தலையங்கம்
பாலியல் குற்றத் தடுப்பு மசோதாவும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையும்
கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் 23 வயது மாணவியை ஓடுகின்ற பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் கற்பழித்து, அவள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதன் பின்னர் 13 நாட்களாக நடந்த தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அந்தப் பெண் உயிரிழந்தாள்.
அவள் உயிருடன் இருக்கும் போதும், இறந்த பின்பும் இந்தியா முழுவதும் மக்கள் கொந்தளித்தனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு போர் முழக்கமே நடைபெற்றது. இதன் மூலம் பாலியல் கொடுமைகள், கற்பழிப்புகள், வல்லுறவுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று நாமும் எதிர்பார்த்தோம்.
அதற்கேற்ப மத்திய அரசும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வர்மாவின் தலைமையில் ஒரு கமிட்டியை டிசம்பர் 23, 2012 அன்று நியமித்தது. இந்தக் கமிட்டியில், நீதிபதி வி.எஸ். வர்மாவுடன் ஓய்வு பெற்ற நீதிபதி லீலா சேத், அரசு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பெண்களுக்கு எதிராகப் பாலியல் குற்றங்கள் இழைப்பவர்களுக்குத் தண்டனையை அதிகரிப்பது, விரைவாக விசாரணையை முடிப்பதற்கு ஏற்ற வகையில் இந்தியக் குற்றவியல் சட்டத்தில் செய்ய வேண்டிய தேவையான மாற்றங்கள் குறித்து பரிந்துரை செய்யுமாறு இந்தக் கமிட்டியிடம் மத்திய அரசாங்கம் கோரியிருந்தது.
இதன் அடிப்படையில் இக்குழு தனது அறிக்கையை ஜனவரி 23, 2013 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
அதன் பரிந்துரைகளில் முக்கியமானவை இதோ:
* கற்பழிப்புக் குற்றமிழைப்பவர்களுக்கு ஏழாண்டுகளுக்குக் குறையாத, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எனினும் அதை ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கலாம்.
* கற்பழிப்பின் காரணமாக மரணத்தை ஏற்படுத்துவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத கடுமையான சிறைத் தண்டனை வழங்க வேண்டும். எனினும் அதை ஆயுள் தண்டனையாகவும் நீட்டிக்கலாம்.
இதுதான் நீதிபதி வர்மா கமிட்டியின் முக்கியப் பரிந்துரைகளாகும்.
வர்மா கமிட்டியின் அறிக்கை, குற்றவியல் சட்டத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் அறிக்கை என்று எதிர்பார்த்தோம். ஆனால் சாதாரண சிறைத் தண்டனையைப் பரிந்துரை செய்கின்ற வெறும் ஏமாற்ற அறிக்கையாக ஆகிவிட்டது.
இந்த உண்மையை உணர்ந்த மத்திய அரசு அந்தப் பரிந்துரையைப் பின்பற்றாமல், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் பிப்ரவரி 3, 2013 அன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலம் ஓர் அரசாணையைப் பிறப்பித்தது. அந்த அரசாணையில், மரணத்திற்குக் காரணமாக அமைகின்ற கற்பழிப்புக் குற்றங்களுக்கு மரண தண்டனை என்று குறிப்பிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அரசாணைக்கு மனித உரிமைக் கழகங்களிலிருந்து கடுமையான ஆட்சேபணைகளும் கண்டனங்களும் எழுந்தன. மரண தண்டனை, வர்மா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் குரல் எழுப்பினர்.
இந்த அரசாணை பின்னர் ஒரு சில மாற்றங்களுடன் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு மசோதாவாக 19, மார்ச் 2013 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கலாகியிருக்கின்றது.
இந்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள்:
* பெண்கள் மீது அமில வீச்சுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
* பாலியல் பலாத்காரம், குழுவாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத தண்டனை! இதை ஆயுள் தண்டனையாக நீட்டிக்கவும் செய்யலாம்.
* ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை.
இந்த மசோதாவைத் தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, “இந்த மசோதா துணிச்சல் மிகுந்த ஒரு பெண்ணுக்கு அளிக்கும் மரியாதை” என்று குறிப்பிட்டார்.
டெல்லியில் பேருந்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட மாணவியைத் தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அந்தப் பெண் செய்தது ஒன்றும் துணிச்சல் மிகுந்த காரியம் அல்ல; சாகசமும் அல்ல. காதலனுடன் சென்றவள், காமுகர்களிடம் மாட்டிக் கொண்டாள். அவ்வளவு தான்.
சர்வ சாதாரணமாக சில பெண்கள் செய்கின்ற தப்பைத் தான் அவளும் செய்தாள். ஆனால் இவள் சிக்கலில் மாட்டிக் கொண்டாள். இதைத் துணிச்சல் என்று உள்துறை அமைச்சர் பாராட்டும் அளவுக்கு இங்கு ஒன்றுமில்லை.
ஒரு பேச்சுக்குத் துணிச்சல் என்றே வைத்துக் கொள்வோம். ஷிண்டே சொல்வது போன்று இந்த மசோதா அந்தப் பெண்ணுக்கு அளிக்கும் மரியாதையா என்றால் நிச்சயமாக இல்லை. காரணம், மார்ச் 8ம் தேதியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராணி லட்சுமி என்ற விருதை கொலையுண்ட அப்பெண்ணுக்காக அவரது தாயாரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் அந்தப் பெண்ணின் தந்தை, சற்று நிலைகுலைந்து, தன் மகனைத் தாங்கிப் பிடித்தவராக, “விருதுகளும் நிதி உதவிகளும் இறந்த என் மகளைத் திரும்பக் கொண்டு வருமா? ஒவ்வொரு நொடிப் பொழுதும் என் மகளை இழந்து தவிக்கிறேன். என் உள்ளம் கொதிக்கின்றது; குமுறுகின்றது. இமைகளில் உறக்கம் தழுவவில்லை. என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இந்த சோகக் கட்டத்தில் நாடு என்னுடன் துணை நிற்கின்றது. அதற்கு நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன். நாங்கள் எளிமையானவர்கள். எங்கள் கோரிக்கைகளும் எளிமையானது. எனது மகளைக் கற்பழித்து, கொடுமை செய்து கொன்ற அந்தக் கயவர்களைக் கழுவேற்றுங்கள்! அந்தத் துரோகிகளைத் தூக்கிலிடுங்கள். சிறுவன் என்ற பெயரில் வெறியாட்டம் போட்டு என் மகளைக் கொலை செய்த அந்தக் கொலைகாரனையும் தூக்குக் கயிற்றில் தொங்கவிடுங்கள்” என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
இதுதான் பாதிக்கப்பட்டவரின் மனநிலை! இந்த மனநிலையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதா பிரபதிலிக்கவில்லை. அப்படிப் பிரதிபலித்தால் தான் பாலியல் பலாத்காரத்திற்குப் பலியான அந்தப் பெண்ணுக்குச் செய்யும் மரியாதையாகவும், இதர பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகாமல் தடுக்கும் பாதுகாப்பு அரணாகவும் அமையும். ஆனால் இது அவ்வாறு அமையவில்லை.
குறிப்பாக அந்தப் பெண்ணின் தந்தை, “குற்றவாளிகளில் ஒருவனான அந்தப் பதினேழு வயது இளைஞனையும் தூக்கிலிடுங்கள்’ என்று சொன்னதை இந்த நாடும் நாடாளுமன்றமும் கண்டு கொள்ளவே இல்லை.
தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மசோதாவிலும் சிறுவர்களுக்கான வயதை 18லிருந்து குறைக்கவில்லை. அதாவது 18 வயதுக்குக் கீழானவர்கள் கற்பழித்துக் கொலை செய்தாலும் அவர்களைத் தண்டிக்க முடியாது. இந்தச் சட்டத்தின்படி, அந்த மாணவியை இரண்டு முறை கற்பழித்த 17 வயது காமக் கொடூரன் தண்டனையிலிருந்து தப்பி விடுவான் என்பது உறுதி.
இதற்கும் இஸ்லாம் தான் தீர்வைச் சொல்கின்றது. பருவமடைதல் என்பது வயதைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒருவனுக்கு ஸ்கலிதம் வர ஆரம்பித்து விட்டால் அவன் பருவ வயதை அடைந்து விட்டான். அதாவது உடலுறவுக்குத் தகுதியடைந்து விட்டான் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
இந்த அளவுகோலை எடுத்துக் கொள்ளாத வரை இத்தகையோர் சிறுவன் என்ற காரணம் காட்டி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
இப்போதைய சட்டமும் அந்தக் காமக் கொடூரனைத் தப்பவிடும் வேலையைத் தான் செய்துள்ளது என்றால் பாதிக்கப்பட்டவனின் மனநிலையை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.
இதற்கிடையே, முக்கியக் குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், டெல்லி திஹார் சிறையில் மார்ச் 11ம் தேதியன்று தற்கொலை செய்து கொள்கின்றான்.
இதைப் பற்றி அந்தப் பெண்ணின் தாய் குறிப்பிடுகையில், “அவன் செய்த பாவத்தின் பலனை அனுபவித்திருக்கின்றான்’ என்று கூறியிருக்கின்றார். அவரது வாக்குமூலமும் பாதிக்கப்பட்டவரின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றது. இதைக் கவனித்து தான் இஸ்லாம் இதற்குத் தீர்வு சொல்கின்றது.
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் 5:45
இந்தச் சட்டத்தைச் செயல்படுத்தாத ஆட்சித் தலைவர்களை அநியாயக்காரர்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது. குற்றவாளியை மன்னிக்கும் அதிகாரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் அளிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
அல்குர்ஆன் 2:178
இது தான் உண்மையில் குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் ஆட்டத்தையும் கொடுக்கும். இதற்கு மாறாக இருபது ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை அவர்களிடம் எந்த மாற்றத்தையும் கொடுக்காது. இதற்கு எடுத்துக்காட்டு தான் டெல்லி சம்பவத்திற்குப் பிறகு நாட்டில் அடுக்கடுக்காக நிகழ்ந்த கற்பழிப்பு சம்பவங்கள்; அமில வீச்சு அநியாயங்கள். இந்தச் சட்டம் வரப் போகின்றது என்று தெரிந்த பின்பு தான் இத்தனை சம்பவங்கள் அரங்கேறின.
உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், காதுக்குக் காது என்ற சட்டம் தான் குற்றவாளிகளிடம் நடுக்கத்தையும் திடுக்கத்தையும் ஏற்படுத்தும்.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
இஸ்லாம் ஒரு பக்கம் இப்படிக் கடுமையான சட்டத்தைப் போட்டிருக்கும் அதே வேளையில், ஆண்களைக் கவர்ந்திழுப்பதற்குக் காரணமான பெண்களின் அழகை மறைக்கவும் சொல்கின்றது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31
இந்த ஆடை முறையைப் பெண்கள் கடைப்பிடிக்காத வரை, ஆண்களின் வெறியைத் தூண்டுகின்ற ஆபாசப் படக்காட்சிகளைத் தடை செய்யாத வரை இந்தக் குற்றங்களை ஒருபோதும் தடுக்க முடியாது.
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கான விவாதம் நடக்கும் போது பெண்களின் ஆபாச ஆடைகள், தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஷைலேந்திர குமார் விமர்சித்தார். உடனே நடிகை ஜெயப்பிரதா போன்ற கூத்தாடி பெண் எம்.பி.க்கள் அவரைக் கடித்துக் குதற ஆரம்பித்து விட்டனர்.
ஷைலேந்திர குமார் யதார்த்தத்தைப் பேசியிருக்கின்றார். அது அமுலுக்கு வராத வரை இந்தக் குற்றங்களுக்கு விடிவோ, முடிவோ இல்லை என்பது உறுதியான உண்மையாகும்.
—————————————————————————————————————————————————————-
ஈழப் பிரச்சனைக்கு இஸ்லாமே தீர்வு
கடந்த பிப்ரவரி 15, 2012 அன்று இத்தாலியைச் சேர்ந்த இரண்டு மாலுமிகள் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்களை சுட்டுக் கொன்று விட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த இத்தாலியர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட இத்தாலிய கொலைக் குற்றவாளிகள் மாஸ்ஸிமிலோனா, சால்வோடர் கிரோன் ஆகிய இருவரும் வாக்களிப்பதற்காகத் தங்கள் நாடு சென்று வருவதற்கு கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்தியாவுக்கான இத்தாலிய தூதரகம் அளிக்கும் உத்தரவாதத்தின் பேரில் மத்திய அரசு அவர்களை இத்தாலிக்கு அனுப்பலாம் என்றும், அவ்விருவரும் ஜனவரி 10, 2013 தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஜாமீன் வழங்கியது.
