ஏகத்துவம் – ஆகஸ்ட் 2011

தலையங்கம்

இஸ்லாம் ஓர் ஈர்ப்பு சக்தி

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று இஸ்லாத்தின் எதிரிகள், குறிப்பாக கிறித்தவ நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து, திட்டமிட்டு ஒரு தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?

இன்று உலகில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் பெரும் வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றது. அந்த நாடுகளிலெல்லாம் யாரும் இஸ்லாத்தை வற்புறுத்திப் பரப்பவில்லை.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கையான ஓரிறைக் கொள்கை, இந்த அறிவியல் யுகத்திலும் அசைக்க முடியாத அற்புதமாகத் திகழும் அல்குர்ஆன், அதைக் கடைப்பிடிக்கும் முஸ்லிம்களின் செயல்பாடுகள் ஆகியவற்றைப் பார்த்தே அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.

அண்மையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வேய்ன் பர்னல் என்பவர் கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாமிய மார்க்கத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் இஸ்லாத்தில் இணைவதற்குத் தூண்டுகோலாக இருந்தது எது? அவரை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது எது? வாள்முனையா? யாரேனும் ஒருவருடைய வற்புறுத்தலா? அல்லது பணத்தைக் காட்டி இஸ்லாத்திற்கு அழைத்தார்களா?

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மற்றொரு வீரர் ஹாஷிம் அம்லா என்பவர். இவர் தனது அணி கிரிக்கெட் விளையாடுவதற்காக எங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் ஐவேளைத் தொழுகையையும் விடாமல் கடைப்பிடிக்கின்றார். மது வினியோகம் நடைபெறுகின்ற எந்தவொரு விழாவிலும் அவர் பங்கேற்பது கிடையாது. அவருடன் விளையாடும் சக வீரர்கள் மது அருந்துதல் மற்றும் இதர கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது அவர் விலகியே இருப்பார். கேஸ்டல் லேஜர் என்ற பீர் கம்பெனியால் செலவுப் பொறுப்பேற்று வழங்கப்பட்ட ஆடைகளை அவர் அணிய மறுத்து விட்டார். இது எங்களுடைய உள்ளத்தைத் தொட்டு விட்டது என்று அவருடன் விளையாடும் சக வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

வேய்ன் பர்னலை, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஹாஷிம் அம்லா ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது. ஆனாலும் அம்லாவின் மார்க்கப் பிடிப்பு வேய்ன் பர்னலை இஸ்லாத்தின் பால் ஈர்த்துள்ளது என்பதை விளங்க முடிகின்றது.

கிரிக்கெட் விளையாட்டு மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல என்றாலும் அதிலுள்ள அனாச்சாரங்களால் அது வரவேற்கத்தக்க விளையாட்டும் அல்ல. இருந்தாலும் அதில் ஈடுபட்ட ஒருவர், மது அருந்தாமல் இருப்பது, தொழுகை உள்ளிட்ட மார்க்க விஷயங்களைக் கடைப்பிடிப்பதே இவ்வளவு ஈர்ப்பைப் பெறுகின்றது என்றால் குர்ஆனை முஸ்லிம்கள் முழுமையாகப் பின்பற்றினால் அல்லாஹ்வின் அருளால் உலகில் மாபெரும் புரட்சி மலர்ந்து விடும்.

சொல் பிரச்சாரம் மட்டுமே மக்களை ஈர்ப்பதில்லை. ஒருவர் மார்க்கத்தைப் பின்பற்றும் அந்தச் செயல்பாடு, அவரது ஒழுக்கம், ஈடுபாடு போன்றவை ஒரு செயல் பிரச்சாரமாகி விடுகின்றது.

அல்குர்ஆன் இறங்கிய இந்த அருள் மாதத்தில் நாம் நம்முடைய மார்க்கத்தை முழுமையாகக் கடைப்பிடித்து, அதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ள மக்களிடம் இந்தத் தூய மார்க்கத்தை எடுத்துச் செல்வதற்கு உறுதியேற்போம்.

அமுலுக்கு வந்த அல்குர்ஆன் சட்டங்கள்

1980க்கு முன்பு தமிழகத்தில் தவ்ஹீது என்ற வார்த்தை கூட அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் ஆலிம்களிடம் அறிமுகமாகி இருந்தது. இன்றைக்கு நாம் விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அல்ல! “இறந்து விட்ட எந்தப் பெரியாரிடமும் உதவி தேடக் கூடாது; அவர்கள் ஒரு போதும் செவியேற்க மாட்டார்கள்; அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்’ என்று நாம் இன்று விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அன்று இந்த வார்த்தை அறிமுகமாகவில்லை. இறந்து விட்ட பெரியார்களிடமும் பிரார்த்திக்கலாம், அதுவும் தவ்ஹீதில் உள்ளது தான் என்று விளங்கி வைத்திருந்தோம்.

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 427

நீங்கள் கப்ருகள் மீது அமராதீர்கள். கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ, நூல்: முஸ்லிம் 1613

கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610

கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதீ 972

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ, நூல்: முஸ்லிம் 1609

இந்த ஹதீஸ்கள் எல்லாம் மக்களிடம் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த ஹதீஸ்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இதன் படி மக்களை இன்று செயல்பட வைத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!

கப்ருகள், விண்ணைத் தொடும் மினாராக்களுடன் கட்டப்பட்ட தர்ஹாக்கள் தகர்க்கப்படவும், தரை மட்டமாக்கப்படவும் வேண்டிய பணியை மட்டும் நம்மால் செய்ய முடியவில்லை. காரணம், இது ஆட்சியாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும். எல்லோரும் மொத்தமாக ஏகத்துவத்தில் இணைந்த சகோதரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கப்ருகளைத் தரை மட்டமாக்கிய வரலாறும் உண்டு.

ஆனால் அதே சமயம் தர்ஹாக்களே கதி என்று குடியிருந்தவர்கள் எல்லாம் தவ்ஹீதே கதி என்றாகி விட்டனர். குறிப்பாகப் பெண்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ்வின் மகத்தான கருணையாகும்.

பெண்கள் தான் அதிகமாக தர்ஹா வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தவர்கள். அவர்கள் இன்று தவ்ஹீதைத் தங்கள் உள்ளங்களில் ஏந்திக் கொண்டு தவ்ஹீதுக் கூட்டங்களில் தேனீக்கள் போன்று மொய்க்கும் காட்சி தமிழகம் காணாத வரலாற்றுப் புரட்சியாகும்.

—————————————————————————————————————————————————————-

அல்குர்ஆனும் அருள்மிகு ரமளானும்

அற்புத அல்குர்ஆன் வழங்கப்பட்ட அருள்மிகு ரமளான் வந்து விட்டது. ஐவேளைத் தொழுகைகளிலும் பள்ளிவாசல் நிரம்பி வழியத் துவங்கி விடும். கடமையான தொழுகைக்கு வருகிறார்களோ இல்லையோ தராவீஹ் என்றழைக்கப்படும் இரவுத் தொழுகைக்கு ஒரு சாரார் வந்து விடுவர். அதில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு நிம்மதி இருக்காது. இன்னொரு சாரார் ஆரம்ப மூன்று நாட்கள் வந்து கலந்து கொண்டு ரமளான் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு சென்று விடுவார்கள். அதன் பிறகு மாதக் கடைசியில் பிறை 27ல் வந்து கணக்கை முடித்து விடுவார்கள்.

தொழுகைகளில் மக்கள் வெள்ளமெனப் பொங்கி வழிவார்கள். ஏறத்தாழ நாற்பத்தைந்து நிமிடங்களில், அற்றுப் பிடுங்கி செல்கின்ற அதிவேக விரைவு வண்டிகளைப் போன்று ஹாபிஸ்கள் குர்ஆன் ஆயத்துக்களை ஓதித் தள்ளுவார்கள். ஒரே மூச்சில் சூரத்துல் ஃபாத்திஹா வாயிலிருந்து வானத்திற்குப் பறந்து விடும். அல்ஹம்து என்று ஆரம்பித்து வலல்லாள்ளீன் என்பது தான் அடுத்த நிறுத்தம். அடுத்தடுத்து என்ன ஓதுகிறார்கள் என்பது அந்த ஹாபிசுக்குத் தான் வெளிச்சம்.

அறியாத மக்கள் ரமளான் மாதத்தில் குர்ஆனைக் கேட்போம் என்று வந்து நிற்கின்றார்கள். ஆனால் ஒரு வார்த்தை கூட அவர்களது காதுகளில் தெளிவாக விழப் போவதில்லை. இப்படியே சென்று 27ஆவது அன்று அந்த ஹாபிசுக்கு மூடுவிழா! அல்குர்ஆனுக்கு மூடுவிழா! மக்களுக்கும் மூடுவிழா! காட்டமான கத்முல் குர்ஆன் துஆவுடன் குர்ஆன் பிரியாவிடை பெற்று விடும். அடுத்த ரமளானில் தான் அல்குர்ஆன் ஹாபிசுடன் வருகையளிக்கும். பண முடிப்பை வாங்கி ஹாபிஸ் பறந்து விடுவார். அவரிடமிருந்து அல்குர்ஆனும் பறந்து விடும். இது ரமாளன் மாதத்தில்!

இதர மாதங்களில் இறந்தவர் வீட்டில், இழவு வீட்டில் நேர்ச்சை தப்ரூக்குகளுடன் முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் என்று பந்திக்கு முன்பும் அல்குர்ஆன் பாய்ந்து வரும். அதற்குப் பின் நீத்தார் நினைவு நாளில் வருடாந்திர கத்தம் பாத்திஹா சத்தம் சகிதமாக வெளிவரும். இது தான் இந்த முஸ்லிம்களுக்குக் குர்ஆனுடன் உள்ள தொடர்பு!

இதைக் கண்டிக்கும் விதமாகத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

அல்குர்ஆன் 62:5

அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ சிந்தனை மக்களிடம் வந்த பிறகு, உயரத்தில் உரியில் இருந்த திருக்குர்ஆன் மக்களின் அன்றாட வாழ்வில் அமுலுக்கு வந்து கொண்டிருக்கின்றது. இது எப்படி வந்தது? தவ்ஹீத் ஜமாஅத் இந்த மக்களிடம் திருக்குர்ஆனை எப்படிக் கொண்டு வந்து சேர்த்தது?

