ஏகத்துவம் – டிசம்பர் 2017

திருக்குர்ஆன் போதனை திக்கெட்டிலும் பரவிட திருக்குர்ஆன் மாநில மாநாடு!

கடந்த செப்டம்பர் 24-ந்தேதி ஈரோட்டில் நடந்த மாநிலப் பொதுக்குழுவில் சகோதரர் பி.ஜே.  தலைமையிலான புது  நிர்வாகம் பொறுப்பேற்றது.  அந்தப் புது நிர்வாகம் மாநில அளவிலான திருக்குர்ஆன் மாநாட்டை அறிவித்து, பின்னர் அது  பொதுக்குழுவின் தீர்மானமாக நிறைவேறியது.

அதனைத்  தொடர்ந்து,  திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை முடுக்கி விடுவதற்காக சென்னை தாம்பரத்தில் ஒரு சிறப்பு செயற்குழுவை மாநிலத் தலைமை 21-11-2017 அன்று கூட்டியது.

அந்த செயற்குழுவில் திருக்குர்ஆன் மாநில மாநாடு, 2019ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று நடத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டு அதற்கான செயல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

மாநாடு தொடர்பாக மாநிலத் தலைவர் சகோதரர் பி.ஜே. அவர்கள் உரையாற்றினார்கள். அவரது உரையின் சாராம்சம்…

திருக்குர்ஆன் மாநாடு என்பது மக்களைத் திரட்டி வைத்து மாநாடு நடத்தி உரை நிகழ்த்தி அனுப்பி வைக்கும் சாதாரண நிகழ்வு அல்ல! 13 மாத இடைவெளியில் இம்மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியைத் தேர்ந்தெடுக்கும் நோக்கம் என்னவென்றால் அல்லாஹ் நாடினால் தவிர ஜனவரி மாதத்தின் கடைசி என்பது மழைக்காலமாக இருக்காது. பொங்கல் விற்பனை பரபரப்பு, சபரிமலை சீசன் போன்றவை முடிந்து விடும். இதனால் வாகனங்கள் புக் செய்வது எளிமையாகி விடும்.

திருக்குர்ஆன் மாநாடு என்பது வெறும் மாநாட்டை மட்டும் நடத்துவது நோக்கமல்ல! இந்தப் பதிமூன்று மாத இடைவெளியில் திருக்குர்ஆனை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.

திருச்சியில் நடைபெற்ற ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு முன்னதாக ஆற்றிய பணிகளில் தாயத்தைக் கழற்றினோம், கொடிமரங்களை அவர்களின் கையாலேயே வெட்டினோம்.

அதுபோல இந்தப் பதிமூன்று மாதங்களும் இந்த மாநாட்டிற்காகப் பணியாற்ற வேண்டும். இதில் மாநாட்டு வேலை என்பது கடைசி ஒருமாத காலம் செய்தால் போதும். திடல் வேலை என்பது கடைசியில் செய்தால் போதும்.

இப்போதைக்குப் பார்த்த வகையில் இந்த மாநாடு நடத்துவதற்காக விழுப்புரம் பைபாஸ் சாலையில் 50 ஏக்கர் அளவில் ஒரு நிலம் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. பைபாஸ் என்பதால் இதில் டிராபிக் விவகாரங்கள் இருக்காது. அந்த இடம் அமையாவிட்டால் அதற்கு மாற்றாக வேறு இடம் தேர்வு செய்யப்படும்.

இது மாநாடு பற்றி பி.ஜே. ஆற்றிய வழிகாட்டு உரையாகும்.

அதனைத் தொடர்ந்து திருக்குர்ஆன் மாநாட்டிற்கான செயல்திட்டங்களை மாநிலச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் விளக்கினார்.

ரஹ்மத்துல்லாஹ் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:

1) கிளை நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் திருக்குர்ஆனைப் பார்த்து, பொருள் உணர்ந்து ஓத வேண்டும். அதற்காகக் கிளை, மாவட்ட நிர்வாகிகள் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

2) எல்லாக் கிளைகளிலும் மக்தப் மதரஸா நடத்தப்பட வேண்டும். மக்தப் மதரஸா இல்லாத ஊர்களில் பத்து நாட்களுக்குள் மதரஸா துவக்கப்பட வேண்டும்.

3) திருக்குர்ஆன் மனனப் போட்டி மாவட்ட/கிளைகளுக்கிடையில் மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் இரண்டு கிரேடுகள் இருக்க வேண்டும். கிரேடு A, கிரேடு B என இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

A கிரேடு என்பது கிளை/ மாவட்ட நிர்வாகிகளுக்கு திருக்குர்ஆனின் 78வது அத்தியாயத்தில் இருந்து 114வது அத்தியாயம் வரை உள்ள சூராக்கள் மனனம் செய்வதாகும்.

B கிரேடு என்பது 87வது அத்தியாயத்தில் இருந்து 114வது அத்தியாயம் வரையாவது மனனம் செய்ய வேண்டும். மாநாட்டு நெருக்கத்தில் திருக்குர்ஆனில் கடைசிப் பகுதியில் பாதி அளவேனும் கிளை/மாவட்ட நிர்வாகிகளுக்கு திட்டவட்டமாகத் தெரியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக தலைமையில் இருந்து 2017 டிசம்பர் முதல் 2018 டிசம்பர் வரை 13 மாதப்பயிற்சியாக வழங்கப்படும். இதற்கான வழிகாட்டுதலை தலைமை வழங்கும். மாதம் இவ்வளவு என்ற அடிப்படையில் மாவட்ட கிளை நிர்வாகங்களுக்கு அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கும்.

4) மக்தப் மதரஸாக்களில் படிக்கும் ஏழைக் குழந்தைகளைக் கண்டறிந்து அந்தக் குழந்தைகளுக்கு இலவச திருக்குர்ஆன் (ஸ்பான்சர்கள் மூலம்) வழங்கிட வேண்டும்.

5) திருக்குர்ஆனின் சிறப்புகள், அற்புதங்கள், வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் வகையில் ஸ்டிக்கர்கள், பேனர்கள் அவசியம் வைக்க வேண்டும். கிளைகள் அனைத்தும் மாதம் ஒருமுறை ஒவ்வொரு விதமான பேனர்கள் வைத்திட வேண்டும்.

6) பேனர்கள் வைக்கும் போது, சுவர் விளம்பரங்கள் வைக்கும் போது மிகக் கவனமாக வைக்க வேண்டும். வீட்டுச் சுவர்களில் எழுதும் போது உரிமையாளர்களின் அனுமதி பெற்றுச் செய்ய வேண்டும். சாக்கடை சுவர், குப்பைத்தொட்டிகள் போன்ற இடங்களைத் தவிர்க்கவும்.

7) இனி நடத்தும் பொதுக்கூட்டங்களில் ‘திருக்குர்ஆன் மாநாடு ஏன்?’ என்ற தலைப்பை ஒரு தலைப்பாக ஆக்க வேண்டும்

8) அவரவர் பகுதிகளில் திருக்குர்ஆன் குறித்து ஆய்வுத்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை போட்டி நடக்கும்; அதற்கான பாடத்திட்டம், கேள்விகள் போன்றவற்றிற்குத் தலைமை வழிகாட்டும். அதுமட்டுமின்றி திருக்குர்ஆன் தொடர்பான கட்டுரைப் போட்டிகள் நடத்த வேண்டும். இதனால் திருக்குர்ஆனைப் பற்றிய தேடல் மக்களிடம் சென்று சேரும்.

9) திருக்குர்ஆனைப் பற்றி மாற்றுக் கொள்கையுடைய, முஸ்லிமல்லாத அறிஞர்கள் சொல்லிய கருத்துக்களை உங்கள் பகுதிகளில் பேனராக வைக்க வேண்டும்.

10) திருக்குர்ஆனைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) கூறிய சிறப்புகளை, திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆனே சொல்லும் சிறப்புகளை வாட்ஸ் அப் குழுமங்களில், பேஸ்புக் பக்கங்களில் பதிவுகளில் செய்ய வேண்டும். வேறு எதற்கும் பதில் சொல்லக்கூடாது.

பொதுக்குழுவிற்குப் பிறகு கடுமையான சாடல் போக்குகள் குறைந்து, எதிரிகள் அவர்களின் வேலையைப் பார்க்கிறார்கள்; நம் மக்கள் நமது தஃவா பணியைச் செய்கிறார்கள். அதனால் மார்க்கத்தை மக்களிடம் சேர்க்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம். இனி திருக்குர்ஆனைக் கொண்டு சேர்க்கும் போது இன்னும் அதிகமான மக்களை வென்றெடுக்க முடியும்.

தலைமை செய்யக்கூடிய பணிகள்:

1) திருக்குர்ஆன் மாநாடுகள் சம்பந்தமாக ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் ஹீuக்ஷீணீஸீனீணீஸீணீபீu@ரீனீணீவீறீ.நீஷீனீ என்ற பிரத்யேக இமெயில் முகவரி வழங்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள் தங்களின் ஆலோசனைகளை தலைமைக்கு வழங்கலாம்

2) திருக்குர்ஆனின் சிறப்புகளை விளக்கும் வகையில் மாதம் ஒரு சிறப்பிதழ் தலைமை சார்பில் வெளியிடப்படும். 13 மாதங்கள் 13 இதழ்கள் வெளியாகும். அதை வாங்கி கிளைகள், மாவட்டங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்பான்ஸர் வாங்கியும் மாவட்டக் கிளைகள் வெளியிடலாம்

3) சகோதரர் பீ.ஜே. மொழிபெயர்த்துள்ள தமிழாக்கத்தினை ஆண்ட்ராய்டு அப்ளிகேசனாக வெளியிடப்படும். நடக்கவிருக்கும் மாநாட்டில் திருக்குர்ஆனை உருது மொழியில் வெளியிடப்படும். ஆங்கில மொழியாக்கம் நூல் வடிவில் வெளியாக்க ஆவன செய்யப்படும்.

4) திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 400க்கும் மேற்பட்ட விளக்கவுரைகள் உள்ளன. அதைச் சில விஷமிகள் அரபகத்தில் தவறாகக் காட்ட முயன்று தோற்றுப் போய், அதையொட்டி அரபு அறிஞர்கள் பீஜேவைப் பற்றியும் அவரது திருக்குர்ஆன் தமிழாக்கம் பற்றியும் விசாரிக்கும் நிலை ஏற்பட்டது.

எனவே திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் இடம்பெற்றுள்ள விளக்கங்களை அரபி மொழியில் பெயர்த்தால் அது அரபுலகை எளிமையாகச் சென்றடையும் என்பதால் அதற்கான வேலையும் செய்யப்பட இருக்கின்றது,

இது சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அறிவித்த மாநாட்டு செயல் திட்டங்களாகும்.

மாநாடு வெற்றி பெற நமது பயணத்தை இப்போதே தொடர்வோம். திரளட்டும் மக்கள் கடல்!  திணறட்டும் மாநாட்டுத் திடல்! திருக்குர்ஆனின் போதனைகளை திக்கெட்டும் பரவச் செய்வோம்.

—————————————————————————————————————————————————————————————

கந்துவட்டி கொடுமை!

கருகிய உயிர்கள் உருகிய உள்ளங்கள்

எம். ஷம்சுல்லுஹா

கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி அன்று தென்காசி காசிதர்மத்தைச் சார்ந்த இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர், தங்களது குழந்தைகள் நான்கு வயது  மதுசரண்யா, இரண்டு வயதைக்கூட எட்டிப் பிடிக்காத பால்குடி மாறாத பதினெட்டு மாத அட்சய பரணிகா ஆகிய இருவருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மனுக் கொடுக்க வந்தனர். மனுக் கொடுக்க வந்தவர்கள் தங்கள் மீதும்  கள்ளம் கபடமறியாத தங்களது பிஞ்சுக் குழந்தைகள் மீதும் மண்ணெண்ணையை ஊற்றித் தீக்குளித்தனர்.

பற்றி எரிகின்ற நெருப்பில் அவர்கள் – குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகள் கதறி அழுத காட்சி பார்ப்பவர் அனைவரையும் பதறவும், பதைபதைக்கவும் வைத்தது. அருகில் நின்றவர்கள் மட்டுமல்லாமல் தூர இருந்து தொலைக்காட்சிகளில் பார்த்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவே இல்லை என்று சொல்லுமளவுக்கு அந்த சோக நிகழ்ச்சி அனைவரின் உள்ளங்களில் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிந்து விட்டது.

இதில் வேதனை என்னவென்றால் தங்கள் தேகங்களுக்குத் தீ வைத்து விட்டு அலறித் துடித்த தம்பதியரையும், கொழுந்து விட்டு எரியும் தழலில் தாங்கள் எதற்காக எரிகின்றோம் என்று எதுவுமே தெரியாத இளம் மொட்டுக்களையும் காப்பாற்ற அவசரம் காட்டாமல் ஆசுவாசமாகத் தங்கள் கைப்பேசிகளில் படம் பிடித்துக் கொண்டிருந்த ஈவு இரக்கமற்ற ஈன ஜென்மங்களை நினைத்து துக்கத்தில் நெஞ்சம் அடைக்கின்றது.

இரக்கமுள்ளவர்கள் தீயை அணைக்க முன்வந்த நேரத்தில் மொத்தத் தீயும் முழு உடல்களையும் பதம் பார்த்து முடித்து விட்டது. உயிர் பிழைக்க முடியாத அளவுக்கு ஆர்த்தெழுந்த அக்கினியின் அகோரப் பசிக்கு அவர்கள் நால்வரும் இரையாகி விட்டார்கள்.

தங்களை மட்டுமல்ல! ஒரு பாவமும் அறியாத தங்கள் பச்சிளம் குழந்தைகளையும் பற்றி எரிகின்ற  தீக்குப் பசியாற வைத்ததற்கும், பலியாகக் கொடுத்ததற்கும் காரணம் என்ன? இந்தக் கோர முடிவுக்கு அவர்களைக் கொண்டு சென்ற காரியம் என்ன? அதற்குரிய ஒரு வரிப் பதில். கந்து வட்டி தான்!

இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்பவரிடம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய வட்டியைக்  கட்டாமல் இல்லை. வாங்கிய பணத்தை விட இரு மடங்காக 2 லட்சத்து 34 ஆயிரம் கட்டியுள்ளார். கந்துவட்டி கதாநாயகியின் காசு வெறி அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளார். வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டியே சாகனுமா? என்ற தாளாத வேதனையில் அருகில் உள்ள அச்சன்புதூர் காவல் நிலையத்தில் தம்பதியினர் புகார் கொடுத்தனர்.  காவல் நிலையத்தில் அந்தக் கூலித் தொழிலாளியின் குரல் எடுபடவில்லை. அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மீண்டும் அச்சன்புதூர் காவல் நிலையம் என்று சுற்றி, சுற்றி வந்தது தான் மிச்சமே தவிர முத்துலெட்சுமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாட்டுகின்ற கந்து வட்டியிலிருந்து மீட்டுகின்ற வழிவகை சுப்புலட்சுமி குடும்பத்திற்குப் பிறக்கவில்லை.

மாறாக, இசக்கிமுத்து குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இருப்பினும் மனம் தளராத தம்பதியினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆறு தடவை படையெடுத்து வந்து மனு கொடுத்துள்ளனர். அதன் பின்னும் கந்து வட்டிக்குத் தான் விடிவு காலம் பிறக்கவில்லை. அதனால் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.

நான்கு உயிர்கள் பறி போன பிறகு தான் கந்து வட்டியை நோக்கி அரசாங்கம் கண் திறந்து பார்க்கின்றது. அவர்களது மரணம் கந்து வட்டியின் அகோர ஆட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. கருகி செத்துப் போன நான்கு உயிர்கள் இதுவரை கண்டு கொள்ளப்பட்ட அல்லது கண்டும் காணாமல் இருந்த பல கொடூர நிகழ்வுகளை வெளி உலகத்திற்குக் கொண்டுள்ளது. ஒளிந்து கிடந்த உண்மைகளை ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக ஊர் மக்கள் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளன.

அந்தக் கொடூர நிகழ்வுகளையும், ஒளிந்து கிடந்த உண்மைகளையும் எடுத்துக் காட்டி, இஸ்லாம் வட்டியை எதிர்த்துப் போர் பிரகடனம் செய்வதற்கான காரணம் என்ன என்பதையும், இஸ்லாம் மட்டுமே வட்டிக்கு ஒரே தீர்வு என்பதையும் இந்தக் கட்டுரை விரிவாக விளக்க உள்ளது.

இஸ்லாம் கூறும் தீர்வைப் பார்ப்பதற்கு முன்னால் கந்து வட்டியினால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலில் பார்ப்போம். கந்து வட்டிக் கொடுமையால்  தங்களையே மாய்த்து, சாய்த்துக் காலியானவர்களில் இசக்கிமுத்து சுப்புலட்சுமி தம்பதியினரும் சின்னஞ்சிறு குழந்தைகளும் முதலாமவர்கள் கிடையாது.

தற்கொலை செய்த பொற்கொல்லர்

சில ஆண்டுகளுக்கு முன்பு அதே திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சார்ந்த கோபால் ஆசாரி தனது குடும்பத்தினர் 6 பேர்களுடன் சயனைட் சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு பொற்கொல்லர். இவரும், இவரது குடும்பத்தினரும் தற்கொலை செய்து இறந்ததற்குக் காரணம் கந்து வட்டி தான்.

விஷம் அருந்திய பள்ளி ஆசிரியர்

இவர்களுக்கு முன்பு அந்தச் சோக வரலாற்றுப் பதிவில் இதே திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சார்ந்த பள்ளிக்கூட ஆசிரியர் பாபு இளங்கோ (48) பதிவாகியுள்ளார். அவர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர். இருபத்தைந்து வயதுள்ள ஓர் இளைஞரிடம் வட்டிக்கு வாங்கியிருந்தார். தவணைகளில் பணத்தைச் செலுத்த முடியவில்லை. வட்டிக்கார இளைஞன் ஆசிரியரை வீட்டுக்கு வந்து அன்றாடம் வாட்டியெடுக்கின்றான். வாய்க்கு வந்தபடி வார்த்தைகளில் திட்டித் தீர்க்கின்றான். அத்துடன் நிற்கவில்லை. அவருடைய பருவ வயது மகள் முன்னிலையில் நடுவீட்டில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றான். அவனது அடாவடித்தனமும், அத்துமீறிய  அநாகரீக ஆட்டமும் அவரை ஆறாத துயரத்தில் தள்ளுகின்றது. அவரது ஆறாத ரணத்திற்கு விஷமே மருந்தானது. ஆம்! விஷத்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

சிலந்தி வலையில் சிக்கிய தையல் தொழிலாளி

புதுக்கோட்டையைச் சார்ந்த தையல் தொழிலாளி கண்ணியமான தொழில் நடத்தி வந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்  கந்து வட்டி வலையில் விழுகின்றார். சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியைப் போன்று அவரது நிலை ஆனது. கடைசியில் அவரும், அவரது மனைவியும் திருவண்ணாமலையில் தற்கொலை செய்து இறக்கின்றனர். இப்படி கந்து வட்டியால்  கருகியவர்கள், காலியானவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

கடந்த 6 மாதக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கந்து வட்டிக் கொடுமையால் 47 பேர்  தற்கொலை செய்திருக்கின்றனர். ஒட்டு மொத்த தமிழகத்திலும் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் கந்து வட்டியின் பாதிப்பால் இறந்திருக்கின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகின்றது. அரசாங்கம் கண் திறந்து பார்க்கவே இல்லை.

இத்தனை உயிர்கள் பலியான பிறகும் பாடம் படித்திருக்க வேண்டும். படிப்பினை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவற்றை அரசாங்கம் பொருட்படுத்தவே இல்லை. அவற்றின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளவுமில்லை. அதனுடைய எதிர் விளைவும் எதிர் வினையும் தான் இசக்கி முத்து, சுப்புலட்சுமி தம்பதியினரின் தீக்குளிப்பு நிகழ்வு.

கந்து வட்டிக்குக் காரணம் என்ன?

வாழ்க்கையில் எத்தனையோ இன்றியமையாத தேவைகள் ஏற்படும் போது தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டாகும். பிள்ளைகளின் பள்ளிப் படிப்பு, சீருடை வாங்குதல், பின்னர் அவர்களை  மருத்துவம், பொறியியல், கலை போன்ற உயர் கல்விக்காக கல்லூரியில் சேர்ப்பதற்கும் ஒரு கணிசமான அளவில் பணச் செலவு ஏற்படுகின்றது. இது கல்வி வகைக்கான செலவாகும்.

அடுத்து, குடும்பத்தார்களில் யாரேனும் ஒருவருக்கு  சில அசாதாரணமான நோய்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். மருத்துவமனைக்கு ஒரு பெருந்தொகையைக் கட்ட நேரிடும். இது மருத்துவ செலவாகும்.

வியாபாரத்தில் திடீரென்று ஏற்படுகின்ற இறக்கம், அதை உடனே ஈடு கட்ட ஒரு பெரிய தொகை தேவைப்படும். இது தொழில் ரீதியான செலவு. இதற்கு எடுத்துக் காட்டாக பத்திரிக்கையில் வந்த சில செய்திகளைப் பார்ப்போம்.

