ஏகத்துவம் – ஆகஸ்ட் 2007

தலையங்கம்

பரவுகின்ற ஏய்ட்ஸுக்கு பலியாகும் குழந்தைகள்

அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!

அல்குர்ஆன் 93:9

அனாதைகளை அடக்குமுறை செய்யாமல் அரவணைக்கச் சொல்லும் அல்லாஹ்வின் வசனம் இது!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)

நூல்: புகாரி 5304

அனாதைகளை ஆதரிப்பதால், அரவணைப்பதால் அடையப் போகும் பலனை அறிவிக்கின்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் இது! இத்தனையும் எதற்கு?

ஒரு குழந்தையின் உலகமே தாய் தான். தாய்க்கு முன்னால் மற்ற உறவுகள் எல்லாமே எள்ளளவும் மதிப்பைப் பெறுவதில்லை. ஒரு தந்தை கூட அந்த இடத்தை அடைய முடிவதில்லை. முதல் மூன்று இடங்களைத் தாய்க்கு அளித்து விட்டு, நான்காவது இடத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் தந்தைக்கு வழங்குகின்றார்கள். தந்தைக்கே நான்காவது இடம் என்றால் மற்றவர்களுக்கு என்ன ஸ்தானம்? என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

தாயன்புக்கு நிகர் இவ்வுலகில் இல்லை என்று நாம் தெளிவாக அடித்துக் கூறலாம். அந்தத் தாயை ஒரு குழந்தை இழந்து விடுகின்ற போது அது தந்தையின் அரவணைப்புக்குள் வருகின்றது. தந்தையை இழந்து விடும் போது அது அடுத்தகட்ட உறவினர் அல்லது அயலார் அரவணைப்புக்கு வருகின்றது.

இந்த அடுத்தகட்ட உறவினர் அல்லது அயலாரால் பெற்றோர் செலுத்திய பாசத்தை, அன்பைச் செலுத்த முடியாது. அதனால் அந்தக் குழந்தைகளை அடிக்கவும், அடக்கவும் தலைப்படுவர். அத்தகையவர்களை நோக்கித் தான் மேற்கண்டவாறு அல்லாஹ் கூறுகின்றான். அவ்வாறு அடிக்காமல் பொறுமையுடன் அந்தக் குழந்தைகளைப் பராமரிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்மை எனும் பாக்கியம் சுவனத்தில் சன்மானமாகக் கிடைக்கின்றது.

பெற்றோர் இறந்து விடுவதால் ஏற்படும் அனாதை நிலையைத் தான் நாம் இங்கு குறிப்பிடுகிறோம். ஆனால் இன்று பெற்றோர் இருந்தும் பிள்ளைகள் அனாதைகளாகின்றனர்.

“பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” என்று சொல்வார்கள். இந்தப் பழமொழிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டிய தாய்மார்களே தங்கள் பிஞ்சு மனம் கொண்ட பிள்ளைகளை, பால் மணம் மாறாத பசுந்தளிர்களை, பெற்றவுடன் மருத்துவமனையில் விட்டு விட்டுப் போய் விடுகின்றனர்.

நமது நாட்டிலும் இது நடக்கின்றது என்றாலும் ரஷ்யாவில் தற்போது இது அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகளில் குழந்தைகளை அப்படியே போட்டு விட்டுத் தாய்மார்கள் சென்று விடுகின்றனர். ஏன்? பால் சுரக்கவில்லையா? அல்லது அழுது ஏங்கும் அந்தச் சிசுவைத் தன் மேனியின் வெப்பக் கதகதப்பில் வைத்து வளர்ப்பதற்குப் பணமில்லையா? இதுவெல்லாம் காரணமல்ல!

1982ல் உலகுக்கு அறிமுகமான எய்ட்ஸ் என்ற கொடிய நோய் தான் இதற்குக் காரணம்!

தங்களைத் தொற்றிக் கொண்ட இந்த நோய் தங்கள் குழந்தை களையும் பாதித்து விடுவதால் அந்தக் குழந்தைகளை அரசு மருத்துவமனைகளில் அனாதைகளாக விட்டு விடுகின்றனர்.

உலகில் அதிக வேகமாகப் பரவி வரும் எய்ட்ஸ் நோயின் தாயாக ரஷ்யா திகழ்கின்றது. நாளொன்றுக்கு நூறு பேர்களை இந்த எய்ட்ஸ் தீ பற்றிக் கொள்கின்றது. இதற்குத் தாயும், சேயும் விதிவிலக்கல்ல! இது தான் தாயையும், சேயையும் பிரிக்கும் தீயாகப் பற்றி எரிகின்றது.

ரஷ்யாவின் டிவர் நகர மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் பிரசவமாகின்றன. அதில் இரண்டு குழந்தைகளின் தாய்களைக் காணவில்லை. காரணம் அவ்விரு தாய்களுக்கும் எய்ட்ஸ் உள்ளது தான்.

எய்ட்ஸ் எனப்படும் ஹெச்.ஐ.வி. கிருமியினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஹெச்.ஐ.வி. தாக்குவதில்லை. அப்படித் தாக்கினால் அதைக் கண்டுபிடிப்பதற்கு ஆகும் காலம் பதினெட்டு மாதங்கள். அதன் பின்னர் அந்தக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இருப்பது உறுதி செய்யப் பட்டால் அதன் தலைவிதி அனாதை நிலையம் கூடக் கிடையாது. குழந்தைகளுக்கான தொற்று நோய் மருத்துவமனை தான். இந்தக் குழந்தைகளுக்கு வேறு புகலிடம் இல்லை; போக்கிடமும் இல்லை.

இவ்வாறு ஒரு நாளைக்கு ஹெச்.ஐ.வி.யின் பிடியில் பிறக்கும் குழந்தைகள் 20 ஆகும். அண்மை புள்ளி விபரப்படி இவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ரஷ்யாவில் மட்டும் 22,000 ஆகும்.

பரவுகின்ற எய்ட்ஸுக்கு, எந்தப் பாவமும் அறியாத இந்தப் பச்சிளம் குழந்தைகள் பலியாவதைக் கண்டு நமது இதயம் வெடித்து விடும் போல் இருக்கிறது. இன்று உலகம் இதற்கு ஒரு தீர்வை, நிரந்தரத் தீர்வைத் தேடிக் கொண்டிருக்கிறது.

எய்ட்ஸ் எனும் கண்டத்தை விட்டுத் தப்பிப்பதற்கான அந்தத் தீர்வு காண்டத்தை உபயோகிப்பதல்ல! அதற்குத் தேவை உறை மாற்றம் அல்ல! உள மாற்றமாகும். இஸ்லாம் எனும் இறை மார்க்கத்தை ஏற்பதாகும்.

மனிதர்களின் கைகள் செய்தவற்றின் காரணமாக அவர்கள் செய்தவற்றில் சிலவற்றை அவர்களுக்குச் சுவைக்கச் செய்வதற் காகவும், அவர்கள் திருந்துவதற் காகவும் கடலிலும், தரையிலும் சீரழிவு மேலோங்கி விட்டது.

அல்குர்ஆன் 30:41

இந்த வசனத்தின் படி எய்ட்ஸ் என்பது மக்கள் தங்களுக்குத் தாங்களே தேடிக் கொண்ட தீ வினையாகும். இதற்குத் தீர்வு மனிதன் தன் தவறிலிருந்து திருந்தி, படைத்தவன் பக்கம் திரும்புவதாகும்.

அப்படித் திருந்தினால் இந்நோய்க்கு அல்லாஹ்வினால் நிவாரணம் வழங்கப்படும். இதற்குக் கீழ்க்கண்ட வசனம் சான்றாக அமைந்துள்ளது.

அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும், பூமியிலிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

அல்குர்ஆன் 7:96

அந்த மக்கள் நம்பிக்கை கொண்டு, இறைவனை அஞ்சினால் பாக்கியங்களை வழங்கியிருப்போம் என்று இறைவன் உறுதியளிக்கிறான். பாக்கியங்களில் சிறந்தது ஆரோக்கியமான வாழ்வு எனும் பாக்கியமாகும். அந்தப் பாக்கியத்தை இறைவன் நிச்சயம் வழங்குவான்.

எனவே இறைவனை நம்பி, தவறிலிருந்து திருந்தினால் எய்ட்ஸ் எனும் இந்தச் சோதனையிலிருந்தும் அல்லாஹ் பாதுகாப்பான். இதைத் தவிர இதற்கு வேறு தீர்வு இல்லை.

———————————————————————————————————————————————–

ஷியாக்கள் ஓர் ஆய்வு                          தொடர் – 7

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வின் பண்புகளில் விளையாடுவது யூதர்களுக்குக் கைவந்த கலை! அந்த வேலையை அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கிறார்கள்.

இதே விளையாட்டை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகளும் செய்கிறார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்களது மவ்லிதுக் கிதாபுகள் திகழ்கின்றன. மவ்லிதுகளில் முஹ்யித்தீனுக்கு மறைவான ஞானத்தைக் கொடுத்து, அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர் என்பதை வரிசையாகப் பார்த்தோம்.

இது யூத, ஷியா, சு.ஜ. அணியினர் இறைக் கொள்கையில் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகும். இந்த அணியினர் இறைத் தூதர் குறித்த கொள்கை விஷயங்களில் காட்டுகின்ற விளையாட்டைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுகின்ற இறைத்தூதர்களை இழிவுபடுத்துவது, அவர்களைக் கொலை செய்வது போன்றவையெல்லாம் யூதர்களுக்கு சகஜமான ஒன்று! இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

“மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப் படுத்துவான்” என்று நீங்கள் கூறிய போது, “சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு” என்று அவர் கூறினார். அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 2:61

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் யூதர்களின் இந்தச் செயல்பாட்டை, இவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கின்றனர்.

யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:

நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், “ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, “உளவாளி யாரும் இல்லையே!” என்று சொன்னோம். அதற்கு அவர், “கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீது ஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை” என்று பதிலளித்தார்.

கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:

“வானங்கள், பூமியில் உள்ள வற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்” என்று அப்துல்லாஹ் கூறினார்.

நூல்: அல்காஃபி ஃபில் உசூல்

பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்

“நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித் திருப்பேன்” என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவரது இந்த வார்த்தைகளின் வக்கிரத்தைத் தெரிந்து கொள்ள திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் இடம் பெறும் மூஸா, கிழ்ர்   ஆகியோர் தொடர்பான சம்பவத்தை முழுமையாக நாம் பார்ப்பது அவசியம்.

மூஸா, கிழ்ர் சம்பவம்

அவ்வூரார் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.

“இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்” என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

அவ்விருவரும் கடந்து சென்ற போது “காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்” என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

“நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது” என்று (ஊழியர்) கூறினார்.

“அதுவே நாம் தேடிய இடம்” என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.

“உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?” என்று அவரிடம் மூஸா கேட்டார்.

“என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?” என்று (அந்த அடியார்) கூறினார்.

“அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்” என்று (மூஸா) கூறினார்.

“நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது” என்று (அந்த அடியார்) கூறினார்.

இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். “இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே” என்று (மூஸா) கூறினார்.

“என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?” என்று (அந்த அடியார்) கேட்டார்.

“நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!” என்று (மூஸா) கூறினார்.

இருவரும் நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்ட போது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். “எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே” என்று (மூஸா) கூறினார்.

“நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?” என்று (அந்த அடியார்) கேட்டார்.

“இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்” என்று (மூஸா) கூறினார்.

அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். “நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்று இருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.

“இதுவே எனக்கும் உமக்கும் இடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.

அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.

அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். “அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழி கேட்டிலும் தள்ளி விடுவான்” என்று அஞ்சினோம்.

“அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக் கூடியவனைப் பகரமாகக் கொடுப்பான்” என நினைத்தோம்.

அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். “எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே!” (என்றார்)

அல்குர்ஆன் 18:59-82

இந்த வசனங்கள் மூஸா (அலை), கிழ்ர் தொடர்பான சம்பவத்தைப் பற்றிக் கூறுகின்றன. புகாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் இந்த வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:

(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்று கொண்டிருந்த போது அவர்களிடம், “மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் “நானே மிகவும் அறிந்தவன்” என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் “(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

எனவே அல்லாஹ் “இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகமாக அறிந்தவர்” என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள் “என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?” என்று கேட்டார்கள். அதற்கு, “கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்” என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர். கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துவிட்(டுச் சென்று விட்)டது. மூசா (அலை) அவர்களுக்கும், அன்னாருடைய உதவியாளருக்கும் (அந்தப் பாதை) வியப்பாய் அமைந்தது. இந்நிலையில் அன்றைய மீதிப் பொழுதிலும், இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர்.

மறுநாள் பொழுது விடிந்த போது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் “நமது காலைச் சிற்றுண்டியை கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்” என்றார்கள். தமக்குக் கட்டளையிடப் பட்டிருந்த இடத்தைக் கடக்கும் வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர் “நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே! பார்த்தீர்களா? அங்கே தான் நான் அந்த மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது” என்றார். மூசா (அலை) அவர்கள், “நாம் தேடி வந்த இடம் அது தான்” என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்த போது அங்கே, முழுவதுமாக ஓர் துணியால், அல்லது தமது ஆடையால் தம்மைப் போர்த்தியபடி ஒரு மனிதர் (கிழ்ர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், “உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்?)” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “நான் தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா?” என்று கேட்டார்.

மூசா (அலை) அவர்கள், “ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, “உங்களுக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின் தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமை யாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்றார்கள்.

இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள், தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (மரக்கல உரிமையாளர் களால்) கிழ்ர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.

அப்போது ஒரு சிட்டுக் குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ் சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் கிழ்ர் (அலை) அவர்கள் “மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது” என்று கூறினார்கள்.

(சற்று நேரம் கழிந்ததும்) கிழ்ர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக் குச்சியை அறைந்து) விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் “நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமல் ஏற்றிக் கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்தி விட்டீர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், “என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், “நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து விடாதீர்கள்” என்று கூறினார்கள்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.

(பிறகு இருவரும் மரக்கலத்தில் இருந்து வெளியேறி கடலோரமாக) நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் சில இளைஞர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிழ்ர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் திருகி தலையைத் தனியே எடுத்து விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் “ஒரு பாவமும் செய்யாத உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே!” என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், “நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள்.

இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) கிழ்ர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!” என்றார்கள். கிழ்ர் (அலை) அவர்கள், “இது தான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்” என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்த பின்) நபி (ஸல்) அவர்கள், “மூசா பொறுமையாக இருந்திருப்பார் என்றால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்களை (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 122

இந்தச் சம்பவத்தில் “மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது” என்ற கிழ்ரின் உதாரணம் இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

அல்லாஹ் தான் மிகவும் தெரிந்தவன்; அறிந்தவன் என்று கூறுவதற்குப் பதிலாக, “நானே மிக அறிந்தவன்’ என்று மூஸா (அலை) கூறி விட்டார்கள். உண்மையில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் அன்றைய தினம் மூஸாவைத் தவிர்த்து அறிவில் சிறந்தவர் வேறு யாருமில்லை தான். அதனால் யதார்த்தமாக, தன்னை அறிந்தவர் என்று குறிப்பிட்டது சரியானது தான். என்றாலும் இதில் ஆணவம் தொனிக்கின்றது. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்கவில்லை.

அதனால் அவர்களை கிழ்ரைச் சந்திக்கச் செய்கின்றான். அவ்வாறு சந்திக்கச் செல்கின்ற போது வழியில் அவர்களுக்கு மறதி ஏற்படுகின்றது. இந்த மறதியை அல்லாஹ்வே அவர்களுக்குக் கொடுத்து, இவ்வாறு மறதி உடையவர் எவ்வாறு மிகவும் அறிந்தவராக முடியும்? என்பதை உணர்த்துகின்றான். இதற்குப் பின்னால், மூஸா (அலை) அவர்கள் தாம் குறிப்பிட்ட அந்த வார்த்தைக்காக மிகக் கடுமையான முறையில், திரும்பத் திரும்ப கிழ்ர் அவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள்.

