ஏகத்துவம் – டிசம்பர் 2013

தலையங்கம்

எண்ணிக்கைக்கு அல்ல! இறைஉதவி ஏகத்துவத்திற்கே!.

தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை வேர் பிடிக்கத் துவங்கியது முதல் விழுது விட்டுக் கொண்டிருக்கின்ற இக்காலம் வரை அசத்தியவாதிகள் அதை வீழ்த்தவும், வேரறுக்கவும் பல்வேறு முயற்சிகளைச் செய்து கொண்டேயிருக்கின்றனர். தனியாகவும் அணியாகவும் பல்வேறு கட்டங்களில், பல பரிமாணங்களில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த முயற்சிகளில் ஒன்று தான் மத்ஹபு மாநாடுகள். அன்று இந்த மாநாடுகள் மறைந்த கலீல் ரஹ்மான் ரியாஜி, கலீல் அஹ்மது கீரனூரி போன்றோர் தலைமையில் நடந்தன.

ஏகத்துவவாதிகளுக்கு எதிராக மக்களை ஏவி விடுகின்ற வேலைகளை இந்த மாநாடுகளில் ஆலிம்கள் செய்து வந்தனர். ஏகத்துவவாதிகளை இடம் தெரியாமல் அழித்து விடுகின்றோம் என்று இறுமாப்புடன் எக்காளமிட்டனர்.

இதற்குத் தக்க ஒரு சில ஊர் நிர்வாகங்கள் இந்த சத்திய மரத்தின் வேர்களில் கோடரிகளைப் பாய்ச்ச முனைந்தனர்; காட்டுத் தர்பார்களை நடத்தினர்; காட்டுமிராண்டித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.

இதன் விளைவாக அல்லாஹ்வின் பள்ளியில் தொழவிடாமல் ஏகத்துவவாதிகளை அடித்து விரட்டினர். ஊர் நீக்கம் செய்தனர். ஜனாஸாவை அடக்க விடாமல் சர்வாதிகாரம் செய்தனர். திருமணப் பதிவேடு தர மறுத்தனர். ஏகத்துவப் பிரச்சாரத்திற்குத் தடை விதித்தனர்.

இந்த எதிர்ப்புகளில் ஒரு சிலர் அடங்கி, அமுங்கிப் போயினர். ஆனால் அதிகமான ஏகத்துவவாதிகள் எதிர்த்து நின்றனர். ஏகத்துவத்திற்காக மரணத்தைக் கூட ஏற்க அவர்கள் தயாராக இருந்தனர்.

உச்சக்கட்டமாக ஒவ்வொரு ஏகத்துவவாதியும் உயிர் அர்ப்பணிப்பை இலக்காகவும் லட்சியமாகவும் கொண்டதால் இவர்களின் அடக்குமுறை அட்டகாசங்கள் எதுவும் அவனிடம் எடுபடவில்லை. அவனைப் பொறுத்த வரை இவை அனைத்தும் குறைந்தபட்ச நடவடிக்கைகளாகவே அமைந்தன.

அதனால் அவன் ஓர் இரும்புப் பாளமாக, எஃகுக் கோட்டையாக ஆடாமல் அசையாமல் இவற்றை எதிர் கொண்டான்; எதிர்த்து நின்றான். இதன் எதிர் விளைவு ஏகத்துவம் ஓங்கி வளர்ந்தது. ஊருக்கு ஊர் ஒரு தவ்ஹீதுவாதி என்றிருந்த நிலை மாறி, வீட்டுக்கு வீடு ஒருவர் என்றானது. ஏகத்துவவாதிகளின் எண்ணிக்கை எகிறியது. அல்லாஹ்வின் அருளால் ஏறிக் கொண்டேயிருக்கின்றது. இதுதான் உண்மை நிலை. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த உண்மை இவ்வளவு பளிச்சென்று வெளிச்சமான பிறகும் இந்த ஆலிம்கள் பொதுக்கூட்டம், மாநாடு என்று போட்டு ஏகத்துவத்திற்கு எதிராக மக்களை உசுப்பேற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்களது பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் பிசுபிசுத்து விடுகின்றன. கடந்த காலத்தில் மாநாடுகள் என்ற பெயரில் ஏகத்துவவாதிகளுக்கு எதிராக இவர்கள் வைத்த வத்திகள், வெடிகள் கொஞ்சம் கொஞ்சம் வேலை செய்தன. ஆனால் இப்போது அவை அப்படியே நைத்து, நாறிப் போய்விட்டன. ஆனால் இவர்கள் மாநாடு நடத்துவதை விடவில்லை.

கடந்த நவம்பர் 8ம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை எழும்பூர் இம்பீரியல் வளாகத்தில் ஒரு மாலை நேர மாநாடு நடந்துள்ளது. இதற்கு மத்ஹபு விளக்க மாநாடு என்று பெயர் வைத்துள்ளனர். வழக்கம் போல இந்த மாநாடும் பிசுபிசுத்த உசுப்பேற்றும் மாநாடு தான். மக்கள் செல்வாக்கு இல்லாமல் மண்டபத்தில் அடைபட்டுப் போன இந்த மாநாட்டைப் பற்றி தமிழகத்தில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை.

தப்லீக் வேடம் போட்டு, பரேலவிசம் பேசுகின்ற பொய்களின் சக்கரவர்த்தி ஸைபுத்தீன் ரஷாதி தான் இந்த மாநாட்டின் கதாநாயகன். கூடவே ஒரு சதீதுத்தீன் பாகவி! இந்த மாநாட்டில் தவ்ஹீதுக் கொள்கைக்கு எதிராக அத்தனை விஷத்தைக் கக்கியிருந்தார்கள். அத்துடன் தங்களது தலை கால் புரியாத ஆணவத்தையும் தலைக்கனத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

“இன்று தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஹல்லா ஜமாஅத் பள்ளிவாசல்கள் இருக்கின்றன. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் வீடுகளையும் கடைகளையும் வாடகைக்கு எடுத்து பள்ளிவாசல் எனப் பெயர் சூட்டி சுமார் 300 இடங்களில் நடத்துகிறார்கள். இந்த 300, பன்னிரெண்டாயிரத்தை அழித்துவிட முடியுமா?” என ஆணவத்தின் உச்சியிலிருந்து கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளிக்கின்றார்கள்.

நமது ஜமாஅத்திற்கு 650க்கும் மேற்பட்ட பள்ளிகள், மர்கஸ்கள் இருக்கின்றன. இதை முன்னூறு என்று சொல்லியிருக்கின்றார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். நம்முடைய மர்கஸ்கள் வாடகை வீடுகளிலும், கடை மாடிகளிலும் தான் இயங்குகின்றன. சொந்தக் கட்டிடங்களாக இருந்தாலும் அவையும்கூட அதன் முகடுகள் கீற்றுக் கூரைகளிலும், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளிலும் தான் அமைந்திருக்கின்றன. இதைத் தான் இவர்கள் கேலியும் கிண்டலும் செய்கின்றார்கள்.

மஸ்ஜிதுந்நபவீ ஆரம்பத்தில் இப்படித் தான் ஈச்ச மரக் கீற்றுகளில் வேயப்பட்டிருந்தது. வெறும் மணற்பரப்பைத் தரையாகக் கொண்டிருந்தது. சரியான வாயிற்கதவுகள் இல்லாத, நாய்கள் கூட உள்ளே வந்து செல்கின்ற அளவுக்குத் திறந்தவெளிப் பள்ளியாகத் தான் மஸ்ஜிதுந்நபவீ இருந்தது.

பத்ருக் களப் போராளிகளைப் புறப்படச் செய்து, ஏகத்துவ எதிரிகளைப் புறங்காணச் செய்தது கூரையால் வேயப்பட்ட இந்தக் குடிசைப் பள்ளி தான்.

வீராவேசத்தோடும் வெறித்தனத்தோடும் முஸ்லிம்களை வேரறுக்க வந்த எதிரிகளை, அதன் பெருந்தலைகளை, வேரறுந்த மரங்களாக, வெறும் பிணங்களாக பத்ரின் கலீப் எனும் பாழுங்கிணற்றில் வீசியெறியச் செய்தது, வீழச் செய்தது இந்தச் சிறு கூடாரம் தான்.

இந்த இரு அணிகளும் சந்திக்கும் போது, “யா அல்லாஹ்! உறவைத் துண்டித்து, தெரியாத புதுக் கருத்தைக் கொண்டு வந்தவரை (முஹம்மதை) அதிகாலையில் அழித்து விடு” என்று அபூஜஹ்ல் பிரார்த்தனை செய்தான். (நூல்: முஸ்னத் அஹ்மத் 2255)

ஆனால் அபூஜஹ்லை வீழச் செய்து, முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் அல்லாஹ் வாழச் செய்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. நம்பிக்கை கொண்டோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

அல்குர்ஆன் 8:19

மத்ஹபு மாநாட்டில் இவர்கள் நம்முடைய மர்கஸ்களைப் பற்றிக் குறிப்பிடும் எண்ணிக்கை 300 தான். இந்த எண்ணிக்கை பத்ருப் போராளிகளின் எண்ணிக்கையை ஒத்திருக்கின்றது. அந்த முன்னூற்றுச் சொச்சம் பேர் ஆயிரத்தை வென்றது போன்று இன்ஷா அல்லாஹ் ஏகத்துவப் படை இவர்களின் பன்னிரண்டாயிரத்தை வெல்லும். ஏனெனில் அல்லாஹ்வின் உதவி எண்ணிக்கைக்கு அல்ல! ஏகத்துவத்திற்குத் தான் என்று இந்த இறைவசனம் இயம்புகின்றது. இந்த ஆணவக்காரர்களுக்கு அல்லாஹ்வின் வசனத்தையே பதிலாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்  தொடர்: 8

நெருங்காதீர்!

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இன்று நம் குடும்பங்களிலுள்ள நிலையை ஆராய்ந்தால், எல்லோருமே விபச்சாரம் எனும் அசிங்கத்தில் சர்வ சாதரணமாக ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. குடும்பத்தில் இருக்கிற எல்லாருமே சினிமாக்களை (சின்னத்திரை, பெரியதிரை) பார்க்கிறோம். இப்படிப் பார்ப்பது விபச்சாரம் செய்த குற்றத்தில் வராவிட்டாலும், விபச்சாரத்தைச் செய்வதற்கு நெருங்கிய குற்றத்தில் வரும்.

சினிமாப் படங்களில், சின்னத் திரைகளில் யாரோ எவரோ கட்டிப் பிடித்து ஆடுகிற அந்தரங்கத்தைக் காட்சியாக்குகிறார்கள். பாடல்களும் அருவருக்கத்தக்க வகையில் தான் இருக்கின்றன. இதைப் பார்த்து ரசித்தால் விபச்சாரம் செய்வதற்குரிய ஒரு படியைத் தாண்டிவிட்டீர்கள் என்றே அர்த்தம். இதற்கு அடுத்த படி, நாமே செய்து பார்த்தால் என்ன தவறு இருக்கிறது? என்று அதற்குரிய முயற்சியில் இறங்கிவிடுவது தான்.

முதலில், பிறர் செய்வதைப் பார்க்கின்ற போது நமக்கு அருவருப்பாகத் தெரியவில்லை, கூச்சமாக இல்லை என்றால், அதைப் பார்க்கத்தக்கதாக நமது மனம் மாறிவிட்டதெனில், அடுத்ததாக நாமே அதைச் செய்தால் என்ன? என்று நமது எண்ணங்களில் தோன்றிவிடும். நமது செயல்களில் அதற்குரிய வழிகளைத் தேடி முயற்சியில் ஈடுபட வேண்டிய நிலை வந்துவிடும். இப்படித்தான் மனிதனின் மனநிலை படைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட ஒருவகையான மனோதத்துவ இயல் தான்.

இன்றைய சூழ்நிலையில் சமூகம் கெட்டு, குட்டிச் சுவராகப் போனதற்குக் காரணம், விபச்சாரத்தின் அனைத்து வாசல்களையும் திறந்து வைத்து விட்டு, விபச்சாரம் செய்யாதே என்று கூறுவது தான்.

இஸ்லாம் ஒன்று மட்டும் தான் “அதன் அருகில் கூடச் சென்று விடாதே!’ என்று கூறுகிறது. விபச்சாரத்தைச் செய்யாதே என்று கூறுவதால் மட்டும் பயனில்லை. ஏனெனில் விபச்சாரத்திற்குரிய காரண காரியங்களை நெருங்கிவிட்டால் அதைச் செய்துவிடுவாய் என்று கூறும் மார்க்கம் இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் ஒன்று தான் இருக்கமுடியும்.

இன்று இவ்வுலகில் நடக்கிற எல்லாவிதமான கேடுகளுக்கும் காரணம், விபச்சாரத்திற்குத் தூண்டுகின்ற ஆபாசப் படங்களையும் காட்சிகளையும் பாடல்களையும் பார்ப்பது தான். இதையும் அம்மா, அப்பா, பிள்ளைகள் என குடும்ப சகிதம் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து ரசித்துப் பார்க்கும் அளவுக்கு நமது மனநிலை மாறியிருப்பது தான் காரணம்.

இரட்டை அர்த்தம் தருகிற பாடல்களைக் கேட்கிறோம். அதில் வரும் உடல் சேட்டைகளைப் பார்த்து ரசிக்கிறோம். இதில் எந்தவிதமான வெறுப்பும் நமக்கு வராமல் இருக்கிறது. இந்தக் காட்சியில் காட்டுவதை நமது பிள்ளைகள் செய்தால் ஒத்துக் கொள்வோமா? இந்த மாதிரி நமது தங்கையோ தம்பியோ அந்நியர்களுடன் ஆட்டம் போட்டால் ஒத்துக் கொள்வோமா? எதை நாம் நடைமுறையில் அருவருக்கத்தக்கதாக நம் ஆள்மனது நம்புகிறதோ, எண்ணுகிறதோ அதை நாம் செய்யவில்லை. ஆனால் நெருங்கிவிட்டோம். அதைப் பார்க்கிற போது நமக்கு வெட்கம், ரோஷம் வரவேண்டும். ஆனால் நம்மிடம் அது இல்லாத அளவுக்கு மாற்றியிருப்பது இந்தக் காட்சிகள் தான் என்பதை நாம் முதலில் புரிய வேண்டும். அதனால் தான் அல்லாஹ், “அதன் அருகில் கூட நெருங்காதீர்கள்’ என்று கூறுகிறான்.

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக் கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.  (அல்குர்ஆன் 17:32)

விபச்சாரத்திற்கு நெருங்குதல் என்றால் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பது, குழைந்து குழைந்து பேசுவது, கணவன் மனைவி அல்லாத ஆண் பெண் இருவர் கொஞ்சுவது போன்றவை தான்.

கணவனிடம் மனைவி கொஞ்சுவதற்குப் பெயர் இல்லறம். குடும்பவியல். ஆனால் சம்பந்தமே இல்லாத ஆண் பெண்ணிடமோ, பெண் ஒரு ஆணிடமோ கொஞ்சுவது விபச்சாரத்திற்கு நெருங்குதல் ஆகும். இப்படியே நெருங்கி, நெருங்கி கடைசியில் எதை விபச்சாரம் என்று அல்லாஹ் சொல்கிறானோ, எதை இந்தச் சமூகமும் விபச்சாரம் என ஒத்துக் கொள்கிறதோ அதில் விழுந்துவிடுகிற நிலையைப் பார்க்கிறோம்.

அதனால்தான் விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதே! அப்படி நெருங்குவது அருவருக்கத்தக்கதும் கெட்ட வழியுமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்என (முஹம்மதே!) கூறுவீராக!  

(அல்குர்ஆன் 7:33)

இந்த வசனத்தில் சொல்லப்படும் வெளிப்படை என்பது நேரடியாகச் செய்யக் கூடிய விபச்சாரத்தைக் குறிக்கும். அந்தரங்கமானது, இரகசியமானது என்பது நேரடியாகச் செய்வதற்குத் தூண்டக் கூடிய இரகசியப் பேச்சுகள் போன்ற காரண காரியங்களைக் குறிப்பதாகும். சிலர் அந்தரங்கமாக அசிங்கமாகப் பேசிவிட்டு, நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று வாதிடுகின்றனர். விபச்சாரம் என்ற தவறைச் செய்யவில்லை தான். விபச்சாரத்திற்கு நெருங்கி விட்டார்கள்.

அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.

(அல்குர்ஆன் 25:68)

ஒழுக்கக்கேட்டை ஒருவன் செய்தால் அவன் மறுமையில் கடும் தண்டனைக்கு ஆளாகுவான் என அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.

ஒழுக்கக்கேடான விபச்சாரத்தைச் செய்பவனுக்குரிய தண்டனையை நபிகள் நாயகமும் நமக்கு எச்சரித்துள்ளார்கள். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் தமக்கு ஏற்பட்ட ஒரு கனவின் மூலம் நமக்கு விளக்குகிறார்கள். நபிமார்கள் கனவு காண்பது இறைவன் புறத்திலிருந்து வருகிற வஹியாகும். நபிமார்களல்லாத நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் காணும் கனவுகள் பெரும்பாலானவை பொய்யாகவும் கற்பனையாகவும்தான் இருக்கும். அதைப் பெரிதுபடுத்தவே கூடாது. நபிமார்களின் கனவில் ஷைத்தான் குறுக்கிட இயலாது. ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் நபிமார்களைப் பாதுகாப்பான். அதனால்தான் இப்ராஹீம் நபியவர்கள் கனவில் தனது மகன் இஸ்மாயீல் அவர்களை அறுப்பதாகக் கண்டதைச் செயல்படுத்தினார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறுஎன்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்என்று பதிலளித்தார்.

(அல்குர்ஆன் 37:102)

நேற்றிரவு கனவு கண்டீர்களா? என மக்களிடம் நபிகள் நாயகம் கேட்கிறார்கள். நபித்தோழர்கள் இல்லை என்றார்கள். அப்போது நபியவர்கள் நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அதில் இரண்டு வானவர்கள் வந்து, மறுமையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் காட்டுவதற்காக என்னை அழைத்துச் சென்றார்கள். தீய செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய தண்டனையின் பல்வேறு காட்சிகளைப் பார்த்ததை நபித்தோழர்களுக்கு விவரிக்கிறார்கள். அந்தக் காட்சியில் நமக்குரிய ஆதாரம் இருக்கின்றது.

அங்கு அடுப்பு போன்ற ஒரு பொந்து இருந்தது. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. நெருப்பின் சூடு அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால் மேற்பகுதி குறுகலாயிருப்பதால் வெளியேற முடியவில்லை.) நெருப்பு அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான் “இவர்கள் யார்?’ எனக் கேட்டேன்….. “அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்என்று சொல்லப்பட்டது. (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்துப் (ரலி), நூல்: புகாரி 1386

இதன் முழுச் செய்தியையும் புகாரி 1386வது எண்ணில் பார்க்கவும். இன்னும் பல்வேறு தீமைகளுக்குரிய தண்டனைகளும் அதில் உள்ளன.

சட்டியில் தண்ணீர் கொதிக்கும் போது நுரை பொங்குவதைப் போன்று மனிதர்கள் பொங்கி வருவார்கள். பிறகு நெருப்பு அணைக்கப்பட்டதும் மீண்டும் கீழே சென்றுவிடுவார்கள். அதன் பிறகு மீண்டும் நெருப்பு மூட்டப்படும். அப்போதும் பொங்கி வெளியே வழியும் அளவுக்கு மேலே வருவார்கள். மீண்டும் நெருப்பு அணைக்கப்படும். இப்படி வெளியேற முடியாத அளவுக்கு அதில் ஒழுக்கம் கெட்டவர்கள் தனித் தண்டனையை அனுபவிப்பதாக நபிகள் நாயகம் மறுமைக் காட்சியை வர்ணிக்கிறார்கள்.

ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறப்புத் தண்டனை தான் வேக வைக்கும் தண்டனையாகும். இதைத்தான் அல்லாஹ் மேற்சொன்ன வசனத்தில் கடும் தண்டனை என எச்சரிக்கிறான்.

எனவே மறுமையில் இவ்வளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்ப வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் கணவன் மனைவியர்கள் வாழ்வார்கள். அதனால் இந்தச் சமூகமும் தழைத்தோங்கும். இல்லற வாழ்க்கையிலிருந்து தடுமாறி ஒழுக்கக் கேட்டிற்குச் செல்வதுதான் இன்று குடும்ப வாழ்க்கை கசப்பாவதற்குக் காரணமாகி விடுகின்றது.

முஸ்லிம்களாகிய நம் அனைவரின் ஆசை, நம்பிக்கை எல்லாம் மறுமை வாழ்க்கையில் சுவனத்தை அடைய வேண்டும் என்பது தான். அதற்கு இவ்வுலகில் வாழும் போது பல விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இருந்தாலும் இரண்டு காரியங்களுக்குப் பொறுப்பேற்கும் மனிதர்களுக்கு சொர்க்கம் கிடைக்க அல்லாஹ்வின் தூதர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(தான நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அüக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அüக்கிறேன்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி 6474, 6807

நாக்கை ஒரு மனிதன் ஒழுங்காகப் பயன்படுத்த வேண்டும். நாக்கினால் தான் எல்லா பிரச்சனைகளுமே உருவாகிறது. அதற்காக ஊமையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. அதாவது நாக்கை அல்லாஹ் அனுமதித்த அனைத்து நல்லவற்றுக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லாஹ் தடுத்திருக்கிற காரியங்களுக்கு இந்த நாக்கைப் பயன்படுத்தக் கூடாது. பொய் பேசாமல், அவதூறு கூறாமல், பிறரைப் பழித்துவிடாமல், சபிக்காமல், கோள் சொல்லாமல், ஆபாசமான பேச்சுக்களைப் பேசாமல் நாவைப் பேணவேண்டும்.

அதே போன்று ஆண்களும் பெண்களும் தங்களது கற்புகளைப் பேணிக் காப்பாற்றினால் அவர்களின் சுவனத்திற்கு நபிகளார் பொறுப்பாளார் ஆவார்கள். இந்தப் பொறுப்பை நபிகள் நாயகமாக, சொந்தமாகச் சொல்லவே இயலாது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹியின் மூலம் தான் நபிகளார் இப்படிச் சொல்லவே முடியும்.

எனவே நபிகள் நாயகம் சுவனத்திற்குப் பொறுப்பாளர் என்றால் அல்லாஹ் தான் பொறுப்பு என்று விளங்க வேண்டும். அல்லாஹ் சொல்லாமல் நபிகள் நாயகத்தினால் சுயமாக இப்படிச் சொல்லவே முடியாது என்பதையும் சேர்த்தே விளங்க வேண்டும்.

அதுபோக இந்த ஒழுக்கக்கேடான விஷயங்களில் இன்னும் சில அடிப்படையான செய்திகளைத் தெரிய வேண்டும். பொதுவாக எல்லா மனிதர்களுமே ஏதாவது ஒரு வகையில் ஒழுக்கக்கேட்டை செய்பவர்களாகத் தான் இருப்பார்கள் என இஸ்லாமிய மார்க்கம் சொல்கிறது. அதாவது ஒவ்வொரு மனிதனும் விபச்சாரத்தின் ஒரு பங்கை எப்படியாவது செய்துவிடுவான். எப்படியெனில் ஒழுக்கங்கெட்டதைத் தன் பார்வையின் மூலம் பார்க்கும் போது கண்ணினால் ஒருவன் விபச்சாரம் செய்கிறான் என்று அர்த்தம். விபச்சாரத்திற்குரிய செய்தியைக் காது மூலமாக ஒருவன் கேட்டால் அதனைச் செய்த பங்கு அவனுக்கு உண்டு. இந்தக் கருத்தில் தான் நபியவர்கள் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 6243, 6612, முஸ்லிம் 5164, 5165

மனிதன் எப்படியாவது ஒரு தடவையாவது விபச்சாரத்தின் பங்கில் விழுந்துவிடுவான். கண்டிப்பாக இது நடந்தே தீரும் என்கிறார்கள். உதாரணத்திற்கு ஒருவன் நான் எந்தப் பெண்ணையும் பார்த்ததே இல்லை என்று சொன்னால் நிச்சயமாக அது பொய்யாகத் தான் இருக்க முடியும். அல்லாஹ் விதியாக்கி விட்டான் என்ற பிறகு ஒருவன், நான் அப்படி இல்லை என்று சொல்லவே முடியாது.

ஒருவர் தவறான போஸ்டரைப் பார்த்தாலோ அல்லது ஒரு மாதிரியான பெண்ணைப் பார்த்தாலோ மனதில் இதுபோன்ற சலனங்கள் வரத்தான் செய்யும்.

இவ்வளவு ஏன்? யூசுஃப் நபியின் நிலைமை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யூசுஃப் நபியவர்களுக்கும் கூட இலேசான சலனம் ஏற்பட்டுவிட்டதாகத் தான் அல்லாஹ் நமக்குச் சொல்கிறான்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

(அல்குர்ஆன் 12:24)

அந்தப் பெண் யூசுஃப் நபியை அழைத்த போது அவரும் ஆணாக இருப்பதால் அவரது மனதிலும் சிறிய அளவிலான ஒரு எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் இறைவனின் அத்தாட்சியைப் பார்த்திருக்காவிட்டால் அவரும் அந்த கெட்ட செயலில் விழுந்திருப்பார் என அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அப்படியெனில் யூசுஃப் நபியவர்களுக்கும் இதில் ஒரு எண்ணம் வரத்தான் செய்திருக்கிறது.

இது எல்லா மனிதர்களுக்கும் வந்தே தீரும் என்பதைத் தான் நபியவர்கள் விபச்சாரத்தின் ஒரு பங்கை ஆதமின் மகன் அடைந்தே தீருவான் என்று பிரகடணப்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற எண்ணமே வராமல் நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. இப்படி எண்ணம் வந்தால் அதை முறியடித்து அதைச் செயல்படுத்தாமல் இருப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

நமது மறுமை வெற்றியைப் பாழாக்கிவிடாமல் இவ்வுலகில் நாம் கவனத்துடன் வாழ்வதற்குத் தான் இவற்றை நாம் கூறுகிறோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?      தொடர்: 5

சூபிஸத்தின் சுய வரலாறு

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது?

முதல் மூன்று நூற்றாண்டுகளில் சூபிஸம் என்ற வார்த்தை பிரபலமாகவே இல்லை என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள். இப்னு தைமிய்யாவிற்கு முன்பு இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கல்தான் ஆகியோரும் கூறியுள்ளனர்.

உலக வாழ்க்கையில் நாட்டம் கொள்ளாமல் மறுமை வாழ்க்கையை மையமாகக் கொண்டு வணக்கத்தில் திளைத்த ஏழை எளியவர்களாக நபித்தோழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் சூபிகள் என்று அவர்களில் யாருக்கும் பட்டம் சூட்டப்படவில்லை. எனவே இது ஆரம்ப காலத்தில் இல்லாத, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வார்த்தையாகும். இப்படி ஒரு வாதத்தை சூபிஸ மறுப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

இதற்கு சூபிஸ ஆதரவாளரான சிராஜ் அத்தூஸி என்பவர் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.

நபித்தோழர்களுக்கு, “நபித்தோழமை’ என்பதை விட வேறு எந்தப் பட்டமும் அவர்களுக்குப் பெரிது கிடையாது. அதுதான் அவர்களுக்கு மாபெரும் பட்டமும் பதவியுமாகும். இதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எந்தப் பட்டத்தையும் சூட்டக்கூடாது.

அவர்களில் உலக வாழ்வை மறந்து மறுமை வாழ்க்கையில் மூழ்கியவர்கள் இருந்தனர். அவர்களுக்குக் கிடைத்த அனைத்து அந்தஸ்தும் மரியாதையும் நபித்தோழமை என்ற பரக்கத்தின் மூலமே கிடைத்தது. அவர்களை நபித்தோழர்கள் என்ற வார்த்தையுடன் இணைக்கும் போது இவர்கள் அந்த வார்த்தையை விட வேறு வார்த்தையைத் தேர்வு செய்வது அசாத்தியமாகும்.

சூபிஸம் என்ற வார்த்தை பாக்தாதைச் சேர்ந்த சிலர் கண்டுபிடித்த புதிய வார்த்தை என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதமும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

காரணம் இந்த வார்த்தை ஹஸன் அல்பஸரீ காலத்திலேயே அறிமுகமாகியுள்ளது. ஹஸன் பஸரீ நபித்தோழர்களின் ஜமாஅத்தையே சந்தித்தவர்.

நான் தவாஃப் செய்யும் போது ஒரு சூபியைக் கண்டேன். அவருக்குப் பணம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து, “என்னிடம் ஆறில் ஒரு பகுதி நாணயம் உள்ளது. அது எனக்குப் போதும்’ என்று கூறிவிட்டார்.

இவ்வாறு ஹஸன் பஸரீ கூறியதாக அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹாஷிம் என்ற சூபி இல்லையென்றால் மயிரிழை அளவிலான முகஸ்துதி எனும் ரியாவை நான் அறிந்திருக்க முடியாது என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ கூறியதாக அவரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

“இஸ்லாம் வருவதற்கு முன்னால் ஏதோ ஒரு நேரத்தில் கஅபாவை தவாஃப் செய்ய ஒருவர் கூட இல்லை என்ற ஒரு கட்டம் ஏற்படும் கட்டத்தில் தூரமான ஊரிலிருந்து சூபி ஒருவர் வந்து தவாஃப் செய்துவிட்டுத் திரும்புவார்” என்று ஒரு சம்பவத்தை சுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மக்கா சம்பவங்கள் என்ற நூலில் முஹம்மது பின் இஸ்ஹாக் மற்றும் சிலரிடமிருந்து அறிவித்துள்ளார்.

இது சரியான சம்பவம் என்றால் சூபி என்ற பெயர் இஸ்லாம் வருவதற்கு முன்னாலேயே அறிமுகமான வார்த்தை என்பதை விளங்கலாம். சீரும் சிறப்பும் உள்ளவர்கள் இந்தப் பெயருடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளனர். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இது தான் சிராஜ் அத்தூஸி என்பவர் அளிக்கும் பதிலுரையாகும்.

இந்தப் பதிவுகள் அனைத்தும் சூபிஸம் என்ற வார்த்தை ஆரம்ப காலத்தில் இருந்தது என்பதற்கு ஒருபோதும் ஆதாரமாகாது. இஸ்லாத்தில் இணைந்தவர்கள் இந்த வார்த்தையை இறக்குமதி செய்த பின்னர் தான் முஸ்லிம்களிடம் இது அரங்கேறி விட்டது.

