ஏகத்துவம் – ஆகஸ்ட் 2015

இறுதி நபி இறப்பில்லாதவர்களா?

மனாருல் ஹுதாவிற்கு மறுப்பு

கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

கப்ரை வணங்கும் பரேலவிகளுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவ்பந்திகளிலும் வழிகெட்ட பரேலவிகள் அதிகமதிகம் ஊடுறுவியுள்ளனர். அதற்குத் தெளிவான சான்றுதான் “மனாருல் ஹுதா மே 2015” மாத இதழில் “ரவ்ளா கஅபாவை விட புனிதமானது” என்றும், நபியவர்கள் மரணிக்க வில்லை. அவர்கள் மண்ணறையில் உயிரோடு தான் உள்ளார்கள் என்றும் எழுதியுள்ளனர். இது மிகப்பெரும் வழிகேடும், நிரந்தர நரகத்தில் தள்ளும் இணைவைப்புக் கொள்கையுமாகும்.

“நபியவர்களின் மண்ணறை கஅபாவை விடப் புனிதமானது” என்ற வழிகெட்ட கருத்திற்குரிய தெளிவான மறுப்பை ஜூன் 2015 ஏகத்துவம் மாத இதழில் நாம் தெளிவு படுத்தியிருந்தோம்.

“நபியவர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் கப்ரில் உயிரோடுதான் உள்ளார்கள்” என்ற இணைவைப்புக் கொள்கைக்கு எதிரான நபிவழிச் சான்றுகளை நாம் இந்த இதழில் விரிவாகக் காண உள்ளோம்.

நபியவர்கள் மரணிக்கவில்லை என்ற வழிகெட்ட கொள்கையைத் திணிப்பதற்காக மனாருல் ஹுதா மாத இதழ் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தவறான வாதங்களையும் முன்வைத்துள்ளது. சில சரியான ஹதீஸ்களின் கருத்தைத் திரித்துக் கூறியுள்ளனர்.

அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்குரிய பதில்களைக் காண்பதற்கு முன்னால் நம் உயிரினும் மேலான உத்தம நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய சான்றையும், அவர்கள் கியாமத் நாளில் தான் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள் என்பதற்குரிய சான்றுகளையும் காண்போம்.

நபியும் மரணிப்பவரே! திருக்குர்ஆன் பிரகடனம்

(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள்.

(அல்குர்ஆன் 39:30)

இந்த இறைவசனம் நபியவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நோக்கிப் பேசுகின்ற இறைவசனம் ஆகும்.

இவ்வுலகில் படைத்த அனைத்து மனிதர்களும் எவ்வாறு மரணத்தைத் தழுவக்கூடியவர்களோ அது போன்றே முஹம்மது (ஸல்) அவர்களும் மரணத்தைத் தழுவக்கூடியவர்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மரணம் என்பதில் பிற மனிதர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இறைத்தூதர் இறந்தாலும் இஸ்லாம் நிலைத்திருக்கும்

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(அல்குர்ஆன் 3:144)

உஹது யுத்தக் களத்தில் நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது சிலர் இஸ்லாத்தை விட்டே வெளியேற நினைத்தனர். நபியவர்கள் கொல்லப் பட்ட பிறகு நாம் எதற்காகப் போர் செய்ய வேண்டும் என்று எண்ணினர். அந்த நேரத்தில்தான் அல்லாஹ் மேற்கண்ட இறைவசனத்தை அருளினான்.

முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்தாலும் இஸ்லாம் நிலைத் திருக்கும். எனவே முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவீர்களா? அப்படி வெளியேறினால் அது உங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை நபித்தோழர்களுக்குத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்தியது.

நபியவர்கள் உயிருடன் வாழும் காலகட்டத்திலேயே அவர்கள் மரணிக்கக் கூடியவர்கள் தான் என்பதை இந்த இறைவசனம் நபித்தோழர்களுக்கு முன்னறிவிப்புச் செய்தது.

உண்மையை உணர்த்திய உண்மையாளர் அபூபக்கர்

எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந் தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

“(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.” (39:30)

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)

(நூல்: புகாரி 3668)

மேற்கண்ட வார்த்தைகள் நபியவர்கள் மரணித்த நேரத்தில் உண்மையாளர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறிய அற்புத வார்த்தைகளாகும். திருக்குர்ஆன் போதிக்கும் அற்புத உண்மையை நபியவர்கள் மரணித்த வேளையிலே அன்புத்தோழர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

மற்றொரு முறையிலும் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அபூபக்கர் (ரலி) நயமாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, “தங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பண மாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களைச் சுவைக்கச் செய்ய  மாட்டான்என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

(நூல்: புகாரி 3667)

“நபி (ஸல்) அவர்கள் இறக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும், கால்களையும் துண்டிப்பார்கள்” (புகாரி 3667) என்று உமர் (ரலி) அவர்கள் நபி மீது கொண்ட பாசத்தினால் நிலை தவறிப் பேசிய பொழுதான் அபூபக்கர் (ரலி) மேற்கண்ட உண்மையை ஓங்கி உரைத்தார்கள்.

நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பது இணைவைப்புக் கொள்கை என்பதனை இறைத்தூதர் இறந்த நேரத்தில் குகைத்தோழர் ஆற்றிய உரையிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

இறப்பு நெருங்கியதை உணர்த்திய இறைவசனம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், “எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், “(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும் போது…எனும் (110:1, 2) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், “(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவித்தான்என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்து கொண்டதையே நானும் அறிந்து கொண்டேன்என்று சொன்னார்கள்

(நூல்: புகாரி 4430)

இறைத்தூதர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் நபித்தோழர்களின் கொள்கையாக இருந்தது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இறைத் தூதர் இறக்கவில்லை என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை என்பதும் தெளிவாகி விட்டது.

மரணம் நெருங்கிவிட்டதை மகளுக்கு உணர்த்திய இறைத்தூதர்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப் பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு அவர்களின் வீட்டாரில் முதலா வதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான் தான்என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன் என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (3625, 3626)

நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியும் மிகத் தெளிவாக உரைக்கின்றது. இவ்வளவு தெளிவான சான்றுகளைக் கண்ட பின்னரும் அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பவர்கள் உண்மையான முஃமின்களாக இருக்க முடியுமா? மக்களே சிந்தித்துப் பாருங்கள்.

மரணம் நெருங்கிவிட்டதை மக்களுக்கு உணர்த்துதல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் தாம் மரணிக்கப் போகிறோம் என்பதையும் தன்னுடைய இறப்பிற்குப் பிறகு நபித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.

உஹுதுப் போர் தியாகிகளுக்குத் தொழுகை நடத்தி விட்டு, தாம் மரணிக்கப் போவதையும் அடுத்த சந்திப்பு மஹ்ஷரில்தான் என்பதையும் நபியவர்கள் தமது தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப் பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழ வைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (அல்கவ்ஸர்எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு “பூமியின் கருவூலத் திறவுகோல்கள்அல்லது “பூமியின் திறவுகோல்கள்வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (6426)

“எனக்குப் பின்னால்” என்று நபியவர்கள் கூறியது “அவர்களுடைய இறப்பிற்குப் பின்னால்” என்பதாகும்.

மேலும் தம்முடைய இறுதி ஹஜ்ஜின் போதும் தாம் விரைவில் மரணித்துவிடக்கூடும்  என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உணர்த்தினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத் துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், “நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங் கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) செய்ய மாட்டேனா என்பதை அறியமாட்டேன்என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

நூல்: முஸ்லிம் (2497)

இறக்கப் போவதை உரக்கச் சொன்ன இறைத்தூதர்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், “இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது – இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, “இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது – ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்த போது அவர் அல்லாஹ்விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்?’ என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள் என்று கூறிவிட்டு, “தன் நட்பிலும் தனது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிரஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (466)

இறைச் செய்தியை நிறுத்திய இறைத்தூதரின் இறப்பு

இறைத்தூதர் இறந்து விட்டதால் இனி இறைச் செய்தி (வஹீ) வராதே என்றெண்ணி அருமை ஸஹாபாக்கள் கண்ணீர் வடித்துள்ளனர்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், “ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட)  அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழ வில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவரும் அழலாயினர்.

நூல்: முஸ்லிம் (4849)

இறுதித் தூதர் கூறிய இறுதி வார்த்தை

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை என்று நான் நபி (ஸல்) அவர் களிடமிருந்து செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), “அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத் தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்எனும் (4:69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே, இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப் பட்டதுஎன்று நான் எண்ணிக் கொண்டேன்.

நூல்: புகாரி (4435)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்) என்று பிரார்த்தித்தார்கள்.

நூல்: புகாரி (4437)

மரண வேதனையை அனுபவித்த மாநபி

நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க் கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது

நூல்: புகாரி 4449

இறந்து விட்ட இறைத்தூதர்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந் திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒரு போதும் நான் வருந்துவதில்லை.

நூல்: புகாரி 4446

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி 4466

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  முப்பது ஸாவுவாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி 4467

குளிப்பாட்டிய நபித்தோழர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். “மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லைஎன்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2733, ஹாகிம்3/59

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த காரணத்தினால் தான் நபித்தோழர்கள் அவர்களுடைய ஜனாஸாவைக் குளிப்பாட்டினார்கள். இறைத்தூதர் மரணிக்காமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களுடைய ஜனாஸாவை ஏன் நபித்தோழர்கள் குளிப்பாட்ட வேண்டும்? என்பதை இவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

இறுதி நபியவர்கள் இறப்பை எய்திவிட்டார்கள் என்பதைக் கூறும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை இதுவரை பார்த்தோம்.

நபியவர்கள் இறக்கவில்லை என்பதற்கு மாற்றுக்கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கத்தையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

ஸைபுத்தீன் ராபிளிக்கு மந்திரிகளே முன்மாதிரி

அல்லாஹ்வின் அருளால் நெல்லை மாவட்டம் மேலப் பாளையத்தில் கடந்த மே 31 அன்று நடைபெற்ற ஹதீஸ் மாநாடு மாபெரும் வரலாறு படைத்தது. ஜின்னா திடல் இதுவரை கண்டிராத மக்கள் கடலைச் சந்தித்தது.

இதே இடத்தில் இரண்டு மாநாடுகளை பரேலவிகள் கூட்டம் நடத்தியது. இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் செய்து, பிரியாணி பொட்டலங்கள் வினியோகம் செய்து பேருக்கு ஒரு கூட்டம் கூடியதே தவிர சொல்லும்படியான கூட்டம் கூடவில்லை. வழக்கமாக அவர்கள் நடத்தும் மாநாடுகளில் பொய்யர்களின் தலைவன் ஸைபுத்தீன் ரஷாதி தான் பிரதான கதாநாயகன்.

அவர்களது முதல் கூட்டம் நடைபெற்ற போது நமது ஜமாஅத்திலிருந்து அப்பாஸ் அலீ என்பவர் விலை போய் வெளியேறிய சமயம். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, “தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஆலிம்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்; இன்னும் ஆலிம்களில் ஒரு கூட்டம் வெளியேறக் காத்துக் கொண்டிருக் கின்றது’ என்று ஸைபுத்தீன் ராபிளி கதையளந்தார்; காதில் பூச்சுற்றினார்.

இதற்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக, “என்னைக் கவர்ந்த ஏகத்துவம்’ என்ற தலைப்பில் ஆலிம்களின் சங்கமம் நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

அத்துடன் அம்மாநாட்டில் ஸைபுத்தீன் ராபிளி வைத்த வாதங்களுக்கு அவரை விடவும் அனுபவத்திலும் வயதிலும் இளைஞரான, இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி. பதிலடி கொடுத்தார்.

தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு ஆலிம்கள் வெளியேறிக் கொண்டி ருக்கின்றார்கள் என்று ஸைபுத்தீன் ராபிளி சொன்ன பொய்யைத் தவிடுபொடியாக்கும் வகையில், இதோ இத்தனை ஆலிம்கள் சத்தியத்தில் சங்கமித்திருக்கிறார்கள்; இன்னும் ஆலிம்கள் வந்து கொண்டிருக் கிறார்கள் என்று பதிலடி கொடுத்தோம். ஆலிம்களின் இந்த சங்கம நிகழ்ச்சி, தவ்ஹீதுக் கொள்கையின் வளர்ச்சியை யும் எழுச்சியையும் தமிழகமெங்கும் பறைசாற்றியது. இதற்குப் பரேலவிகளின் அசத்தியக் கூடாரத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இக்கால கட்டத்திலும் இதற்கு முன்னரும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஹதீஸ் மறுப்புக் கொள்கை யுடையவர்கள் என்ற குற்றச்சாட்டை நமது எதிரிகள் சொல்லி வருகின் றார்கள். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹதீஸின் பெயரிலேயே ஒரு மாநாட்டை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. உண்மையில் இந்த ஹதீஸ் மாநாடு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். மேலப்பாளையம் ஜின்னா திடல் இப்படி ஒரு மக்கள் கடலைச் சந்திக்கவில்லை எனுமள வுக்கு மக்கள் எழுச்சியுடன் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இதைப் பொறுக்க முடியாத பரேலவிகள் கூட்டம் பஜார் திடலில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. வழக்கமாக ஸைபுத்தீன் ராபிளி கலந்து கொண்டு, கரித்துக் கொட்டினார்; வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார்.

