தலையங்கம்
அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம்
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.
அல்குர்ஆன் 9:36
மாதங்கள் பன்னிரண்டு என்று சொல்கின்ற வல்ல நாயன் அந்த மாதங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஒரேயொரு மாதத்தைத் தவிர! அந்த மாதம் புனிதமிக்க ரமளான் மாதம் தான். ரமளான் மாதத்தின் பெயரை மட்டும் அல்லாஹ் குறிப்பிடுவது ஏன்?
அந்த மாதத்தில் தான் புனிதமிகு திருக்குர்ஆனை அல்லாஹ் அருளினான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)
அல்குர்ஆன் 2:185
அருள்மிகு ரமளான் மாதத்தில் அல்குர்ஆன் இறங்கியது என்றவுடன் அடுத்து நமது உள்ளத்தில் உதிக்கின்ற கேள்வி, ரமளான் மாதத்தில் குர்ஆன் இறங்கிய அந்த நாள் எது? அதற்கும் அல்லஹ் பதில் சொல்கிறான்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் 98:1-5
வேதத்தை இறக்கிய அந்த நாளை முன்னிட்டே அந்த மாதம் முழுவதையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். ஆயினும் ரமளான் மாதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாள் எது என்பதை மட்டும் குறிப்பிடாமல் விட்டு விட்டான்.
அந்த நாளை அவன் அடையாளப்படுத்தியிருந்தால் அடியார்கள் அந்நாளில் மட்டும் வந்து தொழுது, அதை அமர்க்களப்படுத்தி விட்டு மற்ற நாட்களை அலட்சியப்படுத்தி விடுவார்கள்.
பத்து இரவுகளில் ஓர் இரவுக்குள் அந்த லைலத்துல் கத்ரைப் பொத்திப் பொதிந்து வைத்து, அந்தப் பத்து இரவுகளுக்கும் ஒரு மகத்துவத்தை வழங்குகிறான்.
தன் அடியார்கள் அந்த ஓர் இரவின் நன்மையை மட்டும் பெற்றுச் சென்று விடாமல் மீதி ஒன்பது இரவுகளிலும் வணங்கி அந்த இரவுகளின் நன்மைகளையும் அல்லாஹ் பெறச் செய்கிறான்.
இப்படி ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளையும் கிளைமாக்ஸாக, அதாவது நன்மைகளைப் பெறுகின்ற உச்சக்கட்டமாக ஆக்கியிருக்கின்றான்.
இவ்வளவு சிறப்பும் அருள்மிகு குர்ஆன் இறங்கியதற்காகத் தான்.
சுவனத்தின் வாசல்களைத் திறந்து வைத்து, நரகத்தின் வாசல்களை மூடி, ஷைத்தான்களுக்கு விலங்கிட்டு, குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தைக் கண்ணியப்படுத்துகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1899
ரமளான் வந்ததைப் பயன்படுத்தித் தன் அடியான் சுவனவாசியாகி விட வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்கின்றான்.
இம்மாபெரும் ரமளானை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் ஷஅபானிலேயே ஆயத்தமாகி விடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறெந்த மாதத்திலும் மேற்கொள்ளாத கவனத்தை ஷஅபான் மாதத்தில் மேற்கொள்வார்கள். பிறகு ரமளான் பிறை பார்த்து நோன்பு நோற்பார்கள். (பிறை தென்படாது) மேக மூட்டமாக இருந்தால் (அம்மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டு (அதற்கு மறுநாள்) நோன்பு நோற்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 1980
இந்த அடிப்படையில் நாமும் ரமளானுக்கு ஆயத்தமாக வேண்டும். ரமளானை அடைவதற்காக நாம் முன்கூட்டியே திட்டம் தீட்டிக் கொள்ள வேண்டும்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடைவதற்காக அது அடங்கியுள்ள ரமளானின் பிந்திய பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக நமது பணிகளை ஓரம் கட்டி விட்டு, இந்தப் பத்து நாட்களையும் மறுமைக்காக ஒதுக்க வேண்டும்.
காரணம், நம்முடைய வாழ்க்கையின் மொத்தப் பகுதியையும் உலகமே ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இதில் மறுமைக்குக் கிடைப்பது அதன் ஓரம் தான்.
ரமளானின் பிந்திய பத்துக்களில் தான் ஒட்டு மொத்த ஈடேற்றம் அமைந்திருக்கின்றது. அந்தப் பிந்திய பத்து நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கி உலகம் நம்மை ஓய்த்து விடுகின்றது.
இதற்காக உலகத்தையும் மறந்து விடாமல், மறுமையையும் இழந்து விடாதவாறு முற்கூட்டியே திட்டம் தீட்டி ரமளானை அடைவோமாக! ரம்மியமிகு இனிய சுவனத்திற்குள் நுழைவோமாக!
————————————————————————————————————————————————
இரவுத் தொழுகையின் சட்டங்கள்
அப்துந் நாஸிர்
பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமளான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமளான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்கு, “தராவீஹ்’ என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கையில் தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1340
இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ 7452
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 428
நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ 183
நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ 996
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
“ரமளானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும், ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா, நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 183, முஸ்லிம் 1400
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1138, முஸ்லிம் 1402
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 1341
4+5 ரக்அத்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து “சின்னப் பையன் தூங்கிவிட்டானோ?” என்று அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு ரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். பிறது (சுபுஹு) தொழுகைக்கு புறப்பட்டார்கள்.
நூல்: புகாரி 117
9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: புகாரீ 1139
5 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
3 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
1 ரக்அத்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
வித்ர் தொழும் முறை
நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ 1698
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1699
… நபி (ஸல்) அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1700
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மிகச் சிறந்ததாகும். ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது பள்ளிவாசலில் தான் என அவசியமில்லை. வீட்டிலும் ஜமாஅத்தாகத் தொழுது கொள்ளலாம். நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்கு மிகப் பெரும் சிறப்பைக் கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இரவுத் தொழுகையை இமாம் முடிக்கின்றவரை அவரோடு நின்று தொழுகின்றாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று தொழுத நன்மை எழுதப்படுகின்றது.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: திர்மிதி 734
நபியவர்கள் சில நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது விட்டு பிறகு நிறுத்தி விட்டார்கள். இதற்கான காரணம் ஜமாஅத்தாகத் தொழக் கூடாது என்பதல்ல. ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது என்று சொன்னால் நபியவர்கள் மேற்கண்ட சிறப்பைக் கூறியிருக்க மாட்டார்கள்.
இரவுத் தொழுகை மக்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினால் தான் நபியவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை தவிர்த்தார்கள். நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு யாரும் அவ்வாறு கடமையாக ஆக்கிவிட முடியாது. அப்படிக் கடமை எனக் கருதி யாரும் தொழுவதுமில்லை. விரும்பியவர்கள் இமாம் ஜமாஅத்தோடு சேர்ந்து சில ரக்அத்துகள் தொழுது விட்டுப் பள்ளிவாசலில் தொழாமல் அமர்ந்திருப்பதையும் நாம் சர்வ சாதாரணமாகக் கண்டு வருகிறோம். இதனை விளங்காத சிலர் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதை எதிர்க்கின்றனர்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவிற்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன் பின் நபி (ஸல்) அவர்கள் (தொழ) வராமல் உட்கார்ந்து விட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். “இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். (அதனாலேயே வரவில்லை)” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 729
மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழாததற்கான காரணத்தைத் தெளிவாகக் கூறுகிறார்கள். எனவே நபியவர்களின் காலத்தோடு அந்தப் பயம் நீங்கி விட்ட காரணத்தினால் இன்று ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறேதுமில்லை.
வீட்டில் தொழுவதே மிகச் சிறந்தது
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து “உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி), நூல்: புகாரி 731
இரவுத் தொழுகை தவறி விட்டால்…
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்: முஸ்லிம் 1358
இரவுத் தொழுகையின் எண்ணிக்கையில் ஏன் குழப்புகிறீர்கள்?
நீங்கள் ஏன் ஒவ்வொரு வருடமும் புதிய புதிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள்? இதற்கு முன்பு வரை 11 ரக்அத்துக்கு மேல் இரவுத் தொழுகை கிடையாது என்ற நீங்கள் தற்போது 13 தொழலாம் என்று கூறுகிறீர்களே? ஏன் இந்தக் குழப்பம்? இது சரி தானா? இவ்வாறு கூறினாôல் மக்கள் கேலி செய்ய மாட்டார்களா? என்று சிலர் கேட்கின்றனர்.
நடைமுறையில் இரவுத் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று வரையறை செய்து நடைமுறைபடுத்தி வந்ததால், அதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இல்லை என்றும், நபிகளார் பெரும்பான்மையாகத் தொழுதது 8+3 என்றும் நாம் கூறி வருகிறோம். மேலும் அந்த ஹதீஸில் 8+3 ரக்அத்துக்கு மேல் நபி (ஸல்) அவர்கள் அதிகப்படுத்தியதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதால் 8+3 தவிர வேறு எண்ணிக்கை இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர நாம் அவ்வாறு கூறவில்லை.
நாம் ஆரம்ப காலத்திலும் 13 ரக்அத்கள் தொழலாம் என்றே கூறியுள்ளோம். (பார்க்க: 1990 ஜனவரியில் நாம் வெளியிட்ட “தொழுகை’ என்ற புத்தகம், பக்கம்: 219, 220)
நாம் ஏற்கனவே அந்தக் கருத்தைக் கூறியிருக்காவிட்டாலும் ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போது நமக்குக் கிடைக்கும் விஷயங்களை மக்களுக்குக் கூறுவது தான் இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். நாம் முன்னால் ஒன்று கூறி விட்டோமே! இப்போது அதற்கு மாற்றமாக அமைந்து விடுமே! என்று சொல்லாமல் இருப்பது, மார்க்கத்தை மறைப்பதாகும்; இறையச்சத்திற்கு எதிரானதாகும்.
எனவே நம்மை யார் கேலி செய்தாலும், எப்படி விமர்சனம் செய்தாலும் சத்தியத்தைச் சொல்வதற்கு ஒரு போதும் தயங்க மாட்டோம்.
இரவுத் தொழுகை 20 ரக்அத்களா?
