ஈஸ்டர் பண்டிகை – ஒரு பார்வை

சில தினங்களுக்கு முன் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இன்னும் சில தினங்களில் கிருத்துவ சகோதரர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட உள்ளனர். இவ்வருடம் அதே தினத்தில் யூத சமுதாயமும் பேசாக் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
குர்ஆனும் ஹதீஸும் யூத, கிருத்துவர்கள் பற்றியும் அவர்களது நம்பிக்கைகள் பற்றியும் பல இடங்களில் பேசுவதால் அவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வது பிரச்சார பணியாளர்களுக்கு அவசிமாகிறது.
இஸ்லாதின் அடிப்படை ஆதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் நோன்புப் பெருநாள் எப்போது கொண்டாட வேண்டும், எப்படிக் கொண்டாட வேண்டும், ஏன் கொண்டாட வேண்டும் என்ற விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
ரமலான் மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதால் அதற்கு நன்றி தெரிவித்து, அம்மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் இறுதியில் தொழுதும் இறைவனை அதிகம் பெருமைப்படுத்தியும் எளியோருக்கு ஈன்றும் கொண்டாடி முடித்தோம்.
யூத பேசாக் பண்டிகையும் அதன் நாள், கொண்டாடும் முறை எல்லாம் பைபிளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஈஸ்டர் பற்றி பைபிளில் எதுவுமில்லை. அது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
முதலில் யூத பேசாக் பண்டிகையை பற்றியும் பிறகு கிருத்துவ ஈஸ்டர் பற்றியும் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

நமது நிலைபாடு :