கொள்கையில் ஏற்பட்ட மாற்றம்

கொள்கையளவில் தமிழகத்து முஸ்லிம்கள் ஏனைய இந்திய முஸ்லிம்களைப் போலவே இணை வைப்பில் மூழ்கிக் கிடந்தனர். இவர்களுடைய நிலை மக்காவிலிருந்த இணை வைப்பாளர்களின் நிலையை அப்படியே ஒத்திருந்தது.

முஹ்யித்தீன் என்றதும் முக மலர்ச்சி

அன்றைய முஷ்ரிக்குகள் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர்கள் கூறப்பட்டால் முகமும் அகமும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

தமிழக முஸ்லிம்களும் இதே நிலையில் தான் இருந்தார்கள்; இருக்கின்றார்கள். அல்லாஹ் என்று சொன்னால் அவர்களிடம் எந்தவொரு அசைவையும் ஆர்வத்தையும் பார்க்க முடியாது. ஆனால் முஹ்யித்தீன் என்று சொல்லப்பட்டால் முகம் பூரித்துப் போய் மலர்ச்சியும் ஆனந்தமும் அடைகிறார்கள்.

அன்று மக்கா முஷ்ரிக்குகளிடம், “இந்தப் பெரியார்களை நீங்கள் ஏன் அழைத்துப் பிரார்த்திக்கிறீர்கள்?’ என்று கேட்டால் அதற்கு அவர்கள் அளித்த பதில்:

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்

அல்குர்ஆன் 39:3

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 10:18

இதே வாதத்தைத் தான் இன்றைய முஸ்லிம்களும் முன்வைக்கின்றனர். மக்கா முஷ்ரிக்குகளிடம் அல்குர்ஆன் தொடுத்த அடுக்கடுக்கான கேள்விகளை இவர்களிடமும் நாம் தொடுத்தோம்.

வானத்தைப் படைத்தவன் யார்?

“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?”

அல்குர்ஆன் 29:61

மழையைப் பொழிவிப்பவன் யார்?

“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

அல்குர்ஆன் 29:63

அவர்களைப் படைத்தவன் யார்?

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 31:25

வானம், பூமி யாருக்குச் சொந்தம்?

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

அல்குர்ஆன் 23:84

அர்ஷின் நாயன் யார்?

“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக!

அல்குர்ஆன் 23:86

ஆட்சியதிகாரம் யாரிடம் உள்ளது?

“பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக!”அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 23:88, 89

கடலில் ஏற்படும் சோதனையில் காப்பாற்றுபவன் யார்?

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 31:32

அஸீஸ், அலீம் என்றழைக்கப்படுபவன் யார்?

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்” எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 43:9

இந்த வசனங்களை, இணை வைக்கும் முஸ்லிம்கள் மத்தியில் முன்வைத்தோம். இன்று அந்தக் குர்ஆன் அவர்களிடம் கொள்கையளவில் ஒரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று அவர்களை விட்டுக் குர்ஆனைப் பிரிக்க முடியாது; குர்ஆனும் அவர்களை விட்டுப் பிரியாது என்ற அளவுக்கு மக்கள் குர்ஆனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது:

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் இழப்பிற்கு அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:23, 24

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

அல்குர்ஆன் 58:22

சொந்த பந்தம், உற்றார் உறவினர் இணை வைத்தால் அவர்கள் அத்தனை பேரையும் உதறித் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்காக ஒரு போர்ப்படை புறப்படுகின்ற புரட்சியை ஏற்படுத்துகின்ற அளவுக்கு இந்தத் திருக்குர்ஆன் அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இஸ்லாத்தின் பெயரால் கண்ட, கண்ட கப்ஸாக்களையும் கதைகளையும் படிப்பதை விட்டு விட்டு அல்குர்ஆன் அடிப்படையில் ஆதாரப்பூர்வமான சரியான ஹதீஸ்களை மட்டும் படிக்கின்ற, பின்பற்றுகின்ற ஒரு மனமாற்றம் தமிழக முஸ்லிம்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. அல்குர்ஆன் இன்று படிப்படியாக மக்களிடம் அமுலுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அல்குர்ஆனுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நடைமுறைகளும் இன்று மக்களிடம் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

—————————————————————————————————————————————————————-

தலாக் – நடைமுறைக்கு வந்த நபிவழிச் சட்டம்

மனைவி மீது ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு ஒருவர் ஒரே மூச்சில் முத்தலாக் சொல்லி விட்டால், அவள் ஒரேயடியாக விவாகரத்தாகி விடுவாள். இனி அவளை இன்னொருவர் மணமுடித்து, விவாகரத்துச் செய்த பின்னர் தான் முதல் கணவர் திருமணம் முடிக்க வேண்டும்.

இது மத்ஹபுகள் கூறும் முத்தலாக் முறையாகும்.

காலங்காலமாக பல நூற்றாண்டு காலமாக மக்களிடமிருந்த இந்த மத்ஹப் தலாக் முறையை மயானத்திற்கு அனுப்பி விட்டு, குர்ஆன் கூறும் தலாக்கை மக்களிடம் நிலை நாட்டினோம்.

இதனால் கசங்கிப் போகவிருந்த மங்கையர் மறுவாழ்வு பெற்றனர். கருகிப் போகவிருந்த அவர்களது வாழ்வு மறுமலர்ச்சி பெற்றது. இங்கே மார்க்க அடிப்படையிலான தலாக்கை சுருக்கமாக உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.

விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.

அல்குர்ஆன் 2:229

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான்; அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது.

ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயத்தில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.

தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.

ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.

இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.

ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.

இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள்.

ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன் பொருள்.

இதை வெறும் அறிவுப்பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 2689

“நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ், நூல்: முஸ்லிம் 2690, 2691

அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்துள்ளது.

இதற்கு மாற்றமாக மத்ஹபுகள் கொண்டு வந்த முத்தலாக் முறையை மாற்றி, அல்குர்ஆனின் வழியில், அல்லாஹ்வின் தூதர் காட்டிய முறையில் நடைமுறைப்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் சாதனையாகும்.

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

“தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 868, 707

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள், “என்னருமை மகனே! இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்” என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 763, திர்மிதி 283

“(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1203, திர்மிதி 337

நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி 837, 866, 875

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 867, 372, 578, 872

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். “இப்பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்திருக்கவில்லை” என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 864, 866, 569, 862

“உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது” என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)

நூல்: முஸ்லிம் 674

“உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு “நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 666

இப்னு உமர் (ரலி) அவர்கள், “இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னதும் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார், “பெண்களை வர விட மாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள்” என்று பதில் சொன்னார். உடனே அவரைக் கடுமையாக வெறுத்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்கிறேன்.  நீ வர விட மாட்டேன் என்கிறாயா?” என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஜாஹித்

நூல்: முஸ்லிம் 670

அடுக்கடுக்காகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஹதீஸ்களெல்லாம் மகளிருக்கும் மஸ்ஜிதுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய இந்த வழிமுறை,  நடைமுறையில் இல்லாமல் இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண்கள் அறவே அனுமதிக்கப்படுவதில்லை. விதிவிலக்காக எங்காவது ஒரு சில பள்ளிகளில் ரமளானில், அதுவும் தனியாக ஜமாஅத் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இது தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குக் கதவுகள் சாத்தப்பட்டுத் தான் உள்ளன.

“பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 480

இந்த ஹதீஸைத் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாகக் காட்டி பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றனர். சிறந்தது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வந்தால் தடை செய்யக் கூடாது என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

பெண்களுக்கான இந்த வாசல் அடைக்கப்பட்டதால் தான் அவர்கள் தர்ஹாக்களின் பக்கம் சென்றனர். இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் அருளால் இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது.

திடலுக்கு வந்த பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 956

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

“மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளைப் பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானது ஆகும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் திடலில் தொழும் நடைமுறை இல்லை. பள்ளிவாச-லேயே பெருநாள் தொழுகையைத் தொழுது வருகிறார்கள். இவ்வாறு பள்ளிவாசலில் தொழும்போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும் புனிதமும் மிக்க அந்த நாளில் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பெருநாள் தொழுகையே கிடையாது.

ஷாபி மத்ஹப் பகுதிகளில் பெண்கள் தனி ஜமாஅத்தாகத் தொழும் வழக்கம் உள்ளது. ஹனபி மத்ஹப் பகுதிகளில் இந்த வாய்ப்பு பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்து ஹனபி, ஷாபி மத்ஹப் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம் இதுவரை காணாத மற்றொரு வரலாற்றுப் புரட்சியாகும்.

ஏழு தக்பீர்கள் அறிமுகமும், அமலாக்கமும்

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்றால், அதற்கு நேர் மாற்றமாக நின்று செயல்படும் மத்ஹப் ஹனபி மத்ஹபாகும். அந்த மத்ஹபுக்காரர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் மூன்று தக்பீர்களும், அடுத்த ரக்அத்தில் மூன்று தக்பீர்களும் ஆக 3+3 ஆறு தக்பீர்கள் மட்டுமே அதிகமாகச் சொல்லும் முறையை இதுவரை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த 7+5 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்லும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அமலாக்கம் செய்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 492, அபூதாவூத்

ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, “நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)” என்றார்.

அறிவிப்பவர்: தல்ஹா

நூல்: புகாரீ 1335

இது தான் மார்க்கம் காட்டிய வழிமுறையாகும். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு நேர்முரணாக ஹனபி மத்ஹபில் ஜனாஸா தொழுகையில் “ஸனா’வை மட்டும் ஓதும் வழக்கம் உள்ளது.

இதை மாற்றி நபிவழியின் அடிப்படையில் ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதும் நபிவழியை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப்படுத்தியது.

ஒரு பாங்கு தான்! இரண்டு பாங்கில்லை!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 916

ஜுமுஆ அன்று ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழியில் உள்ளது. இதற்கு மாற்றமாக தமிழகத்தில் இரண்டு பாங்கு சொல்லும் நடைமுறை உள்ளது. நபிவழியில் ஒரு பாங்கு தான் என்பதைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது தவ்ஹீது ஜமாஅத்.

