தலையங்கம்
ரமளான்: கூலி தரும் குர்ஆன் மாதம்
அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
இந்த ரமளான் மாதத்தின் பெயரை அல்லாஹ் குறிப்பிடும் அளவுக்கு இதன் சிறப்பு தான் என்ன? அதையும் அல்லாஹ்வே சொல்கிறான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
அல்குர்ஆன் 2:185
இம்மாதத்தில் குர்ஆன் இறங்கியிருப்பதால் அதற்கு அப்படியொரு சிறப்பு! இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டிருப்பதால் தான் நோன்பும் கடமையாக்கப்பட்டுள்ளது என்பது அதன் சிறப்பை மேலும் தூக்கிக் காட்டுகின்றது.
இதற்கு முந்தைய வசனமும் நோன்பைப் பற்றித் தான் பேசுகின்றது. ஆனால் அந்த வசனத்தில், நோன்பு பிடிப்பவர்கள் பிடிக்கலாம்; நோன்பை விட்டவர்கள் அதற்கு ஈடாக தர்மம் செய்யலாம் என்ற சலுகையை அளிக்கின்றது. மேற்கண்ட 2:185 வசனத்தில் அந்தச் சலுகையை ரத்துச் செய்து விட்டு, “ரமளான் வந்து விட்டால் நோன்பு நோற்றே ஆக வேண்டும்; காரணம் அம்மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டுள்ளது’ என்று கூறி, குர்ஆனின் மகத்துவத்தை அல்லாஹ் உணர்த்துகின்றான்.
இந்தச் சலுகையை அளிக்காமல் எடுத்த எடுப்பிலேயே, “ரமளான் மாதத்தில் குர்ஆன் அருளப் பட்டிருப்பதால் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்’ என்று அல்லாஹ் கூறியிருக்காம். ஆனால் அதில் இப்போது நாம் காண்கின்ற இந்த அழுத்தத்தைக் காண முடியாது.
முதலில் சலுகையை வழங்கி விட்டுப் பிறகு அதை ரத்துச் செய்து இந்தக் குர்ஆனின் பக்கம் மக்களின் முழுக் கவனத்தையும் திருப்பச் செய்கிறான் அல்லாஹ்! இதன் மூலம் குர்ஆனின் மகத்துவத்தையும் மாண்பையும் உணர்த்துகிறான். அந்தக் குர்ஆன் இறங்கிய மாதத்தைக் கண்ணியப்படுத்தும் விதமாக சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப் படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1899
ஆம்! ரமளான் மாதம், குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது. குர்ஆனின் நோக்கமே சுவனத்திற்கு மக்களை அழைத்துச் செல்வது தான்.
தத்தித் தத்தி நடக்கும் ஒரு சிறு குழந்தை, ஒரு மாத காலத்திற்கு நடைவண்டி பிடித்து நடக்க ஆரம்பித்து, பின்னர் நடை வண்டியில்லாமல் நடக்க ஆரம்பித்து விடுகின்றது.
அது போன்று பாவத்தில் விழுந்து விட்ட அடியார்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு ரமளான் மாதம் நடைவண்டியாக அமைகின்றது.
பாவத்தில் வீழ்ந்து, நொண்டியாகக் கிடக்கும் அவர்களை நடை பயிற்றுவித்து, சுவனத்தின் பாதையில் நடக்க வைத்து விடுகின்றது. அப்படிப்பட்ட ரமளான் மாதம் நம்மை வந்தடைகின்றது. குர்ஆன் இறங்கிய இம்மாதம் நமக்குக் கூலியைப் பெற்றுத் தர வந்து விட்டது.
லைலத்துல் கத்ரும் இஃதிகாஃபும்
நம்முடைய பாதையைச் சரி செய்து பட்டை தீட்ட வரும் இம்மாதத்தில்…
இதுவரை ஜமாஅத் தொழுகைகளில் அலட்சியமாக இருந்த நாம் ஜமாஅத் தொழுகைகளை விடாமல் கடைப்பிடிப்போமாக!
அதிகமதிகம் தர்மங்களை அள்ளி வழங்குவோமாக! காரணம் இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக அதிகமாக தர்மம் வழங்குபவர்களாக இருந்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3220
மேற்கண்ட ஹதீஸில் தர்மத்தின் சிறப்பை அறிந்து கொள்வதுடன், நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுடன் கொண்டிருந்த தொடர்பையும் நாம் அறியலாம்.
லைலத்துல் கத்ரு இரவை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோமாக!
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் 97:1-5
லைலத்துல் கத்ரை அடைய வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்த இரவு அடங்கியுள்ள ரமளானின் பிந்திய பத்து இரவுகளில் இல்லறத்தைக் கூட நாடுவதில்லை.
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2024
லைலத்துல் கத்ரை அடைய வேண்டும் என்பதற்காக ரமளானின் பிந்திய பத்து நாட்களும் பள்ளிவாசலில் தங்கியிருக்கும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தை நபி (ஸல்) அவர்கள் செயல் படுத்தியுள்ளார்கள்.
ஓர் இஸ்லாமிய அரசாக இருந்தால் அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றுக்கு உரிய விடுமுறை அளித்து இந்த அமல்களைச் செய்வதற்கு ஆர்வமூட்டலாம். அப்படியொரு மகத்தான இரவு இம்மாதத்தின் இறுதிப் பத்து இரவுகளில் அடங்கியுள்ளது. எனவே அந்தப் பத்து நாட்களில் உள்ள பணிகளை முன்னரே முடித்து விட்டு, லைலத்துல் கத்ரை அடைவதற்குத் தயாராவோமாக!
கூலி தரும் குர்ஆன் மாதத்தின் உச்சக்கட்டப் பகுதியான லைலத்துல் கத்ரின் நன்மைகளை அடைந்து சுவனத்தை பரிசாகப் பெறுவோமாக!
————————————————————————————————————————————————
அபூபக்ர் (ரலி) வரலாறு தொடர் – 38
கற்கோட்டையைக் கைப்பற்றிய காலித்
எம். ஷம்சுல்லுஹா
தூமத்துல் ஜன்தலின் அரசர் உகைதிரின் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த காலித், அந்நகர மக்களை எதிர் கொள்ள களத்தில் குதிக்கின்றார். அந்நகர மக்களுக்கு ஆதரவாக, இஸ்லாமியப் படைக்கு எதிராக ஜுதி பின் ரபீஆ, வதீஆ அல் கலபி, இப்னு ரூமான்ஸ் அல் கலபீ, இப்னுல் அய்ஹம், இப்னுல் ஹத்ரஜான் ஆகிய தளபதிகள் தங்கள் படைகளுடன் களமிறங்கினர்.
இருமுனைத் தாக்குதல்
ஏற்கனவே தூமத்துல் ஜன்தலை ஒரு முனையில் இயாள் முற்றுகையிட்டுக் கொண்டிருப்பதால் அதன் மறுமுனையில் காலித் முற்றுகையிடத் தொடங்கினார். இவ்வாறு தனக்கும், இயாளுக்கும் இடையில் தூமத்துல் ஜன்தல் அமையுமாறு பார்த்துக் கொண்டார்.
அந்நகரத்தின் கோட்டைக்குள் அனைவரும் இருப்பதற்கு இடம் போதவில்லை என்பதால் கோட்டையைச் சுற்றிலும் அரபுக் கிறித்தவர்கள் நின்று கொண்டிருந்தனர். படையை நிலை கொள்ளச் செய்த காலித் அப்போது தான் ஒரு நிதானத்திற்கு வந்திருந்தார்.
ஜுதி என்பவன் வதீஆவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு காலிதை நோக்கி வருகின்றான். காலிதைக் கண்ட மாத்திரத்தில் அவ்விருவரும் பின்வாங்க முனைகின்றனர். ஆனால் காலித் அவர்களை விடுவதாக இல்லை. அவ்விருவரும் காலிதைச் சந்திக்கும் அதே வேளையில் இப்னுல் ஹத்ரஜானும், இப்னுல் அய்ஹமும் இயாளுடன் மோதுகின்றனர்.
ஒரே பிடியில் ஜுதி, காலிதின் கட்டுப்பாட்டில் வந்து விடுகின்றான். அது போல் வதீஆ என்பவன் அக்ரஃ பின் ஹாபிஸின் கையில் கிடைக்கின்றான். இயாளிடம் மோதியவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இந்த இருமுனைத் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், கோட்டைக்கு வெளியே நின்ற கூட்டத்தினர் கோட்டைக்குள் அலறியடித்து நுழைகின்றனர். அனைவரையும் தாங்கிக் கொள்ள முடியாமல் கோட்டையின் வாயிற்கதவு மூடப்படுகின்றது.
தங்கள் அணியினர், தங்களை வெளியே விட்டு விட்டு, கதவைச் சாத்தி விட்டனர்; அதாவது, தங்களை மரணக் கோட்டைக்கு அருகில் விட்டு விட்டனர் என்று வெளியே நின்றவர்கள் வெதும்பினர்; வேதனையில் விம்மினர்.
மரணத்தைக் கண்டு அஞ்சி நின்ற அவர்களை மரணக் கோட்டைக்கு அனுப்ப காலித் தவறவில்லை. போரில் கொல்லப்பட்ட அவர்களின் உடல்கள் கோட்டை வாசலை அடைக்கும் அளவுக்குக் குவிந்து கிடந்தன.
கலப் கிளையார்களைத் தவிர மற்ற கைதிகள் அனைவருக்கும் காலித் மரண தண்டனை விதிக்கின்றார்.
இந்த கலப் கிளையாருக்காக இஸ்லாமியப் படையில் உள்ள அக்ரஃ பின் ஹாபிஸ், ஆஸிம், பனூ தமீம் ஆகியோர் அடைக்கலம் கேட்டனர்; அபயமளிக்குமாறு வேண்டினர்.
“ஏன் இன்னும் அறியாமைக் கால உணர்வை பாதுகாத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இஸ்லாமிய உணர்வைப் பாழடிக்கின்றீர்கள்?” என்று கடிந்தவாறே அவர்களின் வேண்டுகோளை காலித் நிறைவேற்றுகின்றார்.
கதவுடைப்பும் கைதுப் படலமும்
அவர்களுக்கு வாழ்வு கிடைப்பதில் உங்களுக்கு ஏன் வருத்தம் ஏற்படுகின்றது? ஷைத்தானின் வலையிலிருந்து இவர்கள் தப்புவதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை? என்று ஆஸிம், காலிதிடம் மறுப்பு தெரிவித்தார்.
காலித் அதை ஒன்றும் கண்டு கொள்ளாது கோட்டை வாசலை உடைப்பதற்குரிய காரியங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார்.
கடைசியில் கோட்டைக் கதவு உடைக்கப்பட்டது. மரணத்தை விட்டுத் தப்பித்து விட்டோம் என்று அந்த மக்கள் போட்ட கணக்கு தவறானது. மூடிக் கிடந்த வாசல் திறக்கப்பட்டதும் அது அவர்களுக்கு மரணத்தின் வாசல் ஆனது. போர்க் கைதிகள் அனைவரும் மரண தண்டனையைச் சந்திக்கின்றனர்.
பணி செய்வதற்குத் தகுதியான, வலிமையுள்ள வாலிபர்கள் கைதிகளாகப் பிடிக்கப்படுகின்றனர். பெண்களும் சிறை பிடிக்கப்படுகின்றனர். அதிக விலை கொடுப்போருக்கு அவர்கள் விற்கப்படுகின்றனர். ஜுதியின் மகளை காலித் வாங்கிக் கொண்டார். அவள் ஓர் அழகி! அவளுடன் தூமத்துல் ஜன்தலில் தங்கினார். தன்னுடன் வந்த அக்ரஃ பின் ஹாபிஸை ஆட்சிப் பொறுப்பைக் கவனிப்பதற்காக அன்பாருக்கு அனுப்பி வைத்தார்.
இயாளின் பொறுமை
இயாளின் ஓராண்டு கால முற்றுகை, காலிதின் வரவுக்காகக் காத்திருந்தது போல் அமைந்தது. அவர் வந்து தான் அந்த வெற்றியை அடைய வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு! அது இங்கு நடந்தேறியது.
வெற்றி மேல் வெற்றி குவிக்கும் வீரர் தங்களிடத்தில் இருந்திருந்தால் கிரேக்கர்கள், காலிதுக்கு வெற்றிக் கடவுள் என்று பெயர் சூட்டியிருப்பார்கள். அவரை வணங்கி வழிபடவும் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் இந்த வீரர் குவித்த வெற்றிகளை அல்லாஹ்வின் அருட்கொடை என்று விளங்கி வைத்து, அவனுக்கு ஆனந்தப் பெருக்குடன் நன்றியைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர்.
காலித் வந்த பின்னர் தான் இயாளின் முற்றுகை ஒரு முடிவுக்கு வந்தது என்றாலும், இயாளின் ஓராண்டு கால முற்றுகை, அவரது உறுதிப்பாடு, எஃகு போன்ற அவரது நிலைப்பாடு பாராட்டுக்குரியதாகும். இஸ்லாமிய வரலாறு கண்ட மிக அரிதான முற்றுகையாகும். இயாள் ஏன் இவ்வளவு காலம் முற்றுகையில் நீடிக்க வேண்டும்?
தூமத்துல் ஜன்தலுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
ஜன்தலத் என்பதன் பன்மை ஜன்தல் ஆகும். ஜன்தலத் என்றால் “கல்’ என்று பொருள். இஸ்மாயீல் நபியின் மகன் தூமா என்பார் இதை கற்கள் நிறைந்த பகுதியில் கட்டியதால் அவரது பெயருடன் இணைத்து, தூமத்துல் ஜன்தல் என்று அழைக்கப்படலாயிற்று! இவ்வாறு முஃஜமுல் புல்தான் என்ற நூலில் அல்ஹமவி குறிப்பிடுகின்றார்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த கற்கோட்டையைத் தான் எதிரிகள் வசம் போய் விடாமல் இயாள் கவசமாகக் காத்து நிற்கின்றார்.
தூமத்துல் ஜந்தலின் அரசர் உகைதிர், நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2616
“தூமத்துல் ஜந்தல்’ பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 3863
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆட்சிக் காலத்திலேயே தூமத்துல் ஜன்தல் பக்கம் கவனம் செலுத்தியிருக்கின்றார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
அவர்களை அடுத்து அபூபக்ர் (ரலி) அவர்களும் தூமத்துல் ஜன்தல் பக்கம் அதிகக் கவனம் செலுத்துகின்றார்கள். அதனால் தான் இயாளின் இந்த முற்றுகை! இது ஏன்?
