ஏகத்துவம் – டிசம்பர் 2007

தலையங்கம்

என்றும் முடியாத இப்ராஹீம் நபியின் போராட்டம்

இட ஒதுக்கீடு கிடைத்து விட்டதால் இட ஒதுக்கீடு போராட்டம் முடிந்து விட்டது. அடுத்து, மோடியை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்களுக்கு மத்தியில் புதுத் தெம்பைப் பாய்ச்சியுள்ளது.

எத்தனை போராட்டங்களை அறிவித்தாலும் சளைக்காமல் பங்கு கொண்டு, கோரிக்கை வெற்றியடையும் வரை போராடுவது நமது கொள்கைச் சகோதரர்களின் தனிச் சிறப்பு. அந்த அளவுக்கு நமது நாடி நரம்புகளில் போராட்ட உணர்வு குருதியுடன் கலந்து விட்டது.

மாநிலத்தில் இட ஒதுக்கீடு பெற்று விட்டோம். மத்தியில் இன்னும் பெறவில்லை. அதற்காகவும் இன்ஷா அல்லாஹ் களம் காணவிருக்கிறோம். பறிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலத்தை நம்மிடம் ஒப்படைக்கக் கோரும் உணர்வுப் போராட்டம் இன்னும் முடியவில்லை. அதற்காகவும் நாம் அயராது போராடிக் கொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஜமாஅத் பிறந்தது, அது நடை பயில்வது, வளர்வது, வாழ்வது எல்லாமே இந்த இயக்கம் தன் பெயரிலேயே பதிய வைத்திருக்கின்ற அந்தத் தவ்ஹீதை – ஏகத்துவத்தை – நிலை நிறுத்துவதற்காகவே! இது தான் நம்முடைய இலட்சியமும் இறுதி இலக்குமாகும்.

“எனது தொழுகை, எனது வணக்க முறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே கட்டளையிடப் பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:162, 163

இந்தக் கட்டளையைத் தான் திருக்குர்ஆன் நமக்குப் பிறப்பிக்கின்றது. இந்த இலக்கை நோக்கிய நமது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை; முடியவும் செய்யாது.

இந்தப் போராட்டத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக இப்ராஹீம் (அலை) அவர்கள் திகழ்கிறார்கள்.

வீட்டையும் நாட்டையும் ஒரு சேர எதிர்த்து நிற்கிறார்கள்.

“இப்ராஹீமே! எனது கடவுள்களையே நீ அலட்சியப் படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!” என்று (தந்தை) கூறினார்.

அல்குர்ஆன் 19:46

தவ்ஹீதைச் சொன்ன மகனை, பெற்ற தந்தையே கல்லால் எறிந்து கொல்வேன் என்றார். தான் வளர்ந்த ஊர், நாடு அவர்களைத் தண்டித்தது.

“இவரைக் கொல்லுங்கள்! அல்லது தீயிட்டுப் பொசுக்குங்கள்!” என்று கூறியதைத் தவிர வேறு எதுவும் அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை. அவரை அல்லாஹ் நெருப்பிலிருந்து காப்பாற்றினான். நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 29:24

ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, அவரைத் தீக்குண்டத்தில் எறிந்த போதும் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். இதற்குப் பிறகும் அவர்கள் அசத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். லூத் போன்ற குறிப்பிட்ட சிலரே சத்தியத்தை ஏற்கின்றனர். அதன் பின்னர் தமது தாயகத்தைத் துறந்து வெளியேறுகின்றார்கள். இதைப் பின்வரும் வசனத்தில் நாம் காணலாம்.

அவரை லூத் நம்பினார். “நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

அல்குர்ஆன் 29:26

இவ்வாறு இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்நாள் முழுவதுமே போராட்டக் களம் தான்.

இத்தகைய போராளியைத் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் தனது திருமறையில் கட்டளையிடுகின்றான்.

“அல்லாஹ் உண்மையே கூறினான். எனவே இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவர் உண்மை வழியில் நின்றார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:95

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.

அல்குர்ஆன் 4:125

“எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:161

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!” என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:123

நாம் இன்று அவர்களை அப்படியே பின்பற்றுகிறோம். அல்லாஹ்வை மட்டும் அழைத்துப் பிரார்த்திக்கின்றோம். நாம் இவ்வாறு செய்கின்ற போது நம்மை ஒரு கூட்டம் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றனர். இவர்கள் ஏன் நம்மை எதிர்க்கின்றனர்?

பாக்தாத் முஹ்யித்தீன், அஜ்மீர் ஹாஜா, ஏர்வாடி இப்ராஹீம், நாகூர் ஷாகுல் ஹமீது, தக்கலை பீர் முஹம்மது, ஷுமைதராவின் அபுல் ஹஸன் ஷாதுலி போன்ற இறந்து விட்ட ஆண் கடவுள்களையும், ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா, கேரள பீமா போன்ற பெண் கடவுள்களையும் வணங்கிக் கொண்டிருக்கின்றனர்.

“அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார். “அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.)

அல்குர்ஆன் 21:66, 67

கொலுவீற்றிருந்த சிலைகளை உடைத்தெறிந்து விட்டு இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். இந்த தர்ஹாக்களை உடைக்காமல் அதே கேள்விகளை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த விமர்சனங்களை இவர்களால் தாங்க முடியவில்லை.

அதனால் தான் இன்றளவும் பள்ளியில் தொழ விடாமல் தடுப்பது, ஊர் நீக்கம் செய்வது, பிரச்சாரம் செய்ய விடாமல் தடுப்பது போன்ற அனைத்துத் தடைகளையும் நமக்கு எதிராக விதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களிடம் ஆட்சி, அதிகாரம் இருந்தால் நம்மை நெருப்புக் குண்டத்தில் போடவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இவர்கள் நம்மீது வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை நமக்கு எதிராகத் தூண்டி விட்டு, இயக்கிக் கொண்டிருப்பவர்கள் ஆலிம்கள். இவர்களுக்கு எதிரான நம்முடைய போராட்டம் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் கண்ட போராட்டமாகும்.

அந்தப் போராட்டம் நமக்கு முன்னால் இன்னும் இருக்கிறது. அது முடிவுறாத, முற்றுப் பெறாத போராட்டம். அந்தப் போராட்டத்தின் வழிமுறையும் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியே அமைய வேண்டும்.

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

அல்குர்ஆன் 60:4

  1. இவர்களிடம் திருமண உறவு கொள்வதை விட்டு விலகிக் கொள்ளுதல்.
  2. இவர்களில் இறந்தோரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளாதிருத்தல்.
  3. இணை கற்பிக்கும் இவர்களுக்குப் பின்னால் நின்று தொழாதிருத்தல்.

இது போன்ற காரியங்களில் இவர்களுடன் நாம் இணைய முடியாது.

இவர்களை விட்டு விலகியிருக்கும் நம்மிடம், அதை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பின்வரும் அம்சங்கள் அவசியமாகும்.

  •   ஒவ்வொரு ஊரிலும் ஐவேளைத் தொழுகைக்கான பள்ளிவாசல்
  •  ஜும்ஆ தொழுகை
  •  பெருநாளன்று திடலில் தொழுகை

இவற்றை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் நிறைவேற்றிட, இதற்கான ஆக்கப் பணிகளில் உடனே களமிறங்குங்கள்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

இந்த வசனத்தின்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் போன்று தனி சமுதாயம் படைப்போம். இன்ஷா அல்லாஹ்!

————————————————————————————————————————————————

கேள்வி பதில்

? தொழும் போது இமாமுக்குப் பின்னால் நின்று முஅத்தின் இகாமத் சொல்கிறார்; பின்பு வருபவர்கள் வலது புறத்தை நிரப்பி விட்டு, பின்பு இடது புறத்தை நிரப்புவது சுன்னத் என்று தொழுது வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும் போது, இடது புறம் நின்ற இப்னு அப்பாஸை வலது புறத்தில் நிறுத்தினார்கள் என்ற அடிப் படையில் இவ்வாறு செய்கிறோம். ஆனால், முஅத்தினுடைய வலது புறமும், இடது புறமும் மாறி மாறி நிற்க வேண்டும்; இது தான் நபிவழி என்று ஒரு ஆலிம் கூறுகிறார். இரண்டில் எது சரி? விளக்கவும்.

எம். திவான் மைதீன், பெரியகுளம்

! நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை இடது புறத்திலிருந்து மாற்றி வலது புறத்தில் நிறுத்திய செய்தியைப் பொறுத்த வரை, இரண்டு நபர்கள் மட்டுமே தொழும் போது உள்ள சட்டமாகும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இடது புறம் நின்றேன். அவர்கள் என்னைச் சுற்றிக் கொண்டு வந்து தமது வலது புறமாக நிறுத்தினார்கள். பிறகு ஜப்பார் பின் ஸஹ்ர் வந்து உளூச் செய்து விட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு இடது புறமாக நின்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரது கைகளையும் சேர்த்துப் பிடித்து, எங்களைத் தள்ளி, தமக்குப் பின்னால் நிற்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5328

நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுது விட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள் இருவரும், ஆம் என்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கள் இருவருக்கும் இடையே தொழுவதற்காக நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தலானார்கள். பிறகு நாங்கள் ருகூவுச் செய்த போது, எங்கள் கைகளை எங்களுடைய முழங்கால்கள் மீது வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கைகளில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோர்த்துக் கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே இடுக்கிக் கொண்டார்கள். தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்கமா, அஸ்வத்

நூல்: முஸ்லிம் 831

இந்த ஹதீஸ்கள் ஜமாஅத் தொழுகையில் இமாமுக்குப் பின்னால் வலது புறமும் இடது புறமும் மாறி மாறி நிற்பதை வலியுறுத்துகின்றன.

இது தவிர வரிசைகளில் இடைவெளி ஏற்படுத்தக் கூடாது என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

வலது புறத்தில் நிற்பது தான் சிறப்பு என்றால், 100 பேர் கொண்ட ஒரு வரிசையில் இமாமுக்கு வலது புறத்தில் 50 பேர் முதலில் நின்று விட்டால், அதன் பின்னர் வருபவர்கள் முதல் வரிசையில் இடம் இருக்கும் போதே பின்னால் உள்ள வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லது முதல் வரிசை பூர்த்தியாகும் வரை காத்திருக்க வேண்டும். இது போன்ற நிலைகள் ஜமாஅத் தொழுகைகளில் சாத்தியமில்லை.

எனவே இரண்டுக்கு மேற்பட்டவர்கள் தொழும் போது, பின்பற்றித் தொழுபவர்கள் இமாமுக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் மாறி மாறி நிற்பது தான் சட்டமாகும்.

இமாமின் வலது புறமும், இடது புறமும் சமமாக இடம் இருக்கும் போது வலது புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே சமயம் வரிசையின் வலது புறத்தை விட இடது புறத்தில் ஆட்கள் குறைவாக இருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இடது புறம் நிற்பது தான் வரிசையைப் பூர்த்தி செய்யும் ஒழுங்காகும். அதாவது இமாமை மையமாக வைத்து இரு புறமும் மாறி மாறி நிற்க வேண்டும்.

“வரிசைகளில் வலது புறம் இருப்பவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அருளை வேண்டுகிறார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 578, இப்னுமாஜா 995

இந்த ஹதீஸில், வலது புறத்தில் நிற்பது சிறந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் தொழுகையில் வரிசையைப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால், அதற்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஒன்றை விட மற்றொன்றிற்கு நன்மை அதிகம் என்றால், அதற்காக முயற்சி எடுத்து அதை அடையும் வாய்ப்பு இருக்க வேண்டும். உதாரணமாக முதல் வரிசையில் நிற்பது சிறப்பு என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதற்காக தொழுகைக்கு முதலிலேயே வந்து காத்திருந்து முதல் வரிசையை அடைந்து அதற்கான நன்மையைப் பெற முடியும்.

ஆனால் வலது புறத்தில் நிற்பது சிறப்பு என்ற நன்மையை அவ்வாறு போட்டி போட்டுக் கொண்டு பெற முடியாது. காரணம், முதலில் வருபவர்களுக்கு இடது புறமும், அதற்குப் பிறகு வருபவர்களுக்கு அடுத்த வரிசையின் வலது புறமும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே வலது புறம் இடது புறம் என்பதை விட, தொழுகைக்கு முந்தி வருபவர் பிந்தி வருபவர் என்ற அடிப்படையில் தான் நன்மை அமைந்துள்ளது.

பொதுவாக நல்ல காரியங்களை வலது புறத்தைக் கொண்டு துவங்குவதை நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அது போன்று தொழுகையின் வரிசையைத் துவங்கும் போதும் வலது புறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தான் இந்த ஹதீஸையும் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள முஸ்லிம் 831 ஹதீஸில், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ருகூவில் தொடைகளுக்கு இடையே கைகளை இடுக்கி வைத்ததாக இடம் பெற்றுள்ளது. இதற்கு தத்பீக் எனப்படும். ருகூவில் இவ்வாறு தத்பீக் செய்ய வேண்டும் என்ற சட்டம் ஆரம்பத்தில் அமலில் இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டு விட்டது. இதற்கு ஹதீஸ்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

இந்தச் சட்டம் மாற்றப்பட்ட விஷயம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே இந்த ஹதீஸிலிருந்து, ருகூவில் தத்பீக் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

ஆனால் அதே சமயம், இந்த ஹதீஸில் கூறப்படும் விஷயங்கள் நபிவழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனெனில், தொழுகை முடிந்த பின் இது நபிவழி என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே, தத்பீக் எனும் சட்டம் மாற்றப்பட்ட விபரம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை என்பதால் இந்த ஹதீஸில் கூறப்படும் விஷயங்கள் அனைத்தும் தவறானது என்றோ, அல்லது இந்த ஹதீஸே பலவீனமானது என்றோ விளங்கிக் கொள்ளக்கூடாது.