அல்ஜரஹ் வத்தஃதீல் – அறிவிப்பாளர்களின் குறை நிறை என்ற நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இந்த நூல்கள் நல்லவர்களை, கெட்டவர்களை அலசி, உரசிப் பார்க்கின்ற ஆய்வு நூல்களாகும். அவர்களை எடைபோட்டுப் பார்க்கின்ற நூற்களாகும். இந்நூல்களில் நல்லவர்களை எடைபோடுவதற்குச் சில வார்த்தைகளையும் கெட்டவர்களை எடைபோடுவதற்குச் சில வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த சூபி என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை என்பதே இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இல்லாத வார்த்தை என்பதற்குப் போதிய சான்றாகும்.

இரண்டாவது ஆய்வு

சூபிஸம் என்ற இந்தச் சரக்கின் அடிப்படையும் மூலமும் முன்சென்ற திரிக்கப்பட்ட மார்க்கங்களிலிருந்தும் தகர்க்கப்பட்ட பழைய சித்தாந்தங்களிலிருந்தும் எடுக்கப்பட்டது தான். இதை இஹ்யா உலூமித்தீன் மற்றும் இதர நூல்களிலிருந்து எடுத்துக் காட்டுகின்ற செய்திகள் மூலம் பின்னர் தெளிவாக விளக்குவோம். அப்போது, கஸ்ஸாலி அவர்கள் இஹ்யாவில் நிரப்பி வைத்திருக்கின்ற முடை நாற்றமெடுக்கும் மூல ஆதாரங்களை, மாய்மாலங்களை அடையாளம் காட்டுவோம்.

கிறித்துவத்தின் சூபிஸ வழிகேடு வெட்ட வெளிச்சமானது. யூதத்தின் சூபிஸ வழிகேடும் நன்கு தெளிவானது. புத்த மதத்தின் சூபிஸச் சிந்தனையும் பட்டவர்த்தனமானது. பிளேட்டோவின் சூபிஸ விஷமும் பகிரங்கமானது.

ஷியா கொள்கையை எடுத்துக் கொண்டால் அதன் முதுகெலும்பும் அதன் உடம்பில் ஓடுகின்ற உதிரமும் வழிகேடான சூபிஸ சிந்தனை தான்.

சூபிஸத்தைப் படித்து, ஆழ்ந்து சிந்தனை செய்யக்கூடிய ஒவ்வொருவரும் அதன் வேர்களும் கிளைகளும் இலைகளும் அனைத்துமே ஷியாயிஸம் என்பதைத் தெரிவாகப் புரிந்து கொள்வார். இதன் அத்தனை தன்மைகளையும் நன்கு விளங்கிக் கொள்வார். இந்தத் தொடரிலும் அந்தந்த இடங்களில் பொருத்தமாக நாம் சுட்டிக் காட்டும் போது மிகத் தெளிவாக விளங்கும்.

இஸ்லாம் என்றால் அல்லாஹ்வின் வேதமும் அவனது தூதரின் வழிகாட்டலும் மட்டும் தான்.

அந்தத் தூய மார்க்கம் இந்த அந்நிய இறக்குமதிகளை ஒருபோதும் அனுமதிக்காது; ஆதரிக்காது. ஏனெனில் அவ்வாறு அந்த இறக்குமதிகளை உள்வாங்க ஆரம்பித்தால் இஸ்லாத்தின் தூய பாதைக்கு நேர் எதிரான பாதையில் பயணிக்க வைத்துவிடும்.

இஸ்லாத்தைப் படித்துப் பாதுகாத்தவர்கள், நபி (ஸல்) அவர்களின் செயல்திட்ட வரலாற்றையும் நபிவழி நடந்த தோழர்கள், நல்லவர்களின் வரலாற்றையும் புரட்டுபவர்கள் யாருமே உருப்படாத, ஒன்றுக்கும் உதவாத இந்தச் சித்தாந்தங்களின் பக்கம் அறவே திரும்பிப் பார்க்க மாட்டார்.

மூன்றாவது ஆய்வு

வரலாற்று நெடுகப் பார்த்தோமென்றால் சூபிஸம் என்பது முஸ்லிம்களுக்கு ஒரு சோதனையாகவே அமைந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது முஸ்லிம்களுடைய ஒற்றுமையைக் குலைத்துள்ளது. அவர்களது ஒருங்கிணைப்பை உடைத்திருக்கின்றது. அவர்களது புகழை மங்கச் செய்திருக்கின்றது.

இஸ்லாத்தின் மிக உயர்தரமான, உன்னதமான கடமை ஜிஹாத் என்ற அறப்போராகும். தான் திரட்டி வைத்த அனைத்து சக்திகள் மூலம் தன்னை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்தலே ஜிஹாத் ஆகும். இந்த அறப்போரை விட்டும் முஸ்லிம்களை அப்புறப்படுத்தி அவர்களை ஒரு மூலையில் முடக்கி, முடமாக்கிப் போட்டு விட்டது. (ஜிஹாத் என்பது தீய சக்திகளுக்கு எதிராக ஒரு நல்ல அரசாங்கம் நடத்தும் புனிதப்போராகும். தனிநபர்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் அல்ல.)

அறப்போருக்கு அடுத்தபடியாக, நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் எனும் பணி.

இந்தப் பணியை ஆற்றுவதை விட்டு முஸ்லிம்களை செயலிழக்க வைத்தது சூபிஸம் என்ற விஷச் சிந்தனை!

ஒதுங்கி இரு! ஓரத்தில் ஒடுங்கி இரு! தனித்திரு! தாகித்திரு! பசித்திரு! பட்டினியாயிரு! தள்ளியிரு! தவமிரு என்ற மந்திரங்களைச் சொல்லி, செயல்திறன்மிக்க, வீரமிக்க ஒரு முஸ்லிமைச் செத்த பிணமாக்கியது இந்த சூபிஸச் சிந்தனை தான். இவற்றையும் ஆங்காங்கே உதாரணங்களுடன் நாம் விளக்குவோம்.

முஸ்லிம்களின் அறிவையும், அவர்களது மார்க்கத்தையும் பறித்து, ஆதாரமோ அடிப்படையோ இல்லாத கற்பனைகளிலும் கனவுகளிலும் போதையுண்டவர்களைப் போன்று மிதக்க வைத்து விட்டது இந்தச் சூபிஸம்.

ஒரு சூபிஸவாதியின் ஒட்டுமொத்த சித்தனையுமே தொழுகை, நோன்பு, ஹலால், ஹராம் போன்ற ஷரீஅத் சட்டங்களின் கட்டுப்பாடுகளைக் கடந்து, மோ(ட்)ச நிலையை அடைவதாகும்.

நான்காவது ஆய்வு

அதிகமான எழுத்தாளர்கள் கஸ்ஸாலியின் ஆக்கத்தைப் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் எழுதித் தள்ளியிருக்கின்றனர். அவர்களில் முஸ்லிம்களும் கிழக்கத்தியர்களும் அடங்குவர். ஒவ்வொருவரும் தங்கள் கண்களில் என்னென்ன கண்ணாடியை அணிந்தார்களோ அந்தக் கண்ணாடிக்குத் தக்க அவர்கள் கஸ்ஸாலியைப் பார்த்தனர்.

தத்துவவியலாளர்கள் கஸ்ஸாலியை தத்துவார்த்த அடிப்படையில் பார்த்தனர். கடவுள் கோட்பாட்டாளர்கள் தனது கோட்பாட்டின் அடிப்படையில் அவரைப் பார்த்தனர். சூபிகள் அவரை சூபிஸம் அடிப்படையில் பார்த்தனர். கஸ்ஸாலியோ சூபிகளின் ஆசானாகத் திகழ்ந்தார். அவர் தான் சூபிஸப் பாதைக்கு அடித்தளம் அமைத்த ஆசான்.

கஸ்ஸாலியை குர்ஆன், ஹதீஸ் என்ற கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தவர்களும் உண்டு. அவர்களது பார்வையில் முன்னோர்களின் சரியான நிலைப்பாட்டை என்னால் காண முடிந்தது. அவர்களில் ஹாபிழ் தஹபியும் ஒருவராவார். அவரது கருத்தை இன்ஷா அல்லாஹ் இதில் கொண்டுவர இருக்கின்றேன்.

அபூஹாமித் அல்கஸ்ஸாலியும் சூபிஸமும் என்ற தலைப்பில் டமாஸ்கஸைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் என்பவர் ஓர் அற்புதமான ஆய்வு நூலை ஆக்கம் செய்திருக்கின்றார். அது ஒரு புறமிருக்க, இன்னொரு புறத்தில் கஸ்ஸாலியின் நூற்களை ஆய்வு செய்து, அதில் மலையளவுக்குக் கொட்டிக் கிடக்கின்ற கொள்கை ரீதியிலான தவறுகளை முஸ்லிம்களிடம் எடுத்துரைப்பது அதற்கான திறமை படைத்த ஒவ்வொரு சிந்தனையாளர் மீதும் கடமையாகும்.

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:159

வேதத்தில் உள்ள செய்திகளை மறைப்பவர்களை, இருட்டடிப்பு செய்பவர்களை சாபத்திற்குரியவர்கள் என்று இறைவன் இந்த வசனத்தில் சாடியுள்ளான். அதனால் இதற்கு ஆற்றல் படைத்த அறிஞர்கள் இந்தச் சாபத்தின் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அபூதர் (ரலி) அவர்கள் தமது பிடரியைச் சுட்டிக் காட்டி, “இதன் மீது வாளை வைத்து, நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்ற ஒரு செய்தியைச் சொல்லக் கூடாது என்று தடுத்தாலும் அதனை நான் சொல்லியே தீருவேன்” என்று கூறினார்கள்.

நூல்: தாரமீ 544

கழுத்துக்கே கத்தி வந்தாலும் காரணங்கள் எதுவாக இருந்தாலும் சத்தியத்தை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதில் முன்னோர்களான நபித்தோழர்கள் முன்னுதாரணங்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதையே இது நமக்கு உணர்த்துகின்றது.

சத்தியத்தை இப்படித் துணிச்சலாக மக்களிடம் சமர்ப்பிப்பதில் அவர்களை முன்னுதாரணங்களாகக் கொண்டு, அவர்களிடமிருந்து நாம் பாடம் பயில வேண்டும். எழுத்து, சொல் வடிவத்தில் செவிக்கு வந்த, கண்ணில் பட்ட எந்த அசத்தியத்தையும் மக்களிடம் சொல்லாமல் நாம் ஊமைகளாக ஆகிவிடக் கூடாது.

—————————————————————————————————————————————————————-

ஆண்களே! அஞ்சிக் கொள்ளுங்கள்!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

மனித இனத்தை ஜோடியாகப் படைத்திருக்கும் இறைவன், அந்த ஆண், பெண் எனும் ஜோடிக்கு இடையே பல்வேறு வேறுபாடுகளை வைத்திருக்கிறான். இருவருக்கும் மத்தியில் ஒருவருக்கொருவர் கவரப்படுவதிலும் வித்தியாசத்தை வைத்துள்ளான். ஆண் மூலம் பெண் ஈர்க்கப்படுவதற்கும் பெண் மூலம் ஆண் ஈர்க்கப்படுவதற்கும் இடையே வேறுபாடு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.

பெண்கள் தொடுதல் எனும் தீண்டுதல் மூலம் உணர்வு தூண்டப்படுகிறார்கள். ஆண்கள் தங்களது பார்வையின் மூலம் அதாவது பெண்களைப் பார்த்தாலேயே கவரப்படுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாபைப் பேணச்சொல்கிறது. இரு சாராருக்கும் இடையே இன ரீதியாக இருக்கும் இந்த இயற்கையான இயல்பை, யதார்த்தமான தன்மையை நடைமுறை நிகழ்வுகளும் விஞ்ஞானமும் மெய்ப்படுத்துகின்றன.

எனவே தான் எல்லாப் படைப்பினங்களைப் பற்றியும் முற்றும் அறிந்தவனான ஏக இறைவன், இஸ்லாம் எனும் இயற்கையான, இனிமையான வாழ்க்கைத் திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு பிரத்யோகமான பல்வேறு சட்டங்களைப் பிறப்பித்துள்ளான். பெண்கள், அவற்றை அறிந்து அதன்படி செயல்படுவது தான் அவர்களின் நல்வாழ்வுக்கு உகந்தது. அதுபோன்று ஆண்களுக்கும் அவசியமான அறிவுரைகளை, எச்சரிக்கைகள் கலந்த தகவல்களை எடுத்துரைத்துள்ளான். ஆண்கள் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அந்தச் செய்திகளைத் தொடர்ச்சியாக நாம் தெரிந்து கொள்வோம், வாருங்கள்.

மனதை கவரும் இன்பம்

ஏக இறைவனை வணங்குவதற்காக நாம் படைக்கப்பட்டு இருப்பினும் நமது வாழ்க்கை இன்பமாக இருப்பதற்கு அளவற்ற அருட்கொடைகளை அவன் அள்ளி வழங்கியிருக்கிறான். ஏராளமான இன்பம் தரும் காரணிகளை காணுமிடமெங்கும் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். பரந்து விரிந்த பூமியில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான பல்வேறான வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறான். இவ்வாறு நமது வாழ்க்கையை அலங்கரிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் கவர்ச்சிகரமானவைகளுள் முக்கியமான ஒன்றுதான் ஆணுக்குப் பெண்; பெண்ணுக்கு ஆண் என்று வாழ்க்கைத் துணையைக் கொடுத்திருப்பது ஆகும்.

பின்வரும் வசனத்தில், தங்கம், வெள்ளி என்று மனதை மயக்கும், கவனத்தைக் கொள்ளை கொள்ளும் உலக இன்பங்களின் பட்டியலில் வாழ்க்கைத் துணை என்பதும் முதன்மையாக சொல்லப்பட்டிருப்பதின் மூலம் அதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளைநிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.

(திருக்குர்ஆன் 3:14)

கவனத்தைக் கவரும் கவர்ச்சிகரமான விஷயங்களில் பெண்கள் இடம்பெற்றிருப்பதை ஆண்கள் கண்டிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக இன்பங்களில் மயங்கி வழிகேடுகளில் விழுந்து விடக்கூடாது என்று  எச்சரிக்கையோடு இருக்கும் ஆண்கள், பெண்கள் விஷயங்களிலும் எல்லை மீறிவிடக்கூடாது. மார்க்கத்தில் அனுமதிக்கபட்ட முறையிலே தவிர அதற்கு அப்பாற்பட்ட வகையில் எந்தவொரு அணுகுமுறையையும் அவர்களிடம் அமைத்துக் கொள்ளக்கூடாது. காரணம், மற்ற உலக இன்பங்களினால் ஏற்படும் பாதிப்பை விட இதனால் நிகழும் பாதிப்பு பாரதூரமானதாக இருக்கும். அதனால் தான் ஆண் பெண் ஒழுக்கத்தைப் பற்றி இஸ்லாம் அதிகமதிகம் பேசுகிறது.

நிய்யத்தை மாற்றும் மங்கைகள்

பெண் பித்து பொல்லாதது என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஒரு ஆண்மகன், ஒரு பெண் மீது கண்மூடித்தனமாகக் கொண்டிருக்கும் பாசம், மோகம் இரண்டும் அவனை எப்படி வேண்டுமானாலும் செயல்பட வைக்கும். பெண்கள் விவகாரங்களில் பலவீனமாக இருந்ததன் விளைவாகப் பலர் தங்களது கொள்கை கோட்பாடுகளையே மறந்து, படுமோசமான பாதையில் பயணிப்பதைப் பார்க்கவே செய்கிறோம். அந்த அளவிற்குக் குருட்டுத்தனமான பெண்ணாசை நமது நம்பிக்கையின் வேர்களைக் கரைத்துவிடும் கொடிய அமிலத்தைப் போன்றது.

