ஏகத்துவம் – ஏப்ரல் 2011

தலையங்கம்

உள் வாங்கும் பூமி உயிர் வாங்கும் சுனாமி

ஜப்பானிய மொழியில் பள்ன் (சு) என்றால் துறைமுகம்! சஹம்ண் (நாமி) என்றால் அலை!

தீவுகள் அடங்கிய ஜப்பான், அடிக்கடி சுனாமியின் தாக்குதலுக்கு உள்ளாவதால் அம்மொழியின் பெயரே அனைத்து மொழிகளிலும் இடம் பிடித்துக் கொண்டது. அதற்கேற்றாற்போல் மார்ச் 11, 2011 அன்று ஜப்பானின் கடற்கரை நகரமான சென்டாய் நகரிலிருந்து 130 கி.மீ. தூரத்தில் நில நடுக்கம் ஏற்படுகின்றது. நில நடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டர் ஆகும். கி.பி. 1900 ஆண்டுக்குப் பிறகு உலகம் சந்தித்த ஐந்தாவது மிகப் பெரிய நில நடுக்கமாகும்.

உலகை அதிர வைத்த இந்த நில நடுக்கம் ஏற்பட்ட ஜப்பானின் நேரம் மதியம் 2.46 ஆகும். இந்திய நேரம் காலை 11.16. கடலின் 25 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் நிகழ்ந்தது. இதனால் கடலில் ஏற்பட்ட வெடிப்பின் நீளம் சுமார் 500 கி.மீ.!

நில நடுக்கம் ஏன் ஏற்படுகின்றது?

இரு கண்டங்கள் சந்திக்கும் இடத்தில் நிலத்தின் ஒரு தட்டு, மற்றொரு தட்டுடன் உரசிக் கொண்டு நிற்கின்றது. இவ்வாறு உரசுகின்ற ஒரு தட்டு மேலே ஏறி, மற்றொரு தட்டு கீழே இறங்குகின்றது. அப்போது பூமி உள்வாங்கும். அவ்வளவு தான்! நிலத்தின் மீது அமைந்திருக்கும் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் அனைத்தும் உள்வாங்கி விடுகின்றன.

இதே நில நடுக்கம் கடலுக்கு அடியிலும் நிகழும். அப்படி நிகழும் போது கடல் நீர் உள்வாங்கி விடுகின்றது. உள்வாங்கிய அந்த நீர் பிறகு பல மதில் சுவர்களின் உயரத்திற்கு, பல மலையளவுக்கு வெளியேறுகின்றது. தன்னை உள்ளே இழுத்த கோபத்தில் கோபுரமாகக் கொப்பளித்து, கொந்தளித்து மிகக் கடுமையான வேகத்தில் புறப்பட்டு, கரை தாண்டி நிலத்திற்குள் நுழைந்து பழி தீர்க்கின்றது.

தான் பயணிக்கின்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பேருந்துகள், கார்கள், ரயில்கள், கப்பல்கள் அனைத்தையும் பலி கொண்டு விடுகின்றது. பல மாடிக் கட்டடங்களையும் ஒரு பலப் பரீட்சை பார்த்து விடுகின்றது. பாரபட்சமில்லாமல் பல லட்சம் உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்குகின்றது. தாவர வர்க்கத்தைத் தாரை வார்த்து விடுகின்றது. ஜப்பானில் இது தான் நடந்தேறியது.

இப்போது நில நடுக்கம் நடந்த இடம், வட அமெரிக்கக் கண்டத்தின் நிலத் தட்டும், பசிபிக் நிலத் தட்டும் சந்தித்து சங்கமிக்கும் இடமாகும். பசிபிக் நிலத்தட்டு பெரிய நிலத் தட்டாகும். இதன் ஓரம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைத் தொட்டு நிற்கின்றது. இதன் ஓரங்களில் எரிமலை சீற்றங்களும் நில நடுக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இங்கு வட அமெரிக்காவின் நிலத்தட்டை மேலே தூக்கியவாறு பசிபிக் நிலத்தட்டு அதன் கீழே இறங்கியது. அதன் விளைவாகத் தான் ஜப்பான் ஆழிப் பேரலையின் அபாயத்தைச் சந்தித்தது.

இதன் பின்னர் நடப்பது என்ன? சப்தம் போட்டு முத்தமிட்டு முட்டிக் கொண்ட இரு தட்டுகளும் இனி ஒன்றன் மீது ஒன்றாய் உட்கார்ந்து நிலை கொள்ள வேண்டும். அமைதியாகக் குடியமர வேண்டும். அதற்குப் பெயர் தான் ஆச்ற்ங்ழ் ள்ட்ர்ஸ்ரீந்ள் – பின்னதிர்வுகள்.

ஏற்கனவே பிரளயத்தில் புரண்டு கிடக்கும் சமுதாயத்தை இந்தப் பின்னதிர்வுகள் மீண்டும் பின்னி எடுத்து விடுகின்றது.

மீட்புப் பணியைச் செய்யவிடாத அளவுக்கு மூடுபனி முட்டுக்கட்டையாக நிற்கின்றது.

வெள்ளிக்கிழமையன்று உள்ளே புகுந்த சுனாமிப் பேரலை, புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மின்சாரத்தைத் தடை செய்து விட்டது. இது அணு உலையைக் குளிர்விக்கின்ற குளிர்விப்பான்களைச் செயலிழக்கச் செய்து விட்டன. இதனால் கதிர்வீச்சு கசிகின்ற ஆபத்தும், அணு உலைகள் வெடித்துச் சிதறுகின்ற அபாயமும் ஜப்பான் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.

ஜப்பான் கண்ட இந்தச் சோதனை மூலம் அணு உலையின் அபாயத்தைப் பற்றியும் உலகிற்கு ஓர் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தேவை தான். அதற்காகக் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது போல், மனித சமுதாயம் தன்னையே அழித்துக் கொண்டு அணு உலை அமைக்க வேண்டுமா? என்ற கேள்வியும் இங்கே எழுந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் இந்த நில நடுக்கத்தால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பற்றிக் கொண்டது.

இப்படிப் பல்வேறு சோதனைகளால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஜப்பான், உலகத்திற்கு உணர்த்துகின்ற பாடம் என்ன? உரைக்கின்ற படிப்பினை என்ன?

மனிதன் என்ன தான் வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருந்தாலும் அவை ஒரு நொடியில் அழிந்து போகக் கூடியவை.

ஜப்பான் பொருட்கள் தரத்திற்குப் பெயர் போனவை. பொருள் வாங்குவோரின் வாயிலிருந்து வரும் கேள்வியே “இது ஜப்பான் தயாரிப்பா?” என்பது தான். ஆனால் அந்த ஜப்பானின் தரம் நிரந்தரம் இல்லை என்பதே இந்தச் சோதனை தரும் படிப்பினையாகும்.

“விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும்  அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை” என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் 57:20

இன்றைய ஜப்பானின் சோதனை, அதைத் தான் படம் பிடித்துக் காட்டுகின்றது. இதன் மூலம் அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விடுக்கும் அழைப்பு, “தரமற்ற, நிரந்தரமற்ற இந்த உலக வாழ்க்கையை விட்டு விட்டு மறு உலக வாழ்க்கைக்கு வாருங்கள்’ என்பது தான்.

இந்த சுனாமி, பூகம்பம் ஆகிய நிகழ்வுகள் திடீரென்று தான் ஏற்படுகின்றன. ஒரு வகையில் இது இறுதி நாளை நினைவூட்டுகின்றது. ஏனெனில் இறுதி நாளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகையில், அது திடீரென்று தான் ஏற்படும் என்று குறிப்பிடுகின்றான்.

“அந்த நேரம் எப்போது வரும்?” என்று (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். “இது பற்றிய ஞானம் என் இறைவனிடமே உள்ளது. அதற்குரிய நேரத்தில் அவனைத் தவிர யாரும் அதை வெளிப்படுத்த முடியாது. வானங்களிலும், பூமியிலும் அது மகத்தானதாக அமையும். அது உங்களிடம் திடீரென்று தான் வரும்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:187

படைத்த ஓரிறைவனை மறந்து விட்டு, அவனது கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இறைவன் விடுக்கின்ற ஓர் எச்சரிக்கை ஆகும். இதோ அல்லாஹ் கேட்கிறான்.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்.

அல்குர்ஆன் 67:16

இந்தச் சோதனையில் பாடம் பெற்று, மனித சமுதாயம் படிப்பினை பெற்றுத் திருந்துமா? இறைப் பாதைக்குத் திரும்புமா?

—————————————————————————————————————————————————————-

சுனாமியும் சோதிடமும்

ஒரு நல்ல நேரம் பார்த்துத் திருமணம் நடத்த வேண்டும்; நல்ல நேரம் பார்த்துத் தாலி கட்ட வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வீடு குடிபுக வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வியாபாரம் தொடங்க வேண்டும்.

இப்படி நேரம் பார்ப்பது எல்லா சமுதாய மக்களையும் ஆட்டிப் படைக்கும் அறியாமையாகும். இதில் தூய முஸ்லிம்கள் மட்டும் விதிவிலக்கு பெறுகின்றனர். காரணம் அவர்கள் முழுமையாக விதியை நம்புகின்றனர். இதை அல்லாஹ் தன் திருமறையில் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற் காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்). கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொரு வரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 57:22, 23

இதனால் தூய முஸ்லிம்கள் நாள் நட்சத்திரம், நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது கிடையாது. இந்த விதிக்கு மாற்றமாகக் காலம், நேரத்தின் மீது பழியைச் சுமத்துவதையும், கால நேரத்தைத் திட்டுவதையும் நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான். ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) என் கையிலேயே அதிகாரம் உள்ளது, நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4826

தூய முஸ்லிம்கள் நாள், நட்சத்திரம் பார்க்காததற்கு இது மற்றொரு காரணமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின் போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களுடைய சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், “இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?” என்று கேட்டேன். அப்போது, “அல்ல. இது (இறைத் தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது “அடிவானத்தைப் பாருங்கள்” என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பிறகு என்னிடம், “அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்” எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். “இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (தமது வீட்டுக்குள்) நுழைந்து விட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். “நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்,) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்” என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே, அவர்கள் புறப்பட்டு வந்து, “(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்க மாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்” என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, “அவர்களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, “அவர்களில் நானும் ஒருவனா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் “இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டு விட்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 5705

இந்த ஹதீஸில், கேள்வி கணக்கின்றி சொர்க்கம் செல்பவர்களின் பண்புகளில் சகுனம் பார்க்காமல் இருப்பதும் இடம் பெறுகின்றது.

தூய முஸ்லிம்கள் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்காததற்கு நபி (ஸல்) அவர்களின் இந்தப் போதனையும் காரணமாகும்.

சகுனம் பார்க்கும் சமுதாயங்கள்

தூய இஸ்லாமிய சமுதாயத்தைத் தவிர்த்து ஏனைய சமுதாயங்கள் சோதிடம் பார்க்கத் தவறுவதில்லை. முஸ்லிம்களில் இஸ்லாத்தை நன்கு புரியாத மக்களும் சோதிடம் பார்க்கின்றனர்.

வாஸ்து சாஸ்திரம் இந்தியா முழுவதும் அனைத்து சமுதாய மக்களையும் ஆட்டிப் படைக்கின்றது.

ராசி பலனுக்கென்று பத்திரிகைகள் தனிப் பக்கத்தை ஒதுக்கி 12 ராசிகளைப் போட்டு அதற்கான பலன்களைச் சொல்கின்றன. டிவிக்களில் ராசி பலன் சொல்லும் சோதிடர்கள் காட்சியளித்து, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வியாபாரம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் சோதிடம் கூறுகின்றனர்.

சோதிடம் ஒரு சுத்தப் பொய்

இப்போது தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளரை நிறுத்தலாம்? எந்த நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்? என்பதையெல்லாம் பல அரசியல் கட்சிகள் சோதிடர்களைக் கேட்டுத் தான் தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர். அந்த அளவுக்கு சோதிடத்தின் தாக்கம் தமிழகத்தில் மட்டுமல்ல! இந்தியாவை, ஏன்? உலக அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் உலகத்தில் உள்ள அனைத்து சோதிடர்களையும் பார்த்து நாம் கேட்கிறோம்.

மார்ச் 11, 2011 அன்று ஜப்பானில் ஏற்பட்ட இந்த சுனாமியை ஏன் உங்களால் முற்கூட்டியே எச்சரிக்கை செய்ய முடியவில்லை?

அப்படி எச்சரித்திருந்தால் இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். இன்று பாதிப்புக்குள்ளானது ஜப்பானிய பொருளாதாரம் மட்டுமல்ல! ஒட்டு மொத்த உலகத்தின் பொருளாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது.

