ஏகத்துவம் – ஏப்ரல் 2014

தலையங்கம்

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.

இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கோவையில் 19 முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்றது.

முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற காவல்துறை கயவர்களின் மீது – காட்டு மிருகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி என்று சமுதாயம் காத்திருந்தது. ஆனால் கருணாநிதியோ அந்தக் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல! முஸ்லிம்களின் உயிரைப் பறித்து, உதிரம் குடித்த காட்டுவிலங்குகளுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார். எரிகின்ற முஸ்லிம்களின் இதயங்களில் எண்ணையை ஊற்றினார்.

அந்தப் பாதிப்பையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை தமுமுக சார்பில் அறிவித்தோம். அதனுடைய வீரிய பிரச்சாரம் மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் பிஜேபிக்கு சாதகமான பலனை அளித்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்து, அதிமுக அணி வென்றது.

அதிமுக ஆதரவில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்தார். 1999ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்தித்தது. 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலையொட்டி ஜூலை 4, 1999ல் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து கொண்டு, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாததாலும், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும் எந்தக் கட்சியையும் முழுமையாக ஆதரிக்காமல் சமுதாய ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஆதரித்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனவே இடஒதுக்கீட்டை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தோம். இவையனைத்தும் தமுமுக தவ்ஹீதுவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

இதன் பின்னர் தேர்தல் காலங்களில், களங்களில் கண்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மரியாதைகள் போன்றவை தமுமுகவை பதவி மோகத்தில் தள்ளியது. அதனால் தவ்ஹீதுவாதிகள் தமுமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானது. இந்த ஜமாஅத், 2006, ஜனவரி 29 அன்று குடந்தை குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்தியது.

அதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ராஜரத்தினம் தலைமையில் இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார். அந்த அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த கோபம் காரணமாக திமுக வென்றது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு இல்லாமல் இருந்தால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக வந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அப்போது எழுதினார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கு நன்றிக்கடனாக தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதவரளித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவில்லை. திமுக ஏற்றுக் கொண்டது. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரித்தது. மின்வெட்டு, ஊழல் போன்ற திமுக எதிர்ப்பு அலையில் திமுக தோல்வியைத் தழுவினாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுக அசைந்து கொடுக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் காலத்தில் தான் சமுதாயத்தின் கோரிக்கையை ஏறிட்டுப் பார்க்கும்; என்னவென்று கேட்கும். இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கின்ற வகையில் ஜனவரி 28, 2014 அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு மண்டலங்களில் தமிழகம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இதன் விளைவாக அதிமுக அரசு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, இதுதான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை அளிக்கின்றது.

இதுவரை இஸ்லாமிய சமுதாயம் தனது வாக்குரிமையை உணராமல் இருந்தது. விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு உதவாக்கரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் வாக்குகள் பாழாகிக் கொண்டிருந்தன; பயனற்றுப் போயின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இப்போது இடஒதுக்கீடு என்ற சமுதாய நலனை மையமாகக் கொண்டு, வாழ்வுரிமையை ஆதாரமாகக் கொண்டு அதன் வாக்குரிமை சுழல்கின்றது.

இரு திராவிடக் கட்சிகளுமே இடஒதுக்கீடு எனும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை தேர்தல் களத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று சாதிக்காமல் சந்தியில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் சாதித்திருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி இந்த இடஒதுக்கீடு எனும் வாழ்வுரிமை கிடைக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகளின் ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுக்களைப் பார்க்காமல் நாளைய நமது தலைமுறையின் மருத்துவ, பொறியியல், தொழிற்கல்வியின் சீட்டுக்களையும் அரசு வேலைவாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய நலனை முன்னிறுத்தி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நமது வாழ்வுரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

இப்போது சட்டமன்றத்தில் இருக்கின்ற இரண்டு மமக உறுப்பினர்கள் சமுதாயத்திற்காக எதையும் கிழித்துவிடவில்லை. தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக் கட்சியைப் புகழ்வதிலும், எதிர்க்கட்சியை விமர்சிப்பதிலும் தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழிக்கிறார்களே தவிர இடஒதுக்கீட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை. சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, தமது ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இவர்களுக்கு வாக்களிப்பது சமுதாயம் தன்னையே நாசத்தில் தள்ளுவதற்குச் சமமாகும்.

மமகவின் நிலை இதுவென்றால், தேர்தல் சமயத்தில் மட்டும் முஸ்லிம் கட்சி என்ற வேஷம் போடும் எஸ்டிபிஐ கட்சி, பாரதீய ஜனதா வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறும் எஸ்டிபிஐ, இனவெறியைப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்; கோயில் – தர்கா திருவிழாக்களுக்கும், பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லி டிஜிடல் பேனர் வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் முஸ்லிம் கட்சி அல்ல, எல்லா சமுதாயத்திற்கும் பொதுவான கட்சி என்பார்கள். ஆனால் தேர்தல் போட்டி என்று வந்தால் முஸ்லிம் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசி, இவர்களுக்கு சீட் கிடைக்காததால் இப்போது சமுதாய வேஷம் தரித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. இவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, அது நரேந்திர மோடியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. எனவே இந்தத் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத பாரதீய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதிமுக, திமுகவிலுள்ள முஸ்லிம் வாக்குகள் கணிசமாகப் பிரிந்தால் அது அங்கு போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். இது தெரிந்து, வேண்டுமென்றே பாரதீய ஜனதாவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் இவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இவர்கள் அதிகப்பட்சமாக பத்தாயிரம் வாக்குகள் வாங்கினாலும் அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அடுத்த தேர்தல்களில் இவர்கள் திமுக, அதிமுகவுடன் பேரம் பேசுவதற்கு வேண்டுமானால் இந்த வாக்குகள் பயன்படும். சமுதாயத்திற்கு இதனால் கேடு தான் விளையும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகள் பெற்ற மமக இதைத் தான் செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்கு நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். நம்முடைய கைகளாலேயே நாசத்தைத் தேடிக் கொள்ளும் மோசமான செயல் இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

இஸ்லாம் என்றாலே சமுதாயத்திற்கு நன்மையை நாடுவது தான்.

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 57

நம்முடைய வாழ்வுரிமைக்கு வாக்களித்து, நம்முடைய சமுதாய நலனைக் காப்போம்; நாசத்தைத் தவிர்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                தொடர்: 9

காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவை பல்வேறு இமாம்கள் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனங்களை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இமாம் மாலிக் அவர்கள் மக்களிடம் மார்க்கத் தீர்ப்பு அளிக்கும் போது, இதற்கு இதுதான் விளக்கம், இதற்கு இதுதான் கருத்து, இதைத் தாண்டி வேறு விளக்கமில்லை என்று சொல்லாமல் மிகப் பெரிய பேணுதலையும் பாதுகாப்பையும் மேற்கொண்டார்கள். இதை அவரது ஆதரவாளர்கள் நன்கு உணர்ந்து வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆதரவாளர்கள் பொய்யான அடிப்படையில் அமைந்த கஸ்ஸாலியின் மார்க்கத் தீர்ப்பை ஆஹா ஓஹோ என்று பாராட்டத் தலைப்பட்டுவிட்டனர்.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் பலவீனமான ஹதீஸ்களைக் கலந்து, மந்திர தந்திர, மாய்மால வித்தைகள் நிறைந்த சித்து வேலைகள் தான் கஸ்ஸாலியின் நூலில் பரவிக் கிடக்கின்றன. முன்னோர்கள் சொன்னார்கள், செய்தார்கள் என்று அவர் சொல்கின்ற சங்கதிகளும் சமாச்சாரங்களும் இந்த அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன.

அவ்லியாக்களின் உதிப்புகள், ஆன்மீகவாதிகளின் ஊதல்கள் என்று அவர் அள்ளிக் கொட்டுகின்ற விஷயங்கள் அடிப்படையில் எங்கிருந்து வந்தன என்று அறிய முடியவில்லை. எனினும் நல்ல பயிர்களை களைகளுடனும், நல்ல உணவை நஞ்சுடனும் கலந்து விட்டார்.

பொத்தாம் பொதுவாக ஒரு சில செய்திகளை அவிழ்த்துவிட்டுள்ளார். அவற்றைப் பார்க்கும் போது அவை இறைமறுப்பாளர்களின் சிந்தனைகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.

குர்ஆன், ஹதீஸ்களில் வருகின்ற ஒருசில செய்திகளுக்குக் கொஞ்சம் கவனக்குறைவாக விளக்கம் கொடுத்தாலும் அது தவறான விளக்கமாக அமைந்துவிடும். அதனால் அறிஞர்கள் அதில் அதிகப்பட்ச கவனத்தையும் சிரமத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். குர்ஆன், ஹதீஸில் இப்படி ஒரு கவனமும் சிரமமும் அவசியம் தான்.

ஆனால் கஸ்ஸாலியின் நூல்கள் குர்ஆன், ஹதீஸ் போன்ற ஏதோவொரு பெரிய செய்தியைப் போன்று அவரின் உளறல்களுக்கு அறிஞர்கள் பெரிய கவனத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது என்று இமாம் மாஸிரி அவர்கள் அல்கஷ்ஃபீ வல் இன்பாஃ அன்கிதாபில் இஹ்யா (இஹ்யாவை அடையாளங்கண்டு அறிவித்தல்) என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

பிதற்றலும் பித்தலாட்டமும்

ஃபிக்ஹ் கலையில் அடுத்தவர்களின் கருத்துக்களை தமது கருத்தாகப் பதிவு செய்த ஒரு சில ஆசாமிகள், கஸ்ஸாலியின் நூல்களில் காதல் கொண்டு அந்தப் பக்கம் தாவி, சில ஏடுகளை எழுதியுள்ளனர். அந்த ஏடுகளில் பிடிவாதமாக கஸ்ஸாலியின் பித்அத் பாதையை நிலைநாட்டியுள்ளனர்.

மார்க்கத்திற்கு முரணான, அருவருக்கத்தக்க அவரது வழிகேடுகள் கொஞ்ச நஞ்சமா? அவற்றை ஏட்டில் எளிதில் எழுதிவிட முடியாது. எழுத்தில் வடித்துவிட முடியாது. அந்த அளவுக்கு அவை நிரம்பி வழிகின்றன. இந்த வழிகேடுகளுக்கும் வாய் உளறல்களுக்கும் அவர் வைத்திருக்கும் மறுபெயர் இல்முல் முஆமாலா என்பதாகும். இது இறை ரகசியத்தை அறிகின்ற இல்முல் முகாஷபா எனும் அகமிய ஞானத்தில் கொண்டு போய் சேர்க்குமாம்.

தன்னை அடக்கியவர் தான் இந்த ஞானத்தை அடைவார்; இந்த ஞானத்தை ஒருவர் அறிவதற்கும் அடைவதற்கும் குறைந்தபட்ச தகுதி, முதலில் அவர் இப்படி ஒரு ஞானம் இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். இந்த ஞானத்தை நம்ப மறுப்பவருக்குரிய தண்டனை, இந்த ஞானம் வழங்கப்படாமல் இருப்பது தான் என்றும் கஸ்ஸாலி பிதற்றுகின்றார்.

குர்ஆன், ஹதீஸைப் படிக்கக்கூடாது

குர்ஆன் ஓதுவதிலும், ஹதீஸை எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது. ஏனென்றால் ஞானம் என்ற சட்டையை அணிவதை விட்டும் குர்ஆன், ஹதீஸின் ஈடுபாடு தடுத்து நிறுத்திவிடும்.

குர்ஆன் ஓதுவதையும் ஹதீஸ் எழுதுவதையும் விட்டு இந்த ஞானத்தில் இறங்கி, ஈடுபட்டுவிட்டால் சத்தியத்தின் அழைப்பை, அதாவது வஹீ எனும் இறை அறிவிப்பைச் செவியுற ஆரம்பித்துவிடுவான்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடந்த முன்னோர் சென்ற வழியை விட்டுவிடுங்கள். நான் உங்களுக்கு ஆணையிடுகின்ற வழியின் பக்கம் விரையுங்கள் என்று கஸ்ஸாலி கூறுகின்றார்.

இவ்வாறு காழி அபூஅப்தில்லாஹ் பின் முஹம்மத் பின் ஹம்தைன் அல்குர்துபி அவர்கள் கூறுகின்றார்கள்.

சுதந்திர ஞானிகளின் உள்ளங்கள் அகமிய ரகசியக் கல்லறைகள். இறை ரகசியத்தைப் பரப்பியவர் இறைமறுப்பாளர் ஆகிவிடமாட்டார் என்று கஸ்ஸாலி கூறுகின்றார்.

(அனல் ஹக் – நான் தான் அல்லாஹ் என்று) பொதுவாகச் சொன்ன ஹல்லாஜ் கொல்லப்பட்டார். அது நல்லது தான். அந்த ஒருவர் போனதால் ஒன்றும் பாதிப்பில்லை. அதற்குப் பதிலாக பத்து பேர்களுக்கு இந்தக் கொள்கையை ஊட்டிவிட்டு அவர்களை உயிர்ப்பித்து விடலாம் என்றும் கஸ்ஸாலி கருதுகின்றார்.

அகமிய இறைத்தன்மைக்கு என்று ரகசியம் உண்டு. அது அம்பலமாகிவிட்டால் நபித்துவம் பாழாகிவிடும். நபித்துவத்திற்கு என்று ரகசியம் உண்டு. அது வெளியே தெரிந்தால் கல்வி, ஞானம் பாழாகிவிடும். கல்வி, ஞானத்திற்கு என்று ரகசியம் உண்டு. அந்த ரகசியம் வெளியானால் சட்டங்கள் பாழாகிவிடும் என்றெல்லாம் கஸ்ஸாலி உளறுகின்றார்.

தஹபி அவர்கள் இந்த மேற்கோள்களைக் கூறிய பின்னர் இதன் அடிக்குறிப்பில், “கல்வி ஞானத்தின் ரகசியம் இந்தக் கேடுகெட்ட சூபிகளுக்குத் தான் வெளிச்சமாகின்றது. இவர்கள் சட்ட வரைகளைத் தகர்த்தெறிந்து விடுகின்றார்கள். ஹலால், ஹராம் இரண்டும் இவர்களிடம் அழிந்து போய்விட்டன’ என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஆரிஃப் (அல்லாஹ்வை அறிந்தவர்) தொடர்பாக கஸ்ஸாலி குறிப்பிடும்போது, “உண்மையின் ஒளி அவருக்கு உதயமாகின்றன. மற்றைய படைப்புகளுக்கு மறைக்கப்பட்டு, இவருக்கு மட்டும் அடையாளம் காட்டப்பட்ட ஞானங்கள் இவருக்குத் திறந்துவிடுகின்றன. அவர் நபித்துவத்தின் பொருளை அறிகின்றார்.