இரவுத் தொழுகை, அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் தொழுகை 20 ரக்அத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் ஜமாஅத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: பைஹகீ 4391
இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்பு படுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.
அடுத்ததாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் உமர் (ரலி) அவர்கள் தொடர்புடையதாகும்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார்.
நூல்: முஅத்தா 233
இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள் யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்கவில்லை என்று தனது அல்மஃரிஃபா என்ற நூலில் குறிப்பிடுவதாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
நூல்: நஸபுர் ராயா, பாகம்: 2, பக்கம்: 154
உமர் (ரலி) காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்? எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகிறது,
மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ (ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத், நூல்: முஅத்தா 232
உமர் (ரலி) காலத்தில் மக்கள் தொழுதார்கள், உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற இரண்டு செய்திகளில் உமர் (ரலி) அவர்கள் எதில் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்?
மக்கள் செய்தார்கள் என்பதில் உமர் (ரலி) அவர்களுக்கு எங்கே தொடர்பு உள்ளது? உமர் (ரலி) அவர்கள் 8+3 தொழுமாறு கட்டளையிட்டார்கள் என்பதில் தான் நேரடியான தெளிவான தொடர்பு உள்ளது என்பதோடு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் ஒத்துப் போகிறது. எனவே இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸ்களும் இல்லை என்பதே சரியானதாகும்.
இஸ்லாத்தின் தூணாக விளங்கக்கூடிய மக்காவில் தராவீஹ் 20 ரக்அத்கள் தான் தொழுகிறார்கள்; இதை ஏன் நாம் பின்பற்றக் கூடாது என்று கேட்கின்றனர்.
மக்காவிலுள்ள கஅபத்துல்லாஹ்வில் தான் எண்ணற்ற சிலைகள் இருந்தன. அல்லாஹ்வை வணங்குவதற்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாக அது இருந்தும் சிலை வணக்கத்தை நபிகளார் ஆதரிக்கவில்லை. மாறாகக் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் படைத்தவனின் கட்டளைக்கு அது மாற்றமாக இருந்ததால்! எனவே நம்மைப் படைத்த இறைவன் என்ன கட்டளையிட்டுள்ளான் என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.
மேலும் இன்றளவும் கஅபாவில் சில விஷயங்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை அங்குள்ள சில உலமாக்கள் எதிர்த்துக் கொண்டும் உள்ளனர்.
மேலும் சவூதியில் உள்ள பல உலமாக்கள் இரவுத் தொழுகையை நாம் கூறி வரும் அடிப்படையில் தான் நடைமுறைப்படுத்துகின்றனர்.
எனவே கஅபாவில் இரவுத் தொழுகை இருபது ரக்அத்கள் நடத்தி வருவதற்கு நபி வழியில் எந்தச் சான்றும் இல்லை. இவ்வாறு அங்கு நடைபெற்று வருவதற்கு ஆட்சியாளர்களும், அதைக் கண்டிக்காத அங்குள்ள உலமாக்களும் தான் பொறுப்பாவார்கள்.
தராவீஹ் தொழுகையும் இரவுத் தொழுகையும் வேறு வேறா?
ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் இஷாவிற்குப் பிறகு ஃபஜ்ர் தொழுகை வரை உள்ள இடைப்பட்ட நேரத்தில் தொழுகின்ற தொழுகை இரவுத் தொழுகையாகும். ரமளான் மாதத்திற்கென்று பிரத்தியேகமாக எந்தத் தொழுகையும் கிடையாது. ஆனால் நபியவர்கள் ரமளான் மாதத்தின் இரவுகளில் இதனைத் தொழுவதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) முன்னேரத்தில் ஒரு தொழுகையும் பின்னேரத்தில் ஒரு தொழுகையும் தொழுதுள்ளனர்; எனவே தராவீஹ் என்பது வேறு, தஹஜ்ஜுத் என்பது வேறு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான கருத்து என்பதைப் பின்வரக் கூடிய ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத் தான் பல நிலைகளில் தொழ வைத்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அல்அத்தமா என மக்கள் அழைக்கும் இஷா தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையிலிருந்து பஜ்ர் வரையிலும் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்று அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகை என்றால் தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
இந்தச் செய்தி, நபி(ஸல்) அவர்கள் இரவில் தொழுதது பல பெயர்களில் உள்ள ஒரே தொழுகையைத் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
————————————————————————————————————————————————
கேள்வி பதில்
? நான் சில துஆக்களை ஓதி வருகின்றேன். அந்த துஆக்களில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் சொல் எதுவும் இல்லை. இது போன்ற துஆக்களை ஓதி வரலாமா? விளக்கம் தரவும்.
எம். சமீர் ரஹ்மான், திருமுல்லைவாசல்
நம்முடைய தேவைகளைக் கேட்கும் பிரார்த்தனைகளைப் பொறுத்த வரை குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு தான் கேட்க வேண்டும் என்பதில்லை. நமக்குத் தெரிந்த மொழியில், தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு கேட்கலாம். இதற்கு மார்க்கத்தில் வரையறை எதுவும் இல்லை.
ஆயினும் சில குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்திப்பதை நன்மை என்று கருதியோ, அல்லது இன்ன தேவை நிறைவேற இந்தப் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று எண்ணியோ பிரார்த்திப்பதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ கற்றுத் தந்திருக்க வேண்டும்.
இந்தப் பெரியார் கற்றுத் தந்தார்; அந்த ஷைகு கற்றுத் தந்தார்; இதைச் செய்தால் கடன் தொல்லை நீங்கும், நோய் நிவாரணம் கிடைக்கும் என்றெல்லாம் பல்வேறு பிரார்த்தனைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
இந்தப் பிரார்த்தனைகளில் இணை வைக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லாவிட்டாலும் இவற்றை ஓதக் கூடாது. ஏனெனில் மார்க்க விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியது. அவர்கள் கற்றுத் தராத ஒன்றை மார்க்கம் என்று கருதிச் செய்வது தான் “பித்அத்’ ஆகும்.
“நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “யா அல்லாஹ்! நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கின்றேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன்‘ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகி விடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உனது (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது “நீ அனுப்பிய உனது நபியையும் நம்பினேன்‘ என்று சொல்வதற்குப் பதிலாக “உனது ரசூலையும் நம்பினேன்‘ என்று கூறி விட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள், “இல்லை. “நீ அனுப்பிய உனது நபியை நம்பினேன்‘ என்று கூறுவீராக” என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: பராஃ இப்னு ஆஸிப் (ரலி)
நூல்: புகாரி 247
இந்த ஹதீஸில், “நபிய்யிக்க’ என்பதற்குப் பதிலாக ‘ரசூலிக்க’ என்று நபித்தோழர் கூறி விட்டார். இரண்டும் ஒரே கருத்தைத் தரக் கூடிய சொல்லாக இருந்தாலும், நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததற்கு மாற்றமாகச் சொல்வதை அவர்கள் அங்கீகரிக்கவில்லை.
நமது தேவைகளைக் கேட்கும் பிரார்த்தனைகளைத் தவிர இதர பிரார்த்தனைகளை, குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்டு சுயமாக உருவாக்கவோ, அல்லது மற்றவர்கள் உருவாக்கியதை நன்மை நாடிச் செய்யவோ மார்க்கத்தில் அனுமதியில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
? திருமறையின் 46:15 வசனத்தில், 40 வயதை அடைந்ததும் ஒருவர் செய்யும் துஆவைப் பற்றியும், முஸ்லிமாக இருப்பது பற்றியும் இறைவன் குறிப்பிடுகின்றான். இந்த வசனத்திற்கு விளக்கம் அளிக்கும் ஒருவர், “நாற்பது வயதைக் கடந்து மரணிக்கும் ஒருவருக்குத் தான் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு. அதற்கு முன் மரணிப்பவர்கள் அனைவரும் சுவனம் செல்வர். இதைத் தான் இந்த வசனம் கூறுகின்றது” என்று கூறுகின்றார். இதற்கு விளக்கம் என்ன?
முஹம்மது உவைஸ், ஏர்வாடி
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது “என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறுகிறான்.
அல்குர்ஆன் 46:15
நாற்பது வயது வரை மனிதன் மீது எந்தக் கடமையும் கிடையாது; நாற்பது வயது வரை மனிதன் எப்படி வாழ்ந்தாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று இந்த வசனம் கூறுவதாகச் சில அறிவீனர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த வசனம் அந்தக் கருத்தைத் தரவில்லை. நன்மை, தீமைகள் இந்த வயதிலிருந்து பதியப்படுகின்றன என்பது பற்றி இந்த வசனத்தில் எந்தக் குறிப்பும் இல்லை.
பருவ வயதை அடையும் வரை குழந்தைகளுக்குப் பாவங்கள் பதியப்படுவதில்லை; ஒருவன் பருவ வயதை அடைந்து விட்டால் அவன் செய்யும் நன்மை, தீமைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அதற்காக அவனுக்குக் கூலி வழங்கப்படும். இது தான் இஸ்லாமிய அடிப்படையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரை விட்டு எழுதுகோல் உயர்த்தப் பட்டு விட்டது.
- தூங்குபவர் விழிக்கின்ற வரை. 2. சிறுவன் பெரியவராகும் வரை. 3. பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: நஸயீ 3378, அபூதாவூத் 3822, இப்னுமாஜா 2031
அப்படியானால், “நாற்பது வயதை அடையும் போது” என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்படுவது ஏன்? என்ற கேள்வி எழலாம்.
பொதுவாக மனிதன் பருவம் அடையும் போது பெற்றோரின் மகத்துவத்தை உணராதவனாக இருக்கிறான். தாய் அவனைக் கஷ்டப்பட்டு சுமந்ததையும், பெற்றதையும் கூட அவன் நினைப்பதில்லை.
அவனுக்குத் திருமணம் ஆகும் போது பெற்றோர் மேலும் தேவையற்றவர்களாக மனிதனுக்குத் தோன்றுகிறார்கள். உடல் சுகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பெற்றோரை அவன் உதாசீனம் செய்கிறான். அவனுக்கு ஒரு குழந்தை அல்லது பல குழந்தைகள் பிறக்கின்றன. அப்போதாவது பெற்றோரின் மதிப்பை உணர்கின்றானா என்றால் அதுவுமில்லை.