ஏற்கனவே இவர் பேசும் போது, தவ்ஹீத் ஜமாஅத்தினர் நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டி, சோளக்காட்டுப் பொம்மை போல் நிற்கிறார்கள் என்று கிண்டலடித்துப் பேசினார்.

இதற்கு ஹதீஸ் மாநாட்டில் பதிலளித்துப் பேசிய மவ்லவி ஷம்சுல்லுஹா, “நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டுவது பலவீனமான ஹதீஸ் என்றே வைத்துக் கொள்வோம்; உங்கள் வாதப்படி பலவீனமான ஹதீஸ் அடிப்படையில் அமல் செய்யலாம் அல்லவா? அதன்படி நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டும் ஹதீஸைச் செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அதைக் கிண்டல் செய்யலாமா? இது ஹதீஸ் மறுப்பை விட மோசமான செயல் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஸைபுத்தீன் ராபிளியின் பதிலைப் பாருங்கள்:

தொப்புளுக்குக் கீழ் கட்டுவதில் தான் அதிக மரியாதை என்பதற்கு ஒரு ஆதாரம் சொல்லவா? ஜெயலலிதாவுக்கு முன்னால் மந்திரிகள் நிற்பார்கள் பாருங்கள். முதலமைச்சருக்கு முன்னால் அமைச்சர்கள் எல்லாரும் நெஞ்சில் கையைக் கட்டிக் கொண்டா நிற்கிறார்கள்? தொப்புளுக்குக் கீழ் கட்டிக் கொண்டு தான் நிற்பார்கள். ஏன்? மரியாதைக்காக அப்படி நிற்கிறான். அது ஒரு பண்பு; ஒரு வெளிப்பாடு!

இதுதான் தொப்புளுக்குக் கீழ் தக்பீர் கட்டுவதற்கு ஸைபுத்தீன் ராபிளி எடுத்து வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்(?).

இவர் தன்னுடைய பேச்சு முழுவதிலும், ஹதீஸைக் கிண்டலடிக்க வில்லை என்று கூறிக்கொண்டே, தான் அடித்த கிண்டலைக் கடைசி வரைக்கும் நியாயப்படுத்திப் பேசுகின்றார்.

நெஞ்சுக்கு மேல், கீழ், தொப்புளுக்குக் கீழ் தக்பீர் கட்டுகின்ற மூன்று ஹதீஸ்களும் பலவீனம் என்றால் மூன்றையும் சம அளவில் பாவித்துச் செயல்படவேண்டும். அவ்வாறு செயல்படாமல் ஏதேனும் ஒன்றை விட்டாலும் அதைக் கேலி செய்யக்கூடாது.

ஆனால் இந்த உரையில் முன்பைவிட இன்னும் மோசமாகக் கேலி செய்கின்றார். அதை நியாயப்படுத்துகின்றார். எல்லா வற்றிற்கும் மேலாக தனக்கு யார் முன்மாதிரி என்பதையும் இந்த ராபிளி போட்டு உடைக்கின்றார்.

அசத்தியவாதிகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு அல்லாஹ் ஏதாவது ஓர் அடையாளத்தை வைத்திருக்கின்றான். தஜ்ஜாலுக்கு வலது கண்ணைக் குருடாக ஆக்கி, நெற்றியில் காஃபிர் என்ற வார்த்தையைப் பதிய வைத்து அடையாளப்படுத்தியிருக்கிறான். அதுபோல் ஸைபுத்தீன் ராபிளிக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள அடை யாளம் இதுபோன்ற உளறல்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு முன்னால் எப்படி கைகட்டி நிற்க வேண்டும் என்று ஒரு முறையைக் காட்டித் தந்து விட்டார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன்” என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் “இதைத் தமது நெஞ்சின் மீது” என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 22610

தவ்ஹீத் ஜமாஅத் சொல்கின்றது; அதனால் அதை ஏற்க முடியாது என்று வீம்புக்கு மறுத்துவிட்டு, முதலமைச்சருக்கு முன்னால் மந்திரிகள் கைகட்டி நிற்பதை மார்க்கத்திற்கு உதாரணமாகக் காட்டுகின்றார்கள்.

ஜெயலலிதா காலடியில் மந்திரிகள் நெடுஞ்சாண் கிடையாகக் குப்புற விழுந்து வணங்குகின்றார்கள். பரேலவிகள் தங்கள் ஷைகுமார்களின் காலடியில் விழுந்து வணங்குகின் றார்கள். இதற்கும் அதுதான் உதாரணமாக அமைந்துள்ளது.

அதாவது, பிற மதக் கலாச்சாரம் இவர்களின் வணக்க வழிபாடுகளுக்கு ஆதாரமாக உள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

பிறமதக் கலாச்சாரத்தை ஸைபுத்தீன் ராபிளி வலுவாகக் கடைப்பிடித்து, தனக்கு முன்மாதிரி முஹம்மத் (ஸல்) அவர்கள் இல்லை, மங்குனி அமைச்சர்கள் தான் என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இவர் வழிகேடர் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

மூளை வறட்சி! மூத்திரப் புரட்சி!

அண்மையில் ஒரு பலவீனமான ஹதீஸைக் காட்டி, “ஒரு நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் மூத்திரத்தைக் குடித்தார்’ என்று ஸைபுத்தீன் ராபிளி ஒரு சொற்பொழிவில் பேசுகின்றார்.

மூத்திரம் அசுத்தம் என்று நபி (ஸல்) அவர்கள் போதிக்கின்றார்கள். அதைக் கழுவ வேண்டும் என்றும் வழிகாட்டியிருக்கின்றார்கள். இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் எப்படி நடப்பார்கள் என்ற சிந்தனை கூட இந்த ராபிளிக்கு இல்லை.

இப்படி மூத்திரத்தை நபித்தோழியர் குடித்தார்கள் என்று ஒரு புரட்சி (?) கருத்தைச் சொல்லும் அளவுக்கு இவருக்கு மூளை வறட்சி கண்டு விட்டது. இப்படி ஒரு பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொள்வது அப்துல்லாஹ் ஜமாலி போன்ற கடைந்தெடுத்த பரேலவி களின் கூட்டம் தான்.

இதுபோன்ற ஹதீஸ்களை இவர் ஆதாரம் காட்டிப் பேச ஆரம்பித்திலிருந்து இவரை ராபிளி என்று நாம் அழைப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பலவீனமான மூத்திர ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு மூத்திரப் புரட்சி படைத்தாலும் படைப்பேன். ஆனால் ஒரு வாதத்திற்குக் கூட நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட மாட்டேன்; அதைக் கிண்டலும் செய்வேன் என்று கூறுகின்றார் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட ஹதீஸ் மறுப்பாளர்கள் என்பதை இதிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

காற்று இறைவனின் சான்றே!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

காற்று இறைவனின் சான்று என்பதையும், காற்றின் முக்கியத்துவம், காற்றின் அற்புதங்கள், அதன் செயல்பாடுகள் பற்றியும் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

காற்று கடுமையாக வீசும்போது…

எந்தவொரு நிகழ்வுகளிலும் நேரங்களிலும் படைத்தவனை மறக்காதவர்களாகவும் அவனிடமே முறையிடுபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக, காற்று கடுமையாக, பலமாக வீசும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே ஆதரவை, பாதுகாப்பைத் தேட வேண்டும். இந்தப் பாடத்தை நபிகளாரின் வாழ்க்கையில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.

காற்றின் வேகம் வீரியமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் சொல்ல வேண்டிய துஆவை நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.

கடுமையான காற்று வீசும்போது அது (பற்றிய கலக்கத்தின் ரேகை) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் காணப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (1034)

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்று எண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (“ஆத்எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, “இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்என்றே கூறினர்என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (4829)

நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, “இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மை யையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1640)

மறுமை வாழ்வில் காற்றின் பங்கு

இந்தப் பூமியில் நமது வாழ்க்கை மாற்றத்திற்கும் இயற்கைக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. இதில், காற்றுக்கும் பங்கு இருப்பதை மறுத்து விட முடியாது. இந்த அம்சம் மறுமை வாழ்விலும் தொடரும்.

நரகத்திலே வீசும் காற்று அனல் நிறைந்ததாக இருக்கும். தேகத்தைச் சுட்டெரிக்கும். சுவாசிப்பதற்குத் தடுமாறும் வகையில் நச்சுத் தன்மை கொண்டிருக்கும். இதற்கு மாற்றமாக, சொர்க்கமோ சொக்க வைக்கும் நிலையில் இருக்கும்.  நறுமணம் கொண்டிருக்கும். அங்கு முழுவதும் தென்றல் காற்று தவழும். சொர்க்க வாசிகளைத் தழுவும் காற்று அவர்களுக்கு அழகையும் புதுப் பொலிவையும் அள்ளித் தரும்.

எனவே, இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் காற்றால் நேரும் அசம்பாவிதங்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இதற்கு ஒரே வழி, அசத்தியக் கொள்கைகளை, சிந்தனைகளைத் தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாத்தின்படி வாழ்வது மட்டுமே!

இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்னஅவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந் தனர். பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

(திருக்குர்ஆன் 56:41-46)

(நரகத்திற்குரியவர்களில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டி ருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு மறுமையில் இறைவன் கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெüயேற்றுவார்கள்) இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி “இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்து விட்டது.என்று கூறுவான். அப்போது அல்லாஹ், “(உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)என்பான். அந்தமனிதன் அல்லாஹ் விடம் தான் நாடிய உறுதி மொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தை விட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக் கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்ல வைப்பாயாக!என்று கேட்பான். அதற்கு இறைவன், “முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே?” என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இறைவா! நான் உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக் கூடாது!என்று கூறுவான். அதற்கு இறைவன், “(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா?” என்பான். அம்மனிதன், “இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்க மாட்டேன்என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்ல வைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையை யும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், “இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப் பாயாக!என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், “ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறி விட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், “இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், “நீ ஆசைப்படுவதைக் கேள்!என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், “இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!என்று சொல்-க் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதனாகிய அல்லாஹ் “உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று இன்னொரு மடங்கும் உண்டுஎன்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புஹாரி (806)

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்று கூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார் கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்என்று கூறுவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் (5448)

காற்று கற்றுத் தரும் பாடம்

திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காற்றுடன் தொடர்புபடுத்திப் பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. எளிதாகப் புரிந்து கொள்வதற்குக் காற்று உதாரணமாகப் சொல்லப்பட்டு உள்ளது.

வெப்பம் நிறைந்த காற்றினால் பயிர்கள் எரிந்து கருகி பாழாகிப் போவது போன்று இறை மறுப்பாளர்களின் நன்மைகள் அழிந்துவிடும். அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்கள் இடம் தெரியாமல் தடம் தெரியாமல் போய் விடுவார்கள். காற்றைப் போன்று துன்பங்கள் குழப்பங்கள் வரும் என்று என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் காற்றின் வாயிலாக கற்றுத் தரப்பட்டுள்ளன.

இவ்வுலக வாழ்க்கையில் அவர் கள் செலவிடுவதற்கு உதாரணம் வெப்பக் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கு இழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.

(திருக்குர்ஆன் 3:117)

அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.

(திருக்குர்ஆன் 22:31)

ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று (அடிப்பது) நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறை நம்பிக்கையாளரும் சோதனைகளின் போது அலைக்கழிக்கப்படுகின்றார். (எனினும், அவர் பொறுமை காப்பார்.) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும். தான் நாடும் போது அதை அல்லாஹ் (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து) விடுகின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (5643), (7466)

அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான், எனக்கும் யுக முடிவு நாளுக்குமிடையே நிகழப் போகும் குழப்பங்கள் குறித்து மக்களிலேயே நன்கு அறிந்தவன் ஆவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் குறித்து எனக்குச் சிலவற்றை இரகசியமாகச் சொல்லியிருந்ததே அதற்குக் காரணமாகும். மற்றவர்கள் அவற்றை அறிவிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங் களை எண்ணிக் கணக்கிட்டபடி, “அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டுவைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்) காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன; பெரிய குழப்பங்களும் உள்ளனஎன்று கூறினார்கள். (இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.

நூல்: முஸ்லிம் (5541)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்கள். உடம்பில் உயிர்க்காற்று உள்ள போதே முடிந்தளவு நற்காரியங்களைச் செய்து கொள்ள  வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது.

அல்லாஹ்வை அறிந்து கொள்ளவும் அவனது ஆற்றலை விளங்கிக் கொள்ளவும் காற்று நம்மைத் தூண்டக் கூடியாத இருக்கிறது. அதன் அடிப்படையில் பல்வேறு செய்திகளை அறிந்து கொண்டோம். இந்தச் செய்திகளை மனதில் நிறுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல் தொடர்: 25

பொருள் திரட்டும் பொறுப்பு ஆண்களுக்கே!

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இதுவரை ஆண்களைப் பற்றியும் அவர்கள் மனைவிமார்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பார்த்துள்ளோம். அதாவது ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தை அதிகாரம் செலுத்து பவனாக இருப்பான். ஆண்கள் சொல்வதைப் பெண்கள் கேட்டு நடக்க வேண்டும். அதே நேரத்தில் ஆண்கள் பெண்களை அடிமைத்தனமோ அடக்குமுறையோ செய்துவிடக் கூடாது. பெண்களிடம் ஆலோசனை களைக் கேட்டுக் கொள்ளவேண்டும். கடைசிக் கட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பம் வந்தால் அப்போது இறுதிகட்ட முடிவை எடுத்துச் செயல்படுத்துகின்ற அதிகாரத்தைக் கணவனுக்கே இஸ்லாம் கொடுக்கிறது என்பதுதான் குடும்பவியலில் முதலாவது விஷயம்.

இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கியமான விசயம், குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வகையான பொருளா தாரத்தைத் தேடுவதும் திரட்டுவதும் செலவு செய்வதும் ஆண்கள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது. வேறு எந்தக் கோட்பாட்டிலும் குடும்ப அமைப்பிலும் இது சட்டமாக இல்லை. இஸ்லாத்தில் மட்டும்தான் இப்படி சட்டம் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது மனைவிக்கும் பிள்ளை குட்டிகளுக்கும் தாய் தந்தையருக்கும் பொருளாதார ரீதியிலான அனைத் துக்கும் ஆண்களே பொறுப்பாவார்கள். இது குடும்பத்தில் இரண்டாவது நிபந்தனை. எந்தளவுக்கு எனில் இது பற்றிக் குர்ஆனில் பல இடங்களில் இறைவன் சுட்டிக்காட்டுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.

(அல்குர்ஆன் 2:233)

இவ்வசனத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவிக்குக் கணவன் செலவு செய்யவேண்டும், உணவும் ஆடையும் வழங்க வேண்டும் என்று இறைவன் சொல்வதிலிருந்து, விவாக ரத்துச் செய்யாமல் மனைவியுடன் கணவன் வாழ்ந்தால் இன்னும் கூடுதலாக மனைவிக்கு கணவன் மார்கள் பொருளாதார அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது தெளிவாகின்றது.

பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள்; நீங்கள் அல்லாஹ்வின் அமானிதத்தைக் கொண்டு அவர்களை அடைந்துள்ளீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டு அவர்களின் மறை விடங்களை அனுமதியாக்கிக் கொண்டீர்கள்; அவர்கள் உங்களுக்குச் செய்யும் கடமை, நீங்கள் வெறுப்பவர்களை உங்களது வீடுகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் இதை மீறினால் வலிக்காத வகையில் அவர்களை அடித்துக் கொள்ளுங்கள். (அதே நேரத்தில்) நீங்கள் அவர்களுக்குச் செய்யும் கடமை, அவர்களுக்கு நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப் பதும் ஆடை அணிவிப்பதுமாகும் என நபியவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 2137

நல்ல முறையில் வழங்குவது என்றால், கணவன்மார்கள் தங்களது சக்திக்கு உட்பட்டவாறு வழங்க வேண்டும் என்று பொருள். நல்ல முறையில் நீதமான முறையில் செலவு செய்வது என்றால், கணவன்மார்களும் பாதிக்காத வகையில் பெண்களும் பாதிக்காத வகையிலும் குடும்ப உணவுக்காகவும் சாப்பாட்டிற்காகவும் செலவு செய்வது கணவன் மீது கடமை என்று மார்க்கம் அறிவுறுத்துகிறது.

மனைவிக்குக் கணவன் சரிவர உணவளிக்கவில்லை என்றால் அந்த ஒரு காரணத்திற்காகவே மனைவி கணவனை விட்டு விலகிவிட மார்க்கம் பெண்ணுக்கு அனுமதியளிக்கிறது. சரிவர உணவளிக்காத உடையளிக்காத கணவனை பெண்கள் வேண்டாம் என்று விவாகரத்து கேட்டு வந்தால் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் விவகாரத்தை ஜமாஅத்துக்களில் ஏற்றுக் கொள்வது தான் நியாயமாகும்.

தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். (வாங்கும்) தாழ்ந்த கையை விட (கொடுக்கும்) உயர்ந்த கையே மேலானது. மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! நபியவர்களிடத்தில், “யாருக்கு நான் செலவிடுவது?” என்று கேட்டதற்கு “உனது மனைவிக்குத்தான்என்று கூறினார்கள். மேலும், “எனக்கு உணவளி அல்லது என்னை விவாகரத்து செய்துவிடு என்று (சொல்லாமல்) சொல்லிக் கொண்டிருக் கிறாள். அதே போன்று உனது வேலையாளும் எனக்கு உணவளி, என்னை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்..என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 453

எனவே ஒரு மனைவி கணவனிடத்தில் எந்த ஒப்பந்தத்தில் வாழ்கிறாள் எனில், “எனக்கு நல்ல முறையில் உணவளிக்கவும் நல்ல முறையில் ஆடை தரவும் உன்னால் முடிந்தால் என்னை மனைவியாக வைத்துக் கொள்; உனக்கு முடியாவிட்டால் என்னை விட்டு விடு. அதாவது விவாகரத்துச் செய்துவிடு’ என்று ஒவ்வொரு மனைவியும் கணவனிடத்தில் சொல்லாமல் சொல்கிறாள் என நபியவர்கள் கூறினார்கள். திருமண ஒப்பந்தத்தின் அர்த்தம் என்ன? என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

திருமணத்தின் பொருளே அது தான். மனைவிக்கு நான்தான் அவளின் எந்தத் தேவையையும் நிறைவேற்று வேன், நான்தான் செலவு செய்வேன் என்று கணவன் ஒப்பந்தம் செய்கிறான். மனைவி எதற்கும் செலவு செய்ய வேண்டிய அவசியமும் கட்டாயமும் கிடையாது என்று இஸ்லாமியக் குடும்பவியல் கூறுகிறது. மனைவி பெரிய செல்வமிக்க சீமாட்டியாக இருந்தாலும் அவள் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, குடும்பச் செலவுகளுக்கு கணவனிடம் தான் கேட்க வேண்டும்; கணவன் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் குடும்பவியலில் முக்கிய அடிப்படையைக் கொண்டுள்ளது. மனைவி மனமுவந்து தானாக விட்டுக் கொடுத்தால் அதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது; அவ்வளவுதான்!

அதேபோன்று நபியவர்கள் தமது இறுதிப் பேருரையில் ஆண் பெண் உரிமைகள் பற்றி மிகவும் வலியுறுத்திச் சொன்னார்கள்.

உங்களுக்கு உங்கள் மனைவி யரிடத்தில் உரிமை இருப்பது போன்று உங்கள் மனைவியருக்கும் உங்களிடத்தில் உரிமை உள்ளது. உங்கள் மனைவியரிடம் உங்களது உரிமை, நீங்கள் வெறுப்பவர்களை உங்களது விரிப்பில் உட்கார வைத்துவிடக் கூடாது. உங்களுக்கு விருப்பமில்லாதவரை உங்களது வீட்டுக்குள் வர அனுமதிக்கக் கூடாது. உங்களிடத்தில் பெண்களுக் குரிய உரிமை, அவர்களுக்கு ஆடையிலும் உணவிலும் அழகிய முறையில் நடத்தவேண்டும்.

அறிவிப்பவர்: அம்ர் இப்னுல் அஹ்வஸ்

நூல்: திர்மிதீ 3012,1083

கணவன் விரும்பாத ஆட்களை, உறவினர்களை வீட்டுக்குள் மனைவி அனுமதிக்கக் கூடாது. இந்தக் கட்டளையைக் கணவன் மனைவிக்கு இடலாம். அப்படிக் கணவன் கூறினால் முரண்டு பிடிக்காமல் மனைவி அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். அதேபோன்று வீட்டுச் செலவுக்கும், உணவு, ஆடை விசயத்தில் ஆடம்பரம் இல்லாமலும், அதே நேரத்தில் கஞ்சத் தனமாக இல்லாமலும் கணவன் தனது சக்திக்குத் தகுந்த மாதிரி அவர்களுக்கு நியாயமான முறையில் உணவும் ஆடையும் வழங்க வேண்டும்.

அதேபோன்று நபியவர்களிடத்தில் ஒருவர் வந்து, மனைவிமார்களுக்கு கணவன்மார்கள் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நபியவர்கள் சொன்ன பதிலே இதற்கு ஆதாரமாக இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், நீர் உண்ணும் போது உமது மனைவிக்கும் உண்ணக் கொடு, நீர் ஆடையணியும் போது அவளுக்கும் ஆடை அணியக் கொடு, (மனைவியை) முகத்தில் அடித்து விடாதே, அவளை ஒரேயடியாக வெறுத்து விடாதே, வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளைக் கண்டிக்காதே, வெறுக்காதே என்று பதிலளித்தார்கள்.

கணவன் சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்தால், அப்போது மனைவியும் பட்டினி கிடப்பது பிரச்சனை இல்லை. இருந்தால்தானே கொடுக்க முடியும். ஆனால் கணவன் சாப்பிட்டுவிட்டு மனைவியைப் பட்டினி போட்டுவிடக் கூடாது. வறுமையில் இருக்கிற குடும்பத்தில் கணவன் இப்படிச் சொல்லும் போது மனைவி அதை அனுசரித்துத்தான் ஆக வேண்டும்.

பெருநாள் போன்ற நல்ல நாட்கள் வரும் போது மனைவி ஆடை எடுத்துக் கேட்கும் போது, எனக்கும் ஆடை எடுப்பதற்கு வழியில்லாமல் தான் இருக்கிறேன். எனவே நீயும் இந்தப் பெருநாளைக்கு ஆடை கேட்காதே என்று கணவன் சொன்னால் அதை அனுசரித்துத்தான் மனைவி போகவேண்டும். அதே நேரத்தில் கணவன் நேரத்திற்குச் சரியாகச் சாப்பிட்டுவிட்டு, மனைவியைப் பட்டினி போடுவதை மார்க்கம் தடுக்கிறது. கணவன் விதவிமாகப் புத்தாடை எடுத்துவிட்டு மனைவிக்குச் சரியாக ஆடை கொடுக்கவில்லையெனில் அவன் கணவன் என்ற பொறுப்பை சரியாகப் பேணாதவன் என்று மார்க்கம் கண்டிக்கிறது.

எனவே பெண்களுக்கு உணவு உடை மட்டுமன்றி அவர்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது கணவனின் பொறுப்பு என இஸ்லாமிய மார்க்கம் பெரிய பொறுப்பை கணவன் மீது சுமத்துகிறது.

மேற்கண்ட ஆதாரங்களனைத்தும் பெண்களுக்கு ஆண்கள்தான் உணவையும் உடையையும் அவர்களது தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று உணர்த்துகிறது.

இன்னும் சொல்வதாக இருப்பின், தனக்குக் கீழிருப்பவருக்கு உணவளிக் காத பாவமே ஒரு மனிதன் பாவியாகப் போவதற்கு தக்க காரணமாகும். ஒரு ஆண் பாவியாவதற்குக் கொலையோ கொள்ளையோ விபச்சாரமோ செய்து பாவியாக வேண்டும் என்கிற அவசியமில்லை. தனக்குக் கீழுள்ள மனைவிக்கு உணவு கொடுக்காமல் இருந்தாலேயே அவன் பெரும் பாவியாகி விடுவதாக நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள்  அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் “அடிமைகளுக்கு உணவு கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லைஎன்றார். “உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடுஎன்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 1819

ஏற்கனவே முந்தைய கட்டுரை களில் பெண்களை விட ஆண்களுக்கு ஒருசில உயர்வுகள் உள்ளது என்று அல்லாஹ் சொன்ன வசனத்திலும் இந்தக் காரணத்தைச் சொல்கிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்…. (அல்குர்ஆன் 4:34)

ஆண்கள் பொருளாதாரத்தைச் செலவழிக்கிற காரணத்தினாலும், உடல் ரீதியாக மேலோங்கியவர்களாக இருப்பதினாலும் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்கின்றனர்.