இதுவரைக்கும் இஸ்லாத்தின் கைவசம் வந்த ஹீரா, இராக், இனிமேல் வரவிருக்கும் சிரியா ஆகிய முப்பெரும் நகரங்களுக்குரிய பாதைகள் தூமத்துல் ஜன்தலில் இருந்து தான் பிரிகின்றன. அப்படியொரு தலையாய இடத்தில் அமைந்திருப்பதால் தான் அதற்கு இந்த முக்கியத்துவம்!
இத்தனை நகரங்களுக்கும் இட்டுச் செல்லும் இந்த தூமத்துல் ஜன்தல் விஷயத்தில் ஓர் இஸ்லாமியப் பேரரசு எப்படி மெத்தனமாக இருக்க முடியும்?
இந்தத் தலையாய பாதையில் அந்நிய சக்திகளின் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களிடம் வந்துள்ள இராக், ஹீரா போன்ற பகுதிகளையும், சிரியாவையும் தட்டிப் பறிக்கும் மையமாக மாறி விடும். இப்படியொரு முட்டுக்கட்டை இந்த மூன்று நகரங்களுக்குச் செல்லும் வழியில் விழுந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஓராண்டு காலமாக இயாள் முட்டுக் கொடுத்து நின்றார். விட்டுக் கொடுக்காமல் காத்து நின்றார்.
இந்த அடிப்படையில் வரலாற்றில் காலிதுக்கு இணையாக இயாள் மின்னிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மணி மகுடத்தில் ஒரு பதக்கத்தைப் பதித்த பெருமையைப் பெற்றுத் திகழ்கின்றார்.
தூமத்துல் ஜன்தல் இஸ்லாமிய அரசின் கீழ் வருவதற்குக் காரணமாயிருந்த காலித், இயாள் ஆகிய வீரர்களின் பங்களிப்பை எடுத்துக் காட்டவே இந்தப் பின்னுரை!
வளரும் இன்ஷா அல்லாஹ்
———————————————————————————————————————————————–
கேள்வி பதில்
? திருக்குர்ஆனில் ஒரு வசனத்தில், “குறை கூறி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவருக்கும் கேடு தான்” என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வாறிருக்க நீங்கள் ஒவ்வொரு இயக்கத்தைப் பற்றியும், ஒவ்வொரு கொள்கையைப் பற்றியும் குறை கூறுகிறீர்கள். இது தவறில்லையா? இவ்வாறு செய்வதற்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா?
காஜா மைதீன், நெல்லை டவுண்
குறை கூறுதல், புறம் பேசுதல் போன்ற செயல்கள் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், ஒருவரைப் பற்றிய குறையை எடுத்துச் சொல்லும் போது கேட்பவர்களுக்கு அதனால் பயன் ஏற்படும் என்றால் அது புறம் ஆகாது.
இன்னும் சொல்வதென்றால், இது போன்ற கட்டத்தில் எது உண்மையோ அதை உள்ளபடி கூற வேண்டும் என்பது தான் மார்க்கத்தின் நிலைபாடு.
பாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களை அவர்களது கணவர் விவாகரத்துச் செய்து விட்டார். இத்தா முடிந்ததும் இரண்டு நபித் தோழர்கள் அவரை மணம் முடிக்க விரும்பினார்கள். இந்நிகழ்ச்சியை அவர் பின் வருமாறு விவரிக்கிறார்.
நான் “இத்தா‘வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்” என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உசாமாவை மணந்து கொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2953
ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் இரண்டு நபித் தோழர்களைப் பற்றிக் கேட்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த இரு நபித்தோழர்களின் குறைகளையும் மறைக்காமல் எடுத்துக் கூறுகின்றார்கள். இது புறம் என்றிருந்தால் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்” என்று (என்னிடம்) சொன்னார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்துகொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கெண்டீர்களே!‘ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரது தீங்கை அஞ்சி மக்கள் விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவர் ஆவார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6032
ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்கும் போது, அவர் கெட்டவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் அங்கிருப்பவர்களிடம் தெளிவுபடுத்துகிறார்கள். மற்றவர்கள் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம்.
எனவே கேட்பவரின் நலனுக்காக ஒருவரின் குறையைத் தெளிவு படுத்துவது தவறில்லை என்பதை இந்ந ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த நிபந்தனையின் அடிப்படையில் தனிப்பட்ட நபர்களின் குறைகளைப் பற்றியே தெளிவுபடுத்தலாம் எனும் போது, மார்க்கத்தின் பெயரால் இயக்கம் நடத்திக் கொண்டு, மக்களை வழி கெடுப்பவர்களை அடையாளம் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் என்ற அடிப்படையில் இவ்வாறு அடையாளம் காட்டுவது மார்க்கத்தில் கடமை என்று கூடச் சொல்லலாம்.
மக்கள் வழிகேட்டில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக, சில நபர்களைப் பற்றியோ, இயக்கங்களைப் பற்றியோ விமர்சிப்பது புறம் என்ற வட்டத்திற்குள் வராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தவறு என்றால் எத்தனையோ நபர்களைப் பற்றியும், சமுதாயங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் காணப்படும் குறைகள், விமர்சனங்கள் அனைத்தும் தவறு என்றாகி விடும். ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களை பற்றிய விமர்சனங்களையும் தவறு என்று கூற வேண்டிய நிலை ஏற்படும்.
? ஆடை அணியும் போது என்ன கூற வேண்டும்? ஆடை அணிவதற்கென பிரத்தியேகமான துஆ இருந்தால் குறிப்பிடவும்.
ஜே. ரியாஸ் அஹ்மத், காயல்பட்டிணம்
நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் போது, தலைப்பாகை என்றோ, சட்டை என்றோ, துண்டு என்றோ அந்த ஆடையின் பெயரைக் குறிப்பிடுவார்கள். பின்பு இவ்வாறு பிரார்த்திப்பார்கள்.
அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக்க ஹைரஹு வஹைர மாஸுனிஅ லஹு வஅவூதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மாஸுனிஅ லஹு
(பொருள்: இறைவா! உனக்கே புகழனைத்தும்! நீயே இந்த ஆடையை எனக்கு அணிவித்தாய்! இந்த ஆடையின் நன்மையையும், இந்த ஆடை எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த ஆடையின் தீமையையும், இந்த ஆடை எந்தத் தீமைக்காகத் தயாரிக்கப்பட்டதோ அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: திர்மிதீ 1689
? எங்கள் ஊரில் வீடு வாடகைக்கு அல்லது பெந்தகத்துக்குக் கொடுக்கி றார்கள். பெந்தகம் என்றால் கணிசமான ஒரு தொகையை முன் கூட்டியே கொடுப்பதாகும். மாதந் தோறும் வாடகை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அந்த வீட்டில் வசித்து விட்டுக் காலி செய்யும் போது நாம் கொடுத்த தொகையை அப்படியே திரும்பத் தந்து விடுவார்கள். வாடகை என்றால் ஐயாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்குவார்கள். பெந்தகம் என்றால் ஒரு லட்சம் வாங்குகிறார்கள். இப்படி வாடகை இல்லாமல் பெந்தகத்துக்கு வீடு பிடிப் பது கூடுமா? மாதந்தோறும் வாடகை கொடுப்பது சிரமமாக உள்ளது.
உம்மு ஷாஜஹான், அடியக்கமங்கலம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒத்தி என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் பழக்கத்தைத் தான் பெந்தகம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஒருவருக்குப் பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இவர் தன்னிடமுள்ள வீட்டை ஒருவரிடம் அடைமானமாகக் கொடுத்து, தனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார். கடன் வாங்கியவருக்கு வசதி வரும் போது அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டு தனது வீட்டை வாங்கிக் கொள்கிறார். இது அடைமானமாகும்.
கொடுக்கின்ற பணத்திற்கு ஈடாக ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் பணம் கொடுத்தவர் அந்தப் பொருளை உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
அந்தப் பொருளை அவர் உபயோகிக்க ஆரம்பித்து விட்டால் அது வட்டியாகி விடுகின்றது. அதாவது அந்த வீட்டை அவர் உபயோகிப்பதற்காகக் கொடுக்க வேண்டிய வாடகையை, தான் கொடுத்துள்ள பணத்திற்கு வட்டியாக எடுத்துக் கொள்கின்றார். ஒத்தி என்று கூறப்படுவது இது தான்.
ஒத்தி என்பது தெளிவான வட்டி தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. உயிருள்ள பிராணிகளை அடகு வைத்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும் அந்தப் பிராணியை வளர்ப்பதற்கு ஆகும் பராமரிப்புச் செலவுக்குப் பிரதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
“அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதன் பாலை அருந்தலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2511
இந்த ஹதீஸில், அடகு வைக்கப்பட்ட பிராணியை அதற்காகும் செலவுக்குப் பிரதியாக அதைப் பயன்படுத்தலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது உயிருள்ள பிராணிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் கால்நடைகளைப் பொறுத்தவரை அவற்றை வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட்டாக வேண்டும். அடைமானமாகப் பெற்றவர் இந்தச் செலவுகளை தனது சொந்தப் பணத்திலிருந்து செய்ய முடியாது. எனவே தான் அந்தச் செலவுக்குப் பிரதியாக அந்தப் பிராணிகளைப் பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளிக்கின்றார்கள்.
வீடு, நிலம் போன்றவற்றிற்கு இது போன்ற பராமரிப்புச் செலவுகள் எதுவும் இல்லை என்பதால் அவற்றை அடைமானமாகப் பெற்றால் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது அதற்கான வாடகையை வட்டியாக வாங்குவதற்குச் சமம். மேற்கண்ட ஹதீஸில் பிராணிகளைப் பயன்படுத்தலாம் என்று மேலோட்டமாகச் சொல்லாமல் “அதற்காகும் செலவுக்குப் பகரமாக’ என்பதையும் சேர்த்துச் சொல்வதிலிருந்தே வீடு, நிலம் போன்றவற்றை அடைமானம் பெற்றவர் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவாகின்றது.
அதே சமயம் அந்த வீட்டிற்கான வாடகையை நில உரிமையாளருக்குக் கொடுத்து விட்டு அந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
———————————————————————————————————————————————–
மஹ்ஷர் மன்றத்தில் மாநபியின் புகார்
தொடர்: 4
எம். ஷம்சுல்லுஹா
பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை விதிக்கும் அறிவிப்பைக் கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அதைப் பார்த்து விட்டு இந்தத் தடை நெல்லை மாவட்டத்தில் மட்டும் தான் இருந்தது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. தமிழகத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் ஒன்று மேலப்பாளையம். அங்கு தவ்ஹீது பிரச்சாரம் அன்று உச்சக்கட்டத்தில் இருந்தது போலவே எதிர்ப்பும் உச்சக்கட்டத்தில் இருந்தது; உச்சி வெயிலாகக் கொதித்தது. அதனுடைய எதிரொலி தான் ஜமாஅத்துல் உலமா சபையின் இந்த உத்தரவு!
எழுத்துப்பூர்வமான இந்த அறிவிப்பு நம்முடைய கைவசம் இருந்ததால் அதை மக்கள் பார்வைக்காக இங்கு வெளியிட்டிருந்தோம். ஆனால் இந்தத் தடையுத்தரவு தமிழகம் முழுவதும் பின்பற்றப்பட்டது. இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
சமீப காலம் வரை ஏகத்துவக் கொள்கை நுழைய முடியாத ஊராக நெல்லை மாவட்டம் பேட்டை என்ற ஊர் இருந்தது. அல்லாஹ்வின் அருளால் அந்தக் கோட்டையிலும் இந்த ஏகத்துவக் கொள்கை உள்ளே புகுந்தது. அதன் பின் அங்கு பள்ளியில் தொழுகைக்குச் சென்ற நம்முடைய கொள்கைச் சகோதரர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். அந்த வழக்கு மாநகரக் காவல்துறையிடம் வந்தது. மாநகரக் காவல்துறை அதை கோட்டாட்சித் தலைவர் தலைமையில் சமாதானக் குழுவை ஏற்படுத்தியது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, பள்ளியில் தொழுவதைத் தடை செய்யும் அந்தக் குழுவினருக்குத் தலைமை தாங்கி வந்தது வேறு யாருமல்ல! மவ்லவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் அவர்கள் தான். இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தத் தடையுத்தரவு இன்று வரை தமிழகத்தில் நீடிக்கின்றது என்பதை விளக்குவதற்காகத் தான்.
மேலும், இன்றளவும் இதற்குத் தலைமை தாங்குவோர், இதைத் தூண்டுவோர், இதை அமல்படுத்துவோர் எல்லாமே ஜமாஅத்துல் உலமா சபையினர் தான் என்பதையும் இந்த நிகழ்விலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அநியாயக்கார ஆலிம்கள்
அல்லாஹ்வின் பள்ளி வாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் 2:114
இந்த வசனத்தை இவர்களிடம் சுட்டிக் காட்டும் போது இவர்களால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் தங்கள் மொத்த வெறுப்பையும் இந்த வசனத்தின் மீது இந்த அநியாயக்கார ஆலிம்கள் கொட்டுகின்றனர். குர்ஆனில் இப்படியொரு வசனம் இடம்பெற்று விட்டதே! என்று உள்ளூர வெறுத்துத் தள்ளுகின்றனர்; வெந்து சாகின்றனர். இந்த வெறுப்பின் அகோரம் தான் பொது மக்களை ஏகத்துவவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துமாறு தூண்டி விடுவதாகும். இந்த அநியாயத்தைத் தமிழகம் முழுவதும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஜமாஅத்துல் உலமாவின் தொழுகை தடைப் படலம், ஏகத்துவவாதிகளுக்கு எதிராக நடத்தும் கொலை வெறித் தாக்குதல், பிரச்சாரத்திற்குத் தடை, சமூக பகிஷ்காரம் ஆகிய அனைத்துமே குர்ஆன் கூறும் கொள்கைக்கு எதிராக அபூஜஹ்ல் வர்க்கம் நடத்திய வெறியாட்டங்களாகும். குர்ஆனுக்கு எதிராகக் குறைஷிக் கூட்டடம் நடத்திய கோரத் தாக்குதல்களாகும்.
குறைஷிகள் கொடுத்த உடல் ரீதியான தாக்குதல்களை அரங்கேற்றியதுடன் இவர்கள் நின்று விடவில்லை. குறைஷிகள் நிகழ்த்திய உளவியல் ரீதியிலான தாக்குதல்களையும் இவர்கள் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
உளவியல் தாக்குதல்
சூனியக்காரர், கவிஞர், குறிகாரர், பைத்தியக்காரர் என்று மக்கத்து இறை மறுப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களை உளவியல் ரீதியாகத் தாக்குதல் நடத்தினார்கள். விமர்சன விஷக் கணைகள் மூலம் நபி (ஸல்) அவர்களை சோர வைத்தார்கள். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களை மன ரீதியாக ஓய்க்க நினைத்தனர்.
