ஏகத்துவம் – ஏப்ரல் 2012

தலையங்கம்

கொடிய நரகிலிருந்து குழந்தைகளைக் காப்போம்

கொளுத்தும் வெயிலுடன் கோடைகாலம் துவங்கி விட்டது. இதை முன்னிட்டு பள்ளிக்கூடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு, பின்னர் ஓரிரு மாதங்கள் கோடை விடுமுறை அளிக்கப்படும்.

விடுமுறை அளிக்கப்பட்ட மாத்திரத்தில் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையும் பந்துமாகத் தான் அலைவார்கள்.

உச்சி மண்டையைப் பிளக்கின்ற உச்சி வெயிலின் கோரப் பிடியிலிருந்தும் கொடூர வெப்பத்திலிருந்தும் தப்பிப்பதற்காகத் தான் கோடை விடுமுறை!

கோடை விடுமுறையின் இந்த நோக்கத்தையே இவர்களின் வெயில் விளையாட்டு தகர்த்தெறிந்து விடுகின்றது; தவிடுபொடியாக்கி விடுகின்றது.

இதற்கு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலேயே இருந்து விடலாம். அதன் காரணமாகக் கோடை வெயிலின் கொடூரத்தை விட்டும் அவர்கள் தப்பலாம்.

கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி, கண்ட கண்ட நபர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுவது, பெண்களைக் கேலி செய்வது, சினிமா பார்ப்பது, அரட்டை அடிப்பது, ஊதாரித்தனமாகச் செலவு செய்வது போன்ற வீணான, பாவமான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.

புகை பிடிப்பதிலிருந்து போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்ற பாவச் செயல்களிலும் பலியாகி விடுகின்றனர்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாணவ, மாணவியரை நல்வழிப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக, கோடை காலப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது.

அந்தந்த மாவட்டப் பகுதிகளில் நடத்தப்படுகின்ற இந்த முகாம்களில் தங்கள் குழந்தைகளை அனுப்பி அவர்களது கோடை கால விடுமுறையை மார்க்கக் கல்வி, ஒழுக்க வாழ்க்கை போன்றவற்றைப் பெறுகின்ற வாய்ப்பாக ஆக்கிக் கொள்ளுமாறு மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று கல்வி என்பது உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என இரு கூறாகப் பிரிக்கப்பட்டு விட்டது. உலகக் கல்வி ஒரு குழந்தையின் நாள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. மார்க்கக் கல்வியைப் பொறுத்த வரை காலையில் ஒரு மணி நேரம் அல்லது மாலையில் ஒரு மணி நேரம் என்ற ஓரக் கல்வியாக ஆகி விட்டது. பலருக்கு அதற்குக் கூட நேரமில்லை.

மக்தப் மதரஸாக்களில் இந்த ஓர நேரங்களில் ஓத வருகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இருநூறு அல்லது முன்னூறு இருக்கும். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரேயொரு ஆசிரியர் தான் இருப்பார். அலிப் சபர் ஆ, பே சபர் பா என்று கூட்டாக ராகம் போட்டு ஒரு பாட்டு பாடி விட்டுக் கலைந்து விடுகின்றனர்.

இந்தக் கூட்டுக் கல்வியில் குழந்தைகள் என்ன கற்று விடப் போகின்றார்கள்? சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லை. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்கின்ற வகையில் தான் கோடைகாலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகின்றது.

குறைந்த நாட்களில் இஸ்லாமியக் கொள்கை விளக்கம், தொழுகைப் பயிற்சி, தொழுகையில் ஓத வேண்டிய துஆக்கள், அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள், மனனம் செய்தல் போன்ற ஒரு குறைந்தபட்ச பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்ற இந்தக் கோடைகாலப் பயிற்சி முகாமுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பி மார்க்கக் கல்வி பயிலச் செய்யுங்கள். கொடிய நரகத்திலிருந்து அந்தக் குழந்தைகளைக் காத்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

மல்டி லெவல் மார்க்கெட்டிங் கூடுமா?

? ஆம்வே போன்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் ஈடுபடுவது கூடுமா?

உவைஸ்

எம்.எல்.எம். (மல்டி லெவல் மார்க்கெட்டிங்) என்று அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த அனைத்து வகைகளுமே ஏமாற்றுதல், மோசடி, பிறர் பொருளை அநியாயமாக அபகரித்தல் போன்றவை தான் நிறைந்து காணப்படுகின்றன. இதனை சங்கிலித் தொடர் வியாபாரம் என்று கூறுவதை விட சங்கிலித் தொடர் பித்தலாட்டம் என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாகும்.

உழைக்காமல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் ஒருவன் ஏமாறுகின்றான். தான் இழந்த பணத்தை மீட்டுவதற்காகவும் லாபம் அடைவதற்காகவும் தன்னைப் போல பல ஏமாளிகளை சங்கிலித் தொடராக உருவாக்குகின்றான்.

சங்கிலித் தொடர் ஏமாளிகளிடமிருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தில் ஒரு சிறிய பகுதியை, ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்கை ஏமாற்றியவர்களுக்கு, அதாவது ஏமாளிகளை உருவாக்கியவர்களுக்கு அந்தக் கம்பெனி கொடுக்கின்றது. இது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் வியாபாரத்தில் நடக்கின்றது.

அதிக மதிப்புள்ள பொருளை குறைந்த விலைக்கு வழங்குவது வியாபாரத்தில் சாத்தியமற்ற ஒன்றாகும். என்றாலும் சில கம்பெனிகள் இவ்வாறு அறிவிப்பு செய்வார்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் 2000 ரூபாய் கட்டினால் மூன்று மாதம் கழித்து 10,000 மதிப்புள்ள கலர் டிவி தருவோம் என்று விளம்பரம் செய்வார்கள்.

அவ்வாறே சிலருக்கு வழங்கவும் செய்வார்கள். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போல் இவ்வாறு சிலருக்கு வழங்கப்படுவதைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் பணம் கட்டுவார்கள். இதைத் தான் அந்த ஏமாற்றுக் கம்பெனியினரும் எதிர்பார்த்தார்கள்.

இவ்வாறு அதிகமானோர் பணம் கட்டியவுடன் யாருக்கும் எதையும் வழங்காமல் மொத்தமாகப் பணத்தைக் கையாடல் செய்து சுருட்டிக் கொள்வார்கள்.

இவ்வாறு குறைவான பணத்திற்கு அதிக மதிப்புடைய பொருள் தரப்படும் என்று அறிவிக்கும் போதே இது ஒரு மோசடி வியாபாரம் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். இது போன்று தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதும். இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் பல வகைகள் உள்ளன.

முதல்வகை

நம்மிடம் ஒரு பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு அதைவிட மிகக் குறைந்த மதிப்பிலான ஒரு பொருளைத் தருவார்கள்.

உதாரணத்திற்கு நாம் 50,000 (ஐம்பதாயிரம்) ரூபாய் கட்டினோம் என்று சொன்னால்  6 கிராம் தங்கக்காசு தருவார்கள். 6 கிராம் தங்கக் காசிற்கு 15000 (பதினைந்தாயிரம்) ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நம்மிடமிருந்து அதிகப்படியாக 35000 (முப்பத்தைந்தாயிரம்) ரூபாய் பிடித்து வைத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு நம்மிடமிருந்து ஒரு கணிசமான தொகையைக் கொள்ளையடித்து விடுவார்கள். நம்மிடம் பெற்ற பணத்தை விட மிகக் குறைவிலான மதிப்புள்ள பொருளைத் தந்து விட்டு அந்தப் பொருளைப் பற்றி பலவிதமான பொய்மூட்டைகள் அவிழ்த்து விடுவார்கள்

இது சாதாரண தங்கக் காசு அல்ல. இதை ஆன்லைனில் விளம்பரம் செய்தால் பலகோடிக்கு விற்பனையாகிவிடும். இதைப் போன்று யாரும் தயாரிக்க முடியாது என்றெல்லாம் கூறி அப்பாவிகளை நம்ப வைப்பார்கள்.

பெரும் தொகையைக் கொடுத்து விட்டு அதைவிடக் குறைந்த மதிப்பிலான பொருளைப் பெறுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இதற்காக அவர்களிடம் நீங்கள் இரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். அவர்கள் இருவரும் இரண்டிரண்டு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். இப்படி உங்களுக்குப் பின்னால் ஆறு பேர் சேர்ந்து விட்டால் உங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போனஸாகக் கிடைக்கும் என்று கூறுவார்கள்.

அவ்வாறு ஆறு பேர் சேரவில்லை என்று சொன்னால் உங்களுடைய 35000 (முப்பந்தைந்தாயிரம்) ரூபாய் திரும்பக் கிடைக்காது என்று நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்வார்கள்.

தான் இழந்த தொகையை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் பணம் கட்டியவர் தன்னைப் போல் ஆறு நபர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று அந்தக் கம்பெனியிடம் வழங்குவார். தனக்கு கம்பெனி கூறியதைப் போன்று அவர்களிடம் அவர் கூறுவார்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் அந்தக் கம்பெனி 35000 ரூபாய் பிடித்து வைத்துக் கொண்டு முதலாமவருக்கு சொன்னது போன்றே மற்றவர்களுக்குச் சொல்லுமாறு தனக்குக் கீழ் உள்ளவரிடம் கூறும்.

ஆறு நபர்களைச் சேர்த்து விட்டவுடன் கிடைக்கும் பல இலட்சங்களில் முதலமாவருக்கு ஒரு சிறுதொகையை போனஸாக அந்தக் கம்பெனியினர் வழங்குவார்கள்.

அவர் தனக்குக் கீழ் உள்ளவர் ஆறு நபர்களைச் சேர்த்துவிட்டால் அவருக்கு குறிப்பிட்ட தொகையை போனஸாக வழங்குவார்.

இவ்வாறு நமக்குப் பின்னால் சங்கிலித் தொடர் போன்று இணைபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதற்கு முன்னால் உள்ளவர்களுக்கு போனஸ் வழங்கப்படும். ஒவ்வொருவரும் தமக்குக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியைத் தமக்குக் கீழ் உள்ளவர்களுக்கு போனஸாக வழங்குவார்கள்.

இதில் எந்த ஒரு வியாபாரமும் நடைபெறவில்லை. எந்தப் பொருளையும் வியாபாரம் செய்து அவர் இலாபம் சம்பாதிக்கவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் பலவிதமான பொய்களைச் சொல்லி இதில் இணைய வைத்து அவருடைய பொருளைக் கொள்ளை அடிப்பதைத் தவிர இதில் வேறொன்றும் இல்லை.

ஒவ்வொருவரிடமும் அடிக்கும் கொள்ளையில் பெரும் பகுதியை அந்தக் கம்பெனி வைத்துக் கொள்ளும். சிறு பகுதியை உறுப்பினராகச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும்.

இவ்வாறு தனக்கு அதிகமான போனஸ் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் பல இலட்சங்களைப் பலரிடம் வாங்கி தனக்குப் பின்னால் பலர் இருப்பதைப் போன்று காட்டி சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்.

இப்படி பல கோடிகள் சேர்ந்தவுடன் அந்தக் கம்பெனி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு உறுப்பினர்களுக்கு டாட்டா காட்டிவிடும்.

இது போன்ற மோசடி வியாபாரத்தில் எந்த ஒரு உறுப்பினரிடமும் அந்தக் கம்பெனி நேரடியாகச் சென்று பணத்தைப் பெறாது. ஒவ்வொருவருக்கும் தான் யாரிடம் பணம் கட்டினோம் என்பது மட்டும் தான் தெரியுமே தவிர அவருக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது.

பணத்தை இழந்தவர்கள் யாரிடம் போய் கேட்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பார்கள்.

இன்றைக்கு அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இது போன்ற மோசடி வியாபாரங்களில் ஈடுபட்டு பல கோடிகளை இழந்துள்ளனர். பலர் நஷ்டமடைந்து தற்கொலை செய்துள்ளனர்.

இப்படி அறியாத விதத்தில் பிறர் பொருளைக் கொள்ளை அடித்துச் சம்பாதிப்பதை எப்படி வியாபாரம் என்று கூறமுடியும்? இது எப்படி ஹலாலான வியாபாரமாக ஆகமுடியும்?

இரண்டாவது வகை

இந்த சங்கிலித் தொடர் வியாபாரத்தில் மற்றொரு வகையான மோசடியும் நடைபெறுகிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி இல்லாத பொய்களைச் சொல்லி அதனை மிகப்பெரும் விலையில் யாருக்காவது விற்பதாகும்.

வியாபாரத்தில் பொய் சொல்லி சம்பாதிப்பது ஹராம் ஆகும். அது வியாபாரத்தின் பரக்கத்தை அழித்துவிடும்.

சாதாரண ஒரு படுக்கையை, “இது அதி அற்புதமான சக்தி வாய்ந்த மூலிகைப் படுக்கை அல்லது காந்தப் படுக்கை. இதில் படுத்தால் குறுக்கு வலி குணமாகிவிடும். மலட்டுத் தன்மை நீங்கி விடும். கேன்சர் குணமாகி விடும். இது போன்ற ஒரு கண்டுபிடிப்பை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையம் இதற்கு சர்ட்டிஃபிகேட் வழங்கியுள்ளது” என்று பலவிதமான பொய்களைக் கூறி நம்ப வைத்து மிக அதிகமான விலைக்கு விற்பனை செய்து விடுவார்கள்.

சர்க்கரை நோய்க்கு மருந்து தருகிறோம் என்று கூறி ஏதேனும் ஒரு மாத்திரையைத் தருவார்கள். இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் இனி ஒருபோதும் சர்க்கரை நோய் ஏற்படாது என்று அடித்துச் சொல்வார்கள். பத்து ரூபாய் மாத்திரையை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பார்கள்.

இப்படி மாத்திரை வாங்கியவர், இன்னும் ஆறு பேருக்கு அந்த மாத்திரையை விற்றால் நீங்கள் கொடுத்த பத்தாயிரம் உங்களுக்குக் கிடைத்து விடும். அந்த ஆறு பேரும் தலா ஆறு பேருக்கு விற்றால் உங்களுக்கு 60,000 லாபம் கிடைக்கும். இப்படி மூன்று அடுக்கு போய் விட்டால் உங்களுக்குக் கார் பரிசு கிடைக்கும். ஐந்து அடுக்கு போனால் பங்களா பரிசு கிடைக்கும். பத்து அடுக்கு போய் விட்டால் அமெரிக்காவுக்கு சுற்றுலா! இருபது அடுக்கு போய் விட்டால் தென்ஆப்பிரிக்காவில் ஒரு தீவு வாங்கித் தருவோம் என்று கற்பனையில் மிதக்க வைப்பார்கள்.

ஆனால் சர்க்கரை நோய்க்கு இப்படி ஒரு மருந்து இருந்தால் அது அந்தத் துறை சார்ந்த மருத்துவர்களுக்குத் தெரியாமல் போகுமா? பிரபல மருந்துக் கம்பெனிகள் அதைத் தயாரிக்காமல் இருக்குமா? என்றெல்லாம் யாரும் சிந்திக்க மாட்டார்கள். கார், பங்களா கனவு தான் பிரதானமாக இருக்கும்.

சாதாரண ஒரு பற்பசையைத் தந்து, இதனை பட்டாணி அளவில் வைத்தாலே அதிக அளவில் நுரை வரும். இதில் பல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றெல்லாம் பொய் கூறி நம்ப வைத்து அதிகமான விலையில் விற்பனை செய்வார்கள்.

இந்த வியாபாரத்தைப் பற்றி விளக்குகிறோம் என்ற பெயரில் ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் கூட்டி லேப்டாப்பில் பல விதமான காட்சிகளைக் காட்டுவார்கள். “நான் மிகவும் ஏழையாக இருந்தேன். இந்த வியாபாரத்தில் சேர்ந்தவுடன் மிகப் பெரும் பணக்காரனாகி விட்டேன்’ என்றெல்லாம்  சிலர் பேசும் காட்சிகளைக் காட்டுவார்கள்.

