ஏகத்துவம் – ஏப்ரல் 2007

தலையங்கம்

நபி மீது பொய்! நரகமே பரிசு!

இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள்.

ஊர்வலத்தில் செல்வோர் “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்; அல்லாஹ் இஸ் சூப்பர் ஸ்டார்’ என்று கோஷங்கள் எழுப்புவர். அருகில் உள்ள பள்ளியில் பாங்கொலி எழுப்பப்படும். ஆனால் ஊர்வலத்தில் செல்வோர் தொழ மாட்டார்கள். காரணம் அவர்கள் இதை விடப் பெரிய பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனால் இந்த ஐங்காலத் தொழுகையெல்லாம் அவர்களுக்குக் கடமை இல்லை.

இவையெல்லாம் எதற்காக? என்று கேட்டால், “நாங்கள் நபி மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடு’ என்று இந்தக் காரியங்களைச் செய்வோர் கூறுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது அன்பு, பாசம் கொள்வது இறை நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 9:24

நமது பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது.

உயிரை விடவும் மேலானவர்

இதை விட ஒரு படி தாண்டி, நமது உயிரை விடவும் மேலாக நபியவர்களை நேசிக்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.

அல்குர்ஆன் 33:6

இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவனாக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 14

மேற்கண்ட இந்த வசனங்கள், ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு கொள்ளாதவர் ஒரு போதும் இறை விசுவாசியாக இருக்க முடியாது. ஆனால்       அன்பு செலுத்துவதற்கென்று ஒரு வரைமுறையை மார்க்கம் ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் அன்பின் வெளிப்பாடு அமைய வேண்டும். அந்த வரைமுறையை இப்போது பார்ப்போம்.

கடவுளாக்கக் கூடாது

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) “உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே’ என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வசனத்தில், நபி (ஸல்) அவர்களை மனிதர் என்ற நிலையிலிருந்து மாற்றி கடவுள் என்ற நிலைக்குக் கொண்டு சென்று விடக் கூடாது என்று எச்சரிக்கின்றான்.

இந்த வரையறையில் தான் நிற்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களும் தமது சமுதாயத்தை எச்சரிக்கின்றனர்.

“கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை (கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியான் தான். (என்னைப் புகழ்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடியார்’ என்றும் “அல்லாஹ்வின் தூதர்’ என்றும் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 3445, 6830

ஆனால் இவ்வளவு எச்சரித்த பிறகும் இன்றைய மவ்லிது கிதாபுகளில் நபி (ஸல்) அவர்களைக் கடவுளாக்கும் கவிதைகள் ஏராளமாக நிறைந்து காணப்படுகின்றன. நபியவர்களை மனிதர் என்ற நிலையிலிருந்து உயர்த்தி அப்பட்டமாகக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும் நாசக் கருத்துக்களை இந்த மவ்லிதுகள் தாங்கி நிற்கின்றன.

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையின் பால் உலக மக்களை அழைக்க வந்த நபி (ஸல்) அவர்களையே கடவுளாக்கும் கொடுமை இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அதனால் தான் இந்த மவ்லிதுகளை எதிர்த்து, கால் நூற்றாண்டாக தவ்ஹீது ஜமாஅத் ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் அந்த யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் துடைத்துத் தூர எறிகின்ற வரை அந்த யுத்தம் இன்ஷா அல்லாஹ் தொடரும்.

தூதர் (ஸல்) அவர்கள் உலகின் மற்ற தலைவர்களைப் போல் அல்ல! அவர்களை ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட நேசிப்பார். அவ்வாறு நேசிக்கும் போது புகழ முற்படுவார். அந்தப் புகழ்ச்சியில் வரம்பு மீறல் ஏற்படும். இந்தப் பாதக நிலைக்குப் போய் விடக் கூடாது என்பதற்காகத் தான் அதற்கு ஒரு வடிகாலாக நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை அல்லாஹ் கடமையாக்கி விட்டான்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இந்த முறையில் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவது தான் ஓர் உண்மையான முஸ்லிமின் வழிமுறையாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அன்பு செலுத்துவது உண்மையென்றால், அதன் வெளிப்பாடாக அவர்களை ஒவ்வொரு செயலிலும் பின்பற்றி நடக்க வேண்டும். தரீக்காக்கள், தர்ஹா வழிபாடுகள், மத்ஹபுகள், மவ்லிதுகள் போன்ற நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத வழிமுறைகளை விட்டொழித்து, திருக்குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் மட்டுமே பின்பற்ற முன்வர வேண்டும். அது தான் உண்மையான நேசத்தின் வெளிப்பாடாகும்.

அதை விட்டு விட்டு மார்க்கத்திற்கு முரணான மவ்லிதுகள், மீலாது விழாக்கள், ஊர்வலங்கள் போன்ற காரியங்களைச் செய்பவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது ஒரு போதும் அன்பு செலுத்தியவர்களாக மாட்டார்கள். மாறாக அவர்களைக் கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தி, ஷிர்க் எனும் மாபாதகச் செயலைச் செய்து, நிரந்தர நரகத்தைத் தண்டனையாகப் பெறுவார். அல்லாஹ் காப்பானாக!

ரபீயுல் அவ்வல் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலைகள் என்ற பெயரில் பொய் மாலைகளை பள்ளிவாசல்களிலும், பொது மேடைகளிலும் வண்டி வண்டியாக அவிழ்த்து விடுகின்றனர்.

தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் துணிந்து அவர்கள் மீது பொய்களை அள்ளி வீசுகின்றனர்.

“என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 108, 1291

இந்த எச்சரிக்கையை மார்க்கம் தெரியாத பாமரர்கள் புறக்கணித்தால் பரவாயில்லை. ஆனால் மார்க்கம் தெரிந்த ஆலிம்களே இந்த எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகின்றனர். நபியவர்கள் மீது பொய்களை அவிழ்த்து விடுகின்றனர். இத்தகையவர்களுக்கு நரகமே இறைவன் தரும் பரிசு என்று எச்சரிக்கிறோம்.

————————————————————————————————————————————-

மறு ஆய்வு: 2

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம்.

இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணம் கூறி இந்த நபிவழியை அவர்கள் மறுத்து வந்தனர்.

அது கருத்தில் கொள்ளத் தகுதியில்லாத வாதம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த வாதம் மக்களிடம் எடுபடாமல் போன பின், விரல் அசைத்தல் தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று கூறி புதுப்புது காரணங்களைக் கூறலானார்கள். அதற்கேற்ப சில ஆதாரங்களையும் முன் வைத்தனர்.

இது பரிசீலிப்பதற்குத் தகுதியுடைய வாதம் என்பதால் இவ்வாறு கூறுவோரின் அனைத்து வாதங்களையும் திரட்டி மறு ஆய்வு செய்தோம்.

அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் மறு ஆய்வு செய்தோம்.

ஆனால் இந்த நபிவழியைப் பலவீனப்படுத்துவதற்குக் கூறப்படும் வாதங்கள் தான் பலவீனமானவையாக உள்ளன என்பது நமது மறு ஆய்விலும் நிரூபணமானது.

எனவே அதுபற்றி முழு விபரத்தைக் காண்போம்.

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ்

“…நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன்என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறுகின்றார்கள்.

மேற்கண்ட கருத்தில் அமைந்த செய்தி

 1. நஸயீ 879
 2. தாரமீ 1323
 3. அஹ்மத் 18115
 4. இப்னு ஹுஸைமா, பாகம்1; பக்கம் 354
 5. இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170
 6. தப்ரானீ கபீர், பாகம் 22; பக்கம் 35
 7. பைஹகீ பாகம் 1; பக்கம்310
 8. ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376
 9. அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62

ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நூல்களிலும் வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் வழியாகவே இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இதில் எந்த விமர்சனமும் இல்லை.

குலைப் பின் ஷிஹாப் பற்றிய விமர்சனம்

வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் கூறியதாக அறிவிப்பவர் குலைப் என்பவர் ஆவார். இவரது தந்தை ஷிஹாப் ஆவார்.

குலைப் என்பாரும் நபித்தோழர் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயினும் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையில் மூத்தவர்களில் ஒருவர் என்பதே சரியான கருத்தாகும்.

இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இவரைப் பற்றி வந்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தான் இவரைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.

இவர் நம்பகமானவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் சமீப காலத்தில் இவரைப் பற்றியும் சிலர் விமர்சனம் செய்துள்ளதால் அதையும் நமது மறு ஆய்வுக்கு உட்படுத்துகிறோம்.

இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் விமர்சனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பலவீனமானவர் என்று காரண காரியத்துடன் ஜகாத் ஆய்வு கட்டுரையில் நாம் விளக்கியிருந்தோம். அந்த விளக்கம் இது தான்:

அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.

இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.

எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று தெரியாதவராகவும் இருக்கலாம்.

இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, “நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்” என்று கூறுவார். “இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்’ என்பதே இதன் பொருளாகும்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை

இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

இதற்கு மறுப்பு எழுதப் புகுந்த அல்ஜன்னத் என்ற மாத இதழில், “விரலசைத்தல் பற்றிய ஹதீஸில் இடம் பெறும் குலைப் என்பார் பற்றியும் இப்னு ஹிப்பான், தஹபீ ஆகியோர் மட்டும் தானே நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்; அதைச் சரியென ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதே தரத்தில் அமைந்த அம்ரு பின் ஹாரிஸ் மட்டும் யாரெனத் தெரியாதவர் என்று விமர்சிப்பது என்ன நியாயம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

குலைப் என்பார் பற்றி இப்னு ஹிப்பான், தஹபி ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியிருந்தால் யாரென்று தெரியாதவர் என்ற முடிவைத் தான் இவர் விஷயத்திலும் எடுப்போம். ஆனால் குலைப் என்பாரைப் பற்றி வேறு பல அறிஞர்களும் நற்சான்று அளித்துள்ளதால் அவரது நம்பகத் தன்மை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸிமின் தந்தையும், ஷிஹாபின் மகனுமாகிய குலைப் என்பார் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்; நம்பகமானவர்.

நூல்: மஃரிபதுஸ் ஸிகாத் 2/228

அபூசுர்ஆ, இப்னு ஸஅத், இப்னு ஹிப்பான் ஆகியோர் இவரைப் பற்றி நம்பகமான தாபியீ என்று கூறியுள்ளனர். இவர் கூஃபா நகரவாசிகளில் மிகச் சிறந்தவர் என்று அபூதாவூத் கூறியுள்ளார்.

நூல்: அல் இஸாபா, பாகம்: 5, பக்கம்: 668

இவர் உண்மையாளர். இவரை நபித்தோழர் என்று கூறியவர்கள் தவறிழைத்து விட்டனர்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 462

இவர் நம்பகமானவராக இருந்தார். அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரது ஹதீஸ்களை அழகியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவரது அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

நூல்: தபகாத் இப்னு ஸஅத், பாகம்: 6, பக்கம்: 123

குலைப் என்பார் பற்றி எந்த அறிஞரும் குறை கூறவில்லை என்பதாலும், அவரது நம்பகத் தன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாலும் இவரைக் காரணம் காட்டி விரலசைத்தல் பற்றிய ஹதீஸைப் பலவீனமாக்குவது முற்றிலும் தவறாகும்.

ஆஸிம் பின் குலைப்

விரலசைத்தல் தொடர்பான மேற்கண்ட ஹதீஸை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாக குலைப் அறிவிக்கிறார் என்பதைக் கண்டோம். குலைப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் குலைபுடைய மகன் ஆஸிம் ஆவார். (இவர் ஜகாத் விவாதத்தின் போது விமர்சனம் செய்யப்பட்ட ஆஸிம் அல்ல. அவர் லமுரா என்பரின் மகன். இவர் குலைப் என்பவரின் மகன் ஆவார்.)

குலைப் என்பவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்கள் தவ்ஹீத் போர்வையைப் போர்த்தியவர்கள் தான். அது போலவே ஆஸிம் என்பவரைப் பற்றி விமர்சனம் செய்பவர்களும் தவ்ஹீத் போர்வையைப் போர்த்தியவர்கள் தான்.

விரலசைப்பதற்கு மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பைக் கண்டு விட்டு இந்த நபிமொழியை விட்டு விடுவதற்காகப் பல்வேறு காரணங்களைத் தேடி அலைந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத் தான் ஆஸிம் பின் குலைபைப் பற்றி விமர்சனம் செய்து இந்த ஹதீஸைப் பலவீனமானது என்று நிறுவ ஆரம்பித்தனர்.

ஆஸிம் பின் குலைப் பற்றி விமர்சிக்கும் நூல்களில் அவரைப் பற்றிக் கூறும் போது, “இவர் முர்ஜியாக் கொள்கையுடையவராக இருந்தார்’ என்று கூறப்படுகின்றது.

இதைக் காரணம் காட்டி இவர் பலவீனமானவர் என்று கூறுகின்றனர்.

ஒரு முஃமின் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அவர் நரகம் செல்ல மாட்டார் என்பது முர்ஜியா கொள்கையாகும்.

இந்தக் கொள்கை தவறானது என்பதில் சந்தேகமில்லை. பாவம் செய்தவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் செய்யலாம்; தண்டிக்கவும் செய்யலாம் என்பதே சரியான கொள்கையாகும்.