ஆனால் சென்றவர்கள் சென்றவர்கள் தான். இத்தாலி அரசு அவ்விருவரையும் திருப்பியனுப்ப மறுத்தது. ஏன்? தன்னுடைய நாடு, தன்னுடைய மொழி, தனது இனம் தான் உயர்ந்தது; மற்ற நாடு, மொழி, இனம் மட்டமானது என்ற எண்ணம் தான்.
அவ்விருவரும் வராத வரை இத்தாலி தூதர் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் விதித்த கடும் நிபந்தனை மற்றும் அவ்விரு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்க மாட்டோம் என்ற இந்திய அரசின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களைத் திருப்பியனுப்ப இத்தாலி சம்மதித்துள்ளது வேறு விஷயம்.
இங்கு நாம் இதைக் குறிப்பிடக் காரணம், தன் இனத்தவன் அடுத்த இனத்தவனைக் கொலை செய்தால் கூட அவன் தண்டிக்கப்படக் கூடாது என்ற இத்தாலி அரசின் சிந்தனையைச் சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரளா கூறுவது மலையாள இனவெறி! தமிழகத்திற்குக் காவிரி நீரை கர்நாடகா தர மறுக்கின்றது. இதற்குக் காரணம் கன்னட மொழிவெறி!
இத்தனைக்கும் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகியவை இந்தியாவிற்கு வெளியேயுள்ள தனித்தனி நாடுகள் அல்ல! இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தான். இந்த மாநிலங்கள் மத்திய அரசுக்குக் கட்டுப்படுவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக உச்ச நீதிமன்றத்திற்குக் கூட கட்டுப்படுவதில்லை. அந்த அளவிற்கு மொழி வெறி தலையில் ஏறியுள்ளது. இந்த மொழிவெறியின் உச்சக்கட்டம் இப்போது தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது.
இலங்கை ஒரு தனி நாடு! ஆனால் தமிழ் பேசும் மக்கள் அங்கு வாழ்வதால் மொழியால் தமிழகத்துடன் ஒன்றுபடுகின்றது. அண்மையில் விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட புகைப்படத்தை சேனல் 4 என்ற தொலைக்காட்சி வெளியிட்டது. அவ்வளவு தான். தமிழகத்தில் அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் தமிழினப் பற்றை வெளிப்படுத்துகின்றன. ஈழப் பிரச்சனையில் தமது கட்சியை மிஞ்சி எதுவுமில்லை என்று ஒவ்வொரு கட்சியும் தம்பட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டன. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டு விட்டது.
இதன் உச்சக்கட்டம், படிப்பில் – பரீட்சையில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு பேராட்டம், உண்ணாவிரதம் என்று களத்தில் குதித்திருப்பதாகும்.
அவர்களை மீண்டும் படிப்பை நோக்கித் திரும்பச் செய்வதற்குப் பதிலாக மேலும் மேலும் அவர்களை அரசியல்வாதிகள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அரசியல் கட்சிகளின் இலங்கை எதிர்ப்புப் போராட்டம் தேர்தலில் எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை என்பது தான். பொதுவாக எந்த அரசியல் கட்சியும் தான் செய்கின்ற எந்தவொரு காரியத்திற்கும் தேர்தல் ஆதாயத்தைத் தான் கவனத்தில் கொள்ளும்.
தமிழக மக்களைப் பொறுத்தவரை, முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததற்குப் பின்னர் இலங்கைப் பிரச்சனையை அறவே மறந்து விட்டனர். தமிழக மக்களிடம் விடுதலைப் புலிகள் விவகாரம் எந்தவொரு அனுதாபத்தையும் தேர்தல் ஆதாயத்தையும் பெற்றுத் தராது என்பது தான் உண்மை. அண்மையில் திமுக தலைமையிலான டெசோ அமைப்பு நடத்திய பொது வேலை நிறுத்தம் பிசுபிசுத்துப் போனது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இருந்தாலும் மொழிவெறி, இனவெறியைத் தூண்டி விட்டு அதில் ஆதாயம் அடையும் வேலையில் தமிழக அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்திற்கு வருகையளித்த புத்த பிட்சுவின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அவர்களின் இனவெறிக்கு எடுத்துக்காட்டு!
இலங்கைத் தமிழருக்காகப் போராடுகின்ற இவர்களின் கோரிக்கை தான் என்ன?
- இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து தன்னிச்சையான சர்வதேச விசாரணை நடத்தும் வகையில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
- இலங்கைக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இதல்லாமல் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுக்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது ராஜபக்ஷேவை கடுகளவு கூடப் பாதிக்காது. கடந்த மார்ச் 21 அன்று ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறி விட்டது. இதில் இந்தியாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்தத் தீர்மானம் இலங்கையில் எள்ளளவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி மார்ச் 20 அன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாரதீய ஜனதா, சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பெரிய கட்சிகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று மறுத்து விட்டன. எனவே இவர்களின் இரண்டாவது கோரிக்கையும் பயனற்றதாகி விட்டது.
தமிழக அரசியலின் கட்டுக்கடங்காத எதிர்ப்பு, இலங்கையிலிருந்து வந்த சிங்களர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் போன்றவை இலங்கைத் தமிழர்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி விடும். இப்படியொரு எதிர்விளைவை இந்த மொழிவெறியர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இதற்கு ஒரே தீர்வு இணக்கமான அணுகுமுறை தான். இந்தப் பாதையை தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் அடைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதில் வேதனை என்னவெனில் இந்த மொழிவெறிக்கு சில முஸ்லிம் அமைப்புகளும் துணை போவது தான். இத்தகையவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் ஹதீஸை நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆட்சித் தலைமைக்குக்) கட்டுப்படாமல், (ஓர் ஆட்சித் தலைமையின் கீழ் ஒன்றுபட்ட) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில் ஒருவர் இறந்துவிட்டால், அறியாமைக் கால மரணத்தையே அவர் சந்திப்பார். ஒருவர் (கொள்கையோ இலக்கோ இல்லாத) மௌடீகத்தின் கொடிக்குக் கீழே நின்று போரிடுகிறார்; இன மாச்சரியத்திற்காகக் கோபப்படுகிறார். அல்லது இன மாச்சரியத்துக்கு அழைப்பு விடுக்கிறார். அல்லது இன மாச்சரியத்திற்கு உதவி செய்கிறார். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டுவிட்டால், அவரது மரணம் அறியாமைக் கால மரணமே ஆகும்.
யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறை நம்பிக்கை யாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3437
பொதுவாக போர்க்களத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது தான். ஆனால் அதைக் கண்டிக்கும் அதே வேளையில் பிரபாகரனை ஹீரோவாக்கிப் பார்க்கும் அநியாயம் இங்கே அரங்கேறிக் கொண்டிருப்பது தான் வேதனைக்குறிய விஷயம்.
ஆகஸ்ட் 03, 1990 அன்று காத்தான்குடியில் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 103 பேர் கொல்லப்பட்டனர். 325 பேர் காயமடைந்தனர். இதில் பாலச்சந்திரனைப் போன்று எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டனர்? இன்னும் பிரபாகரன் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் எத்தனை பேர்?
சிங்கள ராணுவத்தினரை மட்டுமல்ல! அப்பாவி பொதுமக்களை, தமிழர்களை குறிப்பாக முஸ்லிம்களைக் கொன்றொழித்த பிரபாகரன் ஒரு மனித குல விரோதி என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. அவருடைய தலைமையில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஏராளமான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியுள்ளது. இலங்கை ராணுவமும் மனித உரிமை மீறல்களை அரங்கேற்றியுள்ளது. இரண்டு தரப்புமே கண்டனத்திற்குரியவர்கள்.
இதில் ராஜபக்ஷேவை கொடுங்கோலனாகவும் பிரபாகரனை பரிதாபத்திற்குரியவராகவும் சித்தரிப்பதற்குக் காரணம் மொழிவெறி, இனவெறி தான். இந்தப் பார்வை நீதிப் பார்வையல்ல. சாதிப் பார்வை தான். இத்தகைய பார்வையை திருக்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கின்றது.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 5:8
இந்த நீதியற்ற சாதிப் பார்வைகள் தான் இலங்கைப் பிரச்சனைக்கும் இதர பிரச்சனைகளுக்கும் ஒரு முட்டுக்கட்டையாக வந்து நிற்கின்றது.
இலங்கையில் தனி ஈழத்தை ஆதரிப்பவர்கள், இந்தியாவில் காஷ்மீர் விடுதலையை ஆதரிக்க மாட்டார்கள். இங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை, இனப் படுகொலைகளை, கற்பழிப்புகளைக் கண்டிக்க மாட்டார்கள். காரணம், என் இனம், என் மொழி, என் நாடு என்ற பாகுபாடு தான்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
அல்குர்ஆன் 49:13
மனிதர்கள் அனைவரையுமே ஒரு தந்தை, தாயின் வழித்தோன்றலில் கொண்டு வந்து, அவர்களை நாடு, மொழி, இனம், குலம் எல்லாவற்றையும் கடந்து இஸ்லாம் என்ற ஒரு கயிற்றில் இணைத்து வைத்திருக்கின்றது. இந்த ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்குள்ளவர்கள் சிந்திப்பார்களா?
—————————————————————————————————————————————————————-
இஸ்லாம் கூறும் குடும்பவியல்
(ரமளான் மாத தொடர் சொற்பொழிவுகளில் ஒன்றான “இஸ்லாம் கூறும் குடும்பவியல்’ என்ற உரையை எழுத்து வடிவில் அளிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
குடும்பவியலின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியிருந்த இந்த சொற்பொழிவை, ஏகத்துவம் இதழில் தொடராக வெளியிட எண்ணியுள்ளோம், இன்ஷா அல்லாஹ்.
மவ்லவி முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி. இதை எழுத்தாக்கமாக மாற்றித் தர இசைந்திருக்கின்றார். வாசகர்கள் படித்துப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.)
இஸ்லாமிய மார்க்கம் எந்தப் பிரச்சனையில் தலையிட்டாலும் அதில் முழுமையாகவும் தெளிவாகவும் அறிவுக்குப் பொருத்தமாகவும் நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் அணுகக் கூடிய ஒரு மார்க்கம். அந்த அடிப்படையில் குடும்பவியலைப் பற்றி இஸ்லாம் எத்தகைய நெறிமுறைகளை நமக்குச் சொல்லித் தருகிறது என்பதை இந்தத் தொடரில் பார்க்கவிருக்கிறோம்.
இதற்குக் காரணம் கடந்த காலங்களிலிருந்து தற்போதைய நிலையைக் கவனிக்கும் போது குடும்ப அமைப்பு நம்மிடம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வருகிறது. இப்படியெல்லாம் குடும்பங்கள் சீரழிவை நோக்கிச் செல்லக் காரணம், முஸ்லிம்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் சட்டங்களைத் தெரியாமல் இருப்பது தான், அல்லது அவர்களுக்குத் தெளிவாகச் சொல்லப்படாமலேயே இருப்பது தான்.
எனவே இந்தத் தலைப்பிலுள்ள செய்திகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றுகூடச் சொல்லலாம்.
குடும்பவியல் என்றால் என்ன?
முதலாவதாக, அல்லாஹ் எந்தெந்த படைப்புகளை, உயிரினங்களையெல்லாம் நேரடியாகப் படைத்திருக்கிறானோ அவற்றை இனப்பெருக்கம் செய்கிற வகையில் படைத்திருக்கிறான். அல்லாஹ் படைத்தவை மட்டும்தான் ஒன்றிலிருந்து இன்னொன்று உற்பத்தியாகின்ற வகையில் இருக்கும்.
மனிதர்கள் எதையாவது உற்பத்தி செய்தால், அது இன்னொன்றை உற்பத்தி செய்யாது. ஒரு மனிதன் பேனாவையோ அல்லது மைக்கையோ உற்பத்தி செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்த மைக்கோ பேனாவோ குட்டி போடாது. இனப்பெருக்கம் செய்யாது. முதலில் ஒரு பேனாவை எப்படித் தயாரித்தார்களோ அதே போன்று மற்ற பேனாக்களையும் தயாரிக்க வேண்டும். இது மனிதனின் படைப்பு.
