தலையங்கம்
கொள்கையா? கூட்டமா?
தமிழகத்தில் தவ்ஹீதுப் பிரச்சாரம் 80களில் துவங்கி, பின்னர் அதற்காக ஓர் அமைப்பு உருவானது. இறுதியில் அது ஒரு தனி சமுதாயமாகப் பரிணமித்திருக்கின்றது. முன்னர் சில வருடங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடினாலும் அதிகமான சந்தர்ப்பங்களில் தனியாகப் பெருநாள் கொண்டாடவில்லை.
சமீப காலங்களில் ஜாக் மற்றும் தமுமுகவினர் அதிகமான சந்தர்ப்பங்களில் நோன்பு மற்றும் பெருநாளை தனியாகக் கொண்டாடினர்.
நம்மை நோக்கி ஜாக்கினர், “இவர்கள் கூட்டம் சேர்ப்பதற்காக குராபிகளுடன் ஒத்துப் போகிறார்கள்’ என்று விமர்சித்தனர்.
கூட்டம் கூட்டுவதற்காக, வசூலை அள்ளிக் கொட்டுவதற்காக இவர்கள் சு.ஜ.வுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடுகிறார்கள் என்று விமர்சனம் செய்வதற்கு அருகதையற்ற சுனாமித் திருடர்களும் விமர்சனம் செய்தனர்.
சு.ஜ. கூட்டத்தை வைத்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் இதுவரை படம் காட்டியது. தனியாக நின்றால் இவர்களின் சாயம் வெளுத்து விடும் என்று நந்தினி நாயகர்களும் தங்கள் பங்குக்கு விமர்சனம் செய்தனர்.
கூட்டத்திற்காகக் கொள்கை காணும் சந்தர்ப்பவாத நாடகக் கூட்டம் என்று நம்மைப் பற்றி இவர்கள் எண்ணிக் கொண்டனர். இது கொள்கைக்காக உள்ள இயக்கம் என்பதை இவர்கள் மறந்து விட்டனர். இந்த இயக்கத்திற்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே கிடையாது. லட்சியம் தான் அதன் இலக்கும் எல்லையும் ஆகும். கூட்டம் ஒரு பொருட்டே கிடையாது. கொள்கை தான் இதன் உயிர் மூச்சாகும். அதைத் தான் இந்தப் பெருநாள் நிரூபித்துக் காட்டியது.
இந்த இயக்கம் பிறை விஷயத்தில் இறையச்சத்தைப் பார்த்தது. நிறையப் பேர் எதில் இருக்கிறார்கள் என்ற பெரும்பான்மையைப் பார்க்கவில்லை.
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.
(அல்குர்ஆன் 6:116)
இந்த வசனத்தின் அடிப்படையில் பெரும்பான்மையைத் தூக்கி எறிந்து விட்டு, தூதருக்குத் தான் கட்டுப்பட்டது. பழிப்பவரின் பழிப்புக்கு அஞ்சாமல் அல்லாஹ்வுக்கே அஞ்சியது.
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 5:54)
குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒரு செயலைச் செய்யும் போது அதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. காரணம் பதில் இருக்காது.
இதுவரை எந்த நடைமுறையைப் பின்பற்றினீர்கள்? சென்ற நோன்புப் பெருநாளில் பிற மாநிலப் பிறையை ஏன் ஏற்கவில்லை? முந்தி வந்தால் மட்டும் ஏற்பீர்கள்; பிந்தி வந்தால் வந்தால் ஏற்க மாட்டீர்களா? என்ற கேள்விகளுக்கு டவுண் காஜியும் பதில் அளிக்க முடியவில்லை. உல(க)மாக்கள் சபையாலும் விடையளிக்க முடியவில்லை.
இந்தக் கேள்விக் கணைகளுக்கு விடையாகத் தான் மடை திறந்த வெள்ளமாய் இந்தப் பெருநாளில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தொழுகைகளில் மக்கள் வந்து இறங்கினர். அந்தத் திடல்களைக் கடல்களாக்கினர்.
“இதுவே எனது பாதை. நானும், என்னைப் பின்பற்றியோரும் தெளிவான விளக்கத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை நோக்கி அழைக்கிறோம். அல்லாஹ் தூயவன். நான் இணை கற்பிப்பவன் அல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 12:108)
அல்லாஹ் சொல்வது போன்று எங்கள் பாதையில் தெளிவிருக்கின்றது; அதனால் துணிவிருக்கின்றது. தொய்வின்றி எங்கள் பயணம் தொடர்கின்றது. வெற்றி கொள்கைக்காகத் தான்! கூட்டத்திற்கு அல்ல!
நம்மை விமர்சிக்கும் இவர்களுக்குக் கூட்டத்தின் மீது தான் நாட்டம். கொள்கை இல்லை. அதனால் கூட்டம் அவர்களிடம் இல்லை. வெறும் கூடாரம் மட்டும் தான் இருக்கின்றது.
எங்களுக்குக் கொள்கையில் மட்டும் தான் நாட்டம். கூட்டத்தைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கூட்டம் எங்களுக்கு வருகின்றது. இது அல்லாஹ்வின் வேலை.
————————————————————————————————————————————————————–
பிரித்துக் காட்டிய பெருநாள் பிறை
தங்களைத் தாங்களே சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் அசத்திய ஜமாஅத்தினரை விட்டும் தவ்ஹீதுவாதிகள் மார்க்கத்தின் எல்லா வணக்கங்களிலும் தனியாகப் பிரிந்து அடையாளம் காட்டிக் கொண்டிருந்தனர். உளூ, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்களிலும், திருமணம், சமூக வாழ்க்கை, மரணம் போன்ற நிகழ்வுகளிலும் தங்களை தவ்ஹீதுவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர்.
“அடையாளப்படுத்திக் கொண்டனர்’ என்று சொல்லும் போது, ஏதோ ஒரு தனிப் பாதையை, தனி மார்க்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர் என்று அர்த்தமல்ல. இவற்றில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய பாதையில் செயல்பட ஆரம்பித்தனர் என்பது தான் அதன் உண்மையான பொருள்.
சுன்னத் ஜமாஅத் எனப்படுவோரின் வணக்க வழிபாடுகள் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வணக்க வழிபாட்டு முறைகளுக்கு நேர் மாற்றமாக அமைந்திருந்தன. சரியான முறைப்படி தவ்ஹீதுவாதிகள் செயல்பட ஆரம்பித்ததும் அது அவர்களுக்குப் புதிதாகவும், அதிசயமாகவும் தெரிந்தது. அதனால் தான் வரிந்து கட்டிக் கொண்டு தவ்ஹீதுவாதிகள் மீது எரிந்து விழுந்தனர். பள்ளிவாசலை விட்டு தவ்ஹீதுவாதிகளைத் துரத்தியடித்தனர்.
வணக்க வழிபாடுகளிலும் வாழ்க்கை நெறிகளிலும் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றிச் செயல்படுவதற்காக ஏகத்துவவாதிகள் பெரும் விலையைக் கொடுத்தனர். இரத்தம் சிந்தினர். காவல்துறையின் மூலம் நெருக்கடிக்கு உள்ளாயினர். சிறைவாசம் அனுபவித்தனர். நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நெடுங்காலம் ஏறி இறங்கினர்; இதுவரை ஏறி இறங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
பிறை விஷயமும் பெருநாள் விஷேசமும்
இத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொண்ட ஏகத்துவவாதிகள் பெருநாள் விவகாரத்தில் ஏற்படும் பிரிவினையைத் தாங்குவார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பிறை தொடர்பாக சரியான தகவல் கிடைக்காத சமயத்தில், நாம் தனியாகப் பெருநாள் கொண்டாடுவோம் என்று சொல்லும் போது தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள ஒரு சில சகோதரர்களின் விழிகள் கூடப் பிதுங்கியிருக்கின்றன.
மயிரிழையில் உயிர் தப்புவது போல் ஒவ்வொரு தடவையும் கடைசி நேரத்தில் எங்காவது பிறை பார்த்த தகவல் கிடைத்து, பெருநாளில் பிரிவினை ஏற்படாமல் இருந்தது.
“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ
இந்த ஹதீஸ் அடிப்படையில் பிறை விஷயத்தில் ஒரு போதும் மோதல் வராது என்ற நம்பிக்கை இருந்தது. அதற்குத்தக்க ஜாக் இயக்கத்தின் கணிப்புப் பிறை, தகவல் பிறை, சவூதிப் பிறை போன்றவற்றின் மூலம் சமுதாயத்தில் பெருநாளைத் திணித்த போது நாம், “அண்ணனுக்கு ஒரு பெருநாள்; தம்பிக்கு ஒரு பெருநாள்’ என்று விமர்சனம் செய்தோம்.
இவையும் தவ்ஹீது சகோதரர்களின் உள்ளங்களில் உரமாகப் பதிந்து விட்டது. இப்படி ஒரு பதினைந்து ஆண்டு கால அளவு உருண்டோடி விட்டது. இப்போது தான் நம்முடைய எதிரிகள் நம்மைப் பார்த்து, “இவர்கள் கூட்டம் கூட்டுவதற்காகவும், வசூலுக்காகவும் ஊருக்கு ஒத்துப் போகின்றனர்’ என்ற பொய்யான குற்றச்சாட்டை நம் மீது வீசியெறிந்தனர்.
உண்மையில் பிறை விஷயத்தில் சு.ஜ.வினருக்கும் நமக்கும் மத்தியிலுள்ள தேனிலவு என்றாவது ஒரு நாள் முறியத் தான் செய்யும் என்ற எண்ணம் உள்ளூர இல்லாமல் இல்லை. ஏனெனில் சு.ஜ.வினரைப் பொறுத்த வரை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படுபவர்கள் கிடையாது. அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று ஓரளவு நாம் எதிர்பார்த்தே இருந்தோம். அது இந்த ஹஜ் பெருநாளில் நிகழ்ந்து விட்டது.
ஹஜ் பெருநாள் தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை அறிவிக்க முனைகின்ற போது, பிறை பார்க்கும் குழுவினரிடமிருந்து பெற்ற பதில் நவம்பர் 7 அன்று எங்குமே பிறை தென்படவில்லை என்பது தான்.
ஒருவேளை சுன்னத் ஜமாஅத்தினர் பார்த்திருக்கலாமோ என்றெண்ணி, டவுண் காஜியிடம் விசாரித்த போது, தமிழகத்தில் எங்கும் பார்க்கப்படவில்லை என்றே கூறினார். அதன் பின்னர் தொடர்பு கொண்ட போது, மாலேகானில் பிறை பார்த்திருப்பதாகக் கூறினார். மாலேகான் பிறையை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்று கேட்ட போது, மாலேகான் பக்கத்தில் தானே உள்ளது என்று உளறினார். இந்த உளறலையே பெருநாளாக தமிழகத்திற்கும் அறிவித்தார். உல(க)மாக்கள் சபையும் அதை ஏற்றது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிஞர் குழு உடனே கூடி ஆய்வு செய்தது. 6ஆம் தேதி சவூதியில் முதல் பிறை என்று அறிவித்த நாள் அமாவாசை! அன்று பிறை பார்ப்பதற்கு அறவே சாத்தியமில்லை. நவம்பர் 6 அன்று சவூதியின் மக்கா நேரப்படி மாலை 5.42 மணிக்கு சூரியன் அஸ்தமனமாகின்றது. அதே மாலை 5.47 மணிக்கு சந்திரன் அஸ்தமனமாகின்றது. எனவே இந்த ஐந்து நிமிட இடைவெளியில் பிறை பார்ப்பது சாத்தியமே இல்லை.
சவூதி மட்டுமின்றி உலகின் எல்லா பகுதிகளிலும் இதே நிலை தான். 7ஆம் தேதி பிறை பார்ப்பதற்கு சாத்தியம் இருந்தது. ஆனால் ஜல் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மேக மூட்டமாக இருந்ததால் பிறை பார்க்க வாய்ப்பில்லை. பிறை தென்படவில்லை. ஆக தமிழகமெங்கும் தலைப்பிறை தென்படவேயில்லை.
அதனால் நமக்கு முன்னால் இருப்பது ஒரே ஒரு வழி தான். அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த, காட்டித் தந்த வழி!
“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1909
அந்தந்த பகுதிகளில் பிறை காண்பதன் அடிப்படையிலேயே நோன்பு மற்றும் பெருநாட்களைத் தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் எங்கு பிறை கண்டாலும் ஏற்பது என்ற முடிவை எடுத்துள்ளது. பிற மாநிலப் பிறையை ஏற்பது கிடையாது. (இது குறித்த விளக்கத்தைத் தனித் தலைப்பில் காண்க.)
நபி (ஸல்) அவர்களின் ஹதீசுக்கும், அதற்கேற்றவாறு எடுக்கப்பட்ட முடிவுக்கும் மாற்றமாகச் செயல்படுவது சந்தர்ப்பவாதமாகும்.
எனவே எந்த நிலைப்பாடும் இல்லாமல், மார்க்க ஆதாரமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக டவுண் காஜி அறிவித்த பிறையை ஏற்பதில்லை என்றும், தனியாகப் பெருநாள் கொண்டாடுவது என்றும் முடிவெடுத்தது.
இந்த அறிவிப்பு கொள்கைச் சகோதரர்களுக்கு ஓர் அதிர்ச்சியாகவும் ஒப்புக் கொள்வதற்குக் கசப்பாகவும் ஆனது.
பிற மாநிலப் பிறை – ஒரு பார்வை
மக்கள் தீர்மானிக்கும் நாளில் தான் நோன்பு, பெருநாள் என்று வரும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு தானே நாம் ஜாக்கை விமர்சனம் செய்தோம்; இப்போது நாமே தனியாகப் பெருநாள் கொண்டாடலாமா? என்றெல்லாம் நமது சகோதரர்கள் கேள்வி கேட்டார்கள். இந்த ஹதீஸை சரியான அடிப்படையில் புரிந்து கொள்ளாததால் இவ்வாறு கேட்கின்றார்கள்.
“மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1907
மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள் தான். இதற்கு மாற்றமாக ஒருவர் ஷஅபான் பிறை 28ல் நோன்பு என்றோ அல்லது ரமளான் பிறை 31ல் பெருநாள் என்றோ அறிவித்தால் ஏற்றுக் கொள்வோமா? என்றால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
நோன்பு வைப்பதாக இருந்தாலும் பெருநாள் கொண்டாடுவதாக இருந்தாலும் 29ஆம் நாளில் பிறை பார்க்க வேண்டும். பிறை தென்படாவிட்டால் 30ஆகப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் மக்கள் தீர்மானித்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள முடியும். இதல்லாமல் இஷ்டத்திற்குத் தீர்மானிப்பதற்கு, “மக்கள் தீர்மானித்தல்’ என்று கூற முடியாது. அது மனோ இச்சையைப் பின்பற்றுவதாகும்.
இந்த அடிப்படையில் தான் டவுன் காஜியின் பிறை அறிவிப்பை நாம் எதிர்க்கின்றோம்; விமர்சனம் செய்கின்றோம்.
கடந்த நோன்புப் பெருநாளில் டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் நமக்கு ஒரு நாளைக்குப் பின்னால் தான் பெருநாள் கொண்டாடினர்.
அங்குள்ள பிறையை இந்த டவுண் காஜி ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு பார்த்த பிறையை அவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன்? இந்தியா முழுவதும் ஒரே பிறை என்பது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதால் தான்.
தமிழகத்தில் பார்க்கப்பட்ட பிறையை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்றுக் கொண்டால், மக்கள் தீர்மானிக்கும் நாள் என்பதை இந்தியா முழுவதுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆனால் அவ்வாறு தமிழகத்தில் பார்க்கப்பட்டதை இந்தியாவின் பிற பகுதிகளில் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், மக்கள் தீர்மானிப்பது என்பது தமிழக அளவில் தான் என்றாகி விடுகின்றது. அது தான் பொருத்தமாகவும் செயல்படுவதற்கு எளிதாகவும் உள்ளது.
தமிழக அளவில் பிறையைத் தீர்மானித்ததால் கடந்த சில ஆண்டுகள் தமிழகம் முழுவதும் எவ்வித பிரச்சனையும் இன்றி நோன்பு வைக்க முடிந்தது. பெருநாளும் கொண்டாட முடிந்தது. எனவே நமது பகுதி எது என்பதை மக்கள் தீர்மானிப்பதில் பிற மாநிலப் பிறை ஏற்றுக் கொள்வது அடங்காது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
பிறை தொடர்பான இந்த விளக்கத்தையும் டவுன் காஜியின் இந்தக் குழப்பத்தையும் கொள்கைச் சகோதரர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை தெளிவாக விளக்கியது. இதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
கூட்டத்திற்குத் தக்க கொள்கையை மாற்றும் கூட்டத்தினர், “சுன்னத் ஜமாஅத்தை வைத்துத் தான் படம் காட்டினீர்கள்; இப்போது அது வெளிச்சமாகி விடும்’ என்றெல்லாம் கேலியும் கிண்டலும் பேசினர்.
