தலையங்கம்
கொள்கைவாதிகளைக் குறி வைக்கும் ஷைத்தான்
ஒருவர் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த மாத்திரத்தில் அவரை நோக்கி பொதுமக்களின் புலனாய்வுப் பார்வை பொழுதனைத்தும் பின்தொடரத் தொடங்கி விடும். நம்முடைய கடந்த கால வாழ்க்கைப் பக்கங்களை நாம் கூட மறந்து விடுவோம். ஆனால் ஏகத்துவத்தின் எதிரிகள் அதை நமக்கு முன்னால் புரட்டிப் போடுவர்.
அதள பாதாளம் வரை போய் நம்முடைய அந்தரங்க வாழ்க்கையின் அணு அளவு அசைவையும் அம்பலமாக்கி விடுவர். இதற்கு ஃபிர்அவ்ன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவனிடம் இறைத்தூதர் மூஸா நபியவர்கள் தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க வந்த போது அவன் இந்த வேலையைத் தான் செய்கின்றான்.
ஃபிர்அவ்னிடம் சென்று “நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!” என்று கூறுங்கள்! (எனறும் இறைவன் கூறினான்.)
“குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்க வில்லையா? உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!” என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.
“நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்” (என்றும் கூறினான்.)
அல்குர்ஆன் 26:17-19
மூஸா (அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னால் இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவருக்கு ஆதரவாக மற்றொருவரை மூஸா (அலை) அவர்கள் ஒரு குத்து விட்ட போது அவன் இறந்து விடுகின்றான். இதைத் தான் ஃபிர்அவ்ன் சொல்லிக் காட்டுகிறான்.
மூஸா (அலை) அவர்கள் திட்டமிட்டு இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை. அதனால் அதை அவர்கள் தைரியமாக ஒப்புக் கொண்டு தூதுச் செய்தியைச் சரியாக ஒப்புவிக்கின்றார்கள்.
“நான் நேர் வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்” என அவர் கூறினார்.
அல்குர்ஆன் 26:20
தவ்ஹீதுக் கொள்கையைப் போதிப்பதால் மட்டுமல்ல! சாதாரணமாக சீர்திருத்தத்தில் இறங்கினாலே போதும். மக்கள் நம்மை உற்று நோக்க ஆரம்பித்து விடுவார்கள். ஊழலை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் அன்னா ஹஸாரே குழுவின் உறுப்பினரான கிரண்பேடி, பொது நிகழ்ச்சியில் பங்கேற்க விமானக் கட்டணத்தை விட அதிகமாகப் பெற்றதைக் கண்டுபிடித்து, “ஊழலைப் பற்றிப் பேச உனக்குத் தகுதியில்லை’ என்று விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஏகத்துவப் பிரச்சாரம் என்ற மாத்திரத்தில் இந்தப் பார்வை தானாக வந்து விடும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஓர் அழைப்பாளரின் கடந்த கால வாழ்க்கை, ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு ஒரு சரியான முதலீடும் மூலதனமும் ஆகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை அப்படித் தான் மூலதனமாக அமைந்தது.
அல்குர்ஆனை அவர்கள் மக்களிடம் சமர்ப்பிக்கும் போது, பொய் சொல்கிறார் என்ற குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் பொய் சொல்லாத புனிதர் என்று தெரிந்த பின்பும் இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் மீது வீசியெறிந்தனர். ஆனால் அல்லாஹ் அதற்கு நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் பதிலளிக்கின்றான்.
“அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 10:17
ஓர் அழைப்பாளனின் வாழ்வு இப்படித் தூய்மையாக இருந்தால் அது ஒரு சிறப்புத் தான். அப்படியில்லாமல் கறை பட்டு, களங்கப்பட்டு இருந்து அவர் திருந்தி விட்டால் அது போதுமானது.
இன்று நம்முடைய ஏகத்துவப் பாதையில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர்த்து மற்றவர்கள் இணை வைப்பு என்ற பாவத்தைச் செய்யாதவர்கள் கிடையாது. பாவங்களில் அது தான் மன்னிக்க முடியாத பாவம். அந்தப் பாவத்தை விட்டே திருந்திய பிறகு கடந்த காலத்தில் செய்த மற்ற பாவங்களைப் பற்றி இப்போது நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்முடைய பிரச்சாரத்தில் அது குறுக்கே வந்தால் அது நமக்கு முட்டுக்கட்டையாக நிற்கப் போவதில்லை. அதற்கு உரிய பதிலை அளித்து விட்டு நம்முடைய அழைப்புப் பணியை நாம் அழகாகத் தொடரலாம்.
ஆனால் அழைப்புப் பணி துவங்கியதற்குப் பின்னால் அப்பழுக்கற்றவர்களாக, ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் தவ்ஹீதுக்கு வந்த பின்னர் ஏற்படக் கூடாது.
குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் நம்மை நாம் மிகவும் கவனமாகக் காத்துக் கொள்ள வேண்டும்.
இன்று அழைப்பாளர்கள் என்று சொல்லும் சிலர் பெண்கள் விஷயத்தில் தான் பலியாகி விடுகின்றனர். அதனால் நாம் புகாரியில் வரும் இந்த ஹதீஸைக் கவனத்தில் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களுக்குப் பெண்களை விட அதிகமாக இடரüக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி 5096
தமிழ்நாட்டில் மதரஸாக்கள் உள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஊரில் உள்ளவர்களுக்கு ஒரு ஷைத்தான்; ஓதுகின்ற பிள்ளைக்கு ஒன்பது ஷைத்தான்’ என்பார்கள். மதரஸா மாணவர்களின் சேட்டைக்காக மக்கள் இவ்வாறு சொன்னாலும் ஏகத்துவ அழைப்புப் பணிக்கும் இது பொருந்தும்.
ஏனைய ஆட்களிடம் ஷைத்தான் விளையாடுவதை விட ஏகத்துவவாதிகளிடம் அதிக அளவில் முற்றுகையிட்டு விளையாடுவான்.
தவ்ஹீதுவாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்றாக்கி விட்டால் மக்கள் இந்தக் கொள்கைக்கு வர மாட்டார்கள். இது ஷைத்தானுக்குக் கிடைக்கின்ற பெரிய வெற்றியாகும்.
எனவே, ஓர் ஏகத்துவ அழைப்பாளர் இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனைய ஜமாஅத்களில் உள்ள பொறுப்பாளர்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்தால் அந்த ஜமாஅத்துகள் அதைக் கண்டு கொள்வது கிடையாது. அந்த விஷயத்தில் அவர்களுடன் அந்த ஜமாஅத் தலைமை சமரசம் செய்து கொள்கின்றது.
நம்முடைய ஜமாஅத் தலைமை இதில் எந்தவொரு சமரசமும் செய்வது கிடையாது. இத்தகைய தவறு செய்பவர்கள் எம்மாபெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களைத் தூக்கி எறியத் தயங்குவதில்லை.
இவ்வாறு தூக்கி வீசப்பட்டவர்கள் இந்த ஜமாஅத்தில் உள்ள பொறுப்பாளர்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும்; தவ்ஹீத் ஜமாஅத்தும் பத்தோடு பதினொன்று என்று காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி, நமது இணைய தளங்களுக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து தகிடுதத்தம் செய்கிறார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன். இவர்களுடைய இந்தச் சூழ்ச்சியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். இவர்களின் இந்தப் பின் விளைவுகளெல்லாம் பெண் விவகாரங்களையொட்டி எழுந்தவை.
அதனால் தவ்ஹீதுவாதிகள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அழைப்புப் பணி தொடர்பான விவகாரங்கள் மட்டுமின்றி, கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை காரணமாக தீர்ப்பு கோரி இந்த ஜமாஅத்தை நம்பி எத்தனையோ வழக்குகள் வருகின்றன. இந்தக் குடும்பப் பெண்களின் நம்பிக்கையைப் பாழாக்குகின்ற விதமாக நம்மிடத்தில் எந்த நாசச் சிந்தனையும் வந்து விடாமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
தொலைபேசியில் மார்க்கத் தீர்ப்பு கோருகின்ற பெண்களிடம் கூட நாம் மார்க்க விளக்கங்களைத் தாண்டி வேறு எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக்கூடாது.
பெண் விவகாரத்தில் மட்டுமில்லாமல் ஏனைய பிரச்சனைகளிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நாம் போதிப்பது தூய்மை! பரப்புவது தூய்மை! அதற்கு மாற்றமாக நாம் நடந்து கொள்ளக் கூடாது.
“என் சமுதாயமே! நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள் நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்! எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்” என்று கூறினார்.
அல்குர்ஆன் 11:88
இறைத் தூதர் ஷுஐப் (அலை) அவர்களின் இந்தப் போதனையை மனதில் பதிய வைத்து, இறையச்சம் என்ற ஆயுதத்துடன் ஏகத்துவப் பயணத்தை மேற்கொள்வோமாக! இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையையும் நாம் அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும்.
“எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்”
அல்குர்ஆன் 60:5
—————————————————————————————————————————————————————-
மார்க்க ஆய்வுகளும் மாற்றப்பட்ட நிலைப்பாடுகளும்
கே.எம்.அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டுமே முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம்.
இதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் வளைந்து கொடுத்ததில்லை. இந்த அடிப்படைக் கொள்கையில் நம்மிடம் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. ஆயினும் ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் நம்மிடம் தவறுகள் ஏற்பட்டு அதை அவ்வப்போது பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
நம்மை விடப் பல மடங்கு அறிவும், ஆற்றலும் மிக்க எத்தனையோ அறிஞர்கள், ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதைக் கண்டறிவதில் தவறாக முடிவு செய்து பின்னர் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த நிலை ஏற்படாத எந்த அறிஞரும் உலகத்தில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
- அறிவிப்பாளர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய அனைத்து நூல்களும் கிடைக்கப் பெறாமை
- பொதுவாக மனிதரிடம் காணப்படும் மறதி, கவனமின்மை
- ஒருவரைப் பற்றி செய்த விமர்சனத்தை அதே பெயருடைய மற்றவருக்குப் பொருத்தி விடுதல்
- இந்தத் துறையில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் செய்த விமர்சனங்களில் தவறு ஏற்படாது என்று எண்ணி அப்படியே அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுதல்
இது போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன.
தவ்ஹீத் ஜமாஅத் மூத்த அறிஞர்களைப் பொறுத்த வரை அவர்கள் அனைவருமே மத்ஹபை அடிப்படையாகக் கொண்ட கல்விக் கூடங்களில் தான் கற்றனர். அவர்கள் கற்ற கல்விக் கூடங்களில் ஹதீஸ் கலை குறித்து முறையாகக் கற்பிக்கப்படாததால் அந்தக் கலையைக் கூட சுய முயற்சியால் கற்கும் நிலையில் இருந்தனர்.
இதன் காரணமாகத் தான் துவக்க காலங்களில் சில ஹதீஸ்கள் குறித்து நிலை மாற்றம் ஏற்பட்டது.
தற்போது ஹதீஸ் கலை தொடர்பான அனைத்து நூல்களும் திரட்டப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் நாம் பேசிய, எழுதிய, அங்கீகரித்த ஹதீஸ்களில் பலவீனமானவை உள்ளனவா? என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த காலங்களில் நாம் ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்று கருதியதால் அதன் அடிப்படையில் சில சட்டங்களைக் கூறியிருப்போம். பின்னர் அவை பலவீனம் எனத் தெரிய வரும் போது நாம் முன்பு பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் கூறிய சட்டத்தை தவறு என்று தெளிவுபடுத்தியிருப்போம்.
பெரும்பாலான மக்கள் அதனை அறிந்திருந்தாலும் இன்னும் அதிகமானவர்கள் நாம் முன்னர் சரி என்று கூறி, பின்னர் தவறு என்று மாற்றியவற்றை அறியாமல் இருக்கின்றனர். எனவே அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கத்தில், மாற்றப்பட்ட சட்டங்கள் என்ற தலைப்பில் அது பற்றிய விவரங்களை வெளியிடுகிறோம்.
ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும் பொருந்தாத காரணம் கூறி உண்மையை மறைப்பதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும்.
மறுமையைப் பற்றிய அச்சம் இல்லாமல் குரோதப் புத்தி கொண்ட சில குறுமதியாளர்கள் இளக்காரம் செய்வார்கள் என்றாலும் நம் கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவு படுத்துகின்றோம்.
ஆரம்பத்தில் நாம் சரியான செய்தி என்று சொல்லி, பின்னர் பலவீனமான செய்தி என்று சொன்ன ஹதீஸ்களையும், மக்களிடம் பரவலாக உள்ள பலவீனமான செய்திகளையும் இங்கு தொகுத்து எழுதவுள்ளோம். குறைகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.
- பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?
பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் நம்முடைய ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.
கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)
இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.
மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
நான் ”அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (1774)
நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
“அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!‘ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1777)
“அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதி (974)
மண்ணறைகளை ஜியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணை வைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம்.
- நோன்பு திறக்கும் துஆ
நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது “தஹபள்ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
(பொருள்: தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தது. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: அபூதாபூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ
இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.
எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹூஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.
ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.
மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.
இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.
ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று நாம் கூறியிருந்தோம்.
மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.
ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்தது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.
ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வந்தது.
மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா? என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.
இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், “இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார்’ என்று குறிப்பிடுகின்றார்.
இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.
இப்னு ஹிப்பான் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர்.
வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை.
எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல.
இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது.
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப நோன்பு துறக்கும் போதும் “பிஸ்மில்லாஹ்’ கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும்.
- வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதலாமா?
வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்பதே ஆரம்பத்தில் நம்முடைய நிலைப்பாடாக இருந்தது. இது தொடர்பாக ஏகத்துவம் மற்றும் தீன்குலப் பெண்மணி இதழ்களில் நாம் எழுதியுள்ளோம். இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்து வைத்தோம்.
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீது (ரலி)
நூல்: ஹாகிம் (3392)
ஆனால் மேற்கண்ட செய்தி ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இது நபியவர்கள் கூறியது கிடையாது. அபூ ஸயீத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்று (மவ்கூஃப்) என்பதே சரியானதாகும் என ஹாபிழ் இப்னு ஹஜர் உட்பட பல்வேறு அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை சூரத்துல் கஹ்ஃப் ஓத வேண்டும் என்று வருகின்ற அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும்.
கஹ்ஃப் அத்தியாயத்திற்குப் பொதுவாக சில சிறப்புகளைக் குறிப்பிட்டு சில ஸஹீஹான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் வெள்ளிக்கிழமை கஹ்ஃப் ஓதுவது சுன்னத் என்று கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும்.
- தொழுகையில் சப்தமிட்டு ஆமீன் கூறுவது கட்டாயமா?
தொழுகையில் கண்டிப்பாக சப்தமிட்டே ஆமீன் கூற வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் செய்தி எடுத்து வைக்கப்பட்டது.
இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்‘ எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து “ஆமீன்‘ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அதா
நூல்: பைஹகீ (2556), பாகம்: 2 பக்கம்: 59
நபியவர்கள் காலத்தில் நடந்த சம்பவமாகக் கருதியே இது ஆரம்ப காலத்தில் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது. ஆனால் இது நபியவர்கள் காலத்தில் நடந்து அல்ல. இது நபியவர்கள் காலத்திற்குப் பின் நடைபெற்ற சம்பவமாகும். நபியவர்களிடமிருந்து வரக்கூடியது தான் மார்க்க ஆதாரமாகும். எனவே மேற்கண்ட செய்தியை நேரடி ஆதாரமாகக் கொள்ள முடியாது.
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ‘ஆமீன்’ கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.
“இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்‘ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 782
இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். இந்த வாசகத்திற்கு நபித்தோழர்கள் சப்தமிட்டுக் கூறுதல் என்று புரிந்துள்ளார்கள் என்பதற்குப் மேலே நாம் குறிப்பிட்டுள்ள செய்தி ஆதாரமாக உள்ளது. எனவே ஆமீன் என்பதைச் சப்தமிட்டும் சொல்லலாம். விரும்பினால் சப்தமில்லாமலும் சொல்லலாம் என்பதே நமது நிலைப்பாடாகும்.
- நடுவிரலில் மோதிரம் அணியலாமா?
நடுவிரலிலும் அதற்கு அருகில் உள்ள விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்ற நிலைப்பாட்டைத் தான் நாம் முன்னர் கொண்டிருந்தோம். இவ்வாறு தான் நேரடி கேள்வி பதிலின் போதும் நமது பத்திரிகைகளிலும் இவ்வாறே முன்னர் கூறியுள்ளோம். ஆனால் அது குறித்த ஹதீஸை மறு ஆய்வு செய்த போது இந்த விரல்களில் மோதிரம் அணிவது தவறல்ல என்ற முடிவுக்கே வர முடிகிறது. இது குறித்த விபரம் வருமாறு:
இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.
நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.
(முஸ்லிம் 3910)
இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் (ஹதீஸ் எண் 3910) “இரண்டில் எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை’ என்று கூறப்படுகிறது
இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் (இப்னு மாஜா 3638) என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.
இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.
அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.
எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக அறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.
- ருகூவிற்குப் பிறகு என்ன கூற வேண்டும்?
தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழி என்ற கருத்தை நாம் கூறி அதனை நடைமுறைப்படுத்தியும் வந்தோம். அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்துரைக்கப்பட்டது.
நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியபோது “ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதஹ்‘ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் “ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன் என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் “இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்‘ என (தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி)
நூல்: புகாரி 799
மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்றும், ருகூவிற்குப் பிறகு நாமும் அவ்வாறு கூறலாம் என்றும் நமக்குத் தோன்றுகிறது.
ஆனால் இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்த சூழ்நிலையில் சொன்னார் என்ற கூடுதல் விபரம் இடம்பெற்றுள்ளது.
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்துலில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி‘ (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்?’ எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.
முஸ்லிம் (1051)
அந்த மனிதர் ருகூவுக்குப் பின் இதைக் கூற வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. இந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதில் இருந்து தெரிகிறது.
நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும். இதுதான் தற்போது நம்முடைய நிலைப்பாடு ஆகும்.
ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.
இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபி (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்த சிறப்பு கிடைக்குமென்றால் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இப்படிப்பட்ட சிறப்பைப் பெற்றுத் தரும் இந்த வாசகத்தைக் கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு அவர் சொன்ன அதே வாசகத்தைத் தான் கூறவேண்டும் என்ற கட்டளையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.
குறிப்பிட்ட அந்த நபித்தோழராவது ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தைச் சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை.
வானவர்கள் எடுத்துச் செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.
மாறாக, அவர்கள் தமது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாகப் பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பிறகு இறைவனைப் புகழுவதற்காக இதே வாசகத்தைக் கூறியுள்ளார்கள்.
அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தமது உணவு விரிப்பை எடுக்கும்போது “அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹூ ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள்.
பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.
புகாரி (5458)
எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு, அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக் கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக, தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்தச் சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
நபிகள் நாயகத்தின் அங்கீகாரமும் மார்க்க ஆதாரம் தான். அவர்கள் எதை அங்கீகரித்தார்கள் என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும். ருகூவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் இதைக் கூற வேண்டும் என்பதற்காக அங்கீகரிக்கவில்லை.
அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.
அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம்” என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 635
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 636
அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருகூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.
—————————————————————————————————————————————————————-
மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்
அண்மைக் காலத்தில் நமது தலைமையை நோக்கி திருமணம் தொடர்பான புகார்கள், விமர்சனங்கள் படையெடுக்க ஆரம்பித்தன.
தவ்ஹீது மணமகன் பெண் வீட்டாரிடம் ஏதேனும் மறைமுகமாக வரதட்சணை வாங்கிய விவகாரமா? அல்லது பெண் வீட்டில் விருந்தா? இது தொடர்பான புகார் எதுவும் வரவில்லை. விமர்சனம் எதுவும் வரவில்லை.
வந்த புகார், விமர்சனம் அனைத்தும் மண்டபத்தில் நடக்கும் திருமணம் குறித்துத் தான். மண்டபத்தில் திருமணம் மார்க்க அடிப்படையில் கூடாது என்பதாலா? அதுவும் இல்லை. மாறாக, மண்டபத் திருமணங்களில் செய்யப்படும் செலவினங்கள் பற்றியே விமர்சனம் எழுகின்றது.
திருமண விருந்தான வலீமாவைப் பொறுத்த வரையில் மார்க்கத்தில் ஒரு வரையறை இல்லை. அவ்வாறு ஒரு வரையறை வைக்க முடியாத நெருடலான விஷயம் திருமண விருந்து.
ஆனாலும் அதில் வரம்பு கடந்து சென்று விடக் கூடாது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணமக்களை வாழ்த்தும் போது கூட அல்லாஹ் (பரக்கத்) அருள் செய்வானாக என்று தான் பிரார்த்திக்கின்றார்கள். அதனால் தம்பதியருக்கும் மிக மிக அவசியம் பரக்கத் என்பதை இதன் மூலம் விளங்கலாம்.
பரக்கத் என்பதன் பொருள்
இந்த பரக்கத் என்பதன் பொருள் என்ன? என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்காக அல்லாஹ்வின் திருமறை வசனங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் பார்ப்போம்.
பூமியில் புதைந்து கிடக்கும் பரக்கத்
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் (பரக்கத்) பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
அல்குர்ஆன் 41:10
உலகில் இந்தப் பூமியில் மனித இனம் மட்டுமே உயிர் வாழவில்லை. ஊர்வன, பறப்பன, நீர்வாழ் உயிரினங்கள் போன்ற எண்ணற்ற உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. தாவர இனமும் அறிவியல் அடிப்படையில் உயிரினம் தான். கோடான கோடி உயிரினங்களுக்கும் தாவர வகைகளுக்கும் உணவு வழங்கும் ஓர் உன்னதத் தாயாக, ஊட்டச் சத்து வழங்கும் தானியக் களஞ்சியமாக பூமி திகழ்கின்றது. இன்று உலகில் வாழ்கின்ற மக்கள் தொகை 700 கோடியாகும்.
இப்போது வாழ்கின்ற மக்களுக்கும், ஏற்கனவே வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் உலகம் அழியும் நாள் வரை உலகில் பிறக்கப் போகின்றவர்களுக்கும் உணவு அளிக்கவிருப்பது இந்தப் பூமி தான்.
மழையில் அடங்கிய மகத்தான பரக்கத்
அண்மைக் காலத்தில் தமிழகத்தின் தென் பகுதி கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் கூட வற்றிப் போய் விட்டது. அணைகளில் பாசனத்திற்கு அல்ல, குடிநீருக்குக் கூட தண்ணீர் இல்லாத அளவுக்குத் தரை தட்டியது.
ஊராக இருந்தாலும், ஆறாக இருந்தாலும் அதற்குத் தனது உணவு வளத்தை பூமி தர வேண்டும் என்றால் அதற்கு ஆதாரம் வான்மழை தான். இல்லையென்றால் மனித வாழ்வு அஸ்தமித்துப் போய் விடும். அந்த வான்மழைக்கும் அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையைத் தான் பயன்படுத்துகின்றான்.
அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் (பரக்கத்) பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.
அல்குர்ஆன் 7:96
சந்ததியில் அடங்கிய சமுதாய பரக்கத்
இந்தப் பூமியில் வாழும் 700 கோடி மக்களும் யார் என்கிறீர்கள்? எல்லாம் நூஹ் நபியின் கப்பலில் இருந்தவர்கள் தான். வெள்ளம் வந்து விரோதிகள் அழிக்கப்பட்டு, கப்பல் தரையிறங்கிய போது கப்பலிலிருந்து இறங்கிய நூஹ் நபியின் சமுதாயத்தை நோக்கி அல்லாஹ் பரக்கத் என்ற வார்த்தையின் பன்மைச் சொல்லைப் பயன்படுத்துகின்றான்.
“நூஹே! உம் மீதும், உம்முடன் உள்ள சமுதாயங்கள் மீதும் (பரக்கத்) பாக்கியங்கள் பொழியவும், நம்மிடமிருந்து சாந்தி நிலவிடவும் இறங்குவீராக!” என்று கூறப்பட்டது. சில சமுதாயங்களுக்கு சுக வாழ்வை அளிப்போம் பின்னர் துன்புறுத்தும் நமது வேதனை அவர்களை அடையும்.
அல்குர்ஆன் 11:48
மறுபடியும் வரும் “மண்’ணின் பரக்கத்
யுக முடிவு நாள் ஏற்படும் போது பூமியில் நிகழும் மாற்றங்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
அல்லாஹ் மழை பொழியச் செய்வான். அந்த மழை எந்த மண் வீட்டிலும், எந்த முடி வீட்டிலும் படாமல் இருக்காது. இறுதியில், பூமியைக் கழுவி, கண்ணாடி போன்று (சுத்தமாக) ஆக்கி விடும். பின்னர் பூமிக்கு, “நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக; உன்னிடமுள்ள வளங்களை (பரக்கத்தை) மறுபடியும் தருவாயாக” என்று உத்தரவு பிறப்பிக்கப்படும்.
அன்றைய நாளில் (எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில்), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரே யொரு மாதுளம் பழத்தை உண்பர். அதன் தோல் அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும். அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும். எந்த அளவுக்கென்றால், பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும். பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போது மானதாயிருக்கும். பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமான தாயிருக்கும்.
நூல்: முஸ்லிம் 5228
இந்த ஹதீஸிலிருந்து பரக்கத்தின் பொருளை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அதாவது குறைந்த வாழ்வாதாரத்தில் நிறைவான வளம் பெறுதல் என்று விளங்கிக் கொள்ளலாம்.
ஆட்டு மந்தையில் பரக்கத்
ஒட்டகத் தொழுவங்களில் தொழுவதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒட்டகத் தொழுவங்களில் தொழாதீர்கள். ஏனெனில் அவை ஷைத்தான்களாகும்” என்று பதில் சொன்னார்கள். அவர்களிடம் ஆட்டுத் தொழுவங்களைப் பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அத்தொழுவங்களில் தொழுங்கள்! ஏனெனில் அவை அருள் (பரக்கத்) நிறைந்தவையாகும்” என்று பதில் அளித்தார்கள்.
அறிவிப்பவர்: பர்ரா பின் ஆஸிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 493
இன்று உலகில் கோடிக்கணக்கான ஆடுகள் உணவுக்காக அறுத்துப் பலியிடப்படுகின்றன. அவை ஈனுகின்ற குட்டிகளோ மிகக் குறைவாக இருப்பினும் பலன்கள் மிக அதிகமாக இருக்கின்றன. பன்றிகள் அதிகமான குட்டிகள் போடுகின்றன. அவற்றின் பலன்கள் மற்றும் உணவுக்காக அறுப்பதும் மிக மிகக் குறைவு தான். இந்தக் கணக்கின்படிப் பார்த்தால் உலகில் ஏராளமான பன்றிகள் பெருகிப் போயிருக்க வேண்டும். ஆட்டினம் அழிந்து போயிருக்க வேண்டும். ஆனால் ஆட்டினம் பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது.
இவையெல்லாம் அல்லாஹ்வின் மகத்தான அற்புதங்கள். பரக்கத்திற்குரிய அரிய சான்றுகள்.
இந்த பரக்கத்தை மணமக்கள் அடைய வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் திருமணத்தை எளிமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மண்டபத் திருமணங்கள் இதற்கு நேர் மாற்றமானவை. மண்டபத்திலும் ஒரு சில எளிய திருமணங்கள் நடந்தாலும் அவை ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாகத் தான் அமைகின்றன.
மண்டப வாடகையிலேயே பணக்கார வாடை தெரிய ஆரம்பித்து விடுகின்றது. அடுத்தபடியாக, மண்டப அரங்கத்தை அலங்கரிக்கும் வண்ண விளக்கு, அலங்காரங்கள் என்று அதன் பரிமாணம் அகன்று கொண்டே செல்கின்றது. எளிமைத் திருமணத்திற்கு இது எள்ளளவுக்கும் கட்டியம் கூறுவதாக இல்லை. ஏழையின் திருமணமாகவே இருந்தாலும் மண்டபத் திருமணம் ஒரு மாளிகைத் திருமணமாகக் காட்சியளிக்கின்றது.
எளிய திருமணமே ஏகத்துவப் பிரச்சாரத்தின் அடித்தளம்
தவ்ஹீதுக் கொள்கை வளர்ந்ததற்குரிய ஓர் அடித்தளமே எளிமைத் திருமணம் தான். தூதுச் செய்தியின் அடிப்படையே மக்களின் கைகளில், கழுத்துக்களில் மாட்டப்பட்டிருக்கும் சமூக நிர்ப்பந்தம் எனும் விலங்குகளை அறுத்தெறிவது தான். இதைப் பின்வரும் வசனத்தில் நாம் பார்க்கலாம்.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 7:157
வீடுகளில் நடக்கும் திருணமங்களில் விருந்து கொஞ்சம் கூடிப் போனால் கூட அதன் தோற்றம் மலைக்க வைப்பதில்லை.
அதனால் வீடுகளில் விருந்தை வைத்து விளாசித் தள்ளலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. வீட்டு விருந்திலும் எளிமையைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். அதில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறிய பரக்கத் அடங்கியிருக்கின்றது. எளிய விருந்தைக் கூட மண்டபத்தில் வைக்கும் போது அதன் தோற்றம் பலருடைய முகத்தையும் சுளிக்க வைக்கின்றது.
ஏனைய எதிர் விளைவுகள்
மண்டபத் திருமணங்கள், தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமணத்திற்கும் இதர திருமணத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.
இதல்லாமல், மண்டபத்தில் நடக்கும் திருமணத்தில் அங்குள்ள மக்களுக்காக ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினாலும் அது பயனற்றதாக ஆகி விடுகின்றது. யாருக்கு அந்த உரை போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு, அதாவது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களுக்குக் கடுகளவு கூட போய்ச் சேர்வதில்லை. அந்த அளவுக்கு அவர்களிடம் கூச்சல் குழப்பம் நடந்து கொண்டிருக்கின்றது.
சில பேச்சாளர்கள் தங்களுடைய பேச்சை நிறுத்தி, மிரட்டிக் கூடப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன மிரட்டல் விடுத்தால் எங்களுக்கென்ன என்று இரைந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வீடியோ கேமராக்களின் வெளிச்சமும் கூச்ச நாச்சம் இல்லாத பெண்களை தனக்குள் வளைத்துப் போடுகின்றது. இந்த வீடியோக்கள் வீடுகளில் எடுக்கப்பட்டாலும் கண்டிக்கத்தக்கது தான். ஆனாலும் வீடுகளில் இதுபோன்று பெண்களை வளைத்து வளைத்து எடுப்பதைப் பார்க்க முடியாது. சொற்பொழிவைப் பதிவு செய்வதற்காக வீடியோ எடுப்பதைத் தான் பார்க்க முடியும்.
இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளுக்குப் பெண்கள் தங்களிடமுள்ள புத்தாடை, பொன் நகைகளைப் போட்டு, தங்களது ஆடம்பரப் பகட்டை வெளிப்படுத்தும் உல்லாச ஒன்று கூடலாகத் தான் மண்டபத் திருமணங்கள் அமைகின்றனவே தவிர, அமைதியுடன் அங்கு நிகழ்த்தப்படும் உரைகளைக் கேட்கும் அளவுக்கு அவை இருப்பதில்லை.
தஃப்தர் உண்டு! தாயீ இல்லை!
எனவே இந்த விளைவுகளையும் எல்லாவற்றிற்கும் முதன்மையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்ற எளிமை இல்லாத நிலை ஏற்படுவதையும் கவனத்தில் கொண்டு, இதுபோன்ற மண்டபத் திருமணங்களுக்கு தஃப்தர் (திருமணப் பதிவேடு) கொடுப்போம்; அங்கு உரையாற்ற தாயீக்களை அனுப்ப மாட்டோம் என்று தலைமை நிர்வாகக் குழு முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வருகின்றது.
இது கொள்கைச் சகோதரர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவும், அலர்ஜியாகவும் இருக்கின்றது. இங்கு தான் கொள்கைச் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் பரக்கத் நிறைந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் திருமணத்துக்காக கோட் சூட்டுகள் எடுப்பதோ, ஊரை வளைத்துப் பந்தல் போடுவதோ, பத்திரிகை அடிப்பதோ, கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதோ எதுவுமே இருக்கவில்லை.
இப்படியெல்லாம் செலவுகள் செய்யப்பட்டு வந்தால் இதைக் குறைப்பதற்காக நபிகள் நாயகம் மேற்கண்டவாறு சொன்னார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நபிகள் நாயகம் காலத்தில் திருமணத்துக்காக இரண்டு செலவுகள் மட்டுமே இருந்தன. ஒன்று மஹர் செலவு. மற்றொன்று விருந்துச் செலவு. மஹரைப் பொறுத்தவரை ஒரு குவியலையே கொடுத்தாலும் அது தவறல்ல என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அப்படியானால் திருமணத்துக்காக விருந்துச் செலவு மட்டும் தான் அன்றைக்கு இருந்தது. இந்த நிலையில் திருமணத்தைக் குறைந்த செலவில் நடத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகிறார்கள் என்றால் விருந்துச் செலவைக் குறைப்பது பற்றியே கூறியுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
திருமணத்தில் விருந்துக்காகச் செலவு செய்வது அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அதுவும் குறைந்த செலவில் இருக்கும் போது தான் அதில் பரக்கத் இருக்கும். இல்லாவிட்டால் பரக்கத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
மேலும் நமக்கு சமுதாயப் பொறுப்பும் இருக்க வேண்டும். பெரிய மண்டபங்களில் அதிக செலவில் விருந்து வைக்கும் பழக்கத்தை நாம் தொடரும் போது அதனால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். இது போல் நாமும் நடத்தாவிட்டால் நமக்கு சமுதாயத்தில் மரியாதை இருக்காது என்று எண்ணி, கடன் வாங்கியாவது, பிச்சை எடுத்தாவது மண்டபம் பிடிக்க நினைக்கிறார்கள்.
நம்மிடம் வசதி உள்ளது என்பதற்காக நாம் செய்யும் செயல் ஏழைகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மண்டபத்துக்கும் பெரிய விருந்துக்கும் செலவு செய்யும் நிலை ஏற்படும் வரை திருமணத்தை தள்ளிப்போடும் நிலையும் ஏற்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மண்டபத்தில் நடத்தப்படும் திரும்ணங்கள் எளிமையானவை அல்ல; அது பரக்கத்தை இல்லாமல் செய்து விடும் என்று நாம் கருதுகிறோம்.
ஒரு பெரிய செலவீனத்தில் நடத்தப்படும் திருமணம் மார்க்கப்படி செல்லுமா? என்றால் செல்லும். ஆனால் மார்க்கம் நமக்கு வலியுறுத்துவது எளிமைத் திருமணத்தைத் தான்.
“குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 23388
இறை நம்பிக்கையாளர்களின் பண்பைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.
“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 25:74
அல்லாஹ் கூறுகின்ற இந்தப் பண்புக்கு எடுத்துக்காட்டாக நாம் திகழ வேண்டும். இறையச்சமுடையவர்களுக்கு முன்னோடிகளாக ஆக வேண்டும். அதன் அடிப்படையில் எளிமைத் திருமணத்திற்கு இலக்கணமாக நாம் விளங்க வேண்டுமே தவிர, அதற்குப் புறம்பாக ஆடம்பரத் திருணத்திற்கு இலக்கணமாகத் திகழக் கூடாது.
மண்டப வலீமா
இப்போது இங்கே ஒரு கேள்வி எழலாம். தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயீக்கள் வராமல் திருமணப் பதிவேடு மட்டும் தந்து நடத்தப்படும் மண்டபத் திருமணத்தின் வலீமா விருந்தில் கலந்து கொள்ளலாமா? என்ற கேள்வி இங்கு வரலாம்.
மார்க்கத்தில் தடையில்லை என்பதால் தான் திருமணப் பதிவேடு வழங்கலாம் என்று தலைமை முடிவெடுத்துள்ளது. அதனால் அந்த விருந்திலும் கலந்து கொள்ளலாம். ஆனால் இதை ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அறிவிக்கக் கூடாது. காரணம் நமது நோக்கமே எளிமைத் திருமணத்தை நடைமுறைப்படுத்துவது தான். அந்தச் சீரிய திட்டத்தை இது சிதைத்து விடும்.
அதனால் கொள்கைச் சகோதரர்கள் நபிவழி அடிப்படையில் எளிமைத் திருமணத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமுல்படுத்தி, இறையச்சமிக்கவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.
—————————————————————————————————————————————————————-
தவ்ஹீத் போர்வையில் இணை வைப்பு
நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பலரிடம் இஸ்லாம் குறித்து தவறான நம்பிக்கைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விஷயத்திலும் இவர்கள் தவறான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் வருவதற்கு முன் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டை மக்கள் அறியாது இருந்தனர். இன்றைக்கும் பலருடைய நிலை அவ்வாறே உள்ளது.
முன்னோர்கள், பெரியார்கள், இமாம்கள் எதைக் கூறினாலும் அக்கூற்றுக்கு ஆதாரம் இருக்கின்றதா? இல்லையா? என்று சிந்திக்கும் மனநிலை அன்றைக்கு மக்களிடம் இல்லை.
இமாம்கள் கூறுவதையே ஆதாரமாக எடுத்துக் கொண்டு அவர்களைக் கண்மூடி பின்பற்றி வந்தனர். மத்ஹபு மாயவலையில் சிக்கி இருந்தனர்.
குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டும் தான் இஸ்லாத்தின் அடிப்படை. இவ்விரண்டிலும் கூறப்பட்டவை மட்டுமே இஸ்லாம். இவ்விரண்டிலும் இல்லாத விஷயங்கள் ஒருக்காலும் மார்க்கமாக முடியாது என்று குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன.
மத்ஹபைப் பின்பற்றிக் கொண்டிருந்த மக்களிடம் இந்த ஆதாரங்களை எடுத்துச் சொல்லி குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற சரியான நிலைபாட்டின் பால் அவர்களை அழைத்தோம். அல்லாஹ்வின் கிருபையால் பலர் மத்ஹபிலிருந்து விடுபட்டார்கள்.
இவ்வாறு மத்ஹபிலிருந்து விடுபட்ட பலர், நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி இன்றைக்கு வேறொரு மத்ஹபில் சிக்கியுள்ளனர். இமாம்களையும் பெரியார்களையும் பின்பற்றுவது மத்ஹபு என்றால் நபித்தோழர்களைப் பின்பற்றுவதும் மத்ஹபு தான்.
இவர்கள் எந்த வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறி மத்ஹபுகள் கூடாது எனக் கூறினார்களோ அதே வசனங்களும் ஹதீஸ்களும் நபித்தோழர்களைப் பின்பற்றுவது என இவர்கள் எடுத்துள்ள நிலைபாட்டிற்கும் எதிராகவே உள்ளன.
தவ்ஹீத்வாதிகள் யார்?
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையில் தடம் புரண்டுவிட்ட இவர்கள் ஏகத்துவவாதிகள் தான் என சிலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஏகத்துவத்தை சரியாகப் புரியாதவர்களே இவ்வாறு நினைக்க முடியும்.
ஏகத்துவம் என்றால் இறைவனுக்கு மட்டும் உரிய பண்புகளும் அதிகாரங்களும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உள்ளன. அவன் அல்லாத வேறு யாரிடமும் இவை இல்லை என்று நம்புவதாகும். இறைவனுக்கு மட்டும் உரிய பல அதிகாரங்களில் ஏதேனும் ஒன்றை, பிறருக்கு இருப்பதாக நம்பினாலும் அது ஏகத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையாகும்.
அனைத்தையும் இறைவனே செய்கிறான் என்று நம்பும் ஒருவன் குழந்தை பாக்கியம் கொடுக்கும் ஆற்றல் மட்டும் இறந்து போன இன்னாருக்கும் உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் ஏகத்துவத்தை விட்டு வெளியேறி விடுகிறான்.
தர்ஹா வழிபாட்டையும் பித்அத் அனாச்சாரங்களையும் ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு மறுபக்கம் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுபவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.
மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது. இறைத்தூதர்கள் உட்பட யாருக்கும் இதில் எள்ளளவு கூட அதிகாரம் இல்லை.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் மக்களுக்கு செய்த போதனைகள் அவர்கள் சுயமாகக் கூறியவை அல்ல. மாறாக அவையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபியவர்களுக்கு அருளப்பட்டவை. எனவே தான் அவற்றை நாம் மார்க்கமாக ஏற்றுக் கொள்கிறோம்.
பின்வரும் வசனங்கள் மார்க்கத்தின் சட்டங்களை இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது எனக் கூறுகின்றது.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.
அல்குர்ஆன் (39:3)
இந்த மார்க்கத்தை அல்லாஹ்வுக்கே மட்டுமே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.
அல்குர்ஆன் (98:5)
இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகை மட்டும் வணக்கமில்லை. இறைவன் இட்ட அனைத்து உத்தரவுகளுமே வணக்கம் தான். இறைவனுடைய கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவதால் இதற்கு வணக்கம் என்று கூறப்படுகின்றது.
இறைவனுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய இந்த அந்தஸ்தை நபித்தோழர்களுக்கு வழங்கி நபித்தோழர்களின் உத்தரவுகளுக்கு நான் கீழ்ப்படிவேன் என்று யாராவது கூறினால் அவர் நபித்தோழர்களை வணங்கி விடுகிறார். தெளிவான இணைவைப்பில் விழுந்து விடுகிறார்.
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களைக் கடவுளின் மகன் என்று கூறி அல்லாஹ்வுக்கு உரிய அதிகாரங்களையும் தன்மைகளையும் அவருக்கு இருப்பதாக நம்பினர். மற்ற எவருடைய விஷயத்திலும் இவர்கள் இவ்வாறு நம்பிக்கை வைக்கவில்லை.
இவர்கள் பாதிரிமார்களுக்கும் மத போதகர்களுக்கும் ஈஸா நபியைப் போன்று அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக நம்பவில்லை. மாறாக பாதிரிமார்கள் எதைக் கூறினாலும் அதை வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஒரு காரணத்துக்காக இவர்கள் மதபோதகர்களைக் கடவுளாக்கினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். கடவுளுக்கு உரிய சட்டமியற்றும் அதிகாரம் மதபோதகர்களுக்கு உண்டு என இவர்கள் நம்பியதே இதற்குக் காரணம்.
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
அல்குர்ஆன் (9:31)
எனவே இறைச்செய்தி கொடுக்கப்படாத நபித்தோழர்களைப் பின்பற்றலாம் என்ற நம்பிக்கை முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணானதாகும்.
நபித்தோழர்களின் விளக்கம்
நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடியவர்களில், மார்க்க விஷயங்களில் நபித்தோழர்களைக் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்று பச்சையாகக் கூறுபவர்களும் இருக்கின்றார்கள்.
இந்தக் கூற்று குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் நேரடியாக முரணாக இருப்பதால் இவ்வாறு கூறாமல், இதே கருத்தை வேறு வார்த்தையில் கூறி மழுப்ப நினைப்பவர்களும் இந்தக் கூட்டத்தில் இருக்கின்றனர்.
அதாவது நாங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறவில்லை. குர்ஆனுக்கு அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஏற்க வேண்டும் என்றே கூறுகிறோம். பின்பற்றுவதும் விளக்கத்தை ஏற்பதும் வெவ்வேறானவை என்று சமாளிக்கின்றனர்.
நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதும் அவர்களின் விளக்கத்தை ஏற்க வேண்டும் என்பதும் ஒரே கருத்து தான். இதை விரிவாக அறிந்து கொள்வோம்.
குர்ஆனுடைய விளக்கம் இரண்டு வகைப்படும் என அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
அல்குர்ஆன் (16:44)
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.
அல்குர்ஆன் (16:64)
நபி (ஸல்) அவர்கள் அளிக்கும் விளக்கம், நாமாகப் புரிந்து கொள்ளும் விளக்கம் என இரண்டு விளக்கங்கள் குர்ஆனுக்கு இருப்பதாக அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.
குர்ஆனுக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுக்கும் விளக்கம் ஒரு வகை. இந்த விளக்கம் இல்லாமல் குர்ஆனை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த வகையான விளக்கத்தை நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் கூற முடியாது. கூறினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறைவனிடமிருந்து வந்ததைப் போன்று அதற்குரிய விளக்கமும் இறைவனிடமிருந்து அருளப்பட்டது. இதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
அல்குர்ஆன் (75:17)
உதாரணமாக, தொழ வேண்டும்; ஸகாத் கொடுக்க வேண்டும்; ஹஜ் செய்ய வேண்டும் என்ற கட்டளை மட்டுமே குர்ஆனில் உள்ளது. இந்த வணக்கங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விபரம் குர்ஆனில் இல்லை. நபி (ஸல்) அவர்களே இந்த விளக்கங்களை அளித்துள்ளார்கள். இந்த விளக்கங்கள் நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கூறியவை அல்ல. அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு அருளப்பட்டவையாகும்.
நபி (ஸல்) அவர்களின் துணையில்லாமல் நமக்கு விளங்கக்கூடிய வசனங்களும் குர்ஆனில் உள்ளன. இந்த வசனங்களுக்குச் சிறந்த முறையில் நாமே விளக்கம் கொடுக்க முடியும். அந்த விளக்கம் மற்ற வசனங்களுக்கு முரணில்லாத வகையில் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
இந்த வகை வசனங்களுக்கு நபித்தோழர்கள் உட்பட யார் விளக்கம் அளித்தாலும் அதை கண் மூடிக் கொண்டு ஏற்றுவிடக் கூடாது. அந்த விளக்கம் சரியாக இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்த்தே ஏற்க வேண்டும்.
நபித்தோழர்களின் விளக்கத்தை ஏற்க வேண்டும் என்று கூறுபவர்கள் இந்த வித்தியாசங்களையும் நுணுக்கங்களையும் கவனத்தில் கொள்வதில்லை. எந்த வரைமுறையும் இல்லாமல் அவர்களைப் பின்பற்றி வருகின்றனர்.
ஸகாத் எப்போது கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? இந்த விஷயங்களை நாமாகத் தீர்மானிக்க முடியாது. நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இதற்கு விளக்கம் கூறக் கூடாது.
ஆனால் நபித்தோழர்களைப் பின்பற்றுபவர்கள் இவ்விஷயத்தில் நபித்தோழர்களின் கூற்றுக்களை ஏற்றுக் கொள்கின்றனர். இங்கே இவர்கள் நபித்தோழர்களின் விளக்கங்களை ஏற்பதால் நபித்தோழர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இடத்தில் வைத்து விட்டனர். இறைச்செய்தி அல்லாத விஷயங்களைப் பின்பற்றி ஏகத்துவ வட்டத்திற்கு வெளியில் நிற்கின்றனர்.
நபித்தோழர்களைப் பின்பற்றுவதன் விபரீதம் பற்றி இதழ்கள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் போதுமான அளவு மக்களுக்குத் தெளிவு படுத்தியுள்ளோம்.
எனவே தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்கள், இதன் விபரீதத்தை உணர்ந்து மார்க்க விஷயங்களில் குர்ஆன் ஹதீஸ் அல்லாத வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்ற சரியான நிலைபாட்டிற்கு வர வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் நேர்வழிகாட்டுவானாக!
—————————————————————————————————————————————————————-
கேள்வி பதில்
? ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளாமல் வேறு தவறுகளைச் செய்தால் அதற்குப் பரிகாரம் என்ன?
அனஸ்
பொதுவாக இது போன்ற தீமைகளைச் செய்துவிட்டால் மனம் திருந்தி இனி அந்தத் தவறு நம்மிடம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதோடு இத்தீமைகளை அழிக்கக்கூடிய தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற வணக்கங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இது போன்ற பிரச்சனையைச் சந்தித்த நபித்தோழருக்கு இவ்வாறே நபியவர்கள் வழிகாட்டினார்கள்.
ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்கüடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், “பக-ன் இரு ஓரங்கüலும் இரவின் நிலைகüலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன” எனும் (11:114) வசனத்தை அருüனான். அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவருக்கும் தான்” என்று பதிலüத்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 526
உளூச் செய்துவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதால் அத்தொழுகை முன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகி விடும்.
“பாவம் செய்துவிட்ட அடியான் அழகுற அங்கத்தூய்மை செய்கிறார். பிறகு எழுந்து இரண்டு ரக்அத்கள் தொழுகிறார். பிறகு அவர் பாவமன்னிப்புத் தேடினால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள்‘ எனும் (3:135) வசனத்தை அதன் இறுதி வரை ஓதிக் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ர் (ரலி), நூல்: அபூதாவூத் 1300
(மதீனாவிலுள்ள) “மகாயித்‘ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்கüடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக அங்க சுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு “நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக அங்கசுத்தி செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “யார் இதைப் போன்று (முழுமையாக) அங்கசுத்தி செய்து, பள்üவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “(ஆனால், இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்கüல் மூழ்கி) விடாதீர்கள்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான் பின் அபான், நூல்: புகாரி 6433
ஐந்து நேரத் தொழுகைகள், ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ, (தொழுது) ஒரு ரமளானிலிருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று) பெரும் பாவங்களை விட்டு விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 344
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 38
மாதத்தில் மூன்று (நாட்கள் நோன்பு நோற்பது)ம், ரமளானுக்கு ரமளான் நோன்பு நோற்பதும் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றது போலாகும். அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷுரா நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு பாவத்திற்குப் பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின் மீது நான் ஆதரவு வைக்கின்றேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:271)
ஒரு தீமையைச் செய்து விட்டால் அதற்கான பரிகாரமாகத் தான் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் அதே தீமையைச் செய்து விட்டு, தவ்பா செய்து கொண்டால் போதும் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் தவ்பாவின் நிபந்தனையே அந்தப் பாவத்தை மீண்டும் மீண்டும் செய்யாமல் இருப்பது தான். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3:135)
? வினிகர் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் போன்ற பொருட்களிலிருந்தும் வினிகர் தயாரிக்கப்படுகின்றது. இவற்றைப் பயன்படுத்தலாமா?
ஃபாத்திமா
வினிகர் என்று கூறப்படும் காடியை பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கு வீட்டார், “நம்மிடம் காடி மட்டுமே உள்ளது” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் காடியைக் கொண்டு வரச் சொல்லி அதைக் கொண்டு உண்ணலானார்கள். மேலும், “குழம்புகளில் அருமையானது காடியாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் (4169)
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம், (அங்குள்ள ஒருவர்) ரொட்டித் துண்டைக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள், “குழம்பேதும் இல்லையா?” என்று கேட்டார்கள். வீட்டார், “இல்லை, சிறிது காடியைத் தவிர வேறெதுவுமில்லை” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “காடி தான் குழம்புகளில் அருமையானது” என்று கூறினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள், “இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியதைக் கேட்டதிலிருந்து நான் காடியை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் (4170)
ஆல்கஹாலில் இருந்து வினிகர் தயாரிக்கப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். போதை தரும் பொருட்களை வினிகராக மாற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இல்லை (மாற்றக் கூடாது)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4014)
எனவே போதை ஏற்படுத்தக்கூடிய ஆல்கஹாலை வினிகராக மாற்றினால் அதை உண்பது கூடாது. போதை இல்லாத பொருட்களிலிருந்து வினிகர் தயாரிக்கப்பட்டால் அதை உண்பது தவறல்ல.
—————————————————————————————————————————————————————-
அவமானத்திற்கு அபராதம் நூறு கோடி
உத்தரபிரதேச மாநிலத்தில் காஜியாபாத் மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் சில மாதங்களுக்கு முன்பு அம்பலத்திற்கு வந்தது. காஜியாபாத் மாவட்ட அரசுக் கருவூலத்திலிருந்து 7 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக மாவட்ட ஊழல் கண்காணிப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்திற்குப் புகார் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, 11 உயர் நீதிமன்ற நீதிபதிகள், 24 மாவட்ட நீதிபதிகள் சிக்கியுள்ளனர்.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பி.கே. சமன்தா என்பவரது பெயரை செப்டம்பர் 10, 2008 அன்று பண்ம்ங்ள் சர்ஜ் என்ற செய்தித் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பில் குறிப்பிட்டது. ஆனால் செய்தியின் படக் காட்சியில் காட்டும் போது, நீதிபதி சமன்தாவின் படத்தைக் காட்டுவதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவாந்த் என்பவரது படத்தை 15 வினாடிகள் காட்டியது.
தான் காட்டிய படம் சமன்தாவுக்கு உரியது அல்ல. சவாந்த் அவர்களின் படம் என்று தெரிந்தவுடன் தவறுக்காக சம்பந்தப்பட்ட சவாந்திடம் மேற்படி செய்தி நிறுவனம் மன்னிப்புக் கோரியது. ஆனால் நீதிபதி சவாந்த் விடவில்லை.
TIMES NOW தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அளவிட முடியாத நட்டம் என்ற அடிப்படையில் நூறு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பண்ம்ங்ள் சர்ஜ் நிறுவனம் மேல் முறையீடு செய்த போது, கீழ் கோர்ட்டின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஆனால் கீழ் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டை விசாரிப்பதற்கு முன் 20 கோடி ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும், 80 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மேற்படி செய்தி நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதாவது 20 கோடி முன்பணமும், 80 கோடி வங்கி உத்தரவாதமும் செலுத்திய பின்னரே மேல் முறையீட்டை விசாரிக்க முடியும் என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளது.
நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்கு மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற அனைத்து நிலையிலான நீதிமன்றங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நூறு கோடி ரூபாய் அபராதத்தை முன் தொகை, பின் தொகை என்று விதித்து தீர்ப்புகளைப் பொழிந்து தள்ளி விட்டன.
ஊடகம் இழைத்த தவறு, படத்தை மாற்றி ஒரு பதினைந்து வினாடிகள் காட்டியதற்கு இத்தனை பெரிய தண்டனை.
ஒரு சாதாரண, சாமான்ய மனிதன் பாதிக்கப்பட்டு இவ்வாறு வழக்குத் தொடர்ந்தால் இந்த அளவுக்கு வேண்டாம்; ஒரு குறைந்தபட்ச கண்டனத்தையாவது தெரிவிக்க இந்த நீதிமன்றம் முன்வருமா? பண்டிதருக்கு ஒரு நீதி, பாமரனுக்கு ஒரு நீதி என்பதையே இது காட்டுகின்றது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமநீதி இங்கே அடிபட்டுப் போய் விடுகின்றது.
இந்தியாவின் எங்காவது ஒரு மூலையில் குண்டு வெடித்து விட்டால் போதும். உளவுத் துறைக்கு முன்பாகவே ஊடகத்துறையின் மூளையில் முஸலிம்கள் என்ற சிந்தனை வெடித்து விடும். அவ்வளவு தான். அந்த பயங்கரவாதச் செயலை முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, திரும்பத் திரும்ப செய்தி அலைகளில் வெடித்துத் தள்ளுகின்றனர். ஆனால் இறுதியில் முஸ்லிம்கள் இல்லை என்றானதும் ஒரு ஒப்புக்காவது, ஒரு தடவை கூட வருத்தம் தெரிவிப்பதில்லை. மறுப்பும் வெளியிடுவதில்லை. தானாக முன்வந்து கண்டனம் தெரிவிக்க வேண்டிய நீதிமன்றங்கள், இவற்றைக் கண்டு கொள்வதில்லை.
அண்மையில் CNN IBN தொலைக்காட்சியின் பேட்டியாளர் கரண் தாப்பருக்குப் பேட்டியளித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் இந்தியாவின் பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான மார்கண்டேய கட்ஜு, ஊடகங்களின் இந்தப் போக்கை கடுமையாகக் கண்டிக்கின்றார். (அவருடைய பேட்டியின் சில பகுதிகளை தனித் தலைப்பில் தந்துள்ளோம்.) இது சற்று ஆறுதலான விஷயம்.
நாம் நீதிமன்றங்களிடமிருந்து எதிர்பார்ப்பது இந்த அளவுக்குரிய அபராதத்தை அல்ல. குறைந்தபட்சக் கண்டனத்தைத் தான்.
எந்த ஒரு செய்தியையும் அது வந்த மாத்திரத்தில் அதை நம்புவதையும், அதை அப்படியே அடுத்தவரிடம் வாந்தி எடுப்பதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதோ முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 6
செய்தியை முதன் முறையாக ஒளிபரப்புதல், ஒரு பரபரப்பு, கிளர்ச்சி, அனல் பறப்பு போன்றவற்றை மூலதனமாகக் கொண்டு செய்திகளை ஊடகங்கள் வெளியிட விரும்புகின்றன. அந்தச் செய்திகள் வரும் வழி சரியானதா? செய்தி உண்மையானதா? என்று பார்ப்பதற்கு எந்த முன்னுரிமையும் முதன்மையும் அளிப்பதில்லை. வருவதை வாந்தியெடுப்பது, வருவாயைப் பெருக்குவது என்பதை மட்டும் குறியாகக் கொண்டு ஊடகங்கள் செயல்படுகின்றன.
புலனாய்வு ஊடகவியல் என்றெல்லாம் இவர்கள் பீற்றிக் கொள்கின்றனர். ஆனால் பொய்யை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளியலாகத் தான் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட ஊடகத்திற்கு இந்த நூறு கோடி ரூபாய் அபராதம் சரியென்றே தோன்றுகின்றது.
—————————————————————————————————————————————————————-
மீடியாக்களின் முஸ்லிம் விரோதப் போக்கு
ஊச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு
பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.
அந்தக் கேள்வி பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் இங்கே:
செய்தியாளர் கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டி.வி. ஆசிரியர்களைச் சந்தித்த போது, “மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது’ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
கரன் தாப்பர்: உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: நிச்சயமாக இல்லை.
கரன் தாப்பர்: உண்மையாகவா சொல்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்கிறேன்.
கரன் தாப்பர்: உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாகச் செயல்படவில்லையா? அல்லது அது போதுமானதாக இல்லையா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதைப் பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம்.
முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்தப் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து தீர்வு காணத் தூண்டாமல், பிரச்சனைகளிலிருந்து திசை திருப்புகிறது மீடியா.
சினிமா நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாச்சாரங்களை பெரிதுபடுத்தி, நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள் தான் என்பது போல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
கரன் தாப்பர்: ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்குப் போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதைப் பொருள். ஓப்பியம் மாதிரி. ரோமாபுரிப் பேரரசன் சொல்வானாம், “மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்’ என்று. இந்தியாவில் மக்களுக்குத் தேவையானதைக் கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது. அது தான் நாட்டின் ஒரே பிரச்சனை மாதிரி.
கரன் தாப்பர்: மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதைக் காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: இரண்டாவது, அனேக நேரங்களில் மக்களைப் பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால் தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது?
ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் “குண்டு வைத்தது நாங்கள் தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது’ அல்லது “ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது’ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படித் தெரியும் என்றால் எஸ்.எம்.எஸ். வந்தது, இ மெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.
எஸ்.எம்.எஸ்., இ மெயில் போன்றவற்றையெல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதைப் பெரிதாகத் தொலைக்காட்சியில் காட்டி, மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும் போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பது தான் உண்மை.
கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கவனக் குறைவாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதைச் சோதிக்காமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா? அல்லது வேண்டுமென்றே அப்படிச் செய்வதாக நினைக்கிறீர்களா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்.எம்.எஸ். வந்தது; இ மெயில் வந்தது என்பதைச் சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும் போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?
கரன் தாப்பர்: மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாட்டுக்கு மூன்றாவது உதாரணமாக எதைச் சொல்லப் போகிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஒரு ஃபியூடல் சொசைட்டி, மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற கால கட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும்.
இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில் ஜோசியம், மூட நம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களைப் பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூட நம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாகப் பின்தங்கி நிற்கிறார்கள்.
அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து, ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்குக் கொண்டு வர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது.
பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்தக் கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாகச் சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!
கரன் தாப்பர்: ஆக, மீடியா என்ன செய்ய வேண்டும் என சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அதைச் செய்யவில்லை என்கிறீர்கள். தன்னை நம்பிய இந்தியாவை மீடியா கைவிட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஒரு பெரிய சமுதாய மாற்றத்தில் மீடியாவின் பங்களிப்பு அபாரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மீடியா என்பது ஏதோ சாமான் உற்பத்தி செய்து சந்தையில் விற்கும் சாதாரணமான பிசினஸ் கிடையாது. அறிவு சம்பந்தப்பட்டது. சிந்தனை சம்பந்தப்பட்டது. மக்களுக்கு அறிவியல் அடிப்படையிலான புதிய சிந்தனைகள் உருவாகத் தூண்டுகோலாகச் செயல்படும் புனிதமான பணி மீடியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. அந்தப் பொறுப்பை அது செய்யத் தவறினால் நாட்டை, மக்களை அது கைவிட்டு விட்டதாகத் தானே அர்த்தம்?
கரன் தாப்பர்: இந்தியாவை இன்னும் மோசமாக்குகிறது மீடியா என்றா சொல்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அதுதான் என் மதிப்பீடு. ஒரு ஜோசியர் உட்கார்ந்து கொண்டு “இது அந்த ராசி, அது அணிந்தால் உங்களுக்கு ராசி’ என கதையளந்து கொண்டிருப்பதை எத்தனை சேனல்களில் பார்க்கிறோம்.
கரன் தாப்பர்: “செய்தியை சரியாகச் சொல்வதில்லை; உண்மைகளை இஷ்டத்துக்கு திரித்துக் கூறுகிறது; கருத்தையும் வார்த்தைகளையும் வெட்டி ஒட்டி வேறு அர்த்தம் கொடுக்கிறது’ என்பது மீடியா பற்றிய மக்களின் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அதே தான் என் கருத்தும். 2009 தேர்தலில் பார்த்தோம். முன்னெல்லாம் செய்தியாளர்கள் வேட்பாளரைப் பார்த்து, “எனக்குப் பத்தாயிரம் கொடு; உனக்கு சாதகமாகச் செய்தி போடுகிறோம்’ என்று பேரம் பேசினார்கள்.
அதைப் பார்த்து பத்திரிகை உரிமையாளர்களுக்கு வேறு ஐடியா உதித்தது. “நாம் தான் சம்பளம் கொடுக்கிறோமே, செய்தியாளர்கள் இப்படியும் சம்பாதிக்க ஏன் இடமளிக்க வேண்டும்? நாமே சம்பாதிக்கலாமே?’ என்று முடிவு செய்து, “ஒரு கோடி கொடுங்கள், நான் ஒரு பேக்கேஜ் தருகிறேன்’ என்று டீல் போடுகிறார்கள்.
ஒரு பத்திரிகையில் “வேட்பாளர் “ஏ’ அமோக வெற்றி பெறுவார்” என்ற செய்தி மேலேயும் “அவருக்கு டெபாசிட் போய்விடும், “பி’ தான் ஜெயிப்பார்” என்று கீழேயும் முதல் பக்கத்திலேயே பிரசுரமான விசித்திரத்தை பார்த்தோம். கண்ணை விற்று சித்திரம் வாங்கும் வேலை.
கரன் தாப்பர்: இந்த மாதிரி பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிபதி வர்மா தலைமையில் நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் அமைத்து சுயமாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்…
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அதில் எந்தப் பலனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே! நீங்கள் தொழில் நடத்துவது ஏழைகள் வாழும் நாட்டில்; அதனால் அவர்களுடைய பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும்; அதை விடுத்து “லேடி காகா வந்து விட்டார்.. கரீனா கபூர் தனது மெழுகுச் சிலையை மிகவும் சிலாகித்தார்..’ இதெல்லாமா முக்கிய செய்தி ஆவது?
கரன் தாப்பர்: மீடியா ஏன் மாறவில்லை என நினைக்கிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அது ஒரு காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.
கரன் தாப்பர்: அதற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: பத்திரிகைகளை மட்டும் தான் பிரஸ் கவுன்சில் இப்போது கேள்வி கேட்க முடியும். பிரஸ் கவுன்சில் பெயரை மீடியா கவுன்சில் என மாற்றி டி.வி. சேனல்களையும் அதன் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சொல்லித் திருந்தாத மீடியா நிறுவனத்துக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது; லைசென்ஸை குறிப்பிட்ட காலத்துக்கு முடக்கி வைப்பது போன்ற தண்டனை அளிக்க அந்தக் கவுன்சிலுக்கு அதிகாரம் வேண்டும். இது குறித்து பிரதமருக்கு எழுதியிருக்கிறேன்.
கரன் தாப்பர்: அது பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பார்களே?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: ஜனநாயகத்தில் எல்லோரும் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். எந்த சுதந்திரமும் எல்லையில்லாதது அல்ல. சில கட்டுப்பாடுகள் இருந்தாக வேண்டும். மீடியா இதை உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
கரன் தாப்பர்: மீடியாவை உங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது போலிருக்கிறதே?
நீதிபதி மார்கண்டேய கட்ஜு: நான் ரொம்பவும் மதிக்கிற சில மீடியாக்காரர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக சாய்நாத்தைச் சொல்லலாம். அவர் மேல் எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. விவசாயிகள் தற்கொலை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட ஆட்கள் குறைவு. பெரும்பாலான செய்தியாளர்கள் அரைகுறையாகத் தான் இருக்கிறார்கள். எகனாமிக்தியரி, பொலிடிகல் சயின்ஸ், லிட்டரேச்சர், ஃபிலாசபி போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு இல்லாதவர்கள்.
—————————————————————————————————————————————————————-
பொருளியல் தொடர்: 18
அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை
யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு உள்ளது (அல் குர்ஆன் 51:19)
பொதுவாக நாம் வீதியில் செல்லும் போது ஒரு தோட்டத்தைப் பார்க்கின்றோம். அதிலிருந்து நாம் உண்ணலாம். எந்த வகையில் என்றால் அதில் ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்கு உரிமை இருக்கின்றது. மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில், இவ்வாறு மக்கள் எடுப்பதை அந்த நிலத்தின் உரிமையாளர் பொருட்படுத்தக்கூடாது
பொதுவான மரத்தின் கிளையில் காய்த்துத் தொங்கும் கனிகளை எடுத்து உண்பதும் கூடும்.
அம்ர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: தொங்கவிடப்பட்டிருக்கும் பேரிச்சை பழத்தை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. தன்னுடைய ஆடையில் இரகசியமாக முடிந்து எடுத்துக் கொள்ளாமல் தேவையுடைய ஒருவர் அதிலிருந்து சாப்பிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று கூறினார்கள். (நூல்: திர்மிதி 1210)
முஸைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் “வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள் “உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன் தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர் பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கின்றது; மரத்தி-ருந்து தின்னுகின்றது. அதைத் தேடக்கூடியவன் அதனிடம் வரும் வரை அதை நீ விட்டு விடு” என்று கூறினார்கள். தன்னுடைய மேய்ச்சல் நிலத்திலே பாதுகாப்பாக உள்ள (கால்நடைகளைத் திருடுவதைப்) பற்றி கேட்கப்பட்ட போது, “அதற்கு அதனுடைய விலையைக் போன்று இருமடங்கு (அபராதமும்) தண்டனைக்குரிய அடியும் உண்டு” என்று கூறினார்கள். அதனுடைய தொழுவத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டால், அதிலிருந்து எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டுதல் இருக்கிறது என்று கூறினார்கள். தானியங்கள் அதனுடைய கிளைகளிலிருந்து (திருடி) எடுக்கப்பட்டால் என்னவென்று கேட்டார். “யார் இரகசியமாகத் தன் ஆடையில் முடிந்து எடுத்துக் கொள்ளாமல் அந்த இடத்திலேயே சாப்பிடுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. யார் கட்டிக் கொண்டு செல்கிறானோ அவனுக்கு அதனுடைய மதிப்பைப் போன்று இருமடங்கு (அபராதமும்) தண்டனையாக அடியும் இருக்கிறது” என்று கூறினார்கள். தானியக்களஞ்சியத்திலிருந்து (திருடி) எடுக்கப்பட்டதற்கு, அதிலிருந்து எடுக்கப்பட்டது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அதற்கு கைவெட்டப்படும் என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன?” எனறு அவர் கேட்டார். “அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய். அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் அது உனக்குரியதாகும்” என்று கூறினார்கள். மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களிலே பெற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றி கேட்டார். அதற்கு, புதையலில் ஐந்தில் ஒன்று (வரியாகச் செலுத்தப்பட வேண்டும்) என்று கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 6396)
தானியங்களை களத்திலிருந்து எடுத்து வந்தால் அதற்குத் தண்டனை வழங்கப்படும்.
நபி (ஸல்) அவர்களிடம் தொங்கவிடப்பட்ட பேரீத்தம் பழங்களைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ஒருவன் இரகசியமாக முடிந்து எடுத்துக் கொள்ளமால் தன்னுடைய வாயினால் அந்த இடத்திலேயே சாப்பிட்டால் அவன் மீது எந்தக் குற்றமும் இல்லை. என்று கூறினார்கள். யார் அதிலிருந்து ஏதாவது ஒரு அளவிற்கு எடுத்துச் சென்றால் அவருக்கு அது போன்று இருமடங்கு அபராதமும் தண்டனையும் இருக்கிறது. யார் தானியக் களஞ்சியத்திற்கு வந்த பிறகு அதிலிருந்து ஏதாவது ஒரு அளவு திருடிச் சென்றால், அவன் திருடியது கேடயத்தின் மதிப்பிற்கு இருந்தால் அவனுக்குக் கைவெட்டுதல் இருக்கிறது. யார் கேடயத்தின் மதிப்பை விடக் குறைவாகத் திருடுகிறாரோ அவருக்கு, திருடியதின் மதிப்பைப் போன்று இருமடங்கு அபராதம் உண்டு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: அபூதாவுத் 3816
அவர் அந்தக் களத்திலிருந்து எடுத்து உண்ணலாம். அதை அவர் ஒரு துணியிலோ அல்லது ஒரு பையிலோ முடிந்தால் அவர் மீது குற்றம் சுமத்தப்படும். அந்த அளவுகளையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். அந்த களத்தில் அவர் எடுத்த கனிகள் ஒரு கேடயம் அளவு இருந்தால் அவருக்குத் திருட்டிற்குரிய தண்டனை வழங்கப்படும்.
திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 5:38)
இந்த அடிப்படையில் திருட்டிற்குரிய தண்டனை அவருக்கு வழங்கப்படும். அவர் அந்தக் களத்திலிருந்து எடுத்த தானியங்கள் கேடயத்தின் அளவை விடக் குறைவாக இருந்தால் அவருக்கு இரண்டு மடங்கு அபராதம் வழங்கப்படும்.
கண்டெடுக்கப்பட்ட பொருளின் சட்டம்
நபி (ஸல்) அவர்கüடம் கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதன் பை (உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் அறிந்து கொள். பிறகு, ஓராண்டு காலத்திற்கு (அதை) அறிவிப்புச் செய்” என்று கூறினார்கள். பின்னர் அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) கூறியதாவது: அதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்து கொள்வார். மேலும், அது அவரிடத்தில் அடைக்கலப் பொருளாக இருக்கும். இந்தப் பிந்திய வாக்கியம் மட்டும். அல்லாஹ்வின் தூதருடைய சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத் அவர்கüன் சொல்லா என்று எனக்குத் தெரியவில்லை” என்று அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கüடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), “வழி தவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதை நீ எடுத்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள், “அதையும் கூட அறிவிப்புச் செய்ய வேண்டும்” என்று கூறினார்கள். பிறகு அந்த நபர், “வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அதை (அப்படியே) விட்டு விடுங்கள். ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கின்றது; அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கின்றது; அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கின்றது; மரங்கü-ருந்து சாப்பிடுகின்றது” என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி), நூல்: புகாரி 2428
அடையாளங்களைக் குறித்துக் கொள்ளுதல்
ஒரு பணப்பையை நாம் கண்டெடுத்தால் அதன் தொகையைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மதிப்பு பத்தாயிரம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எத்தனை? அதில் நூறு ரூபாய் நோட்டுகள் எத்தனை? அதில் சுத்தப்பட்டிருக்கும் ரப்பர் பேன்டின் நிறம் என்ன? போன்ற நுணுக்கமான அடையாளங்களைக் கவனித்து வைப்பது மிக அவசியம் ஆகும்.
அந்தப் பணத்தை ஒரு வருட காலம் மக்கள் நடமாடும் இடத்தில் அறிவிப்புச் செய்ய வேண்டும். அது என்னுடைய தொகை என்று யார் கூறுகிறாரோ அவரிடம் தகுந்த அடையாளங்களைக் கேட்க வேண்டும் அவர் சரியான அடையாளங்களைச் சொன்னால் அவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் அதை நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும். சரியாக ஒரு வருடம் அறிவிப்பு செய்த பிறகும் அந்தத் தொகையைக் கேட்டு யாரும் வரவில்லையென்றால் அது நமக்கு ஆகுமானதாகும். அது ஹராமாக இருக்குமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. அதை நாம் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மூன்று வருடம் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று ஒரு ஹதீஸ் வந்துள்ளது.
நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்கüடம் வந்தேன். அவர்கள், “ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். அப்போதும், “ஓராண்டு காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி(ஸல்) அவர்கüடம் வந்தேன். அப்போது அவர்கள், “அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்” என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.
அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், “(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், “மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்‘ என்று கூறினார்களா, அல்லது “ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்‘ என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது “எனக்கு நினைவில்லை”) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), நூல்: புகாரி 2426
மேற்கூறப்பட்ட ஹதீஸில் ஒரு வருடம் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று நாம் பார்த்தோம். ஆனால் அதற்கு மாற்றமாக மூன்று வருடம் என்று இந்த ஹதீஸில் வந்துள்ளது. இந்த ஹதீஸை நன்கு கூர்ந்து படித்தால் ஒரு வருடம் மட்டுமே அறிவிப்புச் செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இந்த ஹதீஸில் இறுதியில் “(நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், “மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது “ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன்” (அதாவது “எனக்கு நினைவில்லை”) என்று அறிவிப்பாளர் சொல்வதன் காரணத்தினால் ஒரு வருடம் தான் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று நாம் விளங்க முடியும்.
இந்தச் சட்டம் எல்லா பொருட்களுக்கும் பொதுவானதல்ல.
கம்பு, சாட்டை, கயிறு மற்றும் இவை போன்றவைகளை ஒரு மனிதன் கண்டெடுத்தால் அதைப் பயன்படுத்துவதற்கு நபியவர்கள் எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல் அபூதாவூத் 1459
மக்கள் சாதாரணமாகக் கருதும் பொருளாக இருந்தால் அதை நாம் தாராளமாக நாம் பயன்படுத்தலாம்.
நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். “இது ஸதகா பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2431
மக்கள் சாதரணமானவை என்று எதைக் கருதுவார்களோ அதை எடுத்துக் கொள்வது நம் மீது குற்றமாகாது. “இது ஸதகா பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு ஸதகா பொருள் ஹராம் என்பதே ஆகும். நமக்கு ஸதகா பொருள் தடை செய்யப்படவில்லை என்பதால் அதை உண்பது நம் மீது தடையாகாது.
புதையல் கண்டெடுக்கப்பட்டால்….
“அல்லாஹ்வின் தூதரே! மக்கள் வசிக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் நிலை என்ன?” எனறு ஒருவர் கேட்டார். “அதை ஒரு வருடம் அறிவிப்புச் செய். அதைத் தேடக்கூடியவன் காணப்பட்டால் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் அது உனக்குரியதாகும்” என்று கூறினார்கள். மக்கள் வசிக்காத பாழடைந்த இடங்களிலே பெற்றுக் கொள்ளப்படுவதைப் பற்றி கேட்டார். அதற்கு, “புதையலில் ஐந்தில் ஒன்று (வரியாகச் செலுத்தப்பட வேண்டும்)” என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத் 6396)
வரதட்சணை திருமணத்தில் போய் சாப்பிடலாமா?
தவறான முறையில் ஒருவர் சம்பாதிக்கின்றார். அவர் தவறான முறையில் சம்பாதித்தாலும் அதை நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது நமக்கு ஹராம் இல்லை. ஏனென்றால் அவருடைய வருமானம் தான் ஹராமாகும். அவர் நமக்கு கொடுக்கக்கூடிய அன்பளிப்பு ஹராம் ஆகாது.
அப்படியென்றால் வரதட்சணை திருமணத்திற்குச் சென்று சாப்பிடலாமா?
புறக்கணிப்பதற்கான காரணங்கள்
வரதட்சணை திருமணத்தில் போடப்படும் உணவு ஹராம் என்று நாம் ஒருபோதும்கூறவில்லை. எனினும் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகின்றோம். சபை சரியில்லாத காரணத்தாலும், அல்லாஹ்வின் வார்த்தையும், அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் வார்த்தையும் அங்கே காலில் போட்டு மிதிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். சபை சரியில்லாத காரணத்தால் நபி (ஸல்) அவர்களும் விருந்தைப் புறக்க”த்துள்ளார்கள். இதற்கு, பின்வரும் செய்தி ஒரு வலுவான ஆதாரம் ஆகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கüன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்கüடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ(ரலி) அவர்கüடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்கüடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாச-ல் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கüடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
(நூல்: புகாரி 2613)
இந்த ஹதீஸின் மூலம் சபை சரியில்லாத இடத்தைப் புறக்கணிக்கலாம் என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)
வரதட்சணை திருமண விருந்துகளில் கலந்து கொண்டால் அதை மறைமுகமாக ஆதரிப்பவராக நாம் ஆகி விடுவோம். இதன் காரணத்தால் தான் நாம் அது போன்ற சபைகளைப் புறக்கணிக்கின்றோம்.
—————————————————————————————————————————————————————-
பிற மேடைகளில் பிரச்சாரம்
தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு
ஆர். ரஹ்மத்துல்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம்.
ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான்.
உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு இருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இந்தத் தருணத்தில் நம்மை வழிகெடுக்க ஷைத்தான் வேறு வகையான ஆசை வார்த்தைகளைக் கூறுவான்.
நாமாகக் கேட்டால் தானே தவறு, அவர்கள் விரும்பிக் கொடுத்தால் தவறா? நாம் எதையும் பெண் வீட்டாரிடம் கேட்க வேண்டாம்; அவர்கள் தமது பெண் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் பாசத்தினால் தானே தருகிறார்கள்; இதில் என்ன தவறு? என பல்வேறு ஆசை வார்த்தைகளைக் கூறி வரதட்சணை வாங்கத் தூண்டிவிடுவான்.
அதுபோன்று தான் நம்மை சத்தியப் பிரச்சாரம் செய்ய விடாமல் பல வகையில் எதிர்த்தவர்கள், நமது பிரச்சாரத்தை முடக்க நினைத்தவர்களின் பல்வேறு சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டதால் ஷைத்தான் தற்போது நமது பிரச்சாரத்தின் வீரியத்தைக் குறைக்க புதியதொரு யுக்தியாக அசத்தியவாதிகள் வழியாகத் தூண்டிவிட்ட ஒரு வாதம் தான் “பிற மேடைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை” என்பது.
இந்த வாதத்திற்குத் தெளிவான விளக்கத்தை நாம் அறிந்து கொண்டால் ஷைத்தானின் இந்தச் சூழ்ச்சியில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.
பொதுவாக பிற இயக்கத்தினர் மேடையில் பிரச்சாரம் செய்வதால் சொற்பொழிவு நிகழ்த்துவோருக்கும் அதைக் கேட்கும் மக்களுக்கும் ஏற்படும் அவலங்களையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.
தீமையைத் தடுக்க இயலாத நிலை!
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
திருக்குர்ஆன் 3:110
நன்மையை ஏவி தீமையை தடுப்பதால் தான் நம்மைச் சிறந்த சமுதாயம் என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் பிற இயக்கத்தினருடன் பிரச்சாரம் செய்யும் பொழுது நம்மால் அவர்களின் தீமையைத் தடுக்க முடியாத அவல நிலைக்கு ஆளாக நேரிடும்.
உதாரணத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற பீஸ் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தவிர அனைத்து கொள்கையுடையவருடன் இனைந்து இஸ்லாத்தை நிலைநாட்ட (?) சொற்பொழிவு நிகழ்ச்சிகளை பீஸ் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் இஸ்லாமியக் கண்காட்சி என்ற போர்வையில் வர்த்தக உலகத்தைக் காட்டும் அந்த நிகழ்ச்சியில், பொருளாதார மோகத்தின் உச்சக்கட்டமாக அக்கண்காட்சியின் வாசலில் ஒரு காரை வைத்து 6% வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஒரு கொடுமை நடந்தேறியது.
சமூகக் கொடுமை என அனைத்து தரப்பு முஸ்லிம்களாலும் அறியப்பட்ட, நிரந்தர நரகம் என்று மார்க்கம் கூறுகின்ற இந்த வட்டி என்கிற வன்கொடுமையை யாராலும் கண்டிக்க முடியவில்லை.
வட்டி ஹராம் என்பது அங்கு சென்றிருந்த ஜாக் அமைப்பினருக்குத் தெரியவில்லையா? அல்லது தனக்கு மட்டும் இறையச்சம் உள்ளது போன்று அவ்லியா வேஷம் போடும் முஃப்தி காஸிமிகளுக்குப் புரியவில்லையா? ஏன் இந்த அவல நிலை? பல கொள்கையுடைவர்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தி சமரசத்திற்காக சன்மார்க்கத்தைத் தூக்கி எறியும் அவல நிலைக்கு ஆளானார்கள்.
இது ஒரு பக்கமிருக்க, இன்னொரு பக்கம் யூசுப் எஸ்.டி.எஸ் என்பவர் அந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் தனது சொற்பொழிவில் இந்தச் சமுதாயம் 73 கூட்டமாகப் பிரியும்; அதில் 72 கூட்டம் நரகத்திலும் ஒரு கூட்டம் சொர்க்கத்திலும் இருப்பதாகக் கூறி, அந்த ஒரு கூட்டம் என்பது ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹன்பலி, தவ்ஹீத், அஹ்லே ஹதீஸ் அனைவரும் தான் சுவனம் செல்லும் அந்த ஒரு கூட்டம் என்று விளக்கம் தருகிறார்.
மத்ஹபுகள் கூடாது என்று பல ஆண்டுகளாக முழக்கமிட்ட ஜாக் அமைப்பினர் கலந்து கொண்ட அந்தச் சபையில் தனது கொள்கைக்கெதிராகப் பேசிய இவரைக் கண்டிக்க இயலவில்லை. கண்டிக்கத் தான் இயலவில்லை என்றால் தவறான கொள்கைகள் அரங்கேறிய அந்த மேடையைப் புறக்கணிக்க மனமும் இல்லை. மேடை மோகம் இவர்களை சத்திய பிரச்சாரத்திலிருந்து சமரசம் செய்ய வைத்துவிட்டது.
பல தரப்பட்ட கொள்கையுடையோராலும் இணைந்து நடத்தப்பட்ட இந்த பீஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தமது கொள்கையில் சமரசம் செய்ததினால் அவர்களின் கொள்கை உறுதி பீஸ் பீஸாகிப் போய்விட்டது.
இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல தரப்பட்ட கொள்கை உடையவர்களால் தீமையைத் தடுக்க முடியவில்லை என்றாலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜாகிர் நாயக் அவர்களால் கூட இந்த தீமைகளைத் தடுக்க முடியவில்லை.
மத்ஹப், அனாச்சாரங்கள் எனப்படும் பித்அத் ஆகியவற்றை எதிர்த்தால் தானே இந்த ஜாகிர் நாயக்கால் தீமையை எதிர்க்க முடியும். இவரே அதன் ஆதரவாளராக இருந்தால் எப்படித் தடுக்க முடியும்! இந்த ஜாகிர் நாயக் வெறும் மத்ஹப் ஆதரவாளர் மட்டும் கிடையாது; கடவுள் கொள்கையில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு ஒப்பானவர்.
ஜாகிர் நாயக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும்
இறைவனுக்கு உருவம் இல்லை எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்கிற அத்வைதக் கொள்கையை ஷேக் அப்துல்லாஹ் ஜ(கோ)மாலி வாதிட்ட போது, இறைவனுக்கு உருவம் உண்டு எனவும் இறைவன் அர்ஷில் இருக்கிறான் எனவும் இறைவனின் தனித்தன்மையை நிலைநாட்டி அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் மவ்லவி பி.ஜெ அவர்களால் எடுத்துரைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.
ஜமாலி போன்ற கோமாளித்தனமான வாதங்களைப் போன்றே தான் ஜாகீர் நாயக்கும் ரவிசங்கர் என்பவருடன் சொற்பொழிவு நிகழ்த்தும் போது அவர் தனது உரையில், இறைவனுக்குப் பிள்ளை இல்லை, பெற்றோர் இல்லை என கூறிவிட்டு, இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை திருக்குர்ஆனும் பகவத் கீதையும் ஒரே மாதிரி தான் கூறுகிறது என இஸ்லாத்திற்கு எதிரான கருத்தைப் பதிவு செய்தார்.
எந்த அளவிற்கென்றால் அவர், இறைவனுக்கு உருவம் இருக்கிறது எனக் கூறினால் நீள வாக்கிலா அகல வாக்கிலா எனக் குழப்பம் வந்து விடும் எனக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் இது குறித்து ஒரு கேள்வியை முன் வைத்தார்.
இதோ அந்தப் பெண் கேட்ட கேள்வி:
நபி (ஸல்) அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள். அப்பெண், அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று கூறினாள். நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள். நபி (ஸல்) அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள். இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம் (ரலி)
நூல்: முஸ்லிம் (836)
இந்த ஹதீஸை மேற்கோள் காட்டி அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் எனத் தெளிவாக உள்ளதே இதன் விளக்கம் என்ன? எனக் கேட்கிறார்.
இதற்கு ஜாகீர் நாயக் பதில் கூறும் போது, இந்த ஹதீஸ் குறித்து நாம் அதிகம் சிந்திக்கக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறி விட்டார்கள் எனக் கூறி, இறைவன் எங்கும் இருக்கிறான் என்ற அப்துல்லாஹ் ஜமாலியின் கொள்கைக்கு ஆதரவாக மலுப்பலான பதிலைத் தருகிறார்.
இப்படிப்பட்ட கொள்கையுடையவர்களின் மேடைகளை நாம் பகிர்ந்தால் தீமையைத் தடுக்க முடியாமல் சமரசம் செய்த இவர்களின் நிலையைப் போன்று தான் நமக்கும் ஏற்படும். இந்த அவல நிலையை நாமும் ஒரு காலத்தில் சந்தித்து சங்கடத்திற்கு உள்ளாகியிருந்தோம்.
கடந்த 2004ல் நாம் தமுமுகவுடன் சேர்ந்து இருந்த கால கட்டத்தில் நெல்லை மாவட்டம் மேலப்பாளயத்தில் தமுமுக சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்திற்கு, தவ்ஹீத்வாதிகளால் பிரச்சாரம் செய்யப்படும் அந்த மேடைக்கு, தர்கா வழிபாட்டில் மூழ்கித் திளைக்கும் எஸ்.எஸ். ஹைதர் அலி என்பவர், அழைக்கப்பட்டார். அந்த மேடையில் ஏறிய அவர் தனது சொற்பொழிவின் இறுதியில் “நபிகளாரை கனவிலும் நனவிலும் கண்டு களிக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்தளுள்வானாக” எனப் பிரார்த்தனை செய்து அசத்தியக் கொள்கையை அள்ளித் தெளித்தார்.
அதைக் கண்டிக்கவோ அதற்கு மறுப்பு சொல்லவோ யாருக்கும் திராணி இல்லாமல் போன அவல நிலையை ஒருவரும் மறக்க இயலாது. ஆனால் ஒரு விஷயம், இந்த மேடையில் ஹைதர் அலீ என்ற முஷ்ரிக் ஏறினால் நாங்கள் ஒரு போதும் மேடையில் ஏற மாட்டோம் என மறுத்து ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்களும் எம்.எஸ்.சுலைமான் அவர்களும் ஒதுங்கிக் கொண்டார்கள். இதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலவில்லை.
இதனால் தான் பிறர் மேடையில் ஏறி நாம் பிரச்சாரம் செய்வதில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
இதுமட்டுமின்றி பிறர் மேடைகளைப் பகிர்வதால் பேச்சாளர்களுக்கு ஏற்படும் மற்றொரு அவலநிலை இதை விடப் படுமோசமானதாகும்.
இரட்டை வேட நாடகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும் போது ஒரு முகத்துடனும் செல்கிறான்.
அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)
நூல்: புகாரி 7179
இரட்டை வேடம் போடுபவன் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் என்று நபிகளாரால் மிகவும் கண்டிக்கப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யக் கூடாது. குறிப்பாக சத்தியப் பிரச்சாரத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பவர் ஒருக்காலும் செய்யக்கூடாது. ஆனால் பிற கொள்கையுடையவர்களின் மேடைகளைப் பகிர்வதால் இரட்டை வேடம் போடும் நயவஞ்சகனாக மாறும் அவல நிலை ஏற்படும்.
நம்மோடு மேடையில் அமர்ந்திருப்பவரின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அவரை திருப்திப்படுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் மார்க்கத்தை மறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.
பிற அமைப்பினரின் வழிகெட்ட கொள்கைகளையும் தவறுகளையும் அவர்கள் சமுதாயத்திற்குச் செய்த துரோகங்களையும் அம்பலப்படுத்தும் போது நம்மிடம் இருந்த வேகமும் வீரியமும் அந்த அமைப்பினரோடு சேர்ந்து மேடை ஏறும் போது, அவர்களோடு பழகி பல்லிளித்து, அவர்களின் குற்றங்களை நாம் ஒன்றும் அறியாதவர்கள் போன்று நடித்து மக்களை மடையர்களாக்கும் நிலை ஏற்படும்.
சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம் என்று கூறிவிட்டு லட்சக்கணக்கில் வசூலித்து மோசடி செய்து, இன்று வரை ஒழுங்காகக் கணக்குக் காட்டாத த.மு.மு.க.வுடன் சேர்ந்து நாம் பிரச்சாரம் செய்தால் இவர்களைக் கண்ணியவான்களாக்க நேரிடும்.
வட்டி இல்லா கடனுதவி பெற வந்த ஓர் அபலைப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய ஒழுக்கங்கெட்ட பாக்கருடன் பிரச்சாரம் செய்தால் அந்த அயோக்கியர்களை ஒழுக்க சீலராக்க நேரிடும்.
உதட்டில் தேனும் உள்ளத்தில் தேளும் கொண்ட அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் இந்தத் தன்மை பொருந்திப் போகுமே தவிர, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி பிரச்சாரம் செய்யும் நமக்கு ஒருக்காலும் பொருந்தாது.
பிற அமைப்பினரோடு பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களுக்கு ஏற்படும் அவலங்களைப்போல அதைப் பார்க்கும் மக்களும் பல அவலங்களை சந்திக்க நேரிடும்.
அவற்றை அடுத்த இதழில் அறிவோம், இன்ஷாஅல்லாஹ்.
—————————————————————————————————————————————————————-
இப்படியும் சில தப்ஸீர்கள் தொடர்: 10
அய்யூப் நபிக்கு சிரங்கு நோய்?
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
அல்குர்ஆன் 38:41
அய்யூப் (அலை) ஏதோ ஒரு துன்பத்தால் பாதிக்கப்பட்டு, தமக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததும், அத்துன்பம் விலக இறைவன் கூறிய நிவாரணமும் இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு விளக்கமளிக்க முனைந்த விரிவுரையாளர்கள் தங்கள் கற்பனைகளை, யூகங்களை விளக்கங்களாக எழுதியுள்ளார்கள்.
அதன் முதல் படியாக, அய்யூப் நபிக்கு ஏற்பட்ட துன்பம் அவரது உடலில் ஏற்பட்ட ஒரு வகை நோய் என்று கூறுகின்றார்கள்.
இறைவன் அவருக்கு அவரது உடல், பொருள், பிள்ளைகள் ஆகியவற்றில் சோதனை வழங்கினான். அவரது உடலில் உள்ளத்தைத் தவிர ஊசியளவு கூட நோயின்றி இல்லை.
நூல்: இப்னு கஸீர், பாகம் 4, பக்கம் 49
அய்யூப் நபியின் உடலில் நோயின்றி ஒரு பகுதியுமில்லை எனுமளவு உடல் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று விளக்கமளித்துள்ளார்கள். மேலும் அவரது உடலில் சீழ் வடிந்தது என்றெல்லாம் விரிவுரை நூல்களில் கூறியுள்ளனர்.
இறைவனிடமிருந்து உள்ள சோதனையாக அய்யூப் நபியின் உடலில் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தினான். அவரது உடல் உப்பி அதிகளவில் சீல் வடிந்தது. அது நீண்ட காலம் நீடித்தது.
நூல்: தஃப்ஸீருஸ் ஸஃதீ, பாகம் 1, பக்கம் 528
ஒவ்வொரு இறைத்தூதரும் சாதாரண மனிதர்களை விடவும் அதிகமான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது நபிமார்களின் வரலாறை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் இறைவன் அய்யூப் நபிக்குச் சில சோதனைகளை வழங்கி சோதித்துள்ளான். அய்யூப் நபியும் அதை சகித்துக் கொண்டு, தாம் நல்லடியார் என்பதை இறைவன் முன்னிலையில் நிரூபித்துள்ளார்.
நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.
அல்குர்ஆன் 38:44
இதிலிருந்து முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றிக் கூறுவதை விட்டுவிட்டு, அவருக்கு இறைவன் வழங்கிய துன்பம் சிரங்கு நோய் என்று எவ்வித ஆதாரமுமின்றி விளக்களித்துள்ளனர். விரிவுரை நூல்களில் கதை அளந்துள்ளனர்.
மேலும் இந்நோய் 18 வருடம் நீடித்ததாகவும் விரிவுரை நூல்களில் காணப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதராகிய அய்யூப் (அலை) அவர்களுக்கு அவர்களின் சோதனை 18 வருடம் நீடித்தது. அருகிலிருப்பவர், தூரத்திலிருப்பவர் என எல்லோரும் அவரைப் புறக்கணித்தனர். இருவரைத் தவிர! அவ்விருவரும் அவருக்கு மிகவும் நெருக்கமான சகோதரர்களாகவும், காலை, மாலை அவரிடம் செல்வோராகவும் இருந்தனர். அப்போது அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாக உலகில் யாரும் செய்யாத குற்றத்தை, பாவத்தை அய்யூப் செய்து விட்டார்’ எனக் கூறினார்.
நூல்: இப்னு கஸீர், பாகம் 7, பக்கம் 74
பதினெட்டு வருடம் இந்த துன்பத்தால் பீடிக்கப்பட்டார் என்று இறைவனோ, இறைத்தூதரோ கூறியுள்ளார்களா? அதில் ஒருவர் அய்யூப் நபி செய்த பாவத்திற்குத் தண்டனையாக இந்த நோயை வழங்கியதாகக் கூறுகின்றார். அதையும் எவ்வித மறுப்புமின்றி தஃப்ஸீர் நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளனர். விளக்கம் கூற வேண்டும் என்பதற்காகக் கண்டதையும் உளறிக் கொட்டியுள்ளனர் என்பதையே இது காட்டுகின்றது.
புல்லில் உள்ள மர்மம்
அய்யூப் நபியவர்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு இறைவனிடம் முறையிட்ட போது இறைவன் நிவாரணத்திற்காக சில காரியங்களைச் செய்யுமாறு கூறுகின்றான். அதன் ஒரு பகுதி மேலே உள்ள வசனத்தில் கூறப்பட்டுள்ளது. நல்லவேளையாக இமாம்கள், விரிவுரையாளர்கள் அந்த பகுதியைக் கண்டு கொள்ளவில்லை. இல்லையெனில் அதற்கு விளக்கம் என்ற பெயரில் எதையாவது எழுதியிருப்பார்கள்.
ஆனாலும் இரண்டாம் பகுதியில் வசமாக மாட்டிக் கொண்டோம். ஆம்! இறைவன் நிவாரணத்திற்காக ஒரு பிடி புல்லை எடுத்து அடிக்குமாறு அய்யூப் நபிக்குக் கூறினான். அவ்வளவு தான்! அதற்குள் இமாம்கள் அதற்கு ஒரு கதை கட்ட ஆரம்பித்து, அதை விரிவுரை நூல்களில் ரிலீசும் செய்து விட்டனர்.
உமது கையால் புல்லில் ஒரு பிடியை எடுத்து அதன் மூலம் அடிப்பீராக! சத்தியத்தை முறிக்காதீர்! (என்றோம்.) நாம் அவரைப் பொறுமையாளராகக் கண்டோம். அவர் சிறந்த அடியார். அவர் (நம்மிடம்) திரும்புபவர்.
அல்குர்ஆன் 38:43
இது தான் அந்த வசனம். இந்த வசனத்திற்குப் பின்வருமாறு விரிவுரையாளர்கள் விளக்கமளிக்கின்றனர்.
விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள்: அய்யூப் நபி சில விவகாரங்களில் தமது மனைவியின் மீது கோபமுற்று அல்லாஹ் தனக்கு நிவாரணம் அளித்தால் அவரை நூறு கசையடி அடிப்பதாகச் சத்தியம் செய்தார். அவரது மனைவி ஸாலிஹானவராக, அவருக்கு உதவி புரிபவராக இருக்கும் போது அல்லாஹ் நிவாரணம் அளித்தான். அல்லாஹ் அப்பெண்ணுக்கு அருள் புரிந்தான். அய்யூபும் இரக்கம் காட்டினார். நூறு புல்லைக் கொண்ட புல்கட்டைக் கொண்டு அவரின் மனைவியை ஒரு அடி அடிக்குமாறு இறைவன் தீர்ப்பளித்தான். (நூல்: தஃப்ஸீரு ஸஃதீ, பாகம் 1, பக்கம் 714)
அய்யூப் நபி, தம் மனைவியின் மீது கோபம் கொண்டு 100 கசையடி அடிப்பதாக சத்தியம் செய்தார்களாம். என்ன ஒரு முட்டாள் தனம்?
இறைவனின் புறத்திலிருந்து துன்பம் வந்ததற்கு அவரது மனைவி என்ன செய்வார்கள்? துன்பம் இறைவனின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது. அதற்கு யாரும் பொறுப்பாக முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. இந்த அடிப்படை கூட ஒரு நபிக்கு, இறைத்தூதருக்குத் தெரியவில்லை. என்றும், அய்யூப் நபியை கொடுமைக்கார கணவனாகவும் இந்த விளக்கம் சித்தரிக்கின்றது.
அடுத்து, இறைவன் நிவாரணம் அளித்த பின் அவரது மனைவி விஷயத்தில் இரக்கம் கொண்டு 100 கசையடிகளுக்குப் பதிலாக 100 புல்லினால் ஒரு அடி அடித்தால் அது நூறு கசையடிகளுக்குச் சமமாகும் என்று இறைவன் தீர்ப்பளித்தானாம். இப்படி ஒரு சம்பவம் எந்த ஹதீஸ் நூல்களிலும் கூறப்படவில்லை. கண்டிப்பாக இதை இறைவன் கூறியிருக்கவும் முடியாது. என்ன ஒரு தந்திரம்? இது போன்ற தந்திரங்களெல்லாம் மத்ஹப் நூல்களில் தான் காண முடியும்.
ஓடும் தண்ணீர் சுத்தம் என்ற நபிமொழியை மூலதனமாகக் கொண்டு சிறுநீரைச் சுத்தமானதாக ஆக்குவதற்கு அவர்கள் செய்த தந்திரம் எளிதில் மறக்கக் கூடியதா?
மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் வகையில் ஒரு குழாய், இப்போது அதில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அந்தத் தண்ணீர் ஓடும் தண்ணீர் தானே! நபிகளாரின் ஹதீசுக்கேற்ப இப்போது இந்த சிறுநீர் சுத்தமாகி விடுகின்றது என்று கூறியவர்களாயிற்றே!
இதைப் போன்று தான் மேற்கண்ட தந்திரம் அமைந்துள்ளது. எனவே கண்டிப்பாக இதை இறைவன் கூறியிருக்க மாட்டான். இறைவன் கூறியதாக எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை என்பதே இதை நாம் வலுவாக மறுக்கக் காரணம்.
மேலும் அந்த வசனத்தை நன்கு வாசியுங்கள். “புல்லை எடுத்து அடிப்பீராக’ என்று தான் இறைவன் கூறியிருக்கின்றான். யாரை அடிக்க வேண்டும்? எத்தனை புல்கள் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இறைவன் கூறியிருக்கின்றானா? இப்படி குர்ஆன், ஹதீஸில் இல்லாதவற்றையே விளக்கம் என்ற பெயரில் கூறியுள்ளனர். கண்டிப்பாக இதுவும் இவர்களின் கற்பனையே! விளக்கம் அல்ல என்பதை இங்கு அழுத்திக் கூறுகிறோம்.