ஏகத்துவம் – டிசம்பர் 2009

தலையங்கம்

பொங்கி வழிகின்ற பெருநாள் திடல்கள்

தவ்ஹீத் ஜமாஅத் எங்கும், எதிலும் குர்ஆன் ஹதீஸ் என்ற பார்வையைச் செலுத்துகின்ற தனித்தன்மை மிக்க ஓர் இயக்கம். அதன் அடிப்படையில் தான் தனது கிளைகள் தோறும் பெருநாள் தொழுகைகளைத் திடல்களில் தொழுவதற்கு ஏற்பாடு செய்கின்றது.

தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திடல்களில் நடத்தப்பட்ட பெருநாள் தொழுகையில் மக்கள் சாரை சாரையாக வந்து கலந்து கொண்டனர். பத்திரிகைகளில் பெருநாள் தொழுகை குறித்த செய்தி மற்றும் புகைப்படங்களில் தவ்ஹீத் ஜமாஅத் பெரும் இடத்தை ஆக்கிரமித்திருந்தது இதற்கு ஒரு சான்று!

இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாத மத்ஹபுவாதிகள், அந்த மக்கள் கூட்டத்தைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள்.

“ரமளான் முழுவதும் பள்ளியில் தொழுதுவிட்டு இப்போது ஏன் திடலுக்குப் பாய்கிறீர்கள்?” என்று கடையநல்லூர் என்ற ஊரில் மத்ஹபுவாதிகள் ஒலிபெருக்கி மூலம் ஓலமிட்டுள்ளனர்.

மக்கள் திடலுக்கு ஓடி வருவதன் மர்மத்தை இந்த மத்ஹபுவாதிகள் இன்னும் புரிந்ததாக இல்லை. பெருநாள் உரை என்ற பெயரில் இவர்கள் அறுக்கும் அறுவையின் வேதனை தாளாமல், அதுவும் ஹஜ் பெருநாட்களில், “இப்ராஹீம் நபி, இஸ்மாயீலின் கழுத்தை அறுப்பதற்குக் கத்தியை வைத்த போது கத்தி அறுக்கவில்லை, அதைக் கல்லில் தூக்கி எறிந்த போது கல் பிளந்து விட்டது” என்று அறுத்துத் தள்ளும் மொட்டைக் கத்தியின் அறுவை தாங்காமல் திடலுக்கு ஓடி வருகின்றனர். ஏகத்துவப் பிரச்சாரத்தின் தேட்டம் காரணமாக திடலைத் தேடி வருகின்றனர் என்ற மர்மம் இந்த மத்ஹபுவாதிகளுக்குப் பிடிபடவில்லை.

அன்று தவ்ஹீதுக்கு வர விடாமல், தவ்ஹீதை வளர விடாமல் செய்வதற்கு முயற்சித்துப் பார்த்தார்கள். அது பலிக்காமல், பயனளிக்காமல் போனது. இப்போது கடல் அலையாய் திடலுக்கு வரும் கூட்டத்தைத் தடுக்கிறார்கள். இதில் இவர்கள் ஒரு போதும் வெற்றி பெறப் போவதில்லை.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

மக்கள் கூட்டம் அதிகமாக, அதிகமாக தவ்ஹீத் ஜமாஅத்திற்குப் பொறுப்பும் அதிகமாகின்றது.

மக்களின் இந்த வளர்ச்சிக்கு ஏற்ப அழைப்பாளர்கள் பெருகியாக வேண்டும். அதிகம் அதிகம் அழைப்பாளர்கள் உருவாகியாக வேண்டும். அந்த தாயீக்களின் உருவாக்கத்தில் கவனம் செலுத்துவோமாக!

ஒவ்வொரு கிளை தோறும் ஒரு தாயீயை உருவாக்க, தவ்ஹீது இஸ்லாமியக் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுப்பி ஏகத்துவத்தை நிலைநாட்டுவோம்.

————————————————————————————————————————————————

தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு     தொடர்: 2

திருமண நிலைப்பாடு தொடர்பான விஷயங்களில் மணப்பெண் தேர்வு மார்க்க அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், திருமண உரை என்பது கட்டாயமல்ல என்பதையும் கடந்த இதழில் கண்டோம்.

திருமணத்திற்காக உற்றார் உறவினர்களை, நண்பர்களை அழைக்கச் செல்லும் நம்முடைய சகோதரர்கள் வாய்மொழியாக அழைத்தாலும், அழைப்பிதழ்கள் வாயிலாக அழைத்தாலும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தான் அழைக்கிறார்கள்.

புகாரியில் இடம் பெற்ற அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் ஹதீஸ் அடிப்படையில் இப்படி ஓர் அழைப்பு இல்லை என்று தெளிவாக விளங்கிக் கொள்கிறோம்.

திருமண அவைக்கு ஒருவரை அழைக்கவில்லை என்றாலும், அழைத்த பின்னர் ஒருவர் திருமண சபைக்கு வரவில்லை என்றாலும் நம்முடைய தவ்ஹீத் சகோதரர்கள் கடுமையாகக் கடிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கடிந்து கொள்வதற்குக் காரணம், திருமணம் தொடர்பான இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ளாதது தான்.

அதே சமயம் திருமணத்தின் போது வைக்கப்படுகின்ற விருந்தில் கலந்து கொள்வது நபிவழியாகும்.

ஒருவர் திருமண சபையில் போல் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டு அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் மீது குற்றமாகும்.

  1. வலீமா விருந்து

நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை விருந்து வைக்கும்படிச் சொல்கிறார்கள். ஆனால் இது கட்டாயமோ, கடமையோ கிடையாது. கடன் வாங்கியோ, சொத்துக்களை விற்றோ, நகைகளை அடகு வைத்தோ விருந்து வைக்கக் கூடாது.

கறி, சாப்பாடு போட்டுத் தான் விருந்து வைக்க வேண்டும் என்பதில்லை. வெறும் பிஸ்கட், டீயாகக் கூட இருக்கலாம்.

வசமான இறைச்சி இல்லையென்றால் அது வலீமா விருந்தே அல்ல என்றே சமுதாயம் கருதுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இறைச்சி இல்லாமலேயே வலீமா விருந்தளித்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (“சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் “ஸஃபிய்யா பின்த் ஹுயை’ அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது நபியவர்களின் வலீமா – மணவிருந்துக்காக முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, (அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது.) அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவை இடப்பட்டன. இதுவே அன்னாரின் வலீமா – மணவிருந்தாக அமைந்தது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 5159

எனவே வலீமா விருந்தை சாதாரணமாக இனிப்பு வழங்கி அல்லது சம்சா, டீ வழங்கி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இன்று திருமணத்தின் போது ஏற்படுகின்ற உச்சக்கட்ட செலவே இந்த விருந்தில் தான். அதிலும் கடன் வாங்கி, கடன் கிடைக்காத போது வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கும் கொடுமை சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. கடன் வாங்கிக் கல்யாணம் என்று சொல் வழக்கில் உதாரணம் கூறும் அளவுக்குத் திருமணத்தின் போது கடன் வாங்கும் கொடுமை, சமுதாயத்தில் ஊடுருவி விட்டது. இதற்காகப் பலர் வீட்டைக் கூட விற்றிருக்கின்றனர். அந்த அளவுக்கு இந்தத் திருமண விருந்து மக்களை ஆட்டி அலைக்கழிக்கின்றது.

அதனால் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் இந்தச் சமூக நிர்ப்பந்தத்திற்குப் பலியாகி விடக் கூடாது.

திருமணத்திற்காகக் கடன் வாங்குவதற்கு அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஏனெனில், கடன் இருந்தால் இறைவனின் மன்னிப்பு கிடைக்காது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)என்று பதிலளித்தார்கள்.

பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார்.

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல்: முஸ்லிம் 3498

எனவே சமுதாயம் வெட்டி வைத்திருக்கும் சமூக நிர்ப்பந்தம் என்ற படுகுழியில் கொள்கைச் சகோதரர்கள் விழாத வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி விருந்து வைக்கும் அவல நிலைக்குச் சென்று விடக் கூடாது.

  1. விருந்தில் கலந்து கொள்ளுதல்

திருமண விருந்துக்கு ஒருவர் அழைக்கப்பட்டால் அந்த விருந்தில் போய் கலந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் விருந்துக்குப் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1240

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வலீமா (மண) விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதனை ஏற்றுச் செல்லட்டும்!

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி 5173

வலீமாவில் கலந்து கொள்வது சுன்னத் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது மாப்பிள்ளை வீட்டு விருந்தாக இருக்க வேண்டும்.

பெண் வீட்டு விருந்து

ஒரு கொள்கைவாதி, தன் மகளை, தன் பொறுப்பில் சகோதரியைத் திருமணம் முடித்துக் கொடுத்தால் அதற்காகத் தனது வீட்டில், அதாவது பெண் வீட்டில் விருந்து வைக்கக் கூடாது. பிறர் வைக்கின்ற பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்ளவும் கூடாது.

இவ்வாறு நாம் சொல்கின்ற போது, “பெண் வீட்டு விருந்துக்கு மார்க்கத்தில் தடை இருக்கின்றதா?’ என்று கேள்வி கேட்கிறார்கள். பெண் வீட்டு விருந்து வைப்பதற்குத் தடையில்லை என்று தீர்ப்பும் அளிக்கிறார்கள். இப்படித் தீர்ப்பளிப்பது பாமரனாக இருந்தால் பரவாயில்லை. மார்க்கம் படித்த, அதிலும் மதீனாவில் போய் மார்க்கம் படித்தவர்கள் இந்த அறியாமைக் கேள்வியைக் கேட்கிறார்கள். இவர்களுக்கு மார்க்கத்தின் முக்கியமான அடிப்படையே தெரியவில்லை.

தடை இருக்கின்றதா?

தடை இருக்கின்றதா? என்று எப்போது, எதில் பார்க்க வேண்டும் என்று தெரியாததால் தான் இப்படி ஒரு புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்கிறார்கள்.

தடையை எப்போது பார்க்க வேண்டும்? எதில் பார்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உத்தரவு, அங்கீகாரம் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். ஒருவர் லுஹர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகைக்குப் பின்னால் சுன்னத் தொழுவது போன்று ஃபஜ்ருக்குப் பின்னாலும் சுன்னத் தொழலாமா? என்று நினைக்கின்றார். இப்போது அவர் அதற்கு உத்தரவு இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். அதாவது அல்லாஹ்வின் கட்டளை அல்லது தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை, அல்லது பிறர் செய்வதைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் அளித்த ஒப்புதல் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.