ஷரீஅத்தின் வார்த்தைகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படியாகி விடுகின்றன. நாம் அந்த வார்த்தைகளின் வெளிப்படையை மட்டுமே அறிவோம். ஆனால் அவர்களோ அதன் அந்தரங்கத்தையும் அகமியத்தையும் அறிவார்கள் என்றெல்லாம் கஸ்ஸாலி கதையளக்கின்றார்.

ஆரிஃப் (அல்லாஹ்வை அறிந்தவரை) ஆரம்பத்தில் பார்க்கும் போது சித்தீக் – மாபெரும் உண்மையாளர் என்று சொல்லிவிடுவாய். இறுதியில் நீ அவரைப் பார்க்கும் போது, மதம் மாறியவர் என்று சொல்லிவிடுவாய் என்று யாரோ ஒருவர் சொன்னதாக கஸ்ஸாலி குறிப்பிடுகின்றார். கடமையான வணக்கங்களை மறுப்பவருக்குத் தான் மதம் மாறியவர் என்ற பட்டம் தரப்படும். உபரியான வணக்கங்களை மறுப்பவருக்கு இந்தப் பட்டம் தரப்படுவதில்லை என்று அதற்கு வியாக்கியானம் வேறு கொடுக்கின்றார்.

சத்திய அழைப்பா? சாத்தானிய அழைப்பா?

சூபிகள் தங்களது ஆசிரியர்கள், ஏடுகள் மூலம் கற்கும் பாதையைக் கைவிட்டு விட்டு, இல்ஹாம் என்ற ஞான உதிப்பு, உதயம் என்ற பாதைக்கு மாறி விடுகின்றனர்.

உதிப்பு ஞானத்தை அடைய விரும்பும் சிஷ்யன், வெறும் வெள்ளை உள்ளத்துடன் ஊக்கத்துடன் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ் அல்லாஹ் என்று அழைக்க வேண்டும். அவனது உள்ளத்தில் வேறெதுவும் குடியேறாமல், கூட்டாகாமல் வெறுமனே ஆகிவிடவேண்டும். குர்ஆன் ஓதுவதிலோ, ஹதீஸைப் புரட்டுவதிலோ அவன் தனது கவனத்தைத் திருப்பக்கூடாது.

இந்தக் கட்டத்தை அடைந்து விட்டால் இருள்படர்ந்த வீட்டில் தனது மெஞ்ஞான ஆடையைப் போர்த்திக் கொண்டு தனிமையில் தவத்தைக் கையாண்டால், கடைப்பிடித்தால் அப்போது, யா அய்யுஹல் முஸ்ஸம்மில், யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் – போர்வை போர்த்தியிருப்பவரே என்ற சத்திய அழைப்பைச் செவியுறுவான் என்று கஸ்ஸாலி காதில் பூச்சுற்றுகின்றார்.

இந்த மேற்கோள்கள் அனைத்தும் ஸியரு அஃலாமின் நுபலா நூலில் பதிவானவையாகும்.

இந்தக் கருத்தைப் பதிவு செய்த ஹாபிழ் தஹபீ அவர்கள், இந்த வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அகோரத்தையும் அக்கிரமத்தையும் அநியாயத்தையும் தாங்க முடியாமல் வெகுண்டெழுந்து, வேதனையுடன் தமது அடிக்குறிப்பில் பின்வருமாறு தமது ஆத்திரத்தைப் பதிவு செய்கின்றார்.

மக்களின் மாண்புறு தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் செவியுற்ற இந்த வார்த்தைகள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரயீல் மூலம் பெற்ற வார்த்தைகளாகும். தவம் என்ற பெயரில் தனித்திருக்கும் இந்த மடையன் செவியுற்றது சத்திய அழைப்பல்ல! ஷைத்தானிய அழைப்புகள்! அல்லது உதறல் எடுத்த, வலிப்பெடுத்த அவனது மூளை உதிர்த்த உளறலைத் தான் அவன் செவியுற்றிருக்கின்றான். இதையெல்லாம் விட்டு விட்டு ஒருவன் பற்றிப் பிடிக்க வேண்டியது குர்ஆன், ஹதீஸ் தான்.

இவ்வாறு ஹாபிழ் தஹபீ குறிப்பிடுகின்றார்கள்.

இந்நூலாசிரியர் மக்ராவீயும் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கின்றார்.

கஸ்ஸாலியைப் பற்றியும், இஹ்யாவைப் பற்றியும் நன்கு அறிந்த அறிஞர் தஹபீ! இஹ்யாவுக்குள் கொட்டிக் கிடக்கின்ற, இஸ்லாமிய கொள்கையை வேட்டு வைத்துத் தகர்க்கின்ற அந்தச் செய்திகளின் தொகுப்பை நம் கண்முன்னால் எடுத்துக்காட்டுகின்றார்.

நடுநிலைச் சிந்தனையுடன் இஹ்யாவைப் படிப்பவர் அதன் உண்மை நிலையைப் புரிந்து கொள்வார். இஹ்யாவை இயற்றிய ஆசிரியரின் நோக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ் மட்டுமே நன்கறிந்தவன். ஆனால் அதை விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு பார்ப்பவர், இஹ்யா என்ற நூல் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகச் சதி செய்வதற்கு ஏவி விடப்பட்ட நூல் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்.

கஸ்ஸாலியைப் புகழ்ந்து, இஹ்யாவைப் படிக்க வேண்டும் என்று இளைஞர்களை ஏவி, அவருக்காக வாரி வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் இக்கால இஹ்யாவின் ஆதரவாளர்கள், இஹ்யாவைப் பற்றிய மார்க்க அறிஞர்களின் திறனாய்வுகளையும் தீர்ப்புகளையும் பார்த்தார்களா? படித்தார்களா? இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

தெரிந்தும் அப்படிச் செய்கின்றார்கள் என்றால் மக்களை கொள்கை, கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், குணநலப் பண்புகள் ரீதியாக வழிகெடுக்கும் நோக்கத்தைத் தான் இவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும். மார்க்க அறிஞர்களின் இந்தத் திறனாய்வுகளும் தீர்ப்புகளும் இஹ்யா வெளிவந்த துவக்க காலத்தில், அதை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியானவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

இமாம் இப்னுல் ஜவ்ஸியின் மதிப்பீடு

கஸ்ஸாலி என்ற ஒருவர் கிளம்பி மக்கள் செல்கின்ற தவறான பாதைக்கு ஏதுவாக இஹ்யா என்ற நூலை இயற்றினார். பொய்யான ஹதீஸ்களைக் கொண்டு அதை நிரப்பினார். அவை பொய்யான ஹதீஸ்கள் என்று அவருக்குப் புரியவில்லை. ஃபிக்ஹ் வரையறையைத் தாண்டி விலகிப் போன அகமிய ஞானத்தைப் பற்றி அவர் பேச ஆரம்பித்துவிட்டார்.

இப்ராஹீம் நபி பார்த்த நட்சத்திரங்கள், சூரிய சந்திரன் அனைத்தும் ஒளிகள். அவை அல்லாஹ்வின் திரைகள். இப்ராஹீம் நபி தெரிந்தே இவற்றைப் பார்க்கவேண்டும் என்று விரும்பவில்லை. இவை அகமிய ஞான பேச்சின் வகையைச் சார்ந்ததாகும் என்று கஸ்ஸாலி கூறுகின்றார்.

இவ்வாறு இப்னுல் ஜவ்ஸி குறிப்பிடுகின்றார்கள்.

இஹ்யாவில் உள்ள அபத்தங்களுக்கும் ஆபத்தான கருத்துக்களுக்கும் மறுப்பு தெரிவிப்பதற்காகவே “அல் அஹ்யா’ என்ற நூலை எழுதியுள்ளார்கள். இந்த நூல் பல பாகங்களைக் கொண்ட நூலாகும்.

“சூபிய்யாக்கள் விழித்த நிலையிலேயே மலக்குகளையும் நபிமார்களையும் உயிர்களையும் நேரடியாகப் பார்க்கின்றார்கள். அவர்களிடமிருந்து குரல்களையும் செவியுறுகிறார்கள். அவர்களிடமிருந்து பல்வேறு பயன்களையும் செவியுறுகிறார்கள். இந்தக் காட்சிகளைக் காண்பதிலிருந்து நிலைமை படிப்படியாக உயர்ந்து மிக உன்னதமான கட்டங்கள், படித்தரங்களுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்றது. அந்த உச்ச நிலையை, உன்னத நிலையை வார்த்தை வடிவில் சொல்ல முடியாது” என கஸ்ஸாலி அல்முஃப்ஸிஹ்ருல் அஹ்வால் என்ற தன்னுடைய நூலில் குறிப்பிடுகின்றார்.

இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள், தல்பீஸ் இப்லீஸ் என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள்.

அசத்தியத்தின் ஆணி வேர்களை அறிய வேண்டும் என்று விரும்புவோர் இஹ்யாவைப் பற்றிய அறிஞர்களின் இந்த மார்க்கத் தீர்ப்புகளையும் திறனாய்வுகளையும் மதிப்பீடுகளையும் பார்க்க வேண்டும்.

அறிஞர்களின் இந்த விளக்கத்தைப் படித்தாலே இஹ்யாவின் லட்சணம் தெரிந்துவிடும். இதற்கு வேறு எந்த அடிக்குறிப்பும் அதிக விளக்கமும் தேவைப்படாது.

மொழிபெயர்ப்பாளனின் விளக்கம்

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற இந்த மொழியாக்கத்தை சென்ற இதழ் வரை மூல நூலாசிரியரின் அரபு மூலத்திற்கு ஏற்பவே மொழிபெயர்த்திருந்தேன். என்னதான் கருத்து அடிப்படையில் மொழிபெயர்த்தாலும் நேரடி மொழிபெயர்ப்பு என்றால் அதற்குச் சில கடிவாளம் உண்டு. மூல நூலாசிரியர் என்ன எழுதியிருக்கின்றாரோ அதை மட்டும் தான் சொல்ல முடியும். அதைத் தாண்டி வேறு பக்கம் பார்வையைச் செலுத்த முடியாது. மூல நூலாசிரியர் சொல்லாத எதையும் இடையில் சேர்க்க முடியாது.

எனவே, இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? என்ற இந்த நூலை நேரடியாக மொழிபெயர்ப்பாக இல்லாமல் கருத்தாக்கமாக, மூல நூலின் தழுவலாக வெளியிடலாம் என எண்ணுகின்றேன்.

இந்த நூலின் மூலத்தைப் பொறுத்தவரை ஆசிரியர் மக்ராவீ அவர்களது நாட்டின் நடப்புகளுக்கும் அவரது காலத்திற்கும் ஏற்ப அமைந்துள்ளது. எனவே, இதை நேரடி மொழியாக்கம் செய்யும் போது தமிழ் முஸ்லிம் உலகிற்குப் பொருத்தமற்றதாக சில இடங்கள் அமைந்துள்ளன. எனவே தமிழ் வாசகர்களுக்குப் புரியும் வகையிலும் தமிழக நடப்பைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த நூலின் தழுவலை எழுதினால் பயனளிக்கும் என்பதால் இந்த நடை கையாளப்படுகின்றது.

இத்தொடரின் இந்தப் பகுதிக்கு, “காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பு நிச்சயமாக சுன்னத் ஜமாஅத்தினருக்கு கோபத்தையும் கொதிப்பையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தக் கோபமும் கொதிப்பும் போய்ச் சேரவேண்டிய பொருத்தமான இடம் புளுகுமூட்டையான இஹ்யா தான்.

இஹ்யா உலூமித்தீன் என்ற கஸ்ஸாலியின் நூல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மதரஸாக்களில் ஐந்து, ஆறு அல்லது ஏழாம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள ஒரு நூலாகும். “இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?’ என்ற இந்த நூலை மொழிபெயர்க்கும் நானும் ஆறாம் வகுப்பில் இஹ்யாவைப் பாடமாகப் பயின்றிருக்கின்றேன். மறைந்த ஷம்சுல்ஹுதா ஹஜரத்திடம் இஹ்யாவைப் படித்ததைப் பாக்கியமாகக் கருதியவன். ஆனால் அதை இப்போது நரகப் படுகுழியில் தள்ளுகின்ற பயங்கர விஷமாகப் பார்க்கின்றேன். அதனால் தான் இந்த மொழிபெயர்ப்பு.

நவ்விர் இலாஹஸ் ஸமா கல்பல் கரீபி கமா

நவ்வர்த கல்ப இமாமின் நாஸி கஸ்ஸாலி

“வானத்தின் ரட்சகனே! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்த அற்பனின் உள்ளத்தை ஒளிரச் செய்!”

இந்த துஆவை தமிழகத்தின் மதரஸாக்களில் சொல்லிக் கொடுக்கின்றார்கள். மக்தபுகளில் படிக்கும் சிறுவர்கள் முதல் ஏழு ஆண்டு படிக்கும் ஆலிம்கள் வரை இந்த துஆவைச் செய்யாதவர்கள் இருக்க முடியாது.

அறிவுக் கடலாம் கஸ்ஸாலி

அடையும் நெஞ்சின் விரிவைப் போல்

அறிவின் ஒளீயாய் எம் நெஞ்சை

அழகாய் அமைப்பாய் அருளாளா!

மேற்கண்ட இந்த வரிகள் நாகூர் ஹனீபாவின் “ஹஸ்பீ ரப்பீ’ எனத் துவங்கும் பாடலில் இடம்பெற்றுள்ளவையாகும். இதிலிருந்து தமிழக மக்களிடம் கஸ்ஸாலியின் தாக்கம் எந்த அளவுக்கு ஊடுறுவியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழக ஆலிம்கள் தங்களை காதியானிகளுக்கு எதிராகப் போராடுபவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள். ஷரீஅத் பேரவை என்ற பெயரில் காதியானிகளுக்கு எதிராகப் போர் தொடுக்கின்ற போராளிகள் என்ற பறைசாற்றிக் கொள்கின்றனர்.

சுன்னத் ஜமாஅத் ஆலிம்களே! தவ்ஹீத் ஜமாஅத் உங்களிடம் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான். காதியானிகளை எதிர்ப்பதற்கு முன் நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இஹ்யா உலூமித்தீனைத் தான்; கஸ்ஸாலியின் சிந்தனையைத் தான். அவர் தான் காதியானிகளுக்கு ஆஸ்தான ஆசானாக இருக்கின்றார்.

கும்மிருட்டில் தன்னந்தனியாக ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தவமிருப்பவர்களுக்கு இறைச் செய்தி, அதாவது வஹீ வரும் என்று சொல்கின்றார். வஹீயின் வாயிற்கதவுகள் அடைக்கப்படவில்லை என்று நம்புகிறார். இந்த விஷக் கருத்தை வெளியிடவும் செய்திருக்கின்றார். இஹ்யாவில் இடம்பெறும் அந்த விஷக்கருத்தை இப்போது பார்ப்போம்.

 (இறை சந்திப்பும், இறை உரையாடலும்) இருண்ட வீட்டில் தனித்து தவமிருப்பதாலே தவிர நிறைவு பெறாது. இந்தக் கட்டத்தில் (தவமென்னும்) போர்வை அல்லது ஆடை அணிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலையில் தான் சத்திய நாயனின் அழைப்பைச் செவியுறுகின்றார். ரட்சகனின் கண்ணியமிகு சமூகத்தை, வருகையை கண்ணால் காண்கின்றார்.

இதுபோன்ற நிலையில் இருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் அழைப்பு வந்தது. போர்வை போர்த்தியவரே! என்று அவரை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டது.

கண்களுக்குக் காட்சியாகும் அல்லாஹ்?

காதியானிகளின் ஆசான் கஸ்ஸாலி என்று தலைப்பிட்டதற்குக் காரணம் புரிகின்றதா? காதியானிகள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மிர்ஸா என்ற ஷைத்தானுக்கு வஹீ வருகின்றது என்று வாதிடுகின்றனர். ஆனால் கஸ்ஸாலியோ, தனித்து தவமிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் காட்சியளிப்பான், அவதரிப்பான் என்று சொல்கின்றார் என்றால் இவர் காதியானிகளுக்கெல்லாம் அப்பனாக, ஆசானாக இருக்கிறார் என்று தானே அர்த்தம்.

கஸ்ஸாலியின் இந்த வார்த்தைகளைப் பதிவு செய்யும் போது ஹாபிழ் தஹபீ அவர்கள், இவர் செவியுற்றது சத்திய அழைப்பல்ல, சாத்தானிய அழைப்பு என்று கூறியதைப் பார்த்தோம். அந்த அளவுக்கு நபித்துவத்தின் தனித் தன்மையை, தவம் என்ற பெயரில் தனித்திருக்கும் பைத்தியங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கின்றார் கஸ்ஸாலி. அல்லாஹ் காப்பாற்றுவானாக!

கஸ்ஸாலி தனது இந்த வாக்குமூலம் வாயிலாக இரண்டு அபத்தங்களை, வானம் பூமி அனைத்தும் நடுங்குகின்ற இரண்டு அபாண்டங்களைப் போதிக்கின்றார்.

அபத்தம்: 1

வஹீயைப் பொதுவுடைமை ஆக்குகின்றார். இது முதல் அபத்தமும் முழு அபாண்டமும் ஆகும்.

தமிழகத்தில் சுன்னத் ஜமாஅத் என்று கூறும் ஆலிம்களிடம் நாங்கள் கேட்பது இதைத் தான். காதியானிகளிடம் போர்ப் பிரகடனம் செய்வதாகக் கூறும் நீங்கள் கஸ்ஸாலியுடன் ஏன் போர்ப் பிரகடனம் செய்யவில்லை? காதியானிகளை விமர்சிப்பதற்கு முன்னால் மதரஸாக்களின் பாடத்திட்டத்திலும் பாதுகாப்பான அலமாரிகளிலும் நீங்கள் அடுக்கி வைத்திருக்கும் இஹ்யா உலூமித்தீனுடன் போர் செய்யுங்கள். அதாவது அந்நூலைத் தீயிட்டுப் பொசுக்குங்கள். இல்லையேல் வஹீ என்பது இறைத்தூதர்களுக்கு மட்டுமல்ல, முயற்சி செய்யும் அனைவருக்கும் கிடைக்கும் என்ற கஸ்ஸாலியின் பொதுவுடைமைக் கொள்கை உங்களிடம் குடிகொண்டிருக்கின்றது என்று தான் அர்த்தம்.

வஹீ முடிந்து விட்டது என்று நீங்கள் வாதிக்கின்றீர்கள். ஆனால் நடைமுறையில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் அத்தனையையும் ஆதரிக்கின்றீர்கள். காதியானிகளின் அத்தனை செயல்களையும் அப்படியே பின்பற்றுகின்றீர்கள். அதற்குச் சரியான எடுத்துக்காட்டு தான் கஸ்ஸாலியும் அவரது நூலான இஹ்யாவும்.

கஸ்ஸாலி மீதுள்ள காதல் ஒவ்வொரு ஆலிமின் கண்ணையும் மறைக்கின்றது. அவரது இஹ்யா உங்களின் வேதமாகத் திகழ்கின்றது. ஆனால் அந்தக் கஸ்ஸாலியோ நுபுவ்வத்தின் தன்மையை, தத்துவஞானிகளுக்குக் கூறு போட்டுக் கொடுக்கின்றார். அவர் யார் என்பதை அவரது இந்த வார்த்தைகள் தெளிவாக அடையாளம் காட்டுகின்றன.

அபத்தம்: 2

இதில் இடம்பெற்றுள்ள இரண்டாவது அபத்தம், தனித்துத் தவமிருப்பவர் அல்லாஹ்வின் சன்னிதானத்தைக் கண்ணால் காண்பார் என்பதாகும். அல்லாஹ்வை நேரடியாகப் பார்ப்பது, அவனது ஒளியைக் காண்பது என்பதைத் தவிர இதற்கு வேறு பொருள் இருக்க முடியாது. ஆனால் அல்லாஹ்வை இந்த உலகில் யாரும் பார்க்க முடியாது என்று மார்க்கம் கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்களுக்குக் கூட அல்லாஹ்வின் காட்சி இல்லை என்பதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளக்குவதைப் பின்வரும் ஹதீஸில் பார்க்கலாம்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர் களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “அபூஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்என்று கூறினார்கள்; நான், “அவை எவை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், “திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்‘ (81:23) என்றும், “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்‘ (53:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:

இந்தச் சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்ததுஎன்று கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) “அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” (6:103).

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (தனது அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான் (42:51)

நூல்: முஸ்லிம்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் ஆதாரங்களுடன் அத்தனை தெளிவாக, நெற்றியடியாக அடிக்கின்றார்கள்.

ஆனால் கஸ்ஸாலியோ கண்டவரும் அல்லாஹ்வின் காட்சியைக் கண்ணால் காண்பார் என்று கூறுகின்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை. மற்றவர்கள் யாரும் அல்லாஹ்வைப் பார்க்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது.

உங்களில் எவரும் மரணிக்காத வரை கண்ணியமும் கம்பீரமும் நிறைந்த தனது இறைவனைப் பார்க்க முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 5215

நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் அவனது காட்சியைக் கேட்கும் போது அல்லாஹ் மறுத்து விடுகின்றான். இந்த வசனம் இதைத் தெளிவாக விளக்குகின்றது.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது “என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்எனக் கூறினார். அதற்கு (இறைவன்) “என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் பின்னர் நீர் என்னைப் பார்க்கலாம்என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது “நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்எனக் கூறினார்.

அல்குர்ஆன் 7:143

இதையெல்லாம் தாண்டி, தவமிருக்கும் இந்த ஆசாமிக்கு அல்லாஹ் காட்சியளிப்பான் என்று கூறுகின்றார் என்றால் கஸ்ஸாலியின் கருத்து இஸ்லாமிய மார்க்கத்தின் கருத்தா? என்று ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எல்லாற்றுக்கும் மேலாக, இப்படி தவமிருப்பது இஸ்லாத்தில் உள்ளதா? இது நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையா? துறவு, தவம், தனித்திருத்தல், ஞானம் என்ற சூபிஸ சித்தாந்தம் – கலாச்சாரம் இஸ்லாத்தில் அறவே கிடையாது. இது இந்து மதம், கிரேக்க மதத்தின் கலாச்சாரமாகும். இதைத் தான் கஸ்ஸாலி இஸ்லாத்திற்குள் இஹ்யா என்ற வண்டி மூலம் இறக்குமதி செய்கின்றார். இன்னுமா இவரைப் பற்றித் தெரியவில்லை?

வளரும இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

குடும்பவியல்  தொடர்: 12

சந்திப்புகளும் உரையாடல்களும்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள். நம்மை விடப் பலநூறு மடங்கு மனைவியின் மீது அன்பும் மரியாதையும் வைப்பவர்களாகத் தான் இருப்பார்கள். நம்மைப் போன்று அற்பமான விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடமாட்டார்கள். அப்படிப்பட்ட நபியவர்கள் தமது மனைவி ஆயிஷாவின் வீட்டிற்கு வருகிற போது, அவர்களுடன் ஒரு ஆண் அமர்ந்திருக்கிறார். அவர் யாரென நபியவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு முன் நபியவர்களுக்கு அறிமுகமில்லாதவராகவும் இருக்கிறார் என்பதால் அவரைப் பார்த்ததும் நபியவர்களின் முகம் மாறிவிடுகிறது. உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், இவர் எனது பால்குடிச் சகோதரர் என்று பதிலுரைக்கிறார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் மார்க்க அடிப்படையில் சரியாகத் தான் பதிலுரைத்தார்கள். இருப்பினும் நபியவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். உங்களது பால்குடிச் சகோதரர்கள் யார் யார்? என்பதைச் சரியாக ஆய்வு செய்து முடிவெடுங்கள். சாதாரணமாகப் பால் குடிப்பதை வைத்துக் கொண்டெல்லாம் பால்குடிச் சகோதரர் என்று முடிவெடுத்துவிட முடியாது என்று கூறிவிட்டு, பால்குடியின் சட்டத்தையும் நன்றாகத் தெளிவுபடுத்துகிறார்கள். இரண்டு வயதுக்குட்பட்ட பருவத்தில், பசியை நிறைவேற்றும் அளவுக்கு பால் குடித்திருக்க வேண்டும். அப்போது தான் பால்குடிச் சகோதரன், சகோதரரி என்ற சட்டம் பொருந்தும் என்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உணர்த்துகிறார்கள்.

அழுகின்ற காரணத்தினால் ஒரு அந்நியப் பெண் குழந்தைக்குப் பால் கொடுப்பதையெல்லாம் பால்குடிச் சட்டத்தில் எடுக்க முடியாது. அக்குழந்தையின் வயிறு நிறைகின்ற அளவுக்குப் பால் கொடுத்தால் தான் பால்குடிச் சட்டம் பொருந்தும். அதுவும் ஓரிரு தடவைகளல்ல. குறைந்தது 5 முறையாவது பசியை நிறைவேற்றும் அளவுக்குப் பால் கொடுத்தால் தான் பால்குடிச் சட்டம் பொருந்தும்.

அதே போன்று பால் சுரக்காத நிலையில், குழந்தையின் அழுகையை அமர்த்துவதற்காகப் பால் கொடுப்பதைப் போன்று நடந்து கொண்டாலும் பால்குடிச் சட்டம் பொருந்தாது.

இந்தச் செய்தியின் மூலம் விளங்குவது என்னவென்றால், ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு தாயாரிடத்தில் பால்குடித்த செய்தியை நபியவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அழுகையை அமர்த்துவதற்காகத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் பால் குடித்திருக்கிறார்களே தவிர வயிறு நிரம்புவதற்காகக் குடிக்கவில்லை என்கிற செய்தியையும் நபியவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் தான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இப்படியொரு சட்டத்தைச் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிப் பால் குடிக்கும் வகையில்) பாலூட்டுவது, (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவை ஏற்படுத்தாது.

அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் (ரலி)

நூல்: முஸ்லிம் 2874

அந்நிய ஆண், அந்நியப் பெண் என்கின்ற சட்டத்தைத் தாண்டி இன்னும் கூடுதலாக இஸ்லாம் நமக்கு எச்சரிக்கிறது. இன்று நடைமுறையில் திருநங்கைகள் என்ற பெயரில் ஆணாகவும் இல்லாத, பெண்ணாகவும் இல்லாதவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கிறவர்கள் கூட அந்நியப் பெண்களுடன் அமர்வதற்கோ தனிமையில் பேசுவதற்கோ நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கிறார்கள்.

திருநங்கைகளுக்குப் பெண் தன்மை தான் மிகைத்து இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இவர்கள் பெரும்பாலும் ஆணை விட பெண்களிடம் பேசுவதற்கு அதிகம் விரும்புவார்கள். இவர்கள் அரவாணிகள் என்றும், அலி என்றும், ஒன்பது என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். இப்படி திருநங்கை எனப்படுபவர்கள், பெண்களுடன் தனித்திருப்பதையே இஸ்லாம் தடுக்கிறது எனில் ஒரு ஆண் எப்படி இன்னொரு அந்நியப் பெண்ணுடன் தனிமையில் பேசவோ, தனித்திருக்கவோ இஸ்லாம் அனுமதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) “அலிஒருவர் அமர்ந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அலி‘, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாதுஎன்று சொன்னார்கள்.

இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் “ஹீத்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நூல்: புகாரி 4324, 5887

எனவே ஆண்கள் தமது வீட்டில் பெண்களை அனுமதிக்கும் போதும் பெண்கள் தமது வீட்டில் ஆண்களை அனுமதிக்கும் போதும் அவ்வீட்டில் அந்தப் பெண்ணுக்கும் ஆணுக்கும் முறையான மஹ்ரமானவர்களின் துணை இருக்கிறதா? என்று பார்த்தே அனுமதிக்க வேண்டும். அப்படியில்லையெனில் எந்த ஆணையும் பெண்ணையும் தனிமையில் அனுப்பிவிடக் கூடாது.

பெண் தன்மை மிகைத்திருக்கின்ற, பெண்களிடம் பேசுவதை விரும்புகின்ற அரவாணிகளையே தனித்திருக்கும் பெண்களிடம் பேசுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை எனில், ஒரு ஆண்மகன் கண்டிப்பாக பெண்களிடம் செல்லக் கூடாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளமுடிகிறது,

அதே போன்று, ஒரு பெண்ணுடைய வீட்டில் ஒருவன் தங்குவதாக இருந்தால் அந்த ஆண் அந்தப் பெண்ணுக்குக் கணவனாக இருக்க வேண்டும். இல்லையெனில் மஹ்ரமாக (திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவு) இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பெண் இன்னொரு ஆண் வீட்டில் தங்குவதாக இருந்தால் அந்த ஆணுக்கு இவள் மனைவியாக இருக்க வேண்டும். அல்லது இந்தப் பெண்ணுக்கு திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்ட உறவுகளான அண்ணன், தம்பி போன்றவர்களின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். அப்படியில்லாமல் வேறெந்த உறவு முறையைச் சொல்லிக் கொண்டும் அந்நியப் பெண்களின் வீடுகளில் அந்நிய ஆண்களோ, அந்நிய ஆண்களின் வீடுகளில் அந்நியப் பெண்களோ தங்குவது கூடாது என நபியவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவனத்தில் வையுங்கள்! கன்னி கழிந்த எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் இரவில் (தனியாகத்) தங்க வேண்டாம்; அவர் அவளை மணந்து கொண்டவராகவோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராகவோ இருந்தால் தவிர!

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 4382

எனவே ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருப்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட, கடுமையாக எச்சரிக்கப்பட்ட காரியமாகும். இது மோசமான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்காகத் தான் நபியவர்கள் இப்படியெல்லாம் கண்டிக்கிறார்கள்.

எனவே எந்தக் கட்டத்திலும் பெண்கள், அந்நிய ஆண்களுடன் தனித்திருப்பதை அறவே அனுமதிக்கவே கூடாது. மார்க்கம் அனுமதித்த வகையில் மேற்சொன்ன வரம்புகளை மீறாமல் ஒரு சில இடங்களில் பலர் அமர்ந்திருக்கும் ஒரு சபையில் தனியாக இருப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.

மக்கள் அருகி-ருக்க, அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனியாகப் பேசிக்கொண்டு இருப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மக்கள் கூட்டத்தை முன்னால் வைத்துக் கொண்டு ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தனியாக பேசிக் கொள்வதற்கு, செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கு அனுமதியிருக்கிறது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

அன்சாரிகளில் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருடன் தனியாக (எங்கள் காதில் விழாத விதத்தில்) நபியவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அந்தப் பெண்மணியிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளாகிய) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5234

தனியாகப் பேசுவது என்றால் யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்தோ, அறையிலிருந்தோ பேசுவதற்கு அனுமதியில்லை. ஒரு ஆணும் பெண்ணும் மார்க்க வரம்புக்கு உட்பட்ட பேச்சுக்களை தனியாகப் பேசுவதை பிற மக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் அது கூடும். அதாவது இருவர் பேசுகிற சத்தம் மட்டும் தான் பிறருக்கு விளங்காதே தவிர மற்றபடி காட்சிகள் அனைத்தும் நன்றாகத் தெரியும் வகையில் பேசுவதாகும். இந்த முறையில் தான் நபியவர்கள் பேசியதாக மேற்சொன்ன செய்தியில் உள்ளது.

அந்தப் பெண்மணியிடம் நபியவர்கள், அன்சாரிகளிலேயே நீங்கள்தான் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்று சொல்கிறார்கள். ஏனெனில் அன்சாரிகள் தான் மார்க்கத்திற்காக அதிகமான பொருளுதவியைச் செய்தவர்களாக இருந்தார்கள். வீட்டில் பாதியைக் கொடுத்தார்கள், சொத்தில் பாதியைக் கொடுத்தார்கள், மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து அகதிகளாக வந்த ஒரு சமூகத்தையே உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதால் நபியவர்கள் அன்சாரித் தோழர்கள் மீது அளவு கடந்த விருப்பம் வைத்திருந்தார்கள்.

அப்படிப்பட்ட உதவி செய்த சமூகத்திலிருந்து இன்ன பெண்மணி வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் நபியவர்கள் மக்கள் முன்னிலையில் அவர்கள் பார்க்கும் விதத்தில் சிறிது தூரம் தனித்து சென்று மக்களுக்குப் பேச்சு கேட்காத வகையில் பேசினார்கள் என்று இந்தச் செய்தி கூறுகிறது. அதே நேரத்தில் என்ன பேசினார்கள் என்று இந்தச் செய்தியில் விரிவாக ஒன்றும் இல்லை. ஆனாலும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த வார்த்தையில் ஒரு சில வார்த்தைகளை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்படியெனில் அறையினுள் மறைந்திருந்து தனியாகப் பேசவில்லை என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது.

ஆக, தனியாக ஒரு ஆணும் பெண்ணும் பேசுவதாக இருந்தால், ஒரு கண்ணாடி அறையிருந்து அதனைப் பிறர் பார்க்கும்படி பேசிக் கொள்ளலாம். குடும்பப் பிரச்சனைகளில் கணவன், மனைவி விசாரணையின் போது தனியாக சில விஷயங்களைச் சொல்வதற்கு சிலர் விரும்புவார்கள். அல்லது வேறு ஏதேனும் அவசரத் தேவையாக ஒரு ஜமாஅத்தை அணுகுவார்கள்.

இதுபோன்ற கட்டங்களில் பேச்சு மட்டும் தனியாக இருக்கலாமே தவிர அங்கு நடக்கிற காட்சிகள் பொதுமக்களோ அல்லது மற்ற ஊழியர்களோ பார்க்கும் விதத்தில் இருந்தால் தவறு கிடையாது. இன்றைக்குள்ள வங்கிகளில் மேலாளருக்குக்கென்று கண்ணாடி அறை இருக்கும். அனைத்து மக்களும் பார்க்கும் விதத்தில் தான் தனியாகக் கண்ணாடி அறையில் இருந்து பேசுகிறார்கள். இதுவெல்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுத் தான் இருக்கிறது.

இந்த நிலையில் இருக்கும் போது, இருவருக்கும் வேறு மாதிரியான எண்ணங்கள் வராது. இவர்களது நடவடிக்கைகள் அனைத்தும் பிறருக்குத் தெரிந்துவிடுகிற போது மார்க்க வரம்புகளை மீறுகிறாரா இல்லையா என்பதை நாம் கண்டுகொள்ள முடியும்.

தூரத்திலிருந்து தனியாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நம்மைப் பிற மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே நாம் விஷயத்தை மட்டும் சுருக்கமாக அளந்து பேசவேண்டும் என்று அந்த ஆணும் பெண்ணுமே பேசுவார்கள். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் மேற்கண்ட செய்தி நமக்குணர்த்துகிறது.

எனினும் இதுபோன்ற பேச்சுக்கள் மார்க்க வரம்பை மீறாத வகையில் இருக்க வேண்டும். நாம் பேசுவது யாருக்கும் கேட்காது என்பதால் குழைந்து பேசுவதோ, தவறான பேச்சுக்களைப் பேசுவதோ கூடாது.

—————————————————————————————————————————————————————-

சென்ற இதழின் தொடர்ச்சி….

பேசும்  மொழிகளும் படைத்தவனின்  அற்புதமே!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

மொழியறிந்தோரின் மகத்தான சேவை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும், அவர்களுக்கு பிந்தைய காலத்திலும் இந்த சத்தியத்தைத் தெரிந்து கொள்வதற்கும், வலுவாக நிலைநாட்டுவதற்கும், இன்னும் திசையெங்கும் பரப்புவதற்கும் பன்மொழிப் புலமை பெற்றவர்கள் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பிறமொழியறிந்த மக்கள் சத்திய மார்க்கமான இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளும் பொன்னான வாய்ப்பைப் பெற்றார்கள்.

குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால், இப்பணியில் திறம்பட செயலாற்றிய சான்றோர்களாக நபித்தோழர்கள் திகழ்ந்தார்கள். நபித்தோழர்களில் பலர் பிறமொழியைக் கற்று சத்தியத்தைப் எடுத்துரைத்தார்கள். இன்னும் பலர், பிறமொழியை அறிந்தவர்களின் உதவியுடன் மார்க்கப் பணியில் செம்மையாக செயல்பட்டார்கள். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரி-ருந்து விபசாரம் புரிந்து விட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள். (தீர்ப்பளிக்கும்படி கேட்டார்கள்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்களில் விபசாரம் புரிந்தவரை நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள் “நாங்கள் அவ்விருவரையும் (அவர்களின் முகங்களில்) கரும்புள்ளியிட்டு அடிப்போம்என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “(உங்கள் வேதமான) தவ்ராத்தில் (விபசாரம் செய்தவருக்கு) “ரஜ்ம்‘ (சாகும் வரை கல்லால் அடிக்கும்) தண்டனையை நீங்கள் காணவில்லையா?” என்று கேட்க, யூதர்கள், “(அப்படி) ஒன்றும் அதில் நாங்கள் காணவில்லைஎன்று பதிலளித்தனர். உடனே (யூத மார்க்க அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், யூதர்களிடம், “பொய் சொன்னீர்கள், நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து ஓதிக் காட்டுங்கள்என்று சொன்னார்கள். (அவ்வாறே தவ்ராத் கொண்டுவரப்பட்டு ஓதப்பட்டது.) அப்போது அவர்களுக்கு வேதம் கற்பிக்கும் வேதம் ஓதுநர் “ரஜ்ம்தொடர்பான வசனத்தின் மீது தம் கையை வைத்து (மறைத்துக் கொண்டு) தம் கைக்கு முன்னால் இருப்பதையும் அதற்கு அப்பால் உள்ளதையும் மட்டும் ஓதலானார். (கைக்குக் கீழே உள்ள) ரஜ்முடைய வசனத்தை ஓதவில்லை. உடனே அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் அந்த ஓதுநரின் கையை ரஜ்முடைய வசனத்தை விட்டு இழுத்துவிட்டு, “இது என்ன?” என்று கேட்டார்கள். யூதர்கள் அதைப் பார்த்தபோது, “இது ரஜ்முடைய வசனம்என்று சொன்னார்கள். ஆகவே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் தண்டனை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். எனவே, அவ்விருவருக்கும் மஸ்ஜிதுந் நபவியில் ஜனாஸாக்கள் (இறுதிப் பிரார்த்தனைக்காகச் சடலங்கள்) வைக்குமிடத்திற்கருகே  கல்லெறி தண்டனை தரப்பட்டது. அந்தப் பெண்ணின் அந்த நண்பன் அவளைக் கல்லடியிலிருந்து காப்பாற்றும் விதத்தில் அவள் மீது கவிழ்ந்துகொள்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புஹாரி 4556

ஸாதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ள குடிபானங்களைப் பற்றி உங்களது (வட்டார) மொழியில் கூறி, அதற்கு எங்களது (வட்டார) மொழியில் எனக்கு விளக்கமளியுங்கள். ஏனெனில், எங்களது மொழி வழக்கு அல்லாத வேறொரு மொழி வழக்கு உங்களுக்கு உள்ளதுஎன்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹன்த்தமைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அது சுட்ட களிமண் பாத்திரமாகும். மேலும், அவர்கள் “துப்பாவையும் தடை செய்தார்கள். அது சுரைக்காய் குடுவையாகும். “முஸஃப்பத்தையும் தடை செய்தார்கள். அதுவே தார் பூசப்பட்ட பாத்திரமாகும். “நக்கீரையும் தடை செய்தார்கள். அது பேரீச்ச மரத்தின் மேற்பட்டை உரிக்கப்பட்டு பின்னர் நன்கு குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரமாகும்என்று கூறிவிட்டு, “(இவற்றை விடுத்து) தோல்பைகளில் பானங்களை ஊற்றிவைக்குமாறு உத்தரவிட்டார்கள்என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4060

ஓர் அடியார் (உ.ளூ செய்து) தொழுமிடத்தில் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்தபடி இருக்கும் நேரமெல்லாம் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறாôர். (இது எதுவரையில் எனில்) அவருக்கு ஹதஸ் (சிறுதுடக்கு) ஏற்படாத வரைஎன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (அரபி மொழி புரியாத) ஒரு பாரசீகர் “ஹதஸ் என்றால் என்ன, அபூஹுரைரா அவர்களே!?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பின் துவராத்திலிருந்து வெளியாகும் காற்றுஎன்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: சயீத் அல்மக்புரீ (ரஹ்), நூல்: புஹாரி 176

(பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் அமருமாறு கூற, அவ்வாறே நான் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள், “என்னிடம் நீங்கள் (மொழிபெயர்ப்பாளராக இங்கேயே) தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத் தருகிறேன்என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் (மக்காவில்) தங்கி விட்டேன்.

அறிவிப்பவர்: அபூஜம்ரா, நூல்: புஹாரி 53, 87, 7266

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதன்முதலில் இறைச்செய்தி வந்தபோது) கதீஜா (ரலி) அவர்கள், தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் நபி (ஸல்) அவர்களை அழைத்துச் சென்றார்கள்.

“வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார்.  மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார். (சுருக்கம்)

நூல்: புஹாரி 3, 3392, 4953, 6982

மார்க்கத்தை அறிய உதவும் மொழிப்புலமை

மக்கள்  ஒரு மொழியைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இடையே பல்வேறு மாறுதல்கள் இருக்கும். பேச்சு நடை, எழுத்து நடை என்பது எல்லா மொழிகளிலும் உண்டு. மேலும் மொழி என்றால் அதில் பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கும். எனவே ஒரு மொழியில் புலமை பெறுவதாக இருந்தால் அந்த மொழியில் பயன்படுத்தப்படும் வழக்குகளை தெரிந்து கொள்வதோடு அதில் கலந்திருக்கும் பிறமொழி சொற்களின் பொருட்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபி மொழி பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் தமது பேச்சுக்களிலும், மக்களுக்கு தெரிவித்த போதனைகளிலும் பிறமொழி வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள். நபிகளாரின் போதனைகளை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு அந்தச் சொற்களின் பொருளையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் அருளால் அந்த வார்த்தைகளின் அர்த்தங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அதற்காக அரும்பாடுபட்ட நல்லலோர்களின் பணி மகத்தானது; என்றும் மறக்க முடியாதது ஆகும்.

ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்த போது) தர்மப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், “கிஹ் கிஹ் – சீச்சீ!” (என்று சொல்- விட்டு) “நாம் தர்மப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 3072

அபிசீனியா நாட்டி-ருந்து நானும் ஜுவைரிய்யா அவர்களும் வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பட்டுத் துணி ஒன்றை உடுத்தக் கொடுத்தார்கள். அதில் அடையாளக் குறிகள் சில இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கரத்தால் அந்த அடையாளங்களைத் தடவியபடி, “அழகாயிருக்கிறதே! அழகாயிருக்கிறதே!” (என்பதைக் குறிக்க அபிசீனிய மொழியில் “சனா, சனா‘) என்று கூறலானார்கள்.

அறிவிப்பவர்: உம்மு காலித் (ரலி), நூல்: புஹாரி 3874

மறுமை நாளுக்கு முன்பு ஒரு கால கட்டம் வரும். அப்போது கல்வி அகற்றப்படுவிடும்; அறியாமை நிலவும்; “ஹர்ஜ்பெருகிவிடும். “ஹர்ஜ்என்பது கொலையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்எனத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புஹாரி 7064, 7065

அல்லாஹ்வின் வேதமும், அவனது தூதரின் வாழ்வியல் போதனைகளும் அரபி மொழியில் இருக்கின்றன. அவற்றை அழகிய முறையில் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அரபி மொழியை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆர்வம் எத்தனை மக்களிடம் இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

அரபி மொழியில் முழுமையான புலமை பெறாவிட்டாலும், குறைந்தபட்சமாக அதைப் படிப்பதற்காவது முயற்சி செய்யலாம். ஆனால் முஸ்லிம்களின் நிலமை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. பெரும்பாலான மக்கள் குர்ஆனைப் படிப்பதற்குக் கூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

தாய்மொழி தெரிந்தவர்களும் தவறிழைப்பார்கள்

குர்ஆனும் ஹதீஸ்களும் அரபி மொழியில் இருப்பதால் அரபிகள் மட்டுமே அதைச் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; அவர்கள் ஒருபோதும் மார்க்க விஷயங்களில் தவறிழைக்க மாட்டார்கள் என்று சில முஸ்லிம்கள் நினைக்கின்றனர்.

இன்றும் மார்க்க ரீதியாக ஒரு கருத்து வேறுபாடு வரும் போது நாம் அடுக்கடுக்கான சரியான ஆதாரங்களைக் காட்டினாலும் அதற்கு மாற்றமாக இருக்கும் அரபிகளின் செயல்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதற்குப் பல உதாணரங்களைக் குறிப்பிடலாம்.

மதீனாவில் ரமலான் மாதத்தில் குர்ஆனை ஓதி முடித்ததற்கு ஒரு பெரிய துஆவை தொழுகையில் ஓதுவார்கள். மார்க்கத்தில் எந்தவொரு ஆதாரமும் இல்லாத இக்காரியத்தை இந்நிலைபாட்டில் உள்ளவர்கள் சரி காண்பார்கள். அதுபோன்று அங்கு இருப்பவர்ககள் மத்ஹபுகளைப் பின்பற்றுவதை இங்கு இருப்பவர்கள் தங்களுக்கு ஆதாரமாகக் காட்டுவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஒரு செய்தியை அந்த மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே சரியாகச் சொல்வார்கள், செய்வார்கள் என்ற குருட்டுத்தனமான சிந்தனையே ஆகும். தாய்மொழியைத் தெரிந்தவர்களும் அந்த மொழியில் இருக்கும் கருத்துக்களைத் தப்புத் தவறுமாக விளங்கிச் செய்வார்கள் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சியதே காரணம். நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக்கால மாச்சரியத்திலும் தீமையிலும் மூழ்கிக்கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) இந்த நன்மையை எங்களிடம் கொண்டுவந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம் (இருக்கிறது)என்று பதிலளித்தார்கள். நான், “அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும்என்று பதிலளித்தார்கள். நான், “அந்தக் கலங்கலான நிலை என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஒரு கூட்டத்தார் எனது வழிமுறை (சுன்னா) அல்லாததைக் கடைப்பிடிப்பார்கள். எனது நேர்வழியல்லாததைக் கொண்டு வழிகாட்டுவார்கள். அவர்களில் நீ நன்மையையும் காண்பாய்; தீமையையும் காண்பாய்என்று பதிலளித்தார்கள். நான், “அந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். நரகத்தின் வாசல்களில் நின்றுகொண்டு (அங்கு வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவரை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்க(ளுடைய அடையாளங்)களை எங்களுக்குத் தெரிவியுங்கள்என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் நம் (அரபு) இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நம் மொழிகளையே பேசுவார்கள்என்று பதிலளித்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இத்தகைய கால கட்டத்தை நான் அடைந்தால் என்ன செய்யவேண்டும் என எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அதன் ஆட்சியாளரையும் பற்றிக்கொள்என்று பதிலளித்தார்கள். அதற்கு நான், “அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஆட்சியாளரோ இல்லை (என்ற நிலையில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால் (என்ன செய்வது)?” என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கிவிடு. (ஒதுங்கி வாழும் சூழலுக்கு முட்டுக்கட்டையாகப் பல்வேறு சிரமங்கள் நேர்ந்தாலும்) ஒரு மரத்தின் வேர் பாகத்தைப் பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, இறுதியில் அதே நிலையில் நீ இருக்கவே இறப்பு உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் நீ சேர்ந்துவிடாதே)என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி), நூல்: புஹாரி 3764

எனவே எந்தவொரு மார்க்க விஷயமாக இருந்தாலும் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செய்கிறார்கள் என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதை விடுத்து அரபிகள் அதிலும் குறிப்பாக மக்கா, மதீனாவில் இருப்பவர்கள் செய்தால் அது கண்டிப்பாக சரியாக இருக்கும் என்று குருட்டுத்தனமாக நம்பி ஆட்டு மந்தைகளைப் போன்று அவர்களை அடியொற்றி பயணித்துவிடக்கூடாது. இதைப் புரியாமல் பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்கள் இனியாவது திருந்துவார்களா?

மொழியைப் பயன்படுத்தும் விதம்

நாம் எந்தவொரு மொழியைப் பேசுவதாக இருந்தாலும் பயன்படுத்துவதாக இருந்தாலும் அது மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் நல்ல முறையில் இருக்க வேண்டும், மோசமான அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவது கூடாது. அதுபோன்று தவறான தீய அர்த்தம் கொண்ட சொற்பிரயோகத்தைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக, அவ்லியாவின் ஆசியால் பிறந்த குழந்தை என்ற மூடநம்பிக்கையால் மைதீன் பிச்சை என்றும், அரசர்களுக்கெல்லாம் அரசன் என்ற அர்த்தம் கொண்ட ஷாஜஹான், ஷாகுல் ஹமீது என்றும் பெயர்களை பயன்படுத்தும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவ்வாறான பெயர்களை நம்பிக்கையாளர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் தனக்கு “மன்னாதி மன்னன்‘ (ம-க்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 6206, முஸ்லிம் 4338

(என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு “ஆஸியா‘ (பொருள்: பாவி) எனப்படும் புதல்வியொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமீலா (பொருள்: அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் 4333

மொழி மூலம் வரும்  பிரச்சனைகள்

ஒருவர் தமது சொந்த மொழியாக இருந்தாலும் பிறமொழியாக இருந்தாலும் அதைச் சரியான முறையில் அணுக வேண்டும். அதன் இலக்கண இலக்கிய முறைகளை அறிந்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், அதுவே பல பிரச்சனைகள் சச்சரவுகளுக்கு வழிவகுத்துவிடும்.

இன்றும்கூட பல தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் விஷயத்தில், யார் பேசுவது சரி என்று இலங்கைத் தமிழர்களும் தமிழகத்தில் இருப்பவர்களும் வாதம் செய்வதைப் பார்க்கலாம். அதுபோன்று அமெரிக்கன் ஆங்கிலம் சரியா? பிரிட்டிஷ் ஆங்கிலம் சரியா? என்று குழம்புபவர்களைக் காணலாம். இன்னும் சொல்வதென்றால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில், ஸிஹ்ரு என்ற அரபி வார்த்தைக்கு முஸ்லிமல்லாதவர்கள் பயன்படுத்தும் சூனியம் என்ற தவறான அர்த்தத்தை சில ஆலிம்கள் கொடுத்ததால் மக்களிடம் பல்வேறு மூடநம்பிக்கைள் பெருகிக்கிடக்கின்றன. எனவே எந்தவொரு மொழியையும் முறையாக அணுகும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டும். இல்லாதபோது அதன்மூலம் பிரச்சனைகள் தோன்றுவது தவிர்க்க இயலாததாகி விடும். இதைப் புரிந்து கொள்வதற்கு இரு சம்பவங்களைக் காண்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளில் ஹிஷாம் பின் ஹகீம் (ரலி) அவர்கள் “அல்ஃபுர்கான்எனும் (25ஆவது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை நான் செவியுற்றேன். அவரது ஓதலை நான் செவி தாழ்த்திக் கேட்டபோது எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக்கொண்டேன்.

(அவர் தொழுது முடித்த) பிறகு அவரது மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, “நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?” என்று கேட்டேன். அவர், “இதை எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் ஓதிக்காண்பித்தார்கள்என்று பதிலளித்தார். உடனே நான், “நீர் பொய் சொல்-விட்டீர்! ஏனெனில், நீர் ஓதியதற்கு மாற்றமாகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எனக்கு ஓதிக் கொடுத்தார்கள்என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், “(அல்லாஹ்வின் தூதரே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் “அல்ஃபுர்கான்அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விடுங்கள்!என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), “ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப்பெற்றதுஎன்று கூறினார்கள்.

பிறகு (என்னைப் பார்த்து), “உமரே, ஓதுங்கள்!என்று சொன்னார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப் படி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இப்படித்தான் (இந்த அத்தியாயம்) அருளப் பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது. ஆகவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), நூல்: புஹாரி 4992, 5041, 6936

ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான் (ரலி) அவர்கள், அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்-ம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடு கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆகவே, ஹுதைஃபா (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களுடைய வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!என்று கூறினார்கள். ஆகவே, உஸ்மான் (ரலி) அவர்கள் (அன்னை) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி “தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புஹாரி 4987

மொழி சம்பந்தமான பல தகவல்களைத் தெரிந்து கொண்டோம். மனிதர்கள் பல மொழிகள் பேசுவது இறைவன் ஒருவன் இருப்பதற்கான மிகப்பெரும் சான்று என்றும் அனைத்து மொழிகளும் சமமானவை என்றும் அறிந்து கொண்டோம். இன்னும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கும் அதை நிலைநாட்டி அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் மொழிப்புலமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மொழி எனும் ஆயுதத்தை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்ப பின்விளைவுகள் நிகழும். எனவே எப்போதும் நல்ல முறையில் மொழிப் புலமையைக் கையாளவேண்டும் என்பதை விளங்கிக் கொண்டோம். இதற்குத் தோதுவாக திறம்பட செயல்பட்டு வெற்றிபெறுவதற்கு இறைவன் நமக்கு அருள்புரிவானாக!

—————————————————————————————————————————————————————-

இணை கற்பித்தல்   தொடர்: 21

மறைவான ஞானம்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர இறைவனுடைய தன்மையை, அதிகாரத்தை, ஆற்றலைப் பெற்றவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை.

ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி வெளிப்படையான விஷயங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்க முடியும். ஒரு மனிதனுடைய மறைவானதை இன்னொரு மனிதன் அறிய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. நபிமார்களுடைய நிலைமையும், நபிகள் நாயகத்தின் நிலையும் இவ்வாறு தான் இருந்தது என்பதற்குத் திருக்குர்ஆன் பல சான்றுகளை நமக்கு முன் வைக்கிறது.

நபி இப்ராஹீம் அவர்களுக்குக் குழந்தை பெறுகின்ற நற்செய்தியை சொல்வதற்காக வானவர்களை அல்லாஹ் அனுப்புகிறான். அவர்கள் ஆச்சரியப்பட்டு, “நான் வயது முதிர்ந்தவனாக இருக்கிறேன். எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்’ என்று அவர்கள் கேட்கிறார்கள் என்ற சம்பவங்களை நாம் இதற்கு முன் பார்த்தோம்.

இப்போது நாம் பார்க்க வேண்டிய செய்தி என்னவென்றால், மலக்குகள் இப்ராஹீம் நபியைச் சந்தித்து நற்செய்தியைக் கூற வருகிறார்கள். அப்போது மனிதர்களின் உருவத்தில் வருகிறார்கள். மனித உருவத்தில் வந்தவுடன் அவர்கள் மலக்குகள் என்பதை அறியாமல் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்கள். ஆனால் மலக்குகள் அந்த உணவைச் சாப்பிடவில்லை. அவர்கள் இந்த உலகத்தில் உள்ள எந்த உணவையும் சாப்பிடவும் மாட்டார்கள். அவர்கள் முன்பாக வைக்கப்பட்ட சாப்பாட்டை அவர்கள் சாப்பிடாததைக் கண்ட இப்ராஹீம் நபிக்கு மனதிற்குள் சந்தேகம் ஏற்படுகிறது. இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.

அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:69, 70

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நம் கண்களுக்கு மலக்குகள் தென்பட மாட்டார்கள். அவர்களை நாம் பார்க்கவும் முடியாது. நம்முடன் இரண்டு மலக்குகள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை நாம் என்றைக்காவது பார்த்திருப்போமா? இல்லை.

ஆனால் மலக்குமார்கள் வருகிறார்கள் என்றால் அதை நபிமார்கள் அறிந்து கொள்வார்கள்.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் பத்ருப் போர்க்களத்தில் குதிரையில் அமர்ந்தவாறு வந்த ஜிப்ரிலைக் கண்டு, இதோ வானவர் ஜிப்ரில் தனது குதிரையில் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

மலக்குமார்கள் மனித வடிவத்தில் வந்தாலும் இவர்கள் மலக்குமார்கள் தான் என்று இறைவன் அறிவித்துக் கொடுத்தால் அவர்களுக்குத் தெரிந்து விடும்.

ஆனால் இப்ராஹீம் நபியவர்களிடம் மலக்குகள் வந்த போது, மனித வடிவில் வந்திருப்பது மலக்குகள் தான் என்பது தெரிந்ததா? அவர்களை அழைத்து உட்கார வைத்து உணவைச் சமைத்து அவர்கள் முன் வைக்கும் வரை வந்திருப்பவர்கள் மலக்குகள் என்பதை அறியாமலேயே இருந்தார்கள்.

ஏன் அவர்களால் அறிய முடியவில்லை?

மனிதனுக்குள்ள அறிவைக் கொண்டு என்ன விளங்க முடியுமோ அதைத்தான் அவர்களாலும் விளங்க முடிந்தது. நம் முன்னால் ஒருவர் மனிதத் தோற்றத்தில் வந்தால் அவர் மனிதராக இல்லாவிட்டாலும் அவரை மனிதராகத் தான் நாம் நினைப்போம். வேறு விதமாக நாம் நினைக்க மாட்டோம். அதே போன்று தான் இப்ராஹீம் நபியும் வந்திருப்பவர்கள் மனிதர்கள் விருந்தாளிகள் என்று தான் நினைத்தாரே தவிர, அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மலக்குகள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

அவர் மலக்கா? மனிதரா என்பது ஐந்து புலன்களில் வராது. அவர்கள் யார் என்பதை முன்பே அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். சிந்தித்துப் பார்த்து இவர் மலக்கா? மனிதரா? என்று அறிய முடியாது. மலக்குகளை மனிதத் தோற்றத்தில் அல்லாஹ் அனுப்பியதை ஒரு நபியால் கூட அறிய முடியவில்லை என்பதற்கு இது சான்றாக அமைகிறது. மேலும் 51வது அத்தியாயம் 28வது வசனத்திலும் இதைப்பற்றிக் கூறுகிறான்.

ஆக, இப்ராஹீம் நபியவர்களுக்கு வந்திருப்பது மலக்கு என்று தெரியாமல் போனது ஏன்? அதை அறிந்து கொள்ளும் மறைவான ஞானத்தை அல்லாஹ் அவருக்குக் கொடுக்கவில்லை.

நாம் கண், காதுகளைக் கொண்டு எவற்றை அறிகின்றோமோ அவ்வாறு தான் நபிமார்களும் அறியக்கூடியவர்களாக இருந்தார்களே தவிர, நபிமார்களுக்கு ஞானக்கண் என்ற ஒரு கண் இருக்கிறது; அவர்கள் அதைக் கொண்டு அனைத்தையும் பார்ப்பார்கள் என்று சொல்வது தவறாகும். எல்லா மனிதர்களுக்கும் இருப்பதைப் போன்று அவர்களுக்கும் இரண்டு கண்கள் இருந்ததே தவிர, அவர்களுக்கு முதுகுக்குப் பின்னால் ஒரு கண் இருக்கிறது. அவர்கள் அதன்மூலம் பின்னால் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள் என்று கட்டுக்கதைகளை நம்பி வைத்திருக்கிறார்கள்.

அந்த மலக்குகள் இப்ராஹீம் நபிக்கு நற்செய்தி சொல்லிவிட்டுப் பின்பு லூத் நபி சமுதாயத்தை அழிப்பதற்காக லூத் நபியிடம் செல்கிறார்கள்.

அவர்களுக்கும் வந்திருப்பவர்கள் மலக்குகள் என்பது தெரியவில்லை. அவர்கள் மலக்குகளுக்குண்டான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் அவரிடத்தில் வருகிறார்கள். அவர்களை மனிதர்கள் என்று நினைத்து கொண்டு, நீங்கள் யார்? நான் உங்களை இதுவரை பார்த்ததில்லையே! உங்களைப் பார்ப்பதற்கு வெளியூர் ஆட்கள் மாதிரி தெரிகிறதே! என்று அவர்களிடம் கேட்கிறார்கள். இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது “‘நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே’ என்று அவர் கூறினார்.

(அதற்கவர்கள்) “அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகித்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!என்று கூறினார்கள்.

அல்குர்ஆன் 15:61-65

இப்ராஹீம் நபிக்கும் லூத் நபிக்கும் மறைவான ஞானம் இருந்திருந்தால், மறைவான விஷயங்களை அறியக்கூடிய ஆற்றல் இருந்திருந்தால் இப்ராஹீம் நபி இப்படி நடந்து கொண்டிருப்பார்களா? அல்லது லூத் நபி இந்த கேள்வியைக் கேட்டிருப்பார்களா? கேட்டிருக்கவே மாட்டார்கள்.

“வாருங்கள்! நீங்கள் எனக்கு குழந்தை பற்றிய நற்செய்தி கூறத்தானே வந்திருக்கிறீர்கள். எங்களுக்கு நற்செய்தி சொல்லிவிட்டுப் பிறகு லூத் சமுதாயத்தை அழிக்கத்தானே போகிறீர்கள்’ என்று இப்ராஹீம் நபி அவர்கள் சொல்லியிருப்பார்களே!

“நீங்கள் இந்த சமுதாயத்தை அழிப்பதற்காகத்தான் வந்திருக்கிறீர்களா? இவர்களை அழித்து விடுங்கள். இவர்கள் யாரையும் விட்டு வைக்காதீர்கள்’ என்று லூத் நபியும் சொல்லியிருப்பார்களே!

இந்தச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அவர்களுக்குரிய அறிந்து கொள்ளும் தன்மை எல்லா மனிதர்களுக்கும் இருந்ததைப் போன்று தான் இருந்தது. மெஞ்ஞானம் எதுவும் கிடையாது. இவருக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை இந்தச் சம்பவங்கள் நமக்குக் காட்டவில்லையா?

ஜின்களுக்கு மறைவான ஞானம் உண்டா?

ஜின்கள் எனும் படைப்பு நம்மை விட வித்தியாசமான, விசித்திரமான படைப்பாக இருக்கிறார்கள். நம்மை விட எல்லாக் காரியத்தையும் விரைவாக வேகமாக செய்யக்கூடிவர்களாக இறைவன் ஜின்களைப் படைத்திருக்கிறான். அந்த ஜின்களை சுலைமான் நபிக்கு இறைவன் வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி சென்ற இதழில் நாம் பார்த்தோம்.

சுலைமான் நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் என்ற ஆலயத்தை ஜின்களின் உதவியுடன் கட்டுகின்றார்கள். இந்த ஆலயம் மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல. ஜின்கள் கட்டிய பள்ளியாகும். அந்த ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஜின்கள் கட்டுமானப் பணியை சரியாக மேற்கொள்கிறார்களா? அல்லது ஏமாற்றுகிறார்களா? என்று ஜின்களைக் கண்காணிக்கும் பணியில் சுலைமான் நபியவர்கள் ஈடுபடுகிறார்கள்.

அவ்வாறு நின்று கொண்டிருக்கும் போது, நின்ற நிலையிலேயே சுலைமான் நபியவர்கள் மரணித்து விடுகிறார்கள். அப்போது அவருடைய கையில் ஒரு கைத்தடி ஒன்றைப் பிடித்த நிலையில் இறந்து விடுகிறார்கள். அவர் இறந்து போனது அங்கிருந்த ஜின்களுக்குத் தெரியவில்லை. கட்டட வேலை முடிந்த பிறகு அல்லாஹ் கரையானை அனுப்பி வைக்கிறான். அந்தக் கரையான்கள் அவருடைய கைத்தடியை அரிக்கின்றன. கரையான்கள் அவருடைய கைத்தடியை முழுமையாக அரித்து, அவர் கீழே விழுந்த பிறகு தான் அந்த ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்து விட்டார் என்பது தெரிகிறது. இதைப்பற்றி அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:14

சுலைமான் நபி ஜின்களின் கண் முன்னே இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது மரணித்து விட்டாரா என்பது ஜின்களுக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் செய்யக்கூடிய ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்தது தெரியவில்லை. தங்களுக்கு முன்னால் சுலைமான் நபி நின்று நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்த ஜின்களுக்கு அவர் இறந்தது தெரியாமல் போனது.

இதுதான் மறைவான விஷயமாகும். எவ்வளவு பெரிய சக்தி, ஆற்றல் நமக்கு இருந்தும் கூட மறைவான விஷயங்கள் தெரியாமல் போனதே என்று அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது. மறைவான விஷயம் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால் அவர் இறந்தது தெரிந்தவுடனேயே நாம் இந்த இடத்தை விட்டு ஓடியிருக்கலாமே? இவ்வளவு சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லையே என்று புலம்பினார்கள்.

மலக்குகளுக்கும் மறைவான ஞானம் இல்லை

ஆதம் நபியை முதன் முதலாக அல்லாஹ் படைக்கும் போது மலக்குமார்கள் அதற்கு அதிருப்தியைத் தெரிவிக்கிறார்கள். மறைவான விஷயங்கள் தெரிய வேண்டுமென்றால் முதலில் ஜின்களை விட, நபிமார்களை விட மலக்குமார்களுக்குத் தான் தெரிந்திருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைக்கும் போது மலக்குமார்கள், நீ அவர்களைப் படைக்க வேண்டாம் என்கிறார்கள். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமேஎன்று கேட்டனர். “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்என்று அவர்கள் கூறினர்.

ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, “வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 2:30-32

மேற்கண்ட வசனங்கள் சுட்டிக்காட்டக்கூடிய செய்தி என்ன? இந்த ஆதம் நமக்கெல்லாம் அறிவாளியாக இருப்பார். இறைவன் வைத்த இந்தப் பரீட்சையில் வெற்றி பெற்று விடுவார் என்பது மலக்குமார்களுக்கே தெரியவில்லை.

ஏதோ இந்த மனிதர்கள் உலகில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக, ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு இரத்தம் சிந்துபவர்களாகத் தான் இருப்பார்கள் என்றே நினைத்திருந்தார்கள். எத்தகைய சிறப்புமிக்க நபிமார்களாக இருந்தாலும், ஜின்களாக இருந்தாலும், எத்தகைய வலிமை மிக்க மலக்குமார்களாக இருந்தாலும் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. இறைவனும் பல சம்பவங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துகின்றான்.

மேலும், அல்லாஹ் ஒவ்வொரு மலக்குமார்களுக்கென்று சில பணிகளை ஒதுக்கியிருக்கிறான். அவன் சொன்ன கட்டளையை ஏற்று அவர்கள் அந்தப் பணிகளை செவ்வனே செய்து வருவார்கள். அவனுடைய கட்டளைக்கு எந்த மலக்குமார்களும் மாறு செய்ய மாட்டார்கள்.

அவர்களுடைய பணிகளில் சில: 1) வஹீயைக் கொண்டு வருதல். 2) நன்மை, தீமையைப் பதிவு செய்தல். 3) உயிரைக் கைப்பற்றுதல். 4) பாதுகாவல். 5) இறைவனின் சிம்மாசனத்தை (அர்ஷை) சுமத்தல். 6) நரகத்திற்கு காவலாளிகளாக இருத்தல். 7) கருவறையில் விதியை எழுதுதல். 8) கப்ரில் விசாரணை செய்தல் போன்ற பல பணிகளை – வேலைகளை மலக்குமார்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அத்தகைய பணிகளில் ஒன்றைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 5018)

இந்த வசனத்தில் ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் செய்கின்ற நன்மை தீமையைப் பதிவு செய்வதற்கு ஒரு மலக்கு நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் அந்த மலக்கு, பிறர் செய்கின்ற நன்மை தீமையை அறியமாட்டார்.

அவருக்கென்று நியமிக்கப்பட்ட மனிதரிடத்தில் ஏற்படுகின்ற நன்மை தீமையை அறிந்து அதைத் தான் பதிவு செய்வார். பிறரைப் பற்றிய மறைவான விஷயம் அவருக்கு தெரியாது. பிறரிடத்தில் ஏற்படுகின்ற நன்மை தீமையை அவர் அறிய மாட்டார். அவ்வாறு இறைவன் அவர்களைப் படைக்கவுமில்லை. மறைவானவற்றை அறிகின்ற ஆற்றலை அல்லாஹ் கொடுக்கவுமில்லை. எனவே மலக்குமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்பது தெளிவாகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பரேலவிஷத்தின் பயங்கரவாதம்

இறைத்தூதர் இறக்கவில்லையாம்

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருப்பதாகவே பரேலவிகள் வாதிடுகின்றனர். அதற்கு அவர்கள் சில ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர். அந்த வாதங்களுக்கான மறுப்பை நாம் பார்த்து வருகிறோம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லைஎன்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1147, 2013, 3569

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் நம்மைப் போன்ற மனிதர் அல்லர் என்று கூறி, அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் ஏனைய மனிதர்களை விட வேறுபடுகின்றார்கள்; வித்தியாசப்படுகின்றார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதே சமயம், அவர்கள் அல்லாஹ்வின் அளவுக்கு உயர்ந்து விடுவார்களா? என்றால் அறவே கிடையாது.

இவ்வாறு நாம் சொல்கின்ற போது இந்த பரேலவிஷப் பேர்வழிகள், “நாங்கள் நபியவர்களை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தவில்லை’ என்று வாயளவில் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களது வாதத்தின் பொருள் இதுதான்.

நாம் தூங்கினால் உளூ முறிந்துவிடும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தூங்கினால் உளூ முறியாது. அதாவது அவர்களுக்குத் தூக்கம் இல்லை. அதனால் அவர்களுக்கு உளூ முறிவதில்லை. எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல என்பது தான் பரேலவிகளின் வாதம்.

இவர்களது பாஷையில், நம்மைப் போன்ற மனிதர் அல்ல என்று கூறிவிட்டாலே அது அல்லாஹ்வின் இடத்திற்கு உயர்த்தும் கருத்தில் தான் கூறுவார்கள். உண்மையில் அல்லாஹ்வுக்குத் தான் தூக்கம் என்பதே கிடையாது. இதைத் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.

அல்குர்ஆன் 2:255

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தூக்கம் என்பது இல்லை; எனவே அவர்கள் நம்மைப் போன்ற மனிதரல்ல, இறைவனைப் போன்ற, தூக்கம் இல்லாத நிலையில் உள்ளவர்கள் என்பது தான் பரேலவிகளின் கருத்து.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில், தமக்குத் தூக்கம் என்பதே இல்லை என்று கூறவில்லை. “எனது கண்கள் உறங்குகின்றன’ என்று இவர்களது நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றார்கள்.

இந்த ஹதீஸை மக்கள் தவறாக விளங்கிவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு ஒரு கட்டத்தில் ஃபஜ்ர் தொழுகையின் நேரத்தைத் தாண்டி தூங்க வைத்து விடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பிய போது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள் “பிலால்!என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்) தான் என்னையும் தழுவிக் கொண்டதுஎன்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், “தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!‘ (20:14) என்று கூறுகின்றான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1097

இந்த ஹதீஸில் பிலால் (ரலி) சொல்கின்ற இந்த வார்த்தை மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 39:42)

உறங்கும் போது எல்லா உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றி விடுகின்றான். காலையில் விழிக்கும் போது அவன் நாடினால் விட்டுவிடுகின்றான். இதுதான் நபி (ஸல்) அவர்களுக்கும், பிலால் (ரலி) அவர்களுக்கும் நடந்திருக்கின்றது. இதையே பிலால் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சொல்லியும் காட்டுகின்றார்கள்.

அப்படியானால் பரேலவிகள் ஆதாரமாகக் காட்டும் புகாரி 1147 ஹதீஸிற்குரிய விளக்கம் என்ன?

நபி (ஸல்) அவர்கள் வஹீயின் தொடர்பில் உள்ளவர்கள். அவர்களுடைய உள்ளத்தில் எந்த நேரத்திலும் இறைச்செய்தி வந்து கொண்டே இருக்கும்.

நம்முடைய தூக்கத்தில் விளையாடுவது போன்று ஷைத்தான் அவர்களுடைய தூக்கத்தில் விளையாட முடியாது. நாம் தூங்கும் போது நம்முடைய கண்கள், உள்ளம் ஆகிய இரண்டும் சேர்ந்தே உறங்குகின்றன.

செல்போன்களை நாம் சுத்தமாக அணைத்துவிட்டால் அதில் எந்த அழைப்பும் செய்தியும் வருவதில்லை. இதைப் போன்று நம்முடைய உறக்கம் அமைந்துள்ளது.

ஆனால் செல்போனை முழுமையாக அணைத்து வைக்காமல் சைலண்ட் மோடில் போட்டுவிடும் போது, அதில் அழைப்புகள், செய்திகள் அனைத்தும் வந்து கொண்டே இருக்கும். இதுபோன்று நபி (ஸல்) அவர்கள் உறங்கினாலும் அவர்களுடைய உள்ளம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றது.

இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். உள்ளம் உறங்காது; கண்கள் உறங்குகின்றன என்ற இந்தச் சிறப்பு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்பல்ல. அனைத்து நபிமார்களுக்கும் உரிய சிறப்பாகும். இதை புகாரியில் இடம் ஹதீஸ் விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர் களுக்கு (மீண்டும்) வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் முதலாமவர், “இவர்களில் அவர் யார்?” என்று கேட்டார். அவர்களில் நடுவிலிருந்தவர், “இவர்களில் சிறந்தவர்என்று பதிலளித்தார். அவர்களில் இறுதியானவர், “இவர்களில் சிறந்தவரை (விண்ணுலகப் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்என்று சொன்னார். அன்றிரவு இது மட்டும் தான் நடந்தது. அடுத்த இரவில் நபி (ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்க்கின்ற நிலையில்-(உறக்க நிலையில்)- அம்மூவரும் வந்த போது தான் அவர்களைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் தான் உறங்கும்; அவர்களுடைய உள்ளம் உறங்காது. இறைத்தூதர்கள் இப்படித் தான். அவர்களின் கண்கள் உறங்கும்; அவர்களுடைய உள்ளங்கள் உறங்க மாட்டா. ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வானத்தில் ஏறிச் சென்றார்கள்.

நூல்: புகாரி 3570

அதனால் தான் நபிமார்களின் கனவுகளும் வஹீயாக அமைந்திருக்கின்றன. அவை இறைக் கட்டளைகளாகவும் முன்னறிவிப்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக இப்ராஹீத் நபி அவர்களின் அவர்களின் கனவைக் கூறலாம்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறுஎன்று (இப்ராஹீம்) கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார். (அல்குர்ஆன் 37:102)

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் காட்சிகளைக் காட்டிது தொடர்பான வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றிரண்டு வசனங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான். (அல்குர்ஆன் 48:27)

நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் மக்காவிற்குச் சென்று உம்ரா செய்வதை அல்லாஹ் கனவின் மூலமாகத் தான் முன்னறிவிப்புச் செய்கின்றான்.

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாரும்! அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:43

நபி (ஸல்) அவர்களுக்கு பத்ருப் போர் வெற்றி பற்றிக் கூறி உளவியல்ரீதியான தைரியத்தை கனவின் மூலம் அளிக்கின்றான்.

இந்தக் கனவுகளில் ஷைத்தான் தன்னுடைய கலப்படத்தை ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில் வஹீ என்ற பாதுகாப்பு வளையத்திலும் வட்டத்திலும் உள்ள கனவாகும். ஆனால் நம்முடைய கனவுகளில் ஷைத்தான் விளையாடுவான்.

நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமி ருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பி விட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற் படுத்த முடியாதுஎன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப், நூல்: முஸ்லிம் 4213

கண்கள் உறங்குகின்றன; உள்ளம் உறங்கவில்லை என்ற ஹதீஸின் பொருள், நபி (ஸல்) அவர்கள் விழித்திருக்கும் போது எப்படி அவர்களது உள்ளம் பாதுகாப்பாக உள்ளதோ அதே போன்று உறங்கும்போதும் பாதுகாப்பாக உள்ளது. ஷைத்தான் மற்றவர்களிடம் உறக்கத்தில் குப்பை கூளங்களைக் கொட்டுவது போன்று நபிமார்களிடம் செய்ய முடியாது என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்களது உள்ளம் விழிப்பில் இருப்பதால் அவர்களுக்கு உறக்கத்தில் உளூவை முறிக்கும் காரியங்கள் நிகழ்ந்தாலும் அது தெரிந்துவிடும். இதனால் அவர்களது உளூவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது தான் மேற்கண்ட ஹதீஸின் பொருளே தவிர, நபி (ஸல்) அவர்கள் மனிதத் தன்மையைத் தாண்டி, தூக்கம் மறதி போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட கடவுள் நிலையில் உள்ளவர்கள் என்று ஒருபோதும் விளங்க முடியாது.

பரேலவிகளின் இந்த வாதம் பைத்தியக்காரத்தனமான வாதமாகும். இவர்கள் எடுத்துக்காட்டியிருப்பது ஆதாரம் அல்ல, அபத்தமாகும்.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற கருத்துக்கு இவர்கள் எடுத்து வைக்கும் பொருந்தாத ஆதாரங்களை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.

—————————————————————————————————————————————————————-

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

பின்த் ஜமீலா, மேலப்பாளையம்

ஒரு ஆண், பெண்ணிலிருந்தே இந்த மனித சமுதாயத்தை இறைவன் படைத்துள்ளான். மனிதன் பிறக்கும் போதே தாய், தந்தை, அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான் என்ற உறவுகளோடு தான் பிறக்கின்றான். அவன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதற்கு உட்பட்டே ஆக வேண்டும்.

தாய்க்குப் பின் தாரம் என்று கூறுவார்கள். திருமண பந்தத்தின் மூலமாகவே இந்த மனித சமுதாயம் பல்கிப் பெருகிவருகின்றது. தனியாக யாரும் வாழ முடியாது. ஒருவரையொருவர் சார்ந்தே வாழவேண்டியுள்ளது.

அவ்வாறு சேர்ந்து வாழும் போது பெற்றோர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் ஒருவர் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. ஒருவொருக்கொருவர் உதவி செய்தல், பொறுமையை மேற்கொள்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற நற்பண்புகளோடு சேர்ந்து வாழும் போது தான் மனித வாழ்க்கைப் பயணம் நிம்மதியாக இனிமையாகச் செல்லும்.

கூட்டுக் குடும்பம் என்றால் என்ன? கூட்டுக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வாறு நடந்து கொள்கின்றனர்? கூட்டுக் குடும்ப வாழ்க்கையினால் ஏற்படும் சாதகங்களும் பாதகங்களும் என்ன? இது மார்க்கத்தின் அடிப்படையில் சரிதானா? என்பதைப் பார்ப்போம்.

(சொத்தைப் பிரிக்காமல்) இணைந்து வாழும் குடும்ப முறைக்கு கூட்டுக் குடும்பம் என்று சொல்லப்படுகின்றது.

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்ளும் முறைகள் சிலவற்றையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் இங்கு பார்ப்போம்.

மாமியார் – மருமகள் பிரச்சனை

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது மாமியார், மருமகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளாகும்.

தனது மகனுக்குத் திருமணம் ஆனவுடன் ஒரு தாயாருக்கு ஏற்படும் கவலை, நம்மீது பாசம் காட்டாமல் நம்மைக் கவனிக்காமல் செலவுக்குப் பணம் தராமல் மருமகளோடு தன் மகன் போய்விடுவானோ? என்ற பயம் கலந்த ஏக்கம் ஏற்படுகின்றது. இந்த மனநிலையின் காரணமாகப் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன.

மகளாகப் பார்க்கப்பட வேண்டிய மருமகள் அந்நியப் பெண்ணாக கருதப்படுகின்றாள். தனது மகனிடம் மருமகளைப் பற்றிக் கோள் மூட்டி, சண்டைகளை (கணவன், மனைவிக்கு மத்தியில்) உருவாக்குகின்றனர். இது மார்க்கத்தில் மிகவும் கண்டிக்கப்பட்ட செயலாகும். இணக்கம் ஏற்படுத்துவதற்காக பொய் சொல்வதைக் கூட மார்க்கம் அனுமதிக்கின்றது என்றால் இணக்கமாக வாழும் கணவன், மனைவியைப் பிரிக்க நினைப்பது எத்தகைய பாவம் என்பதை அறியலாம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் மற்றோர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்தால், அவருடைய குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைக்காமல் இருப்பதில்லை.

நூல்: முஸ்லிம் 5050

உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

  1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
  2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
  3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

நூல்: முஸ்லிம் 5079

சில வீடுகளில் மாமியார்கள் செய்யும் சில நாகரீமற்ற செயல்கள் குடும்ப ஒற்றுமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

வெளியே சென்று வரும் மகன், மருமகள் ஆகிய இருவரும் தின்பண்டங்கள் முதல் ஆடைகள் வரை என்னென்ன பொருட்களை தங்கள் கையில் எடுத்து வருகின்றார்கள் என்பதைக் கவனிப்பது.

மகனும் மருமகளும் வீட்டில் இல்லாத சமயங்களில் அவர்களுடைய அறையைச் சென்று பார்வையிடுவது.

அவர்களின் அறைகளில் நடக்கும் விஷயங்களை ஒட்டுக்கேட்பது.

இதுபோன்ற செயல்கள் நிச்சயமாகக் குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வ-ந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) “தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். எவர் (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறாரே அவர்அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 7042

ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள். அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்என்று கூறி விட்டு, “(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்கவேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே  பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக்கூடும் என்ற) காரணத்தால் தான்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி), நூல்: முஸ்லிம் 4358

சில வீடுகளில் அளவுக்கு மீறிய வேலைகளை மருமகள்களுக்குக் கொடுத்து, கசக்கிப் பிழிகின்றனர். இதனாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு கணவன், மனைவியிடையே பிணக்கு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்று விடுவதைப் பார்க்கிறோம்.

மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) “ரபதாஎனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், “அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்துகொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?” என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:

எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப் பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, “அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்என்று கூறிவிட்டு, “(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3417, புகாரி 6050

மருமகள் என்றால் அவள் கணவன் வீட்டிற்காக உழைப்பதற்காகவே வந்திருக்கின்றாள் என்பதைப் போன்று நன்றாக வேலை வாங்குகின்றனர். அத்தனை வேலை பார்த்தாலும், அவளுக்குப் பசி எடுக்கும் போது உடனே சாப்பிட்டுவிட முடியாது. பாரம்பரிய கலாச்சாரம் என்ற பெயரில் அனைவருக்கும் இறுதியில் தான் சாப்பிட வேண்டும். அதுவும் அளவாகத் தான் சாப்பிடவேண்டும். அவள் சாப்பிடும் அளவை மற்றவர்களிடம் கூறி சில மாமியார்கள் கேவலப்படுத்துவதுண்டு. சில குடும்பங்களில் காலை உணவே கிடையாது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அடிமை முறை இருந்தது. அந்த அடிமைகளுக்குக் கூட இதுபோன்ற உணவு வகையில் இதுபோன்ற ஒரு பாரபட்சம் காட்டப்பட்டதில்லை.

கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள்  அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் “அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லைஎன்றார். “உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடுஎன்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 1819

நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:

என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்து கொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 5033

வீட்டிற்கு வந்த மருமகளின் ஏழ்மை நிலையைச் சுட்டிக்காட்டுவதற்காக எவ்வளவு பணம், நகை, பொருட்கள் கொண்டு வந்தாய் என்று அவளையும் அவளது குடும்பத்தாரையும் இழிவாகப் பேசி மட்டம் தட்டும் நிலையையும் குடும்பங்களில் பார்க்கிறோம்.

நம்பிக்கை கொண்டோரே ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். எந்தப் பெண்ணும் இன்னொரு பெண்ணை கேலி செய்யவேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூறவேண்டாம்.

அல்குர்ஆன் 49:11

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 10

நபி (ஸல்) அவர்கள் “தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்என்று கூறினார்கள். அப்போது “(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்என்று சொன்னார்கள். “அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்என்றார்கள். “(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “அவர் “நல்லதைஅல்லது “நற்செயலை‘(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்என்றார்கள். “(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?” என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், “அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி), நூல்: முஸ்லிம் 1834

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் “(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்என்று சொன்னார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்தி-ருந்தும் தொல்லையி-ருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு)நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி)பெறுகின்றனஎன்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி), நூல்: புகாரி 6512

ஒரு பெண்ணை, அவளது மாமியார் தனது பேரக்குழந்தைகள் முதல் மச்சான், கொழுந்தன், உறவுக்காரர்கள் உட்பட இவர்கள் அனைவரின் முன்னிலையிலும் அவளைக் கண்டித்து, கேவலப்படுத்தி, அவளின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் நிலை பல குடும்பங்களில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5010

மாமியார் மருமகளிடையே ஏற்படும் இன்னும் பல பிரச்சனைகளையும் அது குறித்த மார்க்கத்தின் நிலைபாட்டையும் இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

—————————————————————————————————————————————————————-

மறக்க முடியாத மார்க்கத் தீர்ப்புகள்

1984-85 ஆண்டுகளில் துபையில் செயல்பட்டு வந்த இஸ்லாமிய எழுச்சி மையம் என்ற அமைப்பு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரபிக் கல்லூரிகளுக்கும் மத்ஹபு, மவ்லீது, தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு, கொடியேற்றம், வஸீலா, முஹ்யித்தீன் திக்ர் போன்ற விவகாரங்கள் குறித்து மார்க்கத் தீர்ப்பு கேட்டுக் கடிதம் எழுதியிருந்தனர்.

சங்கரன்பந்தல் ஃபைலுல் உலூம் அரபிக்கல்லூரி அந்தக் கேள்விகளுக்கு விருப்பு வெறுப்பின்றி, பயம், பயன் ஏதுமின்றி அல்லாஹ்வைப் பயந்து மார்க்க தீர்ப்பு அளித்தது.

இந்த மார்க்கத் தீர்ப்புகளை ஆவணமாக்கும் நோக்கில் இவற்றை ஏகத்துவத்தில் வெளியிடுகின்றோம்.

சில பலவீனமான ஹதீஸ்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன. ஆரம்ப கட்டத்தில் ஹதீஸ்களை மட்டும் தெரிந்த காலம். ஹதீஸ் துறையின் நுழைவாயிலில் இருந்த தருணம் அது. அதனால் இந்த ஃபத்வாக்களில் சில பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இப்போது அடையாளம் காட்டியுள்ளோம்.

அன்று சொன்ன அதே கொள்கையில் மரணிக்கும் வரையில் எங்களை அல்லாஹ் ஆக்கி வைப்பானாக என்று மனமுருகப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

கேள்வி: இக்காலத்தில் ஹனஃபீ, ஷாபி, மாலிகி, ஹன்பலி ஆகிய நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது அவசியமா?

புதில்:  நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது அவசியமா? என்ற முடிவுக்கு வருவதற்கு முன்னால் மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றுவது கூடுமா என்பதையும், கூடும் என்றால் எந்த அடிப்படையில், எந்த விதிகளுக்குட்பட்டு அது கூடும் என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். பின்பற்றப்படத்தக்கவை எவை என்பதை பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கிறது என்று நாம் பார்ப்போம்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள். குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.(அல்குர்ஆன் 7:3)

உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது. (அல்குர்ஆன் 29:51)

மேற்கூறிய இருவசனங்களில் திருக்குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா வலியுறுத்திக் கூறுகிறான். எனினும் மேலும் சில வசனங்களை நாம் ஆராயும் போது அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் பின்பற்றி ஆக வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகிறான். அவற்றை கீழே காண்போம்.

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தமது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழிகெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.  (அல்குர்ஆன் 28:50)

அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிரவேறில்லை.  (அல்குர்ஆன் 53:3, 4)

அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர். (அல்குர்ஆன் 4:61)

அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை நோக்கியும் வாருங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?  (அல்குர்ஆன் 5:104)

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:7)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள்; அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்ற மேற்கண்ட வசனங்களிலிருந்து, அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் மட்டுமே கட்டுப்பட வேண்டும். வேறு எவருக்கும் சட்டமியற்றும் அதிகாரம் இல்லை என்பதை இறைவன் தெளிவாக்குகிறான். இதற்கு மாறாக வேறு எவராவது, தங்கள் சொந்த சட்டங்களைத் திணிக்க அதிகாரம் படைத்தவர்கள் என்று கருதினால் அவர்கள் (அவ்வாறு கருதுபவர்கள்) அந்த சட்டத்தைத் திணிப்போரை ரப்பாக ஆக்கிக் கொண்டார்கள் என்பது தான் அல்லாஹ்வின் கருத்து என்பதை கீழ்க்காணும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். (அல்குர்ஆன் 9:31)

இந்த வசனம் இறங்கியவேளை அதீ இப்னு ஹாதம் என்ற நபித்தோழர் ஒருவர் நாங்கள் அவர்களை வணங்கியதில்லையே! (எப்போது அவர்களை நாங்;கள் கடவுள்களாகக் கருதினோம்) என்று கேட்டபோது அவர்கள் (மதகுருமார்கள்) அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராம் என்று சொன்ன போதும், அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் என்று சொன்ன போதும் நீங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள் அல்லவா? அது நீங்கள் வணங்கியதற்கு நிகராகும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானா “குதைஃப் இப்னு அஃயன் என்பார் பலவீனமானவர் ஆவார். )

மேலும் இதுபற்றி வந்துள்ள முஹம்மது (ஸல்) அவர்களின் அருளுரைகளைக் காண்போம்:

அல்லாஹ்வுடைய வேதம், எனது வழிமுறை இரண்டையும் உங்களிடம் நான் விட்டுச் செல்கிறேன். அவ்விரண்டையும் பின்பற்றும் வரை நீங்கள் வழிதவற மாட்டீர்கள்.

(குறிப்பு: மேற்கண்ட வாசகத்தைக் கொண்டு அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் அறிவிப்பாளர் தொடர் ரீதியாக பலவீனமானதாகும் என்றாலும் குர்ஆன்,  ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதை உறுதிப்படுத்தும் ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஸஹீஹான ஹதீஸ்களும் உள்ளன.)

நமது அனுமதி இல்லாத எந்தவொரு அமலையும் யார் செய்தாலும் அது நிராகரிக்கப்படும்.   (புகாரி 7349)

ஒரு புதியதொரு காரியத்தை யாரேனும் உருவாக்கினாலோஅல்லது அதற்கு ஆதரவு அளித்தாலோ அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்கள் அத்தனை பேர்களின் சாபமும் அவன் மீது ஏற்படும். (புகாரி 1867)

மேற்கூறிய சான்றுகளிலிருந்து அல்லாஹ்வும், அவனது தூதரும் சட்டுமே சட்டமியற்றுவதற்கான உரிமையும், அதிகாரமும் படைத்தவர்கள் என்பதைத் தெளிவாகத் தெரிய முடிகிறது.

எனினும் நபி (ஸல்) அவர்கள், எனது வழிமுறையையும், நேர்வழியில் சென்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்

நூற்கள்: இப்னுமாஜா (42), திர்மதி (2600), அபூதாவூத் (3991)

“இஸ்ரவேலர்கள் எழுபத்திரண்டு பிரிவினர்களாக பிளவுபட்டனர். எனது உம்மத்தினர்கள் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிளவுபடுவர். ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் நரகில் நுழைவார்கள்” என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய போது, “அந்த ஒரு பிரிவினர் யார்? அல்லாஹ்வின் தூதரே” என்று சஹாபாக்கள் கேட்க, “இன்றைய தினம் நானும், எனது தோழர்களும் எந்தக் கொள்கையின் மீது இருக்கின்றோமோ அந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களே அவர்கள்” என முஹம்மது (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இதிலிருந்து கலீபாக்கள் காலத்தில் சஹாபாக்களால் செய்யப்பட்ட ஏகோபித்த முடிவையும் பின்பற்றலாம் என்று தெளிவாகிறது. இதனை இஜ்மா என்று கூறுவர். ஆனால் இந்த சஹாபாக்களின் முடிவு குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் முரணாக இருப்பது தெரிய வந்தால் அப்போது குர்ஆன் ஹதீஸின் முடிவே முதலிடம் பெறவேண்டும்.

(குறிப்பு : ஆரம்ப காலத்தில் நமது ஆய்வுக் குறைவின் காரணமாக இஜ்மா என்பது ஒரு ஆதாரம் என்று நாம் கருதி இருந்தோம். அது தவறு என்று தெரிந்த பின் அதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி பகிரங்கமாக விவாதத்திலும் நிரூபித்து விட்டோம்.

யூத, கிறித்தவர்கள் எழுபத்தியிரண்டு பிரிவினர்களாக பிளவுபட்டனர். எனது உம்மத்தினர்கள் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிளவுபடுபடுவர் என்ற வாசகத்தைக் கொண்டு மட்டும் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் சரியானவையாக உள்ளன.

மேலும் யூத, “கிறித்தவர்கள் எழுபத்தியிரண்டு பிரிவினர்களாக பிளவுபட்டனர். எனது உம்மத்தினர்கள் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிளவுபடுபடுவர். அதில் எழுபத்தியிரண்டு பிரிவினர் நரகம் செல்வர். ஒருபிரிவைத் தவிர. அதுதான் “அல்ஜமாஅத்’ ஆகும்” (அபூதாவூத் 3981)

இது தவிர விளக்கமாக ஏனைய வாசகங்களில் வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன)

அல்லாஹ்வுக்கும் கட்டுப்படுங்கள். அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். உங்களில் அதிகாரம் வகிப்போருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் அதனை ஒப்படைத்துவிடுங்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்புவோர்களாக இருந்தால் இதுவே சிறந்ததும், அழகிய முடிவுமாகும். (அல்குர்ஆன் 4:59)

மேலும் முஆது இப்னு ஜபல் அவர்களை யமன் நாட்டிற்குப் பொறுப்பாளராக முஹம்மது (ஸல்) அவர்கள் அனுப்பும் போது, குர்ஆன் ஹதீஸிலிருந்து அவருக்கு ஆதாரம் கிடைக்காத போது சிந்தித்து முடிவெடுக்க அனுமதியளித்ததிலிருந்து குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமையும் உண்டு என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. (நூல்: திர்மிதி, அபுதாவூத், தாரமி, மிஷ்காத் 324)

(குறிப்பு: இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹாரிஸ் பின் அம்ர்’ என்பார் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார். மேலும் இவருடைய ஆசிரியரும் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.)

மேற்கூறிய வினாவில் குறிப்பிடப்பட்ட மத்ஹபுகளின் இமாம்களும் கூட குர்ஆனையும்,  ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை மிகத் தெளிவாகவே கூறியுள்ளனர்.

ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக இருந்து மத்ஹபுக்கு மாற்றமாக இருந்தாலும் ஹதீஸ் அடிப்படையிலேயே ஒருவன் செயல்பட வேண்டும். அதுவே (அந்த ஹதீஸே) அவனது நடைமுறையாக அமையவேண்டும். இவ்வாறு செய்துவிட்ட காரணத்தினால் அவன் ஹனஃபீ என்ற பெயரை விட்டும் நீங்கிவிடமாட்டான். ஏனெனில் ஹனஃபீ மத்ஹபின் இமாம் அவர்களே,  ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமையும் போது அதுவே எனது மத்ஹபாகும் என்று கூறியுள்ளார்கள். (அவர்கள் மட்டுமல்ல) ஏனைய மூன்று இமாம்களும் இதனையே கூறியுள்ளனர் என்று இமாம் அப்துல்பர்ரு, இமாம் ஷஃரானி ஆகிய இருவரும் எடுத்தியம்புகின்றனர். (ஆதாரம்: ரத்துல் முஹ்தார் பாகம்: 1, பக்கம்:4)

மத்ஹபைப் பின்பற்றுவோர் ஆதாரங்களைத் தாங்களே ஆராயமுற்பட்டு அதன்படி செயல்படும்போது அந்த மத்ஹபோடு அவன் கண்ட ஆதாரத்தையும் சேர்க்கலாம். ஏனெனில் மத்ஹபின் இமாமே அவ்வாறுதான் கூறியுள்ளார். மேலும் அந்த இமாமுக்கு தனது ஆதாரத்தின் பலவீனம் தெரிந்திருந்தால் அந்த பலவீனமான ஆதாரத்திலிருந்து விலகி, பலமான ஆதாரத்தையே பின்பற்றியிருப்பார் என்பதில் ஐயமில்லை. (ரத்துல் முஹ்தார்)

இதிலிருந்து மத்ஹபுக்கு மாற்றமாக ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸை நாம் காணும் போது அந்த இமாமுக்கு இந்த ஹதீஸ் கிடைக்காமல் இருந்திருக்கும். கிடைத்திருந்தால் அவர்களும் இந்த ஹதீஸின் படியே சட்டம் வகுத்திருப்பார்கள் என்று கருதுவது தான் உண்மையில் இமாம்களுக்கு அளிக்கப்படும் கண்ணியமாகும். அவ்வாறு சொல்ல நாம் தயங்கினால் ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கு மாற்றமாக அந்த இமாம் நடந்துவிட்டார் என்ற பழியை அவர் மீது நம்மை அறியாமலேயே நாம் சுமத்தி விடுகிறோம்.

—————————————————————————————————————————————————————-

ஆய்வுக்கூடம்

சிறுவர் இமாமத் செய்யலாமா?

கடந்த 2014 ஜனவரி மாத மனாருல் ஹுதா எனும் இதழில் மௌலான பதில்கள் எனும் பகுதியில் ஒருவர் பின்வருமாறு கேள்வியை எழுப்புகிறார்.

? பெரியவர்கள் நிறைந்த ஜமாஅத்திற்கு பருவ வயதை அடையாத பத்து வயதிற்கும் குறைவான சிறுவர் இமாமத் செய்யலாமா?

இக்கேள்விக்கு மௌலானா (?) அவர்கள் பதில் அளிக்கும் போது

பருவ வயதை அடையாத சிறு பிள்ளைகளுக்குத் தொழுகை கடமை இல்லை. எனவே அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது. அது பர்ளு தொழுகையாக இருந்தாலும் இதே சட்டம் தான். எனவே இவர்களைப் பின்பற்றித் தொழுதால் அத்தொழுகையைப் திருப்பித் தொழ வேண்டும்.

நூல்: தஹ்தாவீ 157

அச்சிறுவன் விளக்கமுள்ள சிறுவனாக இருந்தால் அப்பொழுது அவனைப் பின்பற்றித் தொழலாம் என்பது ஷாபி மத்ஹப் சட்டம்.

இவ்வாறு மௌலானா (?) விளக்கம் அளித்திருந்தார்.

மௌலானா (?) அளித்திருக்கும் இந்தப் பதில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியானது தானா? என்பதை அலசுவோம்.

இந்த ஃபத்வாவை மௌலானா அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அளித்திருந்தால் அதற்கு ஆதாரமாக இறை வசனங்களையோ நபிமொழிகளையோ குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எதையும் குறிப்பிடாமல் மத்ஹபு நூல்களில் உள்ள மனிதக் கருத்துக்களை தன் (மார்க்கத் தீர்ப்புக்கு) ஃபத்வாவுக்கு ஆதாரமாக்கியுள்ளார். குர்ஆனிலோ ஹதீஸிலோ இதற்கான விளக்கத்தைத் தேட அவர் முன்வரவில்லை. மாறாக மத்ஹபு நூலே தமக்குப் போதும் என்று இருந்துவிட்டார்.

சிறுவன் இமாமத் செய்யலாமா? என்பது தொடர்பாக இறைக் கருத்தை தேட முன்வராமல் மனிதக் கருத்திலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஃபத்வா எப்படி மார்க்க ஃபத்வாவாக ஆகும். இதுவே இந்தத் தீர்ப்பு குர்ஆன் சுன்னா அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்ப்பல்ல என்பதை உறுதி செய்கிறது.

மேலும் ஷாபி மத்ஹபின் படி சிறுவன் விபரமுள்ளவனாக இருந்தால் இமாமத் செய்யலாம் என்றும் அதே ஃபத்வாவில் கூறுகிறார்.

சிறுவன் இமாமத் செய்யலாம் என்பதும், செய்யக் கூடாது என்பதும் முரண்பாடான இரு சட்டங்கள். ஒரு மத்ஹபு கூடும் என்கிறது. இன்னொரு மத்ஹபு கூடாது என்கிறது. இரண்டில் ஒன்று தான் சரியாக இருக்க முடியும் எனும் போது, ஷாபி மத்ஹபில் கூடும்; ஆனால் ஹனபி மத்ஹபில் கூடாது என்று சொல்லப்படும் இந்த பதிலில் உள்ள முரண்பாடே இது குர்ஆன் சுன்னா அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை மேலும் உறுதி செய்கிறது.

அப்படியெனில் இது தொடர்பாகக் குர்ஆன் ஹதீஸ் என்ன சொல்கிறது?

இமாமத் செய்பவரின் தகுதியை நபி (ஸல்) அவர்கள் சொல்லும் போது குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். அவர்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்தவர்களாய் இருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். ஒருவரது வீட்டிலோ அல்லது ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ (அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவருடைய வீட்டில் “அவர் உங்களுக்கு அனுமதியளித்தால் தவிரஅல்லது “அவரது அனுமதியின்றிஅவரது விரிப்பின் மீது நீங்கள் அமராதீர்கள்.

நூல்: முஸ்லிம் 1193

குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் இமாமத் செய்பவருக்கு இருக்க வேண்டிய முதல் தகுதியாகும். இதற்கு அடுத்து தான் பெரியவராக இருக்க வேண்டும் என்பதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே சிறுவராக இருந்தாலும் குர்ஆனை நன்கு தெரிந்தவராக இருப்பின் தாராளமாக பெரியவர்களுக்கு இமாமத் செய்யலாம் என்பது தான் ஹதீஸிலிருந்து கிடைக்கும் தீர்வாகும்.

இதைப் பின்வரும் நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றிச் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்என்று சொன்னார்கள்எனக் கூறினார்கள்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணி) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

நூல்: புகாரி 4302

அம்ர் பின் ஸலமா (ரலி) அவர்கள் சிறுவராக இருந்த போதும் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருந்த காரணத்தினால் பெரியவர்கள் நிறைந்த ஜமாஅத்திற்கு இமாமத் செய்துள்ளார்கள். வஹீ அருளப்பட்ட காலத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் இது தவறாக இருந்தால் இதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். ஆனால் நபியவர்கள் கண்டிக்கவில்லை.

எனவே சிறுவர் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தால் பெரியவர்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதைத் தெளிவாக இந்த நபிமொழிகள் எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நபிமொழியில் தெளிவாக இமாமத் செய்யலாம் என்று இருந்தும் ஹதீஸைக் குறிப்பிடாமல் மத்ஹபு நூல்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?

இந்நிலையில் சிறுவர் பெரியவர்களுக்குத் தொழ வைத்தால் மக்கள் அந்தத் தொழுகையை திருப்பி தொழ வேண்டும் என்று வேறு அந்தப் பதிலில் குறிப்பிடுகிறார்கள். என்ன கொடுமை இது?

இனியாவது கேள்விக்குப் பதிலளிக்கும் போது தகுந்த ஆதாரத்தை குர்ஆன் ஹதீஸிலிருந்து குறிப்பிடுவார்களா? அல்லது வழக்கம் போல் மௌலானாவின் பதில்கள் என்று கண்டதையும் உளறுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு: தொழுகையில் சிறுவர்களையும் விபரமில்லாதவர்களையும் இமாமாக முன்னிறுத்தாதீர்கள் என்று அலீ (ரலி) அவர்களின் கூற்றாக தைலமீ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமான அறிவிப்பாகும். மேலும் இவ்வாறு நபிகள் நாயகம் கூறியதாக ஆதாரப்பூர்வமான ஏற்கத்தக்க எந்தச் செய்தியும் இல்லை.

இவ்வாறு கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இது அடிப்படையற்ற செய்தி என்பதை அறிஞர்களும் உறுதி செய்துள்ளார்கள்.