அவன் பெற்ற பிள்ளை பருவ வயதை அடைந்து அவனையே எதிர்த்துப் பேசும் போது தான் பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. நாம் நமது தந்தையை நடத்தியது போலவே நமது மகன் நம்மை நடத்த ஆரம்பித்து விட்டானே என்று அதிர்ச்சியடைந்து காலம் கடந்து பெற்றோரின் மதிப்பை உணர்கிறான்.
இந்த நிலையை சராசரியாக மனிதன் நாற்பது வயதில் அடைகிறான். இருபது வயதில் அவன் திருமணம் செய்திருந்தால் தனது நாற்பதாவது வயதில் 20 வயது மகனைப் பெறுகிறான். 25 வயதில் தாமதமாகத் திருமணம் செய்தால் கூட நாற்பதாவது வயதில் 15 வயது மகனைப் பெற்றிருப்பான்.
தனது பிள்ளை தன்னை உதாசீனம் செய்யும் போது தான் தந்தையின் மதிப்பை மனிதன் உணர்கிறான். இதற்கு இவ்வளவு காலம் மனிதனுக்குத் தேவைப்படுகிறது.
* பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு கட்டளை!
* கருவில் சுமந்த போது, தாய் பட்ட கஷ்டம்!
* பெற்றெடுக்கும் போது அவள் படுகின்ற சிரமம்!
இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டிய பின் “நாற்பது வயதை அடையும் போது” என்று கூறுவதிலிலிருந்து அறிவுடைய யாரும் இதை அறியலாம்.
“என் பிள்ளைகளை எனக்கேற்றவாறு ஆக்கு” என்று நாற்பது வயதில் மனிதன் வேண்டுவதாகவும் இவ்வசனம் கூறுகிறது. பிள்ளை பெற்று அவன் பருவ வயதை அடையும் போது தான் மனிதன் தனது பெற்றோரை நினைத்துப் பார்க்கிறான் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.
“நான் பெற்றோரை மதிக்காதது போல என் பிள்ளைகள் என்னை மதிக்காதவாறு செய்திடாதே! நான் நல்ல முஸ்லிமாக நடந்து கொள்கிறேன்” எனக் கூறித் திருந்துகிறான்.
இவ்வசனத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை கவனமாக வாசித்தால் நாற்பது வயதை அடையும் போது பெற்றோரின் மகிமையை மனிதன் உணர்கிறான் என்பது தான் கூறப்படுகிறதே தவிர, நாற்பது வயது வரை ஆட்டம் போட எந்த அனுமதியும் இவ்வசனத்தில் இல்லை.
உடல் முறுக்குடன் மனிதன் இருக்கும் போது தான் அவனை நெறிப்படுத்திட ஒரு வாழ்க்கைத் திட்டம் தேவைப்படுகிறது. உடல் தளர்ந்த பின் பல தீமைகளைச் செய்வதற்குரிய வலுவை உடல் தானாக இழந்து விடும்.
நாற்பது வயது வரை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை உலகில் உள்ள அனைவரும் கடைப்பிடித்தால் என்னவாகும் எனக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் கூட இது எந்த அளவு ஆபத்தான கருத்து என்பதை உணர்வார்கள்.
இந்த வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் மனைவி, மக்கள் இதைச் செயல்படுத்த அனுமதிப்பார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும். நாற்பது வயதை அடையாத தனது மனைவி அடுத்த ஆணுடன் இருக்கலாம்; அல்லது தனது மகள், பிற ஆண்களுடன் ஊர் சுற்றலாம் என்று இவர்கள் அனுமதிப்பதில்லை. இதிலிருந்து இவர்கள் தங்கள் மனோ இச்சைக்காக, தாங்கள் செய்யும் குற்றச் செயல்களை நியாயப்படுத்துவதற்காக மார்க்கத்தை வளைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
? மனித உடலில் 360 எலும்புகள் இணையப் பெற்றுள்ளன. ஒவ்வோர் இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமாகும் என்று நபிகள் நாயகம் கூறியதாக ஒரு நாளிதழில் வெளியானது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸா?
சி. அஹ்மது நைனா, நாகூர்
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தான். முஸ்னத் அஹ்மத் என்ற நூலில் இது இடம் பெற்றுள்ளது.
“மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத் 21959
? சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறும் முறைக்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா? முந்தைய காலத்தில் தாய் அல்லாத மற்ற பெண் மூலம் குழந்தைக்குப் பால் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. பால் கொடுப்பதன் மூலம் அந்தப் பெண் தாய் அந்தஸ்தை அடைந்தாலும், தந்தைக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த உறவும் ஏற்படுவதில்லை. பால்குடி முறையும், சோதனைக் குழாய் முறையும் ஒன்று போல் தோன்றுகின்றதே! விளக்கவும்.
நிஸார் அஹ்மத், மங்கலம் பேட்டை
சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. கணவனின் உயிரணுவை எடுத்து, செயற்கை முறையில் மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்த்து அதை மனைவியின் கருவறையில் செலுத்துவது ஒரு முறையாகும்.
ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் அல்லாத வேறொரு ஆணிடமிருந்து உயிரணுவை எடுத்து அதனுடன் அவளது கரு முட்டையைச் சேர்த்து குழந்தை பெற வைப்பது மற்றொரு முறையாகும்.
கணவன், மனைவி ஆகிய இருவரும் அல்லாத வேறு ஆண், பெண்ணிடமிருந்து உயிரணு, கரு முட்டையை எடுத்து அதை குழந்தையில்லாத பெண்ணின் கருவில் வளர்ப்பது மூன்றாவது வழிமுறையாகும். இவற்றில் முதலாவது வழிமுறைக்கு மட்டுமே மார்க்கத்தில் அனுமதி உள்ளது.
உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!
அல்குர்ஆன் 2:223
“உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள்” என்ற சொற்றொடர் மூலம் கணவனின் உயிரணுவை எடுத்து செயற்கை முறையில் மனைவிக்குச் செலுத்தலாம் என்றும், கணவன் அல்லாத மற்றவர்களின் உயிரணுவை எடுத்து இவ்வாறு செய்வது கூடாது என்றும் விளங்கலாம்.
பால்குடித் தாய் முறை என்பது மார்க்கம் அனுமதித்த ஒன்றாகும். கருவறையில் அடுத்த ஆணின் கருவைச் சுமப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கவில்லை. எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து மார்க்கச் சட்டத்தைத் தீர்மானிக்கக்கூடாது.
?இஸ்லாமிய ஆட்சி தான் முஸ்லிம்களின் இலட்சியமா?
கிலாஃபத் – உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி என்ற கருத்து தற்போது பரப்பப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தையுடையவர்களின் வாதங்கள்:
கிலாஃபத் என்பது இல்லாமல் இஸ்லாம் என்பதே இல்லை. இந்த இலக்கைக் கொண்டு தான் நுபுவ்வத் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் சென்றதும் இதற்காகத் தான்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். அப்போது தான் மது விலக்கு போன்ற கொள்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடிந்தது. எனவே இஸ்லாமிய ஆட்சி இல்லாமல் இஸ்லாம் முழுமையாக நடைமுறைக்கு வராது.
எதிர்காலத்தில் மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றும் போது இஸ்லாமிய ஆட்சிக்காக பைஅத் செய்ய வேண்டும். அந்த கிலாஃபத்தை உருவாக்க இப்போதே முயற்சி செய்வது நமது கடமையாகும். மஹ்தீ தொடர்பான நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும், 24:55 வசனமும் கிலாஃபத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது.
இவ்வாறு இவர்கள் வாதிடுகின்றனர். இந்தப் பிரச்சாரம் செய்பவர்களிடம் பைஅத் பெறும் முறை உள்ளது.
இது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை ஏகத்துவத்தில் கேள்வி பதில் பகுதியிலோ அல்லது தனிக் கட்டுரையாகவோ விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எம். முஹம்மது ஹுசைன், ராயபுரம், சென்னை
இஸ்லாமிய ஆட்சியை, கிலாஃபத்தை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்று திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ எந்த இடத்திலும் கூறப்படவேயில்லை. இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தும் இலக்கைக் கொண்டே நுபுவ்வத் – நபித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவது இறைவன் மீது இட்டுக்கட்டிக் கூறும் மாபாதகச் செயலாகும்.
இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் நோக்கம் என்றால் எல்லா இறைத் தூதர்களும் மன்னர்களாகவே இருந்திருக்க வேண்டும். நபிமார்களின் வரலாறுகளை எடுத்துப் பார்த்தால், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான நபிமார்களுக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்படவில்லை. பல நபிமார்கள் கொல்லப்பட்டுள்ளனர். திருக்குர்ஆனில் 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70 ஆகிய வசனங்கள் இறைத்தூதர்கள் கொலை செய்யப்பட்டதைக் குறிப்பிடுகின்றன.
தாவூத் நபியவர்கள் தாலூத் என்ற மன்னரின் படையில் போர் வீரராக இருந்துள்ளார்கள்.
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? “எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்” என்று தமது நபியிடம் கூறினர். “உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?” என்று அவர் கேட்டார். “எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப் பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?” என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி இழைத்தோரை அல்லாஹ் அறிந்தவன்.
“தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்” என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். “எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை” என்று அவர்கள் கூறினர். “உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடலை (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 2:246, 247
நபி யூசுப் (அலை) அவர்கள், இஸ்லாமிய ஆட்சியல்லாத ஓர் ஆட்சியின் கீழ் அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார்கள். அந்த ஆட்சியின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளார்கள்.
“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! அவரை எனக்காகத் தேர்வு செய்கிறேன்” என்று மன்னர் கூறினார். அவரிடம் மன்னர் பேசிய போது “இன்றைய தினம் நீர் நம்மிடத்தில் நிலையான இடம் பெற்றவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர்” என்றார். “இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள்! நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்” என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 12:55
எனவே, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தான் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள் என்று கூறுவது திருக்குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். இறைத் தூதர்களின் பணி என்னவென்று திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
“என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!” என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை.
அல்குர்ஆன் 21:25
எடுத்துச் சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை.
அல்குர்ஆன் 5:99
தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர்களுக்கு வேறு எதுவும் உள்ளதா?
அல்குர்ஆன் 16:35
இதே கருத்து 16:82, 24:54, 29:18, 36:18, 64:12 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.
ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்வது தான் இறைத்தூதர்களின் பணியாக இருந்துள்ளது; இதைத் தவிர வேறு கடமை அவர்களுக்கு இல்லை என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
இவ்வளவு தெளிவாகத் திருக்குர்ஆன் பிரகடனம் செய்யும் போது, இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் இறைத் தூதர்களின் கடமை என்று ஒருவர் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுகிறார் என்று தான் அர்த்தம்.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.
அல்குர்ஆன் 6:21
நபி (ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில், இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காகத் தாம் அனுப்பப்பட்டதாக எந்தவொரு கட்டத்திலும் குறிப்பிட்டதே இல்லை. குறைந்தபட்சம் மக்காவில் 13 ஆண்டு காலம் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதாவது, “இஸ்லாமிய ஆட்சியே எனது குறிக்கோள்” என்று பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்காவில் தங்களுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து, நபித்தோழர்கள் வந்து முறையிட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்ந்து கொண்டிருந்த போது அவர்களிடம் (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) முறையிட்டபடி “எங்களுக்காக (அல்லாஹ்விடம்) நீங்கள் உதவி கோர மாட்டீர்களா? எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா?” என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள், “உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஏகத்துவக் கொள்கையை ஏற்று இறைத்தூதரின் மீது நம்பிக்கை கொண்ட) ஒரு மனிதருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்பட ரம்பம் கொண்டு வரப்பட்டு, அவரது தலை மீது வைக்கப்பட்டு அது கூறுகளாகப் பிளக்கப்படும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
(பழுக்கச் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட அது அவரது இறைச்சியையும் கடந்து சென்று அதன் கீழுள்ள எலும்பையும், நரம்பையும் சென்றடைந்து விடும். அதுவும் கூட அவரை அவரது மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படும். எந்த அளவிற்கென்றால் வாகனத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனில் உள்ள) “ஸன்ஆ” விலிருந்து “ஹளர மவ்த்” வரை பயணம் செய்து செல்வார். (வழியில்) அல்லாஹ்வைத் தவிர அல்லது தன் ஆட்டின் விஷயத்தில் ஓநாயைத் தவிர வேறெவருக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஆயினும் நீங்கள் தான் (பொறுமையின்றி) அவரசப்படுகிறீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கப்பாப் இப்னு அல் அரத் (ரலி)
நூல்: புகாரி 3612, 3852
நபித்தோழர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பத்தைப் பற்றிக் கூறும் போது, “இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவதே என் லட்சியம்; உடனே எதிரிகளை வீழ்த்தப் புறப்படுங்கள்” என்று நபியவர்கள் கூறவில்லை. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டால் சோதனைகள் வரத் தான் செய்யும்; பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதே சமயம் இஸ்லாம் வெற்றியடையும் என்றும் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.
அல்குர்ஆன் 24:55
இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது தான் முஸ்லிம்களின் இலட்சியம் என்பதற்கு இந்த வசனத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
நபி (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் பெறப் போகும் வெற்றி குறித்து அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதியைப் பற்றியே இந்த வசனம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் போருக்கு அழைக்கும் போது நயவஞ்சகர்கள் புறக்கணிப்பது பற்றிய செய்தியைக் கூறி விட்டு, அதன் பிறகு தான் மேற்கண்ட செய்தி கூறப்படுகின்றது. இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால் இதை விளங்கிக் கொள்ள முடியும்.
(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்கின்றனர். “சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்” என்று கூறுவீராக!
“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.
அல்குர்ஆன் 24:53, 54
24:55 வசனத்தில் கூறப்பட்டுள்ளது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்று ஒரு வாதத்திற்குக் கூறினாலும் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவது முஸ்லிம்களின் கடமை என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ள எந்தச் சான்றும் இதில் இல்லை.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்குப் பூமியில் அதிகாரம் வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான் என்று இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி, அதைப் பிற மக்களுக்கும் எடுத்துரைத்து, அதில் ஏற்படும் சோதனைகளுக்குப் பொறுமை காக்கும் போது, இஸ்லாமிய ஆட்சியை இறைவன் நமக்கு வழங்கலாம். அவ்வாறு தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியதிகாரத்தை வழங்கினான். இஸ்லாமிய ஆட்சி தான் இலக்கு என்று மேற்கண்ட வசனம் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களும் ஒரு போதும் அவ்வாறு கூறவில்லை. அதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும் இல்லை. மேலே எடுத்துக் காட்டியுள்ள புகாரி 3612 ஹதீஸ் இதைத் தான் கூறுகின்றது.
எனவே இஸ்லாமிய ஆட்சி கோஷத்திற்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வாதம் புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்வதையும், ஒற்றுமை ஒன்றையே மையமாக வைத்துப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்கிறோம்.
சமாதி வழிபாட்டையும், மத்ஹபுகளையும் கண்டித்துப் பேச வேண்டும் என்றால் இவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டும் பிரச்சாரம் செய்தால் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, அதன் பிறகு ஒரு ஆட்சி ஏற்படுத்தப்பட்டாலும் அது எப்படி இஸ்லாமிய ஆட்சியாக இருக்க முடியும்?
இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடியும்; அதனால் தான் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம் என்ற வாதத்தையும் முன் வைக்கின்றனர். இதுவும் அபத்தமான வாதமாகும். இஸ்லாமிய ஆட்சி இல்லாத இந்தியாவில் நமக்கு உள்ள பிரச்சார உரிமை, வணக்க வழிபாட்டு உரிமைகள் கூட இஸ்லாமிய ஆட்சி உள்ளதாகக் கூறும் நாடுகளில் வழங்கப்படுவதில்லை.
நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் நடைபெற்ற போர்களில் ஏராளமான நபித்தோழர்கள், முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எல்லாமே இஸ்லாமிய ஆட்சியை மையமாக வைத்துத் தான் என்பதையும் மறந்து விடக் கூடாது.
மஹ்தீ (அலை) அவர்கள் தோன்றுவார்கள், இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்று முன்னறிவிப்புக்கள் இருப்பது உண்மை தான். ஆனால் மஹ்தீ (அலை) அவர்கள் தான் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அந்த ஆட்சியை உருவாக்குவதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும் என்று கூறப்படவில்லை. நாம் உருவாக்கி வைத்த அடித்தளத்தில் தான் மஹ்தீ (அலை) அவர்கள் ஆட்சியமைப்பார்கள் என்று கூறுவது பைத்தியக்காரத் தனத்தின் உச்சக்கட்டமாகும்.
இந்த வாதத்தை முன் வைக்கும் கூட்டத்தினர் பைஅத் பெறுவதை வலியுறுத்துகின்றனர். “பைஅத்’ எனும் உறுதி மொழி எடுத்த பிறகு, யாரிடத்தில் அந்த உறுதி மொழி எடுக்கிறார்களோ அவரைக் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் எனவும் மூளைச் சலவை செய்கின்றனர். ஆனால் இவர்கள் கூறும் இந்த பைஅத்திற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.
அல்குர்ஆன் 48:10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் “பைஅத்’ செய்திருப்பதால் எங்களிடமும் “பைஅத்’ செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.
ஆனால் இவ்வசனத்தில் இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்று தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. “உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தவர்கள் அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுக்கிறார்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபிகள் நாயகத்திடம் எடுக்கும் உறுதி மொழி அல்லாஹ்விடம் எடுக்கும் உறுதி மொழியாகும் என்று கூறுவதிலிலிருந்து இது நபிகள் நாயகத்திற்கு மட்டும் உள்ள சிறப்புத் தகுதி என்பதை விளங்கலாம்.
இது போல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் “பைஅத்’ எனும் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம் என்றெல்லாம் பல்வேறு கட்டங்களில் நபிகள் நாயகத்திடம் நபித் தோழர்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 60:12)
இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டவை. தூதரிடத்தில் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் எடுக்கின்ற உறுதி மொழி தான்.
இத்தகைய உறுதி மொழிகளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு தலைசிறந்து விளங்கிய பெரிய பெரிய நபித் தோழர்களிடம் மற்றவர்கள் வந்து எடுக்கவே இல்லை.
அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலிலீ (ரலி) ஆகியோரிடம் வந்து “திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்” என்றெல்லாம் எந்த நபித் தோழரும் பைஅத் எடுக்கவில்லை.
இறைவனிடம் செய்கின்ற உறுதி மொழியை இறைத் தூதரிடம் செய்யலாம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திடம் பைஅத் செய்தார்கள்.
எனவே “நான் மார்க்க விஷயத்தில் சரியாக நடந்து கொள்வேன்” என்று நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எந்த மனிதரிடமும் உறுதி மொழி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாத்திற்கு எதிரான, நபிகள் நாயகத்தை இழிவு படுத்துகின்ற, தங்களையும் இறைத் தூதர்களாகக் கருதிக் கொள்கின்ற வழிகேடர்களின் வழி முறையாகும்.
நபிகள் நாயகம் தவிர மற்றவர்களிடம் உறுதி மொழி எடுப்பதென்று சொன்னால் அது இரண்டு விஷயங்களில் எடுக்கலாம்.
ஒருவர் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கும் போது, “உங்களை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்கிறோம்’ என்று மக்கள் உறுதி மொழி கொடுக்கின்ற பைஅத். இதற்கு அனுமதி உண்டு.
இந்த உறுதி மொழியை நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு அபூபக்கரிடம் மக்கள் செய்தார்கள். அவர்களின் மரணத்திற்குப் பிறகு உமரிடம் செய்தார்கள்.
இப்படி முழு அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் மட்டும் இவ்வாறு பைஅத் எடுப்பதற்கு அனுமதி இருக்கிறது. இது மார்க்கக் காரியங்களை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற பைஅத் அல்ல.
இவ்வுலகில் நடக்கும் கொடுக்கல் வாங்கலின் போது சம்பந்தப்பட்டவர் களிடம் செய்து கொள்ளும் உறுதிமொழி அனுமதிக்கப்பட்ட மற்றொரு பைஅத் ஆகும்.
எனக்குச் சொந்தமான இந்த வீட்டை உமக்கு நான் விற்கிறேன் என்று விற்பவரும், வாங்குபவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழி – பைஅத் – எடுக்கலாம். தனக்குச் சொந்தமான ஒரு உடமை விஷயத்தில் ஒருவர் உறுதிமொழி எடுப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.
வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்தமானவை. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும் தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்து விட வேண்டும்.
அல்லாஹ்வுக்குச் சொந்தமானதை மனிதனுக்கு வழங்கிய குற்றத்துக்காகவும், அல்லாஹ்வின் தூதருடைய தகுதியைச் சாதாரண மனிதருக்கு வழங்கிய குற்றத்துக்காகவும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் தேடிக் கொள்ள வேண்டும்.
————————————————————————————————————————————————
பாவியாக்கும் பராஅத் இரவு
சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.
இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.
மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.
தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?
முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்
இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்
மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.
அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10 மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?
அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை.
பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100 ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
(இச்செய்தி ஷாபி மத்ஹபின் “இஆனதுல் தாலிபீன்’ என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது)
மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.
(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)
பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் “பஹ்ருர் ராஹிக்’ என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!
பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் “ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)
ஏன் இந்த சிறப்பு?
அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.
மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.
பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.
முதல் ஆதாரம்
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
அல்குர்ஆன் 44:2-4
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)
அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
இந்த மூன்று வசனங்களிலிருந்து “பாக்கியமிக்க இரவு’ என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
இரண்டாம் ஆதாரம்
ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, “பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன்‘ என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “இப்னு அபீ ஸப்ரா’ என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.
அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
மூன்றாம் ஆதாரம்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். “ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: திர்மிதி 670
இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நான்காவது ஆதாரம்
நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான்.
அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்
நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,
ஃபலாயிலுர் ரமளான் – இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8
இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.
ஐந்தாவது ஆதாரம்
ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ
நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9
இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில், இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.
அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர், “ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும்” என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. “என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன்” என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)
முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் “பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான்” என்று கூறினார்கள்.
நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12
பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3243
எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.
————————————————————————————————————————————————
மார்க்கம் மாறாது
எம். ஷம்சுல்லுஹா
புனித மிக்க ரமளான் மாதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆன் வேதத்தை அருளி அதன் மூலம் இந்த மார்க்கத்தை நிறைவடையச் செய்து விட்டான். நிறைவான மார்க்கத்தில் யாரும் இனி எதையும் எப்போதும் சேர்க்கவும் முடியாது; நீக்கவும் முடியாது. மாற்றவோ, திருத்தவோ, திணிக்கவோ முடியாது. இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5:3
அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை நமக்கு மார்க்கம் என்று கற்றுத் தந்தார்களோ அந்த மார்க்கத்தில் ஒன்றைச் சேர்க்கவோ நீக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.
அறிவியல் புரட்சி, புதுப்புது கண்டுபிடிப்புக்கள், நவீன கலாச்சாரங்கள், பண்பாடுகள் என மாறி வரும் மனிதச் சிந்தனைகளைக் காரணம் காட்டி இந்த மார்க்கத்தில் மாற்றம் செய்யக் கூடாது. அதற்கு அவசியமும் இல்லாத அளவுக்கு எக்காலத்திற்கும் பொருந்தும் சட்ட திட்டங்களை இஸ்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது.
கலீஃபாக்கள், நபித்தோழர்கள், இமாம்கள், ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் சரி! நிறைவு பெற்ற இந்த மார்க்கத்தில் புதிதாக எதையும் சேர்ப்பதற்கோ, அல்லது இருக்கும் ஒரு சட்டத்தை மாற்றுவதற்கோ அவர்களுக்கு எள்ளளவும் அதிகாரம் இல்லை.
காரணம் நீங்கியும் காரியம் நீங்கவில்லை
ஒரு சில வணக்கங்களை சில காரணங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்தக் காரணங்கள் நீங்கிய பிறகும் அந்த வணக்கங்கள் இன்று வரை தொடரத் தான் செய்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் ஹிஜிரி 6ஆம் ஆண்டில் உம்ரா செய்ய வந்த போது இணை வைப்பவர்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். அப்போது ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்படுகின்றது. அதன்படி அவர்கள் மறு ஆண்டு (ஹிஜிரி 7ல்) உம்ரா செய்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களையும், தோழர்களையும் இணை வைப்பவர்கள் இளக்காரமாகப் பார்க்கிறார்கள். மதீனாவின் காய்ச்சல் முஹம்மதையும் அவரது தோழர்களையும் பலவீனப்படுத்தி விட்டது என்று பரிகசிக்கின்றார்கள்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஏழு சுற்றுக்கள் கொண்ட தவாஃபில் முதல் மூன்று சுற்றுக்களில் சற்று ஓடுமாறும், இதர நான்கு சுற்றுக்களில் சாதாரண நடையை மேற்கொள்ளுமாறும் தமது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.
இதன் மூலம் தாங்கள் புத்துணர்ச்சியுடனும், புதுத் தெம்புடனும் தான் இருக்கிறோம் என்று உணர்த்துகிறார்கள்.
இதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, “யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்‘ என்று இணை வைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1602
இதன் பின்னர் உம்ராவில் மட்டுமல்ல, ஹஜ்ஜிலும் இது தொடர்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதும், இறந்த பின்பும் மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையான இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்து விட்டன. எந்தக் கொம்பனும் முஸ்லிம்களுக்கு எதிராக வாய் திறக்கும் சூழல் அறவே இல்லை. அதாவது, முஸ்லிம்கள் நோயுற்று பலவீனமாக இருக்கிறார்கள் என்று எதிரிகள் விமர்சனம் செய்த அந்தக் காரணம் நீங்கி விட்டது. ஆனால் தவாஃபின் போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுகின்ற அந்தக் காரியம், நபியவர்களின் வழிகாட்டு முறை நீங்கவில்லை. இன்றும் தொடர்கிறது; இனி இறுதி நாள் வரையிலும் தொடரத் தான் செய்யும்.
இது குறித்து உமர் (ரலி) அவர்கள் தெரிவிக்கும் கருத்து இதோ:
உமர் (ரலி) அவர்கள் “நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நமது பலத்தை இணைவைப்பாளர்களுக்குக் காட்டுவதற்காகத் தானே! ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்து விட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?” எனக் கூறிவிட்டு, “எனினும், இதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அதை விட்டுவிட நாம் விரும்பவில்லை” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஸ்லம்
நூல்: புகாரி 1605
நபி (ஸல்) அவர்கள் செய்து விட்டார்கள். அதனால் நாம் செய்தாக வேண்டும் என்பது தான் உமர் (ரலி) அவர்களின் நிலைப்பாடு! அது தான் மார்க்கத்தின் நிலையும்!
அறிவு மறுத்தாலும் அது மார்க்கமே!
மார்க்கத்தில் உள்ள ஒரு சில வணக்கங்களை நம்முடைய அறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கும். அதற்காக அவற்றை யாரும் மாற்றி விட முடியாது.
உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, “நீ தீங்கோ, நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல் தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்‘ என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ
நூல்: புகாரி 1597
ஒரு கல்லுக்குப் போய் முத்தம் கொடுப்பதை அறிவு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் ஆட்சியாளராக இருந்தாலும், அதை மாற்றுவதற்குத் தமக்கோ வேறு யாருக்குமோ அதிகாரம் இல்லை என்பதை அழகாய் உணர்த்திக் காட்டினார்கள்.
ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்கள் இந்த மார்க்கத்தில் எந்த மாற்றத்தையும் புகுத்த அனுமதியில்லை. அப்படியே ஆட்சித் தலைவர்கள் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் நபித்தோழர்கள் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டத் தவறியதில்லை. அதற்குச் சான்றாகச் சில நிகழ்வுகளைக் காணலாம்.
உஸ்மான் (ரலி) செய்த மாற்றம்
ஹஜ்ஜில் தமத்துஃ என்ற வகை உண்டு. ஹஜ் செய்யச் செல்பவர் முதலில் உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமைக் களைந்து விடுவார். அதன் பின்னர் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவு செய்வார்.
இவ்விரண்டிற்கும் இடையே கிடைக்கும் நாட்களில் அவர் தமது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டுக் கொள்ளலாம். இந்த ஒரு வசதி ஹஜ்ஜின் இந்த முறையில் கிடைப்பதால் இதற்கு தமத்துஃ (சவுகரியம்) என்று பெயர்.
உஸ்மான் (ரலி) அவர்கள் இவ்வகையான ஹஜ் கூடாது என்று தடுத்தார்கள். உஸ்மான் (ரலி) விதித்த இந்தத் தடைக்கு ஆட்சேபணை செய்த அலீ (ரலி) அவர்கள் தாம் ஹஜ் செய்யும் போது தமத்துஃ முறையிலேயே ஹஜ் செய்கின்றார்கள்.
நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஃ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் கட்டி “லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின்” என்று கூறிவிட்டு “நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிட மாட்டேன்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மர்வான் பின் ஹகம்
நூல்: புகாரி 1563
“நான் தமத்துஃ ஹஜ்ஜைத் தடுத்துக் கொண்டிருக்கும் போதே நீ அதைச் செய்கிறாயே” என்று உஸ்மான் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்கும் போதும், “மனிதர்களில் எவருக்காகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விடுவதற்கு இல்லை” என்று அலீ (ரலி) கூறியதாகக் கூடுதல் விளக்கத்துடன் நஸயீ 2674 ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
உஸ்மான் (ரலி) அவர்கள் செய்ய நினைத்த மாற்றம் எடுபடாமல் போய், தமத்துஃ ஹஜ் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிமுறை இன்றும் செயல்பாட்டில் உள்ளது.
உஸ்மான் (ரலி) செய்த மற்றொரு மாற்றம்
நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கிய போது நான்கு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகைகளைக் குறைத்து இரண்டு ரக்அத்துக்களாக, பயணத் தொழுகையாகத் தான் தொழுதார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் இதை மாற்றி நான்கு ரக்அத்துக்களாகத் தொழுதார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஆட்சேபிக்கின்றார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் எங்களுக்கு (இரண்டாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே தொழுவித்தார்கள். இது பற்றி (அத்தொழுகையில் கலந்து கொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினப்பட்ட போது “இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்‘ என்று கூறினார்கள். பின்னர் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். மினாவில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். (இப்போது நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் எனக்கு வாய்க்க வேண்டுமே!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீத்
நூற்கள்: புகாரி 1084, முஸ்லிம் 1122
நபிவழி அடிப்படையில் சுருக்கித் தொழாமல், கூடுதலாகத் தொழுததால் அது அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்டதாக ஆக வேண்டுமே என்று ஆதங்கமும் படுகின்றார்கள்.