எந்தவொரு வணக்கத்தையும் நற்காôரியத்தையும் படைத்தவனுக்காகச் செய்து அவனிடம் நற்கூலியைப் பெற வேண்டும் என்ற மறுமை நோக்கத்தையே மறக்கடித்து, தூய எண்ணத்தை நிறம் மாற்றி, திசைமாற்றி பயணிக்க வைக்கும் வல்லமை பெண் மீதான ஈர்ப்புக்கு இருக்கிறது என்பதைப் பின்வரும் போதனை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது.

எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

நூல்: புஹாரி 1

நமது இலட்சியத்தில் இருந்து விலகச் செய்யும் விஷயங்களில் மிக முக்கியமானது முதன்மையானது பெண்ணும் பொன்னும்தான் என்று சொன்னால் மிகையாது. காதல் என்ற பெயரில், ஏகஇறைவனை மறுக்கின்ற பெண்களை திருமணம் செய்வதற்காக சத்திய மார்க்கத்தைத் தூக்கி எறிந்து அசத்தியத்திற்குச் செல்பவர்கள் இதற்குச் சரியான உதாரணமாக இருக்கிறார்கள்.

பெண்களால் வரும் சோதனைகளும் குழப்பங்களும்

இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இன்பங்கள், அருட்கொடைகள் அனைத்திலும் நமக்கு சோதனைகள் இருக்கின்றன. செல்வம் போன்ற இன்பங்கள் சோதனையாக இருப்பது போன்று நம்மைச் சுற்றியிருக்கும் எதிர்பாலினத்தின் மூலமும் நமக்குச் சோதனைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் மூலம் தாங்கள் சோதிப்படுவோம் என்பதை ஆண்கள் மறந்து விடக்கூடாது. இதை மறந்து செயல்பட்டு சிக்கல்களில், குழப்பங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதைப் பின்வரும் செய்தியில் விளங்கலாம்.

இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால் தான் ஏற்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5292

பெண்களால் வரும் பிரச்சனைகள்

மோசமான சிந்தனைகள், தவறான நடத்தைகள் கொண்ட பெண்கள் மூலமும், பெண்கள் விவகாரங்களில் பலவீனமாக இருத்தல், பக்குவப்படாமல் செயல்படுதல் மூலமும் நாம் சர்ச்சைகளில் விமாச்னங்களில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைகள் நமக்கு ஏற்படலாம். நாம் நல்லவர்களாக இருந்தபோதும் நம்மைச் சுற்றியிருக்கும் இழிகுணமும் தீய நோக்கமும் கொண்ட பெண்களால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கும் சூழல் இன்று மட்டுல்ல! எல்லாக் காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கும். நற்பெயர் பெற்று நல்ல முறையில் வாழ்பவர்களையும் கூட இதுபோன்ற இடையூறுகள் இடம்தேடி வரும் என்பதற்குப் பின்வரும் கடந்த கால சம்பவங்கள் சான்றுகளாக இருக்கின்றன.

யூசுஃப் (அலை) அவர்கள் வளர்ந்து ஆளான மன்னருடைய வீட்டிலேயே அந்த மன்னருடைய மனைவி மூலம் தவறான நடத்தைக்கு அழைக்கப்படுகிறார்கள். அந்த அழகிய தூதர் அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சி அவளை விட்டும் அகலும்போது பொய்யான குற்றம் சுமத்தப்பட்டு சிறைவாசம் செல்கிறார்கள். இப்படி ஒரு பெண் மூலம் அவர்கள் அடைந்த சிரமங்களை நமது படிப்பினைக்காக வல்ல இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான். இதை நபிகளாரும் தமது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் போது ஒப்பிட்டு நினைவு கூருகிறார்கள்.

எவளது வீட்டில் (யூசுஃப் நபி) அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்எனக் கூறினார். அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடிவிட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். “உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?” என்று அவள் கூறினாள். “இவள் தான் என்னை மயக்கலானாள்என்று அவர் கூறினார்.

அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியதுஎன்றார்.

அல்குர்ஆன் 12:23-28

இதுபோன்று முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜுரைஜ் என்ற நல்லடியாருக்கும் ஒரு நடத்தை கெட்ட பெண் மூலம் வந்த பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். அவற்றைத் தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை “ஜுரைஜ்என்று அழைத்தார். ஜுரைஜ் “இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரேஎன்று  (மனதிற்குள்) கூறினார்.  மீண்டும் அப்பெண் “ஜுரைஜ்என்று அழைத்தபோது “இறைவா! நான் தொழுதுகொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் “இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக்கூடாதுஎன்று துஆச் செய்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்து செல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப் பட்ட போது, “ஜுரைஜுக்குத் தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கி வந்து இவ்வாறு செய்து விட்டார்என்று  அவள் கூறினாள். “தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?” என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி “சிறுவனே! உன் தந்தை யார்?” எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தைஆடுமேய்க்கும் இன்னார்”  என விடையளித்தது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புஹாரி 1206

தொழில் நிறுவனம், இயக்கம், அலுவலகம், கல்விச்சாலை, கடைத்தெரு, இருப்பிடம் என்று ஆண்கள் பெண்கள் கலந்து இருக்கும் எல்லா இடங்களிலும் இதுபோன்று ஏதாவதொரு பிரச்சனைகள் வெடிப்பதற்கு, ஒழுக்கத்தில் சறுகி விடுவதற்குச் சிறிதளவேனும் வாய்ப்புகள் இருக்கவே செய்யும். சமுதாய அக்கறை கொண்டவர்கள், ஒழுக்கக் கேடுகளை எதிர்ப்பவர்கள், நன்முறையில் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் மாட்டிக் கொள்ளாத வகையில் சுதாரித்து நடந்து கொள்ள வேண்டும். யாரெல்லாம் சமுதாயத்தில் நற்பெயரை இழந்து மக்களின் வெறுப்பிற்கும் இழி சொல்லுக்கும் ஆளானார்களோ அவர்களில் அனேகமானவர்கள் பெண் விஷயத்தில் தவறிழைத்து அகப்பட்டுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை கவனிக்கத் தவறி விடக்ககூடாது.

மதியை மாற்றும் மாதுக்கள்

வீரம், வாதத் திறமை, முற்போக்குக் குணம், முடிவெடுக்கும் மதி நுட்பம் இப்படிப் பல திறமைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் ஒரு ஆண்மகனை ஒரு பெண் எளிதில் ஏமாற்றிவிடுவாள். தமது அழகின் கவர்ச்சியால் வீழ்த்திவிடுவாள். இப்படி அறிவிலும் ஆற்றலிலும் பலம் கொண்ட பல ஆண்கள், பெண் மோகத்தில் மூழ்கிப் பலியாகி, கைசேதப்பட்டுக் கிடக்கிறார்கள். இவ்வாறு ஆண்களை மயக்கும் பேராயுதமான கவர்ச்சி பெண்களிடம் இருக்கிறது. அவர்களால் ஆண்கள் மார்க்கத்தையே தொலைக்கும் தருணமும் ஏற்படலாம் என்பதைப் பின்வரும் செய்தி விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். “மக்களே! தர்மம் செய்யுங்கள்!என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்!என்றார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?” எனப் பெண்கள் கேட்டதும், “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறுசெய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். “அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்என்று கூறப்பட்டது. “எந்த ஸைனப்?” என நபி (ஸல்) அவாகள் வினவ, “இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்!என்று கூறப்பட்டது.  “அவருக்கு அனுமதி வழங்குங்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) “அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார்.  (என்ன செய்ய?)” என்று கேட்டார். “இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),

நூல்: புஹாரி 1462

“கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்” என்று நபிகளார் உதிர்த்த வார்த்தைகளை நாம் உதிரம் இருக்கும் வரை மறுந்து விடக்கூடாது. தாய், மனைவி, சகோதரி, தோழி என்று தங்களைச் சுற்றியிருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை, மதியீனமான செயல்களைச் செய்பவர்கள் இதைப் புரிந்து கொண்டு திருந்துவதற்கு முற்பட வேண்டும்.

மார்க்கப் பற்றை மறக்கடிக்கும் மங்கைகள்

பெரும்பாலும் பெண்களால் ஆண்கள் வழிகேட்டில் விழுந்து விடுவது, அவர்கள் தமது வாழ்க்கைத் துணைவியைத் தேர்ந்தெடுக்கும் தருணத்தில் தான். பிரகாசமான மறுமை வாழக்கைக்காக மார்க்கத்தின் போதனைகளைப் பேணுதலுடன் கடைப்பிடிக்கும் பல இளைஞர்கள், மணமகளைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தவறிழைத்து விடுகிறார்கள். மார்க்கத்தைக் காட்டிலும் இனக் கவர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து இணை வைக்கும் பெண்களை மணமுடிக்கும் காட்சிகளைப் பார்க்கிறோம்.

மணமுடிக்கும் பெண்ணை தவ்ஹீத் சிந்தனைக்கு மாற்றி விடுவேன் என்று முழக்கமிட்டு அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் மாறு செய்யும் பெண்களைத் திருமணம் செய்த பல இளைஞர்கள், அதற்குப் பிறகு தங்களது தவ்ஹீதையே மறந்து, துறந்து வழிகேடுகளின் பக்கம் திரும்பிய நிகழ்வுகள் ஏராளமாக நடக்கின்றன.

மார்க்கத்திற்கு மாற்றமாக இருக்கும் தமது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற இறுதியில் மார்க்கத்தையே வளைத்து, திரித்துப் பின்பற்றும் பாதகமான நிலையில் விழுந்து விடுகிறார்கள். இவ்வாறு நமது குடும்ப வாழ்க்கையின் அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் பெண்ணால் வழிகெடாமல் இருப்பதற்காகவே அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குப் பின்வருமாறு போதிக்கிறார்கள்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கைக் கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவுதான் உங்களைக் கவர்ந்தாலும் அவளைவிட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனைவிட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

  1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5090

—————————————————————————————————————————————————————-

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை  தொடர்: 8

ருகூவின் சிறப்புகள்

அப்துந் நாசிர், கடையநல்லூர்

தொழுகை என்ற வணக்கம் அதனை முறையாகப் பேணி நிறைவேற்றுபவர்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியங்களை வாரி வழங்குகிறது என்பதை நாம் தொடராகப் பார்த்து வருகின்றோம்.

அதன் வரிசையில் நாம் தற்போது தொழுகையின் மிக முக்கியமான ஒரு நிலையான “ருகூவு” என்ற நிலையைப் பற்றியும் அதனால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் பார்க்கவிருக்கின்றோம்.

திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹ் ருகூவு செய்வதைப் பற்றியும், ருகூவு செய்யக் கூடியவர்களைப் பற்றியும் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளான்.

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்யுங்கள்!

அல்குர்ஆன் 2:43

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்

அல்குர்ஆன் 22:7

அல்லாஹ்வும், அவனது தூதரும், தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்து, ருகூவு செய்கிற நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.

அல்குர்ஆன் 5:55

அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள். (இத்தகைய) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 9:112

முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிலிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம்

அல்குர்ஆன் 48:29

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் “ருகூவு” செய்வது ஒருவன் இறை நம்பிக்கையாளன் என்பதற்கு அடையாளமாகும் என்பதை நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நாம் தொழுகையை நிறைவேற்றும் போது ருகூவையும் நிறைவேற்றுகிறோம். எனவே மேற்கண்ட வசனங்களில் ருகூவு செய்வோருக்கு என்னென்ன சிறப்புகளையும் பாக்கியங்களையும் அல்லாஹ் வாக்களிக்கின்றானோ அவை அனைத்தையும் பெறக்கூடிய நன்மக்களாக தொழுகை என்ற வணக்கம் அமைந்துள்ளது.

தொழுகை என்ற வணக்கம் எவ்வளவு நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது என்பதை இதன் மூலமும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

முதல் ஆலயமான கஅபாவை அல்லாஹ் நிர்மாணம் செய்யக் கட்டளையிட்டதன் முக்கியமான நோக்கங்களில் ஒன்று “ருகூவு” செய்தல் ஆகும்.

தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

அல்குர்ஆன் 2:125

தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத் துவீராக!என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 22:26

தொழுகையின் ஒரு அம்சமான ருகூவு எவ்வளவு சிறப்பிற்குரிய செயல் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.

ருகூவு செய்யாதவர்களுக்கு நரகம் என்பதை அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான். ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்

அல்குர்ஆன் 77:47, 48

நாம் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் கொடிய நரகத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

ருகூவு செய்தல் சிறுபாவங்களை அழிக்கும்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர்  தனது  தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் “இவரை யாருக்குத் தெரியும்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர்  “நான் (அறிவேன்)என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன். ஏனென்றால் “ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது தோள்புஜத்தின் மீது வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு செய்யும் போதும், ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்என்ற நபியவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் எனக் கூறினார்கள்.

நூல்: இப்னு ஹிப்பான் (1734),  பாகம்: 5 பக்கம்: 26

ருகூவு செய்தல் நம்முடைய பாவங்களை அழிப்பதற்கு உதவுகின்றது. இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

இறைவனே மகத்துவப் படுத்துவதே ருகூவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிந்துகொள்ளுங்கள்: ருகூஉ  அல்லது சஜ்தாச் செய்து கொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப் படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (824)

நாம் இறைவனை மகத்துவப்படுத்தும் போது அது அல்லாஹ்வின் அன்பையும், நேசத்தையும் நமக்குப் பெற்றுத் தருகிறது. நபியவர்கள் ருகூவில் பல விதங்களில் இறைவனை மகத்துவப்படுத்தியுள்ளார்கள். அந்த வாசகங்களைக் கூறி நாம் மகத்துவப் படுத்தும் போது அவற்றில் அடங்கியுள்ள ஏராளமான பாக்கியங்களுக்கு நாம் சொந்தக்காரர்களாகி விடுகின்றோம்.

ருகூவில் ஓதும் துஆ – 1

சுப்ஹான ரப்பியல் அழீம்

பொருள்: மகத்துவமிக்க என் இறைவன் தூயவன்

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

நூல்: முஸ்லிம் (1421)

ருகூவில் ஓதும் துஆ – 2

சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ

பொருள்: இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (794)

ருகூவில் ஓதும் துஆ – 3

சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்

பொருள்: இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (840)

ருகூவில் ஓதும் துஆ – 4

அல்லாஹும்ம, லக ரகஃத்து, வ பிக ஆமன்து, வ லக அஸ்லம்து. ஹஷஅ லக சம்ஈ வ பஸரீ வ முஹ்ஹீ வ அழ்மீ வ அஸபீ

பொருள்: இறைவா, உனக்காகக் குனிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உனக்கே கட்டுப் பட்டேன். உனக்கே என் செவியும் பார்வையும் மூளையும் எலும்பும் நரம்பும் பணிந்தன

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)

நூல்: முஸ்லிம் (1419)

ருகூவில் ஓதும் துஆ – 5

சுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல் அள்ம(த்)தி

பொருள்: அடக்கி ஆள்தலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

நூற்கள்: நஸாயீ (1049), அபூதாவூத் (873), அஹ்மத் (24026)

ருகூவில் ஓதும் துஆ – 6

சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த

பொருள்: இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (838)

ருகூவிலிருந்து எழும் நிலையில் உள்ள நன்மைகள்

ருகூவிலிருந்து எழுந்த பின் ஓத வேண்டிய பல துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் முறையாக ஓதி வரும் போது அந்த அற்புத துஆக்களில் கூறப்பட்டுள்ள பாக்கியங்களையும், நன்மைகளையும், இறைவனின் பொருத்தத்தையும் அடைவதற்கு, தொழுகை காரணமாக அமைகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினால் நீங்கள் “அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து‘ (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (796)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 1

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.

ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 789

ரப்பனா வல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 732

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 796

அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து

(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)

நூல்: புகாரீ 7346

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால்,

சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது

என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் (819)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 3

நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து  நிமிர்ந்ததும்),

அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித். அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்ஹத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸஹி

என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. இறைவா, பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

நூல்: முஸ்லிம் (821)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும்,

ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். அஹக்கு மா காலல் அப்து, வ குல்லுனா ல(க்)க அப்துன். அல்லாஹும்ம, லா மானிஅ லிமா அஃதைத்த, வலா முஃத்திய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்

என்று கூறுவார்கள்.

(பொருள்: எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்பும் அளவுக்கு, நீ நாடும் இன்ன பிற பொருள்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தது, “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காதுஎன்பதேயாகும்.)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (822)

—————————————————————————————————————————————————————-

கால கால ரசூலுல்லாஹ்…

கண்டு கொள்ளுமா பள்ளி நிர்வாகம்?

ஷாபி மத்ஹப் பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆவின் போது இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்னால் முஅத்தின் ஒரு வரவேற்புரை நிகழ்த்துவார். அதற்கு நடைமுறையில் மஃஷர் என்று கூறுவார்கள்.

மஆஷரில் முஸ்லிமீன் என்ற வாசகம் அதில் இடம்பெறுவதால் அதற்கு இந்தப் பெயர் கூறப்படுகின்றது. மஆஷர் என்பது மஃஷர் என்ற வார்த்தையின் பன்மையாகும். மஃஷர் என்றால் “மக்களே’ என்று பொருள்.

முஅத்தின் இவ்வாறு அழைத்து, “ரவல் புகாரி வ முஸ்லிம் அன் அபீஹுரைரத்த கால கால ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்று அரபியில் விளாசித் தள்ளுவார்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவிக்கின்றார்கள். இதை புகாரி, முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கள்” என்பது இதன் பொருளாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவது என்ன? புகாரி, முஸ்லிம் பதிவு செய்த செய்தி என்ன?

“அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகராஇ வஈதுல் மஸாகீன். இதா ஸயிதல் கதீபு அலல் மிம்பரி ஃபலா யதகல்லம் அஹ்துக்கும் ஃபமன் தகல்லம ஃபகத் லகா. வமன் லகா ஃபலா ஜும்அத்த லஹு”

இது தான் அந்த முஅத்தின் கூறும் செய்தியாகும். இப்படி ஒரு ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லவே இல்லை. புகாரி, முஸ்லிமில் இருந்தால் எடுத்துக் காட்டுங்கள் பார்ப்போம் என்று கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கிறோம்.

பொய்யான ஹதீஸ், புரட்டான ஹதீஸ் தங்களது நூல்களில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காகப் பெரும் முயற்சியும் முனைப்பும், உழைப்பும் அர்ப்பணிப்பும் செய்த இமாம்களான புகாரி, முஸ்லிம் பெயரால் இப்படி ஒரு பொய்யா? என்றெல்லாம் கேள்விக் கணைகளைத் தொடுத்தோம். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. வழக்கம் போல் மத்ஹபு ஆலிம்களிடமிருந்து மவ்னமே பதிலாக வந்தது.

என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி 110, முஸ்லிம் 4

அல்லாஹ்வின் தூதருடைய எச்சரிக்கையைச் சொல்லி பலமுறை எச்சரித்துள்ளோம். இவ்வளவு எச்சரிக்கைக்குப் பிறகும் வெள்ளிக்கிழமைகளில் புனித ஜும்ஆவில் முஅத்தின் புளுகித் தள்ளிக் கொண்டு தான் இருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக புகாரி, முஸ்லிமில் வருவதாக இரண்டு பொய்களைப் புனைந்து சொல்கின்றார்.

  1. அல்ஜும்அத்து ஹஜ்ஜுல் ஃபுகரா வ ஈதுல் மஸாகீன் – ஜும்ஆ என்பது ஏழைகளுக்கு ஹஜ்; வறியவர்களுக்குப் பெருநாள்.

இது நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

  1. உரையாற்றுபவர் மிம்பரில் ஏறிவிட்டால் உங்களில் எவரும் பேச வேண்டாம்.

இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் சொன்னதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

இது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு செய்திகள் சொல்லப்படுகின்றன.

  1. யார் பேசுகின்றாரோ அவர் ஜும்ஆவை வீணாக்கி விட்டார்.
  2. யார் வீணாக்கி விட்டாரோ அவருக்கு ஜும்ஆ இல்லை.

இப்படி நேரடியாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸில் இடம்பெறவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜுமுஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிப்பவரிடம் நீ “மௌனமாக இரு!என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 934, முஸ்லிம் 1404

இந்த வார்த்தைகளைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கால கால ரசூலுல்லாஹ்… என்று சொல்லி விட்டால் அது ஹதீஸ் ஆகிவிடாது. தாங்கள் கூறுவது ஹதீஸ் இல்லை. புகாரி, முஸ்லிமில் இந்தச் செய்தி பதிவாகவில்லை என்பது அந்த அப்பாவியான முஅத்தின்களுக்குத் தெரியாது. தான் சொல்வதன் பொருள் என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தெரிந்தே, திட்டமிட்டே அதை ஆதரிக்கின்றார்கள். அதாவது ஒவ்வொரு ஜும்ஆவின் போதும் நரகத்திற்கு முன்பதிவு செய்து கொள்கின்றார்கள்.

இத்தனைக்கிடையே தவ்ஹீத் ஜமாஅத் சொல்லிக் காட்டிய பிறகும் வம்புக்கும் வீம்புக்கும் இதைச் செய்கின்றார்கள்.

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்.

அல்குர்ஆன் 2:206

இப்போது முஅத்தின் கூறுகின்ற அந்தப் பொய்யான ஹதீசுக்கு வருவோம்.

இவ்வளவு நாளும் நாம் இந்தப் பொய்யான செய்தியை நிறுத்துங்கள் என்று சொன்ன போது நிறுத்த மறுத்தார்கள். இப்போது ஒரு பரேலவி மாத இதழ் மேற்படி பொய்யான ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை என்று மறுக்கின்றது. பொய்யான செய்திகளை ஹதீஸ்கள் என்று சொல்லி நியாயப்படுத்துபவர்கள் தான் பரேலவிகள். அவர்களே இந்தச் செய்தியை மறுத்துள்ளனர். இப்போதாவது சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் ஆலிம்கள் இந்தப் பொய்யை நிறுத்துவார்களா? என்று கேள்வி எழுப்புகின்றோம்.

ஜும்ஆ வசதியற்றோருக்கு ஹஜ்ஜாகும். ஏழைகளுக்குப் பெருநாளாகும். பிரசங்கி மிம்பர் (மேடை) ஏறிவிட்டால் உங்களில் ஒருவரும் பேச வேண்டாம். அப்படிப் பேசினால் அவர் பாழாக்கி விட்டார். எவர் பாழாக்கிவிட்டாரோ அவருக்கு ஜும்ஆவின் நன்மைகள் இல்லை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாகவும் இதை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் தங்களின் நூல்களில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேல்குறிப்பிட்ட நபிமொழியின் வாசகம் முழுவதுமாக புகாரி, முஸ்லிம் ஆகிய இரு நபிமொழிக் கிரந்தங்களில் மட்டும் காணமுடியவில்லை. ஆனால் வேறு சில நூல்களில் இதன் கருத்தைக் காணமுடிகின்றது. இங்கும் அங்குமாய் சேகரித்து இதை புகாரி, முஸ்லிம் நூல்களில் வருவதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். மேலும் இக்குற்றத்திற்கு பள்ளியின் இமாமே மூல காரணியாவார். இது முஅத்தாவில் இடம்பெற்றுள்ள நபிமொழியைக் கவனிக்கவும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜும்ஆ தினத்தில் இமாம் (குத்பா) பிரசங்கம் செய்யும் போது (பேசிக் கொண்டிருக்கும்) உன் தோழரிடம் “மௌனமாக இரு’ என்று கூறினால் நீ (ஜும்ஆவை) பாழாக்கிவிட்டாய். (நூல்: முஅத்தா இமாம் மாலிக்)

இந்த நபிமொழியை இமாம் மிம்பரின் மீது ஏறுவதற்கு முன்பு தமிழில் வாசித்தால் அனைவருக்கும் பிரயோஜனமாகும். மாறாக அரபியில் வாசிப்பதால் யாருக்கு என்ன பயன்?

அஹ்லுஸ் சுன்னா, நவம்பர் 2013

பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்!

உங்களின் ஆலிம்கள் ஒருபோதும் அல்லாஹ்வை அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை வருவாய் தான். எனவே பள்ளி நிர்வாகத்தினரிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம். நபி (ஸல்) அவர்கள் மீது அவர்கள் சொல்லாததை சொன்னதாக, தெரிந்தே பொய் சொல்வது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் பாவமாகும். அத்தகைய பாவத்தை முஅத்தின், மஃஷர் என்ற பெயரில் செய்ய அனுமதித்தால் அந்தப் பாவத்தில் நிர்வாகத்தினராகிய நீங்களும் சேர்ந்து கூட்டாவீர்கள்.

எனவே இந்தப் பாவத்தைத் தடுத்து, அந்தப் பாவத்தில் பங்கெடுக்காமல் விலகிக் கொள்ள வேண்டும் என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

மார்க்கத்தை மறந்த மங்கையர்

ஃபாத்திமா அஜீஸ், கல்பாக்கம்

அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் படைத்து அவர்களுக்குக் கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியிருக்கின்றான். அவர்களுக்கு உணர்வுகளையும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் பிரித்து அறிவித்து இருக்கின்றான்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வாழ்க்கை வழிமுறைகளை இலகுவாகவும் எளிமையாகவும் கண்ணியமாக வாழும் வகையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

ஆனால் நாம் மார்க்க விஷயத்தில் பெரும்பாலும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறோம். முஸ்லிம்கள் பெண்கள் ஆடைகள் விஷயத்தில் மார்க்கம் சொன்ன கட்டுப்பாட்டை மறந்து அலட்சியம் காட்டுகின்றனர். ஹிஜாப் விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.

ஒன்று, பர்தா எனும் அங்கங்களை மறைக்கும் ஆடைகளை அணியாமல் அடுத்தவர்களின் கண்களுக்கு மேனியை விருந்தாக்குகின்றனர்.

இரண்டாவது, பர்தா அணிந்து கொண்டு தலையில் முக்காடு இல்லாமல் அரசியல்வாதிகள் துண்டு போடுவது போல் கழுத்தில் மாலை போட்டுக் கொள்கின்றனர்.

மூன்றாவது, வெளியே தெரியலாம் என்று மார்க்கம் அனுமதித்த பகுதிக்கெல்லாம் கையுறை, காலுறை, முகத்திரை போன்றவற்றைப் போட்டு மறைத்து, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் எது அவசியம் இல்லையோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

சில முஸ்லிமல்லாத சகோதரிகள் கூட அழகான முறையில் ஆடை அணிந்து, வயிறு, இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளை மூடி கண்ணியமான முறையில் உடலை மறைத்து வாழ்வதை நாம் பார்க்கிறோம்.

இயற்கையாகவே தாய்க்கு மகன் மீதும், தந்தைக்கு மகள் மீதும் மாறுபட்ட பாலினம் காரணமாக ஏற்படும் ஈர்ப்பினால் அன்பு, பாசம், புரிந்து கொள்ளுதல், ஒத்துப் போதல் போன்ற விஷயங்களில் இணைந்து செயல்படுவார்கள்.

பெண் பிள்ளைகள் தந்தையின் அதீதமான அன்பைக் கையில் எடுத்துக் கொண்டு மார்க்க விஷயத்தில் பேணுதல் இல்லாமல் சுதந்திரமாக உலா வருகின்றனர். ஆண்களும் தங்கள் மகள்களின், மனைவியின், சகோதரிகளின் ஆடைகள் விஷயத்தில் கவனக்குறைவாக உள்ளனர்.

திருமண நிகழ்ச்சிகள் என்றாலும், நான்கு பேர் ஒன்று கூடும் இடமாக இருந்தாலும் வரம்புகளை மீறி, வரைமுறைகளுக்கு உட்படாது ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். மஹ்ரமானவர்களுடனும் அந்நியர்களுடனும் புர்கா போன்ற முழு ஆடைகள் இல்லாமல் அரைகுறையான மெல்லிய ஆடைகளுடன் இவர்கள் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24:31, 32

முக்காடுகளைத் தங்கள் மார்பின் மீது போட்டுக் கொள்ளுமாறு வல்ல இறைவன் கூறுகின்றான். கால்களைத் தரையில் அடித்து நடக்க வேண்டாம் என்று கூறுகின்றான்.

ஆனால் நமது பெண்களோ எந்த டிசைனில் உள்ளாடை அணிந்தால் ஆண்களின் பார்வை தம்மீது படும் என்றும் எவ்வளவு அகலமான சலங்கை அணிந்தால் மற்றவர்களை ஈர்க்க முடியும் என்றும் கால்களைத் தரையில் அடித்து நடப்பதைப் பார்க்கிறோம்.

அல்லாஹ் விடுத்துள்ள எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொள்ளாமல் நமது வீட்டின் மணவிழாக்களையும் விருந்துகளையும் படம் பிடித்து பந்தி வைக்கிறோம். நமது குடும்பத்தினரின் மானத்தையும் கற்பொழுக்கத்தையும் மாற்றான் கண்டு ரசிக்கும் வகையில் சிடிக்களாக, டிவிடிக்களாக மாற்றி மானமிழக்கிறோம்.

தாய்மார்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. ஏனெனில் அவர்களின் ஆடை நிலையும் அப்படித்தான் உள்ளது. பெண்களைப் பொத்தி, பாதுகாத்து வளர்க்க வேண்டிய பெற்றோர்களே வெட்க உணர்வு இல்லாமல், ரோஷம் இல்லாமல் தன் வீட்டுப் பெண்களிடம் அதை மழுங்கடிக்கச் செய்து விட்டார்கள். வெட்கம் என்பது ஈமானின் கிளைகளில் ஒன்று என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

வளர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் யாரை வேண்டுமானாலும், யாராக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாற்றி கயவர்கள் விலைபேசி விடக்கூடிய காலகட்டம் இது. விடலைப் பருவத்தில் பெண் பிள்ளைகளைப் பாதுகாத்து வளர்ப்பதில் தாய்மார்களுக்கும் பெரும் பங்குண்டு.

முதலில் ஆடை விஷயத்தில் நாம் கண்ணியத்துடன் செயல்பட்டால் நம் பிள்ளைகளையும் செப்பனிட்டு விடலாம். பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் பருவம் அடைந்து விடுவதால் பர்தா அணிந்து வெளியில் செல்ல இந்தப் பெண்கள் சங்கடப்படுகின்றார்கள்.