இது போன்ற தவறான கொள்கை உடையவர்களின் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்தில் தான் ஆரம்பத்தில் நாமும் இருந்தோம்.

ஆனால் ஹதீஸ் கலையை ஆய்வு செய்து பார்த்தால், ஒருவர் இது போன்ற தவறான கொள்கையுடையவராக இருப்பதால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் பலவீனமடைவதில்லை. தெளிவான இறை மறுப்பை அடிப்படையாகக் கொண்ட கொள்கையுடையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன. முர்ஜியா கொள்கை என்பது தெளிவான இறை மறுப்பு என்று சொல்ல முடியாது.

தவறான கொள்கையுடையவர்கள் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் பொய் சொல்ல அஞ்சுவதைக் காண்கிறோம். எனவே தான் ஒருவரது நாணயம், நேர்மை, நினைவாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை எடை போட வேண்டுமே தவிர அவர் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அவரது நாணயத்தை எடை போடக் கூடாது. எனவே ஹதீஸ் கலையில் இந்தக் கொள்கையுடையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படுவதில்லை.

புகாரியில் முர்ஜியாக்கள்

முர்ஜியாக்கள் என்று கண்டறியப்பட்ட ஏராளமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இதுவே காரணம்.

 1. அய்யூப் பின் ஆயித் – இவர் முர்ஜியா கொள்கையுடையவர். இவர் அறிவித்த ஹதீஸ் புகாரி 4346ல் பதிவாகியுள்ளது.
 2. பிஷ்ர் பின் முஹம்மத் அஸ்ஸக்தியானி – இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்.

புகாரியில் 6, 839, 1206, 1242, 1418, 2141, 2548, 2571, 2830, 3796, 3330, 3454, 3485, 4463, 5646,5714, 5987, 6064, 6609, 6618 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்கள் இவர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

 1. தர் பின் அப்துல்லாஹ் – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 338, 339, 340, 342, 343, 3218, 4731, 7455 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 1. உமர் பின் தர் – இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 3218, 4731, 6246, 6452, 7455 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 1. அம்ரு பின் முர்ரா – இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 717, 775, 1104, 1176, 1313, 1394, 1596, 3411, 3434, 3488, 3526, 3758, 3769, 3788, 3808, 4146, 4637, 4728, 4770, 4801, 4971, 4972, 4973, 5418, 5934, 5938, 6171, 6359, 7277 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 1. கைஸ் பின் முஸ்லிம் அல்ஜதலீ – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 45, 1559, 1565, 1724, 1795, 2005, 3942, 4346, 4407, 7221, 7268 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 1. முஹம்மத் பின் ஹாசிம் – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 218, 4520, 4801 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 1. மிஸ்அர் பின் கதாம் – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 201, 443, 769, 820, 1130, 1746, 2230, 2394, 2528, 2603, 3419, 3859, 4058, 4797, 5398, 5615, 5826, 6455, 6471, 6664, 7114, 7126, 7268, 7546 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முர்ஜியா கொள்கையுடையவர் என்ற காரணத்திற்காக எந்த அறிவிப்பாளரும் பலவீனராக ஆக மாட்டார் என்பதை விளக்குவதற்காக இந்த விபரங்களைத் தருகிறோம்.

ஆஸிம் பின் குலைப், முர்ஜியா கொள்கையுடையவர் என்ற காரணத்திற்காக பலவீனமானவர் என்ற வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட அறிவிப்பாளர்கள் அனைவரையும் அவ்வாறு கூற வேண்டும். புகாரியில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட ஹதீஸ்களையும் வேறு நூற்களில் இவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களையும் பலவீனமானவை என்று அறிவிக்க வேண்டும்.

அவர்களால் அவ்வாறு விமர்சிக்க முடியாது. எனவே ஆஸிம் பற்றிய இவர்களது விமர்சனம் ஏற்புடையது அல்ல என்பதில் சந்தேகமில்லை.

ஆஸிம் பற்றி மற்றொரு விமர்சனம்

தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்குச் செல்லும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு ஹதீஸில் மட்டும் பின்வருமாறு உள்ளது.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா?’ என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.

நூல்: திர்மிதி 238

ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை ஆஸிம் பின் குலைப் தான் அறிவிக்கிறார்.

அதன் காரணமாக இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறும் நீங்கள் விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸை மட்டும் ஏற்பது ஏன்? என்று மத்ஹப் உலமாக்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

அதை அப்படியே நம்பி, “அரபு மொழி அறிவு தேவையில்லை’ என்று பிரச்சாரம் செய்யும் மார்க்க அறிவில்லாத ஒருவரும் இவ்வாறு கூறி வருகின்றார்.

ஒரு தடவை தான் கையை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே! நம்மைப் போல் இன்னும் ஏராளமான அறிஞர்களும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனால் அதற்கு இவர்கள் கூறுகின்ற காரணம் இல்லை. “ஆஸிம் பின் குலைப் அறிவிக்கிறார்” என்ற காரணத்திற்காக அந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவின் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு ஏராளமான வழிகளில் அறிவிக்கப்படுவதற்கு முரணாக “ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள்’ என்ற, ஒரே ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் அமைந்துள்ளது.

 அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தான் இப்னு மஸ்ஊத் (ரலி) ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம்.

அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்பதற்கு ஆஸிம் பின் குலைபை நாம் காரணமாகக் காட்டவில்லை.

எனவே இந்த வாதமும் தவறான அடிப்படையின் மேல் எழுப்பப்பட்ட வாதமாகும்.

ஸாயிதா பற்றிய விமர்சனம்

ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத்தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை இலங்கையைச் சேர்ந்த சில மவ்லவிகள் செய்து வருகின்றனர்.

அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப் புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.

ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர் முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் இவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத் – அரிதானது – எனக் கூறப்படும்.

ஏனெனில் ஒருவரிடம் தவறு ஏற்படுவதை விட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக நால்வர் கூறியதை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்து விட வேண்டும்.

விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.

அதாவது நபிகள் நாயகம் தொழுத முறையை வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.

வாயில் பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார்.

குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார்.

ஆஸிம் கூறியதாக

       சுப்யான்

       காலித் பின் அப்துல்லாஹ்

       இப்னு இத்ரீஸ்

       ஸாயிதா

ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.

இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகிறார். மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.

காலித் பின் அப்துல்லாஹ், சுஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும் போது “இஷாரா (சைகை) செய்தார்கள்’ என்றே கூறுகிறார்கள்.

இப்னு இத்ரீஸ் அறிவிக்கும் போது “விரலை உயர்த்தினார்கள்’ என்று கூறுகிறார்.

ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்.

ஆஸிமுடைய நான்கு மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கி விடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.

ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளி விடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.

ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிவிப்பதற்கு நேர் முரணாக ஒரு சிலர் அறிவிப்பது தான் ஷாத் ஆகும்.

ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததை விட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது.

முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் நுனிப்புல் மேய்வதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

“15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.

“15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை’ என்று ஒருவர் மட்டும் கூறுகிறார்.

இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.

ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும்.

இது தான் முரண்பாடு! இவ்வாறு வரும் போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்க வேண்டும்.

“15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.

ஒருவர் மட்டும் “15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் சிக்கன் 65 சாப்பிட்டார்’ என்று கூறுகிறார்.

இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.

கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. சிக்கன் 65 சாப்பிட்டதை ஏற்கும் போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.

மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!

மூஸா இறந்து விட்டார் என்பதும், கடலில் மூழ்கி இறந்தார் என்பது முரண் அல்ல!

இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல!

அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும் போது “விரலை உயர்த்தினார்கள்’ என்று மட்டும் கூறுகிறார்.

ஸாயிதா கூறும் போது “விரலை உயர்த்தி அசைத்தார்கள்’ என்று கூறுகிறார். அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.

இது போல் சுஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும் போது “இஷாரா செய்தார்கள்’ என்று அறிவிக்கின்றனர்.

ஸாயிதா கூறும் போது “அசைத்தார்கள்’ என்கிறார்.

இவ்விரண்டும் முரண் அல்ல!

இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்.

அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது.

அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.

ஒருவரை எச்சரிக்கும் போது ஆட்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.

சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டி விரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவு இல்லாத இஷாரா ஆகும்.

எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவில்லை.

ஸாயிதா இதைத் தெளிவுபடுத்துகிறார்; முரண்படவில்லை.

மனிதன் வந்தான் என்று இவ்விருவரும் கூறுகிறார்கள்; உயரமான மனிதன் வந்தான் என்று ஸாயிதா கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால் இரண்டும் முரண் என்று யாருமே கூற மாட்டோம்.

மனிதன் என்பதில் உயரமானவரும் இருக்கலாம்; உயரம் குறைந்தவரும் இருக்கலாம். அதை மற்ற இருவர் தெளிவுபடுத்தவில்லை. உயரமான மனிதர் என்று ஒருவர் தெளிவாகக் கூறி விட்டார் என்று புரிந்து கொள்வதைப் போல் இதையும் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை ஷாத் என்று கூற மாட்டார்கள்.

இஷாரா என்பது அசைத்தல் என்பதற்கு முரணானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் பின்வரும் ஹதீஸை சான்றாகக் கொள்ளலாம்.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலால் அசைத்து இஷாரா செய்தார்கள்” என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.

இது அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பற்றிய ஹதீஸ் அல்ல! அதற்கு ஆதாரமாக இதை நாம் எடுத்துக் காட்டவில்லை.

அசைப்பதும், இஷாராவும் முரண் என்றால் முரண்பட்ட இரண்டை இணைத்துப் பேச முடியாது. அசைத்து இஷாரா செய்தார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் பயன்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டும் முரண்பட்டதல்ல என்று அறியலாம்.

“செத்து சாகவில்லை” என்று கூற முடியாது. “சாப்பிட்டு சாப்பிடவில்லை” என்று கூற முடியாது. “அசைத்து இஷாரா செய்தார்கள்” என்று கூற முடியும்.

எனவே இந்த நுணுக்கத்தை இவர்கள் அறியாததால் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.

ஒருவர் அறிவிப்பதை விட மேலதிகமாக அறிவிக்கும் போது என்ன நிலை? ஒருவர் அறிவிப்பதற்கு எதிராக அறிவிக்கும் போது என்ன நிலை? என்பதைக் கூறும் ஹதீஸ் விதிகளைக் காண்க!

முரணாக அறிவிக்கும் போது ஷாத் என்ற நிலை ஏற்படும். நம்பகமானவர் அல்லது உண்மையாளர் ஒருவர் ஒன்றை அறிவிக்க, அவரை விட உறுதியானவரோ, அல்லது அவரை விட அதிக எண்ணிக்கை உடையவர்களோ இரண்டையும் இணைக்க முடியாத அளவுக்கு முரண்பட்டு அறிவித்தால் அது தான் ஷாத் ஆகும்.

ஃபத்ஹுல் பாரி முன்னுரையில் இப்னு ஹஜர்

மனன சக்தி உடைய, நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர் (மற்ற அறிவிப்பாளரை விட) கூடுதலாக அறிவிப்பது ஏற்றுக் கொள்ளப்படும். ஷாத் மற்றும் நிராகரிக்கப்பட்ட (முன்கரான) அறிவிப்பாளர் கூடுதலாக அறிவிக்கும் போது அது நிராகரிக்கப்படும்.

நூல்: நவவீயின் முஸ்லிம் விரிவுரை, பாகம் 1; பக்கம் 58

எனவே அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் எந்த வகையிலும் பலவீனமாக்க முடியாத, வலுவான ஹதீஸ் என்பதே நமது மறு ஆய்விலும் உறுதியாகின்றது.

———————————————————————————————————————————————

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள்                  தொடர் – 3

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்

ஹெச். குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி.

நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ் அல்லாதவருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்குமோ!” என்று கருதி சாப்பிட மறுக்கிறோம். இதுவெல்லாம் எதற்காக? இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான்.

ஆனால் திருமணம் என்று வரும் போது மட்டும் இறைக் கட்டளையை மறுத்து, இணை வைக்கும் மாமன் மகளையும், மாமி மகளையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தான் ஏகத்துவமா? இதைத் தான் நாம் இந்த ஏகத்துவக் கொள்கையில் கற்றுக் கொண்டோமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று எத்தனையோ பெண்கள் இந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு, இதற்காகக் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்களுக்குத் தவ்ஹீது மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால் கூட அவர்களுக்கு எப்போதோ திருமணம் ஆகியிருக்கும்.

ஆனால் இன்று அந்தப் பெண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஏன்? தவ்ஹீது ஜமாஅத்தில் மாப்பிள்ளைகளுக்குப் பஞ்சமா? ஏராளமான இளைஞர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் மாமன் மகள், மச்சான் மகள் என்று இணை வைக்கும் பெண்களைத் தேடிச் சென்று திருமணம் முடித்துக் கொள்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நம்மிடம் கொள்கை உறவு உறுதியாகவில்லை; குருதி உறவுக்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். மார்க்கச் சொற்பொழிவுகளில் நபிமார்களின் வரலாறுகளையும், சத்திய ஸஹாபாக்களின் வரலாறுகளையும் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் இருந்த கொள்கை உறுதி இன்று நம்மிடம் உள்ளதா?