மர்வான் செய்த மாற்றம்
ஜும்ஆவில் தொழுகைக்கு முன்னர் உரை நிகழ்த்த வேண்டும். ஆனால் பெருநாளில் தொழுகைக்குப் பின்னர் உரை நிகழ்த்தப்பட வேண்டும். ஜும்ஆவில் தொழுகை முடியும் வரை மக்கள் கலையாமல் இருந்து உரையைச் செவிமடுக்கின்றனர். ஆனால் பெருநாள் தொழுகை முடிந்ததும் உரையைக் கேட்காமல் மக்கள் கலைந்து விடுகின்றனர். இதைக் கவனத்தில் கொண்டு மதீனாவில் ஆட்சியாளராக இருந்த மர்வான் என்பவர் நபிவழியை மாற்றியமைக்கின்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாüலும் ஹஜ்ஜுப் பெருநாüலும் (பள்üவாசலில் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள் செய்யும் முதல் வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தமது வரிசைகüல் அமர்ந்து கொண்டிருப்பார்கள் அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வலியுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வலியுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டியதை) அவர்களுக்குக் கட்டளையிடுவார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பி வைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிடவேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள்.
மதீனாவின் ஆளுநரான மர்வான் பின் ஹகமுடன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாüலோ அல்லது நோன்புப் பெருநாலோ நான் தொழச் செல்லும் வரை (முதலில் தொழுகை பிறகு சொற்பொழிவு எனும்) இந்த நடைமுறையையே கடைப்பிடித்து வந்தனர். (மர்வானுடன் நான் தொழச் சென்ற அந்த நாüல்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெருநாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப் போனார். உடனே நான் (முதலில் தொழுவித்து விட்டு பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிவழியை) மாற்றி விட்டீர்கள்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “அபூ சயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறி விட்டது” என்று சொன்னார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபிகளாரின்) நடைமுறை நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையை விடச் சிறந்ததாகும்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “மக்கள் தொழுகை முடிந்துவிட்டால் எம(து உரை)க்காக அமர்ந்து கொண்டிருக்க மாட்டார்கள். எனவே நான் உரையை தொழுகைக்கு முன்பே வைத்துக் கொண்டேன்” என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 956
ஆட்சியாளர் மர்வானின் இந்தச் செயலை அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தடுக்கிறார்கள். அதையும் மீறி மர்வான் தொழுகைக்கு முன்னர் உரை நிகழ்த்தி விடுகின்றார். ஆனாலும் மர்வான் கொண்டு வந்த அந்த மாற்றம் நீடிக்கவில்லை. ஆட்சியாளராக இருந்தாலும் மார்க்கத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கும் போது நபித்தோழர் அபூஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் தம்மால் இயன்ற வரை தடுப்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிரியா பிறை சிரியாவுக்கே!
நபி (ஸல்) அவர்கள் காலம் தொட்டு இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டே சென்றது. சிரியாவும் இஸ்லாமிய சாம்ராஜ்யமானது. அகன்ற அரபகத்திலே நோன்பும், பெருநாட்களும் இரு வேறு பகுதிகளில் இரு வேறு நாட்களில் அமைந்தன. அப்போது சிரியாவில் முஆவியா (ரலி) பிறை பார்த்த தகவலைத் தெரிந்து கொண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அதை ஏற்கவில்லை. ஒட்டுமொத்த மதீனாவும் ஏற்கவில்லை. ஏன்? இதை முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். “நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். “நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். “நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். “ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் “ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். “முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம் 1819
இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அதற்கு மாற்றமாக மதீனாவாசிகளாகிய நாங்கள் செயல்பட மாட்டோம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெளிவான விளக்கம் தருகிறார்கள். இன்றைய உலகப் பிறைச் சிந்தனை(?)யாளர்களை ஊனப் பார்வையாளர்கள் என்று வெளுத்துக் கட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த பிறைச் சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு எதிராக எழுந்த உலகப் பிறைக்கு உலை வைத்து உடைத்தெறிகின்றார்கள். மார்க்கம் மாற்றப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகின்றார்கள்.
முஆவியாவுடன் மற்றொரு மோதல்
முஆவியா, இப்னு அப்பாஸ் ஆகிய இருவரும் கஅபாவை தவாஃப் செய்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ருக்னுல் யமானி, ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டார்கள். முஆவியாவோ கஅபாவின் எல்லா மூலைகளையும் முத்தமிட்டார்கள். அதைக் கண்ட இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானி, ஹஜருல் அஸ்வத் ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் முத்தமிட மாட்டார்கள்” என்று சொன்னார்கள். அதற்கு முஆவியா (ரலி), “அம்மூலைகளில் எதுவும் வெறுக்கப்படக் கூடியதல்ல” என்று பதிலளித்தார்கள்.
நூல்: அஹ்மத் 3533
ஆட்சித் தலைவர் முஆவியாவின் விருப்பம் கஅபாவின் எல்லா மூலைகளையும் முத்தமிட வேண்டும் என்பது! அதையே அவர் நிறைவேற்றவும் செய்கிறார்.
ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆட்சித் தலைவரைப் போல் செய்யாதது மட்டுமின்றி, அவ்வாறு செய்வது மார்க்கமல்ல என்பதையும் உணர்த்தி விடுகின்றார்கள். அதற்கு முஆவியா (ரலி) தமது சொந்தக் கருத்தைத் தான் பதிலாகத் தருகிறாரே தவிர மார்க்க ரீதியிலான ஆதாரம் எதையும் தரவில்லை. அதனால் அது மார்க்கமாகாது.
இதுவரை நாம் பார்த்த இந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இன்றைய அறிவியல் காலத்தில் ஒரு சில மார்க்கச் சட்டங்களைப் பார்ப்போம்.
பயணத் தொழுகை
அன்றைய கால தரைவழிப் பயணம் என்பது குதிரை, ஒட்டகம், கோவேறுக் கழுதைகள் போன்ற உயிர்ப் பிராணிகளை மையமாகக் கொண்ட பயணம். அதனால் 100 கி.மீ. தூரத்தைக் கடக்க ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஆகும். அதுபோன்ற கடினமான பயணம் இருந்த அந்தக் காலகட்டத்திற்குப் பயணத் தொழுகையின் சலுகைகள் பொருந்தும்; இப்போது இன்றைய அறிவியல் உலகில் 100 கி.மீ. என்பது ஒரு மணி நேர மேட்டர் தான். எனவே இப்போது அந்தச் சட்டம் பொருந்தாது; பயணத் தொழுகையின் சலுகை கிடையாது என்ற சிந்தனை மத்ஹபுக்காரர்களிடம் மிக ஆழமாக ஊறிப் போய் உள்ளது.
இவர்களின் இந்தச் சிந்தனைப்படி,
சுருக்கியும், இணைத்தும் தொழுகின்ற பயணத் தொழுகை
பயணத்தில் நோன்பை விடும் சலுகை
காலுறையில் மஸஹ் செய்யும் சலுகை போன்ற சட்டங்கள் எல்லாம் தேவையில்லை என்பதே!
சிரமத்திற்காகத் தான் இந்தச் சலுகைகள்! இப்போதைய வாகனங்களில் இந்தச் சிரமங்கள் இல்லை. அதனால் சலுகைகள் தேவையில்லை என்பதே இவர்களது முடிவு!
இவர்களின் இந்த முடிவை, தவாஃபின் முதல் மூன்று சுற்றுக்களில் ஓட்டம், பயணத் தொழுகை போன்றவற்றைக் குறிப்பிடும் ஹதீஸ்கள் தகர்த்து விடுகின்றன.
உலகப் பிறையும் ஊனப் பார்வையும்
இன்று உலகப் பிறை என்று சொல்லிக் கொண்டு, ஓர் ஊனப் பார்வைக் கூட்டம் இந்தியாவிலும் இலங்கையிலும் கிளம்பியிருக்கின்றது. இக்கூட்டம் பிறை மூலம் உலகை ஒன்றுபடுத்தப் போகிறோம் என்ற புதியதொரு தத்துவத்தை உதிர்த்தது. வேடிக்கை என்னவெனில் இவர்கள் தம் சொந்த ஊரிலேயே, தங்கள் சொந்த அமைப்பிலேயே ஒன்றாகப் பெருநாள் கொண்டாட முடியாமல் வெளியூரில் போய் பெருநாள் கொண்டாடினார்கள்.
ஒரு கூட்டம் லிபியாவைப் பார் என்றது. மற்றொரு கூட்டமோ சவூதியாவைப் பார் என்றது.
பிறையைப் புறக் கண்ணால் பார்க்க வேண்டியதில்லை, கணிப்பே போதுமானது என்றது ஒரு கூட்டம்.
பிறை பார்ப்பதும் வேண்டாம்; கணிப்பதும் வேண்டாம்; சவூதி சொல்வது தான் சட்டம் என்றது இன்னொரு கூட்டம்.
இப்படியெல்லாம் கோளாறு, குளறுபடிகள் செய்கின்ற கூட்டம் தோன்றும்; மார்க்கத்தில் இல்லாததைக் கொண்டு வந்து திணிக்கும். சவூதிக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேரம் தானே வித்தியாசம் என்றெல்லாம் கேட்டு இஸ்லாத்தில் இல்லாத ஒன்றைக் கொண்டு வந்து சேர்க்க எத்தனிக்கும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்தந்த ஊர்களில் உள்ள பிறையை மட்டும் பார்; உலகப் பிறையைப் பார்க்காதே என்ற கருத்தில் உத்தரவிடுகின்றார்கள்.
அதைத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் மதீனா மக்களும் பின்பற்றுகிறார்கள். முஸ்லிமில் இடம் பெறும் குரைப் அறிவிக்கும் ஹதீஸ் இந்த விபரத்தைத் தெளிவாக நமக்குத் தெரிவிக்கின்றது.
