ஏகத்துவம் – ஏப்ரல் 2009

தலையங்கம்

தேர்தலா? மாறுதலா?

ஒரு நோயாளி, மருத்துவரிடம் காய்ச்சல் என்று வருகின்றார். உடனே மருத்துவர் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கிறார். அதே நோயாளி கண் பார்வை மங்குகின்றது என்று வருகின்றார். மருத்துவர் கண் நோய்க்கு மருந்து கொடுக்கின்றார். காதில் சீழ் என்று அடுத்து வருகின்றார். அப்போது காதுக்காக மருந்து கொடுக்கின்றார். கையில் ஆறாத புண், காலில் காயம் என்று அதே நோயாளி மீண்டும் மீண்டும் வருகின்றார். மருத்துவரும் அந்தந்த நோய்க்கு மருந்து கொடுத்து அனுப்புகின்றார். அவர் மருந்து கொடுத்த எந்த நோயும் தீரவில்லை, புண்களும் ஆறவில்லை என்றால் அந்த மருத்துவரை யாராவது நம்புவார்களா? அவரை மருத்துவர் என்று நம்பினால் அவன் பைத்தியக்காரனாகத் தான் இருக்க முடியும்.

எந்த ஒரு நோய் ஏற்பட்டாலும் அதற்கு அடிப்படைக் காரணம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது அல்லது இல்லாமல் ஆவது தான்.

அந்த எதிர்ப்பு சக்தியை அழிக்கும் தீய நோய் எது என்று கண்டறிந்து அதை நிறுத்துபவன் தான் சரியான மருத்துவன்.

இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

பல மாடிகள் கொண்ட ஒரு மாளிகை! அதன் சுவர்களில் வெடிப்புகள்; அதன் முகடுகளில் பாளம் பாளமாய் கீறல்கள், ஓட்டைகள்.

வெடிப்புகளிலும் கீறல்களிலும் ஒட்டுக்கள் போடப்படுகின்றன. மீண்டும் வெடிப்புகளும் உடைப்புகளும் ஏற்படுகின்றது. மீண்டும் மீண்டும் ஒட்டுக்களும், மேற்பூச்சும் ஒரு பொறியாளர் பூசச் சொல்வாரா? அவ்வாறு மேற்பூச்சை மட்டுமே பூசச் சொன்னால் அவன் பொறியாளன் அல்ல! சாதாரண கொத்தனார் அளவுக்குக் கூட அறிவு இல்லாதவன் என்று அர்த்தம்.

அவன் உண்மையான பொறியாளன் என்றால் அந்தக் கட்டடத்தின் அடித்தளத்தில் கோளாறு என்று கூறி அடித்தளத்தை மாற்றச் செய்வான்.

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதன் ஆணி வேர் என்ன? என்று பார்க்க வேண்டும்.

இந்த உதாரணங்களின் பின்னணியில் நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸைப் பார்ப்போம்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார்.

நூல்: புகாரி 3595

முறையீடு செய்பவருக்கு நபி (ஸல்) அவர்களின் பதில் எப்படி அமைந்திருக்க வேண்டும்? வறுமை ஒழிப்புக்கு இன்ன திட்டத்தை மேற்கொள்வோம். வழிப்பறியை ஒழிப்பதற்கு இன்ன நடவடிக்கையை எடுப்போம் என்று நபி (ஸல்) அவர்களின் பதில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் நபிகளாரின் பதில் எப்படியிருக்கின்றது என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ “ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறதுஎன்று பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்என்று சொன்னார்கள். – நான் என் மனத்திற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட “தய்யிகுலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன். – நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து), “நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ(பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை நீ பார்ப்பாய்என்று சொன்னார்கள். நான், “(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப்படுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான் (தோற்கடிக்கப்படுவார்)என்று பதிலளித்தார்கள். (மேலும் சொன்னார்கள்:) உனக்கு வாழ்நாள் நீண்டிருந்தால் ஒருவர் தனது கை நிறைய தங்கத்தை, அல்லது வெள்ளியை எடுத்துக் கொண்டு அதைப் பெற்றுக் கொள்பவரைத் தேடியலைவார். ஆனால் அ(ந்தத் தர்மத்)தை ஏற்கும் எவரையும் அவர் காணமாட்டார். இதையும் நீ பார்ப்பாய்.

நூல்: புகாரி 3595

ஒருவரது முறையீடு வழிப்பறி! இதற்குப் பதில் சொல்கின்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இரண்டு முன்னறிவிப்புகளைத் தெரிவிக்கின்றார்கள்.

தன்னந்தனியாகச் செல்லும் ஒரு பெண்ணின் நகைக்கு மட்டுமல்ல! அவளது கற்புக்கும் உயிருக்கும் பாதுகாப்பு கிடைக்கும் காலம் வெகு சீக்கிரம் வரவிருக்கின்றது.

அடுத்தவரின் முறையீடு வறுமை தொடர்பானது. அதற்கும் நபி (ஸல்) அவர்கள் திட்டத்தைச் சொல்லாமல், ஏற்படப் போகும் திருப்பத்திற்கான முன்னறிவிப்பைத் தான் சொல்கின்றார்கள்.

மக்களைச் சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொண்ட பாரசீக மன்னர்களிடமிருந்து ஆட்சி, அதிகாரம் கைப்பற்றப்படும். அந்த வளங்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு மக்களின் வறுமைக்குத் தீர்வு காணப்படும் என்ற நற்செய்தியை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன். (பாரசீக மன்னன்) கிஸ்ரா பின் ஹுர்முஸின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்தால் “ஒருவன் தங்கத்தையோ வெள்ளியையோ கைநிறைய அள்ளிக் கொண்டு அதை தர்மமாக ஏற்றுக் கொள்பவரைத் தேடியலைவதை நீ பார்ப்பாய்என்று அபுல் காஸிம் நபி (ஸல்) அவர்கள் சொன்னதையும் நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

நூல்: புகாரி 3595

இங்கு நாம் பார்க்க வேண்டியது, நபி (ஸல்) அவர்கள் வறுமையையும் வழிப்பறியையும் போக்குகின்ற திட்டத்தைக் குறிப்பிடாமல், ஏற்படப் போகும் திருப்பத்தை ஏன் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள்?

அதற்குக் காரணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்க்கு வைத்தியம் செய்யவில்லை. நோய்களுக்குரிய காரணத்தைக் கண்டறிந்து அதற்கு வைத்தியம் செய்கிறார்கள். கட்டடத்தின் மேல் உள்ள வெடிப்புகளைப் பழுது பார்க்காமல், சாந்து பூசாமல் அதன் அடித்தளத்தையே மாற்றியமைத்து புனர் நிர்மாணம் செய்கிறார்கள்.

நோய்களின் ஆணிவேர் ஷிர்க்! கட்டடத்தை ஆட்டம் காணச் செய்கின்ற, வெடிப்புகளை ஏற்படுத்துகின்ற கேடும் கெடுதியும் ஷிர்க் என்ற இணை வைப்புத் தான். இதைத் தான் அல்லாஹ் திருக்குர்ஆனில்,

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. தனது இறைவனின் விருப்பப்படி ஒவ்வொரு நேரமும் தனது உணவை அது வழங்குகிறது. மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான்.

அல்குர்ஆன் 14:24-25

இந்த மரத்தின் விளைச்சல் கனி தான், தன்னந்தனியாகச் செல்லும் ஒரு பெண்ணின் கற்புக்கும் உயிருக்கும் உடைமைக்கும் கிடைத்த பாதுகாப்பு! நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு, அமைதி!

அந்த மரத்தின் மகத்தான விளைச்சல் கனி தான் வறுமை ஒழிந்து வளம் கொழிக்கும் வாழ்வு!

எனவே ஏகத்துவத்தில் பிடிமானம் கொண்ட ஒருவரது முதல் கடமை அந்த ஏகத்துவச் செய்தியைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது தான். சத்தியத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது தான்.

ஒருவர், இருவர், நூறு பேர், இலட்சம் பேர் என்று மக்கள் இந்தக் கொள்கையின் வார்ப்புகளாக ஆகி விடும் போது அடுத்து மலரப் போவது இஸ்லாமிய ஆட்சி தான்.

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

அல்குர்ஆன் 24:55

நான் வழங்கும் இந்த ஆட்சியைப் பெற்ற மக்கள் என்னை மட்டும் வணங்குவார்கள்; எனக்கு இணை வைக்க மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.

அல்குர்ஆன் 22:41

தொழுகையை நிலைநாட்டுதல், ஸகாத் வழங்குதல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்று ஓர் இஸ்லாமிய ஆட்சியின் ஆட்சியாளர், குடிமக்கள் அனைவரும் ஆற்ற வேண்டிய பணிகள் என்னென்ன? என்பதன் பட்டியலைப் போட்டுக் காட்டுகிறான்.

தூய ஆட்சி என்றால் இது தான் தூய ஆட்சி!

தூய அரசியல் என்றால் இது தான் தூய அரசியல்!

மண்டிய இருள் கிழிக்கும் மாற்று அரசியல் என்பது இது தான்.

அதற்குத் தேவை இன்றியமையாத, உறுதி மிக்க அஸ்திவாரமும் அதன் மீது எழுப்பப்படும் ஆட்டம் காணாத கட்டமைப்பும் தான்.

அந்த ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் அல்லாஹ் நாடினால் நம் வாழ்நாளில் நடக்கலாம்; அல்லது நாம் இறந்த பின்பும் நடக்கலாம். அந்த மாற்றத்திற்கான அடிக்கல்லை நாம் நாட்டியிருக்கின்றோம்; அஸ்திவாரத்தைப் போட்டிருக்கின்றோம். அந்த அஸ்திவாரம் தவ்ஹீதுப் பணி!

ஏகத்துவக் கொள்கையை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் இந்தப் பணியைச் செய்யவில்லை என்றால் அதற்கு அல்லாஹ்விடம் கேள்வி உண்டு!

சாக்கடை அரசியலை நீ சுத்தப்படுத்தப் போனாயா? என்ற கேள்வி விசாரணை கிடையாது. ஆனால் அதில் நுழைந்து ஈமானைப் பறி கொடுத்ததற்காகக் கடும் விசாரணையும் கோரத் தண்டனையும் உண்டு. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இதைக் கவனத்தில் கொண்டு தான் தவ்ஹீது ஜமாஅத் அந்த இலக்கை நோக்கி, அந்த விளக்கை நோக்கி மட்டும் பயணம் செய்கின்றது.

நம்முடைய எதிர்பார்ப்பு ஏகத்துவக் கொள்கை மூலம் ஏற்படும் மாறுதலே! ஐந்தாண்டுக்கு ஒருமுறை வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் தருகின்ற தேர்தல் அல்ல!

———————————————————————————————————————————————–

நிர்வாகவியல்            தொடர்: 2

இஸ்லாமிய நிர்வாகம்

முன்மாதிரி  நிர்வாகி

கைஸான் எனும் ஜப்பானிய நிர்வாகவியல் தான் உலகில் முறைப்படுத்தப்பட்ட கல்வியாக முதன்முதலில் வரையறுக்கப்பட்டது என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இஸ்லாம், நிர்வாகவியலை தனித் துறையாக, கல்வி முறையாக அதை முறைப்படுத்தி உலகிற்குத் தரவில்லை என்றாலும் 1450 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய நிர்வாக அமைப்புகள் இன்று வரை உலகில் நடைமுறையில் இருப்பதைக் காண முடிகின்றது.

ஒரு நாட்டை நிர்வாகம் செய்வதற்கென கிராம நிர்வாகம், நகர நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் (தாலுகா), மாவட்ட நிர்வாகம் (ஜில்லா), மாநில நிர்வாகம், மத்திய அரசு, நீதிமன்ற முறைகள், நீதித் துறையை ஒரு நாட்டின் தனித் துறையாக்கியது என உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் இந்த நிர்வாக அமைப்பு, முஸ்லிம்கள் தங்களது நடைமுறையில் தோற்றுவித்ததாகும். இவை அனைத்தும் இஸ்லாம் இந்த உலகிற்கு வழங்கிய அருட்கொடைகள்.

ஒரு குடும்பத்திற்கு யார் தலைவன்? எதனால் அவன் தலைவன்? குடும்ப நிர்வாகம் செவ்வனே நடக்க அந்தக் குடும்பத் தலைவன் என்ன செய்ய வேண்டும்? என இஸ்லாம் வழங்கும் நிர்வாகவியல் கல்வி, மார்க்கக் கடமையாக இன்றும் நடைமுறையில் இருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற வாழ்க்கையின் அத்துணை துறைகளுக்குமான முன்மாதிரிகளில் நிர்வாகவியல் முன்மாதிரியும் பரந்து விரிந்து கிடக்கின்றது. அதில் மிகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், எந்த நிலையிலும் கொள்கை, குறிக்கோளிலிருந்து ஒரு இம்மியளவும் இறங்காமை; அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் எதைப் பிரச்சாரம் செய்தார்களோ அதன்படி முதலில் நடந்து காட்டியது ஆகியவை நபியவர்களின் முன்மாதிரியிலிருந்து நாம் சுருக்கமாகப் புரிய வேண்டிய அடிப்படை அம்சம்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 33:21

தலைமத்துவமும் நிபுணத்துவமும்

ஒரு தலைவர், நிர்வாகி எப்படி இருக்க வேண்டும்? மொழியைக் கையாள்வதில் வல்லவராக, கலை அறிவியல் பொறியியல் அறிவுள்ளவராக, சுருங்கச் சொன்னால் எதைக் கேட்டாலும் தெரியாது என்று கூறாதவராக இருக்க வேண்டும் என்பது ஒரு தலைவனைப் பற்றிய பொதுக் கருத்து.