தாங்கள் இருவரும் கற்ற கல்வி, இந்தச் சிட்டுக் குருவி தனது அலகினால் கடலில் அள்ளிய தண்ணீரின் அளவு தான் என்பதை மூஸாவிடம் கிழ்ர் அவர்கள் அடக்கத்துடன் தெரிவிக்கின்றார்கள்.

ஆணவத்தை, அகந்தையை அடித்து நொறுக்குகின்ற இந்தச் சம்பவத்திலிருந்து அடக்கத்தை, பணிவைப் பெறுவதற்குப் பதிலாக ஷியாக்கள் மேலும் ஆணவத்தைப் பெறுகிறார்கள். இதிலிருந்து தங்களின் மூலம் யூதயிஸம் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றனர்.

கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

அல்குர்ஆன் 62:5

இந்த வசனப்படி யூதர்கள் பொதி சுமக்கும் கழுதைகள்! தான் சுமக்கும் சுவடிகளிலிருந்து அவை எதையும் அறிவதில்லை. இது யூதர்களின் நிலை! ஷியாக்களும் அதே நிலையைத் தான் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கும் குர்ஆனின் இந்தப் போதனைகள் புரியவில்லை.

அதனால் தான் படிப்பினையும், பாடமும் பெற வேண்டிய இந்தச் சம்பவத்தின் மூலம் அதற்கு நேர் மாற்றமான ஒரு விஷக் கருத்தை அள்ளி வைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளிலேயே விஷச் சிந்தனையைக் கலக்கும் இவர்கள், அவனது தூதரின் விஷயங்களில் விஷத்தைக் கலக்காமல் இருப்பார்களா?

இதைப் போன்ற கருத்து ஷாதுலிய்யா ராத்திபு கிதாபுகளிலும் உள்ளது. அதை இனி பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

கேள்வி பதில்

? தஜ்ஜால் செல்லாத இடங்களில் கஅபாவும் ஒன்று. அப்படியிருக்க, தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் நபி (ஸல்) அவர்கள் பார்த்ததாக புகாரியில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே? விளக்கம் தரவும்.
நிரவி சகோதரிகள்

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் தூங்கிக் கொண்டிருக் கையில் (கனவில்) கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது மாநிறமுடைய, தலைமுடி படிந்து தொங்கிய வண்ணமிருந்த ஒரு மனிதர் தமது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க… அல்லது வழிந்து கொண்டிருக்க… (நின்றிருந்தார்). அங்கே இருந்த நான், “இவர் யார்?” என்று கேட்டேன். “மர்யமின் குமாரர்” என்று பதிலளித்தார். நான் (தொடர்ந்து முன்னேறிச்) சென்றேன். அங்கு சிவப்பான, தடிமனான, சுருட்டைத் தலைமுடியுள்ள, வலக்கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது. நான், “யாரது?” என்று கேட்டேன். “தஜ்ஜால்” என்று பதிலளித்தார்கள். (தோற்றத்தில்) மக்களிலேயே அவனுக்கு அதிக ஒப்பானவர் இப்னு கத்தன் தான்.

இமாம் ஸுஹர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு கத்தன் குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன். அறியாமைக் காலத்திலேயே அவன் அழிந்து விட்டிருந்தான்.

நூல்: புகாரி 3441

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தமக்குக் கனவில் காட்டப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகின்றார்கள். ஈஸா (அலை) அவர்களையும், தஜ்ஜாலையும் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கா, மதீனாவிற்குள் தஜ்ஜால் நுழைய முடியாது என்று இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது. மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்கு உள்ளாகும். அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறை மறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 1881

இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்கள் அனைத்தும் கியாமத் நாள் பற்றிய முன்னறிவிப்பாகவே கூறப்படுகின்றன. அதாவது கியாமத் நாள் நெருங்கும் போது தஜ்ஜால் வருவான். அவ்வாறு வரும் போது அவனால் மக்கா, மதீனாவிற்குள் நுழைய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. இதற்கும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

? பெண்களுக்கு ஜும்ஆ தொழுகை கடமையில்லை என்று அபூதாவூதில் ஹதீஸ் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் திருக்குர்ஆனில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான கடமையாகத் தானே தொழுகையை அல்லாஹ் கூறுகிறான். 62:9 வசனத்தில் கூட, நம்பிக்கை கொண்டோரே என்று அனைவரையும் அழைத்து, ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால் விரையுங்கள் என்று தான் உள்ளது. இதற்கு விளக்கம் தரவும்.
எஸ்.ஏ. ஷர்புன்னிஸா, கிள்ளை

திருக்குர்ஆனில் ஜும்ஆ தொழுகை பொதுவான கடமை என்று கூறப்பட்டாலும் நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு வழங்கி உள்ளார்கள்.

“அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப்(ரலி)

நூல்: அபூதாவூத் 901

திருக்குர்ஆனில் ஒரு விஷயம் கடமை என்று கூறப்பட்டு, அதற்கு விளக்கமாக அமைந்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அதை ஏற்றுச் செயல்படுவது தான் ஒரு முஃமின் மீது கடமையாகும். இதற்குப் பல்வேறு உதாரணங்களைக் காட்ட முடியும்.

உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப் பட்டுள்ளது.

அல்குர்ஆன்  2:216

இந்த வசனத்தில் போர் செய்வது “கடமை’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தொழுகைக்கும், நோன்புக்கும் எந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றானோ அதே வார்த்தையைப் பயன்படுத்தி போரை அல்லாஹ் கடமையாக்கி உள்ளான். இதன் அடிப்படையில் பெண்களுக்கும் போர் கடமை என்று கூற முடியாது. ஏனெனில் போரிலிருந்து பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளித்துள்ளார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்கு அளிப்பது, இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீயின் அடிப்படையிலானது தான். எனவே இதில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை மறுப்பது இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானதாகும். இவ்வாறு பாரபட்சம் காட்டுவோரை இறை மறுப்பாளர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, “சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்” எனக் கூறி, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு   இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 4:150, 151

? எங்கள் (அரசு) அலுவலகத்தில் மாதந்தோறும் ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாமி போட்டோ வைத்து, பூஜை என்ற பெயரில் பொரி கடலை தருவார்கள். இதைச் சாப்பிடலாமா? வேண்டாம் என்று கூறினால், “நீங்கள் தான் இந்தச் சாமிகளை நம்பவில்லையே! அப்படியானால் வெறும் பொரி கடலை என்று நினைத்துச் சாப்பிட வேண்டியது தானே!’ என்று கேட்கிறார்கள். நம்மைப் பொறுத்த வரை வெறும் சடங்கு தானே! இதைச் சாப்பிடுவதில் என்ன தவறு? மேலும் இதற்காகப் பத்து ரூபாய் வழங்குவதில் தவறுண்டா?
ஹெச். நஸீர் அஹ்மத், கோவை

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் “அறுக்கப் பட்டவை’ என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் “உஹில்ல’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் தான் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்லிம்கள் என்ற பெயரில் அவ்லியாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

சாமியை நம்பவில்லை என்பதால் அந்த உணவுகளைச் சாப்பிடலாம் என்று கூற முடியாது. நாம் நம்பா விட்டாலும் அதை வணங்குபவர்கள் அந்த உணவில் புனிதம் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

இந்த உணவை இஸ்லாம் தடுத்துள்ளது என்ற அடிப்படையில் தான் உண்ணக் கூடாது என்று கூறுகிறோமே தவிர, அதில் புனிதம் இருப்பதால் சாப்பிடக் கூடாது என்று நாம் கூறவில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் இது போன்ற பூஜைகள் இறைவனுக்கு இணை கற்பித்தல் என்ற மிகப் பெரும் பாவச் செயலாகும். எனவே இதற்காகப் பணம் கொடுப்பதும் கூடாது. அரசு அலுவலகம் என்பதால் அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவது அரசியல் சட்ட அடிப்படையிலும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

? நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையை மிம்பரின் மீது தான் ஆற்றினார்கள். ஆனால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படும் சில பள்ளிவாசல்களில் ஜும்ஆ உரையை மிம்பர் போன்ற உயரமான இடத்தில் (மிம்பரில்) நடத்துவது இல்லையே! இது நபிவழிக்கு முரணில்லையா? என்று என் நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும்.
என். ஜாஹிர் ஹுஸைன், நாச்சியார் கோவில்

ஜும்ஆ உரையை நபி (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடை மீது தான் நிகழ்த்தினார்கள் என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. எனினும் மிம்பர் என்பது ஒரு வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மேடை தான் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸைச் சிந்தித்தால் விளங்க முடியும்.

நபி (ஸல்) அவர்கள், ஜும்ஆ நாளின் போது ஒரு மரம் அல்லது பேரீச்ச மரத்தின் (அடிபாகத்தின்) மீது சாய்ந்தபடி (உரையாற்றிய வண்ணம்) நின்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அன்சாரிப் பெண்மணி…. அல்லது அன்சாரித் தோழர்…., “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரைமேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள்.

நூல்: புகாரி 3584

நபித்தோழர் மிம்பர் செய்து கொடுப்பதற்கு முன்பு வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு மரப் பலகையின் மீது சாய்ந்தவாறு அல்லது ஊன்றியவாறு நின்று தான் உரையாற்றியுள்ளார்கள். நபித்தோழர் கேட்ட பின்னர், விரும்பினால் செய்து தாருங்கள் என்று கேட்டு, அதன் மீது நின்று உரையாற்றியுள்ளார்கள்.

எனவே மிம்பர் என்பது ஒரு வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட மேடை தான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். எனினும் அதன் பின்னர் அந்த மேடையின் மீது தான் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தியுள்ளனர் என்பதற்குப் பல்வேறு ஹதீஸ்கள் சான்றாக உள்ளன.

முறையாகப் பள்ளிவாசல் ஏற்படுத்தி, ஜும்ஆ நடத்தப்படும் இடங்களில் மிம்பர் அமைத்தே உரை நிகழ்த்துகின்றனர். ஆனால் சில பகுதிகளில் இணை கற்பிப்பவர்களுக்குப் பின்னால் நின்று தொழுவதைத் தவிர்த்து, தவ்ஹீது சகோதரர்கள் சிலர் சேர்ந்து தனியாக ஜும்ஆ நடத்தும் போது மிம்பர் அமைக்க முடிவதில்லை.

இவர்களும் இயன்ற வரை மேடை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றாலும் மேற்கண்ட நபிமொழியின் படி மிம்பர் இல்லாதபட்சத்தில் தரையில் நின்று உரை நிகழ்த்துவதைக் குறை கூற முடியாது.

மிம்பர் என்றால் மத்ஹபுகளில் உள்ளது போன்று இத்தனை படிகள் இருக்க வேண்டும், இன்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

தொழுகையை எப்படித் தொழ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது,  மிம்பரின் மீது நின்று தொழுது காட்டியுள்ளார்கள். எனவே மிம்பர் என்பது தற்போது நாம் விளங்கி வைத்திருக்கும் குறிப்பிட்ட வடிவம் கொண்டதல்ல! அது ஒரு மேடை தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

? நாங்கள் வசிக்கும் பகுதியில் மூன்று பள்ளிவாசல்கள் உள்ளன. சுன்னத் வல் ஜமாஅத்தினரால் நடத்தப்படும் இந்தப் பள்ளி வாசல்களுக்குச் சந்தா மற்றும் இமாமுக்கு ஒரு நாள் சாப்பாட்டுச் செலவுக்கு என்று வசூல் செய்கிறார்கள். இது தர்மம், நன்மையான காரியத்தில் சேருமா? அல்லாஹ்வுடைய பள்ளி என்ற அடிப்படையில் அங்கு போய் தொழுகிறோம்; பள்ளி கட்டடத்திற்கு நிதி உதவி செய்கிறோம். இது சரியா? விளக்கவும்.
பஷீர், மதுரை

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே! அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:265

அல்லாஹ்வின் திருப்தியை நாடி நாம் எதைச் செலவிட்டாலும் நம்முடைய எண்ணத்திற்காக அல்லாஹ் கூலி வழங்குவான். எனவே பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை என்ற அடிப்படையில் அதன் கட்டுமானப் பணிகளுக்காகவோ, அல்லது நிர்வாகப் பணிகளுக் காகவோ நிதி உதவி வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை. அது போன்று இமாமுக்கு உணவு வழங்குவதும் தர்மம் என்ற அடிப்படையில் அமைந்தது தான்.

எனினும் நாம் வழங்கும் இந்த உதவிகளைக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மவ்லிதுகள், கந்தூரி விழாக்கள் போன்றவற்றுக்குச் செலவிடுகிறார்கள் என்று தெரிந்தால், “பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்!” எனும் (5:2) வசனத்தின் அடிப்படையில் அதற்கு உதவுதல் கூடாது.

? உளூச் செய்யும் போது நாசிக்குத் தண்ணீர் செலுத்த வேண்டுமா? மூக்குத்தி அணிந்த பெண்களால் நாசிக்குள் தண்ணீர் செலுத்த முடியாதே! விளக்கவும்.
ரசீதா, அதிரை

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உளூச் செய்பவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும். மலஜலம் கழித்து விட்டுக் கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 161

இந்த ஹதீஸின் அடிப்படையில் உளூச் செய்யும் போது மூக்கிற்குள் தண்ணீர் செலுத்திச் சிந்துவது நபிவழியாகும். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு ஏதும் இல்லை.

மூக்குத்தி அணிவதால் நாசிக்குத் தண்ணீர் செலுத்த முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் மூக்குத்தி அணிந்தவர்கள் கூட நாசியில் சளி ஏற்பட்டால் அதைச் சிந்தாமல் இருக்க மாட்டார்கள். அது போன்று தான் உளூவின் போது நாசிக்குத் தண்ணீர் செலுத்திச் சிந்துவதாகும்.

ஒரு வேளை மூக்குத்தி அணிவதால் இதைச் செய்ய முடியவில்லை என்றால் மூக்குத்தி அணியாமல் இருக்க வேண்டுமே தவிர அதற்காக இந்த நபிவழியைப் புறக்கணிக்கக் கூடாது.

? ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. இன்று பெண்களுக்கென்றே தனியாக பேண்ட், சட்டைகள் இருக்கின்றன. இவற்றின் நிலை என்ன? இதை ஆண்களின் ஆடை என்று கணிப்பதா? பெண்களின் ஆடை என்று கூறுவதா?
எஸ்.எம். அப்துல் ஹமீது, வி. களத்தூர்

பெண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற ஆணையும், ஆண் அணிவதைப் போன்று ஆடை அணிகின்ற பெண்ணையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத் 3575

ஆண்களின் ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது; பெண்களின் ஆடையை ஆண்கள் அணியக் கூடாது என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ் இது தான்.

பொதுவாக இது பெண்கள் ஆடை, இது ஆண்கள் ஆடை என்று குறிப்பிட்டுப் பிரிக்க முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் இது வித்தியாசப்படும். உதாரணமாக நமது நாட்டில் பாவாடை என்ற உடையை பெண்கள் அணிகிறார்கள். ஆனால் ஃபிஜி என்ற நாட்டில் அதையே ஆண்கள் அணிகிறார்கள்.

ஒரு பகுதியிலேயே ஒரே விதமான ஆடையை இரு சாராரும் அணிகிறார்கள். தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்களில் சிலர் கைலி போன்ற ஆடையை அணிவது வழக்கம். ஆண்களும் கைலி அணிகின்றனர். இது போன்று இரு சாராருக்கும் பொதுவான ஆடைகளும் உள்ளன.

எனவே குறிப்பிட்டு இந்த உடையை ஆண்கள் அணியக் கூடாது; இந்த உடையைப் பெண்கள் அணியக் கூடாது என்று இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள முடியாது. அவ்வாறு பொருள் கொண்டால் அது அர்த்தமற்ற ஒன்றாகி விடும். எனவே இந்த ஹதீஸ் அந்தக் கருத்தைத் தரவில்லை.

பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் ஆடை அணியக் கூடாது; ஆண்கள் அணியும் விதத்தில் பெண்கள் அணியக் கூடாது என்று தான் இந்த ஹதீசுக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

சேலை, தாவணி போன்ற ஆடைகளை எடுத்துக் கொள்வோம். அதைப் பெண்கள் அணியும் விதத்தில் ஆண்கள் அணிவதற்குத் தடை உள்ளது. ஆனால் அதையே லுங்கி போன்று ஒரு ஆண் கட்டினால் அதைத் தடுக்க முடியாது.

ஆடையின் மூலம் ஆண்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும், பெண்கள் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்வதையும் தான் இந்த ஹதீஸ் தடை செய்கின்றதே தவிர குறிப்பிட்ட ஆடையை அணிவதைத் தடை செய்யவில்லை. கீழ்க்கண்ட ஹதீஸ் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5885

? வெள்ளிக்கிழமையன்று பள்ளி வாசல்களில் ஜும்ஆ நடந்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டில் லுஹர் தொழலாமா? இவ்வாறு தொழக் கூடாது; ஜும்ஆ முடிந்த பின்னர் தான் தொழ வேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே! விளக்கவும்.
ஏ.எஸ். ஃபாத்திமா, திட்டச்சேரி

ஜும்ஆ நடந்து கொண்டிருக்கும் போது பெண்கள் வீட்டில் லுஹர் தொழுவதற்குத் தடையேதும் இல்லை.

ஜும்ஆவிலிருந்து பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், தொழுகை நேரம் வந்தவுடன் தாராளமாக லுஹர் தொழுது கொள்ளலாம்.

ஜும்ஆ நடக்கும் போது பெண்கள் வீட்டில் தொழக் கூடாது என்றால் அதை அல்லாஹ்வோ, அவனது தூதரோ தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

? உணவு, உடை ஆகியவை ஹலாலாக இருக்கும் நிலையில் தான் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் என்று ஒரு ஹதீஸில் பார்த்தேன். ஆனால் இன்றைய நிலையில் சிலர் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தும் சூழ்நிலை உள்ளது. கடன் கொடுப்பவர்களும் வட்டியில்லாமல் கொடுப்பதில்லை. இப்படிப் பட்டவர்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுமா?
அன்வர் சாதிக், ஆனைமலை

வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டுமே இஸ்லாத்தில் மிகப் பெரும் பாவமாகும். வட்டி கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் பாவத்தில் சம பங்கு உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வட்டிக்குக் கடன் வாங்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அதே சமயம் வட்டிக்குக் கடன் வாங்கிய ஒருவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப்படாது என்று மார்க்கம் கூறவில்லை. ஏனென்றால் வட்டி வாங்கி உண்பவர் தான் ஹராமான உணவை உட்கொள்கின்றார். வட்டி கொடுப்பவர், அதாவது வட்டிக்குக் கடன் வாங்கியவர் ஹராமான உணவை உட்கொள்கிறார் என்று கூற முடியாது.

“தலை கலைந்து, புழுதி படர்ந்த நிலையில் நீண்ட பயணம் செய்யக் கூடிய ஒரு மனிதன், “என் இறைவா! என் இறைவா!” என்று வானத்தை நோக்கி, தனது இரு கைகளையும் நீட்டுகின்றான். அவனுடைய உணவு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய குடிப்பு ஹராமாக இருக்கின்றது. அவனுடைய உடை ஹராமாக இருக்கின்றது. அவன் ஹராமிலேயே மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறான். இவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1686

இந்த ஹதீஸில் ஒருவனது உணவு, குடிப்பு ஆகியவை ஹராமாக இருக்கும் நிலையில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது என்று கூறப்படுகிறது. வட்டிக்குக் கடன் வாங்குவதன் மூலம் மட்டுமே ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதில்லை என்பதால் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

? ஏகத்துவம் மே மாத இதழில், களியக்காவிளை காட்டுகின்ற அடையாளம் என்ற தலையங்கம் கண்டேன். அதில், சுன்னத் ஜமாஅத்தினர் பேசுவதாகப் பொய் சொல்லி தொலைபேசியில் பேசியிருப்பது முழுக்க முழுக்க குர்ஆன், சுன்னாவிற்கு எதிரான செயல். இதற்கு எந்தவொரு குர்ஆன் வசனத்தையோ, ஹதீஸையோ உங்களால் ஆதாரம் காட்ட முடியுமா?   அவர்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் செய்ததும் அதை விடத் தவறு தானே?
அப்துல் காதர், திருவனந்தபுரம்

ஜாக் அமைப்பினர் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்; தனி மனித எதிர்ப்பின் காரணமாகக் கொள்கையை விட்டு வெளியேறவும் துணிந்து விட்டனர் என்பதைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரங்களின் அடிப்படையில் நாம் தோலுரித்துக் காட்டி வருகிறோம்.

களியக்காவிளை விவாதம் தொடர்பாக ஜாக்கின் நிலைப்பாடு எப்படியிருக்கும்? என்று விவாதித்துக் கொண்டிருந்த போது நமது மார்க்க அறிஞர்களில் சிலர், “கொள்கை விஷயத்தில் ஜாக் இயக்கத்தினர் அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்’ என்ற கருத்தைத் தெரிவித்தனர். சிலர் அதை மறுத்தனர். இந்த நிலையில் ஜாக்கின் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள இவ்வாறு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

சத்தியத்திற்கு எதிரான கொள்கையுடையவர்களிடமிருந்து உண்மையை வர வைப்பதற்காக அல்லது சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காக, சத்தியத்தின் எதிரியைப் போன்று நம்மைக் காட்டிக் கொள்வதற்கோ, நம்மை மறைத்துக் கொள்வதற்கோ ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் வந்துக் கொண்டிருக்க, இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் அவனைப் பார்க்க நுழைந்த போது, (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளால் தம்மை மறைத்துக் கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவனாக ஒரு பூம்பட்டுப் போர்வையை போர்த்திக் கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து விட்டாள். உடனே, “ஸாஃபியே! இதோ முஹம்மத்!” என்று கூற இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து விட்டான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படையாகப் பேசியிருப்பான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3033

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், “நான் வருவதை அவனது தாய் தெரிவிக்காமல் இருந்திருந்தால் அவன் வெளிப்படையாகப் பேசி இருப்பான்” என்று கூறுவதை இங்கு கவனிக்க வேண்டும்.

இது போன்று மற்றொரு சந்தர்ப்பத்தில் நபித்தோழர் ஒருவர், தம்மை இஸ்லாத்தின் விரோதி போன்று காட்டிக் கொள்ள அனுமதி கேட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில் அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்து விட்டான்” என்று சொன்னார்கள். உடனே முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்கள் எழுந்து, “நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், “நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உஙகளைக் குறை கூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறு) சொல்” என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று, “இந்த மனிதர் (முஹம்மத்) எங்களிடம் தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்து விட்டார்” என்று (நபியவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறி விட்டு, “உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் பின் அஷ்ரஃப், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், “நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால் தான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள்…. (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி 4037

இதே அடிப்படையில் தான் சத்தியத்திற்கு எதிரானவர்களை அடையாளம் காட்டுவதற்காக, ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கை உடையவர்கள் போன்று பேசினோம். மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் இதில் எந்தத் தவறும் இல்லை.

குறிப்பு: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சியாளர் என்ற அடிப்படையில் கஅப் பின் அஷ்ரப் என்பவனைக் கொல்வதற்கு உத்தரவிட்டார்கள். ஆட்சியதிகாரம் இல்லாமல் ஜிஹாத் என்ற பெயரில் கண்டவரையும் கொல்வதற்கு இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

———————————————————————————————————————————————–

அறிவியல் அற்புதங்கள்                          தொடர்: 4

தேனீக்களின் தேனிலவு

எம். ஷம்சுல்லுஹா

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 30:21

இல்லற வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மன அமைதியாகும். இதன் துவக்கம் தான் திருமணம். இதில் ஆணும், பெண்ணும் இணைகின்றனர். திருமணம் முடிந்ததும் தம்பதியர்கள் தங்கள் இல்லற சுகத்தை அனுபவிப்பதற்குச் செல்லும் சுற்றுலாவிற்கு, தேனிலவு என்று பெயர். இதற்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்று வருகின்றனர். தாம்பத்திய உறவு மனிதர்களுக்குத் தேனாக இனிப்பதால் இதற்குத் தேனிலவு என்று மிகப் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர்.

இந்த இன்பம் தேனைத் தருகின்ற அந்தத் தேனீக்களுக்கு இருக்காதா? அதற்கும் உண்டு! ஆனால் ஒரு வித்தியாசம்!

மனிதர்களுக்கு மத்தியில் திருமணத்தின் மூலம் மலர்கின்ற உடலுறவு வெறுமனே உடல் ரீதியாக மட்டும் அமைந்து விடுவதில்லை. அவர்களுடைய உள்ளங்களுக்கு மத்தியில் தொடர்பை ஏற்படுத்தும் பாசக் கயிறாக அமைகின்றது.

திருமணத்திற்குப் பின் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பாசக் கயிற்றை மேலும் முறுக்கேற்றி பலப்படுத்தி விடுகின்றனர். அந்தப் பிள்ளைகள் பெரியவர்களாகி அவர்களுக்குத் திருமணம், குழந்தைகள் என்று திருமண வாழ்வு ஒரு வரலாற்றைப் படைத்து விடுகின்றது.

ஆனால் தேனீக்களின் உடலுறவு அப்படி அமைவதில்லை. அதிலும் குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான தாவர இனங்களுக்கு மத்தியில் மகரந்தச் சேர்க்கை என்ற திருமண உறவை ஏற்படுத்துகின்ற இந்தத் தேனீக்களின் திருமண வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியதாக அமைந்திருக்கின்றது.

மனிதர்களின் மண வாழ்வைப் போன்று சுக முடிவில் அமைவதில்லை. சோக முடிவில் அமைந்து விடுகின்றது. இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏற்பாடு!

உடலுறவும் உயிர் துறவும்

நமது விழிப் பார்வைகளை வியப்புடன் பார்க்க வைக்கும் அந்த விந்தையை இப்போது பார்ப்போம்.

முட்டையிலிருந்து வெளி வருவதற்கு முன்பாகவே ராணித் தேனீயானது, தான் வெளி வரப்போவதாக ஓர் அறிக்கை விடுகின்றது. இதன் பின் முட்டையிலிருந்து ராணித் தேனீ வெளிவருகின்றது.

வந்த பின் மறு அறிக்கை ஒன்று வெளியாகின்றது. அதற்கு ஆங்கிலத்தில் டஒடஒசஏ என்று பெயர். இந்த அறிக்கை, முட்டைக்குள் கருவாக இருக்கும் போட்டி ராணிக்களுக்குப் போய்ச் சேருகின்றது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் இளைய ராணித் தேனீக்கு அவை பதிலும் அளிக்கின்றன. அதற்கு ணமஆஈஃஒசஏ என்று பெயர்.

ராணித் தேனீயின் முதல் வேலை முட்டையிலிருந்து வெளியே வந்த மற்ற குஞ்சு ராணித் தேனீக்களைக் கொல்வதாகும். அடுத்தக்கட்ட வேலை, முட்டைக்குள் பொரியாமல் இருக்கும் குஞ்சுகளைக் கொல்வதாகும். தன்னைப் பெற்றெடுத்த மூத்த ராணித் தேனீயின் கதையையும் முடிக்காமல் விடுவதில்லை.

அதன் பின்னர் தான் ராணித் தேனீ, தேனிலவுக்குத் தயாராகின்றது. ஆண் தேனீக்கள் சங்கமிக்கும் பகுதிக்கு ராணித் தேனீ வருகையளிக்கின்றது. அங்கு அந்தரத்தில் தேன் கூட்டிலிருந்து சுமார் முப்பது அடி உயரத்தில் ஆண் தேனீ, ராணித் தேனீயிடம் உறவு கொள்கிறது. அப்போது ராணித் தேனீயின் வயது 9 நாள்! உறவு கொண்ட மாத்திரத்திலேயே ஆண் தேனீயின் அடிவயிறு கிழிந்து மல்லாக்க விழுந்து இறந்து விடுகின்றது. ஏன்? அது தன் உறுப்பை, ராணித் தேனீயிடம் செலுத்திய பிறகு அதைத் திரும்ப எடுக்க முடிவதில்லை. காரணம் அது வெளியே எடுக்க முடியாத அளவுக்கு அம்பு போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பது தான். அதிலுள்ள கடைசிச் சொட்டு விந்துத் துளி ராணித் தேனீயின் கர்ப்பக் குழாயில் இறங்கும் வரை அதிலேயே ஊடுறுவி நிற்கின்றது. இது போன்று மற்ற ஆண் தேனீக்களும் ராணித் தேனீயிடம் உடலுறவு கொள்கின்றன. அவ்வாறு உடலுறவு கொள்வதற்கு முன்னால் அங்கு ஏற்கனவே பதிந்திருக்கும் ஆண் தேனீயின் உறுப்பை அகற்றிக் கொள்கிறது. அதன் பின் முந்தைய ஆண் தேனீயைப் போன்றே இதுவும் உடலுறவு கொண்டு உயிரை மாய்க்கின்றது. இப்படி சுமார் 10க்கும் மேற்பட்ட தேனீக்கள் உடலுறவு கொள்கின்றன. உண்மையில் இது அல்லாஹ்வின் படைப்பில் விந்தையும் விநோதமும் ஆகும்.

உடலுறவின் போது ஆண் தேனீக்களிடமிருந்து செலுத்தப் படுகின்ற விந்தின் அணுக்கள் ராணித் தேனீயின் கருக்குழாயில் சேமிக்கப்படுகின்றன. சேமிக்கப்படும் விந்து அணுக்களின் அளவு 90 மில்லியன்கள். இவற்றில் சுமார் ஏழு லட்சம் விந்தணுக்கள் மட்டும் ராணித் தேனீயின் உடற்கூறில் உள்ள ஒரு தனிப் பையில் சேமிக்கப்படுகின்றது. இந்தச் சிறப்புப் பைக்கு நடஊதஙஆபஐஊஈஆ என்று பெயர்.

இவ்வாறு கருவுற்ற பின்னர் இன்னொரு முறை ஆண் தேனீயுடன் உடலுறவு கொள்ள முனைப்பு காட்டுவதில்லை.

சேமிக்கப்பட்ட இந்த விந்தணுக்கள் அழிந்து போகாமல் இருப்பதற்காக ராணித் தேனீயின் உடலுக்குள்ளாகவே புரதச் சத்து அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த விந்தணுக்கள் அழுகிப் போகாமல் பாதுகாக்கின்றது.

இப்படி ஒரு பாதுகாப்பைப் பெற்ற ராணித் தேனீ, இல்லை! இறைவனின் அதிசயமிக்க ராட்சத இயந்திரம் விந்தைச் சுமந்த பத்து நாட்களுக்குப் பின் தேன் கூட்டுக்குள் முட்டையிட வருகின்றது. வந்ததும் கண்ட இடத்திலும் கொட்டி விட்டுச் செல்கின்ற குப்பை லாரி போன்று அல்லாமல் கூட்டின் ஒவ்வொரு அறைக்கும் வருகையளித்து, அறையின் மறு முனை வரை பார்த்து, தூய்மையாகவும் துப்புரவாகவும் இருக்கும் அறையில் தான் முட்டையிடுகின்றது. தன் மனதிற்குத் திருப்தியடையாத வரை அது அங்கு முட்டையிடுவதில்லை. இதற்காக ராணித் தேனீ அதிகக் கவனம் எடுத்துக் கொள்கிறது.

அறையின் தூய்மையை உறுதி செய்த பின் பசை போன்ற ஒரு திரவத்தை முதலில் சுரக்கின்றது. தான் இடுகின்ற முட்டை அந்தப் பசையில் ஒட்டிக் கொள்வதற்காக இந்தத் திரவத்தைச் சுரக்கின்றது. ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று இவ்வாறு நின்ற நிலையிலேயே முட்டையிடுகின்றது.