ஆனால் ஒரே இறைவனாகிய அல்லாஹ், முதலில் ஆதம் (அலை) என்கிற முதல் மனிதனைப் படைக்கிறான். அவரது விலா எலும்பிலிருந்து அவருக்குரிய துணையான ஹவ்வா (அலை) அவர்களைப் படைக்கிறான். இந்த இருவரிலிருந்து இனப்பெருக்கத்தைத் தொடங்கி இன்று கோடான கோடி மனிதர்களாக உருவாகியிருக்கிறோம்.
ஆனால் நேரடியாக இறைவன் படைத்தது, முதலில் படைத்த ஆதாம், ஹவ்வா என்கிற ஒரு ஜோடியை மட்டும் தான். மற்றவையெல்லாம் அவ்விருவரிலிருந்தும் பல்கிப் பெருகியவர்கள் தான். இதே போன்று மனிதனல்லாத மற்ற படைப்புகளான ஆடு, மாடு, கோழி போன்ற எண்ணற்ற ஜீவராசிகளில் ஒவ்வொரு ஜோடியைத் தான் அல்லாஹ் படைத்தான். அதுதான் பல்கிப் பெருகி இன்று பல உயிரினங்களாக வளர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.
அதேபோன்று தாவரங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரேயொரு விதையிலிருந்து ஏராளமான மரங்களையும் செடி, கொடிகளையும் அல்லாஹ் உருவாக்கியிருக்கின்ற அதிசயத்தைப் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொரு உயிரினமும் பல்கிப் பெருக வேண்டும் என்பதற்காக அவற்றிற்கு மத்தியில் ஆண், பெண் என்ற இரண்டு இனத்தை உருவாக்கி, ஒன்றையொன்று கவரக்கூடிய வகையில் அவற்றில் ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் அல்லாஹ் உயிரினங்களைப் பெருகச் செய்கிறான்.
தாவரங்கள் உட்பட ஒவ்வொரு உயிரினத்திலும் அவைகளில் தானாகக் கவரக்கூடிய வகையில் இல்லாவிட்டாலும், அவைகளிலும் கூட ஆண், பெண் என்ற இரண்டு இனங்களைப் பார்க்க முடிகிறது. பூக்களில் ஆண் பூ என்றும் பெண் பூ என்றும் இருக்கிறது. ஆண் பூவும் பெண் பூவும் ஒன்றோடு ஒன்று இணைந்தால் மட்டும் தான் பூக்கள் காய்க்க முடியும். இதே போன்று தான் எல்லா வகையான உயிரினங்களையும் அல்லாஹ் படைத்திருக்கிறான்.
மனித இனத்திற்கு மட்டுமே குடும்ப அமைப்பு
இப்படி எல்லாமே ஆண், பெண் என்கிற இனக்கவர்ச்சியின் மூலம் பெருக்கக் கூடியதாக இருந்தாலும், மனிதனுக்கு மட்டுமே குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிறது. ஆடு, மாடு, கோழி போன்றவைகளில் ஆணும் பெண்ணும் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் அவற்றுக்கு மத்தியில் குடும்பம் என்கிற ஒரு நிர்வாக அமைப்பு கிடையாது. அவை இனப்பெருக்கத்திற்காகச் சேர்வதோடு தங்களது வேலையை முடித்துக் கொள்ளும். அதற்குப் பிறகு ஏற்படுகிற சுமைகளை அவை ஏற்பது கிடையாது. இவற்றில் பெண் இனம் தான் எல்லா விளைவுகளையும் சுமந்தாக வேண்டும்.
உதாரணமாக, ஒரு ஆண் ஆடும் ஒரு பெண் ஆடும் இணைந்து சேர்க்கையில் ஈடுபட்டு, பெண் ஆடு சினையாகி விட்டதெனில், அதற்குரிய எல்லா கஷ்ட நஷ்டங்களையும் பெண் ஆடு மட்டும் தான் சுமக்கும். ஆணுக்கு எந்தவிதமான பொறுப்பும் கிடையாது. இனச் சேர்க்கையில் ஈடுபட்டதோடு தனது வேலையை ஆண் ஆடு முடித்துக் கொள்ளும், தன்னால் தானே இந்தப் பெண் ஆட்டிற்குச் சினை ஏற்பட்டது; அதற்கு ஏற்படுகிற கஷ்டத்தில் நாமும் பங்கு எடுத்துக் கொள்வோம் என்று சிந்திக்க, செயலாற்றுகின்ற எந்தப் பகுத்தறிவும் விலங்குகளுக்குக் கிடையாது. இதே போன்று தான் கோழியின் சிரமத்தில் சேவல் பங்கெடுக்காது, பசு மாட்டின் கஷ்டத்தில் காளை மாடு பங்கெடுக்காது.
ஆனால் மனிதன் பகுத்தறிவுள்ளவனாக இருப்பதால், ஆணும் பெண்ணும் இனச் சேர்க்கையில் ஈடுபட்டதினால், பெண் வயிற்றில் சுமக்கிற குழந்தைக்கு நாம் தான் காரணம் என்பதை ஒவ்வொரு ஆணும் ஏற்றுக் கொள்கிறான். நாமே இதற்குப் பொறுப்பாளியாக இருக்கிறோம். எனவே நாமும் பெண்ணின் சிரமத்தில் கவனத்துடன் பொறுப்பெடுத்தாக வேண்டும் என்ற ஒரு சிந்தனை பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தான் இருக்கிறது. இப்படி நல்ல எண்ணத்தில் தான் குடும்பம் என்கிற ஒரு அமைப்பை மனிதன் உண்டாக்குகின்றான்.
குடும்பம் என்கிற அமைப்பு இல்லாமல், நீ எனக்கு மனைவி, நான் உனக்குக் கணவன் என்கிற கட்டுக் கோப்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற நிலைக்குள் போய்விட்டால், பெண்களின் சிரமங்களை பெண்கள் மட்டுமே சுமக்கிற அவல நிலை ஏற்பட்டுவிடும். ஆண்கள் அதில் எந்தவிதப் பங்கையும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு கெட்டுவிட்டால் பெண்கள் பாரதூரமான துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். இப்படியான அவல நிலையைத் தவிர்ப்பதற்குத் தான் ஆதிகாலத்திலிருந்தே, ஆதம் நபி காலத்திலிருந்தே அல்லாஹ் குடும்ப அமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறான்.
ஆதமைப் படைத்து, அல்லாஹ்வே அவருக்கு ஒரு ஜோடியையும் கொடுத்து, நல்லது கெட்டதையெல்லாம் சுமக்க வேண்டும் என்றாக்கி, ஆணாக இருக்கிற நீ தான் உனது மனைவியைப் பராமரிக்க வேண்டும் என்றாக்கி, முதல் மனிதனாகிய ஆதம் முதலே குடும்ப அமைப்பை உருவாக்கினான். அப்படி ஆதம் நபி மூலம் உருவாக்கிய அந்த அமைப்பு தான் இன்று உலகம் முழுவதும் குடும்ப அமைப்பாக இருந்து கொண்டிருக்கிறது.
குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் காரணங்கள்
சமீப காலமாகப் பார்த்தால், இந்தக் குடும்ப அமைப்பைச் சீரழித்துப் பாழாக்கக் கூடிய பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகின்றன.
குடும்பம் என்கிற எந்த அமைப்பும் நிர்வாகமும் தேவையில்லை என்றும், அப்படி ஏன் இருக்க வேண்டும்; அப்படித்தான் இருந்தாக வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றும், ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் சந்தோசமாக இருக்கலாம்; அதே போன்ற உரிமைகள் பெண்களுக்கும் இருப்பதால் ஒரு பெண்ணும் தான் விரும்பியவாறெல்லாம் வாழ்ந்து கொள்ளலாம் என்றும், குடும்பம் என்ற எந்தக் கட்டுக்கோப்பும் நமக்குத் தேவையில்லை என்றும் அறிவு ஜீவிகள் என்று பிதற்றிக் கொள்கின்றவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அதை மிகப் பெரிய நாகரீக வளர்ச்சியாகக் காட்டி ஊடகங்கள் தவறான பிரச்சாரம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
குடும்பத்தைச் சீரழிக்கும் காரணங்கள் என்னவென்று நாம் ஆய்வு செய்தால் அவற்றில் மிக முக்கியமான மூன்று காரணங்களைச் சொல்லாம். மனிதனை வழிகெடுப்பதற்காக ஷைத்தான் இந்த மூன்று செயல் திட்டங்களையும் பயன்படுத்துகிறான். அந்த மூன்று தவறான செயல் திட்டங்களில் முதலாவது துறவறமாகும்.
துறவறம்
ஓர் ஆணுக்கு ஒரு பெண் தேவை கிடையாது. அதே போன்று ஒரு பெண்ணுக்கு ஆண் தேவை கிடையாது. இல்லறம் என்ற சேர்க்கை உறவும் தேவையில்லை. நமது ஆசாபாசங்களையெல்லாம் துறந்துவிட்டு கடவுளுக்காகவே வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்படுவதே துறவறமாகும்.
கடவுளுக்காக தவம் இருக்க வேண்டும்; தியானத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் கடவுளுக்காகத் தன்னையே அர்ப்பணிப்பதை புனிதமாகக் கருதுவது பல மதங்களில் மிக முக்கிய கோட்பாடாக இருப்பதைக் காணமுடிகிறது. இப்படித் துறவிகளாக இருப்பவர்கள் தான் அந்த மதத்தின் பீடாதிபதிகளாகவும் ஞானிகளாகவும் பெரிய அறிவாளிகளாகவும் கருதப்படுகிறார்கள். குடும்பத்தில் ஈடுபட்டு, பிள்ளை குட்டிகளைப் பெற்று, சமூகத்தோடு வாழ்கிற நம்மையெல்லாம் விடச் சிறந்த மக்களாக துறவிகள் எல்லா மதங்களிலும் கருதப்படுகிறார்கள்.
இந்தச் சிந்தனை எல்லோருக்கும் வந்தால் மனிதகுலம் முடிந்துவிடும். ஏதோ இலட்சத்தில் ஒருவன் இந்தத் துறவறம் என்ற சிந்தனையில் இருப்பதால் உலகம் இயங்குகிறது. துறவறம் எனும் இந்த வியாதி பரவி, உலகத்திலுள்ள அனைவரும் துறவறத்தை முடிவாக எடுத்தால், அத்தோடு உலகம் முடிந்து விடும். பிள்ளைகள் பிறக்காது. கியாமத் நாள் என்ற உலக முடிவு நாள் வருவதற்கு முன்பாகவே மனித சமூகம் அழிந்துவிடும்.
எனவே குடும்ப வாழ்க்கை தேவையில்லை, துறவறமே கதி என்று வாழ்வது ஷைத்தானின் மாய வலையாகும்.
ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டும் தான் இந்தத் துறவறத்திற்குச் சாட்டையடி கொடுத்து விரட்டியடிக்கிறது. துறவை மாபெரும் குற்றமாகக் கருதி வன்மையாகக் கண்டிக்கின்றது. இருப்பினும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னாலுள்ள முஸ்லிம்களும் துறவறம் என்ற தாக்குதலுக்குள் சிக்கப்பட்டிருந்தனர் என்பது தான் உண்மை. இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணிப்பது புனிதமாக முஸ்லிம்களிடத்திலும் பரவி இருந்தது.
தற்போது ஏகத்துவ சிந்தனை எழுச்சி தமிழகத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட பிறகு அது உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தும் இருப்பதால், துறவறம் இஸ்லாத்தில் கூடாது, அது குற்றம் என்று மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டனர்.
எந்தளவுக்குத் துறவறத்தை முஸ்லிம்கள் கடந்த காலத்தில் ஆதரித்தார்கள் எனில், துறவறத்தைக் கடைப்பிடிப்பவர் அவ்லியாக்களாகவும் மகான்களாகவும் பார்க்கப்பட்டார்கள். மகான் என்பதற்கு அடையாளமே துறவறம் என்று சொல்கின்ற அளவுக்குத் தவறான வழியில் இருந்தார்கள்.
மேலும், திருமண வாழ்க்கையையும், பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொள்வதையும், சமூக வாழ்க்கையில் ஈடுபடுவதையும் கொச்சைப்படுத்தி பிரச்சாரமும் செய்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு உதாரணமாக, குணங்குடி மஸ்தான் என்ற ஒரு அவ்லியாவைச் (?) சொல்லலாம். இவர் முஸ்லிம்களால் மதிக்கப்படுகிற மகான். இவரது பெயரில் சென்னை தண்டையார் பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் தர்ஹா இருக்கிறது. இவர் தனது பாட்டில் பெண்களைக் கொச்சைப்படுத்தி ஏசியுள்ளார்.