ஸஹர் பாங்கு
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஸஹர் பாங்கை அறிமுகம் செய்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ரமளானில்) பிலால், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்” என்று கூறினார்கள்:
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 617
பிலால் (ரலி) அவர்கள், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!” என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்போர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1919
கடிகார அலாரம், கைப்பேசி அலாரம், தொலைக்காட்சி அலாரம், தொலைபேசி அலாரம் என்று அலறுகின்ற அலாரங்கள் நிறைந்த இந்த அறிவியல் காலத்தில் ஸஹர் பாங்கு தேவை தானா என்ற சிந்தனை ஏற்பட்டு, இந்த நபிவழியை தமிழகத்தில் யாரும் இது வரை நடைமுறைப்படுத்தவில்லை. அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது ஜமாஅத் தான் அறிமுகம் செய்தது.
குர்ஆன், ஹதீஸைப் பெயரளவில் கொண்ட இயக்கம் கூட இதைக் குழப்பம் என்றது. ஓலமிடும் ஒலி பெருக்கிகளைக் காரணம் காட்டி இந்த நபிவழியைப் புறக்கணிக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் இந்த அறிவியல் உலகத்திற்குத் தேவையில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றது.
நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் வரும் என்று கூசாமல் சொல்கிறார்கள் என்றால் இவர்கள் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் நம்மைப் பார்த்து மனோ இச்சையைப் பின்பற்றுவதாகக் கூறுவது தான் இதில் வேடிக்கை.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மார்க்கத்தில் ஏதேனும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஏதாவது ஒரு கூட்டம் முயலும். ஆனால் நிச்சயமாக அது முற்றிலும் முறியடிக்கப்படும்; காரணம் இந்த மார்க்கம் மாறாது.
————————————————————————————————————————————————
ஹதீஸ் கலை ஆய்வு தொடர்: 17
நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதா?
நகைப்பிற்குரிய விளக்கம்
நபிகள் நாயகத்திற்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறுவதை நம்பினால் இறை வேதத்தில் ஐயம் ஏற்பட்டு விடும் என்பதைக் கண்டோம். இதற்குப் பதில் சொல்ல முடியாதவர்கள் ஒரு புதுமையான விளக்கத்தைத் தருகின்றார்கள்.
வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளதை உள்ளபடி கூறினார்கள். மற்ற விஷயத்தில் தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும். குர்ஆன் இறை வேதம் தான் என்று முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்து கொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபியவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துத் தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? இல்லையா என்று அறியும் நிலையில் மக்கள் இருந்தார்கள். ஆறு மாத காலம் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் அந்தக் காலத்து மக்களிடம் இந்த வாதம் எடுபடுமா? என்று சிந்திக்கத் தவறி விட்டார்கள்.
செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் சந்தேகத்திற்குரியதாகத் தான் மக்கள் பார்ப்பார்களே தவிர வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை மூளை தொடர்பானது என்பதால் அவர்கள் கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகி விடும்.
நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்யாமலேயே செய்ததாக நினைத்தார்கள் என்று சூனியம் தொடர்பாக வரும் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. மார்க்க விஷயத்தில் குழப்பம் ஏற்படவில்லை. மாறாக உலக விஷயத்தில் தான் குழப்பம் ஏற்பட்டது என்று பிரித்துக் காட்டாமல் பொதுவாக எல்லாக் காரியங்களிலும் அவர்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்பட்டது என்றே ஹதீஸில் இடம் பெற்றுள்ள வாசகம் உணர்த்துகிறது.
எந்த விதமான ஆயுதங்களும் இல்லாமல் ஒருவருக்குத் தீமை அளிப்பது என்பது இறைவனுக்கு மட்டுமே சாத்தியம். இந்த ஆற்றல் சூனியம் செய்வதன் மூலம் மனிதர்களுக்கும் உண்டு என்று நம்புவது இணை வைப்பில் கொண்டு சேர்த்து விடும். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக இது அமைந்திருப்பதாலும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?
நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் பொய்யென நிலைநாட்ட எதிரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டு ஆறு மாத காலம் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எதிரிகள் இது குறித்து நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள்.
“முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?’ என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை அன்றைய காஃபிர்கள் ஒரு போதும் தவற விட்டிருக்க மாட்டார்கள்.
இந்தப் பாதிப்பு ஓரிரு நாட்கள் மட்டும் இருந்திருந்தால் இந்த விஷயம் எதிரிகளின் கவனத்திற்குச் செல்லாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆறு மாதம் வரை நீடித்த பாதிப்பு மக்கள் அனைவருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
மக்களோடு மக்களாகக் கலந்து பழகாத தலைவர் என்றால் ஆறு மாத காலமும் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து இந்தக் குறையை மறைத்திருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தினமும் பள்ளிவாசலில் ஐந்து வேளை தொழுகை நடத்தினார்கள். எந்த நேரமும் மக்கள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை வழங்கியிருந்தார்கள்.
எனவே நபி (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எதிரிகள் அறிந்திருப்பார்கள். இதை மையமாக வைத்துப் பிரச்சார யுத்தத்தை நடத்தியிருப்பார்கள். ஆனால் எதிரிகளில் ஒருவர் கூட இது பற்றி விமர்சனம் செய்ததாக எந்தச் சான்றும் இல்லை.
எனவே அவர்களுக்கு சூனியம் வைக்கப்படவும் இல்லை. மனநிலை பாதிப்பு ஏற்படவும் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
————————————————————————————————————————————————
நிர்வாகவியல் தொடர்: 6
குழுப்பணியின் அவசியம்
ஒருவர் மிகச் சிறந்த திறமைசாலியாக இருப்பார். தனியாக அவரது பணிகளைச் சிறப்பாகச் செய்வார். அதே பணியை விரைந்து முடிப்பதற்காக அல்லது அதிகப்படுத்துவதற்காக அந்தத் துறை சார்ந்த ஐந்து பேருடன் சேர்ந்து அதே வேலையைச் செய்யச் சொன்னால் மற்றவர்கள் மீது புகார் கூறுவார். இது நமக்கு ஒத்து வராது என்பார். இப்படித் தான் இன்று நம்மில் பெரும்பாலோர் அவதிப்படுகிறார்கள்.
குழு உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நாம் சார்ந்திருக்கும் ஒரு நிறுவனத்தை, இயக்கத்தை, குடும்பத்தை மற்றவர்கள் ஏளனம் செய்தால் அதைத் தாங்காமல் வாதம் செய்வோம்; அவருடன் சண்டை போடுவோம். ஆனால் நமக்குள் இயங்கும் போது நமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வோம். குழு உணர்வு மட்டும் போதாது குழுப் பணியாக இருக்க வேண்டும்.
மனிதனை சமூகப் பிராணி என்பார்கள். அவன் சார்ந்து வாழும் நிலையிலேயே படைக்கப்பட்டுள்ளான். இந்த நிலை மூன்று விதங்கள்.
(1) சார்பு நிலை
(2) சுய சார்பு நிலை
(3) சமூகச் சார்பு நிலை
சார்பு நிலையில், குழந்தைகளாகப் பெற்றோர்களைச் சார்ந்து வளர்கின்றோம். சுய சார்பு நிலையில் நமது பெற்றோர்கள் நம்மைச் சார்ந்திருப்பார்கள். சமூகச் சார்பு நிலையில் நமது தேவைகளை நிறைவேற்ற சமுதாயமாக, ஜமாஅத்தாக, தெருவாக, ஊராக வாழ்கின்றோம்.
ஆகையால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எவ்வளவு திறமைகள் இருந்தாலும் சிறந்த குழுப் பணியாளனாக நீங்கள் இல்லை என்றால் எதையும் சாதிக்க இயலாது.
நிறுவனங்களின் பயிற்சிகள் மூலம், இயக்கங்களின் தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சிகள்) மூலம் சிறந்த தனி மனிதர்கள் உருவாக்கப்படுவது போல் சிறந்த குழு உணர்வும், குழுப்பணிக்கான தயாரிப்புகளும் உள்ளதா என்றால் இல்லை.
ஒரு நிர்வாகம் வெற்றியடைய, தகுந்த திறமையுடைய தனி நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் குழுப்பணி மீது நம்பிக்கை உடையவர்களாக, கடமையுணர்வு உடையவர்களாக மாற்ற அதன் தலைவர் முயற்சி செய்ய வேண்டும். அவர்களை ஒன்றுபட்டு நிற்பவர்களாக மாற்ற வேண்டுமெனில் அவர்களிடம் கொள்கையாலும் குறிக்கோளாலும் ஒரே மாதிரியான சிந்தனையை, புரிதலை ஏற்படுத்துவது அவசியம்.
சிலர் இயற்கையிலேயே திறமையானவர்களாயிருப்பார்கள். ஆனால் குழுவில் இணைந்து பணியாற்றுவதை விரும்ப மாட்டார்கள். அவர்களுக்குக் குழுப் பணியின் அவசியத்தை உணர்த்த வேண்டும். அதற்காகப் பயிற்றுவிக்க வேண்டும். குழு உணர்வு வளர்வதற்கு வெற்றிகளையும், தோல்விகளையும் குழுவின் அங்கத்தினர் சரி சமமாகப் பார்க்க வேண்டும். முயற்சி செய்யும் எல்லாக் காரியங்களிலும் இரண்டையும் எதிர்பார்க்க வேண்டும்.
தனக்குக் கிடைக்கும் பாராட்டுக்கள் தனது திறமையால் அல்ல! குழுப்பணியால், குழுவால், ஜமாஅத்தால் கிடைத்தது என்று அனைவரும் உறுதியாக நம்ப வேண்டும். அந்தப் பாராட்டுக்களும் புகழும் ஜமாஅத்தைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே உழைக்கின்றோம் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஏற்பட்டு விட்டால் நீங்கள் சிறந்த குழுப்பணியாளர்.
நாம் உடல் ரீதியாக இணைந்து பணியாற்றுவது குழுப் பணியாகாது. மாறாக உள்ள ரீதியாக இணைய வேண்டும். ஒரு குழுவில் அங்கமாக இருந்து கொண்டு ஆலோசனை (மஷுரா) இல்லாமல், தான் நினைப்பதை அவரவர் செய்வது தான் குழு உடைவதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. அந்தப் பணி உங்கள் குழுவுக்கு எவ்வளவு பெரிய நன்மையை ஈட்டித் தந்தாலும் சரியே! ஆகையால் ஆரோக்கியமான குழுப்பணிக்கு அவரவர் சிந்தனையும் ஆலோசனையும் மிக அவசியம்.
எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் அதை நிர்வாகம் ஆலோசனை செய்து, சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து, உங்கள் சிந்தனையை நடைமுறைப்படுத்தவோ நிராகரிக்கவோ குழுவுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஆழமாகப் பதிய வைத்து நடைமுறைப்படுத்துதல் தான் குழுப்பணியின் அச்சாணியாகும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————
பிறை ஒரு விளக்கம்
(14.10.2008 அன்று நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ஏகத்துவம் நவம்பர் 2008 இதழில் முன்னர் வெளியிட்டிருந்தோம். தற்போது ரமளான் நெருங்குவதால் ஜமாஅத் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதை மறு பிரசுரம் செய்கிறோம்.)
பிறை பார்ப்பதன் அடிப்படையில் தான் நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் எனவும் ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்ததன் அடிப்படையிலேயே முடிவு செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு கொண்டுள்ளதை அனைவரும் அறிவோம்.
தத்தமது பகுதி எது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை மக்களிடம் வழங்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு பகுதியில் உள்ளவரும் இந்த எல்லையை வரையறுப்பதில் பவ்வேறு அளவுகோலை வைத்துள்ளனர்.
தத்தமது பகுதி என்பது தமது ஊர் அல்லது தாலுகா அல்லது மாவட்டம் என்ற அளவில் தான் இருக்க வேண்டுமா? தத்தமது பகுதி என்பது நமது மாநிலம் என்று முடிவு செய்தால் தவறாகுமா என்று பல சகோதரர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். பின்வரும் காரணங்களையும் அவர்கள் முன் வைத்தனர்.
- தமிழகம் ஒரு மாநிலமாக, தனி அதிகாரம் படைத்ததாகவுள்ளது.
- மாநிலம் முழுவதற்கும் ஒரே நாளில் தான் பெருநாளுக்காக அரசு விடுமுறை அறிவிக்கிறது.
- தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் பிறை பார்த்ததை ஏற்று தலைமை காஜி அறிவிப்பதை தமிழக அரசு ஏற்று விடுமுறை அளிப்பதால் தமிழக முஸ்லிம்கள் அதை ஏற்று எல்லா ஊர்களிலும் பெருநாளை அறிவிக்கின்றனர்.
- நமது ஊரில், நமது தாலுகாவில் பிறை பார்க்கவில்லை என்பதால் நாம் பெருநாள் என்று முடிவு செய்யாத நிலையில் நமது ஊர் மக்கள் பெருநாள் என்று முடிவு செய்கின்றனர். ஒரு வீட்டிலேயே தவ்ஹீத் கொள்கையை ஏற்றவர்களும் ஏற்காதவர்களும் பல குடும்பங்களில் உள்ளனர். இதனால் பெருநாள் என்ற மகிழ்ச்சியை அனைவரும் சேர்ந்து அடைய முடியவில்லை.
- ஒவ்வொரு தமிழக தவ்ஹீத்வாதியும் தனது ஊர் அல்லது தனது மாவட்டம் தான் தனது பகுதி என்று சொன்னாலும் அது பலருக்கும் வாய் வார்த்தையாகத் தான் உள்ளது. தனது ஊரில் பெருநாள் என மற்றவர்கள் அறிவிக்கும் போது அன்றே தனக்கும் பெருநாளாக இருக்க வேண்டும் என உள்ளூர ஆசைப்படுகின்றனர். அதாவது தமிழ்நாடு முழுதும் ஒரு பகுதி தான் என்ற எண்ணம் தான் பலரது ஆழ் மனதில் உள்ளது.
- நீங்கள் முடிவு செய்யும் நாள் என்பது சிலர் முடிவு செய்வது என்ற பொருளைத் தராது. ஒட்டு மொத்த அல்லது மிகப் பெரும்பான்மையானவர்களின் முடிவு என்பதே பொருளாக இருக்க முடியும். எனவே எந்த முடிவை அதிகமானோர் தம் மனதுக்குள் எடுத்து விட்டு சொல்லத் தயங்குகிறார்களோ அதையே தமது பகுதி என்று முடிவு செய்தால் அது தவறா?
இது போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது பிறை காணப்பட்டால் அதை பிறை பார்க்காத மற்ற பகுதியினர் ஏற்றால் அது தவறாகுமா? என்ற அடிப்படையில் அவர்களின் கேள்விகள் அமைந்திருந்தன.
இது பற்றி ஆலோசிப்பதற்காக 14.10.2008 அன்று உலமாக்கள், மாநில நிர்வாகிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமது மாவட்டம் தான் தமது பகுதி என்று ஒரு பகுதியினர் முடிவு செய்தால் அதற்கு எவ்வாறு அவர்களுக்கு உரிமை உள்ளதோ அது போல தமது மாநிலம் தான் தமது பகுதி என்று முடிவு செய்து தமிழகத்தில் எந்தப் பகுதியிலாவது நோன்பையும், பெருநாளையும் ஒரு ஊரார் முடிவு செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
ஒட்டுமொத்த தமிழகம் சுமார் அரை மணி நேரம் வித்தியாசம் கொண்டதாக உள்ளதாலும், தமிழகத்தை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வரும் வகையில் மாநிலமாக அமைக்கப்பட்டு ஒரே மாதிரியான சட்டங்களைக் கொண்டதாகவும் உள்ளது என்பது போன்ற காரணங்களால் இப்படி முடிவு செய்பவர்களைத் தடுக்க முடியாது என்று முடிவு செய்யப்பட்டது.
உலகில் எங்கே பிறை பார்த்தாலும் ஏற்க வேண்டும் என்ற கருத்து தவறானது என்பதை இக்கூட்டம் மீண்டும் உறுதி செய்தது.
மேலும் தமது பகுதி என்பது, தமது மாவட்டம் அல்லது பக்கத்து மாவட்டம் தான் என்று யாராவது முடிவு செய்து அதனடிப்படையில் செயல்பட்டால் அந்த உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் முடிவு செய்யப்பட்டது.
பகுதி என்பதற்குக் குறிப்பிட்ட எல்லையை மாநிலத் தலைமை நிர்ணயித்து திணிக்கக் கூடாது என்றும் இந்த முடிவை ஒவ்வொரு கிளையும் சுயமாக எடுக்கலாம் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜாக்கின் இரட்டை வேடம்
ஜாக் என்ற அமைப்பு குர்ஆன், ஹதீஸ் என்ற தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டு விட்டது; குர்ஆன் ஹதீஸ் என்ற இரண்டு அடிப்படைகளுடன் மூன்றாவதாக ஸஹாபாக்களைப் பின்பற்றுதல் என்ற அடிப்படையையும் சேர்த்துக் கொண்டது என்று தவ்ஹீத் ஜமாஅத் கூறுகின்ற போது ஜாக் அதை ஆணித்தரமாக மறுக்கின்றது.
அண்மையில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜாக் சகோதரர்களுக்கு இடையில் கோவையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதிலும் ஜாக்கினர் இதை மறுத்தனர்.
ஆனால் இது தொடர்பாக அல்ஜன்னத்தில் வெளியான அவர்களது அறிவிப்பை மேற்கோள் காட்டி, கோவை ஜாக் சகோதரர்களின் வாதம் தவறு என்று தெளிவுபடுத்தினோம். இது ஏகத்துவம் ஜூன் 2009 இதழிலும் விளக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரும் ஜாக் அமைப்பினர் அதே பாட்டைத் தான் பாடி வருகின்றனர்.
அல்ஜன்னத் ஜூலை 2009 இதழில், “நபித்தோழர்கள் விஷயத்தில் ஜாக்கின் நிலைப்பாடு” என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கை, ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறதா? அல்லது வேண்டாம் என்று சொல்கிறதா? இந்த அறிக்கையில் இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை அந்த அறிக்கையைப் படித்தவர்களுக்குப் புரிந்திருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த அறிக்கையின் கடைசிப் பாராவில் ஜாக் ஒரு மறுப்பைத் தெரிவிக்கின்றது.
குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் மாற்றமாக இருந்தாலும் ஸஹாபாக்களைப் பின்பற்றியாக வேண்டும் என்று நாம் கூறுவதாக ஒரு பச்சைப் பொய்யைத் திரும்பத் திரும்ப பத்திரிகைகளிலும், மேடைகளிலும் பரப்பி வருகின்றனர்.
இவ்வாறு அல்ஜன்னத்தில் 44ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அதாவது, ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று ஜாக் கூறுவதாக நாம் பிரச்சாரம் செய்வது பச்சைப் பொய் என்று கூறுகின்றனர்.
ஆனால் ஜாக்கின் கட்டுப்பாட்டிலுள்ள கோவை கோட்டைமேடு முஸ்லிமீன் பள்ளிவாசலில் ஒரு ஜும்ஆ உரையில் பேசும் போது, இக்பால் மதனி மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் ஒன்றைக் கூறியுள்ளார். அவர் கூறியது இது தான்:
“இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை இரண்டல்ல, மூன்று, மூன்று” என்று மூன்று விரல்களை விரித்துக் காட்டி, திரும்பத் திரும்பக் கூறி ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டும் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். இது கோவை, கோட்டை கிளையின் ஜாக் சகோதரர்கள் அனைவருக்கும் தெரியும்.
இப்போது சொல்லுங்கள்! இவர்களது நிலைப்பாடு என்னவென்று! இது இரட்டை வேடமா? இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
குர்ஆனும், ஹதீசும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டே, மற்றொரு பக்கம் ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையையும் பின்பற்ற வேண்டும் என்று கூறி இரட்டை வேடம் போடாதீர்கள்.
ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையைப் பின்பற்ற வேண்டும் என்று பேசிய இக்பால் மதனியை வேண்டுமானால் பொய்யர் என்று சொல்லுங்கள். ஒரு முறையல்ல, ஆயிரம் முறை சொல்லுங்கள். உங்களது இரட்டை வேடத்தை, பொய் வேஷத்தைக் களைவோரைப் பார்த்துப் பொய்யர்கள் என்று கூறாதீர்கள்.