ஏகத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறுகளை எத்தனையோ சொற்பொழிவுகளில்  கேட்டிருப்போம். அந்த இப்ராஹீம் (அலை) அவர்களிடம் இருந்த கொள்கை உறுதி நம்மிடம் உள்ளதா?

உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டதுஎன்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

இறைவன் இந்த வசனத்தில்  இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தவர்களிடமும் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறுகின்றான். அது எந்த விஷயத்தில் தெரியுமா? “பிரார்த்தனை செய்வதற்கும், நேர்ச்சை செய்வதற்கும், உதவி தேடுவதற்கும் இன்னும் அனைத்து வணக்கங்களுக்கும் தகுதியானவன் ஏக நாயனான அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்று நீங்கள் சொல்கின்ற வரை உங்களுக்கும் எங்களுக்கும் பகைமையும் விரோதமும் இருந்து கொண்டே இருக்கும்; அது வரை உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது; நீ வேறு; நான் வேறு” என்று கூறி, தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்களே! அந்த விஷயத்தில் முன் மாதிரி  உள்ளது.

அன்று அவர்களிடம் இருந்த அந்தக் கொள்கை உறுதி இன்று நம்மிடம் உள்ளதா? இல்லை! அந்த உறுதி இருந்தால் அசத்தியக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களிடம் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் உறவை வலுப்படுத்துவோமா? ஏகத்துவ வாதிகளே சிந்தியுங்கள்!

நீங்கள் ஒரு முஷ்ரிக்கான பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்கள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவள் அந்தக் குழந்தையை, ஏக இறைவனை மட்டும் வணங்கக்கூடிய பிள்ளையாக வளர்த்தெடுப்பாளா? அல்லது தன்னைப் போலவே முஹ்யித்தீனையும், நாகூர் ஆண்டவரையும் (?) வணங்கக்கூடிய பிள்ளையாக அந்தக் குழந்தையை வளர்ப்பாளா? ஏனெனில் தந்தையை விட தாயிடத்தில் தான் குழந்தை அதிக நேரம் உள்ளது. அவள் அக்குழந்தைக்கு எந்தக் கொள்கையை ஊட்டி வளர்க்கிறாளோ அந்தக் கொள்கையில் தான் அது வளரும்.

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே! அவன் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே!என்று கண்ணதாசன் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் அவர் கவிதையாக எழுதினார்.

பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர்.  அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 15036, 15037

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளை இடப்பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

இந்த வசனத்தில் இறைவன் “உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து காத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான். ஆனால் நாமோ தெரிந்து கொண்டே நம் சந்ததிகளை நரகத்தில் கொண்டு சேர்க்கிறோம்.

வணங்கப்படுவதற்கும், பிரார்த்திக்கப்படுவதற்கும் தகுதியானவன் ஏகனாகிய அந்த அல்லாஹ் தான். இதற்கு மாற்றமாக நாம் நடந்தால் மறுமையில் நாம் நரகத்தில் தள்ளப்படுவோம் என்று நம்புகின்ற ஒருவன் அதற்கு நேர் மாறாக நடக்கக் கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்குமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இன்று எத்தனையோ பெண்கள் ஏகத்துவத்திற்காக தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரையும் பகைத்துக் கொண்டு இருக்கிறார்களே! இவர்களின் நிலை என்ன?

எங்கள் கல்லூரியில் படித்த ஒரு பெண், “வரதட்சணை வாங்கக் கூடிய இணை வைக்கும் ஒருவனை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; இணை வைக்காத ஏகத்துவ மாப்பிள்ளையைத் தான் மணமுடிப்பேன்’ என்று இது நாள் வரை காத்திருந்தாள். அவளுடைய குடும்பத்தாரும் தங்கள் பிள்ளைக்கு தவ்ஹீது மாப்பிள்ளை வரும் என்று காத்திருந்தார்கள். தங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் தவ்ஹீது மாப்பிள்ளை வரவில்லை.

எனவே அவளுடைய பெற்றோர், இனியும் எத்தனை நாட்களுக்குத் தான் குமரை வைத்துக் கொண்டு இருப்பது? என்று எண்ணி வரதட்சணை கொடுத்து, இணை வைக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அவளோ, “எனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் குடும்பத்தார் இணை வைப்பவர்கள்; நான் என்ன செய்யப் போகின்றேன்?’ என்று பதறுகின்றாள்.

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் சில நாட்களுக்கு முன்னால் என்னிடம் வந்தாள். “என் கணவனின் குடும்பத்தார் அனைவருமே இணை வைக்கக்கூடியவர்கள். ஏதேனும் கந்தூரி வந்தால் அங்கு செய்யக்கூடிய சாப்பாட்டைக் கொண்டு வந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று என்னை வற்புறுத்துகிறார்கள். நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொன்னால் கூட அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?” என்று கேட்கிறாள்.

சமீபத்தில் சேரன்மகாதேவி என்ற ஊருக்கு, மார்க்கச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்த போது அங்கு ஒருவர், “இந்த ஊரில் தர்கா வழிபாடு அதிகமாக உள்ளது. எடுத்துச் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை’ என்று சொல்லி விட்டு, “என் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது; அவர்களும் தர்ஹாவாதிகள் தான்’ என்று கூறினார்.

“இணை கற்பிப்பவர்களை இறை நம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை விட்டும் இறைவன் தடுத்துள்ளான்; எனவே இணை வைப்பவர்களுக்குத் திருமணம் செய்து வைக்காதீர்கள்’ என்று அவர்களிடம் கூறி விட்டு அந்தப் பெண்ணிடம், “நீங்கள் மார்க்கத்தைப் பற்றி அறிந்தவர் தானே! உங்கள் தாயாரிடம் இது பற்றி எடுத்துச் சொல்லக் கூடாதா?’ என்று கேட்டேன்.

அதற்கு அந்தப் பெண், “நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டேன். ஆனால் என் தாய் கேட்பதில்லை. “இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லி விட்டால் பிறகு வேறு யார் உன்னைத் திருமணம் செய்வார்கள்?’ என்று கேட்கிறார். நான் இறைவனிடம் துஆச் செய்து கொண்டு இருக்கிறேன். நீங்களும் எனக்காக துஆச் செய்யுங்கள்’ என்று கூறினாள்.

நமக்குத் தெரிந்தது சில பெண்கள் தான். நமக்குத் தெரியாமல் எத்தனை பெண்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு, குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, ஏகத்துவவாதியைத் தான் திருமணம் முடிப்பேன் என்று      ஏங்கி, கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஏகத்துவம் சுடர் விட்ட ஆரம்பத்தில் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் தவ்ஹீதுவாதிகள் இருந்தார்கள். ஆனால் இன்று இந்த தவ்ஹீது ஜமாஅத் மிகப் பெரும் சமுதாயமாக இருக்கிறது. ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர், தவ்ஹீதை ஏற்றுக் கொண்ட பெண்களைக் கண்டு கொள்ளாமல் இணை வைக்கும் பெண்களைத் தேடிச் சென்று திருமணம் செய்கிறார்கள்.

உறுதியாக நின்ற உமர் (ரலி)

நபித்தோழர்களிடம் இருந்த கொள்கை உறுதியும், பிடிப்பும் இன்று நம்மிடத்தில் இல்லை. கொள்கையா? உறவா? என்று வரும் போது நபித்தோழர்கள் உறவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

“(பத்ருப் போரில் பிடிபட்ட) இந்தக் கைதிகள் விஷயமாக நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என பத்ருடைய தினத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, அபூபக்ர் (ரலி), “அல்லாஹ்வின் நபியே! அவர்கள் நம்முடைய சித்தப்பா, பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த மக்களாவர். எனவே அவர்களிடத்தி-ருந்து நஷ்ட ஈட்டை வாங்கி விட்டு, அவர்களை விடுதலை செய்வதை நான் விரும்புகின்றேன்.  அந்த நஷ்ட ஈடு காஃபிர்களுக்கு எதிராக நமக்கு ஒரு பலமாகவும், இதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு இஸ்லாத்தின் பால் வழிகாட்டவும் கூடும்என்று கூறினார்கள்.

கத்தாபின் மகனே! நீ என்ன கருதுகின்றாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், “இல்லை! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் கொண்ட கருத்தை நான் கொண்டிருக்க வில்லை. மாறாக, அவர்களை எங்கள் பொறுப்பில் விட்டு விடுங்கள். அவர்களது கழுத்துக்களை நாங்கள் வெட்டுகின்றோம். அலீயிடம் அகீலை விடுங்கள். அவர் அவரது கழுத்தை வெட்டுவார். (தன் குடும்பத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்னாருக்குரிய வாய்ப்பை உமரிடத்தில் விடுங்கள். நான் அவருடைய கழுத்தை வெட்டுகின்றேன். நிச்சயமாக இவர்களெல்லாம் இறை நிராகரிப்பின் தலைவர்களும் அதன் பெரும் புள்ளிகளும் ஆவார்கள்என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்ன கருத்தின் பால் சாயாமல் அபூபக்ர் கூறிய கருத்தின் பாலே சாய்ந்தார்கள்.  மறு நாள் நான் வந்த போது, அல்லாஹ்வின் தூதரும், அபூபக்ரும் அழுது கொண்டிருந்தனர். “நீங்களும் உங்களுடைய தோழரும் எதனால் அழுகின்றீர்கள்? என்று எனக்கு அறிவியுங்கள். அழ முடிந்தால் நானும் அழுகின்றேன். நான் அழ முடியவில்லையெனில் நீங்கள் அழுவதற்காக நானும் அழுவது போல் பாவனை செய்கின்றேன்என்று கூறினேன்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தோழர்கள் அந்தக் கைதிகளிடமிருந்து நஷ்ட ஈட்டை வாங்கியதற்காக எனக்கு நேர்ந்ததை எண்ணி அழுகின்றேன். அவர்களுக்குரிய வேதனை இந்த மரத்திற்கு அருகில் என்னிடம் காட்டப்பட்டதுஎன்று கூறினார்கள். அல்லாஹ் 8:68, 69 வசனங்களை இறக்கினான்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3621

மாமன், மச்சான் யாராக இருந்தாலும் அவர்களை எங்கள் கைகளாலேயே சிரச் சேதம் செய்கிறோம் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்களே! இந்த அணுகுமுறை நம்மிடம் வர வேண்டும். அதைத் தான் அல்லாஹ்வும் அங்கீகரித்தான்.

(முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாம் வெட்டிக் கொல்லச் சொல்கிறது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. முஸ்லிம்களை வேரோடு அழித்தொழிப்பதற்காக படை திரட்டி யுத்தக் களம் வந்தவர்களைப் பற்றிய நிகழ்ச்சி என்பதைக் கவனத்தில் கொள்க!)

நாங்கள் ஏகத்துவவாதிகள்; ஏகத்துவத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்; நாங்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளையை அப்படியே எடுத்து நடப்பவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே! திருமண விஷயத்தில் நீங்கள் அப்படித் தான் நடக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

பரேலவிகளுக்குப் பயன்தராத பல்வேறு கடவுளர்கள்

அபூஜாஸிர்

பரேலவிகள் இன்று பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்; அல்லாஹ் அல்லாதவர்களை, அவனது அடியார்களை அழைத்துத் தங்கள் தேவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் ஷா, தக்கலை பீரப்பா, திருவனந்தபுரம் பீமா, ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா என வகை வகையாக ஆண், பெண்களை கடவுளாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்தக் கடவுளர்கள் (இவர்களது பாஷையில் அவ்லியாக்கள் அல்லது மகான்கள்) மறுமையில் வந்து கை கொடுப்பார்கள்; காப்பாற்றிக் கரை சேர்ப்பார்கள் என்று இவர்கள் பலமாக நம்புகின்றனர். இவர்களது இந்த நம்பிக்கை இரண்டு வேளைகளில் தகர்ந்து போய் விடுகின்றது.

மரண வேளையில்…

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். “அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். “அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர்என அவர்கள் கூறுவார்கள். “நாங்கள் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம்எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.

அல்குர்ஆன் 7:37

இவர்கள் அழைத்துக் கொண்டிருந்த இந்த அவ்லியாக்கள் மரண வேளையில் காணாமல் போய் விடுகின்றனர்.

இதன் பின்னர் மறுமையில் எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போதும் இந்த அவ்லியாக்கள் இவர்களை விட்டும் காணாமல் போய் விடுவார்கள்.

ஈஸா நபியிடம் இறைவனின் விசாரணை

மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் அனைவரும் நிறுத்தப்படும் போது ஈஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ் விசாரணை செய்கின்றான்.

இந்தப் பரேலவிகளாவது இறந்து போன பெரியார்களைத் தான் அழைக்கின்றனர். ஆனால் கிறித்தவர்களோ வானத்தில் உயிருடன் இருக்கின்ற ஈஸா (அலை) அவர்களை அழைக்கின்றார்கள். அதிலும் ஈஸா நபியவர்கள் இறைவனின் அற்புதப் படைப்பாவார்.

மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார்.