சங்கையும் போக்கி சதி மானமாக
சகசென்டியாக்கி வித்திடுவாள்
வெகு பங்கப்படுத்திட்டுவாள்
அந்த மங்கையர் ஆசை வைத்தைய்யய்யோ வையத்தில்
பெண்கொண்ட பெயர்பட்ட பாட்டையும் கேட்டையும்
பேசுவோமே நெஞ்சமே!
“இந்தப் பெண்கள் ஆண்களுக்கு இருக்கிற மரியாதையை எல்லாம் போக்கி விடுவார்கள்; வெட்கங்கெட்ட செயல்களை நம்மைச் செய்ய வைத்துவிடுவார்கள்; நம்மைக் கேவலப்படுத்தி விடுவார்கள். இப்படிப் பெண்கள் மீது ஆசை வைத்து, கேடுகெட்டு விட்ட உன் பாட்டையும் கேட்டையும் பேசுவோமா?” என்று கேட்கிறார்.
இதன் மூலம் பெண்கள் ஆண்களின் மரியாதையைக் கெடுத்துவிடுவார்கள் என்றும், கேவலப்படுத்துவார்கள் என்றும் இஸ்லாத்தின் போர்வையில் கவிதை எழுதுகிறார். இந்தக் கவிதைகள் ஒரு காலத்தில் மஸ்தானுடைய பாடல்கள் என்று பள்ளிவாயில்களில் பாடப்பட்டுக் கொண்டிருந்தன.
தங்க நகையும் முகப்பணி சேலையும்
தாவெனவே குரங்காட்டுவாள்
பெண் என்பவள் தங்க நகை வேண்டும்; நல்ல அழகழகான சேலைகளும் துணிமனிகளும் வேண்டும் என்று ஆண்களை ஆட்டுவாள் என்று பெண்கள் சமூகத்தை ஊனப்படுத்துகிறார்.
ஆதியைத் தேடி அருள்பெற நாடி
அழுதழுது மடிபிடிப்பாள்; நீதான்
ஏதென்னை விட்டு பிரிவதுமென்றவள்
ஏங்கியேங்கி துடிதுடிப்பாள்
அல்லாஹ்வைத் தேடி நாம் துறவறத்திற்குச் சென்றால், நமது மடியைப் பிடித்து அழுது துறவறத்திற்குத் தடை செய்வாள். அல்லாஹ்விற்காக எங்காவது போகலாம் என்று நினைத்தாள் ஏங்கியேங்கி துடிதுடிப்பாள்.
நாடிக் குருவடி தேடிநடக்கிற
நற்செயலைக் கசப்பாக்குவாள்
குருவடி என்றால் சேக், முரீது என்று பொருள். முரீது வாங்கிக் கொண்டு ஷேக்குடன் செல்லுவதைக் கசப்பாக்குவாள். அவருடன் போகாதே, என்னுடனே இரு என்று கூறுவாள்.
ஓடித்திரிந்தேயலைந்து பணங்கள்
ஓருக்காலே தேடென்று தாக்குவாள்
தேடும் பொருள்தனை காணிலும்
தேசத்தில் யார் என்று தூக்குவாள்
ஓடி ஓடி உழை என்று காசு பணத்தாசை காட்டுவாள், ஓடியாடி உழைத்துக் கொட்டினால் உலகத்தில் உன்னை மாதிரி யாரும் உண்டா? என்று பாராட்டுவாள். இப்படியெல்லாம் பெண்களைக் கேவலப்படுத்துகிறார். பெண்கள் என்றால் நச்சுப் பாம்பு போன்று என்று தவறான சித்தரிப்பை உண்டாக்குகிறார்.
ஆடென்றும் மாடென்றும் வீடென்றும்
தேடென்றும் ஆண்டவனை மறப்பாக்குவாள்
ஆடு, மாடு, வீடு போன்றவை வேண்டும் என்பதற்காக ஆண்டவனையே மறக்கச் செய்திடுவாள் என்று படிக்கிறார்.
இப்படியெல்லாம் இஸ்லாத்தின் பெயரால், குடும்ப வாழ்க்கை வேண்டாம், அவரவர் தன்னை மட்டும் காத்துக் கொண்டால் போதும் என்று கூறும் துறவறம் ஒரு நல்ல சித்தாந்தமாகக் கடந்த காலங்களில் கருதப்பட்டு வந்துள்ளது என்பதற்கு இவை சான்றாக இருக்கின்றன.
திருமணமே வேண்டாம் என்று சொல்லி புறக்கணித்தவர்களும் திருமணம் முடிக்காமலேயே வாழ்நாளைப் பாழாக்கியவர்களும் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள்; அவர்கள் ஒருபோதும் இறைநேசர்களாக இருக்கவே முடியாது என்ற உண்மை தெரியாமல், துறவறம் மேற்கொள்ளுபவர்கள் மகான்களாகவும் அவ்லியாக்களாகவும் இருப்பார்கள் என்ற தவறான எண்ணம் முஸ்லிம்களிடமும் இருந்தது என்பதற்கும் இவை சான்றுகளாகும்.
ஆனால் இஸ்லாம் இந்தக் கொள்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. திருமண வாழ்க்கை என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகவும் அவசியம். திருமண வாழ்க்கையை யாராவது ஒருவர் புறக்கணித்தால் அவர் இஸ்லாத்தில் இருக்கவே முடியாது எனும் அளவுக்குத் துறவறத்தை இஸ்லாம் அறவே இல்லாமல் ஒழிக்கிறது.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்-க்கொண்டனர். அவர்களில் ஒருவர், “(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், “நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்” என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 5063
எனவே திருமண வாழ்க்கையைப் புறக்கணிப்பவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர் இல்லை என்று நபிகள் நாயகம் பிரகடனப்படுத்துகிறார்கள். அதாவது திருமணத்தை முஸ்லிம் என்பதற்கான அடையாளமாக நபிகள் நாயகம் மனித சமூகத்திற்குக் காட்டித் தருகிறார்கள்.
மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்ததும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்கள் அளவுக்கு மதீனாவில் பெண்கள் பற்றாக்குறையாக இருந்தது. ஏனெனில் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தனர். பத்து ஊரைச் சேர்ந்த ஆண்களுக்கு ஒரு ஊரில் பெண்கள் கிடைக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு 200 பேர் இருக்கின்ற ஊரில் 100 ஆண்கள் நுழைந்தால் ஆண்கள் அனைவருக்கும் பெண்கள் கிடைக்க மாட்டார்கள். அதாவது அந்தந்த ஊரில் இருப்பவர்களுக்கு அந்தந்த ஊரில் பெண் கிடைத்துவிடும்.
இந்நிலையில் மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்துள்ள எங்களுக்குப் பெண் கிடைக்கவில்லை என்று ஸஹாபாக்கள் நபியவர்களிடம் புகார் தெரிவிக்கிறார்கள். அப்போது நபியவர்கள், திருமணத்திற்குச் சக்தியிருந்தால் திருமணம் முடியுங்கள். அதற்கு வாய்பில்லையென்றால், அவர் நோன்பு வைத்துக் கொள்ளட்டும் என்றார்கள்.
திருமண முடிக்க பொருளாதார வசதி இல்லையென்றாலோ அல்லது பெண் கிடைக்காமல் இருந்தாலோ அவர் நோன்பு வைத்து, தமது ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, துறவறம் மேற்கொள்ளக் கூடாது. ஒருவேளை நமக்கு வாய்ப்பு வந்துவிட்டால் நாம் நோன்பு வைப்பதை நிறுத்திக் கொள்ளலாம். நோன்பு வைத்துக் கொண்டால் ஒரு மனிதன் பாதுகாப்புப் பெறுவான்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பழமொழியெல்லாம் சொல்லுவார்கள். பசி வந்துவிட்டால் இந்த மாதிரியான நாட்டங்கள் வராது. அல்லது தூண்டுதல் குறைவாக இருக்கும். எனவே திருமணத்திற்குச் சக்தியில்லாதவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற சட்டத்தைக் கொண்டு, திருமணம் முடிப்பதன் அவசியத்தை நமக்கு நபிகளார் விளக்குகிறார்கள். இது திருமணத்தை வலியுறுத்திச் சொன்ன செய்தியாகும்.
“இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்” என்று தெரிவித்தார்கள். (நூல்: புகாரி 5065, 5066)
வளரும் இன்ஷா அல்லாஹ்….
—————————————————————————————————————————————————————-
தொடர்: 4
நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை
அப்துந் நாசிர், கடையநல்லூர்
முந்தைய இதழ்களில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம்.
இந்த இதழில் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் நபியவர்கள் கூறிய பொன்மொழிகளைப் பார்க்கவிருக்கின்றோம்.
ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகள்
நாம் சென்ற இதழ்களில் தொழுகைக்காகக் காத்திருத்தல், பள்ளிக்கு முன்கூட்டியே வருதல், பள்ளிக்கு நடந்து வருதல் போன்ற நற்காரியங்களின் சிறப்புக்களைப் பற்றிப் பார்த்தோம். அவை அனைத்துமே ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புக்களில் உள்ளடங்கியவை தான். ஏனெனில் நாம் பள்ளிவாசலுக்குச் செல்லும் நோக்கமே தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றுவதற்காகத் தான். நாம் பள்ளிவாசலுக்கு முன்கூட்டியே வருவதும், நடந்து வருவதும், தொழுகைக்காகக் காத்திருப்பதும் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.
நபி (ஸல்) அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை மிகவும் வலியுறுத்தி உள்ளார்கள். அவற்றின் முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் காண்போம்.
கூட்டுத் தொழுகை நேரிய வழிகளில் ஒன்று
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி வரட்டும். ஏனெனில், அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுது கொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுது வருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.
யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.
நூல்: முஸ்லிம் (1159)
இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகர் என்பது தெளிவாகின்றது. நாம் இந்த நயவஞ்சகத் தன்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையானவர்களாக இருந்துள்ளார்கள்.
பாங்கைக் கேட்பவர் பள்ளிக்கு வருவது அவசியம்
நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை” என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, “தொழுகை அறிவிப்புச் சப்தம் உமக்குக் கேட்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்‘ (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!” (கூட்டுத் தொழுகையில் வந்து கலந்து கொள்வீராக!) என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1157)
கண் தெரியாத நபித்தோழருக்கே நபி (ஸல்) அவர்கள் வீட்டில் தொழுவதற்கு அனுமதிக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பாங்கு சப்தம் கேட்டு விட்டால் பள்ளிக்கு வந்தாக வேண்டும் என்ற கட்டளையை நாம் தெளிவாக உணர முடிகின்றது. இந்தக் கட்டளையைத் தெரிந்த பின்பும் நாம் பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றோம் என்று தான் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
பாங்கு சொன்ன பிறகு பள்ளியிலிருந்து வெளியேறுவது கூடாது
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்தார். உடனே (அங்கிருந்த) ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அந்த மனிதர் பள்ளிவாசலை விட்டு வெளியேறும் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, “கவனியுங்கள்: இவர், அபுல்காசிம் (முஹம்மத் நபி) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்), நூல்: முஸ்லிம் (1160)
ஷைத்தானின் ஆதிக்கம்
“ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் பாங்கு கூறப்பட்டு தொழுகை நிலை நாட்டப்படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி), நூல்: அஹ்மத் (27554)
தீயிட நாடும் திருத்தூதர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: விறகுக் கட்டுகளைத் திரட்டும்படி எனது இளைஞர்களுக்கு உத்தரவிட்டு எவ்விதக் காரணமும் இல்லாமல் வீடுகளில் தொழுகின்ற கூட்டத்தினரிடம் சென்று அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தி விட நான் எண்ணியதுண்டு.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவுத் (462)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 644, 7224
ஜமாஅத் தொழுகை விஷயத்தில் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
நோயுற்ற நிலையிலும் ஜமாஅத்தை பேணுதல்
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் கூறக் கூடாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (கூறுகிறேன்). நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள்.
பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். அப்போது “தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்தபோது) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள்.
பின்னர் மயக்கம் தெளிந்தபோது, “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறினோம். அப்போது “தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள்” என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத்தோம்.) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்டபோது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள்.