உற்பத்திச் செலவு இரண்டாயிரம் உள்ள பொருளை இப்படிப் பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று விடுவார்கள்.

இந்தப் பணத்தை அடைவதற்காக கம்பெனி தன்னிடம் எதையெல்லாம் கூறி ஏமாற்றி விற்பனை செய்ததோ அது போன்று இவரும் தனக்கு கீழ் உள்ளவர்களிடம் கூறி வியாபாரம் செய்வார். இவருக்குக் கீழ் உள்ள ஐந்து பேரும் தங்களுக்குக் கீழ் தலா ஐந்து நபர்களைச் சேர்த்தால் இவருக்கு ஒரு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலாபமாகக்  கிடைக்கும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை தனக்கு  கீழ் உள்ளவர்களுக்கு இலாபமாக வழங்குவார்.

ஒவ்வொருவரும் தான் யாரிடம் பொருள் வாங்கினோம் என்பதை மட்டும் தான் அறிவார்கள். யாரும் கம்பெனியோடு நேரடியாகத் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது.

இது போன்ற பொருட்களை எந்தக் கடையிலும் வைத்து விற்பனை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இதனை வாங்கிய மக்கள் உரிய பலன் கிடைக்காமல் ஏமாறும் போது இதனை விற்பனை செய்யும் மூலத்தைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற உறுப்பினர்கள் மூலமாக மட்டுமே வியாபாரம் செய்வார்கள்.

நாம் உதாரணத்திற்குத் தான் பொருட்களையும் அதற்கு வழங்கப்படும் இலாபத்தையும் குறிப்பிட்டுள்ளோமே தவிர பல கம்பெனிகள், பல பொருட்களை, பல விதமான இலாப சதவிகிதத்தில் ஏமாற்றி விற்பனை செய்கின்றன.

இவ்வாறு பலவிதமான பொய்களைக் கூறி ஏமாற்றி செய்யப்படும் வியாபாரம் எப்படி ஹலாலான வியாபாரமாக இருக்க முடியும்?

மூன்றாவது வகை

அன்றாடம் தேவைப்படக்கூடிய சில அவசியமான பொருட்களை  ஒரு கம்பெனி தயார் செய்யும். உதாரணத்திற்கு சோப்பு, பவுடர், பேஸ்ட், சட்டை இது போன்ற பொருட்களைத் தயார் செய்யக் கூடிய ஒரு கம்பெனியாக இருக்கும்.

இவர்கள் தயார் செய்யும் பொருட்களை இவர்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்யாமல் ஆட்களைப் பிடித்து அவர்களின் மூலம் விற்பனை செய்வார்கள். இதற்கு அவர்கள் நிபந்தனை விதிப்பார்கள். யார் அவர்களுடைய கம்பெனியில் உறுப்பினர்களாக இணைகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் அவர்கள் வியாபாரச் சரக்கை வழங்குவார்கள். உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு வியாபாரச் சரக்கு வழங்க மாட்டார்கள்.

இப்படி உறுப்பினர்கள் மூலம் வியாபாரம் செய்வதால் விளம்பரச் செலவு கிடையாது; அதனால் அந்த லாபத்தை நாங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகிறோம் என்று வியாக்கியானம் கூறுவார்கள்.

அவர்களுடைய கம்பெனியில் நாம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று சொன்னால் நாம் குறிப்பிட்ட அளவு பணத்தைக் கட்ட வேண்டும். அதில் ஒரு கணிசமான தொகை உறுப்பினர் கட்டணம் என்று எடுத்துக் கொண்டு மீதித் தொகைக்கு நாம் வியாபாரம் செய்வதற்கு சரக்கு தருவார்கள்.

உதாரணத்திற்கு ஒருவர் 20,000 ரூபாய் செலுத்தினால் 10,000 ரூபாயை உறுப்பினர் கட்டணம் எனப் பிடித்துக் கொண்டு 10,000 ரூபாய்க்கு சரக்கு தருவார்கள். அவர்கள் நமக்கு குறிப்பிட்ட விலையில் சரக்கினைத் தருவார்கள். நாம் அதனை விற்றால் நமக்கு அதில் இலாபம் கிடைக்கும்.

இவ்வாறு மட்டும் இருந்தால் பிரச்சினை இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் இத்தோடு நில்லாமல் நீங்கள் விற்பனை செய்வதோடு நின்று விடாமல் நீங்கள் இரண்டு உறுப்பினர்களை எங்கள் கம்பெனியில் சேர்த்து விட்டால் அவர்கள் செய்யும் விற்பனையில் கிடைக்கும் இலாபத்திலிருந்து உங்களுக்கு நாங்கள் பங்கு தருவோம் என்று நமக்கு கூறுவார்கள்.

உதாரணத்திற்கு நாம் சேர்த்து விடுகின்ற இருவர் ஒரு மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தால் நமக்கு இலாபத்தில் இரண்டு சதவிகிதம் அல்லது குறிப்பிட்ட ஒரு அளவு பங்கு தருவார்கள்.

இத்தோடு நில்லாமல் நம்மால் சேர்த்து விடப்பட்ட இரண்டு பேர் ஒவ்வொருவரும் இன்னும் இரண்டு நபர்களைச் சேர்த்து விடுவார்கள். அவர்கள் செய்யும் விற்பனையிலிருந்தும் நமக்கு ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் இலாபமாகக் கிடைக்கும்.

இவ்வாறு தொடர்ந்து சங்கிலி போன்று செல்லும் போது ஒவ்வொரு மட்டத்தினர் செய்கின்ற வியாபாரத்திலிருந்தும் முதலாமவருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு கிடைக்கும். இப்படி ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் செய்கின்ற வியாபாரத்தின் இலாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும்.

சில நேரங்களில் 100 பேர், 200 பேர் என்று அதிகமான நபர்கள் சங்கிலித் தொடராகச் சேரும் போது முதல் நிலையில் உள்ளவருக்கு இலட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

நம்முடைய எந்த முதலீடும் இல்லாமல் மற்றவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு நமக்கு லாபம் கிடைப்பது எப்படி மார்க்க அடிப்படையில் ஹலாலான சம்பாத்தியமாக இருக்க முடியும்?

நாம் எந்த வியாபாரமும் செய்யாமல் நமக்கு இலாபம் கிடைக்கிறது எனும் போது அது ஹராமான சம்பாத்தியமாகத் தான் இருக்கும்.

இதுபோன்று சங்கிலித் தொடரில் விற்பனை செய்பவர்கள், ஹலாலான முறையில் விற்றார்களா என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் ஏமாற்றி விற்பனை செய்தால் அந்தப் பாவத்திலும் நமக்கு பங்கு இருக்கத் தானே செய்யும்?

நாம் சேர்த்து விடுவதினால் மட்டும் நமக்கு இலாபம் கிடைக்கும் என்பதே நியாயமானது கிடையாது. ஒரு வாதத்திற்கு இதைச் சரி என்று வைத்து கொண்டாலும் முதல் இருவரைத் தான் நாம் சேர்த்து விடுகிறோம். அவர்களுக்குப் பின்னால் இணைபவர்கள் செய்யும் வியாபாரத்தில் இருந்தும் நமக்கு பங்கு வருகிறதே?

இப்படி இலாபம் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் குறைவான உற்பத்திச் செலவுள்ள பொருட்களைக் கூட பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றி அதிகமான விலைக்கு விற்பனை செய்ய வைக்கின்றார்கள். ஏமாற்றியதில் கிடைக்கும் பணத்தில் தான் பங்கு தருகின்றார்கள். எனவே இது எப்படி நமக்கு ஹலாலாக முடியும்?

இப்படி பொய்களைச் சொல்லி விற்பனை செய்வதன் மூலமும் அந்த வியாபாரம் ஹராமானதாக மாறிவிடுகிறது.

பொதுவாக எந்தெந்த வியாபாரங்களில் எல்லாம் ஏமாற்றுதல், மோசடி, பொய் போன்றவை காணப்படுகிறதோ அவை அனைத்துமே ஹராமான வியாபாரங்கள் தான்.

வியாபாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு உபதேசித்த சில போதனைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள். (நூல்: முஸ்லிம் 3033)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது.

உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 164

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்)  அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 2079

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரன் ஆவான். ஒரு குறையுடைய பொருளை விற்கும்போது அதனைத் தெளிபடுத்தாமல் விற்பது ஒரு முஸ்லிமிற்கு ஆகுமானதல்ல.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

நூல்: இப்னுமாஜா 2237

—————————————————————————————————————————————————————-

ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும்.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம்.

வலிக்கு ஓதிப் பார்த்தல்

நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் எச்சிலை தொட்டு அதனால் மண்ணைத் தொட்டு பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஓதிப் பார்த்துள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி,

பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஃளினா லியுஷ்ஃபா பிஹி சகீமுனா பிஇத்னி ரப்பினா

 “அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்என்று கூறுவார்கள்.

நூல்: முஸ்லிம் 4417

நபியவர்கள் மேற்கண்ட வழிமுறையுடன் பல்வேறு முறைகளில் ஓதிப்பார்த்தலை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

வலக்கரத்தால் வலியுண்டான இடத்தைத் தடவி ஓதிப்பார்த்தல்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரி வந்தார்கள். தமது வலக் கரத்தால் (வலியுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து,

அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ், வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்

என்று பிரார்த்தித்தார்கள்.

(பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணமளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணமில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!)

நூல்: புகாரி 5743

ஓதி, கைகளில் ஊதித் தடவுதல்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதி, தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.

நூல்: புகாரி 5748

இவ்வாறு மூன்று தடவை செய்வார்கள் என புகாரி 5018வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

நோயுற்றவர் தாமாகவே இந்த அத்தியாயங்களை ஓதி தம்மீது தடவிக் கொள்ளலாம்.

நபியவர்கள் தாம் நோயுற்ற போது ஆயிஷா (ரலி) அவர்களிடம் தமக்கு ஓதிப்பார்க்குமாறு வேண்டியுள்ளதால் நாமும் மற்றவர்களிடம் அவ்வாறு தமக்குச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளலாம்.

ஓதி வலியேற்பட்ட இடத்தில் உமிழ்தல்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் ஒரு குழுவினர் பயணமொன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) அரபுக் குலங்களில் ஒரு குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித்தோழர்கள் அக்குலத்தாரிடம் தமக்கு விருந்தளிக்கும்படி கேட்க அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க மறுத்து விட்டார்கள்.

பின்னர், அந்தக் குலத்தாரின் தலைவனைத் தேள் கொட்டிவிட்டது. ஆகவே, அவனுக்காக அ(க் குலத்த)வர்கள் எலலா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே நமக்கருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் (மருந்து) இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர்களிடம் வந்து, கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; எதுவுமே அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டனர்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து அளிக்காததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது! என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஒரு ஆட்டு மந்தையை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர்.

அந்த நபித்தோழர், தேளால் கொட்டப்பட்டவர் மீது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…என்று ஓதி உமிழ்ந்தார். உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். எந்த வேதனையும் அவரிடம் தென்படவில்லை. பிறகு அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப் பங்கு வையுங்கள்! என்று (நபித்தோழர்) ஒருவர் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப்பார்த்தவர் கூறினார்.

நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு, நீங்கள் செய்தது சரிதான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறினார்கள்

நூல்: புகாரி 5749

நோய், துன்பம், மற்றும் கவலைகளின் போது ஓதும் துஆக்கள்

நோய் மற்றும் கவலை துன்பம் நீங்குவதற்காக பல்வேறு துஆக்களை நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் பிரார்த்தனைகள்.

நோய் மற்றும் துன்பத்தினால் பாதிக்கப்பட்டவர் தானே செய்யும் பிரார்த்தனைகள்.

மற்றவர்கள் நோயாளிகளுக்குச் செய்ய வேண்டிய துஆக்கள்

மேலே நாம் குறிப்பிட்டுள்ள அல்ஹம்து அத்தியாயம், சூரத்துல் இக்லாஸ். ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மற்றும் அல்லாஹும்ம ரப்பன்னாஸ் என்ற துஆக்களையும் நாம் நோயாளிகளுக்காக ஓதிக் கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால்,

 கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும் என்று கூறுவார்கள்.

(தமது அந்த வழக்கப்படியே) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம், கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்துவான் என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, “நான் தூய்மை பெற்றுவிடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்என்று சொன்னார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் ஆம். (அப்படித் தான் நடக்கும்.) என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3616

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம்  தன்னுடைய மரணத்தை நெருங்காத ஒரு நோயாளியை நலம் விசாரிக்கும் போது ஏழு தடவை

அஸ்அலுல்லாஹல் அளீம் ரப்பல் அர்ஷில் அளீம் அய் யஷ்ஃபியக” 

(உனக்கு ஆரோக்கயம் அளிக்க வேண்டும் என்று மகத்துவமிக்கவனும், மகத்தான அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) என்று கூறினால் (கண்டிப்பாக) அவர் ஆரோக்கியம் வழங்கப்படுவார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத் 2137

நபியவர்கள் நோயுற்ற போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் பின்வரும் துஆவைக் கொண்டு ஓதிப் பார்த்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, “முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஆம்என்று பதிலளித்தார்கள். அப்போது,

பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க

என்று ஓதிப் பார்த்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப் பார்க்கிறேன்.)

அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி)

நூல்: முஸ்லிம் 4403

தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்…

—————————————————————————————————————————————————————-

பொருளியல்     தொடர்: 21

கடன் வாங்கியவர் கவனிக்க வேண்டியவை

இன்று சிலர் கடன் வாங்குகின்றார்கள். ஆனால்  கொடுக்கின்ற தவணை வரும் போது கொடுக்க முடியாமல் பல பொய்கள் சொல்லியும் ஏமாற்றியும் விடுகின்றார்கள்.

இதற்கு நபி (ஸல்) அவர்கள் பல எளிதான வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறார்கள். நாம் கடனை வாங்கும் போது, “நான் இந்தக் கடனை நிறைவேற்றுவேன்’ என்ற எண்ணம் முதலில் வேண்டும். பின்னால் அல்லாஹ் எனக்கு உதவி செய்வான் என்ற எண்ணத்தை வைத்துக்  கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அல்லாஹ் அதனை நிறைவேற்றுவான்.