அல்குர்ஆன் 4:171

இவ்வாறு அல்லாஹ் தனது உயிர் என்று கூறும் உன்னத நிலையில் உள்ளவர்கள் ஈஸா (அலை) அவர்கள். இந்த ஈஸா நபியைத் தான் கிறித்தவர்கள் வணங்குகின்றனர்; அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.

உண்மையில் பரேலவிகளை விட கிறித்தவர்கள் உயர்ந்தவர்கள். ஏனென்றால் பரேலவிகள் யாரை அவ்லியாக்கள், மகான்கள் என்று கூறுகின்றார்களோ அவர்கள் உண்மையில் அவ்லியாக்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

ஆனால் கிறித்தவர்கள் அழைத்துப் பிரார்த்திக்கும் ஈஸா நபியோ நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்; அவனது உயிர். அல்லாஹ் அவருக்குப் பல்வேறு சிறப்புக்களைக் கொடுத்துள்ளான். எனவே இந்த அடிப்படையில் பரேலவிகளை விட கிறித்தவர்கள் பரவாயில்லை எனலாம்.

அந்தக் கிறித்தவர்கள் மத்தியிலும் இன்னும் உலக மக்கள் அனைவர் மத்தியிலும் ஈஸா நபியை இறைவன் விசாரணை செய்கின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்!என நீர் தான் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்என்று அவர் பதிலளிப்பார்.

நீ எனக்குக் கட்டளையிட்ட படி “எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்!என்பதைத் தவிர வேறு எதையும் நான் அவர்களிடம் கூறவில்லை. நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்” (எனவும் அவர் கூறுவார்)

அல்குர்ஆன் 5:116, 117, 118

தன்னைக் கிறித்தவர்கள் அழைத்ததற்குத் தான் பொறுப்பாளி அல்ல என்று ஈஸா நபியவர்கள் பகிரங்கமாகப் போட்டு உடைக்கின்றார்கள்.

ஈஸா நபி அவ்வாறு தன்னை வணங்க வேண்டும் என்று மக்களிடம் சொல்லவில்லை என்பது இறைவனுக்குத் தெரியும். இருப்பினும் இவ்வாறு மக்கள் மன்றத்தில் வைத்துக் கேட்பதற்குக் காரணம் அம்மக்களுக்கு, தாங்கள் செய்த அந்த வணக்கம் தவறானது என்பதை உணர வைப்பதற்காகத் தான்.

இதிலேயே பரேலவிகளுக்குரிய பாடமும் படிப்பினையும் இருக்கின்றது. ஈஸா நபி உயிருடன் வானத்தில் இருக்கும் போது அவர்களை அழைத்தவர்களுக்கே இந்தக் கதி என்றால் இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் நமக்கு என்ன கதி? என்பதை இவர்கள் உணர மாட்டார்கள் என்பதற்காக இவர்கள் அழைத்துப் பிரார்த்தித்த அவ்லியாக்களையே அல்லாஹ் விசாரணை செய்கின்றான்.

அவ்லியாக்களிடம் விசாரணை

அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் அவன் ஒன்று திரட்டும் நாளில் “எனது அடியார்களை நீங்கள் தான் வழி கெடுத்தீர்களா? அவர்களாக வழி கெட்டார்களா?” என்று கேட்பான். “நீ தூயவன். உன்னையன்றி உற்ற நண்பர்களை ஏற்படுத்துவது எங்களுக்குத் தகாது. நீ அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வசதிகளை அளித்தாய். (உன்னை) நினைக்க மறந்தனர். அழிந்து போகும் கூட்டமாக ஆகி விட்டனர்என்று அவர்கள் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 25:17,18

இவர்கள் யாரைக் கூவிக் கூவி அழைத்தார்களோ அந்த அவ்லியாக்கள் இந்தப் பரேலவிகளைக் கை கழுவி விடுவார்கள்; காலை வாரி விடுவார்கள்; கழற்றி விட்டு விடுவார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் போட்ட அதே வார்த்தையை, “சுப்ஹானக்க – நீ தூயவன்” என்ற வார்த்தையை அப்படியே இந்த அவ்லியாக்களும் கூறுகின்றார்கள். அப்போது தான் அல்லாஹ்விடமிருந்து பதில் வருகின்றது.

நீங்கள் கூறுவதை அவர்கள் பொய்யெனக் கருதினார்கள். தடுக்கவோ, உதவவோ உங்களுக்கு இயலாது. உங்களில் அநீதி இழைத்தோருக்குப் பெரிய வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.

அல்குர்ஆன் 25:19

நூரி ஷாஹ் தரீக்கா

பரேலவிகளில் ஒரு பிரிவான நூரி ஷாஹ் தரீக்கா என்ற கூட்டத்தினர், முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கத் துவங்கினார்கள்.

அவ்வாறு முஹம்மது என்று திக்ரு செய்ய ஆரம்பித்ததும் மற்ற ஆலிம்கள் அதைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். “யா முஹம்மத் என்று திக்ரு செய்வது கூடாது; அது ஷிர்க் ஆகும்’ என்று ஃபத்வா – மார்க்கத் தீர்ப்பு வழங்கினர். தமிழகத்தில் உள்ள எல்லா மதரஸாக்களும் இதில் ஒத்தக் கருத்தைக் கொண்டிருந்தன.

இதற்கு இர்ஃபானுல் ஹக் எனும் நூல் இன்றும் சாட்சியாகத் திகழ்கின்றது. இந்நூலைத் தொகுத்தவர் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ ஆவார். அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள்    இங்கு தனிக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முஹம்மது என்று திக்ர் செய்வது ஷிர்க் என்று நாம் கூறுவது ஒருபுறமிருக்கட்டும். அந்தத் தரப்பு ஆலிம்களே கூறுகிறார்கள் என்றால் அந்த ஷிர்க்கின் ஆழத்தை நாம் எடுத்துக் கூறத் தேவையில்லை.

அப்படியானால் இவர்கள் நிச்சயமாக மதம் மாறியவர்கள் ஆகி விடுகின்றார்கள். அதாவது “முஹம்மதே’ என்று நபி (ஸல்) அவர்களை உதவிக்கு அழைப்பவர்கள் மதம் மாறியவர்களாகி விடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களுக்குக் கைகொடுப்பார்கள் என்று காத்திருக்கும் போது இவர்களை நபி (ஸல்) அவர்கள் கைகழுவி விடுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது, “நீங்கள் அல்லாஹ்விடம் வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்என்று கூறிவிட்டு, “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்என்ற (21:104) இறை வசனத்தை ஓதினார்கள்.

பிறகு மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் இப்ராஹீம் (நபி) அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள். என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் கொண்டு வரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்திற்கு) கொண்டு செல்லப்படுவர்.

அப்போது நான், “என் இறைவா, என் தோழர்கள்என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாதுஎன்று சொல்லப்படும்.

அப்போது நான் நல்லடியார் ஈஸா (அலை) அவர்கள் கூறியது போல், “நான் அவர்களிடையே இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்ட போது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்என்று பதிலளிப்பேன்.

அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால்களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டேயிருந்தார்கள்என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4740, 6524

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோழர்களையே அவர்களால் காப்பாற்ற முடியாது என்றாகி விடுகின்றது. இந்தப் பரேலவிகளை எப்படிக் காப்பாற்ற முடியும்? எனவே நபி (ஸல்) அவர்கள், ஈஸா நபியவர்கள் கூறிய பதிலை அப்படியே கூறி விடுகின்றார்கள்.

அதாவது மறுமையில் நபி (ஸல்) அவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பியிருக்கும் இந்த இணை வைப்பாளர்கள் கைகழுவி விடப்படுகின்றார்கள்; நரகவாதிகளாகி விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

விவாதம் புரிந்தோருக்கு விலங்குகள்

அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்ற நாம் அறிவுரை கூறும் போது இவர்கள் வீணான விவாதம் புரிகின்றனர். இவர்களிடம் அல்லாஹ் மறுமையில் குத்தலாகவும், கோபமாகவும் கேட்கும் கேள்விகளைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா? அவர்கள் வேதத்தையும், எதனுடன் நமது தூதர்களை அனுப்பினோமோ அதையும் பொய்யெனக் கருதுகின்றனர். பின்னர் அறிந்து கொள்வார்கள். அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் இணை கற்பித்தவை எங்கே?” என்று பின்னர் அவர்களிடம் கேட்கப்படும்.

எங்களை விட்டும் மறைந்து விட்டன. இல்லை! இதற்கு முன் எதையும் நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கவில்லைஎன்று அவர்கள் கூறுவார்கள். இவ்வாறே (தன்னை) மறுப்போரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான்.

அல்குர்ஆன் 40:69-74

நபி (ஸல்) அவர்களையும் மற்ற மகான்களையும் அழைத்து உதவி தேடியதால் அல்லாஹ் வழங்குகின்ற தண்டனை இது.

மலக்குகளிடம் விசாரணை

இந்த இணை வைப்பாளர்கள் மகான்களை வணங்கியது போல் இதற்கு முன்னர் ஒரு கூட்டம் மலக்குகளை வணங்கினர். அதனால் மலக்குகளை அல்லாஹ் விசாரணை செய்கிறான். அப்போது அவர்கள் சொல்கின்ற பதிலைப் பாருங்கள்.

(அது) அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று திரட்டும் நாள்! பின்னர் “அவர்கள் உங்களைத் தான் வணங்குவோராக இருந்தார்களா?” என்று வானவர்களிடம் கேட்பான். “நீ தூயவன். நீயே எங்கள் பாதுகாவலன். அவர்களுடன் (எங்களுக்கு சம்பந்தம்) இல்லை. மாறாக இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்என்று கூறுவார்கள்.

அல்குர்ஆன் 34:40, 41

ஈஸா (அலை) அவர்களும், முஹம்மது (ஸல்) அவர்களும் கூறியது போன்றே, “நீ தூயவன். அவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” என்ற பதிலை மலக்குகள் கூறி விடுகின்றனர். அந்த வழிகெட்ட கூட்டம் உண்மையில் வணங்கியது மலக்குகளை அல்ல! ஷைத்தான்களைத் தான்.

அல்லாஹ்வை விட்டு விட்டு, மக்கள் யார் யாரையெல்லாம் அழைத்துப் பிரார்த்தித்தார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ் தன் முன்னிலையில் நிறுத்தி, அவர்களுக்கும் அவர்களை வணங்கியோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவாக்கி விடுகின்றான்.

அவ்வாறு வணங்கப்பட்டவர்கள் நபிமார்களாகவும், நல்லடியார்களாகவும் இருக்கலாம்; மலக்குகளாகவும் இருக்கலாம்.

அவர்கள் அத்தனை பேரும் அல்லாஹ்விடம் கொடுக்கப் போகும் வாக்குமூலம், “இவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என்பது தான்.

அதாவது இந்த இணை வைப்பாளர்களை, அவர்கள் நம்பிக் கொண்டிருந்த கடவுளர்கள் கைவிட்டு கயிற்றை அவிழ்த்து விடுகின்றனர்; காலை வாரி விடுகின்றனர்.

இவர்களின் வலையில் விழுந்து விடாது நாம் நம்மையும் நம் சந்ததிகளையும் பாதுகாத்துக் கொள்வோமாக!

———————————————————————————————————————————————-

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

(மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ எழுதிய “இர்ஃபானுல் ஹக்’ (உண்மை விளக்கம்) எனும் நூலில், “முஹம்மது என்ற திக்ரு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியை இங்கே அப்படியே தந்துள்ளோம்.)

சிலர் தரீக்கா என்ற பெயரால் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்கின்றனர். குறிப்பாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருநாமத்தை மரியாதையின்றி, “முஹம்மத், முஹம்மத்’ என திக்ரு செய்கிறார்கள். சூபிய்யாக்களுக்கு இது ஆகும் என்று கூறுகின்றனர்.

திக்ரு என்பதின் கருத்தையும் ஷரீஅத்தின் சட்டங்களையும் சரியாக விளங்காத காரணத்தால் ஏற்படும் தீமையாகும் இது. அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்வது மாபெரிய தீமையாகும் என்பதைப் பற்றிய விளக்கத்தை இங்கு காண்போம்.

அல்லாஹு தஆலாவுடைய திருநாமங்களைப் போன்று வேறு படைப்பினங்களின் பெயரை திக்ரு செய்வது ஷிர்க் எனும் இணை வைத்தலாகும். பெரும் பாவமுமாகும் என ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: ஷிபாவுல் அலீல் ஷரஹ் அல்கவ்லுல் ஜமீல், பக்கம்: 18

திக்ரு என்பது ஒரு வணக்கம் (இபாதத்). அதுவும் உயர்ந்த, சிறந்த வணக்கம். இந்த வணக்கத்தில் அல்லாஹு தஆலாவுக்கு இணையாக வேறு மனிதரை அல்லது வேறு பொருளை திக்ரு செய்வது ஷிர்க் என்பதாக ஆகி விடுகின்றது.

அல்லாஹு தஆலா திருக் குர்ஆனில், “இய்யாக நஃபுது’ என்று கூறுகின்றான்.

இய்யாக = உன்னையே

நஃபுது = வணங்குகிறோம்

என்பது இதனுடைய பொருள். இந்த வாசகத்தின் அசல் அமைப்பு “நஃபுதுக’ என்றிருக்க வேண்டும். “நஃபுதுக’ என்றால் உன்னை வணங்குகிறோம் என்ற பொருளாகும். “உன்னைத் தான் வணங்குகிறோம்; வேறு எவரையும் வணங்க மாட்டோம்’ என்ற குறிப்பாக்கி வைக்கும் பொருள் அதில் ஏற்பட வேண்டும் என்பதற்காக “நஃபுதுக’ என்பதை “இய்யாக நஃபுது’ என்று மாற்றி அல்லாஹு தஆலா கூறியுள்ளான்.

நஃபுது என்பதனுடைய வேர்ச் சொல் இபாதத் என்பதாகும். இபாதத் என்றால் வணக்கம் என்று பொருள். ஒரு முஃமின் செய்கின்ற தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், திக்ரு, ஃபிக்ரு, இன்ன பிற செயல்கள் அனைத்தும் இபாதத் என்பது தான். எனவே இய்யாக நஃபுது “உன்னையே வணங்குகிறோம்’ என்று நாம் சொல்லும் போது,

உன்னையே தொழுகிறோம்; வேறு எவரையும் தொழ மாட்டோம்.

உன்னையே திக்ரு செய்கிறோம்; வேறு எவரையும் திக்ரு செய்ய மாட்டோம்.

உனக்காகவே ஜகாத், நோன்பு, ஹஜ் இன்ன பிற நற்செயல்கள் அனைத்தையும் செய்கிறோம்; வேறு எவருக்காகவும் இவற்றைச் செய்ய மாட்டோம்.

என்ற எல்லாக் கருத்துக்களையும் தன்னுள் கொண்டது தான் “இய்யாக நஃபுது’ என்ற திருவாசகம். இக்கருத்துக்கள் தப்ஸீர் பைலாவீயிலும் அதனுடைய விளக்கவுரை நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இப்போது நாம் கவனிப்போம்.

இய்யாக நஃபுது என்பதற்கு, உன்னையே திக்ரு செய்கிறோம்; வேறு யாரையும் திக்ரு செய்ய மாட்டோம் என்ற பொருள் கூறப்படும் போது, அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்வது “ஷிர்க்’ என்ற குற்றத்தைச் சேர்ந்ததாகி விடுகிறது. இந்தக் கருத்தில் தான் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் திருநாமத்தைப் போன்று வேறு பொருள்களின் நாமங்களை திக்ரு செய்வது ஷிர்க் என்ற பெரும் பாவமாகும்’ என்று கூறியுள்ளார்கள்.

மேற்கூறிய விளக்கத்தைத் தெரிந்த பின்னரும் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்யலாம் என்று கூறுபவர்கள், அல்லாஹ் அல்லாத பொருளைத் தொழலாம்; வணங்கலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அல்லாஹ் அல்லாத பொருளிற் சேர்ந்தவர்கள் தான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். எனவே “முஹம்மத், முஹம்மத்’ என்று திக்ரு செய்வது அல்லாஹ்வுடைய வணக்கத்தில் இணை வைப்பதும், பெரும் பாவமுமாகும்.

அல்லாஹு தஆலா திருக்குர்ஆனில், “அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், என்னை திக்ரு செய்யுங்கள்’ என்று தான் கூறுகிறான். ஆகவே திக்ரு என்பது அல்லாஹு தஆலாவுக்கே சொந்தமானது. (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை திக்ரு செய்தல் கூடாது.) நபியின் மீது ஸலவாத்துச் சொல்வது தான் சுன்னத்.

(வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ஃபத்வா)

அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்தல் கூடாது. ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், முஜ்தஹிதுகள், சூஃபியாக்கள் இவர்களில் எவர் மூலமாகவும் அது கூறப்படவில்லை.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், முன்னோர்களும் செய்யாத இந்தப் புதிய முறை திக்ராகிறது ‘பித்அத்’ என்ற வழிகேடாகும். அது ரத்துச் செய்யப்பட வேண்டியதாகும்.

எவம் நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய (பித்அத்தான) செயல்களைத் தோற்றுவித்தால் அது ரத்துச் செய்யப்பட வேண்டியதாகும்என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: மிஷ்காத் (பக்கம் 27)

பேச்சுக்களில் சிறந்தது அல்லாஹு தஆலாவின் வேதம். நேர்வழியில் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழி. செயல்களில் கெட்டது மார்க்கத்தில் இல்லாத புதிய பித்அத்துக்களை உண்டாக்குவது. புதியவை (பித்அத்துக்கள்) அனைத்தும் வழிகேடானவையேஎன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: மிஷ்காத் (பக்கம் 27)

இந்த ஹதீஸ்களிலிருந்தும், ஃபத்வாக்களிலிருந்தும் ஷரீஅத்தில் கூறப்படாத முஹம்மத் என்ற திக்ராகிறது வழிகேடும், மறுக்கப்பட வேண்டியதுமாகும் என்பது தெளிவாகிறது. திருக்குர்ஆனில் நூற்றுக்கணக்கான இடங்களில் திக்ரைப் பற்றியுள்ள ஆயத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அத்தனையும் அல்லாஹ்வை திக்ரு செய்யுமாறு தான் அல்லாஹ் பிரஸ்தாபிக்கின்றான். அல்லாஹ் அல்லாதவற்றை திக்ரு செய்தல் கூடாது என்பதையும் அல்லாஹ் அதன் மூலம் சுட்டிக் காட்டுகிறான்.

உங்களுக்கிடையே ஒருவரை ஒருவர் அழைப்பது போன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைக்க வேண்டாம் என்று சூரத்துந் நூர் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஆயத்தின் விளக்கவுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிருடன் இருக்கும் போதும், மரணமடைந்த பிறகும் பெயர் கூறி மரியாதையின்றி அழைக்கக் கூடாது என தப்ஸீர் ஸாவியில் விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி மரியாதையின்றி முஹம்மது என்றழைப்பது அரபு நாட்டுக் காஃபிர்களின் வழக்கமாகவும், யூத, கிறித்தவர்களின் வழக்கமாகவும் இருந்த காரணத்தால் அவ்வாறு அழைப்பது கூடாது என இந்த ஆயத்தில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். எனவே முஹம்மத், முஹம்மத் எனக் கூறுபவர்கள் அன்றைய காபிர்கள், யூத, கிறித்தவர்களுடைய வழக்கத்தைக் கையாளுபவர்களாக ஆகி விடுகிறார்கள்.

காயத்துல் கலாம் ஃபின்னிதாஇ பிஸ்மின்னபிய்யி அலைஹிஸ்ஸலாம் என்ற நூலின் 34ம் பக்கத்தில் மேற்படி ஆயத்தை ஆதாரமாகக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி அழைப்பது ஹராமாகும் என்பதற்கு இருபத்து நான்கு கிரந்தங்களை ஆதாரம் காட்டி எழுதியுள்ளார்கள். விரும்புபவர்கள் அந்நூலைப் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்குப் பின் “யா முஹம்மத்’ என்றோ, “அஹ்மத்’ என்றோ, “முஹம்மத், முஹம்மத்’ என்றோ மரியாதையின்றி கூறுபவர் மேற்படி ஆயத்தின் கருத்துக்கு மாற்றம் செய்தவராவார் என்பது தெளிவாக்கப் படுகின்றது.

மேற்படி ஆயத்திலிருந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி அழைப்பது எல்லா நேரங்களிலும் ஹராமாகும் எனக் கீழ்க்குறிப்பிடும் மேதைகள் அனைவரும் அறிவித்துள்ளனர் என்று “தகாயிருத்தலீல்’ என்ற நூலில் அல்லாமா நைனா முஹம்மது ஆலிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 1. இமாம் நவவீ (ரஹ்) ஷரஹ் முஸ்லிம்
 2. இமாம் முல்லா அலீ காரீ (ரஹ்) ஷரஹ் மிஷ்காத், ஷரஹ் ஷிபா
 3. காளீ இயாள் (ரஹ்) கிதாபுஷ்ஷிபா
 4. ஷிஹாபுத்தீன் கஃப்பாஜீ (ரஹ்) ஷரஹ் ஷிபா
 5. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) பத்ஹுல் ஜவாத், பத்ஹுல் முயீன், ஜவ்ஹருல் மன்லூம் ஹாஷியாத்துல் ஈலாஹ்
 6. இமாம் கஸ்தலானீ (ரஹ்) மவாஹிப்
 7. ஷைகு முஹம்மது ஸாலிஹ் (ரஹ்) அவர்களின் பதாவா
 8. இமாம் சுயூத்தி (ரஹ்) அஹ்காமுல் குர்ஆன்

மேற்கூறிய மேதைகளும் மற்றும் பலரும் மேற்படி ஆயத்திலிருந்து நபியவர்களைப் பெயர் கூறி அழைப்பதை ஹராம் எனக் கூறியுள்ளனர்.

நூல்: தகாயிருத்தலீல், பக்கம்: 4

ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் கூறி “முஹம்மத், முஹம்மத்’ என திக்ரு செய்வதால் ஷிர்க், ஹராம் என்ற இரண்டு பெரும் குற்றங்கள் ஏற்படுகின்றன.

அல்லாஹ்வுடைய திருநாமத்தைப் போன்று அவனுக்கு இணையாக திக்ரு செய்வது – இது ஷிர்க்.

மரியாதையின்றி நபியவர்களின் பெயரைக் கூறுவது – இது ஹராம்.

…..இது தான் மவ்லவி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் எழுதிய இர்ஃபானுல் ஹக் என்ற நூலில் வெளியிடப்பட்ட செய்தியாகும். 1977ல் இந்நூல் வெளியிடப்பட்டு, 1982ம் ஆண்டு மறு பதிப்பு வெளியானது.

முஹம்மது என்று திக்ரு செய்யக் கூடாது என்று ஃபத்வா கொடுக்கும் நீங்கள், “முஹய்யித்தீன்’ என்று அழைப்பது கூடாது என்று ஏன் ஃபத்வா கொடுக்க மறுக்கிறீர்கள்?

முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை விட முஹம்மத் (ஸல்) அவர்கள் மிக மிகச் சிறந்தவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அப்துல் காதிர் ஜீலானியை ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களை திக்ர் செய்வது ஷிர்க் என்று சொல்லும் நீங்கள், முஹய்யித்தீனை அழைத்து இருட்டு திக்ர் செய்வதை எதிர்த்து மூச்சு விடுவதில்லையே! ஏன்?

அந்த முஹய்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பதற்கு அஸ்திவாரம் போட்டிருக்கும் “யா குத்பா’ பாடலை அனுமதித்துக் கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன்? என்று தான் நாம் 80களில் இந்த ஆலிம்களிடம் கேட்டோம். இதற்கு வழக்கமான மவுனமே அவர்களின் பதிலாக அமைந்தது.

———————————————————————————————————————————————–

கேள்வி பதில்

கேள்வி :
? தொழுகையில் வஜ்ஜஹ்து என்ற நீளமான ஸனாவை ஓதி வருகிறேன். ஜமாஅத்தோடு நின்று தொழும் போது, இமாம் அல்ஹம்து சூரா முக்கால்வாசி ஓதி முடிக்கும் வரை எனது ஸனா நீள்கின்றது. குர்ஆன் ஓதப்பட்டால் வாய் மூடுங்கள் என்ற வசனத்திற்கு இது முரணானதா? அல்லது வஜ்ஜஹ்து ஓதுகின்ற வரை ஓதி விட்டு இமாம் ஓத ஆரம்பித்தவுடன் ஓதுவதை விட்டு விடலாமா?

எப். ரியாஸ் அஹ்மத், காயல்பட்டணம்

பதில் :

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர், இமாம் ஓதுவதைக் கேட்க வேண்டும். வேறு எதையும் ஓதக் கூடாது. அவ்வாறு ஓதுவது குர்ஆன் வசனத்திற்கும், ஆதாரப்பூர்வமான நபிவழிக்கும் மாற்றமானதாகும்.

குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 7:204

இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 612

எனவே இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓத ஆரம்பித்து விட்டால் நீங்கள் எது வரை ஓதினீர்களோ அத்துடன் விட்டு விட்டு, இமாமின் கிராஅத்தைத் தான் செவிமடுக்க வேண்டும்.

ஜமாஅத் தொழுகையில், இமாம் ருகூவில் நிற்கும் போது வந்து சேர்ந்தால் கூட அந்த ரக்அத் கிடைத்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஸனாவை பாதியில் நிறுத்துவதால் தொழுகைக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.

எனினும் இது போன்ற கட்டங்களில், அல்லாஹும்ம பாயித் பைனீ… போன்ற சிறிய துஆக்களை ஓதினால் முழுமையாக ஓதி முடிக்க முடியும்.

கேள்வி :
? பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும். அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று மாற்று மதத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது?

ஜே. முபாரக் அலீ, மதுரை

பதில் :

பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர்.  அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 15036, 15037

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு குழந்தையை முஸ்லிமாகவோ அல்லது முஸ்லிமல்லாதவராகவோ மாற்றுவதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர் தான்.

ஏனெனில் பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளுக்குக் குழந்தைப் பருவத் திலிருந்து ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர். கடவுள் கொள்கையையும் அவர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர்.

அந்த அடிப்படையில் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குப் பெற்றோர் முக்கியக் காரணமாக அமைந்தாலும் மனிதனுக்கென்று பகுத்தறிவை இறைவன் வழங்கியுள்ளான். எல்லா விஷயங்களிலும் அவன் பெற்றோர் சொன்னதை மட்டுமே பின்பற்றுவதில்லை. எது தனக்கு நன்மை தரும் என்பதை ஆராய்ந்து அதைத் தான் எடுத்துக் கொள்கிறான்.

இது போன்றே கடவுள் கொள்கையிலும் மனிதன் சிந்தித்து, எது உண்மையான மார்க்கம் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடு.

திருக்குர்ஆனை ஆய்வு செய்து பார்த்தால் வானம், பூமி, மலைகள், காற்று, மழை, சூரியன், சந்திரன், கோள்கள் போன்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கூறி விட்டு, இவற்றையெல்லாம் படைத்தது யார் என்பதைச் சிந்திக்கச் சொல்கிறது. இவ்வாறு சிந்தித்துப் பார்த்தால் அவற்றைப் படைத்தது ஓர் இறைவன் தான் என்பதை மனிதன் அறிந்து கொள்வான். இவ்வாறு சிந்தித்து இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தான் இஸ்லாம் கூறுகின்றது.

இஸ்லாத்தைப் பொறுத்த வரை வாரிசு அடிப்படையிலோ அல்லது பெயர் அடிப்படையிலோ யாரையும் முஸ்லிம் என்று கூற முடியாது. முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள், முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இன்று இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாடு, இறந்தவர்களிடம் உதவி தேடுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். இவர்களெல்லாம் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தாலும் இறைவனின் பார்வையில் இவர்கள் ஒரு போதும் முஸ்லிம்களாக முடியாது.

எனவே இஸ்லாம் என்பது பிறப்பு அடிப்படையில் ஏற்படுவதல்ல. ஒரு மனிதனிடம் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள்வீராக!

அல்குர்ஆன் 47:19

வணக்கத்திற்குரிவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சொல்லுங்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறவில்லை. மாறாக, அறிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான்.

ஃபஅலம் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகின்றான். சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ளுங்கள் என்பது இதன் கருத்து! லாயிலாஹ இல்லல்லாஹ் என்று வாயளவில் சொன்னால் போதாது. அதை விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தவிர    கடவுள் இல்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

எனவே முஸ்லிமான பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் என்று கூற முடியாது. அதே போல் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்தவர்கள் எல்லோரும் அந்த மார்க்கத்தில் தான் இருக்க வேண்டும் என்பதும் கிடையாது.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் இங்குள்ள முஸ்லிம்கள் எல்லோருமே ஒரு காலத்தில் இந்துவாக இருந்தவர்கள் தான். இஸ்லாத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தான்.

எனவே பெற்றோர்கள் தங்களது மார்க்கத்தைப் பிள்ளைகளுக்குப் போதித்தாலும், இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து, எந்த மார்க்கம் உண்மையானது என்பதை விளங்கி ஒரு மனிதன் பின்பற்ற வேண்டும்.

ஒரு கடவுள் தான் இருக்க முடியும்; அந்த ஓரிறைக் கொள்கையைப் போதிக்கின்ற இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை முஸ்லிம்களும் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டுள்ளனர். அவர்கள் அந்தப் பணியை முழுமையாகச் செய்யாததால் தான் இது போன்ற கேள்விகள் எழுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேள்வி :
? சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா?

எஸ். முஹம்மது இம்ரான், ஈரோடு

பதில் :

நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத வணக்கத்தை, மார்க்க வழிபாடுகளை நன்மை என்று கருதி செய்வது தான் பித்அத்தாகும்.

நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அவனது அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2697

வணக்க வழிபாடுகள் அல்லாத ஏனைய உலக விஷயங்களில் செய்யப்படும் புதுமைகளை பித்அத் என்று கூறக் கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால் சைக்கிள் ஓட்டுவதையும், கார் ஓட்டுவதையும் பித்அத் என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். இந்த அடிப்படை வித்தியாசத்தை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சுதந்திர தினத்தில் இரத்த தானம் செய்தால் கூடுதல் நன்மை என்று கருதி யாரும் செய்வதில்லை. அன்றைய தினத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் போது அரசாங்கத்திற்குத் தங்கள் அமைப்பின் மீது நற்பெயர் ஏற்படும் என்று கருதித் தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

மேலும் சுதந்திர தினம் என்பது எந்த மதத்தின் பண்டிகையும் அல்ல. நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கும் ஒரு நாள் தான். வணக்க வழிபாடுகள் சம்பந்தமில்லாத ஒரு செயலை பித்அத் என்று கூறுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.

கேள்வி :
? இங்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சி வடிவிலான செம்பு வளையம் விற்கப்படுகிறது. இதைக் கையில் அணிந்து கொண்டால் இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்லது என்று எழுதப்பட்டுள்ளது. இதை வாங்கிக் கையில் மாட்டினால் மருத்துவ அடிப்படையில் ஆகுமா? அல்லது தாயத்து போன்ற ஷிர்க் ஏற்படுமா?

முஹம்மது இஸ்மாயில், பிரான்ஸ்

பதில் :

தாங்கள் குறிப்பிடும் அந்த வளையத்தை மருத்துவக் குணம் கொண்ட பொருட்களால் தயாரித்துள்ளார்களா? அல்லது மந்திரத்தின் பெயரால் தயாரித்து விற்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் நாமறிந்த வரை இது போன்ற உலோக வளையங்களை அணிவதால் எந்த நோயும் குணமடைவதாக மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.

அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகக் கூறியிருப்பதால் மேற்படி செம்பு வளையங்கள் பெரும்பாலும் மந்திர சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் தயாரிக்கப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் இந்து மதத்திலும், இஸ்லாத்தின் பெயரால் லெப்பைத் தொழில் நடத்தி ஏமாற்றுபவர்களிடமும் செம்புத் தகடு, வளையம் போன்றவற்றை மந்திரத்திற்காகப் பயன்படுத்தும் வழக்கம் காணப்படுகிறது.

எனவே மருத்துவக் குணம் கொண்டது என்று தெளிவாக நிரூபிக்கப்படாத வரை இது போன்ற பொருட்களால் குணம் கிடைக்கும் என்று நம்பினால் அது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகத் தான் ஆகும். நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்வதற்கும், குர்ஆன் வசனங்களை ஓதி நிவாரணம் தேடுவதற்கும் தான் இஸ்லாத்தில் அனுமதி உள்ளது.

———————————————————————————————————————————————–

அபூபக்ர் (ரலி) வரலாறு                         தொடர் – 31

ஆற்றங்கரையில் ஓர் அபார போர்

எம். ஷம்சுல்லுஹா

சங்கிலிப் போரில் தோற்றோடிய பாரசீகர்களை முஸ்லிம்கள் பெரும் பாலம் வரை துரத்தியடித்தனர். அந்தப் பாலம் இன்றைய பஸராவில் ஃபுராத் நதியில் அமைந்துள்ளது.

தளபதி காலித் பின் வலீத் அத்துடன் பாரசீகர்களை விட்டு விடவில்லை. அதற்கப்பாலும் முஸன்னா பின் ஹாரிஸா தலைமையில் ஒரு படையை அனுப்பி பாரசீகர்களைப் பின்தொடரச் செய்தார்.

காலிதின் அடுத்த இலக்கு மதாயின் நகரம்! அந்த மதாயினை அடைவதற்கு முன்னால் பாரசீகர்களைத் தப்ப விட்டு விடக் கூடாது என்பது காலிதின் நோக்கம்.

மதாயின் நகரத்தை அடைவதற்கு முன்னால் பாரசீகர்களை இன்னும் ஒரு கை பார்த்து விட வேண்டும் என்பது அவரது கணக்கு! அதற்காகத் தான் முஸன்னா பின் ஹாரிஸாவின் துரத்தல் பணி தொடர்ந்தது.

முஸன்னா, முஅன்னாவின் முற்றுகைகள்

இந்தத் துரத்தல் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பாரசீக அரசியின் கோட்டையை முஸன்னா காண்கிறார். பாரசீகத்தின் கொம்பன் ஹுர்முஸ் களையெடுக்கப் பட்டு விட்டான்; இவளுக்கு என்ன இங்கு ஆதிக்கம்? “பெண் கோட்டை’ என்று பெயர் பெற்ற அந்தக் கோட்டையை முஸன்னா முற்றுகையிடாமல், தன்னுடைய சகோதரர் முஅன்னாவை அனுப்பி வைத்தார். அவளது கணவனின் கோட்டையை முஸன்னா முற்றுகையிட்டார்.

முஸன்னாவிடம் மோதிய அவளது கணவர் மரணத்தைத் தழுவுகின்றார். கணவனுக்கு நேர்ந்த கதி தான் தனக்கும் நேரும் என்று எண்ணிய பாரசீக அரசி, முஅன்னாவிடம் பணிகின்றாள். இஸ்லாத்தில் மட்டுமல்ல! முஅன்னாவின் இல்லற வாழ்விலும் இணைந்து விடுகின்றாள்.

அது போன்று சங்கிலிப் போருக்குப் பின்னால் பாரசீகத்தின் குட்டிக் குட்டி சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றும் படி காலித் தமது படைகளைப் பல முனைகளிலும் அனுப்பி வைத்தார்.

இதற்கிடையே இராக்கில் உள்ள விவசாயிகள் யாரையும் காலித் கைது செய்யவில்லை. ஆனால் பாரசீகப் போராளிகளையும் அவர்களுக்கு உதவி செய்த விவசாயிகளையும் போர்க் கைதிகளாகப் பிடித்தார். இராக்கிய விவசாயிகளை இஸ்லாமிய ஆட்சிக்குத் திறை செலுத்துமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர்கள் திறை செலுத்தலாயினர்.

மதாரில் மற்றொரு போர்

காலிதின் படைகள் இவ்வாறு வெற்றிக் கனிகளைப் பறித்து முடிப்பதற்குள்ளாக அந்த மாவீரரை மற்றொரு போர்க்களம் அழைக்கிறது. அது தான் மதார் என்ற போர்க்களமாகும்.

பாரசீகர்களை முஸன்னா ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் மதாயினை நோக்கி பாரசீகத்தின் பெரும் படை ஒன்று முஸ்லிம்களிடம் போர் புரிவதற்குப் புறப்பட்டு வருவதாகக் காலிதுக்குத் தகவல் கிடைக்கின்றது.

உதவி வருமுன் உயிரிழந்த ஹுர்முஸ்

இராக்கை நோக்கிப் படையெடுத்து வருவதற்கு முன்னால் பாரசீக ஆளுநர் ஹுர்முஸுக்குக் காலித் கடிதம் எழுதியிருந்தார். அதில் இஸ்லாத்திற்கு வந்து விடு; அல்லது வரி செலுத்து என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை ஏற்காமல் காலிதை எதிர்ப்பது என்று முடிவெடுத்த ஹுர்முஸ் தனக்கு உதவி செய்ய படை அனுப்பி வைக்குமாறு பாரசீகப் பேரரசர்களான ஷீரா பின் கிஸ்ரா, அர்தஷீர் பின் ஷீராவுக்குக் கடிதம் எழுதியிருந்தான்.

இந்தப் பேரரசர்கள் தங்கள் ஆளுநரின் கோரிக்கையை ஏற்று “காரின்’ என்பவனின் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அந்தப் படை ஹுர்முஸுக்கு உதவுவதற்காக முன்னேறி வந்து கொண்டிருக்கும் போது, வழியில் குபாத், அனூஷஜான் ஆகிய இருவரையும் சந்திக்கின்றது. அந்த இருவரும் ஹுர்முஸுக்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் நின்று போரிட்டவர்கள். காலிதின் வாள் வீச்சிற்கு அஞ்சி ஓட்டமெடுத்தவர்கள். அவர்களைத் தான் “காரின்’ எதிரில் கண்டான். தோல்வி முகம் கண்ட அவ்விருவரின் படையினரையும் ஒரு வகையாகப் பேசி இழுத்து, தன் படையினருடன் சேர்த்துக் கொண்டான்.

எந்த ஹுர்முஸுக்கு உதவி செய்ய வந்தார்களோ அந்த ஹுர்முஸ், தனக்கு உதவ வந்த படையைக் காணாமலேயே காலிதின் கைகளால் கொல்லப்பட்டு விட்டான் என்ற விபரம் அப்போது தான் காரினுக்குத் தெரிய வந்தது. ஹுர்முஸ் போனால் என்ன? காலிதை நாம் ஒரு கை பார்ப்போம் என்று எண்ணி குபாத், அனூஷஜான் ஆகியோருடன் காலிதை எதிர்த்துக் களம் காண காரின் முடிவெடுக்கின்றான்.

வாய்க்கால் கரையில் வாட்போர்

அதன்படி மதார் என்ற நகரில் திஜ்லா நதியின் கிளையான ஒரு வாய்க்கால் கரையில் தன்னுடைய படையை காரின் நிறுத்துகிறான். பாரசீகப் படையைப் பின் தொடர்ந்து வரும் முஸன்னா இப்படியொரு புதுப் படையைக் கண்டதும் சற்று அதிர்ச்சியடைகிறார். தான் மட்டும் இந்தப் படையை எதிர் கொண்டால் அது தோல்வியில் போய் முடிந்து விடும் என்று உறுதியாக நம்பினார். அவரும் அந்தப் படை தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து தனது படையுடன் தங்கினார். இது பற்றி காலிதுக்கு விரிவாக ஒரு கடிதத்தை முஸன்னா எழுதினார்.

மதாயினை நோக்கி பாரசீகப் படை வருகின்றது என்று காலிதுக்கு வந்த தகவல் இது தான். முஸன்னாவின் கடிதம் தான் காலிதுக்கு விரிவான விளக்கத்தைக் கொடுத்தது.

முதலில் காரின், முஸன்னாவை எதிர்த்துப் போரிடப் போகிறான் என்ற செய்தி வந்ததும் காலித் பயந்தார். முஸன்னா மட்டும் போரை எதிர் கொண்டால் தோல்வியில் முடிந்து விடும் என்று அஞ்சினார். அதனால் கடிதம் வந்த மாத்திரத்தில் காலித், மதாருக்குப் புறப்பட்டு வந்து விட்டார்.

நியாயமான பயம்

ஏதேனும் ஒரு வகையில் இஸ்லாமியப் படைக்கு ஒரு தோல்வியைக் கொடுத்தாக வேண்டும் என்பதில் பாரசீகப் படையினர் வெறியாக இருந்தனர். முஸன்னாவைத் தோற்கடித்து விட்டால், இஸ்லாமியப் படையை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என்று பாரசீக மக்களிடத்தில் சொல்லி, இதுவரை தங்களுக்கு ஏற்பட்ட இழிவுக்கு இதை ஈடாக்கலாம் அல்லவா?

இப்படி ஒரு வாய்ப்பு பாரசீகர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று முஸன்னா பயந்தார். அவரது பயத்தில் உண்மையில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் இந்தப் பயத்தையெல்லாம் களைகின்ற வகையில் காலித் வாய்க்கால் கரைக்கு வந்து விட்டார். இது பாரசீகப் படைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது; ஆட்டத்தைக் கொடுத்தது.

இருப்பினும் குபாதும், அனூஷஜானும் தங்களுக்கு ஹுபைர் என்ற இடத்தில் நடந்த போரில் ஏற்பட்ட இழிவை, காலிதிடமிருந்து சிந்துகின்ற இரத்தத்தில் கழுவ நினைத்தனர். காலிதின் படையைத் தோற்கடித்து பாரசீகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும், இழந்த கவுரவத்தை மீட்கவும் உறுதி பூண்டனர்.

காலித் படை வரவு கருணையின் வரவு

தனிப் படையாக நின்று தங்களுக்கு என்ன நேரப் போகின்றதோ? என்று கவலையில் ஆழ்ந்து போயிருந்த முஸன்னாவுக்குக் காலிதின் வரவு அல்லாஹ்வின் கருணையாகவும் அவனது தனிப் பெரும் அற்புதமாகவும் தெரிந்தது. இப்போது முஸன்னாவின் படையினர் ஆட்டத்திலிருந்து அமைதிக்கு, அலைக்கழிப்பிலிருந்து நிலைப்பாட்டிற்குத் திரும்பினர்.

இங்கு காலிதின் கூரிய வாள்களை விட, “மரணத்தை நேசிக்கும் ஒரு படையை என்னுடன் அழைத்து வந்திருக்கிறேன்’ என்று காலித் கூறிய வீர வரிகள் உண்மையாயின. முஸ்லிம்களின் வீர வாட்கள் மின்னல் வேகத்தில் விளையாட ஆரம்பித்தன.

ஒற்றைக்கு ஒற்றை என்று காலிதை நோக்கிக் கூப்பாடு போட்ட காரினுக்கு, துணைத் தளபதிகளில் ஒருவரான மஃகில் பின் அல்அஃஷா என்பார் சரியான சாப்பாடு போட்டு சமாதியாக்கினார்.

குபாதை, அதீ பின் ஹாதம் தீர்த்துக் கட்டினார். அனூஷஜானின் கதையை ஆஸிம் முடித்தார். இப்படி முப்பதாயிரம் பேர் முஸ்லிம்களின் கைகளால் உயிரிழந்தனர். அதிகமான பேர் அருகிலுள்ள ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

இவ்வாறாக அல்லாஹ்வின் உதவி காலிதின் அணிக்கு அமைந்து பாரசீகத்திடமிருந்த மதார் முஸ்லிம்களின் கைகளில் வந்தது. போரின் வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி விட்டு எஞ்சியவற்றைப் போராளிகளுக்குப் பங்கிட்டு அளித்தார்.

திறை செலுத்துகிறோம் என்று ஒப்புக் கொண்ட விவசாயிகளைத் தவிர மற்றவர்களை இஸ்லாமியப் படையினர் சிறை பிடித்து, போர்க் கைதிகளாக்கினர்.

கிறித்தவ மதத்தைச் சார்ந்த அபுல் ஹஸன் அல்பஸரீ, உஸ்மான் (ரலி)யின் அடிமை மாஃபளா, முகீரா பின் ஷுஃபாவுடைய அடிமை அபூஸியாத் ஆகியோரும் இந்தக் கைதிகளில் அடங்குவர்.

இதன் பின்னர் படையின் பொறுப்பைக் கவனிப்பதற்கு ஸயீத் பின் நுஃமான் என்பாரையும், வரி வசூல் செய்வதற்கு ஸுவைத் பின் முக்ரின் என்பாரையும் காலித் நியமனம் செய்கின்றார். ஹுபைரின் பொருளைத் திரட்டுவதற்காக ஹுபைரிலேயே தங்குமாறு ஸுவைதுக்கு உத்தரவிடுகின்றார்.

வெற்றிப் பொருட்களை ஆட்சித் தலைவருக்கு அனுப்பிய பின் பாரசீகர்களின் அடுத்த நடவடிக்கையை கண்காணிக்கும் பணியில் காலித் இறங்கினார். இப்போர் நடைபெற்றது ஹிஜ்ரி 12ம் ஆண்டாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

————————————————————————————————————————————————–

நரகத்தைத் தரும் மவ்லிது

குர்ஷித்

தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் இந்த மவ்லிதைத் தவறாமல் நிறைவேற்றி விடுவார்கள்.

ரமளான் மாத இரவில் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது போன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் வந்து விட்டால் வியாபாரத்தை விட்டு விட்டு பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்.

இதற்கெல்லாம் பள்ளிவாசலுக்குச் செல்லாதவர்கள் ரபீயுல் அவ்வல் மாதத்தில் மவ்லிது என்னும் அரபிப் பாடலைக் கேட்பதற்காகவும், அதைத் தொடர்ந்து வழங்கப்படும் நேர்ச்சையை வாங்குவதற்காகவும் பள்ளிவாசலுக்குச் செல்வார்கள். அந்த அளவுக்கு மவ்லிது என்பது இவர்களிடம் மிகப் பெரும் வணக்கமாகக் கருதப்படுகின்றது.

எந்த ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ் கூறியிருக்க வேண்டும்; அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வணக்கத்தைச் செய்து காட்டியோ, அல்லது சொல்லியோ இருக்க வேண்டும். அல்லது நபித்தோழர்கள் செய்த செயலை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அந்தச் செயல் அவனிடமிருந்து ஏற்கப்படாது. அந்த வணக்கத்தால் மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக தீமை தான் கிடைக்கும்.

நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அவனது அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 2697

இந்த இஸ்லாம் மார்க்கத்தை இறைவன் தன்னுடைய தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமாக, அவர்கள் வாழும் போதே பூர்த்தியாக்கி விட்டான். இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறிக் காட்டுகிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 5:3

அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப் பட்ட இந்த மார்க்கத்தில் மவ்லிது இருக்கவில்லை. இந்த மவ்லிது தோன்றியது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் தான். தமிழகத்தைச் சேர்ந்த சிலர் தான் இதை இயற்றினார்கள். உலகில் எத்தனையோ மொழி பேசக் கூடிய முஸ்லிம்கள் இருந்தும் தமிழ் மற்றும் மலையாளம் பேசும் முஸ்லிம்களிடம் மட்டும் தான் மவ்லிது ஓதும் வழக்கம் உள்ளது.

இந்த மவ்லிதில் வரக்கூடிய ஒவ்வொரு வார்த்தையும், அல்லாஹ்வின் பண்புகளை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து, நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்தக் கூடியதாகவும், குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதக் கூடியதாகவும் உள்ளது.

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

அல்குர்ஆன் 11:6

(முஹம்மதே!) உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை)அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

அல்குர்ஆன் 20:132

இந்த வசனங்களில் செல்வத்தை அளிக்கும் அதிகாரம், உணவளிக்கும் அதிகாரம் தனக்கே இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் இதற்கு மாற்றமாக மவ்லிதின் வரிகள் இந்தப் பண்புகளை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கி அழகு பார்க்கின்றன.

என் வறுமை, கவலை காரணமாக கையேந்துகிறேன்.

உங்களின் அளப்பரிய அருளையும் வள்ளல் தன்மையையும் நான் நம்பியுள்ளேன்.

இந்த ஏழை மூழ்குவதற்கு முன்னால் காப்பாற்றி விடுங்கள்.

உங்கள் தாராளத் தன்மையால் எரியும் வெப்பத்தை அணைத்து விடுங்கள்.

இவை சுப்ஹான மவ்லிதில் இடம் பெறும் வரிகளாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு வறுமையை விரட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அவர்களே வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள். மேலும் சத்திய ஸஹாபாக்களும் வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

தங்குவதற்கு இடமில்லாமலும், இறந்த பிறகு போர்த்துவதற்கு ஆடை இல்லாமலும் எத்தனையோ நபித் தோழர்கள் கஷ்டப்பட்டுள்ளார்கள். அவர்களில் எவரும் நபியவர்களிடம் சென்று வறுமையைப் போக்கும் படி முறையிட்டதில்லை.

இறைவனுக்கு மட்டுமே உரித்தான இன்னொரு பண்பு பாவங்களை மன்னிக்கும் ஆற்றலாகும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

அல்குர்ஆன் 3:135

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:53

படைத்த ரப்புல் ஆலமீனின் பண்பான இந்த மன்னிக்கும் ஆற்றலை, மவ்லிதை இயற்றியவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிறார்கள்.

நீங்களே பாவங்களை மன்னிப்பவர்.

அழித்தொழிக்கும் குற்றங்களையும் மன்னிப்பவர்.

தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீங்கள் தான்.

என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்.

என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்.

இவ்வாறு இந்த சுப்ஹான மவ்லிதில் வரும் யாநபி பைத் என்ற பாடல் கூறுகின்றது.

இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு முன், பின் பாவங்களை மன்னித்து விட்டதாகத் தன் திருமறையில் கூறுகிறான்.

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

அல்குர்ஆன் 48:1, 2, 3

இறைவனால் முன், பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதே என்று நபியவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடாமல் இருந்ததில்லை. மாறாக ஒரு நாளைக்கு நூறு தடவைக்கு மேல் பாவ மன்னிப்புத் தேடியுள்ளார்கள். மக்களையும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடும்படி வலியுறுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். நான் ஒரு நாளையில் நூறு தடவை அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுகின்றேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2702

நபியவர்களுக்குப் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் இருந்தால் அவர்கள் இறைவனிடம் தினமும் நூறு தடவை பாவ மன்னிப்புத் தேடியிருக்க மாட்டார்கள். மக்களையும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேடுமாறு கூறியிருக்க மாட்டார்கள். மாறாக, “மக்களே! நீங்கள் என்னிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்; நான் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பவன்’ என்று தான் கூறியிருப்பார்கள்.

அது மட்டுமில்லாமல், “யாரையும் மன்னிக்கும் அதிகாரமோ, தண்டிக்கும் அதிகாரமோ உமக்கு இல்லை’ என நபி (ஸல்) அவர்களை நோக்கி வல்ல அல்லாஹ் கண்டிப்பாகக் கூறி விட்டான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

அல்குர்ஆன் 3:128

பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் நபி (ஸல்) அவர்களுக்கும் இல்லை. வேறு எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படவில்லை. யாருக்குமே வழங்காத ஆட்சியதிகாரத்தை சுலைமான் நபியவர்களுக்கு இறைவன் வழங்கினான். ஆனால் அவர்களுக்குக் கூட பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இல்லை. அவர்கள் இறைவனிடம் தான் பாவ மன்னிப்புத் தேடியுள்ளார்கள்.

என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்எனக் கூறினார்.

அல்குர்ஆன் 38:35

திருமறையில் இறைவன் தன்னுடைய தோழர் என்று பாராட்டும் இப்ராஹீம் (அலை) அவர்களும் இறைவன் தான் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

தீர்ப்பு நாளில் என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்என ஆசைப்படுகிறேன்.

அல்குர்ஆன் 26:82

இப்படி ஏராளமான வசனங்களையும் நபிமொழிகளையும் மறுத்து, வல்ல நாயனுக்கு இருக்கக்கூடிய பண்புகளை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய நச்சுக் கருத்துக்களும், குப்பைகளும் தான் இந்த மவ்லிதில் அடங்கியுள்ளன.

தன் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரும் அநியாயக்காரன் யார்? என்று திருக்குர்ஆனில் பல இடங்களில்  இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதோ எங்கள் சமுதாயத்தினர் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவற்றைப் பற்றி அவர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டாமா? அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட மிகப் பெரும் அநீதி இழைத்தவன் யார்?

அல்குர்ஆன் 18:15

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்.

அல்குர்ஆன் 6:21

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தன் மீது பொய் கூறுபவர்களின் தங்குமிடம் நரகம் என்று எச்சரித்துள்ளார்கள்.

என் மீது எவன் வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுவானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 108

அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இவ்வளவு கடுமையாக எச்சரித்திருந்தும் இந்த மவ்லிதுப் பாடல்களில் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் சம்பந்தப்படுத்தி பல்வேறு கட்டுக்கதைகள் கூறப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதரின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட இந்தப் பாடல்களைப் பாடுவது பாவமாகாதா? நன்மை என்று எண்ணிக் கொண்டு, நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இந்தச் செயலை இனியும் நாம் ஆதரிக்கலாமா?

குர்ஆன், ஹதீசுக்கு முரண்பட்ட போதனைகளும், குப்பைகளும் நிறைந்துள்ள இந்த மவ்லிதைப் பாடி வயிறு வளர்க்கும் மவ்லவிகளும் இதைப் புறந்தள்ளி விட்டு, குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும் பொருளுணர்ந்து படித்து, செயல்படக் கூடியவர்களாக ஆக வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக!

————————————————————————————————————————————————

ஷியாக்கள் ஓர் ஆய்வு                                 தொடர் – 3

மகான்களும் மறைவான ஞானமும்

அபூஉஸாமா

அல்லாஹ்வுடைய பண்புகளில் யூதர்கள் விளையாடுகிறார்கள். அது போன்று அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் விளையாடுகின்றனர். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கு அறியாமையும் மறதியும் உள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள்.

இது போன்ற விளையாட்டை இன்று நம்மை உக்கிரமாக  எதிர்க்கின்ற சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோரும் செய்கின்றனர். பெயர் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்று வைத்துள்ளனர். ஆனால் இவர்களது செயல்பாடுகள் அனைத்தும் ஷியாயிஸத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.

இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம், “நீங்கள் ஏன் அவ்லியாக்களிடம் கேட்கிறீர்கள்? அல்லாஹ்விடம் கேட்கக் கூடாதா?’ என்று நாம் கேட்டால் அதற்கு அவர்கள் ஓர் உதாரணத்தைக் கூறுகிறார்கள்.

அல்லாஹ் நீதிபதியைப் போன்றவன். இந்த அவ்லியாக்கள் வக்கீல்களைப் போன்றவர்கள். அதாவது நீதிபதியாகிய அல்லாஹ்விடம் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் நம்முடைய கோரிக்கையை எடுத்துக் கூறி அவனிடம் உத்தரவு பெற்றுத் தருவார்கள்.

இது தான் இவர்கள் கூறும் உதாரணமாகும்.

இந்த உதாரணத்தில் இவர்கள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கை அப்படியே பளிச்சிட்டுத் தெரிந்து பல்லிளிக்கின்றது.

நீதிபதிக்கு வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பற்றிய விபரம் தெரியாது. அதனால் அவரைப் பற்றி, அவரது தரப்பை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் – வழக்கறிஞர் தேவை.

ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் வழக்கறிஞர் தன்னுடைய வாதத் திறமையினால் நீதிபதியிடம் தனது கட்சிக்காரரை நல்லவராகச் சித்தரித்து விடுதலை வாங்கிக் கொடுத்து விடுவார். நீதிபதியும் உண்மை தெரியாததால் குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவார்.

இந்த நீதிபதியின் ஸ்தானத்தில் அல்லாஹ்வை வைத்துப் பார்க்கிறார்கள் என்றால் இதற்கு என்ன பொருள்? அல்லாஹ்வுக்கு தன்னுடைய அடியார்களைப் பற்றிய விளக்கம் தெரியாது. அவனுக்கு அறியாமை உள்ளது என்பது தானே இதன் பொருள்!

இவர்கள் இப்படி விளங்கி இருப்பதால் தான் அவ்லியாக்கள் பக்தியிலிருந்து விடுபடவில்லை; விலகவில்லை. அதில் அழுத்தமான பிடிப்புடன் இருக்கிறார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளில் – ஆற்றல்களில் விளையாடுபவர்கள் ஷியாக்கள். அந்த ஷியாக்களின் விளையாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கையில் எடுத்திருக்கின்றனர்.

ஆனால் அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் அவனது பண்புகளில் கடுகளவு கூட குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்கள். அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களை தம் இறக்கைகளால் முதல் வானம்   வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன், “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவன் ஆவான். “அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும். உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்என்று வானவர்கள் கூறுகின்றனர்….. (சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6408

இந்த ஹதீஸில் அல்லாஹ் மலக்குகளிடம் விசாரிப்பதை வைத்து அல்லாஹ்வுக்கு அறியாமை இருக்கிறது என்று யாரும் விளங்கி விடக் கூடாது என்பதற்காக, அல்லாஹ்வின் மீது “அறியாமை’ என்ற சாயல் கூட வந்து விடாமல் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் தான், வஹுவ அஃலமு – அவன் அடியார்களைப் பற்றி நன்கறிந்தவன் என்ற விளக்கத்தையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளில் அவனது அறிவுக்கு, ஆற்றலுக்குக் கடுகளவு கூட பாதகம் வராத அளவுக்குப் பார்க்கின்ற இந்த மார்க்கத்தில் தான் அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பிக்கும் அபத்தமான உதாரணங்களை சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோர் சேர்த்து அழகு பார்க்கின்றனர் என்றால் இவர்கள் கடவுள் கொள்கை விஷயத்தில் ஷியா விஷத்தையே பக்காவாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது இங்கு உறுதியாகின்றது. இதன் மூலம் இவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற போர்வையில் இருக்கும் ஷியாக்கள் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி ஷியாக்கள் பற்றிய ஆய்வுக்கு வருவோம்.

இமாம்களின் மறைவான ஞானம்?

கடவுள் கொள்கையில் ஷியாக்கள் விளையாடும் அடுத்த விளையாட்டு மறைவானஞானம் சம்பந்தப்பட்டதாகும்.

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்பவற்றை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 11:123

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 16:77

அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 18:26

இந்த வசனங்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களிலும் மறைவான ஞானம் தனக்கே உரியது என்று ஏக இறைவன் உரிமை கொண்டாடுகின்றான்.

அதாவது இந்தத் தன்மை கடவுளாகிய தனக்கு மட்டுமே உண்டு; இந்தத் தன்மையை தன்னிடமிருந்து யாரும் தட்டிப் பறிக்க முடியாது; யாருக்கும் இந்தத் தன்மையை வழங்கி அவர்களைக் கடவுளாக ஆக்கவும் மாட்டேன் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

ஆனால் இந்த ஷியாக்களோ தங்களது இமாம்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறி அவர்களை மனிதர்கள், இறைத் தூதர்கள், மலக்குகளை விட உயர்த்துகின்றனர்.

“தாங்கள் அறிய வேண்டும் என்று நினைத்தால் (எல்லாவற்றையும்) இமாம்கள் அறிந்து கொள்வார்கள்’ என்றொரு தலைப்பிட்டு ஷியா இமாம் கலீனி என்பவர் தன்னுடைய நூலான அல்காஃபி என்ற நூலில் குறிப்பிடுவதாவது:

அறிய வேண்டும் என்று நினைக்கும் போது இமாம் கண்டிப்பாக அறிந்து கொள்கிறார். இமாம்கள் தாங்கள் எப்போது மரணமாகப் போகின்றோம் என்பதை அறிவார்கள்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 258

“தங்களின் சுய விருப்பத்தின் படியே இமாம்கள் மரணிக்கிறார்கள்’ என்ற தலைப்பின் கீழ் கலீனி தெரிவிப்பதாவது:

மறைவானவற்றையும், தனக்கு இனி என்ன நேரப் போகிறது என்பதை அறியாத இமாம் அல்லாஹ்வின் படைப்பில் ஓர் ஆதாரமிக்கவர் அல்லர்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 196, 258

ஷியாக்கள் அல்லாஹ்வுடைய பண்பை எப்படித் தங்கள் இமாம்களுக்குத் தாரை வார்க்கிறார்கள் என்று பாருங்கள். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மறைவான ஞானத்தில் அவர்கள் செய்கின்ற விளையாட்டைப் பாருங்கள். அதிலும் குறிப்பாக ஷியா இமாம், தாம் எப்போது மரணிக்கப் போகிறோம் என்பதை அறிந்து கொள்வாராம்.

அற்புத ஆட்சியாளர் சுலைமான் நபி

சுலைமான் நபியவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா அளித்த ஆட்சியைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள்.

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். “நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்என்று அவ்விருவரும் கூறினர்.

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்என்று அவர் கூறினார்.

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாதுஎன்று ஓர் எறும்பு கூறியது.

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். “என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!என்றார்.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். “ஹுத்ஹுத்பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்” (என்றும் கூறினார்).

(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்என்று கூறியது.

அல்குர்ஆன் 27:15-22

பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு ஆகியவற்றை அறியும் ஆற்றல், மனிதர்கள், ஜின்கள் ஆகியோர் அவர்களுக்கு வசப்பட்டிருந்தது என சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சொரிந்த அருள் மழைகளை, அற்புத நிலைகளை சூரத்துந் நம்ல் என்ற அத்தியாயம் அள்ளித் தெளிக்கின்றது.

உங்கள் போரின் போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா? வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

அல்குர்ஆன் 21:80, 81

இந்த வசனங்களில் சுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வளவு மேன்மையைப் பெற்ற சுலைமான் நபியவர்களுக்கு ஹுத்ஹுத் என்ற பறவை எங்கு சென்றது என்ற விபரம் தெரியவில்லை. அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அதைப் பற்றி விசாரித்திருக்க மாட்டார்கள்.

மேலும் அந்தப் பறவை திரும்பி வந்து, “உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறுகின்றது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள பறவைக்குத் தெரிந்த ஒரு விஷயம் சுலைமான் நபிக்குத் தெரியவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம் மறைவான செய்திகள் அனைத்தையும் அறிவார்கள் என்று ஷியாக்கள் நம்புகின்றனர்.

சுலைமான் நபியவர்களின் மரணத்தைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.

அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்என்று கூறினோம்.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமேஎன்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:1, 2, 3

பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு, காற்றின் கட்டுப்பாடு, ஜின்கள் மீது ஆட்சி என்று பேராட்சி செய்த பேரரசர் சுலைமான் (அலை) அவர்கள் தாம் விரும்பியபடி மரணிக்கவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம்கள் நினைப்பதை அறிவார்களாம்; விரும்பியபடி மரணிப்பார்களாம். இப்படிக் கதை அளந்துள்ளார்கள் ஷியாக்கள்.

மறைவானவற்றை அறியாத ஒருவர் இமாமே கிடையாதாம்! என்ன நெஞ்சழுத்தம்? உண்மையில் இது யூதர்களின் நெஞ்சழுத்தமாகும். அந்த நெஞ்சழுத்தத்தை இவர்கள் அனந்தரமாகப் பெற்றிருப்பதால் அவற்றை இவர்கள் அப்படியே பிரதிபலிக்கின்றனர்.

இன வாதமும் இறை வாதமும்

கலீனியின் கைச்சரக்கை இன்னும் பாருங்கள்.

தனக்கு ஷியாக்களின் 8வது இமாம் அலீ பின் மூஸா எழுதினார் என அப்துல்லாஹ் பின் ஜுன்துப் அறிவிப்பதாவது:

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இது கலீனி கக்கிய விஷக் கருத்தாகும்.

யூதர்களைப் போன்று தங்கள் ஜாதியை உயர்த்திப் பேசுகின்ற இன வாதம் இந்த வார்த்தைகளில் அப்படியே பிரதிபலிக்கின்றன என்பதை இதைப் பார்த்தவுடனேயே விளங்கிக் கொள்ளலாம்.

இன வாதம் பேசினால் பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் இந்த ஷியாக்கள் இறை வாதம் பேசுகின்றார்கள்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ள இந்த ஞானத்தைத் தங்கள் இமாம்களுக்கு இருப்பதாகப் பறை சாற்றுகின்றார்கள்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

அல்குர்ஆன் 57:22

மனிதனுக்கு ஏற்படும் சோதனைகள் அனைத்தும் தன்னுடைய பதிவேட்டில் பதிந்து இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் ஷியாக்களோ அவற்றைத் தங்களது இமாம்கள் பார்த்து விட்டதாகக் கதையடிக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் படித்ததும் கடவுள் கொள்கையில் ஷியாக்கள் இவ்வளவு பெரிய விளையாட்டை விளையாடுகிறார்களா? என்ற அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படலாம். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற விதத்தில் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் ஓதும் மவ்லிது கிதாபுகளில், குறிப்பாக முஹய்யித்தீன் மவ்லிது என்ற பாடலில் புதைத்து வைத்திருக்கின்றனர். அதையும் கொஞ்சம் தோண்டிப் பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்