பின்னர் அவர்கள் மயக்கம் தெளிந்தபோது (அப்போதும்,) “மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்றோம். அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர். ஆகவே நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்” என்று கூறினர்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் – அன்னார் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர் – “உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று (உமர் அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இதற்கு நீங்கள்தாம் என்னைவிட தகுதியுடையவர்” என்று அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர்
(ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சுற்றுக் குறைந்திருக்கக் கண்டபோது இரண்டு பேரிடையே (அவர்களைக் கைத்தாங்கலாக்கிக் கொண்டு) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள்.- அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பின் வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) “என்னை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழத் துவங்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருந்த நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.
நூல்: புகாரி (687)
அதிக நன்மையைத் தரும் ஜமாஅத் தொழுகை
“யார் ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி (651)
நயவஞ்சகரின் அடையாளம்
“சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (657)
அல்லாஹ்வை மகிழ்விக்கும் ஜமாஅத் தொழுகை
“வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய குடும்பத்தார்கள் சந்தோஷப்படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச் சென்றால் அவர் (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம் அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (8332)
அல்லாஹ்வின் விருந்தாளி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தன்னுடைய வீட்டில் அழகிய முறையில் உளூச் செய்து பிறகு பள்ளிக்கு (தொழுகைக்காக) வருகிறாரோ அவர் அல்லாஹ்வின் விருந்தாளியாவார். விருந்தாளியைக் கண்ணியப் படுத்துவது விருந்தளிப்பவர் மீது கடமையாகும்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி), நூல்: அல்முஃஜமுல் கபீர் (6016)
ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்பவரை அல்லாஹ்வின் விருந்தாளி என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்வை விட மிகச் சிறப்பாக யாராவது விருந்தாளியை உபசரிக்க இயலுமா? ஜமாஅத்துடன் தொழுபவர்கள் எப்பெரும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள் என்பதற்கு மேற்கண்ட நபிமொழி அற்புதமான சான்றாகும்.
வீட்டில் தொழுவதை விட ஜமாஅத் தொழுகை சிறந்தது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் “ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (477)
27 மடங்கு நன்மைகள்
“தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரி (645)
ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இஷா, ஃபஜ்ரை ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்பு
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் (1162)
பின்வரும் நபிமொழி இஷாவையும், ஃபஜ்ரையும் ஜமாஅத்தாகத் தொழுதில் எவ்வளவு பெரிய நன்மை மறைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (615)
குளிர்ச்சியான தொழுகைகளும் குளுகுளு சொர்க்கமும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பகலின் இரு ஓரங்களிலுள்ள ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ச்சியான இருநேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)
நூல்: புகாரி (574)
சுபுஹ் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில்…
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுப்ஹு தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டு கொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் (1163)
வானவர்கள் ஒன்று கூடும் ஃபஜ்ர் தொழுகை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் “அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும்” எனும் (17:78) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
நூல்: புகாரி (648)
வானவர்கள் சாட்சி கூறும் ஃபஜ்ரும் அஸ்ரும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், “என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று -அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே- கேட்பான். அதற்கு வானவர்கள், “அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (7486)
நரகத்திலிருந்து காக்கும் ஃபஜ்ரும் அஸ்ரும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் -அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர் – எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் “ஆம்‘ என்றார்கள். அந்த மனிதர் “நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக் கொண்டது” என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூபக்ர் பின் உமாரா பின் ருஐபா
நூல்: முஸ்லிம் (1115)
இறைவனைக் காணும் பாக்கியம்
(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, “இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டு, “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்” எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி (554)
நன்மையைத் தரும் நடுத்தொழுகை
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!
அல்குர்ஆன் 2:238
இவ்வசனத்தில் (2:238) நடுத் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர். (நூல்: புகாரி 6396)
அஸரை இழந்தவர் அனைத்தையும் இழந்து விட்டார்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்டவரைப் போன்றவரே ஆவார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (552)
அஸரைப் பேணியவருக்கு இருமடங்கு கூலி
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்முகம்மஸ்‘ எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு “இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத்தொழுகையைப் பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸ்ருக்குப் பின்னாலிருந்து (சூரியன் மறைந்து) நட்சத்திரம் தோன்றும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.
அறிவிப்பவர்: அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (1510)
தொழுகையை ஜமாஅத்தாகப் பேணித் தொழுபவர்களுக்கு எத்தகைய பாக்கியங்களை நம்முடைய மார்க்கம் வழங்கியுள்ளது என்பதைப் பற்றி மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் அறிந்து கொண்டோம்.
ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்கு அந்தத் தொழுகையின் மூலம் இன்னும் அதிகமான பாக்கியங்கள் கிடைக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை வரக்கூடிய இதழ்களில் விரிவாகக் காண்போம்.
—————————————————————————————————————————————————————-
இணை கற்பித்தல் தொடர்: 11
உங்களைப் போன்ற மனிதனே!
இறைவனுடைய நேசர்களிலேயே மிகச் சிறந்த நேசர்களாகத் திகழ்ந்த நபிமார்கள், தங்களுடைய சமுதாய மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களாகவோ, இறைவனுடைய சில அம்சங்களைப் பெற்றவர்களாகவோ, அவர்களைப் பார்த்து மக்களெல்லாம் அரண்டு, பயந்து ஓடுகிற வகையிலோ அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கவில்லை என்பதை நாம் சென்ற இதழில் பார்த்தோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களும் மக்களிடத்தில் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது எல்லா சமுதாய மக்களுமே, “நீர் என்ன தூதர்? நீரும் எங்களைப் போல மனிதர் தானே!’ என்ற காரணத்தைச் சொல்லித் தான் ஏற்றுக் கொள்வதற்கு மறுத்திருக்கிறார்கள் என்பதிலிருந்து நபிமார்களும் மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர மந்திரவாதிகளாக இருக்கவில்லை என்பதைப் பார்த்தோம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மக்கள் தான் தூதர்களை, இவர்கள் தங்களைப் போன்று மனிதர்கள் தான் என்று கூறினார்கள் என்று பார்த்தால், சத்தியத்தை எடுத்துச் சொல்ல வந்த அத்தனை நபிமார்களுமே “நாங்கள் உங்களைப் போன்று மனிதர்கள் தான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதை நாம் திருக்குர்ஆனில் பல இடங்களில் காணலாம்.
நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது.
அல்குர்ஆன்: 14:11
அந்த மக்கள், “நீங்களும் எங்களைப் போல ஒரு மனிதர் தான்’ என்று இறைத்தூதர்களை நோக்கிச் சொன்ன போது, அத்தூதர்கள், “நாங்கள் மனிதர்கள் அல்லர். நாங்கள் மந்திரவாதிகள்; நாங்கள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள்; அற்புத ஆற்றல் படைத்தவர்கள்’ என்று சொல்லாமல், அவர்களுடைய கூற்றுக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அவர்கள் கூறியதை இன்னும் உறுதிபடுத்தினர்.
ஆக, தூதர்களைப் பார்க்கின்ற மக்களுக்கும் அவர்கள் மனிதர்களாகத் தான் தென்படுகிறார்கள். அந்தத் தூதர்களும் மக்களிடம் சென்று, “நாங்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களாக உங்களிடத்தில் வரவில்லை; உங்களுக்கு மனிதன் என்ற முறையில் என்னென்ன காரியங்களை செய்ய முடியுமோ அதைப் போன்றே எங்களாலும் செய்ய இயலும்’ என்று சொன்னார்கள்.
இறைத் தூதர்களை மக்களும் மனிதர்கள் என்று சொன்னார்கள்; தூதர்களும் தங்களை மனிதர்கள் என்றே சொன்னார்கள் என்பதைப் பார்த்தோம். அது மட்டுமல்லாமல் இறைத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வஹீயை அறிவித்த படைத்த இறைவனும் அவர்களை மனிதர்கள் என்று தான் சொல்கிறான். அவ்வாறு மக்களிடம் சொல்லுமாறும் கட்டளையிடுகிறான்.
(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும், கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம்.
அல்குர்ஆன்: 25:20
உம்மை மட்டுமல்லாமல், உமக்கு முன்னால் அனுப்பிய எல்லாத் தூதர்களையும் உணவு உண்பவர்களாகவும், உணவுக்காகக் கடைவீதிகளுக்குச் சென்று உழைப்பவர்களாகவும் தான் அனுப்பியிருக்கிறோம்.
மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக, மந்திரத்தின் மூலம் உணவு வரவழைத்து அதை உண்பவர்களாக நாம் அனுப்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கட்டளையிடுகிறான்:
“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது” என்று கூறுவீராக!
அல்குர்ஆன்: 18:110
அதே போல் நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றியும் இவ்வாறே இறைவன் கூறுகிறான். ஏனென்றால் ஈஸா நபியைப் பொறுத்த வரை அவரை ஓர் அற்புதர் என்று சொல்லலாம். அவர் தந்தை இல்லாமல் பிறக்கிறார்; அவரை அல்லாஹ் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி வானத்திற்கு உயர்த்துகிறான். பிற்காலத்தில் வானத்திலிருந்து இறந்து வந்து, பிறகு மரணிப்பார்.
இப்படி அவர்களுடைய பிறப்பு, இறப்பு இரண்டுமே அதிசயமாக இருக்கிறது. இது எந்த நபிமார்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு. இதனால் இவரை ஒரு சாரார் கடவுளாகவும், கடவுளின் குமாரர் என்றும் எண்ணி வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த அவர்களைப் பார்த்தும் இறைவன், அவர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் கிடையாது; இவரும் மனிதர் தான் என்று கூறுகிறான்.
மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (அல்குர்ஆன்: 5:75)
அவர் தந்தை இல்லாமலும் பிறந்தாலும், அவருடைய பிறப்பு அதிசயமாக இருந்தாலும் அவர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டு இறைத் தன்மை உடையவராக இருக்கவில்லை. அவருக்கும் மற்ற மனிதர்களைப் போல் பசி இருந்தது. உணவின் பால் தேவையுடையவராக இருந்தார். பிறகு எப்படி அவரை நீங்கள் கடவுள் என்று சொல்லலாம்? என்று இவ்வசனத்தில் கூறுகிறான்.
உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை. (அல்குர்ஆன்: 21:8)
இதற்கு முன்னால் நாம் அனுப்பிய தூதர்களை உணவின் பக்கம் தேவையில்லாமல், உணவு உண்பதற்கு அவசியமில்லாத ஒரு விசித்திரமான, வித்தியாசமான உடலமைப்பு கொண்டவர்களாக அவர்களை நாம் ஆக்கவில்லை.
ஒருவரைக் கடவுள் என்றோ, மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்றோ சொல்வதாக இருந்தால் அவர் இவ்வுலகில் நிரந்தரமாக இருக்க வேண்டும். அவ்வாறு யாராவது இருக்கிறார்களா? அவர்களுடைய கப்ருகள் தான் இருக்கின்றன. இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கிறார்களோ அத்தனை பேருடைய கப்ருகள் தான் இருக்கின்றதே தவிர அந்த ஆட்கள் நிரந்தரமாக இருப்பதைக் காணோம். எப்போது ஒருவர் இறந்து, அடக்கம் செய்துவிட்டார்களோ அப்போதே அவர் நிரந்தரமானவர் கிடையாது; அவர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் கிடையாது; கடவுள் தன்மை கொண்டவரும் இல்லை என்று தெரிந்து விடுகின்றது.
மேலும் நபிமார்கள் மனிதர்கள் தான் என்பதற்கு அல்லாஹ் வேறொரு சான்றைக் கூறுகிறான். அதாவது ஆண்களாகப் படைக்கப்பட்டவர்களுக்கு ஜோடியை (பெண்ணை) வாழ்க்கைத் துணையாக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இறைநேசர்களுக்கு அவ்வாறு கிடையாது. அவர்கள் அதையெல்லாம் வென்றவர்கள் என்று சிலர் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். இன்றும் கூட சிலர் அவ்வாறு சொல்லிக் கொண்டு தன்னை ஞானி, மகான் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இறைவனோ, ஆணுக்குப் பெண் என்றும், பெண்ணுக்கு ஆண் என்றும் ஏற்படுத்தியிருக்கின்றான். இந்த அடிப்படையில் அத்தனை நபிமார்களுக்கும் நாம் வாழ்க்கைத் துணையை ஏற்படுத்தியிருக்கின்றோம் என்று வல்ல இறைவன் கூறுகிறான்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 13:38)
ஆக நபியாக இருந்தாலும் அவருக்கும் தாம்பத்ய உறவு என்பது தேவை. அவர் சந்தோஷமடைவதற்கு ஒரு துணை அவசியம். அவர் மனநிறைவு அடைவதற்கு பிள்ளைகள் அவசியம். எவ்வாறு மற்ற எல்லா மனிதர்களுக்கும் இது தேவையாக இருக்கிறதோ அதே போன்று நபிமார்களுக்கும் இது தேவையுடையதாக இருக்கிறது. இதனால் இவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடுகிறான்.