சப்தமின்றி திக்ரு செய்தல்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 7:205

திக்ரு செய்வதில் திருக்குர்ஆன் கூறும் வழிமுறை இது தான். அது போன்று நபிவழியில் காணும் நடைமுறையும் இது தான்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, “லா இலாஹ இல்லல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும், “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகில் இருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 2992

குர்ஆன், ஹதீஸின் இந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் சப்தமிட்டு திக்ரு செய்வது இதுவரை நடந்தேறும் வரம்பு மீறல்களாகும்.

இந்த வரம்பு மீறலை மாற்றி, அல்குர்ஆனின் ஆணைப்படி மனதிற்குள் திக்ர் செய்யும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்தது.

ஸஹர் பாங்கு அறிமுகம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சஹர் உணவு உண்பதி-ருந்து பிலா-ன் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 621

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வணக்க வழிபாடாகும். ஆனால் இந்த வழிபாடு சமுதாயத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் தான் தமிழக வரலாற்றிலேயே பள்ளிவாசல்களில் ஸஹர் பாங்கை அறிமுகப்படுத்தி, ரமளான் மாதத்தை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் உள்ளது போன்று உயிர்ப்பித்துக் கொண்டு இருக்கிறது.

எட்டுத் திக்கும் நபிவழியில் இரவுத் தொழுகை

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழ மாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்

நூல்: புகாரி 1147

இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை. ரமளானிலும், ரமளான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 8+3 ரக்அத் இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள். சில ஹதீஸ்களில் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத் தொழுததாகவும் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை மாற்றப்பட்டு 20+3 ரக்அத்துகள் தொழும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

தராவீஹ் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த பித்அத்தை மாற்றி நபிவழியை நடைமுறைப்படுத்த தவ்ஹீது ஜமாஅத் முயன்ற போது சந்தித்த எதிர்ப்பைப் போன்று வேறு எதற்கும் எதிர்ப்பைச் சந்தித்திருக்காது. அந்த அளவுக்கு, எட்டு ரக்அத் இரவுத் தொழுகை என்று அறிவித்ததும் தமிழகமே அமர்க்களப்பட்டது; ஆர்ப்பாட்டம் அடைந்தது. இந்த அமர்க்களம், ஆர்ப்பாட்டம் எப்போது அடங்கியது? 8+3 ரக்அத்களை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய பிறகு தான் அடங்கியது.

இருபது ரக்அத் தொழுவோரிடம் காணப்படுகின்ற அவசரம், எட்டு ரக்அத் தொழுவோரிடம் இல்லை. இருபது  ரக்அத்களும் அரை மணி நேரத்தில் முடிகின்றது என்றால் எட்டு ரக்அத் தொழுவதற்கு ஒரு மணி நேரத்தைத் தாண்டுகிறது. அவ்வளவு அமைதி! அந்த அளவுக்கு நிதானம்!

அவசர கதியில் குர்ஆனை ஓதி முடிக்காமல் நிறுத்தி, நிதானமாக கிராஅத் ஓதப்படுகின்றது. நிலையில், ருகூவில், ஸஜ்தாவில் நிறுத்தி நிதானமாகத் தொழும் இந்த இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படியொரு மாற்றத்தை, திருக்குர்ஆன் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

பத்து இரவுகளும் பட்டப்பகலான அதிசயம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2017

அல்லாஹ்வின் தூதரின் இந்த உத்தரவுக்கு மாற்றமாக 27ம் இரவில் மட்டும் அதுவும் முன்னேரத்தில் மக்கள் கூடி விட்டு, புரோட்டா கறி, பிரியாணிப் பொட்டலம், சேமியா பாயாசம் சகிதத்துடன் கலைந்து விடும் வழக்கம் இருந்து வந்தது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடையும் விஷயத்தில் மக்களிடம் இருந்த அலட்சியப் போக்கை மாற்றி, ஒரு சரித்திர மாற்றத்தைக் கொண்டு வந்தது தவ்ஹீது ஜமாஅத்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும் விதமாக, ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் பட்டப் பகலானது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களில் இந்த நாட்களில் பின்னிரவு நேரத்தில் இரவுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. நள்ளிரவில் நடைபெறும் இரவுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு இரவு 12 மணிக்கே பெண்கள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். பிந்திய பத்தில் நடைபெறும் இந்த இரவுத் தொழுகையில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வருகின்றனர். ஏன்? லைலத்துல் கத்ரை, அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நேரத்தில் தேடுகின்ற புரட்சியை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு வந்தது.

தவ்ஹீது பள்ளிகளில் உள்ள ரம்மியமிகு ரமளானின் பிந்திய இரவுகளின் சிறப்புகளைப் பார்த்து விட்டு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளிலும் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் என்று கூறி மேலதிகமாக 8 ரக்அத்கள் தொழ ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மாற்றத்தை, தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

மக்ரிபுக்கு முன் சுன்னத்

நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்‘ (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி)

நூல்: புகாரி 1183

இந்த வணக்க வழிபாடு இன்று நடைமுறையில் இல்லை. ஷாஃபி மத்ஹபிலாவது ஒரு சில இடங்களில் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதைப் பார்க்க முடியும். ஆனால் ஹனபி மத்ஹபில் மருந்துக்குக் கூட இதைப் பார்க்க முடியாது. மக்ரிப் பாங்கு முடிந்தவுடன் இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விடுவர். தொழுகை நேர அட்டவணையில் கூட “மக்ரிப் இகாமத்’ என்ற இடத்தில், “உடன்” என்று தான் போட்டிருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பள்ளிவாசலில் நுழைந்தால் காணிக்கைத் தொழுகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல்: புகாரி 444

இந்த வணக்கம் சமுதாயத்தின் செயல்பாட்டில் இல்லை. இந்த வணக்கத்தை, தவ்ஹீத் ஜமாஅத் மக்களிடம் அறிமுகப்படுத்தி, செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தது.

ஃபித்ரு ஸதகாவில் ஒரு புரட்சி

பெருநாள் தர்மம் என்ற ஒன்று தமிழகத்தில் அறவே இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அந்தந்த ஊர்களில் பள்ளிவாசலில் பணி புரியும் ஆலிம்கள், பணி புரியாத ஆலிம்கள், முஅத்தின்கள், குழி தோண்டும் பக்கீர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கொடுப்போரும் சிலர் தான் இருந்தனர். பெறுவோரும் சிலர் தான். ஃபித்ரு ஸதகா கொடுக்கக் கடமைப்பட்ட ஆலிம்களே அதைப் பெறுபவர்களாக இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.

இப்படி அல்லறை, சில்லறையாக சிதறிச் சிதறி வழங்கப்பட்ட ஃபித்ரு ஸதகா என்ற வணக்கத்தை தமிழக முஸ்லிம்களிடம் முறையாக அறிமுகப்படுத்தி, முழுமையாகச் செயல்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்!

தமிழக முஸ்லிம்களிடம் கோடிக்கு மேல் ஃபித்ரு ஸதகாவைத் திரட்டி, சமுதாயத்தின் கோடியில் கிடக்கும் ஏழை எளியவர்களுக்கு வழங்கும் புரட்சி நடைமுறைக்கு வந்தது தவ்ஹீத் ஜமாஅத்தினால் தான்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503

பெருநாள் இரவுகளில் கேலிக் கூத்துகளில் ஈடுபட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்த இளைஞர் பட்டாளம், இன்று இந்த ஹதீஸைச் செயல்படுத்தும் விதமாக அரிசி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு, ஏழைகளின் வீடு தேடிச் சென்று வழங்கும் தூய பணியில் ஈடுபட்டுள்ள காட்சி, இது வரை தமிழகம் காணாத காட்சியும் மாட்சியுமாகும். புனித மிக்க ஒரு புரட்சியாகும்.

தற்கொலை செய்தவருக்கு தொழுவதற்குத் தடை

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நான் அவரைப் பார்த்தேன் (அவர் இறந்து விட்டார்)” என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவர் இறக்கவில்லை” என்று கூறினார்கள். பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்த போது, அவர் கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “அவர் தன்னிடமிருந்த கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார். “நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அம்மனிதர், ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அவருக்கு நான் தொழுவிக்க மாட்டேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

நூல்: அபூதாவூத் 2770

இது தான் சட்டம். இந்தச் சட்டத்தில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. ஆனால் மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாக, தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா தொழுகை என்பது முஸ்லிம்களுக்குத் தானே தவிர, நரகம் என்று தெளிவாகி விட்டவருக்கு இல்லை. தற்கொலை செய்தவர் காஃபிராகி விடுகின்றார் என்பதைப் புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் இருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வ- பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், “என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப்பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன்” என்று கூறினான்.

அறிவிப்பவர்: ஜுன்தப் (ரலி)

நூல்: புகாரி 3463

இந்த அடிப்படை விபரம் கூடத் தெரியாமல் மத்ஹபுவாதிகள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தத் தடை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

பயனுள்ள பயணத் தொழுகை

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாக உள்ளனர்.

அல்குர்ஆன் 4:101

கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, “நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ, அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத்களை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் யஸீத்

நூல்: முஸ்லிம் 1230

பயணத்தின் போது தொழுகையைச் சுருக்கிக் கொள்ளும் வழிமுறையை அல்குர்ஆனும், ஹதீசும் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஆனால் மத்ஹபு ஆலிம்களோ, பொருத்தமில்லாத காரணங்களைக் கூறி இந்த உரிமையைத் தட்டிப் பறித்து விட்டனர். தவ்ஹீத் ஜமாஅத் தலையெடுத்த பின்னர் தான் இந்தச் சலுகை மக்களிடம் சென்றடைந்தது.

சூரியன் சாய்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும் வரை தாமதப்படுத்தி பின்னர் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (பிரயாணத்தைத் துவங்கும் முன்) சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரைத் தொழுது விட்டுப் புறப்படுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரீ 1111

பயணத்தின் போது தொழுகையின் ரக்அத்களைக் குறைத்துக் கொள்வதற்குச் சலுகை வழங்கிய மார்க்கம் தான் சேர்த்துத் தொழுவதற்கும் அனுமதி அளித்திருக்கின்றது. ஆனால் இந்த ஆலிம் வர்க்கம் இந்த உரிமையை அநியாயமாகப் பறித்து விட்டது. பறிக்கப்பட்ட இந்த உரிமையை மீட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை அமுல்படுத்தி சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்!