ஃபஜ்ர் தொழுகையில் முன் சுன்னத்தை விட்டிருந்தால், பின்னால் தொழலாம். ஆனால் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சுன்னத் என்பது கிடையாது. இது தெளிவாகத் தெரிந்த பின்னால் அவர் நம்மிடம், ஃபஜ்ருக்குப் பின் சுன்னத் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது. காரணம், இபாதத்தில், வணக்கத்தில் நாம் பார்க்க வேண்டிய அளவுகோல் உத்தரவு இருக்கின்றதா? என்பது தான்.

ஒரு சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன்பு சுன்னத் தொழுகின்றார்கள். இவ்வாறு தொழக் கூடாது என்று நாம் சொல்கின்ற போது, இதற்குத் தடை இருக்கின்றதா? என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது. ஏனெனில் இது வணக்கம். இதில் உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று முதன் முதலில் பெருநாள் தொழுகையைத் தான் தொழுதிருக்கின்றார்கள். மற்ற தொழுகையைத் தொழவில்லை. (பார்க்க: புகாரி 751)

இந்த அளவுகோல் நாமாகக் கண்டுபிடித்தது அல்ல! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில், அதில் இல்லாத ஒன்றை யார் புதிதாகப் புகுத்துகின்றாரோ அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3242

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு அமலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 3243

பின் விளைவுகள் பித்அத்துக்கள் தான்

முஸ்லிம் 3243 ஹதீஸில் அமல் – வணக்கம் என்ற வார்த்தையே இடம்பெறுகின்றது. இபாதத்தில், வணக்க வழிபாடுகளில் இப்படி ஓர் அளவுகோல் இல்லை என்றால் எல்லா பித்அத்களும் உள்ளே நுழைந்து விடும்.

எல்லா பித்அத்களையும் நியாயப்படுத்த, “தடை இருக்கின்றதா?’ என்ற கேள்வி காரணமாக அமைந்து விடும்.

தொழுகைக்குப் பின் கூட்டு துஆ ஓதாதீர்கள் என்று நாம் சொன்னால் அவ்வாறு ஓதுபவர் உடனே, “தடையிருக்கின்றதா?’ என்று கேட்பார். இதுபோல் மிஃராஜ் இரவில் தொழுகை, மிஃராஜில் நோன்பு நோற்றல், பராஅத் இரவுத் தொழுகைகள், பராஅத் நோன்பு, கத்தம் ஃபாத்திஹா என அனைத்து பித்அத்களும் அமர்க்களமாக அணி வகுத்து உள்ளே நுழைந்து விடும். எனவே இபாதத்துகளில் தடை இருக்கின்றதா என்று பார்க்கக் கூடாது. உத்தரவு அல்லது அங்கீகாரம் இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும்.

இபாதத்தில் உத்தரவைப் பார்க்க வேண்டும் என்று சொல்கின்ற போது, “இபாதத்தில் தடையே வராது” என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தடையும் வரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே பொடிக்கல் ஒன்றை எடுத்து அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பின்னர், “உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தமது முகத்துக்கு எதிரே அவர் உமிழவேண்டாம்; தமது வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம்; தம் இடப்புறமோ அல்லது பாதத்திற்கு அடியிலோ அவர் உமிழட்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 411

வாழ்க்கை தொடர்பானவை

உணவு, உடை, கொடுக்கல் வாங்கல் போன்றவை வாழ்க்கை சார்ந்த செயல்களில் அடங்கும்.

ஒரு முஸ்லிமுக்கு, சாப்பிட அனுமதிக்கப்பட்டவை எவை? உடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டவை எவை? பொருளாதாரத்தைத் திரட்டுகின்ற வழிகளில் அனுமதிக்கப்பட்டவை எவை? என்று மார்க்கம் வழிகாட்டியாக வேண்டும்.

அவ்வாறு வழிகாட்டும் போது, தரை வாழ் பிராணிகளில் வெள்ளாடு சாப்பிடலாம், செம்மறியாடு சாப்பிடலாம், மாடு சாப்பிடலாம் என்று உண்ண அனுமதிக்கப்பட்ட பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதுபோன்று கடல்வாழ் பிராணிகளில் மீன் சாப்பிடலாம், நண்டு சாப்பிடலாம், இறால் சாப்பிடலாம் என்று ஒரு பட்டியல் நீளும்.

தாவர இனத்தில் வெள்ளரி சாப்பிடலாம்; வெங்காயம் சாப்பிடலாம் என்று அதில் ஒரு பட்டியல் போட வேண்டி வரும்.

உடையில் காட்டன் அணியலாம்; பாலியஸ்டர் அணியலாம் என்று ஒரு பட்டியல் நீளும்.

வியாபாரத்தில் அரிசி வியாபாரம் செய்யலாம், ஜவுளி வியாபாரம் செய்யலாம் என்று அனுமதிக்கப்பட்ட வியாபாரத்தின் பட்டியல் ஆயிரக்கணக்கில் வரும்.

இப்படி அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் என்று பார்த்தால் உலகில் கோடான கோடி தேறும். அத்தனையையும் ஒரு வேதத்தில் சொல்லி விட முடியாது. அப்படிச் சொன்னால் அது வேதமாக இருக்காது. அதற்கென்று பல நூறு பாகங்கள் தேவைப்படும். எனவே இதுபோன்ற வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் மார்க்கம் தடுக்கப்பட்டதை விளக்கி விடும்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். (அல்குர்ஆன் 2:173)

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (அல்குர்ஆன் 5:3)

உணவில் இதுபோன்ற வசனங்களிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்ட உணவுகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதேஎன்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.

(அல்குர்ஆன் 2:275)

வியாபாரத்தில் வட்டி கூடாது, மோசடி கூடாது என்று தடைகள் கூறப்பட்டிருக்கும்.

எனவே இது போன்ற வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் தடை இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். இதில் உத்தரவு இருக்கின்றதா? என்று தேடக் கூடாது. அதே சமயம் இந்த விஷயங்களில் உத்தரவே வராது என்றும் விளங்கிக் கொள்ளக் கூடாது. உத்தரவும் வரும்.

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்!

(அல்குர்ஆன் 2:168)

இதுபோன்று உத்தரவு வரும் போது, அதற்கு மாற்றமானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் அடங்கியிருக்கும்.

தூய்மையானதை உண்ணுங்கள் என்று சொல்லப்பட்டால், அசுத்தத்தை உண்ணக் கூடாது என்ற தடை அதனுள் அடங்கியிருக்கும்.

பெண் வீட்டு விருந்துக்குத் தடை

இவற்றின் பின்னணியாகக் கொண்டு பெண் வீட்டு விருந்து பற்றிப் பார்ப்போம்.

வலீமா விருந்து விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை நோக்கி, அதாவது மணமகனை நோக்கி, “நீ விருந்து கொடு!” என்று சொல்கிறார்கள். எனவே மாப்பிள்ளை தான் விருந்து கொடுக்க வேண்டும் என்று தெளிவாகி விடுகின்றது.

பெண் வீட்டில் வரதட்சணை வாங்கக் கூடாது என்பதில் தவ்ஹீதுவாதிகள் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

ஆனால் வரதட்சணை வாங்கக் கூடாது என்று நாம் அழுத்தமான, ஆழமான பிரச்சாரத்தை மேற்கொள்கின்ற போது, குராபி ஆலிம்கள் நம்மைப் பார்த்து கேட்ட கேள்வி, “பெண்ணிடத்தில் வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா?” என்று தான்.

பிச்சைக்காரனுக்குப் பிச்சை போடுவதற்குப் பதிலாக அவனிடமிருந்து எடுப்பதற்குத் தடையிருக்கின்றதா? என்று கேட்பது போல் இருக்கின்றது என்று அதற்கு நாம் பதில் சொன்னோம்.

இப்போது இதே பதிலைத் தான், பெண் வீட்டு விருந்தை ஆதரிக்கும் ஜாக் போன்ற இயக்கத்தினரிடமும் கூறுகிறோம்.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!

(அல்குர்ஆன் 4:4)

பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் என்று வருகின்றது. இதிலேயே பெண்ணிடம் வாங்கக் கூடாது என்ற தடையும் அடங்கியிருக்கின்றது. இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு வரதட்சணை வாங்கக் கூடாது என்று வீரியமிகு பிரச்சாரத்தை மேற்கொள்கிறோம்.

அதே போன்று, மாப்பிள்ளையை நோக்கி, விருந்து கொடு என்று சொல்லும் போது, அந்த உத்தரவிலேயே, “திருமண விருந்து பெண் வீட்டில் இல்லை’ என்ற தடையும் இருப்பது நமக்குத் தெளிவாக விளங்கி விடுகின்றது.

உத்தரவின்றி உள்ளே வராதே!

உத்தரவின்றி உள்ளே வரக் கூடாது என்று சில இடங்களில் போட்டிருப்பார்கள். அனுமதி பெற்று உள்ளே வரவும் என்று சில இடங்களில் போட்டிருப்பார்கள். இரண்டிலும் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் கருத்து ஒன்று தான். உள்ள வருவதற்கு அனுமதி பெற்றாக வேண்டும் என்ற கருத்தைத் தான் இரண்டு வாசகங்களும் தருகின்றன.

இது போன்று தான் மார்க்கம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கின்றது என்றால் அதற்கு நேர் மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் உள்ளடங்கி விடுகின்றது.

அளக்கும் போது நிறைவாக அளங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! 

(அல்குர்ஆன் 17:35)

இப்படி ஓர் உத்தரவை அல்லாஹ் பிறப்பிக்கின்றான் என்றால் அதற்கு நேர்மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடை அதில் அடங்கியுள்ளது. இந்தத் தடையை இன்னொரு இடத்தில் வெளிப்படுத்தியும் கூறுகின்றான்.

அளவையிலும் நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்!

(அல்குர்ஆன்11:84)

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்!

(அல்குர்ஆன் 2:168)

அனுமதிக்கப்பட்டதை உண்ணுங்கள் என்ற உத்தரவு இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. பின்வரும் வசனத்தில் ஹராமானதை உண்ணாதீர்கள் என்று வெளிப்படுத்திக் கூறப்படுகின்றது.

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்!

(அல்குர்ஆன் 2:188)

மார்க்கம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கின்ற போது, அதற்கு நேர்மாறானதைச் செய்யக் கூடாது என்ற தடையும் அதில் அடங்கியிருக்கின்றது என்பதற்கு இந்த எடுத்துக்காட்டுகள்.

எனவே வாழ்க்கை சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் ஓர் உத்தரவு வந்து விட்டால் அதில், தடையிருக்கிறதா? என்று கேட்கக் கூடாது. அது அர்த்தமற்ற கேள்வியாகி விடும்; கேலிக் கூத்தாகி விடும்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 7:31

இப்படிக் கூறும் போது, நிர்வாணமாகப் பள்ளிக்கு வருவதற்குத் தடை இருக்கிறதா? என்று சிந்திப்பவர் எவரும் கேட்க மாட்டார்கள்.