24 மணி நேரமும்   இயங்கும் ராணி

ஒரு நாளில் 24 மணி நேரமும் சுமார் இரண்டாயிரம் முட்டைகளை இட்டுக் கொண்டேயிருக்கின்றது. இந்த வேளையில் ராணித் தேனீக்கு ஓய்வே இல்லை. உணவு உண்பதற்குக் கூட நேரமில்லை. மனித வாழ்வில் தாய் தான் தன் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டக் கண்டிருக்கிறோம். ஆனால் தேனீயின் வாழ்வில் பிள்ளைகள் தான், அதாவது பாட்டாளித் தேனீக்கள் தான் ராணித் தேனீக்கு உணவு ஊட்டுகின்றன. ஒவ்வொரு கூட்டிலும் முட்டையிட்ட பிறகு இந்த உணவூட்டும் வைபவம் நடக்கின்றது. அத்துடன் அது கழிக்கின்ற கழிவுகளையும் பாட்டாளித் தேனீக்கள் சுத்தம் செய்கின்றன.

இப்படி எத்தனை நாட்கள் முட்டையிடுகின்றது? அதன் ஆயுட்காலமான சுமார் ஐந்தாண்டுகள் வரை! தேனீயின் சரமாரியான இந்த சந்ததிப் பெருக்கம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்றது. இது ஓர் அபாரமான, அற்புதமான படைப்பு என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந்த அற்புதப் படைப்பின் அதிசயங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

நாள் ஒன்றுக்கு 1500 அல்லது 2000 முட்டைகள் வீதம் ஆண்டுக்கு லட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான முட்டைகளை இடுகிறது. இவ்வளவு முட்டைகளை இடுவதற்காகத் தான் ராணித் தேனீயின் கருக்குழாயிலும், இதற்கென தேனடையில் வைக்கப்பட்டிருக்கும் பையிலும் மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் சேமிக்கப்படுகின்றன.

ஒரு நாளைக்கு ராணித் தேனீ இடுகின்ற முட்டைகளின் கனம் ராணித் தேனீயின் உடலை விடக் கனமானது என்பது அதிசயிக்க வைக்கும் உண்மையாகும்.

ராணித் தேனீயின் உடற் கூட்டுக்குள்ளேயே முட்டைகள் இருக்கின்றன. முட்டைக் கருக்களும் இருக்கின்றன. இவ்விரண்டில் ஒன்று மற்றொன்றுடன் கலந்து விடுவதற்கும் அல்லது தடுப்பதற்கும் வசதியாக தேனீயின் உடற்கூட்டில் ஒரு வால்வு இருக்கின்றது.

ராணித் தேனீயானது பாட்டாளித் தேனீக்கான அறையில் முட்டை யிட்டு, அதனுடன் விந்தணுவையும் சேர்த்து விட்டால் அது பாட்டாளித் தேனீயாக உருவெடுக்கின்றது. விந்தணுக்கள் இல்லாமல் வெறுமனே முட்டை மட்டும் இட்டால் அது ஆண் தேனீயாக உருவெடுக்கின்றது.

இவ்வாறு தேனீயின் இனப் பெருக்கத்திலுள்ள ஒவ்வொரு அம்சமும், அதன் அறிவாற்றலும் நாம் அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. மனித இனத்தின் பகுத்தறிவை மிஞ்சுகின்ற வகையில் அமைந்துள்ள தேனீக்களின் இந்த இனப்பெருக்க முறையைக் காணும் போது, இது நிச்சயமாக அனைத்தையும் அறிந்த ஓர் இறைவன் வழங்கிய ஆற்றல் தான் என்று நாம் அவனிடமே  நமது வியப்பைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23:14) என்று திருக்குர்ஆன் கூறுவது போல் அவன் அழகிய படைப்பாளனே!

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால்

சத்தியம் உங்களைக் காத்து நிற்கும்

அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி. கடையநல்லூர்

நாம் ஏன் படைக்கப்பட்டோம்? நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டும் மறுமையில் நம்மை சுவனத்தில் கொண்டு போய் சேர்க்குமா? என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக ஏகத்துவ வாதிகள் இதனை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நம்முடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் மிக வீரியமாகச் சென்றடைந்து கொண்டிருக்கின்றது.

ஏகத்துவத்திற்கு எதிரான கப்ரு வணங்கிகளெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தான் தங்களின் மிக முக்கிய எதிரியாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். “நாங்களும் தவ்ஹீதைத் தான் பிரச்சாரம் செய்கிறோம்’ என்று பல அமைப்புகள் சொல்லிக் கொண்டு இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் இல்லாத ஓர் எதிர்ப்பு நமக்குத் தான் இருக்கின்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் பள்ளியில் விரலசைத்துத் தொழுதாலே விரலை ஒடித்து விடுவோம் எனக் கூக்குரலிடும் பாரம்பரியக் கட்சியைச் சார்ந்தவர்கள் கூட, வாரியத்தைப் பெற்றவர்கள் விஷயத்தில் வாய் மூடி மவுனம் காக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அங்கு ஏகத்துவ வீரியம் இல்லை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்ததினால் தான்.

நம்முடைய ஜமாஅத்தை ஒழித்து விட்டால் தவ்ஹீதையே இல்லாமல் ஆக்கி விடலாம் என அவர்கள் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாலும் நாம் நம்முடைய இலக்கை மறந்து விடக் கூடாது.

இன்றைக்கு நாம் சத்தியக் கொள்கையுடன் சமுதாயப் பணிகளையும் திறம்பட செய்து வருகின்றோம். சத்தியக் கொள்கைக்காகத் தான் சமுதாயப் பணிகளே தவிர, அவற்றிற்காக நாம் ஒரு போதும் சத்தியப் பிரச்சாரத்தில் பின்தங்கி விடக் கூடாது.

நமக்கு மத்தியில் உள்ள இயக்கங்களில் இணை வைப்புக் காரியங்களை தவிர்த்தவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இணை வைப்புக் கொள்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் எத்தனை பேர்? அதனை முழு முதற் கடமையாகக் கொண்டவர்கள் எத்தனை பேர்? என்று நாம் கணக்கிட்டுப் பார்த்தர்ல் அவர்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்.

இன்றைக்குப் பல இயக்கத்தினர் இணை வைப்புக் காரியங்களால் ஏற்படும் பின் விளைவுகளையும் தவ்ஹீதின் பலனையும் உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

இத்தகையவர்கள் நம்மைப் பார்த்து, “இவர்கள் ஏன் ஒரு தாயத்திற்காகத் தாயைப் பகைக்கிறார்கள்? யாரோ தர்ஹாவுக்குச் சென்றால் இவர்களுக்கு என்ன நேர்ந்தது? இவர்கள் ஏன் அதை எதிர்க்க வேண்டும்? மற்றவர்கள் மவ்லிது ஓதினால் இவர்களுக்கென்ன? இவர்களுக்குப் பிடிக்காவிட்டால் ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே? இதற்காக சமுதாயத்தைப் பகைக்கலாமா? சமுதாய ஒற்றுமையைக் குலைக்கலாமா? என்றெல்லாம் நம்மைப் பார்த்து ஏளனமாகக் கேட்கிறார்கள்; புழுதி வாரித் தூற்றுகிறார்கள்.

ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் அவர்களின் சிந்தனையில் வார்த்தெடுக்கப்பட்ட அனைத்து இயக்கத்தவர்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஏகத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் காரியங்களெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.

படைத்தவனுக்கு எதிரான பல்லிக் கதை

இவர்களால் வெளியிடப்படும் சமரசம் என்ற மாத இதழில் ஜூன் 2007 இதழில் சிறுவர் அரங்கம் என்ற பகுதியில் “பல்லியின் சப்தம்” என ஒரு கதை!  கதை சுவராஸ்யமாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவன் மீதே இட்டுக்கட்டப்பட்ட கதை!

மனிதர்கள் பொய் பேசினால் சப்தமிட வேண்டும் என்பதற்காகத் தான் இறைவன் பல்லியைப் படைத்தானாம். ஆனால் பல்லியால் அந்த வேலையைச் செய்ய முடியவில்லையாம். இறைவனிடம் சென்று, “மனிதர்கள் அதிகமதிகம் பொய் தான் பேசுகிறார்கள்; கத்திக் கத்தி எங்களுக்கு வாய் வலிக்கிறது; எங்களால் இந்தப் பணியைச் செய்ய முடியாது” என பல்லிகள் முறையிட்டதாம்.

அப்போது தான் மனிதர்கள் பொய் பேசுகிறார்கள் என இறைவனுக்குத் தெரிய வந்ததாம். உடனே மனிதர்கள் உண்மை பேசினால் மட்டும் கத்துமாறு இறைவன் பல்லிகளுக்குக் கட்டளையிட்டானாம். இது தான் பல்லிகள் கத்துவதின் ரகசியமாம்.

இவர்கள் எதைப் போதிக்க இந்தக் கதையை எழுதுகின்றார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. பல்லிகள் மறைவான விஷயங்களை அறியக் கூடியவையா? பல்லிகள் சொல்லித் தான் மனிதர்கள் பொய் பேசும் விஷயம் இறைவனுக்குத் தெரியுமா? இப்படியெல்லாம் கதை எழுதுவது எவ்வளவு பெரிய இணை வைப்பு? என்பது கூட இவர்களுக்கு உரைக்காது.

இதை நாம் சுட்டிக் காட்டினால் சிறுவர்களுக்காக எழுதிய கதையைக் கூடவா இப்படி விமர்சிப்பது? என்று தான் கேட்பார்களே தவிர நாம் எவ்வளவு பெரிய அபத்தமான மூட நம்பிக்கையுடன் கூடிய இணை வைப்புகள் நிறைந்த கதையைப் போட்டு விட்டோம் என்பதை இவர்கள் சிந்திக்க மாட்டார்கள். ஏனென்றால் இணை வைப்பின் பின்விளைவுகள் இவர்களின் மனங்களுக்குப் பாரதூரமாகத் தெரியாது.

இதன் காரணமாகத் தான் தர்ஹா வழிபாட்டின் தலைவர்களைக் கட்டித் தழுவும் இவர்கள், அவர்களிடம் காட்டும் பாசத்தில் நூறில் ஒரு பங்கு கூட நம்மிடம் காட்ட மாட்டார்கள். இவர்களின் பாசம் நமக்குத் தேவையில்லை. இணை வைப்பிற்கு எதிராக இவர்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதற்காகத் தான் இதை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

ஏகத்துவம் இருந்தால்  சுவனம் நிச்சயம்

ஒருவன் தன்னுடைய உள்ளத்தில் அணுவின் முனையளவு இணை வைப்பு நம்பிக்கையில் மரணித்தாலும் அவனுடைய மறுமை வாழ்வு நிரந்தர நரகத்திற்கு உள்ளாகி விடும். ஆனால் ஒரு அணுவின் முனையளவிற்குக் கூட நன்மை செய்யாமல் தவ்ஹீத் கொள்கையில் மட்டும் உறுதியாக இருந்தான் என்றால் அவனுடைய மறுமை வாழ்வில் நிச்சயம் சுவனம் கிடைக்கும்.

இதனால் நாம் எந்தப் பாவத்தையும் செய்யலாம் என எண்ணி விடக் கூடாது. இறைவன் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை நாம் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: “எனக்கு எந்த ஒன்றையும் இணை கற்பிக்காத ஒருவன் பூமி நிறைய பாவத்துடன் என்னைச் சந்தித்தாலும் நான் அது போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் அவனைச் சந்திப்பேன்

நூல்: முஸ்லிம் 4852

மேற்கண்ட ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்பாக எனது சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனைத் தனியாக நிறுத்துவான். அவனுக்கு எதிராக தொன்னூற்று ஒன்பது (பாவ) ஏடுகள் விரிக்கப்படும். அதிலிருந்து ஒவ்வொரு ஏடும் பார்வை செல்கின்ற தொலைவின் அளவிற்கு இருக்கும். பிறகு அல்லாஹ் அவனிடம் “இதிலிருந்து நீ எதையாவது மறுக்கின்றாயா? (அல்லது) பாதுகாவலர்களாகிய  என்னுடைய எழுத்தாளர்கள் உனக்கு அநீதி இழைத்து விட்டார்களா?” என்று கேட்பான். “என்னுடைய இரட்சகனே! இல்லை! (அனைத்தும் நான் செய்த பாவங்கள் தான்)” என்று கூறுவான். “(நீ வேதனையிலிருந்து தப்பிக்க) உனக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவன், “என் இரட்சகனே! ஏதுமில்லை” என்று கூறுவான்.

அப்போது அல்லாஹ், “அவ்வாறில்லை! உனக்கு நம்மிடம் ஒரு நன்மை இருக்கிறது. இன்றைய தினம் உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது” என்று கூறிய உடன் ஒரு சிற்றேடு வெளிப்படும். அதில் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; மேலும் நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியார் என்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்) என்ற ஏகத்துவக் கலிமா இருக்கும்.

“நீ உன்னுடைய (நன்மை, தீமைகளின்) எடையைப் பார்” என்று அல்லாஹ் கூறுவான். “என்னுடைய இரட்சகனே! (இந்தப் பாவ) ஏடுகளுடன் இந்தச் சிறிய ஏடு என்ன?” என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ் “நிச்சயமாக நீ அநீதி இழைக்கப்பட மாட்டாய்” என்று கூறுவான்.

அந்தப் பாவ ஏடுகள் ஒரு தட்டிலும், அந்தச் சிற்றேடு ஒரு தட்டிலும் வைக்கப்படும். அந்தப் பாவ ஏடுகள் பறந்தோடி விடும். அந்தச் சிற்றேடு கனத்து விடும். அல்லாஹ்வின் பெயரை விட எதுவும் கனத்து விடாது.

அறிவிப்பவர்: அம்ருப்னு ஆஸ்(ரலி)

நூல்: திர்மிதி 2563

மேற்கண்ட ஹதீஸ்களை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் படியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகத்தில் மிகக் குறைந்த வேதனை அனுபவிக்கக் கூடியவனிடம் அல்லாஹ், “இந்தப் பூமி அளவிற்குத் தங்கம் உனக்கு இருந்தால் அதனை இதற்குப் பகரமாக நீ தருவாயா?” எனக் கேட்பான். அதற்கவன் “ஆம்” எனப் பதிலளிப்பான். உடனே இறைவன் “இதை விட மிகவும் லேசானதான, “எனக்கு நீ இணை கற்பிக்காதே!’ என்று தானே நீ ஆதமுடைய முதுகில் இருக்கும் போது நான் கேட்டேன். ஆனால் நீயோ அதனை மறுத்து இணை கற்பித்து விட்டாயே! (நான் எப்படி மன்னிக்க முடியும்?)” என்று கூறுவான்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 3087

மறுமையில் நம்மை நிரந்த சுவனத்தில் கொண்டு சேர்க்கக் கூடியது ஏகத்துவக் கொள்கை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன .

பிரச்சாரமே நம் உயிர் மூச்சு

நம்முடைய சமுதாயம் இவ்வுலக வாழ்க்கையில் படும் துன்பங்கள் நீங்க நாம் பல போராட்டங்களை நடத்துகின்றோம்; பலவிதமான உதவிகளைச் செய்கின்றோம்.

ஆனால் இதை விடப் பல மடங்கு அதிகமாக, நிரந்தர வாழ்க்கையாகிய மறுமையில் அவர்களும் நாமும் தோல்வி அடையாமல் இருப்பதற்காக ஏகத்துவத்தை நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும். நம்முடைய பேச்சும் மூச்சும் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

ஏனென்றால் இணை வைப்பின் உண்மையான பாதிப்பை விளங்கியவர்கள் நாம் தான். நம்மைத் தான் இறைவன் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறான்.

எல்லோரும் வசதிகளை அனுபவிக்கும் போது நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? காலா காலத்துக்கும் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா? எத்தனை காலங்களுக்கு தாயத்தையும், தர்ஹாக்களையும், மவ்லிதுகளையும், மத்ஹபுகளையும் பேசிக் கொண்டிருப்பது? என்ற எண்ணம் நம்மிடம் ஒரு போதும் வந்து விடக் கூடாது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உண்மையான) இஸ்லாம் (ஆரம்பத்தில் மக்களுக்கு) புதுமையாகத் தான் தோன்றியது. இவ்வாறு ஆரம்பித்தது போன்றே (பிற்காலத்திலும் உண்மையான இஸ்லாம் மக்களுக்கு) புதுமையானதாக மீண்டும் வரும். (அப்போது உண்மை இஸ்லாத்தைப் போதிக்கும்) அந்தப் புதுமை வாதிகளுக்கு நற்செய்தி கூறுங்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹ‚ரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 208

நபியவர்கள் போதித்த அந்த உண்மை ஓரிறைக் கொள்கையை நாம் எடுத்துரைக்கும் போது அது சிலருக்குப் புதுமையாகவும் சமுதாயப் பிரிவினையாகவும் தோன்றலாம்.