ஆனால் ஒரு தலைவன் பல நிபுணர்களை வழி நடத்தும் திறமை, ஆற்றல் கொண்டவனாக இருக்க வேண்டும். அவருக்கு கட்டுப்பட்ட மருத்துவர், மொழி அறிஞர், ஆய்வாளர், பொறியாளர் போன்ற துறை சார்ந்த நிபுணர்களை எப்போது எப்படிப் பயன்படுத்த வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையையும் பாராட்டுக்களையும் முறையாக செலுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

அதுபோல் ஒரு நிபுணன் தலைமைத்துவ தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமுமில்லை. ஆனால் அதற்குத் தடையுமில்லை.

உதாரணமாக, ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் திறமை வாய்ந்த தலைவராகத் திகழ முடியும். ஆனால் மருத்துவர்கள், பொறியாளர்கள் எல்லாம் அனைத்து தலைமைத்துவ தகுதிகளோடும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் திருக்குர்ஆனை எழுதவும், பிற நாட்டு ஆட்சியாளர்களைத் தொடர்பு கொள்ளவும், கடிதங்களை எழுதவும் தமது தோழர்களைப் பயன்படுத்திய விதத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆளுமை

ஒரு மனிதனை மற்றவர்களிலிருந்து பிரித்துக் காட்டும் குண நலன்கள், உடல் தோற்றம் பண்புகள் என ஒரு பரந்த பொருள் கொண்ட சொல்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அருளால் இந்தக் குண நலன்கள் நிரம்பப் பெற்றவர்களாக இருந்தாலும் (அல்குர்ஆன் 68:4)  தமது தோழர்களை குணத்தின் குன்றுகளாக உருவாக்கினர்கள். அவர்களின் அந்த நடவடிக்கையை பின்பற்றுமாறு நாமும் பணிக்கப்பட்டிருக்கின்றோம். அந்த ஆளுமை பண்புகளைப் பெற நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். (பார்க்க: அல்குர்ஆன் 3:31)

  1. தன்னை அறிதல்

தனது பலம் மற்றும் பலவீனங்களைத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒரு நிர்வாகிக்கு, ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முதல் முக்கியப் பண்பாகும். சிலர் தனது பலவீனங்களையும் பலம் என எண்ணத் தொடங்குவார்கள். அது அவரை அறியாமலே பல இடைஞ்சல்களை நிர்வாகத்தில் ஏற்படுத்தி விடும்.

ஒரு நிர்வாகத்தை தோல்வியடையச் செய்யும் காரணங்களில் தற்புகழ்ச்சி, நான் குறைகள் இல்லாதவன் என்ற எண்ணம் முன்னிலை வகிக்கின்றது.

ஒருவர் தன்னை குறைகளற்றவர் என எண்ண ஆரம்பித்து விட்டால் இனி நாம் கற்றுக் கொள்வதற்கு, திருந்துவதற்கு எதுவுமில்லை என்ற நிலை ஏற்படும். குறைகளை, தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை எதிரிகளாக எண்ணுவர். சில நேரங்களில், “நீங்கள் சொல்வது சரிதான்’ என வார்த்தையளவில் சொன்னாலும் சுட்டிக் காட்டுபவர்கள் மீது வஞ்சம் வைத்து நேரம் பார்த்துக் காத்திருப்பர். இப்படியே அந்த நிர்வாகியும் அவர் சார்ந்த நிர்வாகமும் நாளடைவில் கூளங்கள் நிறைந்த குப்பைத் தொட்டி போல் மாறிவிடும்; மக்கள் செல்வாக்கை இழக்கும்.

மிகையான தன்னம்பிக்கை, தனது திறமைகளைக் கூடுதலாக மதிப்பிட்டு வைத்திருப்பது, சம காலத்தைப் பற்றிய போதிய அறிவில்லாமை ஆகியவற்றால் இந்நிலை ஏற்ப்படும். இதனால், தான் கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்து மற்றவர்களின் குறைகளைப் பார்ப்பதே (முழுநேர) பணியாக மாறிவிடும்.

ஒரு காரியத்தைச் செய்து விட்டால் பாராட்டுக்கள் குவிய வேண்டும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் மிகையான தன்னம்பிக்கையின் வெளிப்பாடே.

இந்தக் குண நலன்கள் குடி கொண்ட ஒரு நிர்வாகி தானும் அழிந்து, தான் சார்ந்த நிர்வாகத்தையும் அழித்து விடுவார்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களைக் கொண்டு அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குப் பாடம் புகட்டினான். கண் தெரியாத நபித்தோழரான அவர் புறக்கணிக்கப்பட்டார் என 80வது அத்தியாயம் 1 முதல் 12 வரை உள்ள வசனங்களில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றான். அதன் பின்னர் எப்போது உம்மி மக்தூம் (ரலி) அவர்களைப் பார்த்தாலும் நபி (ஸல்) கண்ணியப்படுத்துவார்கள். “இவரால் தான் எனக்கு இறைவன் திருந்திக் கொள்ள வாய்ப்பளித்தான்’ என நினைவு கூர்வார்கள். இது தான் முன்மாதிரி நிர்வாகியின் முன்மாதிரி.

செல்வாக்கை நிலை நிறுத்துதல்

ஒரு நிர்வாகி தனக்கிருக்கும் மக்கள் செல்வாக்கைப் பராமரித்தல், பாதுகாத்தல், அதன் மூலம் பதவியில் தொடர்ந்து நீடித்தல் போன்ற குறிக்கோளைக் கொண்டு இயங்க ஆரம்பித்தால் நிர்வாகம் அதன் குறிக்கோளிலிருந்து மாறி வேறு திசையில் செல்ல ஆரம்பிக்கும். ஏனெனில் மிதமிஞ்சிய பதவி மோகத்தால் அவர் எடுக்கும் எல்லா முடிவுகளும் அவர் பதவியில் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும். அவர் சார்ந்த நிர்வாகத்தின் கொள்கை, குறிக்கோள்களிலிருந்து மாறிச் செல்ல இத்தகைய பலவீனமுள்ள நிர்வாகிகள் காரணமாக அமைவார்கள்.

தனது புகைப்படங்களைப் பிரசுரிப்பதில் அதிக அக்கரை காட்டுவது, சபைகளில் அனைவரும் கவனிக்கும் இடத்தைப் பிடிப்பது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது பெயரை விளம்பரம் செய்து கொள்வது இவையெல்லாம் சுய செல்வாக்கை நிலை நிறுத்த முயல்பவர்களின் வெளிப்படையான அடையாளங்கள்.

  1. அறிவு

ஒரு நிர்வாகி அவர் துறை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்வது மிக அவசியம். முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவருக்கு இஸ்லாம் தெரியாவிட்டால்? நிறைய பேருக்குத் தெரியாது.

ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவன நிர்வாகிக்கு மென்பொருள் என்றால் என்ன என்பதே தெரியாவிட்டால் அவரால் என்ன நிர்வாகம் செய்ய இயலும்? குறிக்கோளை நோக்கி எப்படி வழி நடத்துவார்? சிலர் நிர்ப்பந்தம் காரணமாக சில பொறுப்புகளுக்கு வந்து விடுவர்கள். அதன்பின் அவர் பொறுப்பேற்றுள்ள துறை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்வது மிக அவசியம். இல்லை எனில் திசை தெரியாத காட்டில் குருடன் போன்ற நிலையில் ஆகிவிடும்.

  1. உண்மை உறுதி

ஒரு நிர்வாகி, தான் தலைமை தாங்கும் நிர்வாகத்தின் கொள்கை குறிக்கோளிலிருந்து எந்த நிலையிலும் விலகி விடாமல் உறுதியுடன் இருக்க வேண்டும். கொள்கையிலிருந்து விலகி விடும் அளவுக்குச் சம கால நிகழ்வுகள் அவரைப் பாதிக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இன்னும் சொன்னால் அதில் பிடிவாதமாக நடந்து கொள்ள வேண்டும்.  நாம் நமது கொள்கைப்படி வாழ்ந்தால் தான், சொல்வதைச் செய்தால் தான் நம்மைப் பின்பற்றுவோரும் அப்படி செய்வார்கள்.

நம் கொள்கை குறிக்கோளில் உள்ள உறுதிக்காக சிலர் நம்மைக் கேலி செய்வார்கள். பலர் நேரிடையாக எதிர்ப்பார்கள். சிலர் மறைமுகமாக எதிர்ப்பார்கள். அதனால் அவர்களுக்குத் தோதாக நடந்து, கொள்கை குறிக்கோளிலிருந்து விலகிவிடக்கூடும்.

இத்தகைய வெளி சக்திகளின் தாக்கத்தால் சில நிர்வாகிகள் தன்னை அறியாமலேயே கொள்கை குறிக்கோள்களிலிருந்து விலக ஆரம்பித்து விடுவார்கள். இதன் வெளிப்படையான அடையாளம், ஆலோசனைகளுக்குப் பிறகு ஒரு முடிவு எடுத்த பின் அந்த முடிவைச் செயல்படுத்தாமல் வேறொரு முறையில் செயல் நடந்து முடிந்திருக்கும்.

பொதுவாகவே இத்தகைய நிர்வாகிகள் அடிக்கடி தங்கள் கருத்துக்களையும் நிலைபாட்டையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். உள்ளம் மாறக் கூடியது. அதை மாறாமல் பாதுகாப்பது அல்லாஹ்வின் கையில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயொரு உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்என்று கூறி விட்டு, “இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 5161

அல்லாஹ்வும் இந்தப் பிரார்த்தனையைக் கற்றுத் தருகின்றான்.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர் வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

அல்குர்ஆன் 3:8

இந்தப் பிரார்த்தனை மிக அவசியம். நாமும் நல்வழியில் சென்று மக்களையும் வழி நடத்த இந்தக் குணம் அவசியம்.

நம்பகத்தன்மை

ஒரு நிர்வாகி, தனது சக நிர்வாகிகளின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது மிக அவசியம். இல்லை என்றால் அந்த நிர்வாகத்திற்கிடையில் ஏற்படும் சண்டையைத் தீர்ப்பதிலேயே எல்லா ஆற்றலையும் வளங்களையும் செலவு செய்ய நேரிடும்.

அதே நேரத்தில் ஒரு நிர்வாகத்தின் கொள்கை, குறிக்கோள்களில் நம்பிக்கை இல்லாதவர் உள்ளே புகுந்து அந்த நிர்வாகத்தின் கொள்கையிலிருந்து மாற்ற முயற்சித்தால் அதில் சமரசம் செய்ய கூடாது.

சில தலைவர்கள் தங்களைச் சுற்றி சில இளைஞர்கள் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வர்கள். இவர்களுக்கு “ஊதா நிறக்கண்ணர்கள்’ என மேலை நாட்டு நிர்வாகவியல் நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர். அந்த நிர்வாகம் எடுக்கும் எல்லா முடிவுகளும் இந்த இளைஞர்கள் முக்கியத்துவம் பெறும் வகையில் அமைந்திருக்கும். இது ஓர் இஸ்லாமிய நிர்வாகத்திற்கு அழகல்ல!

அடுத்த தலைமுறை தலைவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அத்தகைய அடுத்த தலைமுறை அவர்களின் கடின உழைப்பு, ஈடுபாடு, அறிவு போன்றவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். தலைவருக்குக் கூடவே இருப்பவர் என்ற காரணத்தால் அல்ல. குறிப்பிட்ட நிர்வாகிக்கு முக்கியத்துவம், ஒரு சார்பு நடவடிக்கை போன்றவை நிர்வாகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 5:8

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

ஷியாக்கள் ஓர் ஆய்வு                          தொடர் – 12

ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா                                                                       

ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்!

கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. “நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனேஎன்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்என்றோ, “அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்என்றோ அல்லது, “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்என்றோ சொல்லி விட்டு, “அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், “இதோ, அலீ அவர்கள்!என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.

அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி)

நூல்: புகாரி 2975

அப்போரில் அலீ (ரலி) அவர்கள் யூதர்களின் மன்னன் மர்ஹப் என்பவனைக் கொலை செய்து வீழ்த்தி விடுகிறார்கள். (முஸ்லிம் 3696)

இது தான் கைபர் போரில் நடந்த உண்மை நிகழ்வு! ஆனால் இந்த நிகழ்வுக்கு ஷியாக்கள் எப்படி தெய்வீகச் சாயம் பூசுகின்றார்கள் என்று பாருங்கள்!

கைபர் போர் அலீ (ரலி) கையினால் வெற்றி கண்டது. அப்போரில் அவர் யூதர்களின் மன்னன் மர்ஹபைக் கொன்றதும் நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நற்செய்தி தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் வினவிய போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அளித்த பதில் இதோ:

அல்லாஹ்வின் தூதரே! மர்ஹபாவைக் கொல்வதற்கு அலீ (ரலி) வாளை உயர்த்திய மாத்திரத்திலேயே அலீயின் கையை அந்தரத்தில் பிடித்து வைக்கும்படி இஸ்ராபீல், மீகாயீல் ஆகிய இரு மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிட்டு விட்டான். ஏனெனில் அவர் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி வாளை வீசினால் பூமியின் அடுக்குகளுக்குள் பாய்ந்து பூமி தலைகீழாகப் புரண்டு விடும். அதனால் தான் அவ்விரு மலக்குகளுக்கும் இப்படி உத்தரவிட்டு விட்டான்.

அத்துடன், “ஜிப்ரயீலே! பூமியின் அதள பாதாளத்திற்கு விரைக! வாளின் வீச்சு பூமியின் பாதாளத்தில் பாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்துக!” என்று அல்லாஹ் எனக்கும் ஓர் உத்தரவு போட்டான். உடனே நான் வந்து அலீயின் வாளைத் தடுத்து நிறுத்திப் பிடித்துக் கொண்டிருந்தேன்.

நான் ஏற்கனவே இதற்கு முன்பு லூத் நபியின் சமுதாயம் வாழ்ந்த மதாயின் நகரங்களை என் இறக்கைகளில் ஒன்றால் தூக்கி வைத்திருந்தேன். அவை ஏழு நகரங்கள். அந்நகரங்களில் உள்ள கோட்டைகளின் அடித்தளங்கள் ஏழாவது பூமி வரை பிடிமானம் கொண்டிருந்தன. அவற்றை ஸஹர் நேரம் வரை தாங்கிப் பிடித்திருந்தேன். அல்லாஹ் உத்தரவிட்டதும் அந்நகரங்களை தலைகீழாகப் புரட்டினேன். ஆனால் அவை எனக்கு அறவே பாரமாகத் தெரியவே இல்லை. அலீயின் வாளோ எனக்கு மிகவும் பாரமாக இருந்தது.

இது தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் தெரிவித்த விளக்கத்தின் சாராம்சமாகும்.

இவ்வாறு புர்ஸீ அறிவிப்பதாக ஜஸாயிதி கூறுகின்றார்.

நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முகத்தில் காயத் தழும்பு இருந்தது. (ஸஃபிய்யா அவர்களை இந்தப் போருக்குப் பின்னர் தான் நபியவர்கள் திருமணம் முடித்தார்கள்) அதை நபி (ஸல்) அவர்கள் விசாரித்த போது ஸஃபிய்யா (ரலி) தெரிவித்ததாவது:

கைபர் கோட்டையை அலீ கைப்பற்ற வந்த போது அது அவருக்கு மிகச் சிரமமானது. அதனால் அவர் கோட்டையை ஓர் உலுக்கு உலுக்கினார். கோட்டை மேல் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். கட்டில் மீது அமர்ந்திருந்த நான் அவர்கள் மீது விழுந்தேன். அப்போது கட்டில் என் மீது விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டு விட்டது.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்:

ஸஃபிய்யாவே! அலீ கோபப்பட்டு கோட்டையை உலுக்கியதும், அலீயின் கோபத்தைக் கண்டு அல்லாஹ்வும் கோபப்பட்டு வானங்களை ஓர் உலுக்கு உலுக்கினான். வானங்கள் அனைத்தும் குலுங்கின. மலக்குகள் பயந்து முகங்குப்புற விழுந்து விட்டனர்.

அலீயின் தெய்வீகத் துணிச்சலுக்கு இந்தச் சம்பவம் போதுமானது.

இரவு நேரத்தில் கைபர் கோட்டையின் கதவை அடைப்பதற்கு மட்டும் நாற்பது பேர் தேவைப்பட்டனர். அலீ கோட்டைக்குள் நுழைந்த போது அதிகத் தாக்குதல் காரணமாக கேடயம் அவரது கையிலிருந்து பறந்து விட்டது. உடனே கோட்டையின் கதவை அவர் கழற்றி விட்டார். அது அவருடைய கையில் கேடயமாகத் திகழ்ந்தது. கடைசியில் அல்லாஹ் கைபர் கோட்டையை அலீ வெற்றி கொள்ளச் செய்தான்.

நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

புர்ஸீ என்ற இந்தப் புறம்போக்கு, ஜிப்ரயீல் மீகாயீலை எப்படி மட்டம் தட்டி, அலீயை உயர்த்துகின்றார் என்று பாருங்கள்.

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர்.

அல்குர்ஆன் 81:20

ஜிப்ரயீலின் வலிமையை அல்லாஹ் சிலாகித்து, சிறப்பித்துச் சொல்கிறான். இந்த ஷியா ஷைத்தான்கள் ஜிப்ரயீலை விட அலீ வலிமையானவர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒரு வாள் என்பது இரண்டு அல்லது மூன்று அடி நீளமிருக்கும். இந்த வாள் பூமியில் புகுந்து அதள பாதாளத்தைப் புரட்டி விடுமாம். புரூஸி சொல்கின்ற இந்தப் போலிக் கதையில் புராணங்கள் தோற்று விடும்.

இந்த மூன்றடி வாள் ஜிப்ரயீலின் இறக்கையில் பாரமாக இருக்கின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 35:1

மலக்குகளின் இறக்கைகளைப் பற்றி அல்லாஹ் பெருமையாகச் சொல்கின்றான் என்றால் அந்த இறக்கைகளுக்கு ஒரு பிரம்மாண்டம் இருப்பதால் தான்.

இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸிலும் பார்க்கலாம்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அப்படி (நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை) என்றால், “பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்ததுஎன்னும் (53:8,9) இறை வசனம் எங்கே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது (குர்ஆனில் “அவர் நெருங்கி அருகே வந்தார்என்பதில் “அவர்என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கின்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களுடைய உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால் தான் அவர் அடிவானத்தையே அடைத்துக் கொண்டார்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரி 3235

அடிவானத்தை அடைத்து நிற்கின்ற, அகன்ற, அற்புத இறக்கைகளுக்கு அலீயின் வாள் கனக்கிறதாம். ஜிப்ரயீலுக்கு அது வலிக்கிறதாம். பொய்யன் புரூஸி எப்படிக் காதில் பூச்சுற்றுகின்றார் என்று பாருங்கள்.

மனிதனால் ஒரு பேரீச்ச மரத்தைக் கூட தன்னந்தனியாகக் கழற்ற முடியாது. இது தான் உண்மை! யதார்த்தம்! ஆனால் இந்த ஷியாக்களோ, கோட்டையையே அலீ உலுக்கினாராம். அதனால் கோட்டை குலுங்கியதாம். இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வும் வானத்தை உலுக்கினானாம். எப்படி நா கூசாமல் புளுகித் தள்ளுகிறார்கள் என்று பாருங்கள்.

இவ்விரு பொய் சம்பவங்களின் மூலம் புருஸீ நிலை நிறுத்த முயல்வது, அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வத் தன்மை, தெய்வீக சக்தி இருக்கின்றது என்பதைத் தான்.

இந்து மதப் புராணங்களில் வரும் தெய்வீகக் கோட்பாட்டை, மனிதனைக் கடவுளாக்கும் கோட்பாட்டை அலீயின் மீது திணித்து அவரைக் கடவுளாக்குகின்றனர்.

இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (அல்குர்ஆன் 9:30)

வளரும் இன்ஷா அல்லாஹ்

———————————————————————————————————————————————–

பாக்தாதைக் காக்காத பரிதாப முஹ்யித்தீன்

எம். ஷம்சுல்லுஹா

மார்ச் 26, 2003 – அமெரிக்கா, பிரிட்டன் தலைமையிலான பன்னாட்டுப் படைகள் பாக்தாதுக்குள் படையெடுத்துச் சென்றனர். பேரழிவு ஆயுதங்கள் (ரங்ஹல்ர்ய்ள் ர்ச் ஙஹள்ள் உங்ள்ற்ழ்ன்ஸ்ரீற்ண்ர்ய்) வைத்திருப்பதாக ஒரு பொய் சாக்கு சொல்லி அமெரிக்கா மற்றும் அதன் கைக்கூலிப் படைகள் ஐ.நா.வின் ஒப்புதல் இல்லாமல் இராக்கிற்குள் புகுந்தன.

இந்தப் படையினரின் குறி இராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிப்பது தான். அதற்கு ஒரே வழி சதாமைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும். அந்த முயற்சியில் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஆதரவு நாடுகளும் ஏற்கனவே தோல்வியைச் சந்தித்திருந்தன. எனவே அவற்றின் அடுத்தக்கட்ட நடவடிக்கை சதாமைக் கொலை செய்வது தான். அதற்காக இராக்கில் அந்தப் படைகள் 2007ம் ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் குடிமக்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். 2008ல் ஐம்பது லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அருகில் உள்ள நாடுகளில் அடைக்கலம் புகுந்தவர்கள் மட்டும் இருபது லட்சம். இவ்வாறு ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது.

பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என சகட்டுமேனிக்கு, சரமாரியாக இந்தச் சண்டாளப் படையினரால் கொல்லப்பட்டனர். சிறையிலும் வெளியிலும் கற்பழிக்கப்பட்ட பெண்கள், கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள் என்று இந்தப் படையினர் செய்த அராஜகங்கள், அக்கிரமங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

ஜார்ஜ் புஷ் என்ற சண்டாளன் பதவி மாறிய பின்பும், உத்தம வேஷம் போடும் உபாமா பதவிக்கு வந்த பிறகும் இந்த அநியாயங்கள் நின்றபாடில்லை. இப்போது இங்கே நாம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறோம்.

அகிலத்தை ஆளும் முஹ்யித்தீன்?

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி இந்த இராக் நாட்டிலுள்ள பாக்தாதில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பக்தர்கள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் கருதுகின்றனர்.

அண்ட கோடிகளுமோர் பந்தெனக் கைக்குள்

அடக்கி விளையாட வல்லீர்

அகிலமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்

ஆட்டி விளையாட வல்லீர்

மண்டலத் தண்டரை அழைத்தருகிருத்தியே

வைத்து விளையாட வல்லீர்

மண்ணகமும் விண்ணகமும் அணுவைத் துளைத்ததில்

மாட்டி விளையாட வல்லீர்

கண்டித்த கடுகில் ஏழு கடலைப் புகட்டிக்

கலக்கி விளையாட வல்லீர்

கருதரிய சித்தெலாம் வல்லநீர் அடிமை என்

கண்முன் வரு சித்தில்லையோ

நண்டளந் திருநாழியாவனோ தேவரீர்

நற்குணங் குடிகொண்ட பாத்துஷாவான குரு

நாதன் முஹ்யித்தீனே!

இந்தப் பாருலகத்தை முஹ்யித்தீன் தன் கையில் பந்தாக வைத்து, ஏழு உலகத்தையும் ஆடும் தொட்டிலாக்கி, அணுவுக்குள் மண்ணையும் விண்ணையும் நுழைத்து, கடுகுக்குள் ஏழு கடலையும் புகட்டி, கலக்கி விளையாட வல்லவராம்.

இவ்வாறு குணங்குடி மஸ்தான் என்ற கவிஞன் பாடுகின்றான். மஸ்தான் என்றால் போதை ஏறியவன் என்று பொருள்.

இந்த மஸ்தான் தான் பித்தம் தலைக்கேறி இப்படிப் பாடுகின்றான் என்று பார்த்தால் அரபி தெரிந்த மஸ்தான் எழுதிய “யாகுத்பா’ என்ற பாடல் அதைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கின்றது.

அண்ட கோடியின் அச்சாணி

வானம், பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!

என்று யாகுத்பா என்ற அரபிப் பாடல் துவங்குகின்றது. இதிலிருந்து தான் இந்தப் பாடலை “யா குத்பா – குத்பை அழைத்துப் பாடப்பட்ட கவிதை’ என்று குறிப்பிடுகின்றனர்.

வானத்தில் வாழ்பவர்கள் என்பதற்கு மலக்குகள் என்பதைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. அப்படியானால் வானவர்களின் தலைவரே! அல்லது வானவர்களுக்கும் அச்சாணி போன்றவரே! என்பது இதன் பொருளாகின்றது.

வானவர் தலைவரான ஜிப்ரீல் (அலை), மீக்காயீல் (அலை) போன்றவர்களுக்கும் இவர் தலைவரா? அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர், அச்சாணி போன்றவர் என்பது வரம்பு மீறிய புகழ் இல்லையா?

அதே போன்று பூமியில் வாழ்பவர்கள் என்பதில், நபிமார்கள், அண்ணலாரின் அன்புத் தோழர்கள், இமாம்கள் அனைவரும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதையோ, அவர்களுக்கெல்லாம் அச்சாணி போன்றவர் என்பதையோ ஒரு முஸ்லிம் எப்படி ஏற்க முடியும்? இது இஸ்லாத்தின் கொள்கைக்கே முரணான ஒன்றில்லையா?

மகத்தான இரட்சர்

எல்லாக் காலங்களிலும் நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான ரட்சகரே!

இதுவும் யாகுத்பாவின் வரியாகும்.

எப்போதோ இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்ட ஒரு மனிதரை இவ்வாறு கூறி அழைப்பது இஸ்லாமியக் கொள்கைக்கு எவ்வளவு முரணானது?

நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக! அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:21, 22

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர். நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:13, 14

இதுபோன்ற எண்ணற்ற வசனங்கள், இறைவன் அல்லாத எவராக இருந்தாலும் அவர்களின் வாழ்வு முதல் சாவு வரை அனைத்துப் பிரச்சனைகளும் இறைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டவை தான் என்பதையும், அவனைத் தவிர எவருக்கும் எந்தவிதமான சுய அதிகாரமும் கிடையாது என்பதையும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தி விடுகின்றன.

எல்லாக் காலங்களிலும் எங்களைக் காப்பாற்றும் மகத்தான இரட்சகரே என்று இறந்து விட்ட ஒருவரை அழைப்பதற்கு ஒரு முஸ்லிம் எவ்வாறு துணிவான்?

இறைவனைத் தவிர எவரை அழைத்துப் பிரார்த்தனை செய்தாலும், பிரார்த்திக்கப்படுபவர் நபியாக இருந்தாலும், நல்லடியாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே! அவர்கள் ஒருக்காலும் இரட்சகராக ஆகவே முடியாது. இந்த அடிப்படையை உணராத காரணத்தினால் தான் “எல்லாக் காலங்களுக்கும் மகத்தான இரட்சகரே’ என்று இந்தக் கவிஞனும் அவனது அபிமானிகளும் அழைக்கின்றனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

அல்குர்ஆன் 7:197

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

அல்குர்ஆன் 22:73

இந்த வசனங்களையும், இதுபோன்ற கருத்தில் அமைந்த எண்ணற்ற வசனங்களையும் ஒருமுறை கவனியுங்கள். இந்த வசனங்கள் கூறும் உண்மைக்கு மாற்றமாக யாகுத்பாவின் மேற்கண்ட வரிகள் அமைந்திருப்பதை உணர முடியும்.

எவராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வின் அடிமையே! அணுவளவுக்குக் கூட அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. தங்களுக்கே சுயமாக உதவிக் கொள்ளவும் முடியாது. ஈயைப் படைக்கும் அளவுக்குக் கூட அவர்களுக்கு ஆற்றல் இல்லை என்ற போதனைகளையும், “எல்லாக் காலங்களிலும் காப்பாற்றும் மகத்தான ரட்சகரே’ என்ற யாகுத்பா வரிகளையும் ஒருசேர எப்படி ஒருவன் நம்ப முடியும்?

இந்தப் பாடல் வரிகளை நம்பினால் அவன் திருக்குர்ஆனை மறுக்க வேண்டும்; திருக்குர்ஆனின் மேற்கண்ட வசனங்களை நம்பினால் அவன் யாகுத்பாவை மறுக்க வேண்டும்.

அனைத்து ஆற்றலும் கொண்டவர்

நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கி விட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்ப்படிதலுக்கு உரியவராயும் இருக்கிறீர்கள்.

இதுவும் யாகுத்பாவின் வரிகளாகும்.

ஒருவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தாலும், அவர் விரும்பிய ஆற்றல் அனைத்தையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியதில்லை.

தான் எண்ணிய அனைத்தையுமே சாதித்துக் கொள்பவன் என்ற சிறப்புத் தகுதி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.

இவை அனைத்தும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளிலிருந்து பெறப்படும் உண்மைகளும் அதன் கொள்கைகளுமாகும். இந்த உண்மைகளுக்கு முரணாக மேற்கூறப்பட்ட யாகுத்பா பாடல் அடிகள் அமைந்துள்ளன.

மிகப்பெரும் இறைத்தூதர்களில் ஒருவரான நூஹ் (அலை) அவர்களின் மகன் தனது தந்தையின் வழியைப் பின்பற்றவில்லை. நிராகரிப்பவனாகவே இருந்தான். இறை மறுப்பாளர்களை அழிப்பதற்காக இறைவன் மாபெரும் வெள்ளப் பிரளயத்தைத் தோற்றுவித்தான். அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ள நூஹ் நபி இறைவனின் கட்டளைப்படி ஒரு கப்பலைத் தயாரித்து அதில் அவர்களும், அவர்களை நம்பிக்கை கொண்டவர்களும் ஏறிக் கொண்டனர். ஆனால் அதில் நூஹ் நபியின் மகன் ஏறிக் கொள்ளவில்லை. தன் மகனைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் அவர்கள் கேட்ட போது, அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று கூறி இறைவன் மறுத்து விட்டான். இந்தச் சம்பவம் திருக்குர்ஆனின் 11வது அத்தியாயம் 42 முதல் 46 வரையிலான வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் தந்தை நேர்வழிக்கு வர வேண்டுமெனப் பெரிதும் விரும்பினார்கள். அவர்கள் விரும்பிய இந்தக் காரியம் கைகூடவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்குக் கூட அவர்கள் விரும்பிய ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அப்துல் காதிர் ஜீலானிக்கு விரும்பிய ஆற்றலையெல்லாம் இறைவன் வழங்கி விட்டான் என்று இந்தக் கவிஞன் உளறுகின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தமது பெரிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். அவர் மரணப் படுக்கையில் இருந்த சமயத்தில் போதித்துப் பார்த்தார்கள். ஆனாலும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இதற்காக நபி (ஸல்) அவர்கள் பெரிதும் கவலையுற்ற போது, “நீர் விரும்பியவர்களை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது; மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்’ என்ற (28:56) வசனம் இறங்கியது. (பார்க்க புகாரி 1360, 3884, 4675, 4772)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே அவர்களின் அனைத்து விருப்பங்களையும் அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை. அப்துல் காதிர் ஜீலானிக்கு இந்த ஆற்றலை அல்லாஹ் வழங்கினான் என்று இந்தக் கவிஞன் பாடுகின்றான்.

யரோ ஒருவன், முஹ்யித்தீனைப் புகழ்கிறேன் என்ற பெயரில் அவரை அல்லாஹ்வுடைய இடத்தில் தூக்கி நிறுத்துகின்றான். இந்தப் பாடலைத் தான் மவ்லவிகள் பவ்யமாக, பணிவாக, பக்தியாகப் பாடி வருகின்றனர்.

இப்போது நாம் கேட்கும் கேள்வி இது தான்.

பாக்தாத் மீது பன்னாட்டுப் படைகள் படையெடுத்து வந்த போது – அந்தப் படையினர் அங்குள்ள லட்சக்கணக்கான குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் அனைவரையும் இன்று வரை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் போது – உயிருடன் இருப்பவர்களையும் கை, கால்களை முடமாக்கி, கண்களைக் குருடாக்கி, காதுகளைச் செவிடாக்கி, சொந்த நாட்டிலேயே அம்மக்களை அகதிகளாக்கி அநியாயம் செய்து கொண்டிருக்கும் போது – இந்த சகலகலா வல்லவன், நினைத்ததை முடிப்பவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அந்த மக்களை ஏன் காப்பாற்ற வரவில்லை?

முஹ்யித்தீன் மவ்லிதில் வருவது போல் பருந்தின் கழுத்தைத் திருகிச் சாகடித்து விட்டுப் பின் உயிர் கொடுத்தவர், செருப்பை ஸ்கட் ஏவுகணையாக அனுப்பி கொள்ளையர்களைக் கொன்று தன் பக்தர்களைக் காப்பாற்றியவர், ஜின்களை வசப்படுத்தியவர், குணங்குடி மஸ்தான் கூறுவது போல் பாருலகையே பந்தாக கைக்குள் வைத்து விளையாடுபவர் ஏன் இந்த பாக்தாதைக் காப்பாற்றத் தவறினார்?

புஷ்ஷின் பூதாகரப் படையை “ப்பூ’ என்று தன் வாயால் ஊதி ஒழிக்காமல் ஏன் விட்டார்? இந்த மவ்லிதை ஓதும் சுன்னத் வல்ஜமாஅத் பக்தர்களே! மவ்லிதுப் பாடல் பாடும் மவ்லவிப் பாகவதர்களே! முஹ்யித்தீன் ஏன் பதிலளிக்கவில்லை? ஏன் காப்பாற்ற, கரை தேற்ற வரவில்லை? பதில் சொல்லுங்கள் பார்ப்போம். இதற்கு ஒருபோதும் உங்களால் பதில் சொல்ல முடியாது.

ஆனால் எங்களிடம் பதில் இருக்கின்றது. நாங்கள் பதில் சொல்கிறோம். எங்களுடைய சொந்தப் பதில் அல்ல! அது அல்லாஹ் குர்ஆனில் சொல்கின்ற பதில்!

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20-21

முஹ்யித்தீன் இறந்து போனவர்; அவருக்கு வெளியே என்ன நடக்கின்றது என்று தெரியாது. இவர்களால் அறவே எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் அடித்துச் சொல்கிறான்.

முஹ்யித்தீன் செவியுற மாட்டார்

நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

அல்குர்ஆன் 30:52

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

அல்குர்ஆன் 35:22

இந்த வசனத்தில், “இறந்தவர்களும் உயிருள்ளவர்களும் சமமாக மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டு விட்டு, “இறந்தவர்களை நீர் செவியேற்கச் செய்ய முடியாது’ என்று கூறுகின்றான்.

இவையெல்லாம், இறந்தவர்கள் ஒருபோதும் செவியுற மாட்டார்கள்; பதிலளிக்க மாட்டார்கள் என்பதற்குக் குர்ஆன் கூறும் தெளிவான சான்றுகள்.

அதனால் தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் எழுந்து வந்து பதிலளிக்கவில்லை; பதிலளிக்கவும் மாட்டார். அப்படிப் பதிலளிப்பார் என்று ஒருவன் நம்பினால் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன் ஆவான்.

பாக்தாதில் அடங்கியிருக்கும் முஹ்யித்தீனை இங்கிருந்து அழைப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கட்டும். பாக்தாதில் உள்ள மக்களுக்கே பலனும் பயனும் தராத பரிதாபத்திற்குரிய முஹ்யித்தீன் நமக்குப் பதில் தருவாரா? சிந்தியுங்கள்.

மவ்லிது ஓதுவதை நிறுத்தி விட்டு, முஹ்யித்தீனைக் கடவுளாக்கும் அந்தப் பாழாய் போன பாடல் நூற்களை பகிரங்கமாகக் கொளுத்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள்.

குறிப்பு: அப்துல்காதிர் ஜீலானி ஒரு நல்லடியார். அவர் தன்னைக் கடவுளாக்குமாறு ஒரு போதும் சொல்லவே இல்லை. இவர்கள் தான் அவரைக் கடவுளாக்கி இருக்கின்றார்கள். அதைக் குத்திக் காட்டுவதற்காகத் தான், பரிதாப முஹ்யித்தீன் என்று தலைப்பிட்டிருக்கிறோம். முஹ்யித்தீனைக் குறை சொல்வதற்காக அல்ல!

———————————————————————————————————————————————–

கேள்வி  பதில்

? முஹர்ரம் மாதம் பிறை 10ல் மட்டும் நோன்பு வைத்தால் போதுமா? அல்லது 9, 10 ஆகிய இரு தினங்கள் சேர்த்துத் தான் நோன்பு வைக்க வேண்டுமா? அதாவது 9ஆம் நாள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா? என்பதை விளக்கவும்.
எம். சமீயுர்ரஹ்மான், திருமுல்லைவாசல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் “இது தான் மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் “இவர்களை விட மூசா (அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். ஆகவே, நீங்கள் இந்நாளில் நோன்பு வையுங்கள்என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4737

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஹர்ரம் 10ம் நாள் நோன்பு நோற்பது நபிவழியாகும். இந்த ஹதீஸில் 10வது நாள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மற்றொரு ஹதீஸில் 9வது நாளும் சேர்த்து நோன்பு நோற்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2088

இந்த ஹதீஸில், “அடுத்த ஆண்டில் 9வது நாளும் நோன்பு நோற்போம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அடுத்த ஆண்டில் அவர்கள் இறந்து விட்டார்கள். எனவே 9ம் நாள் சேர்த்து நோன்பு வைப்பது தான் நபி (ஸல்) அவர்களின் இறுதிக் கட்டளை என்பது தெளிவாகின்றது. அதாவது முஹர்ரம் 10ம் நாள் மட்டுமே நோன்பு வைத்த நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாறு செய்யும் விதமாக 9ம் நாளும் சேர்த்து நோன்பு வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். எனவே 9, 10 ஆகிய இரு நாட்களும் சேர்த்து நோன்பு வைப்பது தான் நபிவழியாகும். 10ம் நாள் மட்டும் தனித்து வைப்பது விரும்பத்தக்கதல்ல.

எனினும் ஒருவர் 9ம் நாள் நோன்பை வைக்க இயலாமல் விட்டு விட்டால், 10ம் நாள் மட்டும் தனியாக வைப்பது குற்றமாகாது. ஏனெனில் பொதுவாகவே ஆஷூரா நோன்பைப் பொறுத்த வரை ரமளான் நோன்பைப் போன்று கட்டாயக் கடமையல்ல! விரும்பியவர் வைக்கலாம்; விரும்பியவர் விட்டு விடலாம் என்ற சலுகை உள்ளது.

அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்று வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு வரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அ(ந்நாளில் நோன்பு நோற்ப)தை விட்டு விடலாம்என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2072

? “நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்’ என்ற (64:14) வசனத்தில் மனைவி, மக்கள் கூட நமக்கு எதிரிகளாகக் கூறப்பட்டுள்ளதே! இதன் விளக்கம் என்ன?
எஸ்.ஏ. அமீர் அலீ, கிள்ளை

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 64:14

ஒரு நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட போது அவரது மனைவி, மக்கள் அவரைத் தடுத்ததாகவும், அதைக் குறிப்பிட்டே இந்த வசனம் அருளப்பட்டதாகவும் திர்மிதி என்ற நூலில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும்.

இறை நினைவில் ஈடுபடுவதை விட்டும் தடுப்பதில் மனைவி, மக்கள், செல்வம் போன்ற அருட்கொடைகள் முன்னிலை வகிக்கின்றன. எனவே தான் இவற்றைச் சோதனை என்று மேற்கண்ட வசனத்திற்கு அடுத்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும்சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.

அல்குர்ஆன் 64:15

உங்களின் மக்கட் செல்வமும், பொருட் செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 8:28

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும்  அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் 63:9

மனைவி, மக்களில் இறை நினைவை விட்டுத் தடுப்பவர்கள் எதிரிகள் என்பதையே அந்த வசனம் குறிப்பிடுகின்றது என்பதை இங்கு நாம் எடுத்துக் காட்டியிருக்கும் வசனங்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

? நபிகள் நாயகம் காலத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டதாக ஹதீஸ்களில் காண முடிகின்றது. இப்போது நபிவழி பேணப்படுகின்ற பள்ளிகளில் இரண்டு பாங்குகள் சொல்லப்படுவதில்லையே! இரண்டு பாங்கு சொல்வது சிறந்ததா? அல்லது ஒரு பாங்கு மட்டும் போதுமா? விளக்கவும்.
எம். முஹம்மது கடாஃபி, கொடிக்கால் பாளையம்

நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜுமுஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்த போது “ஸவ்ராஎனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது தொழுகை அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 912

ஜுமுஆ நாளில் இன்னொரு தொழுகை அறிவிப்புச் செய்யும்படி உஸ்மான் (ரலி) அவர்களே கட்டளையிட்டார்கள்.- பள்ளிவாசலில் மக்கள் அதிகரித்த போதே (இவ்வாறு செய்தார்கள். அதற்கு முன்னர்) இமாம் (சொற்பொழிவு மேடை மீது) அமரும் போது சொல்லும் பாங்கு மட்டுமே (நடைமுறையில்) இருந்தது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரி 915

ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் ஏறி அமரும் போது ஒரு பாங்கு சொல்வது மட்டுமே நபிவழி என்பதற்கு இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் சான்றாக உள்ளன. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டதாக ஹதீஸ்களில் கூறப்படுவது பாங்கு மற்றும் இகாமத் ஆகியவை பற்றியதாகும். பொதுவாக ஹதீஸ்களில் இகாமத்தையும் பாங்கு என்றே கூறப்படும். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகளும், உஸ்மான் (ரலி) அவர்கள் மூன்றாவது அழைப்பை அறிமுகப்படுத்தினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு பாங்குகள் என்பது, இமாம் மிம்பரில் அமரும் போது சொல்லப்படும் ஒரு பாங்கு மற்றும் தொழுகை துவங்குவதற்காகச் சொல்லப்படும் இகாமத் ஆகிய இரண்டைப் பற்றித் தான் என்பதற்குக் கீழ்க்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

இமாம் (மிம்பருக்கு) வரும் போதும், தொழுகை நடத்தப்படும் போதும் பாங்கு சொல்வதே (அதாவது பாங்கும், இகாமத்தும் சொல்வதே) நபி (ஸல்) அவர்களது காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) காலத்திலும் நடைமுறையில் இருந்தது. உஸ்மான் (ரலி) கடைத்தெருவில் உள்ள ஸவ்ரா எனுமிடத்தில் மூன்றாவது அழைப்பை அதிகப்படுத்தினார்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: திர்மிதீ 474

தற்போது நடைமுறையில் உள்ளது போன்று இரண்டு பாங்கு மற்றும் ஒரு இகாமத் சொல்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

? வீட்டில் தொட்டில் போட்டு ஆடுகிறார்கள். இப்படி ஆடுவது கூடுமா? ஆட்டம் என்பது ஷைத்தானின் செயல் இல்லையா?
ஸஜா, முதலாம் ஆண்டு மாணவி, அஸ்ஸுன்னா அகாடமி, அடியக்கமங்கலம்

தொட்டில் அமைத்து அதில் குழந்தையைப் போட்டு ஆட்டுவது, அல்லது ஊஞ்சல் போன்று ஏற்படுத்தி அதில் பெரியவர்கள் உட்கார்ந்து கொள்வது போன்றவை மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்கள் அல்ல! ஈஸா (அலை) அவர்கள் குழந்தைப் பருவத்தில் தொட்டிலில் இருந்த போது பேசியதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்!

அல்குர்ஆன் 5:110

“ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை” (என்றனர்)

அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! “தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

அல்குர்ஆன் 19:28, 29

இதிலிருந்து தொட்டில் என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆட்டம் என்பது ஷைத்தானின் செயல் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

? பெண்கள் தலையை மறைப்பது கட்டயாமா? கடமையா?
இஸ்மாயீல் ஷெரீப், பெரம்பூர், சென்னை

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அல்குர்ஆன் 24:31

இந்த வசனத்தில் முக்காடுகள் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் “கிமார்’ என்ற சொல் அரபு மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இதில் இடம் பெறும் “குமுரிஹின்ன” என்பது “கிமார்’ என்பதன் பன்மையாகும். இது பெண்கள் அணியும் தலைத் துணி – அதாவது முக்காட்டைக் குறிக்கும். பெண்களின் முக்காடு மட்டுமின்றி ஆண்கள் தலையின் மீது போட்டுக் கொள்ளும் தலைத் துணியையும் இந்த வார்த்தை குறிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலுறைகள் மீதும் தலை முக்காட்டின் மீதும் மஸஹ் செய்தனர்.

அறிவிப்பவர்: பிலால் (ரலி)

நூல்: முஸ்லிம் 413

இந்த ஹதீஸிலும் தலையை மறைக்கும் துணிக்கு “கிமார்’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமது முக்காடுகளை மார்பின் மீது போட்டுக் கொள்ளட்டும் என்று அல்லாஹ் கட்டளையாகக் கூறுவதால், இந்த வசனத்தில் கூறப்படும் தரப்பினர் தவிர மற்ற அந்நிய ஆண்கள் முன்னிலையில் பெண்கள் கண்டிப்பாகத் தலையை மறைக்க வேண்டும்.

? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா?
எம். ஷபீர், திருவனந்தபுரம்

இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ளக் கூடாது.

இரவு பத்து மணிக்கு தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அந்த நேரத்தில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

நண்பகலில் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதையும் ஏற்க முடியாது. ஏனெனில் நண்பகலில் தலைப் பிறையைப் பார்க்க முடியாது.

மாலை நேரத்தில் கூட கிழக்கில் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் கண்ணால் பார்க்கும் வகையில் தலைப்பிறை தோன்றுவது மேற்குப் பகுதியில்தான்.

பிறை 25ல் தலைப் பிறையைப் பார்த்ததாக ஒருவர் கூறினாலும் அதை ஏற்க முடியாது. ஏனெனில் அது தலைப் பிறை பார்ப்பதற்குரிய நாள் அல்ல.

இது போன்று தான், சாதாரணக் கண்களுக்குப் பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் உறுதியாகக் கூறும் ஒரு நாளில் பிறை பார்த்ததாக நம்பத் தகுந்த சாட்சியங்கள் கூறினாலும் அதை ஏற்க வேண்டியதில்லை.

வேண்டுமென்று பொய் கூறாத சாட்சிகளாக இருந்தாலும் கண்கள் தவறு செய்வதுண்டு. சிறிய மேகத் துண்டு கூட பிறையாகத் தோற்றமளிக்க வாய்ப்பு உள்ளது.

நாம் வானத்தில் ஓரிடத்தை உற்று நோக்கும் போது அந்த இடத்தில் ஒரு நட்சத்திரம் இருப்பது போல் தெரியும் உடனே மறைந்து விடும். ஆனால் உண்மையில் அந்த இடத்தில் நட்சத்திரம் எதுவும் இருக்காது. இந்தத் தவறு பிறை விஷயத்திலும் நடக்க வாய்ப்புள்ளது.

ஒருவரை விஷம் வைத்துக் கொடுத்துக் கொன்றதாக நம்பகமானவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையில் விஷம் கொடுக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சாட்சிகள் கூறியதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

இது போல் பிறை பார்க்கச் சாத்தியமற்ற நாளில் பிறை பார்த்ததாகக் கூறுவதை ஏற்கக் கூடாது. காரணம், பிறை தென்படாது என்று அறிவியல் உலகம் கூறுவது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருப்பதால் அதை மறுக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம் எழலாம். பிறை தோன்றி விட்டது என்று அறிவியல் உலகம் கூறினாலும் புறக் கண்ணால் பார்க்காமல் நோன்பைத் தீர்மானிக்கக் கூடாது என்று சொல்லும் நாம், பிறை தோன்றாது என்று அறிவியல் கூறுவதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? என்பதே அந்தச் சந்தேகம்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவுக்கு வானியல் வளர்ந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் சில புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப் பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்பது தான் நமது வாதம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்களால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்து விட்டனர்.

வானியல் கணிப்பின் படி எங்கே எப்போது பார்க்க முடியும் என்று கூறுகிறார்களோ அதை நம்பி அங்கே அப்போது பார்க்க முயற்சிக்கலாமே தவிர பார்க்காமல் தலைப் பிறை என்ற தீர்மானத்திற்கு வரக் கூடாது.

அதே சமயம், குறிப்பிட்ட நாளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று அறிவியல் உலகம் கூறும் போது அதை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

அல்குர்ஆன் 55:5

இந்த வசனத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் சந்திரன் தோன்றாது என்ற கணக்கிற்கு மாற்றமாக நம்பத் தகுந்த சாட்சிகள் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

————————————————————————————————————————————————

தொடர்: 9

முதஷாபிஹாத்

சில ஐயங்களும் விளக்கங்களும்

முதஷாபிஹ் எவை என்பது பற்றிய விளக்கத்தைத் தக்க சான்றுகளுடன் சமர்ப்பிப்பதற்கு முன் இதுபற்றிச் செய்யப்படும் தவறான பிரச்சாரங்கள் சிலவற்றை அடையாளம் காட்டுவது அவசியமாகும்.

தவறான பிரச்சாரம் – 1

இதுவரை யாருமே கூறாத – கூறத் துணியாத – எந்தத் தப்ஸீர்களிலும் கூறப்படாத ஒரு கருத்தை நாம் சொல்லி விட்டோமாம்! அதனால் இந்த விளக்கம் தவறாம்! இப்படிச் சிலர் புறப்பட்டிருக்கிறார்கள்.

இதில் இரண்டு விதமான தவறுகளை இவர்கள் செய்கிறார்கள்.

இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் குர்ஆனும், நபிவழியும் மட்டுமே என்பதை இவர்கள் மறுக்கின்றனர். யாருமே கூறாததாக இருந்தாலும் எந்தத் தப்ஸீரிலும் காணப்படாத கருத்தாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸ் அதைக் கூறுமானால் நாமும் அதைக் கூறுவோம். அதனால் ஏற்படும் உலகத்து விளைவுகளைப் பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை.

நாம் இதுவரை எடுத்து வைத்த வாதங்கள் குர்ஆனின் எந்த வசனத்துடன் முரண்படுகின்றது? எந்த ஹதீசுடன் மோதுகின்றது? என்பதைத் தான் இவர்கள் கூற வேண்டுமே தவிர, “அந்தத் தப்ஸீரில் இல்லை, இந்தத் தப்ஸீரில் இல்லை’ என்று தக்லீது செய்வது முறையல்ல என்று கூறிக் கொள்கிறோம்.

அடுத்து, முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்கள் விளங்குவார்கள் என்று நாம் கூறியது யாருமே கூறாதது என்பது மாபெரும் அவதூறும் வீண்பழியுமாகும். இந்தக் குற்றச்சாட்டில் அவர்கள் வேண்டுமேன்றே அவதூறு சொல்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களும் இதையே கூறியுள்ளார்கள் என்பதைத் தகுந்த சான்றுகளுடன் முன்பே எழுதியுள்ளோம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தலை சிறந்த மாணவர் முஜாஹித் அவர்களும் இவ்வாறே கூறுகின்றார். (புகாரி)

குர்ஆன், ஹதீஸ் இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டும்; தனிமனித வழிபாடு ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்களில் முதல் இடத்தை வகிக்கின்ற அறிஞர் இப்னு குதைபா (ஹிஜிரி 126) அவர்கள், “முதஷாபிஹ் வசனங்களை அல்லாஹ்வும் கல்வியில் சிறந்தவர்களும் விளங்க முடியும்” என்பதற்குத் தனி நூலே எழுதி அடுக்கடுக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்கின்றார்கள்.

முதஷாபிஹ் வசனங்களைத் தங்களின் தவறான கொள்கைக்குச் சான்றாக எடுத்து வைத்து வழிகெடுத்துக் கொண்டிருந்த ஜஹ்மிய்யா, கதிரிய்யா ஆகிய பிரிவினருக்கு மறுப்பாக, “ஜஹ்மிய்யாக்களுக்கும் வழிகேடர்களுக்கும் மறுப்பு” என்று நூல் எழுதிய இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள், ஜஹ்மிய்யாக்கள் தங்கள் கொள்கைக்குச் சான்றாக எடுத்து வைத்த வசனங்கள் ஒவ்வொன்றையும் விமர்சிக்கும் போது, “இது முதஷாபிஹ் வசனம்’ என்று குறிப்பிட்டு விட்டு, அதன் சரியான விளக்கம் எது எனவும் தகுந்த சான்றுகளுடன் சமர்ப்பிக்கின்றார்கள்.

முதஷாபிஹ் வசனங்களுக்கு ஜஹ்மிய்யாக்கள் தந்த விளக்கம் தவறானது என்று குறிப்பிட்டு விட்டு, சரியான விளக்கத்தையும் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் தருவதிலிருந்து, முதஷாபிஹ் வசனங்களின் பொருளை அறிஞர்கள் விளங்க முடியும் என்று தெளிவுபடுத்துகின்றார்கள்.

குர்ஆன், ஹதீஸ் இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கைக்காகப் பிற்காலத்தில் மிகவும் தீவிரமாகப் போராடிய ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் முதஷாபிஹ் வசனங்களைக் கல்வியில் சிறந்தவர்களும் விளங்க முடியும் என்று கூறி விட்டு எண்ணற்ற சான்றுகளைச் சமர்ப்பிக்கின்றார்கள்.

இதற்கு எதிரான கருத்துக் கொண்டவர்களிலும் அறிஞர் பெருமக்கள் பலர் இருப்பது உண்மையே!

இரண்டு தரப்பினரும் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் எடை போட்டு, அதில் எது குர்ஆன், ஹதீஸ் இரண்டுக்கும் ஒத்ததாக உள்ளதோ அதையே ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சனையை நாம் அணுகுகின்றோம்.

எவருமே கூறாததை நாம் கூறி விட்டோம் என்பது அவதூறாகும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

எவருமே கூறாததாக இருந்தாலும், கூறப்படுவது குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்குப் பொருத்தமாக உள்ளதா? என்பது தான் உண்மை முஸ்லிம்களின் கவனத்தில் வர வேண்டும்.

தவறான பிரச்சாரம் – 2

கல்வியில் சிறந்தவர்களும் முதஷாபிஹ் வசனங்களை விளங்கலாம், விளங்க முடியும் என்று நாம் எழுதி வருகிறோம். கல்வியில் சிறந்தவர்கள் என்றால் யார்? என்ற விளக்கம் பின்னர் வரும் என்று முன்பே தெரிவித்துள்ளோம். நாம் என்ன எழுதுகிறோம் என்பதைக் கடைசி வரை பொறுமையாகக் கவனிக்க இயலாதவர்கள், “மவ்லவிகள் தான் முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியும்” என்று நாம் கூறுவதாகவும், “அரபி மொழி அறிந்தவர்கள் தான் விளங்க முடியும்” என்று நாம் கூறுவதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர்.

கல்வியில் சிறந்தவர்கள் என்று நாம் கூறுவது மவ்லவிகளையோ, அரபி மொழி அறிந்தவர்களையோ அல்ல! அது பற்றிய விளக்கம் பின்னர் வரும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், “குர்ஆனை யாராலும் விளங்க முடியும்’ என்று அடையாளம் காட்ட முன்வந்த போது, “முஹ்கமான வசனங்களை விளங்க அரபி இலக்க அறிவு தேவையில்லை, முதஷாபிஹ் வசனங்களை விளங்க அரபி மொழியின் இலக்கண அறிவு தேவை’ என்று ஆரம்பத்தில் கூறியவர்கள் தான் இவ்வாறு விமர்சனம் செய்கிறார்கள்.

அரபு மொழி தெரிந்தவர்கள் தான் முதஷாபிஹ் வசனங்களை விளங்க முடியும் என்று கூறுபவர்கள் வழிகேடர்கள் என்று கூறுகின்றனர்.

இந்தத் தொடரின் எந்த ஒரு இடத்திலும், “கல்வியில் சிறந்தவர்கள் என்றால் அரபு மொழி அறிவு உடையவர்கள்” என்று எழுதவே இல்லை. அதன் விளக்கத்தை இனிமேல் எழுதுவோம் என்றே தெரிவித்து வருகிறோம்.

முதஷாபிஹ் வசனங்கள் மனிதர்களில் எவருக்கும் விளங்காது என்ற கருத்துடையவர்களின் வாதங்களை வரிக்கு வரி நாம் விமர்சனம் செய்திருப்பதை ஒப்புக் கொள்ளும் சில சகோதரர்கள், “அவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான ஒரு வாதத்திற்கு நாம் பதில் கூறவில்லையே!” என்று சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே அதற்கும் நாம் விளக்கம் அளித்து விட்டு முதஷாபிஹ் என்றால் எவை என்ற விளக்கத்திற்குச் செல்வோம்.

“மனிதர்களில் எவருக்குமே விளங்காதவற்றை இறைவன் ஏன் அருளினான் என்றால், ஈமான் கொள்கிறார்களா? இல்லையா? என்று சோதிப்பதற்காகத் தான் முதஷாபிஹ் வசனங்களை அருளினான்” என்று முதல் சாரார் கூறியதற்கு நாம் பதில் அளிக்கவில்லை என்பதே அந்தக் குற்றச்சாட்டு.

மனிதர்கள் அனைவரும் இயற்கையாகவே முஃமின்களாக இருந்து விட்டால், இயற்கையாகவே குர்ஆனை நம்பியவர்களாக இருந்து விட்டால் அவர்களை எப்படியும் சோதிக்கலாம்; அதில் அர்த்தமிருக்கும்.

மனிதர்கள் இறைவனையும் நம்பாது, அவனது தூதரையும் நம்பாது வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர்களை நம்பச் செய்யும் பெரிய ஆதாரமாக இறைவன் அருளியது தான் திருக்குர்ஆன். அந்த ஆதாரமே விளங்காவிட்டால் அவர்கள் எப்படி இறைவனை நம்புவார்கள்?

அவர்களுக்கு என்ன சொல்லப்படுகின்றது என்று விளங்காத போது அவர்களை எப்படிச் சோதிக்க முடியும்?

இறைவனையும் தூதரையும் நம்ப வைக்கும் ஆதாரத்தையே நம்ப முடியாதவாறு இறக்கி வைத்து அவர்களைச் சோதிக்க வேண்டுமா? இதற்குப் பேசாமல் குர்ஆனை இறக்கி வைக்காமலேயே, “அவர்கள் ஈமான் கொள்கிறார்களா? இல்லையா?’ என்று சோதிக்கலாமே!

ஆதாரங்களைத் தெளிவாக எடுத்து வைத்து விட்டு, இறைவனைப் பற்றிப் புரிய வைத்து விட்டு, அதன் பின் இறைவன் மனிதனுக்குப் பல சோதனைகளை வழங்கலாம். இந்தச் சோதனைகளுக்குப் பின்னரும் அவன் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றானா? இல்லையா? என்று சோதிக்கலாம். அதில் நியாயமிருக்கும். இறைவனைப் பற்றிப் புரிய வைப்பதற்காக எடுத்து வைக்கப்படும் ஆதாரமே சோதனையாக இருந்தால் ஒருவன் எப்படி ஈமான் கொள்வான்? இது ஏற்க முடியாத வாதமாகும்.

இனி முதஷாபிஹ் என்றால் என்ன? என்பதன் விளக்கத்தைக் காண்போம். இத்தொடரில் அது தான் மிகவும் முக்கியமானது என்பதால் அவற்றை விரிவாகவும் கவனமாகவும் அலசுவோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

அவரும் அவளை நாடினார்

கே.எம். அப்துந் நாசிர், கடையநல்லூர்

சூரத்துல் யூசுஃப் என்ற 12வது அத்தியாயத்தின் 24வது வசனத்திற்குப் பொருள் செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. யூசுப் (அலை) அவர்கள் ஒரு மன்னருடைய வீட்டில் தங்கியிருந்தார்கள். மன்னருடைய மனைவி யூசுஃப் நபியவர்களின் அழகில் மயங்கி அவரை தவறான பாதைக்கு வற்புறுத்துகின்றார். இதைப் பற்றி இறைவன் 24வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்திற்கு ஒரு சாரார் பின்வருமாறு பொருள் செய்கின்றனர்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திரா விட்டால் (தவறியிருப்பார்) இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

இம்மொழிபெயர்ப்பின் படி யூசுஃப் (அலை) அவர்கள் அப்பெண்ணை நாடி விட்டார்கள். அல்லாஹ்வின் அத்தாட்சியைப் பார்த்த காரணத்தினால் அவர்கள் அப்பெண்ணின் ஆசைக்கு இணங்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மற்றொரு சாரார் இவ்வசனத்திற்குப் பின்வருமாறு பொருள் செய்கின்றனர்.

அவள் அவரை நாடினாள். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திரா விட்டால் அவரும் அவளை நாடியிருப்பார். இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக் கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்.

அல்குர்ஆன் 12:24

இம்மொழிபெயர்ப்பின் படி, அல்லாஹ்வின் சான்றைப் பார்த்த காரணத்தினால் யூசுஃப் நபியின் உள்ளத்தில் அப்பெண்ணைப் பற்றிய நாட்டம் அறவே ஏற்படவில்லை என்ற கருத்து வரும்.

இவ்விரண்டு மொழிபெயர்ப்புகளில் எது சரி என்ற ஆய்விற்கு வருவோம்.

முதல் மொழிபெயர்ப்பு தான் அரபி மொழி இலக்கணத்தின் அடிப்படையிலும், மார்க்க ஆதாரங்களின் அடிப்படையிலும் சரியானதாகும்.

இப்னு கஸீர், அர்ராஸீ, ஸமஹ்சரீ, அபூ ஜஃபர், அபூ இஸ்ஹாக், பகவீ போன்ற அறிஞர்கள், “இரண்டாவது வகையான பொருள் கொள்வது அரபு மொழி மரபுக்கும், இலக்கணத்துக்கும் எதிரானது’ என்று கூறுகின்றனர். அரபு மொழி மரபுப்படி முதல் வகையான பொருள் தான் சரியானது. திருக்குர்ஆன் தெளிவான அரபு மொழியில் அருளப்பட்டிருப்பதால் வேறு காரணங்கள் கூறி அம்மொழி மரபுக்கு எதிராகப் பொருள் கொள்ள முடியாது.

மேலும் இப்னு அப்பாஸ் (ரலி), இமாம் ஷாஃபி, இப்னு தைமிய்யா, அய்னீ, முல்லா அலீ காரி, இப்னு உஸைமீன், முஹம்மது ஸைய்யித் தன்தாவீ, குஸைரி, அபூ நஸ்ர், இப்னுல் அன்பாரி, அன்னுஹாஸ், மாவிர்தீ, முஜாஹித் போன்ற பலர் முதலாவது கருத்தையே கொண்டுள்ளனர். யூசுஃப் (அலை) அவர்கள் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் செய்தி நபிமார்களின் தன்மைக்கு முற்றிலும் எதிரானது  என்றாலும் முதலாவது அர்த்தத்தையே அவர்கள் கொண்டிருந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நாட்டத்தின் இரு வகைகள்

யூசுப் (அலை) அவர்களின் உள்ளம் அப்பெண்ணை நாடியது என்று பொருள் செய்வது ஒரு நபியின் நபித்துவத்திற்கு எதிரானது என்று சில சகோதரர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகவே அரபி மொழி இலக்கணத்திற்கு எதிராக இருந்தாலும் இரண்டாவது வகையான பொருள் செய்வதை சரி காண்கின்றனர்.

முதலில் நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மன்னருடைய மனைவி யூசுப் நபியை நாடியதற்கும். யூசுப் (அலை) அவர்கள் அப்பெண்ணை நாடியதற்கும் மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. மன்னருடைய மனைவி யூசுப் நபியின் மீது தவறான நாட்டம் கொண்டது மட்டுமல்லாமல் தன்னுடைய தவறான நாட்டத்தை அடைவதற்காக செயலிலும் இறங்கினார். இதனை திருமறைக் குர்ஆன் மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!என்றாள்.

அல்குர்ஆன் 12:23

மன்னரின் மனைவி மோகம் கொண்டு யூசுப் நபியை விரட்டினார். இதைப் பற்றி திருமறை பின்வருமாறு விவரிக்கிறது.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள்.

அல்குர்ஆன் 12:25

இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார். நான் கட்டளையிடுவதை இவர் செய்யாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார். சிறுமையானவராக ஆவார்என்று அவள் கூறினாள்.

அல்குர்ஆன் 12:32

மன்னரின் மனைவி யூசுப் நபியின் மீது தவறான நாட்டம் கொண்டு அந்தக் கெட்ட எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயலிலும் இறங்கி விட்டார் என்பது மேற்கண்ட வசனங்கள் மூலம் தெளிவாகி விட்டது.

ஆனால் யூசுப் நபியின் நாட்டம் என்பது இவ்வாறானதல்ல. அப்பெண் யூசுப் நபியை தவறான வழியில் அடைவதற்கு ஆசைப்பட்டு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி, அவளாகவே முன்வரும் போது எந்த ஒரு மனிதனுக்கும் மனதில் சலனம் ஏற்படத்தான் செய்யும்.

கடுமையான வெய்யில் காலத்தில் கடமையான நோன்பை நோற்ற ஒருவனுக்குத் தண்ணீரைப் பார்த்தால் அருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஏற்படத் தான் செய்யும். ஆனால் அதை அருந்தினால் தான் அவன் செய்தது பாவ காரியமாகக் கருதப்படும். இது போன்று தான் யூசுப் நபியின் உள்ளத்தில் உதித்த எண்ணம். யூசுப் நபி மட்டுமல்ல. ஆதம் (அலை) முதல் உலகத்தில் இறுதியாகத் தோன்றவிருக்கின்ற மனிதன் வரை இந்தச் சலனம் ஏற்படத் தான் செய்யும். இதை யாராவது மறுத்தால் அவர் இறைவன் ஏற்படுத்திய அடிப்படை விதியை மறுக்கிறார் என்று தான் பொருள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6243

மேற்கண்ட ஹதீஸில் மனிதன் என்று மொழி பெயர்த்த வார்த்தைக்கு அரபி மூலத்தில் இப்னு ஆதம் (ஆதமுடைய மகன்) என்ற வார்த்தை உள்ளது. இது ஆதி முதல் அந்தம் வரை உள்ள மனித சமுதாயத்தைக் குறிப்பதற்குரிய சொல்லாகும்.

நபிமார்களிடம் பெரும்பாவமாகக் கூறப்படும் விபச்சாரம் போன்ற பெரும் தவறுகள் ஒரு போதும் நிகழாது. உள்ளத்தில் சலனம் ஏற்படுவது போன்ற நிலைகளுக்கு அவர்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

மார்க்க அடிப்படையில் உள்ளத்தில் ஒரு தவறை நினைத்தால் அது குற்றமாகாது. மாறாக அந்தத் தவறைச் செய்தால் தான் அது பாவமாகக் கருதப்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன் படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்து விட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2528

இது நபியவர்களின் உம்மத்திற்கு மட்டுமல்ல. இதற்கு முந்தைய சமுதாயத்திற்கும் இது தான் மார்க்க அடிப்படையாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி விட்டாலே அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்கு பத்து நன்மைகளிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7501

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் யூசுப் நபி செய்தது அவர்களுக்கு நன்மையாகத் தான் எழுதப்பட்டது என்பதில் சந்தேகமேயில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவே யூசுப் நபியின் உள்ளத்தில் அந்தப் பெண்மீது நாட்டம் ஏற்பட்டது. மாறாக அப்பெண்ணைப் போன்று தவறைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த யூசுப் (அலை) எண்ணவில்லை என்பதைப் பின்வரும் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து “வா!என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்எனக் கூறினார்.

அல்குர்ஆன் 12:23

இவரை நான் தான் மயக்கப் பார்த்தேன். இவர் விலகிக் கொண்டார்.

அல்குர்ஆன் 12:32

இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்என்று அமைச்சரின் மனைவி கூறினார்.

அல்குர்ஆன் 12:51

என் இறைவா! இப்பெண்கள் அழைப்பதை விட சிறைச்சாலை எனக்கு மிக விருப்பமானது. இவர்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைக் காப்பாற்றா விட்டால் இவர்களை நோக்கிச் சாய்ந்து, அறிவீனனாக ஆகி விடுவேன்என்றார். இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அவர்களின் சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 12:33. 34

மேற்கண்ட வசனங்கள் யூசுப் நபியின் உள்ளத்தில் தான் நாட்டம் ஏற்பட்டதே தவிர அவர் அதனை வெளிப்படுத்தவோ செயல்படுத்தவோ இல்லை என்பதற்குச் சான்று பகர்கின்றன.

நபித்துவத்திற்கு எதிரானதா?

யூசுப் நபியின் உள்ளத்தில் அப்பெண்ணின் மீது நாட்டம் ஏற்பட்டது என்று கூறும் போது, அது நபித்துவத்திற்கு எதிரானது என்று கூறுவது தவறு என்பதை நாம் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையிலிருந்தே இதற்கு நாம் மற்றொரு சான்றையும் முன்வைக்கலாம்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, “ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்என்று கூறினார்கள். 

நூல்: முஸ்லிம் 2718

நபியவர்களின்  வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை இவ்வாறு நடந்துள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் தெளிவான சான்றாகும். சாதாரண நிலைகளில் கூட ஒரு அழகிய பெண்ணைப் பார்க்கும் போது மனிதனுக்கு இது போன்ற சலனங்கள் ஏற்படும் என்றால் அழகும், அந்தஸ்தும் உள்ள பெண், அனைத்து சூழ்நிலைகளும் வாய்ப்பாக இருக்கும் நிலையில் தானாக முன்வந்து யூசுப் (அலை) அவர்களை நிர்ப்பந்திக்கும் போது அவர்களது உள்ளத்தில் நாட்டம் ஏற்பட்டிருப்பது மனிதத் தன்மைக்கு எதிரானதல்ல. இதனால் நபித்துவத்திற்குப் பாதிப்பில்லை. இது போன்ற சலனம் கூட ஒரு நபிக்கு ஏற்படாது என்று வாதிப்பது தான் ஈமானுக்கு எதிரான நிலையாகும்.

உண்மையை உறுதிப்படுத்தும் சான்று

சிறையில் அடைக்கப்பட்ட யூசுஃப் நபியவர்களை தன்னிடம் அழைத்து வருமாறு தூதர்களுக்கு மன்னர் கட்டளையிடுகின்றார். இதைப் பற்றி திருமறை பின்வருமாறு பேசுகிறது.

மன்னர் “அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்!என்றார். (மன்னரின்) தூதுவர் அவரிடம் வந்தார். அதற்கு யூஸுஃப் “உமது எஜமானனிடம் சென்று “தமது கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் நிலை என்ன? என்று அவரிடம் கேள்! என் இறைவன் அப்பெண்களின் சூழ்ச்சியை அறிந்தவன்என்றார்.

யூஸுஃபை நீங்கள் மயக்க முயன்ற போது உங்களுக்கு நேர்ந்ததென்ன?” என்று (அரசர் பெண்களிடம்) விசாரித்தார். அதற்கு அவர்கள் “அல்லாஹ் தூயவன். அவரிடம் எந்த ஒழுக்கக்கேட்டையும் நாங்கள் அறியவில்லைஎன்றனர். “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்என்று அமைச்சரின் மனைவி கூறினார்.

 “(என் எஜமானராகிய) அவர் மறைவாக இருந்த போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும், துரோகமிழைப்போரின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிவதற்காக (இவ்வாறு விசாரணை கோரினேன்என்று யூஸுஃப் கூறினார்.)  “எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” (என்றும் கூறினார்).

அல் குர்ஆன் 12:50-53

மேலே கோடிடப்பட்ட வார்த்தைகள் யூசுஃப் நபி கூறியவையாகும்.

“எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது.

என்ற யூசுப் நபியின் வார்த்தைகள் அவருடைய உள்ளத்திலும் நாட்டம் ஏற்பட்டது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

யூசுஃப் நபியின் உள்ளத்தில் அறவே எந்த நாட்டமும் ஏற்படவில்லை என வாதிக்கும் அறிஞர்கள் இவை மன்னரின் மனைவியுடைய வார்த்தைகள் எனக் கூறுகின்றனர். இலக்கண அடிப்படையில் இருவரில் யாருடைய கூற்றாகவும் இதைக் கருதுவதற்கு இடமிருந்தாலும் வசனத்தின் கருத்து இது யூசுஃப் நபியின் கூற்று தான் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. மேற்கண்ட வசனத்தை அடைப்புக் குறிகளை நீக்கிப் படித்தால் பின்வருமாறு பொருள்தரும்

“இதுவாகிறது அவர் மறைவாக இருந்த போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும், துரோகமிழைப்போரின் சூழ்ச்சிக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான் என்பதையும் அவர் அறிவதற்காக

என்கின்ற இந்த வார்த்தைகளை நிச்சயமாக மன்னரின் மனைவி கூறியிருக்க முடியாது.

ஏனெனில் அவர் தன்னுடைய கணவருக்குத் தெளிவாகவே துரோகமிழைத்து விட்டார். மகனாகக் கருதி வளர்த்த யூசுப் நபியின் மீது தவறான முறையில் மோகம் கொண்டு வாயில்களையெல்லாம் அடைத்து, வெருண்டோடிய யூசுப் நபியின் சட்டையைப் பின்புறமாகப் பிடித்து இழுத்ததோடு மட்டுமல்லாமல், “யூசுப் என்னுடைய ஆசைக்கு இணங்கவில்லையென்றால் அவரைச் சிறுமைப்படுத்தி சிறையிலடைப்பேன்’ என்கின்ற அளவிற்கு சபதமெடுத்த ஒரு பெண் எவ்வாறு தன் கணவருக்குத் துரோகம் செய்யவில்லை என்று கூற முடியும்.

அப்பெண்ணுடைய கணவரும் அத்துரோகத்தை உண்மைப் படுத்தியிருக்கிறார். அப்பெண்ணும் துரோகத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனைப் பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்ட போது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியதுஎன்றார். “யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!” (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்).

அல்குர்ஆன் 12:28, 29

இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் அவரை மயக்க முயன்றேன். அவர் உண்மையாளர்என்று அமைச்சரின் மனைவி கூறினார்.

அல்குர்ஆன் 12:51

மேற்கண்ட வசனங்கள் மன்னரின் மனைவி, கணவருக்குத் துரோகமிழைத்தவர் தான் என்பதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.

மன்னரின் மனைவி தான் விபச்சாரம் செய்யவில்லையே? எனவே அவள் விபச்சாரம் செய்யாத காரணத்தை வைத்து மன்னருக்குத் துரோகமிழைக்கவில்லை என்று கூறினால் என்ன? என்று கேட்கலாம்.

இதுவும் தவறான புரிதலாகும். மன்னரின் மனைவி விபச்சாரத்திற்குத் தயாராகத் தான் இருந்தார். யூசுப் (அலை) அவர்களை இறைவன் தன் சான்றைக் காட்டித் தடுத்த காரணத்தினால் தான் மன்னரின் மனைவியால் தவறு செய்ய இயலவில்லை.

விபச்சாரத்திற்குரிய உலகத் தண்டனையிலிருந்து தான் மன்னரின் மனைவி தப்பிக்க முடியுமே தவிர அவர் தவ்பா செய்யாமல் இருந்திருந்தால் மறுமையில் இறைவன் நாடினால் அவரைத் தண்டிக்க இயலும்.

ஏனெனில் ஒரு தீமையை நினைத்து அதை நடைமுறைப்படுத்த செயலில் இறங்கிவிட்டால் வேறு சில காரணங்களால் நாடிய காரியம் நிறைவேறாவிட்டாலும் அது முழுமையான குற்றமாகவே கருதப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரண்டு முஸ்லிம்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக் கொண்டால் அதில்  கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் தம் சகாவைக் கொல்ல வேண்மென்று பேராசை கொண்டிருந்தார்என்று சொன்னார்கள்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 31

கொல்லப்பட்டவர் தன் சகாவைக் கொலை செய்ய நாடியிருந்தார். ஆனால் அவர் கொல்லப்பட்ட காரணத்தினால் அவரின் நாட்டம் நிறைவேறவில்லை. என்றாலும் தீமையை நாடி அதைச் செயலாற்ற அவர் களத்தில் இறங்கிய காரணத்தினால் அவர் அந்தத் தீமையைச் செய்தவராகவே கருதப்படுவார்.

அது போல் மன்னரின் மனைவி மனம் திருந்தி விபச்சாரம் செய்யாமலிருக்கவில்லை. மாறாக உள்ளத்தில் ஆசை கொண்டு அதை நடைமுறைப்படுத்த இறங்கிய பின்னர் பிற காரணங்களினால் தான் அதற்குத் தடையேற்பட்டுள்ளது. எனவே விபச்சாரம் நடக்காததால் அவர் மன்னருக்குத் துரோகமிழைக்கவில்லை எனக் கருதுவது தவறானதாகும். மேலும் மன்னரின் மனைவி அவருக்குத் துரோகமிழைத்தவர் தான் என்பதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கூறினார்கள்: ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா? (அது தான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன்) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்குக் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள்.

நூல்: அபூதாவூத் 1417

(மனைவியர்களாகிய) அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்பது, நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம் கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும்.

நூல்: திர்மிதி 1083

எனவே, “நான் அவருக்குத் துரோகம் செய்யவில்லை’ என்ற இந்த வார்த்தையை மன்னரின் மனைவி தான் கூறியிருப்பார் என்ற அடிப்படையில் பொருள் செய்தால் அது தவறு என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.

“நான் அவருக்குத் துரோகம் செய்யவில்லை’ என்பதையும் அதைத் தொடர்ந்து வரக் கூடிய வாசகங்களையும் யூசுப் (அலை) அவர்கள் தான் கூறியுள்ளார்கள். அவர்களுக்குத் தான் அவ்வார்த்தைகளைக் கூறுவதற்கு முழுமையான தகுதியிருக்கின்றது என்பதே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான கருத்தாகும்.

————————————————————————————————————————————————

ஹதீஸ் கலை ஆய்வு                           தொடர்: 13

இறை மறுப்பாளர்களுடன் போர் செய்ய வேண்டுமா?

மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைக் கூறுகின்றார்கள். அதற்கான விளக்கத்தையும், “எதிர்வாதங்களும் முறையான பதில்களும்’ என்ற தலைப்பின் கீழ் கண்டோம்.

மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு வேறு சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

ஆதாரம்: 1

இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இருக்கிறது என்ற மோசமான கருத்தை நிலை நாட்ட, பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை; முஹம்மது அல்லாஹ்வின் தூதர்என்று மனிதர்கள் உறுதியாக நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர. மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 25

இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அவர்களிடம் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே வாளால் இஸ்லாம் பரவியது என்று இஸ்லாமிய விரோதிகள் கூறும் கூற்று உண்மை தான் என்பது இவர்களின் வாதம்.

நமது விளக்கம்

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்கள் கூறுவது சரி என்பது போல் தெரியும். ஆனால் போர் புரிவதற்கு இஸ்லாம் வகுத்துள்ள விதிமுறைகளைக் கவனித்தால் இந்த ஹதீஸை இவ்வாறு விளங்கக் கூடாது என்ற முடிவிற்கே நியாயமானவர்கள் வருவார்கள். திருக்குர்ஆன் அழகான இந்த விதிமுறைகளைக் கூறுகிறது.

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 2:190

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.

அல்குர்ஆன் 9:13

சொந்த ஊரை விட்டு விரட்டியவர்களுடன் தான் போர்

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.

அல்குர்ஆன் 2:191

எங்கள் இறைவன் அல்லாஹ்வேஎன்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:40

போரிலிருந்து விலகிக்கொள்வோருடன் போரில்லை

(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:192

அநீதி இழைக்கப்படும் பலவீனர்களுக்காகவே போர்

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் 4:75

போரை முதலில் துவக்கக் கூடாது

போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். “எங்கள் இறைவன் அல்லாஹ்வேஎன்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:39

சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:61

மதத்தைப் பரப்பப் போரில்லை

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:256

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 9:6

“(ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்குஎன (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 109வது அத்தியாயம்

போர் செய்வதற்குக் குர்ஆன் மேற்கண்ட விதிமுறைகளைக் கூறுவதால் எதிர்த் தரப்பினர் சுட்டிக் காட்டிய ஹதீஸை குர்ஆனுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.

  1. ஹதீஸில் இடம்பெற்றுள்ள மக்கள் என்ற வார்த்தை எல்லோரையும் எடுத்துக் கொள்ளாது. மாறாக அநியாயமாகப் போர் செய்ய வருபவர்களை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
  2. மதத்தைப் பரப்புவதற்காகப் போரில்லை என்று குர்ஆன் கூறுவதால் இஸ்லாத்திற்குப் பிறரைக் கொண்டு வருவதற்காகப் போர் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காக அக்கிரமக்காரர்களுடன் போர் செய்யும் போது அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாக ஒத்துக் கொண்டால் இதற்கு மேல் அவர்களிடம் போரிடக் கூடாது. அக்கிரமத்தை ஒழிப்பது தான் போரின் நோக்கமே தவிர இஸ்லாத்திற்கு நிர்ப்பந்தமாக இழுத்து வருவது நோக்கமல்ல. முஸ்லிம்களோடு இணைந்து கொள்கிறேன் என்று அவன் கூறுவதன் மூலம் போரை நிறுத்திக் கொள்ள விரும்புகிறான்.

அக்கிரமக்காரர்களுடன் செய்யும் போர் பின்வரும் காரணங்களால் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

  1. அவர்கள் சாமாதானத்தை விரும்பினால் இதற்கு மேல் போர் செய்யக் கூடாது.
  2. ஜிஸ்யா வரி கொடுப்பதாகக் கூறினாலும் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  3. இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாகக் கூறினாலும் போர் செய்வது கூடாது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த மூன்று காரணங்களில் ஒன்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹதீஸின் இறுதியில் “இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்’ என்று இடம் பெற்றுள்ள இந்த வாசகம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. இது தான் இந்த ஹதீஸின் நோக்கம் என்பதை பின்வரும் சம்பவங்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து)கொண்டு, “அல்லாஹ்வுக்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வேண்டாம்) அவனைக் கொல்லாதே!என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது கையைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னான்!என்று கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்று விடுவாய்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிக்தாத் (ரலி)

நூல்: முஸ்லிம் 155

எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த “ஹுரக்காகூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்ட போது, அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்‘ (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம், “உஸாமா! அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்)என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் “அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்என்று மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் “(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)என்றுகூட ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)

நூல்: முஸ்லிம் 159

ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார், அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினேன். “அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?” என்று (கடிந்து) கேட்டார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா (ரலி)

நூல்: முஸ்லிம் 158

அக்கிரமத்திற்கு எதிராக மட்டும் தான் போர் இருக்க வேண்டும். அக்கிரமத்திற்கு எதிராக நடத்தப்படும் போரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி விட்டால் அவருடைய கூற்றைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் கொன்று விடக் கூடாது. மாறாக அவருடைய கூற்றை ஏற்று அவரைத் தாக்காமல் விட்டுவிட வேண்டும். இதைத் தான் எதிர் தரப்பினர் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது.

முஸ்லிம் அல்லாதவர்களின் மீது இஸ்லாத்தைத் திணிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஜிஸ்யா என்ற வரியை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் செல்வங்களுக்கு ஜகாத் வாங்கப்படுவதைப் போல் இவர்களிடம் இந்த வரி வாங்கப்படும். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் இந்த வரியை செலுத்திக் கொண்டு தங்கள் கொள்கையில் இருந்து கொள்ளலாம்.

இஸ்லாம் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் மார்க்கமாக இருந்திருந்தால் “இஸ்லாத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை; வராதவர்கள் கொல்லப்படுவார்கள்’ என்ற ஒரு சட்டத்தை மட்டுமே கூறியிருக்கும். நிர்ப்பந்தம் இல்லை என்பதால் தான் இதற்கான மாற்று வழியாக ஜிஸ்யாவை ஆக்கியுள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

சீக்கிரமாய் பலித்த சித்தீக்கின் வாக்கு

“இந்த இயக்கத்தை விட்டுப் பிரிந்தவர்கள் என்னென்ன நிலையில் ஆகி விட்டார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை விட்டுப் போனால் தற்குறியாய் ஆகிவிடுவோம்”

இது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் சித்தீக் என்பவர், சென்னை கிரீன் பேலஸ் என்ற ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பின் போது தெரிவித்த கருத்தாகும்.

எழுதிய மை காய்வதற்குள்ளாக… என்று சொல்வார்களே அதுபோல், இந்த வார்த்தைகள் வெளிவந்த சித்தீக்கின் வாயிலுள்ள உமிழ்நீர் காய்வதற்குள்ளாக அவரது வாக்குப் பலித்து விட்டது. இந்த இயக்கத்தை விட்டுப் பிரிந்து சென்ற அவர்களின் தற்குறித்தனம் நிகழ்ந்து விட்டது.

மண்ணடியில் அவரது அணியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அவரது தலைவர் பாக்கர் வெளிப்படுத்திய அறியாமையும், கொட்டிய உளறலும் இதோ:

இப்ராஹீம் நபியின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டாமா? (நவூதுபில்லாஹ்)

இதுதான் பாக்கர் கொட்டிய உளறலின் சாராம்சம்!

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.

அல்குர்ஆன் 60:4

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்மாணிக்கப்பட்டிருப்பதே இப்ராஹீம் நபியின் இந்த முன்மாதிரிக் கொள்கையில் தான்.

காமாலைக் கண்ணுக்குக் காணும் பொருளெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போன்று இப்ராஹீம் நபியின் இந்தப் பாதை பாக்கருக்குப் பிரிவினையாகத் தெரிகின்றது. காரணம், அவர் இப்போது பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை ஒன்றுபடுத்தப் போகின்றாராம்! எனவே ஒற்றுமை ஏற்படுத்தும் இவருக்கு இப்ராஹீம் நபியின் கொள்கை முழக்கம் ஒரு முட்டுக்கட்டையாக வந்து நிற்கின்றது.

அதை ஓய்ப்பதற்கு என்ன வழி? என்று மார்க்க ஆய்வில் கரை கண்ட இந்தத் திருவாளர் தனது மார்க்க அறிவை வெளிச்சம் போட்டு பளிச்சென்று காட்டியிருக்கிறார்.

“புறக்கணிப்பு என்ற இப்ராஹீம் நபியின் மார்க்கமெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது; அதைக் கிடப்பில் தூக்கிப் போட வேண்டும். அது மக்களைப் பிரிக்கின்றது. அதை அமுல்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தீக்குண்டத்தில் தீக்குளிக்க வேண்டும். மனைவியைக் கொண்டு போய் பாலைவனத்தில் விட வேண்டும். அதன் பின்னர் தான் இந்த வசனத்தைச் செயல்படுத்த வேண்டும்”

என்னே ஒரு அறிவு விளக்கம்! கேட்கும் போதே மயிர் கூச்செறிகின்றது.

தீக்குளிப்பு ஹஜ் சர்வீஸ்

புறக்கணிப்பு எப்படி இப்ராஹீம் நபியின் மார்க்கமோ அதுபோல் ஹஜ் செய்வதும் இப்ராஹீம் நபியின் மார்க்கம் தான்.

பாக்கரின் இந்த மார்க்க விளக்கத்தின்படி அவர் நடத்தும் ஹஜ் சர்வீஸை தீக்குளிப்பு சேவையாக மாற்றுவாரா?

சென்னை விமான நிலையத்திற்கு முன்னால் ஒரு தீக்குண்டத்தை ஏற்பாடு செய்து, அதில் இவரது ஹஜ் சர்வீஸில் செல்லும் அனைவரும் இஹ்ராம் உடையுடன் போய் தீக்குளிக்க வேண்டும். அதில் உயிருடன் கரையேறினால் அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும் என்று பாக்கர் சொல்வாரா? இதில் இவருக்கு ஒரு லாபமும் இருக்கிறது. தீக்குண்டத்தில் ஹாஜி இறந்து விட்டால் அவருக்குப் பணத்தைத் திரும்பத் தர வேண்டாமல்லவா?

“இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பைப் பின்பற்ற வேண்டுமென்றால் அவரைப் போல் தீக்குண்டத்தில் விழ வேண்டும்; அப்படி விழுந்தவர் தான் இப்ராஹீம் நபியின் புறக்கணிப்பைப் பின்பற்ற முடியும்’ என்ற அதிமேதாவித்தனமான மார்க்க விளக்கத்திற்குப் பதில் தான் இது!

இப்போது இந்த மேதாவி கேட்கின்ற கேள்விக்கு வருவோம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டாமா?

இந்தக் கேள்வியின் மூலம் நபி (ஸல்) அவர்களின் பாதை வேறு; இப்ராஹீம் (அலை) அவர்களின் பாதை வேறு என்று இந்த அறிவாளி, நபிமார்களின் ஒரே பாதையை இரு வேறு பாதைகளாக்கிக் காட்டுகிறார்.

இப்படி நபிமார்களுக்கிடையே பாரபட்சம் காட்டுவதற்காக நாம் தான் நவூதுபில்லாஹ் சொல்ல வேண்டும். ஆனால் அதையும் அவரே சொல்லிக் கொண்டார். இப்போது நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், அல்குர்ஆனின் அடிச்சுவடு கூட இந்த ஆசாமிக்குத் தெரியவில்லை என்பது தான்.

பழனிபாபா ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மக்களைப் பார்த்து, உனக்கு ஐந்து கலிமா தெரியுமா? என்று கேட்டு வந்தவர்களை அவமானப்படுத்துவார். பாக்கர் பாபா ஒவ்வொரு கூட்டத்திலும் அல்ஹம்து சூராவுக்கு அர்த்தம் தெரியுமா? என்று கேட்கிறார். அந்தோ பரிதாபம்! தோற்றுவாய்க்கு அர்த்தம் தெரிவது ஒருபுறமிருக்கட்டும்! இவருக்கு அரபியில் அதை ஒழுங்காக வாசிக்கவாவது தெரிகின்றதா? என்றால் இல்லை. இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம் என்று சொல்வதற்குப் பதிலாக முஸ்தகீன் என்று உளறுகின்றார். முஸ்தகீனுக்கு அர்த்தம் தெரியுமா? என்று கேட்கிறார். இப்போது இவர் சொல்கின்ற அந்த முஸ்தகீனுக்கு அல்ல! முஸ்தகீம் என்பதன் அர்த்தத்தைப் பார்ப்போம்.

எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக!

அல்குர்ஆன் 1:5

இது தான் அர்த்தம்! அல்லாஹ்விடம் நேர்வழியைக் கேட்கிறோம். அந்த நேர்வழி எது? என்பதையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

எனக்கு என் இறைவன் நேரான பாதையைக் காட்டி விட்டான். அது நேரான மார்க்கம். உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கம். அவர் இணை கற்பித்தவராக இருக்கவில்லைஎன்று கூறுவீராக!

அல்குர்ஆன் 6:161

இப்ராஹீம் நபியின் வழி தான் நேர்வழி என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான்.

இந்த வழியைப் பின்பற்றுமாறு தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு உத்தரவிடுகின்றான்.

“(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:123

இந்த வழியைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்பற்றினார்கள். இப்ராஹீம் நபியின் மார்க்கம் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மார்க்கம். இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாது.

இப்ராஹீம் நபியின் மார்க்கத்தில் பின்பற்றுவதற்கு விதிவிலக்கு ஒன்றே ஒன்று தான். அதையும் அல்லாஹ் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

உங்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)

அல்குர்ஆன் 60:4

இப்ராஹீம் நபி, தனி நபராக நின்று சிலைகளை உடைத்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின் அதைச் செய்தார்கள்.

இதைத் தவிர இப்ராஹீம் நபியின் அனைத்து வழிகளையும் முஹம்மது (ஸல்) அவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்.

முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றாரே! நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்து விட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எங்காவது கூறினார்களா? நபியவர்களால் பகைமை பாராட்டப்பட்ட அனைவரும் அவர்களது குடும்பத்தினர், குலத்தினர் தானே! சொந்தம், பந்தம், வீடு, வாசல் அத்தனையையும் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்களே! அது புறக்கணிப்பு இல்லையா?

ஆக, இப்ராஹீம் நபியின் மார்க்கம் தான் முஹம்மது (ஸல்) அவர்களின் மார்க்கமாகும். உண்மை இவ்வாறிருக்கையில், இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை விட்டு விட்டு, முஹம்மது நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் என்று கூறினால், முஹம்மது நபியின் மார்க்கம் என்று தனியாக உள்ளதா?

இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்கின்றது. அதன் மீது இந்த அறிவு சூன்யத்துக்கு ஏற்பட்ட வெறுப்பு இப்ராஹீம் நபியின் மீதும் திரும்புகின்றது. அதனால் இப்ராஹீம் நபி மீது வெறுப்பை அள்ளிக் கொட்டுகிறார்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்.

அல்குர்ஆன் 2:130

மடையன் தான் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிப்பான் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்தப் பைத்தியம் தான் இப்போது பாக்கரைத் தொட்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் நாம் எடுத்துக் காட்டிய சித்தீக்கின் வார்த்தையில் கூறுவதென்றால் தற்குறித்தனம் பிடித்திருக்கின்றது. அவரது வாயிலிருந்து வார்த்தைகள் வெளியே வந்து உமிழ்நீர் காய்வதற்குள்ளாகவே இப்படி தற்குறிகளாக ஆகிவிட்டனர். இதைத் தான், சீக்கிரம் பலித்த சித்தீக்கின் வார்த்தைகள் என்று குறிப்பிடுகின்றோம்.

ஏகத்துவத்தைக் கொள்கையாகக் கொண்ட ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட தற்குறிகளைத் தலைவர்களாக்கிக் கொள்வதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோமாக!