ஏகத்துவம் – ஏப்ரல் 2018

ஏகத்துவம் காக்க உங்கள் சந்ததிகளை இஸ்லாமியக் கல்லூரிக்கு அனுப்புங்கள்!

இஸ்லாமியக் கல்லூரியின் கல்வியாண்டு ரமளானில் துவங்கி அடுத்த ரமளான் வரையிலாகும். அந்த அடிப்படையில் வருகின்ற ரமளானுடன் இந்தக் கல்வியாண்டு நிறைவு பெறுகின்றது. ரமளான் முடிந்து புதிய கல்வியாண்டு துவங்குவதை முன்னிட்டு புதிய மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது. புதிய கல்வியாண்டில் அதிகமான மாணவர்களைச் சேர்க்கும் விதமாகக் கீழ்க்காணும் வேண்டுகோளை நமது ஜமாஅத் மக்களுக்கு முன்வைக்கிறோம்.

அல்லாஹ்வின் கிருபையால் இன்று தமிழகெங்கும் நமது ஜமாஅத்தின் கிளைகள் பரவி விரிந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. வளர்கின்ற ஒவ்வொரு ஊரிலும் நமது ஜமாஅத்துக்கு அழைப்பு மையங்களும், அல்லாஹ்வின் ஆலயங்களான பள்ளிவாசல்களும் உதயமாகின்றன. உதயமாகும் இறையில்லங்களில் ஆண்களும், பெண்களும் அணி வகுத்து அலைமோதுவதையும் நாம் கண்டு வருகின்றோம். ஆனால் அழைப்பாளர்கள் தான் அன்றிலிருந்து இன்று வரை  பற்றாக்குறையாகவே  உள்ளனர்.

அந்தப் பற்றாக்குறையை நாம் சரி செய்யவில்லை என்றால் நம் வாழ்நாளில் கண்ட இந்த தவ்ஹீதுக் கொள்கை நாம் கண் மூடும் முன்னர் காணாமல் போய் விடும். அல்லாஹ் காப்பானாக! நாம் கண்ட இந்த தவ்ஹீதுக் கொள்கை நமது சந்ததிகளுக்குப் போய்ச் சேர வேண்டும். அவ்வாறு போய்ச் சேர்வதற்கு ஒரே வழி மார்க்கக்கல்வி தான். மார்க்கத்தைப் படித்த ஆலிம்கள் மூலம் தான் இந்தக் கல்வி காக்கப்படுகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழிகெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்’ இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 100

இந்த ஹதீஸ், மார்க்கக் கல்வி இல்லையென்றால் அதன் எதிர்விளைவு என்னவாக இருக்கும் என்பதை விளக்குவதுடன் இந்தக் கல்வியை அடுத்த தலைமுறையினருக்கு கடத்திச் செல்வதற்கு ஓர் ஊடகமாக இருப்பவர்கள் ஆலிம்கள் தான் என்பதை நமக்கு உணர்த்துகின்றது.

நம்பிக்கை கொண்டோர் ஒட்டு மொத்தமாகப் புறப்படக் கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும், தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள்.

அல்குர்ஆன் 9:122

ஏகத்துவக் கொள்கையை எதிர்கால சந்ததிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் அதற்கென்று ஓர் ஏற்பாடு செய்தாக வேண்டும். அதற்காக ஆலிம்களை உருவாக்க வேண்டும்.  ஆலிம்கள் என்றால் குர்ஆன், ஹதீஸ் என்ற இரு ஆதாரங்களிலிருந்து  நேரடியாக ஆய்வு செய்து சட்டங்களைச் சொல்கின்ற அறிஞர்களாக இருக்க வேண்டும்.

மத்ஹபுப் பீடங்களை உடைத்தெறிந்து  குர்ஆன், ஹதீஸ் தான் ஆதாரங்கள் என்று நாம் போதித்து வருகின்றோம். அதற்குத் தக்க ஆய்வாளர்களை அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டுமல்லவா? மார்க்க அறிவு பெறுபவர்கள் எத்தனை  ரகமாக இருப்பார்கள் என்று பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகின்றார்கள்

அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன.

வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினார்; விவசாயமும் செய்தனர்.

அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை.

இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்’ என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 79

கல்வியைப் பெறக்கூடியவர்கள் மூன்று ரகங்களாக இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதில் முதல் ரகமாக இருக்க வேண்டிய ஆய்வாளர்களை உருவாக்க வேண்டும். பெய்கின்ற மழையை உள்வாங்கிக் கொண்டு தானும் பயன் பெற்று மற்றவர்களுக்கும் பயனளிக்கக் கூடிய ஆய்வாளர்களை உருவாக்க முனைகின்றோம். அதற்கு மார்க்கக் கல்வி அவசியமாகும். அதற்காக நிர்மாணிக்கப்பட்டது தான் இஸ்லாமியக் கல்லூரி.

இந்த இஸ்லாமியக் கல்லூரி 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  துவங்கப்பட்டது. ஆனால் அதில் படிக்க வருகின்ற மாணவர்களின் வரத்து அன்றிலிருந்து இன்று வரை மிகக் குறைவாகவே இருக்கின்றது. தொலைக்காட்சி பயான்கள், வார மாத இதழ்கள், ஜும்ஆ, பொதுக்கூட்ட உரைகள், நமது ஜமாஅத்தின் மாநில, மாவட்டப் பொதுக்குழு, செயற்குழு, சொற்பொழிவுகள் ஆகியவற்றின் வாயிலாக விடுக்கப்படும் வேண்டுகோள்களுக்குரிய வரவேற்பும் பதிலளிப்பும் குறைந்த பட்ச அளவாகவே உள்ளது. இதற்குரிய காரணம், அதைக் களைவதற்குரிய நிவாரணம் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்

 1. பொதுவாக சுன்னத் வல்ஜமாஅத் ஆலிம்கள் தங்களுக்குத் தாங்களே தனி ஒரு கந்தல் கோலத்தை உருவாக்கிக் கொண்டு, சுயமரியாதையை இழந்து, காசு பணத்திற்காகக் கையேந்தும் நிலைக்குச் சென்றது மக்களிடம் ஒரு தீய விளைவை ஏற்படுத்தி விட்டது. அந்தத் தாக்கத்திலிருந்து மக்கள் இன்னும் விடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அதனால் தவ்ஹீதுக்கு வந்த மக்களும் இந்தக் கல்வியைக் கற்பதற்கு, தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்குத் தயக்கம் காட்டுவதாகத் தெரிகின்றது. தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்த வரை இஸ்லாமியக் கல்லூரி மற்றும் இன்னபிற  குறுகிய கால சிறப்புப் பாடத் திட்டத்தின் கீழ் படித்து அழைப்புப் பணிக்கு வருகின்ற அத்தனை பேர்களுக்கும் தவ்ஹீது கொள்கைக்கு அடுத்தபடியாகத் தன்மானத்தையும்,  சுயமரியாதையையும் வலியுறுத்திப் போதிக்கின்றது. அதனால் இந்த ஜமாஅத்தில் ஆலிம்களுக்கு எந்த அவமரியாதையும் துளியளவும் கிடையாது என்பதை மக்கள் உணர்ந்தும் வருகின்றனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 1. பொதுவாக எந்தத் துறைக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பினாலும் அந்தத் துறையில் தங்கள் பிள்ளைகளுக்குப் பொருளாதார ரீதியிலான எதிர்காலம் இருக்குமா? என்று பெற்றோர்கள் எண்ணிப் பார்ப்பார்கள். அது நியாயமான ஒரு பார்வை. அந்தப் பார்வை இல்லாதவர்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்ட பெற்றோர்கள் என்று சொல்ல முடியாது.

அதனால் இந்த மார்க்கக் கல்விப் பணிக்கு வருகின்ற தங்கள் அருமைப் பிள்ளைகளுக்கு பொருளாதார ரீதியிலான எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பது பெற்றோர்களின் தார்மீகக் கடமையாகும்.

அவ்வாறு யோசித்துப் பார்க்கும் பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்ட காலமாகி விடுமோ என்று அவர்கள் அஞ்சத் தேவையில்லை என்று சொல்லிக் கொள்கின்றோம்.

காரணம் அழைப்புப் பணிக்கு வந்தவர்கள் சுயமரியாதையை யாரிடமும் இழந்து விடாமல், அல்லாஹ்வின் மார்க்கத்தை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாமல், ஒரு கண்ணியமான வருவாய் ஈட்டுவதை, கல்லூரியில் பயின்று வெளியே வந்து அழைப்பு  பணி மற்றும் இதர பணியாற்றுகின்ற அழைப்பாளர்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

 1. தவ்ஹீதுக் கொள்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்காக உங்கள் அடுத்த தலைமுறையினரைக் கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சுகின்ற போது, சில கொள்கைச் சகோதரர்கள் ஒரு சிலரைத் தத்தெடுத்து, பொருளாதார ரீதியில் அவர்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு கல்லூரிக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அவர்களின்  அந்த முயற்சி பாராட்டத்தக்கது. அப்படி அனுப்பி வைக்கப்படுகின்ற ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் படிப்பேறதாவர்களாக இருக்கின்றார்கள். அவர்களால் பாடத்தை புரிந்துக் கொள்ளும் திறமை இல்லை.
 2. அடிக்கடி நாம் உங்களிடம் வேண்டுவது போன்று, உங்கள் பிள்ளைகளை இந்தக் கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள் என்று தான். குறிப்பாக, செல்வந்தப் பெருமக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றோம். இந்தச் சகோதரர்கள் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தங்களது சொந்தக் காலில் நின்று தங்களுடைய தொழிலையும் பார்த்துக் கொண்டு அழைப்புப் பணியையும் அவர்கள் மேற்கொள்ள முடியும்.
 3. ஒரு சில பெற்றோர்கள் உலகக் கல்வியும் மார்க்கக் கல்வியும் சேர்ந்தாற்போல் படிக்க முடியுமா? என்று தொடர்பு கொண்டு கேட்கின்றார்கள்.

ஒரு மாணவர் இரட்டைக் குதிரைகளில் பயணம் செய்ய முடியாது. காரணம் இரண்டும் இரு வேறு துறைகள். ஒவ்வொரு துறையும் ஒரு மாணவனை முழுமையாக தன்னளவில் ஈர்த்துக் கொள்ளும். இரண்டு துறைகளிலும் ஒருசேர ஒருவர் பயணிக்க முடியது.

அப்படி சில கோர்ஸ்களை சில தனியார் நிறுவனங்கள் நடத்துகின்றன. அத்தகைய கோர்ஸ்களைப் படித்துவிட்டு வருபவர்கள் அரபி மொழியை மேலெழுந்த வாரியாகத் தெரிந்து கொள்ளலாமே தவிர அரபி மொழியில் ஓர் ஆழமான அறிவையும் ஆய்வு செய்வதற்குரிய முழு ஆற்றலையும் பெற்று விட முடியாது என்பது இந்தத் துறையில் இறங்கிப் படித்தவர்களுக்கு நன்கு புரியும்.

அதே சமயம், இந்தக் கல்லூரியின்  நான்காண்டு பாடத்திட்டத்தில் படித்து விட்டு வெளியான பின் பல்கலைக் கழகங்கள் நடத்துகின்ற தொலைதூரப் பாடத்திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் படித்து, பட்டதாரிகளாக முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த அடிப்படையில், ஆலிம்களான பலர் பட்டதாரிகளாக ஆகியிருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் உலகம், மறுமை ஆகிய இரு கல்விகளையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு பெற்றுக் கொண்டவராகின்றார்கள். இப்படி ஓர் இடைவெளி விட்டுப் படிக்கின்ற போது இரு கல்விகளுக்கும் பாதிப்பில்லாமல் கற்க முடிகின்றது என்பதை நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று உலகக் கல்வியைப் பொறுத்தவரையில் தொலைதூரக் கல்வி மூலமாகப் படித்துக் கொள்ளலாம். அதற்குரிய பாடத்திட்டங்களை, போதிய போதனை முறைகளை வசதியாகவே பல்கலைக்கழகங்கள் ஏற்பாடுகள் செய்திருக்கின்றன. அத்தகைய கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் அந்தப்  பல்கலைக் கழகங்களிடம் இருக்கின்றன.

அதே சமயம், இந்தக் கல்வியைப் பொறுத்தவரை ஒருவர் தினசரி மாணவராகத் தான் படித்தாக வேண்டும். தொலைதூரக் கல்வி படித்துக் கொடுத்துக் கொடுக்கும் அளவுக்குக் கட்டமைப்பும் போதிய ஆசிரியர்களும் நம்மிடம் இல்லை.

அதனால், உலகக் கல்வியில் பட்டதாரியாக விரும்பும் ஒருவர்  இந்தக் கல்வியைக் கற்ற பின்னர் படித்து, பட்டதாரியாகிக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தக் கல்வியின் சிறப்பு தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5231

மார்க்கக் கல்வியைப் பயில்வதற்காகப் பயணிப்பவரின் பாதை இறுதியில் சுவனத்தில் போய் முடிகின்றது என்று இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நமது பிள்ளைகளை சுவனத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் பாதையில் பயிலவும் பயணிக்கவும் வைத்து, அவர்களை சுவனத்தின் சொந்தக்காரர்களாக்குவோமாக!

———————————————————————————————–

ஐவேளை தொழுகைக்கு நிரந்தர இமாம்கள்!

இரவுத் தொழுகைக்கு இரவல் இமாம்களா?

ஷம்சுல்லுஹா

‘‘மார்க்கம் எளிதானது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 39

இதற்கேற்ப நமது ஜமாஅத், மார்க்கத்தை மக்களுக்கு வாழ்வியலிலும், வணக்கவியலிலும் எளிதானதாகப் போதித்து, சிறிது சிறிதாக அதில்  வெற்றியும் கண்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். வாழ்வியலில் செயல்படுத்திய எளிமைக்குத் திருமணத்தை உதாரணமாகக் கூறலாம்.

கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டைக் கட்டிப்பார்!! என்று திருமணத்தின் கடுமைக்கும், கொடுமைக்கும் வீடு கட்டுவதை உதாரணமாகக் கூறுவார்கள். வீடு கட்டுவதற்குக் காசு பணம் தேவை. ஆனால் திருமணத்திற்கு அப்படித் தேவையா? தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் திருமணத்தை அந்த அளவுக்கு எளிமையானதாக ஆக்கிக் காட்டியிருக்கின்றார்கள்.

அந்த எளிய திருமணத்திற்கு சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர், முன்மாதிரிகளாகவும்  முன்னுதாரணங்களாகவும் இல்லாமல் போனார்கள். பந்தல், பத்திரிகை முதற்கொண்டு ஊரை அழைத்து விருந்து, பெண் வீட்டு விருந்து, வரதட்சணை, சீர் வரிசைகள் என ஏராளமான செலவினங்களைத் திருமணத்தில் புகுத்தி எளிய திருமணத்தை வலி மிகுந்த சடங்காக மாற்றியிருந்தார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத்தில் பால பாடத்தைப் படித்த ஒரு பாமர இளைஞன்,  நபி (ஸல்) காட்டிய எளிய திருமணத்தை நடத்தி மக்களுக்கு முன்மாதிரியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ்கின்றான். தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய வாழ்வியல் எளிமைக்கு இந்த ஓர் எடுத்துக்காட்டு போதும்.

அடுத்து வணக்கவியல் எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

பருவமானது முதல் 50 வயது வரை ஒருவர் கடமையான தொழுகைகளைத் தொழாமல் விட்டு விட்டார். இப்போது அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டுத் திருந்தி தொழ நினைக்கின்றார். தொழ வரும் அவரை நோக்கி  மத்ஹபு ஆலிம்கள், நீ 15 வயதில் பருவமடைந்தாய். எனவே, அதிலிருந்து கணக்கிட்டு 35 வருடத் தொழுகைகளை நீ களாச் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.

அவ்வளவு தான்!  திருந்தி வருந்தி வந்தவர், அப்படியே திரும்பப் போய்விடுவார். 35 வருட தொழுகைகளுடன் எனது எஞ்சிய கால தொழுகையும் கிடந்து விட்டுப் போகட்டும். இந்தப் பாரத்தை என்னால் தாங்க முடியாது என்று தொழாமலே இருந்து விடுவார். அந்தத் தவறிலேயே இறந்தும் விடுவார்.

ஆனால் தூய இஸ்லாத்தில் களாத் தொழுகை இல்லை என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தவ்ஹீது ஜமாஅத் மக்களிடம் நிறுவியது. அதன் மூலம் களாத் தொழுகை என்ற பாரம் மக்களுடைய தலைகளிலிருந்து இறக்கி வைக்கப்பட்டு  அவர்களை இஸ்லாத்தின் எளிமையை அனுபவிக்க வைத்தது.

மார்க்கத்தின் பெயரால் வணக்கங்களில் புகுந்து விட்ட கடினத்தையும், கஷ்டத்தையும் களைந்து எளிய மார்க்கத்தை இனங்காட்டி இருக்கின்றது.  களாத் தொழுகை அதற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டாகும்.

இன்று மக்களிடத்தில் இருந்து வருகின்ற கூட்டு துஆ மற்றொரு எடுத்துக் காட்டாகும்.

தொழ வருகின்ற மக்களுக்கு, ஓரளவுக்குத் தாங்கள் சிறு வயதில் ஓதி மனனம் செய்த அல்லது இமாம் அடிக்கடி ஓதக் கேட்டு மனனம் செய்த சூராக்கள் தெரியும். இருப்பினும் அவர்கள் கடந்த காலத்தில்  இமாம் தொழ வரமுடியாத நேரங்களில் தொழவைக்க முன் வர மாட்டார்கள். காரணம் தொழுத பிறகு ஓத வேண்டிய துஆவை நினைத்து அஞ்சித் தான்.

ஐந்து நேரத் தொழுகைகளில் ஒவ்வொரு நேரத் தொழுகையும் முடிந்த பிறகு சப்தமிட்டு ஓதுவதற்காக வேண்டி ஒரு  கூட்டுத் துஆவை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள். அந்த துஆக்களுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.  அந்த துஆ தெரியாததால் தான் அவர்கள் இமாம் இல்லாத நேரத்தில் தொழ வைக்க முன் வருதில்லை.

தவ்ஹீது ஜமாஅத் உதயமான பிறகு இப்போது அந்தப் பிரச்சனை இல்லை.  ஆறேழு வயது சிறுவன் கூட, குர்ஆன் ஓதத் தெரியாத மக்களுக்கு மத்தியில் அழகாகத் தொழுவிக்கின்ற காட்சியை இன்று நாம் பார்க்கின்றோம். தவ்ஹீது ஜமாஅத் மர்கஸ்களில் குறிப்பிட்ட நேரத்தில் கடமையான தொழுகைக்கான ஜமாஅத் முடிந்த பிறகும் இரண்டாம், மூன்றாம், நான்காம் ஜமாஅத் என்று பல ஜமாஅத்துகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. தாமதமாக வருகின்ற கொள்கைவாதிகள் தங்களுக்குத் தெரிந்த சூராக்களை ஓதித் தொழ வைத்து விட்டுச் செல்கின்றனர். அழைப்பாளர்கள் இல்லாத மர்கஸ்களில் வருகின்ற மக்களே ஐவேளைத் தொழுகைகளைத் தொழ வைத்து விட்டுச் செல்கின்றனர். மர்கஸ்களில் தொழுகைகள் முடங்காமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் மார்க்கம் எளிமையானது என்பதால் தான். வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.

அல்குர்ஆன் 73:20

கடமையான ஐவேளைத் தொழுகைகளில் இப்படி எளிமையான முறைகளில் தொழ வைக்கின்ற பணி அழகாக நடந்து கொண்டிருக்கையில், நாம் ரமளான் மாத இரவுத் தொழுகைகளுக்கு மட்டும் இரவல் தாயீக்களை நாடவும், தேடவும் ஆரம்பித்து விடுகின்றோம். இந்தத் தேட்டம் நியாயமானது தான். புனிதமிக்க ரமளான் மாதத்தில் ரம்மியமான கிராஅத்துகளைக் கேட்டு நின்று தொழுவதற்கு ஆசைப்படுவதை யாரும் குறை சொல்ல முடியாது.

நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்’ என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 3

இந்த ஹதீஸ் ரமளான் மாத இரவுகளில் நின்று தொழுவதற்கு ஆர்வமூட்டுகின்றது.

இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 1901

இந்த ஹதீஸ் லைலத்துல் கத்ர் இரவில் நின்று தொழுவதை ஆர்வமூட்டுகின்றது. சுன்னத் வல்ஜமாஅத்தில் இருந்து கூட அமலைத் தேடியவர்களாக நம்முடைய மர்கஸ்களில் நடைபெறுகின்ற இரவு நேரத் தொழுகைகளின் ஜமாஅத்துகளில் கலந்து கொள்கின்றனர். இது அவர்களை  சத்தியத்தின் பக்கம் ஈர்ப்பதற்கு ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. ஆனால்  நமது ஜமாஅத்தில்  இமாம்களுக்கு சில வரையறைகளை நிர்ணயித்திருக்கின்றோம். அந்த வரையறைகள் முழுக்க முழுக்க மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

அவற்றில் ஒன்று, இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாகாது என்பதாகும்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.

(அல்குர்ஆன் 9:17,18)

பள்ளியை நிர்வாகம் செய்வது என்றால், பள்ளிவாசல்களில் விளக்குகள் போடுவது, மின்விசிறி போடுவது போன்ற காரியங்கள் அல்ல! பள்ளி நிர்வாகத்தின் பெரிய பணியே  தொழவைப்பது தான். தொழவைக்கின்ற அந்த இமாம் ஒரு போதும் இணைவைப்பாளராக இருக்கக் கூடாது.

இவ்வாறு நாம் கூறும் போது, ‘நாங்கள் உம்ராபாத் போன்ற இணை கற்பிக்காத கொள்கையைக் கொண்ட மதரஸாக்களிலிருந்து தானே இமாம்களைத் தருவிக்கின்றோம். அதில் என்ன தப்பு?’ என்று கேட்கலாம். தர்கா வழிபாடு போன்ற சில இணை கற்பிக்கும் காரியங்களை உம்ராபாத் மதரஸாவில் தவறு என்று சொல்லிக் கொடுக்கப்பட்டாலும் சிஹ்ர் எனும் சூனியத்துக்கு ஆற்றல் உண்டு என்று அங்கே போதிக்கப்படுகிறது.

மார்க்க அடிப்படையில் இப்படி நம்புவதும் ஓர் இணைவைப்புத் தான் என்று தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.

சிஹ்ர் பற்றிய இந்த விரிவான மற்றும் நுணுக்கமான பார்வை மற்ற எந்த ஜமாஅத்திலும், இயக்கத்திலும், நிறுவனத்திலும் கிடையாது. அதனால் உம்ராபாத்தும் இதில் விதிவிலக்கில்லை. அங்கிருந்து வரக்கூடிய மாணவர்களிடத்தில் சிஹ்ர் பற்றிய தெளிவான சிந்தனையை நாம் பார்க்க முடியாது.

அத்துடன் நமது மர்கஸ்களுக்கு வரக்கூடியவர்கள் பெரும்பாலும் வட மாநிலங்களைச் சார்ந்த உருது பேசக்கூடிய ஹாபிழ்கள் தான்.

தமிழ்நாட்டில் உருது மொழி பேசும் பகுதிகளில் அமைந்திருக்கின்ற மர்கஸ்களில் வேண்டுமானால் ஜமாஅத் சகோதரர்கள் அவர்களிடம் உருது மொழியில் சரளமாகப் பேசி சிஹ்ரைப் பற்றி விளக்கலாம். அப்படியே விளக்கினாலும் வந்த இடத்தில் வம்பில் மாட்டுவானேன் என்று அவர்கள் தலையாட்டிக் கொள்வார்கள். முற்றிலும் சிஹ்ரில் தொற்றி நிற்கும் ஷிர்க்கைப் பற்றி முழுமையாகப் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்ல முடியாது.

முழுதும் தமிழ் பேசும் மர்கஸ்களில் வரக்கூடிய ஹாபிஸ்களிடம்  இந்த விளக்கம் கூட அளிக்க முடியாது. ஆங்காங்கு அரை குறையாக உருது பேசும் ஜமாஅத் சகோதரர்கள் அவர்களிடம் விளக்கும் விளக்கமும் பெரிய அளவில் எடுபடாது. அதனால் இத்தகைய ஹாபிஸ்களைத் தவிர்ப்பது தான் சரியான வழிமுறையாகும்.

அதே சமயம் வட மாநிலத்தைச் சார்ந்த ஒருவர், சிஹ்ர் பற்றிய வாதப்பிரதிவாதங்களை முழுமையாக விளங்கி  அவர் தன்னை முழுமையாக ஜமாஅத்திற்கு அர்ப்பணித்துக் கொள்கின்றார் என்றால், அப்படிப்பட்டவரை நாம் வரவேற்பதில் தவறேதுமில்லை. அதே சமயம் இந்த ஹாபிஸ் பிரச்சனைக்குத் தீர்வென்ன? என்ற கேள்வி நம்மிடம் இயல்பாக எழும். அதற்குரிய தீர்வுகளை பார்ப்போம்:

 1. திருக்குர்ஆன் மாநாட்டை ஒட்டி இன்று நமது ஜமாஅத் திருக்குர்ஆனை மனனம் செய்வதற்குரிய பல்வேறு கட்டங்களைக் கொண்ட பயிற்சிகளை அளித்திருக்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, கொள்கைச் சகோதரர்கள் குர்ஆனை அதிகம் அதிகம் மனனம் செய்து கொள்ளவேண்டும்.
 2. நமது பிள்ளைகள் அவர்களின் படிப்பின் ஊடே திருக்குர்ஆன் அத்தியாயங்களை மனனம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். சிறு வயதில் அவர்களுக்கு அதிகமான நினைவாற்றல் நிறைந்தே இருக்கும். இந்தப் பருவத்தில் அவர்கள் செய்கின்ற மனப்பாடம் பசுமரத்தாணி போன்று நெஞ்சத் தாமரைகளில் பதிந்து விடும்.

அதிலும் பல அறிஞர்கள் ஓதிய ஆடியோ, வீடியோ பதிவுகள் டிஜிட்டல் உலகில் கணக்கற்ற வகையில் உலா வருகின்றன. அவற்றைக் கேட்டே எளிதில் மனப்பாடம் செய்து விடலாம். அப்படித் தான் இன்றையை  மார்க்கப் பிடிப்புள்ள இஸ்லாமிய இளைஞர்கள் வெகுவிரைவாக மனனம் செய்து விடுகின்றனர். பெரியவர்களும் இந்த அணுகுமுறையைக் கையாண்டால் குர்ஆனை எளிதில் மனனம் செய்து விடலாம்.

 1. நமது பிள்ளைகளை முழுமையாக அழைப்புப் பணிக்காக அர்ப்பணிக்க வேண்டும்.
 2. சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த ஆலிம்களை இந்த சத்தியக் கருத்தின் பக்கம் அழைக்க வேண்டும். சுன்னத் வல்ஜமாஅத் ஆலிம்களிடம் நட்பு கொண்டு அவர்களை சத்தியப் பாதைக்கு ஈர்த்து விட்டோம் என்றால் அவர்கள் ஹாபிஸ்களாகவும் ஆலிம்களாகவும் இருப்பார்கள். அதனால் நமது ஜமாஅத்தின் அழைப்புப் பணிக்கும், தொழுகை நடத்தும் பணிக்கும் அவர்கள் பெரிதும் உதவியாக இருப்பார்கள். இந்த ஆலிம்கள் நமது ஜமாஅத்தை நோக்கி வருகின்ற போது நமது ஜமாஅத்தின் நிலைப்பாடுகள் அனைத்தும் தெரிந்தே வருவார்கள்.

இப்படிப்பட்ட வழிமுறைகள் மூலம் ரமளான் மாத இரவுத் தொழுகைகளின் தேவையைப் பூர்த்தி செய்வோமாக!

———————————————————————————————–

தவறுகளை நியாயப்படுத்தாதீர்!!

M.A. அப்துர்ரஹ்மான், இஸ்லாமியக் கல்லூரி

அகில உலகத்தையும் படைத்திருக்கின்ற இறைவன் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களைப் பல்கிப் பெருகச் செய்திருக்கின்றான். தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாகவும், பின்பற்ற வேண்டிய வழிமுறையாகவும் திருக்குர்ஆன் என்ற மகத்தான பேரருட்கொடையை இறைவன் வழங்கியிருக்கின்றான்.

இந்தப் பேரருட்கொடையின் மூலம் உலக மாந்தர்கள் அனைவரும் அதிகமான படிப்பினைகளையும், பாடங்களையும், வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பெற முடியும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் திருக்குர்ஆனின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் நாம் செய்து கொண்டிருக்கின்ற ஏராளமான தவறுகளிலிருந்தும், பாவமான காரியங்களிலிருந்தும் விடுபட்டுத் திருந்தி வாழ முடியும்.

பெரும்பாலான மனிதர்களிடத்தில் இருக்கின்ற மிகப் பெரிய அலட்சியப் போக்கு என்னவென்றால், சொல்லப்படுகின்ற உபதேசங்களை, அறிவுரைகளை தங்களின் உள்ளங்களில் ஆழப்பதிய வைக்காமல் வெறுமனே காதுகளால் செவிமடுத்துவிட்டு அப்படியே காற்றிலே பறக்கவிட்டு விடுவதைப் பார்க்கின்றோம்.

எத்தனையோ உபதேசங்களின் மூலமாக ஒவ்வொரு நாளும் நாம் அறிவுறுத்தப்படுகின்றோம். ஆனால் நாம் படிக்கின்ற, செவிமடுக்கின்ற அத்தகைய உபதேசங்கள், அறிவுரைகள், போதனைகள் நம்முடைய உள்ளங்களைத் தட்டி எழுப்பி, நாம் செய்து கொண்டிருக்கின்ற தவறான காரியங்களிலிருந்தும், பாவமான செயல்களிலிருந்தும், அட்டூழியங்களிலிருந்தும், அழிச்சாட்டியங்களிலிருந்தும் நம்மை மீட்டெடுக்கின்றதா? என்று நம்மை நாம் சுய பரிசோதனை செய்யக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர், செய்த தவறுகளிலிருந்து நம்மை மாற்றிக் கொள்வதற்கும், திருத்திக் கொள்வதற்கும் தயங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் சொல்வதாக இருந்தால் நாம் செய்தது, செய்து கொண்டிருப்பது தவறே இல்லை என்ற மனப்போக்கில் விடாப்பிடியாய் நின்று கொண்டு, செய்த தவறை நியாயப்படுத்துவதைப் பார்க்கின்றோம்.

இதுபோன்ற ஏராளமான பாவங்கள், தவறுகள் உதாரணமாக விபச்சாரம், மோசடி, கொலை, கொள்ளை, போதைப்பொருட்கள், லஞ்சம், திருட்டு போன்ற பல்வேறு பாவமான காரியங்களைச் செய்து வருகின்றோம். இந்த இழிசெயல்களைச் செய்வது தவறு தான் என்று தெரிந்து கொண்டே இந்தப் பாவங்களை திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்தப் பாவங்களை விட்டு நம்மை நாம் தற்காத்துக் கொள்ள திருக்குர்ஆன் அற்புதமான, அழகான போதனையை அழுத்தந்திருத்தமாகவும், ஆணித்தரமாகவும் நம்முடைய உள்ளங்களில் ஆழப்பதிய வைக்கின்றது.

எந்த ஒரு சமுதாயமும், தனி மனிதரும் தன்னிடத்தில் இருக்கின்ற பாவம் செய்கின்ற குணநலன்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தன்னிடத்தில் இருக்கின்ற தன்மைகளை மாற்றாத வரைக்கும் அல்லாஹ் அவர்களின் குணங்களை மாற்றவே மாட்டான் என்றும் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான். மேலும், தங்களைத் தாங்களே திருத்திக் கொண்டால் மட்டும் தான் அவர்களுக்கு ஏற்படுகின்ற தீங்கிலிருந்தும், இழிவுகளிலிருந்தும் அவர்களை அல்லாஹ் பாதுகாப்பான் என்றும் அறிவுரை பகர்கின்றான்.

இறைவனின் எச்சரிக்கை

எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மாற்றுவதில்லை என்பதே இதற்குக் காரணம். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:53

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும்போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

அல்குர்ஆன் 13:11

இன்றைக்கு நம்மில் பெரும்பாலானோர் அல்லாஹ்வின் அருளை எண்ணி நாம் செய்கின்ற தவறுகளிலிருந்து திருந்தி வாழ்வதற்கோ, அந்தத் தவறை நன்மைகளாக மாற்றுவதற்கோ முயற்சி செய்வதில்லை. மாறாக நாம் செய்த தவறை நியாயப்படுத்தலிலேயே ஈடுபடுகின்றோம். அதற்காக எத்தனை பெரிய சிரமம் ஏற்பட்டாலும், எதிர்ப்புகள் வந்தாலும் நாம் செய்த தவறைக் கண்டுகொள்ளாமல் இதுவெல்லாம் ஒரு தவறா? என்று எண்ணி அந்தப் பாவத்தை அலட்சியப்படுத்துகின்றோம்.

நாம் செய்த தவறை மாற்றிக்கொள்ளாத வரை அல்லாஹ் மாற்ற மாட்டான் என்று இருக்கும் போது, ஒரு தவறு செய்து விட்டால் அப்படியே இறைவனிடத்தில் சரணடைந்து கண்ணீர் விட்டுக் கதற வேண்டுமே ஒழிய, அதை விட்டுவிட்டு நம்முடைய பாவத்தை மறைப்பதற்கோ, திசை திருப்புவதற்கோ முயற்சிக்கக்கூடாது.

வேறுவேறு காரணங்களைத் தேடி நாம் செய்த பாவங்களை நியாயப்படுத்துவதிலிருந்து விலகிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

பாவங்கள் நன்மைகளாக மாற்றப்பட வேண்டுமா?

ஒருவர் தவறிழைத்து, தான் செய்த அந்தத் தவறை ஒத்துக்கொண்டு, வாய்மூடி மௌனமாக இருந்து, தன்னைப் படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்டு, தன்னைத்தானே திருத்திக் கொண்டால், கெட்ட குணநலன்களை மாற்றிக் கொண்டால் அல்லாஹ் அவர் செய்த அந்தப் பாவத்தை நன்மைகளாக மாற்றுவான்.

மேலும் தான் செய்த பாவத்தை நியாயப்படுத்துவதற்காக வீண் விவாதங்களோ, சண்டை சச்சரவுகளோ செய்து கொண்டிருக்காமல் அதிகமான நல்லறங்கள் செய்து முழுமையாக அல்லாஹ்விடத்தில் திருந்தி தன்னை ஒப்படைத்து விட வேண்டும் என்றும் இறைவன் அறிவுரை கூறுகின்றான்.

திருந்தி, நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவரைத் தவிர. அவர்களது தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுகிறான். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்.

அல்குர்ஆன் 25:70,71

ஒரு மனிதர் திருந்தி நல்லறங்கள் செய்ய ஆரம்பித்து விட்டாலே அவர் இறைவனை நோக்கித் திரும்புகின்ற பாதப்படிகளை எடுத்து வைக்க ஆரம்பிக்கின்றார். மேலும், நான் திருந்திவிட்டேன். நான் நல்லவனாக மாறிவிட்டேன் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதை விட, நான் திருந்தி விட்டேனா? இல்லையா? என்று என்னுடைய இறைவனுக்குத் தெரியும். உலக மாந்தர்கள் வேறு யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணி, நான் திருந்தி அவனை நோக்கி முற்றிலும் திரும்ப ஆரம்பித்து விட்டேன் என்று உள்ளத்தளவில் அமைதி காத்து பொறுமையாக இருக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

நாம் மாறாத வரை…

ஒரு மனிதர் பாவம் செய்துவிட்டு, அந்தப் பாவத்திற்காக வருந்தி, திருந்தி வாய்மூடி மௌனியாக இருந்து, அதற்கான தண்டனையைப் பெற்றுக் கொண்டாலும், அப்படிப்பட்டவருக்கு மகத்தான கண்ணியத்தை இஸ்லாம் வழங்குகின்றது.

இந்தச் செய்தியை ஆழ்ந்து படிக்கின்ற அனைவருக்கும் கண்களிலே கண்ணீர் ததும்பும். ஏனென்றால் இந்த நபித்தோழர், தான் செய்த பாவத்தைத் திசைதிருப்ப முற்படாமல், வீண் விவாதங்களில் ஈடுபடாமல், பாவத்தை மறைப்பதற்குப் பல்வேறு விதமாக யுக்திகளைக் கையாளாமல், பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சாமல் தன்னைத்தானே மாற்றிக் கொண்டு அதற்கான கடும் தண்டனையையும் அனுபவிக்கின்றார்.

இதோ அந்த அற்புதமான செய்தி:

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாஇஸ் பின் மாலிக் எனப்படும் அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் மானக்கேடான ஒரு செயலைச் செய்து விட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிலைநாட்டுங்கள்’’ என்று கூறினார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலமுறை திருப்பி அனுப்பினார்கள்.

பிறகு அவருடைய குலத்தாரிடம் விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், “அவரைப் பற்றித் தவறாக எதையும் நாங்கள் அறியவில்லை. ஆயினும், அவர் ஒரு செயலைச் செய்துவிட்டு, “தம்மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால் தவிர அக்குற்றத்திலிருந்து தம்மால் வெளியேற முடியாது என்று கருதுகிறார்’’ என்று கூறினர்.

பிறகு மாஇஸ் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருக்குக் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நாங்கள் அவரை ‘பகீஉல் ஃகர்கத்’ பொது மைய வாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.

அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ என்ற பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர் மீது ‘ஹர்ரா’வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகி விட்டார்.

ஆதாரம்: முஸ்லிம் 3497

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்’’ என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!’’ என்று வேண்டினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 3499

ஒரு நபித்தோழர் தவறிழைத்துவிட்டு, தான் செய்த தவறை நியாயப்படுத்தாமலும், மறைத்து விடாமலும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன்னுடைய தவறை ஒத்துக்கொண்டு தனக்குரிய தண்டனையைத் தர வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்.

இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு தவறைச் செய்துவிட்டால் பிறர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே அல்லது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகே நாம் செய்த அந்தத் தவறு வெளியே வருகின்றது. ஆனால் மாயிஸ் (ரலி) அவர்கள் தான் செய்த தவறை, தானே முன் வந்து நபி (ஸல்) அவர்களிடம் வந்து பிரகடனப்படுத்துகின்றார்.

இன்னும் சொல்வதாக இருந்தால் தன்னைச் சுற்றி இருக்கின்ற மனிதர்கள் தன்னைப் பற்றித் தவறாகப் பேசுவார்களே, கேவலமாக நினைப்பார்களே, இத்தனை காலம் நல்லவன் மாதிரி வேடம் போட்டாயா? என்று கேட்பார்களே என்றெல்லாம் எண்ணி மாயிஸ் அவர்கள் தவறை நியாயப்படுத்தவில்லை. தான் மாறாத வரை அல்லாஹ் நம்மை மாற்ற மாட்டான் என்ற ஒரே ஒரு அடிப்படையை உள்ளத்தில் ஆழப்பதிய வைத்தவராகத் தான் செய்த தவறை நன்மையாக மாற்றுவதற்குப் போராடுகின்றார்.

ஊர் முழுக்க சேர்ந்து கல்லால் ஓட ஓட விரட்டிப் பிடித்து அடிக்கின்றார்கள். வேதனையின் உச்சத்திலே இருந்த நேரத்தில் கூட அந்த மாயிஸ் (ரலி) அவர்கள் வாய் திறந்திருப்பாரா? நீங்களெல்லாம் யோக்கியர்களா? நல்லவர்களா? என்று கேட்டாரா? அல்லது தவறை நியாயப்படுத்த பல்வேறு காரணங்கள் கூறி திசை திருப்பினாரா? வீண் விவாதங்களில் ஈடுபட்டாரா? நான் தவறு செய்ததற்கு என்ன சாட்சி இருக்கின்றது என்று கேட்டாரா? என்பதையெல்லாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்!