ஆக, அல்லாஹ்வைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நபிமார்களாக இருந்தாலும் இறைநேசர்களாக இருந்தாலும் அவர்கள் பிறரைச் சார்ந்து இருக்கிறார்கள்; பிறரின் பால் தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள்.
இத்தனை தேவையுடையவனாக மனிதன் இருக்கும் போது, எப்படி ஒருவரை மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்ல முடியும? மகான் என்று சொல்லி தனிப் பிறவிகளாக்க முடியும்? நம்மைப் போன்ற ஒரு மனிதர் என்று தான் சொல்ல வேண்டும்.
மகான்கள், அவ்லியாக்களைக் கண்டுபிடிக்க முடியாது என்பது தனி விஷயம். அப்படி கண்டுபிடித்தால் கூட அவர்களுக்கு விழா கொண்டாட வேண்டுமா? அவர்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டுமா? அவர்களிடம் நம்முடைய கோரிக்கைகளை வைக்கலாமா? கூடாது. ஏனென்றால் அவரும் நம்மைப் போன்ற மனிதராகத் தான் இருக்கிறார். அவருக்கு மனிதத் தன்மை இல்லாமல் கடவுள் தன்மை இருந்தது என்றால் அவரிடம் நம்முடைய கோரிக்கைகளை வைப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் அவரும் வாழும் காலம் வரைக்கும் மனிதராகத் தான் வாழ்கிறார். இறக்கும் போது பிணமாகத் தான் இறக்கிறார்; மனிதராகக் கூட இல்லை. இதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
எல்லா நபிமார்களும் மக்கள் மத்தியில் மனிதராகத் தான் காட்சி தந்தார்கள். எந்த விதமான சோதனைகளுக்கு உட்படுத்திய போதும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட எந்த அம்சமும் அவர்களிடத்தில் காணப்படவில்லை. அந்த மக்களும் அவர்களை மனிதர்களாகத் தான் கருதினார்கள். அந்த நபிமார்களும் தங்களை அப்படித் தான் கருதினார்கள். அல்லாஹ்வும் அப்படித் தான் சொல்கிறான்.
இதைத் தவிர பல நபிமார்களுடைய வரலாற்றை அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். அவர்களுடைய வரலாற்றை நாம் எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அவர்கள் செய்த பிரச்சாரம் தான் அதிகமாக இருக்கும். இன்றைக்கு சிலர் மகான், அவ்லியா வரலாறு என்ற பெயரில் எழுதி வைத்திருப்பது போல் கட்டுக்கதைகள் குர்ஆனில் இருக்காது.
அந்த மகான் அங்கு பிறந்தார். இன்னார் அவருடைய பெற்றோர்கள். இன்னார் அவருடைய பாட்டன்மார்கள். அவர் செய்த அற்புதங்கள் என்பது போன்று, கதைப் புத்தகத்தைப் படிப்பது போன்று குர்ஆனில் எந்த வரலாறும் சொல்லப்படவில்லை. அந்த நபிமார்கள் எவ்வாறு சத்தியத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். அவ்வாறு எடுத்துச் சொன்ன போது எத்தகைய பிரச்சனைகளைச் சந்தித்தார்கள். அந்த எதிர்ப்புகள், பிரச்சனைகளின் போது எந்த மாதிரியான வழிமுறைகளைக் கையாண்டார்கள் என்ற வரலாறைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.
அனைத்து வரலாறுகளையுமே இறைவன் மக்களுக்குப் படிப்பினையாகவும், முன்மாதிரியாகவும் ஆக்குவதற்காக அந்த வரலாறுகளைச் சொல்கிறான். மேலும் பிரச்சாரம் அல்லாமல், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவங்களையும் நமக்குப் படிப்பினையாக இருந்தால் அதையும் சொல்வான். அந்த மாதிரி சில நபிமார்களுடைய சம்பவங்களையும் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
அதில் ஜக்கரியா (அலை) அவர்களும் ஒருவர். இவரும் நபிமார்களில் சிறந்த நபி. இவர் யஹ்யா நபியுடைய தந்தை ஆவார். மர்யம் (அலை) அவர்களை எடுத்து வளர்த்தவர்கள். இவர்கள் அனைவருமே ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்களாவர். இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இந்த நபிக்கும் மற்ற மனிதர்களைப் போன்று குழந்தைப் பாசம் இருந்தது. நமக்கு இத்தனை வயதாகியும் குழந்தை பாக்கியம் இல்லையே என்ற ஏக்கமும் இருந்தது. இதைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:
(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்குச் செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப் பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! (அல்குர்ஆன் 19:3)
“என் இறைவா! என்னைத் தனியாளாக விட்டு விடாதே! நீ மிகச் சிறந்த உரிமையாளன்” என்று ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்த போது, அவருக்காக (அவரது பிரார்த்தனையை) ஏற்றோம். (அல்குர்ஆன் 21:89)
இவ்வாறு அவர்கள் இறைவனிடத்தில் பிரார்த்தித்த போது “நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 15:53)
“ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (என இறைவன் கூறினான்) (அல்குர்ஆன் 19:7)
யஹ்யா என்ற பெயரைக் கொண்ட ஒரு குழந்தையை அவருக்கு இறைவன் நற்செய்தியாகச் சொல்கிறான். ஆனால் அவரால் இதை நம்ப முடியவில்லை. அவர் தான் இறைவனிடத்தில் குழந்தையை தா என்று கேட்டார். அவன் நினைத்தால் இந்தப் பருவத்தில் கூட குழந்தை பாக்கியத்தைத் தருவான் என்று நம்பியும் இருந்தார். ஆனால் அவ்வாறு நம்பியிருந்தும் இறைவனிடத்தில் அதற்கான சான்றைக் கேட்டார்.
“இறைவா! எனக்கொரு சான்றை வழங்குவாயாக!” என்று அவர் கேட்டார். அதற்கு இறைவன் அத்தாட்சியாக “மூன்று நாட்கள் மக்களிடம் சைகையாகவே தவிர உம்மால் பேச முடியாது என்பதே உமக்குரிய சான்று. உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும் மாலையிலும் துதிப்பீராக!” என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 3:41)
இதை நாம் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால் மிகப் பெரிய இறைநேசர் ஜக்கரியா நபியவர்கள். அல்லாஹ்வும் அவர்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வழங்கியிருக்கிறான். அப்படிப்பட்ட ஒரு நபிக்கு இத்தனை ஆண்டுகளாக பிள்ளைகளை வரம் இல்லாமல் இருந்திருக்கிறார். இவருக்கு ஆற்றல், கடவுள் தன்மை இருந்திருந்தால் குழந்தை பாக்கியத்தைத் தானாக உண்டாக்கியிருக்க வேண்டியது தானே? ஆனால் அவரால் முடியவில்லை. அதிலும் குறிப்பாக அவருக்கே பிள்ளை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், அவரால் பிறருக்குப் பிள்ளை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா? இறைவனும் அந்த ஆற்றலைக் கொடுக்கவுமில்லை.
மாறாக, அவர்கள் இறைவனிடத்திலே நம்பிக்கை வைத்து அவனிடத்திலேயே மன்றாடினார்கள். இவ்வாறு இருக்கையில் நாம் இன்று எந்த சக்தியும் இல்லாத, பேசாத, பிறர் பேச்சைக் கேட்காத இறந்து போனவர்களிடம் சென்று குழந்தையைத் தா என்று கேட்கிறோமே! அப்படி நபிமார்களிடம் இல்லாத சிறப்பு என்ன இவரிடத்தில் இருக்கிறது? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
ஆக, எந்த நபிமார்களுக்கும் அல்லாஹ் தனக்குள்ள அதிகாரத்தை வழங்கவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். அவர்களால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூடப் போக்க முடியாமல் இறைவனிடத்தில் தான் முறையிட்டார்கள். இதை அல்லாஹ் நமக்கு குர்ஆனில் கூறக் காரணம், நாமும் இதைப் போன்று ஈமானில் உறுதி மிக்கவர்களாக வேண்டும் என்பதற்காகத் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
—————————————————————————————————————————————————————-
கேள்வி – பதில்
? கண்தானம் செய்யலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் கண்தானம் செய்தவர் நல்லவராகவும் கண்தானம் பெற்றவர் கெட்டவராகவும் இருக்கலாம். அப்படிக் கண்தானத்தில் கண்ணைப் பெற்றவர் கெட்டவராக இருந்தால் அந்தக் கண் நரகத்திற்குப் போகுமா?
முஹம்மது நைனா, துபை
இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
இவ்வுலகில் நல்லவராக வாழ்ந்த ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது.
மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.
அல்குர்ஆன் 20:124, 125, 126
கண் பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என இவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.
கண் இருந்தவனைக் குருடனாக எழுப்பிட அவனது நடத்தை தான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போன்று இறைவனைக் காண்பான்.
மறுமையில் எழுப்பப்படும் தோற்றத்திற்கும் இவ்வுலகத் தோற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பு மில்லை என்பதைப் பல ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கருத்திருக்கும்
அல் குர்ஆன் 3:106
அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும் ஆப்பிரிக்கர்களின் முகம் கருப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.
மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்பிரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். கெட்டவராக வாழ்ந்த வெள்ளையர் கருப்பானவராக வருவார்.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.
அல்குர்ஆன் 2:275
இவ்வுலகில் ஒருவன் உண்மையான பைத்தியமாக வாழ்ந்தாலும் அவனும் மறுமையில் பைத்தியமாகத் தான் எழுப்பப்படுவான் என்பது கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி (1475)
ஒருவருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவ்விருவருக்கும் மத்தியில் நீதமாக நடக்கவில்லையென்றால் மறுமையில் அவனுடைய ஒரு (தோள்) புஜம் சாய்ந்தவனாக வருவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (1060)
இவ்வுலகில் தோள் புஜம் சரிந்த ஒருவர் தன்னுடைய மனைவிமார்களிடம் நீதமாக நடந்து கொண்டால் அவர் மறுமையில் சரியான தோற்றத்தில் தான் வருவார்.
ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள், “மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் (631)
இவ்வுலகில் பாங்கு சொல்பவருக்குக் கழுத்து குட்டையாக இருந்தாலும் அவர் மறுமையில் அழகிய தோற்றத்தில் கழுத்து நீண்டவராக வருவார்.
நுஐம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டைவரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக் கொண்டே கணைக்கால் வரை சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
நூல்: முஸ்லிம் 415
இவ்வுலகில் உளூச் செய்யும் போது எவ்வித ஒளியும் உடலுறுப்புகளில் ஏற்படுவதில்லை. ஆனால் மறுமையில் ஒளி ஏற்படுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் (ஒளி வீசும்) சந்திரனைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) தோற்றமளிப்பார்கள். பிறகு, அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள்; எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மூக்கு சிந்தவும் மாட்டார்கள். அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகை போடும்) தூப கலசங்கள் அகிலால் எரிக்கப்படும். அகில் என்பது நறுமணக் குச்சியாகும். அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர். (சொர்க்கவாசிகளான) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் (அலை) அவர்களின் தோற்றத்தில் வானத்தில் (முட்டும் விதத்தில்) அறுபது முழம் உயரமிருப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (3327)
மறுமையில் பவுர்ணமி சந்திரனைப் போன்று, பிரகாசமான நட்சத்திரம் போன்று அறுபது முழ உயரத்தில் சொர்க்கவாசிகள் இருப்பார்கள்.
இவ்வுலகில் தற்காலத்தில் எட்டு, பத்து அடி உயரமுள்ளவனாக மனிதன் இருப்பதே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் மறுமையில் 60 முழ உயரமுள்ளவனாக இருப்பான்.
இவ்வுலகத் தோற்றத்திற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
கண்தானம் செய்த ஒருவர் நல்லவராக வாழ்ந்தால் அவர் மறுமையில் கண்களுடன் தான் எழுப்பப்படுவார்.