ஒவ்வொரு மதத்தைப் பற்றிய செய்திகளையும் அம்மதத்தினர் சொல்லும் விதமாகவே இங்கு சொல்லப்படும். அந்தச் செய்திகளைச் சொல்வதால் அவற்றை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்று ஆகாது. மறுக்கிறோம் என்றும் ஆகாது.
யூத, கிருத்துவ கூற்றுகளில், அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை அங்கீகரித்துள்ளார்களோ அதை மட்டும் ஏற்கிறோம். அவர்கள் எதை மறுத்துள்ளார்களோ அதை மறுக்கிறோம். அதாவது, அதில் குர்ஆன் சுன்னாவிற்கு ஒத்துள்ளதை ஏற்கிறோம். முரணானவற்றை மறுக்கிறோம்.
குர்ஆன், ஹதீசுக்கு இசைவாகவோ, முரணாகவோ இல்லாமல் பொதுவாக இருக்கும் கருத்துக்களை ஏற்கவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம்.
இந்த நிலைபாட்டைக் கவனத்தில் கொண்டு யூத பேசாக் பண்டிகை பற்றியும், கிறித்தவ ஈஸ்டர் பற்றியும் பார்ப்போம்.
யூத பேசாக் பண்டிகை:
கர்த்தர் யூத மக்களை (ஃபிர்அவ்ன் எனப்படும்) பார்வோனிடமிருந்து மீட்டுக் காப்பற்றிய தினத்தின் கொண்டாட்டம் பேசாக் எனப்படுகிறது.
தமிழில் இதை பஸ்கா என்பர். ஆங்கிலத்தில் பேசாக் என்ற எபிரேய (ஹீப்ரு) மொழிச் சொல்லுக்கு கடந்து செல்லுதல் எனப் பொருள்.
கர்த்தர் யூத மக்களை பாரோனிடமிருந்து மீட்டுக் காப்பற்றிய நிகழ்வுகளை பைபிளின் இரண்டாம் நூலான யாத்திராகமம் விளக்குகிறது.
எகிப்தில் வாழ்ந்த ஒவ்வொரு இஸ்ரவேலரும் ஒரு ஆட்டைப் பலியிட்டு அதன் இரத்தத்தை தம் வீட்டின் வாசலில் தெளித்து அடையாளமிட வேண்டும் என கர்த்தர் மோசேவுக்குக் கட்டளையிட்டார். அன்று இரவு கர்த்தர் எகிப்து தேசமெங்கும் சுற்றி வந்து இரத்தம் தெளிக்கப்படாத வீடுகளிலுள்ள முதல் குழந்தைகளைக் கொன்றுவிடுவார். இரத்தம் தெளிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களை ஒன்றும் செய்யாது விட்டுவிட்டு கடந்து செல்லுவார் என மோசேவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
எகிப்தை விட்டு அவர்கள் விரைந்து வெளியேற வேண்டியதால் அப்ப மாவு புளிக்கும் வரை காத்திராமல் புளிக்காத அப்பத்தை உண்ணும்படி கர்த்தர் கட்டளையிட்டார். பின்னர் இஸ்ரவேல் மக்களை பார்வோனிடமிருந்து காப்பாற்றினார்.
இதைத் தலைமுறை தோறும் நினைவுகூர்ந்து கொண்டாடவும் கட்டளையிட்டார்.
1. கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2. இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.
3. நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.
4. ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
5. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம்.
6. அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
7. அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
8. அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.
9. பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
10. அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக.
11. அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா.
12. அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற் பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
13. நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
14. அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்.
15. புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான்.
16. முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்தசபை கூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம்.
17. புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள்.
18. முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.
19. ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான்.
20. புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார்.
21. அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
22. ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப்புறப்படவேண்டாம்.
23. கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார்.
24. இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
25. கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
26. அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால்,
27. இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள்.
(யாத்திராகமம் அதிகாரம் 12, வசனம் 1 – 27)
அடிமைப்பட்டது எப்படி?
(யாக்கூப்) யாக்கோப்பிற்கு கர்த்தர் இஸ்ரேல் எனப் பெயரிட்டதாக ஆதியாகமம் 32:28 கூறுகிறது. அவரது வழிவந்தவர்கள் இஸ்ரவேலர்கள் என்றும் இஸ்ரேல் புத்திரர், இஸ்ரேல் சந்ததியினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். அரபியில் பனூ இஸ்ராயீல் என்பர்.
யாக்கோபின் புதல்வர்களில் ஒருவர் யோசேப்பு ( யூசுப்). தம் தந்தை, யோசேப்பின் மீது அதிக அன்பு கொண்டுள்ளதால் பொறாமைப்பட்டு யோசேப்பின் சகோதரர்கள் அவரைக் கிணற்றில் எறிந்தனர். பின்பு அங்கு வந்த எகிப்து பயணக் கூட்டதினரிடம் அவரை விற்று விட்டனர். எகிப்தில் பஞ்சம் ஏற்பட்டப் போது அதை சமாளித்து நிர்வகிக்க யோசேப்பு அமைச்சராக்கப்பட்டார். அக்காலத்தில் தம் பெற்றோரையும் சகோதரர்களையும் யோசேப்பு எகிப்துக்கு வரவழைத்தார்.
இஸ்ரேல் சந்ததியினர் அந்நாட்டில் பல்கிப்பெருகி வலுவுற்று இருந்தனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அவர்களால் ஆபத்து ஏற்படலாம் என அஞ்சிய அப்போதைய அரசன் அவர்களை அடக்குமுறைகளுக்கு ஆட்படுத்தினான். அவர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அவர்களின் ஆண் குழந்தைகளை அழிக்கத் திட்டமிட்டான். இச்சூழலில் மோசே (மூசா) பிறந்தார். அவர் மூலமாக கர்த்தர் இஸ்ரவேலர்களைக் காப்பற்றினார்.
இஸ்லாமியப் பார்வை :
இது முதல் மாதத்தின் பத்தாம் நாள் நடந்ததாக மேற்கண்ட யாத்திராகமம் 12:2,3 வசனம் கூறுகிறது. யூத ஆண்டின் முதல் மாதத்தில் 15ஆம் நாள் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்வை முஸ்லிம்களும் நினைவுகூர்ந்து நோன்பிருந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர். முஸ்லிம்களும் அவர்களின் முதல் மாதத்தின் பத்தாம் தினத்தில் இந்நாளை அனுசரிக்கின்றனர்.
இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் முஹர்ரம் 10 அன்று முஸ்லிம்கள் நோன்பு நோற்று வந்தனர். நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முந்தைய ஆண்டும் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்றிருந்தனர். அப்போது மதீனா நகரில் இருந்த யூதர்களும் நோன்பு நோற்றிருந்தனர். விசாரித்தபோது மூஸா நபி யூத மக்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றிய நாள் என்று யூதர்கள் விடையளித்தனர்.

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ ‏”‏ مَا هَذَا ‏”‏‏.‏ قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ، هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى‏.‏ قَالَ ‏”‏ فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ ‏”‏‏.‏ فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ‏.‏

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, (மக்களையும்) நோன்பு நோற்குமாறு கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்: புகாரி 2004

وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، أَنَّهُ سَمِعَ أَبَا غَطَفَانَ بْنَ طَرِيفٍ الْمُرِّيَّ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ، بْنَ عَبَّاسٍ – رضى الله عنهما – يَقُولُ حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ – إِنْ شَاءَ اللَّهُ – صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ ‏”‏ ‏.‏ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்’’ என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நூல்:முஸ்லிம் 2088

ஏன் வேறுபாடு?

மோசேயும் இஸ்ரவேலரும் பார்வோனிடமிருந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வு முதல் மாதத்தின் 10ஆம் நாள் நடந்ததாக பைபிள் கூறுகிறது. முஸ்லிம்கள் அந்நிகழ்வை முதல் மாதத்தின் 10ஆம் நாள் நினைவுகூருகின்றனர். யூதர்கள் முதல் மாதத்தின் 15ஆம் நாள் கொண்டாடுகின்றனர். ஆனால் இரு சாராரும் இன்று வெவ்வேறு காலங்களில் கொண்டாடுவது ஏன்? ஏன் இந்த வேறுபாடு?
யூதர்களும் அரபிகளும் சந்திர நாட்காட்டியைக் கொண்டுள்ளனர். இருவரும் முதல் மாதத்தில் கொண்டாடினால் அந்தக் கொண்டாட்டம் ஒன்றாக வரவேண்டும்.
காரணம் யூதர்கள் தங்களின் நாள்காட்டியை சூரிய-சந்திர நாள்காட்டியாக மாற்றிவிட்டனர். அவர்கள் 19 ஆண்டு காலச்சக்கரத்தைப் பின்பற்றுகின்றனர். அதன் 3, 6, 8, 11, 14, 17, மற்றும் 19 ஆண்டுகளில் கூடுதலாக 1 மாதத்தை சேர்க்கின்றனர். அவர்கள் கணக்குப்படி மோசேவுக்கு சுமார் 2500 ஆண்டுகளுக்குப்பின் இந்த மாற்றம் நடைப்பெற்றது. கிபி 359ல் இரண்டாம் ஹில்லேல் (பிமிலிலிணிலி மிமி) இதைக் கொண்டுவந்தார். அன்றைய அரேபிய யூதர்கள் அதைப் பின்பற்றவில்லை என்று அறிய முடிகிறது.
எனவே, யூதர்களின் காலக் கணக்கீட்டு முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் அவர்கள் தங்கள் பண்டிகையை முதல் மாதத்தின் 15ஆம் நாள் கொண்டாடுகின்றனர்.
இது யூத பேசாக் பண்டிகை பற்றிய செய்திகளாகும். இது முஸ்லிம்கள் நோன்பிருந்து கொண்டாடும் ஆஷுரா தினத்துடன் ஒத்துப் போகின்றது.

ஈஸ்டர் பண்டிகை

அடுத்ததாக கிருத்துவர்களின் ஈஸ்டர் பற்றிப் பார்ப்போம்.
ஈஸ்டர் பற்றி பைபிளின் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இது இயேசுவுக்குப் பின் ஏற்படுத்தப்பட்டதாகும்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த பின் மூன்றாம் நாள் உயிர் பெற்று எழுந்தார் என்று பைபிள் கூறுகிறது. அந்த நிகழ்வு கிருத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
(1 கொரிந்தியர் 15:14)
இயேசு உயிர்த்தெழவில்லை என்றால், நமது நம்பிக்கையே வீண் என்று பவுல் பகிரங்க ஒப்புதல் அளிக்கிறார். அந்த நிகழ்வை ஈஸ்டர் தினமாகக் கிருத்துவர்கள் கொண்டாடுகின்றனர்.
யோவானின் சுவிஷேசம் என்ற நூல் புதிய ஏற்பாட்டின் நூல்களில் கடைசியாக எழுதப்பட்டதாகும். அது கிபி 110ல் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதிலும் இந்தக் கொண்டாட்டம் பற்றி எதுவுமில்லை.
இதிலிருந்து, இயேசுவுக்கு 80 ஆண்டுகளுக்குப் பின்னர் வரை வாழ்ந்த கிருத்துவர்கள் ஈஸ்டர் கொண்டாடவில்லை என்பது தெளிவாகும். இந்தக் கொண்டாட்டம் எப்போது துவங்கியது என்பதற்கு எந்தக் குறிப்பும் இல்லை.
இயேசு காலத்தில் யூதர்கள் சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தினர். முதல் மாதத்தின் 15ம் நாள் பஸ்கா கொண்டினர்.
பைபிளின் படி இயேசு தம் இறுதி ஆண்டில் ஒரு வியாழக்கிழமை இரவில் சீடர்களுடன் பஸ்கா விருந்து உண்டார். பின்னர் கெத்சமனே தோட்டத்திற்குள் சென்று சீடர்களைக் காவலுக்கு வைத்துவிட்டு தரையில் விழுந்து தன்னைக் காப்பாற்றும் படி கர்த்தரை வேண்டினார். அவர் பீதியடைந்து பயத்துடன் இருந்தார். சிறிது நேரத்தில் யூதத் தலைவர்களால் கைது செய்யப்படுகிறார்.
இயேசு, இரவோடு இரவாக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கின்றனர். வெள்ளிக்கிழமை பொழுது விடிந்ததும் பிலாத்து ராஜாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். அவரும் மரண தண்டனையளித்து தீர்ப்பளிக்கிறார். காலை 9 மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்படுகிறார்.
அன்று சூரியன் மறைந்ததும் சனிக்கிழமை துவங்கிவிடும். சனிக்கிழமை யூதர்களின் புனித நாள். ஆகவே பொழுது சாயும் முன் இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு மலையில் செதுக்கப்பட்ட அறையில் வைத்து பாறையால் மூடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அவரை அங்கு காணவில்லை. அவர் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது. மாற்கு சுவிஷேசத்தின் 14 மற்றும் 15 அதிகாரங்களில் இதை காணலாம். மத்தேயு, லூக்கா ஆகிய சுவிஷேசங்களும் இதையே சொல்கின்றன.
இதன்படி, யூத பஸ்கா தினத்திற்கு பிந்தைய ஞாயிறன்று இயேசு உயிர்த்தெழுந்தார். ஆனால், யோவானின் சுவிஷேசம் பஸ்காவிற்கு முந்திய ஞாயிறில் உயிர்தெழுந்தார் என்கிறது. இந்த வேறுபாடு குழப்பத்திற்கு வழிவகுக்கிறது. பஸ்காவிற்கு முந்தைய ஞாயிறும் வேண்டாம்; பிந்தைய ஞாயிறும் வேண்டாம். இரண்டுக்கும் நடுவில் பஸ்கா தினத்தை எடுத்துக் கொள்வோம் என்றொரு கருத்தும் உருவாகிறது.

ஈஸ்டர் பண்டிகையை உருவாக்கியது யார்?

இது மாத்திரமல்லாமல் கிருத்துவ மத கொள்கைகள் தொடர்பாகவும் பல்வேறு குழப்பங்கள் நிழவின.
“இயேசு கடவுளல்ல; மனிதரே” என்றும் “இயேசு மனிதராகவும் கடவுளாகவும் இருந்தார்” என்றும் இயேசு பற்றி பல கருத்துக்கள் அக்காலத்தில் நிலவின. இது தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பினரை கிருத்துவத்தைவிட்டு வெளியேறியவர்கள் என்று தீர்ப்பளித்தது. கிருத்துவ மதத்தில் பெரும் சலசலப்பும் தெளிவற்ற நிலையும் இருந்தது.
கிபி 306ல் பதவியேற்ற ரோமப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் கிருத்துவத்தை ஏற்று அதை அரச மதமாக அறிவித்தார். கிருத்துவர்களிடையே இருந்த குழப்பங்களைக் கண்டு வேதனையடைந்த அவர் அதை தீர்ப்பதற்காக ஆயர்கள் (பிஷப்கள்) அறிஞர்களைக் கூட்டினார்.
கிபி 325ல் நைசியா நகரில் கூடிய இந்தக் கூட்டம், முதல் கிருத்துவ திருச்சபை கூட்டம் என்று வழங்கப்படுகிறது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட தேதியை கணக்கிடுவது பற்றி இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இரண்டு நாட்களில் இரவும் பகலும் சமமாக இருக்கும். அவை சம இரவு நாட்கள் எனப்படும். அவ்விரு நாட்களில் ஒன்றான  மார்ச் 21ம் தேதிக்குப் பின்னர் ஏற்படும் பவுர்ணமி தினத்திற்குப் பிந்தைய ஞாயிறை இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளாகக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
இதைப் புரிந்து கொள்ள நடப்பு ஆண்டில் எந்த நாளில் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
இவ்வாண்டு (2025) மார்ச் 21ம் தேதிக்குப் பின்னர் முழு நிலவு (பவுர்ணமி) தோன்றுவது ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமையாகும். அதற்குப் பிந்தைய ஞாயிறான ஏப்ரல் 20ல் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.
கிபி 601ல் போப் கிரிகொரி என்பவர் சாம்பல் புதனை ஈஸ்டருக்கு 46 நாட்கள் முற்படுத்தி வைத்ததுடன் அதன் சடங்குகளையும் முறைப்படுத்தினார்.
எனவே மேற்கண்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது, தற்போது கிறித்தவர்களால் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கும், பைபிளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கிறித்தவ மத அறிஞர்கள் தாங்களாக உருவாக்கிக் கொண்ட பண்டிகை தான் ஈஸ்டர் ஆகும்.