எனவே இந்த விளக்கத்தின்படி, பெண் வீட்டு விருந்து என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு நேர்மாற்றமான நடைமுறை; அது ஒரு மறைமுக வரதட்சணை. இந்த அடிப்படையில் இது ஒழித்துக்கட்டப்பட வேண்டிய ஒரு சமூகத் தீமை என்பதில் சந்தேகமில்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

இரண்டாம் ஜமாஅத் ஓரு விளக்கம்

ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்தவரான, இலங்கையைச் சேர்ந்த நவ்பர் என்பார், “ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது” என்று வாதிட்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது குறித்து மவ்வலி கே.எம். அப்துந்நாஸிர் ஆய்வு செய்து வைத்திருந்தார். அதை தேவையான மாற்றங்களுடன் இங்கே வெளியிடுகிறோம்.

மார்க்கத்தில் எந்த ஒரு விஷயம் குறித்து ஆய்வு செய்வதாக இருந்தாலும் குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதில் இருந்து சட்டங்களை எடுக்க வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கேற்ப சட்டங்களை வளைக்கக் கூடாது. இலங்கை நவ்பர் என்பவரிடம் இந்தத் தன்மையைக் காண முடியவில்லை.

இவர் எடுத்து வைக்கும் வாதத்தின் துவக்கமே மிகவும் ஆபத்தான வாதமாக அமைந்துள்ளது.

உதாரணமாக, இஷா தொழுகையை ஒருவர் ஐம்பத்தியேழாவது ஜமாஅத்தாகத் தொழ முடியுமா? எனக் கேட்டால் இரண்டாவது ஜமாஅத்தை அனுமதிப்பவர் ஆம் எனக் கண்டிப்பாகக் கூறியே ஆக வேண்டும். இல்லை எனக் கூறினால் ஐம்பத்தியேழாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு என்ன ஆதாரமோ அவைகள் தான் ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும்; ஐம்பத்தியாறாவது ஜமாஅத் கூடாது என்பதற்கு எவைகள் ஆதாரங்களோ அவைகள் தான் ஐம்பத்தி ஐந்தாவது ஜமாஅத் கூடாது என்பதற்கான ஆதாரங்களாகும். இவ்வாறே குறைந்து கொண்டே வந்து ஒரு ஜமாஅத்தா அல்லது அதற்கு மேற்பட்டதா என்ற சரியான கேள்வி பிறக்கும்.

எனவே இரண்டாம் ஜமாஅத்தை அனுமதிப்பவர் உண்மையில் மறைமுகமாக எத்தனை ஜமாஅத் வேண்டுமென்றாலும் தொழுது கொள்ளலாம் என்ற, இஸ்லாம் வலியுறுத்தும் ஒரே ஜமாஅத் தொழுகை எனும் கோட்பாட்டைத் தகர்த்தெறியும் அனுமதியையே வழங்குகிறார் என்பது தான் யதார்த்தமாகும்.

ஹதீஸ்களின் அடிப்படையில் வாதத்தை எடுத்து வைப்பதற்கு முன், இரண்டாம் ஜமாஅத் என்பது எவ்வளவு பாரதூரமானது என்ற கருத்தை மேற்கண்டவாறு விதைக்கிறார்.

ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தலாமா என்ற கேள்வியை முதலில் எழுப்பிவிட்டால் ஆய்வு செய்யும் திறன் இல்லாத பொது மக்கள் அது தவறு என்று நினைத்து விடுவார்கள்.

அதாவது ஹதீஸின் துணையுடன் கருத்தை நிறுவுவதை விட மனோ இச்சையின் அடிப்படையில் கருத்தை நிறுவ அடித்தளம் போடுகிறார்.

ஒரு ஜமாஅத் முடிந்த பின் இன்னொரு ஜமாஅத் நடத்த அனுமதி இருந்தால் ஐம்பத்தி ஏழு என்ன? ஐயாயிரம் ஜமாஅத் நடத்துவதும் சரியானது என்று தான் அறிவுடையோர் முடிவு செய்ய வேண்டும்.

“ஐம்பத்தி ஏழு தடவை ஜமாஅத் நடத்தும் நிலைக்கு ஹதீஸில் அனுமதி இருந்தாலும் என் மன இச்சை அதை ஏற்றுக் கொள்ளாது” என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

ஒரு ஜமாஅத் தொழுகையில் கலந்து கொண்டவர், மற்றொரு ஜமாஅத் தொழுகை நடக்கும் பள்ளிக்குச் சென்றால் அதிலும் பங்கெடுக்கலாம் என்பதற்கு ஹதீஸ்களில் அனுமதி உள்ளது. இந்த அனுமதியிலும் மேற்கண்ட கேள்வியைக் கேட்க முடியும். ஐம்பத்தி ஏழாவது பள்ளிக்குச் சென்று தொழலாமா என்று கேட்டு ஹதீஸில் உள்ளதை மறுப்பார்களா?

இந்த ஐம்பத்தி ஏழு என்ற முட்டாள்தனமான வாதத்தை நூற்றுக்கணக்கான சட்டங்களில் கேட்க முடியும்.

ஹதீஸில் அந்த அனுமதி பெறப்பட்டால் அதில் எந்தப் பாரதூரமும் இல்லை. மனோ இச்சையை மார்க்கமாக்குவதற்கே இவர்கள் புறப்பட்டுள்ளனர் என்பது இந்த வாதத்தில் இருந்து தெரிகிறது.

இனி இது குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)

நூல்: திர்மிதி 204, அபூதாவூத் 487

மேற்கண்ட ஹதீஸில் ஒரு பள்ளியில் முதலில் ஜமாஅத்தாகத் தொழுகை நடத்தி முடிந்த பிறகு, மீண்டும் அதே பள்ளியில் ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு மிகத் தெளிவான ஆதாரமாகும்.

இந்தத் தெளிவான ஆதாரத்துக்குக் கட்டுப்படுவதற்குப் பதிலாக பயங்கரமான தத்துவங்களைக் கூறி ஹதீஸை அர்த்தமற்றதாக்குகிறார்.

தத்துவம்: 1

  1. நாம் முன்னர் குறிப்பிட்ட காரணங்களுக்காக (தூக்கம், மறதி, வாடை வீசும் உணவு) ஜமாஅத் தவறுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தும் இரண்டாம் ஜமாஅத்தோ அல்லது மூன்றாம் ஜமாஅத்தோ நபியவர்கள் காலத்தில் நடந்ததாக எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை.

என்னே தத்துவம் பாருங்கள்! ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதைப் பார்த்துக் கொண்டே எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை என்று கூறுகிறார். அப்படியானால் இது ஹதீஸ் இல்லையா? அடிக்கடி இரண்டாம் ஜமாஅத்தோ மூன்றாம் ஜமாஅத்தோ நடந்ததாக வந்தால் தான் ஏற்றுக் கொள்வாராம். இவருக்கு ஹதீஸ் கலையும் தெரியவில்லை. ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவும் இல்லை.

அடிக்கடி நிகழும் வணக்க முறைகள் பற்றி ஒரே ஒரு ஹதீஸ் மட்டுமே, ஒரே ஒருவரால் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதைப் பரவலாகக் காண்கிறோம். அடிக்கடி நடந்ததாக ஹதீஸில் இல்லை என்று கூறி அவற்றை எல்லாம் மறுப்பாரா?

தத்துவம்: 2

  1. குறித்த இந்த ஹதீஸிலும் தாமதமாக வந்தவர் இன்று நடைமுறை உள்ளது போல் மற்றவர்களுக்காகக் காத்திருந்து இரண்டாம் ஜமாஅத் ஆரம்பிக்காமல் தனியாகவே தொழ ஆரம்பிக்கிறார்.

அதைத் தூக்கி அடிக்கும் தத்துவமாக இது உள்ளது. அவர் தனியாகத் தொழ ஆரம்பிக்கிறார் என்ற நபித்தோழரின் செயல் மட்டும் தான் இவரது கண்களுக்குத் தெரிகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து, ஜமாஅத்தாகத் தொழச் சொன்னது இவரது கண்களுக்குத் தெரியவில்லை.

இவரும் இவரைச் சேர்ந்தவர்களும் ஸலபி வகையறாக்களை விட மார்க்கத்துக்கு ஆபத்தானவர்கள் என்றே நாம் கருதுகிறோம்.

தத்துவம்: 3

  1. நபியவர்களின் அனுமதி, ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் அதைத் தவற விட்ட ஒருவருடன் சேர்ந்து தொழுவதற்கான அனுமதியே தவிர ஜமாஅத்தைத் தவற விட்ட இருவர் அல்லது பலர் சேர்ந்து நடத்தும் ஜமாஅத்தை அல்ல.

குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து கொள்ளும் வழிமுறை கூட நவ்பர் என்பாருக்குத் தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது.

“ஜமாஅத் தொழுகை முடிந்த பின் ஒருவர் தாமதமாக வந்தால் ஏற்கனவே தொழுதவர் மட்டும் அவருடன் சேர்ந்து தொழலாம். ஏற்கனவே தொழாதவர் தொழக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் தான் இவர் கூறுகின்ற கருத்து கிடைக்கும்.

அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. பள்ளிவாசலில் தொழுகை முடிந்த பின், தொழுதவர்கள் மட்டுமே இருந்தது தற்செயலானது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகம் தான். “யார் இவருக்கு தர்மம் செய்வது?’ என்பது தான் அந்த வாசகம்.

அதாவது, தனியாக ஒருவர் தொழுதால் அவருக்கு ஒரு நன்மை தான் கிடைக்கும். ஜமாஅத்தாகத் தொழுதால் அவருக்கு 27 நன்மைகள் கிடைக்கும். தாமதமாக வந்த இவர் அந்த நன்மையை இழந்து விட்டார். அவருக்கும் அந்த நன்மை கிடைக்க வேண்டும் என்ற கவலை தான் இதில் தென்படுகிறது.

தாமதமாக வந்த ஒரு முஸ்லிமுக்கு இழப்பு ஏற்படக் கூடாது என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அக்கறை இவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை.

இந்த இடத்தில் இவர்களின் பாஷையில் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

தாமதமாக ஒருவர் வரும் போது, ஏற்கனவே தொழுத ஒருவர் அவருடன் சேர்ந்து தொழ அனுமதி உண்டு என்பதை இவர் ஒப்புக் கொள்கிறார். ஏற்கனவே ஜமாஅத் தொழுதவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் போது ஒருவர் பின் ஒருவராக 57 பேர் வருகிறார்கள். இப்போது 57 ஜமாஅத் பிரச்சனை வருமே இது பரவாயில்லையா? எதைப் பாரதூரமான காரணம் என்று சித்தரித்தார்களோ அதையே அவர்களும் சொல்லும் நிலைக்கு அவர்களை அல்லாஹ் தள்ளிவிட்டான்.

தத்துவம்: 4

  1. குறித்த ஹதீஸில் முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்டு நன்மை பெற்றவர் அதில் கலந்து கொள்ளாதவருக்குத் தர்மம் செய்கிறார் என விளங்க முடிகிறது. அனால் இண்றைய முதல் ஜமாஅத்திற்குப் பின் நடத்தப்படும் ஏனைய ஜமாஅத்களில் யார், யாருக்கு தர்மம் செய்கிறார் என்பதைக் கூற முடியுமா? முடியவே முடியாது.

மேற்கண்ட ஹதீஸை மறுப்பதற்குக் கண்டு பிடித்த நான்காவது தத்துவம் இது.

தாமதமாக வந்தவர் கூடுதல் நன்மை பெற வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் நோக்கமா? அல்லது ஏற்கனவே தொழுதவரை தர்மம் செய்ய வைப்பது நோக்கமா என்ற அடிப்படையைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒருவர் ஏற்கனவே தொழுதவருடன் சேர்ந்து தொழுதாலும், ஏற்கனவே தொழாதவருடன் சேர்ந்து தொழுதாலும் அவருக்கு 27 மடங்கு நன்மை கிடைத்து விடும். இது தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.

இன்னும் சொல்வதாக இருந்தால், ஏற்கனவே தொழுதவர் மீண்டும் தொழும் எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஏற்கனவே தொழாதவருக்கு தொழும் அவசியம் இருக்கிறது. ஏற்கனவே தொழுதவராக இருந்தாலும் கூட மற்றொரு சகோதரன் 27 மடங்கு நன்மையை அடைய உதவ வேண்டும் என்றால் எப்படியாவது ஜமாஅத்தாகத் தொழ முயல வேண்டும் என்று தான் அறிவுடையோர் புரிந்து கொள்வார்கள்.

அதாவது, ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு வழியில்லாமல் ஒருவர் மட்டுமே இருக்கும் நிலையில், ஏற்கனவே ஜமாஅத்தில் தொழுத ஒருவர் இவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அப்படியானால், முதல் ஜமாஅத்தில் சேராத இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இருக்கும் போது, கண்டிப்பாக அவர்களுக்குள் ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் வலியுறுத்துகின்றது.

தாமதமாக வந்த நபித்தோழரோடு சேர்ந்து தொழுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தான் தொழுத ஒரு ஸஹாபியை மீண்டும் அவரோடு சேர்ந்து தொழுமாறு நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு சேர்ந்து தொழுகின்ற காரணத்தினால் தனியாகத் தொழுதால் கிடைக்கும் நன்மையை விட அதிகமான நன்மையைத் தாமதமாக வந்தவர் பெறுகின்றார். இதைத் தான் நபியவர்கள் தர்மம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தாமதமாகப் பலர் வரும் போது அவர்களே சேர்ந்து தொழுவதன் மூலம் அந்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள். யாரும், யாருக்கும் தர்மம் செய்ய வேண்டியதில்லை.

தர்மம் என்றாலே அதன் பொருள் என்ன? தேவைப்படும் போது கொடுப்பது தான். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாமதமாக வந்தால் இப்போது தர்மம் செய்யும் அவசியம் இல்லாமலே அவர்களுக்கு நன்மை கிடைத்து விடுகிறது.

தொழுத ஒருவரே மீண்டும் தொழ வைத்தாலும் அது மற்றொரு ஜமாஅத் தொழுகை தான். எனவே ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மேற்கண்ட ஹதீஸே மிகச் சிறந்த சான்றாக இருக்கும் போது ஜமாஅத்தாகத் தொழுத பள்ளியில் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறுவது தவறானதாகும்.

தத்துவம்: 5

  1. எனவே இந்த ஹதீஸ் ஒருவருக்கு (இஸ்லாம் அனுமதித்த காரணங்களுக்காக) ஜமாஅத் தவறும் போது நாம் முன்னர் குறிப்பிட்ட, யார் அழ்கிய முறையில் உளூச் செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்துவிட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழாதவர்களுக்கும் குறைத்து விடாமல் வழங்குகிறான்’ என்ற ஹதீஸின் படி தனியாகத் தொழுதாலே அதற்கான கூலியை அடைந்து கொள்வார். அல்லது ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் கலந்து கொண்ட ஒருவர் விரும்பினால் அவருடன் சேர்ந்து தொழுது தர்மம் செய்யலாம் என்பதற்கான ஆதாரமே தவிர முதல் ஜமாஅத்தைத் தவற விடுபவர்கள் சேர்ந்து இரண்டாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் மூன்றாம் ஜமாஅத்தும் அதைத் தவற விடுபவர்கள் நாலாவது ஜமாஅத்தும் அதைத் தவற.. இதற்கெல்லாம் ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது!!

மறுபடியும் 57 ஜமாஅத்துக்குத் தாவுகிறார். இவர் கூறுகிற வாதத்தின் படியும் 57 ஜமாஅத் வருமே அதற்கு இது ஆதாரமாகுமா?

ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் எண்ணத்தில் ஒருவர் வந்தால் ஜமாஅத் முடிந்து விட்டாலும் ஜமாஅத் தொழுகையின் நன்மை கிடைத்து விடும் என்ற ஹதீஸை இங்கே எடுத்துக் காட்டுகிறார்.

முதலில் இவர் சுட்டிக் காட்டும் ஹதீஸ் பலவீனமானதாகும். அது சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குழப்பம் இல்லை. தாமதமாக வருபவருடன் சேர்ந்து தொழ ஒருவர் கிடைக்கவில்லையானால் அப்போது அவருக்கு ஜமாஅத்தின் நன்மை கிடைக்கும். யாராவது கிடைத்து விட்டால் அவருடன் சேர்ந்து தொழுதாலே அந்த நன்மையை அடைய முடியும் என்பது தான் இரண்டுக்கும் பொதுவான கருத்தாகும்.

தத்துவம்: 6

  1. எனவே குறித்த விடயத்தில் சகோதரர் எஸ். எம். அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டது போல் நபி (ஸல்) அவர்களது அனுமதி கிடையாது என்பதுடன், நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த, ஆர்வமூட்டிய காரியத்தைத் தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதல்ல இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டியது. மாறாக நபியவர்களின் வரையறைகளுடனான சுருங்கிய அனுமதியை வரையறைகள் அற்ற விரிந்த அனுமதியாக்குவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதையே நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.

இதுவும் அபத்தமான வாதமே! வரையறைகளுடன் சுருங்கிய அனுமதியாக இது இல்லை. வரையறை இல்லாத அனுமதிக்குள் இவர் தான் வரையரையத் தினித்திருக்கிறார். அது தான் இவரது தடுமாற்றத்துக்குக் காரணம். இவர் வரையறை செய்தது தவறானது என்பதை முன்னர் விளக்கி விட்டோம். தாமதமாக வந்த ஒரு முஸ்லிம், ஜமாஅத்தின் நன்மையை இழக்கக் கூடாது என்ற பரந்த நோக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கும் போது குறுகிய நோக்கமாக இவர் சித்தரிக்கிறார்.

தத்துவம்: 7

  1. இதற்கு ஒரு நல்ல உதாரணமாக, மறைவான ஜனாஸாத் தொழுகையை குறிப்பிடலாம். எப்படி நபி (ஸல்) அவர்களின் பொது வழக்கத்திற்கு மாறான நஜ்ஜாஷி அவர்களுக்கு தொழுவித்த சம்பவத்தை மறைவான ஜனாஸாத் தொழுகை கூடும் என விளங்கிக் கொள்ளாமல் அது அவருக்கு மட்டும் உரிய தனி நபர் சம்பவம் என்றோ அல்லது குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிற்கிறதோ அவருக்கு மட்டும் என்றோ தழிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் புரிந்து கொள்வது போல் குறித்த ஹதீஸையும் குறித்த பிரத்யேக நிலை யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு நபியவர்கள் அனுமதித்த ஏற்கனவே முதல் ஜமாஅத்தில் தொழுத ஒருவர் சேர்ந்து தொழுவது என்ற முறையில் மாத்திரம் என சரியாக விளங்கிக் கொண்டால் இரண்டாம் ஜமாத்திற்கு அனுமதி என்ற கருத்துக்கே இடமில்லை.

நஜ்ஜாஷி மன்னர் விஷயத்தைப் பிரத்தியேகமானது என்று நாங்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நடக்கவில்லை என்பது நமக்குத் தெரிய வந்தால் நாமும் ஜனாஸா முன்னால் இல்லாமல் தொழலாம் என்று பொதுவாகத் தான் புரிந்து கொள்கிறோம். ஏனெனில் “ஒரு அடியார் இறந்து விட்டார். அவருக்கு தொழுகை நடத்தப்படவில்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணத்தைச் சொல்லி விட்டதால் அது பொதுவானது தான்.

அது போல், ஏற்கனவே தொழுதவர் மட்டும் தான் இரண்டாவது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும் என்ற கருத்தை நபிகள் நாயகம் சொன்னதாக எடுத்துக் காட்டினால் தான் இவர் கூறுவது போல் புரிந்து கொள்ள முடியும்.

தத்துவம்: 8

  1. குறித்த வரையறைகளை கவனத்திற் கொள்ளத் தேவையில்லை எனக் கருதுவோர் இரண்டாம் ஜும்மாவுக்கோ அல்லது இரண்டாம் பெருநாள் தொழுகைக்கோ இந்த ஹதீஸை வைத்து அனுமதியளிக்க முன்வருவார்களா என சிந்தித்தாலே இரண்டாம் ஜமாத்திற்கு அணுமதி என்ற கருத்து எவ்வளவு தவறானது, பார தூரமானது என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாகும்.

ஹதீஸில் கூறப்படுவதை இவர் ஏற்பவராக இல்லை. இவர் மனோ இச்சைப்படி தவறாக விளங்கிக் கொண்டதை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் வாதிடுகிறார்.

நாங்கள் எங்கள் விருப்பத்தின் படி ஹதீஸை வளைக்க மாட்டோம். ஜும்ஆவுக்கும் பெருநாள் தொழுகைக்கும் கூட இந்த அனுமதி உண்டு என்று தான் கூறுவோம்; கூறுகிறோம்.

ஜமாஅத் தொழுகை கிடைக்காதவர் எப்படியும் ஜமாஅத் தொழுகையின் நன்மையை அடைவதற்காக ஏற்கனவே தொழுதவரைச் சேர்த்தாவது அந்த நன்மை கிடைக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயற்சி செய்தார்களோ அது போன்ற அக்கறையுடனும், அவர்களின் அந்த உணர்வுடனும் தான் பெருநாள் தொழுகையயும் நாம் அணுகுவோம். பெருநாள் தொழுகை கிடைக்காதவர்கள் அந்த நன்மையை இழந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களும் பெருநாள் தொழுகையை இதே அடிப்படையில் தொழலாம். ஜும்ஆவும் அப்படியே!