ஆக இஸ்லாமியக் குடும்ப அமைப்பில், மனைவியைக் கவனிக்கிற எல்லாப் பொறுப்புகளும் ஆண்களைச் சார்ந்தது. இது இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கிய நிபந்தனை யாகும். இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இஸ்லாமிய குடும்ப அமைப்பு எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் உலகத்தில் இந்தச் சட்டம் பலரால் மீறப்பட்டு வருகிறது. பெண்களை ஆண்கள் தான் கவனிக்க வேண்டும் என்பதை விளங்காமல், பெண்களைச் சம்பாதிப்பதற்கு அனுப்புகின்ற காட்சிகளை அன்றாடம் காண்கிறோம்.

பெண்களும் நமக்கு கணவன் மார்கள்தான் பொறுப்பாளிகள், அவர்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதை விளங்கிக் கொள்ளாமல் நம் வயிற்றுக்கு நாம்தான் சம்பாதிக்க வேண்டும் என்று தவறாக விளங்கிக் கொண்டு வேலைக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.

பல இடங்களில் வேலைக்கும், தொழில் பார்ப்பதற்கும் பெண்களை அனுப்பி சம்பாதிக்கும் நிலை தான் உள்ளது. இப்படி ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்தப் பழக்கம் உண்மையில் நல்லதா? என்பதை ஆராய்ந்தால், திருமணத்திற்கு முன்பாக பெண்களைக் காக்கின்ற தந்தை என்கிற ஆண் இல்லாவிட்டால், திருமணத்திற்குப் பின்னால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு பெண்களைக் காக்கிற கணவன் இல்லையென்றால் அப்போது நிர்பந்தம் என்ற நிலையில் வேறு வழியில்லாமல் பெண்கள் வேலைக்குச் செல்வதில் எந்தத் தவறுமில்லை.

ஒரு பெண்ணுக்கு யாரும் பொறுப்பாளி இல்லை. அவள் உழைத்தால் தான் சாப்பிட முடியும், ஆடை அணிகலன்களை வாங்கிக் கொள்ள முடியும் என்றால் அப்போது அந்தப் பெண் உழைப்பது அவளுக்கு நிர்பந்தமாகிவிடும்.

வேறு வழியில் லாமல் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்குத் தான் மார்க்கம் அனுமதிக்கிறதே தவிர, மற்றபடி கணவன்மார்கள் பொறுப்பாளியாக இருந்தும் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தாந்தம் வெறும் வறட்டுச் சித்தாந்தமாகவே பார்க்கிறோம்.

பெண்களுக்கு எவ்வளவு பெரிய தேவைகள் இருந்தாலும் கணவனிடம் தான் கேட்டுப் பெறவேண்டும். அதை விட்டுவிட்டுப் பெண்கள் வேலைக்குச் செல்வது தனிமனித சுதந்திரம், இது சுதந்திற்கான அடையாளம், இது முற்போக்கு சிந்தனை, இதுதான் உலகிற்கு சிறந்தது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்வது இன்றைய கலாச்சாரமாகிவிட்டது.

பெண்கள் வேலைக்குச் செல்வது உண்மையில் அவர்களுக்கு நன்மை என்றால் நிச்சயம் இஸ்லாம் ஒருபோதும் எந்த நன்மையையும் தடுக்காது. அல்லாஹ் யார் யாருக்கு எது தேவையோ அவைகளுடன்தான் படைத்திருக்கிறான். இதனடிப்படையில் பெண்கள் வேலைக்குச் செல்வது ஒருக்காலும் நன்மையைப் பெற்றுத் தரவே தராது. அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காணலாம்.

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்    தொடர்: 32

அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

சென்ற இதழில், குகைவாசிகளின் சம்பவம் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களைப் பார்த்தோம்.

அந்தக் குகைவாசிகள் குகையில் பல ஆண்டுகளாக உறங்கியிருக் கிறார்கள். அதற்குப் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புகிறான். ஒரு மனிதன் சாகாமல் பல ஆண்டுகளாக உண்ணாமல், பருகாமல் உயிருடன் இருந்த நிலையில் தூங்கியிருப்பது ஒரு அற்புதமாகும்.

ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் தூங்கினாலும் அவனுக்குப் பசி வந்து விட்டால் அவன் தூக்கத்திலிருந்து எழுந்து விடுவான். ஆனால் இந்தக் குகைவாசிகள் பல ஆண்டுகளாக எதையும் சாப்பிடமால், குடிக்காமல் உயிருடன் இருந்த நிலையில் தூங்கியிருக்கிறார்கள். அதிலும் எந்த மனிதனாவது ஒரு புறமாகவே சாய்ந்து பல நாட்கள் படுத்துக் கிடந்தாலே உடல் வெப்பத்தினால் வெந்து போய் விடும். சில நோயாளிகளுக்குத் தண்ணீர் படுக்கை (வாட்டர் பெட்) போட்டால் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் படுத்துக் கிடக்கின்றார்கள். ஆனால் எந்த விதமான விளைவுகளோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை. அல்லாஹ் தான் அவர்களை இடது புறமாகவும் வலது புறமாகவும் புரட்டியதாகச் சொல்கின்றான். அதன் காரணத்தால், சூரியன் உதிக்கும் போதும் அவர்கள் மீது படவில்லை. சூரியன் மறையும் போதும் அவர்கள் மீது படவில்லை.

அல்லாஹ் அவர்களைப் பல வருடங்களாகத் தூங்க வைத்து, அவர்கள் அழைத்து வந்த ஒரு நாயைக் காவலுக்கு வைத்து இந்த அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறான்.

அதற்குப் பிறகு அவர்கள் பல வருடங்கள் கழித்து எழுந்திருக் கிறார்கள். அப்போது தான் அவர்களுக்குப் பசி ஏற்படுகின்றது. சாப்பிட ஏதாவது வாங்கி வருவதற்காக காசு கொடுத்து சாப்பாடு வாங்க ஆள் அனுப்புகிறார்கள். ஆனால் அந்த ஊர் மக்கள் அந்தக் காசுகளை செல்லாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

பிறகு அவர்கள் திரும்பி வந்து, நாம் எவ்வளவு நேரம் இங்கே உறங்கியிருப்போம்? நாம் ஒரு நாள் அல்லது அரைநாள் தூங்கியிருப்போம். அதற்குள் உலகமே மாறிவிட்டது. நாம் சாப்பாடு வாங்குவதற்காகக் கொண்டு போன பணமும் செல்லாக் காசாகி விட்டது என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

முன்னூறு வருடமாகத் தூங்கியவர் களுக்கு, தாங்கள் எத்தனை வருடம் தூங்கினோம் என்பது கூடத் தெரியவில்லை. அவர்களிடத்தில் தான் அற்புதம் நடந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றிய அறிவு அவர்களிடத்தில் இல்லை. பணத்தைக் கொண்டு போய் சாமான்கள் வாங்குவதற்குக் கடைக்கு செல்லும் போதுதான் அவர்களுக்கு விபரமே தெரிய வருகிறது.

இவ்வாறு நபிமார்கள் அல்லாத, நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது. ஆனால் இது அவர்கள் மூலமாக நடந்த அற்புதமா என்றால் இல்லை. அவர்கள் அறியாமலேயே அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான். நபிமார்களுக்கு எவ்வாறு அற்புதங்கள் நிகழுமோ அந்த மாதிரி இவர்களுக்கு நிகழவில்லை. இவர்களாகவும் நிகழ்த்திக் காட்டவுமில்லை. நபிமார்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்து, “செய்’ என்று சொல்வான். அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி யுடன் அதைச் செய்து காட்டுவார்கள்.

அது போன்று, நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்குக் கீழ்க்காணும் சம்பவத்தை நாம் உதாரணமாகக் கூறலாம்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராத விதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், ‘நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மை யான முறையில் செய்த நற்செயல் களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக – துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப் போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்” என்று பேசிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்;

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப் பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன்.

வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலை மாட்டில் நின்று கொண்டேன். என் (தாய் தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந் தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாகிவிட்டது.

நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே செய்திருக் கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம்.

அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி – முறைப் பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரண்டு கால்களுக் கும் இடையே அமர்ந்தபோது அவள், ‘அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே” என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக!

உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.

மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், ‘என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு” என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

(அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எது வரை என்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, “அல்லாஹ்வுக்கு அஞ்சுஎன்று கூறினார். நான் அவரிடம், “அந்த மாடுகளிடமும் இடையர் களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்என்றேன்.

அதற்கு அம்மனிதர், “அல்லாஹ் வுக்கு அஞ்சு! என்னைப் பரிகாசம் செய்யாதேஎன்று கூறினார். நான், “உன்னை நான் பரிகாசம் செய்ய வில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள்என்று பதிலளித் தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக!

(இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2333

இந்தச் சம்பவம் மேலும் புகாரியில் 2063, 2111, 2165, 3206, 5517 ஆகிய இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

மேற்கண்ட சம்பவத்தில், அந்த மூன்று பேர் கேட்ட துஆவினால் பாறை அகன்ற அந்த அற்புதம்  நிகழ்ந்ததாக நபிகளார் கூறுகிறார்கள். அந்த மூன்று பேரும் சராசரி மனிதர்கள் தானே தவிர அதிகம் அதிகம் நன்மைகள் செய்து,  நாள் முழுவதும் இறை வணக்கத்தில் ஊறித் திளைத்த, காசு பணத்தை தர்மமாக வாரி இறைத்த, தியாகம் செய்த  பெரிய அவ்லியாக்களோ, மகான்களோ அல்லர். தங்களின் நல்லறங்களில் அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த ஒரு நல்லறம் உண்டா என்று தேடிப் பார்க்கும் அளவுக்குக் குறைந்த நல்லறம் செய்தவர்கள். ஒரு நேரத்தில் அல்லாஹ்வை அஞ்சி, பயந்து ஒரு நற்செயலைச் செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

ஆக, அல்லாஹ் நாடினால் யாருக்கும் இவ்வுலகில் அற்புதங் களைச் செய்வான். அவன் நல்லவனாக இருந்தாலும் சரி தீயவனாக இருந்தாலும் சரியே!

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

தொடர்: 6 ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

அனைத்தையும் தீர்க்கும் ஐந்து கடவுள்கள்

எம். ஷம்சுல்லுஹா

புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்குகளையும், பழிவாங்கல் களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன்.

இந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். மீண்டும் ஒரு தடவை படியுங்கள். இது உண்மையில் நாளை நரகில் நம்மைக் கரிக்கும் நெருப்புப் பொறிகள் என்று புரிந்து கொள்ளலாம்.

புனித மிக்க ஐவர் யார்? இதை இன்னொரு கவிதை வரிகள் உங்களுக்குத் தெளிவைத் தரும்.

எனக்கு ஐவர் இருக்கின்றனர். அவர்களை வைத்து தகர்த்தெறியும் எரி நெருப்பின் வெப்பத்தை விட்டும் என்னை நான் காத்துக் கொள்வேன். முஸ்தபா (முஹம்மத்-ஸல்), முர்தளா (அலீ), இவ்விருவரின் பிள்ளைகள் (ஹஸன், ஹுஸைன்), பாத்திமா ஆகியோர் தான் அந்த ஐவர்.

இந்த ஐந்து கடவுள் கொள்கையைத் தான் ஹுஸைன் மவ்லிது நிலைநாட்டுகின்றது. இதை ஏதோ ஒரு புறம்போக்குப் புலவன் புலம்பிய வார்த்தைகள் என்று புறந்தள்ளி விடமுடியாது. கண்டு கொள்ளத் தேவையில்லாத ஒரு கவிஞனின் அர்த்தமற்ற கவிதை வரிகள் என்று அலட்சியம் செய்ய முடியாது.

இந்த வரிகள் ஷியா விஷச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற ஷியாக்களின் வேத வரிகள். இவை தான் ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபில் இடம்பெற்றுள்ளன.

சுன்னத் வல்ஜமாஅத்தினர் ஷியாக்களின் வார்ப்புகள், அவர்களின் மறுபதிப்புகள் என்பதற்கு இவை யெல்லாம் அச்சடித்த சான்றுத் தடயங்கள்.