மாறாக அதனை மோசடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அல்லாஹ் அதனை அப்படியே ஆக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இதைப் பின் வரக்கூடிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்கüன் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான்.  எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 2387

நபி (ஸல்) அவர்களுடைய (மரணத்திற்கு பிறகு அவர்களுடைய) மனைவி மைமூனா (ரலி) அவர்கள் (நபியவர்களின் தோழர் ஒருவரை அழைத்து எனக்கு யாரிடத்திலாவது) கடன் வாங்கி வர வேண்டும் என்று  கூறினார்கள். அதற்கு அந்தத் தோழர், அவர்களிடம் “உம்முல்  முஃமினே, நீங்கள் கடன் வாங்கி வருமாறு கேட்கிறீர்கள். உங்களிடம் நிறைவேற்றுவதற்கு ஒன்றும் இல்லையேஎன்று கூறினார். அதற்கு மைமூனா (ரலி) சொன்னார்கள்: “யார் நிறைவேற்ற நாடியவராக கடன் வாங்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

நூல்: திர்மிதி 4608

மரணிப்பவருடைய வஸிய்யத்

ஒரு மனிதன் அவனுடைய மரணத் தருவாயில் கண்டிப்பாக வஸிய்யத் செய்ய வேண்டும். தன்னுடைய பிள்ளைகளை அழைத்து வஸிய்யத் செய்ய வேண்டும். “நான் இன்னாரிடம் இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறேன். அதனை நீங்கள் நிறைவேற்றிட வேண்டும்” என்று கூற வேண்டும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்!என்றார். மறுநாள்(போரில்) அவர் தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரை கப்றில் விட்டு வைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல -அவரது காதைத் தவிரலி உடம்பு அப்படியே இருந்தது.  (நூல்: புகாரி 1351)

பெற்றோரின் கடனைத் தீர்ப்பது என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் இன்றைக்குப் பெற்றோரின் கடனை நிறைவேற்றாமல் அவர்களுக்காக மார்க்கம் காட்டாத கத்தம் பாத்திஹா, மவ்லூது போன்றவற்றை ஓதி வருவதைக் காண்கிறோம், இதனை அல்லாஹ்  ஏற்றுக் கொள்ளமாட்டான். நான் கட்டளையிடாத ஒன்றை ஏன் செய்தாய்? என்று தான் கேட்பான்,

ஆனால் தந்தை, தாய் பட்ட கடன் பிள்ளையிடம் தான் சேரும். அதனை இன்றைய சமூகத்தில்  அப்படியே விட்டு விடுவதைகக் காண்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் இருக்கும் சபைக்கு ஒரு மனிதர் வந்து, “என்னுடைய தாயோ அல்லது தந்தையோ (இரண்டு விதமாகவும் ஹதீஸ்களில் வருகிறது) ஹஜ் கடமையான நிலையில் மரணித்து விட்டார். அவருக்காக வேண்டி நான் நிறைவேற்றவேண்டுமா? ஹஜ் கடமையா?” என்று கேட்டார். அதற்கு  அம்மனிதரிடம், “உம்முடைய தாய் கடன் வாங்கினால் அதனை நீர் தானே நிறை வேற்றவேண்டும் அப்படி என்றால் அல்லாஹ்வுடைய கடனை நிறைவேற்று! கடன் எப்படி கடமையோ அதேபோன்று தான் ஹஜ்ஜும் கடமை  என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பெற்றோர் பட்ட கடனுக்கு அவருடைய பிள்ளைகள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது, நமது பெற்றோருடைய நண்பர்களிடமும் விசாரிக்க வேண்டும். அப்படி கடன் பட்டு இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை நிறைவேற்ற முடியாது என்றால், “எனது தந்தை மரணித்து விட்டார். என்னிடமும் அதை நிறைவேற்றுவதற்கு வசதி இல்லை. ஆகையால் அதனை இந்த உலகத்திலேயே மன்னித்து விடுங்கள்” என்று கூறவேன்டும். இதனை யாரும் செய்வது கிடையாது.

இன்னும் சொல்லப் போனால் அல்லாஹ் வஸிய்யத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறிக் காட்டுகிறான்.

“இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு” என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லா விட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லா விட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர்ஆன் 4.11.12)

ஆண்களுக்கு இவ்வளவு, பெண்களுக்கு இவ்வளவு என்று கூறிக்காட்டும் போது இது எல்லாம் அவர் செய்து விட்டுச் சென்ற வஸிய்யத்துக்குப் பின்னாலும் அவருடைய கடனை அடைத்ததற்குப் பின்னாலும் தான்.  அதற்கு முன்னால் அதை வாரிசு எடுக்க முடியாது. ஆனால் இதை இன்றைக்கு யாரும் செய்வதில்லை.

பத்து லட்ச ரூபாய் கடன் வாங்கி விட்டு, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலுள்ள சொத்தை விட்டுச் சென்றால் அதனை அப்படியே கடன் வாங்கியவனிடம் கொடுத்து விடவேண்டும். அது போக அதிகமாக இருந்தாலும் நம்முடைய கையிலிருந்து அதனைக் கொடுத்து விட வேண்டும். ஆனால் இதனை நாம் எத்தனை  நபர்கள்  செய்கிறோம்?

நபி (ஸல்) அவர்கள் கடன்பட்ட ஒருவருக்கும் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை. அப்படியென்றால்  நம்முடைய தாய், தந்தையரின் கடனை அடைக்கவில்லை என்றால் அவர்கள் நரகம் சென்று விடுவார்களே!  எனவே நாம் எப்பாடு பட்டாவது கடனை அடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். இது பிள்ளைகள் மீது கடமையாகும்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்என்றார்கள்.  (நூல்: புகாரி 1852)

நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த  பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள்  நோய்வாய்ப்பட்டு  இருந்த போது கவலை காரணமாக வசூல் வாங்குவதெல்லாம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் இருந்ததெல்லாம் காலியாய் போய் ஒன்றுமில்லாமல் இருந்தது. அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்த உடனே எல்லாவற்றையும் முடுக்கி விடுகிறார்கள். அப்போது  பஹ்ரைனில் இருந்து  பணம் வரும் என்று தகவல் வந்தவுடன் அபூபக்கர் (ரலி) ஓரிரு நாட்கள் தாமதிக்கிறார்கள். அப்போது பஹ்ரைனில் இருந்து பணம் அல்லது பேரித்தம் பழம் அல்லது கோதுமை ஏதோ ஒன்று அங்கிருந்து வந்த உடன் அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்களை எல்லாம் அழைத்துக் கூறினார்கள்.

“மக்களே! ஒரு பொருள் வந்திருக்கிறது. அதில் யாரிடத்திலாவது  நபி (ஸல்) அவர்கள் கடன் பட்டு இருந்தால் அல்லது வாக்குறுதி அழித்திருத்தால் அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.  அதனை ஏன் அபூபக்கர் நிறைவேற்ற வேண்டும்? தந்தையுடைய கடனை எப்படி மகன் நிறைவேற்ற வேண்டுமோ அதே போன்று ஆட்சியாளர் பெற்ற கடனுக்கு அவருக்குப் பிறகு யார் வருகிறாரோ அவர் தான் அதற்கு பொறுப்பாளி.

எப்படி நல்லது கெட்டதுக்கு பொறுப்பாளியோ அப்படித் தான் கடனுக்கும் அவர் பொறுப்பாளியாவார். எனவே அதனை அவர் நிறைவேற்ற வேன்டும் இதன் அடிப்படையில் அதனை அபூபக்கர் (ரலி) நிறைவேற்றினார்கள். அந்த அடிப்டையில் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யாரிடத்தில் அல்லாஹ்வுடைய தூதர் கடன் வாங்கியிருந்தார்களோ அவர் வந்து எடுத்து கொள்ளட்டும் என்று கூறினார்கள். அப்போது ஆளுக்கு ஆள் அதனை வாங்கிப் போக ஆரம்பித்தார்கள்.

அந்த அடிப்படையில் ஜாபிர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உனக்கு ஒன்று தருவேன் என்று வாக்களித்திருந்தார்கள். அதனைப் போய் கேட்டவுடன் அப்படியே அள்ளி, அள்ளி ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். திரும்பவும் இன்னும் கொஞ்சத்தை கொடுங்கள் என்று கேட்கிறார். மீண்டும் ஐநூறு திர்ஹத்தைக் கொடுக்கிறார்கள். மீண்டும் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்க, மீண்டும் ஐநூறு திர்ஹம், ஆக மொத்தம் ஆயிரத்தி ஐநூறு திர்ஹங்கள் ஜாபிருக்கு அபூபக்ர் (ரலி) கொடுக்கிறார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருட்கள் வந்தால் உமக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்!என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் இறக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனிலிருந்து பொருட்கள் வந்தபோது, “நபி (ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்!என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று “நபி (ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்!என்றேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. “இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக்கொள்வீராக!என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2296 2298 2683 3137 3165 4383

நாம் மேலே விவரித்தது எல்லாம்  கடன் வாங்கியவர் கடைப்பிடிக்க வேன்டிய விஷயங்கள் ஆகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

திருக்குர்ஆன் விளக்கவுரை     தொடர்: 7

கியாம நாளின் அடையாளங்கள்

ஈஸா நபியின் வருகை

உலக முடிவு நாள் மிகவும் நெருங்கும் போது ஏற்படவுள்ள அடையாளங்களில் ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகுக்கு இறங்கி வருவதும் ஓர் அடையாளம் என்பதைக் கடந்த இதழில் கண்டோம்.

ஈஸா நபி வருவார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரானது என்றும் ஆதாரமற்றது என்றும் சிலர் வாதிடுகின்றனர். தமது வாதத்தை நிலைநாட்ட சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றனர்.

எனவே அது பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் கடமை நமக்கு உள்ளது.

ஈஸா நபி இறைவனால் உயர்த்தப்பட்டார்கள்; இன்னும் மரணிக்கவில்லை; இறுதிக் காலத்தில் இறங்கி வருவார்கள் என்பதற்கான சான்றுகள்:

வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு சாட்சியாக இருப்பார்.

(திருக்குர்ஆன் 4:159)

ஈஸா நபியவர்கள் இன்னும் மரணிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிவிக்கும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இவ்வசனத்தில் வேதமுடையோர் என்று குறிப்பிடப்படுவதில் யூதர்களும், கிறித்தவர்களும் அடங்குவார்கள். இவ்விரு சாராரும் ஈஸா நபியை ஏற்பார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

யூதர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. “தவறான வழியில் பிறந்தவர்’ என்றெல்லாம் ஈஸா நபியை விமர்சனம் செய்தனர்.

கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை நம்பினாலும், மதித்தாலும் அவரை எவ்வாறு நம்ப வேண்டுமோ அவ்வாறு நம்பவுமில்லை; எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவுமில்லை. கடவுளின் மகன் என்று அவர்கள் நம்பினார்கள்.

எனவே, இவர்களும் ஈஸா நபியை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

இவ்விரு சாராரும் எதிர்காலத்தில் ஈஸா நபியை நம்புகின்ற நிலைமை உருவாகும் என்பதை இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கிறது.

இந்த முன்னறிவிப்பை மக்கள் புரிந்து கொள்ளாத வகையில் சிலர் தவறான மொழிபெயர்ப்புச் செய்துள்ளதால் அதை முதலில் சுட்டிக் காட்டுவோம்.

“அவரை நம்பிக்கை கொள்ளாமல்” (இல்லா லயூமினன்ன பிஹி) என்ற சொற்றொடரில் “அவரை’ என்ற சொல் யாரைக் குறிக்கும்? ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்று அனைத்து அறிஞர்களும் எந்தக் கருத்து வேறுபாடும் இன்றி ஒருமித்துக் கூறுகின்றனர். இதற்கு முந்தைய வசனங்களில் ஈஸா நபியைப் பற்றிப் பேசி வருவதால் அது ஈஸா நபியைத் தான் குறிக்கும் என்பதில் எவருக்கும் இரண்டாவது கருத்து இருக்கவில்லை. இதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை.

இதே வசனத்தில் இடம் பெற்றுள்ள “அவரது மரணத்திற்கு முன்னர்” (கப்ல மவ்திஹி) என்ற சொற்றொடரில் அமைந்த “அவரது’ என்பது யாரைக் குறிக்கும்? இதில் தான் சிலர் தவறான கருத்துக்குச் சென்று விட்டனர்.

“வேதமுடையவர் ஒவ்வொருவரும் அவரது (அதாவது தனது) மரணத்திற்கு முன்னர்” என்று அவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

“அவரது மரணத்திற்கு முன்னர்” என்றால் “ஈஸாவின் மரணத்திற்கு முன்னர்” என்று பெரும்பாலானவர்கள் பொருள் கொண்டுள்ளனர்.

பல காரணங்களாôல் இதுவே சரியான மொழி பெயர்ப்பாகும்.

அரபு இலக்கணப்படி இரு விதமாகவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. இது போன்ற இடங்களில் எது சரியானது? எது தவறானது என்பதைத் தீர்மானிக்க வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொள்வது வழக்கம்.

ஆனால், இந்த இரண்டு மொழி பெயர்ப்புகளில் முதல் மொழி பெயர்ப்பு தவறானது என்பதை விளங்கிட வேறு எங்கேயும் நாம் செல்லத் தேவையில்லை. முதல் மொழி  பெயர்ப்பின்படி கிடைக்கும் மொத்தக் கருத்து பொய்யாகவும், கேலிக்குரியதாகவும் அமைந்திருப்பதே இந்த மொழிபெயர்ப்பு தவறு என்பதைச் சந்தேகமற நிரூபித்து விடுகிறது.

முதல் மொழி பெயர்ப்பின் அடிப்படையில் இவ்வசனத்தின் கருத்தைப் பாருங்கள்!

“வேதமுடையவர்களில் ஒவ்வொருவரும் தமது மரணத்திற்கு முன்னால் ஈஸா நபியை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாமல் மரணிக்க மாட்டார்கள்.”

இது தான் முதல் சாராரின் மொழி பெயர்ப்பின்படி கிடைக்கும் கருத்தாகும்.

அதாவது வேதமுடையவர்களான யூதர்களும், கிறிஸ்தவர்களும் தாம் மரணிப்பதற்கு முன் ஈமான் கொண்டு விடுகிறார்கள்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் மரணிப்பதற்கு முன்னால் முஃமின்களாக மாறியே மரணிக்கிறார்கள். இன்னும் ஆழமாகச் சென்றால் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நரகமே கிடையாது. ஏனெனில், அவர்களின் கடைசி நிலை நல்லதாகவே அமைந்து விடுகிறது என்றெல்லாம் இந்த மொழி பெயர்ப்பின்படி கருத்து அமைகின்றது.

மற்றவர்களைப் போலவே யூதர்களும், கிறிஸ்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களுடன் இக்கருத்து மோதுகின்றது.

ஒவ்வொரு யூதரும், கிறிஸ்தவரும் மரணிக்கும் போது முஃமின்களாக மரணிக்கிறார்கள் என்ற கருத்தை எவருமே சரி என்று ஏற்க முடியாது.

இந்த மொழி பெயர்ப்பு தவறானது என்பது சந்தேகமறத் தெரியும் போது, “அவரது மரணத்திற்கு முன் – அதாவது ஈஸாவின் மரணத்திற்கு முன்னால் வேதமுடையவர்கள் ஈஸாவை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்” என்ற இரண்டாவது மொழிபெயர்ப்பைத் தான் நாம் ஏற்றாக வேண்டும்.

இவ்வசனம் அருளப்படும் போது ஈஸா நபி மரணித்திருக்கவில்லை என்பதும் இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. ஏனெனில் அவர் மரணித்திருந்தால் “ஈஸா மரணிப்பதற்கு முன்னால்” என்று கூற முடியாது. மேலும்,

“நம்பிக்கை கொண்டார்கள்” என்று இறந்த கால வினையாகக் கூறாமல் “நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்” என்று எதிர்கால வினையாகக் கூறப்பட்டுள்ளது. ஈஸா மரணிப்பதற்கு முன்னால் அவரை எதிர்காலத்தில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புவார்கள் என்பது தான் இவ்வசனத்தின் கருத்து.

இறைவனால் உயர்த்தப்பட்டுள்ள ஈஸா நபியவர்கள் இறங்கும் போது இந்த நிலை ஏற்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.

சாட்டிலைட் யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த யுகத்தில் விண்ணிலிருந்து ஒருவர் இறங்கினால் உலகின் அத்தனை செயற்கைக் கோள்களும் அவரைப் படம் பிடித்து நமது வீட்டு டி.வி. பெட்டியில் காட்டி விடும். இவ்வாறு அதிசயமாக ஒருவர் இறங்கும் போது அவர் கூறும் உண்மையை உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்யும்.

ஏற்கனவே மரணமடைந்த ஒருவரைப் பற்றி “அவர் மரணிப்பதற்கு முன்னால் இது நடக்கும்” என்று கூறவே முடியாது.