இன்னும் சொல்வதாக இருந்தால் தமிழகத்தின் சில ஊர்களில் எமது மர்கஸ்களில் இடமின்மை காரணமாக பாதிப் பேர் தான் தொழ முடியும். மீதிப் பேர் வெளியே தான் நிற்க வேண்டும். தொழுது முடித்தவுடன் அதே பள்ளியில் இடம் கிடைக்காமல் நின்றவர்கள் மற்றொரு ஜும்ஆ நடத்துகிறோம். இடம் கிடைக்காவிட்டால் உங்களுக்கு ஜும்ஆ இல்லை என்று ஃபத்வா கொடுக்கும் உங்களுக்குத் தான் இந்தத் தத்துவம் பொருந்தும். எங்களுக்கு உளறலாகத் தான் தென்படும்.

————————————————————————————————————————————————

பெண்கள் தங்கம் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

பெண்கள் தங்க நகை அணியலாமா? என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன. இந்தக் கருத்து அவ்வப்போது வரலாற்றில் எடுத்து வைக்கப்படுவதும், இது அபத்தமான வாதம் என்று நிரூபிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப சாதனங்களின் வசதியால் இலங்கையில் சொல்லப்படும் இக்கருத்து தமிழ் கூறும் அனைவரையும் எளிதில் சென்றடைந்து விடுகிறது. எனவே அதைத் தெளிவுபடுத்தும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது. பெண்கள் தங்க நகை அணிவது குறித்த விஷயத்தில் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா? என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறோம்.

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் கூறும் கருத்தும் அதை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் வாதங்களும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை முன்னரே சிலரால் சொல்லப்பட்டவை தான். அதைத் தான் இலங்கையைச் சேர்ந்த சிலரும் எடுத்து வைக்கின்றனர்.

ஆனால் அவர்கள் இதை நிரூபிக்க எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கும் வாதங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே உண்மையாகும். மேலும் பெண்கள் வளைந்த தங்க நகை அணியக் கூடாது, வளையாத தங்க நகை அணியலாம் என்று வாதிடுவதும் அறியாமையின் உச்ச கட்டமாகும்.

இந்தக் கருத்துடையவர்கள் முஸ்னத் அஹ்மதிலும், நஸயீயிலும் இடம் பெற்ற கீழ்க்காணும் இரண்டு ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்களுக்கு இவர்கள் செய்த தமிழாக்கம் இது தான்.

தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அல்லாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்ணின் கையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறையிட்டாள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி, “இதனை ஹஸனின் தந்தை (அலீ) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள்எனக் கூறினார். பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். “பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?” எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது, “நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

ஆதாரம்: ஸுனனுன் நஸாயீ 5140

ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாதிடுபவர், தான் கூறுகின்ற அக்கருத்து அந்த ஹதீஸில் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நடைமுறையில் உள்ளதற்கு மாற்றமாக ஒன்றைச் சொல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தங்க நகை அணிவது கூடாது என்று வாதிடும் இலங்கை அறிஞர்களிடம் இந்தப் பொறுப்புணர்வை நாம் காண முடியவில்லை. மேலும் தங்களின் கருத்தை நிலை நாட்டுவதற்கு ஏற்ற வகையில் தமிழாக்கத்திலும் கை வரிசையைக் காட்டியுள்ளனர்.

அடிக்கோடிட்டு நாம் சுட்டிக்காட்டிய இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியதால் தான் இவ்வாறு இவர்களால் வாதிட முடிகின்றது.

இந்த ஹதீஸ், தங்க நகை அணிவது பற்றிய ஹதீஸ் அல்ல. ஹுபைராவின் மகளுடைய கையில் மோதிரங்கள் கனமான மோதிரங்கள் இருந்தன என்று தான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும், அணிந்திருப்பதையும் குறிக்கும். “கையில் இருந்தன’ என்று மொழியாக்கம் செய்யாமல் “அணிந்திருந்தனர்’ என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர். இந்தச் சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தம் செய்ய இடம் இருந்தாலும் இந்த இடத்தில், “கையில் வைத்திருந்தார்கள்’ என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டி விட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால் தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டி விடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்தும்.

அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் ஹுபைராவின் மகள் சொல்கிறார். இதை கேட்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழட்டி விடுகிறார்கள். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். கழுத்தில் தங்க மாலையை அணிந்திருக்கும் போது வரவில்லை. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது என்ன?

“பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?” என்று தான் கூறினார்கள். “ஃபாத்திமாவின் கரத்தில்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது. வைத்திருக்கத் தான் முடியும். இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத் தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக்கூடாது என்ற கருத்தைத் தரவில்லை.

அடுத்து ஃபாத்திமா (ரலி) அம்மாலையைக் கழற்றி விற்று விடச் சொன்னார்கள் என்பதும் இவர்களின் கைச்சரக்காகும்.

ஏற்கனவே அவர்கள் கழற்றி விட்டார்கள் எனும் போது மீண்டும் ஏன் கழற்ற வேண்டும் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லை. மூலத்தில் இப்படிக் கூறப்படவே இல்லை என்பதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. முதலில் கழற்றியதாகத் தான் மூலத்தில் உள்ளது. இரண்டாம் தடவை கழற்றியதாக இல்லை. ஆனாலும் பெண்கள் தஙக நகை அணியக் கூடாது என்பதை எப்படியாவது நிறுவ வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை நுழைத்து தங்க நகை அணிவது தான் தவறு என்று காட்ட முயற்சித்துள்ளனர்.

தங்க நகையை அணிவது தவறு என்றால் ஃபாத்திமா (ரலி) அதை விற்கத் தேவை இல்லை. அனியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.

இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றிப் பேசவே இல்லை.

எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்தச் செய்தி அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.

தங்கத்தை வைத்திருக்கவே கூடாதா என்றால் இந்த ஹதீஸின் கருத்து இது தான். ஆனால் ஆரம்ப காலத்தில் இவ்வாறு சட்டம் இருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது.

மாற்றப்பட்ட சட்டம்

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 9:34

இந்த வசனம் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகின்றது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாரத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகின்றது.

ஆனால் இவ்வசனம் கூறும் இந்தச் சட்டம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன்னால் இருந்தது. ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பொருளுக்குரிய ஸகாத்தைக் கொடுத்துவிட்டால் அதைச் சேமிப்பது தவறில்லை என்று அனுமதி தரப்பட்டது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

காலித் பின் அஸ்லம் கூறுகிறார்:

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் சுத்தீகரிக்கக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்என்றார்கள்.

நூல்: புகாரி 1404

நபித்தோழர்களின் கருத்து மார்க்க ஆதாரமாகாது என்ற அடிப்படைக்கு இது முரணானது என்று நினைக்கக் கூடாது. ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள் தான் கூற முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! (9:34) இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது.

உங்கள் பிரச்சனையை நான் அகற்றுகிறேன்என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இறைத் தூதர் அவர்களே! இவ்வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டதுஎன்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தையே அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். (எனவே ஸகாத் கொடுத்துவிட்டால் தங்கம் வெள்ளியைச் சேர்ப்பது குற்றமில்லை)என்று கூறினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், “இறைவன் மிகப் பெரியவன்என்று கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் 1417

எனவே மேற்கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

நிர்வாகவியல்                  தொடர்: 7

கட்டளையிடும் திறன்

ஒரு நிர்வாகத்தில் ஒரு தலைவரை விட அல்லது வேறொரு முன்னிலை நிர்வாகியை விட செல்வத்தில், பலத்தில், அறிவில், அனுபவத்தில் சிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்களது சிந்தனை ஓட்டமும் நடவடிக்கைகளும் அவர்களது சிறப்புத் தகுதிகளை, சிறப்பு அம்சங்களைப் பிரதிபலிக்கும்.

இது நிர்வாகத்தில் ஒரு சாராரை உயர்வு மனப்பான்மையுடனும் இத்தகுதிகள் இல்லாதவர்களை தாழ்வு மனப்பான்மையுடனும் செயல்பட வைக்கும். இது நிர்வாகத்தின் அங்கத்தினர்களிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் ஒரு பிளவை ஏற்படுத்தி, நாளடைவில் பிரிவினை எற்படவும் வழிவகுக்கும்.

ஆகையால் ஒரு தலைவர், தான் தலைமை வகிக்கும் நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் தனது அதிகார வட்டத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதே வேளை அது சர்வாதிகாரமாகவும் இருந்து விடக் கூடாது. கட்டுப்பாடாகவும் வைத்திருக்க வேண்டும். மேலும் அதட்டுவது, நிர்ப்பந்தம் செய்வது போன்றவைகளைச் செய்யவும் கூடாது அப்படியென்றால் என்ன தான் செய்வது? என்ற கேள்வி எழும்.

இதோ, அல்லாஹ் கூறுகின்றான்:

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.

அல்குர்ஆன் 3:159

அகில மாந்தர்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்து மனித வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்கும் தேவையான எல்லா வழிமுறைகளையும் விளக்கிய அவனது தூதர் கடுகடுப்பாக நடந்தாலும் அனைவரும் அவர்களை விட்டு ஓடிப் போவார்கள் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். கடுஞ்சொல், கடுமையான குணம் ஆகியவற்றால் மக்களைக் கட்டுப்படுத்தி வைப்பது எதிர்மறையான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

மாறாக, கனிவான சொற்களால் வேலைகளை ஏவுவதன் மூலம் சிறப்பாக வேலை செய்பவர்களைப் பாராட்டுவது, அதற்காக அவர் கேட்கும்படி அவருக்காகப் பிரார்த்தனை செய்வது, எந்த ஒரு வேலையையும் சொன்னபடி செய்யவில்லை என்றால் பிறர் முன்னிலையில் கண்டிப்பதைத் தவிர்த்து தனியாக அழைத்துப் பேசுவது போன்ற அணுகுமுறை பொதுவாகக் கடைபிடிக்கப்பட்டால், சரியான கட்டுப்பாட்டுடன் பணிகள் நடைபெறும்.

ஆனால் சில நேரங்களில் மென்மையான அணுகுமுறை கை கொடுக்கவில்லை என்றால் கண்டிப்புடன் நடந்து தான் ஆக வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை ஜகாத் நிதிகளை வசூலிக்க ஒரு தோழரை அனுப்பினார்கள். வசூலித்துக் கொண்டு வந்த அந்தத் தோழர் ஒரு சிறு தெகையைத் தமக்கு என்றும், இன்னொன்றை ஜகாத் என்றும் கொண்டு வந்தார்.

இதைப் பாரதூரமான காரியமாக எடுத்துக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் மக்களையெல்லாம் திரட்டி மிம்பரில் ஏறி நின்று கோபத்துடன் உயர்ந்த தொனியில் ஓர் உரையை நிகழ்த்தினார்கள். ஏனெனில் லஞ்சத்தின் வாசல் திறந்து விடுவதற்கு இது ஒரு வழியாக அமைந்து விடக்கூடாது என்ற தொலை நோக்குப் பார்வையே காரணம்.

ஒரு தலைவர், நிர்வாகியின் தோற்றம், நடைமுறை, பேச்சு முறை போன்றவையும் அவர் பிறப்பிக்கும் கட்டளைகளை ஏற்கவோ, நிராகரிக்கவோ தூண்டும் அம்சங்களில் உள்ளவை. ஆக ஒரு நிர்வாகி அல்லது தலைவரின் கட்டளையிடும் திறனை சரியாகப் பயன்படுத்தினால் சூழ்நிலைகளுக்குத் தகுந்த அணுகுமுறைகளை கையாண்டால் நிர்வாகம் செவ்வனே நடைபெறும்.

பணிகளைப் பகிர்ந்தளிப்பது

சில தலைவர்களைப் பார்த்தால் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள், எதற்கும் நேரமில்லை என்று கூறுவார்கள். ஏன் என்று விசாரித்தால் “நான் ஒருவனாக எதை எதைத் தான் செய்வது?” என்று வேலைகள் எல்லாம் தன் வசம் குவிந்து கிடப்பதை பெரிய களைப்பு, சிறிய அலுப்பு, கொஞ்சம் பொறுமை தோய்ந்த குரலில் கூறுவார்கள். இவருக்குப் பணிகளைப் பகிர்வது பற்றித் தெரியவில்லை!

மேலும் சில தலைவர்கள் இருக்கிறார்கள். தன்னிடம் உள்ள எல்லாப் பணிகளையும் பட்டியலிட்டுத் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் சாமர்த்தியமாக இறக்கி வைத்து விட்டு, தலைவர், செயலாளர், சேர்மன் என்ற பட்டத்தை மட்டும் தம் வசம் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் தம் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கின்றார்கள்.

மனிதர்களில் ஒரு பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்வது என்பது நூறு ஒட்டகங்கள் நிறைந்த ஒரு கூட்டத்திலிருந்து சவாரிக்காக ஒரு ஒட்டகத்தைத் தேர்வு செய்வது போன்றதாகும். நீங்கள் மிகச் சரியானதை தேர்வு செய்து கொள்ள மாட்டீர்கள். (நூற்கள்: புகாரி 6498, முஸ்லிம்)

நிர்வாக அங்கத்தினரின் திறமைகளைச் சரியாக மதிப்பிட்டு, தகுந்தவர்களிடம் உரிய பொறுப்பைக் கொடுப்பதோடு அவர்களின் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட காரியங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் அவாகளிடமே வழங்கி விட வேண்டும். அவர்களது பொறுப்புகளின் முடிவு பற்றிப் பதில் கூறும் பொறுப்பும் அவர்களுக்கே!

இப்போது நிர்வாகி என்ன செய்வார்? இப்படிப் பலருக்கும் வழங்கப்பட்ட பொறுப்புகளை எந்த அளவுக்குத் திறம்படச் செய்திருக்கின்றார் எனக் கவனிப்பார். அப்பணிகளைச் செயல்படுத்தும் போது ஏதாவது தடைகள், இடைஞ்சல்கள், பிரச்சனைகள் இருந்தால் அவற்றைத் தீர்த்து வைக்க முயற்சி செய்வார்.

ஒரு பொறுப்புக்கு ஒருவரை நியமிக்கும் போது எந்த அடிப்படையில் தேர்வு செய்வது என்பதைத் திருக்குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது.

நபி மூஸா (அலை) அவர்கள் மதியன் நகருக்கு வந்த போது அங்கிருந்த ஒரு நீர் நிலைக்கு அருகில் இரு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். மற்றவர்களெல்லாம் தங்கள் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தார்கள். நபி மூஸா (அலை) அவர்கள் அந்தப் பெண்களுக்கு உதவிய போது, அவரை வேலைக்கு வைத்துக் கொள்ளுமாறு இரு பெண்களில் ஒருவர் தமது தந்தையிடம் கூறினார். அதற்கு அப்பெண்மணி கூறிய காரணம்…

என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.

அல் குர்அன் 28:26

ஆக ஒருவருடைய பலம், திறமைகள் மதிப்பிடப்பட வேண்டும். அதை வெளிப்படையான நடவடிக்கைகளில் கவனிக்கலாம். ஆனால் மேலை நாட்டு நிர்வாகவியல் பாடங்களில் யாரையும் நம்பக் கூடாது என்று தான் கற்றுத் தருகின்றார்கள். அதனால் ஒரு முறையை (ல்ர்ப்ண்ஸ்ரீஹ்) அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பார்கள். ஆனால் இஸ்லாம் மறுமை நம்பிக்கையின் பயனால் ஒருவர் மற்றொருவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடக்க வேண்டும் என்று கூறுகின்றது,

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள். உங்கள் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படும்.” (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

தொழில் நிறுவனங்களில் ஒவ்வொருவருடைய பொறுப்பும் சரிவர நிறைவேற்றப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படும். அதே வேளை சிறந்த பணியாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பரிசுகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கி அவர்களை ஊக்குவித்து மேலும் மேலும் சிறப்பாகப் பணியாற்றத் தூண்டுகின்றது.

ஆனால் சமுதாய இயக்கப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மேற்கண்ட ஊக்குவிப்பு முறை பொருந்தாது என்பதையும் தாண்டி அது ஆபத்தானதும் கூட. ஆனாலும் சில இஸ்லாமிய இயக்கத்தினர் இதைச் செய்து வருகின்றனர். இது பணியாளர்களை உண்மையான நோக்கத்திலிருந்து மாற்றி அற்ப உலக ஆதாயவாதிகளாக மாற்றி விடுகின்றது.

ஆகையால் மார்க்கப் பணியாற்றுபவர்களுக்கும் அவர்களுக்கென்று சோர்வு ஏற்படும் நேரம் உண்டு. இந்நேரத்திலெல்லாம் நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயங் கூறுவார்கள். நரகத்தின் வேதனைகளைக் கூறுவார்கள்.

இந்தக் கொள்கைகளைக் கற்றுக் கொண்ட காரணத்தினால் முன் சென்றோர் அனுபவித்த துன்பங்களுக்கு முன்னால் நம் துன்பங்கள் ஒன்றும் இல்லை என அல்லாஹ்வும் கூறுகின்றான். குகை வாசிகள், பிர்அவ்னின் மனைவி, பெரும்பாலான நபிமார்கள், அவர்களுடன் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்களெல்லாம் நமக்கு முன்மாதிரிகள்.

ஒரு நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் போது பணிகளெல்லாம் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டதால் அவரவர் பணிகளைப் பார்ப்பவர்கள் போய் விடுவார்கள். அடுத்தவன் என்ன செய்கின்றான் என்பதைப் பார்க்கவே மாட்டார்கள் என்ற உணர்ச்சியற்ற நிலை உருவாகாமல் ஒருவர் தம் பணிகளை முடித்துவிட்டால் மற்ற பொறுப்பாளர்களுக்கு அவர்களுடைய பணியில் உதவ வேண்டும். இந்த மனோநிலை உருவானால் தான் குழு உணர்வு மேம்படும். எல்லா இடங்களிலும் சில வேலைகளை கடினமானது என அனைவரும் கருதுவார்கள், அதைச் செய்வதற்கென்றே தனியாக ஒருவரும் இருப்பார். அனைவரும் சேர்ந்து அவரை வாட்டி வதைப்பார்கள். இது நாளடைவில் ஓர் அலுப்பை ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட நபரை அந்தப் பணியில் விரக்தியடையச் செய்யும்.

கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் பறவைகளிடம் நமக்கு முன்மாதிரி உள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஐரோப்பாவுக்கும், ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாறி மாறி வாழும் பறவைகள் ஏறத்தாழ பத்தாயிரம் கிலா மீட்டர் தூரத்தைப் பறந்து கடக்கின்றன.

அப்படிப் பறக்கும் போது ஒரு ஒழுங்கு முறையுடன் பறக்கும். அதாவது முதலில் ஒரு பறவை, அதைத் தெடர்ந்து இரண்டு, அதைத் தெடர்ந்து மூன்று, நான்கு, ஐந்து என பெருங்கூட்டமாகப் பறக்கும்.

முதலில் பறக்கும் ஒரு பறவைக்குத் தான் கடின வேலை. அது காற்றைக் கிழித்துக் கொண்டு எதிர்த்துச் செல்ல வேண்டும். அதனால் ஏற்படும் வெற்றிடத்தில் மற்ற பறவைகள் இலகுவாகச் பறக்கும். முதல் பறவை ஒரே பறவை அல்ல! வரிசையில் உள்ள அடுத்த பறவை, முதல் பறவை களைத்ததும் அந்த இடத்திற்கு வந்துவிடும். முதல் பறவை கடைசிக்குப் போய்விடும்.

இப்படி ஒரு ஒழுங்கு முறையுடன் பணிகளை மாற்றி மாற்றிச் செய்தால் களைப்பு, மனஸ்தாபங்கள், பொறாமை போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புகாரி 30, முஸ்லிம்

தகவல் சேகரித்தல்

ஒரு நிர்வாகம் திறம்படச் செயல்பட அதன் நிர்வாகிகளுக்குத் தெரிந்திருக்கும் தவகல்கள், விபரங்களில், அவர்களது துறை சார்ந்த அல்லது இயக்கம் சார்ந்த செய்திகள், வரலாறு, முக்கிய நிகழ்வுகள், சமகாலச் செய்திகள், அதில் தமது துறையுடன் தொடர்புடையது எனப் பிரித்து அறிந்து கொள்ள வேண்டும், இவற்றில் பொதுவானவைகளை மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளலாம். தனது துறை சார்ந்தவைகளை ஆழமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒரு முறை, ஒரு ராணுவ வீரரிடம் சமீபத்திய ரக விமானம் ஒன்றைப் பற்றி கேட்கப்பட்டது. அவர் அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

அதுபோல் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் மேலாளரிடம் சமீபத்தில் ஒரு மென்பொருளில் செய்யப்பட்டுள்ள மாறுதல் பற்றிக் கேட்கப்பட்டது. அவர் மூன்று மாறுதல்களுக்கு முன்புள்ள மென்பொருளைப் பற்றிப் பேசினார்.

மேற்கண்ட இருவரில் ஒருவருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை; மற்றவருக்கு அவர் துறை சார்ந்த தகவல்களையே அவர் புதுப்பித்துக் கொள்ளவில்லை. இது தகவல் சேகரிப்பில் அவர்கள் எந்தக் கவனமும் செலுத்தவில்லை என்பதையும், இருக்கும் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறது.

இது தகவல் தொழில்நுட்ப காலம். நாம் நினைத்த நேரத்தில் உலகின் கடை கோடிக்கும் தொடர்பு கொள்ளலாம், கைபேசி வழியாக தொலைகாட்சி பார்க்கலாம்; மின்னஞ்சல் பார்க்கலாம்; குறுஞ்செய்தி அனுப்பலாம். ஆனால் இத்தனை வசதிகள் இருந்தாலும் பல நிர்வாகங்களிலும் ஒருவரையொருவர் குறை கூறிக் கொள்வதைப் பார்க்கலாம்.

காரணம், தலைவர் எனக்குத் தகவல் தரவில்லை; பொருளாளர்  என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை என பல நிர்வாகங்களிலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக் கொள்வார்கள். ஏன் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடாது? நமக்குத் தான் தகவல் வேண்டும். அதற்காக நாம் செய்த முயற்சிகள் என்ன?

எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாத அந்தக் காலத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் பல வல்லரசுகளின் நிலையை அறிந்து வைத்திருந்தார்கள். அவர்களின் உள் விவகாரங்களையும் தெரிந்து கொண்டார்கள். பக்கத்து நாடான மக்காவில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக விஷேசக் கவனம் செலுத்தினார்கள். இப்படி இன்று நிர்வாகிகளில் பலர் உலக விஷயங்களைத் தெரிந்து வைப்பதில்லை.

பெருமானார் (ஸல்) அவர்கள் தம் ஊரில் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் குருவி செத்து விட்டதைக் கூட கேட்டறிந்து கொள்ளத் தவறியதில்லை. அல்லாஹ் பல விஷயங்களை அவர்களுக்கு அறிவித்துத் தந்த போதிலும் அவர்களாகக் கடும் முயற்சி செய்து அறிந்து கொண்டவைகளும் ஏராளம். அவை தான் நமக்கு முன்மாதிரி!

கண்காணித்தல்

நிர்வாகத்தில் நமக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் ஏதாவதொரு பணியை ஒப்படைத்து விட்டால் அதோடு தனது வேலை முடிந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அதற்குப் பின்பும் வேலை இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பின்பு தான் வேலையே இருக்கின்றது.

  1. ஒப்படைக்கும் போது குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துத் தருவது.
  2. ஒப்படைக்கப்பட்ட பணியில் எந்த அளவு நிறைவேறியுள்ளது என்பதை அவ்வப்போது தெரிந்து கொள்வது.
  3. குறித்த நேரத்தில் பணிகள் முடியவில்லை எனில் அதற்கான காரணத்தைக் கண்டறிவது.
  4. தடைகள் ஏதேனும் இருந்தால் தலைவர் அல்லது முக்கிய பொறுப்பாளர்கள் நேரடியாகக் களமிறங்கி தடைகளை அகற்றுவது.
  5. வசதிகள் குறைவாக உள்ளது எனில் அவற்றைச் சரி செய்து கொடுப்பது.
  6. குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பவர்களை அழைத்துப் பாராட்டுதல், அவர்களுக்காக மனமாரப் பிரார்த்தனை செய்வது, தொழில் நிறுவனங்கள் எனில் அவர்களுக்கு சன்மானம் வழங்கிப் பாராட்டுதல்.

பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்த பிறகு மேற்கண்ட பணிகளை ஒரு நிர்வாகி மேற்கொள்ள வேண்டும்.

————————————————————————————————————————————————

ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

சென்ற இதழின் தொடர்ச்சி….

இணை கற்பித்தல்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!

திருக்குர்ஆன் 4:36

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லைஎன்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:14

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாதுஎன்பதே.   

திருக்குர்ஆன் 6:151

மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவோரை வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்றவுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்டவனாக இருக்கக் கட்டளையிடப் பட்டுள்ளேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக! உண்மை வழியில் நின்று இம்மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்! அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!  

திருக்குர்ஆன் 10:104-106

அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளதுஎன்று கூறுவீராக! 

திருக்குர்ஆன் 13:36

அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 28:87, 88

நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 72:20

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். 

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். 

திருக்குர்ஆன் 4:116

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக! 

திருக்குர்ஆன் 31:13

இணை வைத்தல் என்பது இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகும். கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு ஆகிய எந்தப் பாவத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றை விட மிகக் கடுமையான பாவமாக இணை வைத்தலைத் தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இந்த இணை வைத்தலுக்கு எதிரான ஏகத்துவக் கொள்கையை, அதாவது ஓரிறைக் கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸ்கள் இணை வைத்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பதுஎன்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்என்று சொல்லிவிட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வதுஎன்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வதுஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரீ 4477

நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 2653

அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், “நியாயமின்றி கொல்லக் கூடாதுஎன்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரீ 2766

இணை கற்பித்தால் நல்லறங்கள் அனைத்தும் அழிந்து விடும்

இணை கற்பித்தல் என்பது மனிதனின் உடலில் புகுந்த விஷத்திற்குச் சமமாகும். ஒருவன் உளூ இல்லாமல் ஆயிரம் ரக்அத்துகள் தொழுதாலும், ஆயிரம் வருடங்கள் தொழுதாலும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. அதுபோல் ஒருவன் இணை வைத்துக் கொண்டு எவ்வளவு தொழுதாலும், நோன்பு வைத்தாலும், ஹஜ் செய்தாலும், தான தர்மங்கள் செய்தாலும் அவனுடைய எந்த நல்லறமும் நன்மையாக மாறாது. அவையனைத்தும் அழிந்து போய் விடும். நாம் செய்யும் நல்லறங்கள் நன்மையாக மாறுவதற்காவது நாம் ஓரிறைக் கொள்கையையும், அதற்கு எதிரான இணை கற்பிக்கும் காரியங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.   

திருக்குர்ஆன் 39:65, 66

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

திருக்குர்ஆன் 98:6

இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார். 

திருக்குர்ஆன் 4:116

மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லைஎன்றே மஸீஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 5:72

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணை வைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. “இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்!என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4654

இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்குத் தங்கத்தைக் கொடுத்தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். “உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் “ஆம்என்று கூறுவான். “இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணை கற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் இணை வைத்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்)என்று அவனுக்கு கூறப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 6538

ஏகத்துவாதிக்கே நபிகள் நாயகத்தின் பரிந்துரை

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர், இறைநேசர்களாகக் கருதப்படக் கூடிய இறந்தவர்கள் மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்ற எண்ணத்தில் தர்ஹாக்களில் சென்று அவர்களிடம் பரிந்துரையைக் கேட்கின்றனர். இன்னும் பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களையும் செய்து வருகின்றனர். ஆனால் இணை வைப்புக் காரியங்களைத் தவிர்ந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்குத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பரிந்துரை செய்ய இயலும் என்பதை நபியவர்கள் பின்வரும் ஹதீஸில் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்.  அப்போது, “அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும்.  ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை‘ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 99

ஓரிறைக் கொள்கைக்காகப் போர் செய்தல்

இந்த ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகத் தான் மார்க்கம் போர் செய்வதையே நமக்குக் கடமையாக்கியுள்ளது. ஆயுதம் ஏந்தி போர் செய்வதற்குப் பல்வேறு நிலைகளைத் திருமறைக் குர்ஆன் விளக்கினாலும் அந்தப் போர் என்பதை ஓரிறைக் கொள்கைகாகத் தான் வலியுறுத்துகிறது.

இதிலிருந்து இந்த ஓரிறைக் கொள்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இன்றைக்குச் சிலர், திருமறைக் குர்ஆனில் ஜிஹாத் பற்றி வரும் வசனங்களை எடுத்துக் கூறி இளைஞர்களுக்குத் தவறான பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றனர். ஆனால் போர் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டால் அதன் முதல் காரணம் சத்தியக் கொள்கைக்காகத் தான் இருக்க வேண்டும் என்பதே மார்க்கத்தின் கட்டளையாகும்.

சத்தியக் கொள்கையையும் அதன் வகைகளையும், இணை வைப்புக் கொள்கைகளையும் அதன் வகைகளையும் அறிந்து கொள்ளாதவர்கள் தங்கள் உயிர்களை இழப்பதால் அவர்களுக்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் நஷ்டம் தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்என உறுதி மொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காத வரை (இணை வைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி 25

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.

அறிவிப்பவர்: தாரிக் பின் அஷ்யம் (ரலி)

நூல்: முஸ்லிம் 37

ஜிஹாத் என்பது அநீதி நடக்கும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காக ஒரு அரசாங்கம் ஆயுதம் தாங்கிப் போரிடுவது மட்டுமல்ல! மாற்று மத மக்களிடயே இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களுடைய மனங்களில் இந்தத் தூய மார்க்கத்தை நிலைபெறச் செய்வதும் ஜிஹாத் தான்.

இறைவன் குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்யச் சொல்கிறான். குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்வதென்றால் குர்ஆனுடைய கருத்துக்களை மக்களிடையே அழகிய முறையில் எடுத்துக் கூறி உண்மையை நிலைநாட்டப் பாடுபடுவதாகும்.

எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!

அல்குர்ஆன் 25:52

அன்றைக்கு இஸ்லாத்தை அழிப்பதற்காக இணை வைப்பாளர்கள் இஸ்லாத்தின் பெயரால் பலவிதமான அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டார்கள். இப்படிப்பட்ட கொடிய உள்ளம் படைத்தவர்களிடத்திலும் குர்ஆனை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை எடுத்துச் சொல்லிப் போராடும் படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜிஹாதில் மிகச் சிறந்தது சத்தியக் கொள்கையை அநியாயக்கார அரசனிடம் எடுத்துக் கூறுவதாகும்.

நூல்: நஸயீ 4138

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களிடத்தில் உங்களுடைய பொருட்களாலும் கைகளாலும் நாவுகளாலும் போரிடுங்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: நஸயீ 3045

நாவுகளால் போரிட வேண்டும் என்றால் இணை வைப்பாளர்களிடத்தில் உள்ள அசத்தியக் கருத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களை சத்தியத்தின் பால் கொண்டு வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு போருக்குச் சென்றாலும் முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தாரிடம் போரிட்டாலும் அவர்களை (இஸ்லாத்தின் பால்) அழைக்காமல் இருந்ததில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2001

கைபர் போர்க் களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்கள் களம் இறங்கினார்கள். அவர்களிடம் போரிடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்கிறார்கள்.

அப்போது அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “எதிரிகள் நம்மைப் போன்று முஸ்லிம்களாக ஆகும் வரை நான் அவர்களிடம் போர் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

நிதானத்தைக் கடைபிடிப்பீராக! அவர்களுடைய களத்திற்கு நீர் சென்றவுடன் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்து அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: புகாரி 2942

அலீ (ரலி) அவர்கள், “நான் முதலில் சண்டையிடட்டுமா?’ என்று கேட்கும் போது, “அவசரப்படாதே! முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்’ என்று கூறுகிறார்கள். இங்கு தான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இன்றைக்கு நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக் கொண்டிருக்கும் மாற்று மதச் சகோதரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?

மேற்கண்ட ஹதீஸ்கள் இணை வைப்புக்கு எதிராக நம்முடைய உயிரையும் நாம் கொடுக்கத் தயாராக வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை கற்றுக் கொள்வதின் அவசியத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இணை வைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு

இணை வைப்பதின் பேராபத்தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணை வைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதின் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணை கற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். 

அல்குர்ஆன் 9:28

அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 60:8, 9

இணை கற்பிப்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் போன்ற உலக விஷயங்களில் உறவு கொள்வதை இந்த வசனங்கள் அனுமதிக்கின்றன.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். 

அல்குர்ஆன் 31:15

நமது பெற்றோர்கள் இணை வைப்பில் இருந்தாலும் அவர்களிடம் உலக விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள இந்த வசனம் சொல்கிறது. அத்துடன் இந்த வசனம் தான் “ஃபித்துன்யா – இவ்வுலகில்’ என்று குறிப்பிட்டு, முஷ்ரிக்குகளுடன் நாம் கொள்ள வேண்டிய தொடர்பை இம்மை, மறுமை என்று பிரித்துக் காட்டுகின்றது.

இணை கற்பிப்பவர்களிடம் மறுமை, மார்க்க விஷயத்தில் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று ஒரு பட்டியலையே போடுகின்றது.

  1. திருமணம் 2. பள்ளிவாசல் நிர்வாகம் 3. பாவ மன்னிப்புத் தேடுதல்  4. ஜனாஸா தொழுகை போன்ற மார்க்க விஷயங்களில் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது. இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.

திருமணம்

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

ஒரு முஸ்லிமான ஆண், இணை வைக்கும் பெண்ணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிமான பெண், இணை வைக்கும் ஆணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகக் கட்டளையிடுகின்றது.

பள்ளிவாசல் நிர்வாகம்

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குத் தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரைக் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:17, 18, 19

பாவ மன்னிப்புத் தேடுதல்

இணை கற்பிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அல்லாஹ் தடை விதித்து விட்டான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

அல்குர்ஆன் 9:113

இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை நாம் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். இந்த வசனம் இறங்கிய காரணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைப் பார்ப்போம். அந்தக் காரணமும், பின்னணியும் இதன் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கத் துணையாக அமையும்.

(நபியவர்களுடைய பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்என்று சொன்னார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனும் உறுதி மொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்என்று சொன்னார்கள். அப்போது தான், “இணை வைப்போருக்காகப் பாவ மன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லைஎனும் (9:113வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ், “நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான்எனும் (28:56வது) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 4772

இணை வைப்பில் இறந்தவர்களுக்கு முஸ்லிம்கள் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது தாயாரின் கப்ரைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் தாமும் அழுது, தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்து விட்டார்கள். “என்னுடைய தாய்க்குப் பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனது தாயின் கப்ரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் அது மரணத்தை நினைவூட்டுகின்றதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1622

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே, அவர்களது தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி கிடையாது எனும் போது ஷிர்க் (இணை) வைத்து விட்டு இறந்த மற்றவர்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் பாவ மன்னிப்புக் கேட்க அனுமதியில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஜனாஸா தொழுகை

இணை வைப்பில் இறந்து போனவர்களுக்கு நாம் பாவ மன்னிப்புத் தேட முடியாது என்றாகி விடுகின்றது. ஒரு முஸ்லிம் இறந்தவுடன் நாம் தொழுகின்ற ஜனாஸா தொழுகை தான் நாம் அவருக்காகச் செய்யக் கூடிய தலையாய பாவ மன்னிப்புத் தேடுதலாகும். எனவே ஜனாஸா தொழுகை என்ற இந்தப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை, முஷ்ரிக்குக்காக அதாவது இணை வைத்த நிலையில் இறந்தவருக்காக நாம் செய்ய முடியாது. இதற்குப் பின்வரும் வசனங்களும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளன.

(முஹம்மதே!) அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 9:80

அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர். 

அல்குர்ஆன் 9:84

நாம் மேலே பட்டியலிட்ட விஷயங்களில் பள்ளிவாசல் நிர்வாகம் என்பது ஏகத்துவ வாதிகளை நேரடியாகப் பாதித்து விடுவதில்லை. ஆனால் திருமணம், மரணம் போன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஏகத்துவ வாதியையும் நேரடியாகப் பாதிக்க வைப்பவையாகும்.

இணை வைப்போரைப் புறக்கணித்தல்

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன் பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். “உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்என்று கூறுவீராக! 

அல்குர்ஆன் 9:23, 24

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!   

அல்குர்ஆன் 6:106

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 15:94

இன்றைய முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களை நம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ் செய்கிறார்கள்; ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படி முஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்குர்ஆன் 12:106

அல்லாஹ்வை நம்பிய ஒருவன் இணை கற்பித்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதைத் தான் இந்த வசனம் காட்டுகின்றது.

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? இறை நேசர்கள் யார் என்பதை மனிதர்கள் யாராலும் கண்டு பிடிக்க முடியாது; அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்று கூறி வருகிறீர்கள். ஆனால் புகாரி 1367வது ஹதீஸில், இறந்துவிட்ட ஒருவரை மக்கள் நல்லவர் என்று புகழும் போது “அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே மக்கள் யாரை இறைநேசர் என்று தீர்மானிக்கின்றாரோ அவர் இறைநேசராகத் தான் இருப்பார் என்று கப்ரு வணங்கிகள் பிரச்சாரம் செய்கிறார்களே! இதற்கு விளக்கம் என்ன?

இப்ராஹீம், மதுரை

இறைநேசர்கள் யார் என்று மக்களால் தீர்மானிக்க முடியாது என்பதை நாம் சுயமாகக் கூறவில்லை. திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலேயே கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 10:62, 63

இந்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணம் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.

ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.

யார் இறை நேசர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதையே இவ்வசனங்கள் கூறுகின்றன.

மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையிலும் அவர் நல்லவர் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. இதற்கு ஹதீஸ்களிலேயே ஏராளமான சான்றுகளை நாம் பார்க்க முடியும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டதுஎன்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டதுஎனக் கூறினார்கள். உமர் (ரலி) “எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்எனக் கூறினார்கள்.

நூல்: புகாரி 1367

மேற்கண்ட ஹதீஸில் மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்கவாசி என்றும் மக்கள் ஒருவரைக் கெட்டவர் என்று புகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் தெரிகிறது.

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் கூறிய முழுமையான சில வாசகங்கள் விடுபட்டுள்ளன. இதன் காரணமாகத் தான் மக்கள் தீர்மானிக்கலாம் என்பது போன்ற கருத்து வருகிறது. நபியவர்கள் கூறிய முழுமையான வாசகங்கள் மற்ற ஹதீஸ்களில் வந்துள்ளன.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா கடந்து சென்றது. அப்போது நபியவர்கள், “இது யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிப்பவராக இருந்தார் என்றும் அல்லாஹ்விற்கு வழிப்பட்டு நல்லமல்கள் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள் “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டதுஎன்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது மக்கள், இது இன்னாருடைய ஜனாஸா என்றும் அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் வெறுப்பவராக இருந்தார் என்றும் இறைவனுக்கு மாறு செய்யும் காரியங்களைச் செய்பவராகவும் அதற்கு முயற்சிப்பவராகவும் இருந்தார் என்றும் கூறினார்கள். உடனே நபியவர்கள், “உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டது; உறுதியாகி விட்டதுஎன்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! முதலாவது ஜனாஸாவை மக்கள் புகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள். மற்றொன்றை மக்கள் இகழ்ந்த போதும் உறுதியாகி விட்டது என்றீர்கள் (அதன் விளக்கம் என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “பூமியில் அல்லாஹ்விற்கென்று மலக்குமார்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்பதில் மக்களின் நாவுகளில் பேசுகிறார்கள்என்று கூறினார்கள்.

நூல்: ஹாகிம், பாகம்: 1, பக்கம்: 533)

மக்கள் தாமாகப் பேசுவதில்லை. மாறாக மலக்குமார்கள் தான் மக்களின் நாவுகளில் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று பேசுகிறார்கள். நபியவர்கள் இறைத் தூதர் என்பதால் தான் மக்கள் நாவில் பேசியது மலக்குகள் என்பதை அல்லாஹ் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான். இதன் காரணமாக மக்கள் புகழ்ந்தவரை சொர்க்கவாசி என்றும் மக்கள் இகழ்ந்தவரை நரகவாசி என்றும் நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

ஆனால் மக்கள் ஒருவரைப் பற்றிக் கூறும் வார்த்தைகள் மலக்குமார்கள் பேசியதா என்பதை நம்மில் யாரும் தீர்மானிக்க இயலாது.

அதனால் தான் இன்று மக்களால் இறைநேசர் என்று போற்றப்படும் எத்தனையோ பேர் இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான காரியங்களைச் செய்தவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.

சதாவும் போதையில் இருந்தவர்களையும், பீடி புகைத்துக் கொண்டிருந்தவர்களையும் கூட, பீடி மஸ்தான் அவ்லியா என்று கூறி சிலர் வணங்கி வருகின்றனர்.

தமிழ் இலக்கியம் என்ற பெயரில், கல்லையும் மண்ணையும் கடவுள் என்று சித்தரித்துப் பாடி, ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைத்தவர்கள் கூட இன்று அவ்லியாக்கள் என்று கப்ரு வணங்கிகளால் கொண்டாடப்படுகின்றனர்.

தொழுகையே இல்லாதவர்களையும், இஸ்லாம் கூறியுள்ள எந்த அம்சத்தையும் பின்பற்றாமல் பண்டார, பரதேசிகளாகப் பிச்சை எடுத்துத் திரிபவர்களையும் அவர்களது மரணத்திற்குப் பின், மக்களில் சிலர் அவ்லியாக்கள் என்று தீர்மானித்து விடுவதால் அவர்கள் இறைநேசர்களாகி விடுவார்கள் என்று வாதிடுவது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

எனவே மக்கள் ஒருவரைப் புகழ்ந்து பேசினால் அவர் நல்லவர் தான், இறைநேசர் தான் என்று தீர்மானித்தால் அவர் இணை கற்பிக்கும் காரியத்தைச் செய்தவராவார்.