செய்த தவறை ஒத்துக்கொண்டு அமைதியாக இருந்த காரணத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் போதுமானது என்று நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்ணியப்படுத்தினார்கள். இப்படி தன்னைத் தானே மாற்றிக்கொண்டு தன்னுடைய தவறை நியாயப்படுத்தாமல், வாய்மூடி மௌனமாக இருந்தவர்களுக்கு இஸ்லாம் மகத்தான கண்ணியத்தை வழங்குகின்றது.

தவறுகளை நியாயப்படுத்தாதே!!

ஒரு மனிதர் தவறிழைத்து விட்டால் எவ்வளவு பழிச்சொல்லுக்கு ஆளானாலும், அவப் பெயர் வந்து தொற்றிக் கொன்டாலும், கேவலப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் தான் செய்த தவறை நியாயப்படுத்தக் கூடாது.

நான் இந்தத் தவறை இப்படித்தான் செய்தேன்! அப்படித்தான் செய்தேன் என்று வீண் விவாதங்களில் ஈடுபடாமல் வாய்மூடி அமைதியாக இருப்பது தான் அவருக்குச் சிறந்தது, பரிசுத்தமானது, கண்ணியம் தரக்கூடியது.

தவறு செய்த ஒரு நபித்தோழர் எவ்வித சஞ்சலத்துக்கும் ஆளாகாமல், பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அஞ்சாமல் வாய்மூடி மௌனியாக இருந்த அற்புதமான சம்பவம்;

அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ‘தபூக்’ போரில் கலந்து கொள்ளாமல் தாம் பின்தங்கிவிட்டது குறித்துக் கூறியதை நான் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை (இஸ்லாம் எனும்) நேர்வழியில் செலுத்திய பிறகு அவன் எனக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை என்னவென்றால், (தபூக் போரில் நான் கலந்து கொள்ளாதது குறித்து வினவியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிம் நான் (மற்றவர்களைப் போல) பொய்யுரைக்காமல் உண்மை பேசியது தான். அவ்வாறு நான் பொய் சொல்லியிருந்தால் பொய் கூறிய(மற்ற)வர்கள் அழிந்ததைப் போல நானும் அழிந்து போயிருப்பேன்.

ஆதாரம்: புகாரி 4673 (ஹதீஸ் சுருக்கம்)

மற்றொரு செய்தியில்,

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.

ஆகவே மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்து வந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுவிக்காமல் இருந்து விடுவார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பதுதான். அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென  மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது.

ஆதாரம்: புகாரி 4677

மக்களும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தன்னை வெறுத்து ஒதுக்குகின்ற காரணத்தினால் தான் மரணித்து விட்டால் தனக்கு ஜனாஸா தொழ மாட்டார்களோ என்று அஞ்சுகின்றார்.

கஅப் இப்னு மாலிக் தொடர்பாக புகாரியில் 4418 என்ற இலக்கத்தில் மிக நீண்ட செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நீண்ட செய்தியின் சாராம்சம்:

கஅப் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருந்தும் கூட கலந்து கொள்ளாமல் இருக்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்து திரும்பியவுடன் பொய்யான காரணங்களைக் கூறி சாக்குப் போக்கு சொல்லி சமாளித்து விடலாம் என்று நினைக்கின்றார்.

தன்னுடைய குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் ஆலோசனை கேட்கின்றார்.

ஆனால், பொய் சொன்னால் அல்லாஹ் அறிவித்து கொடுத்து விடுவானே என்று பயந்து உண்மையை ஒப்புக் கொள்கின்றார்.

தன்னுடன் இருப்பவர்களெல்லாம், நீங்கள் பொய் சொல்லி தப்பித்திருக்கலாமே என்று இவரை உசுப்பேற்றுகின்றனர்.

பனூ சலீமா குலத்தார் இவரைக் கடுமையான முறையில் திட்டுகின்றார்கள்.

இவரைப் போன்று இன்னும் இரண்டு நபர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டது.

மக்கள் அனைவரும் இம்மூவரையும் முற்றிலுமாகப் புறக்கணிக்க ஆரம்பிக்கின்றனர்.

மற்ற இருவரும் வீட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்க கஅப் மட்டும் ஐந்து நேரத் தொழுகைகளிலும், கடைவீதிகளிலும் நடமாடிக் கொண்டிருந்தார்.

அபூகத்தாதா (ரலி) என்ற தன்னுடைய உறவினரின் வீட்டிற்குச் சென்று அவரிடத்தில் ஸலாம் கூறுகின்றார். அவரோ பதில் ஸலாம் சொல்லவில்லை. கஅப் கண்ணீர் விட்டுக் கதறி அழ ஆரம்பித்து விடுகின்றார்.

கஸ்ஸான் நாட்டு அரசனிடமிருந்து ‘முஹம்மத் உங்களை வெறுத்து புறக்கணித்து விட்டார். எனவே நீங்கள் எங்களிடம் வந்து விடுங்கள்’ என்ற கடிதம் வருகின்றது.

அந்தக் கடிதத்தை அடுப்பில் தூக்கிப் போட்டு எரித்து விடுகின்றார்.

சிறிது நாட்களில் உங்கள் மனைவியரை விட்டு விலகிவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து கட்டளை வருகின்றது.

தனது மனைவியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

பிறகு அல்லாஹ் தள்ளிவைக்கப்பட்ட மூவரையும் மன்னித்து விட்டேன் என்று (9:117,118) வசனத்தை இறக்கி மன்னிப்பளிக்கின்றான்.

ஆதாரம்: புகாரி 4418 (ஹதீஸ் சுருக்கம்)

இந்தச் செய்தியை நன்றாகக் கூர்ந்து படித்துப் பாருங்கள்! தான் செய்த தவறை மாற்றிக் கொண்டு அதற்காக என்னென்ன வேதனைகளையெல்லாம் அனுபவிக்கின்றார். தன்னைப் பற்றி ஊர் முழுக்கத் தவறாகப் பேசுகின்றார்கள்; வெறுத்து ஒதுக்குகின்றார்கள்; கடுமையான மன உளைச்சல் ஏற்படுகின்றது; என்றாலும் அமைதி காக்கின்றார்.

அவர் வேண்டுமென்றே போருக்குச் செல்லக்கூடாது என்று திட்டம் தீட்டினாரா? இல்லை. மேலும் நான் செய்ததெல்லாம் பெரிய தவறா? ஏன் என்னை இப்படி அலைக்கழிக்கின்றீர்கள். என்று கேட்டு விவாதம் செய்தாரா? அல்லது பதிலடி என்ற பெயரால் மக்களிடத்தில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தினாரா? எந்தத் தவறான வழியையும் அவர் கையிலே எடுக்கவில்லை.

அவரெடுத்த மிகப்பெரும் ஆயுதம் வாய்மூடி இருந்து அமைதியைக் கடைபிடித்தது. வெறுத்து ஒதுக்கினாலும், அடித்து விரட்டினாலும், ஸலாமுக்குப் பதில் சொல்ல மறுத்தாலும் நான் பொறுமையாக இருப்பேன், வாய்திறக்க மாட்டேன், என்னுடைய தவறை நியாயப்படுத்த மாட்டேன், என்னை நானே மாற்றிக் கொள்வேன் என்று சொல்லி சாதித்துக் காட்டுகின்றார். இவரைப் பற்றி அல்லாஹ்வே சிலாகித்து குர்ஆனில் வசனம் இறக்குகின்ற அளவுக்கு இவரின் அமைதி இவரை மாற்றி இருக்கின்றது.

மாறாதோருக்கு மறுமையில் ஏற்படும் இழிவு

ஒரு மனிதர் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாமல் தன்னுடைய தவறை நியாயப்படுத்திக் கொண்டிருந்தால் அவருக்கு மறுமையில் கடுமையான இழிவு ஏற்படும் என்று இறைவன் எச்சரிக்கின்றான்.

செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

அல்குர்ஆன் 18:103-105

சில மனிதர்கள் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாமல், தாங்கள் அழகிய செயல்களைச் செய்கின்றோம் என்று நினைப்பவர்களுக்கு நாளை மறுமையில் நன்மை – தீமையை நிறுத்துப் பார்க்கின்ற மீஸான் தராசையே நிறுவ மாட்டோம் என்று அல்லாஹ் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்கின்றான்.

மேலும் இறைவன்;

யாருக்குத் தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அவனும் அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விடுகிறான்.

அல்குர்ஆன் 18:105

யார் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளாமல் தீமையான காரியத்தைச் செய்துவிட்டு, நான் தான் யோக்கியன், நல்லவன்; நான் தான் சொர்க்கவாசி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதை விட, ஒரு தவறு செய்துவிட்டால் திருந்தி நல்லவனாக வாழ்ந்து செய்த தவறை நியாயப்படுத்தாமல் வாய்மூடி இருந்து, தன்னைத்தானே மாற்றிக் கொள்வதே சிறந்தது.

எனவே இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் மனிதன் என்ற அடிப்படையில் தவறிழைத்து விட்டாலும் தவறைத் தன்னளவில் திருத்திக் கொண்டு, தன்னுடைய குணத்தை நனமைகளை நோக்கித் திருப்பி, நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்! ஏனெனில் நாம் மாறாத வரை அல்லாஹ் நம்மை மாற்ற மாட்டான்.

———————————————————————————————–

பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா?

வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

கே.எம். அப்துந் நாஸர்

இஸ்லாத்தின் அடிப்படை ‘வஹீ’ எனும் இறைச் செய்தி மட்டும்தான். வஹீ அல்லாத எந்த ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படையாக ஆகாது. இதனை திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் மிகத் தெளிவாக, கடுகளவும் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றன.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

அல்குர்ஆன் 7:3

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 6:106

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 43:43, 44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (இறைவனை) மறுப்பவர்கள்.

அல்குர்ஆன் 5:44

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 5:45

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

அல்குர்ஆன் 5:47

மேற்கண்ட இறைவசனங்களும், இன்னும் நூற்றுக் கணக்கான இறைவசனங்களும், நபிமொழிகளும் இறைச் செய்தி மட்டும்தான் மார்க்கம் என்ற தூய கொள்கையைப் பறைசாற்றுகின்றன.

நபி (ஸல்) எந்த அடிப்படையை மிக உறுதியாக வழிகாட்டிச் சென்றார்களோ அந்த சத்தியக் கொள்கையை விட்டும் மக்களை வழிகெடுக்கும் பல்வேறு வழிகெட்டக் கொள்கைகள் நபி (ஸல்) அவர்களது மரணத்திற்குப் பிறகு இஸ்லாமிய மக்களிடத்தில் ஊடுருவின. வஹீச் செய்தி அருளப்படும் காலத்தில் அல்லாஹ்வின் தூதரும் அவர்களின் அருமைத் தோழர்களும் எந்தக் கொள்கையில் இருந்தார்களோ அந்த சத்தியக் கொள்கையிலிருந்து மக்களை சிறுகச் சிறுக வழிகெடுத்து அவர்களை இணைவைப்புக் கொள்கையில் தள்ளும் வேலைகளை அந்த வழிகெட்ட கொள்கைக்குச் சொந்தக்காரர்கள் கன கச்சிதமாகச் செய்தார்கள்.

அப்படிப்பட்ட வழிகெட்டக் கொள்கைகளில் ஒன்று தான் ‘‘நவீன ஸலபிக் கொள்கை” ஆகும். இதனை நாம் ‘‘நவீன ஸலபிக் கொள்கை” என்று கூறுவதற்குத் தகுந்த காரணம் உள்ளது. ஸலபிகள் என்றால் முன்னோர்கள் என்று பொருள். அந்த ஸலபிகளில் முதலாமவர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் அவர்களோடு வாழ்ந்த அருமை ஸஹாபாக்கள் தான்.

நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் வஹீச் செய்தியை மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற சத்தியக் கொள்கையில் மட்டுமே இருந்தனர்.

ஸஹாபாக்கள் திருமறைக் குர்ஆனின் விளக்கத்தைப் பிற வசனங்களின் துணை கொண்டும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும், விளக்கத்திலிருந்தும் புரிந்து கொண்டனர்; அதன்படியே செயல்பட்டனர். இதுவே சத்தியக் கொள்கை ஆகும்.

ஆனால் ‘நவீன’ ஸலபிக் கொள்கைக்குச் சொந்தக்காரர்கள், இறைத்தூதர் காலத்தில் அருமை ஸஹாபாக்கள் திருமறைக் குர்ஆனை எவ்வாறு புரிந்தார்களோ அதற்கு நேர் மாற்றமாக முன்னோர்களின் விளக்கத்திலிருந்து திருமறைக் குர்ஆனையும், ஹதீஸ்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என வாதிக்கின்றனர். அதையே கொள்கையாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். இது திருமறைக் குர்ஆனுக்கு எதிரான வழிகேடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை.

ஒவ்வொரு குர்ஆன் வசனத்தின் விளக்கத்தையும், ஒவ்வொரு ஹதீஸின் விளக்கத்தையும் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த நேரடி விளக்கத்திலிருந்தும், பிற வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் துணை கொண்டும், இறைத்தூதர் காலத்தில் அந்த இறைச் செய்தி அருளப்பட்ட சூழ்நிலைகளை அறிவதிலிருந்து  மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையைத் தான் திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் 16:44

மேற்கண்ட வசனத்தில் வஹியை நாம் புரிந்து கொள்வதற்கு இரண்டு வழிமுறைகளை அல்லாஹ் கூறுகின்றான்.

 • ஒன்று: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம்.
 • இரண்டு: நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகத்தின் விளக்கம் என்பது  ஒரு வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய நேரடி விளக்கம் ஆகும்.

நாம் சிந்திக்க வேண்டும் என்பது திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் நாம் சிந்திக்கும் போது ஒரு திருக்குர்ஆன் வசனத்தின் விளக்கத்தை இன்னொரு வசனம் தரும். அல்லது நபி மொழிகள் தரும். அது போன்று ஒரு ஹதீஸின் விளக்கத்தை திருக்குர்ஆன் வசனத்திலிருந்தும், பிற ஹதீஸ்களிலிருந்தும் நாம் சிந்தித்து விளங்கிக் கொள்ளலாம்.

இந்த இரண்டு அடிப்படைகளைத் தாண்டி மூன்றாவது விளக்கத்திற்குச் செல்லும் போது நிச்சயமாக அந்த விளக்கம் நம்மை வழிகேட்டிலோ, அல்லது இணைவைப்பிலோ கொண்டு போய் சேர்த்துவிடும்.

நவீன ஸலபிக் கொள்கையைச் சார்ந்தவர்கள் திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் மனிதர்களின் சுய கருத்திலிருந்து விளங்கிய காரணத்தினால் அவர்கள் பல்வேறு குர்ஆன் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும் வழிகெட்ட விளக்கத்தையும், இணைவைப்பில் தள்ளும் விளக்கத்தையும் கொடுத்து வழிகேட்டில் விழுந்துள்ளனர். இதற்குரிய சில சான்றுகளை நாம் காண்போம்.

திருக்குர்ஆன் ஸஹாபாக்களை பின்பற்றச் சொல்கிறதா?

இறைச் செய்தியை மட்டும் தான் திருக்குர்ஆன் பின்பற்றச் சொல்கிறது என்பதற்குப் பல்வேறு வசனங்களைச் சான்றாக இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் நவீன வழிகெட்ட ஸலஃபிக் கொள்கையைச் சார்ந்தவர்கள் திருக்குர்ஆன் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்வதாகக் கூறி அதற்கு சில வசனங்களையும் முன்வைக்கின்றனர்.

9வது அத்தியாயம் 100வது வசனத்தில் ஆரம்ப கால அன்சாரி ஸஹாபாக்கள் மற்றும் முஹாஜிர் ஸஹாபாக்கள் ஆகியோரைப் பற்றிக் கூறிவிட்டு

وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ

(வல்லதீன இத்தபஊஹும் பி இஹ்சான்) என்று குறிப்பிட்டுள்ளான்.

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபஊ” என்ற சொல்லிற்கு ‘‘பின்பற்றியவர்கள்” என்ற பொருளை ஸலஃபிகள் கொடுக்கின்றனர்.

‘‘பின்பற்றியவர்கள்” என்று பொருள் செய்வதன் மூலம் இவ்வசனம் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்வதாக நவீன வழிகெட்ட ஸலஃபிகள் வாதிக்கின்றனர்.

‘‘இத்தபஅ” என்ற வார்த்தைக்கு ‘‘பின்பற்றினான்” என்று பொருள் இருப்பதைப் போன்று ‘‘பின் தொடர்ந்தான்”, ‘‘அடுத்து வந்தான்” என்ற பொருளும் உள்ளது.

அதாவது ஒருவரின் கருத்தைப் பின்பற்றுவதற்கு ‘‘இத்தபஅ” என்ற சொல் பயன்படுத்தப்படுவதைப் போன்று ஒருவர் முன்னால் செல்ல மற்றொருவர் அவருக்குப் பின்னால் செல்வதைக் குறிக்கவும் ‘‘இத்தபஅ” என்ற அரபிச் சொல் பயன்படுத்தப்படும்.

இதனைப் பின்வரும் சான்றுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا ، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا ، فَإِنَّهُ يَرْجِعُ  مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ ، فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஒருவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய ஜனாசாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காக தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் இரண்டு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை போன்றதாகும். எவர் அதற்காகப் (பிரார்த்தனைத்) தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ அவர் ஒரு ‘கீராத்’ நன்மையுடன் திரும்புகிறார்.

அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)

நூல்: புகாரி (47)

மேற்கண்ட ஹதீஸில்  ‘‘ஜனாசாவைப் பின்தொடர்தல்” என்பதைக் குறிக்க ‘‘இத்தபஅ” என்ற வார்த்தை வந்துள்ளது.

 இங்கே ‘‘இத்தபஅ” என்பதற்கு ‘‘ஜனாசாவைப் பின்பற்றுதல்” என்று பொருள் செய்து ஒருவர் ஜனாசாவின் கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என வாதிட்டால் அதனை நாம் மடமைத்தனம் என்றும், வழிகேடு என்றுமே கூறுவோம். ஜனாசா என்பதே உயிரற்றது. அது எந்தக் கருத்துக்களையும் கூறாது. அப்படி இருக்கையில் இங்கே ‘‘ஜனாஸாவைப் பின்பற்றுதல்” என்று பொருள் செய்ய இயலாது. மாறாக ‘‘ஜனாசாவைப் பின் தொடர்தல்” ‘‘ஜனாசாவிற்குப் பின்னால் செல்லுதல்” என்ற பொருளைத்தான் செய்ய முடியும்.

இதிலிருந்து ‘‘இத்தபஅ” என்ற சொல்லுக்குப் ‘‘பின் தொடர்தல்” என்ற பொருளும் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

நபியவர்கள் முன்னால் செல்ல அவர்களைப் பின்தொடர்ந்து தான் சென்றதைப் பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது ‘‘இத்தபஃதுன் நபிய்ய” – ‘‘நான் நபியைப் பின்தொடர்ந்து சென்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க புகாரி 155)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் தண்ணீர் நிரம்பிய தோல் பையுடன் நபி (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள் என்பதைக் குறிப்பிடும் போது ‘‘ஃபத்தபஅஹுல் முகீரா” – ‘‘முகீரா அவரைப் பின்தொடர்ந்து சென்றார்” என்றே குறிப்பிட்டுள்ளார்கள் . (பார்க்க புகாரி 203)

”இத்தபஅ” என்ற சொல்லுக்கு ‘‘பின்னால் வந்தான்”, ‘‘பின்னால் சென்றான்” என்ற பொருளும் உள்ளது என்பதை மேற்கண்ட வாசகங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இப்பொழுது 9:100வது வசனத்திற்கு ஆரம்பகால ஸஹாபாக்களைப் பின்தொடர்ந்தவர்கள் என்று பொருள் செய்வது சரியா? அல்லது ஆரம்பகால ஸஹாபாக்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றியவர்கள் என்று பொருள் செய்வது சரியா? என்பதைக் காண்போம்.

நவீன வழிகெட்ட ஸலபிகள் செய்வதைப் போன்று ‘‘ஆரம்பகால ஸஹாபாக்களை மார்க்கமாகப் பின்பற்றியவர்கள்” என்று பொருள் செய்தால் அது இணைவைப்புக் கொள்கையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.

ஏனெனில் வஹியைத் தவிர வேறு எதையும் பின்பற்றக் கூடாது என திருமறைக் குர்ஆனின் ஏராளமான வசனங்கள் குறிப்பிடுவதை நாம் குறிப்பிட்டோம்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

அல்குர்ஆன் 7:3

இறைவன் அல்லாத வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என திருக்குர்ஆன் 7:3வது வசனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

மார்க்க விஷயத்தில் இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களைப் பின்பற்றுவது இணைவைத்தல் என்பதையும் மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஏனெனில் இறைவன் தன்னுடைய வஹியை மட்டுமே பின்பற்ற வேண்டும் வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என்று கூறிய பிறகு நாம் இறைவன் அல்லாத மனிதர்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றினால் அது இணைவைப்பாகும்.

இதை திருமறைக்குர்ஆன் மற்றொரு வசனத்தில் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (இறைவனை) மறுப்பவர்கள்.

அல்குர்ஆன் 5:44

மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வுடைய சொல்லை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதையும், இறைவனல்லாத மற்றவர்களின் கருத்துக்களை மார்க்கமாக்குவது இணைவைப்பு என்பதையும் திருமறை வசனங்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

9:100வது வசனத்தில் இடம்பெற்றுள்ள ‘‘இத்தபஅ” என்ற சொல்லிற்கு நவீன வழிகெட்ட ஸலபிகள் பொருள் செய்வதைப் போன்ற ‘‘ஸஹாபாக்களைப் பின்பற்றுதல்” எனப் பொருள் செய்தால் குர்ஆனிலே நேர் முரண்பாடு ஏற்படுகிறது.

7வது அத்தியாயம் 3வது வசனம் இறைச் செய்தியை மட்டுமே மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என்கிறது.

இதற்கு நேர் மாற்றமாக 9:100வது வசனம் ஸஹாபாக்களின் கருத்துக்களையும் மார்க்கமாகப் பின்பற்றலாம் என்ற கருத்தைத் தருகிறது.

7:3 வசனத்தின் படி இறைவன் அல்லாதவர்களின் கருத்துக்களை மார்க்கமாக்குதல் இணைவைப்பு.

9:100வது வசனத்தின் படி ஸஹாபாக்களின் கருத்தை மார்க்கமாக்கலாம். அது இணைவைப்பு அல்ல என்ற கருத்து வருகிறது.

ஸலஃபுகளின் செய்கின்ற பொருள் இணைவைப்பில் கொண்டு போய் தள்ளுகிறது என்பது மிகத் தெளிவாகிறது.

அப்படியென்றால் 9:100 வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபிஊ” என்ற சொல்லின் சரியான பொருளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபித்தோழர்களில் இரு பிரிவு

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் 9:100

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ‘‘இத்தபிஊ” என்ற சொல்லின் சரியான பொருள் ‘‘பின் தொடர்ந்தவர்கள்” என்பதே ஆகும். இது நபித்தோழர்களில் காலத்தால் முந்திய மற்றும் பிந்திய இரு சாராரைப் பற்றிப் பேசுகிறது.  இதற்கான சான்றுகளைக் காண்போம்.

திருமறைக் குர்ஆன் நபித்தோழர்களை ஆரம்ப கால நபித்தோழர்கள், பிற்கால நபித்தோழர்கள் என இரு பிரிவாகப் பிரிக்கின்றது.

முதலாவது சாரார்: இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்திலேயே இஸ்லாத்தை ஏற்று, ஹிஜ்ரத் செய்து, போர்களில் கலந்து கொண்ட முஹாஜிர் ஸஹாபாக்கள் மற்றும் இஸ்லாத்தை ஏற்றும், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, போர்களிலும் கலந்து கொண்ட அன்சாரி ஸஹாபாக்கள்.

இரண்டாவது சாரார்: மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்று, ஹிஜ்ரத் செய்து, போர்களிலும் கலந்து கொண்ட ஸஹாபாக்கள்.

இவ்வாறு ஸஹாபாக்களை இரு பிரிவாக திருமறைக் குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகிறது. பின்வரும் வசனங்கள் அதற்குச் சான்றாக உள்ளன.

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 57:10

மேற்கண்ட வசனத்தில் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்று போரிட்ட ஸஹாபாக்களை விட மக்கா வெற்றிக்கு முன் இஸ்லாத்தை ஏற்று போரிட்ட ஸஹாபாக்களை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.

இஸ்லாத்தை ஏற்பதும், போரிடுவதும் நல்ல காரியங்கள் தான் என்றாலும் சிரமமான கால கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்று, மார்க்கத்திற்காகப் போரிட்டவர்கள் சிரமம் குறைந்த பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுப் போரிட்டவர்களை விடச் சிறந்தவர்கள் என்பதைத்தான் மேற்கண்ட வசனம் எடுத்துரைக்கிறது.

இதிலிருந்து திருமறைக்குர்ஆன் ஸஹாபாக்களை ஆரம்ப கால ஸஹாபாக்கள், பிற்கால ஸஹாபாக்கள் என இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இதனை மற்றொரு வசனமும் விளக்குகிறது.

 1. தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட ஹிஜ்ரத் செய்த ஏழைகளுக்கும் (உரியது). அவர்கள் அல்லாஹ்விடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள்.
 2. அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.
 3. அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 59:8, 9, 10

59வது அத்தியாயத்தின் 8, 9, 10 ஆகிய மூன்று வசனங்களையும் கவனமாகப் படித்தால் ஸஹாபாக்களை இரு பிரிவாக திருக்குர்ஆன் வகைப்படுத்திக் கூறுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

59:8 வசனத்தில் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று, சொத்துக்களையெல்லாம் இழந்து, மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்த முஹாஜிர்களைப் பற்றி பேசுகிறது.

59:9வது வசனம் மதீனா என்ற சொந்த பூமியில் இருந்து இஸ்லாத்தை ஏற்று, ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அன்சாரி ஸஹாபாக்களைப் பற்றி பேசுகிறது.

59:10வது வசனம் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்களைப் பற்றிப் பேசுகிறது. ‘‘அவர்களுக்குப் பின் வந்தோர்” என்று அல்லாஹ் குறிப்பிட்டுக் கூறுவதிலிருந்து இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட வசனங்களிலிருந்தும் ஆரம்ப காலத்தவர்கள், பிற்காலத்தவர்கள் என்று ஸஹாபாக்களை திருக்குர்ஆன் இரு பிரிவாகப் பிரிக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பின்வரும் வசனமும் ஸஹாபாக்களை ஆரம்ப காலம், பிற்காலம் என இரண்டாகப் பிரிக்கிறது.

 1. நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
 2. இதன் பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, உங்களுடன் இணைந்து போரிட்டோரே உங்களைச் சேர்ந்தவர்கள். இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானவர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:74, 75

8:74வது வசனம் ஆரம்பகால முஹாஜிர் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களைப் பற்றிப் பேசுகிறது.

8:75வது வசனம் பிற்கால ஸஹாபாக்களைப் பற்றிப் பேசுகிறது.

8:74வது வசனத்தில் ஆரம்பகால ஸஹாபாக்கள் செய்த பிரதான நற்காரியங்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

ஈமான் கொண்டு, ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல் மற்றும் அடைக்கலம் தருதல் ஆகியவையே ஆரம்ப கால ஸஹாபாக்கள் செய்த பிரதான நற்காரியம்.

பிற்கால ஸஹாபாக்கள் செய்த நற்காரியங்களும் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, போரிடுதல் ஆகியவை தான் என்பதை 8:75வது வசனம் குறிப்பிடுகிறது.

அதாவது ஆரம்பகால ஸஹாபாக்களைத் தொடர்ந்து அடுத்து வந்த பிற்கால ஸஹாபாக்களும் அவர்களைப் போன்று ஈமான் கொண்டு, ஹிஜ்ரத் செய்து, போரிட்டார்கள் எனபதை நாம் மேற்கொண்ட வசனங்களிலிருந்து தெளிவாகப் புரிந்து கொண்டோம்.

இந்த இரண்டு சாராரைப் பற்றித்தான் 9:100 வசனமும் பேசுகிறது.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்குர்ஆன் 9:100

ஹிஜ்ரத் செய்த ஆரம்பகால ஸஹாபாக்கள், அவர்களுக்கு உதவி செய்த அன்சாரி ஸஹாபாக்கள், அது போன்று ஆரம்ப காலத்தவர்களைப் போன்றே ஈமான் கொள்ளுதல், ஹிஜ்ரத் செய்தல், போர் செய்தல் போன்ற நற்காரியங்களில் அவர்களைப் பின்தொடர்ந்த பிற்கால ஸஹாபாக்கள் இந்த இரண்டு சாராருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தை வாக்களித்துள்ளான் என்பதுதான் மேற்கண்ட வசனத்தின் விளக்கமாகும்.

மேற்கண்ட வசனம் ஸஹாபாக்களின் கருத்தை மார்க்கமாகப் பின்பற்றச் சொல்லவில்லை. மாறாக ஸஹாபாக்களின் இரு பிரிவினரின் தியாகத்தினால் அவர்களுக்கு இறைவன் வழங்கிய பாக்கியங்களைப் பற்றிப் பேசுகிறது.

ஆனால் நவீன வழிகெட்ட ஸலஃபிகளோ இவ்வசனத்திற்குத் தவறான பொருளைக் கொடுத்து மனிதக் கருத்தை மார்க்கமாக்கும் இணைவைப்புக் கொள்கைக்கு மக்களைக் கொண்டு செல்கின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பின்பற்றினார்களா?

இறைவசனங்களை நடைமுறைப்படுத்துவதில் முதல் நிலையில் உள்ளவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டாத எந்த ஒன்றும் இஸ்லாமாகக் கருதப்படாது.

நவீன வழிகெட்ட ஸலபிகளின் வாதப்படி 9:100வது வசனம் ஸஹாபாக்களின் கருத்துக்களை மார்க்கமாகப் பின்பற்றச் சொல்கிறது என்றால் நபி (ஸல்) அவர்கள் தான் அதனை முதலாவதாக நடைமுறைப் படுத்தியிருப்பார்கள்.

வஹியின் அனுமதி இல்லாமல் ஏதாவது ஒரு நபித்தோழரின் கருத்தை நபி (ஸல்) அவர்கள் மார்க்கமாக ஆக்கினார்கள்? என்று ஸலபிகள் ஆதாரம் காட்ட முடியுமா?

அப்படி ஒருவன் வாதிப்பான் என்று சொன்னால் அவன் இறைத்தூதர் மீது இட்டுக் கட்டிய பெரும்பாவி ஆவான்.

ஸலபிகள் கொடுக்கின்ற பொருள் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களின் கருத்தைத்தான் மார்க்கமாகப் பின்பற்றினார்கள் என்ற வழிகெட்ட கருத்து ஏற்படுகிறது.

இறைத்தூதரின் அந்தஸ்தைக் குறைவுபடுத்தி, நபித்தோழர்களை இறைத்தூதரை விடச் சிறப்பிக்கின்ற நிலை இதனால் ஏற்படுகிறது.

இதிலிருந்து இந்த வசனம் ஸஹாபாக்களைப் பின்பற்றச் சொல்கிறது என்ற வாதம் பெரும் அபத்தமான வாதம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தந்தையின் கருத்தை மார்க்கமாகப் பின்பற்றலாமா?

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.

திருக்குர்ஆன் 52:21

9:100 வசனத்தை வழிகெட்ட ஸலபிகள்  விளங்கியது போல் இவ்வசனத்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

பெற்றோரும் சரியான கொள்கையை நம்பிக்கை கொண்டு அது போல் அவர்களுக்கு அடுத்த வந்த பிள்ளைகளும் சரியான கொள்கையில் இருந்தால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் சரியான பொருள்.

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே மார்க்கமாகப் பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.

———————————————————————————————–

எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்

அமீன் பைஜி

அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம். உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக! உறுதியானது (மரணம்) வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!

அல்குர்ஆன் 15:97-99

இம்மூன்று வசனங்களிலும் இறைவன் ஏராளமான படிப்பினைகளை மனித குலத்துக்கு வழங்கியிருக்கின்றான்.

முதல் வசனத்தில் குரைஷி காஃபிர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சில சொற்களின் மூலமாக கஷ்டம் கொடுத்து மனதை நெருக்கடிக்குள்ளாக்கியதை அல்லாஹ் கூறுகின்றான்.

இரண்டாம் வசனத்தில் அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணமாக அல்லாஹ்வை நபியவர்கள் புகழ வேண்டுமென்றும் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் தொழுகையின் மூலம் ஸஜ்தா செய்யுமாறும் கூறி நபியவர்களின் மன நெருக்கடிக்கும் மன சஞ்சலத்திற்கும் ஆறுதலளிக்கும் விஷயத்தைக் கூறுகின்றான்.

மூன்றாவது வசனத்திலும் கஷ்டங்கள், சோதனைகள் எது வந்தாலும் மரணம் வருகின்ற வரைக்கும் தளர்ந்து, சோர்ந்து விடாமல் தூதுத்துவச் செய்தியை எடுத்துச் சொல்வதுடன், வணக்க வழிபாடுகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இறைவன் கூறுகின்றான்.

இம்மூன்று வசனங்களுக்குரிய விளக்கங்களையும், அவைகளில் நமக்கிருக்கும் படிப்பினைகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

15:97ஆம் வசனத்தில் குரைஷி இறை நிராகரிப்பாளர்கள், சில சொற்களால் நபியவர்களைக் குறித்து கூறியதால் தான் நபியவர்களின் உள்ளம் நெருக்கடிக்குள்ளானது என்று பொதுவாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் பேசிய வார்த்தை இன்னது தான் என்று குறிப்பிட்டு இந்த வசனத்தில் சொல்லவில்லை.

என்றாலும் குர்ஆனில் மற்ற பல இடங்களில் குரைஷிகள் நபியவர்களின் மனதை சஞ்சலப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் பேசிய பல வார்த்தைகளை குர்ஆன் நெடுகிலும் ஆங்காங்கே காணலாம்.

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டுமென கேட்பதன் மூலமும், அல்லது நபியுடன் ஒரு வானவர் வருவதை கேட்பதன் மூலமும் நபியவர்களின் மனதை காயப் படுத்தினார்கள் என்று அல்லாஹ் கீழ்க்கண்டவாறு விளக்கமாக கூறுவதைக் காணலாம்.

புதையலும், வானவரும் கேட்டு சிரமப்படுத்துதல்

இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?’’ என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

அல்குர்ஆன் 11:12

மேலும் 6:8வது வசனத்தில்,

இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?’’ என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 6:8

மேலும் இறைவனால் மட்டுமே செய்வதற்கு சக்தி பெற்ற பல காரியங்களை (மனிதரான) நபி (ஸல்) அவர்களிடம் செய்யக் கேட்டு ஈமான் கொள்வதற்கு அந்த விஷயங்களையே நிபந்தனையிட்டார்கள்.

வேதத்தை முழுமையாக இறக்க வேண்டும் என்று கேட்டு சிரமப்படுத்துதல்

இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித்தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

அல்குர்ஆன் 25:32

வேறொரு மனிதருக்கு அருளப்படக் கோருதல்

“(மக்கா மதீனா ஆகிய) இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?’’ எனக் கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 43:31

அத்தாட்சியைக் கேட்டு சிரமப்படுத்துதல்

இவருக்கு, இவரது இறைவனிடமிருந்து தக்க சான்று அருளப்பட வேண்டாமா?’’ என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். “தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். திருந்தியோருக்கு, தன் பக்கம் வழிகாட்டுகிறான்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 13:27

இவ்வாறு ஈமான் கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களிடம் கோரிக்கை வைத்தும், நபி (ஸல்) அவர்களின் மனதை நெருக்கடிக்கு உள்ளாக்கி சஞ்சலப்படுத்தியதாகவும் அல்லாஹ்  17:90-94 ஆகிய வசனங்களில் கூறுவதைப் பார்க்கின்றோம்.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’’ என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளைப் பெருக்கெடுத்து நீர் ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?’’ என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர்வழி வந்தபோது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது.

அல்குர்ஆன் 17:90-94

நாம் பெற வேண்டிய படிப்பினை

ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்களிடம் வீரியமாக எடுத்துச் சென்று மக்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, நம்மை எதிர்ப்பவர்கள் வாய் வார்த்தைகளால் எவ்வளவுதான் ஏளனமாகப் பேசினாலும் கேலி செய்தாலும் நபியவர்கள் எவ்வாறு தமது பிரச்சாரத்தை நிறுத்திவிடாமல் இவ்வளவு மனக்கஷ்டத்திற்குப் பிறகும் தூதுத்துவச் செய்தியைச் சிறிதும் குறைவின்றி மக்களுக்கு மத்தியில் தொடர்ந்து சொல்லி வந்தார்களோ அது போன்று நாமும் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு நபியவர்களின் உள்ளத்தைச் சொற்களால் எப்படி காஃபிர்கள் காயப்படுத்தி மனசஞ்சலத்திற்கு ஆளாக்கியதோடு நிறுத்திவிடாமல் நபியவர்களின் உடலுறுப்புகளுக்கும் பலவிதமான தொல்லைகளைக் கொடுத்து அவர்களைக் காயப்படுத்தினார்கள்.

கழுத்து நெறிக்கப்படுதல்

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள்  கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், “இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது என்று எனக்கு அறிவியுங்கள்’’ என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ பகுதியில் தொழுது கொண்டிருந்தபோது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து, தன் துணியை நபி (ஸல்) அவர்களுடைய கழுத்தில் வைத்து (முறுக்கி), அவர்கள் மூச்சுத் திணறும்படி (அவர்களின் கழுத்தைக்) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து நபி (ஸல்) அவர்களை விட்டு விலக்கினார்கள். மேலும், ‘‘என் இறைவன் அல்லாஹ் தான்’ என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்?’’(40:28) என்று  கேட்டார்கள்.

ஆதாரம்: புகாரி 3856

மலக்குடலை முதுகில் சுமத்துதல்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை (கஅபா அருகில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிர வணக்கம் (சஜ்தா) செய்து கொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷிகளில் சிலர் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஜத், ஒட்டகக் கருவைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது எறிந்தான். நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தவில்லை. உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகிலிருந்து எடுத்து விட்டு, அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷித் தலைவர்களான அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உமய்யா பின் கலஃப்  …அல்லது உபை பின் கலஃப்…  ஆகியோரை நீ கவனித்துக் கொள்’’ என்று பிரார்த்தித்தார்கள். (அதன்படியே) இவர்கள் அனைவரும் பத்ருப் போரில் கொல்லப்பட்டு ஒரு (பாழுங்) கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா பின் கலஃப் ..அல்லது உபையைத் …தவிர. அவனுடைய மூட்டுகள்  துண்டாகி (தனித் தனியாகி) விட்டிருந்த காரணத்தால் அவன் மட்டும் கிணற்றில் போடப்படவில்லை.

ஆதாரம்: புகாரி 3854

துன்பங்களில் மிகக் கடுமையானது

நபி (ஸல்) அவர்களின்  துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறைய துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆனிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’’ என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’’  என்று கூறினார்.

உடனே நான், “(வேண்டாம்) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’’ என்று சொன்னேன்.

ஆதாரம்: புகாரி 3231

இன்றைய காலகட்டத்தில் வீரியமான முறையிலும், அறிவுப்பூர்வமான முறையிலும், குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையிலும் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட அசத்தியத்தில் இருப்பவர்களை வெறுத்து விடாமலும், அவர்களுக்கு எதிராக இறைவனிடத்தில் கையேந்திவிடாமலும், பொறுமை காத்து, பின்னால் அவர்களின் சந்ததிகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது; எனவே அமைதி காத்து இருக்க வேண்டும் என்று இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது.

அடுத்த வசனமான 15:98,99 ஆகிய வசனங்களில் நபியவர்களின் மனநெருக்கடிக்குத் தீர்வு தரும் விஷயங்களாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, தூய்மைப்படுத்தி, தொழுகையின் மூலம் ஸஜ்தாவும் செய்து மரணம் வருகின்ற வரை வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் காட்டுகின்றான்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் கஷ்டத்தை ஏற்படுத்தினால் தொழுகையின் பக்கம் விரைவார்கள்.

ஆதாரம்: அபூதாவூத் 1319, அஹ்மத் 23299

இதில் நமக்குக் கிடைக்கும் படிப்பினை என்னவென்றால், நமக்கும் அழைப்புப் பணியை எடுத்துச் சொல்லும்போது கஷ்டங்கள், துன்பங்கள் மன நெருக்கடிகள் போன்ற பல்வேறு விதமான எதிர்ப்பலைகள் வந்து தாக்கும். அப்படிப்பட்ட எதிர்ப்புகளை சகித்துக்கொண்டு, பொறுமையோடு இருக்க வேண்டும் என்று இந்த வசனம் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

எனவே அழைப்புப் பணியின் மூலமாக ஏற்படும் சொல்லெணாத் துன்பங்கள், துயரங்கள் எது வந்தாலும், அவற்றுக்காகத் தளர்ந்து போய் விடாமல் நபி (ஸல்) அவர்கள் மன உறுதியோடு போராடியது போல நாமும் வீரியமாக, மன உறுதியோடு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

அது போன்று, உலகம் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளின் மூலம் ஏற்படும் மன சஞ்சலத்தின் போதும் துவண்டு விடாமல் மன உறுதியோடு இருக்க வேண்டும்.

அத்துடன் அந்த மன நெருக்கடிக்கு நிவாரணமாக இறைவனைப் புகழ்வதுடன் தஸ்பீஹ் செய்து, தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறையுதவி தேட வேண்டும் என்ற படிப்பினையை மேற்கண்ட வசனங்களில் இருந்து பாடமாகப் பெற்று வாழ்க்கையில் கடைப்பிடிப்போமாக!!!

———————————————————————————————–

பொய் நபியைப் பின்பற்றும் பரேலவிகள்

அபூராஜியா

ஒரு பரேலவிச மாத இதழில் “அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். நாம் கூட இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அறிவியல் அத்தாட்சிகளைப் பற்றித் தான் ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள் என்று பார்த்தால் பொய்யன் ரஷாத் கலீபா என்பவன், திருக்குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் அமைந்துள்ளது என்று புளுகியதை அப்படியே வாந்தியெடுத்துள்ளனர்.

பொய்யன் ரஷாத் கலீபாவை நபியென்று நம்பும் 19 என்ற பைத்தியக்காரக் கூட்டம் இந்த வாதத்தை வைத்த போது சிலர் அதைப் பார்த்து வாயைப் பிளந்தனர். அவனை நபியென்று ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட அவன் சொன்ன கணிதக் கட்டமைப்புக் கதையை உண்மையென்று நம்பினார்கள்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் தான் முதன் முதலில் இதை உடைத்தெறிந்தது. இது கட்டுக்கதை என கட்டுரைகள் மூலம் அம்பலப்படுத்தியது. மேலும் ரஷாத் கலீபா ஒரு பொய்யன், அவனை நபியென்று நம்புபவர்கள் வழிகேடர்கள் என அழுத்தமான வாதங்களின் மூலம் நிரூபித்தது.

ரஷாத் கலீபாவின் உளறல்களை உண்மை என்று நம்பி, குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிட்ட ‘19’ என்ற கூட்டத்துடன் விவாதம் நடத்தி, குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் இறைச்செய்திகளே! இதில் ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பவர் இறை மறுப்பாளர் தான் என சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தது.

அத்துடன் குர்ஆன் 19 என்ற எண்ணில் அமைக்கப்பட்டுள்ளது என்ற ரஷாத் கலீபாவின் வாதம் பைத்தியக்காரனின் உளறல் தான் என்பதையும், இப்படி உளறியவன் ஒருக்காலும் நபியாக இருக்க முடியாது என்பதையும் அந்த விவாதத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நிலைநிறுத்தியது.

இப்படிப் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரைகள் மூலமும், விவாதங்கள் மூலமும் பொய்யென்று அம்பலப்படுத்திய ஒரு விஷயத்தை கப்ரு வணங்கிகள் தங்கள் மாத இதழில் தங்களது சொந்தச் சரக்கைப் போன்று பிரசுரித்துள்ளனர். அதற்கு விளக்கமளிக்கவே இந்தக் கட்டுரை.

இப்போது பரேலவிகளின் மாத இதழில் ‘அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகள்’ என்ற பகுதியில் ‘அல்குர்ஆனின் அந்தரங்க அரண்கள்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்களையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

குர்ஆனில்,

மாதம் (ஷஹர்) என்ற சொல் 12 தடவை

யவ்ம் (நாள்) எனும் சொல் 365 தடவை

அய்யாம் நாட்கள் என்பது 30 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனின் வார்த்தைகளின் எண்ணிக்கைப் பயன்பாட்டைப் பாருங்கள் என்று மேற்படி பரேலவிச இதழில் அடித்து விட்டுள்ளனர்.

அதாவது, வருடத்துக்கு 365 நாள் உள்ளதால் ‘நாள்’ என்பது 365 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

வருடத்திற்கு 12 மாதங்கள் உள்ளதால் ‘மாதம்’ எனும் சொல் 12 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாதத்துக்கு முப்பது நாட்கள் என்பதால் 30 தடவை ‘நாட்கள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்குர்ஆன் கணிதக் கட்டமைப்பில் உள்ளது என்று கூறியிருக்கின்றார்கள். ஆனால் உண்மை நிலை என்ன?

இந்தக் கட்டுரையாளர் திருக்குர்ஆனைப் படித்தே பார்க்கவில்லை என்பதும், நுஸ்கி, ஆலிம், ஜுமானி, மஹ்ழரி என்றெல்லாம் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பரேலவிச இதழின் ஆசிரியர்களுக்கும் குர்ஆனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதும்  இந்த ஆய்வின் (?) மூலம் தெரிய வருகின்றது.

பாவம்! இவர்கள் தான் என்ன செய்வார்கள்? குர்ஆனை ஆய்வு செய்வதற்கெல்லாம் பரேலவிகளுக்கு எங்கே நேரம் இருக்கிறது? இவர்கள் குர்ஆன் ஓதுவது கத்தம் பாத்திஹாவுக்கும், தராவீஹ் தொழுகைக்கும் தான். அதிலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் குர்ஆன் ஓதி முடித்து கைமடக்கு வாங்கிக் கொண்டு பறந்து விடுகின்றார்கள். அதனால் தான் பொய் நபி ரஷாத் கலீபா என்ற வழிகேடனின் உளறல்களை அப்படியே பதிந்துள்ளார்கள்.

உண்மையில் குர்ஆனில் மாதம் என்ற சொல் 12 தடவை தான் வருகின்றதா?

மாதம் என்பதைக் குறிக்கும் சொற்கள் மொத்தம் 21 தடவை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

شهر

ஷஹ்ர் (மாதம்) என்ற சொல் தனியாக 4 தடவை

(2:185, 34:12, 34:12, 97:3)

الشهر

அல் என்ற அலங்காரச் சொல்லுடன் சேர்த்து அஷ்ஷஹ்ர் (அந்த மாதம்) 6  தடவை

(2:185, 2:194, 2:194, 2:217, 5:2, 5:97)

شهرين

ஷஹ்ரைன் (இரு மாதங்கள்) என்பது 2 தடவை

(4:92, 58:4)

شهرا

ஷஹ்ரன் (ஒரு மாதம்) என்பது 2 தடவை

(9:36, 46,15)

اشهر

அஷ்ஹுர் (மாதங்கள்) என்பது 5 தடவை

(2:197, 2:226, 2:234, 9:2, 65:4)

الاشهر

அல் அஷ்ஹுர் (அந்த மாதங்கள்) 1 தடவை

(9:5)

الشهور

அஷ் ஷுஹூர் (அந்த மாதங்கள்)  1 தடவை

(9:36)

ஆக மொத்தம் 21 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இவர்களின் காலண்டர் படி வருடத்துக்கு 21 மாதங்கள் ஆகும்.

يوم

யவ்ம் – நாள் என்ற சொல் இந்தப் பரேலவிகள் கூறுவது போல 365 தடவை பயன்படுத்தப்படவில்லை. மாறாக 378 தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே வருடத்துக்கு 378 நாட்கள் தான் என்று இந்தக் கூட்டம் தனிக் காலண்டர் வெளியிடலாம்.

أيام

அய்யாம் – நாட்கள் என்பது 30 தடவை இடம் பெறவில்லை. மாறாக 27 தடவை தான் இடம் பெற்றுள்ளது. இனிமேல் மாதத்துக்கு 27 நாட்கள் என்று காலண்டர் தயாரிக்கப்படலாம்.

இது மட்டுமில்லாமல், ‘ஷைத்தான் என்பது 68 தடவையும் மலக்கு என்பது 68 தடவையும் சமமாக இடம் பெற்றுள்ளது’ என்பது அடுத்த புளுகு.

ஆனால் ஷைத்தான் என்பது 88 தடவையும், மலக் என்பது 68 தடவையும் தான் இடம் பெற்றுள்ளது. சம எண்ணிக்கையில் இடம் பெறவில்லை. இதுவும் பச்சைப் புளுகே என்பதில் சந்தேகம் இல்லை.

சில சொற்கள் சம அளவில் இடம் பெற்றிருந்தால் கூட அதை வைத்து, கணிதக் கட்டமைப்பில் குர்ஆன் அமைக்கப்பட்டதாகக் கூற முடியாது. குர்ஆனில் உள்ள அனைத்து சொற்களும் இப்படி அமைந்திருந்தால் தான் கணிதக் கட்டமைப்பில் உள்ளது என்பது நிரூபணமாகும்.

யாஸீன் சூராவில் ‘அல்லாஹ்’ மூன்று முறையும், ‘ரஹ்மான்’ நான்கு முறையும் வந்துள்ளது. அதேபோன்று முல்க் சூராவிலும் அதே அளவில் அவ்விரு சொற்களும் இடம்பெற்றுள்ளன.

முஜாதலா அத்தியாயத்தில் ‘அல்லாஹ்’ 40 தடவை இடம்பெற்றுள்ளது. ஆனால் கமர், ரஹ்மான், வாகிஆ ஆகிய சூராக்களில் அல்லாஹ் ஒரு முறை கூட இடம்பெறவில்லை.

முஹம்மத் என்ற அத்தியாயத்தில் இரண்டு வசனங்களைத் தவிர எல்லா வசனமும் மீமில் முடிகின்றது.

இதையெல்லாம் எடுத்துக் காட்டி திருக்குர்ஆன் அற்புதம் என்று வாதிட்டுள்ளனர். இந்த வாதத்தில் ஏதேனும் பொருள் உள்ளதா என்று பாருங்கள். யாஸீன் சூராவிலும் முல்க் சூராவிலும் அல்லாஹ் என்ற சொல் மூன்று முறை வந்துள்ளதால் என்ன அற்புதம் நிகழ்ந்து விட்டது?

முஜாதலா சூராவில் 40 தடவை அல்லாஹ் என்ற சொல் உள்ளதாலோ, கமர், ரஹ்மான், வாகிஆ சூராவில் அல்லாஹ் என்ற வார்த்தை இல்லாததாலோ குர்ஆனுக்கு என்ன சிறப்பு கூடிவிட்டது என்று இவர்கள் கூற வருகின்றார்கள்?

முஹம்மத் என்ற அத்தியாயத்தில் இரண்டு வசனத்தைத் தவிர எல்லா வசனமும் மீமில் முடிகின்றது என்பதை எந்தவிதமான கணிதக் கட்டமைப்பு என்று நிறுவப் போகின்றார்களோ தெரியவில்லை. மீமில் முடியாத அந்த இரண்டு வசனங்களையும் நீக்கி விட வேண்டும் என்று சொல்லப் போகிறார்களா? இதை வெளியிட்ட பரேலவிகளுக்குத் தான் வெளிச்சம்.

இது தவிர, குர்ஆன் 19 என்ற எண்ணில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற பொய்யன் ரஷாத் கலீபாவின் உளறலையும் இந்தக் கட்டுரையில் சிலாகித்து எழுதியுள்ளார்கள்.

குர்ஆன் மட்டும் போதும் என்ற குருட்டுச் சிந்தனையைப் பரப்பிய ஒரு பொய்யனின் உளறல்களை இவர்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால் இந்தக் கப்ரு வணங்கிகள் எத்தகைய மோசமான கொள்கையில் இருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது. நபியவர்களை நேசிப்பதாக இவர்கள் கூறுவது எல்லாமே வெளி வேஷம் தான் என்பது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமில் இடம்பெற்றுள்ள இஸ்ம் என்ற சொல் 19 தடவை, அல்லாஹ் என்ற சொல் 19 ஙீ 142 = 2698 தடவை, ரஹ்மான் – 19 ஙீ 3 = 57 தடவை, ரஹீம் – 19 ஙீ 6 = 114 தடவை  என்றெல்லாம் ரஷாத் கலீபா உளறியதை கப்ரு வணங்கிகள் அப்படியே காப்பியடித்து எழுதியுள்ளார்கள்.

113 அத்தியாயங்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று துவங்குகின்றன. 27ஆம் அத்தியாயம் 30வது வசனத்தின் இடையே ஒரு தடவை பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற சொற்றொடர் உள்ளது.

அல்லாஹ், ரஹீம் ஆகிய சொற்கள் எத்தனை இடங்களில் உள்ளன என்பதைக் கணக்கிடும்போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஏனெனில் இதில் அல்லாஹ் என்பதும் ரஹீம் என்பதும் இடம் பெற்றுள்ளது. ஆனால் இவர்கள் 113 அத்தியாயங்களில் இடம்பெற்ற 113 பிஸ்மில்லாஹ்வைக் கணக்கில் சேர்க்காமல் விட்டுள்ளார்கள்.

113 இடங்களில் உள்ள 113 அல்லாஹ், 113 ரஹ்மான், 113 ரஹீம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை.

அல்லாஹ் என்ற சொல் குர்ஆனில் உள்ளதாக இவர்கள் காட்டும் கணக்குப்படி 2698 ஆகிறது. இது 19ஆல் வகுபடும். ஆனால் இன்னும் சேர்க்க வேண்டிய பிஸ்மில்லாஹ்வில் உள்ள 113 அல்லாஹ் என்ற சொல்லையும் சேர்த்தால் 2698+113=2811 ஆகும். இது 19ஆல் வகுபடாது.

‘ரஹீம்’ என்பது இவர்களது கணக்குப் படி 114. இத்துடன் 113 ‘பிஸ்மில்லாஹ்’விலும் உள்ள 113 ‘ரஹீம்’ என்ற சொல்லைச் சேர்த்தால் 114+113=227 ஆகும். இந்த எண் 19ஆல் மீதமின்றி வகுபடாது. எனவே தான் இந்தக் கணக்கில் மட்டும் ‘பிஸ்மில்லாஹ்’வில் உள்ள ‘அல்லாஹ்’, ‘ரஹீம்’ என்பதை இவர்கள் சேர்க்கவில்லை.

‘ரஹ்மான்’ என்ற சொல் 57 தடவை இடம் பெற்றுள்ளது. 113 இடங்களில் இடம் பெற்றுள்ள பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதில் 113 தடவை ரஹ்மான் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இதையும் சேர்த்தால் 57+113=170 ஆகும். இது 19ஆல் வகுபடாது.

இன்னும் சொல்வதானால் பிரச்சனையே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் பற்றித்தான். அதில் உள்ள வார்த்தைகளைக் கழித்து விட்டு கணக்குக் காட்டுவது உளறல் தவிர வேறில்லை.

பரேலவிகள் எந்தப் பொய் நபியை தங்களுக்கு ஆதாரமாக எடுத்துள்ளார்களோ அந்தப் பொய்யன் ரஷாத் கலீபா பற்றியும், 19 என்ற பெயரில் அவன் செய்துள்ள கிறுக்குத்தனங்கள் பற்றியும் நமது திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தைப் பார்வையிட விரும்புவோர் ஆன்லைன் பிஜே இணைய தளத்தில் கீழ்க்கண்ட சுட்டியில் பார்க்கவும்.

https://onlinepj.com/354-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-19-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4/1586

திருக்குர்ஆன் அதன் அசைக்க முடியாத கொள்கைகளாலும், அற்புதமான தீர்வுகளாலும், உடைக்க முடியாத முன்னறிவிப்புகளாலும் தான் சிறந்து விளங்குகிறது. இதுபோன்ற அர்த்தமற்ற உளறல்களால் அல்ல என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

———————————————————————————————–

மவ்லிதும் மீலாதும்

எம்.ஐ.சுலைமான்

மவ்வலிதும், மீலாதும் என்ற தலைப்பில் மவ்லித் ஓதுவதற்கும், மீலாது விழாக் கொண்டாடுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது; அதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன என்று சில ஆதாரங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற ஊடகங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆதாரங்கள் சரியானவையா? அவர்கள் கூறும் கருத்துக்குச் சான்றாக இருக்கிறதா? என்பதைப் பார்த்து வருகிறோம்.

ஆறாவது ஆதாரம்:

மஸ்ஜிதுன் நபவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் ஸஹாபா பெருமக்களும் குழுமியிருந்த திருச்சபையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஹ்ப் பின் சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி கவிஞர் பாடிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மகிழ்ச்சியால் தனது மேனியில் இருந்த போர்வையை எடுத்து அந்த ஸஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் 100 ஓட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்கள்.

ஹாகிம் – 3-578, ரத்துள் முஹ்தார் – 1-47, அகீததுஸ் சுன்னா 318

இதை மவ்லிதுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது குறித்து ஆராய்வோம்.

இந்தச் செய்தி ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பாகம்: 3, பக்கம் :670)

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (3 / 670)

 6477 – أخبرني أبو القاسم عبد الرحمن بن الحسين بن أحمد بن محمد بن عبيد بن عبد الملك الأسدي بهمدان ثنا إبراهيم بن المنذر الحزامي حدثني الحجاج بن ذي الرقيبة بن عبد الرحمن بن كعب بن زهير بن أبي سلمى المزني عن أبيه عن جده قال : خرج كعب و بجير ابنا زهير حتى أتيا أبرق العزاف فقال : بجير لكعب : اثبت في عجل هذا المكان حتى أتي هذا الرجل يعني رسول الله صلى الله عليه و سلم فاسمع ما يقول فثبت كعب و خرج بجير فجاء رسول الله صلى الله عليه و سلم فعرض عليه الإسلام فأسلم فبلغ ذلك كعبا فقال :

 ( ألا أبلغا عني بجيرا رسالة على أي شيء ويح غيرك دلكا )

 ( على خلق لم تلف أما و لا أبا عليه و لم تدرك عليه أخا لكا )

 ( سقاك أبو بكر بكأس روية و انهلك المأمون منها و علكا ) . . .

இந்த செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர் பலர் யாரென அறியப்படாதவர்கள். இதில் இடம்பெறும் இப்ராஹீம் பின் அல்முன்திர் என்பவரைத் தவிர வேறு யாரும் ஹதீஸ் துறையில் அறியப்படாதவர்கள்.

அப்துர்ரஹ்மான், துர்ரகீபா, ஹஜ்ஜாஜ் ஆகியோரின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப் படவில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தச் செய்தி தொடர்பாக ஹாபிழ் இராக்கீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

تحفة الأحوذي – (1 / 351)

وَقَدْ مَدَحَ فِيهِ كَعْبُ بْنُ زُهَيْرٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : بَانَتْ سُعَادُ فَقَلْبِي الْيَوْمَ مَتْبُولُ . إِلَى قَوْلِهِ فِي صِفَةِ رِيقِهَا : كَأَنَّهُ مَنْهَلٌ بِالرَّاحِ مَعْلُولُ . قَالَ الْعِرَاقِيُّ : وَهَذِهِ قَصِيدَةٌ قَدْ رَوَيْنَاهَا مِنْ طُرُقٍ لَا يَصِحُّ مِنْهَا شَيْءٌ ، وَذَكَرَهَا اِبْنُ إِسْحَاقَ بِسَنَدٍ مُنْقَطِعٍ وَعَلَى تَقْدِيرِ ثُبُوتِ هَذِهِ الْقَصِيدَةِ عَنْ كَعْبٍ وَإِنْشَادِهِ بَيْنَ يَدَيْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَيْسَ فِيهَا مَدْحُ الْخَمْرِ وَإِنَّمَا فِيهِ مَدْحُ رِيقِهَا وَتَشْبِيهِهِ بِالرَّاحِ اِنْتَهَى .

இந்தக் கவிதைகளைப் பல வழிகளில் நாம் பதிவு செய்துள்ளோம். ஆனால் அவற்றில் எதுவுமே ஆதாரப்பூர்வமானவை இல்லை.

(நூல்: துஃபத்துல் அஹ்வதீ, பாகம்: 1, பக்கம்: 351)

இப்னு கஸீர் அவர்களும் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.

البداية والنهاية – (4 / 429)

قلت: وهذا من الامور المشهورة جدا ولكن لم أر ذلك في شئ من هذه الكتب المشهورة باسناد أرتضيه فالله أعلم.

இந்தச் செய்தி மிகவும் பிரபலமானது. ஆனால் பிரபலமான எந்த நூலிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ள அறிவிப்பாளர் வரிசையுடன் நான் பார்க்கவில்லை.

(நூல்: அல்பிதாயா வந்நிஹாயா,பாகம்:4, பக்கம்: 429)

மேலும் தன்னை நபிகளார் எப்படி ஒரு அழகிய பெண்ணுடன் ஒப்பிட்டுப் பாடுவதை அனுமதிப்பார்கள்? என்ற கேள்வியும் அதில் உள்ளடங்கியுள்ளது.

ஏழாவது ஆதாரம்:

கஃபு இப்னு சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்ந்து படித்தார்கள்.

ஹழ்ரத் இப்னு ஜதஆன் ரலியல்லாஹு அன்ஹு

ஹாகிம் 6555

மேற்கண்ட செய்தியையும் மவ்லிதுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள்.

இவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான்

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص – (3 / 673)

6478 – حدثني القاضي ثنا إبراهيم بن الحسين ثنا إبراهيم بن المنذر حدثني معن بن عيسى حدثني محمد بن عبد الرحمن الأوقص عن ابن جدعان قال : أنشد كعب بن زهير بن أبي سلمى رسول الله صلى الله عليه و سلم في المسجد :  ( بانت سعاد فقلبي اليوم متبول متيم عندها لم يفد مكبول )

நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக பள்ளிவாசலில் கஅப் பின் ஸுஹைர் (ரலி) கவிதை பாடினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு ஜுத்ஆன், நூல்: ஹாகிம், பாகம்: 3, பக்கம்: 673

இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவராவார்.

الضعفاء للعقيلي – (3 / 230)

حدثنا محمد ، قال : حَدَّثَنَا عباس ، قال : سَمِعْتُ يحيى يقول علي بن زيد أحب إلي من عقيل وعاصم بن عَبد الله ، حَدَّثَنَا محمد ، قال : حَدَّثَنا معاوية بن صالح ، قال : سَمِعْتُ يحيى يقول علِي بن زيد بن جدعان بصري ضعيف.

அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230

الضعفاء للعقيلي – (3 / 230(

 حَدَّثَنا أبو معمر قال كان بن عيينة يضعف بن عقيل وعاصم بن عبيد الله وعلى بن زيد بن جدعان ، حَدَّثَنَا هيثم بن خلف ، قال : حَدَّثَنا أبو بكر الأعين ، قال : حَدَّثَنا سليمان بن حرب ، قال : حَدَّثَنا حماد بن زيد ، قال : حَدَّثَنا علي بن زيد وكان يقلب الأحاديث.

அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் நபிமொழிகளை மாற்றி அறிவிப்பவர்.

நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230

حَدَّثنا عَبد الله بن أحمد ، قال : حَدَّثَني عبيد الله بن معاذ ، قال : حَدَّثَني أبي عن شعبة ، عن علي بن زيد قبل أن يختلط حدثني علِي بن عبد الصمد ، قال : حَدَّثَنا أبومعمر قال قال سفيان كتبت عن علي بن زيد كتابا كبيرا فتركته زهدا فيه.

அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவரிடமிருந்து அதிகமான செய்திகளை எழுதினேன். பின் (அவரின் தவறுகள் தெரிந்ததால்) பேணுதலுக்காக விட்டுவிட்டேன் என்று சுஃப்யான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: அல்லுஅஃபா- உகைலீ, பாகம்: 3, பக்கம்: 230

மேலும் அலீ பின் ஸைத் பின்ஜுத்ஆன் என்பவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர் இல்லை. இவர் தாபியீ (நபித்தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) இவர் நபிகளார் காலத்தில் வாழ்ந்த செய்தியை நேரடியாகச் சொல்ல முடியாது.  எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

மேலும் தற்போது ஓதும் மவ்லிதுக்கும் இந்தக் கவிதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எட்டாவது ஆதாரம் :

அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாகக் கவிதையிலும், ஞானம் (ஹிக்மத்) உண்டு.

ஹழ்ரத் உபை பின் கஅப் (ரலியல்லாஹு அன்ஹு)

ஸஹிஹுல்  புகாரி 6145,  அபூதாவூத் 5010,  இப்னு மாஜா 3755,  திர்மிதி 2844

இதையும் மவ்லிதுக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 42)

6145- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ مَرْوَانَ بْنَ الْحَكَمِ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الأَسْوَدِ بْنِ عَبْدِ يَغُوثَ أَخْبَرَهُ أَنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ مِنَ الشِّعْرِ حِكْمَةً

கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபைப் பின் கஅப் (ரலி)

நூல்: புகாரி (6145)

இந்தச் செய்தியில் மவ்லித் ஓதலாம், மீலாத் விழா கொண்டாடலாம் என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ இல்லை. நல்ல செய்திகள் கவிதையிலும் உள்ளது. நல்ல செய்திகளைக் கவிதை நடையிலும் சொல்லலாம் என்ற கருத்துதான் உள்ளது.

இன்று ஓதப்படும் ஸுப்ஹான மவ்லித், முஹைதீன் மவ்லித் போன்றவற்றை ஓதலாம் என்று இதில் கூறப்பட்டுள்ளதா?

ஒன்பதாவது ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

திடமாக எனக்குப் பல பெயர்கள் உள்ளன, நான் “முஹம்மத்” (புகழபடுபவன்), நான் “அஹ்மத்” (அல்லாஹ்வினால் அதிகம் புகழப்பட்டவன்), நான் “மாஹி” (குப்ரை அழிப்பவன்). நான் “ஹாஷிர்” (எனக்குப் பின்னால் என் வழி தொடரும் சமுதாயம்  கொண்டிருப்பவன்), நான் “ஆகிப்” (எனக்குப் பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).

ஹழ்ரத் ஜுபைர் பின் முத்இம் ரழியல்லாஹு அன்ஹு

ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹுல் முஸ்லிம் – 2849, திர்மிதி, அஹ்மத்

இவர்கள் குறிப்பிடும் செய்தி இதுதான் :

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (4 / 225)

3532- حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، قَالَ : حَدَّثَنِي مَعْنٌ ، عَنْ مَالِكٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ.

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது -புகழப்பட்டவர்- ஆவேன். நான் அஹ்மத் -இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ- அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ஹாஷிர்- ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத் தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

நூல்: புகாரி (3532)

நபி (ஸல்) அவர்கள் முஹம்மத் (புகழப்பட்டவர்) என்பதால் மவ்லித் ஓதலாம் என்று சொல்ல முடியுமா? அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் நபிகளாரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளான். அல்லாஹ் எந்த எல்லையில் நிறுத்தி நபிகள் நாயகம் அவர்களைப் புகழ்கிறானோ அதைக் கடந்து புகழ்வது சரியாகாது.

நபி (ஸல்) அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்ல முடியுமா? இறைவனின் சக்தி அவர்களுக்கு உள்ளது என்று சொல்ல முடியுமா?

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்’’ என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:90-93)

நபி (ஸல்) அவர்கள், கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) ‘அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள் என மிம்பரின் மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி  (3445)

நபிகளாரைப் புகழ்வதாக இருந்தால் வரம்புக்கு உட்பட்டே புகழ வேண்டும் என்பதே திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் உறுதியான அறிவுரை. ஆனால் மவ்லித்களில் இந்த வழிகாட்டுதலை மீறி வரம்பு கடந்த புகழுரை தானே இடம் பெற்றுள்ளது.

பத்தாவது ஆதாரம்:

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்)  கூறியுள்ளார்கள்:

“நிச்சயமாக நான் அல்லாஹுதஆலாவின் பால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன்”

மிஷ்காத் – 5800, தாரமி – 15, பைஹகி ஸுஃபுல் ஈமான் – 1446

سنن الدارمي – (1 / 21)

 15 – أخبرنا إسماعيل بن خليل ثنا علي بن مسهر ثنا الأعمش عن أبي صالح قال : كان النبي صلى الله عليه و سلم يناديهم يا أيها الناس إنما انا رحمة مهداة

இந்தச் செய்தியை அபூஸாலிஹ் என்பவர் அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் கூட கிடையாது. என்றாலும் இந்தக் கருத்து திருக்குர்ஆனில் இடம்பெற்றதுதான்.

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன் 21:107)

நபி (ஸல்) அவர்கள் இந்த உலகத்தில் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள் என்பது மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாக அமைந்து விடுமா? நபிகளாரைப் புகழ்ந்து வரும் திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் இவற்றை எடுத்துப் போட்டு மவ்லிதுடன், மீலாதுடன் முடிச்சுப் போடுகிறார்கள். கொஞ்சமாவது இதில் தொடர்பு உள்ளதா? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————–

இறைவா! நல்லோருடன் சேர்ப்பாயாக!

எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்

பிரார்த்தனை என்பது மிக முக்கியமான வணக்கம். இது குறித்து நிறைய போதனைகள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக, நம்பிக்கை கொண்ட மக்கள் தங்களது பிரார்த்தனையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் திருமறையில் பல இடங்களில் தெளிவுபடுத்தி இருக்கிறான். அவற்றுள் ஒரு வசனத்தைப் பாருங்கள்.

உங்கள் இறைவனை நம்புங்கள்!’ என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை ‘‘எங்கள் இறைவா! நாங்கள் செவியுற்றோம். உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!’’ (என்றும் முஃமின்கள் கூறுவார்கள்.)

திருக்குர்ஆன் 3:191,192

தினமும் பல்வேறு தேவைகள், தீர்வுகளைக் கேட்டு, படைத்தவனிடம் நாம் மன்றாடுகிறோம். அவ்வாறு கையேந்தும் போதெல்லாம், ‘இறைவா! நல்லோருடன் என்னைச் சேர்ப்பாயாக!’ என்றும் அதிகம் அதிகமாகக் கேட்க வேண்டும்.

நல்லோர் என்றால் நம்முடைய பார்வையில் நல்லவர்கள் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. ஈருலகிலும் வெற்றி பெறும் வகையில் வாழ்பவர்களைக் குறிக்கும். அதாவது, அவர்கள் படைத்தவனைச் சரியாக நம்பி, அவன் சொன்னபடி முறையாக வாழ்பவர்கள்.

இத்தகைய மக்களுடன் இருக்கும் வாய்ப்பை ஈருலகிலும் வழங்குமாறு வல்ல ரஹ்மானிடம் நாம் முறையிட வேண்டும். இவ்வாறு கேட்பதை வழமையாக்கிக் கொள்வது நல்லது. இன்னும் சொல்வதாயின் பல நபிமார்கள் இந்த துஆவைச் செய்திருக்கிறார்கள்.

தனி மனிதராக இருந்து ஒரு பெரும் சமுதாயம் செய்வது போன்று வீரியமாகவும் விவேகமாகவும் ஏகத்துவத்தை எடுத்துரைத்த இப்ராஹீம் நபி அவர்கள் இந்த துஆவைக் கோரியிருக்கிறார்கள்.

என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக! பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக. இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!

திருக்குர்ஆன் 26:83-85

ஒவ்வொரு நாளும் படிப்பு, வியாபாரம், தொழில், வேலை என்று பல காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்கிறோம். பல வகையான மனிதர்களைச் சந்திக்கிறோம்.

இவ்வேளையில் நம்முடன் இருப்பவர்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டியவாறு வாழ்வதோடு, நம்மையும் அவ்வாறு வாழத் தூண்டுபவர்களாக, உதவி செய்பவர்களாக இருப்பது மிகப்பெரும் பாக்கியம் ஆகும்.

இவ்வகையில் பார்க்கும் போது, இந்த துஆ எந்தளவு முக்கியம் என்பதை விளங்க முடிகிறது. ஆகவே தான் பெரும் அந்தஸ்திலும், அதிகாரத்திலும் இருந்த நபிமார்களும் கூட அல்லாஹ்விடம் இந்த வேண்டுதலை முன்வைத்து இருக்கிறார்கள்.

என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிலவற்றை) வழங்கியிருக்கிறாய். (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!’’ (என்று யூசுப் நபி கூறினார்.)

திருக்குர்ஆன் 12:101

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர். அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’’ என்று ஓர் எறும்பு கூறியது.

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’’ என்றார்.

திருக்குர்ஆன் 27:17-19

சமூகத்தின் எந்தப் படித்தரத்தில் நாம் இருந்தாலும் இந்த துஆவைக் கேட்க மறந்துவிடக் கூடாது. ‘நல்லவர்களை என்னுடன் சேர்த்து வை’

என்பதைக் காட்டிலும் ‘நல்லோருடன் என்னைச் சேர்ப்பாயாக’ என்று பணிவோடும் அடக்கத்தோடும் கேட்க வேண்டும். இந்தப் பாடம் நபிகளாரின் வாழ்விலும் நமக்கு இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கிய மானவர்களாக இருந்தபோது, ‘‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படாத வரையில்’ அல்லது ‘(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்’ எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை’’ என்று சொல்லி வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கி விட்டபோது அவர்கள் மூர்ச்சை அடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், “இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், “இனி நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்க மாட்டார்கள்’’ என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற) செய்தி இதுதான் என்று (இப்போது) நான் அறிந்து கொண்டேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4437

சமூக சூழலைக் கவனித்தால் இந்தப் பிரார்த்தனையின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம். ‘பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும்’ என்பார்கள். யாருடன் இருக்கிறோமோ அவர்களைப் பொறுத்து நமது நடவடிக்கைகள் மாறும். உலக விஷயங்களுக்கு மட்டுமல்ல! மார்க்கக் காரியங்களுக்கும் இது பொருந்தும்.

நல்ல சிந்தனைகளும் செயல்களும் கொண்ட மக்களோடு இருக்கும் போது பல நன்மைகள் கிடைக்கும். அவர்களைப் போன்று சிறிதளவேனும் நம்மை மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம். அவர்களிடம் இருக்கும் நற்குணங்களும், பண்புகளும் நம்மிடம் தோன்றக் கூடும்.

அதேசமயம், கெட்ட மக்களோடு இருக்கும் போது அறிந்தோ அறியாமலோ நாமும் வழிகெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை அழகான முறையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கி இருக்கிறார்கள்.

நல்லவருடன் இருப்பதற்கும் தீயவருடன் இருப்பதற்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்: புகாரி 2101

இறையச்சம் கொண்ட மக்களோடு இருப்பதன் மூலம் பாவங்களை விட்டுப் பலரும் மீண்டு வருவதைப் பார்க்கிறோம். அதே போன்று சேர்க்கை சரியில்லாத காரணத்தினால், செய்யக்கூடாத காரியங்களிலே சிக்கிக் கொள்வோர் ஏராளம்.

இன்னும் ஏன்? இணைவைப்பு, பித்அத், மூடநம்பிக்கை சார்ந்த செயல்களில் பலர் விழுவதற்கு உடனிருப்பவர்கள் காரணமாக இருப்பதைப் பார்க்கிறோம்.

இப்படி, நம்முடன் இருப்பவர்கள் நமது இம்மை வாழ்வை மட்டுமல்ல; மறுமை வாழ்வையும் தீர்மானிக்கும் நிலையில் இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான சான்றுகளைப் பார்ப்போம்.

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் “உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’’ என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’’ எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை’’ (எனவும் கூறுவார்கள்).

திருக்குர்ஆன் 74:40-47

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

….(மறுமையில் முஃமின்கள் நரகத்தின் மீதிருக்கும் பாலத்தைக் கடந்தே சொர்க்கம் செல்வார்கள்.) இறை நம்பிக்கையாளர் அந்தப் பாலத்தைக் கண்சிமிட்டலைப் போன்றும், மின்னலைப் போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும் (விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமுமின்றி தப்பி விடுவோரும் உண்டு. காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக இழுத்துச் செல்லப்படுவார்.

பின்னர், தாம் தப்பித்து விட்டோம் என்பதை நம்பிக்கை கொண்ட மக்கள் காணும்போது தம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்த (இறை)வனிடம் அன்று அவர்கள் கடுமையாக மன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகிவிட்ட உரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்க மாட்டீர்கள்.

அப்போது அவர்கள், “எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்;  எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; எங்களுடன் (மற்ற) நல்லறங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள் (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)’’ என்று வேண்டுவார்கள். அப்போது அல்லாஹ், “நீங்கள் சென்று, எவருடைய உள்ளத்தில் ஒரு பொற்காசு (தீனார்) அளவுக்கு இறைநம்பிக்கை இருக்கக் காண்கின்றீர்களோ அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’’ என்று கூறுவான்.

அவ்வாறே அவர்களும் (நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதென நரகத்திற்கு அல்லாஹ் தடை விதித்துவிடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்) சிலர் தமது பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு, பாதி கால்கள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனே அவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள்.

பிறகு மீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். “எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்கு இறை நம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்’’ என்பான். அவ்வாறே அவர்கள் தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றிவிட்டு மறுபடியும் (இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’’ என்று சொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து) வெளியேற்றுவார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத்  அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7439

வெளிப்படையில் இவர் நல்லவராக இருக்கிறார்; ஆனால் நம் கண் முன் இல்லாத நேரத்தில் இவர் எப்படி இருப்பாரோ? ஒருவேளை கெட்டவராக இருப்பாரோ? என்று எல்லோரையும் சந்தேகிக்க ஆரம்பித்தால் எவரிடமும் பழக இயலாது. ஆகவே அனைவரின் மனதையும் திரைமறை வாழ்வையும் அறிந்த அல்லாஹ்விடம் இதற்காக உதவி தேடுவதே பொருத்தமானது.

இதன்படி இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தரத்தில் இருப்போருடன் இணைந்திருக்க விரும்புபவர்கள், இத்துஆவை அன்றாடமும் ஓதவேண்டும். அத்துடன் நிற்காமல், அதற்கேற்ப தமது வாழ்வை அமைத்துக் கொள்வதும் அவசியம்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை நல்லோருடன் சேர்ப்போம்.

திருக்குர்ஆன் 29:9

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.

திருக்குர்ஆன் 4:69

நீங்கள் அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், “அல்லாஹ்வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே’’ என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், “அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே’’ என்று கூறுவதற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் “திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே’’ என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்!

திருக்குர்ஆன் 39:55-58

ஏக இறைவனை சரியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். அதன் அடையாளமாக நல்லறங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய செயல்களை எதற்காகவும் விட்டு விடக் கூடாது. அவ்விருவரும் தடுத்த காரியங்களை எவருக்காகவும் செய்துவிடக் கூடாது.

இவ்வாறு ஏகத்துவக் கொள்கையில் உறுதியோடு வாழ்ந்தால் ஈருலகிலும் வெற்றியாளர்களுடன் இருக்க இயலும். இத்தகைய ஈடேற்றத்தை நம் அனைவருக்கும் தந்து அல்லாஹ் அருள்புரிவானாக!

———————————————————————————————–

மன அழுத்தம் தரும் தேர்வுகளும் மார்க்கம் தரும் தீர்வுகளும்

பாத்திமா அஜிஸ் கல்பாக்கம்

எல்லாம் வல்ல ரஹ்மான் தன்னுடைய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சட்ட திட்டங்களையும் லேசாக்கி வைத்துள்ளான். ஆனால் நாம் தான் அதன் விதிமுறைகளை மாற்றி, செயல்களைக் கடினமானதாக்கி, நமக்கு நாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.

இது தேர்வுக் காலம். பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் எழுதப்பட்டு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை விடப் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பாக, நம் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்கள் சமீப காலமாக இதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பள்ளியிலேயே முதல் மாணவனாக நம் பிள்ளை வரவேண்டும் என்ற சிந்தனை ஒரு ஆசையாக இல்லாமல் வெறியாகவே மாறிக்கொண்டு வருகிறது.

பிள்ளைகளால் எது இயலுமோ அதுதான் அதற்கு வரும் என்ற சிந்தனையே மழுங்கிப் போய்விடுகிறது. அவனை விட இவன், இவளை விட அவள் 100/100 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். எல்லோரும் இன்னார் மகன் என்று பாராட்ட வேண்டும். ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி, புகைப்படம் வர வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொள்கிறோம். எல்லோரும் தன் பிள்ளையைப் புகழ வேணடும் எனப் பேராசை கொள்கிறோம்.

ஆனால் என்றாவது ஒரு நாள் நம் பிள்ளைகளைத் தொழச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறோமா? தேர்வுக் காலங்களில் இரவு 12 மணியாகட்டும், விடியற்காலை 3, 4 மணியாகட்டும். படி, படி என படிக்கச் சொல்கிறோமே, ஒரு இஷாவையாவது, ஒரு ஃபஜ்ரையாவது தொழச்சொல்லி எழுப்பி விடுகிறோமா? பிள்ளை தூங்கட்டும் என்று விட்டு விடுகிறோம்.

உலக வாழ்விற்காக எல்லா சிரமங்களையும் மேற்கொள்ளும் நாம், மறுமை வாழ்விற்காக நம் பிள்ளைகளைத் தயார் செய்யும் வேலைகளை சுணக்கத்துடன் தள்ளி, ஒதுக்கி வைத்து விடுகிறோம்.

நம் பிள்ளைகளுக்கு மதிப்பெண்கள் சற்றுக் குறைந்தாலும் மாய்ந்து போய் அந்தத் துன்பத்தை நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.

இப்படி நாம் கவலைப்படுவது தான் நமது பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பெரும் பின்விளைவுகள் ஏற்படக் காரணமாக அமைந்து விடுகின்றது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்…

அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாரும் இல்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால், அவன் அனைத்து பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 6:17

என்னமோ பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் மட்டும் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்; அவர்கள் தான் எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு எளிய தீர்வு சொல்வார்கள்; உலகம் மதிக்க வாழ்வார்கள் என நாம் கற்பனையில் மிதக்கிறோம்.

அப்படியல்ல! மெத்தப் படித்தவர்களின் வாழ்க்கை வழிமுறை, அவர்களின் செயல்பாடுகள் எல்லாம் எத்தனை முட்டாள்தனமானதாகவும், கேவலமானதாகவும் இருக்கிறது என்பதை நாம் கண்கூடாகக் காணத்தானே செய்கிறோம். பெரிய விஞ்ஞானி என்போர் கூட போலிச் சாமியார்களின் கால்களில் வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கிறோம்.

முதல், இடை, கடை என்று மாணவர்களின் தர வரிசை அமைந்திருகிறது. முதல் நிலையில் உள்ளவன் முதலிலேயே  எப்பொழுதும் இருக்க முடியுமா? அவனுக்கு சரிவே ஏற்படாதா? இடைநிலையில் இருப்பவன் முண்னேறி முதல் நிலையை அடைய முடியாதா? கடை நிலையில் இருப்பவன் எதற்கும் இலாயக்கற்றவனாக இருந்து விடுவானா?

எதுவுமே நம் கையில் இல்லை. முயற்சி மட்டுமே நம் கையில் உள்ளது. முடிவு எல்லாமே படைத்த ரஹ்மானின் வசம் உள்ளது. விதியின் அமைப்பில் அல்லாஹ் எதனை நாடுகிறானோ அது தான் நடந்தேறும்.

அல்லாஹ் கொடுப்பதைத் தடுப்பவன் எவரும் இல்லை.

அல்லாஹ் தடுப்பதைக் கொடுப்பவன் எவரும் இல்லை.

அல்லாஹ் நாடுவதை அப்படியே எவன் ஒருவன் எடுத்துக் கொள்கிறானோ அவனே அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு நல்லடியானாக இருக்க முடியும்.

தனி மனித வாழ்வின் ஒரு சிறு பகுதியாக இருப்பது தான் கல்வி. அந்தக் கல்வியின் முடிவுகளே அவனது வாழ்க்கைத் தரத்தைப் பெரும்பாலும் மாற்றிவிட முடியும் என எண்ணக் கூடாது.

அதிகம் படிக்காத எத்தனையோ அறிஞர்கள் நேர்வழியில் இறையச்சத்துடனும் புகழுடனும் வாழ்ந்துள்ளார்கள், வாழ்ந்து கொண்டும் உள்ளார்கள். அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

உங்களுக்குத் தவற விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தினான். கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.        

அல்குர்ஆன் 57:23

தான் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் வரவில்லை என்றால் பெற்றோர்கள் பிள்ளைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது. கோபத்தின் உச்சிக்கே சென்று அவர்களை ஏசுவதும், திட்டுவதும், சபிப்பதும், ஏன்? அடி உதை கொடுப்பதும் தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் சகஜமாகிவிட்டது.

இந்தத் துன்புறுத்தலினால் பிள்ளைகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.

வீட்டை விட்டு ஓடிப் போவது, தவறான நண்பர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனையின் படி தகாத செயல்களில் ஈடுபடுவது, பெற்றோர்களைத் துன்புறுத்த எதனை வேண்டுமானாலும் செய்வது, அதிகப்பட்சமாகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்வது போன்ற பெரும் பாவங்களைச் செய்யத் துணிகிறார்கள். எத்தனை செய்தித் தாள்களில் என்ன என்ன செய்திகளை நாம் படித்துள்ளோம்.

கண்ணுக்குக் கண்ணாக, பாசத்தையும் பணத்தையும் கொட்டி வளர்த்த நம் பிள்ளை, நிரந்தர நரகத்தில் கொண்டு சேர்க்கும் பெரும் பாவத்தைச் செய்ய நாமே தூண்டுகோலாக இருக்கலாமா? நாமும் மார்க்கத்தின் படி வாழவும், நம் பிள்ளைகளை அதன் படி வளர்க்கவும் நாம் முயற்சி எடுக்க வேண்டும். பொறுமையை மேற்கொண்டால் அல்லாஹ்வின் அருள் நம்மை நிச்சயமாக வந்தடையும்.

தம் மக்களுக்கு உலகக் கல்வியை மட்டுமே அளித்து அவன் ஒரு சிறந்த மாணவனாக ஆவதை விட, உலகக் கல்வியுடன் சேர்த்து மார்க்கக் கல்வியையும் போதித்து, இறைவன் வழங்கியதைப் பொருந்திக் கொள்ளக் கூடிய, இறையச்சமுடைய ஒரு நல்லடியானாக உருவாக்க ஒவ்வொரு பெற்றோரும் முயல்வோமாக! வல்ல ரஹ்மான் அதன் வழியை நமக்கு எளிதாக்கி வைப்பானாக!

———————————————————————————————–

குடும்பவியல்  தொடர்  – 45

தாம்பத்தியத்திற்குத் தடையா?

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இல்லற வாழ்க்கையில் ஈடுபடும் போது பேண வேண்டிய ஒழுங்குகளையும், அது சம்பந்தமான விதிமுறைகள் என்னவென்பதையும் இந்தக் குடும்பவியல் தொடரில் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

பொதுவாக முஸ்லிம்களோ பிற சமூக மக்களோ இல்லறக் கடமைக்கென பல நிபந்தனைகளை அவர்களாகவே வகுத்து வைத்துள்ளனர். குடும்பத்தில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நாட்களிலோ, நேரங்களிலோ அல்லது குறிப்பிட்ட மாதங்களிலோ இல்லறக் கடமையை நிறைவேற்றக் கூடாது என்று நம்புகின்றனர்.

இன்னும் பலர் நல்ல நேரம், கெட்ட நேரம் என்றும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட பிறையில் கணவன் மனைவி ஒன்று சேரக் கூடாது என்றெல்லாம் பலவிதமான கட்டுக் கதைகளை நம்பிச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.

அதே போன்று முஸ்லிம் சமூக மக்களும் பிற சமூக மக்களைக் காப்பியடித்து, ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதிக் கொண்டு அம்மாதத்தில் திருமணம் முடிக்கவும் மாட்டார்கள். அப்படியே திருமணம் முடித்தால் கூட கணவன் மனைவியை ஒன்று சேர விடமாட்டார்கள்.

அதே போன்று முஹர்ரம் பிறை 1 முதல் 10 வரை கணவன் மனைவியைச் சேரவிடாமல் பிரித்து வைத்துவிடுவார்கள். மேலும் வளர்பிறை, தேய்பிறை என்றெல்லாம் நாள் நட்சத்திரம் பார்த்து, அந்த நாட்களில் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நம்புகிற பழக்கம் அனைத்து சமூக மக்களிடமும் பரவலாகக் காணப்படுகிறது.

இரவில் மட்டும்தான் கணவன் மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், பகலில் அதையெல்லாம் நினைத்தே பார்க்கக் கூடாது என்பன போன்ற தவறான அணுகுமுறைகளை மக்களிடம் காண்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மார்க்கம், கணவன் மனைவியின் இல்லறக் கடமையில் நேரம், நாள், நட்சத்திரம் போன்று எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவே இல்லை. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று இதுபோன்ற மூடப்பழக்க வழக்கங்களை உடைத்தெறிகின்றது.

கணவன் மனைவிக்கு எப்போதெல்லாம் இல்லற மகிழ்ச்சி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அதாவது, ஒரு மனிதனுக்கும் எப்போது அதுபோன்ற மகிழ்ச்சி தேவைப்படுகிறதோ அப்போதே அவன் அதைத் தீர்த்துக் கொள்வது தான் இயற்கையாக அமையும். இதுவெல்லாம் நேரங்காலம் குறித்து வராது. இதற்கு நேரங்காலம் குறிக்கவும் இயலாது.

தமிழ் மக்கள் ஆடி மாதத்தில் நல்லது கெட்டது எதையும் செய்யவே மாட்டார்கள். அதனால் தான் ஆடித் தள்ளுபடி என்றெல்லாம் போடுகிறார்கள். ஆடி மாதத்தில் கல்யாணம், புதுவீடு புகுதல் போன்ற எந்த நல்லவற்றையும் செய்ய மாட்டார்கள். எனவே பொருட்கள் விற்பனையாகாது. அதனால் தான் ஆடி மாதத்தைப் பயன்படுத்தி, இருக்கிற எல்லா இருப்புச் சரக்குகளையும் தள்ளுபடியில் தள்ளிவிடுகிறார்கள்.

இந்த ஆடியைக் காப்பியடித்து முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தில் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது என்று நினைத்து வைத்துள்ளார்கள்.

இதே போன்று நபியவர்கள் காலத்தில் ஷவ்வால் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதிக் கொண்டு, அம்மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் செய்யவே மாட்டார்கள். நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஷவ்வால் மாதத்தில் திருமணம் முடித்து, அந்தத் தவறான நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில். அவர்களுடன் என்னை விட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?

நூல்: முஸ்லிம் 2782

மக்களிடம் பீடை மாதமாக, தவறாகக் கருதப்பட்ட மாதத்தில் திருமணம் முடித்து, நபியின் மனைவிமார்களிலேயே ரசூலுல்லாஹ்வின் விருப்பத்தை அதிகம் பெற்றவளாக இருக்கிறேன் என்று சொல்வதன் மூலம், அன்றைய மக்களின் தவறான நம்பிக்கையைப் பொய்யாக்கி மூடநம்பிக்கையைத் தகர்க்கிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.

எனவே இந்தச் செய்தியிலிருந்து, தாம்பத்தியத்திற்கு நாள் நட்சத்திரம் கிடையாது என்றும், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தெல்லாம் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்றும் புரிகிறது.

மேலும் தாம்பத்தியத்திற்குக் கணவனோ மனைவியோ தேவைப்படுகிற நேரத்தில் செய்வதே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும், அதாவது கணவன் மனைவிக்கு எப்போது அந்த உணர்வுகள் ஏற்படுகிறதோ அப்போதே அதனை நிறைவேற்றுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் என்பதை நவீன உடற்கூறு மற்றும் மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறும் உண்மையாக இருக்கிறது.

இந்த வகையில் இஸ்லாம் இந்த விஷயத்திலும் அறிவுப்பூர்வமான மார்க்கமாகத் திகழ்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது.

எனவே மாதவிடாய் காலம் தவிர வருடத்தில் எல்லா நாட்களுமே இல்லறத்திற்கு, தாம்பத்தியத்திற்கு உகந்த நாட்கள் தான் என்பதை இஸ்லாம் கூறுகிறது. எல்லா நேரமும் அதற்குத் தகுந்த நேரம்தான். பகல் என்றாலும் இரவு என்றாலும் முற்பகல் என்றாலும் எப்போது அந்த உணர்வு வருகிறதோ அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும்.

அதே நேரத்தில் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் பகல் நேரத்தில் மட்டும் தாம்பத்தியத்தைத் தவிர்க்க வேண்டும். இது தாம்பத்தியத்திற்கு மட்டும் சொல்லப்பட்ட சட்டமல்ல. சாப்பிடுவதோ, தண்ணீர் பருகுவதோ கூட முடியாது. அதே நேரத்தில் நோன்பைத் திறந்து விட்டால், திரும்பவும் நோன்பு பிடிக்கும் வரையுள்ள நேரங்களில் அவரவருக்கு உகந்த நேரத்தில் எப்போது இல்லறம் தேவைப்படுகிறதோ அப்போது நிறைவேற்றிக் கொள்வதில் எந்தத் தடையையும் இஸ்லாம் விதிக்கவில்லை.

புனிதமிக்க நாட்களாகக் கருதப்படுகின்ற நாட்களில் கூட இல்லறத்தை நடத்த இஸ்லாம் தடைவிதிக்கவில்லை. புனித இரவுகளான லைலத்துல் கத்ர் இரவுகளில், வெள்ளிக் கிழமைகளில் என்று மார்க்கம் எந்தத் தடையினையும் இல்லறத்திற்கு விதிக்கவே இல்லை. இது இயற்கைக்கு உகந்த மார்க்கம் என்பதை இதிலிருந்தும் நம்மால் உணர முடியும்.

எந்தளவுக்கெனில் துக்கமான நிகழ்வு நடந்திருக்கும் நேரத்தில் கூட இல்லறத்தில் ஈடுபடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதற்கான மனவலிமையைப் பெற்றவர் எனில், துக்கமான நேரத்தில் கூட இல்லறத்தை நடத்திட இஸ்லாத்தில் எந்தத் தடையும் தவறும் கிடையாது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்களின் ஆண் குழந்தை நோயுற்றிருந்தது. ஒரு நாள் அபுதல்ஹா (ரலி) வெளியே சென்றிருந்த போது அக்குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூதல்ஹா (ரலி) அவர்களின் மனைவி உடனே சிறிது உணவைத் தயார் செய்தார்.  பிறகு குழந்தையின் பிரேதத்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் வீடு திரும்பிய உடன் ‘‘மகன் எவ்வாறுள்ளான்?’’ எனக் கேட்டார்.  அதற்கு அவரது மனைவி “அமைதியாகி விட்டான்; நிம்மதி (ஓய்வு) பெற்று விட்டிருப்பான் என்பதே எனது எதிர்பார்ப்பு’’ என பதிலளித்தார்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து நீராடிவிட்டுத் (தொழுகைக்காக) வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூதல்ஹா நபி (ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தம் வீட்டில் நடந்ததை நபியவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கு அருள்வளம் செய்யக்கூடும்’’ என்றார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆன் அறிஞர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்.

நூல்: புகாரி 1301

எனவே, கணவன் மனைவி எந்த நேரத்திலும் தங்களின் மகிழ்ச்சிக்கான இல்லறக் கடமையை நிறைவேற்றுவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனால் மார்க்கத்திலும் பிழையாகாது. உலகத்திலும் எந்தக் கேடும் வராது. அப்படிக் கேடு சொல்லப்படுபவை அனைத்தும் பொய்யான கற்பனை கட்டுக் கதை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது முதலாவது அம்சம்.

அடுத்ததாக, கணவன் மனைவிக்கு மத்தியில் இல்லற வாழ்க்கையில் எந்தளவுக்கும் சந்தோஷமாக இருக்கலாம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அதிகமான கட்டுக் கதைகளையும் பொய்யான பல தகவல்களையும் பரப்பி வைத்துள்ளனர்.

நம் சமூக மக்களும் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு இல்லறத்தில் தேவையற்ற சட்டங்களைக் கடைப்பிடித்து வருவதைப் பார்க்கிறோம். எந்தளவுக்கெனில் இல்லறத்தில் ஈடுபடும் போது கணவன் மனைவி ஒருவரையொருவர் பார்க்கக் கூடாது, கண்ணை மூடிக்கொண்டு தான் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்துள்ளார்கள். இது போன்ற கட்டுப்பாடுகள் இஸ்லாத்தில் கிடையாது.

அல்லாஹ்வின் தூதரே! எங்களின் மறைவிடங்களில் நாங்கள் மறைக்க வேண்டியவை (நேரம், இடம்) எவை? மறைக்காமல் இருக்க அனுமதிக்கப்பட்டவை எவை? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘‘உனது மறைவிடத்தை உனது மனைவியிடம் அல்லது வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைப் பெண்களைத் தவிர மற்றவரிடம் வெளிக்காட்டாமல் பாதுகாத்துக் கொள்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா இப்னு ஹைதா (ரலி)

நூல்: அபூதாவூத் 3501

கணவன் மனைவிக்குள் அந்தரங்கம், வெளிப்படை என்று எதுவும் கிடையாது. கணவன் மனைவியாக இருந்தாலும் போர்வை போர்த்தி மறைத்துக் கொண்டுதான் இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வது மார்க்கத்தில் இல்லாத, எங்கும் சொல்லப்படாத விதி.

அதாவது அல்லாஹ்வும் ரசூலும் விதிக்காத கட்டுப்பாடுகளை இவர்களாக சிறப்பு, நன்மை என்று யூகித்துக் கொண்டு விதிக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் புறந்தள்ளிவிட வேண்டும். கணவன் மனைவி இல்லறத்திற்குள் மறைக்க வேண்டும் என்பன போன்ற விதிகள் எதுவும் மார்க்கத்தில் இல்லை என்று நம்ப வேண்டும்.

கணவன் மனைவி குறித்து இறைவன் கூறும் போது, கணவன் மனைவிக்கு ஆடை, மனைவி கணவனுக்கு ஆடை என்று கூறுகிறான். இல்லற வாழ்க்கை குறித்து இத்தனை அழகான உதாரணத்துடன் யாருமே சொல்ல முடியாது.

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை.

(அல்குர்ஆன் 2:187)

அதே போன்று குளிக்கும் போது கூட ஆயிஷா (ரலி)யும் நபியவர்களும் ஒன்று சேர்ந்தே குளித்துள்ளார்கள். இதற்கெல்லாம் ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளித்தோம்.

நூல்: புகாரி 250, 261, 273

ஒரு ஆண் மட்டும் தனியாகக் குளிக்கும் போது தனக்கே தெரியாமல் தன்னிடமிருந்து எப்படி மறைவிடங்களை மறைக்க முடியாதோ, அது போன்று கணவனும் மனைவியும் ஒரு சேரக் குளிக்கும் போது மறைவிடங்களை மறைத்திருக்க முடியாது. அதற்கான அவசியம் ஏற்பட்டும் இருக்காது. சிலர் சொல்வதைப் போன்று கண்ணை மூடிக் கொண்டிருக்க வேண்டும் என்கிற சட்டம் மார்க்கத்தில் இருந்திருந்தால், தன்னோடு ஆயிஷாவைக் குளிப்பதற்கு நபியவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்வதாக இருப்பின், இப்படியெல்லாம் மனைவியிடம் இல்லறமல்லாத நேரங்களிலும் நெருக்கத்தைக் கடைப்பிடிப்பதுதான் கணவன் மனைவியிடையே பிணைப்பை உண்டாக்கும். பாசம் நேசமாக வாழ்வதற்கு வழியாக அமையும்.

இன்றைய நவீன யுகத்தில் மலேசியப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகமான விவாகரத்துகள் நடந்தன. அதை ஆய்வு செய்த மனோதத்துவ அறிஞர்கள், மருத்துவர்கள் போன்றோர் கணவன் மனைவியைச் சேர்ந்து குளிக்கச் சொன்னார்கள். அதன் பிறகு அந்தப் பிரச்சனை கணிசமான அளவில் குறைந்தது.

அப்படியெனில் கணவன் மனைவி சேர்ந்து குளிக்கும் போது தம்பதிகளுக்குப் பலவிதமான ரசனைகள் உண்டாகி, தங்களின் துணைகள் மீது நேசம் கூடுவதாகச் சொல்கிறார்கள். இதை ஒரு உத்தரவாக மலேசிய அரசு வெளியிட்டது. இதை இன்றைக்குக் கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். ஆனால் நபியவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.

இப்படியெல்லாம் இன்பமாக மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டிய இல்லறத்தை, சில ஊர்களில் வயதான பெரியவர்கள் கணவன் மனைவிக்கிடையே அமர்ந்து கொண்டு, தேவையற்ற குழப்பங்களையும் இடைஞ்சல்களையும் செய்து கொண்டு குடும்பத்தை ரணமாக்கிக் கொண்டுள்ளார்கள். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இல்லற வாழ்வு என்பது மகிழ்ச்சிக்காகத்தான் என்று வாழ வேண்டும். அதைத் தான் மார்க்கம் வலியுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

———————————————————————————————–

அஹதும் அஹ்மதும் ஒன்றாம்!

அறிவிலிகளின் அறியாமை வாதம்!!

ஷம்சுல்லுஹா

கண்மணி நாயகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அன அஹ்மத்பிலா மீம்’’ நான் அஹ்மத், என்று சொன்னார்கள். ஆனால் “மீம்’’ இல்லாத அஹ்மத் என்று சொன்னார்கள்.

நீங்கள் அரபு படித்திருந்திருந்தால் உங்களுக்குத் தெரியும், அஹ்மத் என்றால் நபிகளாருடைய பெயர்களில் ஒன்று என்பது.

இந்தப் பெயரில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன? நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன.

முதலாவதாக “அலிப்’’

இரண்டாவதாக “ஹ’’

மூன்றாவதாக “மீம்’’

நான்காவதாக “தால்’’

“அஹ்மத்’’ என்று வந்தாகி விட்டது. இது றஸுலுல்லாஹ்வுடைய பெயர்.

ஆனால், நபிகளார் சொன்னார்கள் “நான் அஹ்மது தான். மீம் இல்லாத அஹ்மத்’’ என்றார்கள்.

அஹ்மத் என்ற நாலு அட்சரங்களைக் கொண்ட அந்தப் பெயர்ச் சொல்லில் “மீமை’’ நீக்கி விட்டுப் பாருங்கள். “அலிப்’’ “ஹ’’ மீமை விட்டு விடுங்கள். “தாலை’’ மட்டும் எடுங்கள். என்னென்று வரும்? “அஹது’’ என்று வரும்.

“குல், முஹம்மதே நீங்கள் சொல்லுங்கள். “ஹுவல்லாஹு அஹத்’’ அவன் அஹத் என்று சொல்லுங்கள். இறைவன் அஹதாக இருக்கிறான்.

மேலும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “நான் “மீ’’மில் தான் வித்தியாசமாக இருக்கிறேன். அதாவது மீம் தான் என்னுடைய போர்வை. அந்தப் போர்வையை நீக்கி விட்டால் “மீம்’’ என்ற போர்வையை நீக்கினால் நான் யார்? அஹதாக இருக்கிறேன்’’ என்று சொன்னார்கள்.

கண்மணி நாயகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்னுமொரு ஹதீஸிலே சொன்னார்கள்: “அன அறபுன் பிலா ஐன்’’ முந்தியதைப் போன்ற ஒரு சொல். “ஐன், ற, ப’’ இது அறபு. அவர்கள் சொல்கிறார்கள். “ஐன்’’ இல்லாத அறபாக இருக்கிறேன் என்றார்கள்.

அப்படியானால் அந்தச் சொல்லிலுள்ள “ஐனை’’ நீக்கி விட்டுப் பாருங்கள். “ஐனை’’ நீக்கினால் என்ன? “றப்பு’’ என்று வரும். அது சாதாரண சிறுவர்களுக்குக் கூடத் தெரியும்.

“நான் அறபி தான். ஐன் இல்லாத அறபி’’ என்றார்கள். ஐன்தான் எனக்குப் போர்வையாக இருக்கிறது. அந்தப் போர்வையை நான் அகற்றி விட்டேனேயானால், நான் யார்? றப்பாக இருக்கிறேன்” என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிருக்கிறார்கள்”

இது முகநூலில் வந்த பதிவாகும். இஸ்லாத்தின் பெயரால் சிலர் பதிந்த இந்தப் பதிவு மார்க்கத்தின் அஸ்திவாரமான ஏகத்துவக் கொள்கையை வேட்டு வைத்துத் தகர்க்கின்ற வெடிகுண்டாகும். இஸ்லாம் மரத்தின் வேர்களில் நீரென்ற பெயரில் ஊற்றுகின்ற  அமிலமாகும். இவர் சொல்ல வருகின்ற நச்சுக் கருத்தின், நாசக் கருத்தின் அரபி மூலத்தை இங்கே தருகின்றோம்.

أنا عرب بلا عين أي رب أنا أحمد بلا ميم أي أحد

عرب

இந்த அரப் என்ற வார்த்தையிலிருந்து  ع ஐ தூக்கி விட்டால் அது

رب  

ரப் – இறைவன் -என்றாகி விடும். அது போல்

أحمد

என்ற வார்த்தையில் م ஐ தூக்கி விட்டால் அது

أحد 

அஹத் – ஏகன் – என்றாகி விடும். அதாவது முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வாக ஆக்குகின்ற கயமைத்தனத்தை இந்த எழுத்தாளர் கன கச்சிதமாகக் கையாளுகின்றார்.

இந்தக் கயமைத் திட்டம் இந்த எழுத்தாளரின் கை வண்ணத்தில் உதித்த ஒரு புதிய யுக்தியோ அல்லது புதிய கண்டுபிடிப்போ அல்ல! ஏற்கனவே, இஸ்லாத்தில் நுழைந்து விட்ட ஓர் இந்து மத சித்தாந்தம்! காணும் பொருள் எல்லாம் கடவுள்! கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றார் என்ற அத்வைதக் கொள்கையின் மறு அவதாரம்.

துவைதம் என்றால் இரண்டு. சுத்தத்திற்கு முன் ‘அ’ என்ற எழுத்தைச் சேர்த்தால் அசுத்தம் என்றாகி விடும். அதுபோல் துவைதத்திற்கு முன் ‘‘அ”வைச் சேர்த்தால் அதுவைதம் என்றாகி விடும். இரண்டின்மை என்ற பொருளைத் தரும்.  அதாவது, எல்லாம் ஒன்றே என்ற விஷக்கருத்து இதிலிருந்து உருவாகின்றது. கடவுளும், மனிதனும் ஒன்று என்ற இணைவைப்புத் தத்துவம் இதிலிருந்து முளைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்ற பெயரில் சிலர் இந்தப் பொய்யை முக நூலில்  கட்டி விட்டிருக்கின்றார்கள்.  இது நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் கிடையாது. முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லியிருந்தால் அதற்கு அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். அறிவிப்பாளர் தொடர் இருந்தால் மட்டும் போதாது. அந்த அறிவிப்பாளர்கள் மார்க்கம் வரையறுத்திருக்கின்ற நம்பகத் தன்மையில் இருந்தாக வேண்டும். இப்படிப் பல அடுக்கு அளவுகோல்களில், உரசிப் பார்க்கும் உரை கல்களில் வேதியியல் பரிசோதனை செய்ததற்கு பிறகே அது நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால் இந்த முகநூல் பதிவாளர்கள் தட்டி விட்ட  ஹதீஸ் மேற்கண்ட எந்த அளவுகோலிலும் உரைகல் உரசலிலும் நிற்காத, தான்தோன்றித்தனமான, யாரோ அநாமதேயம் நபி (ஸல்) அவர்கள் மீது அவிழ்த்து விட்ட பொய்யான ஹதீஸ் ஆகும். முகவரியில்லாத மொட்டைச் செய்தியாகும்.

உலகில் யார் வேண்டுமென்றாலும் யார் மீதும் எந்தச் செய்தியையும் ஒருவர் சொல்லாத ஒரு செய்தியைச் சொன்னதாகச் சொல்லி விட்டுத் தப்பி விடலாம். ஆனால் இந்த மாமனிதர் சொல்லாத செய்தியைச் சொன்னால் அவர் நாளை மறுமையில் நரகக் கொள்ளிக் கட்டையாகி விடுவார்.

இதோ நபி (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள்.

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்’

அறிவிப்பவர்: முகீரா(ரலி)

நூல்: புகாரி 1291

எனவே இதன் அடிப்படையில்  இந்தப் பதிவைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு திரும்பப்  பெறவில்லை என்றால், திருந்தவில்லையென்றால் அவரது முகநூல் பதிவு நரகத்திற்குரிய முன்பதிவாகிவிடும் என்று கனிவுடன் எச்சரிக்கின்றோம்.

இந்த எச்சரிக்கை நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்ததாகும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இப்போது அந்தப் பொய்யான ஹதீஸ் தெரிவிக்கின்ற அபத்தத்தை இப்போது அலசுவோம்.

அஹதும் அஹ்மதும் ஒன்றா? வெவ்வேறா?

நான் மீம் இல்லாத அஹமத்! அய்ன் இல்லாத அரப் என்ற செய்தி அல்லாஹ்வும், முஹம்மது (ஸல்) அவர்களும் ஒன்று என்று தெரிவிக்கின்றது. ஒரு வார்த்தையில் அல்லது பெயர்ச் சொல்லிலிருந்து ஓர் எழுத்தைத் தூக்கி விட்டால் அது வேறு வார்த்தையா? அல்லது அதே வார்த்தையா? என்றால் அது வேறு வார்த்தை என்பதைப் படிக்காத பாமரரும் புரிந்து கொள்வார்கள்.

இப்படிப்பட்டவர்களிடம் ஐயாயிரம் கடன் வாங்கி விட்டுத் திரும்பக் கொடுக்கும் போது ‘நீங்கள் தந்தது ஐ இல்லாத ஆயிரம்’ என்று சொல்லி வெறும் ஆயிரத்தைக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா? என்றால் நிச்சயமாக வாங்கிக் கொள்ள மாட்டார்கள்! அடிக்க வருவார்கள்.

இது  இவர்கள் வார்த்தைகளின் எழுத்துகளில் கூட்டி அல்லது கழித்து ஆடுகின்ற ஒரு கற்பனை விளையாட்டு! வீண் அபத்தம்! வெற்றுப் பிதற்றல்! பித்தலாட்டம்!!

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில்  தன்னுடைய பெயரை அஸ்ஸலாம்

السَّلَامُ

அமைதியானவன் என்று கூறுகின்றான். இவ்வார்த்தையில் ‘‘லாமை” தூக்கி விட்டால் அஸ்ஸாம்

السَّامُ

மரணம் என்று ஆகிவிடும். இதன்படி அல்லாஹ்வை லாம் இல்லாத ‘‘ஸாம்” மவ்த் அதாவது மரணம் என்று சொல்வார்களா?

الْوَكِيلُ 

அல்வகீல் – பொறுப்பேற்பவன் என்பது அல்லாஹ்வின் பெயர்.  இது குர்ஆனில்  அதிக இடங்களில் இடம்பெறுகின்றது. அதில் ‘‘காஃப்” என்ற எழுத்தைத் தூக்கி விட்டால்

الْوَيلُ 

நாசம், கேடு என்று ஆகிவிடும்.  இவர்களுடைய வார்த்தை விளையாட்டின்படி, அவன் காஃப் இல்லாத வைல் என்று  அல்லாஹ்வை நாசம், கேடு  என்று குறிப்பிடப் போகின்றார்களா?

 الْمُمِيتُ 

அல்முமீத் – மரணிக்கச் செய்பவன் என்பது அல்லாஹ்வின் பெயர். இதில் உள்ள முதல் மீமை தூக்கி விட்டால்

الميت

அல் மய்யித் – செத்த பிணம் என்றாகிவிடும். (இங்கு குறியீடு இல்லாமல் கொண்டு வந்திருக்கின்றோம். அரபியில் குறியீடில்லாமல் தான் வார்த்தைகள் இடம்பெறும். அந்த அடிப்படையில் தான் இங்கு இப்படிக் கொண்டு வந்திருக்கின்றோம்)

இதன்படி அவன் மீம் இல்லாத மய்யித் – செத்தவன் – என்று இவர்களுடைய முட்டாள் தனத்தில் உளறப் போகின்றார்களா? அல்லாஹ்வின் பெயர்களை இப்படி உதாரணத்திற்குக் கூட சிதைத்து மேற்கோள் காட்டுவதை விட்டும் அவனிடமே பாதுகாவல்  தேடுகின்றோம். அதே சமயம் இவர்களுடைய அபத்தங்களைத் தோலுரித்துக் காட்டுவதற்கு இப்படி உதாரணம் கூறாமல் விளக்கம் சொல்ல முடியாது.

பெயர்களில் எழுத்துக்களைக் குறைத்து விளையாடுகின்ற விளையாட்டின் அபத்தங்களைப் புரிந்துகொள்ள மேற்கண்ட உதாரணங்கள் போதுமானது. இப்போது இவர்கள் வலிந்து திணிக்கின்ற அத்வைதக் கருத்தின் அபத்தத்தைப் பார்ப்போம்.

அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் வெவ்வேறானவர்கள் கிடையாது. அல்லாஹ் தான் முஹம்மத்! முஹம்மத் தான் அல்லாஹ் என்று நிலைநாட்ட வருகின்றார்கள்.

இது சாதாரண இணைவைப்பல்ல. கோர, கொடூர இணைவைப்பாகும்!! அல்லாஹ்விடம் இந்தக் கொடிய, கோர இணைவைப்பை விட்டும் மன்னிப்பும், பாதுகாப்பும் தேடிக் கொள்வோமாக! சூஃபிகள் என்ற பெயரில் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட சாமியார்கள், சன்னியாசிகள், சன்னிதானங்களின் கொள்கையாகும். இந்தக் கொள்கையை விட்டும் இஸ்லாம் தூய்மை ஆகி விட்டது. இந்த தீய சித்தாந்தம் இஸ்லாத்தை விட்டும் அப்புறமானது; அந்நியப்பட்டது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:29, 7:54, 10:3,  13:2, 20:5, 25:59, 32:4, 41:11, 57:4 ஆகிய வசனங்களில், தான் அர்ஷில் அமர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகின்றான். ரப்புல் ஆலமீன், தான் அர்ஷில் அமர்ந்திருப்பதாக இத்தனை இடங்களில் ஏன் கூற வேண்டும்? திருக்குர்ஆனை ஓதும் போது  நமக்குள் கேள்வி எழும்.

இத்தகைய மாபாவிகள்  இப்படித் தன்னை தன்னுடைய அடிமையான முஹம்மது (ஸல்) அவர்களுடன் இரண்டறக் கலக்க வைப்பார்கள் என்பதைத் தகர்க்கும் வகையில் தான் அல்லாஹ் இப்படி சொல்கிறான்.

அவனும், அவனது அடியார்களும் அல்லது அவன் படைத்த எந்தப் பொருட்களுடனும் சமமாக மாட்டான்; சங்கமிக்க மாட்டான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபட விளக்குகின்றன.

இவர்கள் அன்றாடம் ஓதுகின்ற சூரத்துல் இக்லாஸ் என்ற சின்னஞ்சிறு  அத்தியாயமும் இவர்களது அபத்த வாதத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கின்றது, அவனைப் போன்றவன் எவனுமில்லை என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் சொல்கின்றது.  இந்த அத்தியாயத்தைக் கொஞ்சம் விளங்கிப் படித்தாலே இந்த வழிகெட்ட  வாதத்தை  இவர்கள் எடுத்து வைக்க மாட்டார்கள்.

அடுத்து இவர்கள் வைக்கும் அறிவார்ந்த (?)ஆதாரம்:

ரிபாஇய்யத் தரீக்கத்தின் ஸ்தாபகராக, உலகம் போற்றும் மேதையாக விளங்கிய “சுல்தானுல் ஆரிபீன் செய்யிது அஹ்மத் கபீறுர் ரிபாயீ றழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்:

“லகத் ஜாஅ மவ்லானா பிஸுறதி அஹ்மதி’’ “லகத் ஜாஅ மவ்லானா’’ எங்களுடைய இறைவன் இந்த உலகத்திலே வந்தான், “பிஸுறதி அஹ்மதி” முஹம்மதுடைய உருவத்திலே’’ என்று கூறுகின்றார்கள்.

சங்கைக்குறிய எங்களது ஆன்மீக தாதா குரு ஷெய்குனா ஷெய்கு அப்துல் காதர் ஸூபி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல்அஜீஜ் அவர்களும் ஸலாம் பைத்தில்

அய்னில்லா அரபியே மீம் இல்லா அஹமதே

அர்சலாவும் சிரசுடைய அண்ணலே ஸலாம் என்று நல்ல இஷ்க்குடன் கோர்வை செய்து நமக்கு அருளியுள்ளார்கள்

இதற்கு ஹதீது ஆதாரம் திர்மிதி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

ரிஃபாயி மவ்லானா சொன்னார் என்றும், அப்துல் காதர் சூஃபி சொன்னார் என்றும் தனது அத்வைதக் கொள்கையை  இங்கே  அவர்களை ஆதாரமாக்கிக் காட்டுகின்றார்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத எந்த ஒரு செய்தியும் மார்க்கத்தின் ஆதாரமாகாது என்பது    இவருக்குத் தெரியவில்லை. ரிபாயியோ அல்லது அப்துல் காதர் சூபியோ ஒரு  போதும் இஸ்லாத்தின் ஆதாரமாக மாட்டார்கள் என்பதை இவர்களுக்கு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் போகிற போக்கில் இந்தச் செய்தி திர்மிதியில்  இருக்கின்றது என்று ஒரு பொய்யைத்  தட்டி விடுகின்றார். ரசூல் (ஸல்) அவர்கள் மீதே பொய் சொல்லத் துணிந்தவர்கள் இமாம் திர்மிதி மீது ஏன் பொய் சொல்லத் துணிய மாட்டார்கள் என்பதை இது நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது சொன்ன பொய்களை விட்டும் என்றைக்குத் திரும்புகின்றார்களோ அன்று தான் இதுபோன்ற பொய்களை விட்டும் திருந்துவார்கள்.