ஈஸா நபியவர்கள் எதிர்காலத்தில் வருவார்கள் என்ற நபிமொழியை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் “இதில் உங்களுக்குச் சந்தேகமிருந்தால் இவ்வசனத்தைப் பாருங்கள்” என்று கூறியுள்ளதையும் நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். (பார்க்க: புகாரி 3448)

ஈஸா நபி மரணமடையவில்லை என்பதற்குச் சான்றாக இவ்வசனம் அமைந்துள்ளது. இதற்கு முந்தைய வசனங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது மேலும் உறுதியாகின்றது.

அவர்கள் (ஏக இறைவனை) மறுத்ததாலும், மர்யமின் மீது மிகப் பெரும் அவதூறை அவர்கள் கூறியதாலும், “அல்லாஹ்வின் தூதரான மர்யமின் மகன் மஸீஹ் எனும் ஈஸாவை நாங்களே கொன்றோம்என்று அவர்கள் கூறியதாலும் (இறைவன் முத்திரையிட்டான்.) அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை. மாறாக அவரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். வேதமுடையோரில் ஒவ்வொருவரும் அவர் (ஈஸா, மீண்டும் வந்து) மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்.

திருக்குர்ஆன் 4:156-159

ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு வேறொருவரைத் தான் யூதர்கள் கொன்றனர்.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “உயர்த்திக் கொண்டான்’ என்ற சொல் அந்தஸ்து உயர்வைத் தான் குறிக்கும் என்று சிலர் வாதிடுவர். இது தவறாகும்.

“அவரை உயர்த்திக் கொண்டான்’ என்று மட்டும் கூறப்பட்டால் அந்தஸ்து உயர்வு என்று பொருள் கொள்ள சிறிதளவாவது இடம் இருக்கும். ஆனால் “தன்னளவில்’ என்பதையும் சேர்த்துக் கூறுவதால் அவ்வாறு பொருள் கொள்ள வழியில்லை.

“ரபஅ’ என்ற சொல்லுக்கு “அந்தஸ்து உயர்வு’ என்று பொருள் கொள்வதாக இருந்தால் அந்தஸ்து, பதவி, புகழ், தகுதி என்பன போன்ற சொற்கள் அச்சொல்லுடன் சேர்க்கப்பட வேண்டும்.

உயர்ந்த தகுதிக்கு அவரை உயர்த்தினான்என்று இத்ரீஸ் நபி பற்றி அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 19:57)

ஆனால் ஈஸா நபியைப் பற்றி இங்கே கூறும் போது அவரையே உயர்த்திக் கொண்டதாகக் கூறுகிறான். இதற்கு நேரடிப் பொருள் தான் கொள்ள வேண்டும்.

தொழுகையில் கைகளை நாம் உயர்த்திக் கட்டுகிறோம். இதைக் குறிப்பிடுவதற்கும் “ரபஅ’ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கைகளின் அந்தஸ்தை உயர்த்துவது என்பது இதன் பொருளில்லை. கைகளையே உயர்த்துதல் என்பது தான் பொருள்.

மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் கூச்சலிட்டனர். “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!  நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை. இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம். நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக ஆக்கியிருப்போம். “அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார். அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி (எனக் கூறுவீராக.) (திருக்குர்ஆன் 43:57-61)

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

கியாமத் நாளின் அடையாளம் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதென்றால் அவர் அந்த நாளுக்கு மிக நெருக்கத்தில் உலகத்தில் வாழ வேண்டும். அப்போது தான் அவரை கியாமத் நாளின் அடையாளம் எனக் கூற முடியும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரை கியாமத் நாளின் அடையாளம் என்று எப்படிக் கூற முடியும்?

ஈஸா நபியைப் பொறுத்த வரையில் அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள்; ஆள் மாறாட்டம் செய்து வேறொருவரைத் தான் ஈஸா நபியின் எதிரிகள் கொன்றனர்.

அவர் இறைவனால் உயர்த்தப்பட்டார். உயர்த்தப்பட்டவர், இறுதிக் காலத்தில் யுக முடிவு நாளுக்கு நெருக்கத்தில் மீண்டும் வருவார்; மரணிப்பதற்காக அவர் இந்த உலகத்திற்கு மீண்டும் அனுப்பப்படுவார்; என்று நபிகள் நாயகத்தின் ஏற்கத்தக்க ஏராளமான பொன்மொழிகள் தெரிவிக்கின்றன.

கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் திகழ்கிறார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்குகிறார்கள்.

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

நானே ஈஸா நபி என்று கூறிய பொய்யர்கள் சிலர் தோன்றினர். சிலுவை, பன்றி, ஜிஸ்யா என்பதற்கெல்லாம் நவீனமான விளக்கம் கூறி அதைத் தாங்கள் செயல்படுத்தியதாகக் கதையளந்தனர். ‘யாரும் வாங்காத அளவுக்குச் செல்வம் கொழிக்கும்” என்பதற்கு எந்தச் சமாதானமும் அவர்களிடம் இல்லை. இந்தப் பொய்யர்களின் காலத்தில் இத்தகைய நிலை ஏற்படவேயில்லை.

முஸ்லிமில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் ‘போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பொய்யர்கள் வந்தபோது இந்தத் தீய பண்புகள் முன்பை விட அதிகமானதே தவிர எடுபட்டுப் போகவில்லை.

அவர் இறங்கக் கூடிய காலத்தில் ‘இஸ்லாத்தைத் தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்” என்று அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் கூறுகிறது. அந்த பொய்யர்களின் காலத்தில் அப்படி நடக்கவில்லை.

தஜ்ஜால் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.

தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும்போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மினாரா (கோபுரம்) அருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தம் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் கொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வை எட்டும் தூரம் வரை செல்லும். அவரது மூச்சுக்காற்று படுகின்ற எந்த காஃபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். லுத்‘ (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன்(ரலி), நூல்: திர்மிதீ

இந்தப் பொய்யர்கள் மூலம் இவற்றில் எதுவும் நிறைவேறவில்லை.

ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுக முடிவு நாள் வந்து விடும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

யுக முடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

அஜ்வா ஹதீஸின் உண்மை நிலை

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது நமது நிலைபாடு. இந்த நிலைபாட்டுக்குக் குர்ஆனிலிருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்களிலிருந்தும் ஆதாரங்களை வெளிப்படையாக பல சந்தர்ப்பங்களில் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதே அடிப்படையில் நபித்தோழர்களும், இமாம்களும் சில ஹதீஸ்களை மறுத்துள்ளனர் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுப்பதாக நம்மீது குற்றம் சாட்டுபவர்கள் இன்று வரை இதற்கு எந்தப் பதிலையும் கூறவில்லை.

குர்ஆனுக்கு முரண்படும் குறிப்பிட்ட சில ஹதீஸ்களுக்கு மாத்திரம் பதில் என்ற பெயரில் உளறுகிறார்களே தவிர குர்ஆனுக்கு முரணாக அமைந்துள்ள செய்திகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற அடிப்படை விதியை மறுக்கும் விதமாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த அடிப்படைக்குப் பல சான்றுகளை நாம் தெளிவுபடுத்தி பல வருடங்கள் ஆகியும் இன்றுவரை இதைப் பற்றி இவர்கள் வாய்கூட திறக்கவில்லை.

வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டும் இவர்களால் இந்த அடிப்படை விதியை மறுக்கும் விஷயத்தில் வாய் திறக்க முடியவில்லை. காரணம் இருக்கின்ற ஒன்றை இல்லை என்று கூறினால் இவர்கள் பொய்யர்கள் என்பது வெட்வெளிச்சமாகி விடும். இவர்களின் எந்த உளறலுக்கும் இடம் கொடுக்காத வகையில் இதற்குரிய ஆதாரங்கள் அமைந்துள்ளன.

இந்த விதியின் அடிப்படையில் அஜ்வா வகை பேரீச்சம் பழம் பற்றி புகாரியில் இடம்பெற்றுள்ள செய்தி பலவீனமானது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூறமாட்டார்கள் என்று நாம் கூறுகிறோம்.

எனவே அஜ்வா ஹதீஸ் தொடர்பாக நம்முடைய நிலைபாட்டைத் தெளிவுபடுத்திய பின் அதற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் உரிய பதிலைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில்  ஏழு “அஜ்வா‘ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் தீங்களிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5445

அஜ்வா ரகப் பேரீச்சம் பழங்கள் விஷத்தை முறிக்கின்ற அளவுக்கு ஆற்றல் கொண்டவை. மனித உயிரைக் கொல்லும் எப்படிப்பட்ட விஷமாக இருந்தாலும் இந்தப் பழத்தை உண்டவருக்கு அந்த விஷம் ஒன்றும் செய்யாது என இந்தச் செய்தி கூறுகின்றது.

நிரூபித்துக்காட்ட வேண்டும்

இந்தச் செய்தி மனிதர்களின் சுய சிந்தனைக்கு அப்பாற்பட்ட சொர்க்கம் நரகம் போன்ற இஸ்லாத்தின் மறைவான விஷயங்களைப் பற்றி பேசவில்லை. அப்படி பேசினால் அதை நிரூபித்துக்காட்ட வேண்டுமென்று கேட்க மாட்டோம்.

மாறாக இந்தச் செய்தி தற்போது நமக்கிடையே உள்ள ஒரு பொருளுக்கு அதிபயங்கரமான ஆற்றல் இருப்பதாகக் கூறுகின்றது. எனவே உண்மையில் அஜ்வா பழத்திற்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருக்கின்றதா? இல்லையா? என்பதை நாமே முடிவு செய்துவிட முடியும். இந்தச் செய்தியை நம்பக் கூடியவர்களே இது உண்மை என்று நிரூபித்துக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

இதை நிரூபித்துக்காட்ட இவர்களுக்கு அஜ்வா பழம், விஷம் ஆகிய இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானது. இவை இரண்டையும் எளிதில் வாங்கிவிட முடியும். எனவே அஜ்வா பழத்தை உண்டு விட்டு விஷம் குடிக்க வேண்டும். இதன் பிறகு விஷம் இவர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டால் இந்தச் செய்தி உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தச் செய்தி உண்மையானது என்பதை நிரூபிக்க இதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை. அசத்தியத்தைத் தோலுரித்துக் காட்ட இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று திருக்குர்ஆன் நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.

ஒரு பொருளுக்கு இல்லாத ஆற்றல் அப்பொருளுக்கு இருப்பதாக யாராவது கூறினால் அந்த ஆற்றலை நிரூபிக்குமாறு கேட்க வேண்டும். இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்தில் ஒரு மன்னன் இறைவனுக்குரிய ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிட்டான்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் அவன் பொய்யன் என்பதை நிரூபிக்க ஒரே ஒரு கேள்வியை அவனிடம் கேட்டார்கள். என்னுடைய இறைவன் சூரியனை கிழக்கே உதிக்கச் செய்கிறான். மேற்கே மறையச் செய்கிறான். “உனக்கு இறைத்தன்மை இருந்தால் கிழக்கே உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்குமாறு செய். மேற்கே மறையும் சூரியனை கிழக்கில் மறையுமாறு செய்” என்று கேட்டார்கள். அந்த மன்னன் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வாயடைத்துப்போனான்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

அல்குர்ஆன் 2:258

இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு மன்னன் சொல்வது அசத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இதே அடிப்படையில் நாமும் அஜ்வா பழம் தொடர்பான செய்தி அசத்தியம் என்பதை நிரூபித்துள்ளோம்.

இந்தச் செய்தியைச் சரியானது என்று வாதிடக்கூடியவர்கள் நாம் விடும் சவாலை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. இது சரியான செய்தி என்று அவர்களின் வாய் கூறினாலும் அவர்களின் உள்ளம் இதை மறுக்கவே செய்கிறது. இதை நடைமுறைப்படுத்திக் காட்ட மறுப்பதன் மூலம் இது பொய்யான செய்தி என்பதை நிரூபித்து வருகின்றனர்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளைக் கூறமாட்டார்கள்.

அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

அல்குர்ஆன் (4 : 87)

தன் பெயரில் இதுபோன்ற பொய்யான செய்திகள் வந்தால் அதை நிராகரித்துவிட வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கைக்கு)க்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அ(தைக் கூறுவ)தில் நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன். என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும் (அதற்குக் கட்டுப்படாமல் அதை விட்டு) விரண்டு ஓடுமானால், இன்னும் அச்செய்தி உங்களு(டைய வாழ்க்கை)க்கு (சாத்தியப்படுவதை விட்டும்) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிகத் தூரமானவன்.

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என் பெயரால் யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் 1

எனவே தான் நடைமுறைப்படுத்த இயலாத இதுபோன்ற ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ளது.

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று: விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவுக்கு அச்செய்தி மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும் இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்து வராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276

உளறல்களும் விளக்கங்களும்

இந்தச் செய்தியைச் சரி காணக்கூடியவர்கள் நமது வாதங்களுக்குப் பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு உளறி வருகிறார்கள். இவர்களின் இந்த உளறல்களே இந்தச் செய்தி பொய்யானது என்பதை மென்மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

பயணத்திலும் உள்ளூரிலும் கடமையான தொழுகை இரண்டு ரக்அத்களாக இருந்தது. இதன் பிறகு உள்ளூரில் இருந்தால் நான்கு ரக்அத் தொழ வேண்டும் என இரண்டு ரக்அத்கள் அதிகமாக்கப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று முன்பு கூறினோம்.

இதன் பிறகு வேறு சில செய்திகளைக் கவனிக்கும் போது இந்தச் செய்தியை குர்ஆனுக்கு முரணில்லாமல் விளங்கிக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்து முன்பு கூறிய கருத்திலிருந்து மாறி இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டுக்கு வந்தோம்.

அஜ்வா பேரீச்சம் பழம் தொடர்பாக மறுப்புக் கூற வந்தவர்கள் இந்தப் பிரச்சனையை சுட்டிக்காட்டி நாம் ஆய்வில் அரைகுறையாக இருக்கின்றோம் என்பதைப் பின்வருமாறு கூறியுள்ளனர்.

பயணத் தொழுகை பற்றிய ஹதீஸை முன்னர் மறுத்து விட்டுப் பின்னர் நாம் ஏற்றுக் கொண்டதால் நாம் அரைகுறை ஆய்வு செய்பவர்கள் என்று கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் இந்த உளறல்படி பார்த்தால் உலகத்தில் ஒரே ஒரு ஆய்வாளர் கூட இருக்க மாட்டார். இவர்கள் உலகில் யாரைப் பெரிய ஆய்வாளர் என்று கூறுகிறார்களோ அவர்களும் இதே அளவுகோல் பிரகாரம் அரைகுறை ஆய்வாளர்கள் தான்.

மார்க்க விஷயங்களில் முன்பு ஒரு கருத்தைக் கூறிவிட்டு அது தவறு என்று தெரிய வரும் போது அதிலிருந்து மாறிக் கொள்வது அனைத்து ஆய்வாளர்களிடமும் சர்வ சாதாரணமாக ஏற்படக்கூடியதாகும்.

இத்தகைய தவறு வராத ஒரு ஆய்வாளரும் உலகத்தில் இல்லை.  நான்கு இமாம்கள் உட்பட அனைத்து இமாம்களின் நிலையும் இதுவே. முன்பு ஒரு மார்க்கச் சட்டத்தைக் கூறிவிட்டு பின்பு மாற்றிய சம்பவங்கள் இமாம்கள் வாழ்க்கையில் நிறைய இருக்கின்றன.

ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று கூறிவிட்டுப் பிறகு அது சரியானது என்று கூறுவதும், சரியான செய்தி என்று கூறிவிட்டுப் பிறகு பலவீனமானது என்று கூறுவதும் இவர்கள் பெரிதும் மதிக்கும் அல்பானீ போன்ற அறிஞர்களிடம் நிறையவே ஏற்பட்டிருக்கின்றது. இதனால் அல்பானீ ஆய்வில் அரைகுறை என்று கூறுவார்களா?

சொன்னது தவறு என்று தெரிந்த பிறகும் ஊருக்குப் பயந்து கொண்டு உண்மையைச் சொல்லாமல் மறைப்பது தான் பெருங்குற்றமாகும். விமர்சிப்பவர்களுக்கு அஞ்சாமல், தான் சொன்னது தவறு என்று ஒருவர் வெளிப்படையாகக் கூறினால் இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

சிறப்புக்குரிய ஒன்றைக் குறையாகச் சொல்லிக் காட்டுகிறார்கள் என்றால் இவர்களின் சிந்திக்கும் திறன் எந்த லட்சணத்தில் இருக்கின்றது என்பதை அறிய முடிகின்றது.

மேலும் பயணத் தொழுகை தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் குறிப்பிட்ட செய்தி குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று நாம் கூறிய போது இவர்கள் யாரும் சரியான விளக்கத்தை ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவில்லை. இன்றைக்கு அஜ்வா பழ செய்தியைச் சரி காண உளறுவதைப் போன்று அந்தச் செய்தியிலும் உளறினார்கள்.

இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் இல்லாமல் இவர்களின் கற்பனைகளாக இருந்தது.

நாம் மறு ஆய்வு செய்யும் போது இதற்குரிய விளக்கத்தை ஆதாரங்களுடன் நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. நாமாகத் தான் ஆய்வு செய்து அதை அறிந்து கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்

அஜ்வா செய்தி குர்ஆனுடன் முரண்படுகின்றதா?

அஜ்வா செய்தி மேற்கண்ட அடிப்படையில் குர்ஆனுடன் முரண்படுகின்றது என நாம் கூறியதற்கு இவர்கள் எழுப்பும் கேள்வி என்ன?

அஜ்வா பற்றிய ஹதீஸ் இந்த வசனத்துக்கு முரண்படுகிறது என்று நாம் எடுத்துக் காட்டவில்லையாம். அஜ்வா சாப்பிட்டால் விஷம் பாதிக்கும் என்று ஒரு வசனம் இருந்தால் தான் அது குர்ஆனுக்கு முரணாம். அப்படி ஒரு வசனம் இல்லாததால் இது குர்ஆனுக்கு முரண்படவில்லையாம்.

இது போன்ற கேள்விகள் கேட்பவர்கள் வடிகட்டிய மூடர்களாகத் தான் இருப்பார்கள். குர்ஆனுடைய போங்கை அறியாதவரே இது மாதிரியான கேள்விகளைக் கேட்பார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தையாகும். இறைவன் பயன்படுத்தும் ஒரு வார்த்தை பல்வேறு பிரச்சனைக்குத் தீர்வாக அமையக்கூடிய சிறப்பைப் பெற்றுள்ளது.

உதாரணமாக இஸ்லாத்தில் போதைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு நவீன காலத்தில் கஞ்சா, ஹெராயின், அபின், போதை மருந்து ஊசிகள் இன்னும் பல பெயர்களில் போதைப் பொருட்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த போதைப் பொருட்களுக்கு இவர்கள் வைத்துள்ள எந்தப் பெயரும் குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே ஒருவர் கஞ்சா குடிக்கக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? அபின் சாப்பிடக்கூடாது என்று குர்ஆனில் இருக்கின்றதா? என்று கேட்டால் அவர் குர்ஆனைப் படிக்காதவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் படித்தும் புரியாத அறிவிலியாக இருக்க வேண்டும்.

இவர்களின் கேள்வியும் இந்த லட்சணத்தில் தான் அமைந்துள்ளது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொய் சொல்ல மாட்டார்கள் என்று குர்ஆன் கூறுகின்றது. எதுவெல்லாம் பொய்யாக இருக்கின்றதோ அவை அனைத்தும் குர்ஆனுக்கு எதிரானவை என்று சாதாரண அறிவு படைத்த ஒவ்வொரும் அறிந்து கொள்வர். நான் சொல்வது போல் அல்லாஹ் சொன்னால் தான் ஒப்புக் கொள்வேன் என்று அல்லாஹ்வுக்கே பாடம் நடத்தும் அறிவீனர்களை என்னவென்பது?

அஜ்வா வகை பேரீச்சம் பழத்தையும் விஷத்தையும் உண்டு பாதிப்பு ஏற்டவில்லை என்பதை நிரூபித்தாலே இந்த பேரீச்சம் பழத்துக்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் உண்டு என்பது உண்மையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஜ்வா பழத்துக்கு இப்படிப்பட்ட ஆற்றல் இருப்பதாகக் கூறினார்கள் என்ற இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன.

இத்தனை ஆண்டுகளில் உலகத்தில் ஒருவர் கூட அஜ்வாவையும் விஷத்தையும் உண்டு நிரூபித்துக் காட்டவில்லை. இந்த ஹதீஸ் செயல்படுத்த இயலாத செய்தி என்பதை உணர்ந்த சிலர் இதை வெளிப்படையாக மறுத்துவிடக் கூடாது என்பதற்காக தங்களுக்கு தோன்றிய கற்பனைகளைக் கூறி இதை நியாயப்படுத்த நினைக்கின்றார்கள்.

ஹதீஸ் கூறாத கருத்தை இவர்கள் கூறுவதாலும் இதைச் செயல்படுத்திக் காட்டி நிரூபிக்க இவர்கள் முன்வரவில்லை என்பதாலும் இவர்களும் இந்த செய்தியைப் பொய் என்றே நம்புகின்றனர்.

இப்படிப்பட்ட பொய்யான செய்தியை அல்லாஹ் தன் தூதருக்கு கூறினான். இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்தப் பொய்யை மக்களுக்குக் கூறினார்கள் என்று சொல்வது குர்ஆனுக்கு எதிரான கூற்றாக இவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு பொருளுக்கு குறிப்பிட்ட சக்தி உண்டு என்று யாராவது வாதிட்டால் அதை நிரூபித்துக் காட்டுவது அவருடைய கடமை. நிரூபிக்க இயலாவிட்டால் அது தவறானது என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு தெளிவுபடுத்துகின்றது.

அஜ்வா ஹதீஸை நம்பக்கூடியவர்கள் அதைச் செய்து காட்ட முன்வரவில்லை. எனவே குர்ஆனின் அளவுகோலின் படி இது பொய் என்பது உறுதியாகி விட்டது. பொய்யான தகவலை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கூறினார்கள் என்று நம்புவது குர்ஆனுக்கு எதிரான நம்பிக்கை இல்லையா?

இதன் பிறகும் இந்தச் செய்தி குர்ஆனுக்கு எப்படி முரண்படுகின்றது என்று அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்.

சம்பந்தமில்லாத கேள்விகள்

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சம்பவத்தை நாம் சுட்டிக்காட்டியதால் அதிலிருந்து பின்வருமாறு கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

இந்த வசனத்திற்கும் அஜ்வாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அஜ்வா ஹதீஸைச் சரி காணும் யாரேனும் உயிர்ப்பிக்கச் செய்யும் – மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வின் வல்லமைக்குப் போட்டியாக, அஜ்வா சாப்பிட்டால் நாங்கள் மரணிக்கவே மாட்டோம் என்று தர்க்கம் செய்தார்களா? அல்லது அல்லாஹ் மரணிக்கச் செய்தவனை அஜ்வாவை ஊசி மூலம் செலுத்தி உயிர்ப்பிப்போம் என்று சொன்னார்களா? அல்லது அஜ்வா சாப்பிட்டால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாம்; உயிரோடு உள்ளவர்களை அஜ்வா கொடுத்து மரணிக்கச் செய்யலாம் என்று இந்த ஹதீஸின் அர்த்தம் சொல்கிறதா? இல்லையே!

என்ன அற்புதமான கேள்விகள்! என்னே சிந்தனைத் தெளிவு!

இந்தக் கேள்விகளைக் கேட்டதன் மூலம் இவர்கள் கூறவரும் விளக்கம் என்னவென்றால் ஒருவன் அல்லாஹ்வின் தன்மைகள் தனக்கு இருப்பதாகக் கூறினால் தான் அதைச் செய்து காட்டுமாறு அவனிடம் கேட்கலாம்.

அஜ்வா ஹதீஸை நம்பக்கூடியவர்கள் யாரும் அஜ்வாவிற்கு அல்லாஹ்வின் ஆற்றல் இருப்பதாக நம்பவில்லை. எனவே இதை நாங்கள் செய்துகாட்ட வேண்டிய அவசியமில்லை என்பதே இந்தக் கேள்விகளின் சாராம்சம்.

இந்த ஹதீஸைத் தூக்கிப் பிடிக்க இவர்கள் வைக்கும் ஒவ்வொரு வாதமும் இவர்களின் அறியாமையைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவே அமைந்துள்ளது.

ஒருவன் கற்களுக்குச் சிந்திக்கும் சக்தி உண்டு; மரங்களுக்கு பேசும் சக்தி உண்டு; கத்தரிக்காயில் விஷ முறிவுக்கு மருந்து உண்டு என்று கூறினால் அதையும் இவர்களின் வாதப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறுபவனிடம் இவற்றைச் செய்து காட்டி நிரூபிக்குமாறு கேட்கக் கூடாது.

ஏனென்றால் இவன் கற்களுக்கும் மரங்களுக்கும் கத்தரிக்காய்க்கும் அல்லாஹ்வின் தன்மைகள் இருப்பதாகக் கூறவில்லை. சிந்திப்பதும், பேசுவதும், விஷத்தை முறிப்பதும் அல்லாஹ்வின் தனித்தன்மையில்லை. மாறாக இவை படைப்பினங்களின் தன்மைகள். எனவே இவனுடைய கூற்றை இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை இவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒருவனுக்கு அல்லாஹ்வின் தன்மைகள் இருப்பதாக நம்புவது எவ்வாறு மடமையோ அது போன்று ஒரு பொருளுக்கு இல்லாத தன்மை இருப்பதாக நம்புவதும் மடமையாகும். அந்தத் தன்மை வேறு படைப்புகளில் உள்ள தன்மையாக இருந்தாலும் சரியே.

மனிதன் சிந்திப்பான் பேசுவான் என்று கூறினால் யாரும் இதை மறுக்க மாட்டார்கள். ஏனென்றால் அனைவரும் இதைக் கண்கூடாகப் பார்க்கின்றனர். அதே நேரத்தில் அனைத்து மரங்களும் பேசும் என்று கூறினால் இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு கூறுபவர்கள் அதை நிரூபித்துக் காட்டுவது கடமை.

சொல்லப்போனால் அல்லாஹ்வின் தன்மை தனக்கு இருப்பதாக ஒருவன் வாதிட்டால் அதைச் செய்துகாட்டி நிரூபிக்குமாறு கேட்பது நியாயமானது என்றால் அஜ்வா பழத்திற்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் இருப்பதை நிரூபித்துக் காட்டுமாறு கேட்பது அதை விடவும் நியாயமானது.

ஏனென்றால் அல்லாஹ்வை யாரும் கண்ணால் பார்க்கவில்லை. அவனுடைய படைப்புகளைச் சிந்தித்து அல்லாஹ்வையும் அவன் ஆற்றலையும் அறிந்து கொள்கிறோம். இவ்வாறு சிந்திக்காதவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கின்றார்கள். எனவே இறை நம்பிக்கை என்பது சிந்தனை அடிப்படையிலும் நம்பிக்கை அடிப்படையிலும் உள்ள விஷயம்.

ஆனால் விஷத்தை முறிக்கும் தன்மையாகிறது அது மறைவான நம்பிக்கை தொடர்பானதாகவோ சிந்தித்து நம்ப வேண்டிய விஷயமாகவோ இல்லை. நேரடியாகக் கண்ணால் பார்த்து  சோதித்துப் பார்த்து நம்ப வேண்டிய விஷயம்.

எனவே அல்லாஹ்வின் தன்மை எனக்கு உள்ளது என்று சொல்பவனை விட அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்று கூறக் கூடியவர்கள் அதை நிரூபித்துக்காட்ட அதிகக் கடமைபட்டிருக்கின்றார்கள்.

அஜ்வா பகுத்தறியும் சக்தி கொண்டதா?

விஷத்தை வேண்டுமென்றே குடித்தால் அஜ்வா விஷத்தை முறிக்காது. பாம்பு போன்ற விஷப் பிராணிகளால் நாம் விரும்பாமல் விஷம் உடம்பில் ஏறிவிட்டால் அப்போது தான் அஜ்வா வேலை செய்யும் என்று இந்த ஹதீஸைச் சரிகாணுபவர்கள் கூறுகின்றனர்.

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள். இந்த ஹதீஸிலிருந்து முள் தானாக நமக்குக் குத்தினால், அதற்காக அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுப்போமா? ஒருவன் ஒரு முள்ளை எடுத்து வேண்டுமென்றே தனது காலில் குத்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்று அர்த்தம் எடுக்க முடியுமா? அதுபோல் தான் விஷப்பாம்பு தானாக நம்மைத் தீண்டினால் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் அஜ்வா நம்மைக் காக்கும். நாமாக திமிர் எடுத்துப் போய் விஷப்பாம்பை கடிக்க விட்டால் அல்ல.

இப்படி வாதிடுவதன் மூலம் இவர்களுக்கும் சிந்தனைக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது உறுதியாகிறது. இதில் முள் குத்தினால் வலிக்காது என்று கூறப்படவில்லை. அப்படிக் கூறப்பட்டால் அதையும் நிரூபிக்குமாறு நாம் கேட்போம். அதுவும் பொய்யானது என்று நாம் மறுப்போம். இந்த ஹதீஸில் மறுமையில் கிடைக்கும் நன்மை பற்றி பேசப்படுகிறது. அதை நிரூபிக்குமாறு கேட்க முடியாது. அது உலகில் நிரூபித்துக் காட்டும் விஷயமே அல்ல. உதாரணம் காட்டுவது என்றால் இரண்டுக்கும் பொதுவான ஒற்றுமை இருக்க வேண்டும். இந்த அறிவு கூட இவர்களுக்கு இல்லை.

துன்பத்தை நாமாக வரவழைத்துக் கொண்டால் நன்மை கிடைக்காது என்பது சரி தான். ஏனென்றால் தன்னைத் தானே நோவினைப்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. இஸ்லாம் தடை செய்த காரியத்தைச் செய்து நன்மையை அடைய முடியாது.

ஆனால் அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்கின்றது என நம்பக்கூடியவர்களுக்கு விஷம் சாப்பிடுவது நோவினையான ஒன்றல்ல. ஏனென்றால் அஜ்வா விஷத்தினால் வரும் நோவினைகளைத் தடுத்துவிடும் வல்லமையுடையது என்று நம்புகிறார்கள். அதாவது அஜ்வா சாப்பிட்ட பின்னர் விஷம் சாதாரண உணவு என்ற நிலைமைக்கு வந்து விடுகிறது. எனவே இதைச் சாப்பிடுவது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இவர்கள் நம்பினால் இதை உதாரணமாகக் காட்ட முடியாது. அஜ்வாவுக்குப் பின்னர் விஷம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பினால் இவர்களும் இந்த ஹதீஸை நம்ப மறுக்கிறார்கள் என்றே பொருள்.

எனவே இவர்களின் நம்பிக்கைப்படி பார்த்தால் அஜ்வா பேரீச்சம் பழத்தை உண்டுவிட்டு பிறகு விஷம் குடித்துக் காட்டுவது இஸ்லாத்தில் பாவமான காரியமல்ல. எனவே இதைச் செய்துகாட்ட இவர்களுக்கு எந்தத் தடையுமில்லை.