இன்றும் இதே பாணியில் இவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தில் உள்ளவர்களை நோக்கி விமர்சனக் கணைகளை எறிந்து கொண்டிருக்கின்றனர்.
வெளிநாட்டுப் பணம், அரசியல் செல்வாக்கு போன்றவற்றுக்காக ஏகத்துவப் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம் சாட்டினார்கள். அவ்லியாக்களைத் திட்டுவதாகவும், நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் இழிவு படுத்துவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் இன்னும் இது போன்ற ஏராளமான விமர்சனங்களை நம்மீது தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஏகத்துவவாதிகளை ஓய்க்கவும் உட்கார வைக்கவும் நினைக்கிறார்கள். இவர்களது இந்த முயற்சியும் குர்ஆன் மீது கொண்டுள்ள வெறுப்பினால் தான்.
வெளிப்படையான வெறுப்பு
இந்த வெறுப்பை தெளிவாகத் தெரிவதற்கு இன்னும் சில வசனங்களைத் தெரிந்து கொள்வோம்.
அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அல்குர்ஆன் 39:45
இது மக்கா காஃபிர்களின் மன நிலையைப் படம்பிடித்துக் காட்டும் வசனமாகும். இந்த நிலையை நூற்றுக்கு நூறு அப்படியே இவர்களிடமும் பார்க்கலாம். அல்லாஹ் என்று சொல்லும் போது இவர்களின் உடலில் எந்த அசைவையும் பார்க்க முடியாது. ரஹ்மான் ரஹீம் என்று அல்லாஹ்வின் பெயர்களைச் சொல்லும் போது இவர்களிடம் எந்த அசைவும் தென்படாது. ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்று சொல்லும் போது கத்தஸஹுல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் என்று பூரித்துப் புளங்காகிதம் அடைகின்றனர்.
அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள்; அல்லாஹ்விடம் மட்டும் கேளுங்கள் என்று சொன்னால் அன்றைய காஃபிர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதே நிலைமையை, முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு இன்று இணை வைத்துக் கொண்டிருக்கும் இவர்களிடமும் பார்க்கலாம்.
அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.
அல்குர்ஆன் 17:46
“அல்லாஹ் மட்டும் பிரார்த்திக்கப்பட்டால் மறுத்தீர்கள்; அவனுக்கு இணை கற்பிக்கப்பட்டால் அதை நம்பினீர்கள்” என்பதே இதற்குக் காரணம். உயர்ந்தவனும், பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே அதிகாரம்.
அல்குர்ஆன் 40:12
இவை அனைத்தும் மக்கா இணை வைப்பாளர்கள் கொண்டிருந்த கோரமான வெறுப்பாகும்.
மாநபியின் புகார்
இத்தகைய வெறுப்பைக் கொண்ட அம்க்களுக்கு எதிராக மாநபி (ஸல்) அவர்கள் ஒரு புகாரை மறுமை மன்றத்தில் பதிவு செய்கின்றார்கள். அந்தப் புகார் பதிவைப் பார்ப்பதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் எதிராக மக்கத்து காஃபிர்கள் கட்டவிழ்த்து விட்ட அநியாயங்கள், அக்கிரமங்களை மீண்டும் ஒருமுறை பட்டியலிட்டுக் கொள்வோம்.
- கொலை முயற்சி
- பிரச்சாரத்திற்குத் தடை
- பள்ளியில் தொழத் தடை
- சமூகப் பகிஷ்காரம்
- மக்காவை விட்டே துரத்தியடித்தல்
இவை அனைத்தும் எதற்காக? குர்ஆன் கூறுகின்ற ஏகத்துவத்தைப் போதித்ததற்காக!
அந்த மக்கள் குர்ஆன் மீது கொண்ட வெறுப்பின் வெளிப்பாடு தான் இவை! இந்த வெறுப்பை அணுவணுவாக அனுபவித்த நபி (ஸல்) அவர்கள், மறுமை மன்றத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்கின்றார்கள்.
“என் இறைவா! எனது சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கி விட்டனர்” என்று இத்தூதர் கூறுவார்.
அல்குர்ஆன் 25:30
இந்தப் புகார் மக்கா காஃபிர்களுக்கு மட்டும் எதிரானதல்ல! மக்கா காஃபிர்களின் அனைத்துத் தன்மைகளுக்கும் ஒத்த வகையில் வெறுப்பை வெளிப்பட்டுத்திக் காட்டிய அனைவருக்கும் எதிரானது தான். நாம் இதுவரை கண்ட ஒப்பீட்டின் படி மக்கா காஃபிர்களின் அதே தன்மைகளை வெளிப்படுத்திய இன்றைய உலமாக்களுக்கும் எதிரான புகார் தான் நபி (ஸல்) அவர்கள் பதிவு செய்யும் அந்தப் புகார்!
இந்தப் புகாரின் விளைவு என்ன? நரகம் தான். மறுமையில் குர்ஆன் தான் நடுவராக வந்து நிற்கின்றது.
மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் கவலைப்படும் அளவுக்கு நிறுத்தி வைக்கப் படுவார்கள். அப்போது அவர்கள், “இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும் படி (யாரையாவது) நாம் கேட்டுக் கொண்டால் என்ன?” என்று பேசிக் கொள்வார்கள். பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “நீங்கள் மனிதர்களின் தந்தை ஆதம் ஆவீர்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான்; தனது சொர்க்கத்தில் உங்களை குடியிருக்கச் செய்தான்; தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எல்லாப் பொருட்களின் பெயர்களையும் உங்களுக்கு அவன் கற்பித்தான். (எனவே,) இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்” என்று கோருவர். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறிவிட்டு, உண்ணக் கூடாதெனத் தடை விதிக்கப் பட்டிருந்த மரத்திலிருந்து புசித்து விட்டதால் தாம் புரிந்த தவறை அவர்கள் எடுத்துக் கூறுவார்கள். “(எனக்குப் பின்) பூமியில் உள்ளவர்களுக்கு இறைவனால் நியமிக்கப்பட்ட (முக்கியமான) இறைத் தூதர்களில் முதலாமவரான நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.
உடனே இறை நம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறி, அறியாமல் தம் இறைவனிடம் வேண்டியதால் ஏற்பட்ட தமது தவறை அவர்கள் நினைவு கூர்வார்கள். பிறகு, “நீங்கள் பேரருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு, தாம் (உலக வாழ்வில்) சொன்ன மூன்று பொய்களை எடுத்துக் கூறுவார்கள். பிறகு, “நீங்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவருக்கு அல்லாஹ் தவ்ராத்தை வழங்கி, அவருடன் உரையாடி, தன்னுடன் கலந்துரையாடும் அளவுக்கு நெருக்கம் அளித்த அடியார் ஆவார் அவர்” என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அன்னாரும், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று சொல்லிவிட்டு, (உலகில்) ஒருவரைக் கொலை செய்து விட்டதால் தாம் செய்த குற்றத்தை எடுத்துக் கூறுவார்கள். பிறகு “நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமான, அவனது ஆவியும் வார்த்தையுமான ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று மூசா கூறுவார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர்களும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை; இறைவனால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று சொல்வார்கள். உடனே இறை நம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனை அவனது இல்ல(மான சொர்க்க)த்தில் சந்திக்க அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் என் இறைவனைக் காணும் போது சஜ்தாவில் விழுந்து விடுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டு விடுவான். பிறகு அவன், “எழுங்கள், முஹம்மதே! சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும்” என்று கூறுவான். அப்போது நான் எனது தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி என் இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் நான் வெளியேறி அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.
பிறகு மீண்டும் (இரண்டாம் முறையாக) என் இறைவனை அவனது இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கோருவேன். எனக்கு அதற்கான அனுமதி வழங்கப்படும். நான் இறைவனைக் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் என்னை (அப்படியே) விட்டு விடுவான். பின்னர் “முஹம்மதே! எழுங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; ஏற்கப்படும். கேளுங்கள்; தரப்படும்” என்று கூறுவான். அப்போது நான் எனது தலையைத் தூக்கி, இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பின்னர் நான் பரிந்துரைப்பேன். எனக்கு அவன் வரம்பு விதிப்பான். அப்போது நான் வெளியேறிச் சென்று அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.-
பின்னர் மூன்றாம் முறையாக மறுபடியும் என் இறைவனை அவனது இல்லத்தில் சந்திக்க நான் அனுமதி கேட்பேன். எனக்கு அந்த அனுமதி வழங்கப்படும். இறைவனை நான் காணும்போது சிரவணக்கத்தில் விழுவேன். தான் நாடிய வரை (அப்படியே) என்னை அல்லாஹ் விட்டு விடுவான். பிறகு “முஹம்மதே! எழுங்கள். சொல்க; செவியேற்கப் படும். பரிந்துரை செய்க; ஏற்கப்படும். கோருக; அது தரப்படும்” என இறைவன் கூறுவான். அப்போது நான் எழுந்து, என் இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பின்னர் பரிந்துரைப்பேன். அவன் எனக்கு வரம்பு விதிப்பான். நான் வெளியேறிச் சென்று, அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.
“இறுதியில் குர்ஆன் தடுத்து விட்ட, அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் இருக்க மாட்டார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “(நபியே!) உம் இறைவன் உம்மை (“மகாமும் மஹ்மூத்‘ எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்” எனும் (17:79 ஆவது வசனத்தை) ஓதினார்கள்.
பிறகு இந்த “மகாமும் மஹ்மூத்‘ எனும் இடம் உங்கள் நபிக்காக வாக்களிக்கப்பட்ட இடமாகும்” என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 7440
இந்தக் குர்ஆன் தான் மறுமையில் நடுவராக வந்து நிற்கின்றது. தன்னை வெறுத்தவர்களை சுவனம் செல்ல விடாமல் தடுத்து விடுகின்றது. நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கும் புகாரின் அடிப்படையில், இந்த உலமாக்களுக்கும் சுவனம் தடையாகி விடுகின்றது. அல்லாஹ் காப்பானாக!
இவ்வாறு கூறுகையில் ஒரு கேள்வி எழலாம். மக்காவில் நபி (ஸல்) அவர்களை எதிர்த்தவர்கள் காஃபிர்கள். அவர்கள் மறுமையை நம்பாதவர்கள். இந்த உலமாக்களும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் மறுமை நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களும் அவர்களும் எப்படி ஒன்றாவார்கள்? இது தான் அந்தக் கேள்வி.
இதற்கான விடையை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.
———————————————————————————————————————————————–
இரவுத் தொழுகை
கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி
துணை முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரீ 990
தராவீஹ் தொழுகையும் இரவுத் தொழுகையும் வேறு வேறா?
ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் இஷாவிற்குப் பிறகு ஃபஜ்ர் தொழுகை வரை உள்ள இடைப்பட்ட நேரத்தில் தொழுகின்ற தொழுகை இரவுத் தொழுகையாகும். ரமலான் மாதத்திற்கென்று பிரத்தியேகமாக எந்தத் தொழுகையும் கிடையாது. ஆனால் நபியவர்கள் ரமலான் மாதத்தின் இரவுகளில் இதனைத் தொழுவதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
“நபி (ஸல்) முன்னேரத்தில் ஒரு தொழுகையும் பின்னேரத்தில் ஒரு தொழுகையும் தொழுதுள்ளனர்; எனவே தராவீஹ் என்பது வேறு, தஹஜ்ஜுத் என்பது வேறு‘ என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தவறான கருத்து என்பதைப் பின்வரக்கூடிய ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஒரே தொழுகையைத் தான் பல நிலைகளில் தொழ வைத்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அல்அத்தமா என மக்கள் அழைக்கும் இஷா தொழுகையை முடித்ததிலிருந்து ஃபஜ்ர் வரையுள்ள இடைப்பட்ட நேரத்தில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்: முஸ்லிம் 1340
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகையிலிருந்து பஜ்ர் வரையிலும் தொழுத மொத்த ரக்அத்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்று அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். இந்தத் தொழுகை தஹஜ்ஜுத் தொழுகை என்றால் தராவீஹ் தொழுகை எங்கே? என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் செய்தி, நபி (ஸல்) அவர்கள் இரவில் தொழுதது பல பெயர்களில் உள்ள ஒரே தொழுகையைத் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் பல சான்றுகள் நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன. அவற்றையும் பாருங்கள்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பினுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவு வரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸயீ 1588
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானில் நோன்பு நோற்றோம். ரமலானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழ வைக்கவில்லை. ரமலானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் போது மீண்டும் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தம் குடும்பத்தினரையும் மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு நீண்ட நேரம் தொழவைத்தார்கள்
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: நஸயீ, இப்னு மாஜா 1317
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்ற வரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்) இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதி வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் “ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது” என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்த போது தமது குடும்பத்தினரையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்) தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல்: அபூதாவூத் 1167
இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1340
இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 7452
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 428
நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183
நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 996
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
“ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று ஆயிஷா (ரலி) இடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா
நூல்கள்: புகாரீ 1147, முஸ்லிம் 1344
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி (ஸல்) அவர்களும், அவர்களது மனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள். இரவின் பாதி வரை – கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் – நபி (ஸல்) அவர்கள் தூங்கினார்கள். பின்னர் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள். பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று, தொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) உளூவை நல்ல முறையில் செய்தார்கள். நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூ) செய்து விட்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். எனது வலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ரு தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள். பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத் தொழுகைக்காக (வீட்டை விட்டு) வெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 183, முஸ்லிம் 1400
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 1138, முஸ்லிம் 1402
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள். தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காக) தொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள். (அவர்) வந்ததும் (எழுந்து) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்) தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழு வார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1341
4+5 ரக்அத்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த இரவில் நானும் தங்கியிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளியில்) இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்து நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து “சின்னப் பையன் தூங்கி விட்டானோ?” அல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள். நானும் (அவர்களுடன்) அவர்களது இடப்பக்கமாகப் போய் நின்று கொண்டேன். உடனே என்னை அவர்களின் வலது பக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்) ஐந்து ரக்அத்துகளும் பின்னர் (சுப்ஹின் முன்ன சுன்னத்) இரண்டு இரக்அத்துகளும் தொழுது விட்டு அவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கி விட்டார்கள். பிறது (சுபுஹுத்) தொழுகைக்கு புறப்பட்டார்கள்.