சிறு வயதிலேயே வெட்க உணர்வையும் கூச்சத் தன்மையையும் ஏற்படுத்தி, அவர்களின் ஆடையை முழுமைப்படுத்தி விட்டால் பிற்காலத்தில் ஏற்படும் பல்வேறு சங்கடங்களையும் சச்சரவுகளையும் நிச்சயமாகத் தவிர்த்துக் கொள்ளலாம். வல்ல அல்லாஹ் சொன்னபடி நாம் நடந்தால் நம்மைக் காக்க அவனே போதுமானவன். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

மார்க்க அடிப்படையில் தனது தந்தை அல்லது சகோதரன் சொல்வதை நல்லொழுக்கம் உள்ள, இறைவனுக்கு அஞ்சிய எந்தவொரு பெண்ணும் மறுக்க மாட்டாள்.

உலக இன்பங்களுக்காகவும், கல்வி, பொருளாதாரம் திரட்டுவதற்காகவும் உங்கள் பெண்களை வற்புறுத்தும் நீங்கள், படைத்த இறைவன் பற்றியும் அவனது சட்டதிட்டங்கள் பற்றியும், ஆடை விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றியும் நீங்களும் அறிந்து கொண்டு, உங்கள் குடும்பத்தாருக்கும் சொல்லுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாüயாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 5200

ஒரு பொறுப்பாளர் என்ற முறையில் உங்கள் குடும்பத்தாருடன் அழகான முறையில் பொறுமையாகப் பேசுங்கள். இறைவனின் சட்டதிட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள். அப்படிச் சொன்னால் ஆடை விஷயத்தில் அவர்கள் உண்மையை உணர்வார்கள்; ஏற்றுக் கொள்வார்கள்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கையும் அச்சமும் இருக்குமானால் மறுமையில் அவனை சந்திக்கவுள்ளோம் என்பதையும் நமது கேள்வி கணக்கு அவனிடம் உள்ளது என்பதையும் சிந்தியுங்கள்.

தன் மக்களுக்கு மார்க்கத்தை அறிமுப்படுத்தாமல் விட்டு விட்டால் படைத்த இறைவன் உங்களை விட்டுவிடுவான் என்று எண்ணாதீர்கள். அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக என்றும் அழியாது நீடித்து நிற்கும் மறு உலக வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; அவனை அஞ்சுபவர்களுக்கு அவன் ஒரு வழியை ஏற்படுத்துவான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் 65:2

—————————————————————————————————————————————————————-

சுத்தம் ஏன்றால் சும்மாவா?

கடந்த நவம்பர் 19ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை உலகக் கழிப்பறை தினமாக அறிவித்தது. இதன் மூலமாக மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக இப்படி அறிவித்துள்ளது.

உலக மகளிர் தினம், குழந்தைகள் தினம், முதியோர் தினம், நீரிழிவு தினம், இருதய நோய் தினம் என்றெல்லாம் அறிவிப்பதால், அனுஷ்டிப்பதால் மக்களிடம் மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால் இந்த நினைவு தினங்கள் அனுஷ்டிப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன்பாடு கிடையாது. மாற்றம் என்பது மனதளவில் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் அதில் எந்தவிதப் பயனும் இல்லை. இந்த அடிப்படையில் உலகக் கழிப்பறை தினம் கொண்டாடுவதால் மட்டுமே சுகாதார விழிப்புணர்வு ஏற்பட்டுவிடாது.

இந்தியாவில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பற்றி உலக வங்கி வெளியிட்ட அறிக்கை அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளியானது. தி இந்து தமிழ் நாளேட்டில் வெளியான அந்தச் செய்தி இது தான்.

சுமார் 60 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கழிப்பறை வசதி இல்லை என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஐ.நா. சபை சார்பில் நவம்பர் 19-ம் தேதி கழிப்பறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. சுமார் 100 கோடி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் 53% வீடுகளில் கழிப்பறை இல்லை…

இந்தியாவில் சுமார் 60 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. அதாவது சுமார் 53 சதவீத வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை வசதி தொடர்பாக இந்தியக் குழந்தைகளிடம் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது,

அதில், முதலாம் வயது பருவத்தில் சுகாதாரமான கழிப்பறை வசதியைப் பெற்ற குழந்தைகள் தங்களின் 6-ம் வயதில் எண்களையும் எழுத்துகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் திறனைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியக் குழந்தைகள் உயரம் குறைவாக உள்ளனர். அதேநேரம் ஆப்பிரிக்க நாடுகளில் வறுமையில் வாடும் குழந்தைகள், இந்திய குழந்தைகளைவிட உயரமாக உள்ளனர். சகாரா பகுதி ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 5 வயது சிறுமிகளைவிட இந்திய சிறுமிகள் 0.7 செ.மீட்டர் உயரம் குறைவாக உள்ளனர். இந்த முரண்பாட்டை ‘ஆசிய புதிர்’ என்றுதான் கூற வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சுகாதாரக் குறைவு மிக முக்கிய காரணியாக உள்ளது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பான் கி – மூன் யோசனை…

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: உலகில் 250 கோடி பேருக்கு கழிப்பறை வசதி இல்லை. அதாவது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கழிப்பறை இல்லை. இதை கருத்தில் கொண்டு முதல்முறையாக கழிப்பறை தினத்தை ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

‘போதிய கழிப்பறை வசதி இல்லாததால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உள்பட்ட 8 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர்.

உலகளாவிய இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண 2025-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கழிப்பறை வசதி கிடைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மார்ச் 14, 2012 அன்று தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு கணக்கெடுப்பு விபரம் வெளியானது. 2011ஆம் ஆண்டுக்கான அந்தக் கணக்கெடுப்பு மக்கள் தொகை பற்றியது மட்டுமல்லாது அவர்களின் வீடுகள் பெற்றிருக்கின்ற வசதி வாய்ப்புகளையும் கணக்கெடுத்திருந்தது.

இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் செல்போன்கள் இருக்கின்றன. ஆனால் கழிப்பறைகள் இல்லை என்று அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற இதழ் இது தொடர்பாக ஒரு புள்ளி விபரத்தைத் தருகின்றது. பத்து கோடி பேர் வாழ்கின்ற மகாராஷ்டிரா மாநிலத்தில் 70 சதவிகிதம் பேர் செல்போன்கள் வைத்திருக்கின்றனர். 60 சதவிகிதம் பேர் டி.வி. வைத்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் பாதிப் பேர் கழிப்பறைகள் வைத்திருக்கவிலலை என்று அந்தப் பத்திரிகை குறிப்பிடுகின்றது.

நிலைகெடாத வளைகுடா

இங்கு தான் இந்தியாவும், உலகிலுள்ள இதர நாடுகளும் முஸ்லிம்கள் வாழ்கின்ற வளைகுடா நாடுகளை சற்று உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.

அங்கு யாரும் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதைப் பார்க்க முடியாது. மக்கள் நடமாடும் பாதைகள், மர நிழல்கள், பொது இடங்களில் கூட ஒருவர் மலஜலம் கழிப்பதைக் காண முடியாது. அப்படி யாராவது மலஜலம் கழிப்பதைப் பார்த்தால் நிச்சயமாக அவர் இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவராகத் தான் இருப்பார்.

வளைகுடா நாடுகள் பொருளாதாரச் செழிப்பில் உள்ளன. அதனால் அவர்களிடம் கழிப்பிட வசதிகள் உள்ளன என்று இதற்குக் காரணம் கூறலாம். வளைகுடா நாடுகள் மட்டுமல்ல, இதர நாடுகளிலும் இஸ்லாத்தை சரியாகக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள் கண்ட இடத்திலும் மலஜலம் கழிப்பதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் இந்த அநாகரிகக் காரியங்களில் ஈடுபடுவதற்குக் காரணம் இங்குள்ள கலாச்சாரச் சீரழிவாகும்.

முஸ்லிம் நாடுகளில் பொது இடங்களில் யாரும் மலஜலம் கழிப்பதில்லை. காரணம் அங்கு உள்ள ஒவ்வொரு பள்ளிவாசலிலும் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக, திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை. இருப்பினும் அது தொற்றுநோயை வரவழைக்கின்றது எனும் போது திருக்குர்ஆன் பொதுவான ஒரு தடையை விதிக்கின்றது. இந்த அடிப்படையில் முஸ்லிம்கள் அதைப் பின்பற்ற வேண்டும்.

அத்துடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை மனதளவில் இதுபோன்ற தூய்மைக்கும் துப்புரவுக்கும் பயிற்சி கொடுத்திருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 397

இன்று அதிகாலையில் ரயில்வே பாதைகளிலும் சாலையோரங்களிலும் ஆண்களும் பெண்களும் மலம் கழிக்க ஒதுங்குவதைப் பார்க்கிறோம். இதற்காக அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதில்லை. ஆனால் இஸ்லாம் வெட்கத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையே.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெட்கத்திற்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம். இந்த மனப்பக்குவத்தின் அடிப்படையில் தான் பெரும்பாலான முஸ்லிம்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதில்லை. அவர்களிடம் இந்த மனப்பக்குவம் ஏற்படுவதற்கு இந்த மார்க்கம் தான் காரணமாகும்.

இன்று அரசாங்கமே கழிவறைக்கு மானியம் வழங்குகின்றது. அதைப் பயன்படுத்தி கழிவறை கட்ட மக்கள் முன்வருவதில்லை.

செல்போன்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழிப்பறைகளுக்குக் கொடுப்பதில்லை என்பதை மேற்கண்ட அறிக்கைகளும் புள்ளிவிபரங்களும் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் மனப்பயிற்சி இல்லாதது தான். இஸ்லாம் இதில் வெற்றி கண்டுள்ளது. அதைத் தழுவிக் கொண்டால் தான் இந்தியாவின் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுதலையும் விமோச்சனமும் கிடைக்கும்.

அரசு, பொதுக் கழிப்பறைகளைக் கட்டிக் கொடுக்கின்றது. மக்கள் அவற்றையும் பயன்படுத்துவதில்லை. இதற்குத் தேவை மனமாற்றம் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.

அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)

நூல்: புகாரி 52

இங்கு சுத்தம் சும்மா வருவதில்லை. அதற்கென்று மாபெரும் புரட்சி தேவைப்படுகின்றது. அந்தப் புரட்சியை நிறைவேற்றுவதற்கு இஸ்லாம் ஒன்று தான் வழியாகும். இஸ்லாம் மனிதனுக்கு இயைந்த ஓர் இயற்கை மார்க்கமாகும். இதைத் தான் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பை மாற்றியமைக்கக் கூடாது. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 17

அற்புதங்களும் அல்லாஹ்வின் தூதரும்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு ஒரு கூட்டம் நபியவர்களிடத்தில் வந்து, நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் சில அதிசயங்களை, அற்புதங்களை எங்களுக்குச் செய்து காட்ட வேண்டும். நாங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம். அவற்றில் எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். ஏதாவது ஒன்றைச் செய்து காட்டினால் போதும் என்று கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக இதைக் கேட்கவில்லை. விதாண்டாவாதத்திற்காகத் தான் இதைக் கேட்கிறார்கள். இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தை துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது

பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்என்பதைக் கூறுவீராக!

எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன். 17:90-96

இந்த வசனங்கள் நபியவர்களும் மனிதர் தான். அவர்களுக்கு எந்த ஆற்றலும், அதிகாரமும் இல்லை. அவர்களால் நினைத்ததையெல்லாம் உண்டாக்க, உருவாக்க முடியாது. இறைவன் நாடினால் மட்டுமே அவற்றைச் செய்ய முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.

ஆனால் அவ்லியாக்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். அவர்களுக்கு எல்லா விதமான சக்தியும் ஆற்றலும் இருக்கின்றது. அவர்கள் அற்புதங்கள் நிறைந்தவர்கள் என்றெல்லாம் நாம் நினைத்து வைத்திருக்கிறோம். அவ்வாறு அவ்லியாக்களுக்கு, மகான்களுக்கு அற்புதங்கள் செய்யும் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினால் இறைவனைப் பற்றி, அவனுடைய வல்லமையைப் பற்றி நம்பாதவர்களாக நாம் ஆகிவிடுவோம். அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையும் நம்பாதவர்களாக ஆகி விடுவோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய பிள்ளைகள் விஷயத்தில் தான் தன்னுடைய அதிகமான பவரை – சக்தியைப் பயன்படுத்துவான். நம்முடைய பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லையென்றால் நாம் அதிகமாகச் செலவிடுவோம். வேறு யாருக்காவது உடல்நிலை சரியில்லையென்றால் கூட நாம் அவ்வளவு செலவிட மாட்டோம். ஆனால் தன்னுடைய பிள்ளைக்கு என்றால், செலவழித்தால் தான் பிள்ளையைக் காப்பாற்ற முடியும் என்றால் தன்னுடைய வீட்டை விற்றும் செலவழிப்பான். கடன் வாங்குவான். அந்தப் பிள்ளை குணமடைவதற்காக என்னென்ன பிரார்த்தனைகள் இருக்கிறதோ, என்னென்ன நேர்ச்சைகள் இருக்கிறதோ என்னவெல்லாம் செய்ய இயலுமோ அத்தனையும் செய்வான். இப்படித்தான் மனிதர்கள் எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறோம். அதுபோன்ற ஒரு சம்பவம் நபியவர்களுடைய வாழ்க்கையிலும் ஏற்படுகிறது.

நபியவர்களுக்கு இப்ராஹீம் என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை பிறந்து, தவழ்ந்து பால் குடித்துக் கொண்டிருக்கும் பருவத்தில் உடல் நிலை சரியில்லாமல் போகின்றது. அந்தக் குழந்தை மரணத் தருவாயில் மூச்சு வாங்கிக் கொண்டு துடிக்கிறது. அதைப் பார்த்த நபியவர்களுடைய கண்கள் கண்ணீரைச் சுரக்கின்றன. நபியவர்களின் கண் முன்னே அந்தக் குழந்தையின் உயிர் பிரிகிறது. அந்தக் குழந்தையின் உயிரை நபியவர்களால் காப்பாற்ற முடிந்ததா? அவர்களுக்கு அத்தகைய ஆற்றல் இருந்ததா?

இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள ஹதீஸ் பின்வருமாறு:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்ஃபின் புதல்வரே!என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூற மாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1303

அவ்லியாக்கள் பெயரைச் சொன்னாலே குணமாகிவிடும். மவ்லீதை ஓதினால் அனைத்து நோய்களும் குணமாகிவிடும். ஸலவாத்துன் நாரியா ஓதினால் நோய்கள் தீர்ந்துவிடும். நபிகள் நாயகம் நோயாளியைக் கண்ணால் பார்த்தாலே அவருடைய நோய் குணமாகிவிடும். இப்படியெல்லாம் மவ்லீது பாடல்களிலும், மீலாது விழா மேடைகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இதைச் சொல்வது கிடையாது. நபியவர்களுக்கு இப்படிப்பட்ட தன்மைகள் இருக்கின்றன என்று சொல்லி இதைப் போன்று அப்துல் காதர் ஜீலானிக்கும் இருக்கின்றது. ஷாகுல் ஹமீது பாதுஷா, ஏர்வாடி பாதுஷா போன்றவர்களுக்கும் இந்த ஆற்றல் இருக்கின்றது என்று சொல்வதற்காகத் தான்.