இவ்வளவு நாளும் வசூல் மழையை எழுதினீர்கள். 18ஆம் தேதி வசூலை எழுதுங்கள், பார்ப்போம் என்று சவால் விட்டனர்.
18ஆம் தேதியன்று திடல்கள் வெறிச்சோடிக் கிடக்கும்; தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வெற்றுக் கூடாரமாகி விடும் என்று கனவு கண்டவர்களின் கண்களில் அல்லாஹ் மண்ணை அள்ளிப் போட்டு விட்டான். அவர்களை நிலைகுலையச் செய்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்!
ஒவ்வொரு பெருநாளின் போதும் அலை அலையாக வந்த அதே கூட்டம் அணை உடைத்த வெள்ளம் போல் 18ஆம் தேதி பெருநாள் திடலிலும் வந்து சூழ்ந்தது. திடல்கள் பொங்குமாங் கடலாய் பொங்கி வழிந்தன. படையெடுத்து வந்த பத்திரிகையாளர்களின் படங்களும் இதை நிரூபிக்கின்றன. ஒளி நாடாக்கள் இந்த வரலாற்று நிகழ்வை ஒன்று விடாது பதிவு செய்திருக்கின்றன.
முஃப்தியா? முஃப்த்தினா?
முஃப்தி எனற பெயரில் முஃப்த்தினாக (குழப்பவாதியாக) செயல்படுகின்ற டவுண் காஜியின் ஏகபோக பிறை சாம்ராஜ்யம் இதன் மூலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. பிறை விஷயத்தில் இதுவரை தான்தோன்றித்தனமாக அறிவித்து வந்த ஒரு தனிநபர் ஆதிக்கத்தை தவ்ஹீத் ஜமாஅத் உடைத்து, தனி சமுதாயமாகப் பரிணமித்தது.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.
அல்குர்ஆன் 16:120
இப்ராஹீம் (அலை) அவர்கள் பாதையில், அவர்களின் தியாகத்தை மையமாகக் கொண்ட தியாகத் திருநாளில் தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முத்திரையைப் பதித்தது.
இப்ராஹீம் நபி, ஊரை – உலகத்தை அல்லாஹ்வுக்காகப் பகைத்தார்கள்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
அந்த ஏகத்துவ இமாமின் நினைவாக அமைந்த இந்த இறை தியான நாட்களில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வுக்காக மக்களைப் பகைத்துக் கொண்டது.
வணக்க வழிபாடுகளில், திருமண, மரண நிகழ்வுகளில் உங்களைப் பகைத்தோம். உங்களுக்கும் எங்களுக்கும் எஞ்சிய உறவு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது தான். இப்போது அதையும் அல்லாஹ்வுக்காகப் பகைத்து விட்டோம் என்று 18ஆம் தேதி தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து விட்டது.
கூட்டத்திற்காகவோ, வசூலுக்காகவோ குராபிகளுடன் சேர்ந்து கொண்டாடவில்லை. அவர்களது நோன்பும் பெருநாளும் ஹதீசுக்கு ஒத்திருந்தது. அதனால் அவர்களுடன் ஒத்துப் போனோம். அவர்கள் உண்மைக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் அவர்களைப் பிரிந்து விட்டோம். இது தான் உண்மை.
“இவ்வளவு நாள் எங்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடினீர்கள்; இப்போது பிரிந்து விட்டீர்களே’ என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் நாம் கூறுவது இது தான். நாங்கள் எதையுமே ஆதார அடிப்படையில் தான் பின்பற்றுவோம்; அனுமான அடிப்படையில் அல்ல. இதைத் தான் இந்தப் பெருநாள் நிரூபித்துக் காட்டியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:143
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட இந்தக் கிப்லா மாற்றம் நயவஞ்சகர்களை அடையாளம் காட்டியது போல் தவ்ஹீத் ஜமாஅத்தில் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பச்சோந்திகளையும் இந்தப் பெருநாள் பிரித்துக் காட்டியது.
————————————————————————————————————————————————————–
வணக்கத்திலும் அரசியல்
தமுமுகவினர் நம்முடன் இருந்த வரை நமது பிறை நிலைப்பாட்டை ஏற்று, பிறை பார்த்து நோன்பு வைத்து, பிறை பார்த்துப் பெருநாள் கொண்டாடினர். அதன் பின்னர் கடந்த ஆண்டுகளில் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டனர்.
கூறு கெட்டத்தனமாக ஊரை விட்டுப் பிரிந்து தனியாகப் பெருநாள் கொண்டாடியது மக்களிடம் பெரும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இது தங்களின் வாக்குச் சீட்டுக்கு வேட்டு வைத்து விடும்; ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்கு உலை வைத்து விடும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர். அத்துடன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகைத் திடலுக்கு வரும் கூட்டம் அவர்களுக்கு ஓர் உறுத்தலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது.
அதற்காக ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கேற்றாற்போல் தவ்ஹீத் ஜமாஅத் 18ஆம் தேதி பெருநாள் அறிவித்தது. அது தான் தாமதம்! அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்தது போல் உடனே கணிப்பைத் தூக்கி எறிந்து விட்டு, குராஃபிகளுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடும் முடிவுக்கு வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வரும் மக்கள் வெள்ளத்தைத் திசை திருப்பி விடலாம் என்ற மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதில் சுன்னத் ஜமாஅத்தினரில் உள்ள நல்லவர்கள், நாம் தனியாகப் பிரிந்து பெருநாள் கொண்டாட நேர்ந்ததை எண்ணி உண்மையில் வருத்தம் அடைந்தனர். ஆனால் இவர்களோ குதூகலம் அடைந்தனர். சில ஊர்களில் பாப்புலர் கோஷ்டியுடன் சேர்ந்து தொழுகை நடத்தினர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்தபடி பெரிதாக ஒன்று கூட்டம் கூடிவிடவில்லை.
தொழுகையில் அரசியல்
இதில் கொடுமை என்னவென்றால், கணிப்பின் அடிப்படையில் 16ஆம் தேதி பெருநாள் தொழுகை தொழுதவர்களும் 17ஆம் தேதி தொழுகையில் வந்து கலந்து கொண்டனர். எதற்காக? முதல் நாள் தொழுதது கொள்கைக்காகவாம். மறுநாள் தொழுதது மக்களுக்குக் கூட்டத்தைக் காட்டுவதற்காகவாம்.
அதாவது, நாங்களும் உங்களோடு தான் பெருநாள் கொண்டாடுகிறோம்; அதனால் எங்களுக்கே ஓட்டுப் போடுங்கள். இதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியுமா?
இவர்கள் வணக்கத்திலும் அரசியல் ஆதாயம் பார்க்கின்றார்கள். இதிலிருந்து இவர்களது லட்சணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
குர்பானியில் அரசியல்
இவர்களுடைய அரசியல் இத்துடன் நிற்கவில்லை. குர்பானியிலும் அரசியல் வேலையைக் காட்டினார்கள். குர்பானிக்கு ஓர் ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு, அதில் தங்கள் இயக்கத்தின் பேனரைக் கட்டி, தெருத் தெருவாக ஊர்வலமாகச் சுற்ற வைத்தனர்.
கொடி ஏற்றிய யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்று தமுமுக பேனரை முதுகில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
ஒட்டகத்திற்குப் பின்னால் வந்த சிறுவர்கள் கூட்டம் இவர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. கூடவே, “உங்கள் ஓட்டு ரயில் இஞ்சின் சின்னத்திற்கே’ என்ற பேனரையும் கட்டியிருந்தால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு உதவியாக இருந்திருக்கும். இது அவர்களுக்கு நினைவில் இல்லை போல் தெரிகிறது. எனவே தமுமுக பேனரை மட்டும் கட்டிக் கொண்டு ஒட்டக ஊர்வலம் நடந்தது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் வீடு வீடாக வசூல் செய்து ஒட்டகக் குர்பானி கொடுத்தவர்கள் தான் இவர்கள்.
இப்படி ஒரு மலிவு விளம்பரத்தையும், மட்டரகமான அரசியலையும் மார்க்க வணக்கத்தில் கொண்டு நுழைக்கும் கழிவு கெட்ட அரசியல்வாதிகளை நாம் இதுவரை கண்டதில்லை.
பொய்யன்டிஜே
தமுமுகவினர் இப்படி வணக்கத்தை அரசியல் வியாபாரமாக ஆக்கி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கையில் பொய்யன்டிஜேயின் ஆட்டம் மிக வித்தியாசமாக அமைந்தது. பிறையைப் பற்றிய மார்க்க ஆய்வுக் களமாக (?) இந்தப் பெருநாளை அமைத்துக் கொண்டது.
தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் மக்களுக்குக் குழப்பம் ஏற்படுத்துவதற்காக தனது அமைப்பின் பெயரை இந்திய அளவில் விரித்தது போன்று பிறையையும் இந்திய அளவில் விரித்து விட்டதாக அறிவித்தனர்.
இந்தியாவில் எங்கு பிறை பார்த்தாலும் ஏற்போம் என்றனர். (அமைப்பு விஷயத்தில் நம்மை ஏமாற்ற நினைத்து, தற்போது ஏமாந்து போய் வழக்கம் போல் மிம்பரில் நின்று அழுது புலம்புவது தனி விஷயம்)
மாலேகான் பிறையை அறிவித்த டவுண் காஜி, தவ்ஹீத் ஜமாஅத்தின் கிடுக்கிப் பிடியில் புழுவாக நெளிந்து கொண்டிருக்கின்றார். இந்த விளக்கெண்ணெய்கள் ஒரு விளக்கமும் இல்லாமல் இந்தியப் பிறை என்று அறிவித்துள்ளனர்.
இவர்களுடைய இந்திய அமைப்பு சந்தி சிரித்தது போல் பிறை அறிவிப்பும் சந்தி சிரிக்கப் போகின்றது. அடுத்த ஆண்டு டவுண் காஜியோ அல்லது சுன்னத் ஜமாஅத்தினரோ இந்தியப் பிறையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இவர்களது நிலை எப்படியிருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
இவர்களது இயக்கத்திலும் தலைமை முஃப்தி அல்லாமா அப்துல் ஹமீது என்பவர், ஊர் பிறை, மாநிலப் பிறை, இந்தியப் பிறை எல்லாவற்றையும் தாண்டி உலகப் பிறைக்கு ஃபத்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஷரீஅத் சட்ட மாமேதையின் (?) ஃபத்வாவையும் தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளத்தில் அம்பலப்படுத்தியிருக்கின்றது.
இதற்கு பொய்யன்டிஜேவினர், பாரதீய ஜனதாவைப் போல் “அது அவரது சொந்தக் கருத்து’ என்று கூறி தப்பிக்க நினைக்கின்றனர்.
பாரதீய ஜனதாவுக்காவது ஒரு கொள்கை, கோட்பாடு இருக்கின்றது. இவர்களுடைய கொள்கை, கோட்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றையெல்லாம் சிந்தித்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இவர்களும் நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு அமைப்பு நடத்துவது தான் வேதனை!
————————————————————————————————————————————————————–
பிறை பார்க்காமலே பெருநாள்
தனது தவறான பிறை அறிவிப்பின் மூலம் டவுண் காஜி தமிழக மக்களைத் தடம் புரளச் செய்த மாத்திரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது கிளைகள் மூலம் 18ஆம் தேதி தான் பெருநாள் என்ற செய்தியை பரவச் செய்தது.
துண்டுப் பிரசுரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள் மூலம் தமிழக முஸ்லிம்களிடம் பிறை நிலைப்பாடு பற்றிய சிந்தனைக் கதிர்களை பளிச்சிடச் செய்தது. இமயம் டி.வி. வாயிலாகவும் செய்திகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அதன் எதிரொலியாக மக்கள் எழுப்பிய கேள்வி இது தான்.
நோன்புக்கும் நோன்புப் பெருநாளுக்கும் பிறை பார்க்கின்றோம். ஆனால் இதுவரை ஹஜ் பெருநாளுக்கு பிறை பார்ப்பதைக் கேள்விப்பட்டதே இல்லையே! இது என்ன அதிசயமாக இருக்கின்றது?
இவ்வாறு அவர்கள் கேள்வி எழுப்பிய பிறகு தான், ஹஜ் பெருநாளையும் பிறை பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும் என்ற விளக்கம் பாமர மக்களுக்கு மட்டுமல்ல, உலமாக்களுக்கும் தெரியவில்லை எனும் உண்மை நமக்குப் புரிய வந்தது.
மக்கள் இப்படி இருந்தால் டவுண் காஜி ஏன் காதில் பூச்சுற்ற மாட்டார்? இருப்பினும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சளைக்காமல் பல்வேறு பரிமாணங்களில் மக்களிடம் பிறை விஷயத்தைக் கொண்டு சென்றது.
இதன் விளைவாக ஜமாஅத்துல் உலமா சபை 17ஆம் தேதி தான் பெருநாள் என்று பத்திரிகை அறிக்கை விட்டது. தவ்ஹீத் ஜமாஅத்தும் மறுப்பு அறிக்கை வெளியிட்டு, 18ஆம் தேதி தான் பெருநாள் என்று அறிவித்தது பத்திரிகைகளில் அதிக இடத்தைப் பிடித்தது.
இறுதியில் இறைவன் அருளால் 18ஆம் தேதியன்று மக்கள் திடல்களில் நிரம்பி வழிந்தனர். மழை பெய்த இடங்களில் பள்ளிவாசல்களில் மக்கள் அலை மோதினர். அல்ஹம்துலில்லாஹ்!
ஹஜ் பெருநாளையும் பிறை பார்த்து தான் தீர்மானிக்க வேண்டும் என்ற மார்க்க விளக்கத்தை இந்தப் பெருநாளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் பதிவு செய்தது.
————————————————————————————————————————————————————–
தடம் புரண்ட டவுண் காஜி
தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்கஅதா மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்புப் செய்தது.
ஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுண் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவிப்புச் அறிவித்தார். தமிழக டவுண் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை குறித்த டவுண் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கிக்கொள்ளாலாம்.
கடந்த ரமளான் மாதம், தலைப் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி மஹாராஷ்டிராவிற்குத் தாவிய டவுண் காஜி, சென்ற ரமளானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு இப்போது மஹாராஷ்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த டவுண் காஜியின் பேட்டி
”சமுதாய ஒற்றுமை” என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும், ”இந்தியாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள் தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால் அதன்படி செய்ய முடியாமல் போனது” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு மஹாராஷ்டிரா பிறையை அறிவித்து மக்களை குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பஷீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5 மணிக்கு டவுண் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றனர்.
டவுண் காஜியின் அற்புத (?) விளக்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது அலுவலகத்தில் சந்தித்த டவுண் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள்? என்று கேட்டதற்கு, “தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன். ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன்” என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் உளறியுள்ளார்.
“அப்படியானால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன்?” என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத (?) விளக்கத்தை கூறியுள்ளார். “டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா?” என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, “டெல்லியைப் பொறுத்தமட்டிலும் அவர்கள் தாங்களாக அறிவிப்பது கிடையாது அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள்” என்ற அறிவிப்பூர்வமான விளக்கத்தை கூறியுள்ளார். கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்குத் தகுந்த பதில் இல்லை.
“இந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள். எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள் நாம் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம்” என்று சமாளிப்புப் பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வுடன் அவர் நடந்து கொள்ளவில்லை.
இதைப் போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத் தாண்டி ஒரு பிறை அறிவிப்பைச் செய்த டவுண் காஜியிடம் அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்தவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு, “உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள் கூறுவது போல இல்லை. தத்தமது பகுதியில் பிறை பார்த்து தான் பிறையை அறிவிக்க வேண்டும்” என்ற ஆதாரத்தை காட்டினார்கள்.
அப்போது “இனிவரக் கூடிய காலங்களில் தமிழகத்தில் காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன். தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்” என்று ஒப்புக்கொண்டவர் தான் இந்த டவுண் காஜி என்பதையும் நாம் சுட்டிக் காட்டிக் கொள்கிறோம்.
————————————————————————————————————————————————————–
அலகாபாத் தீர்ப்பு அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்கள்
பாபரி மஸ்ஜித் உரிமைக்காகக் குரல் கொடுப்பதில் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் அன்றிலிருந்து இன்று வரை முன்னணியில், முதலிடத்தில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களுடைய உள்ளத்திலும் உதிரத்திலும் இரண்டறக் கலந்து நிற்கும் தவ்ஹீது உணர்வு தான். பாபரி மஸ்ஜித் நிலம் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படும் வரை இந்த உரிமைப் போராட்டம் தொடரும், இன்ஷா அல்லாஹ்!
இந்த உரிமைப் போராட்டத்தில் களமிறங்கும் ஒவ்வொருவரும் பாபர் மஸ்ஜித் நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட துரோக வரலாற்றை அறிந்து கொள்வது அவசியம். அதன் ஒரு பகுதியாக அண்மையில் செப்டம்பர் 30, 2010 அன்று வெளியான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு குறித்த ஒவ்வொரு அலசலையும் ஆய்வையும் ஏகத்துவம் ஆவணமாக்க விழைகின்றது. இந்த இதழில் தீர்ப்பு குறித்த ஒரு திறனாய்வை வெளியிட்டுள்ளோம்.
இந்தத் திறனாய்வை மேற்கொண்டவர் ஏ.ஜி. நூரானி ஆவார். இவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்! தலைசிறந்த அரசியல் சாசன நிபுணர்! பன்னூல் ஆசிரியர்!
இவரது கட்டுரைகள் ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஃப்ரண்ட் லைன் போன்ற பத்திரிகைகளில் அடிக்கடி இடம் பெறுகின்றன. இப்போது இங்கு இடம்பெற்றிருப்பது ஃப்ரண்ட் லைன் பத்திரிகையில் வெளியான, Muslims Wronged – முஸ்லிம்கள் அநீதியிழைக்கப்பட்டனர் என்ற தலைப்பில் வெளியான ஆங்கில திறனாய்வுக் கட்டுரையின் தமிழாக்கமாகும். Muslims Wronged
அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்கள்
பாபரி மஸ்ஜித் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 30 அன்று அளித்த தீர்ப்பு சட்டத்திற்கும் சாட்சியத்திற்கும் எதிரானது மட்டுமல்ல. இதே பாபரி மஸ்ஜித் தொடர்பாக உச்சநீதிமன்றம் (இஸ்மாயீல் ஃபரூக் மற்றும் பலர் ய/ள் மத்திய அரசு 1994 பகுதி 360) அளித்த தீர்ப்புக்கும் எதிரானதாகும். எனினும் இந்தத் தீர்ப்பு குறித்து நாடு முதிர்ச்சி மிக்க நிதானத்தைக் கடைப்பிடித்தது.
அலைவரிசைகளின் அரைகுறை அலசல்கள்
பாரதீய ஜனதா மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்களையும் பிரதிநிதிகளையும் அழைத்து டி.வி. சேனல்கள் தீர்ப்பு குறித்த கலந்துரையாடல்களை நடத்தின. இந்தக் கலந்துரையாடல்களின் போது இந்த சட்ட விரோதமான தவறான தீர்ப்புக்குச் சரணடையுமாறு பாரதீய ஜனதா கட்சி, இஸ்லாமிய சமுதாய மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.
ஆனால் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கெடுக்க வந்த விருந்தாளிகளோ பாபரி மஸ்ஜித் குறித்த பின்னணி, சட்ட விளக்கங்கள், குறிப்புகள் எதுவும் இல்லாமலேயே வந்திருந்தனர்.
இப்படி தொலைக்காட்சிகள் தங்கள் இஷ்டத்திற்குக் கருத்துக்களை ஒளி அலைகளில் பதிவு செய்தனர். அந்த அலைவரிசைகள், நாட்டின் அமைதி என்ற கோணத்தில் மட்டும் தங்கள் பார்வையைச் செலுத்தின.
அமைதியும் ஸ்திரத்தன்மையும் நாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவுக்கு அனைவருக்கும் சம நீதியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவை அறியத் தவறி விட்டன.
அநீதி இழைத்த அக்கிரமத் தீர்ப்புகள்
1950 முதல் 2010 வரை அறுபது ஆண்களாக ஒவ்வொரு நீதிமன்றத் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அநீதியும் அக்கிரமும் இழைத்திருக்கின்றது. இது வேதனைக்குரிய விஷயமாகும்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர், அக்டோபர் 24, 1994ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அநீதி தான் இழைத்துள்ளது. (இது குறித்துப் பின்னர் விவரம் இடம் பெறும்)
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர்களில் ஒருவர், பாபரி மஸ்ஜித் வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் பெஞ்ச், மத அடிப்படையில் தெளிவாகப் பிரிந்து கிடக்கின்றது என்ற கருத்தைப் பல கட்டங்களில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒத்தக் கருத்தில் மூன்று நீதிபதிகள்
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை நீதிபதிகள் டி.வி. ஷர்மா, சுதிர் அகர்வால், எஸ்.யூ. கான் ஆகிய மூவருமே டிசம்பர் 22, 23, 1949 அன்று இரவு ராமர் சிலை உள்ளே கொண்டு வைக்கப்பட்டது என்பதில் ஒத்தக் கருத்தில் இருக்கின்றனர்.
சிலைகள் தானாகவே தோன்றின என்ற கருத்தை சங் பரிவார் மட்டுமே கூறி வருகின்றது.
மார்ச் 29, 1987 அன்று வெளியான “ஆர்கனைசர்’ என்ற தனது மாத இதழில், “சிலைகள் பள்ளிவாசலில் அற்புதமாகத் தோன்றின” என்று ஆர்.எஸ்.எஸ். குறிப்பிட்டுள்ளது.
பி.ஜே.பி. வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலும் “அவை அங்கு தோன்றின” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எல்.கே. அத்வானியும் இதே கருத்தைத் தான் குறிப்பிட்டுள்ளார்.
சிலைகள் தானாகத் தோன்றவில்லை, திட்டமிட்டே பாபரி மஸ்ஜிதின் உள்ளே கொண்டு போய் வைக்கப்பட்டது என்று எல்லோருமே ஒத்துக் கொண்ட உண்மையை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சங் பரிவாரோ இந்த உண்மையை அவமதிக்கும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.
ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளும் தாங்களே ஒத்துக் கொண்ட இந்த உண்மையை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
அசைக்க முடியாத ஆவணப் பதிவுகள்
பாபரி மஸ்ஜிதில் தொழுகை நடந்து கொண்டிருந்தது; அங்கு திருட்டுத்தனமாக ராமர் சிலை கொண்டு போய் வைக்கப்பட்டது என்பதற்கான மறுக்க முடியாத, முரண்பாடில்லாத வாக்குமூலங்கள்! அசைக்க முடியாத ஆவணப் பதிவுகள் இதோ:
- வக்ஃப் ஆய்வாளரின் இரு அறிக்கைகள்
வக்ஃப் ஆய்வாளர் முஹம்மது இப்ராஹீம் டிசம்பர் 10 மற்றும் டிசம்பர் 23, 1948 அன்று பாபரி மஸ்ஜிதுக்கு வருகையளித்து விட்டு இரு அறிக்கைகளைப் பதிவு செய்கின்றார்.
தொழச் செல்கின்ற முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் மீது கல் வீசப்படுகின்றது. எனினும் முஸ்லிம்கள் அங்கு ஃபஜ்ர் தொழுகையையும், ஜும்ஆ தொழுகையையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கைகளில் அவர் குறிப்பிடுகின்றார்.
(அத்தியாயம் 4, ஆவணம் 5)
- பள்ளிவாசலுக்கு அருகில் கோயில் கட்டக் கோரிக்கை
பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சபுத்ராவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று 1949ல் இந்துக்கள் மனுச் செய்தனர். இதற்கு அதிகார வர்க்கம் முழு ஆதரவளித்தது. பள்ளிவாசலும் கோயிலும் அருகருகே அமைந்திருக்கின்றன. முஸ்லிம்களும் இந்துக்களும் சேர்ந்தே தங்கள் உரிமைகளையும், மத வழிபாடுகளையும் நிறைவேற்றி வருகின்றனர். பகவான் ராமர் பிறந்த இடத்தில் ஓர் அழகிய கோயில் கட்டுவதில் இந்துக்கள் ஆர்வமாக உள்ளனர். கோயில் கட்டப்பட இருக்கும் நிலம் நசூல் நிலமாகும்.
இவ்வாறு நகர நடுவர் மன்ற நீதிபதியின் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.
(நசூல் நிலம் என்பது அரசாங்க நிலமாகும். நகராட்சி அதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் குத்தகைக்கு விட்டு வருவாய் ஈட்டிக் கொள்ளும்)
(அத்தியாயம் 5, ஆவணம் 6)
- முதல் தகவல் அறிக்கை
டிசம்பர் 23, 1949 அன்று அயோத்தியா காவல் நிலைய உதவி ஆய்வாளரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விபரம் வருமாறு:
“நான் ஜன்மபூமிக்குக் காலை 6 மணியளவில் வந்த போது சுமார் 50, 60 நபர்கள் பாபரி மஸ்ஜிதின் சுற்றுச் சுவர் வாயிற் கதவின் பூட்டை உடைத்துக் கொண்டோ அல்லது ஏணி வைத்து மதில் மீது ஏறிக் குதித்தோ உள்ளே நுழைந்து ராமர் சிலையை பள்ளிக்குள் வைத்து, பள்ளியின் உட்புற, வெளிப்புற சுவர்களில் சீதை, ராமரின் படங்களை வரைந்தனர். ராம்தாஸ், ராம் சக்தி தாஸ் இன்னும் அடையாளம் தெரியாத 50, 60 பேர் மறைமுகமாகப் பள்ளிக்குள் நுழைந்து அதன் புனிதத் தன்மையைப் பாழாக்கினர் என்று எனக்குத் தெரிய வந்தது” என்று கான்ஸ்டபிள் எண்: 7 மாதா பிரசாத் கூறினார். எனவே இந்தப் புகார் எழுதப்பட்டு பதியப்படுகின்றது.
- ரேடியோ தகவல்
“மக்கள் தொழுது விட்டுச் சென்ற பிறகு இரவோடு இரவாக ஒரு சில இந்துக்கள் பாபரி மஸ்ஜிதுக்குள் புகுந்து சிலைகளை வைத்து விட்டனர். பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த 15 காவலர்கள் தெளிவாகவே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே இருந்து விட்டனர்” என்று மாவட்ட நீதிபதி கே.கே. நாயர் ஒரு ரேடியோ மெஸேஜை உ.பி. முதலமைச்சருக்கும், உள்துறை செயலாளருக்கும் டிசம்பர் 23, 1949 அன்று அனுப்பினார்.
(அத்தியாயம் 5, ஆவணம் 3)
- உறுதிப்படுத்தும் மறு தகவல்
டிசம்பர் 22, 23 தேதிகளின் நள்ளிரவில் சிலை வைக்கும் படலம் முடிந்து விட்டது என மறு தகவல் அனுப்பப்பட்டது.
(அத்தியாயம் 5, ஆவணம் 5)
- ஒப்புதல் வாக்குமூலம்
பாபரி மஸ்ஜிதில் டிசம்பர் 22, 1949 அன்று நள்ளிரவில் நான் சிலைகளை வைத்தேன் என்று ராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸா என்பவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் டிசம்பர் 22, 1991 அன்று பகிரங்கமாகக் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்.
(அத்தியாயம் 5, ஆவணம் 16)
- நேருவின் கடிதம்
முதலமைச்சர் கோவிந்த வல்லப பந்துக்கு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அனுப்பிய தந்தி மற்றும் கடிதங்கள்.
(அத்தியாயம் 5, ஆவணம் 18)
- பட்டேலின் கடிதம்
ஜனவரி 9, 1950 அன்று துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல், உ.பி. முதல்வர் கோவிந்த வல்லப பந்துக்கு எழுதிய கடிதம்.
(அத்தியாயம் 5, ஆவணம் 21)
- அக்ஷய பிரமச்சாரியின் கடிதம்
(சுவாமி அக்ஷய பிரமச்சாரி விடுதலை இயக்கப் போராளியும், காந்தியவாதியும் ஆவார். பாபரி மஸ்ஜித் மீட்புக்காக இறுதி மூச்சு வரை போராடியவர் ஆவார்)
அப்போதைய உ.பி. உள்துறை அமைச்சரான லால்பகதூர் சாஸ்திரிக்கு சுவாமி அக்ஷய பிரமச்சாரி எழுதிய கடிதம் மற்றும் சமர்ப்பித்த நினைவுக் குறிப்பு.
(அத்தியாயம் 5, ஆவணம் 21)
- பாபரி மஸ்ஜித் இமாமின் நேர்காணல்
பாபரி மஸ்ஜிதின் இமாம் அப்துல் கஃப்பார் 1987ல் அளித்த நேர்காணல்.
(அத்தியாயம் 5, ஆவணம் 11)
- துணை கமிஷனரின் எழுத்து வாக்குமூலம்
உ.பி. அரசு சார்பாக பைசாபாத்தின் துணை கமிஷனர் ஜே.என். உக்ரா ஏப்ரல் 25, 1950 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலம்.
(அத்தியாயம் 5, ஆவணம் 13)
- வாக்குமூலம் கூறும் பாத்தியதை
மேற்கண்ட வாக்குமூலத்தின் 12ஆம் பத்தி குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு:
இந்த வழக்கில் உள்ள சொத்து பாபரி மஸ்ஜித் என்று அறியப்பட்டதாகும். இது நீண்ட காலமாக முஸ்லிம்களால் தொழுவதற்காக வேண்டி பள்ளிவாசலாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஒரு போதும் ராமர் கோயிலாகப் பயன்படுத்தப்படவில்லை.
- வைக்கப்பட்டது தான்! தானாகத் தோன்றியது அல்ல!
மேற்கண்ட வாக்குமூலத்தின் 13ஆம் பத்தி குறிப்பிடுகின்ற விபரம் வருமாறு:
டிசம்பர் 22, 1949 அன்று சிலைகள் ரகசியமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் உள்ளே கொண்டு வைக்கப்பட்டன.
கையூட்டு வாங்கிய காவலர்கள்
பாபரி மஸ்ஜித் பள்ளியின் வாயிற் காவலர்கள் அதிக அளவு லஞ்சம், கையூட்டு வழங்கப்பட்டனர். (அதனால் தான் கயவர்கள் உள்ளே வரும் போது தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்) என்று ஓர் அரசு அதிகாரியை மேற்கோள் காட்டி பி.ஜே.பி.யின் முக்கியப் பிரமுகர் சந்தன் மித்ரா கூறியதாக அக்டோபர் 26, 1986 அன்று வெளியான “தி ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை தெரிவிக்கின்றது.
1949 ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை பள்ளிக்கு வெளியே, ஆனால் பள்ளி அமைந்திருந்த வளாகத்திற்கு உள்ளே சபுத்ராவில் தான் ராமர் கோயில் கட்டுவதற்குரிய முயற்சிகள் எடுக்கப்பட்டன.
பைசாபாத் நகர நடுவர் மன்ற நீதிபதி அக்டோபர் 10, 1949 அன்று பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து இந்துக்களுக்குச் சாதகமான அறிக்கையை தாக்கல் செய்கின்றார்.
இறுதி வரை (டிசம்பர் 22, 23) நாங்கள் பள்ளியில் தொழுது கொண்டிருந்தோம். இந்துக்கள் சபுத்ராவில் மட்டும் வந்து வணங்கிக் கொண்டிருந்தனர் என்று பாபரி மஸ்ஜிதின் இமாம் அப்துல் கஃப்பார் வாக்குமூலம் அளித்தார் என்று ஜூலை 2, 1989 அன்று வெளியான “ஸன்டே மெயில்’ என்ற பத்திரிகை தெரிவிக்கின்றது.
கோயில் கட்டுவதற்கு அனுமதி கோரும் வழக்கு 19ஆம் நூற்றாண்டில் (1883-1886) சபுத்ரா என்ற அளவில் மட்டும் தான் இருந்தது. பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்தை அவ்வழக்கு உள்ளடக்கவில்லை.
காந்தியவாதியின் கவலையும் கரிசனமும்
1949ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே பள்ளியைக் கைப்பற்றுவதற்குரிய விஷமப் பிரச்சாரம் துவங்கி விட்டது.
இதைப் பயந்த காந்தியவாதி அக்ஷய பிரமச்சாரி, உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்கு பாபரி மஸ்ஜித் விவகாரமாக ஒரு விரிவான நினைவுக் குறிப்பைச் சமர்ப்பிக்கின்றார்.
பைசாபாத்தில் வாழும் முஸ்லிம்களின் உள்ளங்களில் பெரும் பயம் குடி கொண்டுள்ளது என்று அதில் குறிப்பிடுகின்றார்.
வீரியமிக்க சட்டம்
இதுபோன்ற சூழ்நிலைகளைக் கவனிப்பதற்கு சட்டத்தின் வீரியம் அபாரமாகத் தான் உள்ளது. இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவுகள் 295, 297 ஆகியவை வழிபாட்டுத் தலங்களைத் தகர்த்தல், வழிபாட்டுத்தலங்களில் வரம்பு மீறிப் பிரவேசித்தல் போன்றவை குற்றங்கள் என்று அறிவிக்கின்றன.
1898ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 145, மாஜிஸ்ட்ரேட்டுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைப் பார்ப்போம்.
சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அவர்களது கோரிக்கைகளைத் தன்னிடம் சமர்ப்பிக்கச் செய்ய வேண்டும். அதை விசாரணை செய்து அவர் தீர்ப்பளிக்கலாம். அந்த விசாரணையின் போது சொத்தின் அனுபவத்தில் யார் இருக்கின்றார் என்ற உண்மையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர சொத்து யாருக்குரியது என்ற ஆய்வுக்குள் அவர் செல்லக் கூடாது. இந்த அடிப்படையில் யார் உண்மையான அனுபவத்தில் இருக்கிறார் என்று பார்த்து அவர் அனுபவப் பாத்தியதையைத் தீர்மானிக்கலாம்.
அதுவரை அனுபவத்தில் இருந்த ஒரு தரப்பினர் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் அந்தச் சொத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டிருந்தால், வெளியே தள்ளப்பட்டவர் தான் அனுபவப் பாத்தியதை உடையவர் என்று முடிவு செய்து அவர்களிடமே அந்தச் சொத்தை மீட்டிக் கொடுக்க வேண்டும். வெளியே தள்ளியவர் தான் சொத்துக்கு உண்மையான சொந்தக்காரராக இருந்தாலும் அவர் தனது உரிமையை நீதிமன்றத்தில் வந்து நிரூபிக்க வேண்டும். இது பிரிவு 145, ஆர்.டி.ஓ. அல்லது மாஜிஸ்ட்ரேட்டுக்கு வழங்கியிருக்கும் அதிகாரமாகும்.
அயோத்தியா வழக்கும் 145 Cr.P.C யும்
உண்மையில் அயோத்தியா வழக்கில் இந்த 145வது பிரிவு முஸ்லிம்களை உள்ளே வைத்து காப்பாற்றுவதற்குப் பதில் அவர்களை வெளியேற்றுவதற்காகவே முழுவதும் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களை வெளியேற்றுவதற்குரிய ஒரு ஆயுதமாகவே அதிகாரிகள் மற்றும் நீதிபதிகளின் கைகளில் இது சுழன்றது.
முதல் தர நடுவர் மார்க்கண்டே சிங் என்பவர் பாபரி மஸ்ஜிதை பற்றுகை (ஆற்ற்ஹஸ்ரீட்ம்ங்ய்ற்) செய்வதற்கு உத்தரவு போட்டு, நகராட்சித் தலைவர் பிரியா தத் ராம் என்பவரை அதற்கு பொறுப்பாளராக, ரிசீவராக நியமிக்கின்றார். டிசம்பர் 29, 1949ல் இது நடந்தது. அவர் ஜனவரி 5, 1950ல் பொறுப்பேற்று ஒரு திட்டத்தைச் சமர்ப்பிக்கின்றார்.
நடுவர் மன்ற நீதிபதி பீர் சிங் என்பவர் ஜனவரி 19, 1950 அன்று பிறப்பித்த உத்தரவில், உள்ளே வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், டிசம்பர் 23 முதல் நடைபெற்று வரும் பூஜையைத் தடுக்கக் கூடாது என்றும் உறுத்துக் கட்டளை வழங்குகின்றார். ஏப்ரல் 26, 1950 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த உறுத்துக் கட்டளையை உறுதி செய்து விடுகின்றது.
கோயிலாக மாறிய பள்ளிவாசல்
இதன் மூலம் அல்லாஹ்வை மட்டும் வணங்குகின்ற ஓர் ஏகத்துவப் பள்ளிவாசல், இணை வைக்கும் கோயிலாக மாறியது. முஸ்லிம்கள் தோல்வியடைந்தனர். டிசம்பர் 22, 23, 1949 அன்று அரங்கேற்றப்பட்ட இந்த அநியாயத்தைச் சரி செய்வதற்காக அடுத்தடுத்து களமிறங்கி ஓடிய முஸ்லிம்கள் ஒவ்வொரு சட்டப் போராட்டச் சுற்றிலும் தோல்வியே அடைந்தனர்.
தீர்ப்புகள் – ஓர் ஒப்பீடு
அயோத்தியா நடுவர் மன்ற நீதிபதியின் இந்தத் தீர்ப்பை டெல்லியில் உள்ள சார்பு நடுவர் மன்ற நீதிபதியின் தீர்ப்புடன் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம்.
இந்த நீதிமன்றம் புதுடெல்லியில் நாடாளுமன்றத் தெருவில் அமைந்திருக்கின்றது. புதுடெல்லி ஜன்தர் மந்தர் சாலையில் அமைந்திருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த காங்கிரஸ் (ஓ) கட்சியை, நவம்பர் 13, 1971ல் காங்கிரஸ் (ஆர்) கட்சி தனது வலிமையைப் பயன்படுத்தி வெளியேற்றி விட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 7, 1972 அன்று சார்பு நடுவர் மன்ற நீதிபதி ஏ.ஜி. கட்டிங் என்பவரிடம் வந்த போது, அவர் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 145ன் படி அந்த அலுவலகத்தை காங்கிரஸ் (ஓ) கட்சிக்கு மீட்டிக் கொடுத்தார். காங்கிரஸ் (ஓ) தான் அசல் அமைப்பு என்பதற்காக அல்ல! அந்த அமைப்பு காங்கிரஸ் (ஆர்) மூலம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்காக!
காங்கிரஸ் (ஓ) கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு காரணத்தினாலேயே அந்த அனுபவத்தைத் திரும்பப் பெறுவதற்குரிய முழுத் தகுதி பெற்று விடுகின்றது. சொத்து யாருக்குரியது என்பதை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை அந்த அலுவலகம் காங்கிரஸ் (ஓ) கட்சியின் அனுபவத்தில் தான் இருக்க வேண்டும் என்று நடுவர் மன்ற நீதிபதி ஏ.ஜி. கட்டிங் குறிப்பிடுவது இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது.
இதே நடைமுறை தான் பாபரி மஸ்ஜித் வழக்கில் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் செயல்படுத்தப்படவில்லை. இவ்வழக்கில் பிரிவு 145 எவ்வளவு அழகாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிய வைப்பதற்காகத் தான் இந்த ஒப்பீடு இங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
அரசு ரிசீவரின் சதித் திட்டம்
நான் பெறுப்பேற்ற போது நடைபெற்று வந்த பூஜை மற்றும் படையல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்வது தான் இந்த நிர்வாகத்தின் தலையாய பணியாகும் என்று ரிசீவராகப் பொறுப்பேற்ற நகராட்சித் தலைவர் கூறினார். குறைந்தபட்சம் 3 பூசாரிகள் பூஜை செய்வதற்கு ஏதுவாக எவ்வித இடையூறும் இல்லாமல் சிலைகளிடம் சென்று வருவதற்கு வசதி செய்து தரப்பட்டது.
இந்த சதித் திட்டத்தின்படி முஸ்லிம்கள் ஒரேயடியாகப் பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் இந்துக்கள் பூஜை செய்வதற்கும் பக்கத்தில் உள்ள வாசலில் நின்று கொண்டு சிலைகளை தரிசிப்பதற்கும் ரிசீவரால் நியமிக்கப்பட்ட பூசாரிகள் மூலம் சிலைகளுக்குப் படைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டது.
1986ல் அடுத்தக்கட்ட அநியாயம்
இந்த அநியாயம் 1949ல் அரங்கேறியது என்றால் 1986ல் அரங்கேறிய அடுத்தக்கட்ட அநியாயத்தை இப்போது பார்ப்போம்.
ஜனவரி 25, 1986 அன்று உமேஷ் சந்த் பாண்டே என்ற வழக்கறிஞர், பூஜைக்குரிய தடைகளை நீக்க வேண்டும் என்று பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றார். வழக்கின் வாதத்தை பிப்ரவரி 2, 1986 அன்று ஒரு 45 நிமிடம் கேட்டு விட்டு நடுவர் மன்ற நீதிபதி கே.எம். பாண்டே பூட்டுக்களைத் திறக்க உத்தரவிடுகின்றார். பிப்ரவரி 3, 1986 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் ஸ்டேட்டஸ் கோ – தற்போதைய நிலை தொடரட்டும் என்று தீர்ப்பளிக்கின்றது. இது 1986ல் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட நீதிமன்ற அநீதியாகும்.
அரங்கேறிய பள்ளி இடிப்பு
டிசம்பர் 6, 1992 அன்று பாபரி மஸ்ஜித் அநியாயமாக இடிக்கப்பட்டது. ஜனவரி 7, 1993 அன்று அயோத்தியில் பாபரி மஸ்ஜித் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தைக் கையகப்படுத்துமாறு குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கின்றார். பின்னால் அது நாடாளுமன்றத்தில் சட்ட வடிவம் பெற்று விடுகின்றது.
குற்றத்தின் பலன் குட்டிக் கோயில்
பாபரி மஸ்ஜிதை இடித்த கரசேவை கும்பல் பள்ளியை இடித்த இடத்திலேயே ஒரு தற்காலிகக் கோயிலைக் கட்டி அதில் சிலைகளை நிறுவினர்.
டிசம்பர் 9, 1992 அன்று மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு குற்றத்தின் பரிசாகக் கிடைத்த அந்தக் குட்டிக் கோயிலை உடனே தகர்த்து விடும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசின் உள்துறைச் செயலாளர் மாதவ் காட்போலே அந்தச் சிலையைக் கும்பிட மறுத்து விட்டார். கலவர களேபரம், கடைந்தெடுத்த ஏமாற்று வேலை கலந்து கட்டப்பட்ட இந்தக் கோயிலில் ஒருபோதும் கடவுள் குடியிருக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்பு ((Presidential Reference)
பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில், அது கட்டப்படுவதற்கு முன் இந்துக் கோயிலோ அல்லது இந்து மதக் கட்டடமோ இருந்ததா? என்று உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்ட நிகழ்வைக் கண்டு துடிதுடித்துப் போன நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞரும் சட்ட விற்பன்னருமான என்.ஏ. பல்கிவாலா வேதனை மிகு ஒரு விமர்சனத்தை “தி டைம்ஸ் ஆஃப் இன்டியா’ பத்திரிகையில் எழுதினார்.
தற்போது வெளியாகியிருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் அவரது விமர்சனம் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளதை நாம் உணர முடிகின்றது.
பல்கிவாலாவின் பலித்த கருத்து
பல்கிவாலா குறிப்பிடுகின்றார்:
“வரலாற்று அல்லது தொல்பொருள் ஆய்வு தொடர்பான கேள்விகளை நாட்டின் உச்ச நீதிமன்றத்திடம் கேட்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்படுகின்றது. என்னுடைய அறிவுக்கு இது பைத்தியக்காரத்தனம் என்றே தோன்றுகின்றது.
ஆனால் மத்திய அரசாங்கமோ இப்போது அரசியல் சட்டம் 143வது பிரிவின்படி, “பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில், அது கட்டப்படுவதற்கு முன் இந்துக் கோயிலோ அல்லது இந்து மதக் கட்டடமோ இருந்ததா?” என்று உச்ச நீதிமன்றத்திடம் கருத்துக் கேட்டு விட்டது.
பாபரால் கட்டப்பட்ட பள்ளிவாசல் இருந்த இடத்தில் கோயில் இருந்ததா என்ற விஷயத்தில் வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கு ராமர் பிறந்தாரா என்ற கருத்தில் அவர்கள் அறவே உடன்பாடு கொள்ளவில்லை.
ராமர் உண்மையிலேயே உலகில் வாழ்ந்த ஒரு மனிதப் பிறவி தானா? அல்லது நல்ல மனிதருக்கு முன்னுதாரணமாகக் காட்டுவதற்காகப் புனையப்பட்ட ஒரு புராண கற்பனைக் கதாபாத்திரமா என்பதிலேயே பயங்கர கருத்து வேறுபாடு உள்ளது.
புராணம் அல்லது வரலாறு அல்லது இரண்டும் கலந்த கேள்விகளை உச்ச நீதிமன்றத்திலோ அல்லது அலகாபாத் உயர் நீதிமன்றத்திலோ தீர்மானிக்குமாறு கேட்பது நம்முடைய அரசியல் நிறுவனங்கள் திவாலாகி விட்டன என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
நாம் அனைத்து சீரிய சிந்தனையையும் இழந்து, ஜனநாயகத்தை மிகவும் தரம் தாழ்ந்த நிலைக்கு இறக்கி விட்டிருக்கிறோம். மத நம்பிக்கை, வரலாறு, புராணம் அல்லது அரசியல் சந்தர்ப்பவாதம் தொடர்பான விஷயங்களை முடிவு செய்ய நீதிமன்றங்களை நாடுவதற்கு சாதாரணமாக அல்ல, மிக அதிகமாகவே ஆர்வம் காட்டுகின்றனர்.
முன்னுதாரணம் இல்லை
அயோத்தியா விவகாரமாக நீதிமன்றக் கருத்தைக் கோருவது தான் சரி என்று முடிவு செய்து, இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்பதற்காக நீதிமன்றத்தை அரசாங்கம் நாடிய சம்பவம் உலகில் எந்த நாட்டிலும் நடக்கவில்லை.
கருத்துக் கேட்பதற்காக முன்வைக்கப்பட்ட இது மாதிரியான கேள்விகளுக்கு விடை காண உச்ச நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ தேடிச் செல்வது பின்வரும் கால கட்டத்தில் பெரும் விபரீதமான விளைவை ஏற்படுத்தி விடும்.
அனுபவம் அல்லது பயிற்சி அளிக்கப்படாத ஒரு துறைக்கு இது நீதிமன்றத்தை வலுக்கட்டாயமாகத் தள்ளிவிடும். நீதிமன்றங்களால் உண்மை அல்லது சட்டம் தொடர்பான கேள்விகளை மட்டுமே முடிவு செய்ய இயலும்.
நீதிமன்றத்தின் வரையறையில் வராத, வரலாறு அல்லது தொல்பொருள் தொடர்பான கேள்விகளை முடிவு செய்வதற்கு நீதிமன்றங்களுக்கு அறவே தகுதியில்லை.
தானாக நேரில் பார்த்தோ, அல்லது கேட்டேன் என்று கூறி ஒரு சாட்சி தருகின்ற ஆதாரம் அல்லது ஆவணத்தின் படியோ தான் ஒரு நீதிபதி தீர்ப்பளிக்க முடியும்.
இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தவொரு நீதிமன்றத்திலும் செவி வழிச் செய்தி, கற்பனைச் செய்திக்கு அறவே அனுமதி கிடையாது.
ஒரு நீதிமன்றம் அரசியல் வளையத்திற்குள் தள்ளப்படுமானால் அது நீதிமன்றத்தின் மரியாதைக்கு ஊறு விளைவித்து விடும். நீதிமன்றத்தின் தகுதியை அது தகர்த்தெறிந்து விடும்.
தொல்பொருள் ஆராய்ச்சி என்பது கலை, பழைய காலத்து நம்பிக்கைகள், வழக்கங்கள் தொடாபான ஆய்வாகும்.
அதன் ஆராய்ச்சி மூலம் ஒரு நம்பிக்கைக்கு அல்லது ஒரு கருத்துக்குரிய பின்னணியை வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாமே தவிர அதை ஒரு முழு அளவிலான உறுதி மிக்க ஆதாரமாக எடுக்க முடியாது.
ஒரே தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரத்திலிருந்து வெளியான பல்வேறு முடிவுகள் மீது இரண்டு பேர் ஒத்தக் கருத்திற்கு வர முடியாதல்லவா? கண்டிப்பாக வெவ்வேறு கருத்துக்குத் தான் வருவார்கள்.
ஒரு நீதிபதி கொண்டிருக்கும் கருத்திற்கு அல்லது மத நம்பிக்கைக்கு நேர்மாறான கருத்தை, மத நம்பிக்கையை மக்கள் கொண்டிருக்கும் போது அந்த நீதிபதியின் முடிவு, அந்த மக்களை எப்படிக் கட்டுப்படுத்தும்?
இது பல்கிவாலாவின் விமர்சனமாகும்.
குடியரசுத் தலைவரிடமிருந்து கருத்துக் கேட்டு வந்த கோரிக்கையை, “இது நீதிமன்றத்தின் வேலை அல்ல” என்று கூறி உச்ச நீதிமன்றம் திரும்ப அனுப்பியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தச் செயல், சட்ட நிபுணர் பல்கிவாலாவின் கருத்தை மிகச் சரியாக நியாயப்படுத்துவதாக அமைந்து விட்டது.
பல்கிவாலா எச்சரித்தது போலவே அலகாபாத் உயர் நீதிமன்றம், செப்டம்பர் 30ஆம் தேதி அளித்த தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பாக அமைந்து விட்டது. நீதிமன்றத்தின் மீது மக்கள் கொண்டிருந்த மரியாதைக்கும் குந்தகம் ஏற்பட்டு விட்டது.
குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்பு ஒரு விளக்கம்
(பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் ஜனவரி 7, 1993 அன்று பாபரி மஸ்ஜித் அமைந்திருந்த வளாகம் அதைச் சுற்றிலும் உள்ள 67.703 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கின்றார். அதே தினத்தில் தான் “பாபரி மஸ்ஜித் அமைந்த இடத்தில், அது கட்டப்படுவதற்கு முன் இந்துக் கோயிலோ அல்லது இந்து மதக் கட்டடமோ இருந்ததா?’ என்று உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்டு அனுப்பினார்.
குடியரசுத் தலைவரின் ஆணை ஏப்ரல் 3, 1993ல் சட்ட வடிவமானது. எண்: 33/1993 அயோத்தியா சட்டம் என்றழைக்கப்படுகின்றது. இது சட்ட வடிவமானதால் குடியரசுத் தலைவரின் ஆணை திரும்பப் பெறப்படுகின்றது.
குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்புக் கோரிக்கையுடன் இந்தச் சட்டமும் நீதிமன்றத்தின் பார்வைக்கு வருகின்றது.)
இந்த சிறு விளக்கத்திற்குப் பிறகு ஏ.ஜி. நூரானியின் அலசலுக்குள் செல்வோம்.
- நீதிபதி எம்.என். வெங்கட செல்லையா, 2. நீதிபதி ஜே.எஸ். வர்மா, 3. நீதிபதி ஜீ.என். ராய், 4. ஏ.எம். அஹ்மதி, 5. நீதிபதி எஸ்.பி. பரூச்சா ஆகிய ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சுக்கு இந்தக் கருத்துக் கேட்பு வந்தது. 33/1993 சட்டத்தை விசாரித்து இந்த பெஞ்ச் அளித்த தீர்ப்பு பெரும்பான்மை, சிறுபான்மை என இரு விதமாக அமைந்தது. முதல் மூன்று பேரின் தீர்ப்பு பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பாகவும், மற்ற இருவரின் தீர்ப்பு சிறுபான்மையினரின் தீர்ப்பாகவும் அமைந்தது.
சட்டத்தின் ஒரே ஒரு பிரிவைத் தவிர மற்றபடி இந்தச் சட்டம் சரியானது என்று பெரும்பான்மையினர் தீர்ப்பளித்தனர். இந்த மொத்த சட்டமே செல்லத்தக்கதல்ல என்று சிறுபான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஆனால் 33/1993 சட்டம் மற்றும் குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்பு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பியதை அனைத்து நீதிபதிகளும் சரி கண்டனர்.
பெரும்பான்மை தீர்ப்புக் குழுவினருக்காகப் பேசிய ஜே.என். வர்மா, சட்டப்படி குற்றமான பள்ளிவாசல் இடிப்பைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் சிறுபான்மை தீர்ப்புக் குழுவுக்காகப் பேசிய எஸ்.பி. பரூச்சா பள்ளிவாசல் இடிப்பை மிகக் கடுமையாகக் கண்டித்தார்.
அயோத்தியா சட்டம் பிரிவு 7 (2)
அயோத்தியா சட்டம் 33/1993, பிரிவு 7, உட்பிரிவு 2 “இந்தச் சட்டம் துவங்குவதற்கு முன் இருந்த அதே நிலை தொடர்வதற்கு அரசாங்கம் உறுதி செய்து, அதை அப்படியே பராமரிக்க வேண்டும்” என்று குறிப்பிடுகின்றது.
(அதாவது டிசம்பர் 6, 1992ல் பள்ளி இடிக்கப்பட்ட பிறகு வன்முறைக் கும்பல் ஒரு குட்டிக் கோயிலைக் கட்டி அதற்கு வழிபாடு செய்து வருகின்றது. அதைக் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கின்றது.)
இது தொடர்பாக ஜே.என். வர்மா குறிப்பிடுகையில்,
“(இந்து, முஸ்லிம்) ஆகிய இரு சமுதாயங்களும் இதில் சம அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்துக்கள் 1949க்கு முந்தைய கால கட்டத்திலிருந்து ராம் சபுத்ராவில் வணங்கி வந்தனர். டிசம்பர் 6, 1992 பள்ளிவாசல் இடிப்புக்குப் பின்னர் இது தடைப்பட்டது. அவர்களுடைய வணக்கம் ஒரே ஒரு பூசாரியை மட்டும் வைத்து வணங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இந்துக்களுக்குப் போடப்பட்டு அவர்களுடைய வணக்கத்தின் எல்லையும் சுருங்கி விட்டது. ஆனால் அதே சமயம் முஸ்லிம்களோ சர்ச்சைக்குரிய பகுதியில் எந்தவொரு இடத்திலும் 1949லிருந்து தொழவில்லை”
என்று கூறுகின்றார்.
நீதிபதி வர்மாவின் இந்தக் கருத்து அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொன்னால் அது சரி எனலாம். இந்துக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
பள்ளிவாசலில் வந்து தொழுகின்ற உரிமை முஸ்லிம்களிடமிருந்து வஞ்சகமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் பறிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அவர்கள் அங்கு வந்து தொழவில்லை. இது தான் உண்மை. இதைத் தான் நீதிபதி வர்மா, முஸ்லிம்கள் ஏதோ வேண்டுமென்றே விரும்பி அங்கு வந்து தொழவில்லை என்பது போல் குறிப்பிடுகின்றார். இவரது இந்த வாதத்தை நீதிபதி பரூச்சா நகைப்பிற்குரியதாகக் கருதுகின்றார்.
அயோத்தியா சட்டம் பிரிவு 4 (3)
33/1993 சட்டத்தின் 4 (3) பிரிவை நீதிபதிகள் அனைவரும் ஏகமனதாக ரத்துச் செய்து விடுகின்றனர். இந்தப் பிரிவை ஏன் ரத்துச் செய்தனர் என்பதைக் காண்பதற்கு முன், 4 (3) பிரிவு கூறுவது என்னவென்று பார்ப்போம்.
மத்திய அரசு கையகப்படுத்தியுள்ள சொத்து (பாபரி மஸ்ஜித் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடம்) தெடர்பான நலன் மற்றும் அதன் உரிமை குறித்து நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு தள்ளுபடி செய்திட வேண்டும்.
இதைத் தான் நீதிபதிகள் ஏகமனதாக ரத்துச் செய்து விடுகின்றனர். ஏன்? இந்த உட்பிரிவு ஒருதலைப்பட்சமானது.
பாபரி மஸ்ஜித் முஸ்லிம்களின் அனுபவத்தில் இருந்தது என்ற எதிரிடை அனுபவத்தை இது தகர்த்தெறிந்து விடுகின்றது. இத்தகைய பக்காவான சட்டத்தின் அனுகூலத்தை, சாதகத்தை இந்த 4 (3) பிரிவின் மூலம் முஸ்லிம்கள் இழந்து விடுகின்றனர். அதனால் தான் இதை நீதிபதிகள் ஏகமனதாக ரத்துச் செய்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனித்த சட்டத்தின் இந்த அனுகூலத்தையும் சாதகத்தையும் அண்மையில் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனிக்கத் தவறி விட்டது.
இப்போது நீதிபதி ஜே.எஸ். சர்மா சொல்வதைப் பார்ப்போம்.
பாபரி மஸ்ஜித் தங்களுக்குத் தான் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் எடுத்து வைத்திருக்கும் பல விதமான சட்டப் பாதுகாப்புகளை இந்த 4 (3) பிரிவு தகர்த்தெறிந்து விடும். “சர்ச்சைக்குரிய பகுதி 1528ல் மீர்பாகியினால் கட்டப்பட்டதிலிருந்து அவர்களிடம் 400 ஆண்டுகளாக எதிரிடை அனுபவத்தில் இருந்து வருகின்றது” என்ற அனுபவப் பாத்தியதையும் இதில் அடங்கும்.
குடியரசுத் தலைவர் கருத்து கேட்கும் இந்த வழக்கில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி, இதற்குப் பரிகாரம் காண்பதற்காக அரசாங்கம் இரண்டு காரியங்களை ஒரே நாளில் செய்திருக்கின்றது.
- பள்ளிவாசலுக்குக் கீழே இந்துக் கோயில் இருந்ததா? என்று உச்ச நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவர் மூலம் மத்திய அரசு விளக்கம் கேட்டது.
- குடியரசுத் தலைவர் மூலம் பாபரி மஸ்ஜித் நிலத்தைக் கையகப்படுத்தி அதை நாடாளுமன்றத்தில் 33/1993 என்ற சட்டமாக ஆக்கியிருக்கின்றது.
இந்த இரண்டைத் தான் மத்திய அரசாங்கம் இந்த வழக்கிற்குப் பரிகாரமாகச் செய்திருக்கின்றது.
குடியரசுத் தலைவர் கருத்துக் கேட்கும் இந்தக் கோரிக்கையில், சொத்து யாருக்குச் சொந்தம் என்று இந்த வழக்கில் எழுப்பப்பட்டிருக்கும் அடிப்படைக் கேள்வியை இது உள்ளடக்கவில்லை.
எதிரிடை அனுபவம் (Adverse Possession) என்ற சட்டத்தின் மூலம் தங்களுக்கு சட்டப் பாதுகாப்புகள் இருக்கின்றன என்று முஸ்லிம்கள் வைக்கும் வலிமையான வாதத்திற்குரிய பதிலையும் இந்தக் கோரிக்கை உள்ளடக்கவில்லை.
குடியரசுத் தலைவர் கேட்டிருக்கும் கேள்விக்கு இந்த நீதிமன்றம் அளிக்கும் எந்தப் பதிலும் நிலுவையில் இருக்கும் வழக்கை முடிவுக்குக் கொண்டு வராது. காரணம், சொத்து யாருக்குச் சொந்தம் என்ற அடிப்படைக் கேள்விக்குப் பதிலாக இது அமையப் போவதில்லை.
இது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதியின் பிரச்சனையைத் தீர்க்கப் போவதுமில்லை.
பிரச்சனையில் பாதிக்கப்படக் கூடிய ஒருவருக்குப் பரிகாரம் நீதிமன்றம் தான்.
33/1993 சட்டத்தின் பிரிவு 4 (3) பாபரி மஸ்ஜித் சம்பந்தமான அனைத்து வழக்குகளையும் ரத்துச் செய்து விடுகின்றது. அதாவது முஸ்லிம்கள் நீதிமன்றத்திற்கு வரும் வாசலை இது அடைத்து விடுகின்றது. பரிகாரத்தைத் தகர்த்து விடுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வரும் வாசலை அடைத்து விட்டு, 143 (1) பிரிவின்படி இதுபோன்று உச்ச நீதிமன்றத்தில் கருத்துக் கேட்பதையே மாற்றுப் பரிகாரமாக்குவது சரியான வழிமுறையல்ல!
இந்த ஓர் உண்மையின் அடிப்படையில் தான் 33/1993 சட்டத்தின் 4(3) பகுதி செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பளிக்கின்றோம். (ஆனால் 4(3) தவிர சட்டத்தின் மற்ற பகுதிகள் செல்லத்தக்கவையாகும்.)
நீதிபதி பரூச்சாவின் தெளிவான தீர்ப்பு
நீதிபதி பரூச்சா இந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:
தங்களுடைய எதிரிடை அனுபவத்தை வழக்காட்டி நிரூபிப்பதற்குரிய உரிமையையே சட்டப்பிரிபு 4 (3) வக்ஃப் வாரியம் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்திடமிருந்து பறித்து விடுகின்றது.
பாபரி மஸ்ஜிதின் கீழ் கோயில் இருந்ததா? என்று குடியரசுத் தலைவர் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விக்கு உட்பட்டுத் தான் தங்களது பள்ளி அமைந்திருக்கும் நிலத்தின் உரிமையைக் கேட்க முடியும் என்று கூறி, வழக்கின் தன்மையில் முஸ்லிம்களை ஒரு மிகக் குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வந்து விடுகின்றது.
இந்த 4 (3) சட்டப் பிரிவின் விதிகள் (பள்ளியின் கீழ் கோயில் இருந்தது) என்ற இந்த நோக்கத்தை அடைவதற்காக வேண்டி மதச் சார்பின்மை என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையை ஊனப்படுத்தி விடுகின்றன.
ஒரு மதத்திற்குச் சார்பாகவும், இன்னொரு மதத்திற்கு எதிராகவும் மத்திய அரசைச் சாய வைத்து விடுகின்றன.
இந்த மொத்த சட்டமும், குடியரசுத் தலைவரின் கருத்துக் கேட்பும் மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒரு மதத்திற்குச் சாதகமாகவும், இன்னொரு மதத்திற்குப் பாதகமாகவும் அமைந்துள்ளது. எனவே குடியரசுத் தலைவரின் இந்த நோக்கு மதச் சார்பின்மைக்கு எதிரானது. அரசியல் சட்டதிற்குப் புறம்பானது.
இவ்வாறு பரூச்சா கூறி விட்டு, மற்றொரு குறையையும் சுட்டிக் காட்டுகின்றார்.
தொல்பொருள் ஆய்வு, வரலாறு அடிப்படையில் வெளியாகும் பொருட்களைப் பரிசோதிக்கவும் மதிப்பீடு செய்வதற்கும் நீதிமன்றம் தகுதியற்றதாக உள்ளது. இந்நிலையில் இத்துறையில் உள்ள வல்லுனர்களை நியமிப்பதற்கும், அந்த வல்லுனர்களின் கருத்துக்களை எவ்வித விசாரணை, பரிசோதனை, ஆய்வு எதற்குமே உட்படுத்தாமல் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் நீதிமன்றம் தள்ளப்படுகின்றது.
இதுபோன்ற மதிப்பீட்டின் மீது நீதி அடிப்படையிலான கருத்துக் கேட்பதற்கு அனுமதியில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அந்தக் கருத்து ஒரு தரப்பு அல்லது இரு தரப்புகளின் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும்.
இவ்வாறு நீதிபதி பரூச்சா கூறுகின்றார்.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24, 1994 அன்று ஏகமனதாகத் தீர்ப்பளித்தது. அதாவது, பாபரி மஸ்ஜிதின் கீழ் கோயில் இருந்ததா? என்று குடியரசுத் தலைவர் கேட்பது, அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடும் நிலைக்கு உச்ச நீதிமன்றத்தைத் தள்ளி விடும். எனவே இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது எங்கள் வேலையல்ல என்று உச்ச நீதிமன்றம் ஏகமனதாகத் தீர்ப்பளித்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அகழ்வாராய்ச்சி உத்தரவு
உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கும் நிலையில் மார்ச் 5, 2003 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம், அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டது.
“இந்த உத்தரவு உச்ச நீதிமன்றம் அளித்த இந்த ஏக மனதான தீர்ப்புக்கு எதிரானதல்ல! ஏனென்றால் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள மிக முக்கியமான கேள்வி, இடிக்கப்பட்ட பள்ளிவாசலுக்குக் கீழே கோயில் இருந்ததா? என்பதாகும்” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால் இதே கேள்வி தான் குடியரசுத் தலைவரால் உச்ச நீதிமன்றத்தில் கேட்டு அனுப்பப்பட்டது. இது பொருத்தமற்ற கேள்வி என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூற, பதிலளிக்க மறுத்து விட்டது.
பாபரி மஸ்ஜித் வழக்கில் மிக முக்கியமான கேள்வி, முஸ்லிம்களிடம் இதுவரை இருந்து வருகின்ற எதிரிடை அனுபவம், அதற்கு எதிராக உள்ள அனைத்து வழக்குகளையும் செயலற்றதாக்கி விட்டதா? இல்லையா? என்பது தான். (அதாவது பாபரி மஸ்ஜிதில் முஸ்லிம்களுக்கு இருக்கும் 400 ஆண்டு கால அனுபவப் பாத்தியதை ஒன்றே அது அவர்களுக்குரிய இடம் தான் என்று தீர்ப்பளிப்பதற்குப் போதுமானதாகும். இதற்கு எதிராக எந்த வழக்கும் செல்லாது.)
எனவே அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த அகழ்வாராய்ச்சி உத்தரவு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொருத்தமற்ற ஒரு விவகாரத்தை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பியிருக்கின்றது.
விமர்சனத்திற்குள்ளான தீர்ப்பு
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அகழ்வாராய்ச்சித் துறையின் உயர்மட்ட அறிஞர் குழுவினரால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர்களின் விமர்சன உரை மார்ச் 10, 2003 அன்று வெளியானது.
இந்தப் பொறுப்பு சர்ச்சைக்குரிய ஒரு ஏஜென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தான் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகமாகும். அதன் அறிக்கை பெரும் கண்டனத்திற்குள்ளானது.
அலகாபாத் கோர்ட்டின் ஓர் அழகிய தீர்ப்பு
பாபரி மஸ்ஜித் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு முன்பு உத்திர பிரதேச மாநிலத்தின் அப்போதைய பி.ஜே.பி. அரசு அந்நிலத்தைக் கையகப்படுத்தியிருந்தது. இது தொடர்பாக டிசம்பர் 11, 1992 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதி எஸ்.ஹெச்.ஏ. ரஸா குறிப்பிட்டதாவது:
“ஒருவரது மத நம்பிக்கையானது சட்டத்தின் ஆட்சியை மிரட்டும் அளவுக்குச் செல்லக்கூடாது. “மத நம்பிக்கை நீதிமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டது’ என்ற வாதம் தெய்வ ஆட்சிக் கோட்பாட்டுத் தத்துவமாகும்”
ஒரு சமுதாயத்தின் மத நம்பிக்கை, அது பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக இருக்கும் காரணத்தால் அதுவே நீதிமன்றத் தீர்ப்பாகி, நாட்டின் சட்டமாகி விட முடியாது.
ஆனால் நீதிபதிகளே தாங்கள் அளிக்கும் உத்தரவுகளில் மத நம்பிக்கையைச் சார்ந்து அறிவித்தால் என்ன செய்வது?
செப்டம்பர் 30, 2010 அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில், ராமரைப் புனித ஆவி என்று நீதிபதி டி.வி. ஷர்மா வர்ணித்திருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நீதிமன்றங்களின் வரம்பு
மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீதிபதிகள் சிவில் (உரிமையியல்) தன்மைகளைக் கொண்ட வழக்குகளில் மட்டும் தான் தீர்ப்பளிக்க முடியும்.
இந்திய சாட்சிய சட்டம், மிக மிகக் குறைந்த வரையறுக்கப்பட்ட விஷயங்களில் – விவகாரங்களில் மட்டுமே நிபுணர்கள் சாட்சியளிக்க அனுமதிக்கின்றது. சாட்சிய சட்டத்தின் 45 முதல் 50 வரையிலான விதிகளில் இந்த வரையறை கூறப்பட்டுள்ளது. வரலாறு, அகழ்வாராய்ச்சி ஆகியவை அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
எஸ்.யூ. கானின் தவறான விளக்கம்
இரு தரப்புமே தங்களின் சொத்தின் துவக்கத்தை நிரூபிக்கத் தவறி விட்டனர். அதனால் பிரிவு 110ன் படி இரு தரப்பினரும் இந்தச் சொத்தின் ஒன்று சேர்ந்த அனுபவதாரர்கள் என்ற அடிப்படையில் இரு தரப்புமே உரிமையாளர்களாகக் கருதப்படுகின்றார்கள்.
இவ்வாறு எஸ்.யூ. கான் தனது தீர்ப்பில் குறிப்பிடுகின்றார்.
பிரிவு 110ஐ இவர் தவறாகப் புரிந்து கொண்ட விளக்கத்தின்படி இவர் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கின்றார். பிரிவு 110ஐப் படித்துப் பார்த்தால் இது புரியும்.
(சலீம் என்ற) ஒருவர் ஒரு சொத்தின் அனுபவத்தில் இருக்கையில், அவர் தான் இந்தச் சொத்தின் உரிமையாளரா? என்ற கேள்வி எழும் போது, “அவர் அந்தச் சொத்தின் உரிமையாளர் இல்லை’ என (கரீம் என்ற) மற்றொருவர் ஆட்சேபணை செய்தால், அவர் (சலீம்) சொத்தின் உரிமையாளர் இல்லை என்று நிரூபிக்கும் பொறுப்பு மற்றவர் (கரீம்) மீது தான் உள்ளது.
இது தான் பிரிவு 110 தெரிவிக்கும் சாராம்சமாகும்.
இந்த வழக்கில் முஸ்லிம்கள் தான் அனுபவத்தில் இருந்தனர். ஆனால் முஸ்லிம்கள் அந்த இடத்தின் உரிமையாளர் கிடையாது என்று சங் பரிவார் ஆட்சேபணை செய்கின்றது. அப்படியானால் அதை நிரூபிக்கும் பொறுப்பு சங் பரிவாருக்குத் தான் இருக்கின்றது. பிரிவு 110ன் படி எஸ்.யூ. கான் இப்படித் தான் தீர்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களைப் பார்த்து, “உங்கள் சொத்தின் துவக்கத்தை நிரூபிக்கத் தவறி விட்டீர்கள்’ என்று குருட்டுத்தனமாகத் தீர்ப்பளிக்கின்றார்.
“ஒருவர் ஒரு சொத்தை நீண்ட காலமாக, நிம்மதியாக அனுபவித்து வருகின்றார். ஆனால் அந்தச் சொத்திற்குரிய உண்மையான ஆதாரம் எதுவும் அவரிடம் இல்லை என்றாலும் அது சட்டப்பூர்வமான சொத்து தான். ஏனெனில் இந்த அனுபவப் பாத்தியதையையே அவருக்குரிய சொத்தின் துவக்கமாக அனுமதிக்கலாம். எந்த அளவுக்கு அனுபவப் பாத்தியதை நீடிக்கின்றதோ அந்த அளவுக்கு அவர் தான் அந்தச் சொத்துக்குச் சொந்தம் என்ற அனுமானம் வலிமை பெறுகின்றது”
இவ்வாறு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவிக்கின்றது.
(1991 Subb (2) sec 228, Pages 243-244)
19ஆம் நூற்றாண்டின் (1883-1886 ஆண்டுகளில் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பாபரி மஸ்ஜித் தொடர்பான) வழக்கு ஆவணங்கள், “கூட்டு அனுபவப் பாத்தியதை’ என்ற எஸ்.யூ. கானின் தீர்ப்பு தவறானது என்பதை நிரூபிக்கின்றன. (அந்த வழக்குகளில், பாபரி மஸ்ஜிதின் அனுபவம் முஸ்லிம்களிடம் மட்டும் தான் இருந்து வந்தது; இந்துக்களிடம் ஒருபோதும் இருக்கவில்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது)
இப்படி தெளிவான தவறுகளின் மூலம் விளைந்தது தான் நிலத்தை மூன்று பங்கு வைக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பாகும்.
இதைத் தான் ஊடகங்கள், “நீதிபதிகளின் சாணக்கியம்’ என்று பாராட்டுகின்றன.
1950, 1955, 1986, 1994 ஆகிய ஆண்டுகளில் நீதித்துறை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு இழைத்து வந்த அநீதிகளிலேயே தலையாய அநீதி இந்த 2010 அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் என்பதை டிசம்பர் 23, 1949 அன்றிலிருந்து உள்ள ஆவணங்கள் காட்டுகின்றன.
ஷஹீத் கஞ்ச் பள்ளிவாசல்
ஷஹீத் கஞ்ச் மஸ்ஜித் எனும் பள்ளிவாசல் 1722ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு வஃக்ப் பள்ளிவாசலாகும். இந்தப் பள்ளி, 1762ஆம் ஆண்டு சீக்கியர்களின் அனுபவத்திற்கு வந்தது.
20ஆம் நூற்றாண்டில் இது தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றம், லாகூர் உயர் நீதிமன்றம், பிரைவி கவுன்சில் ஆகிய அனைத்துமே எதிரிடை அனுபவம் என்ற சட்டத்தின்படி முஸ்லிம்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தன.
ராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சங் பரிவார்கள் கேட்டது போன்று, அங்குள்ள முஸ்லிம்கள் பஞ்சாப் பிரதம மந்திரி சிக்கந்தர் ஹயாத் கானிடம் இந்தத் தீர்ப்பை ரத்துச் செய்வதற்கு ஒரு சட்டமியற்றுமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு பஞ்சாப் பிரதம மந்திரி சிக்கந்தர் ஹயாத் கான் மறுத்து விட்டார். அவருக்கு முஹம்மது அலி ஜின்னா முழு ஆதரவளித்தார். இன்று வரை அந்தப் பள்ளிவாசல் ஒரு சீக்கிய குருத்துவாராவாக லாகூரில் இருந்து கொண்டிருக்கின்றது.
தற்போதைய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் பாராட்டத்தக்க வகையில் அமைதி காக்கப்பட்டு விட்டது. ஆனால் இதன் மூலம் மக்களின் உள்ளங்களில் ஏற்பட்ட காயம் தான் ஆறவில்லை.
மதச் சார்பின்மை மாளிகை எப்படிக் கட்டப்படக்கூடாது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
நீண்ட கால வழக்கின் மனுதாரரும் நீண்ட வயது கொண்டவருமான முஹம்மது ஹாஷிமின் அடுத்தக்கட்ட முடிவில் தான் இனி இது அடங்கியிருக்கின்றது. பள்ளிகள் எத்தனையோ கட்டி விடலாம். ஆனால் இதுபோன்ற ஒரு நாட்டைக் கட்ட முடியாது. பாதிக்கப்பட்ட அவருக்கு உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி ஆறுதல் வழங்கலாம்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!
செப்டம்பர் 30, 2010 அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பாராட்டுவதற்கு விரைந்தவர்கள் அறியாமையிலும் கேடுகெட்ட அறியாமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியவர்கள் ஆவார்கள்.
நியாயம் எது? அநியாயம் எது? என்று பார்ப்பதற்கு அவர்கள் ஆர்வம் கொள்ளவில்லை என்பதை அவர்களின் ஆர்வக் கோளாறு பிரதிபலிக்கின்றது.
————————————————————————————————————————————————————–
தொடர்: 10
ஸிஹ்ர் ஒரு விளக்கம்
இஸ்மாயில் ஸலபி எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்திலும் அவரது அறியாமையும் புரிந்து கொள்ளும் திறன் குறைவும் பளிச்சிடுகிறது.
அவரது கீழ்க்கண்ட வாதத்தை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இந்த வாதத்தில் இவருக்கு இருக்கும் அறியாமையே இவரது ஆய்வுக் குறைவுக்கு அடிப்படையாக உள்ளது.
நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? அல்லவா? என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர். (பக் 1298) என்று (பி.ஜே.) தனது வாதத்திற்கு வலு சேர்க்க வரலாற்றையே மாற்றி எழுதுகின்றார்.
நபித் தோழர்களைப் பொறுத்த வரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்தனர். காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களது நடைமுறையை வைத்து, சொல்லும் செய்தியை எடை போடும் நிலை ஸஹாபாக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தாலும் அது சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக அமையாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வளவுதான்! இது வெளி உலகத்திற்குத் தெரியக் கூடிய சமாச்சாரம் அல்ல என்பது தெளிவு. அப்படியிருக்க அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட இந்த நிலை வஹீயில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிட வரலாற்றையே புரட்ட வேண்டிய தேவை என்னவோ? செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள எனக் கூறித் தனது வாதத்தை முடிக்கின்றார். நபி(ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறவில்லை என்பதை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.
எந்த விஷயத்தில் வரலாற்றை மாற்றி எழுதுவதாக இவர் கூறுகிறாரோ அந்த விஷயத்தில் இவர் தான் வரலாற்றைப் புரட்டுகிறார்.
இந்த அடிப்படை விஷயத்தில் இவருக்கு ஏற்பட்ட அறியாமை தான் இங்கே அவர் குறிப்பிடும் மற்ற வாதங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்படும் போது முஸ்லிம்கள் என்று ஒரு சாரார் இருந்தது போலவும், காஃபிர்கள் என்று இன்னொரு சாரார் இருந்தது போலவும் இவர் வாதிடுகிறார். அவர்களில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை அப்படியே நம்பியதாகவும் காபிர்கள் அப்படியே மறுத்ததாகவும் இவர் வாதிடுகிறார். இவ்வளவு கூறு கெட்ட வாதத்தை உலகத்தில் இவரைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது.
இப்படி உளறி விட்டு நாம் வரலாற்றைப் புரட்டுவதாக அறிவுக் கூர்மையுடன் எழுதியுள்ளார்.
உண்மை என்ன? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்படும் போது அவர்கள் மட்டுமே முஸ்லிமாக இருந்தார்கள். மற்ற அனைவரும் காஃபிர்களாகத் தான் இருந்தனர். காஃபிர்களாக இருந்த அவர்கள் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் என்ற அடிப்படை அறிவு கூட இவருக்கு இல்லை.
நம்மைப் போலவே எல்லா வகையிலும் மனிதராக இருப்பவர் எப்படி இறைவனின் தூதராக இருக்க முடியும் என்பது தான் அனைவரிடமும் இருந்த சந்தேகம். குர்ஆனை இறை வேதம் என்று நம்புவதற்கு முன் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று முதலில் நம்ப வேண்டும். அல்லாஹ்வின் தூதர் என்று நம்பினால் தான் அவர்கள் கொண்டு வந்த வேதம் அல்லாஹ்வுடையது என்றும் நம்ப முடியும். அதன் பின்னர் தான் அவர்கள் கூறும் கட்டளைகளை ஏற்க முடியும்.
ஆனால் இவர் என்ன கூறுகிறார்? காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இவரது வாதப்படி எந்தக் காபிரும் முஸ்லிமாகி இருக்க முடியாது. நபித் தோழர்கள் காபிர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவர்கள் வானத்தில் இருந்து நபித்தோழர்களாக இறக்கப்பட்டார்கள் என்பது போல் வாதிடுகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைத் தூதர் என்று சிலர் நம்பி விட்டாலும் அவர்களோடு மட்டும் வழிகாட்டும் பணி முடிந்து விடாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் காபிர்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் பணியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருந்தது. ஒவ்வொரு நாளும் மக்கள் இஸ்லாத்தில் இணைந்து கொண்டும் இருந்தனர். ஆனால் காபிர்கள் இஸ்லாத்துக்கு வர மாட்டார்கள் என்று இஸ்மாயில் ஸலபி ஏறுக்கு மாறாக விளங்குகிறார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்டது முதல் அவர்கள் மரணிக்கும் வரை காபிர்கள் குர்ஆனை இறைவனின் வேதம் என்று நம்பி இஸ்லாத்துக்கு வர வேண்டும் என்றால் நபிகள் நாயகத்தை இறைவனின் தூதர் என்று அவர்கள் நம்புவது அவசியம்.
நபிகள் நாயகத்தை இறைவனின் தூதர் என்று அவர்கள் நம்பா விட்டால் குர்ஆனை இறை வேதம் என்று அவர்கள் நம்ப மாட்டார்கள். இதை நாம் ஊகத்தின் அடிப்படையில் கூறவில்லை. அல்லாஹ்வே அப்படித்தான் கூறுகிறான். நபிகள் நாயகத்தின் கேரக்டரை எடுத்துக் கூறி, அதையே பிரதான ஆதாரமாக எடுத்துக் காட்டி நபிகள் நாயகத்தை இறைத் தூதர் என்று நம்புமாறு அல்லாஹ் வழிகாட்டுகிறான்.
“அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
திருக்குர்ஆன் 10:16
பல வருடங்கள் அந்த மக்களுடன் வாழ்ந்ததை எடுத்துக் காட்டி இறைத் தூதர் என்பதை அல்லாஹ் நிரூபிக்கிறான்.
காபிர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் வாதம் செய்வது பாவம் என்பது போல் இவர் கூறுகிறார். ஆனால் காபிர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் திருப்தியடையும் ஆதாரத்தை இங்கே எடுத்துக் காட்டுகிறான்.
அதாவது காபிர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வே முக்கியத்துவம் அளிப்பதால் தான் காபிர்கள் அறிந்து வைத்திருந்த நபிகள் நாயகத்தின் கடந்த கால வாழ்க்கையை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறான்.
நபிகள் நாயகத்தின் கேரக்டர் சரியாக இருப்பது அவசியம் என்றால் அவர்கள் பரிசுத்தமான வாழ்க்கையும் வாழ வேண்டும். மன நோயாளியாக இல்லாமல் தெளிவாகவும் இருக்க வேண்டும். இப்போது (இஸ்மாயில் ஸலபி வாதப்படி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நோய் ஏற்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாக கூறினார்கள் என்று காபிர்கள் கருதினால் எப்படி நபிகள் நாயகத்தை இறைத் தூதர் என்று நம்புவார்கள்? நீர் தான் மன நோயாளி என்று தெரிகிறதே அப்புறம் இறைத் தூதர் என்று என்று எப்படி நாங்கள் நம்புவோம் என்று கேட்பார்களே? இறைத் தூதர் என்று நம்பாவிட்டால் எப்படி இறை வேதம் என்று குர்ஆனை ஏற்றுக் கொள்வார்கள்? அப்படிக் கேட்க முடியாத பாதுகாப்பு அவர்களுக்கு இருந்தது என்பதை இவ்வசனம் சொல்கிறது.
இந்த அடிப்படையில் நாம் எடுத்து வைத்த ஆதாரத்தைப் புரிந்து கொள்ளக் கூட இவருக்கு இயலவில்லை. இதைக் கிண்டல் செய்கிறார். மக்கத்து காபிர்களைத் திருப்திப்படுத்துவதில் நாம் குறியாக இருப்பதாக இவர் கூறுகிறார்.
குர்ஆன் முதலில் காபிர்களைத் தான் அடைந்தது. அது தான் அவர்களை முஸ்லிம்களாக மாற்றியது என்ற அடிப்படையை இவர் புரிந்து கொள்ளட்டும். காபிர்கள் தான் இஸ்லாத்தை ஏற்க வேண்டியிருப்பதால் அவர்கள் நம்பும் வகையில் தான் அல்லாஹ்வே தர்க்க வாதங்களை முன் வைக்கிறான். அதனால் தான் காபிர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
எந்த விஷயத்தில் காபிர்களும் நம்புவதற்கேற்ப அல்லாஹ் வாதங்களை வைக்கிறானோ அந்த விஷயங்களில் நாமும் அதற்கேற்ப வாதம் செய்ய வேண்டும் என்று நாம் கூறுவது இவருக்கு கேலிக் கூத்தாகத் தெரிகிறது.
அப்படியானால் குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுகிறானே எனவே சூனியம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் குர்ஆனை மறக்காமல் இருக்கலாம் அல்லவா? என்று இவர் வாதிடுகிறார். இது இவருக்கு எதிரான வாதம் என்பது கூட இவருக்கு தெரியவில்லை. குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் தான் அந்தப் பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்தும் மனநோய் ஏற்பட்டது என்பதை மறுக்கிறோம்.
ஒருவரை மன நோயாளி என்று கூறினால் அவர் எந்தச் செய்தியையும் பாதுகாக்க மாட்டார் என்பது தான் அதன் பொருள்.
மன நோயாளி தான்; ஆனால் அனைத்தையும் சரியாக நினைவில் வைத்திருப்பார் என்றால் அது முரண்பாடாகும்.
மறக்க மாட்டார்; ஆனால் மறப்பார் என்று கூறுவது போல் இந்த வாதம் அமையும்.
குர்ஆனைப் பாதுகாப்பதாக அல்லாஹ் கூறுவதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன நோயாளியாக ஆகவில்லை என்று நாம் கூறுகிறோம். மன நோயாளியாக ஆனார்கள் என்ற கருத்தைத் தரும் ஹதீஸ்களை மறுக்கிறோம்.
இந்த அடிப்படையைத் தலை கீழாக விளங்கிக் கொண்டு தனக்கு எதிரான வாதங்களைத் தானே எடுத்து வைக்கிறார்.
குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் அதற்கேற்ற வகையில் நபிகள் நாயகத்தின் சிந்தனையைப் பாதுகாக்க வேண்டும். மன நோயாளியாக ஆக்கி விட்டு குர்ஆனைப் பாதுகாப்பதாகக் கூறினால் அதுவே குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தாதா?
குர்ஆனைப் பாதுகாத்தல் என்பதில் அவர்களின் நினைவாற்றல் பாதுகாக்கப்படுவதும் அவர்களின் சிந்தனை தெளிவாக இருப்பதும் அடங்காதா?
மறதி என்பது மனிதனின் இயல்பில் உள்ளது. மறதி இல்லாத ஒரு மனிதன் கூட உலகில் கிடையாது. யாராலும் தவிர்க்க முடியாத மறதி எனும் இந்தப் பலவீனம் நபிகள் நாயகத்துக்கும் இருந்தது. அனைவருக்கும் இருந்தே தீர வேண்டிய இந்தப் பலவீனம் குர்ஆன் விஷயத்தில் மட்டுமாவது நபிகள் நாயகத்துக்கு இருக்கக் கூடாது என்று அல்லாஹ் சிறப்பு ஏற்பாடு செய்கிறான். குர்ஆனை மறக்கவே முடியாத தனித் தகுதியை அவர்களுக்கு வழங்குகிறான்.
மனதில் பதித்துக் கொள்வதில் மறதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்து மனநோயை எப்படி கொடுப்பான்? செய்யாததைச் செய்ததாகக் கூறினால் அவர்களது உள்ளத்தின் பாதுகாப்புத் திறன் குறைந்து விட்டது என்பது தான் பொருள். இப்படி இருக்கும் இருக்கும் போது மன நோயாளியாக எப்படி அவர்களை ஆக்குவான் என்று விளங்காமல் தலை கீழாக விளங்குகிறார்.
உனக்கு மறதி ஏற்படாது; ஆனால் மன நோய் ஏற்படும் என்று புரிந்து கொள்வது சரியா?
மறதியே ஏற்படாது என்றால் மன நோய் கண்டிப்பாக ஏற்படாது என்று புரிந்து கொள்வது சரியா?
பெற்றோரை சீ என்று சொல்லக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே சீ என்று சொல்லாமல் அவர்களை அடிக்கலாம் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?
சீ என்று சொல்லக் கூடாது என்றால் அடிப்பது அதை விடப் பெரிய விஷயம் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————————–
பொருளியல் தொடர்: 9
பேராசை
முதியவர்களும் செல்வத்தை விரும்புவர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6420, 6421
பேராசை ஏன்றால் என்ன?
நம்மீது உள்ள அனைத்துக் கடமைகளையும் பின் தள்ளிவிட்டு, செல்வம் ஒன்று மட்டும் தான் நோக்கம் என்று சென்றால் அது தான் போராசை.
எதிர் காலத்தைக் கவனிக்காமல், இறைவனை வணங்காமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பிறர் நலம் நாடாமல், ஏழைக்கு தர்மம் செய்யாமல் கடமைகளை விட்டு விட்டு செல்வத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் அப்போது தான் போராசை கொள்கிறோம்
சுலைமான் நபிக்கு அதிகமாக அல்லாஹ் செல்வத்தை வழங்கியிருந்தான். ஆனால் அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் அவர் விலகவில்லை.
பணத்தை அதிகமாக வைத்துக் கொள்ளலாம். இஸ்லாம் எதைச் சொல்கிறதோ அதைச் செய்யாமல் செல்வத்தைத் தேடக் கூடாது.
பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை, மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல், குழந்தையை நமது பார்வையில் வளர்க்காமல் வெளிநாட்டுக்குச் செல்வது கூடப் பேராசை தான்.
பொருளாதாரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் தேடலாம். ஆனால் வணக்கத்தை விட, மனைவியை விட, குழந்தையை விட மேலானது என்று நினைக்கக் கூடாது.
உள்ளத்தைப் பக்குவப்படுத்துதல்
மனிதனின் உள்ளம் எப்படிப்பட்டது என்றால் எந்த பொருளாகயிருந்தாலும் இது என்னுடையது, இது என்னுடையது என்று சொல்கிறான். ஆனால் உலகத்தில் பல இடங்களில் அவனுக்குச் சொத்து இருக்கும். அதனை அவன் பயன்படுத்தியிருக்க மாட்டான். இந்தச் சொத்தை வாங்குவதற்கு இரவும் பகலும் கஷ்டப்பட்டிருப்பான். இவன் இரவு பகலும் கஷ்டப்பட்டிருந்தாலும் இந்தச் செல்வம் இவனுக்குச் சொந்தம் கிடையாது. இவன் எதனை பயன்படுத்தினானோ அந்த பொருள்தான் இவனுக்கு சொந்ததம். மற்றவை கிடையாது.
ஒரு மனிதனிடத்தில் கோடிக்கணக்கில் பணமும் பெரிய வீடும் காரும் இருக்கிறது என்றால் இவை அனைத்தும் இவனுக்கு உரியதா? என்று பார்த்தால் கிடையாது. இவன் எதை உண்டானோ, இன்னும் எதை உடுத்தினானோ, இன்னும் எதை தர்மம் செய்தானோ அவை தான் ஒரு மனிதனின் செல்வம். வேறு எதுவும் இவனுக்கு சொந்தம் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது” என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்த போது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி)
நூல்: முஸ்லிம் 5665
இந்த உலகத்தில் நமக்கு எதுவும் சொந்தம் கிடையாது என்ற மனப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொண்டால் நாம் பேராசைப் படமாட்டோம்.
பேராசைக்கு ஒரு கடிவாளம்
சம்பாதிப்பதன் காரணத்தினால் நமது உடலின் ஆரோக்கியத்தைப் பார்ப்பதில்லை. கண், தலை, கை இப்படி அனைத்து உறுப்புகளையும் நாமே வீணாக்கிக்கொள்கிறோம். ஆனால் அனைத்து உள்ளமும் இந்த உலக ஆசையை விரும்பக் கூடியது என்று இஸ்லாம் கூறுகிறது. இந்த உலகத்தில் வாழ்வதற்காக வேண்டி இன்னும் செல்வம் வேண்டும்; இன்னும் செல்வம் வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். இந்த உலகம் அழியக் கூடியது என்றும், நிலையான உலகம் கிடையாது என்றும் நாம் எண்ணினால் அனைவரும் போராசையிலிருந்து விலகியிருப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையி-ருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6439, 6436
செல்வத்தில் மறைமுக அருள் (பரக்கத்)
பொருளாதாரத்தில் பேராசை கொள்ளக் கூடாது. உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதை நாம் அறிந்து வருகின்றோம். என்றாலும் பணம் பற்றாக் குறையாக இருக்கிறதே நாங்கள் எப்படிப் பேராசைப்படாமல் இருக்க முடியும் என்று கேட்கின்றனர்.
உதாரணத்திற்கு 100 ரூபாய் இருக்க வேண்டிய இடத்தில் 50 ரூபாய் இருந்தால் அது பற்றாக்குறை தானே என்று கேட்கிறார்கள். இந்த விஷயத்தைப் பொறுத்த வரை இது ஒரு காஃபிருக்கு வேண்டுமானால் கடினமாகயிருக்கும். ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரை இது எளிதானது தான்.
ஏனென்றால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நம்பியிருந்தால் அவனுக்கு அல்லாஹ் பரக்கத்தைத் தருகிறான். அறியாப்புறத்திலிருந்து அருளைத் தருகிறான். பரக்கத் என்றால் மறைமுகமான அருள்.
அதற்கு உதாரணம் 200 கிராம் அரிசியில் ஒருவர் உண்பார். ஆனால் அதே 200 கிராம் அரிசியில் இருவர் உண்பார்களானால் அதில் பரக்கத்திருக்கிறது.
பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவனால் இரு குழந்தைகளைக் கூடப் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஒருவன் 2000 ரூபாய் தான் சம்பாதிக்கிறான். அதிலேயே அவன் ஐந்து குழந்தைகளைப் படிக்க வைத்து, ஏனைய அவனது தேவைகளையும் அதிலேயே அவன் பூர்த்தி செய்வான் என்றால் இதில் தான் பரக்கத் உள்ளது.
எண்ணிக்கையில் வேண்டுமானால் 10000 அதிகமாக இருக்கலாம் ஆனால் பயனில் 2000 சிறந்ததாக உள்ளதே இது தான் பரக்கத். அதாவது குறைந்த பொருள்; நிறைந்த பயன். இதை ஒருவன் நம்புவானேயானால் அவன் பேராசைப்பட மாட்டான்.
இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். நபி (ஸல்) அவர்கள் இதைப் பல சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளார்கள்.
ஒட்டகம் கட்டுமிடத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒட்டகம் கட்டுமிடத்தில் தொழாதீர்கள். ஏனென்றால் அது ஷைத்தான்களிலிருந்து உள்ளதாகும்” என்று கூறினார்கள். அதேபோன்று ஆட்டைக் கட்டுமிடத்தில் தொழுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அதில் தொழுது கொள்ளுங்கள். ஏனென்றால் அதில் தான் பரக்கத் உள்ளது” என்று கூறினார்கள்.
நூல்: அபூதாவூத் 416
உம்மு ஹானி (ரலி) அவர்களிடம், “நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள். அதில் தான் பரக்கத் உள்ளது” என்று கூறினார்கள்.
நூல்: இப்னுமாஜா 2295
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒட்டகை வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆனால் ஆட்டில் தான் பரக்கத்” என்றார்கள்.
நூல்: இப்னுமாஜா 2295
இந்த ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் ஆடு தான் மிகக் குறைந்த அளவில் குட்டி போடுகிறது. செம்மறி ஆடு ஒரு தடவைக்கு ஒரு குட்டி தான் போடும். வெள்ளாடு வேண்டுமானால் இரண்டு குட்டி போடும். மனிதனைப் போல பத்து மாதம் கருவைச் சுமக்கும்.
அதே போல் அதிகம் உலகில் அழித்து உண்ணப்படும் பிராணியும் ஆடு தான். அதன் இனவிருத்தியும் அழிவையும் பார்த்தால் அந்த இனம் அழிந்து போயிருக்க வேண்டும். டைனோசரைப் போல அரிதாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆடுகள் தான் அதிகம் உள்ளதைப் பார்க்கிறோம். பன்றியெல்லாம் ஒரே பிரசவத்தில் பத்து குட்டி போடும். ஆனால் அதையெல்லாம் விட ஆடு தான் அதிகம் இருப்பதைப் பார்க்கிறோம். பண்ணையாக இருக்கும் பிராணிகளை கணக்கெடுத்தால் ஆடு தான் அதிகம் இருப்பதைப் பார்க்கிறோம். இது தான் அதிசயம், பரக்கத்.
முஸ்லிம் சமுதாயம் சமுதாயம் இந்த பரக்கத்தின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. மற்ற சமுதாயத்தில் ஒரு குடும்பத்தில் ஏழு நபரிருந்தால் ஏழு பேரும் சம்பாதிப்பார்கள். ஒரு நபர் நூறு ரூபாய் சம்பாதித்தால் ஒரு நாளைக்கு 700. மாதத்திற்க்கு 21,000 சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்கள் குடிசையில் தான் இருக்கிறார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் ஒரு குடும்பத்தில் ஒருவர் தான் சம்பாதிப்பார். தாயையோ, மனைவியையோ, மகளையோ, தந்தையையோ பெரும்பாலும் வேலைக்கு அனுப்ப மாட்டான். ஆனாலும் 5000 ரூபாய் சம்பாத்தியத்தில் குடும்பமே இயங்குவதைப் பார்க்கிறோம்.
இது நாம் அல்லாஹ்வை அரைகுறையாக நம்பியதற்கே இந்தப் பயனை அடைகிறோம் என்றால் அல்லாஹ்வை முறையாக நம்பினால் எப்படிப்பட்ட அதிசயத்தை அல்லாஹ் நிகழ்த்துவான் என்பதை நாம் சற்றே சிந்திக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் பல சம்பவங்களை ஹதீஸ்களில் நாம் பார்க்கிறோம்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு காஃபிர் வருகிறார். உணவளிக்குமாறு வேண்டினார். அதற்கு அவர்கள் ஒரு ஆட்டின் பாலைக் கறந்து தரும்படி வேண்டினார்கள். ஒரு ஆட்டுப் பால் கறந்து தரப்பட்டது. அவர் குடித்து விட்டு, இன்னும் வேண்டும் என்று கேட்டார். அவருக்கு மீண்டும் ஒரு ஆட்டின் பால் வழங்கப்பட்டு, மீண்டும் வேண்டும் என்று கூறினார். இப்படியாக அவர் ஏழு ஆட்டின் பாலை அவர் குடிக்கிறார்.
பிறகு அவர் அடுத்த நாள் இஸ்லாத்தைத் தழுவிய நிலையில் வருகிறார். அவருக்கு ஒரு ஆட்டின் பால் வழங்கப்பட்டது. அவர் அதை அருந்திவிட்டார். பின்னர் அவருக்கு மீண்டும் வழங்கப்பட்ட போது அவர், “வேண்டாம் என் வயிறு நிறைந்து விட்டது” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஒரு முஸ்லிம் ஒரு வயிற்றிற்கு உண்கிறான். ஆனால் ஒரு காஃபிர் ஏழு வயிற்றிற்கு உண்கிறான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3843
இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ண மாட்டார்கள். ஆகவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள் “நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் “இறை நம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறை மறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்‘ எனக் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிவு
நூல்: புகாரி 5393. 5394. 5396. 5397
மனிதன் வாழ்வதற்குக் குறைந்த அளவு உணவு போதும். எல்லாம் மனம் தான் காரணம். இஸ்லாம் மன ரீதியான ஒரு திருப்தியைத் தருகிறது. இதனால் வயிறு நிறைந்து விடுகிறது. இதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————————–
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்
கே.எம். அப்துந் நாசிர்
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும் சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர். என்ன பெயர் வைக்கலாம்? புதுப் பெயராகச் சொல்லுங்கள் என்றெல்லாம் கேட்டு அரபு மொழி தெரிந்தவர்களை நாடிச் செல்வதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் கிரிக்கெட், சினிமா போன்றவற்றில் பிரபலமாக உள்ளவர்களின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் பெருமையடைகின்றார்கள். சிலர் தவறான பொருள் கொண்ட பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள்.
எனவே பெயர் சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 4320
இறைவனுக்கு இணையானவராகக் காட்டும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். மேலும் இவ்வாறு பெயர் வைத்துக் கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்) “மன்னாதி மன்னன்‘ எனப் பெயரிடப்பட்ட மனிதர் தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4339, புகாரி 6205
என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் “அஸீஸ்” (யாவற்றையும் மிகைப்பவன்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “அப்துர் ரஹ்மான்” (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று பெயர் சூட்டினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி), நூல்: அஹ்மத் 16944
ஷுரைஹ் என்பாரின் தந்தை ஹானீ அவர்கள் தன்னுடைய கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். (ஹானீ) அவர்களை அவருடைய கூட்டத்தினர் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டி அழைப்பதை நபி (ஸல்) அவர்கள் செவியேற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ் தான் “ஹகம்” (நீதிபதி) ஆவான். அவனிடம் தான் “தீர்ப்பு” உள்ளது. நீர் ஏன் “அபுல் ஹகம்” (நீதிபதியின் தந்தை) என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டீர்?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், “என்னுடைய சமுதாயம் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றால் என்னிடத்தில் வருவார்கள். நான் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன். இரு பிரிவினரும் அதைப் பொருந்திக் கொள்வார்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்), “இது அழகானதல்ல” எனக் கூறிவிட்டு உனக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று கேட்டார்கள். அதற்கவர் எனக்கு சுரைஹ், முஸ்லிம் , அப்துல்லாஹ் ஆகியோர் உள்ளனர் எனக் கூறினார். அவர்களில் மூத்தவர் யார்? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஷுரைஹ் என்று பதிலளித்தார். அதற்கு நபியவர்கள் நீ இனி “அபு ஷுரைஹ்” (ஷுரைஹின் தந்தை) என்று அவருக்கு பெயர் சூட்டினார்கள்.
நூல்: அபூதாவூத் 4304
நபியவர்களின் புனைப் பெயர்
நபியவர்களின் புனைப் பெயரை மற்றவர்கள் வைப்பதைத் தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற “அபுல் காசிம்‘ ஆவேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 4323
ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டால் அது குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் தன்னுடைய பெயரான முஹம்மத் என்ற பெயருடன் சேர்த்து அபுல் காசிம் என்ற புனைப் பெயரை வைப்பது கூடாது என்று தான் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய பெயரையும் என்னுடைய குறிப்புப் பெயரையும் இணைத்து விடாதீர்கள். நிச்சயமாக நானே “அபுல் காசிம்‘ ஆவேன். நான் பங்கீடு செய்பவனாக இருப்பதினால் அல்லாஹ் (அதனை) எனக்கு கொடுத்தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 9226
மேலும் நபியவர்களின் காலத்தில் அபுல் காசிம் என்ற பெயரை மற்றவர்களும் வைத்திருந்தார்கள். அப்போது சிலர் நபியவர்களின் அருகில் நின்று கொண்டு நபியவர்களை அழைப்பது போன்று மற்றவர்களை அழைத்தார்கள். இதன் காரணமாகவும் நபியவர்கள் அபுல் காசிம் என்ற தன்னுடைய குறிப்புப் பெயரை வைப்பதற்குத் தடை விதிக்கிறார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் கடைவீதியில் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் “அபுல் காசிமே! (காஸிமின் தந்தையே!)‘ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பினார்கள். அவர் (வேறொருவரைச் சுட்டிக் காட்டி) “நான் இவரைத் தான் அழைத்தேன்! (தங்களை அழைக்கவில்லை!)‘ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எனது பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள்! எனது (அபுல்காசிம் எனும்) குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்றார்கள்.
நூல்: புகாரி 2120
இன்று நபியவர்கள் நமக்கு மத்தியில் இல்லாத காரணத்தினால் இந்தத் தடை இன்றைய காலத்திற்குப் பொருந்தாது.
எனவே தற்காலத்தில் ஒருவர் அபுல் காசிம் என்ற பெயரை வைத்துக் கொள்வதினால் குற்றமாகாது.
ஒருவரை தீயவராகக் காட்டும் வகையில் அமைந்த பெயர்களை வைப்பதை வெறுத்துள்ளார்கள்.
என் தந்தை (ஹஸ்ன் பின் அபீவஹ்ப் (ரலி) அவர்கள்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஹஸ்ன்” (முரடு) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “(இல்லை) நீங்கள் (இனிமேல்) “சஹ்ல்‘ (மென்மை)” என்று சொன்னார்கள். அவர், “என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களுடைய குண நலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.
அறிவிப்பவர்: முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி), நூல்: புகாரி 6190
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆஸியா‘ (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 4332
இங்கு பாவி என்ற பொருளுக்குரிய அரபி வார்தை ஆஸியா என்பது அய்ன், ஸாத், யா, தா ஆகிய எழுத்துகளை உள்ளடக்கியதாகும்.
அலிஃப், சீன், யா, தா ஆகிய எழுத்துக்களை உள்ளடக்கிய ஆசியா என்ற பெயரை வைத்துக் கொள்ளலாம். இது பிர்அவ்னுடைய மனைவி அன்னை ஆசியா (அலை) அவர்களின் பெயராகும்
நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்த நபர்களில் “அஸ்ரம்‘ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறப்படும் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் பெயர் என்ன என்று கேட்டார்கள். அதற்கவர் “அஸ்ரம்‘ (நன்மைகளை முறிப்பவர்) என்று கூறினார். அதற்கு நபியவர்கள், இல்லை. நீ “சுர்ஆ” (விளைவிக்கும் பூமி) என்று கூறி (அவருக்கு பெயர் சூட்டி)னார்கள்)
அறிவிப்பவர்: உஸாமா பின் உஹ்தர் (ரலி), நூல்: அபூதாவூத் 4303
மக்கா வெற்றியின் போது ஆஸி (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்ற பெயர் கொண்ட ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினார். நபியவர்கள் அவரின் பெயரை முதீவு (இறைவனுக்கு கட்டுப்படக்கூடியவர்) என்று மாற்றினார்கள். அவருக்கு பெயர் மாற்றம் செய்ததையும், இறைவனுக்கு மாறுசெய்பவர் இஸ்லாத்தை தழுவ மாட்டார்; கட்டுப்படுபவர் தான் இஸ்லாத்தை தழுவுவார் என்பதையும் குறிக்கும் வகையில் நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
மக்கா வெற்றி நாளின் போது நபி (ஸல்) அவர்கள் கூற முதீவு (ரலி) அவர்கள் செவியேற்றார்கள்: (நபியவர்கள் கூறினார்கள்) இந்த நாளுக்குப் பிறகு குரைஷிகள் சித்ரவதையினால் கொல்லப்படமாட்டார்கள். (இறைவனுக்கு) மாறு செய்பவர்களான குறைஷிகளில் இறைவனுக்கு வழிபடக்கூடியவரை “(முதீவு)” தவிர வேறு யாருக்கும் இஸ்லாம் சென்றடையவில்லை.
அவரின் பெயர் “ஆஸி” (இறைவனுக்கு மாறு செய்பவர்) என்று இருந்தது. அவருக்கு நபியவர்கள் “முதீவு” (கட்டுப்படக்கூடியவர்) என்று பெயர் சூட்டினார்கள்.
நூல்: அஹ்மத் 15446
பஷீர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய பெயர் ஸஹ்ம் (நெருக்கடி) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பஷீர் (நற்செய்தி) என்று பெயர் சூட்டினார்கள்.
அறிவிப்பவர்: பஷீர் (ரலி), நூல்: அஹ்மத் 20950
தன்னைத் தானே பரிசுத்தப்படுத்தும் வகையில் பெயர் சூட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.
ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா‘ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4335
நான் என் புதல்விக்கு “பர்ரா’ (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு “பர்ரா’ என்ற பெயரே சூட்டப் பெற்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருக்கு “ஸைனப்‘ எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 4337
சில பெயர்கள் அழகிய பொருளுடையதாக இருந்தாலும் அந்தப் பெயரைக் கூறி அழைக்கும் போது, அவர் இல்லை என்று பதில் வந்தால் அந்த அழகிய தன்மையே இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ண வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக இது போன்ற சில பெயர்களை வைப்பதைத் தடை செய்தார்கள். ஆனால் இதை நபியவர்கள் வாழும் போதே கண்டு கொள்ளாமலும் விட்டிருக்கின்றார்கள்.
(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா‘ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜுவைரியா‘ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பர்ரா‘விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்‘ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 4334
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்
நூல்: முஸ்லிம் 4328
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).
“இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றியாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கிறானா‘ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை‘ என்று பதில் வரும்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றை விடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம்.
அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி), நூல்: முஸ்லிம் 4330
நபியவர்கள் வாழும் போதே இவ்வாறு பெயர் வைப்பதைக் கண்டு கொள்ளாமலும் விட்டுள்ளார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமை இருந்தார். அவருக்கு ரபாஹ் (இலாபம்) என்று பெயர் சூட்டப்பட்டவராயிருந்தார்.
அறிவிப்பவர்: ஸலாமா (ரலி), நூல்: அஹ்மத் 16542
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.
பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.
நூல்: முஸ்லிம் 4331
நம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது மேற்கண்ட அடிப்படைகளை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானதாகும்.
ஒரு பெயர் உங்களுக்குப் பிடித்திருந்து அதற்கு எந்தப் பொருளுமே இல்லாமல் இருந்தாலும் அதனைப் பெயராக வைப்பது மார்க்கத்தில் குற்றம் கிடையாது. ஏனெனில் நபியவர்கள் காலத்திலே வாழ்ந்த எத்தனையோ ஸஹாபாக்கள் மற்றும் ஸஹாபிப் பெண்களின் பெயர்களில் பலவற்றிற்கு எந்தப் பொருளும் கிடையாது. இவற்றை நபியவர்கள் கண்டித்ததாக எந்த ஹதீசும் கிடையாது.
மேலும் நபியவர்கள் தன்னுடைய பெயர் முஹம்மத் என்பதை பெயராகச் சூட்டுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் பெண்களுக்குப் பெயர் சூட்டும் போது எந்தப் பெயராக இருந்தாலும் அதில் ஃபாத்திமா என்று பெயரை சேர்த்து தான் வைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது மூட நம்பிக்கையாகும். நபியவர்கள் அப்படி எந்த ஒரு கட்டளையையும் பிறப்பிக்கவில்லை.
ஒருவர் விரும்பினால் தன்னுடைய மகளுக்கு ஃபாத்திமா என்ற பெயரை மட்டும் வைக்கலாம். அதனுடன் இன்னொரு பெயரை சேர்த்தும் வைக்கலாம். ஆனால் இப்படி வைப்பது தான் சிறந்தது என்று எண்ணி வைத்தால் அது தவறாகும்.
————————————————————————————————————————————————————–
கேள்வி பதில்
? என் நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் மேலை நாடொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் தன்னுடைய கடன் அட்டையைப் பயன்படுத்தி சில லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி சொந்த நாட்டுக்குத் திரும்பி விட்டார். பல வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் இது இவருக்கு இப்போது மிக உறுத்தலாக இருக்கிறது. அதனால் என்ன செய்வது தெரியாமல் தத்தளிக்கிறார். அந்த ரூபாய்களை அதே வங்கிக்குத் திருப்பி அனுப்பிவிட நினைக்கிறார். முஸ்லிம்களைக் கருவறுக்கும் இத்தகைய நாடுகளின் வங்கிக்கு பணத்தைத் திருப்பி அனுப்ப நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இந்த பணத்தை சத்தியத்தைச் சொல்வதற்காகப் பயன்படுத்தலாமா தயவு செய்து பதில் சொல்லவும்.
! வாக்கு மீறுவதும் நம்பிக்கை மோசடியும் செய்வது எந்த ஒரு முஸ்லிமிடமும் இருக்கக்கூடாது. நம்முடைய எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தைப் பேணுவதும் அவர்களுக்குரிய பொருளை முறையாகக் கொடுத்து விடுவதும் அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் தனது எதிரிகளுடன் எத்தனையோ ஒப்பந்தங்களைச் செய்தார்கள். இந்த ஒப்பந்தங்களில் ஒன்றில் கூட அவர்கள் மோசடி செய்ததில்லை.
ஒரு சாராரின் மீதுள்ள வெறுப்பால் நாம் அநியாயம் செய்துவிடக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 5:8
பிறருக்கு மோசடி செய்வதை நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 2936
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நாட்டப்பட்டு, “இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 6177
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) “உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது” என்று கூறினார். அதற்கு அவர்கள், “மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 164
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “முஃப்லிஸ் (திவாலாகிப் போனவன்) பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “யாரிடத்தில் பொற்காசுகளும் இன்னும் எந்தப் பொருளும் இல்லையோ அவன் தான் முஃப்லிஸ் (திவாலானவன்)” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடைய சமுதாயத்தில் முஃப்லிஸ், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத்துடன் வருவான். (உலகில் வாழும் போது) இவனை இட்டுக் கட்டியிருப்பான். இவனைத் திட்டியிருப்பான். இவனது இரத்தத்தை ஓட்டியிருப்பான். இவனை அடித்திருப்பான். எனவே இவனுக்கு அவனுடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். அவன் மீது கடமையாக உள்ளவற்றை நிறைவேற்றுவதற்கு முன்பே அவனது நன்மைகள் அழிந்து விட்டால் அவர்களுடைய தீமைகளிலிருந்து எடுத்து அவன் மீது வைக்கப்படும். பிறகு அவன் நரகில் வீசப்படுவான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4678
ஹலாலான வழியில் கிடைத்த நமக்குரிய பொருளை நல்வழியில் செலவு செய்தாலே அதற்கு கூலி கிடைக்கும். தவறான வழியில் ஈட்டிய பொருளை நல்வழியில் செலுத்தினால் அதை இறைவன் ஏற்க மாட்டான். அதற்கு நற்கூலி தரவும் மாட்டான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1844
உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தங்களது பொருளாதாரத்தை நமக்கு எதிரான வழியில் செலவு செய்தால் இதைப் பற்றி இறைவன் உங்களிடம் கேள்வி கேட்க மாட்டான்.
எனவே நீங்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விடுவதே சரி.
? நான் கால் கொலுசு அணிந்திருக்கிறேன். அதில் நடக்கும் போது சிறு ஓசை எழுகிறது. இப்படி அணிவது கூடுமா? நடக்கும் போது கொலுசிலிருந்து ஓசை வரும் கொலுசுகளை அணிவது மார்க்கத்தில் தடையா? இல்லை சொந்த வீட்டுக்குள் இருக்கும் போதாவது இப்படி அணியலாமா? அதுவும் கூடாதா?
ஸைலா பானு
பெண்கள் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து கொலுசு அணியலாம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் கொலுசு அணிந்துள்ளனர்.
உஹுதுப் போரின் போது பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களுடைய கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 3039
கொலுசு அலங்காரமாக இருப்பதால் அந்நிய ஆண்களிடம் இதை வெளிப்படுத்துவதும் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சப்தம் எழுப்பும் கொலுசுகளை அணிந்து செல்வதும் கூடாது.
பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31
எனவே அந்நிய ஆண்கள் பார்க்காத வகையில் ஒலி எழுப்பாத கொலுசை அணிவது கூடும். நீங்கள் உங்கள் வீட்டுக்குள் இருக்கையில் எந்த வகையான கொலுசையும் அணிந்து கொள்ளலாம்.
? ஸலாம் முழுமையாகச் சொன்னால் பதிலும் முழுமையாகச் சொல்ல வேண்டுமா?
மன்சூர், தம்மாம்
ஒருவர் நமக்கு “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு’ என்று பூரணமாக ஸலாம் கூறும் போது நாமும் அவருக்கு “வஅலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு’ என்று பூரணமாகப் பதில் தர வேண்டும்.
ஏனென்றால் நமக்குக் கூறப்பட்ட முகமனையோ அல்லது அதை விடச் சிறந்த முகமனையோ கூறும் படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பதிலளிப்பவரின் ஸலாம் முதலில் ஸலாம் கூறியவரின் சலாத்தைப் போன்று இருக்க வேண்டும். அல்லது அதை விடச் சிறப்பானதாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:86
ஆதம் (அலை) அவர்கள் மலக்குமார்களுக்கு ஸலாம் சொன்னார்கள். மலக்குமார்கள் ஆதம் (அலை) அவர்கள் கூறிய ஸலாமை விடச் சிறந்த ஸலாமைக் கூறினார்கள். அந்த மலக்குமார்கள் கூறிய ஸலாம் தான் முஹம்மது நபியின் சமுதாயமாகிய நாம் கூற வேண்டிய ஸலாமாகும்.
அல்லாஹ் ஆதமை அவருக்குரிய (அழகிய) உருவில் படைத்தான். அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது நீங்கள் சென்று அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் அதுதான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின் கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6227
மேலும் பதில் ஸலாம் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் கடமை என்று கூறியுள்ளார்கள். ஸலாம் கூறியவர் பூரணமாக ஸலாம் கூறி நாம் குறைவாக பதில் ஸலாம் கூறினால் நாம் அவருக்குச் செய்ய வேண்டிய கடமையில் குறைவு ஏற்பட்டதாக ஆகிவிடுகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் (இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.
- ஸலாமிற்குப் பதில் சொல்லுதல்.
- நோயாளியை நலம் விசாரித்தல்.
- ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லுதல்.
- அழைப்பை ஏற்றுக் கொள்ளுதல்.
- தும்பியவருக்கு யர்ஹமுக்கல்லாஹ் என்று கூறுதல்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா
நூல்: புகாரி 1240
“ஸலாம் கூறுவதிலும் தொழுவதிலும் குறைவு வைக்கக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் (793)
சலாம் கூறியவருக்காக இறைவனிடம் சாந்தியை வேண்டுவதுடன் இறைவனுடைய அருளையும் அபிவிருத்தியையும் சேர்த்து வேண்டினால் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (இவருக்கு) பத்து (நன்மைகள்) என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் “(இவருக்கு) இருபது (நன்மைகள்)” என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்தார். அவர் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு” என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் “(இவருக்கு) முப்பது (நன்மைகள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: அபூதாவூத் 4521