இந்த ஐவரையும் நாங்கள் எப்போது கடவுள் ஆக்கினோம்? என்று நாக்கூசாமல் இவர்கள் நம்மிடம் கேட்பார்கள். இந்த ஐவரையும் கடவுளாக ஆக்கியுள்ளார்கள் என்பதற்கு முஹர்ரம் மாதத்தில் இவர்கள் எடுக்கும் பஞ்சாவே ஆதாரமாகும்.

அவற்றை வரிசையாகப் பார்ப்போம்.

ஐவரைக் குறிக்கின்ற ஐந்து விரல் படங்கள்

பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இதுதான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும்.

தங்கத்தையொத்த ஜரிகைத் தாள் ஒட்டப்பட்ட பஞ்சாவின் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற விளக்கு, அதில் மின்னும் கதிர்கள் பன்மடங்கு பரிமாணத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்.

அதன் நடுவில் நடுநாயகமாக ஐவிரல் அடங்கிய வெள்ளிக்கை விரல்கள் கொலு வீற்றிருக்கும். சந்தேகமில்லாமல் இந்த ஐந்து விரல்கள் யாரைக் குறிக்கின்றன?

பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது.

அது போன்று தான் இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர்.

அதனால் தான் ஹுஸைன் மவ்லிதின் இந்தக் கவிதையில், “எனக்கு ஐந்து பேர்கள் இருக்கிறார் கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்” என்று பாடியுள்ளான்.

கவிதை வடிவமும் கை வடிவமும்

“தப்பத் யதா மன் யுசவ்விர் யதா ஸுபைத்தில் முனவ்விர்’

“ஒளிவீசும் ஹுஸைனின் கைகளை வடிவமைத்தவரின் கைகள் நாசமாகட்டும்” என்று அந்த ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ளது.

ஹுஸைனின் கைகளை வடி வமைத்தவரை ஹுஸைன் மவ்லிதே கண்டித்து விட்டதால் அந்த ஐவரையும் கடவுளாக்கியதில் ஹுஸைன் மவ்லிதுக்குப் பங்கில்லை என்று யாராவது முண்டாசு கட்டிக் கொண்டு முட்டுக் கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு முட்டுக் கொடுக்க முடியாது.

மக்களிடத்தில் ஹுஸைன் (ரலி) மீது ஒரு பிரம்மாண்டமான பிம்பத்தை இந்த மவ்லிது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதர மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிதுகளின் கதாநாயகர்களைப் போல, ஹுஸைன் (ரலி)யை, “கைகொடுத்து காப்பாற்றும் ரட்சகர்’ என்று அவருக்கு தெய்வத் தன்மையை இந்த ஹுஸைன் மவ்லிதே ஏற்றி விடுகின்றது.

இந்த மவ்லிதை இயற்றியதற்குக் காரணமே, இதன் ஆசிரியர் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாராம். அதனைத் தொடர்ந்து இந்த இணைவைப்புக் கவிதைகள் மூலம் ஹுஸைனைப் புகழ்ந்த காரணத்தால் தான் அந்த நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததாக இதை எழுதிய ஆசான் தனது மவ்லிதின் ஏழாவது ஹிகாயத்தில் வாக்குமூலம் தருகின்றார்.

மவ்லிது ஆசான் கவிதை வடிவில் தனது கதாநாயகரைக் கடவுளாக வழிபடுகின்றார் என்றால் பஞ்சா ஆசான்கள் கைவடிவத்தில் தங்கள் கதாநாயகரான ஹுஸைனைக் கடவுளாக வழிபடுகின்றனர். இது தான் வித்தியாசம்.

அதனால் இந்தக் கை வழிபாட்டுக் கோலத்தை வெறும் வார்த்தை ஜாலத்தால் கண்டிப்பதும் கடிவதும் எல்லாம் வெறும் கண்துடைப்பாகுமே தவிர உண்மையான கண்டனமாகாது என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டத்தை நிறைவேற்றும் ஹுஸைன் (ரலி)

இந்த ஐவரும் கடவுளாக்கப் பட்டுள்ளனர் என்பதை வெறும் ஒப்புக்காகச் சொல்லவில்லை. உண்மை யாகவே சொல்கிறோம் என்பதற்கு அடுத்த எடுத்துக்காட்டு ஏழாம் நாள் பஞ்சாவாகும்.

தனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தால் முஹர்ரம் ஏழாம் நாளன்று பஞ்சாவின் குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்கள் நேர்ச்சை செய்வர். இதன்படி ஏழாம் நாளன்று நேர்ச்சை செய்யப்பட்ட பையனைக் குதிரையில் ஏற்றி பஞ்சா ஊர்வலத்தில் வலம் வரச் செய்வார்கள். ஒரு பச்சை முக்காடு போட்டு, குதிரையில் சுற்றி வருகின்ற இந்தப் பையன் அல்லாஹ் தந்த வரமல்ல! ஹுஸைன் தந்த வரம் என்று கருதி ஹுஸைனைக் கடவுளாக்கும் அநியாயமும் அக்கிரமும் இங்கு அரங்கேறுகின்றது.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பது தன் கைவசமுள்ள தனி அதிகாரம் என்று குறிப்பிடுகின்றான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை) களை வழங்குகிறான்.

அல்லது ஆண்களையும், பெண் களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49, 50

அல்லாஹ்வுக்குரிய இந்த அதிகாரத்தை ஹுஸைனுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர் ஷியா போர்வையில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர்.

கொழுக்கட்டை முதல் கோழி வரை

ஹுஸைன் (ரலி) குழந்தை கொடுக்கும் கடவுளாக மட்டும் இவர்கள் சித்தரிக்கவில்லை. அவரை நேர்ச்சை நிறைவேற்றுகின்ற நிவாரண நாயகராகவும் சித்தரிக்கின்றார்கள்.

புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை!

குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம்

ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக் கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித் தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவதில்லை.) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக் கட்டைகள் செய்து வீசப்படும்.

அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும்.

இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றைக் காணிக்கை செலுத்த வேண்டும்.

கணவனைத் தரும் கடவுள் ஹுஸைன்

இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் ஹுஸைனிடம் குழந்தை பாக்கியத்தை மட்டும் கேட்கவில்லை. கணவன் பாக்கியத்தை, மணாளன் என்ற பாக்கியத்தையும் சேர்த்தே கேட்பது தான்.

தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்!

அல்குர்ஆன் 22:29

நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்கின்ற ஒரு வணக்கமாகும். இதைத் தான் இந்த வசனம் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

அந்த வணக்கத்தை ஹுஸைன் (ரலி) அவர்களுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர். இதைத் தான் இந்தக் கவிஞன் ஹுஸைன் மவ்லிதில், “புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்கு களையும், பழிவாங்கல்களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன்” என்று கூறுகின்றான்.

கடிவாளக் குதிரை கடவுளாகும் விந்தை

இதில் இன்னொரு வேடிக்கை, நேர்ச்சை செய்யப்பட்ட பையனைச் சுமந்து வரும் குதிரைக்கும் ஹுஸைன் (ரலி)யின் பொருட்டால் கடவுள் தன்மை கிடைத்து விடுகின்றது. அதனால் தான் மக்கள் இதன் குளம்புகளில் குடம் குடமாகக் குடிநீரைக் கொட்டுகின்றனர்.

இந்த வகையில் குதிரைக்கும் ஹுஸைனின் கடவுள் தன்மை கிடைத்து விட்டது. அதனால் கடிவாளக் குதிரை கடவுளான விந்தை என்று குறிப்பிடுவதைத் தவிர வேறு என்று என்ன கூற முடியும்?

நித்திய ஜீவன் ஹுஸைன்

மக்கள் தங்கள் நாட்டங்களையும், தேட்டங்களையும் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் கோருவதன் மூலம், அவர்கள் பெயரில் நேர்ச்சை செய்வதன் மூலம் அவரை ஒரு நித்திய ஜீவனாக ஆக்கிவிட்டனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். உண்மையில் இந்தத் தன்மையும் மாண்பும் எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.

ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர்தாங்கிகள் இந்தத் தன்மையும் மாண்பையும் ஹுஸைனுக்குத் தூக்கிக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194, 195

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:21

இந்த வசனத்தின் அடிப்படையில் ஹுஸைன் (ரலி) மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்டார் என்பதை இவர்கள் வசமாக மறந்து விட்டனர்.

அல்லாஹ் விதித்த தடைகள்

முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது. கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று அல்லாஹ் விதிக்காத தடைகளை இவர்களாக விதித்தும் ஹுஸைன் (ரலி)க்குப் புனிதம் ஏற்றி விடுகின்றனர்.

இவை அனைத்தும் தெளிவாக உணர்த்தும் உண்மைகள் என்ன வென்றால் இவர்கள் ஹுஸைனைக் கடவுளாக ஆக்கி விட்டார்கள் என்பது தான். இதைத் தான் இந்த ஹுஸைன் மவ்லிது ஆசிரியரும் குறிப்பிடுகின்றார்.

இந்த மவ்லிது ஆசிரியர், ஹுஸைன் (ரலி)யை அனைத்தையும் தீர்க்கின்ற ஆபத் பாந்தவானாகப் பார்க்கின்றார்.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 6:17

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

இந்த வசனங்களில் அல்லாஹ் கூறுவதை இவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:22

அல்லாஹ்வின் இந்த வசனத்தை யும் ஹுஸைன் மவ்லிதின் ஆசிரியர் மறந்து விட்டார். அதனால் தான் “ஐவர் மூலம் அனைத்து தீங்குகளை விட்டும் தடுத்துக் கொள்வேன்” என்று துணிந்து கூறுகின்றார்.

பொதுவாக அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களுக்கு அறிவு வேலை செய்யாது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்த மவ்லிது ஆசிரியரும் உள்ளார்.

ஹுஸைன் (ரலி) அவர்களுடன் சேர்ந்து 72 பேர்கள் கர்பலா களத்தில் கொல்லப்படுகிறார்கள். ஹுஸைன் (ரலி)யின் மகனான சின்ன அலீ என்று அழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீனைத் தவிர அத்தனை பேர்களும் கொல்லப்படுகின்றார்கள். இந்தச் சம்பவத்தில் ஹுஸைன் (ரலி) தன்னையும் காப்பாற்ற முடியவில்லை. தன்னுடன் உள்ள 72 பேரையும் காப்பாற்ற முடியவில்லை.

இது நமக்கு எதை உணர்த்துகின்றது? ஹுஸைன் (ரலி) அவர்களுக்கென்று எந்த ஒரு தனி சக்தியும் இல்லை. ரசூல் (ஸல்) அவர்களின் பேரர் என்பதற்காக வேண்டி அல்லாஹ்விடமிருந்து எந்தவொரு சலுகையும் இல்லை. அவனது விதிக்கு முன்னால் எல்லா அடியார்களும் சமம் தான் என்பதையே இது உணர்த்துகின்றது. அதிலும் குறிப்பாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இந்த நிலை என்றால் இப்போது இறந்த பிறகு அவர்களால் எதுவும் செய்ய முடியாது.  இதைத் திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது.

அல்குர்ஆன் 7:191, 192

(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!

அல்குர்ஆன் 7:193

இந்த வசனம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் உண்மையைப் போட்டு உடைக்கின்றது. இந்த வசனங்கள் மீது இந்த மவ்லிது ஆசிரியருக்கு எள்ளளவேனும் நம்பிக்கை இருந்தால் ஐவர் மூலமாக அனைத்துத் தீங்கை விட்டும் காத்துக் கொள்வேன் என்று சொல்ல மாட்டார்.

குப்புற விழும் குருட்டுக் கூட்டம்

ஹுஸைன் மவ்லிதை எழுதிய இந்த அரைவேக்காடுக் கவிஞன் இறை மறுப்பில் விழுந்து விட்டான் என்றால் அதை ஆமோதித்து வழிமொழிந்து, வலிந்து வலிந்து ஓதுகின்ற இந்த ஆலிம் கூட்டத்தை என்னவென்று சொல்வது?

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப் பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர்ஆன் 25:73

தனது வசனங்களில் கூட குருட்டுத்தனமாகவும் செவிட்டுத் தனமாகவும் விழக்கூடாது என்று என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது, இந்த ஆலிம் கூட்டம் இந்தக் குருட்டுக் கவிஞனின் குஃப்ரான, இணை வைப்பு வார்த்தைகளில் வீழ்ந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் மாதத்தில் இந்த மவ்லிதை பக்திப் பரவசத்துடன் ஓதி மகிழ்கின்றது என்றால் இவ்களும் ஷியாக் கூட்டம் என்பதைத் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது.

இவர்களும் இந்த ஐந்து பேரைக் கடவுளாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி…

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொடரில் கண்டோம்.