ஆக, நாம் இந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் அல்லாஹ்விற்குரிய தன்மைகளை, தகுதிகளை, அதிகாரத்தை வேறு எவருக்கும் நாம் கொடுத்துவிடக் கூடாது. அவ்வாறு நாம் அல்லாஹ்விற்குரிய தன்மைகளை நபியவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு மற்ற எல்லாருக்கும் கொடுத்து விடுவோம்.

ஷைத்தான் நம்மை இதிலிருந்து தான் வழிகெடுப்பான். நபியவர்களுக்குப் பல சிறப்புகள் இருக்கின்றது. பல அந்தஸ்துகள் இருக்கின்றது. அவர்களுடைய புகழ், தகுதி, அவர்களுடைய தியாகம், வீரம் இதைச் சொல்லித் தான் வழிகெடுப்பான்.

தன்னுடைய மகனுக்கு அல்லாஹ் விதித்த மரணத்தையே நபியவர்களால் தடுக்க முடியவில்லையென்றால் இன்று அவர்களிடம், “நபியே நீங்கள் பார்த்தாலே எங்களுடைய நோய்கள் துன்பங்கள் நீங்கிவிடும்’ என்று மவ்லீது புத்தகத்தை வைத்து கொண்டு பாட்டு படிக்கிறார்கள். நபியவர்களால் எவ்வாறு துன்பத்தைப் போக்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

அவ்லியாக்களின் பெயரால் கட்டுக்கதைகள்

இன்றைய முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அவ்லியாக்களைப் பற்றிய எண்ணம் வைத்திருக்கிறார்கள்?

அப்துல் காதர் ஜீலானியிடம் ஒரு பெண்மனி வந்து தனது மகனின் பெயரைச் சொல்லி, தன்னுடைய மகன் இறந்து விட்டார் என்று வருத்தத்துடன் சொல்லி அழுகின்றார். அதற்கு அப்துல் காதர் ஜீலானி அந்தப் பெண்ணிடம், உன்னுடைய மகன் எப்பொழுது இறந்து போனார் என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மனி, “இரவில் மவுத்தானார்’ என்று விடையளித்தார்.

அப்பொழுது அப்துல் காதர் ஜீலானி அவர்கள் தனது தலைக்கு மேலே எட்டிப்பார்த்தார். மலக்குல் மவ்த் அன்றைய தினம் யாரெல்லாம் இறந்து போனார்களோ அவர்களை ஒரு கூடையில் வைத்து வானத்திற்கு எடுத்துச் சென்றதைப் பார்த்தார். உடனே அப்துல் காதர் ஜீலானி அவர்கள் அந்த மலக்கிடம் அந்தப் பெண்மனி சொன்ன பெயர் உள்ள மனிதரை மட்டும் இறக்கிவிடும் படி கட்டளையிட்டார்.

அதற்கு அந்த மலக்குல் மவ்த் அதெல்லாம் முடியாது. நான் அல்லாஹ்வுடைய கட்டளையின் படிதான் நடப்பேன் என்று மறுத்து விட்டார். அதற்கு அப்துல் காதர் ஜீலானி தன்னிடம் வைத்திருந்த பாசக்கயிற்றை எடுத்து வீசினாராம். அது மலக்குல் மவ்த்தின் காலில் சிக்கிக் கொண்டதாம். உடனே அந்த மலக்குல் மவ்த் தடுமாற்றத்தால் கூடையை விட்டு விட்டாராம். கூடை கவிழ்ந்து அதில் இருந்த, இறந்து போன அனைவரும் உயிர் பிழைத்தார்களாம். பிரிந்து சென்ற உயிர் மீண்டும் அவர்களிடம் வந்து சேர்ந்து கொண்டதாம். இதுதான் அந்தக் கதை.

அவ்லியாக்கள் என்ற பெயரில் எழுதி வைத்திருக்கின்ற இந்த மாதிரியான கதைகளையும், புராணங்களை மிஞ்சுகின்ற அளவுக்குக் கிறுக்குத்தனமான இந்த கட்டுக்கதைகளையும் நம்முடைய முஸ்லிம்கள் இன்றளவும் உண்மையாக நம்புகிறார்கள் என்றால் இது எவ்வளவு வேதனைக்குரிய விஷயம்.

அல்லாஹ்வுடைய தூதருக்கே அவருடைய மகனுடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை. அந்த ஆற்றல் தனக்கு இல்லையென்று சொல்வதற்குத்தான் அவர்களை நபியாக அனுப்பினான். அத்தகைய தூய்மையான சிந்தனையைத் தூண்டக் கூடிய மார்க்கத்தில் இப்படி ஒரு கதையா? இந்தக் கதையைச் சொன்னால் ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா? இதைக் கேட்டால் நமக்கு கோபம் தானே வர வேண்டும்.

அல்லாஹ்வுடன் விளையாடுகிறீர்களா? அல்லாஹ்வை கிள்ளுக்கீரையாக ஆக்கப் பார்க்கிறீர்களா? இந்த அபத்தக் கதைகளை அல்லாஹ்வின் ஆலயத்திலேயே மக்களுக்குச் சொல்கிறீர்களே என்று நமக்குக் கோபம் வர வேண்டாமா? இதையெல்லாம் பார்க்கும் போது இவர்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்:

நபியவர்களுடைய மூத்த மகள் ஜைனப் (ரலி) அவர்களுடைய மகன் (அதாவது நபியவர்களுடைய பேரன்) மதீனாவில் இருக்கும் போது கடுமையான நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் இருக்கிறார். எனவே நீங்கள் அவசரமாக வரவேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் ஜைனப் (ரலி) ஆள் அனுப்புகிறார்கள். ஆனால் இந்தச் செய்தி நபியவர்களுக்கு வந்தடைந்த பிறகும் அவர்கள் தமது பேரனைப் பார்ப்பதற்குச் செல்லவில்லை.

உசாமா பின் ஸைத் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப்-ரலி) தம் மகன் மரணத் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு சலாம் கூறி அனுப்பியதோடு, “எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!என்றும் கூறி அனுப்பினர்கள்.

அப்போது அவர்களுடைய மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத், ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப் போன பழைய தோல் துருத்தியைப் போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன.

அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்கள்)?” என சஅத் (ரலி) அவர்கள் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள, “இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் விதைத்த இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்என்றார்கள்.

நூல்: புகாரி 1284

மேலும் இந்த ஹதீஸ் புகாரி 1204, 5223, 6163, 6829 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கடைசியாக அவர்களுடைய பேரன் இறந்து விடுகின்றார். அவர்களுடைய பேரன் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே வேதனைப்பட்டு மரணமடைகிறார்கள். அதை அவர்களால் தடுக்க முடிந்ததா? அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்ட வேதனையைப் போக்க முடிந்ததா? அந்தச் சிறுவனை வேதனை இல்லாமல் மரணிக்கும்படி செய்ய முடிந்ததா?

அனைத்தையும் பார்த்துக் கொண்டு அவர்களால் கண்ணீர் தான் சிந்த முடிந்தது. அவன் நேரத்தை நிர்ணயித்து விட்டால் நாம் தடுக்கவா முடியும் என்று சொல்லி ஆறுதல் தான் படுத்த முடிந்தது.

உலகத்தில் எத்தனையோ மனிதர்களுக்கு மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்று கொடுத்திருக்க நபியவர்களுக்கு மட்டும் ஏன் இத்தகைய சோதனையைக் கொடுக்கிறான்? அவர்களைத் தண்டிப்பதற்காகவா? இல்லை. இறைவனாகிய நான் ஒருவன் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காகத்தான்.

“நான் நினைத்தால் எதையும் செய்வேன். நபிமார்கள் அனைவரும் மனிதர்கள்; என்னுடைய அடிமைகள்; ஆனால் சிறந்த அடிமைகள். அவ்வளவு தானே தவிர அவர்கள் கடவுள் கிடையாது. கடவுளுக்குரிய அந்தஸ்து அதிகாரம் எதுவும் கிடையாது’ என்பதை உணர்த்துவதற்காகத் தான்.

அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்சும், பாத்திமா என நான்கு பெண் குழந்தைகளைக் கொடுத்தான். அந்த நான்கு பெண் குழந்தைகளும் பெரியவர்களாக வளர்ந்து ஆளாகி திருமணம் முடித்தார்கள். ஆனால் அதில் பாத்திமாவைத் தவிர மற்றவர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே மரணித்து விட்டார்கள். அந்த மூன்று பெண் குழந்தைகளும் தன் கண்முன்னே இறந்த போது அவர்களைக் காப்பாற்ற முடிந்ததா?

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், மகான்கள், அவ்லியாக்கள் நினைத்தால் எதையும் செய்வார்கள் என்ற கதைகள் எல்லாமே பொய்தான். மகான்கள், அவ்லியாக்கள் அனைவரும் மனிதர்கள் தான்.

மனிதத்தன்மையை உறுதிப்படுத்தும் மறதி

சின்னச் சின்ன விஷயமாக இருந்தாலும், வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல் என எதை எடுத்துக் கொண்டாலும் பல சந்தர்ப்பங்களில் நபியவர்களும் மனிதர் தான் என்பதை அல்லாஹ் நிருபித்துக் கொண்டே இருக்கிறான்.

அடுத்தது அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயத்தைக் கூறுவதாக இருந்தால் நபியவர்களின் தொழுகையில் ஏற்பட்ட மறதியைக் குறிப்பிடலாம். நபியவர்கள் ஒருநாள் தொழுது கொண்டிருக்கும் போது நான்கு ரக்அத் தொழுவதற்குப் பதிலாக இரண்டு ரக்அத் தொழுது ஸலாம் கொடுத்து விடுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

– (இதன் அறிவிப்பாளர்கüல் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நபியவர்கள் (அத்தொழுகையின் ரக்அத்தை) கூடுதலாக்கினார்களா அல்லது குறைத்து விட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.-

(தொழுகையை முடிக்க) அவர்கள் சலாம் கொடுத்தபோது அவர்கüடம், “இந்தத் தொழுகையின்போது (தற்போதுள்ள தொழுகையின் ரக்அத்தை) மாற்றுகின்ற (இறை அறிவிப்பு) ஏதேனும் வந்ததா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் இவ்வாறு (வினவுகின்றீர்கள்?)” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “நீங்கள் இப்படி இப்படித் தொழுதீர்கள் (அதனால் தான் கேட்கிறோம்)என்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின் இருப்பில் உட்கார்வது போன்று) தமது காலை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சிரவணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்துவிட்டுப் பின்னர் (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள். இதன் பின்னர் எங்களை முன்னோக்கித் திரும்பியபோது, “ஓர் விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் மாற்றங்க(ளை அறிவிக்கும் இறை அறிவிப்பு)கள் வருமானால், கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்துவிடுவேன். ஆயினும் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்; (சில நேரங்கüல்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகின்றேன். அவ்வாறு நான் (எதையேனும்) மறந்துவிடும் போது எனக்கு (அதை) நினைவூட்டுங்கள்; என்று கூறிவிட்டு, “உங்கüல் ஒருவர் தமது தொழுகையில் (எதையேனும் கூடுதலாகச் செய்ததாகவோ குறைத்துவிட்டதாகவோ) சந்தேகிக்கும் போது சரியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் (தொழுகையைப்) பூர்த்தி செய்து சலாம் கொடுத்த பின்னர் (மறதிக்குரிய) இரண்டு சிர வணக்கங்கள் (சஜ்தாக்கள்) செய்யட்டும்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 401

இதுபோன்று மறதி ஏற்பட்ட சம்பவங்கள் ஒன்று இல்லை. பல சம்பவங்கள் நபிகளாருடைய வாழ்க்கையில் நடந்துள்ளன.

இன்றைக்கு தரீக்கா, முரீது, ஷெய்கு போன்றவர்களெல்லாம் ஒரு வாதத்தை வைத்துத் தான் ஏமாற்றுகிறார்கள். நீங்கள் தொழுகிறீர்களே அல்லாஹ்வுக்கு ஈடுபாடாகத் தொழ முடிகிறதா? அந்தப் பக்குவம் உங்களிடம் இருக்கிறதா? என்று நம்மிடம் கேட்பார்கள். அவ்வாறு நீங்கள் இரண்டரக் கலந்து முழு ஈடுபாட்டுடன் தொழ வேண்டுமானால் எங்களை போல ஷெய்கிடம் முரீதாக வேண்டும். நாங்கள் தொழுகையில் தக்பீர் கட்டினால் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்துக் கொண்டே தொழுது கொண்டிருப்போம். வேறு எதுவும் எங்களுடைய சிந்தனைக்கு வராது. மழை பெய்தாலும் தெரியாது. இடி இடித்தாலும் தெரியாது என்று கூறுவார்கள்.

இதைப்போன்று நீங்களும் வர வேண்டுமானால் எங்களிடம் முரீது வாங்கி, திக்ர் செய்து வந்தால் படிப்படியாக இருபது அல்லது முப்பது வருடங்களில் எங்களைப் போன்று ஆகிவிடலாம் என்றெல்லாம் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விடுகின்றனர். தரீக்காவாதிகள் இவ்வாறு நாங்கள் உங்கள் உள்ளத்தை பக்குவப்படுத்தப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். ஆனால் அவர்களது உள்ளத்தையே அவர்களால் பக்குவப்படுத்த முடியாது.

யாருக்குமே இது இயலாத காரியம். நாம் தொழுகையில் தக்பீர் கட்டிய பிறகு தான் எல்லா ஞாபகமும் நினைவுக்கு வரும். அது வரைக்கும் எந்தச் செயலும் நினைவுக்கும் வராது. தொழுகையில் மட்டும் தான், அவன் எவ்வளவு தர வேண்டும்? இவன் எவ்வளவு தர வேண்டும்? கடையில் இன்றைக்கு எவ்வளவு வியாபாரம் நடந்தது? என்று பல செயல்கள் நினைவுக்கு வரும்.

சொல்லப் போனால் இவ்வாறு அனைத்து ஞாபகமும் வருவது தான் இந்த மார்க்கம் உண்மையான மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றது. கெட்ட சக்தி ஒன்று இருக்கிறது; வணக்க வழிபாடுகளில் நம்மைக் கெடுக்கின்ற ஷைத்தான் ஒருவன் இருக்கின்றான் என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.

ஷைத்தான் இருப்பது உறுதியானால் அல்லாஹ் இருப்பதும் உறுதியாகிவிடும். ஷைத்தான் இருப்பதை நாம் உறுதி செய்து விட்டால் அல்லாஹ் இருப்பதையும் நாம் உறுதி செய்து விடலாம். மற்ற எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் நினைவுக்கு வராத காரியங்கள், 10 வருடங்களுக்கு முன்னால் நாம் மறந்த காரியங்களெல்லாம் தொழுகையில் ஈடுபடும் போது மட்டும் தான் நினைவுக்கு வருகின்றது. ஆக எந்த மனிதராலும் ஒன்றிப்போய் இறைவனோடு இரண்டறக் கலந்து தொழ முடியாது. நபிகளாரும் அவ்வாறு தொழுதது இல்லை. அவ்வாறு யாரையும் அல்லாஹ் படைக்கவுமில்லை.

தொழுகையில் அடியான் தன்னுடைய இறைவனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான் என்று கூறிய நபியவர்களுக்கே, அதுவும் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தொழுகையிலேயே அவர்களுக்கு எத்தனை தொழுதோம் என்ற மறதி ஏற்பட்டு விடுகின்றது என்றால் இந்தச் சம்பவம் நபியவர்கள் நம்மைப் போன்ற ஒரு மனிதர் தான் என்பதை உணர்த்தவில்லையா?

நபியவர்களுக்கே இந்த நிலை என்றால், தொழுகையில் நாங்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்கிறோம்; எங்களுக்கு தொழுகையைத் தவிர வேறொன்றும் தெரியாது; தொழும் போது எங்களை யாரேனும் தாக்கினால் கூட எங்களுக்குத் தெரியாது என்றெல்லாம் கதை விடும் போலி ஷெய்குகளின் நிலையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

மனதை ஒருமுகப்படுத்த முடியுமா?

நபியவர்களுடைய வாழ்க்கையில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி அடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், “எனது இந்த கருப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த.) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) “அன்பிஜான்‘ (நகர எüய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையிலிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டதுஎன்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், “நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன். அது என்னைக் குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 373, 5817

அல்லாஹ்வுடைய தூதராக இருந்தும் கூட ஒருமித்த மனதாக, இரண்டறக் கலந்து முழு ஈடுபாட்டுடன் தொழ முடிந்ததா? அதுவும் தன்னுடைய பலவீனத்தை மறைக்காமல் மக்களிடத்தில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இன்றைக்கு தரீக்காவாதிகள், ஷெய்குகள் என்று சொல்லக்கூடியவர்கள் தங்களுக்குப் பலவீனம் இல்லாதது போல் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எந்த வகையில் உரசிப் பார்த்தாலும் சரி! உண்பது, உறங்குவது, அணிவது, நடப்பது, பேசுவது என எப்படி உரசிப் பார்த்தாலும் மனிதராகத் தான் இருந்தார்கள். மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகளாக இருக்கின்றன. இன்னும் இது குறித்து ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? என் சகோதரிகளுக்குச் சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை. இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கவும்.

முஹம்மத்

செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை.

இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வந்தர்கள், ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். ஒருவருடன் ஒப்பிடும் போது செல்வந்தராக காணப்படுபவர் இன்னொருவருடன் ஒப்பிடும் போது ஏழையாக இருப்பார்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் மக்களைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவர் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார். அவருக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் செல்வந்தராகக் கருதப்படுவார்.

ஆனால் சவூதியில் இவருக்குச் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பார்வையில் இவர் ஏழையாவார். ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்தால் அந்த வீட்டின் உரிமையாளர் பார்வையில் இவர் பரம எழையாவார். இவரது தரத்தில் உள்ளவர்களுக்குத் தான் அரபிகளால் ஜகாத் கொடுக்க முடியும். இல்லாவிட்டால் அரபிகள் ஜகாத் கொடுக்க முடியாது.

அரபுகளிடம் ஜகாத் பெற்ற இவர் தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கலாம். நானே ஜகாத் வாங்கியிருக்கிறேன்; நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று கருதினால் அந்த ஊர் மக்களுக்கு ஜகாத் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் அந்த ஊரில் இவரை விட குறைந்த வருவாய் உள்ளவர்கள் கூட ஜகாத் கொடுப்பார்கள். ஆனால் அவர்களை விட அதிக வருமானம் உள்ளவர் நானே ஜகாத் வாங்கி இருக்கிறேன் நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று வாதிடுவது வரட்டு வாதமாகவே அமையும்.

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்குபவராக இருக்கக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருந்தால் இவ்வாறு வாதிடலாம். அவ்வாறு எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இருப்பதாக நாம் தேடிப்பார்த்த வகையில் கிடைக்கவில்லை.

ஒரு ஊரில் பலகோடி ரூபாய்களுக்கு அதிபதியாக ஒருவர் இருக்கிறார். அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் லட்சாதிபதி அவர் பார்வையில் ஏழையாக உள்ளதால் இவருக்கு ஜகாத் கொடுக்கலாம். இவரும் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கி விட்டு தனது வருமானத்தையும் தனக்கு ஜகாத்தாக கிடைத்த வருமானத்தையும் கணக்கிட்டு அதில் இருந்து தன்னை விட ஏழைகளுக்கு இவர் ஜகாத் கொடுக்கலாம்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.

11 பவுன் தங்கம் வைத்து இருந்தால் ஜகாத் கடமை என்ற நிலையில் நாம் இருக்கிறோம். தங்கத்தை அளவுகோலாகக் கூறும் ஹதீஸில் விமர்சனம் உள்ளது. வெள்ளியை அடிப்படையாகக் கூறும் ஹதீஸ் விமர்சனம் இல்லாததாக இருக்கிறது. இது குறித்து ஜமாஅத் அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். வெள்ளியை அளவுகோலாக கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்ற முடிவுக்கு வந்தால் இன்றைய மதிப்பில் ஐந்தாயிரம் ரூபாய் வைத்துள்ளவருக்கு ஜகாத் கடமையாகிவிடும்.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது வெள்ளியை அளவுகோலாக கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்றால் இன்றைய மதிப்பில் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

தங்கத்தை அளவு கோலாக கொண்டால் 11 பவுன் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாகும்

தங்கத்தை அளவு கோலாகக் கொள்ளும் ஹதீஸ் சரி என்றால் மூன்று லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு ஜகாத் கடமையாகாது. ஆனால் வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்றால் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புக்கு பணம் அல்லது தங்கம் வெள்ளி இருந்தால் ஜகாத் கடமையாகி விடும்.

முப்பதாயிரம் ரூபாய் அல்லது அதன் மதிப்புடைய தங்கம், வெள்ளி, பணம் இல்லாதவர் மிகச் சிலரே இருப்பார்கள். அப்படியானால் ஊருக்குப் பத்து பேர் கூட ஜகாத் வாங்கத் தகுதி உடையவராக மாட்டார்கள். ஜகாத் என்ற அம்சம் வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கும். எனவே ஜகாத் வாங்குபவர் ஜகாத் கொடுப்பவராகவும் இருக்கலாம் என்ற நிலைபாடு இருந்தால் தான் ஜகாத் என்பது நடைமுறையில் இருக்கும்.

எனவே நமக்கு யாரும் ஜகாத் கொடுத்தால் அவர்கள் நம்மை விட மேல்நிலையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் இருந்து நாம் ஜகாத்தை வாங்குவது குற்றமில்லை. எனெனில் அவருடன் ஒப்பிடும் போது நாம் எழையாகத் தான் இருக்கிறோம். அதுபோல் நம்மைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது நாம் அவரை விடச் செல்வந்தராக இருப்போம். அதனடிப்படையில் நாம் கொடுப்பவர்களாகவும் இருக்கலாம்.

அல்லாஹ் ஒருவன் மட்டுமே யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல் செல்வந்தன் என்ற பட்டத்துக்கு கனீ என்ற பட்டத்துக்கு உரியவன். மனிதர்களில் அப்படி ஒரு செல்வந்தனும் இல்லை.

? என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார், இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா, எத்தனை நாட்கள் இருக்கலாம் ?

அப்துல் ரஹ்மான்

உங்கள் மனைவி உங்களை என்ன இகழ்ந்து பேசினார்? அவரை நீங்கள் இகழ்ந்து பேசியதால் அவர் உங்களை இகழ்ந்து பேசினாரா? நீங்கள் ஒன்றுமே செய்யாமல் சொல்லாமல் இருக்கும் போது இகழ்ந்து பேசினாரா? அவர் இகழ்ந்து பேசியது முடிந்தால் பெருந்தன்மையுடன் உங்களால் அலட்சியப்படுத்தத்தக்கதா? அல்லது எவ்வளவு முயன்றாலும் அலட்சியப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு இருந்ததா? இப்படிப் பல விஷயங்கள் இதில் உள்ளன.

பொதுவாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களிடம் உள்ள குறையை உணராமல் அடுத்தவரின் குறையை மட்டும் பேசுவார்கள். உங்கள் குற்றச்சாட்டு அது போன்றதா என்று நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

மன்னிப்பு கேட்டால் தான் மன்னிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் மன்னிப்பு கேட்காவிட்டாலும் மன்னிக்க முடியும்.

பல நாட்கள் அவரும் உங்களுடன் பேசவில்லை; நீங்களும் அவருடன் பேசவில்லை என்பது உங்கள் கேள்வியில் இருந்து தெரிகிறது.

இல்வாழ்க்கை அற்றுப் போன வயது என்றால் அது பிரச்சனை இல்லை.

ஒருவருக்கொருவர் தேவைப்படும் வயதில் இருவருமே  ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது போல் நடந்து கொண்டால் அதில் வேறு பிரச்சனை இருக்கலாம்.

அதன் பிறகும் அப்படி இருந்தால் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு கவுன்சிலிங் எடுக்க வேண்டும்.

பேசுவதைப் பொறுத்த வரை மார்க்கம் சம்பந்தமான விஷயமாக இல்லாமல் உலக விஷயத்துக்காக என்றால் அதிக பட்சம் மூன்று நாட்கள் தான் பேசாமல் இருக்க வேண்டும்

எந்த முஸ்லிமும் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகையாக இருக்க கூடாது என்பது நபி மொழி

பார்க்க: புகாரி 6076

அவனைப் பார்த்து இவன் புறக்கணிப்பதும் இவனைப் பார்த்து அவன் புறக்கணிப்பதும் கூடாது. அவர்களில் சிறந்தவர் ஸலாம் கூறி பேச்சை ஆரம்பிப்பவர் தான் என்றும் நபியவர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க: புகாரி 6077

இது பேசுவதற்கான எல்லையாகும்.

கணவன் மனைவிக்கு இடையே அதையும் கடந்த உறவு உள்ளது. உடல் ரீதியான தேவைகள் இருவருக்கும் உள்ளது. அதற்கு அதிகப்பட்சமாக நான்கு மாதம் எல்லை தான் உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தால் கூட அதை முறித்து விட்டு இருவரும் இணைந்து கொள்ள வேண்டும்.

தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். விவாகரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:226, 227

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி “அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்” என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது.

இவ்வாறு சத்தியம் செய்தவர் இதற்காக மனைவியைப் பிரியத் தேவையில்லை. நான்கு மாத அவகாசத்துக்குள் சத்தியத்தை முறித்து விட்டு மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். காலமெல்லாம் மனைவியுடன் சேர மாட்டேன் என்று ஒருவர் குறிப்பிட்டாலும் அவருக்குரிய கெடு நான்கு மாதங்கள் தாம்.

நான்கு மாதம் கழித்துத்தான் சேர வேண்டும் என்று இவ்வசனத்திற்கு (2:226) அர்த்தம் இல்லை. நான்கு மாதத்திற்குள் சேர வேண்டும் என்றே பொருள்.

இன்றைக்குச் சத்தியம் செய்து விட்டு நாளைக்குக் கூட அதை முறிக்கலாம். நான்கு மாதம் கடந்த பின்னும் சேராவிட்டால் விவாகரத்துச் செய்து விட வேண்டும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.

சிலர், மனைவியுடன் வெறுப்பு கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்தாமலும், அவளை விவாகரத்துச் செய்யாமலும் கொடுமைப்படுத்துவர். வருடக் கணக்கில் பெண்களை இவ்வாறு நடத்தும் கொடியவர்களை ஜமாஅத்துகள் கண்டு கொள்வதில்லை.

நான்கு மாதத்துக்குள் வாழ்வு கொடுக்காவிட்டால், அதையே விவாகரத்தாக அறிவிக்கும் கடமை ஜமாஅத்துகளுக்கு உண்டு. அந்த அதிகாரம் இவ்வசனத்தின் மூலம் சமுதாயத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

? உயிர் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்கலாமா?

முஹம்மது, அஜ்மீர்

இஸ்லாத்தின் உயிர் மூச்சான கொள்கை ஏகத்துவக் கொள்கையாகும். இந்த ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

இறந்தவர்களுக்காக நினைவுச் சின்னம் எழுப்புவது ஏகத்துவக் கொள்கைகயைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாகத் தோற்றுவிக்கப்பட்ட, பிற மதக் கலாச்சாரமாகும். நாளடைவில் அவற்றுக்கு புனிதத்தன்மை இருப்பதாகக் கருதி அவற்றை வணங்கும் நிலைக்கு மக்கள் சென்றுவிடுவர்.

இதனால் தான் நபிகள் நாயகம் தமக்கோ  தமக்கு முன் வாழ்ந்து மறைந்த நல்லோர்களுக்கோ இது போன்று நினைவுச் சின்னங்கள் அமைக்க அனுமதி அளிக்கவில்லை. மாறாக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். தடை செய்துள்ளார்கள்.

யூதர்கள் தங்களில் ஒரு நல்லடியார் இறந்து விட்டால் அவர்களின் சமாதியில் கட்டடம் எழுப்பி அவர்களின் நினைவாக அவரது உருவத்தையும் பதித்து விடுவார்கள். இந்த செயலைச் செய்ததால் யூதர்களை நபியவர்கள் சபித்துள்ளார்கள்.

அபிசீனிய நாட்டில் தாம் கண்ட “மரியாஎன்றழைக்கப்ட்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.  அதில் தாம் கண்ட உருவப்படங்களைக் குறித்தும் உம்மு சலமா அவர்கள் குறிப்பிட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்களிடையே நல்ல அடியார் (அல்லது நல்ல மனிதர்) ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்தும் விடுவார்கள். இத்தகையோர் தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 434

ஒருவர் நல்லடியாராகவே இருந்தாலும் அவர் இறந்த பிறகு அவருக்காகக் கட்டடம் எழுப்புவது நினைவுச் சின்னம் அமைப்பது கூடாது என்று நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.

இணை வைப்பாளர்கள் நினைவுச் சின்னமாக ஒரு மரத்தை ஏற்படுத்தி அதற்கு புனிதத் தன்மை இருப்பதாக நம்பலானார்கள். முஸ்லிம்களும் அது போன்று தங்களுக்கும் ஒரு மரத்தை ஏற்படுத்தக் கோரிய போது நபியவர்கள் அதைக் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து ஹுனைன் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவ்வழியில் இணை வைப்பாளர்களுக்கு ஒரு மரம் இருந்தது. (புனிதம் கருதி) அங்கே அவர்கள் தங்குவார்கள். அதில் தங்களது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். அதற்கு “தாத்து அன்வாத்என்று சொல்லப்படும். நாங்கள் பசுமையான பிரம்மாண்டமான ஒரு மரத்தைக் கடந்து சென்ற போது, “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் ஒரு தாத்து அன்வாத்தை ஏற்படுத்துங்கள்என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுள்களை எற்படுத்தித் தருவீராக!” (7:138) என்று மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தினர்கள் கேட்டதைப் போன்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக இவையெல்லாம் (நரகத்திற்கு அழைத்துச் செல்லும்) வழிகள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களின் வழியை ஒவ்வொன்றாக நீங்கள் கடைப்பிடிப்பீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாகித் (ரலி)

நூல்: அஹ்மத் (20892)

நினைவுத் தூண்கள் அமைக்கும் பிறமதக் கலாச்சாரத்தைப் பார்த்து நாமும் அது போன்று அமைக்கலாமே என்று கேட்பது மூஸா நபியின் சமுதாயம் மூஸா நபியிடம் கோரிக்கை வைத்ததைப் போன்றதாகும்.

இன்றைக்கு நடக்கும் இணை வைப்புக் காரியங்களில் அதிகமானவை இறந்தவர்கள் பெயரில் ஏற்படுத்திய நினைவுச் சின்னங்கள் பெயரால் தான் நடைபெறுகின்றன. நபியவர்கள் தடை செய்துள்ளதால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி கிடையாது.