களாத் தொழுகை

ஒருவர் பருவ வயதை அடைந்ததும் அவருக்குத் தொழுகை கடமையாகின்றது. அவர் ஐம்பது வயது வரை தொழாமல் இருந்து விட்டு, பிறகு திருந்தி தொழத் துவங்குகின்றார். இப்போது இந்த மத்ஹபுவாதிகள், இவ்வளவு காலம் தொழாமல் இருந்ததையும் சேர்த்து களாவாகத் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதற்குப் பயந்து அவர் தொழுவதையே விட்டு விடுகின்றார். இப்படி மார்க்கத்தில் இல்லாத களா தொழுகையை மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1217

தூக்கம், மறதி ஆகிய இரண்டிற்கு மட்டும் தான் களா உண்டு. மற்றபடி, தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று திருக்குர்ஆன் (4:103) கூறுவதை மக்களிடம் விளக்கி, களாத் தொழுகை என்ற சுமையை சமுதாயத்திலிருந்து தவ்ஹீது ஜமாஅத் அகற்றியது. வாழ் நாள் களாவுக்குப் பயந்து தொழாமலே இருந்த பலரைத் தொழுகையாளிகள் ஆக்கியது.,

மாற்றப்பட்ட ஸஹர் நேரம்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!

அல்குர்ஆன்2:187

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்” என்று கூறினார்கள்.

அறிவிப்போர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது.  நோன்புக் கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த நிலையை மாற்றி, ஃபஜ்ருடைய பாங்கு சொல்லப்படும் வரை ஸஹர் செய்யலாம் என்ற நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த ஸஹர் நேரத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமல்படுத்தவும் செய்தது.

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தல்

“சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 1954

“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது(ரலி)

நூல்: புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இதை மாற்றியமைத்து, சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்கும் நடைமுறையை ஏற்படுத்தியது.

உச்சி வெயிலில் பெருநாள் தொழுகை

பெருநாளன்று திடலில் தொழும் போது மக்களை வெயில் தாக்கும். இதனால் அதிகாலையிலேயே பெருநாள் தொழுகையை முடித்து விட வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்களது காரியங்களில் முதல் காரியமாக தொழுகையைத் துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி)

நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

இந்த ஹதீஸிலும், இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் பெருநாள் தொழுகையை காலையில் முதல் காரியமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர், பெருநாள் தொழுகையை காலை பத்து மணி வரை தாமதமாகத் தொழுது கொண்டிருந்தனர்.

இறைவனின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத், பெருநாள் தொழுகையை அதிகாலை நேரத்தில், சூரியன் உதயமான சிறிது நேரத்திலேயே தொழுது வழிகாட்டியது. குறிப்பாக ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுகை முடித்து விட்டு அறுத்துப் பலியிட வேண்டும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் இந்த நபிவழியைப் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.

இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடலில் நடத்தும் பெருநாள் தொழுகைகளில் கூட்டம் அலை மோதத் தொடங்கியது. இதைக் கண்டு சுன்னத் வல் ஜமாஅத்தினரும் கூட்டத்தைத் தக்க வைப்பதற்காக அதிகாலையில் தொழ ஆரம்பித்துள்ளனர்.

மார்க்கம் காட்டிய மணக்கொடை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

அல்குர்ஆன் 4:4

அல்குர்ஆன் காட்டித் தந்த இந்தச் சட்டம் முற்றிலுமாக மக்களிடம் மறைக்கப்பட்டு, 136 ரூபாய் மஹர் என்று திருமணப் பதிவேட்டில் பதிந்து விட்டு, லட்சக்கணக்கில் தொகையாகவும் நகையாகவும் பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்கும் நிலை தமிழகத்தில் இருந்தது.

இந்த நிலையை மாற்றி, பெண்களுக்கு அவர்கள் கேட்கும் மஹர் தொகையைக் கொடுத்து மண முடிக்கும் இளைஞர்களை உருவாக்கியது தவ்ஹீத் ஜமாஅத். அது மட்டுமின்றி தங்களது அறியாமைக் காலத்தில் வாங்கி விட்ட வரதட்சணையைக் கூட பெண்ணின் தந்தையிடம் திரும்பக் கொடுக்கும் புரட்சியையும் ஏற்படுத்தியது.

இவை மட்டுமின்றி பெண்கள் தங்கள் முகம், கைகள் தவிர உடல் முழுவதையும் மறைக்கும் புர்காவை நடைமுறைக்குக் கொண்டு வந்தது, கணவனைப் பிடிக்காத பெண்கள் மண விலக்கு பெற்றுக் கொள்ளும் உரிமையை அமல்படுத்தியது, கணவனை இழந்த பெண்கள் இத்தா என்ற பெயரில் அனுபவித்து வந்த கொடுமைகளை அகற்றியது உள்ளிட்ட ஏராளாமான விஷயங்களில் திருக்குர்ஆன் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

இப்படி அல்குர்ஆனின் சட்டங்களையும் அதன் விளக்கமாக அமைந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி அதை அமல்படுத்துவதில் மாபெரும் சாதனை படைத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

—————————————————————————————————————————————————————-

The God that never was?

மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவன் வழங்கிய புனிதக் குர்ஆன் இறங்கிய மாதம் தான் ரமளான். அல்குர்ஆன் மட்டும் தான் மனிதக் கை படாத, மனிதனின் கலப்படம் கலவாத ஓர் உன்னத வேதம், உயர்ந்த வேதம் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது தான் அது கூறுகின்ற கடவுள் கொள்கை! படைத்த ஓர் இறைவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. கடவுளுக்கு வேறு எதுவும், யாரும் இணையாக இல்லை என்று சொல்கின்ற ஏகத்துவக் கொள்கையாகும். யாராலும், எவராலும் உடைக்க முடியாத ஓர் உச்சக்கட்ட உன்னதக் கொள்கை! பகுத்தறிவுள்ள எவராலும் மறுக்க முடியாத தெளிவான கொள்கை!

இந்தக் கொள்கையுடன் பைபிள் கூறும் கடவுள் கொள்கையை உரசிப் பார்க்கின்ற, ஒப்பிட்டுப் பார்க்கின்ற ஆய்வுப் பார்வைக்காக அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள், The God that never was?”ஒருபோதும் கடவுளாக இருந்ததில்லை” என்ற தலைப்பில் எழுதிய நூலின் தமிழாக்கத்தை இங்கே தருகின்றோம்.

அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தன் ஆயுள் முழுவதும் கிறித்தவத்தை மட்டுமே குறியாகக் கொண்டு விவாதம் மற்றும் எழுத்து ரீதியான ஆயுதங்கள் தாங்கி இறுதி வரை அதை எதிர்த்துப் போரிட்டவர். அதனால் அவர்களது ஆய்வுகள் அனைத்துமே கிறித்தவத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. அதற்காக அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! அவரது ஆய்வு அந்தத் திசையை நோக்கி மட்டும் சென்றதற்கு மற்றொரு காரணம், அவர் வாழ்ந்த தென்னாப்பிரிக்க பகுதி, சூழல் அனைத்தும் கிறித்தவ வயமாக இருந்தது தான்.

கிறித்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்திற்கு அஹ்மத் தீதாத் அவர்கள் தனது பிரச்சாரத்தின் மூலமாகவும், நூல்கள் மூலமாகவும் விவாதக் களங்களிலும் தக்க பதிலடி கொடுத்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் அவரது ஆய்வுகள், கொள்கைகள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் பித்அத்துக்களை அவர் கண்டிக்கவில்லை என்பதுடன் சில இடங்களில் ஆதரித்தும் பேசியுள்ளார்.

எனவே அஹ்மத் தீதாத் அவர்களின் கட்டுரையை இங்கு நாம் வெளியிடுகிறோம் என்றால் இதைப் படிப்பவர்கள், கிறித்தவர்களை எதிர்கொள்ள தயக்கமோ கலக்கமோ அடையாமல் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்கு இந்தக் கருத்துக்கள் பயனுள்ளவையாக இருக்கும் என்ற அடிப்படையில் தான். இங்கு ஒரு மொழிபெயர்ப்பை நாம் தந்துள்ளோம். இந்த ஒரு கோணத்தில் மட்டும் அஹ்மத் தீதாத் அவர்களின் கட்டுரையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஷிர்க், பித்அத்தை ஆதரித்து யார் கருத்துக் கூறினாலும் அவற்றை எதிர்ப்பதற்கு நாம் எந்தத் தயக்கமும் காட்ட மாட்டோம் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இயேசு – ஒருபோதும்

கடவுளாக இருந்ததில்லை

ஒரே ஒரு தூய கடவுள் தான் இருக்கின்றான் என்று சாதிக்கின்ற மார்க்கம் தான் இஸ்லாம். தூய கடவுள் என்பதன் பொருள், கடவுள் என்ற தன் இயற் தன்மையில், இறைத் தன்மையில், அவனது பண்புகளில் அவன் தன்னை யாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. யாருக்கும் பங்கு வைத்துக் கொடுக்கவில்லை. இதோ அல்குர்ஆன் முழங்குகின்றது:

“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

அல்குர்ஆன் 112வது அத்தியாயம்

தென்னாப்பிரிக்காவின் பெனானி நகரில், முஸ்லிம்களைக் கிறித்தவர்களாக மாற்றுவதற்காகவே கடவுளால் நியமிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் தூதர் என்று கூறிக் கொண்டு ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். இயேசுவைக் கடவுள் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று அவர் பிரச்சாரம் செய்கிறார். இயேசு கடவுள் என்ற இந்த வாதம் முஸ்லிம்களுக்குக் கோபத்தையும் குமட்டலையும் தருகின்ற வாதமாகும். காரணம், அது தூய கடவுள் தன்மைக்கு எதிரானது. எனவே இதை முஸ்லிம்கள் ஒருபோதும் ஜீரணிக்க மாட்டார்கள். இருந்தும் அவர் உண்மையின் போக்கைத் திசை மாற்றவும், தலைகீழாகப் புரட்டிப் போடவும் வெறியாக இருக்கின்றார்.

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 17:81

இயேசு கடவுள் என்பதற்கு அவர் இரண்டு காரணங்களைக் கூறுகிறார்.

  1. இயேசு கடவுள் என்று சொல்லும் போது அவரை நாம் தந்தையாக ஆக்கி விட மாட்டோம். அவர் தந்தையுடன் உள்ள ஒருவர். அதனால் அவர் அவருடைய தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றார்.
  2. அவர் எல்லா வழிகளிலும், வகையிலும் தந்தையைப் போன்றவர். ஆனால் தந்தை இல்லை.