இஸ்லாமியக் கொள்கை  மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது இந்த உலமா (?) கூட்டம். அவை எந்தெந்த வசனங்கள்? ஆலிம்கள் கூட்டம் என்ன சொல்கிறது என்பது  தொடர்பான விளக்கத்தை இத்தொடரில் காண்போம்.

மறைவான ஞானம்

மறைவில் நடப்பவற்றை அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. அவனைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிந்து கொள்ள மாட்டார்.

இந்தக் கருத்தை எண்ணற்ற இறை வசனங்கள் விளக்குகின்றன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

திருக்குர்ஆன் 6:59

வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

(அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; பெரியவன்; உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 13:9

மறைவானதை அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறிய மாட்டார் என்பது குர்ஆன் கூறும் அடிப்படை இறைக் கோட்பாடாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எந்த ஒரு இறைத்தூதரும் இறைவன் அறிவித்து கொடுத்தாலே தவிர மறைவானவற்றை தாமாக அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை.

இதை மக்கள் மனதில் பதிய வைக்கவே எங்களுக்கு மறைவானதை அறியும் சக்தி இல்லை என்று சமுதாய மக்களிடயே உரக்கச்  சொல்லுமாறு அல்லாஹ் பல இறைத்தூதர்களுக்குப் பணித்திருக்கிறான். அவர்களும் அவ்வாறே பகன்றுள்ளார்கள் என்பதை திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம்.

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறை வானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:20

என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறை வானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன்.

திருக்குர்ஆன் 11:31

அல்லாஹ்வைத் தவிர மறை வானவற்றை வேறு யாரும் அறிய மாட்டார் என்பது தான் குர்ஆன் கூறும் இறைக் கொள்கையாகும் என்பதை மேற்கண்ட பல வசனங்கள் மூலம் எளிதாக அறிகிறோம்.

இத்தனை வசனங்களையும் இந்தப் போலி ஆலிம்கள் மறுக்கிறார்கள்.

மறைவானவற்றை நபிமார்கள் அறிவார்கள், அவ்லியாக்கள் (?) அறிவார்கள் என்ற தவறான நம்பிக்கையை மக்களிடையே விதைத்து அதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் வண்ணம் தங்கள் செயல்பாடுகளை அமைத்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் மறைவானதை அறிவார்கள் என்று தாங்கள் ஓதும் மவ்லிதுகளில் புகழ்மாலை (?) சூடி அதை இறையில்லத்தில் வைத்தே மன உறுத்தலின்றி பாடிக் கொண்டிருக்கின்றனர்.

முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி உள்ளிட்ட இதர இறையடி யார்களைப் புகழும் போது மறைவானதை அறிவார்கள் என்று புகழ்கிறார்கள்.

இதையெல்லாம் ஆலிம்களின் தலைமையில் அவர்களின் பேராதரவுடனே செய்து வருகிறார்கள்.

இறந்தவர்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் மறைவானதை அறியும் ஆற்றல் உண்டு என இவர்கள் கூறுவார்களேயானால் அல்லாஹ்வைத் தவிர மறைவானதை வேறு யாரும் அறிய மாட்டார் என்று கூறும் வசனங்களின் நிலை என்ன?

இது நாள் வரை இவர்கள் அந்த வசனங்களைப் படிக்கவில்லை என்று பொருள் கொள்ள இயலுமா? அவ்வசனங்கள் தரும் கருத்தை நம்புவதற்கு இவர்கள் தயாராக இல்லை என்பதே இதன் உள்ளர்த்தம்.

மறைவானதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று கூறும் பல வசனங்களை இந்த ஆலிம்கள் கூட்டம் மறைக்கின்றது, மறுக்கின்றது என்பது இதன் மூலம் தெரிய வரும் பேருண்மையாகும்.

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது இஸ்லாம் கூறும் கொள்கைப் பிரகடனமாகும்.

ஏனெனில் பெரும்பாலான இணை வைப்பு செயல்கள்  நடந்தேறுவதற்கு இறந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்ற தவறான நம்பிக்கையே காரணமாகத் திகழ்கின்றது.

எங்கோ அடக்கம் செய்யப் பட்டிருக்கும் முஹ்யித்தீன் என்பவரை தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். அதுவும் சாதாரண மாக அல்ல, தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது யா முஹ்யித்தீன் என்று அழைக் கின்றார்கள். கேட்டால் அவர்கள் எங்களின் அழைப்பை இறந்த பிறகும் செவியேற்று துன்பம் தீர்த்து வைக்கின்றார்கள் என்கிறார்கள்.

இப்படி பல இணைவைப்பு செயல்கள் நடந்தேறுவதற்கு இறந் தவர்கள் செவியேற்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு முக்கிய காரணியாகும்.

குர்ஆன் இந்த நம்பிக்கையைத் தவறு என்கிறது. இறந்தவர்களுக்கு செவியேற்கும் ஆற்றல் இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 27:80

போதனையை கேட்க மறுத்து ஓடும் இறைமறுப்பாளர்களை செவியேற்க செய்ய முடியாது என்பதை நபிக்கு அல்லாஹ் விளக்கும் போது, இறந்தவர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியாதது போல் இவர்களையும் செவியேற்கச் செய்ய முடியாது என்று உதாரணம் கூறி அல்லாஹ் விளக்குகிறான்.

இறந்தவர்களுக்குச் செவியேற்கும் ஆற்றல் இல்லை என்பதை அல்லாஹ் இந்த உதாரணத்தின் வாயிலாக தெளிவுபடுத்தி விட்டான்.

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

திருக்குர்ஆன் 35:22

அல்லாஹ்வையன்றி அழைக்கப் படுபவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறான்.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற் பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

திருக்குர்ஆன் 46:5

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் எனத் திருக்குர்ஆனின் தெளிவான பிரகடனத்தை அறிந்த பிறகு இந்த ஆலிம்கள் என்ன செய்கிறார்கள் என அறிந்து கொள்ள வேண்டாமா?

இறந்து போன நல்லடியார்கள் செவியேற்பார்களாம், மக்களின் கோரிக்கையைப் புரிந்து கொண்டு, அல்லாஹ்விடத்தில் பரிந்து பேசுவார்களாம், பதிலளிப்பார்களாம். இது தான் உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் இந்தக் கேடு கெட்ட ஆலிம்களின் நிலைப்பாடு.

பல ஊர்களில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களோடு சேர்த்து வெவ்வேறு பெயர்களில் தர்ஹாக்கள் கட்டப்பட்டுள்ளது. சில மக்கள் கூட்டம் வந்து தங்கள் தேவைகளை அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களிடம் முறையிடுகிறார்கள். இதையெல்லாம் இந்த ஆலிம்கள் எதிர்ப்பதில்லை என்பதை விட இந்தச் செயலுக்குக் காரணமே இவர்களின் மேற்கண்ட நிலைப்பாடு தான் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

இதற்கெல்லாம் மேலாக முஹ்யித்தீன் என்பவரைப் பற்றி இவர்கள் எழுதி வைத்துள்ள புளுகல் உலகறிந்த விஷயம்.

ஆயிரம் முறை முஹ்யித்தீன் என்பவரை அழைத்தால் அழைத்த வருக்கு விரைவாக முஹ்யித்தீன் பதிலளிப்பாராம். இவ்வாறு மவ்லிதுகளில் எழுதி வைத்து அந்த இணைவைப்புப் பாடலை பள்ளியில் வைத்தே ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் எனத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறியதன் பின்னாலும் இவர்கள் இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பார்களேயானால் இவர்கள் குர்ஆன் வசனங்களை மறுக்கிறார்கள் என்று முடிவெடுக்காமல் வேறு எப்படி முடிவெடுப்பது?

பர்ஸக் வாழ்க்கை

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.

திருக்குர்ஆன் 23:100

ஒருவர் இறந்து விட்டால் அவருக்கும் இவ்வுலகத்திற்குமான அனைத்து தொடர்புகளும் அறுந்து போகின்றன. அவர் தமது இறப்பிற்குப் பிறகு பர்ஸக் எனும் திரைமறை வாழ்வில் புகுந்து விடுகிறார்.

இறந்தவர்களுக்கும் நமக்கும் இடையில் இறைவன் ஏற்படுத்தும் பலமான திரையே பர்ஸக் எனப்படுகிறது.

சாதாரண திரைக்கு அப்பால் இருந்தாலே எதிரில் நடப்பவற்றை அறிந்து கொள்ள இயலவில்லை என்றால் பர்ஸக் எனும் பலமான திரைக்கு அப்பால் இருக்கும் இறந்தவர்கள் இங்கு நடப்பவற்றை எப்படி அறிந்து கொள்வார்கள்?

இறந்தவர்கள் யாவரும் பர்ஸக் வாழ்க்கையில் புகுந்து விட்டார்கள் எனும்போது பர்ஸக் எனும் இறைவன் ஏற்படுத்திய பலமான திரையை, தடுப்பைத் தாண்டி இறந்தவர்கள் செவியேற்பார்களா? அப்படி ஒரு முஸ்லிம் நம்பலாமா?

முஹ்யித்தீன் விஷயத்தில் முஸ்லிம் களின் நம்பிக்கை அப்படித்தான் உள்ளது.

ஆயிரம் முறை அழைத்தால் முஹ்யித்தீன் பதிலளிப்பார் என்றால் எப்படி?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று பல வசனங்கள் கூறியதன் பிறகு முஹ்யித்தீன் மக்களின் அழைப்பை எவ்வாறு செவியேற்பார்?

பர்ஸக் எனும் திரைமறை வாழ்க்கையில் இருக்கும் முஹ்யித்தீன் அவரது பக்தர்களுக்கு எப்படி விரைவாகப் பதிலளிப்பார்?

இப்படி நம்பக் கூடாது; இது தெளிவான, நரகில் தள்ளும் இணை வைப்பு என்று மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டிய ஆலிம்கள் இக்கருத்தை மறைக்கிறார்கள், மக்களின் இணைவைப்பு செயலுக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள்.

அது மட்டுமின்றி நபிகள் நாயகத்தைக் கனவிலும் நனவிலும் (?) கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தங்கள் துஆக்களில் வேண்டி மக்களிடம் போலி வேஷமிடுகிறார்கள்.

நபிகள் நாயகத்தை நனவில் பார்த்தவர்களால் தான் கனவில் காண இயலும். அவர்கள் காலத்தில் வாழாத அவர்களை முன்பின் பார்த்திராத நாம் எப்படி அவர்களைக் கனவில் காண இயலும்?

அது ஒரு புறமிருக்க தற்போது நபிகள் நாயகத்தை நனவில் பார்ப்பது சாத்தியமான ஒன்றா? பர்ஸக் எனும் திரைமறை வாழ்க்கையில் இருக்கும் நபிகள் நாயகம் இறைவன் ஏற்படுத்திய பலமான திரையை உடைத்துக் கொண்டு நமக்கு நனவில் காட்சியளிக்க முடியுமா? அல்லாஹ்வை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலுவானவர்களா?

இப்படி ஒரு பிரார்த்தனையை குர்ஆன் அறிவுள்ள பாமரன் கூட வேண்ட மாட்டான் எனும் போது ஆலிம்கள் என்போர் கண்ணீர் மல்க இப்பிரார்த்தனையை வேண்டுகிறார்கள் எனில் இவர்கள் தான் குர்ஆனை மதிப்பவர்களா?

மவ்லித் வரிகளைச் சரிகாணும் பஸாதி ஆலிம்கள் உட்பட இத்தகு ஆலிம்கள் அனைவரும் குர்ஆனை மறுக்கின்ற கூட்டமே என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இத்தனையையும் மீறி இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்று நம்புபவன் இறைவனின் பாதுகாப்பை பலவீனமாகவும் இறைவனையே பலவீனனாகவும் நினைக்கிறார் என்று பொருள். அல்லாஹ் அத்தகைய மோசமான இறைக் கொள்கை யிலிருந்து நம்மைக் காப்பானாக!

இறைவனுக்கு உருவம்

மறைவான ஞானம், இறந்தவர்கள் செவியேற்பு தொடர்பாக பல குர்ஆன் வசனங்களை மறுத்து இறைவனுக்கு இணை கற்பிப்பதைச் சரிகாணும் போலி ஆலிம்கள் கூட்டம் இறைவனது உருவம் தொடர்பிலும் பல குர்ஆன் வசனங்களை மறுக்கின்றார்கள்.

இறைவனின் உருவம் தொடர்பாக குர்ஆனுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த ஆலிம்கள் எடுப்பதன் மூலம்  அவ்வசனங்களை மறுக்கின்றார்கள்.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு; ஆனால் அது எதைப்போன்றும் கிடையாது, அதற்கு உதாரணம் கூற இயலாது என்பதுவே இறைவனின் உருவம் தொடர்பாக குர்ஆனின் நிலைப்பாடாகும்.

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் சான்றளிக்கின்றன. அனைத்தையும் இடம்பெறச் செய்வதற்கு பக்கங்கள் போதாது என்பதால் சில சான்றுகளை மட்டும் தருகிறோம்.

இறைவன் அர்ஷில் அமர்ந்திருக் கிறான் என்பதைப் பல வசனங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 7:54

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 20:5

மேலும் பார்க்க: 32:4, 57:4

அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதிலிருந்து அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பது தெளிவு. உருவம் இல்லையாயின் அமர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அல்லாஹ்வுக்கு கால் உண்டு என்பது பின்வரும் இரு வசனங்களிலிருந்து அறியலாம்.

வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது…

திருக்குர்ஆன் 89:22

கெண்டைக்கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.

திருக்குர்ஆன் 68:42

பின்வரும் இரு வசனங்கள் உள்பட ஏராளமான இறைவசனங்கள் அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன.

இப்லீஸே! எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.

திருக்குர்ஆன் 38:75

அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 39:67

அல்லாஹ் செவியேற்பவன், பார்ப்பவன் என்று பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றிலிருந்து அல்லாஹ்வுக்குக் கண்கள் மற்றும் செவிகள் உண்டு என புரியலாம்.

அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 22:75, 31:28

இன்னும் பல சான்றுகளின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு; ஆனால் அது படைப்பினங்களை போன்று கிடையாது என்று நாம் கூறுகிறோம்.

அவனைப் போல் எதுவும் இல்லை.

திருக்குர்ஆன் 42:1

அல்லாஹ் ஒருவன்என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:1-4

ஆனால் நபியின் வாரிசுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் ஆலிம்கள் அத்தனை வசனங்களையும் மறுத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறிவருகிறார்கள்.

அதிகமான ஆலிம்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடு அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்பதாகவே இருக்கிறது.

உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர் என்று பாட்டெழுதிப் படிக்கும் அளவு இந்தக் கருத்து மக்களிடம் ஓங்கியுள்ளது.

ஆலிம்கள் என்போர் அல்லாஹ் வின் உருவம் தொடர்பாக குர்ஆன் கூறும் இக்கருத்தை மக்களிடம் எடுத்துக் கூற திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு ஆனால் இல்லை, அதைப் பற்றி பேசவே கூடாது என பூசி மொழுகும் அற்ப வேலையைச் செய்கின்றனர்.

மக்கள் நிலை என்னவோ அதற்கேற்பவே தங்கள் நிலைப் பாட்டை வடித்துக் கொள்கிறார்கள். குர்ஆனின் போதனைகளைக் கண்டு அதற்கேற்ப தங்கள் நிலைப்பாட்டை அமைத்துக் கொள்வது கிடையாது.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்ற இவர்களது இந்நிலைப்பாட்டின் மூலம் உருவம் உண்டு எனக் கூறும் பல குர்ஆன் வசனங்களை இவர்கள் மறுத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.

பாவமன்னிப்பு மற்றும் இரட்சிப்பு

இந்தப் போலி ஆலிம்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கும் அளவு சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் இணைவைப்புகளை ஒரு போதும் எதிர்ப்பது கிடையாது.

இவர்களது பார்வையில் தர்கா கட்டி வழிபாடு செய்வது, மவ்லித் ஓதுவது, தாயத்து தொங்க விடுவது என எதுவுமே இணைவைப்பு கிடையாது.

இவைகளை எல்லாம் உற்சாகத்திற்காக செய்து கொள்ளலாம் என்ற புல்லரிக்கும் ஃபத்வாவை வழங்கி தங்கள் ஜுப்பா பாக்கெட்டுகளை புல்லாக்கிக் கொள்ளும் புத்திசாலிகள்.

மக்கள் செய்யும் எல்லா இணைவைப்பு செயல்களையும் ஆதரித்து பேசும் நாடக நடிகர்கள்.

இவர்கள் ஆதரிக்கும் பல மவ்லித்களில் தாங்கள் செய்த பாவங்களை மன்னிக்குமாறு, தங்களை இரட்சிக்குமாறு நபிகள் நாயகத்திடம், முஹ்யித்தினீடம் முறையிடும் வரிகள் ஏராளம் உண்டு.

உதாரணத்திற்கு சில வரிகளை இங்கே தருகிறோம்.

யாகுத்பாவில் முஹ்யித்தீன் அவர்களை புழ்ந்து இடம் பெறும் சில வரிகள்

“காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீஃபாவாக இருக்கிறீர்’ என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; அதை நீங்கள் செவியுற்றீர்கள். முஹ்யித்தீன் அவர்களே! (இறைவனா லேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப் பட்டதன் மூலம்) நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைச் சூட்டப்பட்டு விட்டீர்கள்.

சுப்ஹான மவ்லிதில் நபிகள் நாயகத்தை நோக்கி புகழ்ந்து சொல்லப்படும் கவி வரிகள்.

என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!

என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!

உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.

இத்தகைய மல்லிதுகளை இவர்கள் சரி காண்பதற்கும் இத்தகு மவ்லிதுகளை மக்கள் தொடர்ந்து ஓதத் தங்கள் மேலான ஆதரவைத் தொய்வின்றி வழங்குதவற்கும் அடிப்படை காரணம் நபிகள் நாயகம் பாவங்களை மன்னிப்பார் என்ற நம்பிக்கையே ஆகும்.

நபிகள் நாயகம் மட்டுமின்றி முஹ்யித்தீன் போன்ற நல்லடியார் களிடமும் பாவமன்னிப்பு கோரலாம். அவர்களும் பாவங்களை மன்னிப் பார்கள் என்ற நம்பிக்கையில் இவர்கள் உள்ளார்கள். ஜமாலி போன்றோர் அதை வெளிப்படுத்தி சொல்வார்கள், ரஷாதி போன்றவர்களோ வருமானம் பாதிக்காத வகையில் இது விஷயத்தில் நடந்து கொள்வார்கள். மற்றபடி இவர்களுக்கிடையில் பெரிய கொள்கை வேறுபாடு என்று எதுவும் இல்லை. அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

பாவங்களை மன்னிப்பவனும் மக்களை இரட்சிப்பவனும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அல்லாஹ்வை யன்றி பாவங்களை மன்னிப்பவன் யாரும் கிடையாது.

இந்தக் கொள்கை முழக்கத்தை பல குர்ஆன் வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடை யோன் என்று (அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நியாயமான காரணமின்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று நபித்தோழர்களின் குற்றத்தை இறைவன் மன்னித்து விட்டதாக அறிவிக்கும் வரை அம்மூவரையும் நபிகள் நாயகம் விலக்கி வைத்தார்கள். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே அவர்களை இணைத்துக் கொண்டார்கள்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான். பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 9:118

(பார்க்க புகாரி 4418, 4677.)

மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ் வுக்கு மட்டுமே உரியது என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். நபிகள் நாயகத்திற்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென்று இருக்கு மானால் தன் காலத்தில் குற்றமிழைத்த அம்மூவர்களையும் அல்லாஹ்வின் தூதர் மன்னித்திருப்பார்கள். அல்லாஹ் மன்னிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே பாவங்களை மன்னித்து மக்களை இரட்சிப்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

இந்த சத்திய முழக்கத்தைத் தான் மேற்கண்ட இறைவசனங்கள் இயம்புகின்றன. அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க உலக ஆதாயத்திற்காக மட்டுமே இந்த ஆலிம்கள் இணை வைப்பு வரிகள் அடங்கிய மவ்லிதுகளை ஆதரிக்கின்றார்கள். இதன் மூலம் குர்ஆன் வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் குர்ஆனை மதிப்பது உண்மையானால் தாங்கள் பணி செய்யும் பள்ளிகளில் ஒரு ஜும்ஆ உரையில், ஒரு பொது மேடையில் மவ்லிதின் அபத்தங்களை, அதில் உள்ள இணை வைப்பு வரிகளை பற்றி மக்களுக்கு விளக்கி ஒரு உரை நிகழ்த்தி காட்டட்டும் பார்க்கலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த சவாலை ஏற்குமாறு ஆலிம்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். எங்களின் இந்த அழைப்பை ஏற்று நீங்கள் குர்ஆனை மறுப்பவர்களில்லை குர்ஆனை மதிப்பவர்களே என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், குர்ஆனை மறுக்கும் கேடு கெட்ட ஆலிம்கள் கூட்டத்தின் எட்டு கழிசடைகள் சேர்ந்து  காஃபிர்  ஃபத்வா வழங்கியுள்ளதாம்.

மனநோயின் உச்சத்தில் இருக் கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

தெளிவான இணை வைப்பு காரியங்களைக் கூட உற்சாகத்திற்காக செய்யலாம் என்று புல்லரிக்கும் ஃபத்வா வழங்கி தீனை நிலைநாட்டிய இவர்கள் எந்த அடிப்படையில் காபிர் என ஃபத்வா வழங்கிட்டார்கள்?

இது ஒருபுறமிருக்க இவர்களே முதலில் உண்மை முஸ்லிம்களில்லை என்கிறோம்.

குர்ஆனுக்கு எதிரான பல நிலைப்பாடுகள் கண்டு தெளிவாகக் குர்ஆன் வசனங்களை மறுக்கும் கூட்டம் இது.

நபிமொழிகளுக்கு எதிரான பல செயல்பாடுகளை ஆதரித்து, அவற்றைச் செய்வதன் மூலம் பல நபிமொழிகளை சகட்டு மேனிக்கு மறுக்கும் கூட்டம்.

இமாம்கள், பெரியார்களின் பெயரால் அல்லாஹ்வையும் ரசூலையும் அவமதிக்கும் கூட்டம் இது.

இந்தக் கூட்டத்தில் உள்ள எட்டுக் கழிசடைகள் காஃபிர் என ஃபத்வா வழங்குவது தான் உண்மையில் உலகம் மெச்சும் ஆச்சரியம் ஆகும்.

இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறோம். இவர்களது உலக அதிசய காபிர் ஃபத்வா எங்களுக்கு எந்தக் கலக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. எந்த நோக்கத்திற்காக இந்த எட்டு அடிமுட்டாள்கள் (தவ்ஹீத் ஜமாஅத்தை மக்களை விட்டும் தனிமைப்படுத்துவதற்காக) இந்த அரிய (?) ஃபத்வாவை வழங்கினார்களோ அதையெல்லாம் கண்டு ஒரு போதும் இந்த ஏகத்துவப்படை அஞ்சாது.

உலக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எங்களை எதிர்த்தாலும் அதைக் கண்டு எங்கள் ஈமான் அதிகரிக்குமே தவிர குறைந்து விடாது.

ஏனெனில் இந்த ஏகத்துவக் கொள்கைவாதிகள் மக்கள் கூட்டத்திற்கும் மக்கள் சக்திக்கும் ஒரு போதும் அஞ்ச மாட்டார்கள்.

மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங் கள்!என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 3:173

குர்ஆனை மறுக்கும் கூட்டத்திற்கு காஃபிர் பத்வா ஒரு கேடா? என்ற கேள்வியுடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?               தொடர்: 20

ராபிளிய்யாவின் தகிய்யா கொள்கை

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

ராபிளிய்யாக்களின் மார்க்கம் “தகிய்யா’ ஆகும். அதாவது தங்களுடைய கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது தங்களது உண்மையான கொள்கையை மறைத்து விடுவார்கள். இவர்களது பிரச்சாரத்தை ஏற்று மக்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது தங்களது உண்மையான கொள்கையை வெளியிடுவார்கள். இதற்குப் பெயர் தான் தகிய்யா எனப்படுகின்றது.

இவ்வாறு பொய் சொல்லி பிரச்சாரம் செய்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கையும் நாசக் கொள்கையுமாகும்.

இந்த நயவஞ்சகக் கொள்கையைக் கொண்ட இவர்கள் தங்களை முஃமின்கள், இறை நம்பிக்கையாளர் கள் என்று பிதற்றிக் கொள்கிறார்கள். முந்திச் சென்ற நல்லோர்களை தடம் மாறியவர்கள் என்றும் நயவஞ்சகர்கள் என்று இவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இவ்வாறு ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறுகின்றார்கள்.

திருடனைப் பிடிப்பதற்குத் துரத்தி வருபவர்களையே திருடர்களாகச் சித்தரிக்கும் ஒரு திருடனின் கதையைப் போன்று இவர்களது கதை உள்ளது.

இதுதான் கேடுகெட்ட ராபிளிய்யாக் களின் கொள்கையும் இலட்சணமும் ஆகும். நபி (ஸல்) அவர்கள் மீது ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதில் இவர்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் சூஃபிகள் ஆவர்.