சோதிடர்களே! உங்களால் இதை ஏன் முற்கூட்டியே சொல்ல முடியவில்லை? அப்படிச் சொல்லியிருந்தால் உங்களுக்கும் உலக அளவில் ஒரு மரியாதை கூடியிருக்கும்; ஒரு மதிப்பு ஏறியிருக்கும். உங்களுடைய பொருளாதார வளமும் பெருகியிருக்கும். இதிலிருந்து, நீங்கள் சொல்வது பச்சைப் பொய், பகிரங்கப் பொய் என்பது தெரியவில்லையா?

சோதிட பக்தர்களே! குறிகாரர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்திருப்பவர்களே! சோதிடம் என்பது சுத்தப் பொய் என்பது இப்போதாவது உங்கள் புத்திக்குப் புரிகின்றதா? சோதிடம் ஒரு மோசடி என்று விளங்கவில்லையா?

சுனாமியின் சவால்

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்னைப் பற்றி ஏன் அறிவிக்க முடியவில்லை என்று சுனாமி இந்த சோதிடக்காரர்களுக்கு சவால் விடுகின்றது. இந்தச் சவாலுக்கு இவர்களால் ஒருபோதும் பதில் சொல்ல முடியாது.

காரணம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வேதம் அடித்துச் சொல்கின்றது.

“வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 27:65

அதிலும் குறிப்பாக ஒருவரது வருவாய் மற்றும் மரணம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அதை யாருமே அறிய முடியாது.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

ஜப்பானில் நேற்று உயிருடன் இருந்தவர்கள் இன்று இல்லை, நேற்று பெரும் பணக்காரராக இருந்தவர் இன்று நடுத் தெருவில் நிற்கிறார். இதை இந்த சோதிடர்களால் அறிவிக்க முடியவில்லை.

வீட்டு சாவி காணாமல் போனது, மோதிரம் காணாமல் போனது, அந்த சோதிடர் கண்டுபிடித்தார், இந்த ஹஜரத் மை போட்டுப் பார்த்துச் சொன்னார் என்று சொல்பவர்களை நோக்கி, இந்த சுனாமியைப் பற்றி உங்களால் சொல்ல முடியுமா? என்று கேளுங்கள். அவர்களால் ஒருபோதும் சொல்ல முடியாது. காரணம் இந்த மறைவான ஞானத்தின் சாவிகள் இறைவனிடம் மட்டுமே இருக்கின்றன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானா லும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

அல்குர்ஆன் 6:59

—————————————————————————————————————————————————————-

மறு ஆய்வு

அரஃபா நோன்பு ஓர் ஆய்வு

துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோன்பு நோற்கும் வழக்கம் நமது சமுதாயத்தில் உள்ளது. இந்த நோன்பு நோற்றால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற கருத்தில் ஹதீஸ் இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் இந்த நோன்பை நோற்று வருகின்றனர்.

அரஃபா நோன்பு தொடர்பான இந்தச் செய்தி பலவீனமானது என்று சிலர் விமர்சனம் செய்துள்ளனர். இவர்கள் கூறுவது போல் இந்தச் செய்தி பலவீனமானதா? அல்லது பலமானதா? என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். இந்தச் செய்தி பலவீனமானது என்று கூறுவோர் இதற்குக் கூறும் காரணம் ஏற்புடையதாக இல்லை. எனவே இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பது நமது ஆய்வின் முடிவாகும்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?” என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும் வரை இவ்வாறு பல முறை சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு “அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் “(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்’ அல்லது “அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்க, “இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்” என்று விடையளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள். பிறகு, “மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி)

நூல்: முஸ்லிம் (2151)

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தி திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, அஹ்மது, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் வருமாறு:

அபூ கதாதா (ரலி) அப்துல்லாஹ் பின் மஃபத் என்பாருக்கு கூறினார்.

அப்துல்லாஹ் பின் மஃபத் என்பார் கைலானுக்கு கூறினார்

கைலான் என்பார் ஹம்மாத் பின் ஸைதுக்கு கூறினார்.

ஹம்மாத் பின் ஸைத் என்பார் யஹ்யா பின் யஹ்யாவுக்கும் குதைபா பின் ஸயீத் ஆகிய இருவருக்கும் கூறினார்கள்.

யஹ்யா பின் யஹ்யா, குதைபா பின் ஸயீத் ஆகிய இருவரும் இமாம் முஸ்லிமுக்கு கூறினார்கள்.

இது தான் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் பற்றிய விபரம்.

இந்த அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்த ஹதீஸை பலவீனமானது என்று கூறக்கூடிய அறிஞர்கள் கூட மேற்கண்ட அறிவிப்பாளர்களில் யாரையும் குறை கூறவில்லை. வேறு காரணத்தினாலேயே இது பலவீனமானது எனக் கூறுகின்றனர்.

அதாவது முதல் அறிவிப்பாளரான அபூ கதாதா என்ற நபித்தோழர் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஃபத் அறிவிக்கிறார். இவ்விருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் அபூ கதாதா, அப்துல்லாஹ் பின் மஃபத் அவர்களைச் சந்தித்ததில்லை. எனவே அப்துல்லாஹ் பின் மஃபத் அவர்கள் இதை அபூ கதாதாவிடம் நேரடியாகக் கேட்டிருக்க முடியாது. அபூ கதாதாவைச் சந்தித்த ஒருவர் கூற அதைத் தான் அப்துல்லாஹ் பின் மஃபத் கேட்டிருக்க வேண்டும். இடையில் ஒருவர் விடுபட்டுள்ளதாலும் விடுபட்டவர் யார் என்பது தெரியாத காரணத்தாலும் இது பலவீனமான ஹதீஸாகும் என்பது இவர்களின் வாதம்

அப்துல்லாஹ் பின் மஅபத் என்பார், நபித்தோழர் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை என இமாம் புகாரி அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகின்றனர்.

இந்தக் காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஹதீஸைப் பலவீனமாக்க இது தகுந்த காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தக் காரணம் உண்மையானது அல்ல.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகதாதா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என இமாம் புகாரி கூறவில்லை. மாறாக இவர் அபூகதாதா (ரலி) அவர்களிடம் நேரடியாகக் கேட்டதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றே கூறியுள்ளார்.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ரலி) அவர்களிடம் நேரடியாகக் கேட்டதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

நூல்: அத்தாரீகுல் கபீர், பாகம்: 3, பக்கம்: 68

நேரடியாகக் கேட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்ற சொல்லுக்கும் சந்தித்ததில்லை என்ற சொல்லுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

அப்துல்லாஹ்வும், அபூகதாதா (ரலி) அவர்களும் ஒரே காலத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் தான் இவர் அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூற முடியும்.

காலத்தால் வேறுபட்டவர்கள் விஷயத்தில் இவர் அவரிடம் நேரடியாகச் செவியுறவில்லை என்று கூறுவது பொருத்தமற்றதும் அர்த்தமற்றதுமாகும்.

அபூகதாதாவிடம் அப்துல்லாஹ் எதையும் செவியுற்றதாகத் தெரியவில்லை என்று புகாரி இமாம் கூறுவதில் இருந்து இருவரும் சம காலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிகிறது. புகாரி இமாம் கூறியதைத் தவறாக இவர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டனர் என்பது இதன் மூலம் தெரிய வருகின்றது.

இதை முதலில் மனதில் வைத்துக் கொண்டு இது குறித்து மேலும் நாம் அலசலாம்.

“அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் பிந்தைய அறிவிப்பாளர், முந்தைய அறிவிப்பாளர் காலத்தில் வாழ்ந்திருந்தாலே அவரிடமிருந்து செவியுற்றுத் தான் அறிவித்திருப்பார்; இடையில் யாரும் விடுபடவில்லை என்று முடிவு செய்ய இதுவே போதுமானது” என்ற நிலைபாடு சரியா?

அல்லது “சம காலத்தில் இருவரும் வாழ்ந்திருந்தாலும் ஒருவர் மற்றவரிடம் செவியுற்றார் என்பதற்கும் ஆதாரம் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் இடையில் யாரோ விடுபட்டிருக்க வேண்டும்” என்ற நிலைபாடு சரியா?

இதைப் பற்றி முடிவு செய்து விட்டால் இந்த ஹதீஸ் சரியானதா? இல்லையா? என்பது தெளிவாகி விடும்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் முதல் நிலைபாட்டைத் தான் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பிந்தைய அறிவிப்பாளரும் முந்தைய அறிவிப்பாளரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தாலே முந்தைய அறிவிப்பாளரிடமிருந்து பிந்தைய அறிவிப்பாளர் செவியுற்றுள்ளார்; இருவருக்கும் இடையில் யாரும் விடுபடவில்லை என்று தான் கருத வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் புகாரி இமாம் மட்டும் இதற்கு மாற்றமாக இரண்டாவது நிலைபாட்டில் இருக்கிறார்.

“இருவரும் சம காலத்தில் வாழ்ந்தாலும் “நான் அவரிடம் கேட்டேன்’ என்பது போன்ற வார்த்தைகளால் அல்லது சந்திப்பை உறுதி செய்யும் வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் மட்டுமே அது சரியான அறிவிப்பாகும். இல்லாவிட்டால் இடையில் யாரோ விடுபட்டிருப்பார்” என்பது புகாரி இமாமின் நிலைபாடு. இந்த விதிமுறைக்கு ஒத்திருக்கும் ஹதீஸை மட்டுமே இமாம் புகாரி பதிவு செய்வார்.

அப்துல்லாஹ் பின் மஅபத் மற்றும் அபூகதாதா (ரலி) ஆகிய இருவர் விஷயத்திலும் தமது விதிமுறை பற்றியே புகாரி குறிப்பிடுகின்றார்.

ஆனால் முஸ்லிம் இமாம் அவர்களும் இன்னும் பலரும் புகாரியின் இந்த நிபந்தனையைப் புறக்கணிக்கின்றனர். சம காலத்தில் வாழ்ந்து சந்திக்கும் வாய்ப்பு இருந்தாலே அவர்களின் ஹதீஸ்களை முஸ்லிம் இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ள அரஃபா நோன்பு தொடர்பான செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலான ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள்.

தொடர்பு முறிந்த பலவீனமான செய்தியை இமாம் முஸ்லிம் தமது நூலில் பதிவு செய்ய மாட்டார். அறிவிப்பாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருந்தால் தான் அதை இமாம் முஸ்லிம் ஏற்றுக் கொள்வார். சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால் அந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அப்துல்லாஹ் பின் மஅபத், அபூகதாதா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு வாய்ப்பு இருந்ததால் தான் இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் ஏற்றுக் கொண்டு தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

இது தவிர இதை உறுதிப்படுத்தும் மேலும் பல ஆதாரங்களும் உள்ளன.

அபூகதாதா (ரலி) அவர்களின் இறப்பையும் அப்துல்லாஹ் பின் மஅபத் அவர்களுடைய இறப்பையும் கவனித்தால் இவ்விருவரும் சந்தித்துக் கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதைத் தெளிவாக அறியலாம்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 38வது வருடத்தில் மரணித்தார் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் 54வது வருடத்தில் மரணித்தார் என்பதைச் சரியான தகவல் என இமாம் இப்னு ஹஜர் குறிப்பிடுகின்றார்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் 38வது வருடத்தில் இறந்தார் என்ற தகவல் தவறானது. அவர்கள் 54வது வருடத்தில் மரணித்தார் என்றே அதிகமானோர் கூறுகின்றனர்.

அப்துல்லாஹ் பின் மஅபத் ஹிஜ்ரீ 100க்கு முன்பு மரணித்தார் என இமாம் தஹபீ குறிப்பிடுகின்றார்.

அப்துல்லாஹ் பின் மஅபத் நூறுக்கு முன்பு மரணித்து விட்டார்.

நூல்: சியரு அஃலாமிந் நுபலாஃ, பாகம்: 4 பக்கம்: 206

இவர்களின் இந்த வரலாற்றுக் குறிப்பு, இவர்கள் ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அதாவது, அபூகதாதா அவர்கள் ஹிஜ்ரி 54ஆம் ஆண்டு மரணித்தார்கள். அப்துல்லாஹ் ஹிஜ்ரி 100க்கு முன் மரணித்தார். அப்துல்லாஹ் மரணிக்கும் போது அவருக்கு 50 வயது என்று வைத்துக் கொண்டால் கூட அவர் அபூகதாதாவை சந்தித்திருக்க முடியும்.

இமாம் இப்னு அபீ ஹாதிம் அவர்கள், அப்துல்லாஹ் பின் மஅபதைப் பற்றி விவரிக்கும் போது இவர் உமர், அபூகதாதா, அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் பின் உத்பா ஆகிய நபித்தோழரிடமிருந்து அறிவிப்பதாகத் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு கூறிவிட்டு, அப்துல்லாஹ் பின் மஅபத், உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என இமாம் அபூஸுர்ஆ கூறியதைக் குறிப்பிடுகின்றார்.

உமர், அபூகத்தாதா, அபூஹுரைரா மற்றும் அப்துல்லாஹ் பின் உத்பா ஆகிய நபித்தோழரிடமிருந்து அப்துல்லாஹ் பின் மஅபத் அறிவிக்கின்றார். இவரைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்கப்பட்ட போது இவர் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்று பதிலளித்தார்.