காய்கறி வியாபாரி மாரிமுத்து:

நான் கடந்த 10 ஆண்டுகளாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்கிறேன். வியாபாரத் தேவைக்காக வாரத்துக்கு ரூ.10 ஆயிரம் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவேன். தினமும் வட்டியுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துகிறேன். வட்டி அதிகமாக வாங்குகிறார்கள் என்று தெரிந்தே தான் வாங்குகிறேன். வங்கிக்குக் கடன் வாங்கச் சென்றால் பல்வேறு ஆவணங்களைக் கேட்கின்றனர். அத்துடன் தேவையின்றி அலைய விடுகின்றனர். தினமும் வங்கிக்கு அலைந்தால் வியாபாரம் பாதிக்கிறது. எனவே, வேறு வழியின்றி கந்துவட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்கிறேன்.

பூ விற்கும் பெண்:

நான் வியாபாரத்துக்காக தினமும் தண்டல் மூலம் கடன் வாங்குகிறேன். தினமும் காலையில் 900 ரூபாய் கடன் வாங்கி மாலையில் அதற்கு 100 ரூபாய் வட்டியுடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் திருப்பிச் செலுத்துவேன். ஒருநாள் தவணைத் தொகை செலுத்தத் தவறினால் மறுநாள் வட்டிக்கு வட்டி சேர்த்து கட்ட வேண்டும். தவறினால் அடியாட்கள் வந்து மிரட்டுவார்கள். இப்பகுதியில் எங்களை வியாபாரம் செய்ய விடமாட்டார்கள்.

கந்து வட்டியை வியாபாரிகள் ஏன் நாடுகின்றார்கள்? அதனால் அவர்கள் என்ன? என்ன பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்று இச்செய்திகள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இது போன்ற இன்றியமையாத காரணங்களுக்காக மக்கள் கந்து வட்டி என்ற நரகப் படுகுழியில் போய் விழுகின்றனர். மீண்டு வர முடியாத அளவுக்கு அதிலேயே மாண்டும் விடுகின்றனர். கல்யாண வகைச் செலவுக்காகவும் கந்து வட்டியை  நோக்கி நகர்கின்றார்கள்.

நள்ளிரவு வரும் நடமாடும் வங்கி

மேலே கோயம்பேடு வியாபாரி, பூக்காரி ஆகியோர் வங்கியில் கடன் வாங்க முடிவதில்லை. காரணம் வங்கியின் வட்டி குறைவான சதவிகிதத்தில் இருந்தாலும் அதை வாங்கச் சென்றால் பல்வேறு விதமான ஆவணங்களைக் கேட்டு வங்கி அதிகாரிகள் பாடாய் படுத்தி விடுகின்றார்கள். அலைய விட்டு அலைக்கழிக்கின்றார்கள்.

(இஸ்லாத்தில் குறைந்த வட்டி, அதிக வட்டி என்ற பாகுபாடு கிடையாது. அனைத்து விதமான வட்டியையும் இஸ்லாம் தடை செய்கின்றது. இதைத் தனித் தலைப்பில் விளக்கியுள்ளோம்.)

வங்கி வாசலின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி, பாதங்கள் வீங்கி விடுகின்றன.  அதே சமயம், கந்து வட்டிக்கார்கள் நமது வாசல்களுக்கு வந்து கதவு தட்டிக் காசு கொடுத்து விட்டுப் போகின்றார்கள் என்று இந்தக் கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

கந்து வட்டியின் தலைநகர் என்றழைக்கப்படும் மதுரை செல்லூரில் கந்து வட்டிக்காரர்கள் உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு நள்ளிரவில் கூட இலட்சக்கணக்கில் கொடுத்து விட்டு போகின்றார்கள். ஏடிஎம்மில் கூட இந்த வசதி கிடையாது. கந்து வட்டிக்கார்கள் ஒரு நடமாடும் வங்கியாகச் செயல்படுகின்றனர். மொபைலில் கூப்பிட்டால் பைக்கில் வந்து பணத்தைத் தந்து விட்டு போய்விடுகின்றார்கள். இந்த வசதி வங்கியில் கிடைப்பதில்லை. கந்து வட்டி செழிப்பதற்கும், கொழிப்பதற்கும் இது முக்கியக் காரணமாக அமைகின்றது.

இல்லாமை, இயலாமை

குறிப்பாக, பெண் மக்களைத் திருமணம் முடித்துக் கொடுப்பதற்காக வரதட்சணை, நகை நட்டு, சீர் சீராட்டு என பெரும் பொருளாதாரச் செலவு ஏற்பட்டு விடுகின்றது. (ஆனால் திருமணங்கள் தூய  இஸ்லாமிய அடிப்படையில் அமைந்து விட்டால் அதற்காகக் கந்து வட்டியென்ன?  சாதாரண வட்டியில்லாத கடன் கூட வாங்க வேண்டிய அவசியம் இருக்காது).

இப்படிப்பட்ட செலவுகள் காரணமாகத் தான் கந்து வட்டியை நோக்கி மக்கள் படை எடுக்கின்றனர்.  சரியான வேலை வாய்ப்பு, தொழில் இருந்தால் மக்கள் கந்து வட்டிக்காரர்களை நோக்கி பயணிக்கத் தேவையில்லை.

மழையில்லாததால், தென் தமிழகத்தில் விவசாயம் படுத்து விட்டது.  விளைச்சல் நிலம் வானம் பார்த்த பூமியாகி விட்டது. வறட்சி, பஞ்சம் விவசாயத்தில் உள்ளவர்களை வேறு தொழில் துறைகளை நோக்கி விரட்டுகின்றது. வேறு தொழில்களோ இவர்களை இங்கு ஏன் வந்தீர்கள் என்று வினா தொடுக்கின்றது. கட்டுமானத் தொழில் காற்றாடுகின்றது.

இந்தச் சூழலில் இந்திய நாட்டின் பிரதமரின் கையாலாகாத தனம் ஏழை மக்களை வறுமையின்  உச்சத்திற்கே கொண்டு போய்விட்டது. அவரது கண் மூடித்தனமான பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் ஜி.எஸ்.டி வரி விதிப்பும் மக்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரத்தையும் பறித்து அவர்களை வீதிக்குக் கொண்டு வந்து விட்டது.  இப்படிப்பட்ட இக்கட்டுகள் தான் கந்து வட்டிக்காரர்களுக்கு சாதக அம்சங்களாகி விடுகின்றன.

கடனை அடைக்க கிட்னி விற்பனை

கடனுக்காக இசக்கிமுத்து தம்பதியர், அவர்களின் பிள்ளைகள் தங்கள் இன்னுயிரைப் பலியாக்கியுள்ளார்கள் என்று பார்த்தோம். வட்டிக்கு வாங்கிய கடனைத் திருப்பி அடைப்பதற்காக தங்களது கிட்னியை விற்கவும் ஏழை மக்கள் தயாராகி விடுகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சம்பூர்ணம் என்ற பெண் தனது கணவரைப் பற்றி ஒரு புகார் அளிக்கின்றார். அந்த புகாரைப் பார்ப்போம்.

எனது கணவர் ரவி, குடும்ப வருமானம் பற்றாக்குறையால், சில இடங்களில் கடன் பட்டுள்ளார். கடன் கொடுத்தவர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாமல் வட்டி மட்டுமே கொடுத்து வந்தார். இந்நிலையில், எங்கள் குடும்ப வறுமையைத் தெரிந்து, அவிநாசியைச் சேர்ந்த ஒருவர் எனது கணவர் ரவியை அணுகி, உனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தால் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கித் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து என் கணவர் என்னிடம் தெரிவித்த போது, பணத்துக்காக சிறுநீரகத்தைக் கொடுக்கக் கூடாது என நான் தடுத்தேன். இருப்பினும் அக்டோபர் 22ஆம் தேதி இரவு, அவிநாசியைச் சேர்ந்த அந்த நபருடன் எனது கணவர் சென்று விட்டார். எனது கணவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருப்பது, 23ஆம் தேதி இரவுதான் எனக்குத் தெரியவந்தது. மருத்துவமனையில் தனக்குத் திருமணமாகவில்லை எனக்கூறி, எனது மாமனார் மூலம் கையெழுத்து போட வைத்துள்ளனர். எனவே, தாங்கள் தலையிட்டு, என் கணவரை மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.

நமது நாட்டில் ஏழைகளின் மனுக்களுக்கு மரியாதை கிடையாது. ஆனால் இந்த மனு எப்படியோ ஆட்சியரின் பார்வையைப் பிடித்தது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எர்ணாகுளம் காவல்துறைக்குத் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவ மனைக்குத் தகவல் போகின்றது. ஒருவாறாக, கணவர் ராஜ்குமாரை அவரது ஆப்ரேஷன் நடப்பதற்கு முன்னால் காப்பாற்றி விடுகின்றார்கள். இந்த முயற்சியின் காரணமாக அவரது கிட்னி பறிபோகாமல் தடுக்கப்பட்டுள்ளது. கந்து வட்டி எப்படியெல்லாம் மக்களைச் சுரண்டுகின்றது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ராஜ்குமார் என்பவர் ஒரு நெசவாளர். அவர் கடன்பட்டிருக்கின்றார் என்று தெரிந்து அவரிடம் ஏஜெண்ட் ஒருவர் 5 லட்சம் தருகின்றேன். உங்கள் கிட்னியை தானம் செய்யுங்கள் என்று கூறித் தான் அவர் எர்ணாகுளம் சென்றார். இப்படிக் கடன்பட்ட நெசவாளர்கள் ஏராளமாக உள்ளனர். உடனே அத்தகையவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி, கிட்னியை அபகரிப்பதற்காக ஏஜண்ட்டுகள் என்ற பெயரில் ஒரு கொள்ளைக் கூட்டம் ஊரைச் சுற்றிக் கொண்டு அலைவதை  இந்நிகழ்வு நமக்கு தெரிவிக்கின்றது.

ஈவு இரக்கமற்ற ஈன ஜென்மங்கள்

மனிதனுக்கு இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுவது இயற்கை. கஷ்டத்தில் உழல்கின்ற கையறு நிலையில் உள்ள அந்த மனிதனை நோக்கி இரக்கம் சுரக்க வேண்டும். தன்னால் இயன்றதை ஈந்து உதவ வேண்டும். இரங்கி, எதையும் கொடுக்க மனமில்லையேல், கடனாவது கொடுத்து உதவ வேண்டும். அதற்கும் இயலவில்லையேல், இப்படிப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று  எண்ணி இதயம் வாட வேண்டும்; வருந்த வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டு விட்டு சோதனையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கறக்க வேண்டும், அனைத்தையும் சுரண்ட வேண்டும் என்று நினைப்பவன் உண்மையில் ஈவு, இரக்கமில்லாத ஈன ஜென்மமாகத் தான் இருப்பான் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இரு காசோலைகளில் கையெழுத்துகள்

ஒருவன் தனது கஷ்ட நிலையில் வட்டிக்குக் கடன் கேட்கின்றான். வட்டி கொடுப்பவன் அவனது கையறு நிலையைப் பயன்படுத்தி அவனை கறவை மாடாக்கும் அரக்கனாகவும், அக்கிரமாக்காரனாகவும் ஆகிவிடுகின்றான்.

இந்த அக்கிரமக்காரன் அவனிடத்தில் இரண்டு காசோலைகளை நீட்டுகின்றான். இரண்டிலும் கையெழுத்து வாங்கி விடுகின்றான். ஒரு காசோலையில் வாங்கிய தொகை நிரப்பப்பட்டிருக்கும். அந்தக் காசோலை அசலுடன் வட்டியையும் சேர்த்து திருப்பிக் கொடுக்கும் வரை கடன் வாங்கியவனிடம் இருக்கும். இன்னொரு காசோலை தொகை நிரப்பப்படாமல் வட்டிக்கு கொடுத்தவனிடமே இருக்கும்.

அசலுடன் பன்மடங்காகக் குட்டி போட்ட வட்டியையும் சேர்த்துக் கட்டிய பிறகு அப்பாடா சனியன் தொலைந்தது என்று வீட்டில் உட்கார்கின்றான். மறுவாரம் வட்டிக்குக் கொடுத்தவனிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வருகின்றது. வாங்கிய தொகைக்கு போலிக் காசோலையைத் தந்து ஏமாற்றி விட்டாய்! அதனால் உன் மீது சட்டப்பூர்வமான  நடவடிக்கை எடுக்கப் படுகின்றது என்று அந்த வக்கீல் நோட்டீஸ் கதை வாசிக்கின்றது.

அவ்வளவு தான்! தான் ஏமாற்றப்பட்டோம் என்று  வட்டிக்கு எடுத்தவன் அதிர்கின்றான். அனல் புழுவாகத் துடிக்கின்றான். வேறு வழியில்லாமல் அணுஅணுவாக ஒவ்வொரு நிமிடமும் துடித்து சாவதை விட ஒரே நிமிடத்தில் ஒரேயடியாக   அனல் தீயில் வெடித்து சாவது மேல் என்று தன் மீது தீ வைத்துக் கொண்டு வட்டிக்கணக்குடன் வாழ்க்கைக் கணக்கையும் முடித்துக் கொள்கின்றான். அந்த அளவுக்குக் கந்து வட்டியின் கோரப் பிடி நீண்டு செல்கின்றது.

பணம் படைக்கும் பண முதலைகள்

இரு விதமான போலி காசோலைகளில் கையெழுத்து வாங்குவது என்பது கற்பனைக் கதை அல்ல! உண்மையில் நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளாகும். அண்மையில், முகன்சந்த் போத்ரா என்பவன் Central Crime Branch மத்திய குற்றவியல் பிரிவு மூலம் கைது செய்யப்படுகின்றான். இவன் திரை உலகத்திற்கே வட்டிக்கு விடுகின்ற திமிங்கலம். பட உலகத்திற்குப் பல கோடி ரூபாய்களை வட்டிக்கு விட்டு  பன்மடங்கு லாபத்தை ஈட்டுகின்ற பணமுதலை. கொள்ளை லாபத்திற்கு வட்டிக்கு விடுதல், வாடிக்கையாளர்களைக் கொடுமைப் படுத்துதல் போன்ற குற்றச்சாட்டில் தான் இவன் கைது செய்யப்படுகின்றான். கூடவே சந்தீப், ககன் என்ற அவனது இரு மகன்களும் இதே விதமான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுகின்றார்கள்.

மணி என்பவருக்கு இந்தக் கொள்ளைக்காரக் கும்பல் 21 லட்சத்தை வட்டிக்கு விடுகின்றது. அதற்காகப் பின்தேதியிட்டு, தொகை நிரப்பாத 24 காசோலைகளில் மணியிடம் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றார்கள். சில காலி பிராமிஸரி நோட்டுகளிலும் கையெழுத்து வாங்கிக் கொள்கின்றார்கள். எதிர்பார்த்தது போலவே மணிக்கு பணத்தை திரும்பக் கொடுக்க முடியவில்லை. உடனே, இந்த வழிப்பறிக் கும்பல்  20 லட்சம், 35 லட்சம் என்று காலி பிராமிஸரி நோட்டுகளில் நிரப்பி விட்டு வழக்கு தொடுக்கின்றார்கள். வழக்கைத் திரும்பப் பெற வேண்டுமா? ஒரு கோடி ரூபாய் கொடு என்று மிரட்டுகின்றார்கள். இது தான் இந்த வழிப்பறிக்காரர்களின் வழக்கமான தொழில் நடவடிக்கை என்று தெரிய வருகின்றது. இந்த மோசடிக்காகத் தான் இந்த கும்பல் கைது செய்யப்படுகின்றது.

உ.பி. காவல் துறையுடன் ஒரு கொள்ளை ஒப்பந்தம்

இது போன்று இன்னொரு வழக்கு. டாக்டர்   சுதீர் (வயது 57) சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றுபவர். இவர் 2011ல் கல்விச் செலவுக்காகவும்,  வீடு கட்டுவதற்காகவும் புரசைவாக்கத்தைச் சார்ந்த  காமராஜ் என்பவனிடம் 20 லட்சம் வட்டிக்கு வாங்குகின்றார். காமராஜ், நீட்டிய வெற்றுக் காசோலைகளிலும் வெற்று  பிராமிஸரி நோட்டுகளிலும் காட்டிய இடங்களில் டாக்டர் சுதீர்  கஞ்சத்தனமின்றி கையெழுத்துக்களைப் போடுகின்றார்.  வாங்கிய தொகையை வட்டியுடன் கட்டிக் கொண்டிருந்தும் வாட்டியெடுக்கின்றான். காமராஜின் தொந்தரவையும், தொல்லையையும் தாங்க முடியாமல் சட்டத்தின் துணையை நாடுகின்றார் சுதீர்.  டாக்டர் சுதீருக்கு காமராஜின் சாம்ராஜ்யம் உ.பி வரை விரிந்து கிடக்கின்றது என்பது தெரியாது. அவரை உ.பி. லக்னோ காவல்துறை தமிழகத்திற்கு வந்து கைது செய்கின்றது. கையெழுத்துப் போட்ட காலி காசோலைகள், பிராமஸரி நோட்டுகளை வைத்து கட்டப் பஞ்சாயத்து பேசி கதையை முடிக்கின்றது.

அரசியல்வாதிகளின் தலையீடின்றி அறவே நடக்க முடியாது என்பதையே இது நமக்கு உணர்த்துகின்றது. கல்லூரியில் படித்துக் கொடுக்கின்ற பட்டதாரிக்கு இந்தக் கதி என்றால் படிக்காத, பள்ளி வாசனையே தெரியாத பாமர கைநாட்டு மக்களின் கதி என்ன? என்று ஒரு கணம் சிந்திக்க வைக்கின்றது.

சூறையாடப்படும் சொத்து பத்துகள்

வட்டி வாங்கியவன் வட்டியைக் கட்ட இயலவில்லை என்றால் அவனிடம் அவன் வசிக்கின்ற வீட்டை எழுதி வாங்கி விடுகின்றான். காலிமனை ஏதுமிருந்தால் அதைக் கபளீகரம் செய்து விடுகின்றான். விவசாய நிலமிருந்தால் அதை ஆட்டையைப் போட்டு விடுகின்றான். இப்படி வட்டிக்கு வாங்கியவனின் சொத்துபத்துகள் கந்து வட்டியால் சூறையாடப்பட்டு விடுகின்றன.

வசிக்கும் வீடுகளையும், வைத்திருந்த  நிலபுலன்களையும் வட்டிக்காரனுக்குத் தாரை வார்த்து விட்டு ஊரை விட்டுக் காலி செய்தவர்கள் பலர் உள்ளனர். வட்டிக்கு வாங்கியவன் அரசு ஊழியனாக இருந்தால் அவனிடத்தில் உள்ள ஏ‌டி‌எம் கார்டுகளைப் பிடுங்கி வைத்துக் கொள்கின்றான். அலுவலர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரையில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அத்தனை பேர்களும் கந்து வட்டிக் கொடுமையில் கவிழ்ந்து கிடக்கின்றனர். இதில் துப்புரவுத் தொழிலாளர்கள் அதிகமான பாதிப்புகளுக்குள்ளாகி உள்ளனர்.   இந்த நாடு அதள பாதாளத்தை நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கின்றது என்பதைத் தான் இந்தக் கோர நிகழ்வு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

பணம் கொடுத்தவனின் பாலியல் சேட்டைகள்

வட்டிக்கு வாங்கிய பாவத்திற்காக அவன் வட்டிக்காரனிடமிருந்து வாங்கி கட்டிக் கொள்கின்ற வசவு மழைகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது. காது கொடுத்துக் கேட்க முடியாது. அவனை மட்டும் திட்டினால் போதாது என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் திட்டித் தீர்க்கின்றான். தேள் கொடுக்காகக் கொட்டித் தள்ளுகின்றான்.  திட்டியது போக மனைவியின் கண் முன்னாலேயே கணவனை அடித்து உதைக்கின்றான். பான் பராக்கை மென்று விட்டு வீடு தோறும் துப்பி விட்டு அடுப்பில்  கொதிக்கின்ற உலையிலும் துப்பி விடுகின்றான். கன்னிப் பெண்களின் முன்னிலையிலேயே படுக்கை அறைகள் மற்றும் பூந்தொட்டிகளில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்துகின்றான். குழந்தைகள் செல்லமாக விளையாடுகின்ற பொம்மைகளைப் போட்டு உடைக்கின்றான். மீன் தொட்டிகள் இருந்தால் அந்தத் தொட்டிகளை உடைத்து மீன்களைத் தரையில் போட்டு துடிக்க விட்டு வேடிக்கை பார்க்கின்றான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டுப் பெண்களிடம் திரைப்பட பாணியில் பாலியல் சேட்டைகளில் இறங்குகின்றான்.

இதையெல்லாம் பார்த்து விட்டு மானமுள்ள ஒருவன் உயிருடன் வாழ முடியுமா? தூக்கில் தொங்கத் தான் முடியும்! அதைத் தான் இன்றைக்கு வட்டி வாங்கியவன் செய்து கொண்டிருக்கின்றான்.

வாட்டியெடுக்கும் வட்டியின் வகைகள்

ஏழைகள் மாட்டித் தவிக்கின்ற, வாட்டி யெடுக்கின்ற வட்டியின் வகைகள் தான் எத்தனை? எத்தனை?

மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, நாள் வட்டி, வார வட்டி, வட்டிக்கு வட்டி, தண்டல்  என்ற பல்வேறு பெயர்களில் கந்து வட்டி தனது காட்டுத் தர்பாரை நடத்தி வருகின்றது.

ரன் முதல் ராக்கெட் வட்டி

பணத்திற்கு மணிக்கணக்கு போட்டு வாங்கும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. 1000 ரூபாய் பணம் வாங்கிவிட்டுத் தினம் 100 வீதம் வட்டி கட்டிவிட்டு பத்தாவது நாள் முடிவில் 1000 ரூபாய் திருப்பி தருவது ராக்கெட் வட்டி.

கம்ப்யூட்டர் வட்டி

ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் கடன் வாங்கினால் அதில் 2 ஆயிரம் எடுத்துக்கொண்டு 8 ஆயிரம் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் திருப்பிச் செலுத்தும் போது 10 ஆயிரம் செலுத்த வேண்டும். இதற்குப் பெயர் கம்ப்யூட்டர் வட்டி. 10000 ரூபாய் வட்டிக்கு வாங்குகின்றான் என்றால் அந்த 10000 ரூபாயை கண்ணில் பார்க்க முடியாது, கையில் அந்தத் தொகையை முழுமையாக  வாங்க முடியாது.  ஏனெனில், அது கையில் வரும் போதே 9 ஆயிரமாகத் தான் வரும். அந்த அளவுக்கு கந்து வட்டியின் கோர அராஜகம் கொடி கட்டிப் பறக்கின்றது.

கொழிக்க வைக்கும் கொள்ளை லாபம்!

திருநெல்வேலியில் ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் கொள்ளை லாபம் கொட்டுகின்ற கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் வேறு சில சாதியினரும் இந்தத் தொழிலில் கைகோர்த்துக் களமிறங்கினர்.  பின்னர், இது இரு சாதியினர் மோத வழி வகுத்தது. கலவரம் வெடித்தது. நெல்லை மாவட்டம் ரத்தக் களறியானது. கள்ளச் சாராயத்திற்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தது. இனிமேல், கள்ளச் சாராயம் கைகொடுக்காது என்று நம்பிக்கை இழந்த அந்த சாதியினர் கையில் எடுத்த தொழில் கந்து வட்டித் தொழில்!

சோதனை முயற்சியிலேயே சாதனை கண்ட அவர்கள்  அதிலேயே காலூன்றி விட்டனர்.  திரை உலகத்தினருக்கும் கந்து வட்டிக்காரர்களின் கடைக்கண் பார்வையும், அவர்களின் கடாட்சமும் தேவைப்பட்டது. மொத்த வியாபாரிகளுக்கும் இவர்களது தயவு தேவைப்பட்டது. நல்லாவே கல்லாக் கட்டுகின்றார்கள். கள்ளச் சாராயத்தில் பார்க்காத காசு பணத்தை பல மடங்காக இதில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

திருநெல்வேலி கந்து வட்டிக்காரர்களின் கொள்ளைத் தொழில் சாம்ராஜ்யம் சென்னை, மதுரை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, அந்தமான் நிக்கோபர் தீவுகள் வரைக்கும் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று திருநெல்வேலியில் ஒரு மூத்த காவல் துறை அதிகாரி கூறுகின்றார்.

கந்து வட்டித் தொழிலில் அரசாங்கத்திலிருந்து ஓய்வூதியம் பெறுகின்ற அலுவலர்களும் ஈடுபடுகின்றனர். அந்த அளவுக்கு இது பணமழை பொழியும் வருவாய் துறையாக உள்ளது. அரசாங்கம் இதைக் கண்டு கொள்ளவில்லை.

காவல் துறையின் கள்ளக் கூட்டு

கந்துவட்டிக்காரர்களுடன் உள்ளூர் காவல் துறை கைகோர்த்துச் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கந்துவட்டித் தொழிலில் ஈடுபடுவோர் பலர் அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி ரீதியாக முக்கியப் பிரபலங்களாக இருப்பதால் போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை கந்துவட்டிக் காரர்களிடம் தொடர்ச்சியாகப் போலீஸார் மாமூல் பெறுவதும், கந்துவட்டிக் கொடுமையை நீடிக்கச் செய்கிறது.

கடன் வாங்கியவர்களுக்கு சாதகமாகப் பேசுவது போல செயல்படும் போலீஸார், வட்டி கட்ட முடியாதவர்களின் சொத்தையே விற்று கந்து வட்டிக்காரர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்வதாகத் தெரிகிறது. இதனால், சமீபகாலமாகத் தென் மாவட்டங்களில் பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மொத்ததில் கந்து வட்டி நீடிப்பதற்கும் நிலைப்பதற்கும் சாதி, அரசியல், காவல் துறை ஆகிய மூன்று காரணிகள் தான் என்பதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஏழைகளுக்கு உதவாத 2003 ஆண்டு சட்டம்

2003ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கந்து வட்டிக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அதற்கு  ‘ தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டித் தடுப்புச் சட்டம்’  என்று பெயர்.  அதன்படி, வரம்பு மீறிய வட்டித் தொகை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தடை, அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.

இந்தச் சட்டத்தின் கீழ் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இச்சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வட்டித் தொழிலே ஒரு வரம்பு மீறல்

அரசின் இந்தச் சட்டம் வட்டியில் வரம்பு மீறக் கூடாது என்று சொல்கின்றது. ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் வட்டியே ஒரு வரம்பு மீறிய வருவாயாகும்.

மது, திருட்டு, கொள்ளை, விபச்சாரத்தின் வருவாய் எப்படியோ அது போன்று  வட்டியும் தடை செய்யப்பட்ட ஒரு பாவகரமான,  மக்களின் சாபத்திற்குரிய வருவாயாகும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

வட்டியை  நோக்கி ஒரு சமூகம், ஓர் அரசாங்கம்  இந்தப் பார்வையைப் பார்க்காத வரை வட்டியை ஒழிக்க முடியாது.

வட்டி என்பது ஒரு விஷ மரமாகும். அதில் இத்தனை சதவிகிதம் அனுமதி; இத்தனை சதவிகிதம் தடை என்பது மனிதனைச் சாகடிக்கின்ற விஷத்தில் சதவிகிதக் கணக்கு போடுவதற்கு சமமாகும். அதனால் தான் இஸ்லாம் வட்டியை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்து விடுக்கின்றது.

இஸ்லாத்தின் இந்தக் கடுமையான பார்வை இல்லையேல் அது இசக்கிமுத்து, சுப்புலட்சுமி தம்பதியர்களைப் போல் பல உயிர்களைச் சாய்க்காமலும் மாய்க்காமலும் விடாது.

அத்துடன், உலகத்திலேயே தற்கொலை சாவு முஸ்லிம்களிடம் தான் மிக மிகக் குறைவு. அதற்குக் காரணம் இஸ்லாம் விதியை நம்ப வைத்து, மனிதன் விரக்தி நிலைக்குச் செல்வதை விட்டும் அதன் உச்சக்கட்டமாக உயிரை மாய்ப்பதை விட்டும் தடுக்கின்றது.

எந்தப் பிரச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல! தற்கொலை செய்தால்  நிரந்தர நரகம் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் ஓர் உயரிய உண்மையான நம்பிக்கை ஊட்டுகின்றது. அதன் பலனால் முஸ்லிம்கள் தற்கொலையை நோக்கிப் போவது கிடையாது.

அது மட்டுமல்லாமல், சக மனிதனின் ரத்தத்தைக் குடிக்கின்ற  வட்டி எனும் பாவத்திற்கும் நிரந்தர நரகம் என்ற நம்பிக்கை அடிப்படையில் ஒரு முஸ்லிம் வட்டித் தொழில் ஈடுபடுவதை விட்டும்  தடுக்கின்றது.  அதனால்  தமிழகத்தை மட்டுமல்ல! ஒட்டு மொத்த இந்தியாவையும் வட்டியை விட்டும் காக்க வேண்டுமாயின் அதற்கு இஸ்லாம் தான் தீர்வாகும்.

நாம் இங்கே கூறியிருப்பது, வட்டிக்கு நம்பிக்கை அடிப்படையில் இஸ்லாம் எவ்வாறு தீர்வு காண்கின்றது என்பதாகும்.

அன்றாட வாழ்க்கையில் வட்டிக்கு எப்படித் தீர்வு காண்கின்றது என்பதை  ‘வட்டிக்குத் தீர்வு இஸ்லாம் மட்டுமே’ என்ற தலைப்பின் கீழ் இடம் பெறும் கட்டுரையில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————————————

 

வட்டிக்கு தீர்வு இஸ்லாம் மட்டுமே!

எம். ஷம்சுல்லுஹா

திரைப்பட இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரரும் சினிமா தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஷ்வரன் என்பவர் 2003ஆம் ஆண்டு கந்து வட்டிக்காரர்களின் தொல்லை காரணமாகத் தற்கொலை செய்ததைத்  தொடர்ந்து அன்றைய ஜெயலலிதா ஆட்சி கந்து வட்டிக்கு எதிரான கடுமையான சட்டத்தை இயற்றியது.

அந்தச் சட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து தம்பதியர்  தீக்குளித்து தற்கொலை செய்த பிறகு இப்போது சற்று விழித்துப் பார்க்கிறது.

இப்போது மீண்டும் படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலையைத் தொடர்ந்து கந்து வட்டி செய்தி மீண்டும் ஊடகத்துறையில் களை கட்டத் துவங்கியுள்ளது.

சில நாட்களுக்கு இந்தச் செய்தி பரபரப்பாகப் பேசப்படும். அதற்குப் பின்  அடியோடு மறக்கப் படும். மீண்டும் கந்து வட்டி பாதிப்பால் தற்கொலை நிகழும் போது அது பற்றிய பேச்சு தலை தூக்கும். அதன் பின்னர் அடங்கி விடும். ஆனால் யாரும் அதற்குரிய நிரந்தர தீர்வைப் பற்றி யோசிப்பதாகவும் இல்லை, பேசுவதாகவும் இல்லை.

இதற்கு நிரந்தரத் தீர்வு எங்கே கிடைக்கும்? திருக்குர்ஆனில் மட்டும் தான் இதற்குத் தீர்வு கிடைக்கும். திருக்குர்ஆனை அரசியல் மற்றும் ஆன்மீக சாசனமாகக் கொண்ட இஸ்லாத்தில் மட்டும் அதற்குத் தீர்வு இருக்கின்றது.

முஸ்லிம்களின் முதல் நம்பிக்கையும், முழு நம்பிக்கையும் மறு உலக வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையை மையமாகக் கொண்டே முஸ்லிம்களின் இந்த உலக  வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் அதற்கு மறுமையில் பலன் கிடைக்கும் என்பதால் தான் செய்கின்றார்கள். அவர்கள் ஒரு தீய காரியத்தைச் செய்யாமல் விடுகின்றார்கள் என்றால் அதற்கு மறு உலக வாழ்க்கையில் தண்டனை கிடைக்கக்கூடாது என்பதால் தான் விடுகின்றார்கள்.

இன்று முஸ்லிம்கள் வங்கியில் வரவு செலவுக் கணக்கு வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதில் வருகின்ற வட்டியை வாங்கிக் கொள்வதில்லை. அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அதை உதறித் தள்ளி விடுகின்றார்கள்.  முஸ்லிம்கள் பிக்ஸட் டெபாசிட்டில் பணம் போடுவதில்லை. இதற்குக் காரணம் வட்டிக்கு விடுவோர் மறு உலக வாழ்க்கையில் நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விடுவார்கள் என்பதால் தான். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 2:275

இதுதான் அதிகமான முஸ்லிம்கள் வங்கியிலிருந்து  வருகின்ற வட்டியை வாங்க மறுப்பதற்குரிய முக்கியக் காரணமாகும். பிக்சட் டெபாசிட்டில் பணத்தைப் போட்டு சம்பாதிக்க மறுப்பதற்கும், வட்டித் தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபடாததற்கும் இது தான் காரணம்.

முஸ்லிம்கள் அறவே வங்கியிலிருந்து வட்டி வரவை வாங்குவதில்லை; பிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைப் போடுவதில்லை; வட்டித் தொழிலிலும் ஈடுபடுவதில்லை என்று நாம் வாதிடவில்லை. முஸ்லிம்களிலும் மேற்கண்ட விதங்களில் வட்டியுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் மிகவும் குறைவானர்கள். அவர்கள் மறு உலக நம்பிக்கையில் அதிகப் பிடிமானம் இல்ல்லாதவர்கள். அதனால் தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றார்கள். மற்றவர்கள் மறுமையை அஞ்சி வட்டியை விட்டு ஒதுங்கி விடுகின்றார்கள்.

இறைவனுடன் போர் பிரகடனம்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

அல்குர்ஆன் 2:278,279

வரவேண்டிய வட்டியை விட்டு விட  மறுப்பவர், இறைவனிடமும், அவனது தூதரிடமும் போர்ப் பிரகடனம் செய்தவராவார் என்று திருக்குர்ஆன் முழங்குகின்றது.

இறை நம்பிக்கையுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இது போன்ற காரியத்தில் இறங்க முன்வரமாட்டார்.

வட்டிக்கு வாங்குபவருக்கும் தண்டனை

பொதுவாக வட்டிக்குக் கொடுப்பது தான் பாவம், வட்டிக்கு வாங்குவது பாவமில்லை; காரணம் வாங்குபவன் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றான் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளது. ஏன்? ஒரு சில முஸ்லிம்களிடத்திலும் இந்தச் சிந்தனை இருக்கின்றது. அதற்குத் தான் கீழே இடம் பெறுகின்ற நபிமொழி சம்மட்டி அடி கொடுக்கின்றது.

வாங்குபவர் என்ன? எழுத்தாளர், சாட்சியாளர் அத்தனை பேர்களையுமே இறைத்தூதரின் சாபம் வளைத்து விடுகின்றது.

வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும் அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

ஆதாரம்: முஸ்லிம்  4177

நபி (ஸல்) அவர்களுடைய சாபத்தை வட்டியின் மூலம் சம்பாதிக்க எந்த முஸ்லிம் முன் வருவார்?

மறுமையில் கிடைக்கும் தண்டனை

இறைத்தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

நூல்: புகாரி 2085

இஸ்லாமிய மார்க்கம் இப்படி மறு உலக  நம்பிக்கை அடிப்படையில் வட்டிக்கு எதிரான தடுப்பணைகளைப் போட்டு முஸ்லிம்கள் வட்டியின் பக்கம் சாடுவதை விட்டும், சாய்வதை விட்டும் தடுக்கின்றது.

பொருளாதாரத்தில் அதள பாதாளத்தில் கிடக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு மறு உலக நம்பிக்கை அடிப்படையில் கடன் வழங்கும் சில கட்டுபாடு, கண்டிப்புடன் கூடிய கடன் வாசலை திறந்து விடுகின்றது.

அன்றாட வாழ்க்கையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை நிறைவேற்றக் கடன் காலத்தின் கட்டாயமாகின்றது. அதனால் ஏழைபாழைகளைக் காக்கவும், கைதூக்கி விடவும் இஸ்லாம் மார்க்கம் கடன் வழங்கலை ஒரு  தர்மமாகவே ஆக்கி, அதற்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குவதாகக் கூறுகின்றது.

தவணைக்கும் நன்மை  தள்ளுபடிக்கும் நன்மை

கடன் வாங்கியவர் திரும்பச் செலுத்தாமல் தத்தளிக்கின்றார் என்றால் அவருக்கு மனிதாபிமானத்துடன் அவகாசம் அளிக்கச் சொல்கின்றது. அது தொடர்பாக வருகின்ற நபி மொழிகளை இப்போது பார்ப்போம்.

(கடன் வாங்கி அடைக்க முடியாமல்)  சிரமப்படுவருக்கு தவணை முடிவதற்கு முன் அவகாசம் அளிப்பவருக்கு ஒவ்வொரு நாளும் அது போன்ற தொகையை தர்மம் செய்த நன்மை உண்டு. தவணை முடிந்த பிறகு அவகாசம் அளிப்பவருக்கு ஒவ்வொரு நாளும் அது போன்ற இரு மடங்கு தொகையை தர்மம் செய்த நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: அஹ்மது 21968

‘‘(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்லும்) தனது (அலுவலரான) வாலிபரிடம், (வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும் என்று சொல்லி வந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3480

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, ‘அவரிடம் நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் வசதியற்றவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் எனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்என்று கூறினார். உடனே, அவரது தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்! என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்  

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)

நூல்: புகாரி 2077

மற்றோர் அறிவிப்பில், சிரமப்படுபவருக்கு நான் அவகாசம் அளிப்பவனாகவும், வசதியானவரிடம் மிருதுவாக நடப்பவனாகவும் இருந்தேன் என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இன்னோர் அறிவிப்பில், வசதியானவருக்கு அவகாசம் வழங்கியும், சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்தும் வந்தேன் என்று அவர் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

மற்றோர் அறிவிப்பில், வசதியானவரிடமிருந்து கடனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்து வந்தேன் என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.

(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2078

மேற்கண்ட இந்த நபிமொழிகள் அனைத்தும் கடனுக்குத் தள்ளுபடி மற்றும் தவணை அளிப்பதைப் பற்றி தெரிவிக்கின்றன.

மறுமையில் ஈடேற்றம்

(என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், நான் (வசதியின்றி) சிரமப்படுபவன் என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?’’ என்று கேட்டார்கள். அவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான் என்றார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், ‘‘மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா

நூல்: முஸ்லிம்  5328

கடன் பட்டவருக்காகப் பரிந்துரை செய்தல்

கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை நெருக்கும்போது, கடன் வாங்கியவர் பரிந்துரை செய்யுமாறு நம்மிடம் கோரிக்கை வைத்தால் அவருக்காகப் பரிந்துரை செய்து அவரது சிரமத்தைக் குறைப்பதற்கு உதவ வேண்டும். நபியவர்கள் தம்முடைய தோழர்களுக்காக இவ்வாறு பரிந்துரை செய்துள்ளார்கள்.

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பித் தரும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் இருவரின் குரல்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிருவரையும் நோக்கி வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, கஅப்! என்றழைத்தார்கள். நான், இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இந்த அளவை உன் கடனிலிருந்து தள்ளுபடி செய்துவிடு!’’ என்று கூறி பாதியளவு கடனைக் குறைத்துக் கொள்ளும்படி (என்னிடம் விரலால்) சைகை செய்தார்கள். அவ்வாறே செய்து விட்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் அவர்களை நோக்கி,) எழுந்து சென்று கடனை அடைப்பீராக! என்று சொன்னார்கள். 

அறிவிப்பவர்: கஃப் (ரலி)

நூல்: புகாரி 457, 471, 2418, 2424, 2706, 2710

அதே போன்று ஜாபிர் (ரலி) அவர்களுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். ஆனால் கடன் கொடுத்தவர்கள் அதனை ஏற்றுக் கெள்ளவில்லை.

என் தந்தையார் உஹதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டு கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, நாம் உன்னிடம் காலையில் வருவோம் என்று கூறினார்கள்.

பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்சை மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக துஆச் செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன. 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 2127, 2395, 2396, 2406, 2601

கடனுக்குக் கட்டுபாடு

இஸ்லாம் கடன் வாசலைத் திறந்து வைத்திருக்கின்றது என்பதற்காகக் கண்டமேனிக்கு, தாறுமாறாகக் கடன் வாங்கலாம் என்று அர்த்தமல்ல.

கடன் வாங்கி விட்டுத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் அவரது பாவம் மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவருக்கு அல்லாஹ் அளிக்கின்ற மரியாதையும், மாண்பும் வேறெவருக்கும் கிடையாது. அவர் இறந்த மாத்திரத்தில் அவருக்கு சுவனம் வழங்கப்பட்டு விடுகின்றது. ஆனால் அவர் கடன் வாங்கி விட்டு அதை அடைக்காமல் மரணித்து விட்டால் அவரது பாவம் மன்னிக்கப்படாது என்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.

அறப்போரில் உயிர் துறந்தருக்கு கடனை தவிர அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்

நூல்: முஸ்லிம் 3498

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்த தியாகிக்கே கடன் எனும் பாவம் மன்னிக்கப்படாது எனும் போது மற்றவர்கள் நிலைமை என்ன என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.

அரசின் கடமை

மக்களைக் காக்கின்ற ஓர் அரசாங்கம் வட்டியை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அத்துடன், கடன் பட்டு அல்லலும் அவஸ்தையும் படுகின்ற மக்களுக்குக் கடனுக்குரிய பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். இஸ்லாம் வட்டியின் வாசலை அடைத்து விட்டு, கடன் வாசலைக் கடிவாளத்துடனும் கட்டுபாட்டுடனும் திறந்து விடுகின்றது.

யாரேனும் ஒருவர் கடன் வாங்கி அதை அடைக்க வசதி இல்லாமல் இறந்து விட்டால் அந்தக் கடனை அரசாங்கமே ஏற்க வேண்டும். இதோ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கடன் பட்டு இறந்தவருக்கு இஸ்லாமிய ஆட்சிக் கருவூலத்தில் பொருளாதாரம் நிறைந்த பிறகு கடனை அடைக்கும் பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்; அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள்.

அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), ‘இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! இறை நம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2298

கடன் வாங்கி விட்டு அதை அடைப்பதற்கு வசதியின்றி இறந்தவருக்கு இஸ்லாமிய அரசாங்கம் பொறுப்பேற்கும் அதே வேளையில் ஜகாத் எனும் தர்மத்தின் மூலம் கடனை அடைப்பதற்கு வழி வகை செய்கின்றது.

இந்தியாவில் ஜகாத் வழங்கும் முறை அனைவராலும் பின்பற்றப்பட்டால் இது போன்ற வட்டிச் சாவுகளும் பட்டினிச்சாவுகளும் ஒரு போதும் நிகழாது.

அதிலும் குறிப்பாக இஸ்லாமிய அரசாங்கத்தில் நினைவுச் சின்னங்கள், நினைவுச் சிலைகள் அமைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இன்று இந்திய அரசாங்கம் இதுபோன்ற அனாச்சார செலவுகளைத் தடுத்து, வட்டி போன்ற சமூகக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சாவிலிருந்து தடுக்கலாம்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்துடன் தீக்குளித்து தலை வெடித்து சாகின்றான். ஆனால் மோடியோ சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மூவாயிரம் கோடி ரூபாயில் சிலை வடித்துக் கொண்டிருக்கின்றார். என்ன முரண்பாடு? இது இந்தியாவின் சாபக் கேடாகும்.

இதுபோன்ற அவல நிலை தொலைய வேண்டுமாயின் அதற்குத் தீர்வு இஸ்லாம் மட்டும் தான். இதைத் தவிர்த்து இந்தியாவிற்கு வட்டி முதல் அனைத்து தீமைகளையும் களைய வேறு வழியில்லை என்பதை உரத்துச் சொல்லிக் கொள்கின்றோம்.

—————————————————————————————————————————————————————————————

குர்ஆனைப் பார்ப்பது வணக்கமா?

எம்.ஐ. சுலைமான்

اللآلي المصنوعة – (1 / 317)

وقال أنبأنا القاضي سوار بن أحمد حدثنا علي بن أحمد النوفلي حدثنا محمد بن زكريا بن دينار حدثنا العباس بن بكار حدثنا عباد بن كثير عن ابن الزبير عن جابر مرفوعا النظر في المصحف عبادة ونظر الولد إلى الوالدين عبادة والنظر إلى علي بن أبي طالب عبادة

குர்ஆனைப் பார்ப்பது வணக்கமாகும். பெற்றோர்களை பிள்ளைகள் பார்ப்பதும் வணக்கமாகும். அலீ (ரலி) அவர்களைப் பார்ப்பதும் வணக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அல்லஆலில் மஸ்னுஆ,

பாகம்: 1, பக்கம்: 317.

திருக்குர்ஆனை ஓதாமல் ஒருவர் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவர் இறைவணக்கத்தில் ஈடுபட்டவர் என்றும்,

பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்யா விட்டாலும் அவர்களைப் பார்ப்பதே வணக்கத்தில் ஈடுபட்ட நன்மையைத் தரும் என்றும்

நபித்தோழர் அலீ (ரலி) அவர்களைப் பார்ப்பது கூட நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கம் என்று இந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதா என்பதைப் பார்ப்போம்.

இச்செய்தியில் இடம்பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் ஸக்கரிய்யா பின் தீனார் அல்கிலாபீ என்பவர் நபிகளார் மீது இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.

الضعفاء والمتروكون للدارقطني – (1 / 35)

(483) محمد بن زكريا الغلابي بصري يضع.

பஸராவைச் சார்ந்த முஹம்மத் பின் ஸக்கரிய்யா அல்கிலாபீ என்பவர் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று தாரக்குத்னீ அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன்,

 பாகம்: 1, பக்கம்: 35.

ميزان الاعتدال – (3 / 550)

وقال ابن مندة: تكلم فيه.

இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர் என்று இப்னு முன்தா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்: 550.

7537 – محمد بن زكريا الغلابى البصري الاخباري، أبو جعفر.عن عبدالله ابن رجاء الغدانى، وأبي الوليد، والطبقة.وعنه أبو القاسم الطبراني، وطائفة.وهو ضعيف،

முஹம்மத் பின் ஸக்கரிய்யா அல்கிலாபீ என்பவர் பலவீனமானவராவார் என்று தஹபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,

பாகம்: 3, பக்கம்: 550.

الموضوعات لابن الجوزي – (3 / 278)

وذلك من الغلابى فإنه كان غاليا في التشيع.

(நபிகளார் மீது இட்டுகட்டப்பட்ட செய்தியை குறிப்பிட்டுவிட்டு) இது கிலாபீயின் செய்திகளில் உள்ளதாகும். இவர் ஷியாக் கொள்கையைச் சார்ந்தவரும் அதில் வரம்புமீறி நடப்பவருமாவார் என்று இப்னுல் ஜவ்ஸி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்மவ்ளூஆத்,

பாகம்: 3, பக்கம்: 278.

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி கிடையாது.

திருக்குர்ஆனை ஓதுவதால் நன்மை உண்டு என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உண்டு. ஆனால் பார்த்தாலே நன்மை உண்டு என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் கிடையாது.

பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் நன்மையை அடைய முடியும் என்பதற்குத் திருக்குர்ஆன் வசனங்களும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் அதிகம் உண்டு. ஆனால் பெற்றோர்களைப் பார்ப்பதே நன்மை என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.

ஷியாக்கள், அலீ (ரலி) அவர்கள் தொடர்பாக ஏராளமான பொய்யான செய்திகளை நபிகளார் பெயரில் இட்டுக்கட்டிச் சொல்லியுள்ளார்கள். அதில் உள்ளதுதான் அலீ (ரலி) அவர்களைப் பார்ப்பதும் வணக்கமாகும் என்ற செய்தி.

நபிகளாருக்கு மிகவும் விருப்பமான நபித்தோழரான அபூபக்ர் (ரலி) அவர்களைப் பற்றிக் கூட இவ்வாறு நபிகளார் சொல்லவில்லை.

மொத்தத்தில் இந்தச் செய்தியில் கூறப்பட்ட அனைத்துக் கருத்துக்களும் ஆதாரமற்ற, நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.

—————————————————————————————————————————————————————————————

கேள்வி பதில்

வங்கியில்  ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா?

அப்துந் நாஸிர், கடையநல்லூர்

கேள்வி:

வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றலாமா? இப்பிரிவில் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற வேலை மட்டும்தான் நடைபெறும்.  வட்டி வாங்குதல், கொடுத்தல், கணக்கெழுதுதல், சாட்சியாக இருத்தல் போன்ற எந்த ஒன்றிலும் நாம் பங்கு பெறுதல் வராது.

வங்கியில் தூய்மைப் பணிகளில் ஈடுபடக் கூடியவர், டீ காபி செய்து கொடுப்பவர் போன்ற பணிகளில் ஈடுபடலாம்; வட்டிக்கு கணக்கு எழுதக் கூடியவர்களாக, வட்டிக்கு சாட்சி சொல்லக்கூடிய பணிகளில் ஈடுபடக்கூடாது என்பது நம்முடைய ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருக்கும் போது, வங்கியில் இந்த ஆவணங்களைப் பாதுகாக்கும் துறையில் பணி செய்வது மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதா? என்பதை குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவுபடுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.

அபூ அம்மார், மேலப்பாளையம்.

பதில்:

ஒரு முஸ்லிம் எந்தெந்தப் பொருட்களை விற்பனை செய்யலாம்? எந்ததெந்த நிறுவனங்களில் வேலை செய்யலாம்? என்பது தொடர்பான ஏராளமான சந்தேகங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகிறது. இதற்கான பதிலை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக மக்களுக்கு இது தொடர்பாக எழும் கேள்விகளைப் பின்வருமாறு நாம் வகைப்படுத்தலாம்.

  1. பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்து அனுமதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யலாமா?
  2. நாம் விற்பனை செய்யும் பொருள் ஹலாலாக இருக்கும் போது நம்மிடம் இருந்து அதனை விலைக்கு வாங்குபவர் அதனைத் தடுக்கப்பட்ட காரியத்திற்கு பயன்படுத்தினால் நாம் தீமைக்கு துணை செய்தவராக ஆவோமா?
  3. நம்மிடம் உள்ள ஹலாலான ஒரு பொருளை பாவமான காரியங்கள் நடக்கும் ஒரு இடத்திற்கு தேடிச் சென்று விற்பனை செய்யலாமா?

என்பன போன்ற கேள்விகள் மக்களிடம் எழுகின்றன.

இக்கேள்விகளுக்கான விடையை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

  1. பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் ஊழியராகச் சேர்ந்து அனுமதிக்கப்பட்ட வேலைகளைச் செய்யலாமா?

வங்கிப் பணி குறித்த மேற்கண்ட கேள்வி இந்த வகையில் உள்ளது தான்.

வங்கியில் ஆவணங்களைப் பாதுகாப்பது குறித்து நுணுக்கமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். இரு தரப்புக்கு மத்தியில் நடந்த வட்டி தொடர்பான ஆவணங்களை ஒருவர் பாதுகாக்கிறார் என்றால் அவர் வட்டியை எழுதியவராக மாட்டார். முன்னரே எழுதிக் கொண்ட தகவலைத் தான் இவர் பதிவு செய்கிறார்.

ஒருவர் பொருள் பாதுகாப்பு மையம் வைத்துள்ளார். அதில் கட்டணம் வாங்கிக் கொண்டு மக்களின் பொருட்களைப் பாதுகாத்து வருகிறார். அதில் வங்கிகள் தமது ஆவணங்களைப் பாதுகாக்க ஒப்படைத்தால் அதை அவர் பாதுகாக்கலாம். ஏனெனில் இவர் வட்டியை எழுதிய குற்றத்தைச் செய்யவில்லை. மாறாக முன்னரே எழுதிக் கொண்ட விபரத்தை தகவலைத்தான் பாதுகாக்கிறார்.

பெரிய வர்த்த நிறுவனங்களில்  நாம் கொண்டு செல்லும் பொருட்களைப் பாதுகாக்கும் பிரிவு இருக்கும். நாம் கொடுக்கும் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு நமக்கு டோக்கன் தருவார்கள். நாம் திரும்பிச் செல்லும் பொது அந்த டோக்கனைக் கொடுத்து நமது பொருளைப் பெற்றுக் கொள்வோம்.

நாம் கொடுக்கும் பொருளை அவர்கள் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இங்கே அடிப்படை. அந்தப் பொருள் தடுக்கப்பட்ட முறையில் சம்பாதிக்கப்பட்ட பொருளாக இருந்தால் அவர்கள் அதனைப் பாதுகாப்பதினால் குற்றவாளியாக ஆகிவிட மாட்டார்கள். அந்தப் பொருள் வட்டி சம்பந்தமான ஆவணமாக இருக்கலாம். அப்படி இருந்தால் நாம் வட்டியை எழுதியவராக மாட்டோம்.

கணக்கர் வேலை பார்ப்பதும், ஆடிட்டர் வேலை பார்ப்பதும் இவ்வாறுதான்.

இந்த வகையில் ஆவணப்பாதுகாப்பு வட்டியை எழுதியதில் சேராது. இருவருக்கு மத்தியில் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்தின் போது அவர்களுக்கிடையே எழுதப்பட்ட வட்டி சம்பந்தமான ஆவணங்களை நம்மிடம் தருவார்கள். அதை நாம் பஞ்சாயத்து முடியும் வரை நாம் பாதுகாப்போம்.

அது போல் நமது வங்கிக் கணக்கின் வருடாந்திர ஸ்டேட்மெண்டை வாங்கி நாம் பாதுகாத்து வைப்போம். அந்த ஸ்டேட்மெண்டில் நமது வட்டி கணக்கும் எழுதப்பட்டு இருக்கும். நாம் வட்டியை வாங்காவிட்டாலும் அந்த ஸ்டேட்மெண்டில் வட்டியைக் குறிப்பிட்டு இருப்பார்கள்.

இவற்றைப் பாதுகாப்பதால் நாம் வட்டியை எழுதியவர்களாக ஆக மாட்டோம். மாறாக ஏற்கனவே எழுதப்பட்ட தகவலைத் தான் நாம் பாதுகாக்கிறோம்.

நான் இன்னாரிடம் கடன் வாங்கினேன். இவ்வளவு தொகைக்கு இவ்வளவு வட்டி போட்டார் என்று நமக்குக் கடிதம் வந்து அந்தக் கடிதத்தை நாம் பாதுகாத்தால் அது வட்டியை எழுதியதாக ஆகாது. மாறாக முன்னர் எழுதப்பட்ட தகவலை நாம் பாதுகாக்கிறோம் என்பதாகவே ஆகும்.

அறியாமைக் காலத்தில் வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கியவர் இப்போது திருந்தி விட்டார்; ஆனால் வங்கிகள் இவரது கடனை வசூலித்தே தீரும் என்பதால் அது தொடர்பான கணக்கை இவர் எழுதி பாதுகாத்து வந்தால் வட்டியை எழுதிய குற்றத்தில் சேரமாட்டார்.

இது போல் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவை வட்டியை எழுதுதல் என்பதில் சேராது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

ஒருவர்  ஒரு கடையில் கணக்கராக அல்லது ஆடிட்டராக பணிபுரிகிறார். அந்தக் கடை உரிமையாளர் தன்னுடைய வங்கிக் கணக்கை எழுதுமாறு அல்லது தணிக்கை செய்யுமாறு தன்னுடைய பணியாளருக்குக் கூறுகிறார். அந்தக் கணக்கர் அல்லது ஆடிட்டர் அதனை எழுதினால் அல்லது தணிக்கை செய்தால் இவர்கள் கணக்கை எழுதுகிறார்கள் என்று ஆகுமே தவிர வட்டியை எழுதிய குற்றவாளிகளாக மாட்டார்கள்.

அது போல் தான் ஆவணங்களைப் பாதுகாப்பதும் வட்டியை எழுதிய குற்றத்தில் சேராது.

இது முதலில் தெரிந்து கொள்ள வேண்டியதாகும்.

ஆனால் மேற்கண்ட பணிகளை வங்கியின் ஊழியராக இருந்து கொண்டு இருந்து கொண்டு செய்தால் அப்போது அவர் வட்டிக்குத் துணை செய்த குற்றத்தைச் செய்தவராவார்.

பாவமான காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகப் பணியாற்றுவது கூடாது. அந்த ஊழியர் செய்யும் பணி, பாவமில்லாத காரியமாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுவது தீமையைச் செய்வதாகவே கருதப்படும்.

உதாரணமாக ஒருவர் மதுபானக் கடையில் ஊழியராகப் பணியாற்றுகிறார். ஆனால் அவர் மது குடிப்பவர்களுக்கு ஊறுகாய், மீன் வறுவல் மட்டுமே விற்பனை செய்கின்றார்.

ஊறுகாய், மீன் வறுவல் விற்பனை செய்வது ஹலாலாக இருந்தாலும் அதனை மதுபானக் கடை ஊழியராக இருந்து கொண்டு மதுபானக் கடையில் விற்பனை செய்தால், மதுபானம் விற்பது எப்படிக் குற்றமோ அதே குற்றம்தான் அந்த நிறுவனத்தில் ஊழியராக இருந்து கொண்டு ஹலாலான பொருளை விற்பனை செய்வதும் என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللَّهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلَا تَقْعُدُوا مَعَهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا مِثْلُهُمْ إِنَّ اللَّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ جَمِيعًا )النساء: 140(

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

(அல்குர்ஆன் 4:140)

தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும், வைபவங்களிலும் நாம் பங்கெடுத்தால் நாமும் அத்தீமையைச் செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றது என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இது போன்றுதான் வங்கியில் ஆவண பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவதும்.

வங்கியின் ஆவணங்களைப் பாதுகாக்கின்ற ஆவணப் பிரிவில் பணியாற்றினாலும் அவர் வங்கியின் ஊழியரேயாவார். எனவே தீமையான காரியத்தைச் செய்கின்ற ஒரு நிறுவனத்தில் பணியாற்றுபவரும் அந்தத் தீமையின் பங்குதாரராகவே கருதப்படுவார். எனவே வங்கியில் டாக்குமெண்டேசன் பிரிவில் பணியாற்றுவதும் தீமைக்கு துணை புரிவதாகும்.

{وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ} [المائدة: 2]

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் (5:2)

மேற்கண்ட வசனத்தில் நன்மையான காரியத்திலும், இறையச்சமான காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளலாம் என்றும், பாவமான காரியத்திலும் வரம்பு மீறும் காரியத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்வது கூடாது என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுவது அந்த நிறுவனத்தின் பாவமான காரியத்திற்குத் துணை செய்வதாகத்தான் ஆகும்.

எனவே வங்கியில் ஆவணப் பாதுகாப்பு பிரிவு உட்பட எந்தப் பிரிவிலும் பணியாற்றுவது கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், ‘‘இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3258)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: இப்னு மாஜா 3371

பாவமான காரியங்களுக்கு எந்த விதத்திலும் துணையாக இருப்பது கூடாது என்பதை மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

வங்கியில் வட்டி சாராத பணிகள் செய்யலாம் என்பதே இதற்கு முன்னர் நமது நிலைப்பாடாக இருந்தது. உதாரணமாக வங்கியில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பது, டீ வாங்கிக் கொடுப்பது இது போன்ற வேலைகளைச் செய்வது தவறில்லை என்று முன்னர் குறிப்பிட்டிருந்தோம். நீங்களும் உங்கள் கேள்வியில் அதனைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஆனால் இதுபோன்ற வேலைகளுக்காக வங்கியில் ஒருவர் ஊழியராகப் பணியாற்றினாலும் அது கூடாது என்பதே மார்க்க ஆதாரங்களின் அடிப்படையில் சரியானதாகும் என்பதை நாம் இங்கே தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

ஒரு கட்டடப் பொறியாளர் வங்கியின் ஊழியராக ஆக்கப்பட்டு, அந்த வங்கியின் கட்டடத்தைப் பராமரிக்கும் வேலையைச் செய்தால் அது குற்றமாகும். ஆனால் அதன் ஊழியராக இல்லாமல் மற்றவர்களுக்குச் செய்து கொடுப்பது போல் வங்கிக்கும் கட்டடப் பராமரிப்பு செய்தால் அது குற்றமில்லை.

முதலாவது தீமை நடக்கும் நிறுவனத்தில் ஒருவராக இருந்து கொண்டு செய்த குற்றமாக உள்ளது. எல்லா நேரமும் அந்த நிறுவனத்தின் அங்கமாக இவர் இருக்கிறார். இது மேற்கண்ட வசனம் மூலம் தடுக்கப்படுகிறது. இரண்டாவதாக நாம் குறிப்பட்டவர் அதன் ஊழியராக இல்லாமல் மார்க்கம் அனுமதித்த காரியத்தைச் செய்தவுடன் அதன் உறவை முறித்து விடுகிறார்.

வங்கிக்கு பீரோ, ஸ்டேஸனரி பொருட்கள், டேபிள், சேர்கள் விற்பனை செய்வதும் குற்றமாகாது. ஏனெனில் அதன் ஊழியராக இல்லாத நிலையில் ஹலாலான பொருளைத் தான் அவர் விற்பனை செய்கிறார்.

  1. நாம் விற்பனை செய்யும் பொருள் ஹலாலாக இருக்கும் போது நம்மிடம் இருந்து அதனை விலைக்கும் வாங்குபவர் அதனைத் தடுக்கப்பட்ட காரியத்திற்குப் பயன்படுத்தினால் நாம் தீமைக்குத் துணை செய்தவராக ஆவோமா?

எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [المائدة/2]

நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது.  (பார்க்க: அல்குர்ஆன் 5:2)

தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் பள்ளிவாசல் ஒன்றைக் கட்ட எண்ணுகிறார். அதற்கான வேலையிலும் ஈடுபடுகிறார். பள்ளிவாசல் கட்டுவது நல்ல காரியம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை ஒரு வணிகரிடம் அவர் வாங்குகிறார். பள்ளிவாசல் கட்டும் நல்ல பணிக்காக அந்த வணிகர் தமது சரக்குகளை விற்றதால் அவர் நன்மைக்குத் துணை செய்தவராக முடியாது. ‘இவர் தான் பள்ளிவாசல் கட்ட உதவியவர்’ என்று அவரைப் பற்றி நாம் குறிப்பிடுவதில்லை. அந்த வணிகர் இலவசமாக அவற்றை வழங்கினால் அல்லது பள்ளிவாசல் கட்டும் பணி என்பதற்காக மற்ற எவருக்கும் விற்பதை விட சலுகை விலைகளில் வழங்கினால் மட்டுமே அவர் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு உதவினார் என்போம்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட பொருளை நாம் விற்பனை செய்கிறோம். நம்மிடம் அப்பொருளை வாங்கியவர் தீய காரியத்துக்குப் பயன்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது தீமைக்குத் துணை புரிவதாக ஆகாது. ஒரு சிலை நிறுவுவதற்காக அதே வணிகரிடம் கட்டுமானப் பொருட்களை வாங்குகின்றனர். அந்த வணிகர் இலவசமாக அப்பொருளைக் கொடுத்தாலோ அது சிறந்த பணி என்று கருதி விலையில் சலுகை அளித்தாலோ அப்போது அவர் தீமைக்குத் துணை செய்தவராவார். அவ்வாறு இல்லாமல் மற்ற பணிகளுக்கு விற்பது போல் அவர் விற்பனை செய்தால் அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார்.

நன்மையான காரியத்துக்கு உதவுதல் என்பதில் ‘உதவுதல்’ என்பதை எந்தப் பொருளில் நாம் விளங்குகிறோமோ அதே பொருளில் தான் தீமையான காரியங்களுக்கு உதவுதல் என்பதிலும் ‘உதவுதல்’ என்பதற்குப் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் தீமைக்கு உதவக் கூடாது என்று சொல்வதற்கு ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படும் 5:2 வசனம் தான் நன்மைக்கு உதவ வேண்டும் எனவும் கூறுகின்றது. இரண்டிலும் ஒரே வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் முக்கியமான நிபந்தனையை நாம் கவனத்தில் கொள்ள வைக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பூவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை. எனவே பூவை நாம் எவருக்கும் விற்கலாம். வாங்குபவர் அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக மாட்டோம்.

இலவசமாகவோ, மற்ற காரியங்களை விட சலுகை விலையிலோ வழங்கும் போது தான் எந்தக் காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒரு ஜவுளிக் கடையில் துணி விற்பனை செய்யும் போது வாங்கும் மனிதன் அதனைக் கற்சிலைக்கு அணிவிப்பதற்காகப் பயன்படுத்துவானோ வேறு எதற்கும் பயன்படுத்துவானோ என்றெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேங்காய் வியாபாரி, தன்னிடம் வாங்கப்படும் தேங்காய்கள் சிலைகள் முன்னே உடைக்கப்படுமோ என்றெல்லாம் புலன் விசாரணை செய்ய வேண்டியதில்லை.

ஒருவரின் வண்டியில் வாடகை கொடுத்து பயணிப்பவர் எந்த நோக்கத்திற்காக பயணிக்கிறார் என்பதை வண்டி ஓட்டுபவர் கவனிக்க வேண்டியதில்லை.

حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ ذَكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَمِ فَقَالَ حَدَّثَنِي الْأَسْوَدُ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى طَعَامًا مِنْ يَهُودِيٍّ إِلَى أَجَلٍ وَرَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ

போர்க்களத்தில் அணிந்து கொள்ளும் தமது கவசத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் அடகு வைத்துள்ளார்கள்.

புகாரி: 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

அந்தக் கவசம் அந்த யூதரால் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.

உண்ணவும், பருகவும், பயன்படுத்தவும், வைத்திருக்கவும் எப்பொருட்களுக்கு இஸ்லாம் தடை விதித்து விட்டதோ அவற்றை மட்டுமே விற்கலாகாது. நன்மை தீமை ஆகிய இரண்டு வழிகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ள பொருட்களை நாம் விற்க எந்தத் தடையும் இல்லை. வாங்குபவன் தீமைக்குப் பயன்படுத்துவதற்கு நாம் பொறுப்பாளியாக முடியாது.

எந்த நிலையிலும் தாயத்து விற்கலாகாது. அதில் நன்மைக்குப் பயன்படுதல் என்ற அம்சம் கிடையாது. அது முழுக்க முழுக்க பித்தலாட்டமாகும்.

எந்தப் பொருளை உண்ணவோ, பருகவோ, பயன்படுத்தவோ இறைவன் தடை விதித்து விட்டானோ அவற்றை விற்பதும் கூடாத ஒன்றாகும்.

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ أَخْبَرَنِي طَاوُسٌ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ بَلَغَ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَنَّ فُلَانًا بَاعَ خَمْرًا فَقَالَ قَاتَلَ اللَّهُ فُلَانًا أَلَمْ يَعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمْ الشُّحُومُ فَجَمَلُوهَا فَبَاعُوهَا

யூதர்கள் மீது கொழுப்பை இறைவன் ஹராமாக்கியிருந்தான். அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தை உண்ணலானார்கள். அவர்களை அல்லாஹ் அழிப்பானாக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: புகாரி 2223, 2234, 2236, 3460, 4633

حَدَّثَنَا مُسَدَّدٌ أَنَّ بِشْرَ بْنَ الْمُفَضَّلِ وَخَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَاهُمْ الْمَعْنَى عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ بَرَكَةَ قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ بَرَكَةَ أَبِي الْوَلِيدِ ثُمَّ اتَّفَقَا عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عِنْدَ الرُّكْنِ قَالَ فَرَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَضَحِكَ فَقَالَ لَعَنَ اللَّهُ الْيَهُودَ ثَلَاثًا إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمْ الشُّحُومَ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَيْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ وَلَمْ يَقُلْ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ الطَّحَّانِ رَأَيْتُ وَقَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ

ஒரு சமுதாயத்தின் மீது ஒரு பொருளை உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டால் அதை வியாபாரம் செய்வதையும் தடுத்து விடுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் 3026, அஹ்மத் 2111

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَمَهْرِ الْبَغِيِّ وَحُلْوَانِ الْكَاهِنِ

நாய் விற்ற கிரயத்தையும், விபச்சாரத்தின் கூலியையும், சோதிடன் பெருகின்ற பொருளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: உக்பா இப்னு அம்ரு (ரலி),

நூல்: புகாரி 2237, 2282, 5346, 5761

முற்றிலும் தடுக்கப்பட்ட காரியத்துக்காக நமது கட்டடத்தை வாடகைக்கு விடக் கூடாது. நமக்குச் சொந்தமான இடத்தை விபச்சார விடுதி நடத்த நாம் வாடகைக்கு விடுவது கூடாது. அது போன்று பேங்க் நடத்துவதற்கும் நம்முடைய கட்டடத்தை வாடகைக்கு விடுவது கூடாது.

ஒரு முஸ்லிம் அல்லாதவர் குடியிருப்பதற்காக நம்முடைய வீட்டை வாடகைக்குக் கேட்கிறார். குடியிருப்பதற்கு வாடகைக்கு விடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகும். ஆனால் வாடகைக்கு வாங்கியவர் அந்த வீட்டில் ஷிர்க்கான காரியங்களைச் செய்தால் நாம் குற்றவாளி ஆகமாட்டோம்.

ஒருவருக்கு ஒரு வீட்டை நாம் விற்பனை செய்த பிறகு அதில் அவர் பாவமான காரியங்களைச் செய்தால் எப்படி அக்குற்றம் நம்மைச் சாராதோ அது போன்று பாவமில்லாத காரியத்திற்காக வாடகைக்கு பெற்றவர் அந்த வாடகைக் காலத்தில் பாவமான காரியங்களைச் செய்தால் நம்மீது குற்றம் ஏற்படாது. இது தீமைக்குத் துணை செய்தலாக ஆகாது.

ஒரு வியாபாரி விற்பனை செய்யும் பொருட்களில் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக மஞ்சள் தூள், சாம்பிராணி, ஊதுபத்தி, பேரீச்சை, நல்லெண்ணை, நெய், தீப்பெட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம். (உதாரணத்திற்குத்தான் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளோம்)

இவற்றை நல்ல காரியத்திற்கும், தீய காரியத்திற்கும் பயன்படுத்தலாம். இது போன்றவைகளை விற்பனை செய்வதில் எந்தக் குற்றமுமில்லை. உங்களிடம் இந்தப் பொருட்களை வாங்கிய ஒருவன் பூஜை போன்ற பாவமான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் விற்பவன் மீது எந்தக் குற்றமும் ஏற்படாது.

அது போல் தீமைக்கு மட்டுமே பயன்படக் கூடிய பொருட்களும் உள்ளன. அவற்றை விற்பனை செய்வது கூடாது. அப்படி விற்பனை செய்தால் அது தீமைக்குத் துணை செய்வதாகும். உதாரணமாக விபூதி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தப் பொருட்களை இஸ்லாமிய அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட எந்தக் காரியத்திற்கும் யாரும் பயன்படுத்துவதில்லை. இவை முழுக்க முழுக்க மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்று தீமைக்கு மட்டுமே பயன்படும் பொருட்களை விற்பனை செய்வது ஹராம் ஆகும்.

  1. நம்மிடம் உள்ள ஹலாலான ஒரு பொருளை பாவமான காரியங்கள் நடக்கும் ஒரு இடத்திற்குத் தேடிச் சென்று விற்பனை செய்யலாமா?

மார்க்கம் அனுமதித்த பொருட்களை வாங்கிச் செல்பவன் அதைத் தவறான வியாபாரத்துக்குப் பயன்படுத்தினால் அதனால் நமக்கு குற்றம் வராது.

உதாரணமாக ஒரு மதுபானக் கடையில் மதுவுடன் ஊறுகாய், மீன் வறுவல், ஈரல் வறுவல் எனப் பல பொருட்களை வழங்குவார்கள். இவர்களுக்காக நாம் ஊறுகாய், மீன், இறைச்சி போன்றவற்றை விற்பது குற்றமாகாது.

ஆனால் ஹராமான காரியம் நடக்கும் இடத்தைத் தேடிச் என்று சப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

மேற்கண்ட ஹதீஸில் வேலியோரங்களில் கால்நடைகளை மேய்ப்பவர், வேலிக்குள்ளேயே கால்நடைகளை மேயவிட நேரும் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதால் சாராயக்கடையைத் தேடிச் சென்று சப்ளை செய்தால் நாமே அதனுள் விழுந்து விட வாய்ப்பு உண்டு என்ற நபியின் எச்சரிக்கைப்படி தேடிச் என்று கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

விபச்சார விடுதிக்கு ஹலாலான பொருட்களை நாம் சப்ளை செய்தாலும் அதில் நாம் விழுந்து விடும் அபாயம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். ஹலாலான பொருட்களை விபச்சார விடுதிக்காக நம்மைத் தேடி வந்து வாங்கினால் அதில் குற்றம் ஏதும் இல்லை.

—————————————————————————————————————————————————————————————

பறவைகளின் பல மைல் பயணம்

படைத்த நாயனின் ஓர் அற்புதம்

அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.  

அல்குர்ஆன்  67:19

ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன 

அல்குர்ஆன்  16:79

பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்லும் வேகம் மணிக்கு 1,07,000 கி.மீ. ஆகும்.

மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் பூமி வேகமாக நகரும்போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது பூமி மோத வேண்டும். ஆனால் அவ்வாறு மோதுவதில்லை.

பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் முன்பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும்.

இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.

திருக்குர்ஆனின்  இந்த இரு வசனங்களிலும் ஆகாய அந்தரத்தில் பறக்கின்ற பறவைகள்  தனது அற்புதங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவியல் என்ன கூறுகின்றது?  புரியாத புதிர் என்று கூறுகின்றது.

12.11.2017 அன்று தமிழ் இந்து நாளேட்டில் இந்தியாவுக்கு பறவைகள் வரத்து குறைந்ததற்குக் காரணம் என்ன என்ற கோணத்தில் பறவைகள் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது.  அதில் பறவைகளின் பயணத்தைப் பற்றிய அற்புதத்தைக் காண முடிந்தது. மேற்கண்ட இந்த இரு வசனங்களின் வெளிச்சத்தில் அந்த அற்புதத்தைக் காண ஒரு பயணத்தை இந்த கட்டுரையில் மேற்கொள்வோமாக!

வடக்கிலிருந்து தெற்கே வலசை வரும் பறவைகள்: ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை குறைவது ஏன்?

பறவைகள் வலசை செல்வது குளிர்காலம் தொடங்கியதும் உலகெங்கும் நடக்கும் முக்கிய நிகழ்வு. அந்த வகையில், தற்போது பறவைகளின் வலசை தொடங்கியிருக்கிறது.

பொதுவாக உலகின் வடபகுதியிலிருந்து தென் பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலத்தில் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்து விடும். இதனால், அங்கு மீன், பூச்சி, பழங்கள் உள்ளிட்ட உணவுகள் பறவைகளுக்குக் கிடைக்காது. இதனால், காடுகள், சதுப்பு நிலங்கள், நீர் நிலைகளைச் சார்ந்து வாழும் பறவைகள் குளிர் காலத்தில் மிதவெப்ப மண்டல நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.

மத்திய ஆசிய வான்வழி பாதையில்..

உலகெங்கும் பறவைகளின் வான்வழி வலசைப் பாதைகள் பன்னிரண்டுக்கும் மேல் உள்ளன. இந்தியாவுக்கு வரும் பறவைகள் கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான், கசகிஸ்தான், மங்கோலியா வழியான மத்திய ஆசிய வான்வெளி வலசைப் பாதையையே தேர்ந்தெடுக்கின்றன. 1980-லிருந்து இந்தியாவுக்கு வலசை வரும் வெளி நாட்டுப் பறவைகளின் வருகை வெகுவாக குறைந்து வருவதாக அச்சம் தெரிவிக்கும் பறவையியல் ஆர்வலர்கள், நமது சுற்றுச்சூழல் வேகமாக சீர்கெட்டு வருவதே இதற்கு காரணம் என்கிறார்கள்.

அக்டோபர் தொடங்கி மார்ச் வரை வெளிநாட்டுப் பறவைகள் தமிழகம் உள்ளிட்ட தென் பகுதிகளில் தங்கி இருக்கும். அதன்படி, தற்போது வெளிநாட்டுப் பறவைகள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கிவிட்டன. மதுரை மாவட்டம் சாமநத்தம், அவனியாபுரம், வெள்ளக்கல், அரிட்டாபட்டி, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, நேசநேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு வெளிநாட்டு பறவைகள், கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன.

நட்சத்திரங்கள் அமைப்பை வைத்து..

இது குறித்து பறவையியல் ஆர்வலரான மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது:

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் சில வகைப் பறவைகள் இப்போது நம் பக்கம் வருவதே இல்லை. வெளிநாட்டுப் பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களைக் கடந்து இந்தியாவுக்கு வருகின்றன. அப்படி வரும்போது வழியில் தேவையான உணவு கிடைக்காமல் போகலாம் என்பதால், வலசை கிளம்பும் போதே வழக்கத்தைவிட கூடுதலான உணவை உண்டு உடம்பில் கொழுப்பை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றன. உள்ளான் இனப் பறவைகள், காட்டு வாத்துகள், சிலவகைக் குருவி இனங்கள், கொக்கு – நாரை இனங்கள் இவற்றோடு கழுகு இனங்களும் இந்தியாவுக்கு வலசை வருகின்றன.

இவற்றில் சில பறவைகள் பகலில் இடம்பெயரும்; சில இரவில் பறக்கும். சூரிய வெப்பத்தால் சக்தி இழந்து சோர்ந்து விடாமல் இருக்கவே சில பறவைகள் இரவு நேரப் பயணம் மேற்கொள்கின்றன. இவைகள் இரவில் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து, தாங்கள் செல்ல வேண்டிய திசையை எளிதாக அறிகின்றன” என்றார்.

எவரெஸ்ட்டைக் கடக்கும் ரகசியம்

சில பறவைகள், ஒரு நாளைக்கு ஐம்பது கி.மீ தூரம் பறக்கும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு மீண்டும் அடுத்த இலக்கை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கும். சிலவகைப் பறவைகள், எத்தனை ஆயிரம் கிலோ மீட்டரையும் தொடர்ச்சியாக பயணித்து இலக்கை அடைந்துவிடும். கோண மூக்கு உள்ளான் போன்ற பறவைகள் இரண்டு மூன்று நாள்கள்கூட தொடர்ச்சியாகப் பறக்கும் திறன் கொண்டவை. வாத்து இனங்கள் ஒரு நாளில் 150 கி.மீ பறந்தால் அடுத்த ஒரு வாரத்துக்கு எங்காவது ஓரிடத்தில் ஓய்வெடுத்துக் கொள்ளும்.

இதுகுறித்தும் பேசிய ரவீந்திரன் நடராஜன், “வலசைப் பாதையில் பறவைகளின் பறக்கும் சக்தியை மனித அறிவால் துல்லியமாக அளவிட முடியாது. உதாரணமாக வரித்தலை வாத்து மங்கோலியாவில் இருந்து கிளம்பி இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் மேலாகப் பறந்து தென் இந்தியப் பகுதிகளை வந்தடைகிறது. உறையும் பனி சூழ்ந்த இமய மலையை இந்தப் பறவை ஐந்தரை நாட்களில் சர்வசாதாரணமாய் கடக்கிறது. எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு மனிதனுக்கு எத்தனையோ உயிர்க்காப்புச் சாதனங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், இவையெல்லாம் இல்லாமல் இந்த வாத்துகளும், சில வகை கொக்குகளும் எவரெஸ்ட் சிகரத்தைக் கடக்கின்றன.

இந்தப் பறவைகளால் மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது என்பது இதுவரை                         விஞ்ஞானிகளுக்கே விளங்காத புதிர்! பறவைகளின் வலசைப் போக்கை வைத்தே, நாம் எத்தகைய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கணிக்க முடியும்.

எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கடந்து இங்கு வந்துவிட்டுப் போகும் பறவைகள் நமது இயற்கைச் சூழலை துளியும் கெடுத்துவிட்டுப் போவதில்லை. ஆனால், பிறந்தது முதல் இங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையைக் கண்டபடி பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதன் தாக்கம் தான் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது” என்றார்.

—————————————————————————————————————————————————————————————

முகஸ்துதி ஒரு புற்று நோய்

சபீர் அலீ  M.I.Sc.

மனிதர்களுடைய மறுமை வாழ்வின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதற்கான பரீட்சைக் கூடமே இவ்வுலக வாழ்க்கை.

இவ்வுலகில் இறைவன் வகுத்துத் தந்த வழியில் செயல்பட்டு அவன் சொன்ன நற்காரியங்களைப் புரிந்து நன்மைகளை அவர்கள் சேகரிக்க வேண்டும்.

அவர்கள் சேகரிக்கும் நன்மையினால் கிடைக்கப் பெறும் இறையருளால் மட்டுமே வெற்றிக்கனியான சுவனத்தைப் பெற இயலும்.

அத்தகைய நன்மையான காரியங்களைப் புரிவதற்கு முன்னால் நாம் நம்முடைய மனதில் அடித்தளமிட வேண்டிய இக்லாஸ் எனும் அஸ்திவாரத்தைச் சரியாக அமைக்க வேண்டும்.

அவ்வாறு அமைக்கவில்லையென்றால், உடலில் புற்று ஏற்பட்டால் அது எப்படி செல்களை அழித்து ஒழித்துவிடுகிறதோ அது போன்று உள்ளத்தில் முகஸ்துதி எனும் புற்று நோய் ஏற்பட்டு நமது நன்மைகளை அரித்து விடும்.

இக்லாஸை ஸ்திரப்படுத்துவோம்

இஸ்லாத்தில் நாம் எந்த நற்காரியத்தைப் புரிவதாக இருந்தாலும் “இதை நான் என் இறைவனுக்காக, அவனிடம் கூலி பெறுவதற்காகவே புரிகிறேன்’’ என்ற உறுதியான எண்ணம்  கொள்வதே இக்லாஸ் ஆகும்.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

நாம் நற்காரியங்களைப் புரிகின்ற போது நம்முடைய உள்ளத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்த வேண்டும். அதில் எந்தக் கலப்படமோ கலங்கலோ இருக்கக் கூடாது.

ஏனெனில், நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அந்தக் காரியத்தின் உடல் உழைப்பையோ பொருளாதார இழப்பையோ அல்லாஹ் பார்ப்பது கிடையாது. உள்ளத்தையே பார்க்கின்றான்.

உள்ளத்தில் கொண்டிருக்கின்ற தூய எண்ணத்திற்குத் தான் இறைவனிடத்தில் கூலி வழங்கப்படுகிறதே தவிர வெளித்தோற்றத்திற்கு வழங்கப்படுவதில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5012

மேலும், ஹிஜ்ரத் – நாடு துறத்தல் – போன்ற இஸ்லாத்தின் தலைசிறந்த காரியங்களைச் செய்தாலும் கூட அதைச் செய்கின்ற போது நாம் அல்லாஹ்விற்காக அக்காரியத்தைச் செய்திருந்தால் அல்லாஹ்விடத்தில் அதற்கான கூலி கிடைக்கும்.

அவ்வாறில்லாமல் உலக நோக்கத்திற்காக நமது செயல் அமைந்திருந்தால் நாம் நாடியது மட்டுமே கிடைக்குமே தவிர இறையருள் கிடைக்கப்பெறாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.

இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

நூல்: புகாரி 1

ஆக, நாம் என்ன காரியத்தைச் செய்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல; நாம் கொண்டிருக்கிற எண்ணம் எப்படி அமைந்துள்ளது என்பது அதைவிட முக்கியமான அம்சமாக இருக்கிறது.

உதாரணமாக, ஒருவர் கோடி ரூபாயை தர்மம் செய்கிறார். ஆனால் அவரது உள்ளத்தில் பெருமையும், பகட்டும் கலந்து இக்லாஸிற்கு வேட்டு வைத்திருக்கிறது.

மற்றொருவர், வெறும் ஒரு ரூபாய் மட்டும் தர்மம் செய்கிறார். இவரது உள்ளமோ இக்லாஸை ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறது.

இப்போது, இறைவனிடத்தில் இந்த ஒரு ரூபாய்க்கு அந்த ஒரு கோடி ரூபாய் சமமாகாது.

நற்காரியத்தைப் புரிபவர்களின் எண்ணத்தின் தூய்மைதான் முக்கியமே தவிர எண்ணிக்கை முக்கியமல்ல.

எனவே, இக்லாஸ் எனும் அஸ்திவாரத்தை நம்முடைய உள்ளத்தில் ஆழப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

இக்லாஸை இழக்கச்செய்யும் ரியாஃ

ரியா – முகஸ்துதி – என்பது இக்லாஸிற்கு நேர் எதிரான எண்ணமாகும்.

நற்காரியங்கள் புரிகின்ற போது எண்ணத்தில் அல்லாஹ்வை மட்டும் முன்னிறுத்துவது இக்லாஸ் என்றால், நான் ஒரு காரியத்தைச் செய்ததற்காக மக்கள் என்னைப் புகழ வேண்டும் என்றும், அனைவரின் கவனமும் என்னை நோக்கித் திரும்ப வேண்டும், என் பெயர் மக்களின் நாவில் ஒலிக்க வேண்டும் என்றும் ஒருவன் விரும்புகிறான் எனில் அதுவே முகஸ்துதியாகும்.

நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்விற்காக மட்டும் செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் அந்த ஸ்தானத்தில் மற்றவர்களைக் கூட்டாக்கினால் அது அல்லாஹ்விற்கு இணைவைக்கின்ற காரியமாகிவிடும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் முகஸ்துதியை சிறிய இணைவைப்பு என்று குறிப்பிட்டார்கள்.

நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)என்று பதிலளித்தார்கள். நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி)

நூல்: அஹ்மத் 22528

உடலில் ஏற்படும் கேன்சர் எனும் புற்றுநோய் அதன் செல்களை அழித்து மரணம் எனும் படுகுழியில் தள்ளுகிறது.

அதுபோல், எண்ணத்தில் ஏற்படும் குறையினால் முகஸ்துதி எனும் புற்றுநோய் ஏற்பட்டு நன்மைகளை அழித்து நரகம் எனும் படுகுழியில் நம்மை வீழ்த்திவிடும்.

ஒருவர் முகஸ்துதிக்காக ஒரு காரியத்தைச் செய்கிறபோது அவருக்கு இறைவனிடத்தில் எந்தக் கூலியும் கிடைக்காது. முகஸ்துதி அவரது நன்மைகளை அழித்துவிடும் என்பது மேற்கூறிய அஹ்மத் ஹதீஸின் மூலம் தெளிவாகிறது.

நாம் ஒரு முதலாளியிடம் தொழிலாளியாக வேலை செய்கிறோம் என்றால் நாம் அவருக்காக வேலை செய்தால்தான் அவர் நமக்குக் கூலி கொடுப்பார்.

நாம் அவருக்காகச் செய்ய வேண்டிய வேலையை வேறொருவனுக்குச் செய்து முடித்துவிட்டு, எனக்கான கூலியை கொடுங்கள் என்று கேட்டால் நம்மை இந்த உலகம் பைத்தியக்காரன் என்றே அழைக்கும்.

அது போன்றே இவ்வுலகில் முகஸ்துதிக்காக நற்காரியத்தைப் புரிந்தவர்கள், எங்களுக்கான கூலி கொடு இறைவா! என்று அல்லாஹ்விடம் வந்து நிற்கும் போது நீ யாருக்காக உனது காரியத்தைச் செய்து முடித்தாயோ அவனிடம் சென்று கூலி பெற்றுக் கொள் என்று இறைவன் விரட்டிவிடுவான்.

அந்நாளில் அல்லாஹ்வைத் தவிர யாரிடம் சென்று கூலி பெற முடியும்??

இவ்வாறு எவ்வளவு நற்காரியம் புரிந்திருந்தாலும் முகஸ்துதி என்ற புற்றுக்கு இடம் கொடுத்துவிட்டால் அது அனைத்தையும் அரித்து நாசம் செய்துவிடும்.

தர்மத்தை அழிக்கும் முகஸ்துதி

தர்மம் என்பது அல்லாஹ்வினால் அதிகம் சிலாகித்துச் சொல்லப்பட்ட ஒரு நற்காரியம்.

தர்மம் செய்வோருக்கு அவர்கள் செய்த தர்மத்தை விடப் பன்மடங்கு கூலி உயர்த்தித் தரப்படும் என்று வாக்களிக்கின்றான்.

அதே காரியத்தை முகஸ்துதிக்காகப் புரிகின்ற போது வளர வேண்டிய தர்மம் வீழ்ந்துவிடும்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன்.

(அல்குர்ஆன் 4:38)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 2:264)

நயவஞசகத்தின் ஏஜெண்ட்

தொழுகை என்பது இஸ்லாத்தின் ஐந்து அடிப்படையான காரியங்களில் ஒன்றாகும். தொழுகை, மறுமை வெற்றிக்கு நம்மை நெருக்கி அழைத்துச் செல்லக்கூடிய காரியங்களில் முதலாவது காரியமாகும்.

மேலும், தொழுகையினால் ஒரு புறம் நன்மையின் உயரும். மறுபுறம் தீமைகளின் படித்தரம் குறையும்.

இத்தகைய சிறப்பு மிக்க இஸ்லாத்தின் முதன்மையான வணக்கத்தை ஒருவன் பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகச் செய்கிறான் எனில் அத்தொழுகை நம்மை நரகத்தின் அடித்தட்டுக்குச் சொந்தக்காரர்களான நயவஞ்சகர்களுக்கு ஒப்பாக்கி விடும்.

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்ற உள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.

அல்குர்ஆன் 4:142

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.  அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.

அல்குர்ஆன் 107:4,5,6

முகப் புத்தகமா? முகஸ்துதி பெட்டகமா?

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தின் தகவல் பரிமாற்ற சாதனங்களில் ஒன்றாக விளங்குவது ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்கள்.

ஒரு தகவலை ஒரு நொடியில் உலகின் மூலை முடுக்கிற்கு எடுத்துச் செல்லும் இந்த வலைச் செயலிகளை வைத்து ஏகத்துவப் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இத்தகைய அழைப்பு பணி காரியத்தைக் கூட முகஸ்துதிக்காக சிலர் முன்னெடுத்துச் செல்லும் நடைமுறையைப் பார்க்க முடிகிறது.

மார்க்கம் தொடர்பான ஒரு பதிவைப் பதிந்து விட்டு, அதை எத்தனை நபர்கள் லைக் செய்கின்றனர், எத்தனை நபர்கள் பகிர்கின்றார்கள், எத்தனை பேர் நம்மைப் பாராட்டுகின்றனர் என்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு பார்க்கின்ற போது தான் பதிந்த பதிவை யாரும் லைக் செய்யவில்லையென்றால் உடனே அதை நீக்கியும் விடுகின்றனர்.

உண்மையில் மார்க்கப் பிரச்சாரத்திற்காகப் பதிந்திருந்தால் நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், சிலர் தன்னைப் பாராட்ட வேண்டும், “முகநூல் போராளி’’ என்று தன்னை மெச்ச வேண்டும், தான் பதியும் மார்க்கப் பதிவின் மூலம் தனது அறிவைப் புகழ வேண்டும் என்பதற்காக சமூக வலைத்தளங்களில் உலா வரக்கூடிய நபர்களை நாம் பார்க்கின்றோம்.

இப்படி அளவில்லா நன்மையைப் பெற்றுத் தரும் தஃவாவை முகஸ்துதிக்காகவும், தன் முகம் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு மத்தியில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவும் முன்னெடுத்துச் சென்றால் அது நமது மறுமை இலக்கை அழித்து ஒழித்துவிடும்.

முகஸ்துதியின் முடிவு

இவ்வாறு முகஸ்துதி என்பது பல பரிமாணங்களில் நமக்கு மத்தியில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்தப் புற்றுநோய்க்கு உள்ளத்தில் இடமளித்தால் நமது நல்லறங்களை அது இல்லாமலாக்கிவிடும்.

இவ்வுலகில் யார் முகஸ்துதிக்காக நற்காரியங்கள் புரிந்தார்களோ அவர்களை இறைவன் மறுமை நாளில் அம்பலப்படுத்துவான்; அடையாளப்படுத்துவான்.

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப்படுத்துவான்என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ்(ரலி),

நூல்: புகாரி 6499

உலகில் வணக்கசாலி, அறிவுஜீவி, கொடை வள்ளல் என்பது போன்ற புகழுக்கு ஆசைப்பட்டு யார் நற்காரியம் புரிந்தார்களோ அவர்கள் இந்த அற்பப் புகழுக்கு ஆசைப்பட்டுத்தான் செய்தார்கள் என்று ஒட்டுமொத்த மக்களுக்கு முன்னிலையிலும் இறைவன் அம்பலப்படுத்தும் இழிநிலை தேவையா?

மேலும், முஃமின்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரும் பாக்கியம் என்னவென்றால், மறுமை நாளில் இறைவனின் கரண்டைக் கால் திறக்கப்பட்டு சிரம் பணிவதாகும். அப்போது முகஸ்துதிக்காக இவ்வுலகில் செயல்பட்டவர்களால் பணிய முடியாத இழிநிலை உருவாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)

நூல்: புகாரி 4919

மேலும், ஒருவன் எத்தகைய உயரிய நற்காரியம் புரிந்திருந்தாலும் அதை முகஸ்துதிக்காக அவன் செய்திருந்தால் நரகில் முகம் குப்புற அவன் தள்ளப்படுவான்.

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்என்று கூறுவார். நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப்படவேண்டும்என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது’’ என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர் நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன்’’ என்று பதில் சொல்வார். ‘‘நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டதுஎன்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், “நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர், ‘‘நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை’’ என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், “நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டதுஎன்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3537

ஷஹீத் என்பது இஸ்லாத்தில் ஆக உயர்ந்த நற்செயலாகும். கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும். மேலும், நேரடியாக சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் காரியம்.

மார்க்கக் கல்வி கற்பது சுவனத்தின் பாதையை லேசாக்கும் காரியம்.

தர்மங்கள் செய்வது நிலையான நன்மையைப் பெற்றுதரும் காரியம்.

இப்படி இஸ்லாத்தில் தலைசிறந்த மூன்று காரியங்களை இவர்கள் செய்திருந்தாலும் இவர்களின் நோக்கம் முகஸ்துதிக்காக இருந்தமையினால் நரகத்தில் தள்ளப்படுகின்றனர்.

எனவே, மறுமையை இலக்காகக் கொண்டு செயல்படும் நாம் இந்த உலகின் அற்பப் புகழ்ச்சிக்காக செயல்பட்டு நமது இழந்துவிடாமல் உளத்தூய்மையுடன் மட்டும் செயல்பட வேண்டும்.

குறிப்பாக, நிர்வாகிகளாகவும், தாயீக்களாகவும் இருப்பவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

நாம் நிர்வாகியாக இருந்து ஒரு பிரச்சனையைத் தீர்க்கும் போது நாம் தீர்த்த விதத்தைப் பார்த்து நம்மைப் புகழ்வர். அல்லது தாயீயாக இருந்து பிரச்சாரம் செய்யும் போது நமது பிரச்சாரத்தின் திறனைப் பார்த்துப் புகழ்வார்கள். அப்போது ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி நம்முடைய மறுமை வாழ்வை இழந்துவிடாமல் அல்ஹம்துலில்லாஹ் என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு பணிவுடன் செயல்பட வேண்டும்.

—————————————————————————————————————————————————————————————

 

முன்மாதிரித் தூதர் கூறிய முன்னுதாரணங்கள்

K.M.. சல்மான் MISC

இன்று மக்கள் தங்களுடைய தலைவர்களாக சிலரை ஏற்படுத்தி, அவர்கள் சொல்லும் கருத்திற்கேற்பத் தான் நாங்கள் செயல்படுவோம் என்று கூறுகிறார்கள்.  ஆனால் இந்த உலகத்தில் உத்தமத் தூதர் நபிகள் நாயகத்திற்கு இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்படுவது போல் உலகில் எந்தச் சமூகமும் எந்தத் தலைவருக்கும் கட்டுப்படவில்லை என்று அறைகூவலாகக் கூட நம்மால் சொல்ல முடியும்.

நபிகளாருக்கு மட்டும் ஏன் இந்த அந்தஸ்து?  இதற்கான விளக்கத்தை இறைவன் தன்னுடைய திருமறையில் பதிவு செய்கிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு இந்தத் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

குர்ஆன் 33:21

இந்த வார்த்தை தான் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்  கட்டுப்படுதல் என்ற கயிற்றால் கட்டிப் போட்டிருக்கிறது.  அதே போல் இத்தூதர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மார்க்கச் சட்டத்தைக் கற்றுத் தருகிறது என்று இறைவன் கூறுகிறான்.

இந்தத் தூதர் தன்னுடைய மனோஇச்சைப்படி பேசமாட்டார். இவர் பேசுவதெல்லாம் அறிவிக்கப்படும் இறைச்செய்தியைத் தவிர வேறில்லை

குர்ஆன் 53:4,3

இந்த இறைவசனத்தை நாம் கவனிக்கும் போது மார்க்கம் தொடர்பாக இறைத்தூதர் அவர்கள் பேசும் அத்தனை வார்த்தைகளிலும் பல வானுயர்ந்த அர்த்தங்கள் உண்டு என்பதை அறியலாம். அத்தகைய தன்மை கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில விஷயங்களை சில உதாரணங்களைக் கொண்டு விளக்குவார்கள்.

இந்த முன்மாதிரித் தூதர் கூறிய முன்னுதாரணங்களை எடுத்துச் சொல்வதே இந்த தொடரின் நோக்கம்.

பசுமையான மரமே  படைத்தோனை  நம்பியவரின் உதாரணம்

இப்னு உமர் அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதனுடைய இலைகள் உதிர்வதில்லை. அதன் இலைகள் ஒன்றோடு ஒன்று உராய்வதில்லை  என்று நபியவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள் அது இன்ன மரம்; அது இன்ன மரம் என்றார்கள்.  அது பேரீச்சைமரம் தான் என்று சொல்ல நான் நினைத்தேன். நான் இள வயதுடையவனாக இருந்ததால் வெட்கப்பட்டுக் கொண்டு சொல்லாமல் இருந்தேன். அப்போது  நபி (ஸல்) அவர்கள்  அது பேரீச்சை மரம் என்றார்கள்.

நூல்: புஹாரி  6122

பேரீச்சை மரத்தின் இலைகள் மற்ற மரத்தினுடைய இலைகள் போல் உதிர்வது கிடையாது. இது போல் தான் ஈமான் கொண்டவரின் உள்ளத்தில் அந்த நம்பிக்கை உதிராமல் இருக்க வேண்டும் என்று இறைத்தூதர் அவர்கள் விளக்கினார்கள்.

இளம்பயிரே ஈமானின் உறுதிக்கு உதாரணம்

அபு ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  இறை நம்பிக்கையாளரின் நிலையானது இளம்பயிரைப் போன்றதாகும்.  காற்றடிக்கும் போது அதைக் காற்று சாயத்துவிடும்.  காற்று நின்றுவிட்டால் அது நேராகி விடும். சோதனையின் போது (ஈமான் கொண்டவனின் நிலை இவ்வாறே) தீயவன் உறுதியாக நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன்.  அல்லாஹ் தான் நாடும் போது அதை உடைத்து விடுகிறான்.

நூல்: புஹாரி 5644

இறைவனை நம்பிக்கை கொண்ட நாம் நம்முடைய நம்பிக்கை காரணமாகவே சோதிக்கப் படுவோம்.  அந்தச் சோதனையின் போது நாம் சோர்ந்து விடாமல் இறைவனையே சார்ந்திருக்க வேண்டும்.

சிரமத்தின் போது இறையோனின் அருளை நினைத்து இஸ்லாத்தின் நிழலில் நிற்பவனே இறுதி நாளில் வெற்றியை சுவைப்பான் என்பதை இறைத்தூதர் அவர்கள் ஓர் உதாரணத்தில்  கூறுகிறார்கள்.

ஒரு  பயிர் காற்றடிக்கும் போது சாய்வது போல் ஒரு முஃமீனை சோதனைகள் சாய்த்து விடலாம். ஆனால் அந்தக் காற்றுக்குப் பிறகு அந்தக் கதிர் நிமிர்வது போன்று கஷ்டத்திற்குப்  பிறகு நம்முடைய கடமையை நிறைவேற்ற நாம் புறப்பட வேண்டும் என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். இந்த வரி தான் இன்று இஸ்லாமியர்களுக்கு எப்படிபட்ட துன்பம் நேர்ந்தாலும் இதயத்தில் ஈமானை  இழக்காமல்  வாழ்க்கைப்  பயணத்தை தொடர  வழிவகை செய்கிறது.

உயர்ந்தோனை  நம்பியவர்களை  ஓர்  உடலோடு  ஒப்பிடுதல்

நுஃமான் இப்னு பஷீர் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவருக் கொருவர்  கருணை புரிவதிலும்  அன்பு செலுத்து வதிலும் இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர்  உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகமிழந்தால் அதனுடன் உள்ள மற்ற உறுப்புகளும்  (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் வந்துவிடுகிறது.

நூல்: புஹாரி 6011

உடலில் ஒரு பகுதியில் ஏற்படும் காயத்தைப் பிற பகுதிகள் தனக்கு ஏற்பட்ட கவலையாக உணர்வதைப் போல் ஒவ்வொரு முஃமினும் பிற முஃமினுக்கு ஏற்படும் கவலையைத் தன்னுடைய கவலையாக உணர வேண்டும்.  அப்படி அவன் உணர்ந்தால் தான் அதை நீக்குவதற்குப் போராடுவான்.

இன்று இஸ்லாம் சொல்லும் இந்த சகோதரத்துவம் பிற மக்களிடத்தில் இல்லாத காரணத்தால் தான் தன்னுடைய குடும்பம், தன்னுடைய பணம், தன்னுடைய நலன் என்று சுயநலமாக வாழ்கிறான். பிறர் படும் துன்பத்தை ஏறெடுத்துப் பார்க்கக் கூட மனமில்லாதவனாக பணத்தைத் தேடி அலைகிறான்.  இஸ்லாம் இந்த நிலையை அடியோடு அழிக்கிறது.

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபிகளார் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறை நம்பிக்கையாளராக மாட்டார்.

நூல்: புஹாரி 13

இந்தச் செய்திக்கு மேல் இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்திற்கு வேறன்ன உதாரணம் வேண்டும்?

கடமையைச்  செய்தால்  கப்பலைக்  காப்பாற்றலாம்…!

இன்று  சமுதாயத்தில் நடக்கும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு  இருந்தாலும் நமக்கு எதற்கு ஊர் வம்பு என்று எண்ணி அந்தத் தீமையைக் கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள்.  இதன் விளைவாக நாளை அந்தத் தீமையை தன்னுடைய வீட்டிலோ, அல்லது தன்னிடத்திலோ காணும்  நிலை ஏற்படும்.  இதற்கு என்ன காரணம்? அந்தத் தீமையை ஆரம்பத்திலே கிள்ளி எறியாதது தான்  இன்று ஊர் முழுவதும் அவனை எள்ளி நகையாடும்  நிலையை   ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று சமூக நலத்திற்காக,  சமூகத் தீமையை நாம் தடுக்கும் போது, நாளை இந்தக் காரியத்தை நாம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற சுயநலமும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிந்தனையை இன்று  இஸ்லாம்  மட்டும் தான் பேசுகிறது.

இறைத்தூதர் அவர்கள்  இதற்கு ஓர் அற்புதமான  உதாரணத்தைக் கூறுகிறார்கள்.

நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும்அதை மீறி நடப்பவனுக்கும் உள்ள உதாரணம்  ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும்.  அவர்கள் கப்பலில் சீட்டு குலுக்கிப் போட்டார்கள்.  அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் சிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது. 

கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது.  அதற்காக அவர்கள் மேல் தளத்திலிருந்தவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.  அப்போது கீழ் தளத்திலிருப்பவர்கள் நாம் (தண்ணீருக்காக)  நம்முடைய பங்கில் (கீழ்த்தளத்தில்)  ஓட்டை போட்டுக்கொள்வோம்.  நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்போம்  என்று பேசிக்கொண்டார்கள்.  அவர்கள் விருப்பப்படி செயல்பட மேல் தளத்திலிருப்பவர்கள் விட்டுவிட்டால் அனைவரும் அழிந்து போவார்கள்.  ஓட்டையிடவிடாமல் அவர்களின் கரத்தைப் பிடித்து தடுத்துக் கொள்வாராயின்  அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்றவரும்) தப்பிப் பிழைத்து கொள்வார்கள்.

நூல்: புஹாரி 2493

இந்த உதாரணத்தில் கூறப்பட்டதைப் போன்று தீமையைக் காணும் போது அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம்  நமக்கு ஏற்பட வேண்டும் இல்லையென்றால், அவன் தானே தீமை செய்கிறான், நான் நல்லவனாகத் தானே இருக்கிறேன் என்று பேசினால் நாளை அந்த நல்லவனும் அழியும் நிலை ஏற்படும்.

எனவே தீமையைக் காணும் நாம் நம்மால் முடிந்தளவிற்கு அதைத் தடுக்க முயல வேண்டும். அப்படி இருந்தால் தான் நாளை அந்தத் தீமையை விட்டு விலகியவராக நாம் இருக்க முடியும். மேலும் இது போன்ற தீமையைத் தடுக்காதவனின் உள்ளத்தில் இறை நம்பிக்கையின் முழுமை இல்லை என்று இஸ்லாம் பிரகடனப்படுத்துகிறது.

பெருநாள்  தினத்தில்  தொழுகைக்கு முன் உரையைக் கொண்டு ஆரம்பித்தவரில் முதலானவர் தான் மர்வான் என்பவர் ஆவார்.  ஒரு மனிதர் அவரிடம் வந்து, ‘உரைக்கு முன்பு தான் தொழுகையிருக்க வேண்டும்’ என்று கூறினார். மேலும் ‘இங்கே அந்த வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டீர்கள்’  என்றார். இந்த நிகழ்வின் இறுதியில் நபிகளார் அவர்கள் பின்வருமாறு கூற நான் செவியேற்றுள்ளேன்.

உங்களில் யார் ஒரு தீமையைக் காண்கிறாரோ அவர் அதைத் தன்னுடைய கையால் தடுக்கட்டும். அதற்கு சக்தியில்லையென்றால் நாவால் தடுக்கட்டும்.  அதற்கும் இயலவில்லையென்றால் தன்னுடைய உள்ளத்தால்  அதை அவர் வெறுத்து ஒதுங்கட்டும். இது தான் ஈமானின் பலவீனமான நிலை என்றார்கள்

நூல்: முஸ்லிம் 186

எனவே தீமையைத் தடுத்து, தீனைக் காக்க  வேண்டும்.

நார்த்தங்காயா?   கொமட்டிக்காயா?

இன்று நாம் நம்முடைய வாழ்வில் திருமறையின்  தொடர்பைத் துறந்தவர்களாக இறைவசனங்களை  மறந்தவர்களாக வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.  ரமலான் மாதம் மட்டும் தான் திருகுர்ஆனைத் திருப்பிப் பார்க்க ஆசைப்படுகிறோம். அப்போது கூட அதைப் பார்க்கவில்லையென்றால் பார்ப்பவர்கள் நம்மைத் தப்பாகப் பேசுவார்களே என்ற நினைப்பு தான் நம் நிலையை சற்று மாற்றுகிறது. இப்படி குர்ஆனை துச்சமாக நினைக்கும் நாம் மனித வாழ்வின் உச்சத்தை எவ்வாறு அடையமுடியும்? இதுபோன்ற நிலையை  மாற்றுவதற்காகத்  தான்   கண்ணியத் தூதர் (ஸல்) அவர்கள் கனிகளை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்.

அபு மூஸா அல்அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதும் இறை நம்பிக்கையாளனின் நிலையாகிறது நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று. அதன் சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறை நம்பிக்கையாளனின் நிலையானது பேரீச்சம்பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது. அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலையானது துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும்  அதன் மணம் நன்று. ஆனால் அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது கொமட்டிக்காயைப் போன்றதாகும். அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானது.

நூல்: புஹாரி 5427

இந்த நான்கு பழத்தில் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நம்முடைய உள்ளத்தில் இறைவனின்  நம்பிக்கையிருந்தாலும் நாவில் இறைவசனங்கள் தவழ வேண்டுமென்று  இஸ்லாம் விரும்புகிறது.

நாளை மறுமையில் படைப்பினங்கள் பதறும் அந்த நாளில்  பரிந்துரையாக  இந்தக் குர்ஆனை ஏற்படுத்துவதாக இறைவன் கூறுகிறான்.   அது பற்றி நபிகளார் அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும்.

இதை அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 1470

ஆனால் இன்று முஸ்லிம்கள் இறந்தவருக்கு யாஸீன் ஓதுவதற்கும், திருமணத்தில் ஃபாத்திஹா  ஓதுவதற்கும் தான் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை நீடித்தால் இந்தக் குர்ஆன் நாளை  மறுமையில்  நமக்குப் பரிந்துரையாகுமா அல்லது பகையாகுமா  என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மேலும்  இந்தக் குர்ஆன் தான் மண்ணறையின்  நெருக்கடியிலிருந்தும் மலக்குகளின் மரண அடியிலிருந்தும்  நம்மை காப்பாற்றப் போகிறது என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.

பராஅ இப்னு ஆசிப் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபியவர்களுடன் அன்ஸாரியிலிருந்து ஒரு மனிதருடைய ஜனாஸாவில் நாங்கள் கலந்து கொண்டோம். இறுதியாக கப்ரை நாங்கள் அடைந்தோம். ஜனாஸா அடக்கம் செய்யப்படும் போது  நபியவர்கள் அமர்ந்தார்கள். எங்களுடைய தலையில்  பறவைகள் கொத்தும் அளவிற்கு நாங்கள் அவரைச் சுற்றி  அமர்ந்தோம்.

நபியவர்கள் கையில் ஒரு குச்சியிருந்தது. அதைக் கொண்டு  மண்ணைக்  கிளறியவர்களாகச் சொன்னார்கள். கப்ருடைய வேதனையை விட்டும்  அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள்.  பிறகு, ‘இந்த மய்யித்து தன்னை அடக்க வந்தவர்கள்  திரும்பும் வேளையில் அவர்களுடைய செருப்பின் ஓசையைக் கேட்கும். அதற்குப் பிறகு, இன்னானே  உன்னுடைய  இறைவன் யார் உன்னுடைய மார்க்கம் என்ன உன்னுடைய  நபி யார் என்று கேட்கப்படும்’  என்றார்கள்.

அப்போது இரண்டு மலக்குமார்கள்  வந்து அவனை உட்கார வைப்பார்கள். அந்த இரண்டு மலக்குமார்கள் உன்னுடைய இறைவன் யார்?’ என்பார்கள். அவர், ‘என்னுடைய இறைவன்  அல்லாஹ் ஆவான்என்பார்.

உன்னுடைய மார்க்கம் என்ன-?’ என்று அவர்கள் கேட்பார்கள்.  அதற்கு அவர், ‘என்னுடைய  மார்க்கம் இஸ்லாம்என்பார்.

உங்களிடத்தில்  அனுப்பப்பட்டாரே அப்படிப்பட்ட இந்த மனிதரைப் பற்றி என்ன கருதுகிறீர்?’ என்பார்கள். அதற்கு அவர், ‘அவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்என்பார். இது உனக்கு எப்படித் தெரியும்?’ என்பார்கள். அதற்கு அவர், ‘நான் அல்லாஹ்வின் வேதத்தைப் படித்தேன். அதை நான் நம்பிக்கை கொண்டேன். மேலும் நான் உண்மைப்படுத்தினேன்என்பார்.

நூல்: அஹ்மத் 18557

கப்ரில் நடக்கும் விசாரணையின் போது இந்த வார்த்தையைச் சொல்வதற்கு நாம் என்ன முயற்சியைச் செய்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

சிதறும் உள்ளத்திற்குச் சிறகு தான் உதாரணம்

பொதுவாக மனித உள்ளத்தைக் குரங்குக்கு ஒப்பிடுவார்கள். காரணம் அந்த உள்ளத்தின் சிந்தனை நிலையற்றது. முதலில் ஒரு முடிவெடுக்கும். பிறகு அந்த முடிவை மாற்றும். பிறகு மீண்டும் பழைய முடிவையே எடுக்கும். இப்படி உள்ளத்தில் ஏற்படும் இந்த நிலையை நம்மில் பலர் உணர்ந்திருப்போம். இப்படிப்பட்ட இந்த உள்ளத்தை நபிகளார் அவர்கள் சிறகிற்கு உதாரணமாக்குகிறார்கள்.

அபு மூஸா அல்அஸ்அரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்த உள்ளம் பாலைவனத்திலுள்ள சிறகைப் போன்றதாகும். காற்று அதை புரட்டிப் போடுகிறது என்று நபி (ஸல்) கூறினார்கள்.

நூல்: ஹாக்கிம்

இந்த உள்ளத்தின் எண்ணங்களை நாம் புரட்டவில்லை. நம்மை ஆளுகின்ற அந்த ரஹ்மான் தான் புரட்டுகிறான். இதையும் நபிகளார் அவர்கள் கூறினார்கள்.

அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘உள்ளங்களைப்  புரட்டக் கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தில் நிலைபடுத்துவாயாகஎன்ற பிராத்தனையை அதிகம் செய்பவர்களாக இருந்தார்கள். அப்போது நான், ‘அல்லாஹ்வின் தூதரே! உங்களை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். நீங்கள் கொண்டு வந்த ஒன்றையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இப்போது எங்கள் மீது நீங்கள் அஞ்சுகிறீர்களா-?’ என்றேன். அதற்கு நபியவர்கள், ‘ஆம். உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கு மத்தியில் இருக்கிறது. அவன் நாடிய விதத்தில் அதை திருப்புவான்என்றார்கள்.

நூல்: திர்மிதி 2140

இதுபோல் நபிகளாருடைய சொற்களை நாம் சிந்தித்துப் பார்த்தால் பல்வேறு விதமான விளக்கங்களையும் தகவலையும் நம்மால் பெற முடியும். அது போன்ற சூழலை நம் அனைவருக்கும் இறைவன் ஏற்படுத்துவானாக!

—————————————————————————————————————————————————————————————

 

இறுதி முடிவு இனிதாகட்டும்!

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்

நம்முடைய அமல்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஏராளமான போதனைகள் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்துச் செயல்படும் போது மட்டுமே மறுமையில் முழுமையான வெற்றிபெற முடியும். ஆகையால், அது தொடர்பான ஒரு முக்கிய போதனையை இப்போது அறிய இருக்கிறோம்.

பொதுவாக மார்க்க ரீதியாக எந்தக் காரியத்தைச் செய்தாலும் குர்ஆன், ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செய்ய வேண்டும். ஆரம்பிக்கும் விதம் மட்டுமல்லாது முடிக்கும் விதமும் சரியாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றனஎன்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி (6493)

ஒரு செயலுக்குக் கூலி கிடைக்குமா, இல்லையா என்பதெல்லாம் அச்செயலின் முடிவைப் பொறுத்தே அமையும். இந்த அடிப்படை தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற முக்கிய கடமைகளுக்கும் பொருந்தும்; அற்பமாகக் கருதப்படுகின்ற சிறு காரியங்களுக்கும் பொருந்தும்.

இந்த அறிவுரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நல்லறங்கள் செய்யும் போதெல்லாம் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று. இதை ஒரு முக்கியமான சம்பவத்தின் போது நபிகளார் எடுத்துச் சொன்னார்கள்.

(கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தானவராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்என்று கூறினார்கள்.

(அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். அந்த மனிதரோ (எதிரிகளுடன்) போராடிக் கொண்டு இருந்தார்.

இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றனஎன்றார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 6493, 6607

இஸ்லாத்தின் மிகச்சிறந்த செயல்களுள் ஒன்று அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது ஆகும். இது மிகப்பெரும் அறச்செயல். அச்சீரிய செயலின் முடிவு தவறாகிப் போனதால் அதன் நன்மையை அவர் இழக்க வேண்டியதாகி விட்டது.

இன்னும் சொல்வதாயின், இந்த எச்சரிக்கை ஒரு குறிப்பிட்ட அமலுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் பொருந்தும். ஒருவர் இறக்கும் போது மார்க்கத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும். இல்லாவிடின் மறுமையிலே மோசமான நிலையில் மாட்டிக் கொள்வார்.

நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் அடியாரும், தாம் இறக்கும் போதிருந்த (மன) நிலையிலேயே எழுப்பப்படுவார்’’ என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5518

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால், “உங்களில் ஒருவர் அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாமல் மரணிக்க வேண்டாம்’’ என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (5517)

ஒருவர் இறைமறுப்பான அல்லது இணை வைப்பான நம்பிக்கையிலோ, செயலிலோ இருந்து பாவமன்னிப்புக் கோராமல் இறந்துவிட்டால் அவருக்குரிய தண்டனை நிரந்தர நரகமே! அவர் தமது வாழ்நாள் முழுவதும் எத்தனை நல்லறங்களைச் செய்திருந்தாலும் அவை அனைத்தும் வீணாகிவிடும். இது குறித்துப் பல்வேறு விதங்களில் நபிகளார் நமக்கு போதித்து இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இதில் அலட்சியமாக இருந்தால், சத்தியத்தைத் தெரிந்திருந்தும் கூட வழிகேட்டில் விழுந்துவிடக் கூடும். இவ்வாறு அன்று முதல் இன்று வரை பலரும் தடம் புரண்டு இருக்கிறார்கள்.

எந்த ஷைத்தானை விட்டும் பாதுகாக்குமாறு படைத்தவனிடம் மன்றாடுகிறோமோ அந்த இப்லீஸ் ஒரு காலத்தில் உயரிய அந்தஸ்தில் இருந்தவன் தான். ஜின் இனத்தைச் சேர்ந்த அவனுக்கு மலக்குமார்களுக்கு இணையான மதிப்பு இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியாமல் சாபத்தைப் பெற்றுக் கொண்டான்.

இதே போன்று, மூஸா நபி செய்த அற்புதங்களை நேரிடையாகப் பார்த்துத் திருந்திய மக்களுள் சாமிரியும் ஒருவன். ஆரம்பத்தில் சத்தியத்தில் இருந்தவன், காளைக் கன்றைக் கடவுளாக நினைத்து தானும் கெட்டு, பிறரையும் வழிகெடுத்தான்.

இப்படி சத்தியம் கிடைத்தும் தங்களைக் கெடுத்துக் கொள்வோர் நபிகளாரின் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இன்றும் பலர் இருக்கவே செய்கிறார்கள். இந்த இழிவான நிலை ஒருபோதும் நமக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.

எங்களில் பனுந்நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) அல்பகரா, ஆலுஇம்ரான் ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய், வேதக்காரர்களுடன் சேர்ந்து கொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இவர் முஹம்மதுக்காக எழுதி வந்தார்என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர். இதே நிலையில், (ஒருநாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்து விட்டனர். காலை நேரமான போது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்து விட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்து விட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்து விட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 5366

மேற்கண்ட நிகழ்வில் இருக்கும் நபர், நபிகளாரின் எழுத்தர்களில் ஒருவராக இருந்தும் கூட அவரின் மறுமை வாழ்க்கை பாழாகிவிட்டது. காரணம், அவர் இறக்கும் போது மார்க்கத்தின் வரம்புக்குள் இல்லை என்பதுதான். ஆகையால்தான் அருள்மறைக் குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு ஆணையிடுகிறான்.

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்.

திருக்குர்ஆன் 3:102

என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.

திருக்குர்ஆன் 2:132

நாம் வாழும்போது சரியாக இருந்தால் மட்டும் போதாது. மரணிக்கும் போதும் முழுமையான முஸ்லிமாக இருப்பது கட்டாயம். இந்த பாக்கியத்தைக் கொடுக்கும்படி வல்ல ரஹ்மானிடம் அடிக்கடி கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல் குர்ஆன் கூறும் நல்லடியார்களின் வாழ்வில் நமக்கு இருக்கிறது.

என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!’’

(திருக்குர்ஆன் 12:101)

‘‘எங்களின் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவா எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று பிர்அவ்னிடம் கூறிவிட்டு), எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக!’’ என்று  கூறினர்.

(திருக்குர்ஆன் 7:126)

இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இம்மை வாழ்வின் அவகாசம் அனைவருக்கும் ஒரே மாதிரி அளிக்கப்படவில்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாழ்க்கைக் கெடு முடிந்து விடலாம் என்பதை நினைவில் கொண்டு எப்போதும் சத்தியத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

‘‘இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன்பாக விரைந்து (நற்)செயல்கள் புரிந்து கொள்ளுங்கள். (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறை மறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்’’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (186)

கடமைகளை, நற்காரியங்களைச் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. தீமைகளைத் தூக்கி எறிய தயக்கம் கூடாது. அப்போதுதான் எந்நேரத்தில் மரணம் வந்தாலும் மறுமை வெற்றிக்குத் தகுதியான நிலையில் நாம் இருக்க இயலும்.

‘‘ஒரு மனிதர் நீண்ட காலம் சொக்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து கொண்டே வருவார். பிறகு அவரது செயல் நரகவாசிகளின் செயலாக முடிக்கப்படும். ஒரு மனிதர் நீண்ட காலம் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்து கொண்டே வருவார். பிறகு அவரது செயல் சொர்க்கவாசிகளின் செயலாக முடிக்கப்படும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5155

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (40 நாள்கள்) அந்தக் கரு ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு), அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்.

இதனால் தான் அல்லாஹ்வின் மீதாணையாக! ‘உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே ‘விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு’ அல்லது ‘ஒரு முழம்’ இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்து விடுவார்.

(இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே ஒரு முழம்அல்லது இரண்டு முழங்கள்இடைவெளி தான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)

நூல்: புகாரி (6594) (5145)

இளமையில் சரியாக இருந்து விட்டு முதுமையில் அலட்சியமாக இருப்பவர்கள் உண்டு. திருமணத்திற்குப் பிறகு சரியாக இருந்து கொள்ளலாம் என்று வாலிப வயதில் கண்மூடித்தனமாக வாழ்பவர்கள் உண்டு. இவ்வாறு இல்லாமல், எல்லாக் கட்டத்திலும் சரியாக இருக்க வேண்டும்.

மேலும், உலகை வாழ்வை விட்டுப் பிரியும் போது இஸ்லாத்தில் சரிவர இருக்க வேண்டுமென விரும்புவோருக்குச் சில வழிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கசுத்தி (உளூ) செய்வது போன்று அங்கசுத்தி செய்து கொள். பிறகு உன் வலப்பக்கத்தின் மீது சாய்ந்து படு. பிறகு,

அல்லாஹும்ம அஸ்லம்த்து நஃப்ஸீ இலைக்க. வ ஃபவ்வளத்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க. ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த

என்று ஓதிக்கொள். (பொருள்: இறைவா! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும், நீ அனுப்பி வைத்த உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.

(இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவனாவாய். இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக் கொள்.

நான் இவற்றைத் திரும்ப ஓதிக் காட்டுகிறேன்என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு ஓதிக் காட்டலானேன். (நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்என்பதற்கு பதிலாக) நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்என்று நான் சொல்லி விட்டேன். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை; ‘நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்என்று சொல்என (எனக்குத் திருத்தி)ச் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி  (247) (6311)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹும்ம! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூ உ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த

என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரலாகும்.

(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.)

இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறப்பவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகிறவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்.

அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி)

நூல்: புகாரி (6306)

மறுமையில் வெற்றி பெறும் வகையில் நமது வாழ்வின் முடிவு இருக்க வேண்டுமென்ற போதனையும் மேற்கண்ட செய்திகளில் உள்ளடங்கியுள்ளது. மேலும், இந்த பாக்கியம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென விரும்பும் போது செய்ய வேண்டியதை நபிகளார் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (1523)

உங்களில் மரணிக்க உள்ளவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசி பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். இதற்குமுன் அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியேஎன்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னு ஹிப்பான் 7/272

நபி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே அவனை நோய் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவனிடம் வந்தபோது, அவனது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள்!’’ என்றார்கள். உடனே அவன் தன்னருகில் இருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், “அபுல் காசிம் – நபி (ஸல்) அவர்களின் — கூற்றுக்குக் கட்டுப்படு!’’ என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். உடனே நபி (ஸல்) அவர்கள், “இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்’’ எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (1356)

(நபியவர்களின் பெரிய தந்தை) அபூதாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூஜஹ்ல் பின் ஹிஷாம், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூதாலிபிடம், “எனது பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனச் சொல்லி விடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சியம் கூறுவேன்’’ எனக் கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், ‘‘அபூதாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகின்றீரா?’’ எனக் கேட்டனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமுமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூதாலிப் கடைசியாக, “நான் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே (மரணிக்கின்றேன்)’’ என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ்’  எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்’’ என்று கூறினார்கள். அப்போது இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதன்று’’ எனும் (9:13ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: முசய்யப் (ரலி)

நூல்: புகாரி (1360)

பிறர் வாழ்வில் அக்கறை செலுத்தும் நாம், நமது வாழ்வின் முடிவும் இனிதாக இருக்க என்றென்றும் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். மறுமை வெற்றியைப் பாழடித்துக் கொள்ளாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

குறிப்பாக, குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கமெனத் தெரிந்திருந்தும் பிறருடைய விமர்சனங்களுக்குப் பயந்து அதன்படி நடக்கத் தயங்குபவர்கள், உலக ஆதாயங்களை அடைவதற்காக அடிக்கடி கொள்கையை மாற்றிக் கொண்டு தவறான கொள்கைகளில் தஞ்சம் புகுபவர்கள், பிறரிடம் பேரும் புகழும் பெறுவதற்காக வழிகெட்ட காரியங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் இனியாவது தங்களை மாற்றிக் கொள்ளட்டும்.

எனவே, கொள்கைச் சொந்தங்களே! ஏகத்துவக் கொள்கையில் கொஞ்சமும் வளைந்து கொடுக்காமல் இறுதி மூச்சு வரை உறுதியாக இருப்போமாக! எப்போதும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்னவாறு தூய முறையில் வாழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

—————————————————————————————————————————————————————————————

குடும்பவியல்          தொடர்  – 43

கொஞ்சி விளையாடி…

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

சம்பாதிக்கின்ற இடங்களில் ஆண்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் நிம்மதி குலைந்து விடுகிறது.

வெளியில் பலவிதமான சூழ்நிலையில் உள்ள கணவன், வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாகலாம், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் வெளியிட தாக்கம் குறைந்து மனது இலகுவாகிவிடும் என்று நினைத்து வந்தால், வந்தவுடனே சண்டையென்றால் வீட்டிலும் நிம்மதியை இழக்கிறான் ஒரு ஆண். இதனால் அவனது இரவுத் தூக்கம் கலைந்துவிடும். நியாயத்தைக் கூட பேசமுடியாத நிற்கதியான நிலையில் தள்ளப்படுகிற ஆண்களின் பரிதாபத்தைப் பார்க்கிறோம்.

நியாயத்தைப் பேசும்போது கூட, மனைவி வந்ததும் அவளுக்கு வக்காலத்து வாங்கிப் பேசுகிறாயா? என்று அம்மா கேட்பாள். இதனால் மனைவி செய்கிற அநியாயத்திற்கும் தாய் செய்கிற அநியாயத்திற்கும் தலையாட்டுகிறவனாக வாழ்கிற இழிநிலையைப் பார்க்கிறோம்.

தாய் தந்தையுடன் வாழ்கிற, திருமணம் முடித்த, 35 வயதுக்குட்பட்ட ஆண்களிடத்தில் கேட்டுப் பார்த்தால், அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாமியார் மருமகள் பஞ்சாயத்தில்தான் கழிகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இப்படியான சூழ்நிலையில் வாழ்கிற ஆண்கள் தொழில் செய்வதில் திருப்திப்பட மாட்டார்கள்; நிம்மதிக்காகவே ஏங்குவார்கள்; வியாபாரத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். இவர்களில் சிலர் தவறான பாலியல் உறவுகளுக்குக் கூட ஆளாகி விடுகிறார்கள். அல்லது போதை போன்ற தவறான பழக்க வழக்கங்களுக்குள் சிக்குண்டு விடுகிறார்கள்.

எனவே மாமியார் மருமகள் என்ற இரு நிலை, ஒவ்வொரு பெண்களுக்கும் கிடைக்கிறது. மருமகள் அவளது பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அதேபோன்று மாமியார் என்ற பொறுப்பை சுமப்பவர்களும் தங்களின் பொறுப்புணர்நது செயல்பட வேண்டும்.

ஆனால் இதில் பெரும்பாலும் மாமனார் கொடுமை கிடையாது. நமது மனைவிதான் மருமகளைக் கொடுமைப்படுத்துகிறாள் என்று உணர்ந்து வாழ்கிற மாமனார்கள் தான் அதிகம். அப்படியெனில் பெண்களின் இந்தக் குணம் தவறு என்பது தெளிவாக விளங்குகிறது. எனவே மாமியார்கள் தங்களது மருமகளை, தனது மகளைப் போன்று கவனித்துப் பாதுகாத்திட வேண்டும்.

அடுத்ததாக, குடும்பத்திலுள்ள ஆண்கள் மிஷின் மாதிரி செயல்பட்டு, எந்திரத்தைப் போன்று இறுக்கமாக வாழக் கூடாது. மாறாக, பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுவது, மனைவியிடம் சந்தோஷமாக இருப்பது, கேலி செய்து கொள்வது போன்ற காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாகவே இருக்கிறது.

ஏனெனில் வீட்டிற்கு வெளியே அலுவலகப் பணியில், வியாபாரத்தில் மிஷின் வாழ்க்கையாக வாழ்கிறோம். அதில் ஏற்பட்ட சோர்வு, வீட்டிற்குள் வந்து கலகலப்பாக இருக்கும் போது, விளையாட்டாக இருக்கும் போது தீர்ந்துவிடுகிறது. மனதாலும், உடலாலும் புத்துணர்வு பெற்று விடுகிறோம். இப்படியெல்லாம் இருந்தால்தான் இல்லற வாழ்க்கை இனிக்கும். இதையெல்லாம் மார்க்கம் கவனித்து வழிநடத்துகிறது.

எந்தளவுக்கு எனில் ஆண்கள் தங்களது நண்பர்களிடம் எவ்வாறெல்லாம் கேலி, கிண்டல் செய்து கொள்வார்களோ, எப்படியெல்லாம் சிரிப்பூட்டி விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வார்களோ அதுபோன்று கணவன் மனைவி தம்பதிகளும் தங்களுக்கிடையில் சிரிப்பை ஊட்டிக் கொள்வதை மார்க்கம் வலியுறுத்துவதை நபிவழியில் பார்க்கிறோம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்து விட்டார்கள். (இறக்கும்போது) ஏழு பெண் குழந்தைகளைஅல்லது ஒன்பது பெண் குழந்தைகளைவிட்டுச் சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மண முடித்துக் கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “ஜாபிரே! நீ மணமுடித்துக் கொண்டாயா?’’ என்று கேட்டார்கள். நான் ஆம்என்று சொன்னேன். அவர்கள், “கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?’’ என்று கேட்டார்கள். நான், “இல்லைகன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)’’ என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் சிரிப்பூட்டி மகிழ்ந்து கொள்ளலாமே!’’ என்று சொன்னார்கள்….

நூல்: புகாரி 5367,6387

ஆக தேவையான நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும், வீட்டிற்குள் குடும்பத் தலைவர் கலகலப்பாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்’’ என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்‘’ என்று சொன்னேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்‘’ என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்’’ என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்’’ என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்’’ என்று மூன்று முறை கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5035,5036

ஆக இதுபோன்ற ஆதாரங்கள் கணவன் மனைவி தங்களுக்கிடையில் குதூகலமாகவும் சிரிப்பூட்டியும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விளங்கமுடிகிறது. இந்த நபிவழியைப் பேணுவதற்கு மாப்பிள்ளையின் தாயாரான மாமியாரும் தடையாக இருந்துவிடக் கூடாது. மாறாக இப்படியெல்லாம் இருந்தால்தான் நமது மகனுக்கும் நமது மருமகளுக்கும் இடையில் நல்ல இணக்கம் ஏற்படும். அதனால் இந்தக் குடும்பம் தழைத்தோங்கும் என்று நினைத்து மாமியார்கள் செயல்பட வேண்டும்.

இதையெல்லாம் சொல்லக் காரணம், ஓர் ஆண் வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தால், அவனது மன உளைச்சல்கள், கோபதாபங்கள், மனச் சங்கடங்கள் அவமானங்கள் அத்தனையும் மனைவியின் நெருக்கத்தால், விளையாட்டால், சிரிப்பூட்டுதலால் களையப்பட வேண்டும். வீட்டிற்குள் வந்தால் நிம்மதியை ஆண்கள் அடையும் விதத்தில் மனைவியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் நடந்து கொள்ள வேண்டும். இதுவெல்லாம் இஸ்லாமியக் குடும்பத்தின் ஒழுங்குமுறையாகும். ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக நடப்பதே முக்கியம்.

தபூக் அல்லது கைபர் யுத்தம் முடிந்து நபியவர்கள் (வீட்டிற்கு) வந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் அலமாரியில் திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது காற்றடித்து அத்திரையின் ஒரு பகுதி விலகி ஆயிஷா அவர்களின் விளையாட்டுப் பொம்மைகள் (பிள்ளைகள்) வெளியில் தெரிந்தது. அப்போது நபியவர்கள், ‘‘ஆயிஷாவே இது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எனது பொம்மைகள் (பிள்ளைகள்)’’ என்று கூறினார்.

அவைகளுக்கிடையில் நபியவர்கள் இரண்டு இறக்கையுள்ள குதிரையைக் கண்டார்கள். அப்போது நயிவர்கள், ‘‘நடுவில் இருக்கிற இது என்ன?’’ என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி), குதிரை என்றார்கள். ‘‘அதற்கு மேலிருப்பது என்ன?’’ என்று கேட்டதற்கு, இறக்கை என்று பதிலளித்தார்கள். உடனே நபியவர்கள் ‘‘குதிரைக்கு இறக்கைகள் இருக்குமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘சுலைமான் நபியவர்கள் வைத்திருந்த குதிரைகளுக்கு இறக்கை இருந்தது என்பதைக் கேள்விப்பட்டதில்லையா?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதனைக் கேட்ட நபியவர்கள், அவர்களது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 4284

இந்தச் செய்தியில் குதிரைக்கு இறக்கை இருக்கவா செய்யும்? என்று நபியவர்கள் கேட்டதற்கு, சுலைமான் நபியவர்களின் குதிரைக்கு இருந்ததாக அவர்கள் கேள்விப்பட்டதைப் பதிலாகச் சொன்னதை ரசித்ததினால் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்.

வீட்டிலுள்ள பெண்கள் அவர்களுக்குப் பிடித்த வகையில் பொருட்களை வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் பெரிதாக ஆண்கள் கண்டு கொள்ளக் கூடாது. சில பெண்கள் பல்லாங்குழி வைத்திருப்பார்கள். பொம்கைள் வைத்திருப்பார்கள். கொண்டைக்கு அணிகிற பல வகையான சாமான்களை வைத்திருப்பார்கள். இது பெண்களுக்கான தனி உலகம். அப்படி மனைவிமார்கள் சின்னச் சின்ன விஷயத்தில் ஈடுபாட்டுடன் இருந்தால், அதை நாம் கலங்கப்படுத்திவிடாமல் ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஊக்குவிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஊனப்படுத்தாமலாவது நடந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பலர், ‘கல்யாணம் முடித்துப் பிள்ளை குட்டியெல்லாம் பெற்றுவிட்டாய். ஏழு கழுதை வயதாகிவிட்டது. இன்னும் பல்லாங்குழி விளையாட்டு கேட்குதா? பொம்மையை வைத்து விளையாடுகிறாயே? அறிவில்லையா? அப்படியா? இப்படியா?’ என்றெல்லாம் மனைவியின் சிற்சில சந்தோஷத்தையெல்லாம் கண்டிக்கிறேன் என்ற பெயரில் கலங்கடித்து விடுவதைப் பார்க்கிறோம்.

இன்றைய சமூகக் கட்டமைப்பில் மாமியார்கள் இதையெல்லாம் ஏற்கத் தயாராக இருக்கிறார்களா? இல்லை. ஆனால் பெண்ணின் இதுபோன்ற விளையாட்டுத்தனங்களை சட்டை செய்யாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டால், அதுவே இஸ்லாமியக் குடும்பம்.

இந்தச் செய்தியில் தபூக், கைபர் என்று வருவதைப் பார்க்கும் போது, இதுவெல்லாம் ஆயிஷா (ரலி) திருமணம் முடித்து, இல்லறக் கடமையை நிறைவேற்றி, ஹதீஸ்களை விளங்கி பிறருக்கு அறிவிக்கிற பக்குவமான, பெரிய, குடும்பப் பெண்ணாக இருக்கும் போதுதான் ஆயிஷா (ரலி) அவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதாகப் புரிய முடிகிறது.

அப்படியெனில் இதுபோன்று நாமும் எல்லாவற்றையும் கவனித்து, மனைவியின் விருப்பங்களில் விட்டுக் கொடுத்துப் போனால் குடும்ப உறவு இனிமையானதாக அமையும். குதூகலம் குறையாமல் வாழமுடியும்.

—————————————————————————————————————————————————————————————

திருநபி திருவிழாவா? கிறிஸ்துமஸ் திருவிழாவா?

M.A. அப்துர்ரஹ்மான்

இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, அதில் மனிதர்களைப் பரவச் செய்திருக்கின்றான். இறைவன் படைத்த கோடான கோடி மக்களில் ஒரு சில குறிப்பிட்ட சாராரை மாத்திரம் தேர்வு செய்து இஸ்லாம் என்னும் மகத்தான பேரருட்கொடையை வழங்கியிருக்கின்றான்.

இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்களாக வாழ்கின்ற நம்மில் பெரும்பாலானோர் இறைவனும், இறைத்தூதரும் காட்டித் தந்ததன் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் முன்னோர்கள், கட்டுக்கதைகள், மார்க்கத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத பிறமதக் கலாச்சாரங்கள், இதுபோன்ற பல்வேறு விதமான செயல்பாடுகளை இஸ்லாம் என்னும் பெயரால் இஸ்லாமிய மார்க்கத்திலே புகுத்தி விட்டதைப் பார்க்கின்றோம்.

இந்தக் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகளில் ஒன்று தான் ரபியுல் அவ்வல் மாதம் திருநபி பிறந்த நாள் விழா என்ற பெயரால் அதிகமான ஊர்களில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்ற திருவிழா.

இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஒரு சில ஆலிம்களின் தவறான வழிநடத்தலினால், கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை எவ்வாறு கிறிஸ்துமஸ் திருவிழாவாக, கோலாகலமாகக் கொண்டாடுவார்களோ அதுபோன்று நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் என்று கூறிக் கொண்டு, திருநபி திருவிழா அதாவது மீலாதுவிழா ஜகஜோதியாகக் கொண்டாடப்படுகின்றது.

இதன் மூலம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற கிருஸ்துமஸ் திருவிழாவுக்கும், ஆதாரமில்லாமல் கொண்டாடுகின்ற மீலாது திருவிழாவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

கிறிஸ்தவர்களுக்கு ஒப்பானவர்கள்

ரபியுல் அவ்வல் மாதத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்றால், இந்த மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் பிறந்துள்ளார்கள். நபி பிறந்த மாதம் அருள் பொங்கும் மாதம், கண்ணியம் நிறைந்த மாதம், கஷ்டங்களை நீக்கும் மாதம், அகிலத்திற்கு ஒளியூட்டும் மாதம் என்றெல்லாம் கூறி முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். நல்லமல்கள் செய்கின்றோம் என்ற பெயரால் நரகத்திற்கு அழைத்துச் செல்கின்ற அமல்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ரபியுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தது உண்மைதான். ஆனால் இவர்கள் நம்புவது போல் இந்த மாதத்திற்கு என்று தனிச்சிறப்புகள் இருக்கின்றது என்றோ, விழாக் கொண்டாட வேண்டும் என்றோ, பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் ஓத வேண்டும் என்றோ இறைவனும், இறைத்தூதரும் நமக்குக் காட்டித் தரவில்லை.

ஆனால் இன்றைக்கு சர்வசாதாரணமாக, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் திருவிழாவுக்காக தங்களுடைய ஆலயங்களை அலங்கரிப்பது போல், அவர்களை விட வெகு விமரிசையாக ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் மீலாதுவிழா என்ற பெயரால் பள்ளிவாசல்களை அலங்கரிப்பதைப் பார்க்கின்றோம். அப்பட்டமாக பிறமதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி இறைவனின் கட்டளையை மீறுவதைப் பார்க்கின்றோம்.

யார் பிறமதக் கலாச்சாரத்தைக் காப்பி அடித்து அப்படியே பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அந்த மதத்தைச் சார்ந்தவர்களே! என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்று கின்றார்களோ அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள்.

நூல்: அபூதாவூத் 4033

இன்னும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மரணத்தை நெருங்கிய இறுதிக் கட்டத்தில், மக்கள் எச்சரிக்கை உணர்வோடும், மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று அறிவுரை பகர்ந்த செய்தி வரம்பு மீறி புகழ்வதைப் பற்றித் தான்.

கிறிஸ்தவர்கள் தங்களுக்கு தூதராக அனுப்பப் பட்ட ஈஸா (அலை) அவர்களை வரம்புமீறிப் புகழ்ந்து கடவுளின் அந்தஸ்திற்குக் கொண்டுபோய் சேர்த்தார்களோ அதுபோன்று என்னையும் வரம்பு மீறிப் புகழ்ந்து அழிந்து போய்விடாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) அல்லாஹ்வின் அடியார்என்றும் அல்லாஹ்வின் தூதர்என்றும் சொல்லுங்கள் என்று கூறினார்கள்’’ என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல்: புகாரி 3445

ஆனால் இன்றைக்கு மவ்லூது என்ற பெயரால் நபிகள் நாயகத்தைப் புகழ்கின்றோம் என்று கூறிக்கொண்டு, நபி (ஸல்) அவர்கள் தன்னை எப்படிப் புகழ வேண்டும் என்று கற்றுத் தந்தார்களோ அப்படிப்பட்ட வரம்புகளையெல்லாம் மீறி, இறைவனின் ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி, வரம்பு மீறிப் புகழ்ந்து நாங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஒப்பானவர்கள் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நபியை நேசிக்கின்றார்களா?

ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாதுவிழா ஏன் கொண்டாடுகின்றீர்கள்? என்று கேட்டால் நாங்கள் நபியைப் புகழத்தான் செய்கின்றோம். புகழ்வது தவறா? நேசிப்பது தவறா? என்று கேட்டுத் தங்களுடைய அறியாமையை வெளிப்படுத்துகின்றார்கள்.

நபியை எவ்வாறு புகழ வேண்டுமோ, நேசிக்க வேண்டுமோ அந்த அடிப்படையில் இறைவனும், இறைத்தூதரும் காட்டித் தந்தவாறு நம்முடைய நேசத்தையும், புகழையும் அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, நம்முடைய மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு மனம் போன போக்கிலே செயல்படுவது நம்மை நரகநெருப்பிலே கொண்டுபோய் விழச் செய்யும் என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு வாழ்வதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதைப் பற்றி இறைவனும், இறைத்தூதரும் நமக்கு அற்புதமான முறையில் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

‘‘நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (நம்பக் கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போரை தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

அல்குர்ஆன் 58:22

இதுபோன்ற ஏராளமான அறிவுரைகளின் மூலம் இறைத்தூதரை நேசிக்கும் வழிமுறையை அல்லாஹ் கற்றுத் தந்திருக்கின்றான்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘‘உங்களில் ஒருவருக்கு அவருடைய  தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 15

ஆனால் இன்றைக்குக் கண்ணியப்படுத்துகிறோம் என்ற பெயரால் நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி, அவர்களின் கண்ணியத்தைக் குழிதோண்டி புதைப்பதைப் பார்க்கின்றோம்.

கேடுகெட்டக் கவிதைகள்

நபி (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு கேடுகெட்ட, கேவலமான, அருவருக்கத்தக்க கவிதை வரிகளை மவ்லூது என்ற பெயரால் கடுகளவு கூட இறையச்சம் இல்லாமல் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் வைத்து கும்மாளமடிப்பதைப் பார்க்கின்றோம்.

நபி (ஸல்) அவர்களை அளவு கடந்து, வரம்பு மீறிப் புகழ்வதினால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனின் ஆற்றலைக் கொடுத்து இணை வைப்பின் உச்சத்திற்கே சென்று விடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கஷ்டத்தைப் போக்குவார்கள்; மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு உண்டு; பாவத்தை மன்னிப்பார்கள் என்றெல்லாம் கூறி இதுபோன்ற ஏராளமான இணைவைப்பு வரிகளை மவ்லூது என்ற பெயரால் ஓதி வருகின்றார்கள்.

இன்னும் ஒருபடி மேலாக, அல்லாஹ்வின் பள்ளி வாசல்களில் வைத்து இறைவன் அல்லாதவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆற்றலை வழங்குவதைப் பார்க்கின்றோம். இறைவனின் ஆலயங்களில் இறைவனை மட்டுமே அழைக்க வேண்டும் என்று அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கை செய்திருக்க இறைவனின் கட்டளையைப் பேணாமல் அறியாமையை வெளிப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

அல்குர்ஆன் 72:18

மவ்லூது எனும் கேடுகெட்ட கலாச்சாரத்தை இஸ்லாமியர்களிடத்தில் புகுத்தியது ஹிஜ்ரி 4ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான்.

மவ்லூது வரிகளின் அர்த்தம் தெரிந்த எவரும் அதை நெருப்பிலிட்டுப் பொசுக்காமல் விட மாட்டார் என்று சொல்லும் அளவுக்கு அப்பட்டமாக இறைவனுக்கு இணைவைக்கின்ற மந்திரங்கள் மவ்லூது நெடுகிலும் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கின்றோம்.

அவற்றில் ஒரு சில…

நரக நெருப்பின் ஜுவாலையினாலும், அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களைக் காப்பாற்றுவது நீங்களே ஆவீர்!

எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்களுக்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.

வழிகாட்டப்பட்டவரும், வாட்டும் நரக நெருப்பி லிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி (ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.

நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.

எனக்கு காரணங்கள் (உபாயங்கள்) நெருக்கடியாகி விட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தைத் தேடுகின்றேன்.

என் வறுமை, என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்து விட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.

கருணை மிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.

இதுபோன்ற ஏராளமான வாசகங்கள் நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தைக் குலைத்து, இறைவனின் தகுதிகளை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து, நரகத்தின் நெருப்புக் கங்கை தங்களின் நாவுகளினால் மொழிந்து கொண்டிருக்கின்றார்கள்.

திருக்குர்ஆன் மூலம் பாடம் நடத்த வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணத்திற்கு நேர் எதிராக இந்த மவ்லூது வரிகள் இருக்கின்றன. அற்பக் காசுக்கு ஆசைப்பட்டு மார்க்கத்தைக் குழிதோண்டி புதைக்கின்ற வேலை மதகுருமார்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

அல்லாஹ்வின் எச்சரிக்கை

ரபியுல் அவ்வல் மாதத்தில் ஒவ்வொரு ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் மக்களிடத்தில் வரிப்பணம் வசூல் செய்து ஊர் முழுக்க விருந்து போடுகின்றார்கள். பல ஆயிரங்கள் செலவு செய்து பள்ளிவாசல்களை அலங்காரம் செய்து,  பூமாலை போடுவது, விளக்குகளால் அலங்கரிப்பது, வீண் செலவுகள் செய்வது இதுபோன்ற பல்வேறு பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த உலகத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் கட்டாயமாக அல்லாஹ்வுக்கும், இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத, புதிதாக ஒரு செயலை மார்க்கத்தில் உண்டாக்கினால் அதுவும் கொடுஞ்செயலாகும் என்று இஸ்லாம் நமக்கு வழிகாட்டித் தருகின்றது.

‘‘அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 3:32

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 5:92

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் 8:20

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்!

அல்குர்ஆன் 47:33

மேலும்,  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிடுபவனையும் அல்லாஹ் சபித்து விட்டான். பித்அத் செய்பவனையும், மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துபவனுக்கு அடைக்கலம் அளிப்பவனையும் அல்லாஹ் சபித்து விட்டான்.

நூல்: முஸ்லிம் 3657

மார்க்கத்தில் புதிதாக வணக்கங்களை ஏற்படுத்துபவர்களை அல்லாஹ் சபிக்கின்றான். மவ்லூது என்பது மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் மவ்லூதை நமக்குக் கற்றுத் தரவில்லை.

மீலாது – மவ்லூதுக்கும், இஸ்லாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை விளங்கி யூதர்களின் சதிவலைகளிலிருந்து விலகி வாழ்வோமாக!