சுருக்கமாக, இவரது கருத்துப்படி இயேசு ஒரு கடவுள் என்பதற்குக் காரணம் அவர் கடவுள் தன்மையைப் பகிர்ந்து கொள்கிறார்; மேலும் அவர் எல்லா வழிகளிலும் கடவுளைப் போன்று இருக்கிறார்.

இயேசு கடவுளைப் போன்றவர் கிடையாது என்பதற்கும் கடவுள் தன்மையைப் பகிரவில்லை என்பதற்கும் பைபிளிலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இங்கு காட்டப்படுகின்றன.

இங்கு இயேசுவைக் குறிப்பிடும் இடங்களில் கேள்விக்குறியிட்டு “கடவுள்’ என்றே குறிப்பிட்டுள்ளோம். இதற்குக் காரணம், இந்தத் தன்மைகள் கொண்ட ஒருவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது என்பதைப் புரிய வைப்பதற்காக இவ்வாறு தலைப்பிட்டுள்ளோம்.

இயேசுவைக் கடவுள் என்று சொல்வது கடவுள் தன்மையைக் கேலி செய்வதாகும். மிக அற்பத்தனமான பழியும் அபாண்டமும் ஆகும். மனிதனின் புத்திக் கூர்மைக்கு ஓர் அவமானமாகும்.

கடவுளின் பிறப்பு?

இந்த நற்செய்தி அவருடைய மகனைப் பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்;

ரோமையர் 1:3

தாவூதின் வழித்தோன்றலான கடவுள்?

அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.

திருத்தூதர் பணிகள் 2:30

கடவுளின் மூதாதையர்கள்?

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோப்பு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.

மத்தேயு 1:1

கடவுளுக்குப் பெயர் சூட்டுதல்?

குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

லூக்கா 2:21

மேரி கருவுற்றுப் பிரசவித்த கடவுள்?

அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.

லூக்கா 2:6

அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.

திருவெளிப்பாடு 12:2

இதன் பொருள் என்ன? ஒரு கர்ப்பிணிப் பெண் அடைகின்ற அத்தனை இயற்கையான கட்டங்களையும் மேரி அடைந்தார். அல்லது அவரது பிரசவம் மற்ற கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தைப் போன்று தான் இருந்தது. வித்தியாசமாக ஒன்றுமில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகின்றது.

பால் குடித்த கடவுள்?

அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.

லூக்கா 11:27

கடவுள் பிறந்த ஊர், நாடு?

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.

மத்தேயு 2:1

கடவுளின் தொழில்?

“இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

மாற்கு 6:3

இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?

மத்தேயு 13:55

கழுதையில் வரும் கடவுள்?

“கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.

மத்தேயு 21:5

இயேசு ஒரு கழுதைக் குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார்.

யோவான் நற்செய்தி 12:14

குடிகாரக் கடவுள்?

மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, “இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.

மத்தேயு 11:19

மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, “இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்” என்கிறீர்கள்.

லூக்கா 7:34

கடவுளின் வறுமை?

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

மத்தேயு 8:20

கடவுளின் அற்ப உடைமைகள்?

யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை.

லூக்கா 3:16

இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.

யோவான் நற்செய்தி 19:23

கடவுள் பக்தி மிக்க ஒரு யூதர்?

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்.

மாற்கு 1:35

கடவுள் விசுவாசமிக்க குடிமகன்?

அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

மத்தேயு 22:21

அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர்.

மத்தேயு 17:24

அதாவது கடவுள் தவறாமல் வரி செலுத்தியுள்ளார்.

கடவுளின் குடும்பம்?

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.

யோவான் நற்செய்தி 1:45

கடவுளின் சகோதரர்கள், மைத்துனர்கள்?

தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?

இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?

இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள்.

மத்தேயு 13:54-56

கடவுளின் பரிணாம வளர்ச்சி?

குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

லூக்கா 2:40

கடவுளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி?

இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

லூக்கா 2:52

பன்னிரண்டு வயதுக் கடவுள்?

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.

லூக்கா 2:41, 42

அதிகாரமில்லாத கடவுள்?

நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீர்ப்பிடுகிறேன். நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

யோவான் நற்செய்தி 5:30

கால, நேரம் அறியாத கடவுள்?

“ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது”

மாற்கு 13:32

பருவ காலம் தெரியாத கடவுள்?

மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.

இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல.

மாற்கு 11:12, 13

எழுத்தறிவில்லாத கடவுள்?

பாதித் திருவிழா நேரத்தில் இயேசு கோவிலுக்குச் சென்று கற்பிக்கத் தொடங்கினார்.

“படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?” என்று யூதர்கள் வியப்புற்றார்கள்.

யோவான் நற்செய்தி 7:14, 15

அனுபவத்தின் மூலம் பயின்ற கடவுள்?

அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார்.

எபிரேயா 5:8

சாத்தான் வயமான கடவுள்?

உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.

மாற்கு 1:12, 13

சாத்தானின் தொடர்பில் கடவுள்?

அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

லூக்கா 4:13

பாவிகள் போன்று சாத்தானுக்குப் பலியாகும் கடவுள்?

அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.

லூக்கா 4:15

உண்மையான கடவுள் தீமைக்குள்ளாவதில்லை

 சோதனை வரும்போது, “இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது” என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை.

யாக்கோப் 1:13

கடவுள் அல்லாதோர் தான் தீமையில் கவரப்படுவர்

ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது.

யாக்கோப் 1:14

கடவுளின் வாக்குமூலமும் பாவ மன்னிப்பு தேடுதலும்?

அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெற கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.

மத்தேயு 3:13

அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.

மத்தேயு 3:6

நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

மத்தேயு 3:11

பாவிகளைக் காக்க முன்வராத கடவுள்?

அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்து கொண்டு, உவமைகளைப்பற்றி அவரிடம் கேட்டார்கள்.

அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன.

எனவே அவர்கள் “ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்” என்று கூறினார்.

மாற்கு 4:10-12

இனவாதம் பேசும் கடவுள்?

அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார்” என்று கூறினார்.

திருவெளிப்பாடு 5:5

யூதருக்கு மட்டும் வந்த கடவுள்?

அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

மத்தேயு 15:24

இனப் பாகுபாடு காட்டும் கடவுள்?

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது; “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்”

மத்தேயு 10:5, 6

யூதரல்லாதவர்களை நாய் எனக் கூறும் கடவுள்?

அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார்.

மத்தேயு 15:26

கடவுளின் ராஜ்யம்?

அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

லூக்கா 1:33

கடவுளின் தகுதியைக் குறிக்கும் பட்டம்?

யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.

மத்தேயு 2:2

நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.

யோவான் நற்செய்தி 1:49

பசி தாங்காத கடவுள்?

அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.

மத்தேயு 4:2

காலையில் நகரத்திற்குத் திரும்பி வந்தபொழுது அவருக்குப் பசி உண்டாயிற்று.

மத்தேயு 21:18

மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.

மாற்கு 11:12

கடவுளின் தாகம்?

இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.

யோவான் நற்செய்தி 19:28

தூங்கும் கடவுள்?

திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.

மத்தேயு 8:24

படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள்.

லூக்கா 8:23

அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

மாற்கு 4:38

களைத்துப் போகும் கடவுள்?

அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

யோவான் நற்செய்தி 4:6

கலங்கும் கடவுள்?

மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார்.

யோவான் நற்செய்தி 11:33

குமுறுகின்ற கடவுள்?

இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.

யோவான் நற்செய்தி 11:38

அழுகின்ற கடவுள்?

அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

யோவான் நற்செய்தி 11:35

துக்கம் மிகுந்த கடவுள்?

பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.

அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

மத்தேயு 26:37, 38

உடல், உள ரீதியில் பாதிப்புக்குள்ளாகும் கடவுள்?

பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.

மாற்கு 14:33

பலவீனமான கடவுள்?

(அப்போது விண்ணகத்திலிருந்து) ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

லூக்கா 22:43

கடவுளின் வலிமை மிகு வீர சாகசம்?

இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.

லூக்கா 19:45

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்;

கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;

அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

யோவான் நற்செய்தி 2:13-15

போர்க் கடவுள்?

“நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

மத்தேயு 10:34

பொங்கி எழும் கடவுள்?

அவர் அவர்களிடம், “ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்.

லூக்கா 22:36

ஓட்டமெடுக்கும் கடவுள்?

இயேசு கலிலேயாவில் நடமாடிவந்தார். யூதர்கள் அவரைக் கொல்ல வழிதேடிக் கொண்டிருந்ததால் அவர் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

யோவான் நற்செய்தி 7:1

யூதர்களுக்குப் பயந்து ஒளியும் கடவுள்?

ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள்.

அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.

யோவான் நற்செய்தி 11:53, 54

கல்தா கொடுத்த கடவுள்?

இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.

யோவான் நற்செய்தி 10:39

மாறு வேடம் பூண்ட கடவுள்?

இதைக் கேட்ட அவர்கள் அவர் மேல் எறிய கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

யோவான் நற்செய்தி 8:59

காட்டிக் கொடுக்கப்பட்ட கடவுள்?

அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.

படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.

யோவான் நற்செய்தி 18:2, 3

கைது செய்யப்பட்ட கடவுள்?

படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.

யோவான் நற்செய்தி 18:12, 13

அவமானப்படுத்தப்பட்ட கடவுள்?

இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள்.

அவரது முகத்தை மூடி, “உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்” என்று கேட்டார்கள்.

லூக்கா 22:63, 64

பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, “இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்” என்று கேட்டனர்.

மத்தேயு 26:67, 68

தற்காப்பில்லாத கடவுள்?

அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.

யோவான் நற்செய்தி 18:22, 23

கடவுளுக்கு மரண தண்டனை?

இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாக வேண்டியவன்” என்று தீர்மானித்தார்கள்.

மாற்கு 14:64

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” எனப் பதிலளித்தார்கள்.

மத்தேயு 26:66

ஊமையாய் அடங்கிப் போன கடவுள்?

அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு; “அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும், உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார்”

திருத்தூதர் பணிகள் 8:32

சாகும் கடவுள்?

இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.

மாற்கு 15:37

செத்து விட்டாரென கருதப்படும் கடவுள்?

நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.

ரோமையர் 5:6

பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.

யோவான் நற்செய்தி 19:53

கடவுளின் பிரேதம்?

அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான்.

மத்தேயு 27:58

கடவுளின் சவத் துணி?

யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.

மத்தேயு 27:59, 60

கடவுளின் மரண அறிவிப்பு?

“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் “என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், “இவர் உண்மையாகவே நேர்மையாளர்” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.

லூக்கா 23:46, 47

முடிவுரை

கிறிஸ்துவின் தூதர் என்று தன்னைத் தானே கூறிக் கொண்ட அந்த தென்னாப்பிரிக்க வழக்கறிஞரின் கருத்துப்படி இயேசு கிறிஸ்து கடவுள் தன்மையில் பகிர்ந்து கொண்டார், அவர் கடவுளைப் போன்றவர் என்பதாகும்.

ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டியிருக்கும் பைபிள் மேற்கோள்களின் படி இயேசு கடவுள் தன்மையில் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதும் அவர் எந்த வகையிலும் கடவுளைப் போன்றவர் இல்லை என்பதும் தெளிவாக விளங்க முடிகின்றது.

எனவே இயேசு உறுதியாகக் கடவுள் இல்லை. அவர் கடவுள் தான் என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அந்த வழக்கறிஞருக்கு மட்டுமல்ல. இயேசுவைக் கடவுளாக நம்பும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இருக்கின்றது. அல்லது இவர்கள் பல கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்      தொடர்: 8

மனிதன் சுமந்த அமானிதம்?

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

வானம், பூமி, மலை ஆகியவற்றுக்கு ஓர் அமானிதத்தைச் சுமக்குமாறு இறைவன் முன் வைத்திருக்கின்றான். ஆனால் அவைகள், இறைவன் முன்வைத்த அந்த அமானிதத்தைச் சுமக்க மறுத்து விட்டன. பிறகு மனிதன் அதைச் சுமந்து கொண்டான் என்று இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)

இறைவன் வானம், பூமி, மலைகளிடம் முன்வைத்த அந்த அமானத் (அமானிதம்) என்ன? என்பதை குறிப்பிட்டு குர்ஆனின் பிற வசனங்களிலோ, நபிமொழிகளிலோ விளக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வசனத்தைச் சற்று சிந்தித்து பார்த்தால் அந்த அமானிதம் எது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

மனிதனுக்கும், மனிதன் அல்லாத வானம், பூமி, மலைகள் போன்றவற்றுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் பகுத்தறிவு தான். பகுத்தறிவு விஷயத்தில் தான் மனிதன் இவற்றிலிருந்து வேறுபடுகின்றான். மனிதன் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுத்து தனக்கு விருப்பமானவற்றைச் செய்யவும், தனக்கு விருப்பமில்லாதவற்றைச் செய்யாமலிருக்கவும் ஆக சுயமாகச் செயல்படும் ஆற்றலை இந்தப் பகுத்தறிவு மூலம் பெற்றிருக்கின்றான்.

ஆனால் மற்றவைகள் அவ்வாறல்ல.  மனிதன் அல்லாத மற்றவைகளுக்கு சுயமாகச் செயல்படும் ஆற்றலில்லை. எனவே தான் எந்த மலையும் தமக்கு விருப்பமான இடத்தை நோக்கி நகர்ந்து செல்வதையும், சூரியன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் உதிக்கும் காட்சியையும் காண முடிவதில்லை. மனித சமுதாயம் ஒன்றே சுயமாகச் சிந்தித்து செயல்படும் பகுத்தறிவைப் பெற்றிருக்கின்றது.

எனவே மனிதன் சுமந்து கொண்ட அமானிதம் பகுத்தறிவு தான் என்ற முடிவுக்கு வரலாம். இதனடிப்படையில் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமானத் என்ற பதத்துக்கு பகுத்தறிவு என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாக அமைகின்றது. இதுவல்லாத வேறு பொருள் கொள்வதாக இருந்தால் அது பொருத்தமானதாகவும். இஸ்லாத்தில் உள்ள வேறு எந்த விஷயத்தினுடனும் மோதாததாகவும் அமைய வேண்டும்.

இவ்வசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற அமானிதத்திற்கு இமாம்கள் வழக்கம் போல் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார்கள். எனினும் பின்வரும் விளக்கத்தை மிஞ்சும் வகையில் யாரும் விளக்கமளிக்கவில்லை என்பதைப் படிக்கும் போதே புரிந்து கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் கூறுகிறார்: மனிதனிடம் இறைவன் படைத்த முதலாவது ( உறுப்பு ) அவனது மறை உறுப்பாகும். அதன் பின் இறைவன், “இது உன்னிடம் உள்ள என்னுடைய அமானிதம். அதற்குரிய உரிமையிலே அதை பயன்படுத்து. வீணாக்கி விடாதே” என்று கூறினான்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 12, பக்கம் 161

எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பற்றி இங்கே கூறப்படுகின்றது என்பதைப் பொருட்படுத்தாமல் அந்த அமானிதம் மறை உறுப்பு என்கிறார். இதற்கு ஒரு சம்பவம் வேறு. இறைவன் மனிதனுக்கு முதலில் மறை உறுப்பைப் படைத்து விட்டு, இதுவே நான் தந்த அமானத் என்றானாம். இதை இவர்கள் எங்கே படித்தார்கள்? யாரிடமிருந்து கற்றார்கள்? இந்த விளக்கம் கொஞ்சமும் பொருத்தமற்றது, கேலிக்கூத்தானது என்பதைச் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்

அந்த அமானிதம் மார்க்கம் என்பதாகும் என லிஹ்ஹாக் என்பார் கூறுகிறார்.

கடமைகள் என்று ஸயீத் பின் ஜுபைர் கூறுகிறார்.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 12, பக்கம் 161

இவ்விரு இமாம்களும் இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய அமானிதம் மார்க்கம், கடமைகள் என்கின்றனர். இதுவும் பொருத்தமற்ற பொருளே. ஏனெனில் இந்தப் பொருளின் படி வானம், பூமி, மலைகளுக்கு இறைவன் தன்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும், தான் விதித்த கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என முன்வைக்கின்றான், இதனை ஏற்க அவை மறுக்கின்றன என்று பொருளாகும்.

வானம், பூமி, மலைகள் தான் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றனவே! இறைவன் அவற்றுக்கு என்ன மார்க்கத்தை, வழியைச் சொல்லியிருக்கிறானோ அதனடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவே!

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.  (அல்குர்ஆன் 13:15)

இவ்வாறிருக்கும் போது இறைவன் தனக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை முன்வைக்கும் போது இதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. தாம் ஏற்கனவே புரிந்து கொண்டிருக்கும் ஒரு காரியத்தைக் கண்டு அஞ்ச வேண்டிய தேவையுமில்லை. இவ்வசனத்தின் மூலம் மேற்கண்ட இமாம்கள் அளித்த விளக்கங்கள் தவறு என்பதை அறியலாம்.

திருக்குர்ஆன் அந்த அமானிதமா?

இன்னும் சிலர் இறைவன் எடுத்துக் காட்டி, மனிதன் சுமந்து கொண்ட அமானிதம் திருக்குர்ஆன் தான் என்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வதற்குப் பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம்.  (அல்குர்ஆன் 59:21)

இந்த வசனத்தில் இறைவன் குர்ஆனை மலையின் மீது இறக்கியிருந்தால் அது நொறுங்கியிருக்கும் என்பதாகத் தெரிவிக்கின்றான். எனவே இறைவன் மலைக்கு வழங்காமல் மனிதனுக்கு வழங்கியது இந்தக் குர்ஆனைத் தான் என்பது இவர்களின் விளக்கம். இதுவும் தவறான விளக்கமே. இந்த வசனத்தை நன்கு கவனித்தால் புரிய வரும்.

மலையின் மீது குர்ஆனை இறங்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடும் என்றால், குர்ஆனை அந்த மலை ஏற்றுக் கொண்டது என்று பொருள். குர்ஆன் தான் அமானிதம் என்றால் 33:72 ஏற்க மறுத்ததாகக் கூறுவதற்கு இது முரணாகி விடும்.

மேலும் 59:21 வசனத்தில் இறைவன் நடக்காத விஷயத்தைச் சொல்லி அது நடந்தால் எவ்வாறிருக்கும் என்பதையே கூறுகின்றான். மலையின் மீது குர்ஆனை நாம் இறக்கவில்லை. அப்படி இறக்கியிருந்தால் எப்படியிருக்கும் என்பதை விளக்குகின்றான்.

ஆனால் 33:72 வசனத்தில் நடந்த சம்பவத்தை இறைவன் தெரிவிக்கின்றான். அதாவது வானம், பூமி, மலை ஆகியவற்றுக்கு அமானிதத்தைச் சுமந்து கொள்ளுமாறு இறைவன் முன் வைத்ததையும், அதை அவைகள் ஏற்க மறுத்தன என்று நடந்த சம்பவத்தைத் தெரிவிக்கின்றான். எனவே அந்த அமானிதம் குர்ஆன் என்று விளக்கமளிப்பது சரியல்ல என்பதை அறியலாம்.

பாக்கியாதுஸ் ஸாலிஹாத்

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.  (அல்குர்ஆன் 18:46)

உலகில் உள்ள மக்கள் யாவரும் இரண்டு செல்வத்தைப் பெரிதும் விரும்புவார்கள். ஒன்று பொருளாதாரம் எனும் செல்வம். மற்றொன்று மக்கள் செல்வம். இதில் பொருளாதாரம் எனும் செல்வத்தை அதிகளவில் திரட்ட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அதை அடைவதையே முழு நேரப் பணியாகப் பலரும் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வுலகில் நாம் திரட்டுகின்ற இந்தப் பொருளாதாரமும், நாம் பெற்றிருக்கும் மக்கள் செல்வமும் நிலையானதல்ல. இவ்விரண்டும் இவ்வுலகத்துடன் முடிந்து விடக்கூடியது, இவற்றின் மூலம் மறுமையில் எதையும் நாம் சாதிக்க முடியாது என்பதை இறைவன் இவ்வசனத்தின் வாயிலாக மனிதர்களுக்கு உணர்த்துகின்றான்.