முள் யதார்த்தமாகக் குத்தியதா? அல்லது வேண்டுமென்றே குத்திக் கொண்டானா? என்பதை அல்லாஹ் பிரித்து அறியக்கூடியவன். எனவே வேண்டுமென்று குத்திக் கொண்டவனுக்கு அவன் நன்மை கொடுக்க மாட்டான்.

அஜ்வா பேரீச்சம் பழம் அல்லாஹ்வைப் போன்று பிரித்து அறியும் தன்மை கொண்டதா? விஷம் உடலுக்குள் சென்றால் இந்த விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டதா? அல்லது இவன் விரும்பாமல் விஷ ஜந்துக்களால் ஏற்றப்பட்டதா? என்று அஜ்வா பழம் சிந்திக்குமா?

விஷம் வேண்டுமென்றே ஏற்றப்பட்டிருந்தால் அஜ்வா வேலை செய்யாதாம். இல்லாவிட்டால் வேலை செய்யுமாம். என்ன அறிவிப்பூர்வமான விளக்கம்?

ஒருவன் விஷத்தைக் குடி பானம் என்று நினைத்து, தவறுதலாகக் குடித்துவிட்டால் அப்போது அஜ்வா இவனைக் காக்கும். விஷம் என்று தெரிந்தே குடித்தால் அஜ்வா காக்காது என்று கூறுகிறார்கள். இப்போது அஜ்வாவுக்கு விஷத்தை முறிக்கும் தன்மையுடன் விஷம் குடிப்பவனின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் சக்தியும் வந்துவிட்டது?

இப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் தான் அல்லாஹ்வின் நாட்டமிருந்தால் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் இவர்கள் ஆதரிக்கும் அஜ்வா ஹதீஸ் அல்லாஹ்வைப் பற்றியோ அவனுடைய நாட்டத்தைப் பற்றியோ பேசவில்லை. முழுக்க முழுக்க அஜ்வாவைப் பற்றியே பேசுகின்றது. அஜ்வா செய்தி ஆன்மிக அடிப்படையில் சொல்லப்படவில்லை. மருத்துவ அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கின்றது.

நாம் அல்லாஹ்வின் ஆற்றலைப் பற்றி சர்ச்சை செய்யவில்லை. அஜ்வாவின் ஆற்றலைப் பற்றியே சர்ச்சை செய்து கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ் நாடினால் நெருப்பு குளிராகும். கடல் பிளக்கும். மலை தூள்தூளாகும். ஆகு என்று சொன்னால் ஆகிவிடும் என்பது உண்மை. இதனால் நெருப்பு எப்போதும் குளிராக இருக்கும் என்றோ கடலை எப்போதும் யார் வேண்டுமானாலும் பிளக்கச் செய்யலாம் என்றோ கூறுவது அறிவீனம்.

அல்லாஹ் நாடினால் வெண்டைக்காய் எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது என்று நான் சொல்லக்கூடாது. அதே நேரத்தில் வெண்டைக்காயில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்து இருக்கிறது என்பதை அறிவுப்பூர்வமாக நிரூபித்து விட்ட பின் அல்லாஹ் நாடினால் குணமாகும் என்று கூறலாம்.

அஜ்வா ஹதீஸைச் சரிகாணக்கூடியவர்கள் அதை நிரூபித்துக் காட்டாத வரை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பற்றிப் பேசக்கூடாது. அஜ்வாவிற்கு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்பதை நிரூபித்த பின்பே அல்லாஹ்வின் நாட்டத்தால் அது விஷத்தை முறிக்கும் என்று கூறலாம்.

அஜ்வா செய்தியில் விஷம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தான் கூறப்பட்டுள்ளது. இவர்கள் கூறுவது போல் நம்முடைய விருப்பம் இல்லாமல் தானாக உடலில் விஷம் ஏறினால் தான் அஜ்வா பாதுகாக்கும் என்பது ஹதீஸில் இல்லாத இவர்களின் சொந்தச் சரக்காகும்.

அஜ்வாவை நிலைநாட்ட வந்து விஷத்தைக் குடித்து மரணித்துவிடக்கூடாது என்ற பயத்தில் இவர்களாகக் கூறிய கற்பனை விளக்கமாகும்.

ஒரு பொருளுக்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்குமானால் விஷம் எந்த முறையில் ஏற்றப்பட்டாலும் அப்பொருள் விஷத்தை முறிக்க வேண்டும். இதற்கு தற்காலத்தில் உள்ள விஷ முறிவு மருந்துகளை உதாரணமாகக் கூறலாம்.

ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் உடலில் ஏறினாலும் அவர் வேண்டுமென்றே விஷத்தைக் குடித்தாலும் இந்த விஷ முறிவு மருந்தை அவருக்குக் கொடுத்தால் இந்த மருத்து விஷத்தை முறித்துவிடும்.

அஜ்வா என்பது இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று தானே. அஜ்வா விஷத்தை முறிக்கும் என்றால் மற்ற விஷ முறிவு மருந்துகள் வேலை செய்வது போல் அஜ்வாவும் வேலை செய்ய வேண்டும். மற்ற மருந்துகளைச் சோதித்துப் பார்ப்பது போல் அஜ்வாவையும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

எனவே அஜ்வா ஹதீஸைச் சரிகாணக் கூடியவர்கள் கூறும் விளக்கங்கள் எதுவும் ஏற்புடையதாக இல்லை. விளக்கம் என்ற பெயரில் இந்த ஹதீஸை மென்மேலும் பலவீனப்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மை.

வேண்டுமானால் இவர்களுக்காக நாம் சவாலை மாற்றி இவர்கள் ஆசைப்படக் கூடிய வகையில் கேட்கிறோம். இவர்கள் அஜ்வாவை மட்டும் சாப்பிடட்டும். விஷத்தைச் சாப்பிட வேண்டாம். இவர்கள் அஜ்வாவைச் சாப்பிட்ட பின்னர் இவர்கள் மீது நாம் விஷ ஊசியை ஏற்றுகிறோம். இவர்கள் தமாக விரும்பி விஷத்தை ஏற்றிக் கொள்ளாததால் இந்த சவாலுக்கு இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்காது. இதையாவது ஏற்பார்களா?

மொத்தத்தில் அஜ்வாவுக்கு வாக்காலத்து வாங்கும் இவர்களுக்கும் அதில் கடுகளவு நம்பிக்கை கூட இல்லை. இவர்களும் அஜ்வா சாப்பிட்டால் விஷம் ஒன்றும் செய்யாது என்று வாயளவில் சொல்கிறார்கள். விஷம் தனது வேலையைக் காட்டும் என்று மனதால் நம்புகிறார்கள். எனவே யாருமே இந்த ஹதீஸை நம்பவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

நாம் மனதாலும் வாயாலும் அது பொய் என்கிறோம். இவர்களோ வாயால் நம்பி, மனதாலும் நடவடிக்கையாலும் பொய்யாக்கிக் கொண்டு உள்ளனர். இது தான் வித்தியாசம்.

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தப்ஸீர்கள்          தொடர்: 14

குர்ஆனை மறந்த நபிகள் நாயகம்?

ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்கிட ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.

அல்குர்ஆன் 22:52

இறைத் தூதர்களின் ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்று மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது. ஓதுதலில் என்றால் ஓதப்பட்டதில் என்று பொருள். அதாவது இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து பெற்ற தூதுச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் போது, அவை பற்றி தவறான குழப்பத்தையும், வீண் சந்தேகங்களையும் மக்களுக்கு மத்தியில் ஷைத்தான் ஏற்படுத்துவான் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு பொருள் கொள்வதே குர்ஆனுக்கும், நபிவழிக்கும் பொருத்தமானதாகும்.

தவறான கொள்கையுடைய பல இஸ்லாமிய இயக்கங்கள், குழுக்கள் தங்களது கொள்கைகளை திருக்குர்ஆன் ஆதரிப்பதாகப் பிரச்சாரம் செய்வதை இன்றைக்கும் காண முடிவது இந்த வசனத்தின் அடிப்படையில் தான். ஷைத்தான் ஏற்படுத்துகின்ற குழப்பத்தின் காரணத்தாலே இந்தத் தவறான கொள்கைகள் அவர்களுக்கு சரியானதாகத் தோன்றுகின்றன. எனவே ஓதுதலில் என்பது ஓதப்பட்டதில் என்பதையே குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்திற்குச் சில அறிஞர்களால் தவறான பொருள் செய்யப்படுவதோடு அதன் அடிப்படையில் இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும், கொள்கையை ஆட்டம் காணச் செய்யும் அளவில் சில கட்டுக்கதைகளும் அவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

“இறைத்தூதர்கள் இறைச் செய்திகளை ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தி, இறைத்தூதர்களின் ஓதுதலில் பல தவறுகளை நிகழ்த்தி விடுவான். எனவே இறைத்தூதர்கள் வசனங்களை மாற்றி, தவறாக ஓதிவிடுவார்கள். ஓதுதலில் ஷைத்தான் குழப்பத்தைப் போடுவான் என்பதன் அர்த்தம் இதுதான். நபிகள் நாயகம் அவர்களின் ஓதுதலிலும் ஷைத்தான் புகுந்து விளையாடியுள்ளான்” என்று இந்த வசனத்திற்கு சில இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

நபியவர்கள் தொழுகையில் குர்ஆன் வசனங்களை ஓதிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய ஓதுதலில் ஷைத்தான் புகுந்து, நபியவர்களை தப்பும் தவறுமாக ஓத வைத்து விட்டான் என ஒரு கதையை விரிவுரை நூல்களில் உலாவ விட்டிருக்கின்றார்கள். அந்தக் கதையையும், அது எவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கின்றது என்பதையும் தொடர்ந்து காண்போம்.

நபியவர்கள் ஓதும் போது ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்தியதாக இமாம்களால் விரிவுரை நூல்களில் கூறப்படும் கதை இது தான்.

நபியவர்களுக்கு மக்காவில் இருக்கும் போது அரபுகளின் கடவுள்கள் பற்றி இறைவசனம் அருளப்பட்டது. எனவே அவர்கள் லாத், உஸ்ஸா பற்றி திரும்ப, திரும்ப ஓதலானார்கள். தங்களுடைய கடவுகள்களைப் பற்றி நபியவர்கள் ஓதியதை அம்மக்கள் செவியுற்ற போது சந்தோஷம் கொண்டு, அதைக் கேட்பதற்காக மேலும் நபியவர்களை நெருங்கி வந்தார்கள். அப்போது அவர்களின் ஓதுதலில் “அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள், பரிந்துரை அவைகளிடம் வேண்டப்படும்” என்று (தவறாக ஓதுமாறு) ஷைத்தான் போட்டான். நபியவர்களும் இதை ஓதினார்கள். அப்போது தான் இறைவன் இவ்வசனத்தை (22:52) அருளினான்.

நூல்: அத்துர்ருல் மன்சூர் பாகம் 10, பக்கம் 514

நபியவர்கள் மகாமு இப்ராஹீமில் தொழுது, (நஜ்ம் அத்தியாயத்தை) ஓதிக் கொண்டிருக்கும் போது சற்று தூங்கலானார்கள். அப்போது “லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! அவைகள் உயர்ந்த வெள்ளைப் பறவைகள். அவைகளிடம் பரிந்துரை வேண்டப்படும்” என்று (தவறாக) ஓதினார்கள். தங்களது கடவுள்களுக்கு பரிந்துரை செய்யும் ஆற்றல் உண்டு என நபியவர்கள் கூறியதை அவர்கள் செவியுற்ற போது சந்தோஷம் அடைந்தனர். பிறகு நபியவர்கள் “லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் எனக்கு அறிவியுங்கள்! உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை.” என்று (திருத்தி, சரியாக) ஓதினார்கள்.

நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான், பாகம் 2, பக்கம் 387

இணை வைப்பாளர்கள் பெரிதும் மதித்த, கடவுள்களாகப் போற்றிய லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளைப் பற்றி திருக்குர்ஆனில், “இவை மக்களால் சூட்டப்பட்ட வெறும் பெயர்கள் தாம், கற்பனைப் பாத்திரங்கள் தாம்’ என்று இறைவன் நஜ்ம் அத்தியாயத்தில் (53:19-23) குறிப்பிடுகின்றான்.

நபியவர்கள் தொழுகையில் இந்த வசனங்களை ஓத முற்படும் போது ஷைத்தான் ஜிப்ரீல் வடிவில் வந்து லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகள் உண்மைப் பாத்திரங்கள் என்றும், அவைகளுக்குப் பரிந்துரை செய்யும் ஆற்றல் உள்ளது எனவும் வசனங்களை மாற்றி ஓதுமாறு நபியவர்களைக் குழப்பி விட்டானாம். ஷைத்தானால் குழப்பத்திற்குள்ளான நபியவர்களும் அவ்வாறு வசனங்களை மாற்றி ஓதிவிட்டார்கள் என்று மேற்கண்ட விளக்கவுரை (?) யில் கூறப்படுகின்றது. தங்கள் கடவுள்களுக்குச் சக்தி உள்ளது என்பதை நபியவர்கள் தங்கள் வாயாலே ஒப்புக் கொண்டதைக் கண்டு இணை வைப்பாளர்களும் சந்தோஷம் அடைந்தார்கள் என்றும் அவ்விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல விரிவுரை நூல்களில் கூறப்பட்ட இச்சம்பவம் எந்த ஹதீஸ் நூலிலும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் இச்சம்பவத்தை எந்தக் கண்டனமும் இன்றி பதிவு செய்வதற்கு முன், இப்படியொரு சம்பவம் நடந்திருக்குமா என்றும், இதை உண்மை என ஒப்புக் கொண்டால் ஏற்படும் விளைவு என்ன என்றும் சிந்தித்திருக்க வேண்டும்.

ஆம்! இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தகர்க்கும் ஒரு கட்டுக்கதை இது! குர்ஆனின் ஏராளமான வசனங்களுடன் போர் தொடுக்கும் ஒரு பொய்க்கதை இது!

பாதுகாக்கப்பட்ட நபிகள் நாயகம்

சாதாரண மனிதர்களுக்கு மறதி உள்ளதைப் போன்று நபியவர்களுக்கும் மறதி ஏற்படும். பல நிலைகளில் நபியவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. அரிதாகத் தொழுகையில் சில ரக்அத்களை கூட்டியும், குறைத்தும் நபியவர்கள் தொழுதது மறதியினால் தான்.

அந்தச் சந்தர்ப்பத்திலேயே, “நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களுக்கு மறதி ஏற்படுவதைப் போன்று எனக்கும் மறதி ஏற்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (பார்க்க: புகாரி 401)

எனினும் இறைவன் புறத்தி-ருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபியவர்கள் ஒரு போதும், கிஞ்சிற்றும் மறந்துவிட மாட்டார்கள். நபிகளார் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச் செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய் விடும். எனவே தான் வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகத்திற்கு மறதி ஏற்படாது என்ற ஒரு பாதுகாப்பை இறைவன் வழங்கியுள்ளான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் எந்த ஒன்றையும் மறந்து விட மாட்டார்கள்.

நபியவர்களின் உள்ளத்தில் புகுந்து, சரியான வசனங்களை மறக்கடிக்கச் செய்து, தவறான வசனங்களை ஓதச் செய்யும் ஆற்றல் ஷைத்தானுக்குத் துளியும் இல்லை. நபிகளாரின் உள்ளத்தை இது போன்ற கேடு ஏற்படாதவாறு இறைவன் பலப்படுத்தியுள்ளான்.

திருக்குர்ஆனில் உள்ள பல வசனங்கள் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றன.

(முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம் நீர் மறக்க மாட்டீர்.

அல்குர்ஆன் 87:6

(முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.

அல்குர்ஆன் 25:32

அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!

