்துவக் கொள்கையை உறுதிப் படுத்தும் பல அற்புதங்களைக் கண்டார்கள்.

மன்னு ஸல்வா என்ற வானுலக உணவு இறைவன் புறத்திலிருந்து இலவசமாக இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மூஸா (அலை) அவர்களையும் அவர்களுடன் இருந்த ஈமான் கொண்டவர்களையும் காப்பாற்றுவதற்காக அல்லாஹ் கடலில் ஒரு பாதையை ஏற்படுத்தினான். இதைக் கண்கூடாகக் கண்டு இறைவனது அற்புத உதவியால் உயிர் பிழைத்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள்.

தண்ணீருக்கு வழியில்லாமல் தாகத்தால் இவர்கள் வாடிய போது தனது கைத்தடியைப் பாறையின் மீது அடித்து அதில் பன்னிரண்டு நீரூற்றுக்களை மூஸா (அலை) அவர்கள் இறைவனுடைய உதவியால் வரவழைத்தார்கள். இந்த அற்புதத்தையும் கண்ணால் கண்டு பயனடைந்தவர்கள் தான் இந்த இஸ்ரவேலர்கள்.

கொலை செய்யப்பட்ட ஒருவர் இறைவனால் உயிரூட்டப்பட்டு கொலை செய்தவர் யார் என்பதைத் தன் வாயினால் தெளிவுபடுத்திய அற்புதத்தையும் கண்கூடாக இவர்கள் கண்டார்கள். இறை நம்பிக்கையை அதிகப்படுத்தும் பல அற்புதங்களை இவர்கள் கண்கூடாகக் கண்டிருந்தும் சாமிரீ என்பவன் செய்து காட்டிய அற்பமான வித்தையை நம்பி இறை நிராகரிப்பாளர்கள் ஆனார்கள்.

இஸ்ரவேலர்கள் வைத்திருந்த நகைகளைச் சேகரித்து அவற்றை உருக்கி ஒரு காளைக் கன்றை சாமிரீ செய்தான். மூஸா (அலை) அவர்களின் காலடி மண்ணை எடுத்து உலோகத்தால் ஆன மாட்டிற்குள் எறிந்தான். அந்த மாட்டிலிருந்து ஒரு சப்தம் வந்தது.

சப்தம் வந்ததை அடிப்படையாக வைத்து, இது தான் நமது கடவுள் என்று இஸ்ரவேலர்கள் நம்பி சாமிரீயின் சதியில் விழுந்தார்கள். நமது அறிவுக்குப் புலப்படாத காரியங்களைச் செய்து இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமான கருத்துக்களை அவன் விதைக்கும் போது, இதில் ஏதோ பித்தலாட்டம் உள்ளது என்று புரிந்து கொண்டு ஈமானில் உறுதியாக இஸ்ரவேலர்கள் இருந்திருக்க வேண்டும்.

சப்தமிட்ட இந்தப் போலிப் பிராணியால் நமது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியுமா? நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமா? என்று இவர்கள் சிந்தித்துப் பார்த்திருந்தால் சாமிரியால் உருவாக்கப்பட்ட சிலையை அவர்கள் கடவுளாக ஏற்றிருக்க மாட்டார்கள்.

உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான்என்று (இறைவன்) கூறினான்.

உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். “என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா?” என்று கேட்டார்.

நாங்கள் உம்மிடம் கொடுத்த வாக்குறுதிக்கு திட்டமிட்டு மாறு செய்யவில்லை. மாறாக அந்தச் சமுதாயத்தின் அணிகலன்கள் எங்கள் மீது சுமத்தப்பட்டன. அதை வீசினோம். இவ்வாறே ஸாமிரியும் வீசினான்.

அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (அவன்) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன் “இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்என்றான்.

அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப் படுங்கள்!என்று இதற்கு          முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்.

மூஸா, எங்களிடம் திரும்பி வரும் வரை இதிலேயே நீடிப்போம்என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 20:85-91

உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம் என்று அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் கூறுகிறான். இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்ட போது இதன் மூலம் நீங்கள் சோதிக்கப்படுகிறீர்கள் என்று ஹாரூன் (அலை) அவர்களும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

நமது இறை நம்பிக்கையை இறைவன் சோதிப்பதற்காக ஸாமிரீ போன்ற பொய்யர்கள் உருவாவார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றும் வித்தைகளைக் காட்டி இறை மறுப்பின் பக்கம் மக்களை இழுத்துச் செல்வார்கள்.

இந்த நேரத்தில் இவர்கள் கூறும் பொய்யான வித்தைகளை உண்மை என்று நம்பி பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல் போன்ற மூட நம்பிக்கைகளில் நாம் விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

இதைத் தான் மேற்கண்ட சாமிரியின் சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

தஜ்ஜாலுடைய குழப்பம்

பிற்காலத்தில் தஜ்ஜால் என்பவன் தோன்றுவான். அவன் பல அற்புதங்களை மக்களுக்கு முன்னிலையில் செய்து காட்டி தன்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளுமாறு கூறுவான். ஈமானில் பலவீனமானவர்கள் இவன் சொல்வதை உண்மை என்று நம்பி இவனைக் கடவுள் என்று ஏற்றுக் கொள்வார்கள்.

அற்பமான கண் கட்டி வித்தைகளைக் கண்டு ஏமாறுபவர்கள் கண்டிப்பாக தஜ்ஜாலுடைய குழப்பத்தில் விழாமல் இருக்க மாட்டார்கள். தஜ்ஜால் செய்கின்ற அற்புதம் மிகவும் வியக்கத்தக்க விதத்தில் இருக்கும். இறைவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாத காரியங்களைக் கூட செய்து காட்டி மக்களை நம்ப வைப்பான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன். வேறெந்த இறைத் தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அது தான் நரகமாக இருக்கும். நூஹ்  அவர்கள் அவனைக் குறித்து  தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3338

நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதை விட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “உமது கேள்வி என்ன?” என்று கேட்டார்கள். நான், “தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இது என்ன பிரமாதம்? அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விருக்கிறானோ) அவற்றை விட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமானவையேஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா(ரலி)

நூல்: முஸ்லிம் 5634

உறுதியான இறை நம்பிக்கை உள்ளவர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஜ்ஜால் புறப்பட்டு வரும் போது இறை நம்பிக்கையாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வார். அப்போது அவரை ஆயுதமேந்திய தஜ்ஜாலின் பாதுகாப்புப் படையினர் எதிர்கொண்டு, “எங்கே செல்கிறாய்?” என்று கேட்பார்கள். அந்த மனிதர், “(இப்போது) புறப்பட்டிருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன்என்று பதிலளிப்பார். அதற்கு அவர்கள், “நம் இறைவனை (தஜ்ஜாலை) நீ நம்பவில்லையா?” என்று கேட்பார்கள். அந்த மனிதர், “நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்லஎன்று கூறுவார். அதற்கு அவர்கள், “இவனைக் கொல்லுங்கள்என்று கூறுவார்கள். அப்போது அவர்களில் சிலர் சிலரிடம், “உங்கள் இறைவன் (தஜ்ஜால்), யாரையும் தானின்றி கொல்லக் கூடாதென உங்களுக்குத் தடை விதிக்கவில்லையா?” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டு செல்வார்கள்.

அந்த இறை நம்பிக்கையாளர் தஜ்ஜாலைக் காணும் போது, “மக்களே! இவன் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்என்று சொல்வார்.

உடனே தஜ்ஜாலின் உத்தரவின் பேரில், அவர் பிடித்துக் கொண்டு வரப்பட்டு (தூண்களுக்கிடையே) நிறுத்தப்படுவார். “இவனைப் பிடித்து இவனது தலையைப் பிளந்து விடுங்கள்என்று அவன் கட்டளையிடுவான். அப்போது அவர், முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார்.

பிறகு தஜ்ஜால், “என் மீது நீ நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், “நீ பெரும் பொய்யன் “மசீஹ்ஆவாய்என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள் வரை தனித் தனியே பிளக்கும்படி கட்டளையிடப்படும். அவ்வாறே செய்து (அவரது உடலை இரு துண்டுகளாக்கியதும்) அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடந்து வருவான்.

பிறகு அந்த உடலைப் பார்த்து, “எழுஎன்பான். உடனே அந்த மனிதர் (உயிர் பெற்று) நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம், “என் மீது நம்பிக்கை கொள்கிறாயா?” என்று தஜ்ஜால் கேட்பான். அதற்கு அந்த மனிதர், “உன்னைப் பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன்என்று சொல்வார். பிறகு அந்த மனிதர், “மக்களே! (இவன் இவ்வாறெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என நம்பி விடாதீர்கள்.) இவன் எனக்குப் பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்ய முடியாதுஎன்று கூறுவார்.

உடனே தஜ்ஜால் அவரை அறுப்பதற்காகப் பிடிப்பான். ஆனால், அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எலும்புவரையுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே, அவனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தூக்கியெறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் தூக்கியெறிந்து விட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால், அவர் சொர்க்கத்தில் தான் வீசப்பட்டிருப்பார்.

இந்த மனிதர் தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களிலேயே மகத்தான உயிர்த் தியாகம் செய்தவர் ஆவார்என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 5632

மேற்கண்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்களால் புகழ்ந்து சொல்லப்பட்ட மனிதரிடமிருந்து நம் சமுதாயம் பாடம் பெற வேண்டும். உயிரை எடுப்பதும் உயிரைக் கொடுப்பதும் இறைவனின் ஆற்றல். இந்த ஆற்றலை இறைவன் சோதனைக்காக தஜ்ஜாலிற்கு வழங்கியுள்ளான். இவற்றைப் பயன்படுத்தி தஜ்ஜால் அற்புதம் செய்த போதிலும் அவனுடைய வழிகேட்டில் அந்த மனிதர் விழுந்து விடவில்லை.

எனவே போலி வித்தைகளை நம்பி இறை நம்பிக்கையை இழந்து விடக் கூடாது.

பொய்யர்கள் என நிரூபிக்கும் சான்றுகள்

தவறான கருத்துக்களை விதைப்பவர்கள் எத்தனை தந்திர வித்தைகளைச் செய்தாலும் அவர்கள் பொய்யர்கள் என்பதற்கான சான்று களை அல்லாஹ் வைத்திருப்பான். கொஞ்சம் சிந்தனையைத் தூண்டினால் இந்தச் சான்றுகளை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

தஜ்ஜால் பாரதூரமான பல விஷயங்களைச் செய்து காட்டினாலும் அவன் இறைவன் கிடையாது என்பதை நிரூபிப்பதற்கு அவனிடத்தில் சில பலவீனங்களை அல்லாஹ் வெளிப்படுத்திக் காண்பிப்பான்.

அவனுடைய ஒரு கண் குறையுள்ளதாக இருக்கும். அவனது நெற்றியில் “காஃபிர் – இவன் இறை மறுப்பாளன்’ என்று எழுதப் பட்டிருக்கும். உலகின் எல்லா பகுதிகளுக்கும் அவனால் சென்று வர முடியும். ஆனால் மக்காவிற்கும் மதீனாவிற்கும் அவனால் செல்ல முடியாது.

இது போன்ற பலவீனங்கள் இறைவனுக்கு இருக்காது. எனவே சிந்தனையுள்ளவர்களும் இறை நம்பிக்கையாளர்களும் இவற்றை வைத்து இவன் பொய்யன் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களின் நடுவே அமர்ந்தபடி “தஜ்ஜால்என்னும் மஸீஹை நினைவு கூர்ந்தார்கள். அப்போது, “அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். ஆனால், “தஜ்ஜால்என்னும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ர-)

நூல்: புகாரி 3439

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நில நடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)

நூல்: புகாரி 1881