நம்முடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பிறகு உயிர்கொடுத்து எழுப்பும் இறைவனுக்கு இது இயலாத ஒன்றல்ல.
கண்தானம் செய்த ஒருவர் கெட்டவனாக வாழ்ந்தால் அவர் மறுமையில் குருடனாகத் தான் எழுப்பப்படுவார். அல்லது அவனுடைய கண்களோடு தான் நரகத்திற்குச் செல்வான்.
? வட்டிக்கும் வாடகைக்கும் வேறுபாடு என்ன?
உவைசுல் கரனி
வாடகைக்கு விடப்பட்ட வீட்டிற்குத் தேய்மானம் ஏற்படுவது போல் பணத்திற்கும் மதிப்பு குறைவு ஏற்படுவதால் வாடகையும் வட்டியும் ஒரே மாதிரியாக உள்ளது எனக் கருதுவது தவறாகும். வாடகைக்கும் வட்டிக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.
ஒரு வீட்டை நீங்கள் வாடகைக்கு விட்டால் அப்போதும் அந்த வீட்டின் உரிமையாளராக நீங்கள் தான் இருப்பீர்கள். வாடகைக்கு வந்தவருக்கு அந்த வீட்டில் தங்குவதைத் தவிர வேறு எந்த அதிகாரமும் இல்லை.
வீட்டை இடித்து கட்டுவதற்கோ வீட்டின் அமைப்பை மாற்றுவதற்கோ அல்லது வீட்டின் உரிமையாளரைக் கேட்காமல் வேறு ஒருவரை அழைத்து வந்து உள்வாடகை விடுவதற்கோ அனுமதியில்லை. இவர் வாடகைக்கு இருக்கும் நேரத்தில் எதார்த்தமாக வீடு இடிந்து விழுந்துவிட்டால் அல்லது அந்த வீட்டிற்கு ஏதாவது ஒரு பாதிப்பு வந்தால் அதற்கு இவர் பொறுப்பேற்க மாட்டார். வீட்டின் உரிமையாளரே இதை ஏற்க வேண்டிவரும்.
ஆனால் கடன் கொடுப்பது இது போன்றதல்ல.
ஒருவருக்கு நீங்கள் பணத்தைக் கடனாகக் கொடுத்தால் அந்தப் பணம் முழுவதுமாக அவருடைய கட்டுப்பாட்டிற்கு வந்து விடுகின்றது. பணம் தொலைந்தாலோ திருட்டுப் போனாலோ அதற்குக் கடன் வாங்கியவர் தான் பொறுப்பாளி. கடன் கொடுத்தவர் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார். வாங்கிய பணத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் அதைத் திருப்பிச் செலுத்துவது கடன் வாங்கியவரின் கடமை.
மேலும் வாடகைக்கு விடும் போது வாடகைக்குப் பெற்றவர் குடியிருக்கும் பலனை உறுதியாக அனுபவித்து விடுகின்றார். பலனைப் பெற்றெதற்குக் கூலியாக வாடகையைச் செலுத்துகிறார். அதாவது நிச்சயித்த பயனை வாடகைக்கு இருப்பவர் அடைந்து கொள்கிறார். அவராக வீட்டைப் பூட்டி விட்டுப் பயன்படுத்தாமல் தனக்குத் தானே இழப்பு ஏற்படுத்தினால் தவிர வாடகைக்கு இருப்பவருக்கு எந்த நட்டமும் இல்லை. கொடுக்கும் வாடகைக்கு உரிய பலன் அவருக்கு கிடைத்து விடுகிறது.
ஆனால் வட்டிக்குக் கடன் பெறுபவர் அந்தப் பணத்தை வைத்து உறுதியாகப் பலனடைவார் என்று கூற முடியாது. பலனடையலாம்; பலனடையாமல் நஷ்டப்படலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுப்பதே பெரிய சுமையாகும். இதில் வாங்கியதை விடக் கூடுதலாக கொடு என்று கேட்பது அவனுக்குச் சுமைக்கு மேல் சுமையைக் கொடுக்கும். இதனால் மனிதாபிமானம் இங்கே அடிபட்டுப் போகின்றது.
மேலும் வீட்டைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்த, பயன்படுத்த அதில் தேய்மானம் கண்டிப்பாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் பணத்தைப் பொறுத்தவரை அதைப் பயன்படுத்துவதால் கண்டிப்பாக மதிப்பு குறையாது. பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு உண்டு என்றாலும் அதற்கு கடன் வாங்கியவர் காரணமாக மாட்டார். கடன் கொடுக்காமல் நமது பெட்டியில் அந்தப் பணத்தைப் பூட்டி வைத்தாலும் பண வீக்கத்தால் ஏற்படும் மதிப்பு குறைவு ஏற்படத் தான் செய்யும்.
பொருளாதார மாற்றத்தால் பணத்தின் மதிப்பு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது போல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று நடைமுறையில் அத்தியாவசியமான பல பொருட்களை வாடகையின் அடிப்படையில் நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
ஓரிடத்திற்கு இலகுவாகச் சென்று வர கார், பஸ் போன்ற வாகனங்களை வாடகைக்கு எடுக்கின்றோம். இரயில்களிலும் பேருந்துகளிலும் விமானங்களிலும் டிக்கெட் எடுத்து பயனம் செய்கின்றோம். வெறுமனே பெட்ரோலுக்கு மட்டும் நாம் பணம் கட்டுவதில்லை. பெட்ரோலுடன் அந்த வாகனத்தைப் பயன்படுத்தியற்கும் சேர்த்தே பணம் செலுத்துகிறோம். பொது நிகழ்ச்சிகளை நடத்தும் போது மைக் செட், சொற்பொழிவு மேடை, ஜென்ரேட்டர், மின் விளக்குகள் போன்ற பொருட்களை வாடகைக்கு எடுத்துத் தான் பயன்படுத்துகிறோம்.
பொருளின் தேய்மானம் காரணமாகவும் மற்றவரின் பொருளில் நிச்சயமான பயனை நாம் அடைந்து விடுகிறோம் என்ற அடிப்படையிலும் தான் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ் வாடகையை அனுமதித்துள்ளான்; வட்டியைத் தடை செய்துள்ளான் என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
—————————————————————————————————————————————————————-
ஆய்வுக்கூடம்
மாநபிக்கு எதிரான மவ்லானா பதில்கள்
காஷிபுல் ஹுதா என்ற மத்ரஸாவின் ஆசிரியர்களைக் கொண்டு மனாருல் ஹுதா என்ற மாத இதழ் சென்னையிலிருந்து வெளியாகின்றது. இவ்விதழில் மவ்லானா பதில்கள் என்ற பெயரில் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படுகின்றது. அந்தப் பதில்கள் ஹனபி மத்ஹபின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பாலான பதில்கள் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் அப்பாற்பட்டு, நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு நேர் மாற்றமானவையாக அமைந்துள்ளன. இதுபோன்று பிற இதழ்களில் வெளியாகும் மார்க்கச் சட்டங்களை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இதன் மூலம் மத்ஹபுகள் எவ்வாறு மாநபி வழிக்கு மாற்றமாகச் செயல்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் மாற்றுக் கொள்கையுடையவர்களின் கருத்துக்களை அலசுவதற்காகவும் இந்த “ஆய்வுக்கூடம்’ என்ற பகுதி வெளியிடப்படுகின்றது.
இப்போது மவ்லானா பதில்களுக்குச் செல்வோம். மனாருல் ஹுதா, மார்ச் 2013 இதழில் வெளியான கேள்வி பதிலைப் பார்ப்போம்.
நான்கு ரக்அத் தொழும் தொழுகையில் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்து விட்டால் என்ன செய்வது?
இந்தக் கேள்விக்கு மவ்லானா (?) அளித்துள்ள பதிலைப் பாருங்கள்.
நான்கு ரக்அத்துகள் கொண்ட தொழுகையில் மறந்து இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்து விட்டவருக்கு, பின்னர் ஞாபகம் வந்தால், அவர் தொழுத இடத்தை விட்டும் நீங்காமல், முகத்தை கிப்லாவை விட்டும் திருப்பாமல், தொழுகையை முறிக்கும் செயல்கள் செய்யாமல் இருப்பின் அவர் உடனே இரண்டு ரக்அத்துகள் தொழுது தொழுகையை பரிபூரணமாக்கிக் கொண்டு, இறுதியில் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்து கொள்ள வேண்டும்.
(அத்தஹ்தாவி 473)
இந்தப் பதில் நபி (ஸல்) அவர்களுடைய நேரடி செயல்முறைக்கு எப்படி நேர்முரணாக அமைந்திருக்கின்றது என்று பாருங்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மாலைத் தொழுகைகளில் ஒன்றை (லுஹ்ர்/அஸ்ர்) தொழுவித்தார்கள். – (இதன் அறிவிப்பாளரான) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தத் தொழுகையின் பெயரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் நான் அதை மறந்துவிட்டேன்.- (நான்கு ரக்அத்துடைய அத்தொழுகையில்) எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்துவிட்டார்கள். உடனே எழுந்து பள்ளிக்குள் அகலவாட்டில் போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டையை நோக்கிச் சென்று ஏதோ கோபத்திலிருப்பவர் போன்று அதில் சாய்ந்து கொண்டார்கள். தமது வலக் கரத்தை இடக் கரத்தின் மீது வைத்து, கைவிரல்களை பின்னிக் கோர்த்துக்கொண்டார்கள். மேலும் தமது வலக் கன்னத்தை இடது புறங்கையின் மீது வைத்துக்கொண்டார்கள். அவசரமாகச் செல்பவர்கள் பள்ளியின் வாயில்கள் வழியாக வெளியேறிய போது “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது (போலும்)” என்று கூறினர். அந்தக் கூட்டத்தில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். ஆனால் (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் பேச அவர்களிருவர் (மரியாதை கலந்த) பயத்தில் இருந்தனர். அந்தக் கூட்டத்திலேயே நீளமான இருகைகளுடைய ஒரு மனிதர் இருந்தார். அவர் துல்யதைன் (இரு கையாளர்) என்று அழைக்கப்படுவார். அவர், “நீங்கள் மறந்துவிட்டீர்களா? அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா? அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் மறக்கவுமில்லை; (தொழுகை) சுருக்கப்படவுமில்லை” என்று கூறிவிட்டு (மக்களைப் பார்த்து), “துல்யதைன் சொல்வது சரிதானா?” என்று கேட்க, மக்கள் “ஆம் (சரிதான்)‘ என்று பதிலளித்தனர்.
உடனே (தொழுமிடத்தை நோக்கி) முன்னேறிச் சென்று விடுபட்டதைத் தொழுது சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் (“அல்லாஹு அக்பர்‘ என்று) சொல்லி “(வழக்கமாக) தாம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வது போன்று‘ அல்லது “அதைவிட நெடிய (நேரம்)‘ சஜ்தா செய்தார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தித் தக்பீர் சொன்னார்கள். பின்னர் தக்பீர் சொல்லி “(வழக்கமாகத்) தாம் செய்யும் சஜ்தாவைப் போன்று‘ அல்லது “அதைவிட நெடிய (நேரம்)‘ (மறதிக்குரிய) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தியவாறு தக்பீர் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 482
“தொழுத இடத்தை விட்டும் நீங்காமல்” என்று இவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தை விட்டுக் கிளம்பி பேரீச்சை மரத்தின் அருகே வந்து விடுகின்றார்கள்.
“முகத்தை கிப்லாவை விட்டும் திருப்பாமல்” என்று மத்ஹபு நூல் அதிகமாக ஏற்றம் கொடுத்துச் சொல்கின்றது. நபி (ஸல்) அவர்களோ கிப்லாவை விட்டும் திரும்பி பேரீச்சை மரக் கட்டையில் முகத்தை வைக்கின்றார்கள்.
“தொழுகையை முறிக்கும் செயல்களைச் செய்யாமல்” என்று நிபந்தனை வைக்கின்றனர். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேள்வி கேட்டு அதற்குப் பதிலும் சொல்லி ஓர் உரையாடலே நடத்தி, அதன் பின்னர் தான் விடுபட்ட மீதமுள்ள தொழுகைகளைத் தொழுகின்றார்கள். பின்னர் மறதிக்கான ஸஜ்தாவும் செய்கின்றார்கள் என்பதை மேற்கண்ட புகாரி ஹதீஸிலும் முஸ்லிம் 896வது ஹதீஸிலும் பார்க்க முடிகின்றது.