சூஃபிகள்

இவர்கள் ராபிளிய்யாக்களின் மறு அவதாரமாகச் செயல்பட்டனர். இஸ்லாத்திற்கு எதிரான சதித் திட்டத்திற்கு ஒரு முழுமையான செயல்வடிவம் கொடுத்தவர்கள் இவர்கள் தான். பொய்யான, பலவீனமான ஹதீஸ்களை இட்டுக் கட்டுதல் என்பது இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தச் சதிகாரர்கள் ஒரு படையாகவே கிளம்பி பல்வேறு தலைப்புகளில், பல்வேறு பெயர்களில் நூல்களை இயற்றினர். கூத்துல் குலூப் – உள்ளங்களின் உணவு என்பது இந்த வகையில் உள்ள ஒரு நூலாகும். இதை இயற்றியவன் மக்கீ பின் அபூதாலிப் என்பவன். அடர்த்தியான இந்த நூலில் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் போட்டு நிரப்பியுள்ளான். இந்த நூலை இஸ்லாமிய மற்றும் இஸ்லாம் அல்லாத நாடுகளுக்குப் பரவச் செய்தான்.

இந்த நூலைச் சுற்றி கற்பனை செய்ய முடியாத, வினோதமான வாதங்களை சூஃபிய்யாக்கள் அளந்தும் அடித்தும் விட்டனர். தற்கால ஆசாமிகளும் இந்தச் சதி வலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். வரிந்து கட்டிக் கொண்டு, வலிந்து வலிந்து இதைப் படிக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறினர்.

போலியாகவும், பொய்யாகவும் புனையப்பட்ட தங்களுடைய இந்தக் குப்பைகளின் ஒரு பகுதிக்கு நபிவழி என்று பெயரிட்டு அதைப் படிக்கத் தூண்டினர்.

சாபத்திற்குரிய இந்த சதித் திட்டத்தைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இந்நூலின் பிற்பகுதியில் விளக்கு வோம். இந்த விஷமக் கருத்தை வேதக் கருத்தாகப் பரப்பிய நூல்கள் பல உள்ளன. அவற்றில் தலையாய பங்கு வகிப்பதும், முதல் இடத்தைப் பிடிப்பதும் இஹ்யா உலூமித்தீன் தான்.

இந்நூல் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை ஆயிரக் கணக்கான ஹதீஸ்களைக் கொண் டுள்ளது. இதில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸ்களின் லட்சணங்களை அடையாளம் காட்டுவதற்காகவும், அம்பலப்படுத்துவதற்காகவும் இரண்டு நூல்களை ஹதீஸ் கலை திறனாய்வாளர் ஹாபிழ் இராக்கி அவர்கள் இயற்றியுள்ளார்கள். அதில் ஒன்று பெரிய நூல், மற்றொன்று சிறிய நூலாகும்.

இஹ்யாவின் ஓரம் அல்லது அடிக்குறிப்பாக இடம்பெற்றிருக்கும் அன்னாரின் ஆய்வுக் குறிப்பு, நடுத்தரமிக்க ஒரு விமர்சன வெளியீடாகும்.

நம்மைப் பொறுத்தவரை இஹ்யாவுக்கு இந்த ஆய்வு வெளியீடு மட்டும் போதாது. அதில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களை இடத்திற்குத் தக்கவாறு, இன்னும் மேலதிகமான திறனாய்வு செய்வது இன்றியமையாத ஒன்றாகும்.

இப்னு சுப்கீயின் மதிப்பீடு

இப்னு சுப்கீ என்பவர் கஸ்ஸாலியின் அதிதீவிர ஆதரவாளர்; பக்தர். கஸ்ஸாலியின் மீது கொண்ட அளவு கடந்த காதல் காரணமாக சுன்னத் வல் ஜமாஅத்தினரின் (நபிவழியில் நடக்கின்ற உண்மையான சுன்னத் ஜமாஅத்தினர்) பகைமையைச் சம்பாதித்தவர் ஆவார்.

“இஹ்யாவின் ஹதீஸ்களை ஆய்வு செய்த போது அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அறவே அறிப்பாளர் தொடர் இல்லை. எந்த ஓர் அடிப்படையும் இல்லை என்று தெரிந்து கொண்டேன்” என தன்னுடைய தபகாத் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

இது அல்லாமல், அறிவிப்பாளர் தொடருடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் ஒரு பெரிய அளவில் கிடக்கின்றன என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

நூலாசிரியர் மக்ராவி குறிப்பிடுகின்றார்:

அல்லாஹ் எனக்கு வாழ்நாளை நீட்டிக் கொடுத்தால் இஹ்யாவில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களை அடையாளம் காட்டுவதற்காக ஒரு பெரிய முழுமையான நூல் வெளியிடுவேன். அதில் இஹ்யாவில் பதிவான மவ்ளூஃ, லயீஃப், ஸஹீஹ், ஹஸன் போன்ற ஹதீஸ்களை விவரிப்பேன். அப்போது தான் சமுதாயம் இஹ்யாவில் விபரீதத் திலிருந்து விழித்துக் கொள்ளும். எனினும், இப்போது எழுதியிருக்கும் இந்த நூலில் இஹ்யாவில் இடம்பெற்ற பொய்யான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் எடுத்துக்காட்டுகளை இங்கு கொண்டு வந்திருக்கின்றேன்.

இவ்வாறு மக்ராவி கூறுகின்றார்.

இஹ்யாவில் இறக்குமதியான பொய்யான ஹதீஸ்கள், ராபிளிய் யாக்கள் மற்றும் சூஃபிய்யாக்கள் இஸ்லாத்திற்கு எதிராகப் பின்னிய சதிவலையின் ஓர் அங்கம் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

ஹாபிழ் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் இடம்பெற்ற ஹதீஸ்களைத் தர ஆய்வு செய்து, அதில் அடிக்குறிப்பு எழுதிய திறனாய்வாளர் பேராசிரியர் ஷுஐப் அல் அர்னவூத் அவர்கள் குறிப்பிடுவதாவது:

“சுப்கீ அவர்கள், இஹ்யாவின் ஹதீஸ்களை ஆய்வு செய்த போது பல ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடரே இல்லை என்று கண்டறிந்தார். அவர் கண்டறிந்த, தொடரே இல்லாத அந்த ஹதீஸ்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 943 ஆகும்.

ஹிஜ்ரி 806ல் மரணமடைந்த ஹாபிழ் அபுல் ஃபழ்லு அப்துர்ரஹீம் இராக்கி அவர்கள், “அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் ஃபில் அஸ்ஃபாரி ஃபீ தக்ரீஜி மா ஃபில் இஹ்யாஇ மினல் அக்பார்” – “இஹ்யாவில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களுக்கு மூல நூல்களைத் தேடும் பயணத்தில் பல நூல்களைப் புரட்டுவதைத் தவிர்க்கின்ற ஒரு தன்னிறைவு நூல்” என்ற பெயரில் இஹ்யாவில் உள்ள அனைத்து ஹதீஸ்களையும் தனது நூலில் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ள மூல நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். அந்த ஹதீஸ்களின் தரத்தையும் அவர் தெரிவித்துள்ளார். பலவீனமானது, இட்டுக்கட்டப்பட்டது, அடிப்படையே இல்லாதது என்றெல்லாம் அந்த ஹதீஸ்களை அடையாளமும் காட்டியுள்ளார்.

எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், அறிவுரை கூறுவோர் அத்தனை பேரும் ஹாபிழ் இராக்கி அவர்களின் திறனாய்வுத் தீர்ப்பைப் பார்க்காமல், படிக்காமல் இஹ்யாவின் ஹதீஸ்களை மேற்கோள் காட்டவோ, ஆதாரமாகக் கொள்ளவோ வேண்டாம்”

இது தற்கால ஹதீஸ் கலை திறனாய்வாளர் ஷுஐப் அல் அர்னவூத் அவர்கள் குறிப்பிடுகின்ற கருத்தாகும்.

ஒரு ஹதீஸின் தன்மை மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்த, மக்களுக்கு நன்கு அறிமுகமான ஹதீஸ் கலை அறிஞர்களின் தீர்ப்பைப் பார்க்காமல் அந்த ஹதீஸை ரசூல் (ஸல்) அவர்களுடன் இணைத்துக் கூறக்கூடாது.

ஹதீஸ் கலை அறிஞரின் அத்தகைய தீர்ப்பைப் பார்க்காமல், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ என்று ஒருவர் சொன்னால் அவர் திட்டமிட்டு நபியவர்கள் மீது பொய் கூறிய பாவத்தைச் செய்தவராகின்றார்.

“என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக் கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்’

நூற்கள்: புகாரி 1291, முஸ்லிம் 5

இந்த ஹதீஸ் கூறும் எச்சரிக்கை வட்டத்திற்குள் அவர் வந்து விடுகின்றார்.

இவ்வாறு பத்ருத்தீன் அல் ஹுஸைனி என்ற அறிஞர் தெரிவிக்கின்றார்.

மவ்ளூவு அல்லாத இதர பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பது தொடர்பான முடிவு:

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்ற தரத்தில் இல்லாமல், அதே சமயம் பலவீனமாக அமைந்திருக்கும் ஹதீஸ் அடிப்படையில் அமல் செய்யலாமா? என்றால் இது தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தர்கீப் (ஆர்வமூட்டல்) தர்ஹீப் (அச்சமூட்டல்) என்ற நூலில் ஓர் அருமையான முன்னுரையை எழுதியுள்ளார்கள்.

ஒரு பலவீனமான ஹதீஸின் நிலையைத் தெரிவித்து, அதைவிட்டும் மக்களை எச்சரிப்பதற்காகவே தவிர அதை அறிவிக்கக்கூடாது என்ற நம்முடைய நிலைப்பாட்டிற்கு ஏற்ப அறிஞர் அல்பானி அவர்கள் அந்த முன்னுரையில் அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றின் ஒரு பகுதியை நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அல்பானியின் முன்னுரைக்குள் செல்வதற்கு முன்னர், பலவீனமான ஹதீஸைப் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“ஹலால், ஹராம், கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலவீன மான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. அமல்களைச் செய்ய ஆர்வமூட்டும் வகையில் (தர்கீப்) அவற்றின் சிறப்புகளைக் கூறுவது, தீமைகளைத் தடுக்கும் விதத்தில் அதன் தண்டனைகளைக் கூறுவது (தர்ஹீப்) தொடர்பாக வரும் பலவீனமான ஹதீஸ்களை அறிவிக் கலாம்” என்ற கருத்தில் அறிஞர்களின் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீது ஜமாஅத் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.

“யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்’

என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு எந்தக் கட்டத்திலும் பலவீனமான ஹதீஸை அறவே ஆதாரமாகக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக உள்ளது.

ஹாபிழ் இப்னு ஹஜர் போன்று மாமேதைகள் கூட, வரலாறுகளில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக வருகின்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை வரலாறாக இருந்தாலும் அதில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக வருகின்ற செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை இல்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அறிவிப்பாளர் வரிசை இருந்தாலும் அதன் தரத்தை அலசிப் பார்க்காமல் அந்தச் செய்தியை ஏற்பதில்லை.

ஹதீஸ்களில் கடுமையான பலவீனம், இலேசான பலவீனம் என்று பிரித்து, இலேசான பலவீனம் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை அமல்களின் சிறப்பு மற்றும் எச்சரிக்கை விஷயங்களில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிலும் அறிஞர்களில் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த நிலைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது.

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும். (அல்குர்ஆன் 17:36)

இந்த வனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது போன்று சந்தேகத்தின் சாயல்படுகின்ற, படிகின்ற எந்தச் செய்தியையும் கொள்கை, ஹராம் ஹலால் போன்ற சட்ட விஷயங் களிலும், வணக்க வழிபாடுகள், சிறப்புகள், எச்சரிக்கைகள் போன்ற எந்தவொரு விஷயத்திற்கும் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், இங்கு இடம் பெறுகின்ற அறிஞர் அல்பானியின் முன்னுரையோ, அல்லது அவர்களது வேறு எந்த ஆக்கத்திலோ நம்முடைய நிலைப்பாட்டிற்கு மாற்றமான கருத்து பதிவானால் அதை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

பொதுவாக, பலவீனமான ஹதீஸை அறிவிப்பது, அதன்படி அமல் செய்வது பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள், கண்ணோட்டங்கள் எப்படி உள்ளன என்பதை கொள்கைச் சகோதரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இது தொடர்பான செய்திகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்ற விளக்கத் துடன், அறிஞர் அல்பானியின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள கருத்தைப் பார்ப்போம்.