? குர்ஆன் தமிழாக்கத்தில், குறிப்பு 336ல், “கொள்கைகளை நிலை நாட்டுவதற்குப் பொய் கூறலாம்’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்களுக்கு மட்டுமே பொய் கூற அனுமதித்துள்ளனர். அதில் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காகப் பொய் கூறுவதைப் பற்றிக் கூறப்படவில்லை. எனவே இதை எப்படி அனுமதிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியும்? நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை எனும் போது, அவர்கள் அனுமதித்த மூன்று விஷயங்களைத் தவிர நான்காவதைச் சேர்ப்பது சரியாகுமா?

சித்தீக். மேலப்பாளையம்

மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது, மக்களுக்கு உண்மையை விளங்க வைப்பதற்காகப் பொய் கூறுவது தவறில்லை என்று நாம் சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ் தனது திருமறையில், இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாற்றை எடுத்துக் கூறி, அதில் முன்மாதிரி இருக்கின்றது என்று கூறுவதன் அடிப்படையில் தான் கூறுகின்றோம்.

குர்ஆன், ஹதீஸ் இரண்டுமே மார்க்கத்தின் அடிப்படைகள் தான். குர்ஆனில் ஒரு விஷயம் சொல்லப்பட்டு, ஹதீஸில் மற்றொரு விஷயம் சொல்லப்பட்டால் இரண்டையுமே முஸ்லிம்கள் பின்பற்றியாக வேண்டும்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சொல்லப்படும் செய்திகளும் வஹீ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காகக் குர்ஆனைப் புறக்கணித்து விட்டு, ஹதீஸைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறக்கூடாது.

இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

“யார் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தி, நன்மையைச் சொல்கிறாரோ அல்லது நன்மையை வளர்க்கிறாரோ அவர் பொய்யர் அல்ல” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 1. போர், 2. மக்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துதல், 3. கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் (இணக்கத்திற்காக) சொல்கின்ற பொய் செய்தி என்ற இந்த மூன்று கட்டங்களில் தவிர வேறு எப்போதும் நபி (ஸல்) அவர்கள் பொய் சொல்வதற்கு அனுமதித்ததாக நான் செவியுற்றதில்லை.

அறிவிப்பவர்: உம்மு குல்ஸும் (ரலி)

நூல்: முஸ்லிம் 4717

இந்த ஹதீஸில் சமாதானம் ஏற்படுத்துதல், போர், கணவன் மனைவி இணக்கம் ஆகியற்றுக்காகப் பொய் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

இவை தவிர, அறியாமையில் உள்ள மக்களிடம் மார்க்கத்தை விளங்க வைப்பதற்காகப் பொய் கூறுவதை திருக்குர்ஆன் அங்கீகரிக்கின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது மக்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காக சில   தந்திரமான வழி முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

ஊர் மக்கள் திருவிழாவுக்காகச் சென்ற போது இப்ராஹீம் (அலை) அவர்கள், “நான் நோயாளி’ என்று கூறிவிட்டு ஊரிலேயே தங்கினார்கள். மக்கள் சென்ற பின் அங்கிருந்த சிலைகளை உடைத்து விட்டு, “பெரிய சிலை தான் இதைச் செய்தது” என்று கூறினார்கள்.

இந்த வரலாற்றை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகிறான். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பினையாக அல்லாஹ் நமக்கு சொல்-க் காட்டுவதால் ஏகத்துவக் கொள்கையை, பிறருக்குப் புரிய வைப்பதற்காக இது போன்ற தந்திரங்களைக் கையாளலாம் என்று கூறியுள்ளோம். எனவே இது ஹதீஸுக்கு மாற்றமானதல்ல!

மார்க்கத்திற்காகப் பொய் கூறலாம் என்றால், குருடர்கள் பார்க்கிறார்கள்; ஊமைகள் பேசுகிறார்கள் என்று பொய்யைச் சொல்லி மார்க்கத்தை வளர்க்கலாம் என்றோ, அல்லது ஷியாக்களைப் போன்று தகிய்யா கொள்கை கொண்டிருக்கலாம் என்பதோ இதன் பொருளல்ல! இப்ராஹீம் (அலை) அவர்கள் அது போன்ற பொய்களைக் கூறியதில்லை.

சிலைகளுக்கோ, சூரியன், சந்திரன் போன்ற இதர படைப்பினங்களுக்கோ எந்தச் சக்தியும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் ஆயுதமாகத் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய்யைப் பயன்படுத்தினார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்

———————————————————————————————————————————————-

செல்போன் காதலில் சீரழியும் பிள்ளைகள்

எம். ஷம்சுல்லுஹா

பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.

பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.

நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது. ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

செல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

இது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.

  1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.
  2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.
  3. நஙந (நட்ர்ழ்ற் ஙங்ள்ள்ஹஞ்ங் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்) என்பது இப்போது நங்ஷ் ஙங்ள்ள்ஹஞ்ங் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் ஆக மாறி விட்டது. அந்த அளவுக்கு ஆபாசச் செய்திகள் இதில் பரிமாறப்படுகின்றன.
  4. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.

பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர். பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.

பக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.

ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.

இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.

தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான்.  அதை அவன் அடைந்தே தீருவான்.  கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்.  நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்.  மனம் ஏங்குகின்றது.  இச்சை கொள்கின்றது.  பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது.  அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)

நூல்: புகாரி 6243

இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.

கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.

செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 893

———————————————————————————————————————————————-

மறு ஆய்வு

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்

தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம்.

இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம்.

அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் எழுச்சியின் விளைவாக அனேக முஸ்லிம்கள் நெஞ்சின் மீது கைகளைக் கட்டி தொழ ஆரம்பித்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்!

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்ட வேண்டும் என்ற கொள்கையுடைய மார்க்க அறிஞர்கள், இந்த எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாமல், “தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்றால், நெஞ்சில் கை கட்டும் ஹதீஸும் பலவீனமானது தான்” என்று எதிர்ப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்குச் சில காரணங்களையும் முன் வைக்கின்றனர்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது பற்றிய ஹதீஸ்கள் பலவீனமானவை என்றாலும், இது பற்றி ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று இன்னும் சிலர் வாதிட்டு வருகின்றனர்.

எனவே நெஞ்சில் கை கட்டுவது குறித்த ஹதீஸ் உண்மையாகவே பலவீனமானது தானா? என்பதையும், தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதும் உண்டா? என்பது பற்றியும் மறு ஆய்வு செய்ய நாம் முன் வந்தோம்.

மறு ஆய்வுக்குப் பின்னரும் நமது முந்தைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்ற முடிவுக்கே மீண்டும் வருகிறோம்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவது குறித்த ஹதீஸ்கள் அனைத்துமே பலவீனமானவை என்பதையும், நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ்களில் ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளது என்பதையும் மீண்டும் நாம் உறுதி செய்கிறோம். இது பற்றி விபரமாக நாம் காண்போம்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுதல்

முதலாவது ஹதீஸ்

தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: அபூதாவூத் 645

அலீ (ரலி) கூறியதாக இதை அறிவிப்பவர் அபூஜுஹைஃபா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு இல்லை.

அபூஜுஹைஃபா கூறியதாக இதை அறிவிப்பவர் ஸியாத் பின் ஸைத் ஆவார். இவரது நம்பகத் தன்மையிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஸியாத் பின் ஸைத் கூறியதாக இதை அறிவிப்பவர் கூஃபா நகரைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் ஆவார். இவரது நம்பகத் தன்மையில் நமக்கு மறுப்பு உள்ளது.

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் அபூதாவூத் அவர்கள், இதற்கு இரண்டு ஹதீஸ்களுக்குப் பின்னர் (அபூதாவூத் 649ல்) இவரைப் பற்றி விமர்சிக்கும் போது, “கூஃபாவைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸ் அபூதாவூதில் மட்டுமின்றி அஹ்மத் 998, பைஹகீ 2170, 2171, தாரகுத்னீ 9 (பாகம்: 1, பக்கம்: 286), தாரகுத்னீ 10 (பாகம்: 1, பக்கம்: 286) ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூல்கள் அனைத்திலுமே அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷைபாவின் தந்தை (அபூ ஷைபா) என்றும் குறிப்பிடப்படும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார், நம்பகமானவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களுக்கு முரணாக அறிவிக்கும் பொய்யர் (முன்கர்) என்று அபூஹாத்தம், அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர். இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இப்னு மயீன் கூறுகிறார். இவர் விஷயத்தில் ஆட்சேபணை உள்ளது என்று புகாரி கூறுகிறார். இவரது ஹதீஸ்களை ஏற்காது விட்டு விட வேண்டும் என்று பைஹகீ கூறுகிறார். ஹதீஸ் கலை அறிஞர்களின் ஒருமித்த முடிவுப்படி அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் பலவீனமானவர் என்று இமாம் நவவீ கூறுகிறார்.

இவரை நம்பகமானவர், நாணயமானவர் என்று யாருமே விமர்சனம் செய்யவில்லை. பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மேற்கண்ட அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானவையே என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை.

தொப்புளுக்குக் கீழே கட்டுவதற்குரிய மற்றொரு ஆதாரம்

தொழுகையில் ஒரு முன் கையை மற்றொரு முன் கையால் பிடித்துக் கொண்டு, தொப்புளுக்குக் கீழே வைக்க வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாயில், நூல்: அபூதாவூத் 647

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரிலும் மேலே நாம் கூறிய அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பார் இடம் பெற்றுள்ளார். இதன் காரணமாக இச்செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத்தக்கதல்ல.

மேலும் இச்செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவோ, கூறியதாகவோ மேற்கண்ட செய்தியில் கூறப்படவில்லை.

மூன்றாவது ஆதாரம்

மூன்று காரியங்கள் நுபுவ்வத்தின் அம்சங்களில் உள்ளவை. 1. நோன்பு துறப்பதை விரைவுபடுத்துதல், 2. ஸஹர் செய்வதைத் தாமதப்படுத்துதல், 3. தொழும் போது தொப்புளுக்குக் கீழே இடது கை மீது வலது கையை வைத்தல்.

இந்தச் செய்தியை இப்னு ஹஸ்மு அவர்கள் எவ்வித அறிவிப்பாளர் தொடருமின்றி குறிப்பிடுகிறார். இதன் அறிவிப்பாளர்கள் யார் என்பது பற்றி எந்த விபரத்தையும் அவர் கூறவில்லை.

இதை அறிவித்த நபித்தோழர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? நூலாசிரியர் வரை உள்ள அறிவிப்பாளர் பட்டியல் என்ன? என்பதை ஹனபிகள் எடுத்துக் காட்டுவதில்லை. அறிவிப்பாளர் இல்லாமல் கூறப்படும் எந்தச் செய்தியும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல என்பதில் ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.

நான்காவது ஆதாரம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து அதைத் தொப்புளுக்குக் கீழே வைத்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 1/343

இதன் அறிவிப்பாளரான வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) நம்பகமானவர்.

அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அவர்களது மகன் அல்கமாவும் நம்பகமானவர்.

அல்கமா கூறியதாக அறிவிக்கும் மூஸா பின் உமைர் என்பாரும் நம்பகமானவர்.

அவர் கூறியதாக அறிவிக்கும் வகீவு என்பாரும் நம்பகமானவர்.

அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக உள்ளதால் இதை ஆதாரமாகக் கொண்டு தொப்புளுக்குக் கீழே தான் கைகளைக் கட்ட வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட அறிவிப்பாளர் வரிசையுடன் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த வாதம் ஏற்கத்தக்க வாதம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முஸன்னப் இப்னு அபீஷைபா என்று நூலின் பழைய பிரதிகளில் மேற்கண்டவாறு எந்த ஹதீஸும் இல்லை. ஒரே ஒரு அச்சுப் பிரதியில் மட்டுமே மேற்கண்டவாறு அச்சிடப்பட்டுள்ளது.

முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பல்வேறு பிரதிகளில் இல்லாத இந்த ஹதீஸ் பிற்காலத்தில் அச்சிடப்பட்ட பிரதியில் மட்டும் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்த அறிஞர்கள் – குறிப்பாக ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர்கள்  – இது இடைச் செருகல் என்பதைத் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர்.

முஹம்மத் ஹயாத் ஸின்தீ என்ற ஹனபி மத்ஹப் அறிஞர் இதற்காகவே ஒரு சிறு நூலை எழுதியுள்ளார். அந்த நூலை மேற்கோள் காட்டி துஹ்பதுல் அஹ்வதி என்ற நூலில் அதன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

முஸன்னப் இப்னு அபீஷைபா நூலின் சரியான மூலப் பிரதியை நான் பார்வையிட்டேன். அதில் கீழ்க்கண்டவாறு இரண்டு செய்திகள் அடுத்தடுத்து உள்ளன.

இவ்விரு செய்திகளின் தமிழாக்கம்:

  1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறுகிறார்.
  2. இப்ராஹீம் (நகயீ) அவர்கள் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே வைத்தார்.

மேற்கண்ட இரண்டு செய்திகளையும் கவனியுங்கள். முதல் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்புடையது. அச்செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை இல்லை. இரண்டாவது செய்தியில் தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை உள்ளது. ஆயினும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொடர்புடையது அல்ல. இப்ராஹீம் நகயீ என்பார் தொப்புளுக்குக் கீழே கை வைத்தார் என்று தான் கூறப்பட்டுள்ளது. இவர் நபித்தோழர் கூட அல்லர். முஸன்னப் இப்னு அபீஷைபாவில் மேற்கண்டவாறு தான் உள்ளது. ஆயினும் பிரதி எடுத்த யாரோ ஒருவர், ஒரு வரியை விட்டு விட்டு, இரண்டாவது அறிவிப்பில் உள்ள “தொப்புளுக்குக் கீழ்’ என்பதை முதல் செய்தியுடன் சேர்த்து எழுதி விட்டார். இப்ராஹீம் நகயீயின் செயல் நபிகள் நாயகத்தின் செயலாகக் காட்டப்பட்டு விட்டது. இது, எடுத்து எழுதியவரின் தவறுதலால் ஏற்பட்டது என்று ஹயாத் ஸின்தீ விளக்கியுள்ளார்.

அத்துர்ரா என்று நூலாசிரியர் தனது நூலில் கீழ்க்கண்டவாறு கூறுவதாகவும் துஹ்பதுல் அஹ்வதி நூலாசிரியர் விளக்குகிறார்.

முஸன்னப் இப்னு அபீ ஷைபா நூலின் எந்தப் பிரதியில், “தொப்புளுக்குக் கீழே’ என்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் சேர்க்கப்பட்டுள்ளதோ அந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி இல்லை.

எந்தப் பிரதியில் இப்ராஹீம் நகயீ தொடர்பான செய்தி உள்ளதோ அதில், “தொப்புளுக்குக் கீழே’ என்ற வார்த்தை நபிகள் நாயகத்துடன் தொடர்புபடுத்தப்படவில்லை. இப்ராஹீம் நகயீயின் செயலாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இரண்டு செய்திகளை வெட்டி ஒட்டியதால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று அத்துர்ரா நூலாசிரியர் விளக்குகிறார்.

இது தவிர முஸன்னப் இப்னு அபீஷைபாவில் உள்ள செய்தி அதே அறிவிப்பாளர் தொடருடன் முஸ்னத் அஹ்மதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது கை மீது வலது கையை வைத்தார்கள் என்று மட்டும் தான் உள்ளது. தொப்புளுக்குக் கீழே என்ற வாசகம் முஸ்னத் அஹ்மதில் இல்லை.

மேற்கண்ட இதே செய்தி, இதே அறிவிப்பாளர் வரிசையுடன் தாரகுத்னீயிலும் பதிவாகியுள்ளது.

தாரகுத்னீயிலும் “தொப்புளுக்குக் கீழே’ என்ற வாசகம் இல்லை.

மேலும் ஹனபி மத்ஹபின் நிலைபாடுகளை ஆதரித்து எழுதுவதில் வல்லவரான இப்னுத் துர்குமானி என்பார், தமது “அல்ஜவ்ஹருன்னகீ’ என்ற நூலில் தொப்புளுக்குக் கீழே கையைக் கட்ட வேண்டும் என்பதையும் ஆதரித்து எழுதியுள்ளார்.

அதில் நாம் மேலே சுட்டிக்காட்டிய அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியையும், மூன்றாவது ஆதாரமாக நாம் குறிப்பிட்டுள்ள செய்தியையும் அடிப்படையாக வைத்து, தொப்புளுக்குக் கீழே கை கட்டுவதை நியாயப்படுத்தியுள்ளார். மேலும் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்று அபூமிஜ்லஸ் என்பார் (தாபியீ) கூறியதாக முஸன்னப் இப்னு அபீஷைபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பில்லாத அந்தச் செய்தியையும் இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

முஸன்னப் இப்னு அபீஷைபாவின் பழைய பிரதிகளில், தொப்புளுக்குக் கீழே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைக் கட்டியதாக ஹதீஸ் இருந்தால் அதை விட்டு விட்டு, பலவீனமான இரண்டு செய்திகளை இப்னுத் துர்குமானி ஆதாரமாகக் காட்டி தமது மத்ஹபை நிலைநாட்டி இருக்க மாட்டார். மேலும் முஸன்னப் இப்னு அபீஷைபா நூலில் தனக்கு ஆதாரமாக ஏதாவது கிடைக்கிறதா? என்று தேடிப் பார்த்தவருக்கு, அபூமிஜ்லஸ் என்பாரின் சொந்தக் கூற்று தான் கிடைத்தது. எனவே அதை எடுத்துக் காட்டியுள்ளார்.

எனவே, தொப்புளுக்குக் கீழே என்ற வார்த்தை முஸன்னப் இப்னு அபீஷைபாவின் மூலப் பிரதிகளிலும், பழைய பிரதிகளிலும் இல்லை. அது பிற்காலத்தில் வெட்டி ஒட்டி தயாரிக்கப்பட்டுள்ளது என்பது மேலும் உறுதியாகின்றது.

மேற்கண்ட அந்த நான்கு ஆதாரங்களைத் தான் தொப்புளுக்குக் கீழே கை கட்ட வேண்டும் என்போர் கூறுகின்றனர்.

  1. முதல் ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் மூலம் அறிவிக்கப்படுவதால் அது ஆதாரமாகாது.
  2. இரண்டாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் அதே நபர் மூலம் அறிவிக்கப்படுவதாலும், அபூஹுரைராவின் சொந்தக் கூற்று என்பதாலும் அதுவும் ஆதாரமாகாது.
  3. மூன்றாவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் எந்த அறிவிப்பாளர் தொடரும் இல்லாததால் அதுவும் ஆதாரமாக ஆகாது.
  4. நான்காவது ஆதாரமாக இவர்கள் எடுத்துக் காட்டிய ஹதீஸ் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைச் செய்தியாக உள்ளதால் இதுவும் ஆதாரமாக ஆகாது.

நெஞ்சில் கைகளைக் கட்டுதல்

தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டுதல் பற்றிய ஹதீஸ்கள் எதுவுமே ஆதாரமாக இல்லாததால் அதை நாம் நடைமுறைப்படுத்தக் கூடாது. அப்படியானால் நெஞ்சில் கைகளைக் கட்டுவது தொடர்பான ஹதீஸ்கள் மட்டும் ஆதாரமாகவுள்ளதா? என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர்.

நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸிலும் பலவீனங்கள் உள்ளதாக அவர்கள் பட்டியல் போட்டுள்ளனர். அந்த ஹதீஸையும் அது குறித்து மாற்றுக் கருத்துடையோர் எழுப்பும் விமர்சனங்களையும் நாம் விரிவாக ஆய்வு செய்வோம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அவர்கள் தமது வலது கையை இடது கையின் மேல் வைத்து நெஞ்சின் மேல் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல்: ஸஹீஹ் இப்னு குஸைமா 1/243

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறியதாக இதை அறிவிப்பவர் குலைப் என்பார்.

குலைப் கூறியதாக அறிவிப்பவர் அவரது மகன் ஆஸிம் என்பார்.

ஆஸிம் கூறியதாக அறிவிப்பவர் சுஃப்யான் என்பார்.

சுஃப்யான் என்பார் கூறியதாக அறிவிப்பவர் முஅம்மல் பின் இஸ்மாயீல் என்பார்.

முஅம்மல் பின் இஸ்மாயீல் கூறியதாக அறிவிப்பவர் அபூமூஸா என்பார்.

அபூமூஸா என்பார் கூறியதாக அறிவிப்பவர் அபூபக்ர் என்பார்.

அபூபக்ர் என்பவர் கூறியதாக அறிவிப்பவர் அபூதாஹிர்.

அபூதாஹிரிடம் நேரடியாகக் கேட்டு இப்னு குஸைமா தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் முஅம்மல் பின் இஸ்மாயீலைத் தவிர மற்ற அனைவருமே நம்பகமானவர்கள்.

முஅம்மல் பின் இஸ்மாயீல் உண்மையாளர் என்றாலும் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் பலவீனமானவர்.

தொப்புளுக்குக் கீழே கை கட்டுவதை அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவரைப் போல் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் அல்ல. நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் பலவீனமானவர். ஆயினும் நினைவாற்றல் குறைவு என்பதும் பலவீனம் தான். முஅம்மல் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான ஹதீஸ் என்பதை நாமும் கடந்த காலங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் இதை நாம் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தாலும், இவர் பலவீனமானவர் என்பது தெரிந்த பின், பல வருடங்களாக இதை ஆதாரமாக நாம் எடுத்துக் காட்டுவதில்லை.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதை நாமே தெளிவுபடுத்தி விட்டோம். அப்படியிருந்தும் இதை நாம் ஆதாரமாக எடுத்துக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு, நெஞ்சில் கை கட்டுவது தொடர்பான ஹதீஸும் பலவீனமானது என்று கூறி வருகின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்றாலும் பலவீனமில்லாத ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸும் உள்ளது. நெஞ்சில் கை கட்டுவதற்கு அதையே நாம் ஆதாரமாக எடுத்துக் காட்டி வருகிறோம்.

முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்றுள்ள பின்வரும் ஹதீஸ் தான் அது.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன்” என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் “இதைத் தமது நெஞ்சின் மீது” என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 22610

“ஒரு கையை மற்றொரு கையின் மணிக்கட்டில் வைத்து இரண்டையும் சேர்த்து நெஞ்சின் மீது வைத்தார்கள்” என்று கூறுவதை விட அவ்வாறு செய்து காட்டி, “இதை நெஞ்சில் வைத்தார்கள்” என்று கூறுவது எளிதாகவும், நேரில் பார்ப்பவர் புரிந்து கொள்ள ஏற்றதாகவும் அமையும்.

எனவே தான், “இதை” என்று சொல்லும் போது, ஒரு கை மீது மற்றொரு கையை வைத்து யஹ்யா விளக்கிக் காட்டியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் யஹ்யா என்ற அறிவிப்பாளர் வார்த்தையால் விளக்குவதை விட செய்முறையால் விளக்குவதை வழக்கமாகக் கொண்டவர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் கல் எறிதல் பற்றிச் செய்து காட்டியதை விளக்கும் போது, சிறு கல்லை எடுத்துச் சுண்டி விட்டு, “இப்படிச் செய்தார்கள்” என்று யஹ்யா விளக்கினார். (நூல்: நஸயீ 3009)

தலைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸஹ் செய்ததை வாயால் கூறாமல் அதைச் செய்து காட்டி, “இப்படி நபிகள் நாயகம் மஸஹ் செய்தார்கள்” என்று விளக்கியுள்ளார். (நூல்: அஹ்மத் 1107)

துவக்க காலத்தில் ருகூவின் போது மூட்டுக் கால்கள் மீது கைகளை வைக்காமல் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இரு கைகளையும் சேர்த்து வைக்கும் வழக்கம் இருந்தது. இதைப் பற்றி யஹ்யா அறிவிக்கும் போது, வார்த்தையால் கூறாமல் இரண்டு கைகளையும் தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் காட்டி, “இப்படிச் செய்தார்கள்” என்று கூறியுள்ளார். (நூல்: அஹ்மத் 1652)

கியாமத் நாளும், நானும் இப்படி நெருக்கமாகவுள்ளோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது ஆட்காட்டி விரலையும் சேர்த்துக் காட்டினார்கள். இதை யஹ்யா அறிவிக்கும் போது, இரண்டு விரல்களையும் சேர்த்துக் காட்டி இப்படிச் செய்தார்கள் என்று விளக்கினார். (நூல்: அஹ்மத் 14047)

“மேற்கண்ட ஹதீஸில், “இதை நெஞ்சில் வைத்தார்கள்” என்று தான் உள்ளது. கையை வைத்தார்கள் என்று இல்லையே!’ என்று சிலர் விதண்டாவாதம் செய்வதால் தான் மேற்கண்ட விபரங்களைக் கூறுகிறோம்.

இதை என்று கூறும் போது அறிவிப்பாளர் என்ன செய்து காட்டினாரோ அந்த நிலை தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி ஆய்வு செய்வோம்.

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் இது தான்.

ஹுல்ப் என்ற நபித்தோழர் கூறியதாக அறிவிப்பவர் அவரது மகன் கபீஸா ஆவார்.

கபீஸா கூறியதாக அறிவிப்பவர் ஸிமாக் பின் ஹர்பு ஆவார்.

ஸிமாக் பின் ஹர்ப் கூறியதாக அறிவிப்பவர் சுஃப்யான் ஆவார்.

சுஃப்யான் கூறியதாக அறிவிப்பவர் யஹ்யா பின் ஸயீத் ஆவார்.

யஹ்யா பின் ஸயீத் கூறியதை நேரடியாகக் கேட்டு இமாம் அஹ்மத் பின் ஹம்பல் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

முதல் அறிவிப்பாளரான ஹுல்ப் அவர்கள் நபித்தோழர் என்பதால் அவரைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லை. நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பது ஹதீஸ் கலையில் கருத்து வேறுபாடு இன்றி ஒப்புக் கொள்ளப்பட்ட விதியாகும்.

ஹுல்ப் அவர்கள் கூறியதாக அவரது மகன் கபீஸா அறிவிக்கிறார்.

மேற்கண்ட ஹதீஸைப் பலவீனமாக்க முயற்சிப்பவர்கள் இவரைக் காரணம் காட்டி, இந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூறுகின்றனர்.

கபீஸா என்பவர் யாரென்று அறியப்படாதவர் என்று பலரும் கூறியுள்ளனர். எனவே யாரென்று தெரியாத கபீஸா என்பவர் வழியாக மட்டுமே இது அறிவிக்கப்படுவதால் இது பலவீனமான செய்தியாகும் என்பது இவர்களின் வாதம்.

இமாம் நஸயீ, இப்னுல் மதீனி ஆகியோர், “இவர் யாரென்று தெரியாதவர்’ என்று கூறியுள்ளதைத் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அறியப்படாதவருக்கான இலக்கணம்

ஒரு அறிவிப்பாளர் பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவர் வழியாக ஒரேயொரு அறிவிப்பாளர் தான் அறிவித்துள்ளார் என்றால் அத்தகைய அறிவிப்பாளர், “அறியப்படாதவர்’ என்ற நிலையில் வைக்கப்படுவார்.

இந்த அளவுகோலின் அடிப்படையில் கபீஸா என்பவர் வழியாக பல ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஹதீஸ்கள் அனைத்தையுமே ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் தான் அறிவிக்கிறார்.

ஸிமாக் பின் ஹர்ப் என்பாரைத் தவிர வேறு எந்த ஒருவரும் கபீஸா கூறியதாக எந்த ஒரு செய்தியையும் அறிவித்ததில்லை என்பதால் கபீஸா யாரென்று அறியப்படாதவர் என்பதில் சந்தேகமில்லை என்பது இவர்களின் வாதம்.

யாரென்று அறியப்படாதவர் என்பதற்குரிய பாதி இலக்கணத்தை மட்டும் தான் இவர்கள் பார்த்துள்ளனர். முழுமையாகப் பார்க்கவில்லை என்பதால் தான் கபீஸா பற்றி இவ்வாறு கூறுகின்றனர்.

ஹதீஸ் கலையையும், அறிவிப்பாளர்களையும், அவர்களின் தகுதிகளையும் அலசி ஆராயும் அறிஞர்கள் யாரும் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி எந்த நற்சான்றும் அளிக்காமல் இருந்தால், அப்போது தான் குறைந்த பட்சம் அவர் வழியாக இரண்டு பேராவது அறிவித்துள்ளார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

அறிவிப்பாளரை எடை போடும் அறிஞர்கள் யாராவது ஒருவரோ, பலரோ “நம்பகமானவர்’ என்று ஒருவரைப் பற்றி முடிவு செய்திருந்தால் அப்போது அவர் வழியாகக் குறைந்தது இரண்டு பேர் அறிவித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

அறிவிப்பாளரின் அனைத்துக் குறைகளையும், நிறைகளையும் திரட்டி வைத்துக் கொண்டு முடிவு செய்யும் அறிஞர்கள், ஒருவரை நம்பகமானவர் என்று கூறுகிறார்கள் என்றால் அந்த அறிவிப்பாளர் பற்றி அவர்கள் முழு அளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகி விடுகிறது.

எந்த அறிவிப்பாளரைப் பற்றி, “நம்பகமானவர்’ என்று யாராலும் முடிவு செய்யப்படவில்லையோ அந்த அறிவிப்பாளர் பற்றித் தான் இரண்டு பேராவது அறிவித்துள்ளார்களா? என்ற விதியைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சில அறிவிப்பாளர்களின் நிலையை நாம் இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

  1. வலீத் பின் அப்துர்ரஹ்மான் அல் ஜாரூதி

இவர் வழியாக இவரது மகன் முன்திர் என்பார் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.

அப்படியிருந்தும் இவர் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் (4621) பதிவாகியுள்ளது.

ஒருவர் மட்டுமே இவர் வழியாக அறிவித்திருப்பதால் அறியப்படாதவர் ஆவார் என்றால் புகாரி எப்படி இவரது ஹதீஸைப் பதிவு செய்திருப்பார்கள்? இவர் வழியாக ஒருவர் மட்டுமே அறிவித்திருந்தாலும் இவரது நம்பகத்தன்மைய வேறு வழியில் புகாரி அறிந்து கொண்டிருப்பதால் தான் பதிவு செய்துள்ளார்.

  1. ஹுசைன் பின் முஹம்மத் அல் அன்ஸாரி என்பார் வழியாக ஸுஹ்ரி என்பவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரி 425, 4010, 5401 முஸ்லிம் 1052 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  2. ஜுவைரியா பின் குதாமா என்பார் வழியாக அபூஜம்ரா எனும் நஸ்ர் பின் இம்ரான் என்பவர் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும் இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை இமாம் புகாரி (3162) பதிவு செய்துள்ளார்.
  3. அப்துல்லாஹ் பின் வதீஆ அல்அன்ஸாரி என்பார் வழியாக அபூஸயீத் அல்மக்புரி என்பார் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் (883, 910) பதிவு செய்யப்பட்டுள்ளன.
  4. உமர் பின் முஹம்மத் பின் ஜுபைர் பின் ஜுபைர் பின் முத்இம் என்பார் வழியாக ஸுஹ்ரியைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. ஆயினும் இவர் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் (2821, 3148) பதிவு செய்யப்பட்டுள்ளன.
  5. முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் என்பார் வழியாக ஸுஹ்ரியைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. அப்படியிருந்தும் இவர் அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் 2581 பதிவாகியுள்ளது.
  6. ஸைத் பின் ரபாஹ் அல்மதனி என்ற அறிவிப்பாளர் நபித்தோழராக இல்லாமல் இருந்தும், இவர் வழியாக மாலிக் என்பவர் மட்டுமே அறிவித்திருந்தும் இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை இமாம் புகாரி (1190) பதிவு செய்துள்ளார்கள்.

ஒரு அறிவிப்பாளர் வழியாக ஒரேயொருவர் மட்டுமே அறிவித்ததால் அவர் அறியப்படாதவர் என்பது பொதுவான விதியல்ல. யாரைப் பற்றி அறிஞர்கள் எந்த முடிவும் கூறவில்லையோ அத்தகைய அறிவிப்பாளர்களுக்கு மட்டுமே அந்த விதி உரியதாகும் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இது பற்றி ஹதீஸ் கலை நூற்களில் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் பின் அஸமா என்பவர் வழியாக ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார். அவர்கள் பார்வையில் இவர் யாரென அறியப்படாதவர் ஆவார். ஆயினும் ஒருவர் நாணயம், நேர்மையால் அறியப்பட்டவராக இருந்தால் அவர் வழியாக ஒருவர் மட்டும் அறிவிப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

நூல்: அன்னுகத் – 3/386

எனவே ஒரு அறிவிப்பாளரைப் பற்றி “யாரென அறியப்படாதவர்’ என்று முடிவு செய்வதற்கு, அவரிடமிருந்து எத்தனை பேர் அறிவித்துள்ளனர் என்பது இரண்டாம் பட்சமாகக் கவனிக்க வேண்டியதாகும். அவர் நம்பகமானவர் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறியிருந்தால், அதன் பின்னர் அவர் வழியாக அறிவிப்பவர் எத்தனை பேர் என்பது கவனிக்கத் தேவையற்றதாகும்.

நெஞ்சில் கை கட்டுவது தொடர்பான ஹதீஸை கபீஸா என்பவர் வழியாக ஸிமாக் பின் ஹர்ப் மட்டுமே அறிவித்துள்ளார் என்பது உண்மை என்றாலும், இவரை இப்னு ஹிப்பான், இஜ்லீ ஆகிய அறிஞர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு ஹிப்பான் அவர்கள் யாரையாவது நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

யாரைப் பற்றி எந்த அறிஞரும் குறை கூறவில்லையோ அவர்கள் நம்பகமானவர்கள் என்பது இப்னு ஹிப்பானின் அடிப்படை விதி.

யார் நம்பகமானவராக இருக்கிறாரோ அவரை எந்த அறிஞரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்.

அது போல் யாரென்றே தெரியாதவரைப் பற்றியும் யாருமே குறை கூறியிருக்க மாட்டார்கள்.

இப்னு ஹிப்பானின் அடிப்படை விதியின் படி நம்பகமானவர்களும் நம்பகமானவர் பட்டியலில் இருப்பார்கள். யாரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லையோ அவர்களும் நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

இப்னு ஹிப்பானின் விதியே தவறாக உள்ளதால் ஒரு அறிவிப்பாளரை “நம்பகமானவர்’ என்று அவர் கூறியிருந்தால் அதை யாருமே கண்டு கொள்வதில்லை; கண்டு கொள்ளவும் கூடாது.

ஆனால் அவருடன் சேர்ந்து இஜ்லீ அவர்களும் கபீஸாவை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.

இவரும் இப்னு ஹிப்பானைப் போன்றவர் தான் என்று பிற்கால அறிஞர்கள் சிலர் கூறுவது மடமையின் உச்சக்கட்டமாகும்.

யாரெனத் தெரியாதவரையும் நம்பகமானவர் என்று கூறும் எந்த விதியையும் இஜ்லீ அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

யாரைப் பற்றி நம்பகமானவர் என்பதற்கான ஆதாரம் கிடைக்கிறதோ அவரைத் தான் நம்பகமானவர் என்று கூறுவார். அந்த வகையில் இவருக்கும் இப்னு ஹிப்பானுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

அறிவிப்பாளர்களை எடை போடுவதில் இஜ்லீயை விட வல்லவர்கள் “இன்ன அறிவிப்பாளர் நம்பகமானவர் அல்ல” என்று கூறியிருக்கும் போது, அவர்களுக்கு மாற்றமாக இஜ்லீ கூறினால் மட்டும் தான் அதை அறிஞர்கள் மறுத்துள்ளனர்.

யாரென அறியப்படாதவர் என்று விமர்சிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி இஜ்லீ நம்பகமானவர் என்று கூறினால் அப்போது இஜ்லீயின் கூற்றை முந்தைய அறிஞர்கள் நிராகரிப்பதில்லை.

கபீஸாவைப் பொறுத்த வரை, இவர் பலவீனமானவர் என்றோ, வேறு வகையிலோ குறை கூறப்படவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் “இவர்களுக்கு மாற்றமாக இஜ்லீ கூறுவதை எப்படி ஏற்கலாம்?’ என்று கேள்வி எழுப்ப முடியும். ஆனால் கபீஸாவைப் பற்றி யாரும் எந்தக் குறையும் கூறவில்லை.

இமாம் நஸயீ, இப்னுல் மதீனி ஆகியோர், “இவர் யாரென்று தெரியாதவர்’ என்று தான் கூறுகின்றனர்.

எனவே அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட இஜ்லீ, “நம்பகமானவர்’ என்று நற்சான்று அளிப்பதே போதுமானதாகும். பிற்காலத்தவர்கள் பழி சுமத்துவது போல் இஜ்லீ அவர்கள் சாதாரணமானவர் அல்ல.

“இஜ்லீ அவர்கள் ஹதீஸ் கலை பற்றிய ஆய்வு துவங்கிய, துவக்க காலத்தைச் சேர்ந்தவர். ஹிஜ்ரி 186ல் பிறந்து 261ல் மரணித்தவர். அதிகமாக மனனம் செய்தவர். கூஃபா, பஸரா, பாக்தாத், சிரியா, ஹிஜாஸ், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து தமது காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான அறிஞர்களிடம் கல்வி பயின்றவர்” என்று அல்இலல் என்ற நூலில் (1/65) அதன் ஆசிரியர் புகழ்ந்துரைக்கிறார்.

“அறிவிப்பாளர் பற்றி விமர்சிக்கும் வகையில் இவர் எழுதிய நூல் மிகப் பயனுள்ளது. இவரது விரிவான நினைவாற்றலுக்குச் சான்றாகத் திகழ்கிறது” என்று தஹபீ, தமது தத்கிரதுல் ஹுப்பாள் என்ற நூலில் நற்சான்று அளிக்கிறார்.

“அறிவிப்பாளர் பற்றி விமர்சிக்கும் இவரது நூலை நான் பார்வையிட்டேன். அதற்கு அடிக்குறிப்பும் எழுதியுள்ளேன். இவரது ஆழமான ஞானமும், விரிந்த நினைவாற்றலும் அந்த நூலிலிருந்து வெளிப்படுகிறது” என்று தஹபீ அவர்கள் “ஸியரு அஃலாமுன் நுபலா’ என்ற நூலில் பாராட்டுகிறார்.

இப்னுல் இமாத் அவர்களும் தமது ஷத்ராதுத் தஹப் என்ற நூலில் இவ்வாறே இவரைப் புகழ்ந்துரைத்துள்ளார்.

இத்துறையில் நூல் எழுதியவர்களில் காலத்தால் முந்தியவர்கள், அபூஹாத்தம், இஜ்லீ, இப்னு ஷாஹீர் ஆகியோர் என்று சகானி தமது மவ்லூஆத் நூலில் கூறுகிறார்.

எனவே கபீஸா என்பவர் வழியாக ஸிமாக் பின் ஹர்ப் மட்டுமே அறிவித்திருந்தாலும், இவரது நம்பகத்தன்மையை இஜ்லீ அவர்கள் உறுதி செய்திருப்பதால், “யாரென அறியப்படாதவர்’ என்ற விமர்சன வட்டத்திற்குள் இவர் வர மாட்டார்.

இஜ்லீ அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஏற்கலாம் என்பதற்கு அறிஞர்களின் பல்வேறு கூற்றுக்கள் சான்றாக உள்ளன.

“…அம்ரு பின் பஜ்தான் என்பவர் வழியாக மட்டுமே இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை இஜ்லீ நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னுல் கத்தான் “இவர் யாரென்று அறியப்படாதவர்” என்று கவனக் குறைவாகக் கூறி விட்டார்” என்று இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.

நூல்: தல்கீஸ் 1/287

அம்ரு பின் பஜ்தான் பற்றி இஜ்லீ நம்கமானவர் என்று கூறியிருக்கும் போது அதைக் கவனிக்காமல் “இவர் அறியப்படாதவர்’ என்று இப்னுல் கத்தான் கூறியிருப்பது கவனக் குறைவு என்ற இப்னு ஹஜர் அவர்களின் கூற்றிலிருந்து இஜ்லீ அவர்களின் நற்சான்றை அலட்சியப்படுத்த முடியாது என்பதை அறியலாம்.

ஸியாத் பின் நுஐம், அம்ரு வழியாக அறிவிக்கும் ஹதீஸை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரப்பூர்வமானதாகும். ஸியாத் பின் நுஐமை, இஜ்லீயும், இப்னு ஹிப்பானும் நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல்: தன்கீஹுத் தஹ்கீக் 2/103

ஸியாத் பின் நுஐம் வழியாக இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மட்டுமே அறிவித்திருந்தும் அவர் அறிவிக்கும் ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று தன்கீஹுத் தஹ்கீக் நூலாசிரியர் அறிஞர் இப்னு அப்துல் ஹாதீ (ஹிஜ்ரீ 704) கூறுகிறார். மேலும் இப்னு ஹிப்பான், இஜ்லீ ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் எனக் கூறியுள்ள போதும் ஸியாத் பின் நுஐம் அறிவிக்கும் ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்கிறார்.

இஜ்லீ அவர்களின் நற்சான்றை அலட்சியப்படுத்த முடியாது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

கபீஸாவை இஜ்லீ மட்டும் நம்பகமானவர் என்று கூறவில்லை. மாறாக வேறு பல அறிஞர்களும் அவரது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்னத் அஹ்மத் 20965, 20974, 20977 ஆகிய எண்ணுள்ள ஹதீஸ்கள், கபீஸா வழியாக ஸிமாக் அறிவிப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அறிவிப்பும் கபீஸா வழியாக ஸிமாக் அறிவிப்பதாக உள்ளது. இதைப் பற்றி தஹபீ அவர்கள் கூறும் போது,

“இதை அஹ்மத் இமாம் பதிவு செய்துள்ளார்கள்; இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்” என்று கூறுகிறார்.

இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று தஹபீ கூறுவதன் மூலம் அறிவிப்பாளர்களில் ஒருவரான கபீஸாவும் நம்பகமானவர்கள் என்ற பட்டியலில் அடங்கியுள்ளார். இஜ்லீயைப் போன்று தஹபீயும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

அஹ்மதில் இடம் பெற்ற மேற்கண்ட ஹதீஸ் பற்றி பூசிரி அவர்கள்,

“இதை அபூதாவூத் தயாலிஸி வழியாக அஹ்மத் பின் ஹன்பல் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள்” என்று கூறுகிறார்.

நூல்: இத்ஹாப், பாகம்: 1, பக்கம்: 4

இஜ்லீ அவர்கள் கபீஸாவுக்கு அளித்த நற்சான்றின் அடிப்படையிலேயே தஹபீ, பூசிரி போன்றோர் கபீஸாவை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர்.

அல்பானி போன்றவர்கள் இஜ்லீயை இப்னு ஹிப்பானுடன் சேர்த்திருந்தாலும், தங்கள் நிலைபாட்டுக்கு ஆதரவு என்று வரும் போது மட்டும் இஜ்லீயை ஏற்றுக் கொள்வது வழக்கம்.

“நாஜியா பின் கஅப் என்பவரைத் தவிர அனைவரும் புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர்களும், நம்பகமானவர்களும் ஆவர். இஜ்லீ அவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் அவர்களும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது என்று அபூதாவூத் கூறுவது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்” என்று அல்பானி கூறுகிறார்.

நூல்: அஹ்காமுல் ஜனாயிஸ்

இஜ்லீயைத் தவிர யாரும் நம்பகமானவர் என்று கூறாத ஒருவரை அல்பானி ஏற்றுக் கொள்கிறார். (இப்னு ஹஜர் நம்பகமானவர் என்று கூறியிருப்பது, இஜ்லீயின் கூற்றின் அடிப்படையில் தான். ஏனெனில் இப்னு ஹஜர் அவர்கள் பிற்காலத்தவர். அவர் இதை சுயமாகக் கூற முடியாது)

இதே போல் ஹாரிஸா அல்கிந்தீ என்பவரைப் பற்றி அல்பானி கூறும் போது,

“இஜ்லீயும் இப்னு ஹிப்பானும் கூறுவது போல் இவர் நம்பகமானவர்” என்று அல்பானி கூறுகிறார்.

நூல்: ளிலாலுல் ஜன்னத், 2/80

இது போல் அபுல் முஸன்னா என்பவரைப் பற்றி அல்பானி கூறும் போது,

“இப்னு ஹிப்பானும், இஜ்லீயும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இது ஹஸன் தரத்தில் உள்ளது” என்றும் அல்பானி கூறுகிறார்.

நூல்: ஸமருல் முஸ்ததாப்

எனவே இஜ்லீயின் விமர்சனத்தைச் சில வேளை ஏற்றும், சில வேளை நிராகரித்தும் பிற்கால அறிஞர்கள் இரட்டை நிலை மேற்கொண்டது இதன் மூலம் அம்பலமாகிறது.

இஜ்லீயைத் தரம் தாழ்த்துவதில் வழிகாட்டியாக இருந்த அல்பானியே தன்னையும் அறியாமல் அவரது கூற்றை மட்டும் நம்பி, அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறார்.

எனவே கபீஸா என்ற அறிவிப்பாளர் மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்ததாக மேற்கண்ட ஹதீஸின் அடுத்த அறிவிப்பாளரான ஸிமாக் பின் ஹர்ப் பற்றியும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.

கபீஸாவிடமிருந்து அறிவிக்கும் ஸிமாக் அவர்கள் பற்றிப் பாராட்டியும், குறை கூறியும் இரண்டு விதமான விமர்சனங்கள் உள்ளன.

காரணம் இவர் தனது முதுமைக் காலத்தில் மூளை குழம்பி விட்டார். அதனால் தப்பும் தவறுமாக அறிவிக்கலானார். அந்த நேரத்தில் இவரைக் கண்டவர்கள் இவரைக் குறை கூறியுள்ளனர்.

முதுமைக்கு முந்தைய காலத்தில் மிகச் சரியாக அறிவிப்பவராக இருந்தார். அந்த நிலையில் இவரைக் கண்டவர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.

இது போன்ற அறிவிப்பாளர்கள் எந்த ஹதீஸை மூளை குழம்புவதற்கு முன் அறிவித்தார்களோ அவை சரியான ஹதீஸ்களாகும்.

மூளை குழம்பிய பின் அறிவித்தவை பலவீனமானவை.

மூளை குழம்புவதற்கு முன்பா, பின்பா என்பது தெரியாவிட்டால் அவை முடிவு ஏதும் இன்றி நிறுத்தி வைக்கப்படும்.

ஷுஃபா, சுஃப்யான் போன்றவர்கள் ஸிமாக் மூளை குழம்புவதற்கு முன்னர் அவரிடம் கேட்டவர்கள். மூளை குழம்பிய பின்னர் அவரிடம் எதையும் கேட்டதில்லை. எனவே இவர்கள் ஸிமாக் வழியாக அறிவித்தால் அவை ஆதாரப்பூர்வமானது.

இவர் மூளை குழம்பிய பின் இவரிடம் கேட்டவர் இக்ரிமா மட்டும் தான். ஸிமாக் வழியாக இக்ரிமா அறிவித்தால் அது பலவீனமானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் தீர்வு கண்டுள்ளனர்.

இந்த ஹதீஸை ஸிமாக்கிடமிருந்து சுஃப்யான் தான் அறிவிக்கிறார். எனவே இது சரியான ஹதீஸ் என்பதில் ஐயம் இல்லை.

அடுத்ததாக மேற்கண்ட ஹதீஸின் அடுத்த அறிவிப்பாளரான சுஃப்யான் அவர்கள் மாமேதையும், இத்துறையின் இமாமும் ஆவார். அது போல் யஹ்யா பின் ஸயீத் அல் கத்தானும் மாமேதையும் இமாமுமாவார்.

எனவே நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்ர்களும் நம்பகமானவர்களாக உள்ளதால் இது முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதில் மற்றொரு கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர்.

வகீஃ, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்பில் “நெஞ்சின் மீது’ என்ற வாசகம் இடம் பெறவில்லை. எனவே ஒரு செய்தியில் மட்டும் இடம் பெறும், “நெஞ்சின் மீது’ என்ற வாசகத்தை வைத்து சட்டம் இயற்றுவது சரியல்ல என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

நெஞ்சின் மீது கை வைக்க வேண்டும் என்று அறிவிக்கும் அஹ்மத் அறிவிப்பில் ஸிமாக் என்பவரிடமிருந்து சுஃப்யான், அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோர் அறிவிக்கின்றனர். இதில் அபுல் அஹ்வஸ், ஷரீக் ஆகியோரின் அறிவிப்புக்களில், “இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்” என்று மட்டும் தான் இடம் பெற்றுள்ளது.

சுஃப்யான் அவர்களின் அறிவிப்பில் மட்டும் “நெஞ்சின் மீது” என்ற வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. இதைப் போன்று சுஃப்யானிடமிருந்து யஹ்யா பின் ஸயீத், வகீஃ ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இதில் வகீஃ என்பவரின் அறிவிப்பில், “நெஞ்சின் மீது” என்ற வாசகம் இல்லை.

ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து, எல்லா மாணவர்களும் நம்பகத்தன்மையில் சமமாக இருந்து, ஒருவர் மற்ற ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியை ஷாத் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுவர்.

இதைப் போன்று நம்பகமான ஒரு அறிவிப்பாளர், அவரை விடக் கூடுதல் நம்பகத்தன்மை உள்ள ஒருவருக்கு முரணாக அறிவித்தால் நம்பகத்தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்றும் சொல்வர்.

இந்தச் செய்தியும் ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று வாதிட முனைகின்றனர். இது கவனமின்மையின் வெளிப்பாடாகும்.

ஒருவரின் அறிவிப்பில் “வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்” என்றும், மற்றொரு அறிவிப்பாளரின் செய்தியில், “வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சில் வைத்தார்கள்” என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.

ஒருவரின் அறிவிப்பில், “வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள்” என்றும், இன்னொருவரின் அறிவிப்பில், “இடது கையை வலது கையின் மீது வைத்தார்கள்” என்று அறிவித்திருந்தால் அதை முரண்பாடு என்று சொல்லலாம்.

ஆனால் “வலது கையை இடது கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைத்தார்கள்’ என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் சரியான விளக்கமும் உள்ளது.

வலது கையை இடது கையின் மீது வைத்த நபி (ஸல்) அவர்கள் அதை உடலில் எந்த இடத்தில் வைத்தார்கள் என்ற கேள்வி முந்தைய அறிவிப்பின் படி இருந்து கொண்டே இருக்கும். நெஞ்சின் மீது வைத்தார்கள் என்று சொன்னால் தான் அது முழுமை பெற்ற ஹதீஸாக அமையும். ஆகவே “நெஞ்சின் மீது வைத்தார்கள்’ என்பது ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல!

எனவே நெஞ்சில் கை கட்டுவது பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பது நமது மறு ஆய்விலும் உறுதியாகின்றது.

———————————————————————————————————————————————-

ஹஜ்ஜில் சலுகைகள்

அபூஜாஸிர்

ஹஜ் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இந்தக் கடமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நிறைவேற்றுகிறார்கள்.

தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்கங்களின் செயல்முறையை இந்தப் பத்தாண்டுகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட நபித்தோழர்களுக்கு, ஹஜ் என்ற வணக்கத்தின் செயல்முறை மட்டும் நிலுவையில் இருந்தது. அதை நிறைவேற்றும் முகமாக நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவக்கியதும் நபித்தோழர்கள் அன்னாரின் ஹஜ் வணக்கத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கலானார்கள்.

“உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 2286

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தப் பிரியாவிடை வார்த்தைகள் நபித்தோழர்களை இன்னும் கூர்மையாகக் கவனிக்கச் செய்தது. இந்த இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள், பிரியப் போகும் தந்தை, தன் பிள்ளையிடத்தில் எப்படி நடப்பாரோ அது போன்று நபித்தோழர்களிடம் நடந்து கொண்டார்கள்.

ஹஜ் என்ற வணக்கம் பெரும் மக்கள் வெள்ளத்தில் நடைபெறும் வணக்கமாகும். இந்த மக்கள் நெருக்கடியான கட்டத்தில், ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதில் மார்க்கம் ஒரு கடுமையான நிலையைக் கையாண்டால் அது மிகவும் சிரமத்தையும், பின்பற்ற முடியாத சூழ்நிலையையும் ஏற்படுத்தி விடும்.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த ஹஜ் வணக்கத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார்கள்.

ஹஜ்ஜுக்குச் செல்வோர், மார்க்கம் வழங்கும் இந்தச் சலுகைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற அடிப்படையில் இதை உங்கள் முன் வைக்கிறோம்.