மேலும் இவ்வுலகில் நாம் புரியக்கூடிய நல்லறங்களே நிலையான செல்வங்கள், இதன் மூலமே மறுமையில் இறைவனிடம் நினைத்த காரியத்தைச் சாதிக்க முடியும் என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றான்.

நிலையான நல்லறங்கள் என்பதை அரபியில் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் என்று குறிப்பிடப்படும். அதாவது இவ்வுலகில் உள்ள செல்வங்கள் யாவும் இவ்வுலகிலேயே அழிந்து போகக்கூடியது. நல்லறங்கள் மாத்திரமே மறுமை வரையிலும் பின்தொடர்ந்து நிலைத்து நிற்கக்கூடியது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது.

இறைவன் கூறிய அந்த பாக்கியாதுஸ் ஸாலிஹாத் எது என்பதில் இமாம்கள் அளித்துள்ள விளக்கத்தை இப்போது காண்போம்.

பாக்கியாதுஸ் ஸாலிஹாத் என்பது கடமையான தொழுகைகளாகும் என அம்ர் பின் ஷுர்ஹபீல் கூறுகிறார்.

உஸ்மான் அவர்களிடம் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் எவை? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அவை, லாயிலாஹ இல்லல்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று பதிலளித்தார்கள்.

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லாஹு அக்பர் ஆகியவைகள் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் ஆகும் என முஜாஹித் கூறுகிறார்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 15, பக்கம் 274, 276, 277

பாக்கியாதுஸ் ஸாலிஹாத் எது என என்னிடம் ஸயீத் பின் முஸய்யப் கேட்டார். நான் தொழுகையும் நோன்பும் என்று கூறினேன். அதற்கு அவர் நீ சரியாகச் சொல்லவில்லை என்றார். பிறகு ஜகாத்தும் ஹஜ்ஜும் என்றேன். அதற்கும் நீ சரியாகக் கூறவில்லை என்று சொல்லி அவைகள் லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்ற ஐந்து வார்த்தைகளாகும் என்று கூறினார் என உமாரஹ் பின் ஸய்யாத் என்ற அறிஞர் கூறுகிறார்.

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 1, பக்கம் 279

மேற்கண்ட விளக்கங்களில் நிலையான நல்லறங்கள் என்பது சில இமாம்கள் தொழுகை என்கிறார்கள். மற்றொருவர் தொழுகை, நோன்பு ஆகியவை நிலையான நல்லறங்களில் சேராது. குறிப்பிட்ட ஐந்து வார்த்தைகள் மட்டுமே பாக்கியாதுஸ் ஸாலிஹாத் என்கிறார்.  தொழுகை, திக்ர், நோன்பு, இது போன்ற நாம் புரியக்கூடிய அனைத்து நன்மையான காரியங்களும் நிலையான நல்லறங்களே. இறை வார்த்தையில் சொல்வதென்றால் பாக்கியாதுஸ் ஸாலிஹாத்களே. இதைப் புரியாமல் இமாம்கள் விளக்கமளித்துள்ளனர் என்று நமக்குப் புரிகின்றது.

ஸாஹிரா என்பதின் பொருள்

சூர் ஊதப்படும் நாளில் என்ன நிகழும் என்பதை இறைவன் 79வது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகின்றான். அதைப் பற்றிக் கூறும் போது முதல் சூர் ஊதப்பட்டுவிட்டால் மக்கள் யாவரும் வெட்ட வெளியில் நிற்பார்கள் என்று இறைவன் கூறுகின்றான்.

அது ஒரே ஒரு சப்தம் தான்! உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.  (அல்குர்ஆன் 79:14)

வெட்ட வெளி என்பதை குறிப்பதற்கு இறைவன் ஸாஹிரா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான். ஏனைய தர்ஜுமாக்களிலும் ஸாஹிரா என்பதற்கு இவ்வாறே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இமாம்கள் ஸாஹிரா என்பதற்குக் கூறும் பொருள்? வழக்கம் போல ஏறுக்குமாறாகத் தான் கூறியுள்ளனர்.

வஹ்ப் பின் முனப்பஹ் என்ற அறிஞர் ஸாஹிரா என்பது பைத்துல் முகத்தஸ் அருகில் உள்ள மலை என்று கூறுகின்றார்.

உலகம் அழிக்கப்படும் நாளில் சூர் ஊதப்படுவதைப் பற்றி விளக்கும் போது பைத்துல் முகத்தஸைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன? இறைவன் கூறிய வசனத்தில் உலக மக்கள் யாவரும் ஸாஹிராவில் அதாவது வெட்ட வெளியில் நிற்பார்கள் என்று உள்ளது. இமாம் அளித்த இந்த விளக்கத்தின் படி பார்த்தால் உலக மக்கள் யாவரும் சூர் ஊதப்பட்ட பிறகு பைத்துல் முகத்தஸிற்கு அருகில் உள்ள மலையில் நிற்பார்கள் என்பது பொருளா? இவ்வாறு நபிகள் நாயகம் எங்காவது கூறியுள்ளார்களா? எவ்விதத் தொடர்பும் இன்றி விளக்கமளிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த விளக்கத்தைச் தூக்கிச் சாப்பிடும் அளவிற்குப் பின்வரும் விளக்கம் அமைந்துள்ளது.

அப்போது நரகில் இருப்பார்கள் என்று கதாதா கூறுகின்றார்.

சூர் தானே ஊதப்பட்டுள்ளது. அதற்குள் எப்படி அனைவரும் நரகம் செல்ல முடியும்? சூர் ஊதப்பட்ட பிறகு வெட்ட வெளியில் நிற்கும் பல நல்லவர்களும் சேர்ந்து நரகில் சென்று விடுவார்களா? என்பன போன்ற பல தவறான கருத்துக்களை உள்ளடக்கியதாக இவ்விளக்கம் அமைந்துள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

மறைவழியில் பிறை பார்ப்போம்

கே.எம். அப்துந் நாசிர்

ரமளான் மாதம் வந்து விட்டாலே பிறை விஷயத்தில் குழம்பிய கூட்டத்தினர் குழப்பம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாகக் குழப்ப ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வரிசையில் இந்த வருடம் புதிதாக ஒரு வழிகெட்ட பிரிவினர் தோன்றியுள்ளனர். குர்ஆன், சுன்னா அடிப்படையில் நாம் எடுத்து வைக்கும் வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் முன்னோர்கள் கூறியுள்ளார்களா? இமாம்கள் கூறியுள்ளார்களா? எனக் கேட்டு மீண்டும் வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் மார்க்கம். இந்த இஸ்லாத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் சட்டம் கூற முடியாது. மார்க்கம் என்ற அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் இறை வழிகாட்டுதல்களின் பிரகாரம் உள்ளதாகும். இறைவனுடைய வஹீ செய்தியைத் தவிர ஸஹாபாக்கள், இமாம்கள், அறிஞர்களின் சொந்தக் கூற்றுகளை மார்க்கம் எனக் கருதுபவர்கள் இஸ்லாத்தில் இல்லாத மூன்றாவது ஒரு அடிப்படையை உருவாக்கிவிட்டனர் என்பதே உண்மையாகும். இதோ இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

அல்குர்ஆன் 7:3

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள்.

அல்குர்ஆன் 5:44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்

அல்குர்ஆன் 5:45

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

அல்குர்ஆன் 5:47

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் இறைவனிடமிருந்து வந்த வஹீ செய்தி மட்டும் தான் இஸ்லாம் என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன. குர்ஆன் ஹதீஸ் மட்டும் போதாது. முந்தைய கால அறிஞர்கள் கூறியிருந்தால் தான் மார்க்கமாக ஏற்றுக் கொள்வோம் என்று ஒருவன் கூறினால் அவன் இறைச் செய்தி மட்டும் தான் இஸ்லாம் என்பதை மறுத்தவனாவான். இது நம்மை இறைவனுக்கு இணை வைக்கும் பெரும்பாவத்தின் பக்கம் கொண்டு போய் சேர்த்து விடும்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர்.

அல்குர்ஆன் 9:31

யூத, கிறித்தவர்கள் இறைச் செய்தியை மட்டும் பின்பற்றாமல் இறைச் செய்தியை மறுத்து தங்களுடைய அறிஞர்கள் மற்றம் மதபோதகர்களின் கருத்தைப் பின்பற்றிய காரணத்தினால் அவர்கள் காஃபிர்களாகி விட்டார்கள் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான். இத்தகைய நிலைக்குச் செல்வதை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக. இறைச் செய்தியாகிய குர்ஆன் மட்டும் நபிவழியில் நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளுக்காக பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பது தெளிவாக வழிகாட்டப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு யாரின் பக்கமும் நாம் தேவையாக வேண்டிய அவசியமில்லை.

ரமளானை அடைதல்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்

அல்குர்ஆன் 2:185

பிறை சம்பந்தமான முக்கியமான ஆதாரமாக இந்த வசனம் அமைந்துள்ளது.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். என்று அல்லாஹ் கூறுகிறான்.

*              அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

*              ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைகிறார்கள் என்பது சிலரது வாதம். ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆன் கருத்து. யார் அடைகிறாரோ என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் ஷஹித என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஷஹித என்பதற்கு நாம் செய்த மொழியாக்கம் தவறானதா என்றால் நிச்சயமாக இல்லை. இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்றா என்றால் அதுவுமில்லை என்பது தான் இதற்கு நமது விடையாகும்.

ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்தில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று தான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் செய்யாத தமிழாக்கம் அல்ல இது.

தமிழில் வெளியான எல்லா தர்ஜுமாக்களிலும் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஷஹித என்பதன் நேரடியான பொருள் அடைந்தான் என்பது தான். யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று தான் எல்லா விரிவுரையாளர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆக ஷஹித என்பதற்கு யார் அடைகிறாரோ என்று நாம் பொருள் செய்திருப்பது நூறு சதவிகிதம் சரியானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நேரடியான பொருளைக் கொடுத்து அது பொருந்தியும் போகிறதென்றால் வேறு எந்த விளக்கவுரையும் தேவையில்லை. இன்னும் சிலர் வேறு விதமாக ஆட்சேபிக்கின்றனர். யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்பது தான் இதன் பொருள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஷஹித என்பதற்கு அடைகிறாரோ என்று பொருள் உள்ளது போல் சாட்சி கூறுதல் என்ற பொருளும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. இந்த வசனத்தில் இவ்வாறு பொருள் கொள்ள முடியாது. பொருள் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். பல அர்த்தங்களைக் கொண்ட சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. அதற்காக அந்த அர்த்தங்களில் எதை நாம் விரும்புகிறோமோ அதைச் செய்து விட முடியாது. அச்சொல் பயன்படுத்தப்பட்ட இடத்தைக் கவனித்து, எந்த அர்த்தம் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் கவனித்துத் தான் பொருள் செய்ய வேண்டும்.