நூல்: புகாரி 117
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். அ(ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1341
9 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) ஏழு ரக்அத்கள் (நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்)” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
7 ரக்அத்கள்
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஃபஜ்ருடைய ஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், ஏழு ரக்அத்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: புகாரீ 1139
5 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
3 ரக்அத்கள்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
1 ரக்அத்
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
தொழும் முன்
நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றுக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1698
நபி (ஸல்) அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள். அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1699
…நபி (ஸல்) அவர்கள் வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது ரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லை. பின்னர் எழுவார்கள். ஸலாம் கொடுக்க மாட்டார்கள். பின்னர் ஏழாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கூறுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்து தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸயீ 1700
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுது கொள்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது. சிலர் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதை பித்அத் என்று வாதிடுகின்றனர். ஆனால் இது தவறான கருத்தாகும். பின்வரும் ஹதீஸை மிகக் கவனமாகப் படித்தால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்ற வரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்) இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதி வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் “ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது” என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்த போது தமது குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்) தவறி விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல்: அபூதாவூத் 1167
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது என்றால் நபியவர்கள் “ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது” என்ற வாசகத்தைக் கூறியிருக்க மாட்டார்கள். எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதும் சிறந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
நபியவர்கள் கடைசி சில நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழாததற்குக் காரணம் அது கடமையில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காகத் தான். எனவே ஜமாஅத்தாகத் தொழுதால் கடமை போன்ற ஒரு நிலை ஏற்படுகிறதே? என்பது தவறான வாதமாகும்.
நபியவர்களுக்குப் பிறகு யாரும் மார்க்கத்தில் புதிதாக உருவாக்க முடியாது. இரவுத் தொழுகை கடமையில்லை என்பதை அனைவரும் விளங்கியே வைத்திருக்கிறார்கள். எனவே ஜமாஅத்தாகத் தொழுவதை யாரும் குறை கூறுவது கூடாது.
வீட்டில் தொழுவதே மிகச் சிறந்தது
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்து நபி (ஸல்) அவர்கள் (அந்த அறைக்கு வராமல்) உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து “உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே! உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகை களைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: புகாரி 731
இரவுத் தொழுகை தவறி விட்டால்…
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்: முஸ்லிம் 1358
20 ரக்அத்களா?
இரவுத் தொழுகை அதாவது மக்களால் தராவீஹ் என்று அழைக்கப்படும் தொழுகை 20 ரக்அத்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். அதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் ஜமாஅத்துடன் அல்லாமல் இருபது ரக்அத்களும் வித்ரும் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: பைஹகீ 4391
இந்தச் செய்தி மட்டும் தான் தராவீஹ் 20 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புபடுத்தி வரும் ஹதீஸாகும். ஆனால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல என்று இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்தச் செய்தியில் இடம் பெறும் அபூஷைபா என்பவர் பலவீனமானவர் என்று அந்த ஹதீஸின் அடிக்குறிப்பிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.
அடுத்தாக அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம், உமர் (ரலி) அவர்கள் தொடர்புடையதாகும்.
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர் என்று யஸீத் பின் ரூமான் என்பவர் கூறுகிறார்.
நூல்: முஅத்தா 233
இந்தச் செய்தியைப் பற்றி விமர்சனம் செய்யும் இமாம் பைஹகீ அவர்கள், “யஸீத் பின் ரூமான் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தை அடையவில்லை. அதாவது உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்கவில்லை’ என்று தமது அல்மரிஃபா என்ற நூலில் குறிப்பிடுவதாக ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஸைலயீ அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.
நூல்: நஸபுர் ராயா,
பாகம்: 2, பக்கம்: 154
உமர் (ரலி) அவர்கள் காலத்தில் பிறக்காத ஒருவர் அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை எவ்வாறு கூற முடியும்?
எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகின்றது,
மேலும் இதற்கு மாற்றமாக உமர் (ரலி) அவர்கள் 8+3 ரக்அத்கள் தொழுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான செய்தி இமாம் மாலிக் அவர்களின் அல்முஅத்தா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உபை பின் கஅப் (ரலி), தமீமுத்தாரீ (ரலி) ஆகிய இருவரையும் (8+3) 11 ரக்அத்கள் மக்களுக்குத் தொழுவிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத்
நூல்: முஅத்தா (232)
உமர் (ரலி) காலத்தில் மக்கள் தொழுதார்கள், உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற இரண்டு செய்திகளில் உமர் (ரலி) அவர்கள் எதில் தொடர்பு உடையவர்களாக இருக்கிறார்கள்?
மக்கள் செய்தார்கள் என்பதில் உமர் (ரலி) அவர்களுக்கு எங்கே தொடர்பு உள்ளது? உமர் (ரலி) அவர்கள் 8+3 தொழுமாறு கட்டளையிட்டார்கள் என்பதில் தான் நேரடியான தெளிவான தொடர்பு உள்ளது என்பதோடு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் ஒத்துப் போகிறது. எனவே இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை என்பதே சரியானதாகும்.
இஸ்லாத்தின் தூணாக விளங்கக் கூடிய மக்காவில் தராவீஹ் 20 ரக்அத்கள் தான் தொழுகிறார்கள். இதை ஏன் நாம் பின்பற்றக் கூடாது? என்று கேட்கின்றனர்.
இஸ்லாத்தின் தூண் என்று இவர்கள் கூறும் மக்காவிலுள்ள கஅபத்துல்லாஹ்வில் தான் எண்ணற்ற சிலைகள் இருந்தன. அல்லாஹ்வை வணங்குவதற்குக் கட்டப்பட்ட முதல் ஆலயமாக அது இருந்தும் சிலை வணக்கத்தை நபிகளார் ஆதரிக்கவில்லை. மாறாக கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் படைத்தவனின் கட்டளைக்கு அது மாற்றமாக இருந்ததால்! எனவே நம்மைப் படைத்த இறைவன் என்ன கட்டளையிட்டுள்ளான் என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.
மேலும் இன்றளவும் மக்காவில் சில விஷயங்கள் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதை அங்குள்ள சில உலமாக்கள் எதிர்த்துக் கொண்டும் உள்ளனர்.
மேலும் சவுதியில் உள்ள பல உலமாக்கள் இரவுத் தொழுகையை நாம் சொன்ன அடிப்படையில் தான் நடைமுறைப்படுத்துகின்றனர்.
எனவே கஅபாவில் இரவுத் தொழுகை 20 ரக்அத்கள் நடத்தி வருவதற்கு நபிவழியில் எந்தச் சான்றும் இல்லை. இவ்வாறு அங்கு நடைபெற்று வருவதற்கு ஆட்சியாளர் களும், அதைக் கண்டிக்காத அங்குள்ள உலமாக்களும் தான் பொறுப்பாவார்கள்.
இரவுத் தொழுகையின் எண்ணிக்கையில் ஏன் குழப்புகிறீர்கள்?
இதற்கு முன்பு வரை 11 ரக்அத்துக்கு மேல் இரவுத் தொழுகை கிடையாது என்ற நீங்கள் தற்போது 13 தொழலாம் என்று கூறுகிறீர்களே? ஏன் இந்தக் குழப்பம்? இது சரிதானா? என்று கேட்கின்றனர்.
நடைமுறையில் இரவுத் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று வரையறை செய்து நடைமுறைப் படுத்தி வந்ததால் நாம் அதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இல்லை என்றும், நபிகளார் பெரும்பான்மையாகத் தொழுதது 8+3 என்றும் கூறி வருகிறோம். மேலும் அந்த ஹதீஸில் 8+3 ரக்அத்துக்கு மேல் நபி (ஸல்) அவர்கள் அதிகப்படுத்தியதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதால் 8+3 தவிர வேறு எண்ணிக்கை இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர நாம் அவ்வாறு கூறவில்லை.
நாம் ஆரம்ப காலத்திலும் 13 ரக்அத்கள் தொழலாம் என்றே கூறியுள்ளோம். (பார்க்க: 1990 ஆண்டு ஜனவரியில் நாம் வெளியிட்ட “தொழுகை’ என்ற புத்தகம், பக்கம்: 219, 220)
நாம் ஏற்கனவே அந்தக் கருத்தைக் கூறியிருக்காவிட்டாலும் ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போது நமக்குக் கிடைக்கும் விஷயங்களை மக்களுக்குக் கூறுவது தான் இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். “நாம் முன்னர் ஒன்று கூறி விட்டோமே! இப்போது அதற்கு மாற்றமாக அமைந்து விடுமே’ என்று எண்ணி, சொல்லாமல் இருப்பது மார்க்கத்தை மறைப்பதாகும்; இறையச்சத்திற்கு எதிரானதாகும்.
எனவே நம்மை யார், எப்படி விமர்சனம் செய்தாலும் சத்தியத்தைச் சொல்வதற்கு ஒரு போதும் தயங்க மாட்டோம்.
————————————————————————————————————————————————
ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் – 10
மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்
அபூஉஸாமா
அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் இழிவுபடுத்துகின்ற யூதர்கள், மலக்குகளையும் இழிவுபடுத்தத் தவறவில்லை. இறைத் தூதர்களுக்கு மத்தியில் ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்தி வேறுபாடு கற்பிப்பது போன்று மலக்குகளான இறைத் தூதர்களுக்கு மத்தியிலும் வேறுபாடு கற்பிக்கின்றது யூத இனம்!
இதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்” என்று கூறினார்கள். பிறகு, “1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து தெரிவித்தார்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், “ஜிப்ரீலா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று பதிலளிக்க, “வானவர்களிலேயே ஜிப்ரீல் தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!” என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்” எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்…. (சுருக்கம்)
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 4480
அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 2:98
இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று தெளிவுபடுத்தி, யார் ஜிப்ரீலுக்கு எதிரியோ அவர் தனக்கும் எதிரி என்று அல்லாஹ் பிரகடனப் படுத்துகின்றான்.
மலக்குகளை மட்டம் தட்டும் இந்த வழக்கம் யூதர்களின் ஈனப் புத்தியும் இழிவான பண்புமாகும்.
நூலைப் போல சேலை
தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை என்று சொல்வது போன்று யூத மதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியா மதமும் அந்த வேலையை அப்படியே செய்கின்றது.
“காதில் (இறைச் செய்தி) அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். கனவில் செய்தி அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். தட்டையில் விழும் மணியோசை போல் இறை அறிவிப்பு ஓசையைச் செவியுறுவோரும் நம்மில் உள்ளனர். ஜிப்ரயீல், மீகாயீலை விடப் பிரம்மாண்டமான தோற்றமுள்ள மலக்குகள் வரக் கூடியவர்களும் நம்மிடம் இருக்கிறார்கள்” என அபூ அப்துல்லாஹ் கூற நான் செவியுற்றேன்.
நூல்: பஸாயிருத் தரஜாத்
ஜிப்ரயீலை விட, மீகாயீலை விட சிறந்த மலக்குகள் இவர்களிடம் வருகிறார்களாம். இந்த ஷியாக்களுக்கு என்ன திமிர் பாருங்கள்.
ஜிப்ரயீல் (அலை) அவர்களை அல்லாஹ் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுகின்றான். அவர்களுக்கு மாபெரும் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் அளித்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.
இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும். வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர். வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.
அல்குர்ஆன் 81:19-21
அஷ்ஷுஃரா அத்தியாயத்தின் 193வது வசனத்தில் நம்பிக்கைக்குரிய உயிர் என்று நற்சான்று வழங்குகின்றான்.
அல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்த போது, அவர்களுக்குத் தன்னுடைய அற்புதங்களைக் காட்டினான். அந்த வரிசையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கும் காட்சியை வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றான்.
அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.
அல்குர்ஆன் 53:5-14
வானவர்களில் அவருக்கு மேலானவர் இல்லை என்பதை இந்த வசனங்களும் 26:192, 2:253, 5:110, 16:102 ஆகிய வசனங்களும் எடுத்துக் காட்டுகின்றன.
ஆனால் ஷியாக்களோ ஜிப்ரீலை விட சிறந்த மலக்கும் தங்களிடம் வருவதாகக் கூறுகின்றனர். இங்கு ஜிப்ரயீல் (அலை) அவர்களை மட்டும் இவர்கள் மட்டம் தட்டவில்லை. நபி (ஸல்) அவர்களையும் சேர்த்தே மட்டம் தட்டுகின்றனர் இந்த ஷியா ஷைத்தான்கள்.
முஹம்மதுக்கு வந்தவர் ஜிப்ரயீல்! அதாவது அவரது தரத்திற்கு ஜிப்ரயீல் வந்திருக்கிறார். எங்கள் இமாமுக்கு வந்தவர் ஜிப்ரயீலை விட, மீகாயீலை விட உயர்ந்தவர். அதாவது எங்கள் இமாமின் தரத்திற்குத் தக்க சிறந்த மலக்கு வந்திருக்கிறார் என்று கூற வருகின்றனர். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் தரத்தையும் காலில் போட்டு மிதிக்கின்றனர்.
ஷியாக்களின் இமாம்கள் நபிமார்களை விட உயர்ந்தவர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை! அதைப் பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் இடம் பெறவுள்ளது. இப்போது ஜிப்ரயீல் தொடர்பாக இவர்கள் கொண்டிருக்கும் மட்டரகமான சிந்தனையை மட்டும் பார்ப்போம்.
ஜிப்ரயீலை யாருக்குப் பிடிக்காது? யூதர்களுக்குப் பிடிக்காது. அதனால் யூதர்களின் கள்ளப்பிள்ளையான ஷியாக்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே தான் ஜிப்ரயீலை விட சிறந்த மலக்கு வருகிறார் என்ற பொய் தத்துவத்தை உதிர்க்கின்றனர்.
இந்தச் சிந்தனையைத் தான் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்ற பெயர் தாங்கிகளும் கொண்டிருக்கிறார்கள். ஷியாக்களின் கொள்கையைப் பிரதிபலித்து, ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள்.
மண் கேட்ட படலம்
ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களை பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராஃபீலை அனுப்பிய போது, அவர்களும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.
இப்படியொரு கதை சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களால் பல மேடைகளில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் வெளியிடும் நூற்களிலும் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது.
அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
அல்குர்ஆன் 3:83
இந்த வசனத்திற்கும் இது போன்ற ஏராளமான வசனங்களுக்கும் மாற்றமாக, பூமி அல்லாஹ்வின் உத்தரவுக்குக் கட்டுப்படவில்லை என இந்தக் கதையில் கூறப்படுகின்றது. இது ஒரு புறமிருக்க, மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராபீல் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா?
மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள்; மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.
திருக்குர்ஆன் 16:49, 50
“‘அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்” எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
திருக்குர்ஆன் 21:26, 27
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
திருக்குர்ஆன் 66:6
சிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?
இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று தெளிவாக்கும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இந்தக் கதை முரண்படுகிறது.
மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.
அந்தப் பணியைச் செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும், அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.