சலுகை 1

தமத்துஃ ஹஜ்

ஹஜ் என்ற வணக்கத்தை மூன்று முறைகளில் செய்யலாம். தமத்துஃ, கிரான், இஃப்ராத் ஆகியவையே அந்த மூன்று முறைகள். இதில் தமத்துஃ என்ற முறையைச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்த போது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் அணிந்திருந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, “நீங்கள் தவாஃபையும் ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றி விட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக் கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் இஹ்ராம் அணிந்து இதற்கு முன்னால் செய்ததை தமத்துஃ (உம்ரா)ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

அதற்குத் தோழர்கள், “நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் அணிந்து வந்தோம். அதை எவ்வாறு தமத்துஃ ஆக ஆக்குவது?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன். குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தால் அதை அந்த இடத்தில் சேர்க்கும் வரை (பலியிடுகின்ற வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது” என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி செயலாற்றினார்கள்.

அறிவிப்பவர்:  ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 1568

தமத்துஃ முறையில் ஹஜ் செய்பவர், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து, உம்ராவை முடித்து விட்டு, இஹ்ராமைக் களைந்து விட வேண்டும். அதன் மீண்டும் ஒருமுறை துல்ஹஜ் பிறை 8ல் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை முடிக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவருக்கு, தாம்பத்யம் உட்பட எல்லாமே அனுமதிக்கப்பட்டதாகும். இப்படி ஒரு வசதி மற்ற இரு முறைகளான கிரான் மற்றும் இஃப்ராத் ஆகிய முறைகளில் இல்லை.

ஒரு காரியத்தை விட்டும் மனிதன் தடுக்கப்படும் போது அதில் அதிக நாட்டம் ஏற்படுவது மனித இயல்பு. தமது மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒருவர் இஹ்ராம் அணிந்ததும் மனைவியை அணைத்தல், முத்தமிடுதல், இல்லறத்தில் ஈடுபடுதல் ஆகிய காரியங்கள் தடையாகி விடுகின்றன. மனைவியுடன் செல்பவருக்கு இது போன்ற ஒரு நாட்டம் ஏற்பட்டு ஹஜ் என்ற வணக்கத்தைப் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதற்காக மார்க்கம் தமத்துஃ என்ற எளிய முறையை வலியுறுத்துகின்றது.

சலுகை 2

பிரசவத் தீட்டு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்கஃதா 25 அல்லது 26ல் புறப்பட்டார்கள்.  அவர்கள் (தம்முடன்) பலிப் பிராணிகளைக் கொண்டு வந்தார்கள்.  நாங்களும் அவர்களுடன் புறப்பட்டோம்.  எங்களுடன் பெண்களும், குழந்தைகளும் இருந்தனர்.

நாங்கள் (இஹ்ராம் கட்டும் எல்லையான) துல்ஹுலைஃபாவை அடைந்த போது (அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியான) அஸ்மா பின்த் உமைஸ் அவர்கள், முஹம்மது பின் அபூபக்ர் என்ற குழந்தையைப் பெற்றார்கள்.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அஸ்மா பின்த் உமைஸ்) கேட்டனுப்பினார்கள்.  “நீ குளித்து விட்டு, இரத்தத்தை உறிஞ்சுகின்ற துணியை இடுப்பில் கட்டிக் கொண்டு இஹ்ராம் கட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 2137

ஹஜ்ஜுக்குச் செல்லும் பெண்களுக்கு பிரசவம், பிரசவத் தீட்டு போன்றவை ஒரு தடையல்ல என்ற சலுகையை மார்க்கம் வழங்குகின்றது.

சலுகை 3

தலைமுடியைக் களைதல்

இஹ்ராம் அணிந்தவர் குர்பானி கொடுத்து முடிகின்ற வரை தலைமுடியைக் களையக் கூடாது.  ஆனால் தலையில் பேன் பற்றியவர் என்ன செய்ய வேண்டும்? அதற்கு இந்த வசனம் ஒரு சலுகையை அளிக்கிறது.

பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைகளை மழிக்காதீர்கள்! உங்களில் நோயாளியாகவோ, தலையில் ஏதேனும் தொந்தரவோ இருப்பவர் (தலையை முன்னரே மழிக்கலாம்.) அதற்குப் பரிகாரமாக நோன்பு அல்லது தர்மம் அல்லது பலியிடுதல் உண்டு.

அல்குர்ஆன் 2:196

பின்வரும் ஹதீஸ் இது தொடர்பாக முழு விளக்கத்தைத் தருகிறது.

ஹுதைபிய்யா சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து “உன் தலையில் உள்ள பேன்கள் உனக்குத் தொல்லை தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “அப்படி யானால் தலையை மழித்து விட்டு ஒரு ஆட்டை அறுப்பீராக! அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று “ஸாவு’ பேரிச்சம்பழங்களை ஆறு ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: கஃப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 1814, 1815, 1816, 1818, 4159, 4190, 4191, 4517, 5703

சலுகை 4

பலிப் பிராணி

தமத்துஃ ஹஜ் செய்பவர் கண்டிப்பாகப் பலிப்பொருள் கொடுத்தாக வேண்டும். ஒருவரிடம் பலிப் பொருள் கொடுக்கச் சக்தியில்லை என்றால் இப்படிப் பட்டவர்களும் தமத்துஃ ஹஜ் செய்யலாம்.

ஆனால் அவர் மக்காவில் இருக்கும் போது 3 நோன்புகளும், ஊருக்குத் திரும்பியதும் 7 நோன்புகளும் ஆக, பத்து நோன்புகள் நோற்க வேண்டும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும், உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர், இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் (ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச் சலுகையான)து மஸ்ஜிதுல் ஹராமில் யாருடைய குடும்பம் வசிக்க வில்லையோ அவருக்குரியது.

அல்குர்ஆன் 2:196

சலுகை 5

இஹ்ராமில் பெண்களுக்கு சலுகைகள்

இஹ்ராம் அணிவதில் பெண்களுக்குச் சலுகைகள் உண்டு. தையல் இல்லாத ஆடை அணிய வேண்டும் என்ற நிபந்தனை பெண்களுக்கு இல்லை. மேலும் பெண்கள் இஹ்ராமின் போது முகத்தை மூடக் கூடாது; கையுறைகள் அணியக் கூடாது என்று கூறி பெண்களுக்குப் பெரும் சவுகரியத்தை அளித்திருக்கின்றது.

“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1838

சலுகை 6

ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல்

ஒவ்வொரு தவாஃபின் முடிவிலும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுவது நபிவழியாகும். எனினும் சிரமமான கட்டத்தில் ஹஜ்ருல் அஸ்வதை நெருங்க முடியாமல் போனால் அதை நோக்கி சைகையால் முத்தமிட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293

பிற்காலத்தில் வருகின்ற மக்கள் நெரிசலில் ஹஜ்ருல் அஸ்வதை நேரடியாக முத்தமிடுவது பெரும் சிரமம் என்பதால் சைகையால் முத்தமிடும் வழிமுறையையும் அன்றே நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிச் சென்றுள்ளார்கள்.

சலுகை 7

மாதவிடாய் ஏற்படும் போது மார்க்கம் தரும் சலுகை

இஹ்ராம் கட்டிய பெண், தவாஃபுக்கு முன் மாதவிலக்காகி விட்டால் என்ன செய்வது? இது போன்ற நிலை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்த தீர்வு:

“நீ ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்! தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்யாதே!” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 305, 1650

நான் மக்காவுக்குச் சென்றதும் மாதவிலக்கானேன். எனவே, நான் தவாஃப் செய்யவுமில்லை; ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவும் இல்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1556

இந்த ஹதீஸ்களின் படி ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால் தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸஃயீ செய்தல் ஆகிய இரண்டைத் தவிர ஹஜ்ஜின் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.

சலுகை 8

அரபாவை வந்தடைவதில் ஓர் அரிய சலுகை

ஹஜ்ஜின் போது பிறை 9ல் சூரிய உதயத்திற்குப் பிறகு புறப்பட்டு அரஃபாவுக்கு வர வேண்டும். அங்கு சூரியன் மறையும் வரை தங்கியிருந்து விட்டு சூரியன் மறைந்த பின் 10ஆம் நாள் இரவில் முஸ்தலிபாவுக்குச் செல்ல வேண்டும்.

ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில் தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.

“ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)

நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814

ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி என்றாலும், மறு நாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் நிறைவேறி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.

சலுகை 9

அரபா முழுவதும் தங்கலாம்

அரபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்ற இடத்தில் நிற்க வேண்டும்; மினாவில் அவர்கள் அறுத்துப் பலியிட்ட இடத்தில் அறுத்துப் பலியிட வேண்டும். ஆனால் மக்கள் வெள்ளத்தில் இது சாத்தியமில்லை என்பதால் நபி (ஸல்) அவர்கள் அரபாவில் எங்கும் நிற்கலாம்; மினாவில் எங்கும் அறுத்துப் பலியிடலாம் என்று சலுகை வழங்கியுள்ளார்கள்.

“நான் இந்த இடத்தில் நின்றேன். (இங்கு தான் எல்லோரும் நிற்க வேண்டும் என்று கருதி விடக் கூடாது) அரஃபா முழுவதுமே (தங்கி) நிற்கும் இடமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நான் இந்த இடத்தில் அறுத்திருக்கின்றேன்.  இந்த (இடத்தில் தான் அறுக்க வேண்டும் என்றில்லை) மினா முழுவதுமே அறுக்குமிடம் தான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2138

சலுகை 10

மினாவுக்குப் புறப்படுவதில் பலவீனர்களுக்குச் சலுகை

பஜ்ரு தொழுத பின்பே முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குப் புறப்பட வேண்டும் என்றாலும் பலவீனர்கள், பெண்கள் ஆகியோர் இரவிலேயே மினாவுக்குச் சென்று விடலாம்.

ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1681, 1680

தன் குடும்பத்தின் பலவீனருக்கு முஸ்தலிஃபாவிலிருந்து இரவே புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1678, 1677, 1856

சலுகை 11

சூரிய உதயத்திற்கு முன் பெண்கள் கல்லெறிய சலுகை

பத்தாம் நாள் சூரிய உதயத்திற்குப் பிறகு தான் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிய வேண்டும். இருப்பினும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முந்தியே கல்லெறியலாம்.

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் இரவில் தங்கினார்கள். அப்போது தொழலானார்கள். சிறிது நேரம் தொழுததும், “மகனே! சந்திரன் மறைந்து விட்டதா? என்று கேட்டார்கள். நான் “இல்லை’ என்றேன். மீண்டும் சிறிது நேரம் தொழுது விட்டு “மகனே சந்திரன் மறைந்து விட்டதா? என்றார்கள். நான் “ஆம்’ என்றேன். அப்போது அவர்கள், “புறப்படுங்கள்” என்றார்கள். நாங்கள் புறப்பட்டோம். ஜம்ரதுல் அகபாவை அடைந்தவுடன் கல்லெறிந்தார்கள். பிறகு திரும்பிச் சென்று தமது தங்குமிடத்தில் சுபுஹ் தொழுதார்கள். “இருட்டிலேயே நீங்கள் கல்லெறிந்து விட்டீர்களே” என்று கேட்டேன். அதற்கவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் பெண்களுக்கு (இவ்வாறு செய்ய) அனுமதி வழங்கியுள்ளனர்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்

நூல்: புகாரி 1679

சலுகை 12

வணக்க வரிசையில் மாற்றம்

பத்தாம் நாளில் கல்லெறிதல், பலியிடுதல், தலைமுடியை மழித்தல், தவாஃப் செய்தல் ஆகிய காரியங்களை வரிசைப்படி நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள். ஆனால் நபித்தோழர்கள் இதற்கு மாற்றமாகச் செய்த போது நபி (ஸல்) அவர்கள் மிகத் தாராளமாகவே நடந்து கொண்டார்கள். இத்தனை பெரிய மக்கள் வெள்ளத்தில் இந்த மாற்றங்கள் நிகழும் என்பதால் இந்தச் சலுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலியிட்டு விட்டு, தலை முடியை மழித்துக் கொண்டார்கள்.  மக்கள் பலியிடும் வரை பலியிடும் தினத்தில் மினாவிலேயே இருந்தார்கள்.  அன்றைய தினம் ஏதாவது ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக செய்து விட்ட மற்றொரு செயலைப் பற்றி அவர்கள் வினவிய போதெல்லாம் அவர்கள், “குற்றமில்லை, குற்றமில்லை” என்று பதிலளித்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வாறிருக்கையில் அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பலியிடுவதற்கு முன்பு தலையை மழித்து விட்டேனே?” என்று கேட்டார்.  “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

வேறொருவர் வந்து “நான் கல்லெறிவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்” என்று வினவினார்.  “குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

“நான் பலியிடுவதற்கு முன்பு தவாஃப் செய்து விட்டேன்”’ என்று வினவினார்.  “நீ இப்போது பலியிடு, குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பிறகு வேறொருவர் வந்து, “கல்லெறிவதற்கு முன்னர் பலியிட்டு விட்டேன்” என்று வினவினார்.  “(இப்போது) கல்லெறி, குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2138

சலுகை 13

தொழுகையில் சலுகை

ஹஜ்ஜின் போது நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்.

லுஹர், அஸர் ஆகிய இரண்டையும், மக்ரிப், இஷா ஆகிய இரண்டையும் ஜம்வு செய்து (சேர்த்து) தொழ வேண்டும்.

மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வைத்தார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

நூல்: புகாரி 1082, 1083, 1655, 1656

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா – உரை – நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள் செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை நிகழ்த்தினார்கள்.

பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள். பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

சலுகை 14

ஹஜ்ஜில் வியாபாரம்

ஹஜ்ஜுக்குச் செல்வோர் வியாபாரம் எதுவும் செய்யக் கூடாது என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர்.

ஆனால் அல்லாஹ் தனது திருமறையில் ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்யலாம் என்ற சலுகையை வழங்கியுள்ளான்.

(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை.

அல்குர்ஆன் 2:198

ஹஜ் என்ற மாபெரும் வணக்கத்தில் இது போன்ற சலுகைகளை வழங்கி, எல்லா வகையிலும் எளிமையான மார்க்கமாகத் திகழ்கிறது.

———————————————————————————————————————————————-

ஹதீஸ் கலை ஆய்வு – தொடர்: 5

பருவ வயதை அடைந்தவருக்கு பால் புகட்டுதல்

குர்ஆனுடன் மோதுகின்ற வகையில் மோசமான கருத்தைத் தரக் கூடிய செய்திகளுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று நாம் கூறுகிறோம். இது தொடர்பாக சஹாபாக்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுக்கள் மற்றும் ஹதீஸ் கலை விதிகள் கடந்த இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்கள் யாவை?    எந்த அடிப்படையில் அவை குர்ஆனுடன் மோதுகின்றன? அவற்றைச் சரி காண்பதற்காக எதிர் தரப்பினர் கூறும் விளக்கமென்ன? அந்த விளக்கம் சரியா? தவறா? என்பதைப் பற்றி ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

இந்த ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் கூறிய முக்கியமான ஒரு செய்தியை நாம் மனதில் நிறுத்திக் கொண்டால் சரியான முடிவை எடுப்பது எளிதாகி விடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு செய்தியைக் கூறியிருந்தால் அது எப்படிப் பட்டதாக இருக்கும்? என்பதற்கு ஓர் அற்புதமான அளவுகோலை அவர்களே கற்றுத் தருகிறார்கள்.

இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு, இனி நாம் எடுத்துக் காட்டப் போகும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொடர்பு உடையவையாக இருக்குமா? என்று சிந்தியுங்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா பின் உத்பா (ரலி) அவர்கள், சாலிம் அவர்களைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார். மேலும் அவருக்குத் தம் சகோதரர் வலீத் பின் உத்பாவின் மகள் ஹிந்த் என்பாரைத் திருமணமும் செய்து வைத்தார். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். நபி (ஸல்) அவர்கள் ஸைதைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல் (சாலிமை அபூஹுதைஃபா வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்) மேலும் அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை (பெயர்) உடன் இணைத்து மக்கள் அழைக்கும் வழக்கமும், அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) நியமிக்கும் வழக்கமும் இருந்தது.

“அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியா விட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர்” எனும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்த வழக்கம் நீடித்தது).

பின்னர் வளர்ப்புப் பிள்ளைகள் அவர்களுடைய சொந்தத் தந்தையருடன் இணைக்கப்பட்டனர். எவருக்குத் தந்தை (இருப்பதாக) அறியப்படவில்லையோ அவர் நண்பராகவும், மார்க்கச் சகோதரராகவும் ஆனார். பிறகு அபூஹுதைஃபா பின் உத்பா அவர்களின் துணைவியார் சஹ்லா பின்த் சுஹைல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சாலிமை பிள்ளையாகவே கருதிக் கொண்டிருந்தோம். அவர் விஷயத்தில் அல்லாஹ் தாங்கள் அறிந்துள்ள (33:5) வசனத்தை அருளி விட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5088

(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் என்னுடைய வீட்டிற்கு வரும் போது அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் பார்க்கிறேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூ ஹுதைஃபாவின் அடிமை ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ அவருக்குப் பால் கொடுத்து விடு” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள் “அவர் பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே! அவருக்கு நான் எவ்வாறு பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு “அவர் பருவ வயதை அடைந்தவர் என்று எனக்கும் தெரியும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 2878

சஹ்லா (ரலி), அவரது கணவர் அபூ ஹுதைஃபா மற்றும் வளர்ப்பு மகன் சாலிம் ஆகிய மூவரும் நெருக்கடியான ஒரே வீட்டில் இருப்பதாகவும் சஹ்லா அவர்கள் முறையாக ஆடை அணியாமல் இருக்கும் போது சாலிம் வரக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் சஹ்லா (ரலி) அவர்கள் முறையிட்டதாக வேறு அறிவிப்புக்களில் வந்துள்ளது.

குர்ஆனுடன் முரண்படுகிறது

“பால்குடி உறவு ஏற்படுவதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை; பருவ வயதை அடைந்த ஆணிற்கு ஒரு பெண் பால் புகட்டினாலும் அந்தப் பெண் அந்த ஆணிற்குத் தாயாக மாறி விடுவாள்’ என்ற கருத்தை இந்த ஹதீஸ் தருகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

பால்குடி சட்டத்திற்கு, குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடத்தை எல்லையாக அல்லாஹ் நிர்ணயிக்கிறான். இந்த எல்லையைத் தாண்டிய ஒருவர் பால் குடிப்பதினால் பால்குடி உறவு ஏற்படாது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

  1. பாலூட்டுவதை முழுமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.

அல்குர்ஆன் 2:233

  1. மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

அல்குர்ஆன் 31:14

  1. அவனை (மனிதனை) அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள்.

அல்குர்ஆன் 46:15

மனிதனை மனித வடிவில் தாய் 6 மாதங்கள் சுமக்கிறாள். அவனுக்குப் பால் புகட்டியது 24 மாதங்கள். அதாவது இரு வருடம். இந்த 6 மாதத்தையும் 24 மாதத்தையும் சேர்த்து 30 மாதங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பால்குடியின் காலம் இரண்டு வருடங்கள் தான் என்று மேலுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கும் போது, பருவ வயதை அடைந்த சாலிமிற்குப் பால் புகட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் எப்படிச் சொல்லியிருப்பார்கள்?

  1. தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் 24:30

ஒரு ஆண் அன்னியப் பெண்ணைப் பார்ப்பதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் இந்தச் சம்பவத்தில் சஹ்லா (ரலி) அவர்களிடத்தில் சாலிம் பால் குடித்ததாக வந்துள்ளது. பார்ப்பதைக் காட்டிலும் பெண்ணுடைய மறைவிடத்தில் ஆணுடைய வாய் உரசுவது என்பது பன்மடங்கு ஆபாசமானது; அபத்தமானது.

மொத்தத்தில் இஸ்லாமிய ஒழுக்க விதிகளைத் தகர்த்தெறியும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதற்குப் பிறகும் சாலிமுடைய சம்பவத்தை உண்மை என்று நம்பினால் மேற்கண்ட வசனம் கூறும் ஒழுங்கு முறையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள் என்று நம்ப வேண்டிய நிலை வரும்.

இன்று உலகத்தில் எந்த மதத்தினர்களும் கடைப்பிடிக்காத ஓர் அற்புதமான வழிமுறையான பர்தாவை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பெண்கள் மார்பகத்தை மறைக்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.

வீட்டுக்கு அதிகமாக வருபவர்களுக்குப் பால் புகட்டி விட்டால் பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை என்று இந்தச் சம்பவம் கூறுகிறது. பர்தா என்ற அழகிய நெறியை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகளால் உருவாக்கப்பட்டதாகத் தான் இச்செய்தி இருக்க முடியும்.

தாயின் பிரிவைத் தாங்காமல் இருப்பதற்கு சாலிம் (ரலி) அவர்கள் ஒன்றும் பச்சிளங்குழந்தை இல்லை. ஆண்கள் விளங்கிக் கொள்ளும் விஷயங்களை விளங்கி, பருவ வயதை அடைந்து, திருமணம் முடித்தவர். இவரால் சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியாதா?

குர்ஆன் கூறும் அனைத்து விதிகளையும் தளர்த்துவதற்கு அப்படியென்ன நிர்ப்பந்தம் சாலிம் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது? சஹ்லா (ரலி) அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு தனி வீட்டை உருவாக்கி முறையான அடிப்படையிலே வாழ்ந்திருக்கலாம் அல்லவா?

ஒரு பெண் நம்மிடத்தில் இது போன்ற பிரச்சனையைக் கொண்டு வந்தால் அப்பெண்ணிற்கு, பார்தாவைக் கடைப்பிடிக்கும் படி கூறுவோமே தவிர ஒரு போதும் அந்த ஆணுக்குப் பால் புகட்டும் படி கூற மாட்டோம். நாம் கூட செய்யாத ஒரு மோசச் செயலை நபியவர்கள் செய்தார்கள் என்று கூறுவது நபி (ஸல்) அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாக உள்ளது.

  1. அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும் உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:5

தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் சொந்தக் குழந்தையாக ஆக முடியாது. மாறாக அவர்களைக் கொள்கைச் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அந்நிய ஆணிடத்தில் பேண வேண்டிய வழிமுறைகளை வளர்ப்புப் பிள்ளைகளிடத்திலும் பேண வேண்டும். இக்கருத்தையே இந்த வசனம் கூறுகிறது.

ஆனால் சாலிமுடைய சம்பவம் குர்ஆனுடைய இந்த வசனத்திற்கு எதிராக வளர்ப்புப் பிள்ளையை சொந்தப் பிள்ளையாக மாற்றுவதற்கான தந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மாற்று வழியைச் சொல்லித் தருகிறது. இதனால் தான் சாலிமுடைய சம்பவத்தைச் சிலர் சுட்டிக் காட்டி, “ஹராமான ஒன்றை ஹலால் ஆக்குவதற்கான தந்திரங்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான்’ என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்ததே தவிர குர்ஆனில் உள்ள சட்டங்களைத் தளர்த்துவதற்காக அவர்கள் ஒரு போதும் முயற்சித்ததே இல்லை. மேலுள்ள வசனத்தில் இறைவன் கற்றுத் தருகின்ற ஒழுங்கு முறையைச் சீர்குலைத்து அதற்கு மாற்றமான வேறொரு வழியை இச்சம்பவம் கற்றுத் தருவதால் இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

மகன் தாயிடத்தில் சாதாரணமாக வந்து செல்வதைப் போல் ஒரு அன்னிய ஆண், அன்னியப் பெண்ணிடம் வந்து போவதற்கான வழியை இந்த ஹதீஸ் கற்றுத் தருகிறது. குர்ஆனிற்கு எதிரான இந்த வழியை நாம் திறந்து விட்டால் இதுவே விபச்சாரம் பெருகுவதற்குக் காரணமாக அமைந்து விடும்.

பருவ வயதை அடைந்த ஆண், பெண்ணிடத்தில் பால் குடித்து விடுவதால் அப்பெண் மீது அவனுக்கோ அல்லது அவன் மீது அப்பெண்ணிற்கோ ஆசை ஏற்படாது என்று அறிவுள்ளவர்கள் கூற மாட்டார்கள். இந்த வழி ஒழுக்கமுள்ள இளைஞர்களை விபச்சாரத்தின் பால் தள்ளுகின்ற மோசமான வழி.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் மோதுகிறது

மேலே நாம் எடுத்துக் காட்டிய பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் இந்த ஹதீஸ் மோதுவதுடன் மட்டுமல்ல! ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்துள்ளது.

பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் பால்குடி உறவு 2 வருடத்திற்குள் தான் ஏற்படும். அதற்குப் பிறகு குடித்தால் பால்குடி உறவு ஏற்படாது என்ற கருத்தைக் கூறுகின்றன.

  1. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஒரு ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறி விட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், “இவர் என் (பால்குடி) சகோதரர்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில் பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளை பால் அருந்தியிருந்தால்) தான்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5102

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பசியைப் போக்குவதற்குத் தாயின் பாலே உதவும். இவ்வயதைக் கடந்து விட்ட குழந்தைகள் பால் அல்லாத வேறு உணவுகளை உட்கொள்ளும் நிலையை அடைந்து விடுகின்றன. எனவே பசிக்காகப் பாலருந்தும் பருவம் இந்த இரண்டு வருடங்கள் தான்.

தன்னுடைய மனைவியின் அருகில் ஓர் ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு நபி (ஸல்) அவர்கள் கோபமடைகிறார்கள். அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடிச் சகோதரர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்ன போதும், “உங்கள் பால்குடிச் சகோதரர் யார் என்பதை ஆராய்ந்து பாருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்தையைக் கவனிக்க வேண்டும்.

நாம் பால் குடித்த தாயிடம் ஒருவர் பால் குடித்து விடுவதால் அவர் நமது சகோதரனாக ஆகி விட முடியாது. அவர் எப்போது பால் குடித்தார்? 2 வருடத்திற்குள் அவர் குடித்தாரா? அல்லது அதற்குப் பிறகு குடித்தாரா? என்று உற்று நோக்க வேண்டும். இரண்டு வருடத்திற்குள் அவர் குடித்திருந்தால் அவர் நம் சகோதரர். இதற்குப் பிறகு அருந்தியிருந்தால், அல்லது ஒரு சில மிடறுகளைக் குடித்திருப்பதால் அவர் நமது பால்குடிச் சகோதரராக ஆக மாட்டார்.

இந்த வித்தியாசத்தைப் பார்க்காமல் பால் குடித்து விட்டார் என்பதற்காக அவரை நம் சகோதரர் என்று எண்ணி சகோதரனிடத்தில் நடந்து கொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்து கொள்ளக் கூடாது. இதையே நபி (ஸல்) அவர்கள் தனது மனைவிக்குக் கூறி எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கூறுகிறார்கள்.

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பால் புகட்டுவது இரண்டு வருடத்திற்குள்ளாகத் தான் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

நூல்: தாரகுத்னீ, பாகம்: 10, பக்: 152

  1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலேயே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால்குடிக் காலம் 2 வருடம் (முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)

நூல்: திர்மிதி 1072

இந்த ஹதீஸை இமாம் திர்மிதி அவர்கள் பதிவு செய்து விட்டு இது ஹஸன் ஸஹீஹ் (ஆதாரப் பூர்வமானது) என்ற தரத்தில் அமைந்தது என்று கூறியுள்ளார்கள். இரண்டு வருடத்திற்குள் குடித்தால் தான் பால்குடி உறவு ஏற்படும் என்பதை இந்த ஹதீஸ் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது.

மேற்குறிப்பிட்ட குர்ஆன் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் சாலிமுடைய சம்பவம் முரண்படுவதால் இந்தச் சம்பவம் உண்மையல்ல என்றே ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————-

ஷியாக்கள் ஓர் ஆய்வு         தொடர் – 8

ஷியாக்களை மிஞ்சும் ஷாதுலிய்யாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வை மனிதர்களின் நிலைக்கு இறக்குவது அல்லது மனிதர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவது யூதர்களின் கெட்ட குணங்களாகும்.

“உஸைர் அல்லாஹ்வின் மகன்” என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் அல்லாஹ்வின் மகன்” என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

அல்குர்ஆன் 9:30, 31

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருப்பதாகக் கூறுவது, அவனை சராசரி மனித நிலைக்கு இறக்குவதாகும். உஸைரையும், ஈஸாவையும் அல்லாஹ்வின் பிள்ளைகள் என்று கூறுவது அவ்விருவரையும் அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவதாகும். இந்நிலைகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

இதை யூத, கிறித்தவர்கள் அன்றிலிருந்து இன்று வரை செய்து கொண்டிருக்கின்றனர். அதே காரியத்தை யூதத்தின் செல்லப் பிள்ளைகளான ஷியாக்களும் செய்து வருகின்றனர்.

எப்போதும், எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் சொந்தம். இதை யூதர்கள் உஸைருக்கும், கிறித்தவர்கள் ஈஸாவுக்கும் தூக்கிக் கொடுக்கின்றனர். அதனால் தான் இவ்விருவரையும் கடவுளாக்கினர். அதே பண்புகளை ஷியாக்களும் தங்களுடைய இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், யூதர்களின் பணியை ஷியாக்களும் கச்சிதமாகச் செய்கின்றனர். காரணம் ஷியாயிஸம் என்பது யூதத்தின் செல்லப் பிள்ளை!

ஷாதுலிய்யா சங்கம்

ஷியாக்களின் அந்தப் பணியை சுன்னத் வல் ஜமாஅத் எனும் ஷியா வாரிசுகள் அப்படியே அரங்கேற்றுகின்றனர். இவ்வாறு ஷியாக்களின் அலுவல்களை அன்றாடம் நிறைவேற்றிக் கொண்டு, தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வது தான் வேடிக்கையாகும்.

ஷியாக்களின் செயல்களை அரங்கேற்றும் இவர்கள், தங்களுக்குள் பல சங்கங்களை வைத்துக் கொண்டு, “இந்த அரங்கேற்றப் பணியில் எங்களை மிஞ்சியவர் வேறு யாருமில்லை; விமோசனத்திற்கும், விடுதலைக்கும் ஒரே வழி எங்கள் சங்கம் தான்’ என்று ஒவ்வொருவரும் மார்தட்டிக் கொள்வார்கள். அந்த சங்கங்களின் பெயர் தான் தரீக்கா என்பதாகும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்திற்கு காதிரிய்யா என்று பெயர். காஜா முஹ்யித்தீனைக் கடவுளாகக் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஜிஷ்திய்யா. இது போன்று அபுல் ஹஸன் ஷாதுலியைக் கடவுளாகவும் கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஷாதுலிய்யா.

அல்லாஹ்வின் பண்புகளை இந்தக் கடவுளர்களுக்கு, கதாநாயகர்களுக்குத் தூக்கிக் கொடுப்பதில் இவர்களுக்குப் பேரானந்தம், பெருமகிழ்ச்சி!

அல்லாஹ்வின் பண்புகளை இவ்வளவு தாராளமாக தங்கள் கதாநாயகர்களுக்கு, தெய்வீகக் காதலர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் காதிரிய்யா தான் முன்னிலையில் நிற்கிறது என்று இந்தத் தொடரைப் படிப்பவர்கள் கருதலாம். ஏனெனில் இதுவரை முஹ்யித்தீன் மவ்லிதுகளில் உள்ள சங்கதிகளை மட்டுமே பார்த்து வந்துள்ளோம்.

ஆனால் காதிரிய்யாவை மிஞ்சும் வகையில் ஷாதுலிய்யா தரீக்கா அமைந்துள்ளது என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு ஷாதுலிய்யா சங்கம் – தரீக்கா தங்கள் தலைவர்களைக் கடவுளாக்கி மகிழ்கிறார்கள்.

அசல் ஷியாக்களை இந்த ஷாதுலிய்யாக்கள் அசத்தலாகவே பிரதிபலிக்கிறார்கள். இவர்களின் ஷியாயிஸத்தை நாம் நன்கு தெளிவாக அடையாளம் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மற்ற எல்லா தரீக்காக்களை, சங்கங்களை விடவும் இந்த ஷாதுலிய்யா சங்கம் மிகவும் ஆபத்தானது. காரணம், மற்ற தரீக்காக்கள் எல்லாம் ஷரீஅத்தை விட்டு சற்று தாண்டி விட்டது போன்றும், தங்களது தரீக்கா மட்டுமே முழுமையாக ஷரீஅத்தை ஒட்டி அமைந்தது போன்றும் ஒரு தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இவர்களது முகத்திரையை முழுமையாகக் கிழித்தாக வேண்டும்.

சுன்னத் வல் ஜமாஅத் என்று ஒரு முதல் போர்வை – அதற்குள் ஷாதுலிய்யா என்று மற்றொரு போர்வை – அதற்கும் உள்ளே ஒளிந்து கிடப்பது பக்கா ஷியா என்பதை உலகுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

காதிரிய்யாவை விட இந்தத் தரீக்கா கேடு கெட்டது என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

“எனது பாதங்கள், எல்லா அவ்லியாக்களின் பிடரி மீதும் இருக்கின்றன” என்று தங்கள் எஜமானாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்றுத் தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு தங்கள் பாதத்தை அனைவரும் மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். எல்லா அவ்லியாக்களை விடவும் உயர்ந்து விட்ட முஹய்யித்தீனே!

இவ்வாறு யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெற்றுள்ளது.

அதாவது, எல்லா அவ்லியாக்களின் பிடரி மீதும் தனது பாதங்கள் இருப்பதாக முஹ்யித்தீன் கூறினார் என்று  இந்தக் கதை கூறுகிறது.

அவராவது எனது கால்கள் பிடரிகளில் இருக்கின்றன என்று தான்  சொல்கிறார். ஆணவம் பிடித்த இந்த ஷாதுலிய்யா சொல்வதைக் கேளுங்கள்.

“என்னுடைய பாதம் அல்லாஹ்வுடைய ஒவ்வொரு வலீயின் நெற்றியிலும் இருக்கிறது” என்று அபுல் ஹஸன் ஷாதுலி கூறுகிறார். இது தொடர்பாக சந்தேகமில்லாத உத்தரவுப்படியே இவ்வாறு கூறுகிறார்.

ஆதாரம்: ஷாதுலிய்யா தரீக்காவின் அவ்ராது, பைத் மற்றும் மவ்லிது தொகுப்புகள், பக்கம்: 122

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 10:62, 63

ஈமான் கொண்டு, இறைவனை அஞ்சுகின்ற அனைவருமே அல்லாஹ்வின் நேசர்கள் – அவ்லியாக்கள் ஆவர். அந்த அடிப்படையில் ஈமான் கொண்டு, இறைவனை அஞ்சும் அத்தனை முஃமின்களின் நெற்றியிலும் இவருடைய பாதங்கள் இருக்கின்றன என்று ஷாதுலிய்யா சங்கம் கூறுகிறது.

தங்களை உயர் பிறவியினராகக் கருதுபவர்கள் யூதர்கள். தங்களை உயர் பிறவியினராகக் கருதுபவர்கள் ஷியாக்கள். அந்த வேலையை அபுல் ஹஸன் ஷாதுலி அழகாகவே செய்கிறார்.

இப்படி ஒரு வழிகேட்டில் உள்ள இந்தக் கூட்டம் தான், இந்தத் தரம் கெட்ட தரீக்காவினர் தான் தங்களை மற்ற தரீக்காக்களை விட உயர்ந்ததாக, ஷரீஅத்துடன் ஒன்றியதாக நிலை நிறுத்தப் பார்க்கிறார்கள். எனவே இவர்களையும் நாம் முழுமையாக அடையாளம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

இந்தப் பின்னணியைக் கொண்ட இவர்கள், ஷியாக்களைப் பின்பற்றி, தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதை இப்போது அலசுவோம்.

மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக ஷியா இமாம்கள் கூறுவதை இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறோம்.

தனக்கு ஷியாக்களின் 8வது இமாம் அலீ பின் மூஸா எழுதினார் என அப்துல்லாஹ் பின் ஜுன்துப் அறிவிப்பதாவது:

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் நம்மிடம் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இது ஷியாக்களின் திமிர் பிடித்த வாசகங்களாகும். இப்போது அவர்களின் வாரிசுகளான ஷாதுலிய்யாக்களின் சொல்லைப் பாருங்கள்.

“பார்வைக்கு எட்டிய தொலைவு வரையில் உள்ள ஓர் ஏடு எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதில் இறுதி நாள் வரை உள்ள என்னுடைய தோழர்கள், தோழர்களுடைய தோழர்கள் ஆகியோரின் பெயர்கள் பதியப்பட்டிருக்கின்றன. கொழுந்து விட்டெரியும் நரகத்திலிருந்து விடுதலையை நான் வேண்டுகிறேன். ஷரீஅத் என்ற கடிவாளம் மட்டும் என் நாவின் மீது இல்லையெனில் எவ்விதத் தாமதமும் இன்றி இறுதி நாள் வரை நிகழவிருப்பவற்றை, நிகழ்வுகளை, சம்பவங்களை உங்களுக்கு நான் அறிவித்து விடுவேன்” என்று அபுல் ஹஸன் ஷாதுலி தெரிவிக்கின்றார்.

ஷியாக்களின் அதே ஆணவம் அப்படியே இங்கு ஷாதுலியாரின் வார்த்தையில் கொப்பளிப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இங்கு இவர் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

  1. இறுதி நாள் வரை வரப் போகிற இவர்களது பக்த கோடிகளின் பட்டியல் இவருக்குத் தெரியுமாம்.
  2. அத்துடன் அவர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை வேண்டுவாராம். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமாயின் மற்ற சங்கத்திலிருந்து விலகி இவரது சங்கத்தில் வந்து சேர்ந்தால் அவர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.

எப்படி மற்ற சங்கத்தில் அதாவது தரீக்காவில் உள்ள ஆட்களைத் தங்கள் சங்கத்திற்கு இழுப்பதற்கு ஆசை காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்.

  1. கியாமத் நாள் வரை நடைபெறும் விஷயம் இவருக்குத் தெரியுமாம். ஆனால் ஷரீஅத்தின் கடிவாளம் பிடித்து இழுப்பதால் தான் அதை அவர் அவிழ்த்து விடவில்லையாம்.

இம்மூன்று விஷயங்களிலும் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக இவர் வாதிடுகின்றார். அதாவது அல்லாஹ்வுக்குரிய மறைவான ஞானத்தை அறியும் ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிடுகிறார்.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது தூதரிடம் சொல்லச் சொல்கிறான்.

“அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை” என்று (முஹம்மதே!) கூறுவீராக! “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறை வானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

நூஹ் (அலை) அவர்களையும் இவ்வாறு கூறச் செய்கின்றான்.

“என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்” (எனவும் கூறினார்.)

அல்குர்ஆன் 11:31

நபி (ஸல்) அவர்களால் கியாமத் நாளின் அடையாளங்களைத் தான் சொல்ல முடிந்ததே தவிர உறுதியாக இந்த நாள் தான் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

வஹீயின் தொடர்பில் இருந்த அவர்களாலேயே அதைச் சொல்ல முடியவில்லை. ஆனால் இவர்களோ சர்வ சாதாரணமாக, கியாமத் நாள் வரை உள்ள விஷயங்களை அறிந்திருப்பதாகக் கதை அளக்கின்றனர்; காதில் பூச்சுற்றுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மறைவான ஞானத்தை அறிய மாட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) தெளிவாக அடித்துச் சொல்கிறார்கள். (பார்க்க: புகாரி 4855)

இது தான் அல்லாஹ்வின் தூதருடைய உண்மை நிலை எனும் போது, மற்றவர்களுக்கு இது போன்ற ஞானம் இருக்கிறது என்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

ஆனால் ஷியாக்களும், இந்த ஷாதுலிய்யாக்களும் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கற்பனை செய்யவில்லை, உறுதியாகவே நம்புகின்றனர். இப்படி நம்புகிறவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் கிடையாது என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்