ஏனென்றால் அதிகமான மக்களுக்கு உண்மை இஸ்லாம் மறைக்கப்பட்டு அசத்தியக் கொள்கை தான் இஸ்லாம் என்று எண்ணம் ஏற்பட்டு விட்டது.

எனவே நபியவர்கள் அறிவித்த அந்தப் புதுமைவாதிகளாக நாமிருக்க வேண்டும். சத்தியத்தை நாம் காத்து நின்றால் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும்  சத்தியம் நம்மைக் காத்து நிற்கும். இதை நாம் அனுபவித்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் இனியும் கொள்கைப் பிரச்சாரத்தில் தடைக் கற்களை உடைத்தெறிந்து இறை வழியில் முன்னேறிச் செல்ல வேண்டும். இறைவன் அதற்கு அருள் புரிவானாக!

———————————————————————————————————————————————–

ஈமானின் சுவை

எஸ்.கே. மைமூனா

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

இன்றைய காலத்தில் வாழும் முஸ்லிம்களில் அதிகமானோர் தங்களை அறியாமலேயே தவறுகள் செய்வதற்குக் காரணம், அவர்களுக்கு ஈமான் என்றால் என்ன? என்பது தெரியாதது தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈமானைப் பற்றி அழகிய முறையில் சொல்லிக் காட்டுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறை மறுப்பிற்கே திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் வீசப்படுவதைப் போன்று வெறுப்பது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 21

மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஈமானின் அடையாளமாக மூன்று விஷயங்களை கூறுகிறார்கள். அதில் முதல் விஷயம், ஒரு மனிதன் உலகிலுள்ள அனைத்தையும் விட அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் முன்னுரிமை கொடுத்து நேசிப்பதாகும்.

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்தல்

இன்றைக்கு அதிகமானவர்கள் வழி தவறுவதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்ன இந்தக் கட்டளையை மறந்ததே காரணம்!

வரதட்சணை வாங்கித் திருமணம் முடிக்கும் ஆண்கள், பெற்றோரைக் காரணம் காட்டி இந்தப் பாவத்தைச் செய்கிறார்கள். “அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்யும் காரியம் இது’ என்று அவர்களிடம் சொன்னால், “பெற்றோரை எதிர்க்க என்னால் முடியாது’ என்று கூறி விடுகிறார்கள். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் விட இவர்கள் பெற்றோருக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

மேலும் இவர்கள் ஒரு பெண்ணை விரும்பும் போது மட்டும் பெற்றோரை எதிர்த்துத் திருமணம் செய்கிறார்கள். ஒரு பெண்ணின் மீது வைத்திருக்கும் பிரியத்தைக் கூட அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் இவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

இதே போன்று வியாபாரத்தில் கலப்படம் செய்பவர்கள், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்கள், இன்ன பிற பாவங்களைச் செய்பவர்கள் அனைவருமே நபி (ஸல்) அவர்களது கட்டளையைத் துணிச்சலாக அலட்சியம் செய்வதால் தான் இந்தப் பாவங்களைச் செய்கிறார்கள்.

இன்னும் சிலர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மனைவி, மக்கள் ஆகியோருக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புறக்கணிக் கின்றனர். இவர்களை அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான்.

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:24

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ் வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

அல்குர்ஆன் 33:36

அல்லாஹ்வுக்காக நேசித்தல்

அடுத்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறும் விஷயம், ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காக மட்டுமே நேசிப்பதாகும்.

ஒருவர் அல்லாஹ்வுக்காக, அவனது மார்க்கத்திற்காக மட்டுமே மற்றொருவரை நேசிக்க வேண்டும். ஆனால் இன்று நட்புக்காக மார்க்கத்தை விடக் கூடிய சூழ்நிலையைத் தான் நாம் பார்க்கிறோம்.

வரதட்சணை, யாநபி பைத் போன்ற அனாச்சாரங்கள் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாதீர்கள் என்று கூறினால், “அவர் எனக்கு நெருங்கிய நண்பர்; அதனால் அவரது திருமணத்திற்குச் செல்லாமல் இருக்க முடியாது’ என்று கூறுகின்றனர். அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதை விட்டு விட்டு, நட்புக்காக இறைவனுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இறை மறுப்பை வெறுத்தல்

ஈமானின் சுவையை உணர்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறும் அடுத்த விஷயம், இறை நிராகரிப்பை நெருப்பில் வீசப் படுவதைப் போன்று வெறுப்பதாகும். அதாவது, இறைவன் ஒருவன் தான் என்று ஏற்றுக் கொண்ட பிறகு அதன் மூலம் என்ன சோதனைகள் வந்தாலும் அதில் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று விஷயங்களும் ஒருவரிடம் இறுதி வரை இருந்தால் தான் அவர் உண்மையான முஃமினாக முடியும்.

இன்னும் சிலர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிக்கிறோம் என்ற பெயரில் பாவமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். மவ்லிது, ஃபாத்திஹா, மீலாது விழா போன்ற அனாச்சாரங்களைச் செய்து வருகிறார்கள். அதுவும் நன்மை என்ற பெயரில் இவற்றைச் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம், அல்லாஹ்வையும், தூதரையும் நேசிப்பது என்றால் என்ன்? என்று தெரியாமல் இருப்பது தான்.

அல்லாஹ்வையும் தூதரையும் நேசிப்பதன் அடையாளம் அவர்கள் ஏவியதைச் செய்து, அவர்கள் தடை செய்ததை விட்டு விலகி வாழ்வதாகும். மவ்லிது, ஃபாத்திஹா போன்ற செயல்களை அல்லாஹ்வும், நபியவர்களும் காட்டித் தந்துள்ளார்களா? என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை. இது போன்ற செயல்களுக்கு நன்மை கிடைக்காது என்பதுடன் தண்டனையும் கிடைக்கும்.

“செயல்களில் நஷ்டம் அடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களை யும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

அல்குர்ஆன் 18:103-106

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதென்பது, ஒருவர் உலகிலுள்ள அனைத்தையும் விட, தனது உயிரை விட நபியவர்களை மேலாக நினைத்து, தனது விருப்பு, வெறுப்பு எல்லாவற்றையும் நபி (ஸல்) அவர்களின் சொல்லின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்வதாகும். இதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 15

நபித்தோழர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசித்த விதம்

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நபித்தோழர்கள் தங்கள் உயிரை விட மேலாக நேசித்து வந்தார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு கட்டளையிட்டால் அதை உடனே நிறைவேற்றக் கூடியவர்களாகவும், அவ்விருவரும் ஒரு விஷயத்தைத் தடை செய்தால் அதை விட்டு உடனே விலகக் கூடியவர்களாகவும் நபித்தோழர்கள் இருந்தனர். அத்தகைய சில செய்திகளைப் பார்ப்போம்.

நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் வசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, “(மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது” என அறிவிக்குமாறு கட்டளை இட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) என்னிடம், “வெளியே சென்று இதை ஊற்றி விடு” என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2464

மது தடை செய்யப்பட்டு விட்டது என்ற செய்தியைக் கேட்டவுடன் நபித்தோழர்கள் வைத்திருந்த மது அனைத்தையும் தெருக்களில் ஊற்றி, ஆறாக ஓடச் செய்து விட்டார்கள். இது போன்று நாட்டுக் கழுதையின் இறைச்சி தடை செய்யப்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, சமைத்துக் கொண்டிருந்த இறைச்சியைத் தரையில் கொட்டிய செய்தியும் ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

நாங்கள் கைபருக்கு வந்து கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அதன் பிறகு (யூதர்களான) அவர்களுக்கு எதிராக அல்லாஹ் (எங்களுக்கு) வெற்றி அளித்தான். அவர்கள் வெற்றி கொள்ளப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் (மக்கள்) அதிகமாக நெருப்பு மூட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது என்ன நெருப்பு? எதற்காக (இதை) மூட்டியிருக் கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “இறைச்சி சமைப்பதற்காக!” என்று மக்கள் பதிலளித்தனர். “எந்த இறைச்சி?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நாட்டுக் கழுதைகளின் இறைச்சி” என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றைக் கொட்டி விட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர், “இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை நாங்கள் கழுவி (வைத்து)க் கொள்ளலாமா?” என்று கேட்டார். அப்படியே ஆகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸலமா பின் அக்வஃ

நூல்: புகாரி 6148

என் தந்தை அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகள் ஆயிஷா குறித்து அவதூறு கூறிய பின்பு ஒரு போதும் மிஸ்தஹுக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன்” என்று சத்தியமிட்டுக் கூறினார்கள்.  மிஸ்தஹ் பின் உஸாஸா, தமது உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்.

அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்.  (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும்.  அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும் கிருபையுடையோ னுமாக இருக்கிறான்” என்ற (24:22) வசனத்தை இறக்கினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குச் செய்யும் இந்த உதவியை நான் ஒரு போதும் நிறுத்த மாட்டேன்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2661

இப்படி நபித்தோழர்களின் வாழ்வில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை நாம் எடுத்துக் காட்ட முடியும். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பத்தை விட்டு விட்டு, அந்த முடிவுக்குக் கட்டுப்படக் கூடியவர்களாக நபித்தோழர்கள் திகழ்ந்துள்ளனர்.

அதனால் தான் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர் என்று திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “நீங்கள் உஹது மலை அளவுக்குத் தங்கத்தை தர்மம் செய்தாலும் எனது தோழர்களுக்கு ஈடாக முடியாது” என்று பாராட்டியுள்ளார்கள்.

அந்த நபித்தோழர்கள் ஈமானின் சுவையை அறிந்து, அதைப் பின்பற்றியது போல் நாமும் செயல்பட்டு இம்மை, மறுமையில் நாம் வெற்றி பெற்றவர்களாக ஆக வேண்டும்.

ஏகத்துவ வாதிகளின் இனிய கவனத்திற்கு…

தமிழகத்தில் 1980களில் துளிர் விட்ட தவ்ஹீது (ஏகத்துவ) இயக்கம் அல்லாஹ்வின் அளவற்ற அருளால் இன்று ஆல் போல் தழைத்து, விண்ணை முத்தமிடும் கிளைகளுடன் பரந்து விரிந்து நிற்கின்றது. இதை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதிசயித்து நிற்கிறார்கள். பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெறுவதற்கான (பி.ஹெச்.டி.) படிப்பை மேற்கொள்ளும் பட்டதாரிகள், இந்த இயக்கத்தின் வரலாற்றைத் தங்கள் மேற்படிப்பில் ஆய்வுப் பொருளாகத் தேர்வு செய்து படிக்கின்றனர்.

அதற்காக அவர்கள் இந்த இயக்கத்தின் வேர்ப்பிடிப்பு, வளர்ச்சி போன்ற விபரங்கள் அடங்கிய வரலாற்று ஆவணத்தைத் தேடி நமது அலுவலகத்திற்கு வருகின்ற போது அத்தகைய ஆவணம் எதுவும் நம்மிடம் இல்லை என்று கைவிரிக்கும் நிலையே உள்ளது. இந்தக் கையறு நிலை அவர்களை மட்டுமல்ல, நம்மையும் சேர்த்தே வேதனையில் ஆழ்த்துகின்றது. எனவே இந்தக் குறையைக் களையும் விதத்தில், வரலாறு படைத்த தவ்ஹீது ஜமாஅத்தின் வரலாற்றைப் படைக்க, நாம் நடந்து வந்த பாதையை வரலாற்றுத் தடயமாகப் பதிவு செய்து அதை ஆவணமாக்க முடிவு செய்துள்ளோம்.

இந்தப் பணியைத் தொடங்கவும், தொடரவும், நிறைவடையவும் உங்கள் கைகளையே எதிர்பார்த்து நிற்கிறோம். எனவே…

ஏகத்துவக் கொள்கையின் தொடக்க காலம் முதல் உங்கள் ஊர்களில் நீங்கள் சந்தித்த சோதனைகள், அடி உதைகள், அடக்குமுறைகள், ஊர் நீக்கங்கள் என உங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட அனைத்து விதமான தடைகள், காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார்கள், அவற்றை ஒட்டிய கைதுப் படலங்கள், நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள்…

நீங்கள் நடத்திய பொதுக் கூட்டங்கள், நடத்திய வரதட்சணை ஒழிப்புத் திருமணங்கள், வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகைகளில் வந்த செய்திகள்…

ஆரம்ப காலங்களில் நாம் வெளியிட்ட நூற்களில் தற்போது விற்பனையில் இல்லாத பதிப்புகள், மாத இதழ்களின் தொகுப்புகள், பொதுக்கூட்டங்களின் ஆடியோ, வீடியோ பதிவுகள்…

இவை அனைத்தையும் ஒன்று விடாது நாள், தேதி குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

மேற்கண்ட குறிப்புகளை வழங்கி தவ்ஹீது ஜமாஅத்தின் வரலாற்றுப் பக்கங்களில் உங்கள் ஊர் நிகழ்வுகளையும் பதிய வையுங்கள். ஆய்வுகள் மேற்கொள்வோருக்கு அவற்றை ஆவணமாக்குவோம், இன்ஷா அல்லாஹ்!

அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

30, அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை – 1.

———————————————————————————————————————————————–

அபூபக்ர் (ரலி) வரலாறு                          தொடர்: 33

வீரர் வீழ்த்திய வெள்ளை மாளிகை

எம். ஷம்சுல்லுஹா

உல்லைஸில் கிடைத்த இந்த உன்னத வெற்றிக்குப் பிறகு உம்கீஷியா என்ற இடத்திற்கு காலித் செல்கின்றார். இது ஹீராவைப் போன்ற ஒரு நகரம். பாதிக்லி என்ற சிற்றாறு பிரியும் இடத்தில் புராத் நதி முடிவடைகின்றது. அங்கு தான் இந்த ஊர் அமைந்துள்ளது.

இது உல்லைசுக்கு அருகில் உள்ளதென்பதால் இங்குள்ள மக்கள் உல்லைஸ் போரில் முஸ்லிம்களுக்கு எதிரான படையில் பங்கெடுத்தனர். இவ்வூருக்குள் படையெடுத்து வந்த காலித் படையினர் கொஞ்ச நேரத்திற்கு உள்ளாகவே அதைக் கைப்பற்றி முடித்து விட்டனர். இங்குள்ள மக்கள் சவாத் என்ற பகுதிக்குத் தப்பியோடி விட்டனர்.

கத்தியின்றி, இரத்தமின்றி கைவசமான இந்த ஊரின் பொருள் வளங்கள் முஸ்லிம்களுக்குப் புதையல் போன்று கிடைத்தன. இவை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஜன்தல் என்பவர் இந்த சந்தோஷமான செய்தியை ஆட்சித் தலைவரிடம் பகிர்ந்த போது அவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். “மாவீரர் காலிதைப் பேன்று மகளிர் இனியொரு மகனைப் பெறப் போவதில்லை” என்று மகிழ்ச்சிப் பெருக்கில் தன் பாராட்டுக்களை மாலையாகச் சூடினார்கள்.

உம்கீஷியாவிற்குப் பிறகு காலித் ஹீராவை நோக்கிப் பயணமாகின்றார்.

(ஏற்கனவே ஹீராவைப் பற்றிய குறிப்புகள் ஏகத்துவத்தில் இதே வரலாற்றுத் தொடரில் பதிவாகியுள்ளன. ஆனால் அவை காலித், ஹீராவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பானவையாகும். ஹீரா எப்படி வெற்றி கொள்ளப் பட்டது? என்பது பற்றிய விளக்கம் அக்குறிப்புகளில் இடம்பெறவில்லை. எனவே இப்போது ஹீரா எப்படி வெற்றி கொள்ளப்பட்டது என்ற விளக்கத்தைப் பார்ப்போம்.)