நூல்: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம்: 5 பக்கம்: 173

அப்துல்லாஹ் பின் மஅபத், அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்றால் அல்லது அவருடைய காலத்தை அடையவில்லை என்றால் அதைக் குறிப்பிடவேண்டிய இடம் இது தான்.

இவர் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்ற தகவலைக் குறிப்பிடும் இமாம் இப்னு அபீஹாதிம், இவர் அபூகத்தாதாவைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிடவில்லை.

எனவே அப்துல்லாஹ்வும் அபூகத்தாதா (ரலி) அவர்களும் ஒருவரையொருவர் சந்திக்கும் காலத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது இதன் மூலமும் தெளிவாகின்றது.

மேலும் அப்துல்லாஹ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்திருப்பது போல் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூற்றுப்படி அபூஹுரைரா (ரலி) ஹிஜ்ரீ 57வது வருடத்தில் மரணிக்கின்றார். ஏறத்தாழ அபூகத்தாதா (ரலி) அவர்களின் மரணமும் (54) அபூஹுரைரா (ரலி) அவர்களின் மரணமும் (57) நெருக்கத்தில் உள்ளது. ஆனால் அப்துல்லாஹ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது குறித்து யாரும் எந்த விமர்சனமும் செய்யவில்லை. எனவே இவர் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்திப்பது சாத்தியம் என்றால் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்திப்பதும் சாத்தியம் தான்.

அப்துல்லாஹ் பின் மஃபத் அவர்கள் உமர் (ரலி) அவர்களைத் தான் சந்திக்கவில்லை. அபூஹுரைரா, அபூகதாதா ஆகிய நபித்தோழர்களைச் சந்தித்துள்ளார் என்பது உறுதியாகிறது.

உமர் (ரலி) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஃபத் அறிவித்தால் அந்த அறிவிப்பில் இடையில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்று கருத வேண்டும். இதே அரபா நோன்பு பற்றிய ஹதீஸ் உமர் (ரலி) இடமிருந்து அப்துல்லாஹ் பின் மஃபத் அறிவிப்பதாக உள்ளது. அது பலவீனமானது என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். அது பலவீனமானது என்பதால் அபூகதாதா வழியாக அறிவிக்கப்படும் சரியான ஹதீஸ் எப்படி பலவீனமாகும்?

அப்துல்லாஹ் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடர் தவறானது என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அப்துல்லாஹ் பின் மஅபத் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடரே சரியானது.

நூல்: அல்மதாலிபு ஆலியா (1153)

மேலும் இமாம் தாரகுத்னீ அவர்கள் அல்இலலு என்ற தனது நூலில் உமர் (ரலி) அவர்களைக் குறிப்பிட்டு வரும் அறிவிப்பாளர் தொடர் தவறானது என்றும் அப்துல்லாஹ் பின் மஅபத், அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் அறிவிப்பாளர் தொடரே சரியானது என்றும் கூறியுள்ளார்.

எனவே அப்துல்லாஹ், உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வரும் தவறான அறிவிப்பாளர் தொடரை வைத்துக் கொண்டு அப்துல்லாஹ் தத்லீஸ் என்ற இருட்டடிப்புச் செய்பவர் என்று குறை கூற முடியாது.

அரஃபா நாளில் நோன்பு நோற்பதை சிறப்பித்து வரும் இந்தச் செய்தி பலவீனமானது என்று வாதிடுபவர்கள் மேலும் சில விமர்சனங்களைச் செய்கின்றனர்.

துல்ஹஜ் மாதம் பிறை 9வது நாளான அரஃபாவுடைய நாள் நோன்பு வைப்பதற்குத் தடை செய்யப்பட்ட நாள் என்று கூறுகின்றனர். இதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அரஃபாவுடைய நாள் (பிறை 9) நஹ்ருடைய நாள் (பிறை 10) தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை முஸ்லிம்களே நமது பெருநாட்களாகும். இவை சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ (704)

பிறை 9வது நாளன்று நோன்பு நோற்கக் கூடாது என இந்தச் செய்தி கூறுகின்றது. அரஃபாவுடைய நாளில் நோன்பு நோற்பதைச் சிறப்பித்து வரும் ஹதீஸ் இந்த ஹதீஸிற்கு முரணாக அமைந்துள்ளதால் அதை ஏற்கக் கூடாது என்று விமர்சனம் செய்கின்றனர்.

அறிவிப்பாளர் தொடர் குறித்த இவர்களின் விமர்சனம் எப்படி தவறாக உள்ளதோ அது போல் கருத்து அடிப்படையில் இவர்கள் செய்யும் இந்த விமர்சனமும் தவறாகவே உள்ளது

மேலுள்ள ஹதீஸில் மூசா பின் அலீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் என்றாலும் இச்செய்தியில் இவர் ஒரு தவறைச் செய்துள்ளார். அரஃபாவுடைய நாளைச் சேர்த்துக் கூறியிருப்பதே அவர் செய்த தவறாகும்.

ஏனென்றால் நம்பகமான பல அறிவிப்பாளர்கள் அரஃபாவுடைய நாளைக் குறிப்பிடாமல் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள், தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை தான் பெருநாட்கள் என்று அறிவித்துள்ளனர். பல நபித்தோழர்கள் வழியாக இவ்வாறே அரஃபாவுடைய நாள் கூறப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மூசா பின் அலீ என்பவர் மட்டுமே தனது அறிவிப்பில் அரஃபாவுடைய நாளைச் சேர்த்து அறிவிக்கின்றார். பல நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இவருடைய அறிவிப்பு உள்ளதால் இது பலவீனமானதாகும். இதை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

உக்பா பின் ஆமிருடைய ஹதீஸை மூசா பின் அலீ என்பவர் மட்டும் தனித்து அறிவிக்கின்றார். இந்தச் செய்தியை பல வழிகளில் அதிகமானவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களில் இவரைத் தவிர வேறு யாரும் அரஃபாவுடைய நாள் என்ற வார்த்தையைச் சேர்க்கவில்லை.

நூல்: நாசிகுல் ஹதீஸ் வமன்சூகுஹு பாகம்: 1, பக்கம்: 180

மூசா பின் அலீ தனித்து அறிவித்தால் (அதை ஏற்றுக் கொள்வதற்கு) அவர் வலிமையானவர் அல்லர். இந்தச் செய்தியில் அரஃபாவுடைய நாள் சேர்த்துக் கூறப்பட்டிருப்பது தவறாகும். நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், தஷ்ரீக்குடைய நாட்கள் ஆகியவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகப் பல வழிகளில் வரும் செய்தியே சரியானது.

நூல்: தம்ஹீத், பாகம்: 21, பக்கம்: 163

எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்து ஆதாரப்பூர்வமான முஸ்லிமில் இடம்பெற்றுள்ள செய்தியை மறுக்க முடியாது.

ஒரு பேச்சுக்கு இதை ஆதாரப்பூர்வமானது என்று ஏற்றுக் கொண்டாலும் இந்தச் செய்தி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியுடன் முரண்படாது.

ஹாஜிகள் பிறை 9வது நாளன்று நோன்பு நோற்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். எனவே ஹாஜிகளைக் கவனித்தே அரஃபா நாள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாள் என்று கூறப்பட்டுள்ளது என்று முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள இயலும்.

அடுத்து அரபா நாள் நோன்பு பற்றிய ஹதீஸை பலவீனப்படுத்துவோர் மற்றொரு விமர்சனமும் செய்கிறார்கள்.

முஸ்லிமுடைய ஹதீஸில் அரஃபா நாளில் நோன்பு நோற்றால் முன்பு உள்ள ஒரு வருடத்துக்கும் அடுத்து வரக்கூடிய ஒரு வருடத்துக்கும் அந்த நோன்பு பாவப் பரிகாரமாகி விடும் என்று கூறப்படுகின்றது.

முன் பாவங்களும் பின் பாவங்களும் மன்னிக்கப்படுவது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரிய சிறப்புத் தகுதி. ஆனால் இச்சிறப்பு அரஃபா நோன்பு வைப்பவர்களுக்கு உண்டு என அதற்கு மாற்றமாக இந்தச் செய்தி கூறுகின்றது என இந்த ஹதீஸை விமர்சிப்பவர்கள் குறை கூறுகின்றனர்.

ஆனால் இந்த விமர்சனம் ஏற்புடையதல்ல. ஏனென்றால் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்படுவது நபி (ஸல்) அவர்களுக்கும் மட்டும் உரிய சிறப்பு. வேறு யாருக்கும் இறைவன் இந்த பாக்கியத்தைத் தர மாட்டான் என்று இறைவனோ, இறைத்தூதரோ கூறவில்லை.

நபியவர்களுக்கு இந்தப் பாக்கியத்தை இறைவன் வழங்கினான் என்பது உண்மை. இதனால் அவர்களுக்கு மட்டுமே இச்சிறப்பு உண்டு. மற்றவர்களுக்கு இது வழங்கப்படாது என்று கூற முடியாது.

மேலும் நபி (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்கள் மன்னிக்கபட்டதற்கும் இந்த ஹதீஸில் கூறப்படும் மன்னிப்பிற்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய அனைத்து பாவங்களையும் ஒன்றுவிடாமல் மன்னித்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்தச் செய்தி இப்படிப்பட்ட எல்லையில்லாத மன்னிப்பைக் கூறவில்லை. மாறாக முன்புள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் பின்புள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் என எல்லையை நிர்ணயிக்கின்றது. இது முதல் வித்தியாசம்.

நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பைப் பொறுத்தவரை அது குறிப்பிட்ட ஒரு நபருக்கு வழங்கப்பட்ட சிறப்பு என்ற அடிப்படையில் உள்ளது. ஆனால் இந்தச் செய்தியில் கூறப்படும் மன்னிப்பு என்பது குறிப்பிட்ட நபருக்குரியதல்ல. மாறாக குறிப்பிட்ட நல்லறத்திற்கு உரியதாகும். இந்தக் காரியத்தைச் செய்யும் அனைவருக்கும் இந்த மன்னிப்பு கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.

ஏனென்றால் எண்ணம் சரியில்லாத காரணத்தால் அல்லது வேறு காரணத்தால் இந்த நோன்பை வைத்தவருக்கு இந்தச் சிறப்பு கிடைக்காமல் போகலாம். இது இரண்டாவது வித்தியாசம்.

இந்த ஹதீஸை எப்படியாவது பலவீனமாக்கியே தீர்வது என்ற கருத்தில் உள்ளவர்கள் மற்றொரு வாதத்தை முன் வைத்து இந்த ஹதீஸை நிராகரிக்க முயல்கின்றனர்.

உமர் (ரலி) அவர்கள், “ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்” என்று கூறினார்கள்.

இவ்வாறு அரஃபா நோன்பு குறித்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதற்கு இறைவன் தரப்பிலிருந்து ஆற்றல் தரப்பட்டு அவ்வாறு நோன்பு நோற்றதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் மேற்கண்ட செய்தி ஒரு நாள் நோன்பு வைத்து இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிட நபியவர்களுக்கு ஆற்றல் இல்லை எனக் கூறுகின்றது. இந்த அடிப்படையில் இது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கு மாற்றமாக உள்ளது என்று வாதிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்கு சில நேரங்களில் இறைவன் தரப்பிலிருந்து சிறப்பு ஆற்றல் வழங்கப்பட்டாலும் பல நேரங்களில் அவர்கள் சாதாரண மனிதர்களைப் போலவே இருந்துள்ளார்கள்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் நோன்பு நோற்க சில நேரங்களில் அவர்களுக்கு இறைவனால் ஆற்றல் வழங்கப்பட்டது. பல நேரங்களில் மற்ற மனிதர்களைப் போன்று இதற்கு இயலாதவர்களாக இருந்தார்கள் என்று முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு நோன்பு நோற்பதற்கு சக்தி அளிக்கப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியது தன் விஷயத்தில் அல்ல. பொதுவான மக்களைக் கவனத்தில் கொண்டு, இது மக்களுக்குச் சிரமமானது என்ற கருத்தில் தன்னையும் அத்துடன் சேர்த்துக் கூறியுள்ளார்கள்.

இதே செய்தி முஸ்லிமில் ஷுஃபா வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வாசகம் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விடுவது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, “இதற்கான வலிமையை அல்லாஹ் நமக்கு அளித்தால் நன்றாயிருக்கும்!” என்றார்கள். (முஸ்லிம் (2152)

அரஃபா நாளில் நோன்பு வைப்பதைச் சிறப்பித்து வரும் இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. இவற்றில் பெரும்பாலான அறிவிப்புகள் பலவீனமாக இருந்தாலும் பலமான அறிவிப்பும் உள்ளது என்பதைக் கண்டோம். மேலும் பின்வரும் அறிவிப்புகளும் எந்தக் குறையும் இல்லாமல் ஆதாரப்பூர்வமாக அமைந்துள்ளன. இந்த அறிவிப்புகளில் அப்துல்லாஹ் பின் மஅபத் இடம் பெறவில்லை.

அரஃபாவுடைய நோன்பு, கடந்து விட்ட வருடம், எதிர்வரும் வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆஷூராவுடைய நோன்பு இரு வருடப் பாவங்களுக்குப் பரிகாரமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி), நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா (2752)

இந்த அறிவிப்பு அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா வழியாக வந்துள்ளது.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள் “(துல்ஹஜ் ஒன்பதாவது நாள்) அரஃபா அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),  நூல்: முஸ்னதுத் தயாலிசி, பாகம்: 1 பக்கம்: 84

அப்துல்லாஹ் பின் மஅபதுடைய அறிவிப்பு பலவீனமானது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இந்த ஹதீஸ் பலவீனமாகாது. ஏனென்றால் அவர் இடம்பெறாத மேற்கண்ட ஆதாரப்பூர்வமான வழிகளில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது மார்க்கத்தில் உள்ளது என்பதைப் பின்வரும் செய்தி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உணர்த்துகின்றது.

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் அனுப்பி வைத்தேன். அதையவர்கள் குடித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் (ரலி), நூல்: புகாரி (1658)

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது சம்பந்தமாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்.  சிலர் “நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்‘ என்றும் மற்ற சிலர், “இல்லை’ என்றும் கூறிக் கொண்டிருந்தனர். எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் கொடுத்தனுப்பினேன்; அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கொண்டே அதைக் குடித்தார்கள்.

அறிவிப்பவர்: உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி), நூல்: புகாரி (1661)

அரஃபா நாளில் நோன்பு நோற்கும் வழக்கம் நபித்தோழர்களிடம் இருந்துள்ளது. எனவே தான் அன்றைய தினத்தில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்களா? என அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படுகின்றது. இந்த நாளில் நோன்பு நோற்பது அவர்களின் வழக்கில் இல்லை என்றால் இவ்வாறு அவர்கள் சந்தேகப்பட்டிருக்க மாட்டார்கள்.

இந்த நோன்பு அரஃபாவில் உள்ள ஹாஜிகளுக்குக் கிடையாது என்பதை நபி (ஸல்) அவர்கள் பாலருந்தி நபித்தோழர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறார்கள். எனவே ஹாஜிகள் அல்லாத அனைவரும் அரஃபா நாளான துல்ஹஜ் பிறை 9 அன்று நோன்பு நோற்பது நபிவழி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

—————————————————————————————————————————————————————-

தேர்தல் கமிஷனும் தூதர் கமிஷனும்

இதற்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும், சட்டமன்றத் தேர்தல் நடந்தாலும் நாடே திருவிழாக் கோலம் பூண்டு விடும். ஒவ்வொரு தலைவருக்காகவும் மக்கள் விடிய விடியக் கண் விழித்து நிற்பார்கள். அதிலும் அந்த அரசியல் கட்சித் தலைவருக்குத் திரைப்படப் பின்னணி இருந்தால் போதும். அலை மோதும் கூட்டத்திற்கு அளவே இருக்காது.

இதோ புரட்சித் தலைவர் வருகிறார்; புரட்சிக் கலைஞர் வருகிறார் என்று நொடிக்கு ஒரு தடவை ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருக்கும். மக்கள் கால் கடுக்கக் காத்திருப்பார்கள். பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள திடலைச் சுற்றி ஒரு கூட்டம் ஆக்கிரமித்து நிற்கும்.

அரசியல் கட்சிகளின் மேடைகளில் குரலோசைகளைக் கோரமாகக் கொப்பளித்துக் கொண்டிருக்கும் கூம்பு வடிவக் குழாய்கள்! கம்பங்களில் பிம்பங்களாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் கட்சிகளின் சின்னங்கள்! கட்சித் தலைவர்களை வரவேற்கின்ற வண்ண வண்ணக் கொடிகள்! ஊர் வாயில்களில் வரவேற்புத் தோரணங்கள்; வாழ்த்துப் பதாகைகள்! சுவர்கள் தோறும் சின்னங்கள்; வேட்பாளர்களின் படங்கள்! கோபுர உயரத்திற்கு கட்சித் தலைவர் மற்றும் வேட்பாளர்களின் படங்கள்! சுவர்களை வளைத்து மூழ்கடிக்கும் சுவரொட்டிகள்! கொடிகளைக் கட்டிக் கொண்டு ஊரை வளைத்துப் பவனி வரும் கார்கள்!

தேர்தலின் உச்சக்கட்டம், ஊரே அதிர்கின்ற, அலறுகின்ற வகையில் ஒய்யாரக் கார்களில் ஊர்வலமாக நடக்கும் வேட்பு மனு தாக்கலில் துவங்கி, வாக்குப் பதிவு நாளுக்கு ஒருநாள் முன்பு வரை இந்தக் களேபரங்கள் நடக்கும். வாக்குச் சாவடியில் போய் வாக்களித்தவுடன் நாடு பழைய நிலைக்குத் திரும்பும்.

இப்படித் தேர் திருவிழாவாக, ஊர் கந்தூரியாக அமர்க்களப்பட்டு ஆர்ப்பரித்த இந்தத் தேர்தல் களம் தற்போது இழவு விழுந்த வீடாக, சோகக் காடாக மாறி விட்டது.

பத்து மணிக்குப் பாய் மடக்கி விடுகின்ற பொதுக் கூட்டங்கள், அடங்கிப் போன அறிவிப்புக்கள். 9:59 மணிக்கு ஊமையாகி விடுகின்ற ஒலி பெருக்கிகள், வீடு திரும்புகின்ற தொண்டர்கள்! வெண் சுவர்கள் கூட சின்னங்கள் இல்லாமல் வெறுமையாகி விட்டன. கட்சித் தலைவர்கள் இறந்தால் கூட அரைக் கம்பத்தில் இறங்கி இரங்கல் பாடும் கட்சிக் கொடிகள் இப்போது ஒரேயடியாக முழுமையாக இறக்கப்பட்டு காணாமல் போய்விட்டன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் இப்படி கருமாதி வீடாக ஆனது ஏன்? இதற்குக் காரணம் தேர்தல் ஆணையம் தான்.

டி.என். சேஷன் என்பவர் தேர்தல் ஆணையரான பின் தான் ஒட்டுமொத்த இந்தியாவில் இந்த மாறுதல் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமாக அமைந்தது எது? அரசியல் சட்டம் தான்.

நமது நாடு, நாடாக இருக்க வேண்டும் என்றால் பேசாமல் தேர்தல் ஆணையத்திடம் நாட்டை ஒப்படைத்து விடலாம் என்று மக்கள் பேசுகின்ற அளவுக்கு அதிகாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல்பாட்டில் சில வரம்பு மீறல்களும் இருக்கத் தான் செய்கின்றன. இருப்பினும் அரசியல் கட்சிகளின் ஆட்டத்தை, அமைச்சர்களின் கொட்டத்தை, அரசியல்வாதிகளின் பண நடமாட்டத்தை எல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆரம்பத்தில் இவை ஒரு வித்தியாசமாக இருந்தது. இப்போது பழகி விட்டது.

நாட்டில் தேர்தல் ஆணையம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதைப் போன்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூதரின் ஆணையமான ஷரீஅத் சட்டத்தை அதன் தூய வடிவில் மார்க்கத்தில் நிறைவேற்றி வருகின்றது.

  1. விடிய விடிய ஓதப்பட்ட மவ்லிதுகள்
  2. இறந்தவர் வீட்டில் மூன்று, ஏழு, நாற்பதாம் கத்தம் ஃபாத்திஹாக்கள்
  3. இருபது ரக்அத் தராவீஹ்
  4. கூட்டு துஆ
  5. தர்ஹாக்களின் கந்தூரிகள்

இன்னும் இங்கே குறிப்பிடப்படாத எத்தனையோ ஷிர்க் மற்றும் பித்அத்களைக் கடந்த 20 ஆண்டுகளில் தவ்ஹீத் ஜமாஅத் ஒழித்துக்கட்டி வருகின்றது.

தேர்தல் கமிஷன் மூலம் சட்டத்தின் ஆட்சி வருவதற்கு முன் இது அசாத்தியம் என்று பார்க்கப்பட்டது. இப்போது அது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது. அது போன்று தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரத்திற்கு முன்பு வரை இந்த ஷிர்க், பித்அத்களை ஒழிப்பது அசாத்தியமாகப் பார்க்கப்பட்டது. அப்போதும் சத்தியத்தைத் தெரிந்த ஒரு சில ஆலிம்கள் இருக்கத் தான் செய்தார்கள். “இது அசாத்தியம், இது நம்மால் முடியாது’ என்று அவற்றைக் கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல் விட்டு விட்டனர்.

அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் அவற்றை ஓய்க்க, ஒழிக்கக் களம் இறங்கியது. அசாத்தியம் என்றது அவன் அருளால் சாத்தியமாக ஆனது. இப்போது அது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது. அந்த ஆச்சரியம், அற்புதம் இன்னும் தொடரும் இன்ஷா அல்லாஹ்!

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்கு கிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (இறைவனைப் பற்றி) நீங்கள் (தவறாக) வர்ணிப்பதால் உங்களுக்குக் கேடு தான். (அல்குர்ஆன் 21:18)

—————————————————————————————————————————————————————-

இப்படியும் சில தஃப்ஸீர்கள்        தொடர் 4

அழுது புலம்பிய ஆதம் நபி (?)

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

விளக்கவுரை என்பது இறை வார்த்தையையும், இறைத்தூதர்களின் வாழ்க்கையையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு உதவி புரிவதாய் இருக்க வேண்டும். அதை விடுத்து அவ்விரண்டையும் கேலிப் பொருளாக்கும் விதத்தில் இருக்கக் கூடாது.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு விளக்கவுரை அளிக்கும் சிலர் இந்த இலக்கணத்தைத் தெளிவாக மீறியுள்ளார்கள் என்பதைப் பல விளக்கவுரைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு புறம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு எதிரான, முரணான விளக்கங்கள் என்றால் மறுபுறம் குர்ஆன் வசனங்கள், இறைத்தூதர் அவர்களின் போதனைகள் ஆகியவற்றைக் கேலி செய்யும் விதமாகப் பல விளக்கவுரைகள் தஃப்ஸீர் நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் முதல் மனிதர், மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்களைக் கேலி செய்யும் வகையில் ஒரு விரிவுரை பல விரிவுரை நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது. இதோ அந்தக் கேலி வார்த்தைகள்:

ஆதம் (அலை) பூமியில் இறக்கப்பட்ட போது அவர்களுக்கு வயிற்றைக் கலக்கியது. இதனால் அவர்களுக்குக் கவலை ஏற்பட்டது. (அந்நேரத்தில்) என்ன செய்வது என அறியாதிருந்தார்கள். அப்போது அல்லாஹ் (ஆதமே) உட்காரும் என வஹீ அறிவித்தான். ஆதம் (அலை) அவர்கள் அமர்ந்தார்கள். தனது தேவையை நிறைவேற்றிய போது காற்று பிரிந்ததால் திடுக்கிட்டு, அழுது, தனது விரலைக் கடித்துக் கொண்டார்கள். அதற்காக ஆயிரம் வருடங்கள் தன்னைக் கடிந்து கொண்டே இருந்தார்கள்.

நூல்: அத்துர்ருல் மன்சூர்

பாகம் 1, பக்கம் 310

ஆதம் (அலை), அவர்களது மனைவி ஆகிய இருவரையும் முதலில் இறைவன் உயர்ந்த நிலையில் வைத்திருந்தான். குறிப்பிட்ட மரத்தை நெருங்கக் கூடாது என்ற கட்டளையை இருவருக்கும் பிறப்பித்திருந்தான். ஆனால் ஷைத்தானின் தூண்டுதலால் இறைக்கட்டளையை மீறி இருவரும் அம்மரத்தின் கனியைப் பறித்து புசித்தார்கள் என்பதால் அவ்விருவரையும்  உயர்ந்த நிலையிலிருந்து இறைவன் வெளியேற்றினான்.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். “இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன”  என்றும் கூறினோம்.

அல்குர்ஆன் 2:36

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் போது தான் மேற்கண்ட இறைத்தூதரை அவமதிக்கும் விளக்கத்தை இமாம்கள் உதிர்த்துள்ளார்கள்.

ஆதம் (அலை) அவர்களுக்கு பூமியில் மலம் கழிக்கும் தேவை ஏற்பட்ட போது என்ன செய்வது என அறியாமல் முழித்தார்களாம். இறைவன், “உட்கார்’ என்று கட்டளையிட்ட பிறகே உட்கார்ந்து மலம் கழித்தார்களாம்.

அது மட்டுமின்றி காற்று பிரிந்த போது ஏதோ நடந்து விட்டதாக உணர்ந்து, கவலையில் ஆதம் (அலை) அழுதே விட்டதாக மேற்கண்ட விளக்கத்தில் இமாம்கள் கூறுகிறார்கள். இதை இறைவனோ, இறைத்தூதரோ கூறாமல் நமக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்றிருக்கும் போது இந்த இமாம்களுக்கு எவ்வாறு தெரிந்தது?

இறைவனோ, இறைத்தூதரோ எங்கும் இதைக் கூறவில்லை. இமாம்கள் தங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டு, கைச்சரக்கை இதில் கலந்து விட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.

மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்களையும் இந்த இமாம்கள் விட்டு வைக்கவில்லை. தங்களின் விரிவுரை விளையாட்டில் ஆதம் (அலை) அவர்கள் வாழ்க்கையையும் கேலிப் பொருளாக ஆக்கிக் கொண்டது அனைத்து முஸ்லிம்களின் கண்டனத்திற்குரியதே!

இடி, மின்னல்

அல்லது (இவர்களது தன்மை,) வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில் இருள்களும், இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். (தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

அல்குர்ஆன் 2:19

இறைத்தூதரிடமிருந்து சத்தியக் கொள்கைப் பிரச்சாரத்தை செவியேற்ற பிறகும், செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று இருப்பவர்கள் வானத்திலிருந்து விழும் மழையை போன்றவர்கள் என இறைவன் உதாரணம் கூறுகிறான். அதன் தொடர்ச்சியில் வானத்தில் இடி, மின்னல் ஆகியவை உள்ளன என்றும் கூறுகிறான்.

இடி, மின்னல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானம் வளர்ந்த இக்கால கட்டத்தில் அறிவியலாளர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். குளிர்ச்சியான காற்று பூமியிலிருந்து மேலெழும்பிச் செல்கிறது. அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் மேலே செல்வதற்குத் தேவைப்படும் சக்தியை தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்கிறது. இது மேலும் குளிர்ச்சியடைந்து மேகங்களாக உருவெடுக்கின்றன.

பூமியிலிருந்து செல்லும் இந்த மேகங்கள் ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் மோதும் போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்த பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் ஏற்படுகின்றது. அந்த வெளிச்சத்தை மின்னலென்றும், சப்தத்தை இடியென்றும் சொல்கிறோம்.

இந்த விஞ்ஞான விளக்கம் ஒருபுறமிருக்க, இடி, மின்னல் ஆகியவற்றுக்கு நமது இமாம்கள் அளிக்கும் விளக்கம் வினோதமாக இருக்கின்றது. அரபியில் இடி என்பதைக் குறிக்க ரஃது என்ற சொல் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. இதற்கு இமாம்கள் கூறும் விளக்கம் பின்வருமாறு:

ரஃது எதுவென்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் (ரஃது என்பது) மேகக்கூட்டத்தை விரட்டுகின்ற வானவர் ஆவார் என்று கூறுகின்றனர்.

ரஃது என்றால் இறைவனைத் துதிக்கின்ற வானவரவார் என அபூ ஸாலிஹ் கூறுகிறார்.

நூல்: தஃப்ஸீருல் தப்ரீ

பாகம் 1, பக்கம் 338

ரஃது என்பது மேகத்தை இழுத்து செல்ல நியமிக்கப்பட்டிருக்கும் வானவர் என ஷஹ்ர் பின் ஹவ்ஷப் கூறுகிறார்.

நூல்: தஃப்ஸீருல் தப்ரீ

பாகம் 1, பக்கம் 339

சூஃபியாக்களின் கருத்துகளில் நான்காவது கருத்து இடி என்பது வானவர்களின் கர்ஜனைகள், அவர்களின் அதிர்வுகளே மின்னல், அவர்களின் அழுகையே மழை என்பதாகும்.

நூல் தஃப்ஸீருர் ராஸி

பாகம் 19, பக்கம் 22

மின்னல் என்பது ஒளியினால் ஆன சாட்டையாகும். வானவர் அதைக் கொண்டு மேகத்தை இழுப்பார் என மற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பர்க் (மின்னல்) என்பது நான்கு முகமுடைய வானவர் ஆவார். அவை மனித முகம், குள்ளநரியின் முகம், பறவை முகம், சிங்க முகம் ஆகியவையாகும். தன்னுடைய இறக்கையினால் அது அடிக்கும் போது ஏற்படுவதே மின்னல் எனப்படும்.

நூல்: தஃப்ஸீருல் தப்ரீ

பாகம் 1, பக்கம் 342

  • இடி என்பது வானவரின் பெயர், அவர்களின் கர்ஜனை
  • வானவர்களின் அழுகை தான் மழை நீர்
  • ஒளியினால் ஆன சாட்டையே மின்னல்
  • நான்கு முகமுடைய வானவர், தன்னுடைய இறக்கையினால் அடிக்கும் போது ஏற்படுவதே மின்னல்

இவை தாம் இடி, மின்னல் தொடர்பாக இமாம்கள் அளித்த (மேற்கண்ட) விளக்கங்களின் தொகுப்பு.

இதைப் படிக்கும் யாரும் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று நினைக்குமளவுக்கு இந்த விளக்கம் இல்லையா?

இஸ்லாம் பிற மக்களிடம் சென்றடைவதற்கும், முஸ்லிம்கள் இஸ்லாத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கும் இமாம்கள் கூறும் பெரும்பாலான விளக்கங்கள் தடைக்கல்லாக இருப்பதை இவற்றின் மூலம் அறியலாம். இதற்கு சப்பைக் கட்டும் ஆலிம்கள் (?) இது தவறு என்பதைப் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள முன்வருவார்களா?

பெயர் பட்டியல்

ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட விஷயங்களில் மற்றொருவர் தேவையின்றி தலையிடுவதை அதிகப் பிரசங்கித்தனம் என்கிறோம். நம்முடைய விவகாரங்களில் தேவையின்றி ஒருவர் மூக்கை நுழைப்பதை நாம் விரும்ப மாட்டோம்.

நம்முடைய வீட்டில் ஒருவர் வந்து, இதை இங்கே வை; அதை அங்கே வை என்று அதிகாரம் செய்தால் நாம் பொறுத்துக் கொண்டு, அதை ஏற்று செயல்படுவோமா? இதைச் சொல்வதற்கு நீ யார் என்றே நிச்சயம் கேள்வியெழுப்புவோம்.

இந்த அதிகப் பிரசங்கித்தனத்தைத் தம் விஷயத்தில் பொறுத்துக் கொள்ளாதவர்கள் இறைவனுடைய விஷயத்தில் மௌனம் காத்து, ஏற்றுக் கொள்கின்றனர்.

இமாம்கள் பல சந்தர்ப்பங்களில் இறைவனுடைய அதிகாரத்திற்குட்பட்ட விஷயத்தில் புகுந்து அதிகப்பிரசங்கி வேலையைச் செய்துள்ளார்கள்.

இறைவனும், இறைத்தூதரும் நமக்குப் பயன் தரக்கூடியவற்றை மட்டுமே சொல்லித் தருவார்கள். எதில் நமக்குத் துளியும் பயனில்லையோ அதைச் சொல்லாமல் விட்டுவிடுவார்கள். ஒரு முஸ்லிம் அதில் புகுந்து கொண்டு தேவையற்றதை விளக்கம் என்ற பெயரில் உளறிக் கொட்டக் கூடாது.

இது போன்ற காரியத்தில் ஈடுபடுவது அதிகப் பிரசங்கித்தனம் என்றே கருதப்படும்.

இமாம்கள் எவ்வாறு அதிகப் பிரசங்கி வேலையைச் செய்துள்ளார்கள் என்பதைக் காண்போம்.

கஹ்ஃப் என்ற அத்தியாயத்தில் குகைத்தோழர்களின் வரலாறு கூறப்படுவதை அறிவோம். அவர்கள் வாழ்விலிருந்து படிப்பினை பெற போதுமான தகவல்கள் அந்த அத்தியாயத்திலேயே இடம்பெற்றுள்ளன. குகையின் பெயரையோ, அதில் இருந்தவர்களின் பெயரையோ தெரிந்து கொள்வதில் எந்தப் படிப்பினையும் இல்லை. எனவே தான் இறைவனும் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இந்த இமாம்கள், “இறைவன் சொல்லாவிட்டால் என்ன? அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோமே’ என்பது போல தங்கள் கற்பனைக்குத் தோன்றியதை மலை போல் கொட்டிக் குவித்துள்ளார்கள்.

குகையில் ஆரம்பித்து அப்போதிருந்த நீதிபதி (?) வரைக்கும் ஒன்று விடாமல் அத்தனைக்கும் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் உள்ள நாய்க்குக் கூட பெயர் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?

குகையின் பெயர் பான்ஜலூஸ், அவ்வூரின் பெயர் லவ்ஸ், நகரின் பெயர் அஃப்ஸூஸ், நாயின் பெயர் கித்மீர் என்பதாகும். அந்த இரண்டு நீதிபதிகளில் ஒருவர் மார்னூஸ், மற்றொருவர் உஸ்தூஸ் ஆவர். அரசரின் பெயர் தக்யூஸ். குகைத் தோழர்களின் பெயர் தவானுஸ், நவாஸ், மார்தூனஸ், சார்னூஸ், தஸ்தனூஸ் மக்ஸிலிமீனா, யம்லீகா ஆகியவையாகும்.

ஜிப்ரீல் (அலை) அவர்களின் பெயர் அப்துல்லாஹ், மீகாயில் (அலை) அவர்களின் பெயர் உபைதுல்லாஹ் என்பதாகும்.

நூல்: தஃப்ஸீர் மகாதில் பின் சுலைமான்

பாகம் 2,  பக்கம் 304

(குறிப்பு: அந்த லூஸ், இந்த லூஸ் என இந்தப் பெயர்களைப் படிப்பதற்குள் நாம் லூஸாகி விடுவோம் போலிருக்கிறதே என்று வாசகர்களுக்குத் தோன்றலாம். அல்லாஹ்விற்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள்)

இங்கே நாம் கேட்க விரும்புவது, ஏன் இந்த அதிகப் பிரசங்கித்தனம்? வலிந்து கொண்டு இத்தனைக்கும் பெயர் சொல்ல என்ன அவசியம் நேர்ந்தது? ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் இமாம்கள் இவ்வாறு கூறவில்லை. பல இடங்களில் இது போன்ற வேலையை, அதிகப் பிரசங்கித்தனத்தைச் செய்துள்ளார்கள்.

இப்றாஹீம் (அலை) அவர்கள் (பலி கொடுத்த) ஆட்டின் பெயர் ஜரீர், சுலைமான் (அலை) அவர்களின் ஹூத் ஹூத் பறவையின் பெயர் அன்கஸ், குகைத் தோழர்களுடைய நாயின் பெயர் கித்மீர், இஸ்ரவேலர்கள் வணங்கிய காளைக் கன்றின் பெயர் புஹ்மூத் என்பதாகும்.

ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவில் இறக்கப்பட்டனர். ஹவ்வா (அலை) ஜித்தாவிலும், இப்லீஸ் பிதுஸ்த பீஸான் என்ற பகுதியிலும், பாம்பு இஸ்பஹான் என்ற பகுதியிலும் (இறக்கப்பட்டனர்) என ஹஸன் பஸரீ கூறியதை நான் கேட்டேன் (என உபாத் என்ற அறிஞர் கூறுகிறார்)

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்

பாகம் 5,  பக்கம் 144

இது இறைவனுடைய அதிகாரத்தில் தலையிடும் காரியமில்லையா? அல்லாஹ்வின் அடிமைகளான நாமே நம் விஷயத்தில் பிறர் தலையிடுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றால், நமது எஜமானனாகிய அவன் விஷயத்தில் நாம் தலையிடுவதை இறைவன் பொறுத்துக் கொள்வானா?

தன்னுடைய அதிகாரத்தில் தலையிடுவது தன்னால் தேர்வு செய்யப்பட்ட தன் தூதர்களாக இருந்தாலும் அதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். இறைவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காத, ஏற்றுக் கொள்ளவே முடியாத செயல் இது என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறோம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

—————————————————————————————————————————————————————-

பாப்புலர் ஃப்ரண்ட் எனும் ஆக்டோபஸ்

இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று கிளம்பிய ஒரு கூட்டம் இப்போது இந்திய ஆட்சியை நிர்மாணிக்கக் கிளம்பி விட்டது. ஜனநாயகம் ஓர் இணை வைப்பு என்று பாடம் படித்து அதையே போதித்து வந்த இந்தக் கூட்டம் அதே ஜனநாயகத்தின் உச்சக்கட்டமான தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளிலேயே கேடு கெட்ட விதமாக விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் போன்ற இணை வைப்பு விழாக்களுக்கு வாழ்த்துச் சொல்லி பேனர் வைக்க ஆரம்பித்தது. வீதி வீதியாகச் சென்று, வீடு வீடாகச் சென்று இப்போது ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருக்கின்றது.

அரசியலில் எந்த இயக்கமும் குதிக்கலாம்; அந்த இயக்கத்தைச் சேர்ந்த எவரும் எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலாம். அதில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆட்சேபணை இல்லை.

ஆனால் இஸ்லாத்தை அதற்குப் பகடையாகப் பயன்படுத்துவார்களேயானால் அவர்களின் முகத்திரையைக் கிழிக்க தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் தயங்காது. அந்த அடிப்படையில் இவர்களை அடையாளம் காட்டும் விதமாக ஏகத்துவம் இதழில், “கொள்கை இல்லாக் கூட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

அவர்களது முகத்திரையைக் கிழிக்கும் அந்தக் கட்டுரையை குமரி மாவட்ட கொள்கைச் சகோதரர்கள் மறுபதிப்பு செய்து பிரசுரமாக வெளியிட்டனர். சந்தி சிரிக்கும் இவர்களின் நயவஞ்சகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற இந்தப் பிரசுரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டச் செயலாளர் நாஸர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஜாஃபர் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 13 அன்று சந்தி தெரு முனையில் வினியோகித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ.யைச் சேர்ந்த ரவுடிக் கூட்டத்தினர் அவ்விருவர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் சகோதரர் ஜாஃபர் கீழே விழுந்ததும் அவர் மீது ஏறி மிதித்து, தங்கள் வெறியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதன் பிறகு ஜாஃபர் இறந்து விட்டார் என்று நினைத்து அடித்துப் புரண்டு தப்பி ஓடிவிட்டனர் இந்த வீரப்புலிகள் (?); கடைந்தெடுத்த கோழைகள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் ஜாஃபர் இறக்கவில்லை. அல்லாஹ் காப்பாற்றி விட்டான். கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நமது சகோதரர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளனர்.

முஸ்லிம்களைக் காக்கப் புறப்பட்டதாகக் கூறிய இவர்கள் இன்று முஸ்லிம்களைக் கொலை செய்யும் கருங்காலிகளாக மாறி விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.-ஐ விடக் கொடிய இந்தக் குண்டர்களைக் கைது செய்யும்படி குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறையில் புகார் செய்தது. புகாரைப் பெற்ற காவல்துறை, கைது செய்வதற்காக வீடு தேடிச் சென்ற போது அசகாய வீர சூரர்கள் தப்பியோடி விட்டனர்.

திராணியிருந்தால், நாங்கள் தான் தாக்கினோம் என்று காவல்துறையில் தங்களை ஒப்படைத்திருக்க வேண்டும். அதையும் செய்யத் தயாரில்லாமல் தங்களை பெட்டைகள், பேடிகள் என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.

குற்றச்சாட்டுக்குப் பதில் கூறத் திராணியில்லாத, விமர்சனங்களைக் கூட தாங்கிக் கொள்ளத் தயாரில்லாத இவர்களை நோக்கி ஒன்றைக் கூறுகிறோம். தவ்ஹீத் ஜமாஅத் இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை; அடங்கப் போவதில்லை.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இந்தக் காளான்களுக்கு, தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளர்களின் கழுத்துக்குக் கத்தி வந்த வரலாறு தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இந்த உருட்டல் மிரட்டலுக்கொல்லாம் இந்த ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு போதும் அஞ்ச மாட்டார்கள்.

“நோட்டீஸ் கொடுப்பாயா?’ என்று கேட்டுத் தான் இந்தக் கயவர்கள் தாக்கியிருக்கின்றனர். “உயிர் இருக்கும் வரை கொடுக்கத் தான் செய்வோம்’ என்று வீர முழக்கமிட்டு இந்தக் கோழைகளை மாவட்டச் செயலாளர் நாஸர் எதிர் கொண்டுள்ளார்.

இதில் சகோதரர் ஜாஃபரைத் தாக்கியவன் வேறு யாருமல்ல! அவரிடம் ஆட்டோ ஓட்டிய வேலைக்காரன் தான். நல்லவன் போல் நடித்து தனது நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறான் இந்தக் கயவன்.

இதிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட், எஸ்.டி.பி.ஐ. இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விடக் கொடியது; ஆக்டோபஸ் போன்று பன்முகம் கொண்டது என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளனர்.

இவர்களைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சாது; அயராது என்பதை இங்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

—————————————————————————————————————————————————————-

கேள்வி பதில்

? பள்ளிவாசலில் உறங்கலாமா? குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்கவும்.

முஹம்மது யூசுப், துபை

பள்ளியில் உறங்குவது தவறான காரியமல்ல. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் பள்ளியில் உறங்கியுள்ளனர். இதை நபியவர்கள் தடை செய்யவில்லை.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

மணமாகாத, குடும்பமில்லாத இளைஞனாக நான் இருந்த போது நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (தங்கி) நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.

நூல்: புகாரி (440)

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வியர் ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்த போது (மருமகனான) அலீ (ரலி) அவர்கள் வீட்டில் காணவில்லை. ஆகவே, “உன் (தந்தையின்) பெரிய தந்தையின் புதல்வர் எங்கே?” என்று கேட்க, அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்கும் இடையே சிறிய  மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆகவே அவர் என்னைக் கோபித்துக்கொண்டு என்னிடம் ஏதும் சொல்லாமல் (வீட்டிலிருந்து) சென்றுவிட்டார் (அவர் பள்ளிவாசலுக்குள் இருக்கலாம்)” என்று கூறினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பாருங்கள்” என்றார்கள். உடனே அந்த மனிதர் (சென்றுவிட்டு) வந்து, “அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார், அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிக்குள்) வந்தபோது அவருடைய மேலங்கி அவரது முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருக்க அவரது மேனியில் மண் படிந்திருக்கும் நிலையில் அவர் ஒருக்களித்துப் படுத்திருக்கக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அலீ (ரலி) அவர்களின் மேனியிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே “எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே! எழுந்திருங்கள், மண்ணின் தந்தையே!!” என்று கூறலானார்கள்.

நூல்: புகாரி (441)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினர்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர்.

நூல்: புகாரி (571)

? தொழக்கூடாத பள்ளிகள் என்று குர்ஆனில் கூறப்பட்ட காரணங்களைக் கொண்ட பள்ளிகளைப் புறக்கணிக்கும் நமது சகோதரர்கள் இந்தக் காரணங்கள் இல்லாத பள்ளிகளையும் சேர்த்துப் புறக்கணிப்பது சரியா?

அப்துல்லாஹ்

குறிப்பிட்ட நான்கு காரணங்கள் உள்ள பள்ளிகளுக்குச் செல்லக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.

(முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர் களை விரும்புகிறான்.

அல்குர்ஆன் (9:107)

மேற்கண்ட வசனத்தில் இறை மறுப்புக் காரியம், பிறருக்குத் தீங்கிழைத்தல், மக்களிடையே பிரிவை ஏற்படுத்துவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக நடப்பவர்களுக்குப் புகலிடம் அளிப்பது ஆகிய நான்கு தன்மைகள் உள்ள பள்ளிக்குப் போகக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இணைவைப்பு என்ற பெரும்பாவம் ஒரு பள்ளியில் அரங்கேறினால் இந்த ஒரு காரணம் இருந்தாலே அது பள்ளி என்ற அந்தஸ்தை இழந்து விடும். இது பற்றி விரிவாக ஏற்கனவே விளக்கம் தரப்பட்டுள்ளது.

இந்த நான்கு குற்றங்களையும் செய்யாத பள்ளிகள் எத்தனையோ தமிழகத்தில் இருக்கின்றன. இந்தப் பள்ளிகள் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட பள்ளிகள் அல்ல. இவற்றுக்குச் சென்று தொழுதால் பள்ளிக்குச் சென்றால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

“தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி (645)

ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாசலில் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ, கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும்.  ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப்படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப்படுகின்றது. 

மேலும் உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக துஆ செய்கின்றனர். அங்கே அவரது காற்று பிரிந்து, உளூ நீங்கி விடாமல் இருக்கும் வரை, (பிறருக்கு) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும் வரை. “இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2119)

எவர் தன்னுடைய வீட்டில் உலூச் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது.  ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1059)

அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். பள்ளியை விட்டு அவர் தூரமாக இருந்ததைப் போல் வேறு யாரும் தூரமாக இருக்க நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தொழுகை கூட விடுபடுவது கிடையாது.  “கும்மிருட்டிலும் கடும் வெப்பத்திலும் ஏறி வருவதற்காக ஒரு கழுதையை வாங்க வேண்டியது தானே?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பள்ளிக்கு வரும் போது என் வருகையும் என்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும் போது என்னுடைய திரும்புதலும் பதியப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று கூறினார்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் வழங்குவானாக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: உபை இப்னு கஅப் (ரலி)

நூல்: முஸ்லிம் (1065)

பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் காலியாகி இருந்தன. சலமா கிளையினர் பள்ளிக்கருகில் வந்து விட விரும்பினர்.  இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்களை நோக்கி, “நீங்கள் பள்ளிக்கு அருகில் வந்து விட விரும்புகின்றீர்களாமே!” என்று வினவினார்கள்.  அதற்கு அவர்கள் “ஆம் அல்லாஹ்வின் தூதரே! இடம் பெயர்ந்து வருவதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸலமா கிளையினரே!  உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன. உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப்படுகின்றன” என்று கூறினார்கள். உடனே சலமா கிளையினர் “நாங்கள் மாறி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை” என்று பதிலளித்தனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1068), புகாரி (656)

யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி (651)

மனிதனின் ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும்.  ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும்.  நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (2891)

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) மக்ரிப் தொழுகைக்குப் பின் பள்ளியில் நுழைந்து அவர்கள் மட்டும் தனியே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்தேன். அப்போது அவர்கள், “எனது சகோதரன் மகனே! யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அம்ரா

நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பள்ளிவாசலுக்கு  (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (662)

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் பள்ளிக்குச் சென்று ஜமாஅத் தொழுகையைப் பேணி நன்மைகளை அடைய வேண்டும். பள்ளிகளுக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் இந்த நன்மைகளை இழக்க நேரிடும்.

அதே நேரத்தில் முழுக்க முழுக்க நபிவழி அடிப்படையில் செயல்படக்கூடிய பள்ளி ஒன்று இருக்கும் பட்சத்தில் ஏனைய பள்ளிகளை விட்டுவிட்டு நபிவழி அடிப்படையில் நடக்கும் அந்தப் பள்ளிக்குச் செல்வதைத் தவறு என்று கூறக் கூடாது. மாறாக நபிவழி அடிப்படையில் நடக்கும் பள்ளிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும்.

எனவே நான்கு காரணங்களும் இல்லாத ஒரு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டை தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

—————————————————————————————————————————————————————-

ஸகாத்   தொடர்: 3

ஸகாத் யாருக்குரியது?

அப்துந் நாசிர்

பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்

ஸகாத் கட்டாயக் கடமை என்பதையும், அதனை முறையாக நிறைவேற்றுபவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகளையும், அதை நிறைவேற்றாதவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைகளையும் கடந்த இதழ்களில் விரிவாகப் பார்த்தோம்.

இந்தத் தொடரில் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார்? என்பதை நாம் விரிவாகக் காண இருக்கின்றோம்.

திருக்குர்ஆன் 9:60 வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத் தகுதியானவர்களாக எட்டு வகையினரை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அவர்கள் 1. யாசிப்பவர்கள் 2. ஏழைகள். 3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள் 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. கடன் பட்டவர்கள் 7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல் 8. நாடோடிகள். ஆகியோராவார்கள்.

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 9:60)

மேலும் நபியவர்களும் ஸகாத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (1395)

செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஏழைகள் என்றால் தேவையுடையவர்கள் என்று பொருளாகும். மேற்கண்ட 9:60 வசனத்தில் கூறப்பட்டவர்களில் அனைவருமே தேவையுடையவர்களாகத் தான் உள்ளனர். அதன் காரணமாகத் தான் நபியவர்கள் பொதுவாக செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

யாசிப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம்

மேற்கண்ட 9:60 வது வசனத்தில் யாசிப்பவர்கள் என்பதற்கு அரபியில் “ஃபுகரா” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது “ஃபகீர்” என்ற சொல்லின் பன்மையாகும். “ஃபகீர்” என்ற சொல்லிற்கு தேவையுடையவன் என்பது நேரடிப் பொருளாகும்.

ஏழைகள் என்பதற்கு அரபி மூலத்தில் “மஸாகீன்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது “மிஸ்கீன்” என்ற சொல்லின் பன்மையாகும்.

மிஸ்கீன் என்றால் யார் என்பதை நபியவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்து கொள்வான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்க மாட்டார்கள்” எனும் (இந்த 2:273வது) இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (4539)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம் பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில் அவன் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள எந்தச் செல்வத்தையும் பெற்றிருக்க மாட்டான்; பிறரும் அவனது நிலையை அறிந்து தர்மம் செய்ய மாட்டார்கள், தானும் வலியச் சென்று கேட்கமாட்டான். (இத்தகையவனே உண்மையான ஏழையாவான்.)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி(1479)

மேற்கண்ட ஹதீஸ்களில் ஏழை என்பதற்கு அரபி மூலத்தில் மிஸ்கீன் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

அதாவது மிஸ்கீன் என்பவன் தன்னுடைய வறுமை நிலையை யாரிடமும் வெளிப்படுத்தாமல், பிறரிடம் யாசகமாகக் கேட்பதற்கு வெட்கப்பட்டு, தன்மானத்துடன் வாழ்பவராவார். இவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஸகாத்தை வழங்குவது முஃமின்கள் மீது கடமையாகும்.

ஆனால் ஃபகீர் என்பவரும் வறுமை நிலையில் உள்ளவர் தான். ஆனால் இவர்கள் தங்களின் நிலையை வெளிப்படுத்தி உதவி கேட்பார்கள். அல்லது அவர்களின் வறிய நிலைமை வெளிப்படையாகத் தெரியும். ஒருவர் இந்நிலைக்கு உள்ளாகும் போது அவனது தனது நிலைமையை வெளிப்படுத்தி ஸகாத்தைப் பெறுவது மார்க்கத்தில் குற்றமாகாது.

செல்வந்தன் என்றால் யார்?

தன்னுடைய உழைப்பின் மூலம் தனது மற்றும் தன்னுடைய குடும்பத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள் அனைவரும் செல்வந்தர் ஆவார்கள். இவர்கள் அனைவரும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு அதிகமாக ஸகாத் நிறைவேற்ற வேண்டிய அளவிற்கு செல்வத்தைப் பெற்றிருந்தால் அவர்கள் கண்டிப்பாக அதனை நிறைவேற்ற வேண்டும்.

செல்வந்தர்கள் ஸகாத் பெறுவது கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தனுக்கும், தெளிவான அறிவுள்ள, ஊனமில்லாத திடகாத்திரமானவனுக்கும் ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: திர்மிதி (589)

இரண்டு மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளிலிருந்து கேட்டு வந்தனர். நபியவர்கள் அந்த இருவரின் மீதும் பார்வையை (மேலும் கீழுமாகப்) பார்த்தார்கள். அந்த இருவரையும் திடகாத்திரமானவர்களாகக் கண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களுக்கு நான் வழங்குகிறேன். ஆனால் இதில் செல்வந்தருக்கும், சம்பாதிக்கும் வலிமை பெற்றவருக்கும் எந்த பாத்தியதையும் கிடையாது என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (18001)

செல்வ நிலையில் உள்ளவர்கள் பின்வரும் ஐந்து நிலைகளில் இருந்தால் அவர்கள் ஸகாத் பொருளைப் பெற்று, பயன்படுத்திக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வந்தனுக்கு ஸகாத்தைப் பெறுவது ஹலாலாகாது. ஐந்து நபர்களைத் தவிர. 1. அதனை வசூல் செய்யக் கூடியவர்கள். 2. தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஸகாத் பொருளை விலைக்கு வாங்கியவர் 3. கடன் பட்டவர்கள் 4. அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் 5. ஸகாத்திலிருந்து ஒரு ஏழைக்கு தர்மமாக வழங்கப்படுகிறது; அவன் அதிலிருந்து ஒரு செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்குவது.

அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி)

நூல்: அஹ்மத் (11555)

மேற்கண்ட ஹதீஸிலிருந்து செல்வந்தர்களாக உள்ளவர்கள் ஸகாத்தை வசூல் செய்கின்ற பொறுப்பில் இருந்தால் அவர்களுக்கு அதிலிருந்து வழங்கலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

மேலும் ஸகாத்தாக உள்ள ஒரு பொருளை ஒரு செல்வந்தர் விலைக்கு வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

செல்வந்தராக உள்ள நிலையில் கடன்பட்டவர்கள் யார் என்பதை பற்றிய விபரம் பின்னால் வருகிறது.

மேலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்குவது கூடும்.

9:60 வசனத்தில் ஸகாத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவிட வேண்டும் என்று வந்துள்ளது. அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் போரிடக் கூடியவர்கள் என்பது தான் விளக்கமாகும்.

சிலர் 9:60 வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வுடைய பாதை எது  என்பதைச் சரியாக விளங்காமல் அனைத்து நல்ல காரியங்களுக்குச் செலவிடுவதும் அல்லாஹ்வுடைய பாதை தான்;. எனவே நம்முடைய ஸகாத்தை பள்ளிவாசல் கட்டுவதற்கும், பணக்கார மாணவர்களும் சேர்ந்து பயிலும் மதரஸாக்களுக்கும், எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் பயன்படுத்தலாம் எனக் கூறுகின்றனர். இது அறியாமையாகும்.

9:60 வசனத்தில் அல்லாஹ் 8 வகையினரைக் குறிப்பிடுகின்றான். இதில் 7 சாராருக்குக் கொடுத்தாலும் அல்லாஹ்வுடைய பாதையில் செலவிடுவது தான். இதில் இறைவன் அல்லாஹ்வுடைய பாதை என்று ஏன் தனியாகக் கூற வேண்டும். அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் ஸகாத்தைச் செலவிடுங்கள் என்று இறைவன் பொதுவாகக் கூறியிருக்கலாம். ஏன் 8 வகையாகப் பிரிக்க வேண்டும்.

இதிலிருந்தே மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட அல்லாஹ்வுடைய பாதை என்பது இறைவனுடைய பாதையில் சத்தியக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகப் போரிடுபவர்களை மட்டுமே குறிக்கும். அதைத் தான் மேற்கண்ட நபிமொழியும் தெளிவுபடுத்துகிறது.

மேலும் மதரஸாக்களில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்காக மட்டும் செலவிட வேண்டும் என்று குறிப்பிட்டு ஸகாத்தை வழங்குவதில் தவறில்லை.

ஏழை ஒருவர் தனக்கு ஸகாத்திலிருந்து வழங்கப்பட்ட பொருளை செல்வந்தருக்கு அன்பளிப்பாக வழங்கினால் அந்த செல்வந்தர் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

நபியவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தர்மப் பொருள்களைப் பெறுவது ஹராமாகும். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தர்மப் பொருளை நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது நபியவர்கள் அதனைச் சாப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு இறைச்சி ùச்காண்டு வரப்பட்டது. அப்போது நான் “இது பரீராவுக்கு தர்மம் செய்யப்பட்ட பொருள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது பரீராவுக்கு தர்மமாகும்; நமக்கு  அன்பளிப்பாகும்” என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (1493)

கடன் பட்டவர்கள்

ஒருவர் தன்னுடைய வறுமையின் காரணமாக கடன் வாங்கியிருந்தால் அவர் ஏழை என்பதில் வந்து விடுவார். அவருக்கு ஸகாத்திலிருந்து வழங்கி அவருடைய கடனை அடைப்பதற்கு உதவி செய்ய வேண்டும்.

மேலும் செல்வந்தர்கள் கடன்பட்டிருந்தாலும் அவர்களுடைய கடனை அடைப்பதற்காக ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். செல்வந்தர்கள் கடன் பட்டால் அவர்களுடைய செல்வத்திலிருந்து அடைக்க வேண்டியது தானே, எதற்காக அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

செல்வந்தர்கள் கடன்பட்டால் அவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்கலாம் என்பது செல்வந்தர்கள் தம்முடைய சுய தேவைக்காகப் பெற்ற கடன் அல்ல. மாறாகப் பொது விஷயத்திற்காக ஒன்றைப் பொறுப்பேற்கும் போது அதில் கடன் ஏற்பட்டால் அதைப் பொறுப்பேற்றவர் தன்னுடைய செல்வத்திலிருந்து தான் அடைக்க வேண்டும் என்பது கிடையாது. ஸகாத் பொருளைப் பெற்றும் அவர் அந்தக் கடனை அடைக்கலாம். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும் வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்ற வரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக் கொள்ள வேண்டும். மற்றொருவர்  (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் “வாழ்க்கையின் அடிப்படையை‘ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைந்து  கொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, “இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்” என்று (சாட்சியம்) கூறுகின்றனர் என்றால், அவர் “வாழ்க்கையின் அடிப்படையை’ அல்லது “வாழ்க்கையின் அவசியத் தேவையை’ அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவையே (ஹராம்) ஆகும். (இம்மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செய்யப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.

நூல்: முஸ்லிம் 1730 (தமிழாக்கம் எண்: 1887)

மற்றவருக்காகப் பொறுப்பேற்ற ஒரு செல்வந்தர் அதனை நிறைவேற்றுவதற்காக தர்மப் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸகாத்தை வசூலிப்பவர்கள்

உரியவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று, அதைப் பாதுகாத்து, உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பணியாற்றுகின்ற அனைவரும் ஸகாத்தை வசூலிப்பவர்களில் அடங்குவர். இவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ஸகாத்திலிருந்து வழங்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் நற்காரியங்களுக்காக வசூல் செய்பவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. சில சகோதரர்கள் கமிஷன் பெறுபவர்களை ஏதோ அநியாயமாகப் பறித்துச் சாப்பிடுபவர்களைப் போல் கருதுகின்றனர். இது தவறாகும். நற்காரியங்களுக்காகத் தன்னுடைய நேரங்களையும், காலங்களையும் செலவிட்டு அரும்பாடுபட்டு வசூல் செய்பவர்களுக்கு வழங்கினால் தான் நற்பணிகள் தொடர்ந்து நடைபெறும். அல்லாஹ்வே வழங்குமாறு கூறியிருப்பதினால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஸகாத்தை வசூல் செய்பவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் சஅதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களது ஆட்சிக் காலத்தின் போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், “நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)” என்று கேட்டார்கள். அதற்கு நான் “ஆம்’ என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்க, நான், “என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். ஆகவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று பதிலளித்தேன்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், “என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்” என்று சொல்லி வந்தேன். இறுதியில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்த போது, நான், “என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லை யென்றால்,) தர்மம் செய்து விடுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்ததோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லை யென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (7163)

வசூல் செய்பவர்கள் தம்மை வசூல் செய்வதற்கு யார் நியமித்தார்களோ அவர்களிடமிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வித மோசடியும் செய்து விடக் கூடாது. ஸகாத் பொருளை உரியவர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்காகப் பணியாற்றுபவர் அதனை முறையாகச் செய்தால் அவருக்கும் தர்மம் செய்த கூலி கிடைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிமான, நம்பிக்கைக்குரிய பாதுகாவலன், தான் ஏவப்பட்ட முறையில் முழுமையாக – நிறைவாக, நல்ல முறையில் மனப்பூர்வமாகத் தான் ஏவப்பட்டபடி, ஏவப்பட்டவருக்குத் தர்மம் செய்தால் அவனும் தர்மம் செய்தவர்களில் ஒருவனாவான்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: புகாரி (1438)

மேலும் வசூல் செய்பவர் தமக்கு முறையாக வழங்கப்பட்ட கூலிக்கு மேல் அதிலிருந்து எடுத்தால் அவர் மோசடியாளராவார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம் ஒருவரை ஒரு பணியைச் செய்வதற்காக நியமிக்கின்றோம். அவருக்கு அழகிய முறையில் கூலியும் வழங்கி விடுகின்றோம். அதற்கு பிறகு அவர் (அதிலிருந்து) எடுத்துக் கொள்வது மோசடியாகும்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: அபூதாவூத் (2554)

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“அஸ்த்‘ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (“ஸகாத்’ வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப் படுகிறதா இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தமது பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்” என்று கூறிவிட்டு “(இறைவா! உனது செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (6636)

உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள்

ஸகாத்தைப் பெற தகுதியானவர்களில் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரும் அடங்குவார்கள். உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற பிரிவினரில் முஸ்லிம் அல்லாதவர்களும், புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களும் அடங்குவர்.

உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் என்று அல்லாஹ் கூறியதிலிருந்தே இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டிய முஸ்லிம் அல்லாதவர்களும் அடங்குவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஸகாத் நிதியிலிருந்து வழங்கும் போது அவர்களின் உள்ளம் மேலும் இஸ்லாத்தின் பால் ஈர்ப்பு கொள்வதற்கு அது காரணமாக அமையும்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும் “இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (4667)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, “என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்” என்று கூறினார். 

நூல்: முஸ்லிம் 4275 (தமிழாக்கம் எண்: 4630)

நாடோடிகள்

நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னுஸ் ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் “பாதையின் மகன்’ என்பதாகும்.

ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபுகளின் வழக்கம்.

எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் “போரின் மகன்’ என்று குறிப்பிடப்படுவது வழக்கம். எப்போது பார்த்தாலும் ஊர் ஊராகச் சென்று கொண்டிருப்பவன் “பாதையின் மகன்’ என்று குறிப்பிடப்படுவான்.

சாதாரணமாகப் பயணம் செய்பவர்கள் இச்சொல்லால் குறிக்கப்பட மாட்டார்கள். பயணமே வாழ்க்கையாக மாறியவர்கள் தான் இச்சொல்லால் குறிப்பிடப்படுவர். எனவே நாடோடிகள் என்பது இச்சொல்லுக்கு நெருக்கமான சொல் எனலாம்.

வீடு வாசல் ஏதுமில்லாமல் ஊர் ஊராகச் சுற்றக் கூடியவர்களுக்கு ஸகாத் நிதியை வழங்கி அவர்களை நிலையாக இருக்கச் செய்வதற்கு ஸகாத் நிதியைச் செலவிடலாம்.

இச் சொல்லுக்கு பிரயாணி, வழிப்போக்கன் என்று பலரும் பொருள் கொண்டுள்ளனர். பயணம் செய்வதே ஸகாத் பெறுவதற்கான தகுதியா எனக் கேட்டால் பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்து விட்டு சொந்த ஊருக்குச் செல்ல முடியாதவன் என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

இவர்கள் வாதப் படி பயணிகள் என்ற அர்த்தம் மட்டுமே இச்சொல்லுக்கு உண்டு. அனைத்தையும் இழந்து சொந்த ஊர் செல்ல இயலாதவன் என்பது இச்சொல்லில் இல்லாத – கற்பனை செய்யப்பட்ட விளக்கமாகும்.

மேலும் சாதாரணப் பயணியைக் குறிக்க வேறு சொல் உள்ளது. பாதையின் மகன் என்பது எப்போது பார்த்தாலும் பயணத்தில் இருக்கும் நாடோடியையே குறிக்கும். நாடோடி என்று பொருள் கொண்டால் நாடோடியாக இருப்பதே ஸகாத் பெறுவதற்கான தகுதியாகும் என்பது ஏற்கத் தக்கதாகவும் உள்ளது.

பயணத்தில் சென்று அனைத்தையும் இழந்தவன் என்பவன் ஃபகீர் – தேவையுள்ளவன் என்ற வகையில் தானாக அடங்கி விடுவான். இத்தகையோரை உள்ளடக்கவே ஏழை என்றும் தேவையுள்ளவன் என்றும் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அடிமைகளை விடுதலை செய்வதற்கும் ஸகாத்திலிருந்து செலவிடலாம். ஆனால் தற்போது உலக நாடுகள் எதிலும் அடிமை முறை கிடையாது. இஸ்லாம் கூறும் போதனைகள் அனைத்தும் அடிமைத் தளைகளை கட்டவிழ்க்கும் வண்ணமே அமைந்துள்ளன.


தொடர்: 13

ஸிஹ்ர் – ஒரு விளக்கம்

சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம்.

மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கு இஸ்மாயில் ஸலபி எழுதிய விளக்கத்தைக் கடந்த இதழில் பார்த்தோம்.

அறிவிப்பாளர்களின் வார்த்தைகளில் வேறுபாடு வரலாம். ஆனால் கருத்து ஒன்றுக்கொன்று நேர் முரணாக இருக்கக் கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இஸ்மாயில் ஸலபி எழுதிய விளக்கத்தில் குழப்புகிறார்.

இந்த முரண்பாடுகள் காரணமாக மேற்கண்ட ஹதீஸ்களை மறுப்பதாகவும் இவர் வாதிடுகிறார். குர்ஆனுக்கு முரண்படுவதால் தான் மறுக்கிறோம். அந்த ஹதீஸ்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகள், இது சரியான செய்தி அல்ல என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது என்று தான் நாம் கூறுகிறோம்.

சூனியம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளைக் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதா? இல்லையா என்பதைக் குறித்து அந்த ஹதீஸ்கள் கூறுவது என்ன என்பதை அந்த ஹதீஸ்களின் வாசகத்தை வைத்துத் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு சொல்லுக்கு நம் இஷ்டத்துக்கு ஏற்ப அர்த்தம் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்று கூறக் கூடாது. ஆனால் இவர் ஒரு சொல்லுக்கு ஒரு இடத்தில் ஒரு அர்த்தமும் இன்னொரு அறிவிப்பில் உள்ள அதே சொல்லுக்கு வேறு அர்த்தமும் கொடுத்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார்.

இது குறித்து புகாரியில் இடம் பெற்ற – நாம் சுட்டிக்காட்டிய – அந்த ஹதீஸ்களைப் பார்ப்போம்.

முதலாவது ஹதீஸ், புஹாரியில் 5765வது ஹதீஸ் ஆகும். இதற்கு நாம் பொருள் செய்தால் அதற்கு சலபி உள்நோக்கம் கற்பித்து விடுவார். எனவே ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கத்தையே எடுத்துக் காட்டுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கி விட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும் சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் “தர்வான்’ குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி (ஸல்) அவர்கள், “இது தான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன” என்று சொல்லி விட்டுப் பிறகு “அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது” என்றும் கூறினார்கள். நான், “தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக் காட்டக் கூடாது?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்து விட்டான். (சூனியப் பொருளைத் திறந்து காட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை” என்று சொல்லி விட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5765

மேற்கண்ட ஹதீஸின் அரபு மூலத்தில் இஸ்தக்ரஜ என்ற சொல் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் வெளியேற்றுதல் என்பதாகும். இந்த இரண்டு இடங்களிலும் சூனியம் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பொருளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்தார்கள் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

அதாவது சூனியம் வைக்கப்பட்ட பொருள் கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது. திறந்து காட்டவில்லை என்பதற்கு தனஷ்ஷர்த்த என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்து விட்டதை நீ அறிவாயா? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயீல்) எனது கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயீல் ஜிப்ரீலிடம்), இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன? என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார். அதற்கு அவர், இவருக்கு சூனியம் வைத்தது யார்? என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், லபீத் பின் அஃஸம் (என்னும் யூதன்) என்று பதிலளித்தார். (அவன் சூனியம் வைத்தது) எதில்? என்று அவர் (மீக்காயீல்) கேட்க அதற்கு, சீப்பிலும், (இவரது) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், அது எங்கே இருக்கிறது என்று கேட்க, (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) “தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன என்று கூறினார்கள். நான், “அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்தி விட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன் என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3268

இந்த ஹதீஸிலும் அதே இஸ்தக்ரஜ என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே எதிர்மறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அதை வெளியே எடுத்தீர்களா என்று கேட்ட போது இல்லை என்று நபிகள் நாயகள் (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. மேலும் வெளியே எடுக்காமலே கிணறு தூர்க்கப்பட்டு விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது முதல் ஹதீஸ் அப்பொருளை வெளியே எடுத்தார்கள் என்று சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் கூறுகிறது. அதைத் திறந்து மக்களுக்குக் காட்டவில்லையே தவிர பொருளை வெளியே எடுத்தது உறுதி என்பது முதல் ஹதீஸிலிருந்து தெரிகிறது.

ஆனால் இரண்டாம் ஹதீஸில் அப்பொருளை வெளியே எடுக்காமலே கிணறு தூர்க்கப்பட்டு விட்டது என்று கூறப்படுகிறது.

இது இரண்டும் முரணா இல்லையா என்பதை மேற்கண்ட ஹதீஸின் வாசகத்தை வைத்துக் கூற வேண்டும். ஆனால் வெளியேற்றுதல் என்ற அர்த்தம் உடைய இஸ்தக்ரஜ என்ற சொல்லுக்கு ஒரு இடத்தில் செய்தியை மக்களிடம் பரப்புதல் என்றும் இன்னொரு இடத்தில் வெளியேற்றுதல் என்றும் தன் இஷ்டத்துக்கு அர்த்தம் செய்து விட்டு முரண்பாடு இல்லை என்கிறார் சலபி.

மேலும் இந்த இரண்டாவது ஹதீஸில் கிணறைத் தூர்த்தார்கள் என்று கூறப்பட்டு இஸ்மாயீல் சலபி பொய் சொல்கிறார் என்பதைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.

பொருளை வெளியே எடுத்து விட்டால் கிணறைத் தூர்க்க வேண்டியதில்லை.

அப்பொருளை கிணற்றில் வைத்து கிணறு மூடப்பட்டது என்ற கருத்தும்

அப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது ஆனால் உடைத்துக் காட்டவில்லை என்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதா இல்லையா?

இது வார்த்தையில் ஏற்பட்ட வித்தியாசமா? கருத்தில் உள்ள முரண்பாடா?

கிணற்றில் என்று நாம் இடைச் செருகல் செய்ததால் தான் குழப்பமாகத் தெரிகிறதாம். இல்லாவிட்டால் குழப்பமே இல்லையாம். இப்படி உளறுகிறார்.

வெளியேற்றுவது என்று கூறப்பட்டால் எதை வெளியேற்ற முடியுமோ எதில் இருந்து வெளியேற்ற முடியுமோ அதைத் தான் கூறுகிறது என்பது சாதாரணமாக எவருக்கும் தெரியும் உண்மை தான். கிணற்றில் இருந்து அப்பொருளை வெளியேற்றுவதைப் பற்றி தான் அது கூறுகிறது என்பது கூட விளங்காமல் இப்படி வார்த்தை ஜாலம் காட்டுகிறார். கிணற்றில் இருந்து என்ற வார்த்தை இல்லாமலே விளக்கட்டுமே?

வெளியேற்றினார்கள் என்பதற்கு, பரப்பினார்கள் என்று இல்லாத அர்த்தம் செய்யாமல் வெளியேற்றினார்கள் என்று சரியான அர்த்தம் செய்யட்டும். அதன் பின் எதில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதை சலபி விளக்கட்டுமே?

ரஹ்மத் ட்ரஸ்ட் செய்தது போல் சரியாக அர்த்தம் செய்தால் அதில் கிணற்றில் இருந்து என்ற கருத்தைத் தவிர வேறு கருத்து வராது.

அவர் விருப்பப்படி கிணற்றில் என்று குறிப்பிடாமல் பார்த்தாலும் முரண்பாடு இருப்பது உறுதியாகிறது.

பின்வரும் ஹதீஸும் இதே கருத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக்‘ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள்’ அல்லது ஓரிரவு’ என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர், எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) “தர்வான்’ எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றி விட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடுவதை நான் வெறுத்தேன் (எனவே தான் அதை நான் வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5763

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) சீப்பிலும் சணல் நாரிலும்’ என்று காணப்படுகிறது. தலையை வாரும் போது கழியும் முடிக்கே “முஷாதத்’ (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும் போது வெளிவரும் நாருக்கே “முஷாகத்’ (சணல் நார்) எனப்படும்.

இதோடு முரளண்பாடு முடியவில்லை.

இஸ்தக்ரஜ என்ற சொல் இல்லாமல் அக்ரஜ என்ற சொல்லமைப்பைப் பயன்படுத்தியும் சில அறிவிப்புக்கள் உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), (ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான் என்று கூறினார்கள். அதற்கு நான், அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்:

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும், மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டார். அதற்கு அவருடைய தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளிக்க, முதலாமவர், இவருக்குச் சூனியம் வைத்தது யார்? என்று வினவினார். அதற்கு லபீத் பின் அஃஸம் என்று தோழர் பதிலளித்தார். அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே உள்ளது? என்று கேட்க, மற்றவர், தர்வானில் உள்ளது என்றார்.

-தர்வான்’ என்பது பனூஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.-

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன என்று குறிப்பிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்த போது நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்து விட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (ஆகவே தான் அதை வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது; நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்) என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 6391

அந்தப் பொருளை வெளியே எடுக்கவில்லை என்று தெளிவாக இந்த் அறிவிப்பு கூறுகிறது. வெளியே எடுத்தார்கள் என்ற அறிவிப்பு, அதாவது பொருளை வெளியே எடுத்தார்கள்; ஆனால் அதைத் திறந்து காட்டவில்லை என்ற அறிவிப்புடன் இது நேரடியாக மோதி சந்தேகத்தை அதிகமாக்குகிறதா இல்லையா? வெளியே எடுத்தார்கள் என்பதைத் தெளிவாகக் கூறும் முஸ்லிம் அறிவிப்பில் அதை நீங்கள் தீயில் போட்டு எரிக்கவில்லையா என்று கேட்டதாக உள்ளது.

அறிவிப்புகளுக்கிடையில் முரண்பாடு இருப்பது பற்றி நாம் மேலோட்டமாகவே குறிப்பிட்டோம். முரண்பாடு இல்லாமல் ஒரே விதமாக அறிவிக்கப்பட்டாலும் குர்ஆனுக்கு முரண்படும் ஒரே காரணத்துக்காகவே அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படும் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஹதீஸில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் செய்து காட்டி அந்த அர்த்தங்களுக்கு இடையில் முரண்பாடு இல்லை என்று நிரூபிக்காமல் இல்லாத அர்த்தத்தைக் கொடுத்து முரண்பாடு இல்லை என்று கூறுகிறார் என்பது தெளிவாகிறது.

போகிற போக்கில் குர்ஆனில் முரண்பாடு என்று இவர் உளறி இருப்பதற்குப் பதில் சொல்லத் தேவையில்லை. யாரெல்லாம் குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்பட்டாலும் ஏற்க வேண்டும் என்று மன முரண்டாக வாதிடுகிறார்களோ அவர்கள் அனைவரின் உள்ளத்திலும் குர்ஆனைப் பற்றிய மதிப்பை அல்லாஹ் நீக்கி விடுவதை நாம் காண்கிறோம். அதன் வெளிப்பாடு தான் இது!