யூதர்களைப் போன்று ஒரு மலக்கை உயர்த்தி, மற்றொரு மலக்கை மட்டம் தட்டுகிறார்கள். மண்ணைப் பிடுங்கி வருவதற்குக் கூட இவருக்குத் தகுதியில்லை என்று கூறி ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள். இந்தக் கதைகளை ஆதரிக்கும் மவ்லவிகள் தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வது தான் கேலிக் கூத்து.
இத்துடன் இவர்கள் நிற்கவில்லை. ஜிப்ரயீல் (அலை) அவர்களை ஒரு பாவியாகவும் நினைத்துப் பாடலும் பாடுகிறார்கள்.
என்னை அச்சுறுத்தும் அளவுக்கு அநீதி இழைக்கப் பட்டால், “தலைவர்களுக்கெல்லாம் தலைவரே! என் ஊன்றுகோலே!’ என்று நான் உங்களை அழைப்பேன். என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள். என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள். என்றென்றும் நிரந்தரமான திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அருளால் எனது குறைகளைக் காலா காலம் மறைத்து விடுங்கள். (சுப்ஹான மவ்லிது)
இவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பாடியதாக சுப்ஹான மவ்லிதில் கூறபட்டுள்ளது.
மலக்குகளின் தலைவர், வலிமை மிக்கவர் என்று அல்லாஹ்வால் புகழ்ந்து பாராட்டப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களையே அச்சுறுத்தி அநீதி இழைத்திட மற்றவர்களால் முடியும் என்று இந்த மவ்லிது வரிகள் கூறுகின்றன.
மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைக்கக் கூடியவர் என்றும் குறைகள் உடையவர் என்றும் இந்த வரிகள் கூறுகின்றன. ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைப்பார்கள் என்று கூறினால் அவர்கள் கொண்டு வந்த வஹீயிலும் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி விடாதா?
இந்தத் தவறுகளையெல்லாம் விட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடம் பாதுகாப்பு தேடுவதாகக் கூறுவது தான் இதில் கொடுமை!
மனிதர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் கூட நபி (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கூறவில்லை. தன்னிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)
அல்குர்ஆன் 2:186
அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் மூலமாக இந்த வசனத்தில் மக்களுக்கு அறிவிக்கச் சொல்கின்றான். மனிதர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்ட யாரிடமும் உதவி தேடக் கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் எனும் போது, இந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உதவி தேட வேண்டிய அவசியம் என்ன?
ஆக, ஜிப்ரீல் (அலை) அவர்களை பலவீனராகவும், தவறிழைக்கக் கூடியவராகவும் சித்தரித்து, அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததாகக் காட்டுவது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. மவ்லிதை இயற்றியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மீதுள்ள வெறுப்பு இங்கு அம்பலமாகின்றது.
ஜிப்ரீல் (அலை) அவர்களை முஃமின்கள் யாரும் வெறுக்க முடியாது. அப்படி வெறுப்பவர் உண்மை முஃமினாக இருக்க முடியாது. யூதர்கள் தான் ஜிப்ரீல் (அலை) அவர்களை வெறுப்பார்கள் என்பதை மேலே நாம் இடம் பெறச் செய்துள்ள புகாரி 4480வது ஹதீஸில் காணலாம். இதனால் தான் ஜிப்ரீலின் எதிரி தனக்கும் எதிரி என்று அல்லாஹ் தன் திருமறையில் பிரகடனம் செய்கின்றான்.
ஆக இந்த அளவுக்கு அல்லாஹ்வினால் அந்தஸ்தும் மரியாதையும் வழங்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களை இந்த மவ்லிதுகள் எவ்வளவு மட்டரகமாக நடத்துகின்றன என்பதைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையில் உருவான கைச்சரக்கு தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
இப்போது சொல்லுங்கள்! சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த மவ்லவிகள் யார்? இவர்களும் கடைந்தெடுத்த பக்கா ஷியாக்கள் தான். பகிரங்க பரேலவிகள், நரகத்திற்கு அழைத்துச் செல்லும் முகவர்களான இவர்களைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தியுங்கள்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
————————————————————————————————————————————————
ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் யார்?
உண்மையை மறைக்கும் லால் பேட்டை மன்பவுல் அன்வார்
கே.எம். அப்துந்நாஸிர், கடையநல்லூர்
இறந்தவருக்கு, அவருடைய வாரிசுகளோ அல்லது நெருங்கிய உறவினரோ தான் தொழுகை நடத்த உரிமை பெற்றவர் என்பதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் தெளிவாக நமக்கு போதிக்கின்றன.
ஆனால் நாங்கள் சுன்னத் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்பவர்கள் நபி வழிக்கு மாற்றமாக, “எங்களுடைய பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்துவார். உங்களை தொழுகை நடத்த விட மாட்டோம்’ என்று கூறி இறையாலயத்தில் களேபரத்தை உண்டாக்குகின்றனர்.
இதற்குக் காரணம் மார்க்கத்தைக் கற்ற மவ்லவிகள், மக்களுக்கு எது உண்மையோ அதனை போதிக்காமல் மார்க்கத்திற்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை மார்க்கம் என்று போதிப்பது தான். இவர்களுடைய பித்தலாட்டங்களை மக்களும் தெளிவாக உணர்ந்தே இருக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக, “ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு தகுதியானவர் யார்?’ என்பது தொடர்பாக லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபி மதரஸா மார்க்கத் தீர்ப்பு என்ற பெயரில் வழங்கிய விஷயத்தைக் கூறலாம்.
வலங்கைமான் பகுதியில் ஒரு தவ்ஹீத் சகோதரர் தன்னுடைய உறவினருக்குத் தானே தொழுகை நடத்துவதற்கு உரிமை படைத்தவர் என்ற அடிப்படையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாஸா தொழுகை நடத்தினார். நல்ல முறையில் அடக்கமும் செய்யப் பட்டது. இறந்தவரின் நெருங்கிய உறவினர் தான் தொழுகை நடத்தத் தகுதியானவர் என்று குர்ஆன், ஹதீஸ் ஒளியில் பிரச்சார நோட்டீஸ்களும் விநியோகம் செய்யப்பட்டன.
இதற்கு எதிராக மார்க்கத் தீர்ப்பு என்ற பெயரில் லால்பேட்டை மன்பவுல் அன்வார் மதரஸாவின் மார்க்கத் தீர்ப்பு மையம் ஒரு சட்டத்தைக் கூறியுள்ளது. அதாவது பள்ளிவாசல் இமாம் தான் ஜனாஸா தொழுகை நடத்தத் தகுதியானவர் என்பது தான் அதன் சாராம்சம். அதில் அவர்கள் பல விதமான இருட்டடிப்புகளைக் செய்துள்ளனர். தான் கூறிய கருத்தில் ஒருவன் முரண்பட்டுக் கூறுவதே அக்கருத்து தவறு என்பதற்கு மாபெரும் ஆதாரமாகும். அவர்கள் வெளியிட்டுள்ள ஃபத்வா ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் அமைந்திருப்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
இறந்தவருக்கு, பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்த வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டுவதற்காக மன்பவுல் அன்வார் மார்க்கத் தீர்ப்பு மையம் மூன்று ஆதாரங்களைக் காட்டியுள்ளது.
அதில் முதல் ஆதாரம் மார்க்கத்திற்கு அறவே தொடர்பில்லாத ஒன்றாகும். அவர்கள் காட்டியுள்ள முதல் ஆதாரமே இவர்களுடைய கருத்து உண்மைக்கு எதிரானது என்பதற்குத் தெளிவான சான்றாகும். இதோ அவர்களுடைய முதல் சான்றைப் பாருங்கள்.
முதல் ஆதாரமும் முறையான விளக்கமும்
ஜனாஸா தொழுகை நடத்த முதல் உரிமை முஸ்லிம் ஆட்சியாளருக்கும், அவர் இல்லையென்றால் காஜிக்கும், அடுத்த உரிமை அப்பள்ளியில் தொழ வைக்கும் இமாமிற்கும், அடுத்து மய்யித்தின் வலீ (பொறுப்புதாரிக்கும்) உரியதாகும்.
நூல்: ஃபதாவா ஆலம்கீரி
பாகம்: 1, பக்கம்: 163
மேற்கண்ட வாசகம் திருக்குர்ஆனிலோ, திருநபி ஹதீஸ்களிலோ உள்ளவை என்று எண்ணி விடாதீர்கள். மாறாக இந்த மத்ஹபுவாதிகள் குர்ஆன், ஹதீஸை விட மேலாக மதிக்கின்ற மத்ஹபு நூற்களில் இடம் பெற்ற வாசகங்கள் தான். அதிலும் இந்த ஆலம்கீரி என்ற புத்தகம் முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில் எழுதப்பட்டது தான். அவுரங்கசீப் கி.பி. 1658 முதல் கி.பி. 1707 வரை வாழ்ந்திருக்கிறார்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பிந்தியவர்கள் எழுதிய நூலிலிருந்து தான் இவர்கள் மார்க்கத் தீர்ப்பை எடுத்துள்ளனர். நாம் கூறுவதோ நபியவர்கள் கூறிய ஹதீஸ். இவர்கள் கூறுவதோ நபியவர்களுக்கு 1000 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒருவர் எழுதி வைத்த வாசகங்களை! இதனை பொது மக்கள் நன்றாகவே விளங்கி வைத்துள்ளனர்.
மார்க்கத்தின் மூலாதாரங்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான். குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இல்லாத ஒன்றை ஒருவன் மார்க்கத்தின் ஆதாரமாகக் கருதினால் அவனை விட வழிகெட்டவன் யார் இருக்க முடியும்? இவர்களாகவே ஒரு நூலை எழுதி வைத்துக் கொண்டு அதிலுள்ள வாசகங்களை மார்க்க ஆதாரமாக ஆக்குகின்றவர்களுக்கு திருமறைக் குர்ஆன் விடுக்கின்ற எச்சரிக்கையைப் பாருங்கள்.
தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது‘ என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.
அல்குர்ஆன் 2:79
மன்பவுல் அன்வார் மார்க்க் தீர்ப்பு மையம் காட்டிய முதல் சான்று எவ்வளவு பெரிய மோசடி என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
இரண்டாவது ஆதாரமும் இருட்டடிப்பும்
இறந்தவருக்கு, பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதற்கு மன்பவுல் அன்வார் மார்க்கத் தீர்ப்பு மையம் இரண்டாவது சான்றாகப் பின்வரும் சம்பவத்தைக் கூறியுள்ளது.
அலீ (ரலி) அவர்களின் மகன் ஹசன் (ரலி) மரணமடைந்த போது அவர்களின் சகோதரர் ஹுசைன் (ரலி) அவர்கள் அப்போது மதீனாவின் கவர்னராக இருந்த ஸயீதுப்னு ஆஸ் (ரலி) அவர்களை முன்சென்று ஜனாஸா தொழ வைக்கக் கேட்டுக் கொண்டார்கள். அத்துடன், “நபியவர்களின் சுன்னத் மட்டும் இல்லையென்றால் உங்களை முற்படுத்தியிருக்க மாட்டேன்’ என்றும் சொன்னார்.
நூல்: பஜ்ஜார், தப்ரானி
இதனுடைய அறிவிப்பாளர்கள் வரிசையில் சில குறைபாடுகள் இருந்தாலும் இந்த ஆதாரமும் அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு எதிரான ஆதாரம் தான். இந்தச் செய்தியைப் பல தடவை படித்துப் பாருங்கள். எங்காவது பள்ளிவாசல் இமாம் தொழுகை நடத்த வேண்டும் என்று வந்துள்ளதா? மதீனாவின் ஆட்சியாளரை ஹுசைன் (ரலி) அவர்கள் முற்படுத்தியதாகத் தான் வந்துள்ளதே தவிர பள்ளிவாசல் இமாமை முற்படுத்தியதாக வரவில்லையே? வலங்கைமான் பள்ளிவாசல் இமாம் என்ன தமிழக முதல்வரா? இல்லை, இந்தியப் பிரதமரா? குறைந்த பட்சம் நகராட்சித் தலைவராகவாவது இருக்கிறாரா?
உண்மையில் இதில் அவர்களுக்கு எவ்வித சான்றும் இல்லை. மாறாக இறந்தவருடைய பொறுப்புதாரி விரும்பினால் யாரை வேண்டுமானாலும் தொழுவிக்கச் சொல்லக்கூடிய அதிகாரம் அவருக்கு இருக்கிறது. இறந்தவருடைய உறவினர் தான் அதற்கு உரிமை படைத்தவர் என்பதால் தான் ஹுசைன் (ரலி) அவர்கள் ஸயீதுப்னுல் ஆஸ் அவர்களை முற்படுத்துகிறார்களே தவிர ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி) தாமாக முன் சென்று தொழுவிக்கவில்லை.
இறந்தவரின் பொறுப்புதாரி, தான் தொழுவிக்காமல் மற்றவரை தொழுகை நடத்துமாறு கூறுவதும் நபிவழியில் உள்ளது என்பதால் தான், “நபியவர்களின் சுன்னத் மட்டும் இல்லையென்றால் உங்களை முற்படுத்தியிருக்க மாட்டேன்’ என்று ஹுசைன் (ரலி) கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்தால் அமீராக இருப்பவர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது வலியுறுத்தப் படவில்லை என்பதை விளங்கலாம்.
நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு புதிய கப்ரைக் கண்டு இது யார்? என்று கேட்டார்கள். “இது இன்ன ஆள்? இன்ன கிளையாருடைய அடிமையாவார்’ என்று சொன்னதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணைத் தெரிந்து கொண்டார்கள். “அந்தப் பெண்மணி மதிய நேரத்தில் இறந்து விட்டார். அந்தப் பகல் நேரத்தில் நீங்கள் துôங்கிக் கொண்டிருக்கும் போது உங்களை நாங்கள் எழுப்ப விரும்பவில்லை” என்று நபித் தோழர்கள் பதில் கூறினார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு நின்றார்கள். அவர்களுக்கு பின்னால் நபித்தோழர்கள் நின்றனர். அந்தத் தொழுகையில் நான்கு தக்பீர் சொன்னார்கள். பிறகு, “நான் உங்கள் மத்தியில் இருக்கும் போது உங்களில் யார் இறந்தாலும் எனக்குத் தெரிவிக்காமல் இருக்கக் கூடாது. நிச்சயமாக எனது தொழுகை இறந்தவருக்கு அருட்கொடையாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஸீத் பின் ஸாபித் (ரலி)
நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் போது அவர்களுக்குத் தெரியாமலேயே ஒரு பெண்ணை ஸஹாபாக்கள் அடக்கம் செய்திருக்கின்றார்கள். இதைத் தெரிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் ஒரு ஆட்சியாளர். என்னைத் தான் ஜனாஸா தொழுகை நடத்த அழைக்க வேண்டும்‘ என்று சொல்லவில்லை. தாம் ஒரு இறைத்தூதர் என்ற அடிப்படையில் ஜனாஸா தொழுகை நடத்தினால் அந்த மய்யித்திற்கு நன்மையாகும் என்ற கருத்தைக் கூறுகின்றார்கள். இதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. எனவே ஆட்சியாளர் தான் தொழுகை நடத்த வேண்டும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் எல்லா மய்யித்திற்கும் ஜனாஸா தொழுதார்கள் என்பதை அடிப்படையாக வைத்து ஆட்சியாளர் ஜனாஸா தொழுவிப்பது சுன்னத் என்று கூற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு தொழுததற்கான காரணம், அவர்களது தொழுகை இறந்தவருக்கு அருட்கொடை என்பதால் தானே தவிர ஆட்சியாளர் என்பதற்காக அல்ல என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
“ஒரு மனிதருடைய குடும்பத்தார் விஷயத்திலும், அவனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட இடத்திலும் அவனுடைய அனுமதியின்றி நீ இமாமத் செய்யாதே!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம்
இந்த ஹதீஸில் ஒருவருடைய குடும்பத்தாரிடம் மற்றவர்கள் இமாமத் செய்யக்கூடாது என்று கூறப்படுவதால் ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு அதிக தகுதி படைத்தவர் இறந்தவருடைய குடும்பத்தினர் தான் என்பதை விளங்கலாம். அவர்கள் அனுமதித்தால் மற்றவர்கள் இமாமத் ùச்யயலாம்.
இந்த ஹதீஸில் ஒருவருடைய குடும்பத்தாரிடம் மற்றவர்கள் இமாமத் செய்யக்கூடாது என்று தான் நபியவர்கள் கூறுகிறார்கள். எனவே வீடாக இருந்தாலும் பள்ளியாக இருந்தாலும் ஒருவருடைய குடும்பத்தாரின் விஷயத்தில் மற்றவர்கள் குறுக்கீடு செய்யக்கூடாது என்பது தான் இதனுடைய பொருளே தவிர வீட்டில் வைத்து இமாமத் செய்வதை மட்டும் தான் இது குறிக்கும் என்பது அறியாமையாகும்.
மூன்றாவது ஆதாரமும் முரண்பாடுகளும்
இறந்தவருக்குப் பள்ளிவாசல் இமாம் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதற்கு ஆதாரமாக மூன்றாவதாக, பின்வரும் செய்தியைக் கூறியுள்ளனர்.
அமீருல் முஃமினீன் உமர் (ரலி) ஷஹீதாக்கப்பட்டபோது உஸ்மான் (ரலி)யும், அலீ (ரலி)யும் ஜனாஸா தொழ வைக்க முற்பட்டார்கள். “ஃபர்ளு தொழுகைக்கு இமாமாக இருந்து தொழ வைக்கின்ற நானே உமர் (ரலி) அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்கு முதல் உரிமை பெற்றவன்” என்று கூறி சுஹைப் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தி வைத்தார்கள்.
அறிவிப்பாளர்: உர்வா
நூல்: முஸ்தத்ரக் (பதாவா உஸ்ஸனாயில்)
மேற்கண்ட சம்பவம் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் நடந்ததாகும். நபியவர்கள் கூறியதாக இதில் எந்தக் கருத்தும் இல்லை. நபியவர்களோடு இம்மார்க்கம் முழுமை பெற்று விட்டது. அதற்குப் பிறகு யாருடைய நடைமுறையும் கருத்தும் மார்க்கமாகாது. எனவே மேற்கண்ட செய்தி மார்க்க ஆதாரமாகக் கொள்வதற்குத் தகுதியற்றதாகும்.
மேலும் மேற்கண்ட செய்தி மன்பவுல் அன்வார் உலமாக்களின் கருத்திற்கே எதிரானதாகும். அவர்களுடைய கருத்துப் படி ஆட்சியாளர் இருக்கும் போது அவர் தொழுகை நடத்துவது தான் சரியானதாகும். அப்படி இருக்கும் போது இமாமாக இருந்த சுஹைப் (ரலி) அவர்கள் தொழுகை நடத்தியது எப்படி அவர்களுக்குரிய சான்றாக முடியும்?
மேலும் இதிலும் பல மோசடிகளை மன்பவுல் அன்வார் மார்க்கத் தீர்ப்பு மையம் செய்துள்ளது, உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் மத்தியில் ஜனாஸா தொழுகை நடத்துவதில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வகையில் பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் தான் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக சுஹைப் (ரலி) அவர்கள் மேற்கண்ட வாசகத்தைக் கூறி தொழுகை நடத்துகிறார்கள்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் ஆட்சியாளராக இருக்கும் போதே சுஹைப் (ரலி) அவர்களை மக்களுக்குத் தொழுகை நடத்தும் இமாமாக நியமித்து விட்டுச் செல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சுஹைப் (ரலி) ஜனாஸா தொழுகை நடத்தினார்களே தவிர இதுதான் மார்க்கச் சட்டம் என்ற அடிப்படையில் அல்ல. மொத்தத்தில் இது நபியவர்கள் காலத்தில் நடந்ததில்லை என்பதும் நபியவர்களின் போதனை இவ்வாறு அமையவில்லை என்பதுமே போதுமான சான்றாகும்.
மன்பவுல் அன்வார் பதில் கூறுமா?
குர்ஆன் ஹதீஸை விட்டு விட்டு மத்ஹபுகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மன்பவுல் அன்வார், அந்த மத்ஹபு இமாம்களின் கருத்தையாவது மதிக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இறந்தவருக்கு அவருடைய நெருங்கிய உறவினர்கள் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதை ஹனஃபி மத்ஹப் இமாம்களே மிக வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் அபூ யூசுஃபின் விளக்கம்
அபூ யூசுஃப் அவர்களுடைய கருத்துப் படி “அரசனை விட நெருங்கிய உறவினர் தான் (தொழுகை நடத்துவதற்கு) மிக உரிமை படைத்தவராவார். இது தான் இமாம் ஷாஃபி அவர்களின் கருத்துமாகும். அபூ யூசுஃப், ஷாஃபி ஆகியோரிடத்தில் ஜனாஸா தொழுகையாகிறது உறவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு காரியமாகும். இது போன்றவற்றிலே திருமணம் மற்றும் இன்ன பிற காரியங்களைப் போன்று உறவினரே அரசனை விட முற்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்தத் தொழுகையாகிறது இறந்தவருக்கு பிரார்த்திப்பதற்காகவும், பரிந்துரை செய்வதற்காகவும் தான் மார்க்கக் கடமையாக்கப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரின் பிரார்த்தனை தான் மிக ஏற்றமானதாகும். ஏனெனில் அவர் தான் மனத் தூய்மையான பிரார்த்தனையில் உச்ச நிலையில் இருப்பார். (இறந்தவரின் மீதுள்ள) தன்னுடைய அதிகமான அன்பின் காரணமாக அவரின் உள்ளத்தை பிரார்த்தனையில் லயிக்கச் செய்வார். அவரிடம் மென்மையும் பணிவும் காணப்படும். எனவே பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அவர் மிகவும் நெருக்கமானவராகி விட்டார்.
ஹனஃபி மத்ஹப் நூல்: பதாயிவுஸ் ஸனாயி, பாகம்: 3, பக்கம்: 320
இமாம் அபூ யூசுஃப் கூறுகிறார்: இறந்தவருடைய பொறுப்புதாரி தான் அவருக்குத் தொழுகை நடத்துவதற்கு மிக உரிமை படைத்தவராவார். ஏனென்றால் இதுவாகிறது திருமணத்தைப் போன்று உறவோடு சம்பந்தப்பட்ட ஒரு சட்டமாகும்
ஹனஃபி மத்ஹப் நூல்: தப்யீனுல் ஹகாயிக், பாகம்: 3, பக்கம்: 175
இறந்தவருக்குத் தொழுகை நடத்தும் உரிமை அவருடைய உறவினர்களுக்குத் தான் இருக்கிறது. உறவினரல்லாதவர்கள் உறவினர்களின் உரிமையை பாழாக்குதல் கூடாது.
ஹனஃபி மத்ஹப் நூல்: அல்மப்சூத் பாகம்: 2, பக்கம்: 125
ஷாஃபி (ரஹ்) அவர்களின் விளக்கம்
இறந்தவருக்கு அவரது மகன் தான் தொழுகை நடத்த வேண்டும் என இமாம் ஷாஃபி அவர்கள் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இறந்தவருக்குத் தொழுகை நடத்துவதற்கு மிகவும் உரிமை படைத்தவர் (அவருடைய) தந்தை ஆவார். அடுத்த நிலையில் உள்ளவர் சிறிய தந்தை. அதற்கடுத்து வருபவர் மகன். அதற்கடுத்து வருபவர் மகனுடைய மகன். அதற்கடுத்து வருபவர் சகோதரர். அதற்கடுத்து வருபவர் சகோதரருடைய மகன். அதற்கடுத்து வருபவர் சிறிய தந்தை. அதற்கடுத்து வருபவர் சிறிய தந்தையின் மகன். இவ்வாறே சொந்தங்களில் மிகவும் நெருக்கமானவர்களின் வரிசை அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஏனென்றால், இறந்த ஒருவருக்கு தொழுகை நடத்துவதன் நோக்கம் அவருக்காகப் பிரார்த்தனை செய்வதாகும். இவர்களுடைய பிரார்த்தனை தான் இறைவன் ஏற்றுக் கொள்வதற்கு மிகத் தகுதியானதாகும். ஏனென்றால், இவர்கள் மற்றவர்களை விட இறந்தவரின் மீது நெருக்கம் உடையவர்கள். எனவே, இவர்களே இறந்தவருக்குத் தொழுகை நடத்துவதற்கு மிகவும் உரிமை படைத்தவர்கள்.
நூல்: அல் முஹத்தப்
பாகம்: 1, பக்கம்: 132
எனவே உண்மையான சத்தியத் கருத்துகளை சிந்தித்துப் பாருத்து முடிவு செய்யுங்கள். அசத்திய வாதிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
————————————————————————————————————————————————
மெஞ்ஞானமும் பொய் ஞானமும்
எம். ஷம்சுல்லுஹா
உலகத்தில் மனிதன், மனிதனைக் கடவுளாக்குவதற்குப் பல அடிப்படை விஷயங்கள் காரணமாக அமைகின்றன. அவற்றில் ஒன்று புரோகிதம், இடைத்தரகு!
அல்லாஹ்வை அடைவதற்கு ஓர் இடைத் தரகர் வேண்டும்; புரோகிதர் வேண்டும் என்ற நம்பிக்கை இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மதங்களிலும் இருக்கின்றது. இதை உலகத்தில் உடைத்தெறிந்தது இஸ்லாமிய மார்க்கம் மட்டும் தான்.
கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்று கொண்டிருக்கும் போது “அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்‘ அல்லது “அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்‘. ஆகவே, எவரும் தமது கிப்லா திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 405
இவ்வாறு தொழுகை மூலம் இறைவனுடன் ஒருவரை உரையாட வைத்து இடைத் தரகுகளை இஸ்லாம் தகர்த்தெறிகின்றது. இந்த உரையாடலை ஒருவழிப் பேச்சாக, அதாவது அடியான் மட்டும் பேசுவான்; இறைவன் பதில் பேச மாட்டான் என்று ஒரு தரப்பு உரையாக ஆக்கி வைக்கவில்லை. மாறாக இருவழிப் பேச்சாக, இரு தரப்பு உரையாடலாக இஸ்லாம் ஆக்கி வைத்துள்ளது.
அதற்குக் கீழ்க்காணும் ஹதீஸ் சிறந்த சான்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல், பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும் (என அல்லாஹ் கூறுகிறான்.)
அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்‘ என்று கூறுவான். அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்‘ (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்து விட்டான்‘ என்று கூறுவான். அடியான் “மாலிலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப் படுத்தி விட்டான்‘ என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் “என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டான்‘ என்றும் கூறியுள்ளார்கள்.)
மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘ என்று கூறுவான். அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘ என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 598
படைத்த இறைவனிடம், நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில் பேச வேண்டுமாயின் தொழுகை என்ற ஒரு வழி இருக்கும் போது இடைத் தரகு தேவையா? ஒரு போதும் தேவையில்லை.
நாட்டின் முதலமைச்சரை முன் அனுமதியில்லாமலேயே சந்திப்பதற்கு வாய்ப்பு இருப்பவர், யாரையாவது பரிந்துரைக்குத் தேடியலைவாரா? இது போல் அகில உலகத்தில், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றொரு அழகிய வாய்ப்பு இருக்கையில் எவரது துணையும் தேவையில்லை.
மெஞ்ஞானம்
இப்படி ஓர் அறிவுப்பூர்வமான மார்க்கத்தில் திட்டமிட்டு ஓர் இடைத்தரகை யூதச் சிந்தனை கொண்டு, ஷியாக்களின் திட்டப்படி, ஷரீஅத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பாதை – இரகசியப் பாதை – அந்தரங்கப் பாதை – ஆன்மீகப் பாதை என்றெல்லாம் புது சித்தாந்தத்தை, பொய் சித்தாந்தத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
அதற்கு தரீகத் (பாதை), ஹகீகத், (உண்மை), மஃரிபத் (அறிதல்) பெயரிட்டுள்ளனர். இந்த அகமிய ஞானப் பாட்டை வழிவழியாகக் கொண்டு போய் அலீ (ரலி) அவர்களிடமிருந்து வந்ததாகக் கூறுவர். ஆனால் இது உண்மையா? நிச்சயமாகக் கடைந்தெடுத்த பொய்! இது அலீ (ரலி) அவர்களின் காலத்திலேயே தலை தூக்கியது. இந்தப் பிரச்சனை அலீ (ரலி) அவர்களின் காதுகளுக்கு, கவனத்திற்கு வந்த மாத்திரத்திலேயே அதைக் களையெடுத்து விடுகின்றார்கள்.
அலீ (ரலி) அவர்களிடம், “உங்களிடம் அல்லாஹ்வின் வேதத்திலிருப்பதைத் தவிர இறையறிவிப்புகளிலிருந்து (வேறு) ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை; விதையைப் பிளப்பவனும், உயிரைப் படைப்பவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவ்வாறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; ஒரு மனிதருக்கு அல்லாஹ் திருக்குர்ஆனில் அளிக்கின்ற விளக்கத்தையும் இந்தத் தாளில் இருப்பதையும் தவிர” என்று பதிலளித்தார்கள். நான், “இந்தத் தாளில் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உயிரீட்டுத் தொகை (பற்றிய சட்டம்), போர்க் கைதியை (பணம் கொடுத்தோ, கைதிகள் பரிவர்த்தனை செய்தோ எதிரிகளிடமிருந்து) விடுவிப்பது, மற்றும் நிராகரிப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காக எந்த முஸ்லிமையும் கொல்லக் கூடாது (என்பது)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)
நூல்: புகாரி 3047
இதன்படி அகமிய ஞானம் என்று பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த கிளை அறுந்து விடுகின்றது. இன்னும் போனால் இதற்கு அலீ (ரலி) அவர்களிடமிருந்தே செருப்படி விழுகின்றது. இந்தக் கிளை அறுந்தவுடன், அடுத்த கிளைக்கு இந்தக் குரங்குச் சிந்தனையாளர்கள் தாவுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு பைகளை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பி விட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும். (அவையனைத்தும் அரசியல் குழப்பங்கள் தொடர்பானவை.)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 120
இதில் இரண்டாவது செய்தி அந்த அகமிய ஞானம் தான் என்று கதையளந்தனர். இதிலும் இவர்களது அறியாமைத்தனம் பகிரங்கமாக வெளிப்படுகின்றது.
ஏனெனில், “மற்றொன்றை வெளியிட்டால் எனது குரல்வளை துண்டிக்கப்படும்’ என்று கூறி அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். அபூஹுரைரா (ரலி) சொல்லாமல் விட்டுச் சென்ற அந்தக் கருத்து இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
அபூஹுரைரா (ரலி) வாழ்ந்த காலத்தில், ஒருவரையொருவர் மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அந்தச் சமயத்தில் உள்ள அரசியல் குழப்பத்தைப் பற்றித் தான் அபூஹுரைரா (ரலி) குறிப்பிடுகிறார்கள்.
அராஜக ஆட்சியாளர்கள் பற்றிய விபரம் அபூஹுரைராவிடம் இருந்தது என்று அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். இது ஏற்றுக் கொள்ளத்தக்க வகையிலும் அமைந்திருக்கின்றது. ஏனென்றால், அதை வெளியிட்டால் கழுத்து துண்டிக்கப்படும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதால் நிச்சயமாக இது ஆட்சியாளர்கள் குறித்த செய்தியாகத் தான் இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு ஏதோ ஒரு மறைமுக ஞானம், ரகசிய ஞானம் என்று இந்த ஹதீஸிலிருந்து நிறுவும் முயற்சி படுதோல்வியைச் சந்திக்கின்றது. இதன்படி இவர்கள் தாவிய இந்த இரண்டாவது கிளையும் முறிந்து விடுகின்றது.
ஏகத்துவப் பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில், மாநில ஜமாஅத்துல் உலமாவின் தலைவராக இருந்த எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களைச் சந்தித்து, தரீகத் பற்றிய ஆதாரத்தைக் கேட்கையில் ஷம்சுல்ஹுதா அவர்கள் ஒரு ஹதீஸைக் கூறினார்.
“குர்ஆன் ஏழு எழுத்துக்களில் அருளப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் வெளிப்படையும் உண்டு. அந்தரங்கமும் உண்டு. ஒவ்வொரு எல்லைக்கும் ஓர் உதயம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்கள்: ஜாமிவுஸ்ஸகீர், தப்ரானி
இந்த ஹதீலைச் சான்றாகக் காட்டிய போது உடனே “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ இதற்கு வெளிப்படை என்ன? அந்தரங்கம் என்ன?” என்று கேட்டதும் அவர் வாயடைத்துப் போனார்.
இதையடுத்து அவரிடம் விளக்கமும் கூறப்பட்டது. அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கே என்பது தான் அதன் அர்த்தம். அது தான் வெளிப்படை! அல்லாஹ்விடமிருந்து நமக்குக் கிடைக்கும் அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தும் வகையில் அவனைப் புகழ வேண்டும். இது அந்தரங்கம்.
இந்த விளக்கத்தை ஷம்சுல் ஹுதாவிடம் தெரிவித்தார். இந்த ஹதீஸில் உள்ள அந்தரங்கத்திற்கும் வெளிரங்கத்திற்கும் உரிய விளக்கம் தெரியாமலேயே இதை அகமிய ஞானம் என்று கூறியுள்ளனர். இப்படியொரு கானலை, ஞானம் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பது அந்த உரையாடலின் போது வெளிச்சத்திற்கு வந்தது.
(அத்துடன் ஜாமிவுஸ்ஸகீர், தப்ரானி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸ் பலவீனமானது. தற்கால அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள், பலவீனமான ஹதீஸ்கள் பட்டியலில் இதைப் பதிவு செய்து விளக்குகிறார்கள்.)
ஷம்சுல்ஹுதா அவர்களிடம் பேசும் போது இந்த ஹதீஸ் பலவீனமானது என்ற விபரம் தெரியாது. இல்லையெனில் அப்போதே இது பலவீனம் என்பதைச் சுட்டிக் காட்டி நெற்றியடியாக அடித்திருக்கலாம்.
எனவே இந்த ஹதீஸிலும் இவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஹில்று நபி – கிஸ்ஸாவும் கப்ஸாவும்
அகமிய ஞானம் என்பதெல்லாம் வெறும் மாய்மாலம் என்றாகி விட்டது. இருப்பினும் இவர்களுக்குக் கை கொடுக்கக்கூடிய இன்னொரு கிளையும் உள்ளது. அந்தக் கிளை தான் ஹில்று நபி!
இந்த ஹில்று நபியவர்கள் இரண்டு விதத்தில் தங்களுக்குக் கை கொடுப்பதாக இவர்கள் நம்புகின்றனர்.
ஒன்று ஹில்று நபி இன்னும் உயிருடன் உலா வருகின்றார்; கடல் ராஜா போல் கடலில் உலா வருகிறார் என்பது இவர்களின் நம்பிக்கை.
“ஐனுல் ஹயாத்” என்று ஒரு நீருற்று உண்டு. அதில் சிறிதளவு நீர் அருந்தியவர் கியாமத் நாள் வரை உயிருடன் இருப்பார். அதை ஹில்று (அலை) அவர்கள் அருந்தும் பேறு பெற்றார்கள். அதனால் இன்றளவும் உயிருடன் உள்ளார்கள்.
ஆண்டு தோறும் ஹில்று (அலை) அவர்கள் ஹஜ்ஜுச் செய்ய வருகின்றார்கள். எவருடைய ஹஜ்ஜு அங்கீகரிக்கப்படுமோ அவருடன் முஸாபஹா (கைலாகு) கொடுக்கிறார்கள். ஹில்று (அலை) அவர்கள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருப்பார்கள். கடலில் ஏற்படுகின்ற துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அவரிடம் விடப்பட்டுள்ளது.
வலி என்ற பட்டத்தை அல்லாஹ் ஒருவருக்கு வழங்க நாடினால், ஹில்று (அலை) அவர்கள் மூலமாகவே அதனை அளிக்கின்றான்.
மேற்கூறிய கதைகள் உலமாக்களில் பலரால் கூறப்படுபவை. மக்களிடம் மிகவும் ஆழமாக வேரூன்றியவை. இது போல் இன்னும் ஏராளமான கதைகளும் ஹில்று (அலை) அவர்கள் பெயரால் உலா வருகின்றன. இப்படிக் கூறப்படும் எல்லாக் கதைகளும், “ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் உள்ளனர்” என்ற நம்பிக்கையில் தோற்றுவிக்கப் பட்டவைகளாகும்.
ஹில்று (அலை) அவர்கள் இன்றளவும் உயிருடன் இருக்கின்றார்களா? என்று குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நாம் ஆராய முற்படும் போது குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது. அவர்கள் இன்றளவும் உயிருடனிருக்க முடியாது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக் கூடியவர்களா?
அல்குர்ஆன் 21:34
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த எவருக்கும் நிரந்தரமாக இந்த உலகில் வாழ்கின்ற உரிமையைத் தரவில்லை என்று மனிதனைப் படைத்த அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த எவரும் நிரந்தரமாக இருக்க முடியாது என்று தெளிவாகின்றது.
இந்தப் பொது விதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அது பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஈஸா (அலை) மட்டுமே குர்ஆன், ஹதீஸ் மூலம் இந்த விதியில் இருந்து தற்காலிகமாக விலக்குப் பெறுகின்றார்கள். “ஹில்று (அலை) இன்னும் உயிருடனே வாழ்ந்து வருகின்றனர்” என்பது மேற்கூறிய குர்ஆன் வசனத்துக்கு முரணானது.
“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.
அல்குர்ஆன் 3:81
“ஹில்று’ நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப் படுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதி மொழியின் படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?
நபிகள் நாயகத்தைத் தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.
அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
இவ்வசனத்திலி-ருந்தும் “ஹில்று’ நபி உயிருடன் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹில்று (அலை) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உயிருடன் இருந்திருந்தால், கட்டாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஈமான் கொண்டிருக்க வேண்டும்.
இஸ்லாமியப் பிரச்சாரத்துக்கு எண்ணற்ற சோதனைகள் வந்த போதும், பல போர்க்களங்களில் உயிரைப் பணயம் வைத்து சஹாபாக்கள் போராடிய போதும், ஹில்று (அலை) அவர்கள் அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.
இந்தச் சோதனையான காலங்களில் அவர் ஏன் சத்தியத்திற்குத் துணை செய்யவில்லை? உயிருடன் வாழ்ந்தும் அவர் இதனைச் செய்யத் தவறி இருந்தால் அவர் கடமை தவறியவராக ஆகின்றார். (அல்லாஹ் அப்படி நினைப்பதை விட்டும் காப்பானாக!)
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே “ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இருந்திருக்கவில்லை” என்றால் “நமது காலத்தில் நிச்சயம் உயிருடன் இருக்க முடியாது” என்ற முடிவுக்கு நாம் உறுதியாக வர முடிகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இஸ்லாமியச் சமூகத்தில் உட்பூசல்கள், கருத்து மோதல்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்றளவும் அந்த நிலை தொடர்கிறது. உண்மையான இஸ்லாம் பெரும்பாலும் மறைக்கப்பட்டு உள்ளது.
ஹில்று (அலை) அவர்கள் உயிருடன் இன்றளவும் இருந்தால், இந்த நிலையை மாற்ற அவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? சரியான நபி வழியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஏன் ஓரணியில் மக்களைத் திரட்டவில்லை? எல்லா உலமாக்களையும் சந்தித்து அவர்களிடம் உண்மையைக் கூறி ஏன் ஒன்று படுத்தவில்லை? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நேரடியாக அவர்களுக்கு அவர் பக்க பலமாக இல்லாவிட்டாலும் அவர்களின் தீனுக்காவது துணை நின்றிருக்க வேண்டாமா?
தன்னை ஒரு நபி என்று வாதாடிக் கொண்டு மிர்ஸா குலாம் தோன்றி பல முஸ்லிம்களை வழி கெடுத்த போது ஏன் அவனிடம் வந்து வாதாடவில்லை? இதில் எதனையும் ஹில்று (அலை) அவர்கள் செய்யவில்லை. உயிருடன் அவர் இந்த மண்ணுலகில் இருந்தால் இத்தனை காரியங்களையும் அவர் செய்வது அவர் மீது கட்டாயக் கடமை அல்லவா?
ஈஸா நபி அவர்கள் என்று இந்த மண்ணுக்கு வருவார்களோ அன்றே நபிகள் நாயகத்தின் உம்மத்தாகச் செயல்பட்டு எல்லாத் தீமைகளையும் களைவார்கள். ஒரு கொடியின் கீழ் அத்தனை மக்களையும் ஒன்று திரட்டுவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து விளங்கும் போது, இந்த மண்ணில் வாழ்ந்து வரும் ஹில்று (அலை) அவர்கள் இவற்றில் எந்த ஒன்றையும் செய்யவில்லையே! ஏன்? எனவே அவர்கள் நபிகள் நாயகம் காலத்திலேயே உயிருடன் இல்லை என்று தெரிகின்றது.
ஒரு நாள் இஷா தொழுகைக்குப் பின் சஹாபாக்களை நோக்கி “இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 116, 564, 601
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹில்று (அலை) உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் “100 ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு இந்த மண்ணுலகில் வாழும் எவரும் இருக்க மாட்டார்கள்” என்ற நபி மொழி மூலம் நூறு ஆண்டுகளுக்குப் பின் ஹில்று (அலை) நிச்சயம் மரணித்தே இருக்க வேண்டும். இன்றளவும் நிச்சயம் அவர் உயிருடன் இருக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று ஒரு போதும் பொய்யாகாது. ஹில்று (அலை) உயிருடன் இருப்பதாகக் கூறுவது முழுக்க முழுக்க கற்பனையேயன்றி வேறில்லை.
பல பெரியவர்களை ஹில்று (அலை) அவர்கள் சந்தித்துள்ளதாகக் கூறப்படுவதும், பல கப்ருகளை ஜியாரத் செய்ய வருவதாகக் கூறப்படுவதும் மேற்கூறிய அல்லாஹ்வின் திருவசனங்களுக்கும், நபிகள் நாயகத்தின் அமுத மொழிகளுக்கும் முரண்படுவதால், அவை யாவும் பச்சைப் பொய்களே.
எவன் இது போன்ற கதைகளைச் சொல்பவன், அதனை நம்புபவன் அல்லாஹ்வின் திருவேதத்தையும், அவனது தூதரின் பொன் மொழிகளையும் நம்ப மறுத்தவனாகவே கருதப்படுவான்.
ஹில்று நபியைப் பற்றி இவர்களின் அடுத்த நம்பிக்கை, அவர் தான் அந்தரங்க ஞான பீடத்தின் அசையாத ஆன்மீகச் சக்கரவர்த்தி, மூஸா நபியின் தரீக்கா ஞான பாட்டை, அகமிய ஆசிரியர் என்பதாகும்.
ஹில்று நபி உயிருடன் உலா வரும் செய்தி கப்ஸா என்றால், இரண்டாவது செய்தி உண்மை கிஸ்ஸாவிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
மவ்லவி எஸ்.ஆர். ஷம்சுல்ஹுதா அவர்களிடம் தரீகத், ஹகீகத், மஃரிபத் பற்றிக் கேட்கும்போது அவர், ஹில்று நபி சம்பவத்தைத் தான் முன்வைத்தார். அகமிய ஞானம் என்ற பெயரிலேயே சுற்றுகின்ற இந்தக் குருட்டுச் சிந்தனைக்கு ஹில்று நபியின் கிஸ்ஸாவைத் தான் ஆதாரமாகத் தூக்கி நிறுத்துகின்றனர்
எனவே அந்த ஆதாரத்தை இங்கு ஆய்வு செய்வோம்.
“இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்” என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.
அவ்விருவரும் கடந்து சென்ற போது “காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்” என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.
“நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது” என்று (ஊழியர்) கூறினார்.