யார் சாட்சியாக உள்ளாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று பொருள் கொண்டால் ஊரில் நாலைந்து பேர் தான் நோன்பு நோற்க வேண்டும். ஏனெனில் ஊரில் உள்ள எல்லா மக்களும் பிறை பார்த்ததாக சாட்சி கூற மாட்டார்கள். ஏனெனில் எல்லா மக்களும் பிறை பார்க்க மாட்டார்கள். எனவே, “யார் சாட்சியாக இருக்கிறாரோ’ என்ற அர்த்தத்தைச் செய்தால் 99 சதவிகிதம் பேர் நோன்பு நோற்கத் தேவையில்லை என்ற விபரீதமான கருத்து வந்து விடும்.

எனவே இவ்வசனத்தைக் கவனமாகச் சிந்தித்தால் அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ரமளானை அடைவார்கள் என்ற கருத்தைத் தரும் அனைத்து வாதங்களும் தவறானவை என்பது தெளிவாகும். சிலர் ஃபமன் ஷஹித என்ற வார்த்தைக்கு யார் சாட்சி பெற்றுக் கொள்கிறார்களோ என்று பொருள் செய்கின்றனர். இப்படி ஒரு அர்த்தம் அந்த வார்த்தைக்குக் கிடையாது.

மேக மூட்டத்தின் போது…

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

மதீனாவைச் சுற்றிலும் உஹது போன்ற பெரும் மலைகள் இருந்தன. அம்மலைகளின் உச்சியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. அப்படியிருந்தும் மேகமூட்டம் ஏற்படும் நாட்களில் பிறை தென்படுகிறதா என்று மலையின் மீது ஏறி தேடிப் பார்க்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. கட்டளையும் இடவில்லை; ஆர்வமூட்டவுமில்லை.

மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று எளிமையான தீர்வை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி விட்டார்கள்.

சிரியாவில் பார்ப்பது மதீனாவுக்குப் பொருந்தாது

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். “நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். “நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். “நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். “ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் “ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். “முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம்

தானும் பிறை பார்த்து முஆவியாவும் பார்த்து மக்களும் பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

சிரியாவில் முப்பது நாட்கள் முழுமையாகி விட்டது என்று குரைப் வந்து நேரடியாகக் கூறுவது தொலைத் தொடர்பு சாதனங்களில் கேட்பதை விட உறுதியான விஷயம். அதை இப்னு அப்பாஸ் (ரலி) மறுக்கின்றார் என்றால் தெலை தூரத்தில் பிறை பார்க்கப்பட்டால் அதை ஏற்கக் கூடாது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரியவில்லையா?

கிராமமும் நகரமும்

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர். 

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ், நூல்: அபூதாவூத் (1992)

கிராமப்புறங்கள் அந்தந்த நகர்ப்புறங்களின் ஒரு பகுதியாகும். எனவே நகரத்தில் காணப்படும் பிறை சுற்றியுள்ள கிராமங்களையும், சுற்றியுள்ள கிராமங்களில் காணப்படும் பிறை நகரத்தையும் கட்டுப்படுத்தும்.

இவ்வாறு பொருள் கொண்டால் இரண்டுக்கும் எந்த முரண்பாடும் இல்லை.

முந்தைய நிகழ்ச்சி தத்தமது பகுதிக்கு அப்பால் இருந்துது வந்த தகவலை ஏற்கலாகாது எனக் கூறுகிறது. பிந்தைய நிகழ்ச்சி நம்முடைய பகுதியில் ஓரிடத்தில் பிறை பார்க்கப்பட்டால் அது நம்முடைய பகுதி அனைத்தையும் கட்டுப்படுத்தும் என்பதைக் கூறுகிறது.

நம்முடைய பகுதி என்பது எத்தனை கிலோ மீட்டர் என்று நபியவர்கள் கூறவில்லை. நாமே தீர்மானம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதைப் பின்னர் விளக்கியுள்ளோம்

முந்தைய கால அறிஞர்களின் கருத்துக்கள்

முந்தைய கால அறிஞர்கள் பிறை விஷயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஏராளமான கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஒருவன் குர்ஆன், சுன்னாவை மட்டும் பின்பற்றாமல் முந்தைய கால அறிஞர்களின் கூற்றின்படி தான் செயல்படுவேன் என்று கூறினால் நிச்சயமாக அது வழிகேடு மட்டுமில்லாமல் அவ்வாறு பின்பற்றுவது சாத்தியமற்ற ஒன்றாகும். உலகப்பிறை என்று இக்காலத்தில் கூறுபவர்கள் கூட முந்தைய கால அறிஞர்களில் தங்களுக்குச் சாதகமாகக் கூறியவர்களின் கருத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர தங்களுக்கு எதிரான ஏராளமான அறிஞர்களின் கருத்தை மறுத்து விடுகின்றனர்.

இமாம் நவவி (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எந்தக் கருத்தைக் கூறுகிறதோ அதுதான் சரியானது என்றே இமாம் நவவி (ரஹ்) கூறியுள்ளார்கள். ஆனால் சில இமாம் நவவீ உலகப் பிறையை ஆதரித்ததாகப் பொய் கூறியுள்ளனர். இதோ இமாம் நவவி (ரஹ்) அவர்களின் கருத்தைப் பாருங்கள்.

ஒரு ஊரில் ரமளானிலே (மக்களாகிய) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டார்கள். அதனை மற்றொரு ஊரார் பார்க்கவில்லை என்றால் அந்த இரண்டு ஊர்களும் மிக நெருக்கமாக இருந்தால் அந்த இரண்டுக்குரிய சட்டமும் ஒரே ஊரைப் போன்று தான். மற்றொரு ஊராரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.

அந்த இரண்டு ஊர்களும் மிகத் தூரமானதாக இருந்தால் பிரபலமான இரண்டு வழிமுறைகள் உள்ளன.

அந்த இரண்டில் மிகச் சரியானது: (தூரமாக) உள்ள மற்றொரு ஊரார் மீது நோன்பு கடமையாகாது.  இந்த கருத்தைத் தான் நூலாசிரியரும், ஷைஹ் அபூ ஹாமித், அல்பின்தனீஜீ, இன்னும் மற்றவர்களும் உறுதிப்படுத்துகின்றனர். இன்னும் இமாம் அப்தரீ, ராஃபிஈ, இன்னும் அதிகமானவர்கள் இதைத் தான் சரியானது எனக் கூறுகின்றனர்.

இரண்டாவது கருத்து: (தூராமாக உள்ள ஊராரும்) நோன்பு நோற்பது கடமை. இதனை அஸ்ஸய்மரீ என்பவர் கூறுகிறார். இதனை காளீ அபூ தய்யிப், தாரமீ, அபூ அலீ அஸ்ஸின்ஜீ, இன்னும் மற்றவர்களும் சரியானது எனக் கூறுகின்றனர். முதல் கருத்துதான் சரியானதாகும்  (நூல்: அல்மஜ்மூஃ   பாகம்: 6 பக்கம்: 273)

அதாவது ஒரு ஊரில் பிறை பார்க்கப்பட்டால் அதனுடைய சட்டம் மிகத் தூரமாக உள்ள மற்றொரு ஊருக்குப் பொருந்தாது என்பது தான் இமாம் நவவீ அவர்களின் கருத்தாகும்.

குரைப் என்பார் அறிவிக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸிலிருந்து அனைத்து இமாம்களும் தத்தமது பகுதியில் பிறை பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

முஸ்லிமிற்கு விரிவுரை எழுதிய இமாம் நவவி (ரஹ்) கூறுவதைப் பாருங்கள்.

ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்). ஓர் ஊரில் பிறை பார்த்தால், வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.

(முஸ்லிம் 1983வது ஹதீஸின் தலைப்பு)

ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்)

(திர்மிதி 693வது ஹதீஸின் தலைப்பு)

பிறை பார்ப்பதிலே பகுதிகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கும்.

(நஸாயீ 2111 ஹதீஸின் தலைப்பு)

தாங்கள் பார்க்கும் பிறைக் கணக்கின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஊராரின் மீதும் ரமளான் நோன்பு கடமையாகும். மற்றவர்கள் பார்க்கும் பிறையின் அடிப்படையில் அல்ல என்பதற்கான ஆதாரம்.

(இப்னு குஸைமா 1916வது ஹதீஸின் தலைப்பு)

மேற்கண்ட அனைத்தும் குரைப் என்பார் அறிவிக்கும் ஹதீஸிற்கு இமாம்கள் இட்ட தலைப்புகள் ஆகும். அதாவது ஒரு ஹதீஸிலிருந்து தாங்கள் விளங்கும் கருத்தையே இமாம்கள் தலைப்பாக இடுவார்கள். எனவே மேற்கண்ட இமாம்கள் அனைவரும் உலகப் பிறை ஆதாரமற்றது என்ற கருத்தில் உள்ளவர்களே என்பது தெளிவாகிறது.

உண்மையான முஃமின்களுக்கு இறைச் செய்தி மட்டுமே போதுமானதாகும். ஆனால் தவறான கொள்கையுடைய சிலர் முந்தைய கால அறிஞர்களைக் கூறி தங்களின் தவறான கருத்தை உண்மையாக்கப் பார்ப்பதால் தான் நாம் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளோம்.

எனவே ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து அல்லது தத்தமது பகுதியில் இருந்து வரும் உறுதியான பிறைத் தகவலின் அடிப்படையில் தான் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளைத் தீர்மானிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பிறை விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு அனைத்தும் இறைவனுடைய வஹீயான குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து கூறப்படுபவையாகும். யாருடைய சொந்தக் கருத்தோ மனோ இச்சையோ அல்ல. எனவே அனைத்து விஷயங்களிலும் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக.