சத்தியத்தை மறைக்கும் சமுதாய ஆலிம்கள்!
சாட்சி சொன்ன ஷவ்வால் பிறை
மார்க்கம் சொல்வது ஒன்று! மவ்லவிகள் சொல்வதும் செய்வது வேறொன்று! அவர்கள் பின்பற்றுவது மார்க்கமல்ல; மனோ இச்சை தான்! மவ்லவிகளின் முழுநேரத் தொழிலே மார்க்கத்தை மறைப்பது தான். மக்களிடம் இந்த மார்க்க வியாபாரிகளை அடையாளங்காட்டி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக மவ்லவிகளின் இறுக்கமான பிடியிலிருந்து அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து வருகின்றது. மக்களும் மவ்லவிகளின் மவ்ட்டீகப் பிடியிலிருந்து படிப்படியாக விலகி வருகின்றார்கள். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் ஜூலை 6 அன்று கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாளாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் பிறையை நீங்கள் காணும்வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 1906
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த ஹதீஸின் அடிப்படையில் உறுதியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலைப்பாட்டிற்கு எதிராகப் பிறை பார்க்காமல், கணிப்பின் அடிப்படையில் இரு நாட்கள் முந்திக் கொண்டாடுகின்ற கணிப்புக் கோஷ்டியினரையும், சர்வதேசப் பிறை என்ற பெயரில் ஒரு நாளைக்கு முந்திப் பெருநாள் கொண்டாடுகின்ற சவூதிப் பிறை கோஷ்டியினரையும் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தயவு தாட்சண்யமின்றி விமர்சித்து வருவதையும், அவர்களை விவாதக் களத்திற்கு இன்று வரை அழைத்துக் கொண்டிருப்பதையும் மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர்.
தவ்ஹீது ஜமாஅத்தும் சுன்னத் வல்ஜமாஅத்தும் ஏகத்துவக் கொள்கை விஷயத்தில் இரு வேறு நேர் எதிர்க்கோடுகளில் பயணம் செய்கின்ற ஜமாஅத்துகள் என்றாலும் அவ்விரு ஜமாஅத்துகளும் பிறை விஷயத்தில் ஒரே கோட்டில் தான் பயணிக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே!
தவ்ஹீது ஜமாஅத்தினர் யாரும் பிறை பார்க்காத சந்தர்ப்பத்தில், சுன்னத் வல் ஜமாஅத்தினர் தமிழகத்தில் எங்காவது பிறை பார்த்து தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் உறுதி செய்து விட்டு அதை ஏற்றுக் கொள்வது என்ற நிலைப்பாட்டில் தான் தவ்ஹீது ஜமாஅத் உள்ளது.
ஆனால், இதற்கு நேர்மாற்றமாக தலைமை காஜி செயல்படுகின்றார். குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் 5 தவ்ஹீது ஜமாஅத் சகோதரர்களும் இரண்டு சுன்னத் ஜமாஅத் சகோதரர்களும் பிறை பார்த்ததாக தகவல் தெரிவித்த பின்பும் தலைமை காஜி ஏற்க மறுத்து விட்டார்.
குமரி மாவட்டம் சுன்னத் வல் ஜமாஅத்தினர் கேரளா, இலங்கைப் பிறைகளை ஏற்றுச் செயல்படுவார்கள். அதன்படி சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு அன்றைய தினம் 30 நோன்பு முழுமையாகி விட்டது. அதனால் அவர்கள் பெருநாள் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் அங்குள்ள தவ்ஹீது ஜமாஅத்தினர் எப்போதும் தமிழகத்தின் பிறை அடிப்படையிலேயே செயல்படக்கூடியவர்கள். அவர்களுக்கு நோன்பு 29 தான் முடிந்துள்ளது. அதனால் அவர்கள் 29 முடிந்ததும் மார்க்க அடிப்படையில் பிறை பார்த்துள்ளனர். பிறை தென்பட்டதும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமைக்கு முறையாகத் தெரிவித்தனர். பிறை பார்த்த இந்தச் செய்தி தலைமை காஜியின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால் தலைமை காஜியும், ஜமாஅத்துல் உலமாவும் இதை மறுத்து நோன்பு தடை செய்யப்பட்ட (ஹராம் ஆன) நாளில் மக்களை நோன்பு நோற்கச் செய்தனர்.
தமிழகத்திற்கு உட்பட்ட குமரி மாவட்டப் பிறையை ஏற்க மறுத்த இவர்கள் கடந்த 2010ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறை கண்டதாகச் சொல்லி அரஃபா மற்றும் ஹஜ் பெருநாளை அறிவித்தனர். இது தலைமை காஜி மற்றும் ஜமாஅத்துல் உலமா பிறை விஷயத்தில் கொண்டிருக்கக் கூடிய இரட்டை நிலையாகும்.
வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஒரு சகோதரர் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் பிறை பார்த்திருக்கின்றார். பார்த்தவர் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர் அல்லர். அவர் சுன்னத் வல் ஜமாத்தைச் சார்ந்தவர். தான் பார்த்த அந்தப் பிறையை மேலப்பாளையத்தில் காஜா முகைதீன் பரேலவி ஆலிமிடத்தில் போய் சொன்னார். அவரோ மார்க்கத்தை மறைக்கின்ற ஒரு முழு நேர வியாபாரி! அப்போது அந்த மார்க்க வியாபாரி அவரை நோக்கி, நீ பார்த்தால் உனக்குப் பெருநாள் என்று ஒரு புத்திசாலித்தனமான (?) மார்க்கத் தீர்ப்பை அளித்து அவருடைய சாட்சியத்தை தனது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு புறக்கணித்தார்.
ஏற்கனவே தெங்கம்புதூரில் பிறை பார்த்த எழுவருடன் இவரையும் சேர்த்தால் தமிழகத்தில் பிறை பார்த்தவர்களின் எண்ணிக்கை எட்டாகி விடுகின்றது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே முப்பது நாட்களைப் பூர்த்தி செய்து விட்டார்கள். அதனால் அவர்களின் பிறையை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்ற இவர்களின் அர்த்தமற்ற வாதத்தை இது அம்பலப்படுத்தி விடுகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிறை தென்பட்டும் இவர்கள் அதை ஏற்க மறுத்தது பிறை விஷயத்தில் இவர்கள் கொண்டிருக்கக்கூடிய இரண்டாவது முரண்பாடாகும். உண்மையில், இவர்கள் பின்பற்றுவது மார்க்கமல்ல; மனோ இச்சையைத் தான் என்பதை இது தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
இங்கு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. குமரி மாவட்டம் சுன்னத் வல்ஜமாஅத்தினர் பிறை விஷயத்தில் ஒரு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க மாட்டார்கள். திடீரென்று, ஒரு கட்டத்தில் கடல் மார்க்கத்தில் அருகில் உள்ள இலங்கைப் பிறையை எடுத்துக் கொள்வார்கள். இன்னொரு கட்டத்தில் தரை மார்க்கத்தில் அருகில் உள்ள கேரளா பிறையை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மார்க்கத்தில் உள்ளபடி பிறையைப் பார்த்து முடிவெடுக்க மாட்டார்கள். இது பிறையைப் பற்றிய அவர்களது வாடிக்கையான, வேடிக்கையான நடவடிக்கையாகும்.
ஆனால் குமரி மாவட்ட தவ்ஹீது ஜமாஅத் கொள்கை அடிப்படையில் மனோ இச்சைக்கு அப்பாற்பட்டு மார்க்கம் சொல்கின்ற நிலைப்பாட்டில், கோணல் மாணல் இல்லாத ஒரு நேர்கோட்டில் நிற்கின்ற ஜமாஅத்தாகும். அதனால் தான் அவர்கள் கேரளா, இலங்கை என்று ஒரு வரையறையின்றிச் செல்லாமல் தமிழகம் என்ற வரையில் நின்று, தமிழகப் பிறை அடிப்படையில் ரமளான் நோன்பை நோற்றனர். சுன்னத் வல் ஜமாத்தினருக்கு 30 ஆகியிருந்தும் ஒட்டு மொத்த தமிழகத்தைப் போன்று அங்குள்ள தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு 29 முடிந்த நிலையில் தெங்கம்புதூரில் பிறை பார்த்ததின் அடிப்படையில் அவர்கள் பெருநாள் கொண்டாடினர். அவர்களது சாட்சியத்தை ஏற்று தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் பிறையை அறிவித்தது.
ஆனால் ஜமாஅத்துல் உலமாவோ, குமரி மாவட்டத்தின் பிறை சாட்சியத்தையும், தாழையூத்தில் பார்த்த சாட்சியத்தையும் மனோ இச்சையின் அடிப்படையில் மறுத்தது. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சொன்னால் ஏற்க மாட்டோம் என்ற ஓரம்சக் கொள்கையை மட்டும் குறியீடாகக் கொண்டு அது செயல்பட்டது.
மார்க்க ஆலிம்கள் என்ற பெயரில் மார்க்கத்தை மறைக்கின்ற இந்த ஏமாற்றுப் பேர்வழிகளை நோக்கித் தான் திருக்குர்ஆன் தனது சாட்டையை சுழற்றுகின்றது.
அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட அநீதி இழைத்தவன் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. (அல்குர்ஆன் 2:140)
ஷவ்வால் பிறை சாட்சியத்தை மனமுரண்டாகத் தான் இவர்கள் மறுத்தார்கள் என்பதை சமுதாயம் தெளிவாக அடையாளம் கண்டது. இதற்கு ஷவ்வால் பிறை சரியான சாட்சியானது. இந்த ஆலிம்கள் மார்க்கத்தின் பெயரால் பித்தலாட்டம் செய்பவர்கள் என்று காலங்காலமாக தவ்ஹீது ஜமாஅத் சொன்ன உண்மையை நிதர்சனமாகத் தெரிந்து கொண்டனர். அதனால் பெருநாளில் இவர்கள் போட்ட தடுப்புச் சுவர்களை தகர்த்தெறிந்து விட்டு தவ்ஹீத் ஜமாஅத்தின் திடல்களில் வந்து கடலாய் சங்கமித்தினர். முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்ற மேலப்பாளையம், கடையநல்லூர் போன்ற ஊர்களில் போக்குவரத்தே ஸ்தம்பிக்கின்ற அளவுக்கு சாரை சாரையாக அணி வகுத்தனர். இன்னும் சொல்லப் போனால் ஜமாஅத்துல் உலமாவினர் தங்களின் செயலால் கணிசமான சுன்னத் வல்ஜமாஅத்தினரை தவ்ஹீது கொள்கையின் பக்கம் திருப்பி விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
ஒரு சில ஊர்களில் தெரியாமல் நோன்பு வைத்து விட்டோம் என்று திடலுக்கு வந்து மக்கள் நோன்பு துறந்தனர். அவர்களுக்காக இரண்டாவது தடவையாகவும் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
ஊருடன் ஒத்துப் போக வேண்டும் என்று நினைத்தவர்கள், அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராம் என்று தெரிந்து, உறுத்தலுக்கு உள்ளானதால் நோன்பைத் துறந்து விட்டு, மறுநாள் பெருநாள் கொண்டாடினர். அவர்களும் இந்த முல்லாக்கள் மார்க்கத்தின் பெயரால் பூண்டிருக்கும் போலி வேடத்தை நன்றாகவே புரிந்து கொண்டனர்.
இவர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையில் ஷவ்வால் முதல் பிறையை சாட்சியாக்கிய அந்த சாட்சியாளனும் ஆட்சியாளனுமான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
—————————————————————————————————————————————————————-
குடும்பவியல் தொடர்: 33
வரதட்சணை ஒரு வன்கொடுமை
எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.
இஸ்லாம் கூறும் குடும்பவியல் தலைப்பில் இதுவரை, குடும்பத்தில் அனைத்து விதமான பொருளாதார பொறுப்புக்களையும் ஆண்கள் சுமக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆண்கள் பொருளாதாரத்திற்குப் பொறுப்பேற்றுள்ள நமது சமூக அமைப்பில் திருமணத்தை ஒரு வியாபாரமாக ஆக்கிவிட்டது வேதனையான விஷயம்.
திருமணம் என்றால் ஆரம்பத்திலிருந்தே பெண்களிடம் வரதட்சணையின் பெயராலும், சீர்வரிசை, அன்பளிப்புகள், விருந்துகள் போன்ற பெயராலும் பெண் வீட்டாரை ஆண்கள் சுரண்டி வாழ்வதைப் பார்க்கிறோம். திருமணம் முடிந்து பல மாதங்கள் கடந்த பிறகும் குறிப்பிட்ட நாட்களின் பெயரைக் கூறி, அதிலும் முறை வைத்துப் பெண்ணிடமிருந்து மாப்பிள்ளை சீர் பெறுகின்றார்கள். குழந்தை பிறந்தால் அதனைக் காரணமாகக் காட்டி பெண்ணிடமிருந்து பொருளாதாரத்தைப் பிடுங்குவதெல்லாம் நம் சமூக அமைப்பில் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது முற்றிலும் தவறானது; கண்டிக்கத்தது.
பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது; அவர்களின் அனைத்துச் செலவுகளுக்கும் ஆண்கள்தான் பொறுப்பாளர்கள் என்று சொல்லும் மார்க்கத்தில், தங்களது தேவைகளுக்காகக் கணவனின் அனுமதியில்லாமல், கணவனைப் பாதிக்காத வகையில் சில பொருளாதாரத்தை மனைவி எடுத்துக் கொள்ளும் உரிமை வழங்கியிருக்கும் மார்க்கத்தில், பெண்கள் தங்களது பொருளாதாரத்தைத் தங்கள் விருப்பப்படி செலவு செய்வதற்கு ஆண்களிடம் கேட்க வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிற மார்க்கத்தில் இருந்து கொண்டு பெண்களிடம் வரதட்சணை, சீர் வரிசை கேட்பது இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் மாற்றமானது.
திருமணத்தில் பெண்களுக்கு ஆண்கள் பொருளாதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னதற்குக் காரணம், பெண்கள் இல்லற வாழ்வில் பலவிதமான சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பதாலும், அவர்கள் பலவீனர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலும் தான். திருமணத்திற்குப் பின்பு ஆண் பொறுப்பு ஏற்பதைப் போன்றே, திருமணத்திற்கு முன்பே மஹர் எனும் ஜீவனாம்சத் தொகை ஆண்மகனால் வழங்கப்பட வேண்டும் என திருக்குர்ஆன் கூறுகிறது.
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
(அல்குர்ஆன் 4:4)
ஆனால் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில்தான் வரதட்சணை பிற சமூக மக்களை விடவும் கடுமையாக தலைவிரித்தாடுகிறது. அதே நேரத்தில் இஸ்லாம் வரதட்சணையைக் கடுமையாக எதிர்த்து நின்று மனித சமுதாயத்தை வழிநடத்துகிறது. வேறு மதங்களில் வரதட்சணை வாங்கக் கூடாது என்று தெளிவான எந்தச் செய்திகளும் இல்லை. ஆண்கள் திருமணம் முடிக்கப் போகும் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும் என்ற சட்டமும் இஸ்லாத்தைத் தவிர வேறு மதக் கோட்பாடுகளிலும் கிடைக்கப் பெறவில்லை.
வரதட்சணை வாங்குவது அநியாயம்தான் என்றாலும் முஸ்லிமல்லாத பிற சமூக மக்கள் திருமணத்தின் போது தங்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அவைகளைக் கவனித்து குறைவாக வாங்கிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் ஆண்கள்தான் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையுடைய நமது சமூகத்தில்தான் பெண்களிடமிருந்து இலட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் வாங்கும் அளவுக்கு வரதட்சணைக் கொடுமை தாண்டவமாடுகிறது.
இதுபோக, வேறு சமூகங்களில் வரதட்சணை என்பது வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் மத்தியில் மட்டும் நடக்கிற அநியாயமாகத்தான் இருக்கும். நமது முஸ்லிம் சமுதாயத்தில்தான் ஒட்டுமொத்த சமூகத்தின் அங்கீகாரத்துடனும், ஆசியுடனும், ஆதரவுடனும் வாங்கப்படுகிறது. அல்லாஹ்வை வணங்கும் பள்ளிவாசல்களில் வைத்தும், ஜமாஅத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னிலையில் சாட்சியுடனும், மார்க்க அறிஞர்களின் துணையுடனும் அல்பாத்திஹா என்று ஓதி ஆதரித்தும் மிகப் பெரிய தொகை வாங்கப்படுகிறது.
பிற சமூக மக்கள் வரதட்சணையை தங்களது மத வழிபாட்டுத் தளங்களான கோவில்களிலோ சர்ச்சுகளிலோ வைத்து வாங்க மாட்டார்கள். எந்தப் பூசாரிகளும், அர்ச்சகர்களும், பாதிரியார்களும் அதை முன்னின்று செய்ய மாட்டார்கள். ஆனால் நமது சமூகத்தில்தான் ஆலிம்களே முன்னின்று அதற்கு மார்க்கத்தின் அங்கீகாரத்தைக் கொடுத்து பெண்களுக்கு எதிரான அநீதம் அரங்கேற்றப்படுகிறது. பாத்திஹா ஓதி வரதட்சணை வாங்குவதும், ஆலிம்களே முன்னின்று செய்வதும், ஜமாஅத் நிர்வாகம் முன்னிற்பதும், பள்ளிவாசலில் இதைச் செய்வதும் சர்வசாதாரணமாக உள்ளது.