“அதுவே நாம் தேடிய இடம்” என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.
(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.
“உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?” என்று அவரிடம் மூஸா கேட்டார்.
“என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?” என்று (அந்த அடியார்) கூறினார்.
“அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்”என்று (மூஸா) கூறினார்.
“நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது” என்று (அந்த அடியார்) கூறினார்.
இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். “இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே” என்று (மூஸா) கூறினார்.
“என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?” என்று (அந்த அடியார்) கேட்டார்.
“நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!” என்று (மூஸா) கூறினார்.
இருவரும் நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்ட போது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். “எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே” என்று (மூஸா) கூறினார்.
“நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?” என்று (அந்த அடியார்) கேட்டார்.
“இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்” என்று (மூஸா) கூறினார்.
அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். “நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
“இதுவே எனக்கும் உமக்குமிடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.
அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.
அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். “அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழி கேட்டிலும் தள்ளி விடுவான்” என்று அஞ்சினோம்.
“அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக் கூடியவனைப் பகரமாகக் கொடுப்பான்” என நினைத்தோம்.
அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். “எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே. (என்றார்)
அல்குர்ஆன் 18:60-82
இந்த வசனங்களில் மூஸா நபியவர்கள் கிழ்று நபியைச் சந்தித்து, பாடம் கற்ற வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியின் பின்னணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.
மூஸா நபியவர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்காக எழுந்தார்கள். “மனிதர்களில் மிகவும் அறிந்தவர் யார்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. “இது பற்றி அல்லாஹ்வே நன்கறிந்தவன்” எனக் கூறாமல், “நானே மிக அறிந்தவன்” எனக் கூறி விட்டார்கள். இதனால் அல்லாஹ் அவர்கள் மீது கோபமடைந்தான். “இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் எனது அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகம் அறிந்தவர்” என்று அல்லாஹ் அறிவித்தான். அதற்கு மூஸா நபியவர்கள், “அவரை நான் எப்படி அடைவது?” என்று கேட்டார்கள். “ஒரு பாத்திரத்தில் ஒரு மீனைப் போட்டுக் கொள்! அந்த மீனை எங்கே தவற விடுகிறாயோ அந்த இடத்தில் தான் அவர் இருக்கிறார்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.
மூஸா நபியவர்களும், யூஷஃ பின் நூன் அவர்களும் பாத்திரத்தில் மீனை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். ஒரு பாறையைக் கண்டு அங்கே தலை சாய்த்து தூங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் பாத்திரத்திலிருந்த மீன் நழுவி கடலில் சென்று விட்டது.
……இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
(புகாரி 122, 3401, 4725, 4726)
இதைத் தொடர்ந்து நடந்தது தான் மேற்கண்ட வசனங்களில் கூறப்படுகிறது.
இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து குறிப்பிடும் போது….
குறிப்பிட்ட இடத்தில் ஹில்று அவர்களை மூஸா நபியவர்கள் கண்டு பிடித்தனர். அவருக்கு மூஸா நபியவர்கள் ஸலாம் கூறினார்கள். அப்போது ஹில்று, “உங்கள் பகுதியில் ஸலாம் கூறும் வழக்கம் எப்படி?” என்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள், “நான் தான் மூஸா” என்று கூறினார்கள். அதற்கு ஹில்று அவர்கள், “இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸாவா?” என்று கேட்டார்கள். அதற்கு மூஸா நபியவர்கள், ஆம் என்றனர்.
(புகாரி 122, 3401, 4725, 4727)
…..நீர் எதற்காக இங்கே வந்துள்ளீர்? என்று ஹில்று கேட்டார். அதற்கு மூஸா நபியவர்கள், “உமக்குத் தெரிந்ததை எனக்கு நீர் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு ஹில்று அவர்கள், “உமக்குத் தான் இறைவனிடமிருந்து தூதுச் செய்தி வருகின்றதே? உமது கையில் தவராத் வேதமும் உள்ளதே?” என்று கேட்டார்கள்.
(புகாரி 4726)
இதன் பின்னர் தான் மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று நபிக்குத் தெரிந்ததாக இங்கே கூறப்படுவதை சிலர் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாகக் கருதுகின்றனர்.
மூஸா நபியவர்கள் என்ன தான் பெரிய இறைத் தூதராக இருந்தாலும், எவ்வளவு தான் அற்புதங்களை அவர்கள் நிகழ்த்தினாலும் அவர்களுக்குத் தெரியாத இரகசிய ஞானம் ஹில்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஹில்று அவர்கள் தமது தவ வலிமை மூலம் பெற்ற ஞானம், மூஸா நபியவர்கள் வஹீ மூலம் பெற்ற ஞானத்தை விடச் சிறந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த ஞானத்தில் மூலம் கண்ணுக்குத் தெரியாத மறைவான விஷயங்கள் யாவும் புலப்படும். இறைவனின் வஹீயை எதிர்பார்க்காமலேயே அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தான் மெஞ்ஞானம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் கவனமாக மேற்கண்ட வசனங்களையும், மேலே நாம் சுட்டிக் காட்டிய நபிமொழிகளையும் சிந்திக்கும் போது இவர்களின் வாதத்துக்கு மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எந்தச் சான்றும் இல்லை என்பதை அறியலாம்.
மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரிந்ததால் இவர்கள் இவ்வாறு வாதிடுகின்றனர். ஆனால் இதே நிகழ்ச்சியில் மிகச் சாதாரணமான பல விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளதை இவர்கள் கவனிக்க மறந்து விட்டனர்.
மூஸா நபியவர்கள் ஹில்றைச் சந்தித்து ஸலாம் கூறிய போது, “உமது ஊரில் ஸலாம் கூறும் வழக்கம் எப்படி?” என்று ஹில்று கேட்கின்றார்.
வந்தவர் ஓர் இறைத் தூதர் என்பதோ, தன்னைப் போலவே முஸ்லிம் என்பதோ ஹில்றுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதை இது நிரூபிக்கிறது.
இதன் பின்னர் மூஸா நிபயவர்கள், “நான் தான் மூஸா” என்றனர். இப்படிச் சொன்ன பிறகு கூட வந்தவர் மூஸா என்று இறைத் தூதர் என்பது ஹில்றுக்குத் தெரியவில்லை. இதனால் தான் இஸ்ரவேலர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸாவா? என்று கேட்கிறார்.
எதற்காக இங்கே வந்துள்ளீர்? என்று ஹில்று கேட்கிறார். மூஸா நபியவர்களிடம் கேட்காமலேயே, “என்னிடம் சில விஷயங்களை அறிந்து கொள்ளத் தான் நீர் வந்துள்ளீர்” என்று அவர் அறியவில்லை.
மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளில் கீழே விழ இருந்த சுவரைத் தூக்கி நிறுத்திய சம்பவமும் ஒன்றாகும்.
அந்த ஊருக்குச் சென்ற மூஸா நபியும் ஹில்று நபியும் அவ்வூராரிடம் உணவு கேட்டனர். அவ்வூரார் உணவளிக்க மறுத்து விட்டனர் என்று மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டுள்ளது. அவ்வூரார் உணவு தர மாட்டார்கள் என்ற உண்மை முன்பே ஹில்றுக்குத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் உணவை ஏற்பாடு செய்து கொண்டு அவ்வூருக்குச் சென்றிருப்பார். அவ்வூராரிடம் உணவளிக்குமாறு கோரியிருக்க மாட்டார்.
மூஸா நபியவர்கள், இனிமேல் எதிர்க் கேள்வி கேட்ட மாட்டேன் என்று கூறி விட்டு மூன்று தடவை அதை மீறி விட்டார்கள். மூஸா நபியவர்கள் வாக்கு மீறுவார்கள் என்ற உண்மை ஹில்ருக்கு முன்பே தெரிந்திருந்தால் முதல் தடவையிலேயே அவரை அனுப்பி வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மூஸா நபி கூறிய சமாதானத்தை அப்படியே ஏற்று ஏமாந்திருக்கிறார். எனவே இவர்கள் வாதிடுவது போன்ற மறைவானதை அறிந்து கொள்ளும் எந்த மெஞ்ஞானமும் கிடையாது என்பதற்குத் தான் மேற்கண்ட சம்பவம் ஆதாரமாக அமைந்துள்ளது.
அப்படியானால் மேற்கண்ட மூன்று மறைவான நிகழ்ச்சிகள் ஹில்றுக்கு மட்டும் தெரிந்தது ஏன்? மூஸா நபிக்குத் தெரியாமல் போனது ஏன்?
இவ்வசனங்களைச் சிந்தித்தாலே இக்கேள்விக்கான விடையை அறிந்து கொள்ள முடியும்.
மூன்று நிகழ்ச்சிகள் நடந்த பின்னர், “இதை நானாகச் செய்யவில்லை. அல்லாஹ் அறிவித்துத் தந்ததையே செய்தேன்” என்று ஹில்று கூறியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.
மூஸா நபியவர்கள், “நான் தான் மிகவும் அறிந்தவன்” என்று கூறியதற்குப் பாடம் கற்பிக்க அவர்களுக்குத் தெரியாத மூன்று விஷயங்களை ஹில்றுக்கு இறைவன் கற்றுக் கொடுத்தான் என்பதை ஹில்று அவர்களின் மேற்கண்ட பதிலிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
நல்ல கப்பலை அபகரிக்கும் மன்னரின் ஆட்கள் வரவுள்ளனர் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்ததால் கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
கீழே விழவிருந்த சுவற்றுக்கு அடியில் புதையல் இருப்பதையும், இரண்டு சிறுவர்களுக்கு அது உரியது என்பதையும் இறைவன் அறிவித்துக் கொடுத்ததால் சுவற்றை நிமிர்த்தினார்கள். அவ்வூரார் உணவளிக்க மாட்டார்கள் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுக்காததால் அதை அவர்களால் அறிய இயலவில்லை.
ஓர் இளைஞன் தானும் வழி கெட்டு, தனது பெற்றோரையும் வழி கெடுக்க முயற்சிப்பதால் அவனைக் கொலை செய்கின்றார்கள். இறைவனின் கட்டளைப்படி இதையும் செய்கின்றார்கள். எனவே மூஸா நபிக்கு அறிவிக்காமல் ஹில்றுக்கு மட்டும் இறைவன் இம்மூன்று விஷயங்களையும் அறிவித்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவித்துக் கொடுத்ததால் அவ்வாறு செய்து முடித்தார்கள்.
இதில் மெஞ்ஞானம் என்று ஏதும் இல்லை.
மேலே நாம் சுட்டிக் காட்டிய புகாரியில் இடம் பெற்ற ஹதீஸ்களில், “எனக்கு இறைவன் அறிவித்துத் தந்ததை நான் அறிவேன். உமக்கு இறைவன் அறிவித்துத் தந்ததை நீர் அறிவீர்” என்று மூஸா நபியிடம் ஹில்று கூறியதாகக் கூறப்பட்டுள்ளதே போதுமான சான்றாக அமைந்துள்ளது.
சில விரிவுரையாளர்களும் மொழி பெயர்ப்பாளர்களும், ஹில்று அவர்களால் கொல்லப்பட்டவன் பாலகன் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் இதில் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
அவன் வளர்ந்து பெரியவனானால் தனது பெற்றோரை வழி கெடுத்து விடுவான் என்பதால் ஹில்று அவர்கள் அவனைக் கொன்றதாகக் கூறுகின்றனர்.
எதிர் காலத்தில் ஒருவன் பெரிய குற்றம் செய்வான் என்பதற்காக அக்குற்றத்தைச் செய்யும் முன் அவனைக் கொல்வது இறை நியதிக்கு ஏற்றது தானா? பச்சிளம் பாலகனைக் கொல்வது என்ன நியாயம்? என்ற கேள்வி இதனால் எழுகின்றது. இக்கேள்விக்கு ஏற்கத்தக்க எந்த விடையையும் அவர்களால் கூற முடியவில்லை.
எனவே சிறுவன் என்று மொழி பெயர்க்காமல் இளைஞன் என்று மொழி பெயர்த்தால் இந்தக் கேள்வி எழாது. இளைஞனாக அவன் இருந்து அன்றாடம் தனது பெற்றோரைத் துன்புறுத்தி வந்தான் எனக் கூறினல் அதற்காக அவனைத் தண்டிப்பது இறை நியதிக்கு ஏற்றதாக அமையும்.
“சிறுவன்’ என்று மற்றவர்களும், “இளைஞன்’ என்று நாமும் தமிழாக்கம் செய்துள்ள இடத்தில் (18:74) குலாம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பல அர்த்தங்களைக் கொண்ட சொல்லாகும்.
அடிமை, சேவகன், சிறுவன், இளைஞன் என இதற்குப் பல பொருள் உண்டு.
சிறுவன் என்று பொருள் கொண்டு செய்யாத குற்றத்துக்காக ஒருவன் தண்டிக்கப்பட்டான் எனக் கூறுவதை விட, இளைஞன் எனப் பொருள் கொண்டு செய்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டான் என்று கூறுவது இறை நியதிக்கு ஏற்றதாகும்.
இவ்வாறு பொருள் கொள்வதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
நான் திரு7மணமாகாத குலாமாக (இளைஞனாக) இருந்தேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி 7031, 3739)
நான் இளைஞனான, குலாமாக இருந்தேன் என்று இப்னு உமர் கூறியது புகாரி 6122வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூபக்ரின் மகன் இளைஞனாகவும், குலாமாகவும் இருந்தார். (புகாரி 5807)
இந்த குலாமுக்கு இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 3472)
ஹாரிஸா அவர்கள் குலாமாக இருந்த போது போரில் கொல்லப்பட்டார்கள். (புகாரி 3982, 6550)
நபிகள் நாயகத்திடம் பணியாற்றிய யூத குலாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். (புகாரி 1356, 5657)
இங்கெல்லாம் சிறுவன் என்று பொருள் செய்தால் அறவே பொருந்தாது.
இந்த ஹதீஸ்களில் குலாம் என்ற சொல்லுக்கு இளைஞன் என்று பொருள் கொள்வது போல் மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்ற சொல்லுக்கும் பொருள் கொண்டால் குழப்பம் ஏதும் இல்லை.
ஹில்று நபிக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த மூன்று செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அகமிய ஞானம், ரகசிய ஞானம் என்று புரோகிதர்கள் வாதிடுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
மெஞ்ஞானத்தை நிரூபிக்க இவர்கள் பிடித்துத் தொங்கிய இந்தக் கிளையும் உடைந்து விட்டது. மெஞ்ஞானம், ஆன்மீக ஞானம், ரகசிய ஞானம், அகமிய ஞானம் இவை அனைத்தும் பொய் ஞானமே என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.