அல்குர்ஆன் 11:75

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

நபியவர்கள் குர்ஆனில் எதையும் மறக்க மாட்டார்கள் என்று இத்தனை வசனங்கள் கூறும் போது லாத், உஸ்ஸாவை ஆதரித்து நபியவர்களின் வாயிலிருந்து வார்த்தைகள் புறப்பட்டிக்காது. அவைகளுக்கு ஆற்றல் உண்டு என நபிகளார் மறந்தும் கூறியிருக்க மாட்டார்கள் என்பதில் அறிவுடைய மக்களுக்குத் துளியும் சந்தேகமிருக்காது. விரிவுரையில் கூறப்பட்ட அந்த விஷமத்தனமான விளக்கம் இத்தனை இறை வார்த்தைகளோடும் நேரிடையாக மோதுவதை அறியலாம்.

விடைதரும் விளக்க வார்த்தைகள்

மேலும் பின்வரும் குர்ஆன் வசனங்களையும் சிந்தித்துப் பார்த்தாலே மேற்கண்ட கதையை நம்புவது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணரலாம்.

சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 69 :44

நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்என (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 10 :15

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 53:4

(முஹம்மதே!) நாம் உமக்கு தூதுச் செய்தியாக அறிவிக்காததை நம் மீது நீர் இட்டுக் கட்ட வேண்டும் என்று உம்மைத் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள். (முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்காவிட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!

அல்குர்ஆன் 17: 73

நபியவர்கள் குர்ஆனில் உள்ளதை மறந்து விட மாட்டார்கள்.

குர்ஆனில் இல்லாத எதையும் ஓத மாட்டார்கள்.

குர்ஆனில் இருப்பதை மாற்றி ஓத மாட்டார்கள்.

இறைவனிடமிருந்து அறிவிக்கப்படுபவை தவிர வேறெதையும் ஓத மாட்டார்கள்.

இறைவன் கூறாததைக் கூறியதாக இட்டுக்கட்ட மாட்டார்கள்.

தவறு ஏற்படாதவாறு இறைவன் நபியவர்களை நிலைப் படுத்தியுள்ளான்.

என்பன போன்ற பல கருத்துக்கள் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் லாத், உஸ்ஸா, மனாத் ஆகியவைகளை ஆதரித்து, சரியான வசனங்களை மறந்து நபியவர்கள் தொழுகையில் ஓதினார்கள் என்றால் இறைவனின் முத்து முத்தான மேற்கண்ட வசனங்களுக்கு என்ன அர்த்தம்? அச்சம்பவத்தை நம்புவது இவ்வளவு இறைவசனங்களை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமில்லையா? இந்த விளக்கங்கள் குர்ஆனை விளங்க உதவுமா?

இஸ்லாத்திற்குக் களங்கம் கற்பிக்க நினைக்கும் கயவர்கள் விரிவுரை நூல்களில் கூறப்பட்டிருக்கும் இது போன்ற விளக்கங்களைக் கையிலெடுத்து தான் பிரச்சாரம் செய்கின்றனர். எச்சிலைச் சோற்றுக்கு நாக்கைத் தொங்கவிட்டு அலையும் நாய்கள் போல இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைக்க சல்மான் ருஷ்டி போன்ற மனித ஷைத்தான்கள் அலைகின்றார்கள்.

இந்தக் கேடுகெட்ட ஜென்மங்களுக்குத் தீனி போடும் விதமாகவே விரிவுரை நூல்களில் காணப்படும் இது போன்ற விளக்கங்கள் அமைந்துள்ளன என்பதை இமாம்களின் விளக்கங்களைக் கண்மூடித்தனமாக நம்பும் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குர்ஆனின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் இமாம்கள் கூறிய இக்கதை அமைந்துள்ளது. இது முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியது. இதையும் எவ்விதக் கண்டனமும் இன்றி இமாம்கள் தங்கள் விரிவுரை நூல்களில் பதிவு செய்திருக்கின்றார்கள் என்றால் இதிலிருந்தே விரிவுரை நூல்களின் நிலையை, இமாம்களின் விளக்கங்களின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

நூஹ் நபியின் கப்பல்

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:38

திருக்குர்ஆன், நூஹ் நபியின் வரலாற்றை மனிதர்களுக்கு அழகாக எடுத்துரைக்கின்றது. 950 வருடம் தம் சமுதாய மக்களிடையே வாழ்ந்து, ஏகத்துவப் பிரச்சாரம் செய்தும் சொற்ப நபர்களே நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள். எனவே ஒரு கப்பல் செய்யுமாறு நூஹ் நபிக்கு இறைவன் கட்டளையிட்டு அதில் நம்பிக்கை கொண்ட மக்களை அழைத்து செல்லுமாறும், ஏனைய மனிதர்களுக்குத் தனது தண்டனையை இறக்கப் போவதாகவும் இறைவன் தெரிவித்தான். நூஹ் நபியும் இறைவனது கட்டளைக்கு இணங்கி, தனிக்கப்பலில், தன்னை நம்பிக்கை கொண்ட மக்களுடன் இறைவழியில் பயணமானார்கள். ஏனையோர் இறை தண்டனைக்கு ஆளானார்கள்.

பல்வேறு படிப்பினைகள் நிறைந்த இந்த வரலாற்றுச் சம்பவம் துளியும் மாற்றமின்றி திருக்குர்ஆனில் பல வசனங்களில் கூறப்படுகின்றது. அவற்றில் இந்த வசனமும் ஒன்று.

இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? இதுவரையிலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எனினும் இமாம்கள் இதில் தலையிட்டு விளக்கமளிக்க புகுந்த பிறகு தான் புற்றீசல்களைப் போன்று பிரச்சனைகளும் கிளம்ப ஆரம்பித்து விட்டன. நல்ல கருத்துக்களை விளக்கியிருந்தால் அதை இவ்வாறு நாம் விமர்சித்திருக்க மாட்டோம். இந்த வசனத்தில் அவர்கள் விளக்கியிருப்பது நூஹ் நபியின் கப்பலைப் பற்றி….

இதோ அந்த விளக்கங்கள்:

ஈஸா அலை அவர்களிடம், “(நூஹ் நபியுடன்) அக்கப்பலில் கலந்து கொண்ட ஒரு மனிதரை நீங்கள் உயிருடன் எழுப்பலாமே. அவர் நமக்கு அதைப் பற்றி தெரிவிப்பாரே” என்று ஹவாரிய்யீன்கள் கேட்டனர். அவர்களை மண் நிறைந்த பகுதியை நோக்கி ஈஸா அலை அழைத்துச் சென்றார்கள். அதிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து இது என்னவென உங்களுக்குத் தெரியுமா? என மக்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என அவர்கள் பதிலளித்தனர். அதற்கு ஈஸா (அலை), “இது நூஹுடைய மகன் கஃப்” என்று கூறி தனது அஸாவினால் அதை அடித்து, “அல்லாஹ்வின் அனுமதியுடன் நீ நிலைபெறு” என கூறினார்கள். அப்போது தனது தலையிலிருந்த மண்ணை தட்டிவிட்டவாறே அவர் (நூஹுடைய மகன்) எழுந்து நின்றார்.  அவர் முதியவராக இருந்தார்.

அப்போது ஈஸா (அலை), “நீ இவ்வாறு தான் அழிக்கப்பட்டாயா?” என வினவினார். அதற்கு அவர், “இல்லை நான் இளைஞனாக இருந்தபோதே மரணித்து விட்டேன். எனினும் அது ஒரு நேரம். இப்போது நான் நரைத்து விட்டேன்” என பதிலளித்தார். “சரி நூஹுடைய கப்பலை பற்றி நமக்கு நீ கூறு” என ஈஸா (அலை) கூறினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:

அதன் நீளம் ஆயிரத்து இருநூறு முளங்கள், அதன் அகலம் அறுநூறு முளங்கள், அதில் மூன்று தட்டுக்கள் இருந்தன. ஒரு தட்டில் கால்நடைகள், மற்றொரு தட்டில் மனிதர்கள், மற்றொரு தட்டில் பறவைகள் இருந்தன.

கால்நடைகளின் சாணங்கள் அதிகரித்த போது, “யானையின் தும்பிக்கையை வெட்டி விடு” என இறைவன் வஹீ அறிவித்தான். நூஹ் (அலை) அவர்களும் அதை வெட்டினார்கள். அதில் அந்த இடத்தில் ஒரு ஆண் பன்றியும் ஒரு பெண் பன்றியும் தங்கின. அவைகள் சாணத்தை நோக்கி வந்தன.

எலி ஒன்று கப்பலின் நங்கூரத்தில் வந்த போது அந்த நங்கூரத்தை எலி சாப்பிட ஆரம்பித்தது. உடனே இறைவன், சிங்கத்தின் இரு கண்களுக்கிடையில் அடி என நூஹ் (அலை) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். அதன் மூக்குத் துவாரத்திலிருந்து ஆண் பூனை, பெண் பூனைகள் வெளிப்பட்டன. அவ்விரண்டும் எலியை நோக்கி வந்தன.

நூல்: அத்துர்ருல் மன்சூர், பாகம் 8, பக்கம் 44

நூல்: தஃப்ஸீருத் தப்ரீ, பாகம் 15, பக்கம் 312

நூஹ் (அலை) அவர்களின் கப்பல் 1200 முழம் நீளம், 600 முழம் அகலம் கொண்டதாக இருந்தது எனவும், அக்கப்பலில் மனிதர்களுக்கு ஒரு தட்டு, பறவைகளுக்கு ஒரு தட்டு, ஏனைய விலங்கினங்களுக்கு ஒரு தட்டு என மொத்தம் 3 தட்டுக்கள் இருந்ததாகவும் இவ்விளக்கத்தில் கூறப்படுகின்றது. இவ்விளக்கத்திற்கு அச்சாரமாக அமைந்த திருக்குர்ஆன் வசனம் எது என்பதை இமாம்கள் விளக்குவார்களா? அல்லது இந்தச் சம்பவத்தை நபிகள் நாயகம் கூறியதற்கான ஆதாரத்தைத் தான் முன்வைப்பார்களா?

விலங்கினங்களின் சாணம் நிறைந்த போது பன்றியை உருவாக்கி அதைக் காலி செய்தது, எலியின் சேட்டை அதிகரித்த போது அதை அழிக்க சிங்கத்தின் மூக்குத் துவாரத்திலிருந்து (என்ன மர்மமோ?) பூனையை உருவாக்கியது என வழக்கம் போல மாயாஜாலக் கதைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. மொத்தத்தில் இதுவும் அடிப்படை ஆதாரமற்ற ஒரு கதை தானே ஒழிய இதற்கு எவ்விதச் சான்றும் இல்லை.

வளரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

ஸைபுத்தீன் பரேலவி

தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேரூன்றுவதற்கு முன்னால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் இரு சாரார்களாக இருந்தனர்.

ஒரு சாரார் மத்ஹபு என்ற வட்டத்திற்குள் இருந்து கொண்டு சமாதி வழிபாட்டைக் கண்டிக்கின்ற சாரார்!

இந்த சாரார் தேவ்பந்த் மஸ்லக் – அதாவது தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரியின் கொள்கைகளை, நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அறியப்பட்டனர்; அடையாளப்படுத்தப்பட்டனர்.

மற்றொரு சாரார், சமாதி வழிபாட்டை ஆதரித்து அதில் சாஷ்டாங்கம் செய்பவர்கள். இந்த சாரார் தர்ஹா தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆதரிப்பர்.

கப்ருக்கு சந்தனம் பூசுதல், அதற்குப் போர்வை போர்த்துதல், அதன் அருகில் ஊதுபத்தி கொளுத்துதல், சாம்பிராணி போடுதல் போன்ற தீமைகள் அனைத்தையும் மார்க்கம் என்று மூர்க்கத்தனமாக வாதிடுவர்.

மல்விது ஓதுதல், அந்த மவ்லிதுக் கதாபாத்திரங்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா, அஜ்மீர் காஜா ஆகிய அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற படு மோசமான, இஸ்லாத்திற்கு எதிரான, பரேலவிச சந்நியாச சாமியார் கொள்கைகளைக் கொண்டவர்கள்.

இப்படி சுன்னத் வல் ஜமாஅத்தினர் இரு சாராக இருந்த நிலையில் தவ்ஹீது சிந்தனை தோன்றி, மத்ஹபு மாயையைத் தகர்த்தெறிந்தது. சமாதி வழிபாட்டுச் சிந்தனையை அடியோடு ஒழிக்கக் களமிறங்கியது.

வேஷம் போடும் வேடதாரிகள்

தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய பின்னர் இவ்விரு சாராரும் சேர்ந்து கொண்டு மூர்க்கமாக, மும்முரமாக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க ஆரம்பித்தனர். அத்துடன் அதுவரையிலும் பரேலவிகளை எதிர்த்து நின்ற தேவ்பந்த் சிந்தனையாளர்களின் எதிர்ப்பின் வேகம் முனை மழுங்கிப் போனது; முடங்கிப் போனது.

காரணம், சமாதி வழிபாட்டை அவர்கள் கண்டிக்க ஆரம்பித்ததும் வஹ்ஹாபி என்ற முத்திரை அவர்களுக்குக் குத்தப்பட்டது. நஜாத் என்று அழைக்கப்பட்டனர். இந்த வேலையைச் செய்பவர்கள் வேறு யாருமல்லர்! சாட்சாத் ஷைத்தானின் தோழர்களான பரேலவிகள் தான். பரேலவிகளின் இந்த முத்திரைக்குப் பயந்து தேவ்பந்த் சாரார் முடங்கி, முடமாகிப் போயினர். இருப்பினும் தங்கள் கொள்கையில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சாரார் இருக்கின்றனர். இவர்கள் வேஷம் போடுகின்ற வேடதாரிகள். இவர்கள் தங்களை வெளியில் தேவ்பந்த் சிந்தனையாளர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் பரேலவிச சிந்தனை கொண்டவர்கள்.

இவர்கள் பரேலவிசத் தலைவன், நரகப் பாதையின் ஏஜெண்ட் அப்துல்லாஹ் ஜமாலியுடன் பகிரங்கமாக மேடையைப் பகிர்வது கிடையாது. ஆனால் பேச்சில், பிரச்சாரத்தில் அப்துல்லாஹ் ஜமாலியை ஒத்தவர்கள், ஒருமித்தவர்கள்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதத்திற்குப் பதிலளித்து 12.02.2012 அன்று மேலப்பாளையத்தில் ஸைபுத்தீன் ரஷாதி பேசிய பேச்சு!

தவ்ஹீத் ஜமாஅத் வைத்த வாதம் என்ன?

யாகுத்பா என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, முஹ்யித்தீனைக் கடவுளாக்குகின்ற காட்டுமிராண்டித்தனத்தை கடுமையாகக் கண்டித்துப் பேசினோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாகுத்பாவின் பாடல் வரிகளின் அபத்தங்களைப் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் அம்பலப்படுத்தியது. அந்தப் பிரசுரம் மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தாங்குவாரா இந்தத் தர்ஹா பேர்வழி? விடுவாரா இந்தத் தவ்ஹீது விரோதி?

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி சொன்னதாக யாகுத்பாவில் இடம் பெறும் வரிகள் தன்னுடைய மாணவர்களைப் பார்த்துச் சொன்னது என்ற புது விளக்கத்தையும் வியாக்கியானத்தையும் கொடுத்தார். தான் ஒரு பக்கா பரேலவி என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்; ஆணித்தரமாக விளம்பரப்படுத்தினார்.

இப்போது இவர் கூறும் விளக்கத்திற்கு வருவோம்.

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்.

இதற்கு ஸைபுத்தீன் பரேலவி, விளக்கம் என்ற பெயரில் சொல்கின்ற குதர்க்கத்தையும், நடத்துகின்ற கூத்தையும் பாருங்கள்.

இந்தக் கவிதை வரியில் அல்ஃப் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதன் பொருள் ஆயிரம் என்பதாகும். ஆனால் இதற்கு அர்த்தம் ஆயிரம் என்பதல்ல. அன்பு கொள்ளுதல், நேசம் கொள்ளுதல் என்பது தான் அதன் பொருள். அன்பு என்ற பொருளைக் கொண்ட “அல்ஃப்’ என்பது பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படாமல் வேர்ச் சொல்லாக அதாவது நேசித்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் உறக்கத்தைக் களைந்தவராக, உறுதியான நம்பிக்கையுடன் என்ற பொருளில் உள்ள அரபி வார்த்தைகளும் வேர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இதற்கு ஆயிரம் தடவை என்பதற்குப் பதிலாக, “அன்பு கொண்டவராக’ என்றே பொருள் கொள்ள வேண்டும்.

அவரது அழைப்புக்கு மறுமொழி சொல்வேன் என்றால் அவருக்காக நான் துஆ செய்வேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது தான் ஸைபுத்தீன் பரேலவி கூறுகின்ற குதர்க்கமான விளக்கமாகும்.

இவர் கூறுகின்ற இந்தக் குதர்க்க விளக்கத்தின்படி இந்தக் கவிதையின் பொருளைப் பார்ப்போம்.

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் அன்பு கொண்டவராக என் திருநாமத்தை அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். (அதாவது துஆ செய்வேன்)

ஸைபுத்தீன் பரேலவியின் கருத்துப்படி யாகுத்பாவின் மேற்கண்ட வரிகளுக்கு இந்தப் பொருள் வருகின்றது.

இது தவிர அவர் கூறிய மற்றொரு அற்புத விளக்கம்: “இது முஹ்யித்தீன் அப்துல் காதிர் தன்னுடைய மாணவர்களை நோக்கிச் சொன்னதாகும். மக்களை நோக்கிச் சொன்னதல்ல’

இந்த ஏகத்துவ எதிரியிடம் நாம் எழுப்புகின்ற கேள்விகள்:

  1. யார் என் திருநாமத்தை, என்னுடைய பெயரை அழைப்பாரோ என்று தெளிவான வார்த்தை இங்கு இடம் பெறுகின்றது. அதற்குத் தக்க இந்தக் கவிதையின் இறுதியில், “அப்துல் காதிர் முஹ்யித்தீனே!’ என்று முடிகின்றது.

சந்தேகமில்லாமல் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதைத் தான் இது தெரிவிக்கின்றது. இதற்கு ஸைபுத்தீன் கூறும் விளக்கத்தின்படி, இவரிடம் இவரது மாணவர், “ஸைபுத்தீனே’ என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா?

  1. அஃதி அல்ஃபன் லில் ஹள்ரத்தி – ஹஜரத்திற்கு ஆயிரம் கொடு என்று கூட்டப் பொறுப்பாளர் தன் பணியாளரிடம் அரபியில் சொன்னால், அதற்கு அந்தப் பணியாளர் ஸைபுத்தீனிடம் ஆயிரத்தைக் கொடுப்பாரா? அல்லது அன்பு செலுத்துவாரா? (இவருக்கு என்ன ரேட் என்று தெரியவில்லை).

முன்பின் உள்ள வாக்கிய அமைப்பைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்றால் இங்கேயும் அன்பு என்று பொருள் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

இந்த ஸைபுத்தீன் பரேலவிக்கு மணமும் குணமும் சேர்த்து கறிச் சாப்பாடு பரிமாறப்பட்ட நிலையில் அந்த அன்பை நினைவில் கொண்டு உடனே கிளம்பி விடுவாரா? அல்லது தவறாமல் கவரை வாங்கிக் கொண்டு தான் போவரா? நிச்சயமாகக் காசு வாங்காமல் போக மாட்டார். காரணம், காசு என்றால் அவ்வளவு கவனம். கடவுள் கொள்கை என்றால் அவ்வளவு அலட்சியம்.

இந்தப் பரேலவி தலைவனை அழைத்து வந்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆலிம்கள் யாகுத்பாவுக்கு இந்தப் பொருளைக் கொடுக்கவில்லை. காரணம் இந்த ஜென்மங்கள், குத்பியத் என்ற பெயரில் யாகுத்பா கவிதை வரியின் அடிப்படையில், இரவு நேரத்தில் விளக்கை அணைத்து விட்டு ஆயிரம் தடவை “யா முஹ்யித்தீன்’ என்று அழைத்து திக்ரு செய்கின்றனர். இனியும் அப்படித் தான் செய்வார்கள். ஏனென்றால் இதன் மூலம் அவர்களின் வயிறுகள் வளர்க்கப்படுகின்றன; நிரப்பப்படுகின்றன. இது தான் உண்மை! யதார்த்த நிலை!

இப்படி ஆயிரம் தடவை இருட்டு திக்ரு செய்வதிலிருந்தே, பெரிய அரபி படித்த பண்டிதர்கள் முதல் சாதாரண பாமரன் வரை இந்த வரிக்கு ஆயிரம் என்ற பொருளைத் தான் கொண்டிருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த உண்மை நிலைக்கு மாறாக ஸைபுத்தீன் பரேலவி பேசுகின்றார். இது அப்பட்டமான குதர்க்கம்; இஸ்லாத்தின் கடவுள் கொள்கையில் விளையாடும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நாம் அவருக்குச் சவால் விடுகிறோம். யாகுத்பாவுக்கு இவர் கொடுத்த விளக்கத்தின்படி தமிழகம் முழுவதும்… வேண்டாம்! குறைந்தபட்சம் இந்தப் பேச்சை அவர் பேசிய மேலப்பாளையத்திலாவது ‘இனிமேல் யாரும் ஆயிரம் தடவை முஹ்யித்தீன் என்று திக்ரு செய்யக் கூடாது; காரணம் அதற்கு அந்த அர்த்தமில்லை’ என்று பகிரங்கமாக பரேலவிகள் அறிவிக்கத் தயாரா?

இன்னும் காயல்பட்டணம், கீழக்கரை என்று இந்த இருட்டு திக்ரு நடக்கும் இடங்களில் இந்த அடிப்படையில் பொருள் செய்து ஆயிரம் தடவை முஹ்யித்தீனை அழைக்கும் கொடிய இணை வைத்தலை நிறுத்துவார்களா? ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்.

யாகுத்பாவில் இடம் பெறும் “அல்ஃப்’ என்பதற்கு இந்த இடத்தில் ஆயிரம் என்பது பொருள். அதனால் தான் இவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை ஆயிரம் தடவை கூவிக் கூவி அழைக்கின்றார்கள்.

  1. மறுமொழி சொல்வேன் என்பதற்கு அரபியில். “அஜப்துஹு’ என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதற்கு, “பதிலளிப்பேன், மறுமொழி சொல்வேன்’ என்பது பொருள். இவ்வாறு பொருள் செய்து கொண்டு, மாணவர்கள் அழைத்தால் கஷ்ஃபில் – ஞான உதிப்பில் (?) தெரியும். அவ்வாறு தெரியும் போது அந்த மாணவர்களுக்காக துஆச் செய்வாராம் முஹ்யித்தீன்!

எவ்வளவு கூறுகெட்ட விளக்கத்தைக் கொடுக்கிறார் இந்த ஸைபுத்தீன் பரேலவி என்று பாருங்கள்.

“என்னைக் கூப்பிடு! நான் பதிலளிப்பேன்’ என்று தெளிவாக வருகின்றது.

நான் பதிலளிப்பேன் என்று மட்டும் சொல்லவில்லை. விரைவாகப் பதிலளிப்பேன் என்று நேரடியாக முஹ்யித்தீன் வருவதைத் தான் யாகுத்பா சொல்கின்றது. ஆனால் ஸைபுத்தீனோ, துஆ செய்வார் என்று குருட்டுத்தனமாகக் கூறுகின்றார்.

  1. யாகுத்பாவை இந்த அளவுக்குத் தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி இதைப் பாட வேண்டிய அவசியம் என்ன? இப்படி வளைத்து, திரித்து ஒரு பொருளை ஏன் கொடுக்க வேண்டும்? “யாகுத்பா என்பது ஒரு குப்பை! எவனோ பிழைப்புக்காக இப்படி எழுதி வைத்திருக்கிறான். அதை யாரும் பாடக் கூடாது’ என்று ஒரு வரியில் சொல்ல வேண்டியது தானே! அல்லது “யாகுத்பா அதன் உண்மையான பொருளில் பாடப்படவில்லை. முஹ்யித்தீனை ஆயிரம் முறை அழைத்தால் வருவார் என்று கூறுவது தெளிவான ஷிர்க்; இந்தப் பொருளில் யாரேனும் யாகுத்பாவைப் பாடினால் அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்’ என்று அறிவிக்கலாம் அல்லவா?

இப்படி ஒருபோதும் இவர் செய்ய மாட்டார். இறந்தவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஸைபுத்தீன் பரேலவியும் கொண்டிருப்பதால் தான் இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றார். இதன் மூலம் இவர் ஒரு சரியான பரேலவி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.

அத்வைத ஸைபுத்தீன்

இது மட்டுமில்லாமல் இந்த ஸைபுத்தீன் பரேலவி அத்வைதக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரிக்கின்றார்.

“அவன் (அல்லாஹ்) என்னைப் புகழ்கின்றான்; நான் அவனைப் புகழ்கின்றேன். அவன் என்னை வணங்குகின்றான்; நான் அவனை வணங்குகின்றேன்” என்று சொன்ன பரேலவிகளின் தலைவன் முஹ்யித்தீன் இப்னு அரபியையும்,

“நான் தூய்மையானவன்; நான் தூய்மையானவன். என்னுடைய விஷயம் எவ்வளவு மகத்துவமானது? என் ஜிப்பாவில் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை” என்று கூறிய அபூயஸீத் அல்புஸ்தாமியையும்,

காணும் பொருளெல்லாம் கடவுள் என்ற கொள்கையைத் தனது நூலில் பதிவு செய்த கஸ்ஸாலியையும் இந்தப் பரேலவி முல்லா ஆதரிக்கின்றார். “ஏதோ ஒரு நிலையில் அப்படிச் சொல்லி விட்டார்’ என்று கூறிச் சமாளிக்கின்றார். கடுகளவு ஏகத்துவச் சிந்தனை கொண்ட முஸ்லிம் கூட இந்த வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டான்.

அப்துல்லாஹ் கோமாளி போன்றவர்கள் தங்களைப் பரேலவிகள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கின்றார்கள்.

ஆனால் இவரோ தேவ்பந்த் போர்வையில் சுற்றி வருகின்ற பரேலவி என்பதை, அத்வைதக் கொள்கையை ஆதரிப்பதன் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.

பைத்தியம் பலவிதம்

“பைத்தியம் பலவிதம்; அதில் பரேலவிசம்’ ஒருவிதம் என்று சொன்னால் அது சரியான வாதமாகும்.

ஒருவர் இறந்து விட்டால் அவர் பேச மாட்டார்; அவர் கேட்க மாட்டார். அதனால் தான் அவர் உயிருடன் இருக்கின்ற வரை அவரை மரியாதையாக அழைத்த மக்கள், அவர் இறந்த பின்பு பிணம் வருகின்றது, மய்யித் வருகின்றது, சவம் கிடக்கின்றது, பிரேதத்தை அடக்கப் போகின்றோம் என்று பேசுகின்றனர்.

சவம், சடலம், பிணம், பிரேதம் என்ற அவப்பெயருக்கு இறந்தவர் ஆளாவதற்குக் காரணம் என்ன? அவருடைய உடலில் இருந்த உயிர் மறைந்ததால் இத்தகைய சிறப்புப் பட்டங்கள் கிடைக்கின்றன. இதில் நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் இதே கதி தான்.

இந்த உண்மையை சாதாரண பாமரன் கூடப் புரிந்து வைத்துள்ளான். ஆனால் இந்த உண்மை பரேலவிகளுக்குப் புரிவதில்லை. இவர்கள் எப்போதும் இறந்தவர்களை உயிருள்ளவர்கள் என்றே அழைப்பார்கள். இருளை ஒளி என்பார்கள். நிழலை வெயில் என்பார்கள். அதனால் இந்த வகையில் அவர்கள் சரியான பைத்தியம் என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவர்களது இந்தப் பைத்தியக்கார வாதங்களில், புத்தி பேதலிப்பு பிதற்றல்களில் ஒன்று தான், “நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல! அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட படைப்பு” என்ற குருட்டுக் கருத்து!

தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேர் பிடிப்பதற்கு முன்பு இந்தத் தீய சிந்தனை தமிழக முஸ்லிம்களிடம் இடம் பிடித்திருந்தது. ஏகத்துவ சிந்தனை வந்தவுடன் இந்தக் கருத்து படிப்படியாக மறைந்து கொண்டிருக்கின்றது. ஒரேயடியாக இனி அது மரணிக்கவும் இருக்கின்றது. அவ்வாறு மரண அடி கொடுத்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் அருள் வசனங்கள் தான்.

அந்த அருள் வசனங்களில் ஒன்று தான் இது!

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்ற குருட்டு வாதத்திற்குச் சம்மட்டி அடி கொடுக்கின்ற சத்திய வசனம் இது!

ஆனால் இந்த பைத்தியக்காரக் கூட்டம் அந்தச் சம்மட்டியை வளைக்கவும் உடைக்கவும் பார்க்கின்றது. அது எப்படி?

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!’ என்று அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், அல்லாஹ் சொல்ல வருகின்ற கருத்து, “நான் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்; நான் அப்படிச் சொல்ல மாட்டேன்” என்பது தான்.

இப்படி ஒரு பரேலவிப் பைத்தியம் கூறியுள்ளது.

அல்லாஹ் குர்ஆனில் அதே வசனத்தில், “உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே” என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால் அதற்கு, “உங்களுடைய கடவுள் ஒரே ஒரு கடவுள் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்; நான் அப்படிச் சொல்ல மாட்டேன். காரணம் நான் பல கடவுள் கொள்கையைத் தான் சொல்கிறேன்” என்ற மோசமான கருத்து வராதா?

அல்லாஹ் ஒருவன்என கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1)

இந்த வசனத்தில் “அல்லாஹ் ஒருவன் என்று கூறுவீராக’ என்று சொல்லப்படுகின்றது. இவர்களுடைய கிறுக்குத்தனமான வாதத்தின்படி, “அல்லாஹ் ஏகன் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்; ஆனால் உண்மையில் அல்லாஹ் ஏகன் கிடையாது; ஏராளமான அல்லாஹ் இருக்கிறான்” என்ற தீய கருத்து வராதா?

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

பரேலவிகளின் பைத்திய விளக்கத்தின்படி, மதுவிலும் சூதாட்டத்திலும் மறுமையில் நன்மை இருக்கின்றது என்ற அர்த்தம் வந்து விடாதா?

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!  (அல்குர்ஆன் 2:22)

இதிலும் இதே கருத்து வராதா?

இப்படி, “நபியே! நீங்கள் சொல்லுங்கள்’ என்ற கருத்தில் வரக்கூடிய அத்தனை வசனங்களுக்கும் பொருள் செய்தால் குர்ஆன் கூறக்கூடிய கொள்கை, கோட்பாடுகள், சட்ட திட்டங்கள் அனைத்துமே கேலிக்கூத்தாக ஆகிவிடும்.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 14:11

நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல! ஏனைய இறைத்தூதர்கள் அனைவருமே மனிதப் படைப்பு தான் என்று இந்த வசனம் தெள்ளத்தெளிவாக, சந்தேகமில்லாமல் தெரிவிக்கின்றது.

எனவே முஹம்மத் (ஸல்) அவர்களும், அதற்கு முன்பு வந்த ஏனைய தூதர்களும் மனிதப் படைப்பு தான் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பல்ல என்ற பரேலவிகளின் வாதம் பைத்தியக்காரத்தனமானது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.