ஹீராவின் வரலாற்றுப் பின்னணி

கி.பி. 2ம் நூற்றாண்டிலிருந்து பல நூற்றாண்டுகள் லக்மிய்யீன் என்ற கிளையினரே ஹீராவை ஆண்டு வந்தனர். இவர்கள் “தாயிய்யீன்’ என்பவர்களுடன் கொண்ட கருத்து வேறுபாடு போரில் போய் முடிந்தது. இரு குலத்தாரும் போரில் ஈடுபட்டனர். இதை ஒரு பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு லக்மிய்யீன்களுக்கு எதிராக பாரசீகப் பேரரசு, தாயிய்யீன்களுக்கு உதவியது.

லக்மிய்யீன்களைச் சார்ந்த அரசர் நுஃமான் பின் முன்திர் தோல்வி அடைகின்றார். பாரசீக மன்னர் கிஸ்ரா அவரைக் கைது செய்து கொலை செய்து விடுகின்றார். தாயிய்யீன்களைச் சேர்ந்த இயாஸ் பின் கபீஸா என்பவரை ஹீராவின் ஆட்சியாளராக நியமிக்கின்றார். நபி (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட வேளையில் இவர் தான் ஹீராவின் ஆட்சியாளராக இருந்தார்.

இவர் ஆட்சியில் இருக்கும் போது, பனூ பக்ர் கிளையினர் பாரசீகப் படையைத் தோற்கடித்தனர். பனூ பக்ரி கிளையினருக்கு இயாஸின் ஆட்கள் உதவி அளிக்கின்றனர். இது இயாஸின் பதவி பறி போவதற்குக் காரணமாக அமைந்தது. இயாஸைப் பதவி நீக்கம் செய்த பாரசீக மன்னர், தனது நேரடிக் கட்டுப்பாட்டில் பாரசீகத்தைச் சேர்ந்த ஒருவரை ஹீராவுக்கு ஆட்சியாளராக நியமிக்கின்றார்.

அவ்வாறு பாரசீகப் பிரதிநிதி ஹீராவை ஆண்டு கொண்டிருக்கும் போது தான் காலிதின் படை அதைச் சுற்றியுள்ள நாடுகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தது. உம்கீஷாவுக்கு அடுத்து காலித் உலா வரப் போவது நமது ஊர் தான் என்று அதன் ஆட்சியாளர் யூகிக்கவில்லை; உறுதி செய்து கொண்டார். அவரது பெயர் ஆஸாத்பா!

தனது நாட்டுக்குள் வரப் போகும் காலித், நில மார்க்கமாக அல்ல; நீர் மார்க்கமாக என்று எதிர்பார்த்த ஆஸாத்பா தனது மகன் தலைமையில் ஒரு படையை ஹீராவுக்கு வெளியே அனுப்பி, புராத் நதியை மறிக்கச் செய்கின்றார்.

கரை தாண்டிய நதியில்   தரை தட்டிய கப்பல்கள்

ஆஸாத்பா எதிர்பார்த்தது போல் காலித், தனது படையினருடன் கப்பல்களில் வந்து கொண்டிருந்தார். ஆஸாத்பாவின் மகன் புராத் நதியை மறித்துக் கொண்டிருந்ததால் ஆற்று நீர் தன் போக்குக்கு மாற்றமாக, கரைகளைத் தாண்டிச் செல்லத் துவங்கியது. இதனால் காலித் படையினர் வந்த கப்பல்கள் தரை தட்ட ஆரம்பித்தன! சாயத் தொடங்கின!

கோபத்தில் கொந்தளித்துப் போன காலிதிடம் மாலுமிகள் நிலைமையை எடுத்து விளக்கினர். நீரின் போக்கு திசை திருப்பப்பட்ட விபரத்தை நிதானமாக எடுத்துக் கூறினர். இந்தச் சதியைத் தெரிந்த மாத்திரத்தில் அவர் தன் குதிரைப் படையுடன் தரை மார்க்கமாக எதிரிகளை எதிர் கொள்ள மின்னல் வேகத்தில் பறந்தார்.

கரை தாண்டிப் பாயும் புராத் நதியில் தரை தட்டும் கப்பல் மூலம் காலித் எப்படி வந்து சேர்வார்? அதையும் பார்த்து விடுவோம் என்று இறுமாப்புடன் தன் படையுடன் புராத் நதியின் அதீக் கிளை துவங்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த ஆஸாத்பாவின் மகன், காலிதின் படை தரை மார்க்கமாக எதிரில் வருவதைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகிறான்.

அதிர்ச்சியில் உறைந்த அவனையும் அவனது படையையும், கரையைத் தாண்டிப் பாய்ந்த புராத் நதி போல் அவர்களது உடலிலிருந்து பாய்ந்த இரத்த நதியில் உறைய வைத்து விடுகின்றார்.

மறிக்கப்பட்ட புராத் நதியை அதன் போக்கில் பாய விடுகின்றார். வழி மறிப்பின் மூலம் பறிக்கப்பட்ட சுதந்திரம் தனக்கு மீண்டும் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சிப் பெருக்கில் தன் வழியை நோக்கிப் பாய்ந்த புராத் நதி, காலிதின் கப்பல் படையை நன்றியுடன் ஹீராவை நோக்கி வேகமாகச் சுமந்து வந்தது.

கப்பலிலிருந்து இறங்கிய படையினருடன் காலித் ஹீராவை நோக்கி வருகின்றார். அங்கு கவர்னக், நஜ்ஃப் கோட்டைகள் அமைந்த பகுதிகளில் அவரது படைகள் நிலை கொண்டன. இந்தக் கட்டத்தில் ஹீராவின் ஆட்சியாளர் ஆஸாத்பா தன் படையுடன் வெண் கோட்டைகள் பகுதியின் நிலை கொண்டிருந்தார்.

இதற்கிடையே காலித் கவர்னக், நஜ்ஃப் ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றினார். அதன் பின்னர் ஆஸாத்பாவின் படைகள் நிலை கொண்டிருந்த வெண் கோட்டையை நோக்கி காலித் வீர நடை போடுவதைப் பார்ப்பதற்கு முன்னால் கவர்னக் கோட்டை பற்றி ஒரு வரலாற்றுக் குறிப்பை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

கோட்டை கூறும் கோர நினைவு

கி.பி. 4 அல்லது 5ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த கவர்னக் கோட்டையை ஹீராவின் அரசர் பெரிய நுஃமான் பின் முன்திர் கட்டினார். இதைக் கட்டி முடிக்க 60 ஆண்டு காலமானது. இதை ரோமாபுரிப் பொறியாளர் சின்னிம்மார் என்பவர் கட்டினார்.

இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட பின்னர், இதன் மேல் ஏறிப் பார்த்த மன்னர், தன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையுள்ள ஊர்களையும், பரவி விரிந்து கிடந்த பாலைவனத்தையும், ஆடுகின்ற அலை கடலையும் காண முடிந்தது.

கலங்கரை விளக்கம் போல் காட்சியளித்த இந்தக் கவின்மிகு கோட்டையைக் காண்பதற்காக மக்கள் அலை அலையாய் வந்து குவிந்தனர்.

“கட்டடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த இந்தக் கற்கோட்டையை மிஞ்சும் வகையில் இன்னொரு கோட்டையை உன்னால் கட்ட இயலுமா?” என்று பொறியாளர் சின்னிம்மாரிடம் மன்னர் வினவினார். அதற்கு சின்னிம்மார், முடியும் என்று பதிலளித்தார்.

இந்தப் பதிலில் அதிர்ச்சியடைந்த மன்னர், இந்தக் கோட்டைக்கு இணையாக இன்னொரு கோட்டை உருவாவதை அஞ்சி அந்தப் பொறியாளரை கோட்டையின் உச்சிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கிருந்து அவரை வீசியெறிந்து விடுமாறு தனது காவலர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

ஹீரா மட்டுமல்ல! அரபகமே அதிசயிக்கின்ற கோட்டையைக் கட்டிய பொறியாளர் சின்னிம்மார், தான் கட்டிய கோட்டையின் மீதிருந்தே கீழே விழுந்து தவிடு பொடியாகின்றார்.

இதனால் “சின்னிம்மாருக்குக் கிடைத்த சன்மானம்” என்ற உதாரணம் இவரது பெயரால் இன்றளவும் அரபகத்தில் வழங்கப் பட்டு வருகின்றது. உதவியருக்கு உபத்திரவம் செய்வதற்கும், கைமாறு செய்தவர்களைக் காலை வாரி விடுவதற்கும் சின்னிம்மார் உதாரண புருஷனாகத் திகழ்கின்றார்.

நாம் இங்கு காண விழைவது, இப்படியொரு வரலாற்றுப் பின்னணியை கொண்ட வானளாவிய கவர்னக் கோட்டையைத் தான் வீரர் காலித் கைப்பற்றி விடுகின்றார்.

கோட்டைகளைக் காக்கும் குடிமக்கள்

கவர்னக், நஜஃப் கோட்டைகளை கைப்பற்றிய பின் வெண் கோட்டையைத் தாக்க விழைகிறார் காலித்!

பாரசீக மன்னர் இறந்த செய்தியினாலும், தன் மகன் அடைந்த கதியினாலும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த ஹீராவின் ஆட்சியாளர் ஆஸாத்பா போர் புரிவதற்கு எந்த ஓர் ஆயத்தமும் செய்யாமல் புராத் நதியைக் கடந்து, தப்பித்தேன் பிழைத்தேன் என்று ஓடலானார்.

கோலோச்சிய கோமகன் ஓடினால் என்ன? கோட்டைகளை வீரமாய் காக்க குடிமக்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஹீராவாசிகள் கோட்டைகளைக் காக்கத் துவங்கினார்.

காலித், அங்கிருந்த ஒவ்வொரு கோட்டையை நோக்கியும் ஒவ்வொரு துணைத் தளபதியை வரிசையாக அனுப்புகின்றார்.

லிரார் பின் அல்அவ்ஸர் என்பவரை வெள்ளை மாளிகை அல்லது வெண் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக நியமிக்கின்றார். இந்தக் கோட்டைக்குள் தாயிய்யீன்களைச் சார்ந்த இயாஸ் பின் கபீஸா இருந்தார். பாரசீகப் பிரதிநிதி ஆஸாத்பா ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் இவர் தான் ஹீராவை ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

லிரார் பின் கத்தாபை, அத்ஸிய்யீன் என்ற கோட்டையைக் கைப்பற்றுவதற்கு நியமித்தார். அந்தக் கோட்டையில் அதீ பின் அதீ என்பார் இருந்தார். லிரார் பின் முக்ரினை, பனூஜமான் கோட்டையைக் கைப்பற்றுவதற்கு நியமித்தார். இங்கு இப்னு உகால் என்பவர் இருக்கின்றார். முஸன்னாவை, இப்னு பகீலா என்ற கோட்டையைக் கைப்பற்ற நியமித்தார். இதில் அம்ர் பின் அப்துல் மஸீஹ் என்பவர் இருந்தார்.

இந்தக் கோட்டைகளுக்குள் இருந்த தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரையும் சரணடைய வரும்படி காலித் அழைப்பு விடுத்தார். அவர்கள் சரணடைய மறுத்தனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

———————————————————————————————————————————————–

மறு ஆய்வு

மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

“குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்”

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றது.

இறைவன் மட்டுமே தவறுக்கு அப்பாற்பட்டவன்; இறைவனைத் தவிர எவராக இருந்தாலும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்ற இந்தக் கருத்து இஸ்லாத்தின் பல அடிப்படைகளை நிறுவுவதற்குப் பெரிதும் துணை நிற்கின்றது.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்கலாகாது என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் பிரகடனம் செய்கின்றன. அதை மேற்கண்ட நபிமொழி வலுவூட்டுகின்றது.

தவறுக்கு அப்பாற்பட்டவர் எவரும் இல்லை எனும் போது, தவறு செய்யும் ஒருவரை எப்படி வணங்க முடியும்? என்ற சிந்தனையை இந்த நபிமொழி ஏற்படுத்துகிறது.

அது போல் குர்ஆனையும் நபிவழியையும் மட்டும் தான் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற வசனங்களும் நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

இந்தக் கொள்கைக்கும் மேற்கண்ட நபிமொழி வலு சேர்க்கிறது.

மனிதர்கள் அனைவரும் தவறு செய்பவர்களாக இருப்பதால் எந்த மனிதனின் கூற்றையும் யாரும் பின்பற்றி நடக்கக் கூடாது; தவறு நேராத இறைவனின் செய்திகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற தெளிவை மேற்கண்ட நபிமொழி ஏற்படுத்துகிறது.

தரீக்காக்கள், பித்அத்கள் என்ற பல தீமைகளுக்கு எதிராகப் போரிடுபவர்களின் ஆயுதங்களில் ஒன்றாக மேற்கண்ட நபிமொழி அமைந்துள்ளது.

இதன் காரணமாக இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சார மேடைகளில் அதிகமதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட ஹதீஸைச் சில அறிஞர்கள் உறுதியானது என்று கூறினாலும் வேறு சில அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் வரிசையில் காணப்படும் குறையைச் சுட்டிக் காட்டி, பலவீனமான ஹதீஸ் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த விமர்சனம் சரியானது தானா? என்பதை நாம் ஆய்வு செய்வோம்.

மேற்கண்ட ஹதீஸ் ஹாகிம், தாரமீ, முஸ்னத் அபீயஃலா, இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத் உள்ளிட்ட பல நூற்களில் இடம் பெற்றுள்ளது.

அனைத்து நூற்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அனஸ் (ரலி) நபித்தோழர் என்பதால் அவர்களை எடை போடக் கூடாது.

அனஸ் (ரலி) கூறியதாக கதாதா என்பார் அறிவிப்பதாக மேற்கண்ட அனைத்து நூற்களிலும் பதிவாகி உள்ளது. கதாதா நம்பகமானவர் என்பதால் இவரைக் காரணம் காட்டி இந்த ஹதீஸைக் குறை கூற முடியாது.

கதாதா கூறியதாக அறிவிப்பவர் அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவராவார். மேற்கண்ட அனைத்து நூற்களிலும் இவரே அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இவரைப் பற்றி அறிஞர்கள் முரண்பட்ட முடிவுகளைக் கூறுகின்றனர்.

இவர் நம்பகமானவர் என்று அபூதாவூத் தயாலீஸீ அவர்களும், இவர் தகுதியானவர் என்று இப்னு மயீன் அவர்களும், இவரிடம் தவறேதும் இல்லை என்று அபூஹாதம் அவர்களும் இவரைப் நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர்.

இவரிடம் ஆட்சேபணை உண்டு என்று புகாரி அவர்களும், இவர் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும், இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸயீ அவர்களும் இவரது ஹதீஸ்கள் ஏற்புடையவை அல்ல என்று இப்னு அதீ அவர்களும் கூறியுள்ளனர். பலவீனமானவர் பட்டியலில் உகைலீ அவர்கள் இவரையும் சேர்த்துள்ளார். நம்பகமானவர்களுக்கு ஒப்ப இவர் அறிவிப்பவை தவிர மற்ற ஹதீஸ்கள் ஆதாரமாகக் கொள்ளப்படாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

இவரைப் பற்றி முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. முந்தைய அறிஞர்களின் விமர்சனங்களை அடிப்படையாகக் கொண்டு அறிவிப்பாளரை எடை போடும் அறிஞர்களும் இவரைப் பற்றி முரண்பட்ட தீர்ப்பையே அளிக்கின்றனர்.

மேற்கண்ட ஹதீஸ் வலுவான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸ் என்று ஹாகிம், இப்னுல் கத்தான் உள்ளிட்ட பல அறிஞர்கள் அடித்துக் கூறுகின்றனர். மற்றும் பல அறிஞர்கள் இவரைக் குறை கூறும் விமர்சனங்களைக் காரணமாகக் கொண்டு இவரையும் மேற்கண்ட ஹதீஸையும் பலவீனமாக்கியுள்ளனர்.

இவரைக் குறை கூறுபவர்கள் எந்தக் குறையின் காரணமாகக் குறை கூறியுள்ளனர் என்பதை இப்னு ஹிப்பான் அவர்கள் தெளிவாக விளக்குகின்றார்கள். “இவர் குறைவாக ஹதீஸ்களை அறிவித்திருந்தும் அதில் தவறு செய்பவராக இருந்தார். மேலும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை வேறு யாரும் அறிவிப்பதில்லை என்ற அளவுக்கு தனித்து அறிவிப்பவராக இருந்தார்” என்பதே இப்னு ஹிப்பான் அவர்கள் அளிக்கும் விளக்கம்.

அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவரிடம் சில தவறுகள் நேரலாம். இவ்வாறு நேராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களை அறிவிப்பவர், அதில் கூட அடிக்கடி தவறு செய்தார் என்றால் அவரது நினைவாற்றல் சராசரியை விடக் குறைவானது என்று பொருள்.

மேலும் இவர் அறிவிக்கும் எந்தச் செய்தியானாலும் அதை இவர் மட்டுமே அறிவிப்பார். வேறு யாரும் அறிவிப்பதில்லை என்பது இவரது பலவீனத்தை அதிகப்படுத்துகின்றது என்பது இப்னு ஹிப்பான் அவர்களின் மேற்கண்ட கூற்றுக்கு விளக்கமாகும்.

“ஒருவரைப் பற்றிய நிறையை விட, குறையைப் பேசும் விமர்சனமே ஏற்கப்படும் என்ற விதிப் படியும், இப்னு ஹிப்பான் அவர்கள் தக்க காரணத்துடன் குறை கூறி இருப்பதாலும் இதன் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும். இந்த அறிப்பாளர் பலவீனமானவர் என்று முடிவு செய்வதும், அதன் காரணமாக இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று முடிவு செய்வதும் தான் சரியானது’ என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

இந்த வாதத்தில் உள்ள நியாயத்தை மறுக்க முடியாது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் இதே வாசகத்துடன் வேறு யார் மூலமும் அறிவிக்கப்படாவிட்டாலும் மேற்கண்ட கருத்து வேறு வாசகத்தைக் கொண்டு நம்பகமான அறிவிப்பாளர் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“…எனவே ஒருவருக்கொருவர் அநீதி இழைக்ணகாதீர்கள். ஆதமுடைய மக்கள் ஒவ்வொருவரும் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர். பின்னர் என்னிடம் மன்னிப்புக் கேட்கின்றனர். எனவே அவர்களை நான் மன்னிக்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்னத் அஹ்மத் நூலில் இடம் பெற்றுள்ள நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாக மேற்கண்ட வாசகம் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதாக இதை அபூதர் (ரலி) அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் என்பதால் இவரைப் பற்றிப் பரிசீலனை செய்யத் தேவையில்லை.

அபூதர் கூறியதாக அபூ அஸ்மா என்பார் அறிவிக்கிறார். அம்ர் பின் மிர்ஸத் என்பது இவரது பெயர். இவர் நம்பகமானவர். இவரது ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.

அபூ அஸ்மா அறிவிப்பதாக அபூ கிலாபா அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர்.

அபூ கிலாபா அறிவிப்பதாக கதாதா அறிவிக்கிறார். இவரும் நம்பகமானவர்.

கதாதா கூறியதாக ஹம்மாம் அறிவிக்கிறார். இவரும் நம்பகமானவர்.

ஹம்மாம் கூறியதாக அப்துர்ரஹ்மான், அப்துஸ்ஸமத் ஆகிய இருவர் அறிவிக்கின்றனர். இவ்விருவரும் நம்பகமானவர்கள்.

இவ்விருவர் வழியாக நூலாசிரியர் அறிவிக்கிறார்.

மொத்தத்தில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அனைவரும் நம்பகமானவர்களாக உள்ளனர்.

“ஆதமுடைய மக்கள் அனைவரும் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர்” என்பதும்,

“ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள்” என்பதும் ஒரே கருத்தைத் தரும் சொற்களாகும். இரவிலும் பகலிலும் என்று கூறப்படாவிட்டாலும் தவறு செய்பவர்கள் என்பதில் அந்தப் பொருள் அடங்கியுள்ளது.

எனவே வார்த்தைகளில் தான் வேறுபாடு உள்ளதே தவிர இரண்டு ஹதீஸ்களுக்கும் கருத்தில் பெரிய வேறுபாடு இல்லை.

எனவே, “குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்’ (ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். அவர்களில் மன்னிப்புக் கேட்டுத் திருந்துபவரே சிறந்தவர்) என்பது பலவீனமானது என்பதால் அதைத் தவிர்த்து விட்டு,

குல்லு பனீ ஆதம யுக்திவு பில்லைலி வன்னஹாரி (ஆதமுடைய மக்கள் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர்) என்பதைக் கூறுவதே சிறந்ததாகும்.

இந்த அறிவிப்பின் காரணமாக மேற்கண்ட ஹதீஸின் தரம் ஹஸன் என்ற நிலைக்கு உயரும் என்றாலும் அதை விட வலுவானதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முந்தைய ஹதீஸ் எவ்வாறு பல்வேறு அடிப்படைக் கொள்கைகளை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்ததோ அது போலவே இந்த ஹதீசும் அமைந்துள்ளது.

———————————————————————————————————————————————–

ஆடைகள்                                                    தொடர்: 3

பெண்களின் உடைகள்

எஸ். யூசுப் பைஜி

சென்ற இதழ்களில் ஆண்களின் ஆடையைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இந்த இதழில் பெண்களுக்குரிய ஆடைகளைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.

இந்தத் தொடரில் முக்கியமாக, பெண்கள் தங்களுடைய மேனியில் எந்த அளவு மறைக்க வேண்டும்? கைகள், பாதம், முகம் இவைகளைக் கட்டாயமாக மறைக்க வேண்டுமா? என்பன போன்ற பல சட்டங்களை ஆதாரத்துடன் பார்க்கவிருக்கிறோம்.

பெண்கள் உடலை எந்த அளவுக்கு மறைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனம் அமைந்துள்ளது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றி யடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

“தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர” என்ற சொற்றொடர் இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

“வெளியே தெரிபவை தவிர” என்ற சொற்றொடர் முகம், முன் கைகள் ஆகிய இரண்டையும் தான் குறிக்கிறது என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்னு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் இவ்வாறு விளக்கம் அளித்திருப்பதை இதற்குச் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

முகம், முன் கைகளை பெண்கள் வெளிப்படுத்தலாம் என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் அந்த வாதத்திற்கு மேற்கண்ட வசனத்தை ஆதாரமாகக் கொள்வதை நாம் நிராகரிக்கிறோம்.

பெண்களின் உடலில் எந்தப் பகுதிகளை வெளிப்படுத்தலாம்? எந்தப் பகுதிகளை மறைக்க வேண்டும் என்பதற்கும் மேற்கண்ட வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இவ்வசனத்தில், “தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்” என்ற வாக்கியம் உள்ளது.

அலங்காரம் என்று நாம் மொழி பெயர்த்த இடங்களில் ஸீனத் என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. இச்சொல்லுக்கு அழகு என்று பலர் விளக்கம் கூறினாலும் இச்சொல்லுக்கு அலங்காரம் என்பதே சரியான பொருளாகும்.

அழகு என்பது ஒருவரது உடலில் இயற்கையாக அமைந்துள்ள கவர்ச்சியைக் குறிக்கும். அதாவது ஒருவரது நிறம், முக அமைப்பு, கட்டான உடல், உயரம், பார்ப்பவரை ஈர்க்கும் வகையில் அமைந்த பற்கள், கண்கள் போன்றவற்றை அழகு என்ற சொல் குறிக்கும்.

உடலின் ஒரு பகுதியாக இல்லாத ஆபரணங்கள், ஆடைகள், மேக்கப் செய்தல், லிப்ஸ்டிக் போன்றவற்றை அலங்காரம் என்ற சொல் குறிக்கும்.

அழகை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்கும். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்பது உடல் உறுப்புக்களைக் குறிக்காது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனில் ஸீனத் என்ற சொல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இடங்களைக் கவனமாக ஆராய்ந்தால் ஸீனத் என்பது அலங்காரத்தைத் தான் குறிக்கும் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

வானத்தில் நட்சத்திரங்களை அமைத்தோம். பார்ப்போருக்கு அதை அழகாக்கினோம். (15:16)

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். (37:6)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத் தவனின் ஏற்பாடாகும். (41:12)

அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்க வில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை. (50:6)

முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம். அவர் களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம். (67:5)

மேற்கண்ட வசனங்களில் நட்சத்திரங்கள் வானத்துக்கு அலங்காரமாக அமைந்துள்ளதாக அல்லாஹ் கூறுகின்றான்.

நட்சத்திரங்கள் வானத்தின் ஓர் அங்கம் அல்ல! வானத்தில் ஓர் அங்கமாக இல்லாமல் வானத்துக்குக் கவர்ச்சியை நட்சத்திரங்கள் அளிக்கின்றன. இதைக் குறிப்பிட இறைவன் ஸீனத் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான்.

அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம். (18:7)

பூமியின் மேலுள்ள புற்பூண்டுகள் பூமிக்கு ஸீனத் (அலங்காரம்) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (7:31)

தொழுமிடத்தில் அலங்காரம் செய்து கொள்ளுங்கள் என்பது உடல் அழகைக் குறிக்காது. அவ்வாறு குறித்தால் உடல் அழகு இல்லாதவர்கள் பள்ளிக்கு வருவது குற்றமாகி விடும். அணிகின்ற ஆடை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது.

24:31 வசனத்தில் இடம் பெற்றுள்ள ஸீனத் என்ற சொல்லின் பொருளை விளக்குவதற்காகவே மேற்கண்ட வசனங்களை நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

அலங்காரம் என்பதில் உடல் உறுப்புக்கள் அடங்காது என்றால் “முகம், கைகள் தவிர’ என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.

பெண்கள் ஆபரணங்கள் அணிந்த நிலையில், லிப்ஸ்டிக் போட்டுக் கொண்ட நிலையில், மேக்கப் செய்து கொண்ட நிலையில் அன்னிய ஆண்களுக்கு முன்னால் காட்சி தரலாகாது. மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்கள் முன்னிலையில் தவிர மற்ற ஆண்கள் முன்னிலையில் அலங்காரம் செய்யாமல் இயற்கையான தோற்றத்தில் தான் இருக்க வேண்டும். இது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இவ்வசனத்தில் முகம், கைகளை மறைக்க வேண்டும் என்றும் கூறப்படவில்லை; மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்படவில்லை. உடல் அங்கங்கள் பற்றி இவ்வசனம் பேசவில்லை.

அப்படியானால், அலங்காரத்தில் வெளியே தெரிபவற்றைத் தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்பதில் “வெளியே தெரிபவை’ என்பது எதைக் குறிக்கின்றது?

நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி அலங்காரம் என்பது நகைகள், முகப் பவுடர், லிப்ஸ்டிக் ஆகியவற்றுடன் ஆடையையும் குறிக்கும். உடலை மறைப்பதற்காக அணியும் ஆடைகள் கூட ஒருவருக்கு அலங்காரம் தான். அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம் என பொதுப்படையாகக் கூறினால் ஆடை அணியாமல் இருக்க வேண்டும் என்ற கருத்து வந்து விடும்.

மற்ற அலங்காரத்தை மறைக்கலாம், அல்லது தவிர்க்கலாம். ஆனால் ஆடை எனும் அலங்காரத்தை மறைக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. மறைப்பதற்காக ஆடையின் மேல் மற்றோர் ஆடையைப் போர்த்தினால் போர்த்தப்பட்ட ஆடையும் அலங்காரத்தில் அடங்கி விடும்.

என்ன செய்தாலும் வெளியே தெரிந்தே தீர வேண்டியதாக ஆடை எனும் அலங்காரம் அமைந்துள்ளது. எனவே வெளியே தெரிந்தே தீர வேண்டிய ஆடை என்ற அலங்காரம் தவிர மற்ற எந்த அலங்காரத்தையும் அன்னியர் முன் காட்ட வேண்டாம் என்று தெளிவு படுத்தவே, “வெளியே தெரிபவை தவிர” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தை நபித் தோழர்களில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளனர். மற்றவர்கள் ஸீனத் என்பதற்கு அலங்காரம் என்ற பொருளை ஏற்றுக் கொண்டாலும் சுற்றி வளைத்து வியாக்கியானம் கொடுத்து, முகம், கைகளை மறைக்கத் தேவையில்லை என்ற கருத்தை இவ்வசனம் கூறுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

ஸீனத் என்ற சொல்லின் நேரடி அர்த்தத்தின் படியும், திருக்குர்ஆனில் பிற இடங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள படியும் நாம் கூறிய விளக்கம் தான் சரியானதாகும்.

பெண்கள் முகத்தையும், முன் கைகளையும் மறைப்பது அவசியமா? இல்லையா? என்றால் அதற்கு வேறு ஆதாரங்களைத் தான் எடுத்துக் காட்ட வேண்டும். மேற்கண்ட வசனத்தை இதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டக் கூடாது.

பெண்கள் தமது முகத்தையும், முன் கைகளையும் அன்னிய ஆண்கள் முன் மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

முதலில் முகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவர்களின் ஆதாரங்களைப் பாôத்து விட்டு, முகத்தை மறைக்க வேண்டிய கட்டாயமில்லை விரும்பினால் மறைக்கலாம் என்று வரக் கூடிய ஹதீஸ்களைப் பார்ப்போம்.

“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்தவர்களாக (ஹஜ்ஜுக்காகப் புறப்படுவோம்) வாகனத்தில் செல்பவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அவர்கள் எங்களைக் கடக்க நேரிட்டால் நாங்கள் எங்களுடைய மேலங்கியை தலையிலிருந்து முகத்தின் மீது போட்டுக் கொள்வோம். எங்களை அவர்கள் கடந்து சென்று விட்டால் நாங்கள் (முகங்களை) திறந்து விடுவோம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: அபூதாவூத் 1562

இந்தச் செய்தி ஆதாரப் பூர்வமானது இல்லை. ஏனென்றால் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக யஸீத் பின் அபீ ஸியாத் என்பவர் இடம் பெறற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் “இவருடைய ஹதீஸ் தகுதியானதாக இல்லை’ என்றும், இப்னு மயீன் அவர்கள் “இவர் பலமானவர் இல்லை’ என்று ஓரிடத்திலும், மற்றொரு நேரத்தில் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

அபூ ஸுர்ஆ அவர்கள், “இவர் பலவீமானவர்; இவருடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரம் பிடிக்கக் கூடாது’ என்றும், இமாம் அபூஹாதம் அவர்கள், “இவர் உறுதியற்றவர்’ என்றும், இப்னு ஹிப்பான் அவர்கள் “இவர் நேர்மையாளர் தான் என்றாலும் இவருடைய வயது அதிகமான போது இவருடைய மனன சக்தி மோசமாகி விட்டது (இந்த நிலையில்) இவர் தனது மனனத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்; இதனால் நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் வர ஆரம்பித்து விட்டன’ என்றும் விமர்சித்துள்ளனர்.

யஃகூப் பின் சுப்யான் அவர்கள், “இவர் சரியான அறிவிப்பாளராக இருந்தாலும் இவரை அறிஞர்கள் இவர் மூளை குழம்பிய காரணத்தினால் விமர்சனம் செய்துள்ளனர்; இவர் முஜாஹிதிடமிருந்து செய்திகளை அறிவிக்கிறார்; ஆனால் இவர் அவரிடமிருந்து கேட்டதில் ஆட்சேபனை இருக்கிறது’ என்றும் விமர்சித்துள்ளனர்.

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், “ஆதாரப் பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளை பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்கு சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்’ என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப்

(பாகம்: 11, பக்கம்: 288)

எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போன்ற மற்றொரு செய்தியும் இப்னு குஸைமாவில் இடம் பெற்றுள்ளது

“நாங்கள் ஆண்களுக்காக முகங்களை மூடிக் கொள்வோம். இன்னும் அதற்கு முன்னால் தலை வாரிக் கொள்வோம்” என்று அஸ்மா பின்த் அபீ பக்கர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: இப்னு குஸைமா

(பாகம்: 4, பக்கம்: 203)

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி. இதே போன்று ஸஹாபிப் பெண்கள் முகத்தை மூடியதாக, பின் வரும் செய்தியும் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(தன் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவம் தொடர்பாக) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் தங்கியிருந்த அந்த இடத்திற்கு (ஸப்வான் பின் முஅத்தல்) வந்தார். அவர் அங்கே தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தைப் பார்த்தார். பர்தாவுடைய சட்டம் அருளப் படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே என்னைப் பார்த்ததும் அவர் என்னை அடையாளம் புரிந்து கொண்டார். அவர் என்னை அறிந்து கொண்டு, “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்’ என்று கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே முகத் திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 4141

பெண்கள் முகத்தை மறைப்பது தொடர்பாக மற்றொரு செய்தியும் உள்ளது.

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளை இடுகின்றீர்கள்?” என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சட்டைகளையும் கால் சட்டைகளையும் தலைப் பாகையையும் தொப்பிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளைக் கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்த்த எதையும் அணியாதீர்கள். இஹ்ராம் அணிந்த பெண் முகத் திரையும், கையுரைகளையும் அணியக் கூடாது” என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 1838

நபி ஸல் அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மூடிக் கொள்ளும் வழக்கம் இருந்ததாக மேலே குறிப்பிட்ட செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்தச் செய்திகளிலிருந்து கட்டாயமாக முகத்தை மறைத்துத் தான் ஆக வேண்டும் என்ற கருத்து வராது.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் முகத்தை மூடியதைப் போன்று, முகத்தை மூடாமல் இருந்ததாகவும் ஆதாரப் பூர்வமான செய்திகள் கிடைக்கின்றன. எனவே முகத்தை மூடுவதற்குத் தடை இல்லை என்றே மேற்கண்ட செய்திகளை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியதில்லை என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக அமைந்துள்ளன.

அடுத்த இதழில் இன்ஷாஅல்லாஹ்

———————————————————————————————————————————————–

ஹதீஸ் கலை ஆய்வு                                   தொடர்: 3

நம்பகமானவர்கள் தவறு செய்ய மாட்டார்களா?

“குர்ஆனுக்கு மாற்றமாக ஹதீஸ் வந்தால் அதில் நம்பகமான அறிவிப்பாளர்கள் இருந்தாலும் அவர்களில் யாராவது தவறு செய்திருப்பார்களே தவிர, நபி (ஸல்) அவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகச் சொல்லியிருக்க மாட்டார்கள்” என்று நாம் கூறுகிறோம். “அது எப்படி? நல்லவர்களாகவும் உறுதிமிக்கவர்களாகவும் உள்ள அறிவிப்பாளர்களிடமிருந்து எவ்வாறு தவறு ஏற்படும்?” என்று சிலர் கேட்கின்றனர்.

மனிதர்களாகப் பிறந்த எவரும் எந்தத் தவறும் செய்யாமல் இருக்க முடியாது. இது அல்லாஹ் ஏற்படுத்திய நியதி! சாதாரண மனிதன் கூட விளங்கிக் கொண்ட உண்மை இது! இதனால் தான் சில நபித்தோழர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக சில ஹதீஸ்களைச் சொல்லும் போது ஆயிஷா (ரலி) அவர்கள், அந்த நபித்தோழர்கள் நல்லவர்கள் என்று சான்று தந்ததோடு, தவறாக விளங்கியிருப்பார்கள் என்றும் கூறினார்கள்.

இதையெல்லாம் சொன்னாலும் இவர்கள் எதற்கெடுத்தாலும், “ஹதீஸ் கலையில் இப்படி உள்ளதா? யாராவது உங்களுக்கு முன்னால் இது போன்று சொல்லியுள்ளார்களா?’ என்று கேட்பார்கள். எனவே இதற்கான சான்றுகளை ஹதீஸ் கலையிலிருந்து வழங்குவது நல்லதாகும்.

இமாம் அஹ்மத் பின் ஹம்பல்

அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார்: ஹதீஸ் கலை அறிஞர்கள் (அறிவிப்பாளர்களின்) வரலாறுகளைத் தொகுத்ததோடு முடித்துக் கொள்ளவில்லை. மாறாக அறிவிப்பாளர்களில் அறியப்பட்ட நம்பகமானவர்களின் அறிவிப்புகள் உட்பட (அனைத்து) அறிவிப்பாளர்களின் அறிவிப்புகளிலும் நுட்பமாக ஆராய்ந்தார்கள். அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கிறார்களே என்பதை மட்டும் அறிஞர்கள் சார்ந்திருக்கவில்லை. நல்ல அறிவிப்பாளர்களையும் கூட ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடவில்லை.

ஏனென்றால் நம்பகமானவர் சிலவேளை தவறிழைப்பார். அல்லாஹ் மக்களை இந்த இயற்கையான அடிப்படையில் தான் படைத்திருக்கிறான். எனவே ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்கள் எந்த அறிவிப்புகளில் தவறு செய்தார்களோ அந்த அறிவிப்புகளை ஆராய்ந்தார்கள். இல்மு இலலில் ஹதீஸ் (ஹதீஸில் உள்ள குறைகளைப் பற்றிய கல்வி) என்று இதற்குச் சொல்லப்படும்.

நூல்: அல்இலல், பாகம்: 1, பக்கம்: 20

இமாம் தஹபீ

நம்பகமானவர் சில வேளை சில விஷயங்களில் தவறு செய்வார்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 7, பக்கம்: 208

இமாம் சுயூத்தி

இது சஹீஹான செய்தி என்று சொல்லப்பட்டால் இதன் பொருள் என்னவென்றால் (முன்பு) கூறப்பட்ட தன்மைகளுடன் இதன் தொடர் முழுமை பெற்றுள்ளது என்று தான் அர்த்தம். எனவே அறிவிப்பாளர் தொடரின் வெளிப்படையை வைத்து அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வோம். நல்லவர் கூட மறந்து தவறு செய்ய வாய்ப்புள்ளதால் உண்மையில் இது உறுதி செய்யப்பட்ட விஷயம் தான் என்ற அடிப்படையில் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 75

மஹ்மூத் தஹ்ஹான்

இது சரியான செய்தி என்று அறிஞர்கள் சொன்னால் முன்னால் சென்ற ஐந்து நிபந்தனைகள் இந்தச் செய்தியில் பெறப்பட்டுள்ளது என்பது தான் அதன் பொருள். உண்மையில் அந்தச் செய்தி உறுதி செய்யப்பட்டது என்ற அர்த்தம் அல்ல! ஏனென்றால் உறுதி மிக்கவரிடத்தில் கூட தவறும் மறதியும் வர வாய்ப்புண்டு!

நூல்: தய்சீரு முஸ்தலஹில் ஹதீஸ், பக்கம்: 36

நம்பகமானவர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக அறிவிக்கும் போது இவர்களில் யாரோ தவறு செய்துள்ளார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து விடுகிறது. குர்ஆனுக்கு முரண்பாடாக அறிவிப்பதை வைத்து இவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்று கூறுகிறோமே தவிர நாமாக யூகமாகக் கூறவில்லை. இந்த அடிப்படையில் தான் குர்ஆனுக்கு மாற்றமாக நம்பகமானவர்கள் அறிவித்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம்.

நாம் எந்த ஹதீஸ்களைக் குர்ஆனுக்கு மாற்றமாக உள்ளது என்று கூறி மறுக்கிறோமோ அதில் உள்ள நம்பகமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஏனைய ஹதீஸ்களையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தவறாக விளங்கி விடக் கூடாது.

குர்ஆனுக்கு முரண்படாதவாறு நம்பகமானவர்கள் அறிவித்தால் அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் இந்த ஹதீஸ்களில் அவர்கள் தவறு செய்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. நல்லவர்கள் முறையாக அறிவிப்பார்கள் என்ற பொதுவான நிலையைக் கவனித்து அவர்கள் அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக் கொள்வோம். தவறு செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற யூகத்தை இங்கு புகுத்தினால் உலகத்தில் யாரும் யாருடைய அறிவிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

புகாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஆதாரப்பூர்வமானதா?

புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்று இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்ரஸாக்களில் படித்த மார்க்க அறிஞர்களும் இவர்களைப் போன்றே நினைக்கிறார்கள்.

இதனால் தான் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்ற ஹதீஸ்களை நாம் விமர்சிக்கும் போது, சொல்லப்படுகின்ற விமர்சனம் சரியா? தவறா? என்று பார்க்காமல், புகாரியில் பதிவு செய்யப்பட்டு விட்டாலே அதை விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள்.

புகாரி, முஸ்லிமில் உள்ள ஹதீஸ்களைப் பற்றிய முழுமையான அறிவுள்ளவர்கள் யாரும் இவ்வாறு கூற மாட்டார்கள். மாபெரும் அறிஞரான இமாம் தாரகுத்னீ அவர்கள், புகாரி இமாம் பதிவு செய்த பல ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்கள்.

புகாரிக்கு விரிவுரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இந்த விமர்சனங்களுக்குச் சரியான பதிலைக் கூறினாலும், சில இடங்களில் சொல்லப்பட்ட குறையை ஏற்றுக் கொள்கிறார். அந்தக் குறைகளுக்குப் பதில் இல்லை என்றும் ஒத்துக் கொள்கிறார்.

சில நேரத்தில் புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஒரு அறிவிப்பாளரை அறிஞர்கள் விமர்சனம் செய்யும் போது அந்த விமர்சனத்திற்கு முறையான பதில் ஏதும் இப்னு ஹஜர் அவர்களால் சொல்ல முடிவதில்லை. இந்த இடத்தில் “இவரிடம் இமாம் புகாரி அவர்கள் குறைவாகத் தான் ஹதீஸ்களைப் பதிவு செய்துள்ளார்கள்’ என்பதை மட்டும் தான் இப்னு ஹஜர் பதிலாகக் கூறுகிறார்.

புகாரிக்கு மாபெரும் தொண்டாற்றிய மாபெரும் மேதை இப்னு ஹஜர் அவர்களே புகாரியில் உள்ள அனைத்தும் ஆதாரப்பூர்வமானது என்று ஒத்துக் கொள்ளாத போது, புகாரியில் உள்ள அனைத்தும் சரி என்று இவர்கள் வாதிடுவது தான் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இப்னு ஹஜரின் விளக்கம்

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு எழுதிய விரிவுரையின் முன்னுரையை முறையாகப் படித்தவர்கள் “புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது’ என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இமாம் இப்னு ஹஜர் கூறுகிறார்: “புகாரியில் சொல்லப்பட்ட விமர்சனங்களில் அதிகமானவைகளுக்குப் பதில் தரப்பட்டு விட்டது” என்று முஸ்லிமுடைய விரிவுரையில் முஹ்யித்தீன் என்பவர் கூறியது தான் சரியானதாகும். ஏனென்றால் இந்த விமர்சனங்களில் சிலவற்றிற்குப் பதில் (இன்னும்) கிடைக்கவில்லை.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 346

இப்னு ஹஜர் கூறுகிறார்: சில வேளை அறிவிப்பாளர்கள் மிகவும் மோசமாக முரண்பட்டு அறிவிப்பார்கள். அல்லது (அவர்களின்) மனனத்தன்மை பலவீனமாகி விடும். இந்நேரத்தில் (தன்னை விட வலிமையானவர்களுக்கு) மாற்றமாக அறிவிக்கப்படும் செய்திக்கு முன்கர் (மறுக்கப்பட வேண்டியது) என்று முடிவு கட்டப்படும். இது போன்ற செய்தி புகாரியில் குறைவாகவே தவிர (அதிகமாக) இல்லை.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 385

“தாரகுத்னீ (புகாரியில்) விமர்சனம் செய்த சில இடங்களைத் தவிர (மற்ற செய்திகள் அனைத்திற்கும் அங்கீகாரம் உண்டு)” என்ற கருத்தையே இப்னுஸ்ஸலாஹ் ஏற்றுள்ளார். அவர் முஸ்லிமுடைய விரிவுரையின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்: புகாரி மற்றும் முஸ்லிமில் நம்பத் தகுந்த அறிஞர் ஒருவர் குறை கூறினால், (அனைத்து சமூகத்தின் அங்கீகாரமும் புகாரிக்கு உண்டு என்று நாம் முன்பு) கூறியதிலிருந்து (குறை கூறப்பட்ட) இந்தச் செய்தி விதிவிலக்கானதாகும். ஏனென்றால் இந்த விமர்சிக்கப்பட்ட ஹதீஸில் அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

இப்னு ஹஜர் கூறுகிறார்: இவ்வாறு விதிவிலக்கு கொடுப்பது அழகானதாகும்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 346

இப்னு ஹஜர் கூறுகிறார்: புகாரியில் சொல்லப்பட்ட அனைத்து விமர்சனங் களும் (புகாரியில்) குறை ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மாறாக இந்த விமர்சனங்களில் அதிகமானவைகளுக்குத் தெளிவான பதில் உள்ளது. அந்த விமர்சனத்தில் குறை சொல்ல முடியாது. சில விமர்சனங்களுக்குத் தெளிவற்ற விதத்தில் பதில் உள்ளது. சில விமர்சனங்களுக்கு பதில் சொல்வது கடினம்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ, பாகம்: 1, பக்கம்: 383

மேற்கண்ட வாசகங்களையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு பதிலைத் தரும் முயற்சியில் இறங்கிய கல்வி மேதை இப்னு ஹஜர் அவர்களே சில விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை என்று ஒத்துக் கொண்டு, அதைத் தமது நூலிலும் எழுதியிருக்கும் போது புகாரியில் உள்ள அனைத்துச் செய்தியும் சரியானது தான் என்று அறிவுள்ளவர்கள் எப்படிக் கூறுவார்கள்?

புகாரியில் நபி (ஸல்) அவர்களுடைய கூற்றுக்கள் மட்டும் பதிவு செய்யப்படவில்லை. நபித்தோழர்களின் கூற்று, நபித்தோழர்களுக்குப் பின்னால் வந்தவர்களின் கூற்றுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாகப் பின்வரும் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அம்ர் பின் மைமூன் என்பார் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த பெண் குரங்கொன்றை, பல குரங்குகள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

நூல்: புகாரி 3849

இது போன்ற சம்பவம் நடந்தது என்று அறிவுள்ளவர்கள் யாரும் கூற மாட்டார்கள்.

குரங்குகளுக்குத் திருமணம் உட்பட எந்தப் பந்தமும் கிடையாது. மனிதர்களுக்குச் சொல்லப்பட்ட வாழ்க்கை ஒழுங்கு நெறிகளைக் கடைப்பிடிக்குமாறு மிருகங்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவும் இல்லை. மனிதனுக்குச் சொல்லப்பட்ட சட்டத்தை, குரங்குகள் நடைமுறைப்படுத்தின என்பதை நியாயவான்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தெளிவாகப் பொய் என்று தெரியும் இந்தச் சம்பவத்தை, இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்தார்கள் என்பதற்காக நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஹதீஸ் தொகுப்பு நூற்களில் சிறந்த நூற்கள் என்று முதலாவதாக புகாரியையும், இரண்டாவதாக முஸ்லிமையும் கூறலாமே தவிர குர்ஆனைப் போன்று ஒரு தவறும் இல்லாத நூல் என்ற சிறப்பை இவற்றுக்குத் தர முடியாது. இச்சிறப்பை இறைவன் தன் வேதத்திற்கு மட்டும உரியதாக்கியுள்ளான்.

புகாரி மற்றும் முஸ்லிமில் பலவீனமான அறிவிப்பாளர்களும் அறியப்படாதவர்களும் மிகக் குறைவாக இருக்கிறார்கள். மற்ற புத்தகங்களில் இருப்பதைப் போல் மோசமான கருத்தைக் கொண்ட செய்தியும் இவற்றில் குறைவாக இடம்பெற்றுள்ளது.

எனவே மற்ற நூற்களில் இடம்பெற்ற செய்திகளை ஹதீஸ் கலைக்கு உட்பட்டு அணுகுவதைப் போல் புகாரி, முஸ்லிமில் உள்ள செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

புகாரி இமாம் பதிவு செய்த ஹதீஸ்களைப் பல அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அது சரியானதா? தவறானதா? என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதற்குப் பல சான்றுகள் உள்ளன.