வரதட்சணை வாங்குதல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்றும், மார்க்கக் கடமை என்றும் காட்டத்தான் இப்படி செய்கின்றனர். இப்படி நமது சமூகம் வரதட்சணை வாங்கி பெண்களைக் கொடுமைப்படுத்தியதுதான் இஸ்லாத்திற்குள் பிற சமூக மக்கள் வருவதற்கு முதல் தடையாக நிற்கிறது.
இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கை பிற சமூக மக்களுக்குப் பிடித்திருக்கிறது, அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகள் பிடித்திருக்கின்றன, வணக்கம் செலுத்தும் போது செய்கிற சுத்தம், அமைதி போன்றவை பிற மார்க்கங்களில் இருக்காது. இப்படிக் கடவுள் கொள்கை, மூடநம்பிக்கை இல்லாதது, கொள்கையில் விட்டுக் கொடுக்காத தன்மை, சமத்துவம், பிறரை நேசித்தல், பழக்க வழக்கம், ஒழுக்கமான வாழ்வு என்று இஸ்லாம் பல வழிகளில் பிற சமூக மக்களுக்குப் பிடித்திருந்தாலும், இஸ்லாத்திற்குள் வருவதற்கான முதல் தயக்கம் இந்த சமூகத்தில் தாண்டவமாடும் வரதட்சணைக் கொடுமைதான்.
முஸ்லிம்களின் இந்தக் கேடுகெட்ட நிலையினால் இஸ்லாம் மார்க்கம் அதிக விலை கொடுக்க வேண்டிய மார்க்கமாகத் தெரிகிறது. அவர்களது சமூகத்தில் பெண்களைக் கல்யாணம் முடித்துக் கொடுப்பதாக இருந்தால் பத்தாயிரமோ இருபதாயிரமோ வரதட்சணை கொடுத்தால் திருமணம் முடித்துவிடலாம். இஸ்லாத்திற்குச் சென்றால், பல இலட்சம் கொடுக்க முடியாது என்பதால் இஸ்லாத்தை மனதளவில் ஏற்றுக் கொண்டும், சமூகத்தின் வரதட்சணைக் கொடுமையால் இஸ்லாத்திற்கு வர மறுக்கிறார்கள்.
அப்படி தமிழகத்தில் பல தலைவர்களே அவர்கள் சமூகத்து மக்களை இஸ்லாத்திற்குள் அனுப்பி வைத்துக் கொண்டு, இஸ்லாம் குறித்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தாலும் உள்ளே வரமறுப்பதற்குக் காரணம் இந்த வரதட்சணைக் கொடுமைதான். அப்படியே வருவதாக இருந்தால் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு பிறகு இஸ்லாத்திற்கு வருவதாகச் சொல்கிறார்கள். தங்களது பிள்ளைகளையும் சேர்த்து இஸ்லாத்திற்குள் கொண்டு வரத் தயாராக இல்லை.
இந்தளவுக்கு பிற சமூக மக்களை இஸ்லாத்திற்குள் வரவிடாமல் தடுக்கும் காரணம் வரதட்சணைதான் என்பதை முஸ்லிம்கள் விளங்கிச் செயலாற்ற வேண்டும். ஆண்களும், ஆண்களைப் பெற்றவர்களும் வரதட்சணை வாங்குவது பெருங்குற்றம் என்றும், பெண்களும் பெண்களைப் பெற்றவர்களும் வரதட்சணை கொடுப்பது என்றும் விளங்கி நடக்க வேண்டும்.
நமது மகளுக்குத்தானே கொடுக்கிறோம் என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்வதும் வரதட்சணை எனும் குற்றத்தைத் தூண்டும் பாவம் என்பதை வரதட்சணை இல்லா சமூகத்தை உருவாக்க உதவிட வேண்டும்.
வரதட்சணை என்ற தீமை இஸ்லாத்தின் வளர்ச்சியை மட்டும் கெடுக்கவில்லை. இன்னும் ஏராளமான தீங்குகளை உருவாக்கிவிட்டது. ஒரு பெண் பூப்பெய்கிற போது இல்லற வாழ்கைக்குத் தயாராகிவிட்டாள் என்பது உண்மைதான். 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தாலும் ஓரளவுக்காவது பக்குவப்படுவதற்கு குறைந்த பட்சமாக பதினெட்டு அல்லது 20 வயதாவது பூர்த்தியடைய வேண்டும். இப்படி அரசாங்கமே சொல்கிற 21 வயதுக்குள் ஒரு பெண்ணின் திருமணம் நடந்தேறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனின் இல்லறத்திற்கும், அவளது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இன்றைய காலத்தில் பெண்களின் திருமணம் தள்ளிப்போவதற்குக் காரணம் பொருளாதாரப் பிரச்சனைதான். நிறைய மாப்பிள்ளைமார்கள் பெண் பார்க்கும் போது அதிகமான தொகையை வரதட்சணையாகக் கேட்பதால், பெண்ணின் திருமணம் பொருளாதாரத்திற்காகத் தள்ளிவைக்கப்படுகிறது.
பெண்ணின் தந்தை எவ்வளவு தொகை வைத்துள்ளாரோ அந்தத் தொகைக்குத் தக்க மாப்பிள்ளை வரும் வரை காத்திருப்போம் என்று கடத்துகிறார். இப்படிக் காசு வாங்கிக் கொண்டு பெண்களை திருமணம் முடிக்கும் கபோதிகளால் பெண்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.
இப்படியே காலங்கள் கடந்து, கடைசியில் பெண்ணுக்கு வயதாகிவிடுகிறது. இந்நிலையில் பெண் தவறான வழியில் உடல் சுகம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இன்றைய காலத்தில் பருவ வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் தங்களது கற்பைப் பேணுவது மிகவும் சிரமம் என்றாகிவிட்டது. ஏனெனில் தொலைக்காட்சியாக இருந்தாலும், பத்திரிக்கைகளாக இருந்தாலும், புத்தகங்களாக இருந்தாலும், சாதாரணமாக வானொலியைக் கேட்பதாக இருந்தாலும் கூட அது பாலின உணர்வுகளை தூண்டக் கூடிய வகையில் மாறிவிட்டது. எதிலும் நல்ல கருத்துக்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. மனிதனை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்கும் செய்திகளெல்லாம் இலட்சத்தில் ஒன்று போலாகிவிட்டது.
இவ்வளவு மோசமான காலத்தில் திருமணம் தள்ளிப் போனால் அது அந்தப் பெண்ணை ஒழுக்கக் கேட்டிற்குக் கொண்டுசென்றுவிடும்.
தகப்பனால் திருமணம் முடித்துத் தர முடியாமல் போனதற்கு ஒரு பெண் காரணங்களை ஆய்வு செய்வாள். தகப்பனாரின் பொருளாதாரம் சாப்பாட்டுக்குத்தான் உதவும். பல இலட்சங்கள் கேட்கும் இந்த சமூக ஆண்களிடம் நம்மைத் திருமணம் முடிக்க நினைத்தால் நம் தந்தையால் அது இயலாது என்று முடிவெடுத்து சிலபேர் எந்த சமூகத்து ஆணாக இருந்தாலும் நாமே நமது துணையை குறுக்கு வழியில் தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று எடுத்தேறிச் செல்வதைப் பார்க்கிறோம்.
அப்படி யாரேனும் ஒருசில பெண்கள் முஸ்லிம் சமூகத்தை விட்டு எடுத்தேறிச் செல்லும் போது பல பேருக்குக் கோபம் கொத்தளிக்கும். பேச்சுக்களெல்லாம் காரசாரமாகப் பேசுவார்கள். அந்தப் பெண் சமூகத்தைத் தாண்டிச் செல்வதற்கு நம்மைப் போன்ற இளைஞர்கள்தான் காரணம் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள். அல்லது இளைஞர்களைப் பெற்ற பெற்றோர்கள்தான் காரணம் என்பதை உணர மறுக்கிறார்கள்.
இப்படிக் குறை சொல்பவர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிக்க நான் தயார் என்று வந்தால் பெண் இப்படியான முடிவை ஒருபோதும் எடுத்திருக்கவே மாட்டாள். வரதட்சணை கேட்கக் கூடாது, தந்தாலும் வாங்க மாட்டோம் என்ற முடிவை சமூகத்திலுள்ள அனைவரும் எடுத்தால் எடுத்தேறிச் செல்லும் போக்கு நடக்காது. எனவே பெண்களிடம் வரதட்சணை கேட்பது அந்தப் பெண்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு பிறமதத்தில் துணையைத் தேடுவதற்கு வழிவகை செய்யும் தீமையாக இருக்கிறது.
பொருளாதாரம் இல்லாமல் வரதட்சணை தாண்டவத்தால் பாதிக்கப்பட்டோரில் சிலர், திருமணத்தின் மூலமாக இல்லறத்தை அனுபவிக்க முடியாமல் குறுக்கு வழியில் ஒழுக்கக் கேட்டில் விழுந்துவிடுவதையும் பார்க்கிறோம். ஒழுக்கக் கேட்டை நாம் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. இருப்பினும் அதற்கான காரணங்களைக் களைய வேண்டும்.
ஆணோ பெண்ணோ குறிப்பிட்ட பருவத்தில் திருமணம் முடிக்கவில்லையெனில் அவர்களது உணர்வுகள் தூண்டப்படும். மனிதன் உணர்வுகளுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே திருமணம் என்ற வடிகால் கிடைக்காவிட்டால் தப்பான முறையைத்தான் தேடுவான்.
ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தத் தண்ணீர் ஏரியிலிருந்து வெளியேறுவதற்கு ஆங்காங்கே சில மதகுகளைத் திறந்து தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி மதகுகளைத் திறக்காவிட்டால் ஏரியே உடைந்து காட்டாற்று வெள்ளமாக அடித்துச் சென்றுவிடுவது இயற்கை.
அதுபோன்றுதான் மனிதர்களின் உணர்வுகளும் உணர்ச்சிகளும். அதற்கான பருவம் வரும் போது அதை மதகு போன்ற வடிகாலை அதாவது திருமணம் என்ற வடிகாலை வைத்துச் சரிசெய்யாவிட்டால் தாறுமாறாக உடைந்துவிடும் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் திருமணத்திற்குத் தடையாக அமைந்துள்ள வரதட்சணை என்ற அரக்கனை அழிக்க முன்வரவேண்டும்.
தொடர்: 3
அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்பதில் அடங்கியுள்ள இன்னொரு கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (முஹம்மது அல்லாஹ்வின் தூதர்) என்ற கொள்கை முழக்கத்தில் அவர்கள் கடவுள் அல்ல; கடவுளின் தன்மை பெற்றவர் அல்ல என்பதே அந்தக் கருத்தாகும்.
ஆன்மிகவாதிகள் அனைவரும் வாழும் காலத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ கடவுளாகவோ, கடவுளின் அம்சம் கொண்டவராகவோ, நினத்ததைச் சாதிக்கும் அளவுக்குக் கடவுளுக்கு வேண்டப்பட்டவராகவோ கருதப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரும் மலஜலத்தைச் சுமந்து கொண்டு எல்லா மனிதர்களைப் போலவே உணவு உண்பவர்களாகவும், மனைவி மக்களின் பால் தேவையுடைவராகவும், நோய்வாய்ப்படுவோராகவும், இறுதியில் மரணிப்பவர்களாகவும் இருந்தனர் என்று தெளிவாகத் தெரிந்த போதும் குருட்டு பக்தியின் காரணமாக அவர்களைக் கடவுளாகக் கருதி வழிபடுகின்றனர்.
நபிகள் நாயகம் அவர்கள் தம்மைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் என்று அறிவித்தது இந்த ஆன்மிக மோசடியை சவக்குழிக்கு அனுப்பியது.
அல்லாஹ்வின் தூதர் என்பதால் மனிதத் தன்மைக்கு நான் அப்பாற்பட்டவன் என்று என்னைப் பற்றி நினத்து விடாதீர்கள் என்று தெள்ளத் தெளிவாக அவர்கள் அறிவித்தார்கள்.
முஹம்மது நபி அல்லாஹ்வின் அடிமைதான்; அல்லாஹ் அல்ல என்று திருக்குர்ஆனின் 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10 வசனங்கள் மூலம் அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.
இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் எனக்கு இல்லை என்று திருக்குர்ஆனின் 6:50, 7:188 வசனங்கள் மூலம் தெளிவுபடுத்தினார்கள்.
அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் அறவே இல்லை என்று திருக்குர்ஆனின் 3:127, 6:50, 7:188, 10:49, 10:107 வசனங்கள் மூலம் அறிவிப்பு செய்தார்கள்.
எனக்கே நான் நன்மை செய்ய முடியாது என்று திருக்குர்ஆனின் 6:17, 7:188 வசனங்கள் மூலம் தமது நிலையைத் தெளிவாக்கினார்கள்.
என்னையும் அல்லாஹ் காப்பாற்றினால் தான் உண்டு என்று திருக்குர்ஆனின் 4:106, 9:43, 23:118, 48:2 வசனங்கள் மூலம் மக்களுக்கு விளக்கினார்கள்.
என்னை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் என்னைக் காப்பாற்ற முடியாது என்பதுதான் எனது நிலை என்று திருக்குர்ஆனின் 6:17, 67:28 வசனங்கள் மூலம் தெளிவாக்கினார்கள்..
ஒரு மனிதனை நேர்வழியில் சேர்ப்பது கூட என் கையில் இல்லை; எடுத்துச் சொல்வது மட்டுமே என் பணி என்று திருக்குர்ஆனின் 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74, 28:56 வசனங்கள் மூலம் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதன் அர்த்தத்தை அழகாக விளக்கினார்கள்.
இறைவனின் அதிகாரத்தில் எனக்கு எந்தப் பங்குமில்லை என்று திருக்குர்ஆனின் 3:128, 4:80 வசனங்கள் மூலம் கொள்கைப் பிரடகனம் செய்தார்கள்.
நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று திருக்குர்ஆனின் 3:144, 11:12, 18:110, 41:6 வசனங்கள் மூலம் மக்களுக்கு மெய்யான ஆன்மிகத்தைக் காட்டினார்கள்.
அற்புதங்கள் செய்து காட்டுமாறு மக்கள் கோரிக்கை வைத்த போது நான் மனிதனாகவும், அல்லாஹ்வின் தூதராரகவும் தான் இருக்கிறேன். அல்லாஹ்வின் அம்சம் பொருந்தியவனாக இல்லை என்று திருக்குர்ஆன் 17:90-93 வசனங்கள் மூலம் பதிலளித்தார்கள்.
என்னால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியமுடியாது. எனக்கு மறைவாக இருப்பவைகளை என்னால் அறிய முடியாது என்று திருக்குர்ஆனின் 3:44, 4:164, 6:50, 6:58, 7:187, 7:188, 11:49, 12:102, 33:63, 42:17, 79:42,43 ஆகிய வசனங்கள் மூலம் அல்லாஹ்வின் தூதர் என்பதன் அர்த்தத்தை விளக்கினார்கள்.
நான் மனிதனாகவும், அல்லாஹ்வின் தூதராகவும் தான் இருக்கிறேன் என்று பிரகடனம் செய்த காரணத்தால் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னும் அவர்கள் கடவுளாக்கப்படவில்லை. அவர்களுக்குச் சிலை இல்லை. கோவில் கட்டப்படவில்லை.
ஆன்மிகத்தின் பெயரால் மற்றவர்களைப் போல் மக்களை ஏமாற்றாமல் தூய கொள்கையைச் சொன்னதால் தான் அவர்களை முஸ்லிம் சமுதாயம் தன்னை விடவும் தன் பெற்றோரை விடவும் பெரிதாக மதிக்கிறது.
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்வில் அடங்கியுள்ள மற்றொரு கருத்து இதுதான்:
அவர்கள் காட்டித் தந்த வழிமுறை அனைத்தும் அவர்களின் சொந்தக் கருத்து அல்ல; அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து கிடைத்தவையே. அவர்களின் போதனைகள் அவர்களின் சொந்தக் கருத்தல்ல என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
தலைவர்களைப் பாராட்டி விழாக்கள் நடத்திவிட்டு, அவருக்குச் சிலை எழுப்பி, மணிமண்டபங்கள் கட்டிவிட்டு அவரது அறிவுரைகளைப் புறக்கணிக்கும் ஏராளமான சமுதாயங்களை நம் பார்க்கிறோம்.
ஆனால் முஹம்மது நபியை இப்படி நாம் கருதக் கூடாது. அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது தான் அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புவதன் சரியான பொருளாகும்.
முஹம்மது நபியவர்கள் மார்க்கம் என்ற அடிப்படையில் சொன்னவை, செய்தவை அனைத்தும் அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவை தான். அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காத எந்த ஒன்றையும் மார்க்கத்தின் பெயரால் அவர்கள் வழிகாட்ட மாட்டார்கள்.
முஹம்மது நபி தன் மனோ இச்சைப்படி பேசமாட்டார். அவர் பேசுபவை அல்லாஹ்வால் அறிவிக்கப்பட்டவை தான் என்று திருக்குர்ஆன் 53:2,3,4 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
முஹம்மது நபி அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் சுயமாக எதையாவது சொல்லி இருந்தால் அவரை வலக்கரத்தால் பிடித்து அவரது நாடி நரம்பைத் துண்டித்திடுவேன் என்று 69:44,45, 47 வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியைத் தவிர வேறு எதனையும் நான் கூறுவதில்லை என்று மக்களிடம் தெரிவிக்குமாறு 6:50, 10:15, 46:9 ஆகிய வசனங்களில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
முஹம்மது நபியின் பணி அல்லாஹ் சொல்வதை எடுத்துச் சொல்வது தானே தவிர சொந்தக் கருத்தைச் சொல்வதல்ல என்று 5:92, 5:99, 13:40, 16:82, 24:54, 29:18, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்பதால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது போல் அவர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று 3:32, 3:132, 4:13, 4:59, 4:64, 4:69, 4:80, 4:115, 5:92, 8:1, 8:20, 8:46, 9:71, 24:47, 24:51, 24:52, 24:54, 24:56, 33:33, 33:66, 33:71, 47:33, 48:17, 49:14, 58:13, 64:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது எந்த அளவு கட்டாயக் கடமையோ அதே அளவு அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவதும் கட்டாயக் கடமையாகும். தூதருக்குக் கட்டுப்படாதவர்கள் முஸ்லிம்களே அல்லர் என்ற அளவுக்கு கடுமையான இவ்விஷயம் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நம்மிடம் பல்லாண்டுகளாக ஊறிப்போன கொள்கைகளும் சடங்குகளும் முஹம்மது நபியால் தடை செய்யப்பட்டவை என்று தெரிய வந்தால் அந்த வினாடியே அவற்றை விட்டு விலகினால் தான் அவர்களை அல்லாஹ்வின் தூதராக மதிக்கிறோம் என்று பொருளாகும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
—————————————————————————————————————————————————————-
இணை கற்பித்தல் தொடர்: 41
இறந்தவர்கள் செவியேற்பார்களா?
எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.
அத்தஹிய்யாத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதால் நபியவர்கள் உயிரோடு இருந்து அதைச் செவியுறுகிறார்கள் என்று பரேலவிகள் முன்வைக்கும் வாதத்திற்கான பதிலைக் கண்டோம்.
நபியவர்கள் மீது நாம் சலாம் சொல்லும் போது பதிலுக்கு அவர்கள் இப்போதும் (இறந்த பிறகும்) நம் மீது சலாம் சொல்வார்கள் என்று இவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ” என்ற துஆவை எத்தனை ஸஹாபாக்கள் நபிகளாருடன் தொழுகையில் ஓதியிருக்கிறார்கள். அத்தனை ஸஹாபாக்களுக்கும் நபியவர்கள் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?
அது மட்டுமல்லாமல் ஹிஜ்ரி 10-களிலெல்லாம் இஸ்லாம் மக்கா மதினா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியிருந்தது. பல இலட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருந்தனர். அத்தனை இலட்ச மக்களும் தங்களுடைய தொழுகையில் மேற்கண்ட அத்தஹிய்யாத் துஆவை ஓதும் போது நபிகளார் அனைவருக்கும் பதில் சலாம் சொல்லிக் கொண்டிருந்தார்களா?
தொழுகை நேரம் என்பது ஊருக்கு ஊர் மாறுபடும். உலகம் முழுவதும் 24 மணி நேரமும் கடமையான, சுன்னத்தான தொழுகைகள் என்று நடந்து கொண்டுதான் இருக்கும். அவர்கள் அனைவரும் தொழுகையில் சலாம் கூற நபியவர்கள் பதில் சலாம் சொன்னார்களா?
நபியவர்கள் பதில் சலாம் சொல்லியிருந்தால் அவர்களுக்கு அதுதான் 24 மணி நேர வேலையாக இருந்திருக்கும். வேறு எந்த வேலையும் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் உயிருடன் உலகில் வாழும் போது தொழுகையில் ஸலாம் கூறிய பல்லாயிரம் பேர்களில் ஒருவருக்கும் பதில் சலாம் கூறவில்லை என்று இருக்கும் போது இப்போது எப்படி நாம் சலாம் சொன்னால் பதில் சொல்வார்கள்?
ஆக, திருக்குர்ஆனின் 33:56 வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் தவறானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த வசனத்திற்கான விளக்கத்தை நபியவர்கள் அன்றே சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். எனவே நாம் குழம்ப வேண்டியதில்லை.
நாம் சலாம் சொன்னால் நபிகளார் பதில் சலாம் கூறுவார்கள் என்று ஆரம்பித்து கடைசியில் நபிகளார் மட்டுமல்ல அனைத்து நல்லடியார்களும், கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களும் நாம் சலாம் சொல்வதைச் செவியுறுவார்கள். பதில் சலாம் சொல்வார்கள் என்ற அளவிற்குச் சென்று விட்டனர்.
இதற்கும் ஒரு ஆதாரத்தைக் காட்டுகின்றனர்.
மண்ணறைகளைச் சந்திக்கும் போது ஓத வேண்டிய கீழ்க்காணும் துஆவை நபிகளார் கற்றுத் தருகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மையவாடிக்குச் சென்று ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் லலாஹிகூன். அடக்கத்தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச் சாந்தி பொழியட்டும்! இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1773
இந்த ஹதீஸைக் கொண்டு இறந்து போன அனைவரும் நாம் பேசுவதையும், சலாம் கூறுவதையும் கேட்கிறார்கள் என்று வாதிடுகின்றனர். “அடக்கம் செய்யப்பட்டவர்களே என்று அழைத்து நாம் சலாம் சொல்வதிலிருந்தே அவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றதா இல்லையா?” என்று கூறுகின்றனர்.
ஆனால் நாம் இந்த ஹதீஸை சற்று சிந்தித்துப் பார்க்கும் போது இந்த துஆவை நபியவர்கள் ஏன் செய்தார்கள்? எதற்காக நம்மையும் செய்யச் சொன்னார்கள் என்பது விளங்கும். வேறொரு ஹதீஸை நாம் பார்க்கும் போது இதற்கான விளக்கம் தெரியும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: திர்மிதீ 974
நபியவர்கள் மண்ணறைகளைச் சந்திக்கச் சொன்னது இறந்தவர்களிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காவோ அவர்களிடத்தில் உதவி தேட வேண்டும் என்பதற்காகவோ அல்ல. மாறாக மனிதர்களுக்கு மரண பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் மறுமையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் தான் மண்ணறைகளுக்குச் சென்று வர வேண்டும் என்று நபியவர்கள் கூறினார்கள்.
நபியவர்கள் அனுமதித்த கப்ர் ஜியாரத் என்பது இறந்தவர்கள் அனைவரும் அடக்கம் செய்யப்பட்ட பொது மையவாடிக்கு செல்வதுதான். ஆனால் இந்த கப்ரு வணங்கிகள் பொது மையவாடிக்குச் செல்வதில்லை. மாறாக ஸியாரத் என்ற பெயரில் தனிப்பட்ட ஒருவரை நல்லடியார் என்று இவர்களாகக் கற்பனை செய்து கொண்டு அவரது கப்ரில் மார்க்கம் தடை செய்த பல காரியங்களை செய்து வருகின்றனர்.
அங்கு போய் இறந்து போன மனிதர்களிடத்தில் பிரார்த்தனையும் செய்து இறைவனுக்கு இணைகற்பிக்கும் மாபாதகச் செயலையும் செய்து வருகின்றனர். ஆனால் நபியவர்களோ இறந்து விட்ட நல்லடியார்களது கப்ருகளுக்கு நாம் சென்றால் நாம் தான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார்கள்.
உயிரோடு இருப்பவர்கள்தான் இறந்து விட்டவர்களுக்காக ஏதேனும் உதவி செய்ய முடியுமே தவிர, இறந்து விட்டவர்களால் உயிரோடு இருப்பவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது என்பதை நபியவர்களின் இந்தக் கட்டளையிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
எனவே மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபிகளார் மட்டுமல்ல எந்த மனிதருக்கும் நாம் பேசுவதும் சலாம் சொல்வதும் கேட்காது என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
நபிகளார் மீது சலாம் சொல்வதை அவர்கள் நேரடியாகக் கேட்க முடியாது என்றாலும் மலக்குமார்கள் நம்முடைய சலாமை நபியவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று ஹதீஸ்களில் வருகின்றது. உலகத்தின் எந்த இடத்திலிருந்து யார் நபியின் மீது ஸலவாத் சொன்னாலும் அதை வானவர்கள் எடுத்துச் சொல்வார்கள்.
அல்லாஹ் சில மலக்குமார்களை நியமித்து வைத்திருக்கிறான். நீங்கள் என்மீது சொல்கின்ற சலாமை அவர்கள் எனக்கு எடுத்துக் காட்டுவார்கள் என்று நபியவர்கள் கூறியதாக வரும் செய்தி நஸாயியில் 1265வது செய்தியாக இடம் பெற்றுள்ளது.
இந்த செய்தியில் நபியவர்கள் நாம் சலாம் சொன்னால் நேரடியாக கேட்பார்கள் என்றால் அல்லாஹ் ஏன் மலக்குமார்களை நியமிக்க வேண்டும்? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
– வளரும் இன்ஷா அல்லாஹ்
—————————————————————————————————————————————————————-
நகர மறுக்கும் நகரா கலாச்சாரம்
எம். ஷம்சுல்லுஹா
கடந்த காலங்களில் தமிழகத்தில் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் தொழுகை அழைப்பிற்காக நகரா அடிப்பார்கள். ஐந்து வேளை தொழுகைகளுக்குத் தலா ஒரு தடவையும், ஜும்ஆவிற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளும் நகரா அடிப்பார்கள். தொழுகைகு மட்டுமல்லாமல், நோன்பு திறப்பதற்காகவும், சஹர் வைப்பதற்காகவும் நகரா அடிப்பார்கள்.
பெருநாள் பிறை பார்த்ததும் பெருநாள் தொழுகை முடிந்ததும் முஅத்தின் மட்டுமல்லாமல் பள்ளிவாசலுக்குத் தொழ வந்தவர்கள் அத்தனை பேர்களும் நகராவைப் போட்டு சாத்துவார்கள். இது மட்டுமல்லாமல் ஊரில் வேண்டாதவர்கள் புகுந்து பிரச்சனை ஏற்பட்டு விட்டாலும் இதுபோல் நகரா அடித்து மக்களைத் திரட்டுவார்கள். இது ஏதோ இஸ்லாமியக் கலாச்சாரம் போல் முஸ்லிம்கள் நம்பியிருந்தனர். அதனால் இதைப் பற்றி பெருமையாகவும் பேசிக் கொள்வார்கள். இப்போது நகரா கலாச்சாரம் நூற்றுக்கு தொன்னூறு சதவிகிதம் தமிழகத்திலும் இல்லை. அண்டை மாநிலமான கேரளத்திலும் இல்லை.
அண்மையில் ஜூன் 15, 2016 இந்து நாளிதழில் கேரளாவின் இந்த பள்ளியில் இதுவரையில் ஒலிபெருக்கிகள் இல்லை” என்று கேரளா மலப்புறம் வண்டூர் பள்ளிவாசலில் இதுவரை ஒலிபெருக்கிகள் மூலம் பாங்கு சொல்லாமல் நகரா அடிக்கின்றார்கள் என்று நகரா கலாச்சாரத்தைப் பற்றிப் புகழ்ந்து எழுதியிருந்தது.
ஆட்டுத் தோலினால் உருவாக்கப்பட்ட வட்ட வடிவ நகராவில் வளைந்த இரண்டு கம்புகளை வைத்து தாளம் தப்பாமல் முஅத்தின் அடிக்கின்ற போது அந்த கொட்டு முழக்கம் அந்தப் பள்ளியைச் சுற்றிலும் வாழ்கின்ற எட்டு திசை மக்களின் காதுகளிலும் தேன் சொட்டுகளாகப் பாயும் என்று அதை எழுதிய நிருபர் அப்துல் லதீஃப் நாகா புகழ்ந்து தள்ளியிருந்தார்.
நவீனமயமான நாகரீக காலத்தில் ஊரில் பள்ளிகளெல்லாம் ஒலிபெருக்கிகளில் பாங்கோசை எழுப்பிக் கொண்டிருக்கையில் இந்தப் பள்ளி மட்டும் தங்களது இருநூறு ஆண்டு கால நகரா பாரம்பரியத்தை விட முடியாது என்று மறுத்து விட்டதாக பெருமைப்பட அந்த நிருபர் பாராட்டியிருந்தார்.
இத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்கு மார்க்கச் சாயம் வேறு பூசியிருந்தார். மக்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு விடுக்கின்ற அறிவிப்பு என்ற அதான் (பாங்கு) இஸ்லாமிய மார்க்கத்தில் அறிமுகமாவதற்கு முன்னால் நாகூஸ் என்ற இசைக் கருவியைத் தான் நபித்தோழர்கள் அறிமுகப்படுத்த நினைத்திருந்தார்கள் என்று அதற்கு மார்க்கச் சாயத்தையும் பூசியிருந்தார். மவ்லானா நஜீப் மவ்லவி இவ்வாறு சொன்னார் என்று ஒரு பரேலவிய மவ்லவியையும் குறிப்பிட்டிருந்தார்.
நபித் தோழர்கள் நினைத்தது எப்படி மார்க்கமாக ஆக முடியும் என்று அரைவேக்காடு பரேலவிக்கு விளங்கவில்லை. நபித்தோழர்கள் அப்படி நினைத்தது உண்மை தான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதை மாற்றி விட்டார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒருநாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், “கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள்’’ என்று கூறினர். வேறு சிலர், “யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள்’’ என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா?’’ என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்!’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 604
நாகூஸ் என்பது கிறிஸ்தவர்களின் பொது வழிபாட்டு முறை என்று அந்த நிருபரும் குறிப்பிடுகின்றார்.
நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்துவ கலாச்சார அடிப்படையில் எந்த ஒரு வணக்க வழிபாட்டையும், தான் கொண்டு வந்த மார்க்கத்தில் வணக்கமாகத் தொடர்வதைக் காண சகிக்காதவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும், கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3462
இதை உதாரணத்திற்காக மட்டும் கூறுகின்றோம். யூத, கிறிஸ்தவர்களுக்கு மாற்றமாக நடக்கச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் போட்ட உத்தரவுகள் ஏராளமாக உள்ளன. எடுத்துக் காட்டிற்கு இந்த ஓர் உதாரணம் போதும்.
அதான் என்ற தொழுகைக்கான பிரதான அழைப்பிற்கு நபி (ஸல்) அவர்கள் பிற மதக் கலாச்சாரத்தின் சாயல் கூடப் படியாமல் பார்த்திருக்கின்றார்கள். அப்படியிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மறுத்த இந்தக் கலாச்சாரம் எப்படி இஸ்லாமியக் கலாச்சாரமாக இருக்க முடியும்?
அல்லாஹ்வும், அவனது தூதரும் அங்கீகரிக்காத வரை நபித்தோழர்களின் எண்ணங்கள், விருப்பங்கள் மார்க்கமாக ஆக முடியாது. அதிலும் குறிப்பாக நபியவர்கள் மறுத்த பின்பு அறவே மார்க்கமாக முடியாது. பாங்கு விஷயத்தில் இது தான் நடந்துள்ளது. இதைப் புரியாமல் இந்த பரேலவி உளறிக் கொட்டியுள்ளார். இந்து பத்திரிகையின் நிருபரும் நகராவை இஸ்லாமியச் சின்னம் போல் பூதாகரமாக்கிக் காட்டியுள்ளார்.
ஆனால் இஸ்லாத்திற்கும் நகராவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுடன் இப்படித் தான் இஸ்லாத்தில் நுழைந்த பிற மதக் கலாச்சாரங்கள் இஸ்லாமிய மார்க்க வணக்கங்களாகப் பார்க்கப்பட்டும் பாவிக்கப்பட்டும் வருகின்றன. தவ்ஹீத் ஜமாஅத் அவற்றை அடையாளங்காட்டி மார்க்கத்தை அதன் தூய வடிவில் நிலை நிறுத்தி வருகின்றது.
—————————————————————————————————————————————————————-
உண்மையை உலகறியச் செய்த கோவை விவாதம்!
எம்.எஸ். செய்யது இப்ராஹிம்
கடந்த 19.07.2016 மற்றும் 20.07.2016 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பரலேவிகளுக்கும் மத்தியில் விவாதம் நடைபெற்றது.
“திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்!” என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் எம்.ஐ.சுலைமான், அப்துந்நாசர், அப்துல் கரீம், தாவூத் கைசர், எம்.எஸ்.சையது இப்ராஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரலேவிகள் தரப்பில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி, முஸ்தபா மஸ்லஹி உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர். விவாதத்தை பரலேவி தரப்பினர் துவங்கினர்.
மூன்றாவது அமர்விலேயே முடிவுக்கு வந்த விவாதம்:
விவாதம் தொடங்கியவுடன், திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பது இறைநிராகரிப்பு என்றும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நாம் முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளைப் புறக்கணிப்பதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையை ஏற்றவர்கள் யூத சிந்தனையுடையவர்கள் என்றும், யூதர்கள் தான் இதுபோல திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செய்திகளை மறுத்தார்கள் என்றும் குற்றச்சாட்டுகளை எதிர்த்தரப்பினர் வைத்தனர்.
அதற்குப் பதிலளித்த எம்.ஐ.சுலைமான் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன செய்திகளை நாங்கள் மறுக்கவில்லை. நபிகளார் சொன்னதாக வரும் செய்தியை நபிகளார் தான் சொன்னார்கள் என்று உறுதி செய்யப்பட்டால் அதை எங்கள் உயிரைக் கொடுத்தேனும் நடைமுறைப்படுத்துவோம். ஆனால் வலிமையான ஆதாரமாக உள்ள திருக்குர்ஆன் வசனத்திற்கு எதிராக ஓரிரு நபர்கள் அறிவிக்கக்கூடிய செய்திகள் முரண்படுமேயானால் அத்தகைய முரண்பட்ட, பொய்யான, ஆபாசமான, அறுவருக்கத்தக்க வகையில் அமைந்த செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவே இல்லை; அது அவர்களது பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ளது என்றுதான் நாங்கள் சொல்கின்றோம் என்று தெளிவுபடுத்தினார்.
மேலும் திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய வகையில் இருக்கும் அந்தச் செய்திகளை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதை நாங்களாக எங்கள் சுயகருத்தாகச் சொல்லவில்லை; அல்லாஹ் தனது திருமறையில் அவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.
இந்த திருக்குர்ஆன் அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருக்குமேயானால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படியானால் அல்லாஹ் கூறிய இறைவசனங்களும், அவன் தனது தூதர் மூலம் சொன்ன செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்படாது. அப்படி முரண்பட்டால் அதை நபி சொல்லவில்லை என்பதுதான் திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் அடிப்படையில் சரியான கொள்கையாகும் என்பதை தெளிவுபடுத்தினார்.
தவ்ஹீத் ஜமாஅத் ஏதோ இப்போது வந்து இந்தச் செய்தியை புதிதாகச் சொல்லவில்லை; மாறாக இந்த நடைமுறை ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட காலத்திலிருந்தே தெள்ளத்தெளிவான ஹதீஸ் கலையின் உசூலாக (சட்டமாக) வரையறுக்கப்பட்டுள்ளது. ஹதீஸ்களைத் தொகுத்த அறிஞர்கள் மற்றும் இமாம்கள் திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று விதிகளை வகுத்துள்ளார்கள்; இது புதிய மதமோ, புதிய கொள்கையோ அல்ல என்று கூறி அதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை அள்ளி வைத்தார்.
அவர் எடுத்து வைத்த அனைத்து ஆதாரங்களையும் கவனமாகக் கேட்ட பரலேவிகள் அடுத்த அமர்வில் தங்களது ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கினர். நீங்கள் சொல்லிக்காட்டிய விதிகள் எல்லாம் ஹதீஸ் கலையில் இருப்பது எங்களுக்குத் தெரியும். இந்த விதியை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். திருக்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற இந்த விதியைத்தான் எங்களது மத்ரஸாக்களில் பாடமாக நடத்திக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னார்கள் பாருங்கள். அல்ஹம்துலில்லாஹ். மூன்றாவது அமர்விலேயே விவாதம் முடிவுக்கு வந்தது.
தவ்ஹீத் ஜமாஅத் கொண்டுள்ள சத்தியக் கொள்கையை “இது புதிய கொள்கை, புதிய மதம், இத்தனை நூற்றாண்டுகளாக இந்தக் கொள்கையை உலகத்தில் யாரும் சொல்லவில்லை” என்று வம்பு செய்தார்களோ, வாதம் செய்தார்களோ அந்த சுன்னத் ஜமாஅத்தினர், தாங்கள் வைத்த அந்த வாதம் பொய்யானது; போலியானது; தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக மக்களை உசுப்பேற்றுவதற்காகவும், கொம்பு சீவி விடுவதற்காகவும் தான் இத்தகைய பொய்யான அவதூறுகளை தங்களது சுயநலனுக்காக பரப்பி வந்திருக்கின்றார்கள் என்பதை அல்லாஹ் அவர்களது வாயிலிருந்தே வரவழைத்து நிரூபித்தான்.
“தவ்ஹீத் ஜமாஅத்தினர் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவர்கள் என்றும் யூதர்கள் என்றும் புதிய மதத்தினர் என்றும் எங்கள் மீது அவதூறுகளை நாங்கள் இல்லாத நேரத்தில், இல்லாத சபைகளில் எங்கள் மீது சொன்னீர்களே! உங்களது இமாம்களே இத்தகைய திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள் என்று தற்போது நாங்கள் உங்களுக்கு நேருக்கு நேர் அமர்ந்து சொல்லிக்காட்டும் போது ஆமாம் என ஒப்புக்கொண்டு விட்டீர்களே! அப்படியானால் உங்கள் இமாம்கள் எல்லாம் யூதக்கைக்கூலிகளா? நீங்கள் யூதர்களா? யூதக் கொள்கையைத் தான் உங்களது மத்ரஸாக்களில் பாடமாக நடத்துகின்றீர்களா? யூதக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்களை வளர்த்தெடுக்கின்றீர்களா?” என நாம் கேள்வி எழுப்ப மௌனமே பதிலாக இருந்தது. இதன் வாயிலாக இரண்டு நாட்கள் நடைபெற ஒப்பந்தம் போடப்பட்ட விவாதம் முதல் நாளின் மூன்றாவது அமர்விலேயே முடிவுக்கு வந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
இந்த விவாதத்தில் கீழ்க்கண்ட வரிசையில் தவ்ஹீத் ஜமாஅத் வாதங்களை எடுத்து வைத்தது. அவைகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பரலேவி மதத்தினர் தங்களது கொள்கை தவறுதான் என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சரியானதுதான் என்றும் ஒப்புக் கொண்டது சத்தியத்தை உலகறியச் செய்வதற்காக இறைவன் நமக்கு அளித்த மகத்தான வெற்றி என்றால் அது மிகையல்ல.
முதலாவதாக, திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை மறுக்க வேண்டும் என்று நாம் சொல்லும் கொள்கை புதிய கொள்கை அல்ல; இது தான் ஆரம்ப காலம் தொட்டு உள்ள கொள்கை என்பதற்கு ஹதீஸ் கலை வல்லுனர்கள், இமாம்கள் கூறிய அடிப்படையான செய்திகள் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.
இரண்டாவதாக, திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது; அவைகளை மறுக்க வேண்டும் என்ற விதிகளின் அடிப்படையில் எந்தெந்த இமாம்களெல்லாம் என்ன காரணங்கள் கூறி ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள் என்ற பட்டியல் போடப்பட்டது.
நபிகளார் சொன்னதாக வரக்கூடிய செய்திகளை ஸஹாபாக்கள் இந்த விதியை அடிப்படையாகக் கொண்டு மறுத்துள்ளார்கள் என்பதை விளக்கி அதற்கான ஆதாரங்கள் பட்டியல் போடப்பட்டது.
திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை மறுக்க வேண்டும் என்ற கொள்கையை நாங்கள் சொல்வதால் எங்களை காஃபிர்கள்; யூதர்கள் என்று சொல்லும் நீங்கள் இதே விதியை தங்களது நூல்களில் சட்டமாக இயற்றி வைத்து, அந்த விதியின் அடிப்படையில் பல ஹதீஸ்களை மறுத்த மத்ஹபு இமாம்களையும், சஹாபாக்களையும், இன்னபிற பல இமாம்களையும் காஃபிர்கள் என்றும் யூதர்கள் என்றும் ஃபத்வா கொடுக்கத் தயாரா என்று நாம் கேள்வி எழுப்பியதும் ஆட்டம் கண்ட பரலேவி மதத்தினர் பல்வேறு போலியான பொய்யான புரட்டுவாதங்களை வைத்தனர்.
திருக்குர்ஆனுக்கு முரண்படுவதாக வரக்கூடிய செய்திகளை மறுக்க வேண்டும் என்ற விதியை இமாம்கள் வகுத்துள்ளார்கள் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்கள் என்னென்ன? எந்தெந்த இமாம்கள் என்னென்னவெல்லாம் காரணம் கூறி ஹதீஸ்களை மறுத்தார்கள்? சஹாபாக்கள் மறுத்த ஹதீஸ்கள் என்னென்ன? அதற்கு சஹாபாக்கள் கூறிய காரணங்கள் என்ன?
நாம் அள்ளி வைத்த அடுக்கடுக்கான ஆதாரங்களுக்கு பரலேவிகளின் பதில் என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.
—————————————————————————————————————————————————————-
நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்
நாகூர் இப்னு அப்பாஸ். எம்.ஐ.எஸ்.சி.
இஸ்லாமியப் பாடல்கள் என்றழைக்கப்படும் நாகூர் ஹனிஃபா பாடல்களில் நல்ல கருத்துக்கள் இருப்பதை விட இஸ்லாமிய கொள்கைக்கு முரணான நச்சுக் கருத்துக்கள் தான் நிரம்பியிருக்கின்றன என்ற தகவல்களைத் தொடராக அறிந்து வருகின்றோம்.
அந்த அடிப்படையில் நாம் இம்மாத இதழில் “கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே” என்று துவங்கும் பாடலின் ஓர் அடியை பற்றிக் காணவிருக்கின்றோம்.
“அன்னை ஆமினாவின் பாதை செல்லம்மா”
“நீயும் மூஃமினாக முந்திக் கொள்ளம்மா”
என்ற அடியில்தான் நரகிற்கு அழைக்கும் நச்சுக் கருத்து குடிகொண்டிருக்கிறது.
இந்த பாடல் முழுவதும் பெண்கள் பேண வேண்டிய ஒழுக்கம் தொடர்பான வரிகள் அமைந்திருந்தாலும், மேற்குறிப்பிட்ட வரி மறுமையில் நட்டத்தைப் பெற்றுத்தருகின்ற ஓர் வரியாக இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர்தான் ஆமினா. இவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆறு வயதிருக்கும் போதே மரணித்து விட்டார்கள்.
அவர்கள், இஸ்லாத்தின் அடிப்படை சித்தாந்தமான ஏகத்துவத்தின் அடிப்படையில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. மாறாக, சிலைகளை வழிபடுகின்ற இணைவைப்பாளராகத்தான் மரணம் வரை இருந்தார்கள்.
அல்லாஹ்வின் இறுதித் தூதரான நபி (ஸல்) அவர்களின் தாயாராக அவர்கள் இருந்தாலும், அவர்கள் இணைவைப்புக் கொள்கையில் இருந்த காரணத்தினால் அவர்களுக்கு எவ்வித பாவமன்னிப்பும் இறைவனால் வழங்கப்படாது. அவர்கள் நரகவாதிதான் என்பதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1777
நபியவர்களின் தாயார் இணைவைப்பில் இருந்து மரணித்ததுதான் பாவமன்னிப்பு கோர தடை செய்யப்பட்டதற்குக் காரணம்.
பொதுவாக, இறைவன் ஹராமாக்கிய பெரும்பாவங்களை ஒருவன் செய்துவிட்டால், அல்லாஹ் நாடினால் அவனை மன்னித்துவிடுவான்.
ஆனால், அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்ற காரியங்களில் ஒருவன் ஈடுபட்டுவிட்டால், அவன் அதிலிருந்து மீள்கின்ற வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.
ஷிர்க்கிலிருந்து மீளாமலே ஒருவன் இறந்து விட்டால் அவனுக்கு இறைவன் புறத்திலிந்து மன்னிப்பும் கிடையாது. சுவர்க்கமும் நுழைய முடியாது. நிரந்தர நரகம்தான்.
“மர்யமின் மகன் மஸீஹ்தான் அல்லாஹ்’’ எனக் கூறியவர்கள் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’’ என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்ஆன் 5: 72
“தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்”.
அல்குர்ஆன் 4: 48
“தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்”.
அல்குர்ஆன் 4: 116
இணைவைப்பாளர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்று திட்டவட்டமாக இறைவன் கூறுவதைப் போன்றே அவர்களுக்காக யாரும் பாவமன்னிப்பு தேடவும் கூடாது என்றும் கூறுகின்றான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
அல்குர்ஆன் 9: 113
மேலும், இணைவைப்புக் காரியங்களில் ஈடுபட்ட நிலையில் நாம் எவ்வளவு தான் நற்காரியங்களில் ஈடுபட்டாலும் அவை அனைத்துமே அழிந்துவிடும். அதனால் எவ்வித பயனும் மறுமையில் கிடைக்காது என்பதையும் இறைவன் சொல்கின்றான்.
“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
அல்குர்ஆன் 39: 65, 66
இப்படி நஷ்டத்தின் மொத்த உருவமாக இருக்கின்ற இணைவைப்பில் மரணித்த ஆமினா அவர்களின் பாதை சென்றால் என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பாவமன்னிப்பு ரத்து செய்யப்படுகின்ற, மூஃமின்களின் பிரார்த்தனை கிடைக்காத, சுவனம் செல்ல முடியாத ஒரு துர்பாக்கியமான பாதையை நோக்கிச் செல்லுமாறு இப்பாடல் முஸ்லிம் பெண்களை அழைக்கிறது.
இஸ்லாமிய இன்னிசைப் பாடல்கள் என்று மக்களுக்கு மத்தியில் உலா வரும் பாடல்கள் இஸ்லாத்திற்கு முரணாக நரகை நோக்கி அழைத்துச் செல்லும் பாடலாகத்தான் இருக்கிறது என்பதற்கு இப்பாடல் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.
சில மாதங்களுக்கு முன்னால் கூட ஒருவர், நபியின் பெற்றோர் சுவர்க்கவாதிகள் என குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதற்கும் நம் ஜமாஅத் சார்பாக பதில் கொடுக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இணைவைப்பிலிருந்து மன்னிப்பு வழங்கப்படாது.
நபிக்கு எவ்வளவுதான் நெருக்கமானவர்களாக இருந்தாலும், கொள்கை இருந்தால் தான் வெற்றியே தவிர, இரத்த பந்தத்தை வைத்து எவ்விதப் பயனும் இல்லை.
நபி(ஸல்) அவர்களின் தாய்க்கு மட்டும் மறுமையில் இவ்வளவு சேதம் கிடையாது. நபியின் தந்தைக்கும் இதே நிலைமைதான் என்பதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்’’ என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 347
இன்னும் நபி (ஸல்) அவர்களுயை பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் நபியின் இரத்த பந்தம் மட்டுமல்லாது, நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தைத் துவக்கிய ஆரம்பகட்டத்தில் எதிரிகளின் அடக்குமுறைகளிலிருந்து நபியவர்களைக் காத்தவர்.
அத்தகையை உதவி செய்த அபூதாலிபிற்குக் கூட அவரிடம் ஏகத்துவம் இல்லாததின் காரணத்தினால் மன்னிப்பு வழங்கப்படவில்லை.
முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிவிட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் அல்முஃகீராவையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்’’ என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அபூதாலிப் அவர்களிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள்; தாம் முன்பு சொன்னதையே அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்’’ என்பதாகவே இருந்தது. “லா இலாஹ இல்லல்லாஹ்’’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்’’ என்று சொன்னார்கள். அப்போது தான் கண்ணியமும் மாண்பும் உடைய அல்லாஹ், “இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் -அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி – அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை’’ எனும் (9:113ஆவது) வசனத்தை அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ், “நீர் விரும்பியவரை நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்’’ எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.
நூல்: முஸ்லிம் 39
இன்னும் இது போன்ற ஏராளமான ஆதாரங்கள் நபிக்கு நெருக்கமானவர்கள் என்பதற்காக மாத்திரம் அவர்கள் முஃமின்களாக ஆகிவிடமாட்டார்கள் என்றும் உளப்பூர்வமாக ஏகத்துவத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று நடந்தால்தான் இறுதி வெற்றி கிட்டும் என்றும் தெரிவிக்கிறன.
ஆனால் ஹனிபா பாடலின் வரியோ, இணைவைப்பில் மரணித்தவர்கள் நபியின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித முகாந்திரமுமின்றி அவர்களை முஃமினாக சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் வழியில் நம்முடைய வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நரகை நோக்கி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
—————————————————————————————————————————————————————-
பள்ளிவாசலின் சிறப்புகள்
எம். முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி மங்கலம்
நபிகளார் கட்டிய முதல் பள்ளிவாசல்
பள்ளிவாசல் அமைத்து வணக்க வழிபாடுகளைச் செய்வதிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார்கள். மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு நபிகளார் மதீனாவின் வெளியே ஹர்ரா எனும் பகுதியில் மஸ்ஜிதுல் குபாவை முதலில் கட்டினார்கள். பிறகுதான் மதீனா நகருக்குள் சென்று மஸ்ஜிதுன் நபவியைக் கட்டினார்கள். இதனை கீழ்வரும் நபிமொழி விளக்குகிறது.
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிருந்து வந்த போது அவர்களை மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் கருங்கற்கள் நிறைந்த புறப்பகுதியான ஹர்ராவிலே சந்தித்தார்கள்.)
…அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி (“குபா’வில் உள்ள) பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த – நபி (ஸல்) அவர்களைப் பார்த்திராத – அன்சாரிகளில் சிலர் (அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது வெயில் பட்டபோது உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் சென்று தமது துண்டினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது நிழலிட்டார்கள். அப்போது தான் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அம்ர் பின் அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தங்கியிருந்து “இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை’ நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாட்களில்) அந்தப் பள்ளியில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தமது வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களது) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது சஅத் பின் ஸுராரா (ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த சஹ்ல், சுஹைல் என்ற இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலரவைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் இது தான் (நமது) தங்குமிடம்‘’ என்று கூறினார்கள். பிறகு அந்த இரு சிறுவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து அந்தக் களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், “இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும் போது அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள்.
அறிவிப்பவர்: சுராகா பின் மாலிக்(ரலி)
நூல்: புஹாரி (3906)
பள்ளிவாசலைக் கட்டுவதின் சிறப்பு
இம்மை வாழ்க்கை நிரந்தரமற்றது, அற்பமானது என்பதை நாமெல்லாம் அறிந்திருந்தாலும் இங்கு வாழும் போது சொந்தமாக ஒரு வீடாவது இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறோம். அதிகமான மக்கள் தங்களது இந்த ஆசையை, கனவை நிறைவேற்றிக் கொள்ள அயராது பாடுபடுகிறார்கள்; தினந்தோறும் மெனக்கெட்டு சிரமப்படுகிறார்கள். இருப்பினும், பலருடைய வாழ்நாளில் இது வெறும் பகல் கனவாகவே இருகிறது. எட்டாக் கனியாகவே இருந்து விடுகிறது.
இப்படியிருக்க, நிரந்தரமான மறுமை வாழ்வின் போது சொர்க்கத்திலே வீட்டைப் பெறும் பாக்கியம் என்பது சாதாரணமானதா? இந்தப் பொன்னான பாக்கியத்தை, அரிய வாய்ப்பினை இங்கு பள்ளிவாசல் கட்டுவது மூலமாக அல்லாஹ் நமக்குத் தருகிறான்.
உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்’’ என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (926)
நிரந்தரமான மறுமை வாழ்விலே சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவிற்கு இடம் கிடைப்பதென்பது வானங்கள், பூமி மற்றும் அவற்றிலுள்ள அனைத்தையும் விட சிறந்தது. இத்தைகைய உயரிய சொர்க்கத்திலே வீட்டைச் சொந்தமாக்கும் அற்புதமான வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அல்லாஹ்வின் ஆலயத்தை அமைப்பதற்காகப் பொருளாதாரம் கொடுப்பவர்கள், திரட்டுபவர்கள் மற்றும் அதற்காக உழைப்பவர்களுக்கு படைத்தவனின் தரமான பரிசு தயாராக இருக்கிறது.
நமக்காக வீடு கட்டும் போது இடமோ, பொருளோ, பணமோ வீண்விரையம் ஆகிவிடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து கவனத்தோடு கட்டுவோம். இதே அக்கறையும் ஆர்வமும் பள்ளிவாசல் அமைக்கும் போதும் நமக்கு இருக்க வேண்டும். எவ்வகையிலும் அதன் பணிகளில் கவனக்குறைவாக இல்லாமல் நல்ல முறையில் கட்டி எழுப்ப வேண்டும்.
பள்ளிவாசல் கட்டுவதன் நோக்கம்
பள்ளிவாசலைக் கட்டுவதன் அடிப்படை நோக்கமே ஏக இறைவனான அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவன் தனது தூதர் வாயிலாக வழிகாட்டிய வணக்க வழிபாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறியலாம்.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
(திருக்குர்ஆன் 72:18)
ஒரு முறை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் “நிறுத்து! நிறுத்து!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து “இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும்‘’ என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர்மீது ஊற்றச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (480)
அல்லாஹ் அருளிய வணக்கங்களை அவனுக்காக அவனிடம் நன்மை பெறுவதற்காகச் செய்வதற்குரிய இடமே பள்ளிவாசல்கள். இத்துடன், சமுதாயம் சார்ந்த நற்பணிகளைச் செய்வதற்கு அனுமதி இருக்கிறது. இதுகுறித்து வேறொரு இடத்தில் காண்போம்.
இதைவிடுத்து, இதற்கு நேர்மாற்றமான திசையில் இன்று பல பள்ளிவாசல்கள் இயங்கிக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. இறந்துபோன மனிதர்களிடம் உதவி தேடுவது உள்ளிட்ட எங்கும் எப்போதும் செய்யக் கூடாத, கேடுகெட்ட இணைவைப்பான காரியங்களை, அதுவும் படைத்தவனின் ஆலயத்திற்குள் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். மவ்லூது, இருட்டு திக்ர் என்று மார்க்கத்தின் அங்கீகாரமற்ற பித்அத்தான செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பள்ளிவாசலின் தகுதியை இழக்கச் செய்யும் காரியங்கள் பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.
—————————————————————————————————————————————————————-
காதியானிகள் வரலாறு தொடர் – 3
மிர்சா குலாம் நபியா?
எம்.ஐ. சுலைமான்
மிர்சா குலாமின் முக்கியமான வாதம், தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டது! தான் இறைத்தூதர் என்பதற்குச் சில முறையற்ற வாதங்களை அவன் எடுத்து வைக்கின்றான். அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதை இந்தத் தொடரில் நாம் அறிந்து கொள்வோம்.
திருக்குர்ஆனில் இறைத்தூதர்களைக் குறிக்க இரண்டுவிதமான சொற் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று நபி, இரண்டு ரசூல். இந்த இரண்டு சொற்களுக்கும் இருவேறு கருத்துக்களைக் கொடுத்து, தான் நபி என்று மிர்சா குலாம் வாதிடுகின்றான்.
நபி என்பதற்கு இலக்கணம் வேறு, ரசூல் என்பதற்கு இலக்கணம் வேறு என்று புதிய ஒரு கருத்தை விதைத்து, தன் வாதங்களை நிலைநாட்ட முயல்கின்றான்.
நபி என்றால் முந்தைய ரசூல் கொண்டு வந்த கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்வார் என்றும் ரசூல் என்றால் புதிதாக சட்டதிட்டங்கள் அவருக்கு இறக்கப்படும் என்றும் கூறுகிறான்.
எனவே நான் நபிதான், ரசூல் இல்லை என்றும் ரசூல்தான் வரமுடியாது, நபி வரலாம் என்றும் கூறுகிறான்.
நமது பதில்
நபியும் ரசூலும் ஒன்றே
நபி என்ற சொல்லையும், ரசூல் என்ற சொல்லையும் நாம் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். நபி, ரசூல் ஆகிய இரண்டையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
இவ்விரண்டுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா? இரண்டும் ஒரே கருத்தைச் சொல்லக் கூடிய சொற்களா? இதை நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.
நபி என்ற சொல் நபஅ என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இச்சொல்லுக்கு அறிவிப்பவர் என்று பொருள். அல்லாஹ்விடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்ற கருத்தில் இறைத்தூதர்கள் நபி என்று குறிப்பிடப்படுகின்றனர்.
ரசூல் என்றால் சொந்தக் கருத்தைச் சொல்லாமல் பிறரது கருத்தை அப்படியே கொண்டு சேர்ப்பவர் அதாவது தூதர் என்பது பொருள். இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் ரசூல் – தூதர் என்று சொல்லப்படுகிறது.
எல்லா நபியும் இறைவனிடமிருந்து செய்தியைப் பெறுவதால் அவர் ரசூலாகவும் இருக்கிறார். எல்லா ரசூலும் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை மக்களுக்கு மறைக்காமல் அறிவித்து விடுவதால் அவர்கள் நபியாகவும் இருக்கிறார்கள்.
ரசூல் என்றால் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். நபி என்றால் வேதம் கொடுக்கப்படாதவர்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்கள் ஆதாரமாக உள்ளதாக இவர்கள் சொல்கின்றனர்.
2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15, 5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71, 57:25, 62:2 ஆகிய வசனங்கள் ரசூலுக்கு வேதம் வழங்கப்படும் என்று சொல்வதைச் சான்றாகக் காட்டுவார்கள்.
ஆனால் 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81, 19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26 ஆகிய வசனங்கள் நபிக்கும் வேதம் வழங்கப்பட்டது என்று சொல்வதால் இவர்களின் இந்த வாதம் அடிபட்டுப் போகின்றது.
ரசூலுக்குத் தனி மார்க்கம் வழங்கப்படும். நபி என்பவர் இன்னொரு நபிக்கு வழங்கப்பட்ட மார்க்கத்துக்குப் புத்துயிர் ஊட்டுவார் என்று சிலர் வாதிடுகின்றனர்.
9:33, 10:47, 17:15, 48:28, 61:9 ஆகிய வசனங்கள் ரசூலுக்கு தனி மார்க்கம் என்று சொல்வதை சான்றாகக் காட்டுகின்றனர். இது தவறாகும்.
ஏனெனில் 19:49, 66:8 ஆகிய வசனங்கள் நபிக்கும் தனி மார்க்கம் வழங்கப்பட்டதாகக் கூறுகிறது.
மேலும் 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6 ஆகிய வசனங்கள் நபியும் ரசூலும் ஒன்று என்று சொல்கின்றன.
நபி வேறு, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் மட்டும் உள்ளது. ஆனாலும் அதுவும் இந்த வாதத்தை நிலைநாட்ட உதவாது.
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும்போது அவர் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.
அல்குர்ஆன் 22:52
இவ்வசனத்தில் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், எந்தத் தூதரானாலும்… என்ற சொற்றொடர் இடம் பெறுகின்றது. நபியும் ரசூலும் ஒன்றல்ல; வெவ்வேறானவை எனக் கூறுவோர் இதைச் சான்றாகக் காட்டுவார்கள்.
இதை அப்படியே பொருள் கொண்டு, நபி வேறு; ரசூல் வேறு எனக் கூறினால் அதற்கு மாற்றமாக அமைந்த ஏராளமான வசனங்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படும்.
மனிதர்களின் பேச்சு வழக்கில் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களைப் பயன்படுத்தி, தனித்தனி பொருள் போன்று கூறும் வழக்கம் உள்ளது. குறிப்பாக எதிர்மறையாகப் பேசும்போது இது அதிக அளவில் காணப்படுகிறது. அரபு மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளிலும் இந்த வழக்கம் உள்ளது.
எனக்கு எந்தக் கூட்டாளியும், நண்பனும் கிடையாது.
எனக்கு எந்தச் சொந்தமும், பந்தமும் இல்லை என்பன போன்ற சொற்களை நாம் பயன்படுத்துகிறோம்.
அதிக அழுத்தம் கொடுப்பதற்காக ஒரே கருத்தில் அமைந்த இரு சொற்களை, இரு கருத்துக்களைப் போல் பயன்படுத்துகிறோம். அது போல் மேற்கண்ட வசனத்தைப் புரிந்து கொண்டால் நபியும் ரசூலும் ஒன்றே எனக் கூறும் வசனங்களுடன் பொருந்திப் போகின்றது.
எனவே நபி வேறு, ரசூல் வேறு என்று வாதிட்டு தன்னை நபி என்று மிர்சா குலாம் வாதிடமுடியாது.
கதியானிகளின் வாதம்
வானவர்களிலும், மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்
(அல்குர்ஆன் 22: 75)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் ரசூல்மார்களை மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுப்பான் என்று முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி கூறுகிறான்.
(தூதர்கள் என்று மொழிபெயர்த்த இடத்தில் ரசூல் என்ற அரபி பதம் இடம்பெற்றுள்ளது)
அல்லாஹ் தேர்ந்தெடுப்பான் என்று வருங்காலத்தில் முஹம்மது (ஸல்) அவர்களைப் பார்த்து கூறுவதிலிருந்து முஹம்மதிற்குப் பிறகு ரசூலை அல்லாஹ் அனுப்புவான் என்பதை விளங்கலாம் என்பது மிர்சா குலாம் வகையறாக்களின் வாதம்.
நமது பதில்
ஒரு பெரிய அந்தஸ்தில் உள்ளவர் ஒரு காரியத்தைச் செய்த பிறகு அவருக்கு கீழ் வேலை செய்யக்கூடியவேரோ அல்லது வேறு யாரோ, “நீங்கள் ஏன் இதை செய்தீர்கள்?” என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு அந்த உயர் அந்தஸ்தில் உள்ளவர், “நான் அப்படித்தான் செய்வேன். அதைக் கேட்க நீங்கள் யார்?” என்று அவர் ஏற்கனவே செய்த காரியத்தைப் பற்றி வருங்காலத்தைப் பயன்படுத்திதான் கூறுவார் (நான் அப்படித்தான் செய்தேன் என்று) இறந்த காலத்தில் கூறமுடியாது. ஆக அவருடைய நோக்கம் தன்னுடைய அதிகாரத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதுதான்.
இது போன்றுதான் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராக அனுப்பிய போது மக்கத்து காபிர்கள், இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பி இருக்கின்றான்? என்று அல்லாஹ்வைக் கேலி செய்யும் விதமாகக் கூறினார்கள்.
“(மக்கா மதீனா ஆகிய) இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கேட்கின்றனர். உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கை வசதிகளை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.
(அல்குர்ஆன் 43: 31)
மேலும் இவர்கள் கூறுகிறார்கள்: இந்த தூதருக்கென்ன (அவர் மற்ற மனிதர்களைப் போன்றே) உணவு உண்கிறார் இன்னும் வீதிகளில் நடக்கிறார் (அல்லாஹ்வுடைய தூதராக அவர் இருந்தால்) அவர் பால் ஒரு மலக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? அப்பொழுது அவர் இவருடனிருந்து அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராக இருப்பார்
(அல்குர்ஆன் 25: 7)
இவ்வாறெல்லாம் அல்லாஹ் முஹம்மதை (ஒரு மனிதரை) மக்களுக்குத் தூதராக அனுப்பியதைக் குறை கூறினர். மக்கத்துக் காஃபிர்களுடைய வாதத்திற்குப் பதிலளிக்கும் வகையில்தான் இந்த வசனத்தை அல்லாஹ் அமைத்திருக்கின்றான்.
அல்லாஹ் மலக்குகளிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுப்பான் என்று கூறுகிறான் இதன் முலம் தனது அதிகாரத்தையும் வல்லமையையும் காட்டுகிறான்
அப்படியே அல்லாஹ், முஹம்மதிற்குப் பிறகு தூதரை அனுப்புவான் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் இவனுக்கு இதில் ஆதாரம் இல்லை. ஏனென்றால் இந்த வசனத்தில் அல்லாஹ் ரசூலைத்தான் அனுப்புவான் என்று கூறுகிறான்; நபியை அனுப்புவான் என்று கூறவில்லை.
நபி வரலாம், ரசூல் வரமுடியாது என்பது தான் இவனின் வாதம். எனவே ரசூல் என்ற பதம் பயன்படுத்தப்பட்ட இந்த வசனத்தை அவனுக்கு ஆதாரமாகக் கொண்டு வரமுடியாது.
—————————————————————————————————————————————————————-
மண்ணின் மைந்தன் ஏசு விண்ணில் வாழ முடியுமா?
எம். ஷம்சுல்லுஹா
இவ்வுலகில் இரண்டு சாரார் ஏசு என்று அழைக்கப்படக்கூடிய ஈஸா (அலை) மரணித்து விட்டதாக மரண வாக்கு மூலம் கொடுக்கின்றனர். அதில் ஒரு சாரார் இறை மறுப்பாளர்களான உலகில் மிக அரிதிலும் அரிதாகவும் அற்பத்திலும் அற்ப சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்ற காதியானிகள். பொய்யை மூலதனமாகக் கொண்ட இந்தப் போலி மதத்தினர் ஏசுவின் மரணம் காஷ்மீரிலே என்று கூறுகின்றார்கள். இன்னொரு சாரார் உலகில் பெருவாரியான எண்ணிக்கையில் வாழ்கின்ற கிறிஸ்துவர்கள் ஏசு சிலுவையில் அறையப்பட்டதாகப் பொய்யுரைக்கின்றனர்.
அவர்கள் (ஏகஇறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்‘’ என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 4:156-158
தூய திருக்குர்ஆன் இவ்விரு சாராரின் பொய்யை சிலுவையில் அறைந்து விடுகின்றது. இயேசு விண்ணுலகில் இருக்கின்றார் என்று பறை சாற்றுகின்றது. இதற்குப் பின்வரும் அல்குர்ஆனின் வசனமும் ஹதீஸ்களும் சான்று பகர்கின்றன.
“அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி’’ (எனக் கூறுவீராக.)
அல்குர்ஆன் 43:61
அவரை கியாமத் நாளின் அத்தாட்சி அதாவது உலகம் அழியும் நாளுக்கு முன்னர் வருவார் என்று கூறுகின்றது.
இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஈஸா நபி இறுதி நாள் நெருங்கும் போது வருவார் என்று கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! மர்யமின் புதல்வர் (ஈசா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை உடைப்பார்! பன்றியைக் கொல்வார்! காப்புவரியை (ஜிஸ்யா) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 2222, 2476, முஸ்லிம் 221
திருக்குர்ஆன், தான் கூறுகின்ற இந்த வாதத்தில் மட்டுமல்லாமல், ஏனைய வாதங்களிலும், இது பொய்யாக இருந்தால் அதை உடைத்துக் காட்டும் படி அகில உலகத்தின் ஆன்மீகவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் ஒரு பகிரங்க அறைகூவலும் விடுக்கின்றது. இது வரைக்கும் அது விடுக்கின்ற அறைகூவலைச் சந்திக்க எவனும் வரவுமில்லை. இனி எவனும் பிறக்கப் போவதுமில்லை.
ஈஸா நபி விண்ணுலகில் இருக்கின்றார் என்று சொல்லும் போது அவர் மூச்சு விடுகின்ற பிராண வாயு எப்படி கிடைக்கின்றது? அவருக்கு உணவு எப்படி கிடைக்கின்றது? என்று குருட்டுத்தனமான கேள்விகளை ஈஸா நபி இறக்கவில்லை என்று வாதிடும் இவர்கள் தொடுக்கின்றனர். இதற்கு ஈஸா (அலை) அவர்களே தான் பிறந்தவுடன் தெளிவான பதிலை அளிக்கின்றார்கள்.
நான் எங்கே இருந்தபோதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.
அல்குர்ஆன் 19:31
இந்த வசனத்தில், நான் எங்கிருந்தாலும் பாக்கியம் பொருந்தியவன் என்ற அவர்களது வார்த்தை ஆழமான அர்த்தம் பொதிந்ததாகும். அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர். அவர்களைத் தாண்டி வேறெங்கும் போகப் போவதில்லை. ஒருக்கால் அவர்கள் நாடு கடத்தப்பட்டாலும் பூபாகத்தைத் தாண்டி வேறெங்கும் போகப் போவதில்லை. அப்படியானால் இந்த வார்த்தை அவர்களுக்கு இந்த பூபாகத்தைத் தாண்டி எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அந்த வாழ்க்கையில் எனக்கு இறைவனுடைய பாக்கியம் இருக்கின்றது. இறுதி நாள் வரை தாக்கு பிடிக்கின்ற அளவுக்கு என் உடற் கூறில் பாக்கியம் செய்யப்பட்டுள்ளது என்ற கருத்தை இங்கு பதிகின்றார்கள்.
கால நீட்சி
விண்ணுலகப் பயணம் என்பது ஒளியின் வேகத்தில் அமைந்தது.
ஒளி ஓரிடத்திலிருந்து கிளம்பியதிலிருந்து ஓராண்டுக் காலத்தில் பயணம் செய்யக்கூடிய தூரமே ஒளியாண்டுத் தொலைவு.
ஒளி ஒரு விநாடியில் சுமார் 3 லட்சம் கி.மீ. தூரம் செல்லும். அந்த அளவில் ஒளியாண்டு தூரம் என்பது சுமார் 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. ஆகும். நட்சத்திரங்களுக்கான தூரத்தை கி.மீ. கணக்கில் சொல்வதானால், நிறைய பூஜ்ஜியங்களைப் போட வேண்டியிருக்கும் என்பதால், ஒளியாண்டு என்ற அலகைப் பயன்படுத்துகின்றனர்.
அண்டவெளியில் உள்ள ஏதோ ஒரு கிரகத்துக்கு ஒருவர் அல்லது பலர் கிளம்புகிறார்கள். போக, வர அவர்களுக்கு 5 ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் பூமிக்குத் திரும்புகிறார்கள். இங்கு வந்து பார்த்தால், அவர்களது பிள்ளைகளும் பெண்களும் படு கிழவர்களாகியிருப்பார்கள். விண்வெளிப் பயணம் செய்தவர்களைப் பொறுத்தவரை 5 ஆண்டுகள்தான் கடந்திருக்கும். ஆனால், பூமியில் உள்ளவர்களுக்கு 50 ஆண்டுகள் கடந்திருக்கும். இது எப்படி?
கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பயணம் செய்யும்போது, அவர்களின் கடிகாரங்கள் மிக மெதுவாகச் செயல்படும். அதாவது, காலம் நிதானப்பட்டுவிடும். ஆனால், அது அவர்களுக்குப் புலப்படாது. கடிகாரங்கள் மெதுவாகச் செயல்படும்போது காலண்டரும் அப்படியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு ஓராண்டு முடியும்போது பூமியில் உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கும். ஐன்ஸ்டைன் கூறிய கொள்கையின்படி இவ்விதம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஐன்ஸ்டைன் கூறியது சரிதான் என்பது பின்னர் நிரூபணமாகியுள்ளது.
அண்டவெளியில் பூமியைவிடப் பல மடங்கு பெரிய கிரகம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் விளைவாக அந்தக் கிரகம் அதிக ஈர்ப்பு சக்தி கொண்டதாக இருக்கும். அப்படியான கிரகத்தில் கடிகாரம் மெதுவாகச் செயல்படும். அவர்களின் ஒரு மணி நேரம் என்பது பூமியில் உள்ளவர்களுக்குச் சில ஆண்டுகளாக இருக்கலாம். இது ஈர்ப்பு சக்தியின் விளைவாக ஏற்படுகிற கால நீட்சி ஆகும். இதுவும் ஐன்ஸ்டைனின் கொள்கையின்படி ஆனதே. எங்கோ இருக்கும் கிரகத்துக்குச் செல்ல வேண்டாம். பூமியிலிருந்து மிக உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக் கோள்கள் விஷயத்தில் மிக அற்ப அளவுக்குக் கால நீட்சி நிகழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் பார்த்தால் ஈஸா நபியின் விண்ணுலகப் பயணம் கால அளவிலும் பாக்கியம் செய்யப்பட்டுள்ளதாகவே அமைந்துள்ளது. ஆம்! இங்கும் அவரைப் பற்றி அல்லாஹ் இறுதி நாளின் அடையாளம் என்ற வார்த்தையின் அர்த்தம் விண் மீன்களைப் போன்று பன்மடங்கு பரிமாணங்களில் ஜொலிக்கின்றது. இந்த வகையில் நம்மையும் அறியாமல் நமது நாவுகள் அந்த நாயனை நோக்கி சுபஹானக்க – நீ தூயவனே – என்று போற்றிப் புகழ்ந்து விடுகின்றன!
இப்போது ஈஸா (அலை) அவர்களுக்கு எப்படி உணவு இல்லாமல் வாழப் போகின்றார்கள் என்று அறியாமை வாதத்தை எழுப்புகின்ற அறிவிலிகளுக்கு, துருவப் பகுதியில் வாழ்கின்ற சில பிராணிகளுக்கு எப்படி உணவு கிடைக்கின்றது என்ற அற்புதத்தை அறிவியல் அடிப்படையில் பார்ப்பதற்காக, நீள் துயில் ரகசியம் என்ற தலைப்பில் ராமதுரை அவர்கள் தமிழ் இந்து நாளேட்டில் எழுதிய கட்டுரையில் ஒரு துருவப் பயணத்தை மேற்கொள்வோம்.
மனிதனால் விலங்குகளைப் போல் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது.
மனிதனால் தொடர்ந்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. ஆனால், வட துருவப் பகுதிக்கு அருகே உள்ள ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, கனடாவின் வட பகுதி, ரஷ்யாவின் வட பகுதி போன்றவற்றில் குளிர் காலம் வந்தால், சில வகை விலங்குகள் அன்ன ஆகாரம் இன்றி இயல்பாக மாதக் கணக்கில் உறங்க ஆரம்பித்துவிடும். என்ன முயன்றாலும் அவற்றை எழுப்ப முடியாது. இந்த வகை உறக்கத்துக்கு நீள் துயில் என்று பெயர். குளிர் காலம் அகன்றதும் அவை விழித்துக்கொண்டு நடமாட ஆரம்பித்துவிடும்.
மரத் தவளைகள், தரை அணில், வௌவால், சில வகை எலிகள், ஒரு வகைப் பாம்புகள் எனப் பல சிறிய பிராணிகளுக்கு இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடும் திறன் உள்ளது.
இயற்கை அளித்த வரம்
எங்கும் வெண் பனியால் மூடப்படும் பிராந்தியத்தில் கடும் குளிர் காலத்தில் இரை தேடிப் போவது கடினம். தவிர, இரை கிடைக்காது. எனவே, குளிர் காலத்தில் உயிர் பிழைக்க இப்பிராணிகள் உணவு, தண்ணீர் இன்றிப் பல மாத காலம் தொடர்ந்து உறங்குகின்றன. இது இயற்கை அளித்த வரம். நீள் துயில் ஆங்கிலத்தில் ‘ஹைபர்னேஷன்’ (பிவீதீமீக்ஷீஸீணீtவீஷீஸீ) எனப்படுகிறது.
நீள் துயில் காலத்தில் இவை சுருண்டு படுத்துக்கொள்ளும். தரை அணில் ஒன்பது மாத காலம் கூட நீள் துயிலில் இருக்கும். நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளைப் பார்த்தால் செத்த மாதிரி இருக்கும். உடலின் மேற்பகுதியில் பனித் துகள்கள் படிந்திருக்கலாம். உடல் பயங்கரக் குளிர்ச்சியாக இருக்கும். தொட்டுப் பார்த்தால் இதயத் துடிப்பு அறவே நின்றுவிட்டது போல இருக்கும்.
சாதாரணக் காலங்களில் துருவ வௌவாலின் இதயம் ஒரு நிமிடத்துக்கு 400 தடவை துடிக்கும். நீள் துயில் காலத்தில் அது ஒரு நிமிடத்துக்கு 25 ஆகக் குறைந்துவிடும். சுவாசம் ஒரு மணிக்கு ஒரு தடவை என்ற அளவுக்குக் குறைந்து போவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அயர் நிலைத் துயில்
துருவ வட்டாரப் பிராணிகள் நீள் துயிலில் ஈடுபடுவதும் பின்னர் விழித்தெழுவதும் எப்படி என விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் இன்னமும் இதன் ரகசியம் தெரியவில்லை. இது ரத்தம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒருமுறை விஞ்ஞானிகள் நீள் துயிலில் இருந்த தரை அணிலின் உடலிலிருந்து சிறிது ரத்தத்தை எடுத்து நீள் துயிலில் ஈடுபடாத தரை அணிலின் உடலில் செலுத்தினர். அதுவரை விழித்த நிலையில் இருந்த அந்தத் தரை அணில் உடனே நீள் துயிலில் ஈடுபட்டது.
நீள் துயில் மாதிரியில் இன்னொரு நிலையும் உண்டு. இது அயர் நிலை எனப்படுகிறது. அதாவது, துருவக் கரடிகள் இவ்வித நிலைக்கு உள்ளாகின்றன. அயர் நிலைக்கும் நீள் துயில் நிலைக்கும் வித்தியாசம் உண்டு. அயர் நிலையில் உள்ள பிராணிகளை உலுக்கினால் அவை விழித்துக்கொள்ளும். நீள் துயிலில் உள்ள பிராணிகளை எழுப்ப முடியாது.
அயர் நிலைக்குச் செல்கின்ற விலங்குகளும் உணவு எடுத்துக்கொள்ளாமல் பல நாட்களுக்குச் சுருண்டு உறங்கும். ஆனால், குளிர் காலம் என்று இல்லாமல் நினைத்த நேரத்தில் அவற்றால் அயர் நிலைக்குச் செல்ல முடியும். ஆங்கிலத்தில் இதை ‘டோர்போர்’ என்று கூறுகின்றனர்.
நீள் துயில் ஆய்வு
உலகில் சில பகுதிகளில் கடும் வெயில் காலத்தில் சில வகைப் பிராணிகள் பெரும்பாலும் நிலத்துக்குள் புதைந்துகொண்டு நீள் துயிலுக்குச் செல்கின்றன. சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, முதலை, சில வகைத் தவளைகள் இவ்விதம் நீள் துயிலில் ஈடுபடுகின்றன. இந்த வகை நீள் துயிலை ஆங்கிலத்தில் ‘எஸ்டிவேஷன்’ (ணிstவீஸ்ணீtவீஷீஸீ) என்று கூறுகின்றனர்.
மனிதனால் இப்படிப் பல மாத காலம் அன்ன ஆகாரம் இன்றி இருக்க முடியாது. ஒருவர் பல மணி நேரம் தொடர்ந்து உறங்கலாம். ஆனால், அப்படி உறங்கும்போதும் உடல் வெப்ப நிலை ஒரே சீராக இருந்தாக வேண்டும். ரத்த ஓட்டம் வழக்கம்போல இருக்க வேண்டும். இதயமும் வழக்கம்போலச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்துக்கும் உடலுக்குச் சக்தி வேண்டும்.
(உடலில் சக்தி இல்லாமல் கஹ்ஃப் வாசிகள் தூங்கியது இந்த வகையில் ஓர் அற்புதமாகும்)
நீண்ட விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளி வீரர்களைத் துருவப் பகுதி பிராணிகளைப் போல் நீள் துயிலில் ஈடுபடச் செய்தால் பல வகைகளிலும் வசதியாக இருக்கும். இந்த நோக்கில் நாஸா 1950-களில் நீள் துயில் குறித்து ஆராய்ச்சி நடத்தியது. ரஷ்யர்களும் இவ்வித ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாஸா இப்போது மறுபடியும் நீள் துயில் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தில் கிளம்பினால் போய்ச் சேர 8 மாதங்கள் ஆகும். விண்கலத்தில் 6 பேர் ஏறிச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த நேரத்திலும் 4 பேர் நீள் துயிலில் ஈடுபடுவதாக வைத்துக்கொண்டால் சாப்பாட்டுப் பிரச்சினை உட்படப் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும். விண்கலத்தில் 2 பேருக்கு 8 மாதக் காலத்துக்கான உணவு இருந்தால் போதும். எனவே, விண்கலத்தில் ஏற்றிச் செல்ல வேண்டிய உணவுப் பொருட்களின் அளவு குறையும். அந்த அளவில் எடுத்துச் செல்ல வேண்டிய எடை குறையும்.
எதிர்காலத்தில் அண்டவெளியில் எங்கோ இருக்கின்ற ஒரு கிரகத்துக்குச் செல்ல பல ஆண்டுப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். அவ்விதப் பயணத்துக்கு நீள் துயில் ஏற்பாடு மிகவும் உதவும்.
நீள் துயில் பயன்கள்
உணவுத் தேவை மட்டுமன்றி, விண்கலத்தில் ஆக்சிஜன் தேவையும் குறைந்துவிடும். ஏனெனில், நீள் துயிலில் ஈடுபட்டவர்களின் சுவாசம் குறைவாக இருக்கும். தவிர, விண்கலத்தில் சேரும் கழிவுகளும் குறைவாக இருக்கும். வட துருவப் பகுதியில் நீள் துயிலில் ஈடுபடும் பிராணிகளின் உடலிலிருந்து கழிவுகள் வெளியாவதில்லை.
மனிதனால் நினைத்தபோது நீள் துயில் நிலைக்குச் செல்ல முடியும் என்றால் அது பெரும் புரட்சியாக இருக்கும். வேலைக்குச் சென்று சம்பாதிக்க விருப்பம் இல்லாதவர்கள் நீள் துயிலில் ஈடுபட்டுவிடலாம். வீட்டில் சமையல் செய்ய விரும்பாத பெண்கள், தங்களது கணவன்மார்கள் திண்டாடட்டும் என்ற எண்ணத்தில் நீள் துயிலில் ஈடுபடலாம்.
விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட மருந்தை உட்கொள்வதன் மூலம் அல்லது ஊசி போடுவதன் மூலம் ஒருவரைத் திட்டமிட்டு நீள் துயிலில் ஈடுபடும்படி செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.
நீள் துயில் நிலையில் இதயத் துடிப்பு குறையும். சுவாசம் குறையும் என்பதால் மருத்துவ நிபுணர்களும் நீள் துயில் விஷயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். விபத்து காரணமாக அல்லது வேறு காரணத்தால் ஆபத்தான நிலையில் உள்ள ஒருவருக்கு சிகிச்சை அளிக்க அவரை செயற்கையாக நீள் துயிலில் ஈடுபடும்படி செய்தால் டாக்டர்களால் உரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளப் போதுமான அவகாசம் கிடைக்கும்.
ராமதுரையின் “நீள் துயில் ரகசியம்” என்ற இந்தக் கட்டுரையில் துருவப் பிராணிகள் எப்படி உணவின்றி கழிக்கின்றன; காலந்தள்ளுகின்றன என்பதையும் பார்க்கின்றோம். இன்றைக்கு விண்ணுலகப் பயணத்திற்கு இந்த நீள் துயில் பயணம் தான் கை கொடுக்கும் என்ற விஞ்ஞானிகளின் பார்வையையும் அந்த திசையை நோக்கிப் பயணம் செய்வதையும் நாம் பார்க்கின்றோம்.
இது உணர்த்துகின்ற பாடம் என்ன? ஏசு என்ற ஈஸா நபியின் விண்ணுலக வாழ்க்கையில் மனித சமுதாயம் கடுகளவு கூட சந்தேகப்படாத அளவுக்கு உண்மை என்பது நிரூபணமாகி விடுகின்றது. அதைத் தான் அல்குர்ஆன் 43:61 வசனம் அடித்துச் சொல்கின்றது. இஸ்லாம் தான் அல்லாஹ்வின் உண்மை மார்க்கம் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி உள்ளது. அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
—————————————————————————————————————————————————————-
நபித்தோழர்கள் இறைத்தூதர்கள் அல்லர்!
எம்.எஸ். ஜீனத் நிஸா, மேலப்பாளையம்.
இணைவைப்பை வேறோடும் வேறடி மண்ணோடும் தகர்த்தெறிய வேண்டும் என்ற நமது மாநிலத் தலைமையின் பிரகடனத்தை ஏற்று, அதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டு, தடைகளைத் தகர்த்தெறிந்து, மக்களின் முழுமையான ஆதரவோடு இணைவைப்புக் கொள்கைக்கு எதிரான ஷிர்க் ஒழிப்பு மாநாடு இனிதே நடந்து முடிந்தது.
லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை கூறியதோடு நமது கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல் அழைப்புப் பணியை உயிர் மூச்சாகக் கொண்ட இந்த ஜமாஅத் இஸ்லாத்தின் மற்றுமொறு அடிப்படைக் கோட்பாடான முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற பிரகடனத்தை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரப் பொருளாக முன்வைத்துள்ளது.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற அடிப்படைக் கோட்பாடு எட்டுத்திக்கும் ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நபிகளாரை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும், அவர்களது சொல் செயலை நமது வாழ்வின் நெடுகிலும் கடைபிடிக்க வேண்டும் என்பதை பசுமரத்தாணி போல மக்களின் மனதிலே பதியவைக்க வேண்டும் என்பதே நமது அடுத்த இலக்காகும். இதற்குக் கொள்கை அடிப்படையிலேயே பலர் முட்டுக்கட்டையாக இருப்பதைக் காண்கின்றோம்.
இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற சத்தியக் கொள்கையைப் பறைசாற்றிக் கொண்டிக்கும் ஜமாஅத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
குர்ஆன் ஹதீஸ் மட்டுமில்லாமல் நபித்தோழர்களின் சொல், செயல் மற்றும் அவர்களின் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படை என்று சிலர் கூறித்திரிகின்றனர்.
அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் எதனைக் கூறுகின்றனவோ அதற்கே இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்பட வேண்டும். திருமறை குர்ஆனின் பல இடங்களிலும் அல்லாஹ் தனக்கும் தன் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படவேண்டும் என்றும், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுமாறும், அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டுமென்றும், அவர்கள் மக்களுக்கு உதாரணப் புருஷராகத் திகழ்ந்துள்ளார்கள் என்றும் சிறப்பித்து கூறியுள்ளான்.
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுவீராக! “அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்’’ எனக் கூறுவீராக!
அல்குர்ஆன்: 3:31 32
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடத்தையாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாய் உண்டாக்கப்படுபவை ஆகும். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (மறுமை நாளான)து வந்தே தீரும். உங்களால் (இறைவனைத்) தோற்கடிக்க முடியாது.
நூல்: புகாரி 7277
எவரைப் பார்த்து நாம் படிப்பினை பெற வேண்டும், நம்மைச் சீர்படுத்திக் கொள்ளவேண்டும் என்று இறைவன் குறிப்பிட்டானோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் தூதரும் நமக்கு இது குறித்து உபதேசிக்காமலில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’’ என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்’’ என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 7280
அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று “நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடிவந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். ஆகவே தப்பித்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறினார். அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பி விட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர்; தமது இடத்திலேயே தங்கிவிட்டனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர். இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டு வந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறு செய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும்.
நூல்: புகாரி 7283
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைக் (தீயில் விழாமல்) தடுத்துக்கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவ)திலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறீர்கள்.
நூல் : புகாரி:6483
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த கூற்றுகளுக்கெல்லாம் மாற்றமாக நபித்தோழர்களின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற வாதம் அமைந்துள்ளது. மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் செய்த தவறுகளையும், மார்க்க விவகாரங்களில் அவர்களுக்குத் தெரியாமல் இருந்த பல செய்திகளையும் நினைவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நபிகளாரின் வாழ்க்கை வரலாறு, நபிகளாரின் நற்குணங்கள், அவர்களின் ஒழுக்கம், நேர்மை, நீதம், அவர்கள் அனைத்து விஷயங்களிலும் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தது இது போன்ற நபிகளாரைப் பற்றிய எண்ணற்ற தலைப்புகளின் கீழ் நமது கொள்கைச் சகோதரர்கள் வீரியமாகப் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை வலியுறுத்துவது எவ்வளவு அவசியமோ அது போல நபிகளாரின் அங்கீகாரம் இல்லாத விஷயங்களில் நபித்தோழர்களைப் பின்பற்றுவது கூடாது என்பதை வலியுறுத்துவதும் அவசியமாகும்.
இது போன்ற பல கட்டுரைகளை பல்வேறு களங்களில் வெவ்வேறு முறைகளில் நாம் கூறியிருந்தாலும் தங்கள் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் வழிகேட்டிலேயே பல அமைப்புகள் இருப்பதை நம்மால் காணமுடிகின்றது.
எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.
அல்குர்ஆன்: 88:21
இவ்வசனத்திற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே திரும்ப திரும்ப இக்கருத்துக்களை முன் வைக்கின்றோம். மறுமையில் எவரும் கைசேதம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக மக்கள் மீது அதிக அக்கறை கொண்டு அவர்கள் தம் மீது காட்டிய வெறுப்புகளையெல்லாம் மறந்து விட்டு, தன் எதிரி கூட நரகத்திற்குச் சென்று விடக்கூடாது என்று எண்ணிய உத்தம நபியை உயிரிலும் மேலாக நேசித்த காரணத்தினால் தான் மீண்டும் இந்த எழுச்சிமிக்க பிரச்சாரம்.
இவர்களுக்கும் நமக்கும் என்ன பிரச்சனை? சொத்துப் பிரச்சனையா? அல்லது கொலை, கொள்ளை போன்றவற்றுக்காகப் பழிதீர்க்கும் பிரச்சனைகளா? இல்லையே?
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டுவிட்டார்.
அல்குர்ஆன்: 33:36
தவறு என்று தெரிந்த பின்னும் என் கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று கூறினால் நமக்கும் யூதர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். தெளிவான நயவஞ்சகத்தனமாகிவிடும்.
ஒரு கருத்தை மக்களுக்கு மத்தியில் வைக்கும் போது அதை யார் கூறினார் என்று பார்க்காமல், அது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா? குர்ஆன் ஹதீசுக்கு உட்பட்டுள்ளதா? அல்லது மாறுபட்டுள்ளதா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்கமாட்டார்கள்.
அல்குர்ஆன்: 3:135
நாம் சொல்வது தான் சரி என்ற நிலை மார்க்க அடிப்படையில் தவறானதாகும். ஏனெனில் அல்லாஹ்வின் தூதரே தன்னிச்சையாகப் பேசிய வார்த்தையைக் கூட இறைவன் தன் திருமறையில் வன்மையாகக் கண்டித்துள்ளான்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிக்கிறார்’’என்று கூறலானார்கள்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை’’ (3:128) எனும் வசனத்தை அருளினான்.
நூல்: முஸ்லிம் 3667
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே இந்நிலையென்றால் ஸஹாபாக்களெல்லாம் எம்மாத்திரம்? என்று நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
—————————————————————————————————————————————————————-
அருள் மறை வசனங்களின் சிறப்புகளும் அருளப்பட்ட காரணங்களும்
தொடர்: 3
அபு அம்மார்
பிஸ்மில்லாஹ்வின் சிறப்புகள்
ஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்:
நான் ஒரு கழுதையின் மீது நபி (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அந்தக் கழுதையின் கால் சறுக்கியது. நான் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று கூறினேன். அப்போது நபியவர்கள் என்னிடம் “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று சொல்லாதே! “ஷைத்தான் நாசமாகிவிட்டான்” என்று நீ கூறும் போது ஷைத்தான் தன்னுடைய உள்ளத்தில் தன்னை மிகப் பெரிதாக நினைத்து “அவனை நான் என்னுடைய வலிமையால் வீழ்த்தி விட்டேன்” என்று கூறுகிறான். நீ பிஸ்மில்லாஹ் என்று கூறினால் அவனே அவனிடத்தில் இழிவடைந்து ஈயை விட மிகச் சிறுமையடைந்தவனாக ஆகிவிடுகிறான்” என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (20591)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் (“பிஸ்மில்லாஹ்” என்று கூறி) அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை’’ என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது’’ என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்’’ என்று சொல்கிறான்.
நூல் : முஸ்லிம் (4106)
பிஸ்மில்லாஹ் என்றும் அற்புத துஆவின் முக்கியத்துவத்தை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன.
உண்ணும் போது பிஸ்மில்லாஹ்
உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், சிறுவனே! ‘‘பிஸ்மில்லாஹ்” என்று அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு! என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
நூல்: புகாரி (5376)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘‘உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது ‘‘பிஸ்மில்லாஹ்” என்று கூறட்டும். ஆரம்பத்தில் அதைக் கூற மறந்து விட்டால் ‘‘பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆஹிரிஹி” என்று கூறட்டும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி (1858)
‘‘பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆஹிரிஹி” என்பதின் பொருள் ‘‘ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறேன்” என்பதாகும்.
‘‘பிஸ்மில்லாஹ்” கூறாமல் சாப்பிட்டால் அந்த உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒரு முறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, இவரது கையைப் பிடித்து விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது’’ என்று கூறினார்கள்
நூல் : முஸ்லிம் (4105)
பிஸ்மில்லாஹ் கூறி உளூச் செய்தல்
“நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்தார்கள். ‘அல்லாஹ்வின் பெயரால் உளூச் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவர்களின் விரல்களிலிருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்’’ என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (அப்போது) நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்?’’ என்று நான் கேட்டதற்கு சுமார் எழுபது நபர்கள்’’ என்று அனஸ் (ரலி) பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: நஸயீ 77
உடலுறவு கொள்ளும் முன் பிஸ்மில்லாஹ்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால் – இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகியிருக்கச் செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய் என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்ய மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (3271)
பிராணிகளை அறுக்கும் போது பிஸ்மில்லாஹ்
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தமது பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தமது கையால் அறுத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (5558)
வேட்டையாடுவதற்குப் பிராணிகளை அனுப்பும் போதும் பிஸ்மில்லாஹ்
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம் என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை ‘‘பிஸ்மில்லாஹ்” என்று அல்லாஹ்வின் பெயர் சொல்லி நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்.
நூல் : புகாரி (5483)
வீட்டின் கதவு, ஜன்னல், பாத்திரங்களை மூடும் போதும், விளக்கை அணைக்கும் போதும் பிஸ்மில்லாஹ் கூறுதல்
(இரவு நேரத்தில்) உன் கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உனது விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உனது பாத்திரத்தை மூடி வை. அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (3280)
(இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (3304)
பிஸ்மில்லாஹ் கூறி படுக்கையைத் தட்டுதல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷ ஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (5257)
(தொடரும் இன்ஷா அல்லாஹ்)
—————————————————————————————————————————————————————-
முகத்திரையைக் கிழித்த முதல் பிறை
குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் 5 சகோதரர்கள் பிறை பார்த்ததின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாளைக் கொண்டாடியது. பிறை பார்த்து விட்டால் மார்க்கத்தின் படி பெருநாள் கொண்டாடுவதைத் தவிர வழியே இல்லை என்று தெரிந்தும் சுன்னத் வல்ஜமாஅத்தினர் அன்றைய தினம் மக்களை நோன்பு நோற்கச் செய்தனர். இதன் மூலம் மக்கள் ஒரு ஹராமைச் செய்வதற்கு காரணமாயினர். இதைப் பற்றி இந்த இதழின் தலையங்கத்தில் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம்.
சுன்னத் ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்கள் இவ்வாறு செய்ததில் ஆச்சரியமில்லை. தவ்ஹீத் என்று பெயர் வைத்துக் கொண்டு நமது ஜமாஅத்திலிருந்து பிரிந்த சாரார்கள் ஊரோடு ஒத்து பெருநாள் கொண்டாடி தாங்கள் யார் என்று தங்கள் வேடம் களைந்து வெளிச்சம் போட்டுக் காட்டினர்.
ஆம்! முதல் பிறையின் மெல்லிய வெளிச்சம் இவர்களது முகத்திரையைக் கிழித்துள்ளது.
இதைப் பற்றி நாம் காண்பதற்கு முன்னால், கடந்த 2010 ஆண்டு ஹஜ் பெருநாளை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தனித்துக் கொண்டாடியது. அதை ஒட்டி டிசம்பர், 2010 ஏகத்துவம் இதழில் வெளியான, “பிரித்துக் காட்டிய பெருநாள் பிறை” என்ற கட்டுரையின் ஒரு பகுதியை இப்போது பார்ப்போம்.
“இவர்கள் கூட்டத்திற்குத் தக்க கொள்கையை மாற்றும் கூட்டத்தினர், சுன்னத் ஜமாஅத்தை வைத்துத் தான் படம் காட்டினார்கள்; இப்போது அது வெளிச்சமாகி விடும்” என்றெல்லாம் இவர்கள் நம்மை நோக்கிக் கேலியும் கிண்டலும் பேசினர். “இவ்வளவு நாளும் (பெருநாள் திடல்) வசூல் மழையை எழுதினீர்கள். 18ஆம் தேதி வசூலை எழுதுங்கள், பார்ப்போம்” என்று சவால் விட்டனர்.
18ஆம் தேதியன்று திடல்கள் வெறிச்சோடிக் கிடக்கும்; தவ்ஹீத் ஜமாஅத் ஒரு வெற்றுக் கூடாரமாகி விடும் என்று கனவு கண்டவர்களின் கண்களில் அல்லாஹ் மண்ணை அள்ளிப் போட்டு விட்டான். அவர்களை நிலைகுலையச் செய்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ்! ஒவ்வொரு பெருநாளின் போதும் அலை அலையாக வந்த அதே கூட்டம் அணை உடைத்த வெள்ளம் போல் 18ஆம் தேதி பெருநாள் திடலிலும் வந்து சூழ்ந்தது. திடல்கள் பொங்குமா கடலாய் பொங்கி வழிந்தன. படையெடுத்து வந்த பத்திரிகையாளர்களின் படங்களும் இதை நிரூபிக்கின்றன. ஒளி நாடாக்கள் இந்த வரலாற்று நிகழ்வை ஒன்று விடாது பதிவு செய்திருக்கின்றன.
முஃப்தி எனற பெயரில் முஃப்த்தினாக (குழப்பவாதியாக) செயல்படுகின்ற டவுண் காஜியின் ஏகபோக பிறை சாம்ராஜ்யம் இதன் மூலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. பிறை விஷயத்தில் இதுவரை தான்தோன்றித்தனமாக அறிவித்து வந்த ஒரு தனிநபர் ஆதிக்கத்தை தவ்ஹீத் ஜமாஅத் உடைத்து, தனி சமுதாயமாகப் பரிணமித்தது.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.
அல்குர்ஆன் 16:120
இப்ராஹீம் (அலை) அவர்கள் பாதையில், அவர்களின் தியாகத்தை மையமாகக் கொண்ட தியாகத் திருநாளில் தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முத்திரையைப் பதித்தது.
இப்ராஹீம் நபி, ஊரை – உலகத்தை அல்லாஹ்வுக்காகப் பகைத்தார்கள்.
“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது’’ என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.
அல்குர்ஆன் 60:4
அந்த ஏகத்துவ இமாமின் நினைவாக அமைந்த இந்த இறை தியான நாட்களில் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வுக்காக மக்களைப் பகைத்துக் கொண்டது. வணக்க வழிபாடுகளில், திருமண, மரண நிகழ்வுகளில் உங்களைப் பகைத்தோம். உங்களுக்கும் எங்களுக்கும் எஞ்சிய உறவு ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது தான். இப்போது அதையும் அல்லாஹ்வுக்காகப் பகைத்து விட்டோம் என்று 18ஆம் தேதி தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்து விட்டது.
கூட்டத்திற்காகவோ, வசூலுக்காகவோ குராபிகளுடன் சேர்ந்து கொண்டாடவில்லை. அவர்களது நோன்பும் பெருநாளும் ஹதீசுக்கு ஒத்திருந்தது. அதனால் அவர்களுடன் ஒத்துப் போனோம். அவர்கள் உண்மைக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் அவர்களைப் பிரிந்து விட்டோம். இது தான் உண்மை.
“இவ்வளவு நாள் எங்களுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடினீர்கள்; இப்போது பிரிந்து விட்டீர்களே’ என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத்தினருக்கும் நாம் கூறுவது இது தான். நாங்கள் எதையுமே ஆதார அடிப்படையில் தான் பின்பற்றுவோம்; அனுமான அடிப்படையில் அல்ல. இதைத் தான் இந்தப் பெருநாள் நிரூபித்துக் காட்டியுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 2:143
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட இந்தக் கிப்லா மாற்றம் நயவஞ்சகர்களை அடையாளம் காட்டியது போல் தவ்ஹீத் ஜமாஅத்தில் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பச்சோந்திகளையும் இந்தப் பெருநாள் பிரித்துக் காட்டியது.
”பிரித்துக் காட்டிய பெருநாள் பிறை” என்ற தலைப்பில் 2010 டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதியாகும்.
மார்க்க அடிப்படையிலான பிறைக்கு மாற்றமாக, மாலேகான் பிறையை அடிப்படையாகக் கொண்டு டவுன் காஜி அறிவித்தார். அதனால், அதை எதிர்த்து தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹஜ் பெருநாளை முதன் முறையாக தனியாகப் பிரிந்துக் கொண்டாடியது.
டவுன் காஜியின் அந்த அராஜக, அறியாமைப் போக்கைக் கண்டித்து எழுதப்பட்டது தான் அந்தக் கட்டுரை.
தற்போது மீண்டும் டவுண் காஜி, அதே அராஜகப் போக்கைக் கடைப்பிடித்து, இந்த (ஹிஜ்ரி 1437) நோன்புப் பெருநாளில் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார். இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனியாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடியது. அந்தக் கட்டுரை இப்போதும் பொருந்திப் போவதால் அதில் உள்ள சில பகுதிகள் மேற்கோளாக இங்கு காட்டப்பட்டுள்ளது.
அப்போது தவ்ஹீதுவாதிகளில் ஒரு சிலர் தங்களை அடையாளங் காட்டத் தயங்கினர். அதனால் இந்தக் கட்டுரை அவர்களின் நயவஞ்சகப் போக்கை தோலுரித்துக் காட்டியது. இப்போதும் அது போல் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் இருக்கலாம். அதற்கு இது சாட்டையடியாகும்.
ஆனால் ஒரு சிறு வித்தியாசம்! இந்தப் பெருநாளில் சுன்னத் வல் ஜமாஅத்தினரில் அதிகமான பேர்கள் தங்களை அடையாளங்காட்டிக் கொண்டு பகிரங்கமாக நோன்பை முடித்துக் கொண்டும் முறித்துக் கொண்டும் நமது திடல் தொழுகையில் பங்கேற்றனர். வான் பிறையை அடிப்படையாகக் கொண்ட வணக்கங்களைத் தீர்மானிப்பதில் வானளாவிய அதிகாரம் தங்களுக்கு உண்டு; தாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற வரட்டு கவுரவத்திலும் வீண் பிடிவாதத்திலும் இருந்த மவ்லவிகளின் மவ்ட்டீக சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்தை மட மடவென்று இம்மாத ஷவ்வால் பிறை மண்ணில் சரிய வைத்து விட்டது. அவர்களது மமதையை மண் கவ்வ வைத்தது.
இதில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய, அடையாளம் காட்டப்பட வேண்டிய ஆட்கள், ஆசாமிகள் நம்மை விட்டு பிரிந்து போன சகாக்கள் தான். இந்த பழைய சகாக்களுக்கு மட்டும் மூன்று பெருநாட்கள்!
- கணிப்பு பெருநாள்: நெற்றிக் கண் முளைத்த இந்த அதிமேதாவிகள் மக்கா சென்று ஹஜ் வணக்கங்களைக் கூட ஒருநாள் முன் கூட்டியே செய்வார்கள். மக்காவுக்குச் சென்ற இந்த கணிப்பாளர்கள் அரஃபா வணக்கத்தை ஒருநாளுக்கு முந்தியே முடித்து விடுவார்கள். மார்க்கம் கூறும் எந்த வரையறைக்குள்ளும் நிற்காதவர்கள் இவர்கள்.
- சர்வதேசப் பிறை: இந்த சாரார் சர்வதேசப் பிறை என்ற பெயரில் சவூதிய பிறையைக் கொள்கையாகக் கொண்டவர்கள்.
- சுன்னத் வல் ஜமாஅத் பிறை: இந்த சாரார் ஊரை ஒத்து பெருநாள் கொண்டாடுபவர்கள்.
இந்த மூன்று சாராருமே ஸலபுக் கொள்கையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள். தவ்ஹீதுவாதிகளை ஏமாற்றுவதற்காக, பிரச்சாரப் பேரவை என்ற பெயர்களில் இவர்கள் நடத்தும் ஐ.பி.பி., டி.பி.பி., இ.பி.பி. போன்ற இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள ஸலபி ஆலிம்கள் தான் பங்கேற்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதில் ஜோதிடக் கணிப்பைப் பின்பற்றும் முதல் பிரிவினர், நம்மை நோக்கி, “ஊரை ஒத்து பெருநாட்கள் கொண்டாடக்கூடியவர்கள்” என்று குற்றஞ்சாட்டுபவர்கள். எந்த அளவுக்கென்றால் திருக்குர்ஆனின் 9:36,37 வசனங்களைப் போட்டு பிறை விஷயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை காஃபிர்கள் என்று சுவரொட்டி மூலம் தெரிவிப்பவர்கள்.
ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் தற்போது, பிறைக்கணிப்பு, தகவல், நேரடியாகப் பிறை பார்த்தல் என்ற எந்த வட்டத்திற்குள்ளும் நிற்காமல் டவுண் காஜி என்ற அறிவிலியின் தலைமையை ஏற்று, ஊரை ஒத்து பெருநாள் கொண்டாடக்கூடிய தமுமுக, ஸைபுல்லாஹ் கோஷ்டி, பாக்கர் கோஷ்டியிடம் சங்காத்தமும் சகோதரத்துவமும் கொண்டாடுகிறார்கள். பிறை விஷயத்தில் நம்மை காஃபிர் என்று சொன்ன ஜோதிடக் கணிப்பு கோஷ்டியினர் மேற்கண்ட இந்த சந்தர்ப்பவாதிகளைக் கண்டிப்பதோ கண்டு கொள்வதோ இல்லை.
காரணம், இவர்கள் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் எதிர்ப்புணர்வு, சஹாபாக்களைப் பின்பற்றுதல் என்ற மையப் புள்ளிகளில் சந்திக்கின்றவர்கள். ஒற்றுமைக் கோஷத்தை ஓங்கி ஒலிப்பவர்கள். பிறையில் வேற்றுமை! பிற விஷயங்களில் ஒற்றுமை!! என்ன இவர்களது ஒற்றுமை? இவர்கள் தான் ஊருக்கு ஒற்றுமையைப் பற்றி உரக்கக் கூவுகின்றார்கள்.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா? ஒரே அமைப்பில் மூன்று விதமான பிறை கோஷ்டிகள் இருப்பது தான். அந்தச் சிறப்பிற்கும் சிரிப்பிற்கும் உரிய ஒரே அமைப்பு தமுமுக தான். இந்தக் கொள்கையற்ற கூட்டத்தினர் மார்க்கத்தில் அரசியல் செய்து ஆதாயம் பார்க்க நினைப்பதால் இந்த அமைப்பினர் மூன்றாகப் பிரிந்து மூன்று வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடினார்கள். சென்னையில் ஒருநாள், தென்காசியில் வேறு நாள்! இரண்டிலும் இல்லாமல் கணிப்பில் சிலர் கொண்டாடினார்கள். மார்க்கத்திற்காக (?) கணிப்பைப் பின்பற்றி விட்டு, அரசியலுக்காக டவுண் காஜியைப் பின்பற்றி இரண்டு நாட்கள் தொழுதவர்களும் இவர்களில் உண்டு.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் சுன்னத் வல்ஜமாஅத்துடனும் ஒரே கோட்டில் வருவார்கள். இப்போது இந்தப் பிறை விஷயத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு ஒத்துப் போயுள்ளார்கள். ஏன்? இவர்கள் தனியாகப் பெருநாள் கொண்டாடியிருந்தால் அது அவர்களுக்குப் பெருநாளாக இருந்திருக்காது. கருநாளாகத் தான் இருந்திருக்கும். இவர்களுக்கென்று எந்தக் கூட்டமும் வந்திருக்காது.
அதனால் பெயரில் தவ்ஹீத்! ஆனால் செயல்பாடோ தக்லீத்! ஆம்! சுன்னத் வல்ஜமாஅத்தை அப்படியே பின்பற்றுவது தான் இவர்களது கொள்கை. இவர்கள் ஊரை ஒத்துப் போகவில்லை என்றால் அமைப்பு ரீதியாக செத்துப் போக வேண்டியது தான். அதனால் இந்தக் கூட்டத்திற்குத் தேவை கூட்டம் தான்; கொள்கை அல்ல! எண்ணிக்கை தான்; இலட்சியம் அல்ல!
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தை அளவுகோலாகப் பார்க்கவிலை; கொள்கையைத் தான் அளவுகோலாகப் பார்த்தது. எண்ணிக்கையைப் பார்க்கவில்லை; இலட்சியத்தைத் தான் பார்த்தது.
பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 5:54
அல்லாஹ்வை அஞ்சி, அவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாது அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்ன முன் சென்றோரிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது. அல்லாஹ் கணக்கெடுக்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் 33:39
இந்த வசனங்களின் படி தவ்ஹீத் ஜமாஅத் அல்லாஹ்வை மட்டும் அஞ்சியது. 2010 ஹஜ் பெருநாளிலும், 2016 நோன்பு பெருநாளிலும் அதை நிரூபித்துக் காட்டிவிட்டது.
கொள்கைக்காகவும், கொள்கை காக்கவும் அந்த ஜமாஅத் தன்னை பக்குவப் படுத்திக் கொண்டதால், அல்லாஹ் அந்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மக்களைக் கொண்டு வந்து நிரப்புகின்ற பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டு அவ்வாறு நிரப்பவும் செய்தான். அவனுக்கே அனைத்துப் புகழும்.
அப்படியே ஒருக்கால் கூட்டம் கூடவில்லையென்றால் இந்த ஜமாஅத் ஆட்டம் காணாது. அல்லாஹ்வை அஞ்சினோம்; அகிலத்தாரை அல்ல என்ற ஆத்ம திருப்தியில் அது தனது பயணத்தைத் தொடரும்.
ஆனால் இவர்கள் கதை அப்படியல்ல. தனியாகப் பெருநாள் கொண்டாடினால் எங்கே அமைப்பை இழுத்து மூட நேரிடுமோ என்று பயந்து ஊரோடு ஒத்து, டவுண் காஜியின் தற்குறித்தனத்துக்கு அடிமையாகியுள்ளனர்.
அதனால் தான் சுன்னத் வல் ஜமாஅத் பிறையை அப்படியே பின்பற்றி தடுக்கப்பட்ட பெருநாளில் நோன்பு நோற்கும் பாவத்தைச் செய்து விட்டு மறுநாள் பெருநாளும் கொண்டாடியிருக்கின்றார்கள்.
உண்மைக்குப் பின்னே வழிகேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? நீங்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
அல்குர்ஆன் 10:32
இந்த வசனப்படி இவர்கள் இருப்பது வழிகேடு தான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அதனால் இவர்கள் எங்கும் இருந்து விட்டுப் போகட்டும்! அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. நமக்குள்ள கேள்வி எல்லாம் பிறை விஷயம் முதல் பிற விஷயங்கள் வரை அனைத்து வகையிலும் சுன்னத் வல் ஜமாஅத் பாதையில் பயணிக்கின்ற இவர்கள் தங்களுக்கு தாங்களே தவ்ஹீத்வாதி என்று காட்டி கொள்வதைத் தான்!
ஏனிந்த இரட்டை வேடம்? ஏன் இத்தனை கபட நாடகம்? ஏன் இந்தக் கள்ள அவதாரம்? சுன்னத் வல் ஜமாஅத் அது தன் தவறான கொள்கையில் பிரகடனம் செய்து விட்டு தன்னை அடையாளங் காட்டி பயணம் செய்கின்றது.
இவர்களோ வசூலுக்காக ஒரு பக்கம் தங்களை தவ்ஹீத் வாதிகள் காட்டிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தைப் பின்பற்றிக் கொண்டு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நயவஞ்சகர்களையும் நாடகக் குழுவினரையும் இந்த ஷவ்வால் பிறை அடையாளக் காட்டி விட்டது.
—————————————————————————————————————————————————————-
நாவைப் பேணுவோம்
உம்மு ராஷித், மேலப்பாளையம்
மனிதன், சக மனிதனுக்குச் செய்யும் தீங்குகளுக்கு அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிக்கமாட்டான். எனவே சக மனிதனுக்கு நாம் செய்யும் தீங்குகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கேட்டு, தவறிலிருந்து மீண்டெழுந்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். இதையே நபிகளார் பின்வரும் ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு விஷயத்திலோ இழைத்த அநீதி இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (மறுமை நாள்) வருவதற்கு முன்னால் இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். (மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும்.
நூல் : புகாரி 2449
இந்த அவல நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு நபிகளார் கூறியிருக்க இன்றோ முஸ்லிம்களாலேயே பிற முஸ்லிம்கள் பாதிக்கப்படும் அவல நிலை உருவாகியுள்ளது. நாவு எனும் ஆயுதத்தால் பிற மனிதர்களின் மனதை கீறிக்கிழித்து விடுகின்றோம். காயங்களை ஏற்படுத்தாமலேயே காலமெல்லாம் ஆறாத வடுவை ஏற்படுத்துகின்றோம்.
ஒருவர் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட அவரது குடும்ப உறுப்பினர் யாரேனும் செய்த தவறுக்காக அவரைக் குற்றவாளியாகச் சித்தரிக்கிறோம்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்
நூல் : புகாரி 10
பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு வலியும், வலுவும் அதிகம் என்பதை மனதில் கொண்டு பாதிப்பை ஏற்படுத்துவதை விட்டும் தவிர்ந்திருப்போம்.
ஒருவரின் நற்குணத்தைக் கேள்விக்குறியாக்கும் கனம் நிறைந்த வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் மட்டும் தான் பாதிப்பை ஏற்படுத்தும்; நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாது என்றெண்ணி சர்வ சாதாரணமாக வெறும் வாய்க்கு அவல் போட்டாற்போன்று மகிழ்ச்சியாக ரசித்து ரசித்து பேசுபவர்கள், தனக்கும் இது மிகப்பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்வதில்லை.
ஒரு மனிதன் நன்மை, தீமை என எதைச் செய்தாலும் அதைத் தனக்காகவே செய்கிறான் என்று அல்லாஹ் கூறுகின்றான்
நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே.
அல்குர்ஆன் 17:7
விபரீதம் நிறைந்த வார்த்தைகள்
முன் பின் விளைவைப் பற்றி துளியளவும் சிந்திக்காமல் ஒரு மனிதன் பேசும் வார்த்தைகளின் உச்சகட்டம் அவனை நரகப்படுகுழியில் தள்ளிவிடுகின்றது
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வ சாதாரணமாகப் பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்
நூல் : புகாரி 6478
மிகப்பெரும் அருட்கொடையான நாவின் மூலம் நம்மை அறியாமல் கூட தீமைகளை செய்து நரகப்படுகுழியில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே “நல்லதைப் பேசு! இல்லையேல் வாய்மூடி இரு” என்று நம் மார்க்கம் நமக்குக் கட்டளையிடுகின்றது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
நூல் ; புகாரி 6475
மனிதனின் பார்வையில் மனிதர்கள்
ஒரு மனிதன் சமூகத்தின் பார்வையில் சிறந்தவனாகப் பார்க்கப்படுகின்றான் ஆனால் அல்லாஹ்விடத்திலோ அந்தஸ்தில் இழிவானவனாக இருக்கின்றான். ஒரு மனிதன் சமூகத்தின் கண்ணோட்டத்தில் இழிந்தவனாகக் கருதப்படுகின்றான். ஆனால் அல்லாஹ்விடத்தில் அவனது அந்தஸ்தோ உயர்ந்து நிற்கின்றது.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்’’ என்று கூறினார்கள்
நூல் : புகாரி 4203
மனிதனுடைய பார்வையோ வெளித்தோற்றத்தை மட்டுமே பார்க்கின்றது. அவ்வளவு தான் பார்க்க இயலும். ஆனால் வல்ல நாயனோ அவனது உள்ளத்தையும் செயல்பாடுகளையும் மட்டுமே பார்க்கின்றான். அவன் அனைத்து பொருட்களையும் சூழ்ந்தறிபவன், ஞானமிக்கவன்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
நூல் : முஸ்லிம் 5012
எனவே நம் பார்வைக்கு நல்லவன் அல்லது கெட்டவன் என்று தோன்றுவதையெல்லாம் நாம் சரி என்று கருதி அவனைப் பற்றி தவறாகப் பேசக் கூடாது என்றே மார்க்கம் நமக்கு கட்டளையிடுகின்றது.
அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உமக்கு நாசம்தான்! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே! உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே’’ என்று பலமுறை கூறினார்கள். பிறகு, “உங்களில் ஒருவர் தம் நண்பரைப் புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், “இன்ன மனிதரைப் பற்றி நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்’ என்று (மட்டும்) கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். நான் அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன். அவரைப் பற்றி இன்னின்னவாறு கருதுகிறேன் என்றுகூட, அவர் அவ்வாறு இருக்கிறார் என அறிந்தால் மட்டுமே கூறட்டும்.
நூல் : முஸ்லிம் 5727