இந்த நபிவழிக்கு நேர்மாற்றமான மேற்கண்ட மத்ஹபு நூலை ஆதாரமாகக் காட்டி மார்க்கத் தீர்ப்பளிக்கின்றார் மனாருல் ஹுதாவின் மவ்லானா!
மக்ரூஹான மாநபியின் தொழுகை
ரமளானில் கடைசிப் பத்தில் தொழப்படும் கியாமுல் லைல் தொழுகை ஜமாஅத்துடன் தொழ அனுமதியுள்ளதா?
இந்தக் கேள்விக்கு மவ்லானா அளித்துள்ள பதில் இதோ:
கியாமுல் லைல், தஹஜ்ஜுத் மற்றும் நஃபிலான தொழுகைகள் அனைத்தும் ரமளானில் தொழுதாலும் ரமளான் அல்லாத காலங்களில் தொழுதாலும் ஜமாஅத்துடன் தொழுவது ஹதீஸிலோ ஸஹாபாக்கள் வழிமுறையிலோ இல்லாத ஒன்று. எனவே ஹனபி மத்ஹப் பிரகாரம் மேற்கூறிய தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதை முக்கியத்துவப்படுத்தி ஜமாஅத் வைப்பது மக்ரூஹ் தஹ்ரீமாவாகும்.
மாறாக ஜமாஅத்திற்கான எந்த முன்னேற்பாடுமின்றி திடீரென இருவர் ஒன்று சேர்ந்த போது ஜமாஅத் வைத்துக் கொண்டால் பரவாயில்லை.
(நூல்: அத்துர்ருல் முக்தார் 664)
ரமளானில் நின்று வணங்குதல் என்று ஹதீஸில் கூறப்படுவதன் நோக்கம் தஹஜ்ஜுத் அல்ல. அது தராவீஹ் தொழுகையையே குறிக்கும். எனவே அதை மட்டும் ஜமாஅத்துடன் தொழுவது சுன்னத் ஆகும்.
ஷம்சுல் அயிம்மா இமாம் ஸரக்ஸி (ரஹ்) அவர்கள் நஃபில் தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது விரும்பத்தக்கதாக இருந்திருப்பின் இரவில் நின்று வணங்கும் நல்லோர்கள் அதை முக்கியத்துவப்படுத்தி தொழுதிருப்பர். ஆனால் ஸஹாபாக்கள், நல்லோர்கள், எவரும் ஜமாஅத்தாகத் தொழுததாக நிரூபணமாகவில்லை என்று கூறுகின்றார்கள்.
(நூல்: அல்மப்ஸுத் 2:144)
இதை வைத்து ஹனஃபி மத்ஹபின் படி ரமளான் இறுதிப் பத்தில் ஜமாஅத்துடன் தொழப்படும் கியாமுல் லைல் தொழுகை மக்ரூஹ்ஆகும். அதைத் தவிர்ந்து கொண்டு தனியே ஜமாஅத்தின்றி நாம் எவ்வளவு நஃபில்கள் தொழுதாலும் அது சிறப்பிக்குரியதாகும்.
(ஷாஃபிஈ: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவது சுன்னத்துமல்ல, மக்ரூஹும் அல்ல! ஆகுமானது.)
இந்தப் பதிலில் மூன்று அபத்தங்களைப் பார்க்கிறோம்.
- கியாமுல் லைல், தஹஜ்ஜத் மற்றும் நஃபிலான தொழுகைகளை நபி (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ ஜமாஅத்தாகத் தொழவில்லை.
- தஹஜ்ஜத்தும் தராவீஹும் தனித்தனி தொழுகைகள்
- கியாமுல் லைல் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மக்ரூஹ் ஆகும்.
மவ்லானாவின் இந்தப் பதிலுள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கியாமுல் லைல், தஹஜ்ஜத் மற்றும் நஃபிலான தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையல்லாத ஒன்று என்று துர்ருல் முக்தார் கூறுகின்றது.
ஒரு மத்ஹபின் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான பக்தி, சரியான மார்க்கத்தைப் பார்ப்பதை விட்டும், அதைப் பின்பற்றுவதை விட்டும் எப்படித் தடுக்கின்றது என்று பாருங்கள்.
இவர்கள் சொல்வது போன்று நபி (ஸல்) அவர்களிடம் இதற்கு வழிமுறை இல்லையா? நிச்சயமாக இருக்கின்றது. அதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.
மைமூனா (ரலி) வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். “சிறுவன் தூங்கி விட்டானா?’ என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத், பின்னர் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள்.
நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859, 992, 1198, 4570, 4571, 4572, 5919
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் (ரலி) தனியாகத் தொழாமல் நபியவர்களுடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபி (ஸல்) அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்” என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 729, 924, 1129
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபி (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபி (ஸல்) அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, “நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்” என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2012
இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.
மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபி (ஸல்) அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபி (ஸல்) அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 3316, 6295
விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபி (ஸல்) அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.
ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.
எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.
இது போல் தான் நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.
இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.
எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபி (ஸல்) அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபி (ஸல்) இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.
நபி (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை ஒருபோதும் கடமையாகப் போவதில்லை. நபி (ஸல்) அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
நபி (ஸல்) அவர்களின் வழிமுறை தெளிவாக ஹதீஸ்களில் விளக்கப்பட்டிருந்தும் மத்ஹபின் மீது கொண்டுள்ள பக்தி தான் மாநபியின் இந்த வழிமுறையை அவர்களது கண்களை விட்டும் மறைக்கின்றது என்பதை மேற்கண்ட மவ்லானாவின் பதிலிலிருந்து விளங்க முடிகின்றது.
அடுத்து, ஸஹாபாக்களின் நடைமுறையிலும் இது இல்லை என்று துர்ருல் முக்தார் சாதிக்கின்றது. ஆனால் நபித்தோழர்களின் வழிமுறையில் இதற்கு ஆதாரம் இருக்கின்றது. இதையும் இவர்களது மத்ஹபு வெறி மறைக்கின்றது.
ஸஹாபாக்களின் வழிமுறை என்றவுடன், இப்படி ஒரு வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் ஒப்புக் கொள்கின்றது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கத்தின் ஆதாரங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று, அல்குர்ஆன்; மற்றொன்று நபிவழி. இதைத் தாண்டி வேறு ஓர் ஆதாரம் மார்க்கத்தில் இல்லை என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு. ஸஹாபாக்களின் வழிமுறை என்று நாம் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த மத்ஹபுவாதிகள் இது பற்றிக் கூறும் பொய்யை அம்பலப்படுத்துவதற்காகத் தான்.
ஸஹாபாக்களின் வழிமுறையில் இரவுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழும் வழக்கம் இல்லை என்ற இவர்களின் வாதத்திற்கு வருவோம்.
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். சிலரைப் பின் பற்றிச் சிறு கூட்டத்தினர் தொழுதுகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் “இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!” என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை பின் கஅப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றோர் இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் “இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!” என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுதுவந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்காரீ
நூல்: புகாரி 2010
இந்த ஹதீஸ் ஸஹாபாக்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதிருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
“இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதைவிட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!” என்ற உமர் (ரலி) அவர்களின் கூற்று, பிந்திய இரவில் தொழுகின்ற தொழுகை தஹஜ்ஜத்தைத் தான் நபித்தோழர்கள் முந்தைய இரவில் தொழுகின்றார்கள் என்பதையும் மிக விளக்கமாகத் தெரிவிக்கின்றது.
நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், நபித்தோழர்கள் ஜமாஅத்தில் தொழுதிருக்கின்றார்கள் என்பதற்கு இது ஐயத்திற்கு இடமில்லாத ஆதாரமாகும்.
ஸஹாபாக்களின் வழிமுறையைப் பின்பற்றுவதாக இவர்கள் சொல்வது உண்மையானால் இதையாவது இவர்கள் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் ஸஹாபாக்களையும் மிஞ்சி அபூஹனீபாவின் பிரியம் இருப்பதால் இதையும் மறுக்கின்றார்கள்.
- தராவீஹ், தஹஜ்ஜத் இரண்டும் தனித்தனி தொழுகைகள், இரண்டும் ஒன்றல்ல என்பது இவர்களின் இரண்டாவது வாதம். இதற்குரிய விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
தராவீஹ், தஹஜ்ஜுத் என்று இரண்டு தொழுகைகள் உள்ளதாக இவர்கள் நினைக்கின்றனர்.
தூங்கி எழுந்து பாதி இரவுக்குப் பின்னர் தொழுவது தஹஜ்ஜுத் தொழுகை, தூங்குவதற்கு முன் தொழுவது தராவீஹ் தொழுகை என்று எவ்வித ஆதாரமும் இன்றி நம்புவது தான் குழப்பத்திற்கு முக்கியக் காரணம்.
ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபி (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸயீ 1588
ரமளான் மாதத்தில் இஷா முதல் சுப்ஹ் வரை நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை தான் தொழுதுள்ளனர் என்று மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் ஒன்றே இவர்களின் நம்பிக்கை தவறு என்பதற்குப் போதுமான சான்று.
இரவுத் தொழுகையை இரவு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுதது முதல் பஜ்ரு வரை பதினோரு ரக்அத் தொழுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் 1216
இரவுத் தொழுகையை இஷாவிலிருந்து சுபுஹ் வரை தொழலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்துள்ளது.
எனது சிறிய தாயாரும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்கள் வீட்டில், நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருக்கும் என்பதைக் காண்பதற்காக அவர்களுடன் ஓர் இரவு தங்கினேன். நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் பின்னர் உறங்கினார்கள். இரவின் கடைசி மூன்றாம் பகுதி ஆனதும் எழுந்து அமர்ந்தார்கள். வானத்தைப் பார்த்து வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன (3:190) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து உளூச் செய்தார்கள். பல் துலக்கினார்கள். பின்னர் பதினொரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் பிலால் (சுப்ஹ்) தொழுகைக்கு பாங்கு சொன்னார். இரண்டு ரக்அத் தொழுதுவிட்டுப் புறப்பட்டு மக்களுக்கு சுபுஹ் தொழுவித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 7452
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 376
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுது முடிப்பதற்கும் சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கும் சரியாக இருந்தது என்பதையும் இரவின் கடைசி நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறிகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரீ 183
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் இரண்டும் ஒன்று தான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
- கியாமுல் லைல் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது மக்ரூஹ் என்ற இவர்களின் அடுத்த வாதத்திற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்தபோது அப்போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசியபோது, “இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 729, 924, 1129, 2012
நபி (ஸல்) அவர்கள் நான்காவது இரவில் தொழுகைக்கு வரவில்லை என்றாலும் தொழுவதற்கு அனுமதித்திருக்கின்றார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து மக்கள் சிறு சிறு குழுக்களாகத் தொழுது கொண்டிருந்தார்கள் என்பதை உமர் (ரலி) அவர்களின் புகாரி 2010வது ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த இந்த கியாமுல் லைல் ரமளானில் முழுவதுமோ, அல்லது முற்பகுதியிலோ, அல்லது நடுப்பகுதியிலோ, அல்லது இறுதிப் பகுதியிலோ தொழலாம். இதை யாரும் தடுக்க முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்த இந்த இரவுத் தொழுகையைத் தான் துர்ருல் முக்தார் நூல், மக்ரூஹ் தஹ்ரீமா என்று சொல்கின்றது.
இதை மனாருல் ஹுதாவின் மவ்லானாவும் ஒப்புவித்து, மக்ரூஹ் – வெறுக்கப்பட்டது என்று கூறுகின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்த இந்த கியாமுல் லைல் இறைச் செய்தியின் அடிப்படையில் அமைந்ததாகும்.
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அல்குர்ஆன் 53:3, 4
அல்லாஹ்வின் வஹ்யீயை இவர்கள் வெறுக்கின்றார்கள் என்றால் இவர்களின் நிலையைப் பற்றி திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். எனினும் உங்களில் அதிகமானோர் உண்மையை வெறுப்பவர்கள்.
அல்குர்ஆன் 43:78
தமது தூதரைப் பற்றி அவர்கள் அறியாமல் இருந்து அவரை அவர்கள் நிராகரிக்கிறார்களா? அல்லது அவருக்குப் பைத்தியம் உள்ளது எனக் கூறுகிறார்களா? மாறாக அவர்களிடம் உண்மையையே கொண்டு வந்தார். அவர்களில் பெரும்பாலோர் உண்மையை வெறுப்போராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 23:69, 70
இத்தகைய நிலையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.