தற்பொழுது உலகில் ஏராளமான மதங்களும், சமயங்களும், சித்தாந்தங்களும், பல்கிப்பெருகி விட்டன. என்னதான் பல பிரிவுகள் பிரிந்தாலும், ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று வாதிட்டாலும் அனைவரின் ஆதி மார்க்கம் என்பது இஸ்லாம் தான்.
உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களின் மார்க்கமும் இஸ்லாமாகத் தான் இருந்தது. இன்னும் ஒவ்வொருவரும் பிறக்கும் போது முஸ்லிமாகவே பிறக்கின்றார். அவரவரின் பெற்றோர் மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறிவிடுகின்றனர். எனவே இஸ்லாத்திற்குத் தான் உலகின் முதல் மார்க்கம் என்ற சிறப்பு இருக்கிறது.
மேலும், மற்றொரு சிறப்பும் நமது இஸ்லாமிய மார்க்கத்திற்கு உண்டு. அது இஸ்லாத்தைத் தவிர வேறெந்த மார்க்கத்திற்கும் இல்லாத சிறப்பு, இன்றுவரை சில நிமிடங்கள் கூட நீங்காத சிறப்பு. அதுதான் பலராலும், அதிகமாக எதிர்க்கப்படுவதாகும். அதிகமாக எதிர்ப்பைச் சந்தித்த ஒரே மார்க்கம் என்றால் அது இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே!
எதிர்ப்பும், ஏமாற்றமும்:
எப்பொழுதெல்லாம் ஏகத்துவம் எடுத்துரைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் கட்டாயம் எதிர்ப்புகள் ஆழிப்பேரலைகளைப் போன்று வந்து அலைமோதிக் கொண்டே இருக்கும். அதேவேளையில் ஏகத்துவம் எப்போதும் எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கொல்லப்பட்டவர்கள் ஏராளம் ஏராளம்,
ரயிலிலே பயணம் செய்த ஜுனைத் என்ற வாலிபனை சில சங்கிகள் வழிமறித்து ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு, சொல்லு என சித்திரவதை செய்தனர். இறுதி வரை உறுதியோடு “இறைவன் ஒருவனே” என கூறிக்கொண்டே இருந்ததற்குப் பரிசாக அவர் ஓடும் ரயிலிலிருந்து வெளியே தூக்கி எறியப்படுகிறார்.
இன்னும், உத்தர பிரதேசத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்ட முஹம்மது அஹ்லாக் என்ற முதியவர் வீட்டிலிருந்து தர தரவென இழுத்துவந்து நடு ரோட்டிலே போடப்பட்டு, தாக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, இறுதியில் கல்லால் அடித்துக் கொல்லப்படுகிறார்.
இன்னும், 2018, 2019களில் CAA, NRC, NPR போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கப் பார்த்தார்களே!
இதைப் போன்று எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
இத்தகைய அனைத்து எதிர்ப்புகளின் ஒரே நோக்கம், முஸ்லிம்களை எப்படியாவது ஒடுக்கிவிட வேண்டும், இஸ்லாத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும். இத்தகைய அவர்களின் மோசமான நோக்கத்திற்காக, பல சட்டங்களையும், சதித்திட்டங்களையும், கட்டவிழ்த்து விடுகிறார்கள்.
ஆனால் இந்த எதிர்ப்பாளர்களுக்கு இறைவன் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சச் செய்கிறான்.
என்னதான் எரிமலைகளைப் போன்று எதிர்ப்புகள் வந்தாலும் அவைகளெல்லாம் இஸ்லாமிய வளர்ச்சியை எள்ளளவும், எள்முனையளவும் கூட எரித்து, அழித்து விடவில்லை. மாறாக அந்த எதிர்ப்புகள் தான் இஸ்லாமிய வளர்ச்சியின் எரிபொருளாக உள்ளது.
ஆயிரம் ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், இஸ்லாம் வளர்ச்சியின் சிகரத்தை நோக்கிப் பயணித்து கொண்டே இருக்கிறது.
இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தற்பொழுது கண்ணெதிரே பார்க்க வேண்டுமென்றால், இந்த நொடி கூட நமது தொலைபேசியை எடுத்து உலகில் மிக அதிவிரைவாக வளர்ந்து வரும் மார்க்கம் எது? என தேடினால் அதிக சதவிகிதத்துடன் முதலில் வந்து நிற்பது இஸ்லாமிய மார்க்கமே.
எதிர்ப்புகள் ஒரு புறம் எகிறிக்கொண்டே இருக்க அதற்கு நேரெதிராக இஸ்லாம் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறதே இதற்கான காரணம் என்ன? இதற்கான ஒரே காரணம் இறைவன் கொடுத்த வாக்குறுதியேயாகும்.
அவர்கள் (இறைமறுப்பாளர்கள்) தமது வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை அணைத்துவிட விரும்புகின்றனர். இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான்.
அல்குர்ஆன் 61:08
என்னதான் எதிரிகள் சதி வலைகள் பின்னினாலும் மார்க்கத்தை முழுமைப்படுத்துவது இறைவனின் பொறுப்பு. அதன் வெளிப்பாடு தான் இந்த வளர்ச்சி.
முழுமைபெறும் வாக்கின் போக்கு:
வல்லோனின் வாக்கு என்பது மனிதர்களின் வாக்கைப் போன்றதில்லை. இறைவனின் வாக்கு என்பது நிச்சியமாக நிறைவேறியே தீரும். இறைவன் தனது வாக்குறுதியை எப்படி வேண்டுமானாலும் நிறைவுபடுத்துவான். இஸ்லாத்தை முழுமைப்படுத்துவான்.
இறைவனுக்கென இஸ்லாத்தை நிறைவுபடுத்த பல போங்குகள் உள்ளன.
அதில் ஒன்று இஸ்லாத்தை எதிர்க்கும் ஃபிர்அவ்ன், அபூஜஹ்ல் போன்ற எதிரிகளை வேரறுப்பது ஒரு பாணி.
மற்றொரு பாணியும் இறைவனுக்கு உண்டு. அது பார்ப்பவர்களை எல்லாம் வியப்பிற்குள்ளாக்கும் வகையிலானது, எவ்வளவுதான் யோசித்தாலும் இது எவ்வாறு சாத்தியம் என்றே புரியாத பாணி.
அதுதான், யார் இந்த இஸ்லாத்தை எதிர்த்தாரோ, இன்னும், பல முஸ்லிம்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தாரோ, இஸ்லாத்திற்கு எதிராகப் பல சதி வேலைகளைச் செய்தாரோ, அதே நபருக்கு இறைவன் இஸ்லாத்தை வழங்குவான்.
இஸ்லாத்திற்கெதிராக அவர் செலவிட்ட முயற்சிகளை விடப் பல மடங்கு முயற்சியை இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகச் செலவிடுவார். இஸ்லாத்திற்காகத் தனது உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டார். இஸ்லாத்தை எதிர்த்த ஒரு எதிரியாக இருந்தவரின் கையாலே இறைவன் இம்மார்க்கத்தை வளர்ச்சியடையச் செய்வான். அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர்தான் அபூசுஃப்யான்(ரலி) அவர்கள். இவரின் எதிர்ப்பையும், எதிர்பாராத இஸ்லாமிய இணைப்பையும் பற்றிப் பார்ப்போம்.
எதிர்ப்பிலும், இறைமறுப்பிலும் மூழ்கியவர்:
அபூசுஃப்யான் அவர்களின் இஸ்லாமிய எதிர்ப்பின் உச்சக்கட்டமாக, நபி(ஸல்) அவர்களையும், முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும், ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும் என்று போர் தொடுத்து வந்தார். அதிலும் குறிப்பாக உஹதுப் போரில் அவரின் எதிர்ப்பும், குஃப்ரின் உச்சமும் தெள்ளத்தெளிவாகத் தென்பட்டது.
(உஹதின் இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர். (அப்போது எதிரணித் தலைவர்) அபுசுஃப்யான் முன்வந்து ‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?’ என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தரவேண்டாம்” என்று கூறிவிட்டார்கள். பிறகு, ‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?’ என்று கேட்டுவிட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி) “இவர்களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பர்கள்” என்று சொன்னார்.
(இதைக் கேட்டு) உமர்(ரலி) தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், “தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத் தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்” என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபுசுஃப்யான், “(எங்கள் கடவுளான) ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது” என்று கூறினார்.
அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். ‘(இறைத்தூதர் அவர்களே!) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?’ என்று மக்கள் கேட்டனர் ‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன். மிக மகத்துவ மிக்கவன்” என்று கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது)
அபுசுஃப்யான், “எங்களுக்குத் தான் ‘உஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் ‘உஸ்ஸா’ இல்லையே” என்று கூறினார் அப்போது, நபி(ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது?’ என்று வினவ நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே!” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்லிம்கள் பதிலளித்தனர்)
“இந்த (உஹதுடைய) நாள், பத்ருப்போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறித் தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத்துன்பத்தையளிக்கவும் செய்யாது” என்று அபுசுஃப்யான் கூறினார்.
நூல்: புகாரி 4043
அபூசுஃப்யான் அவர்கள் முஸ்லிம்களைப் போரில் கொலை செய்தது மட்டுமில்லாமல், அவர்களை அடையாளம் தெரியாதவாறு சிதைத்தது குறித்து சிலாகிக்கிறார். இதிலிருந்து அவருக்கு முஸ்லிம்களின் மீதான வெறுப்பும், குரோதமும் வெளிப்படுகிறது, மேலும் ‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது’ என அவர்களின் கடவுளை முன்னிறுத்திப் பெருமையடிக்கிறார். இன்னும் எங்களுக்கு இருப்பதை போன்ற கடவுள்கள் உங்களுக்கு இல்லை என அவர் கூறுவதிலிருந்து அவரின் இணைவைப்பின் வெறி வெளிப்படுகிறது.
இப்படி நபிக்கெதிராகப் போர் தொடுத்து வருவது, முஸ்லிம்களைக் கொலை செய்வது எனப் பெரும் பெரும் பாவங்களைச் செய்த அபூசுஃப்யானை இறைவன் நாடி இருந்தால் அபூஜஹலைப் போன்றோ, ஃபிர்அவ்னைப் போன்றோ அழித்திருக்கலாம். ஆனால் இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்தது.
நூலிழையில் காப்பாற்றப்பட்டவர்:
இறைவனின் நாட்டம் மட்டும் இல்லை என்றால் அபூசுஃப்யான் என்றோ காஃபிராக மரணித்திருப்பார்.
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அகழ்ப்போர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். கடுமையான காற்றும் குளிரும் எங்களை வாட்டிக்கொண்டிருந்தன.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச்செய்வான்” என்று கூறினார்கள். நாங்கள் மௌனமாக இருந்தோம். எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு மீண்டும் “எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச்செய்வான்” என்று கூறினார்கள். அப்போதும் நாங்கள் அமைதியாக இருந்தோம். எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக), “எதிரிகள் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டுவருபவர் யார்? அவரை மறுமை நாளில் அல்லாஹ் என்னுடன் இருக்கச்செய்வான்” என்று கூறினார்கள்.
அப்போதும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைஃபாவே! எதிரிகளைப் பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டு வா!” என்று கூறினார்கள். எனது பெயரைக் குறிப்பிட்டு என்னை அவர்கள் அழைத்துவிட்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. நான் எழுந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ சென்று எதிரிகளை பற்றிய செய்தியை (உளவறிந்து) என்னிடம் கொண்டு வா! எதிரிகளை எனக்கெதிராக விழிப்படைய செய்துவிடாதே” என்று கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து விடைபெற்று (எதிரிகளை நோக்கி)ச் சென்றபோது, நான் வெண்ணீரில் நடப்பதைப் போன்றிருந்தது (குளிரே எனக்குத் தெரியவில்லை). இந்நிலையில் நான் எதிரிகளிடம் வந்து சேர்ந்தேன். அப்போது (எதிரிகளின் தலைவர்) அபூசுஃப்யான் தமது முதுகை நெருப்பில் காட்டிக் குளிர் காய்ந்துகொண்டிருந்தார்.
நான் எனது வில்லின் நடுவே ஓர் அம்பைப் பொருத்தி அவர்மீது எய்யப் போனேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் “எதிரிகளை எனக்கெதிராக விழிப்படையச் செய்துவிடாதே” என்று கூறியதை நான் நினைவுகூர்ந்தேன். அப்போது மட்டும் நான் அம்பை எய்திருந்தால் அவரை நிச்சயமாகத் தாக்கியிருப்பேன்.
நூல்: முஸ்லிம் 3662
ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்கள் ஆபூசுஃப்யானைக் கொல்லவேண்டும் என முடிவெடுத்து, தமது வில்லைத் தயார்படுத்துகிறார். நபிகளாரின் கூற்று மட்டும் அவருக்கு ஞாபகம் வரவில்லை என்றால் அன்றே அபூசுஃப்யான் ஒரு காஃபிராகவே மரணித்து நரகத்திற்குரியவராகியிருப்பார்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் வில்லை எடுக்கும் போதும், அதில் அம்பை வைத்துக் குறிவைக்கும் போதும் ஞாபகம் வராத நபியின் கூற்று திடீரென எங்கிருந்தோ ஞாபகம் வந்தது எப்படி?
அனைத்தும் இறைவனின் நாட்டம். எதிரியாக இருந்த அபூசுஃப்யானை இஸ்லாமியராக மாற்றி, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக அவரைப் பாடுபட வைத்தான் இறைவன்.
இஸ்லாத்தைத் தழுவுதல்:
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதனை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபுசுஃப்யான் இப்னு ஹர்ப், ஹகீம் இப்னு ஹிஸாம், புதைல் இப்னு வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு ‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தபோது (அங்கே பல இடங்களில் மூடப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபுசுஃப்யான், “இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே” என்று கேட்டதற்கு புதைல் இப்னு வர்கா, “இது (‘குபா’வில் குடியிருக்கும் ‘குஸாஆ’ எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள்” என்று கூறினார். உடனே அபுசுஃப்யான் (பனூ) “அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை)” என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்துவிட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபுசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றார் .
நூல்: புகாரி 4280
இவரெல்லாம் இஸ்லாத்தை ஏற்கவே மாட்டார் என சொல்லும் அளவுக்கு யார் எதிர்த்தாரோ அதே நபருக்கு இறைவன் இந்த இஸ்லாம் என்ற பாக்கியத்தை வழங்குகிறான். அபுசுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் இம்மார்க்கத்தின் வளர்ச்சிக்காகக் கடும் பாடுபட்டார்.
இறுதிவரை இறைத்தூதருடன்:
ஒருவர் பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டுவிட்டு ஹுனைன் (போர்) அன்று பின்வாங்கி விட்டீர்களா(மே, உண்மை தானா)?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘(ஆம், உண்மைதான்.) ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கிச் செல்லவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள். நாங்கள் அவர்களை (போரில்) சந்தித்தபோது அவர்களின் மீது (கடும்) தாக்குதல் நடத்தினோம். அதனால் அவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள். எனவே, முஸ்லிம்கள் (போர்க் களத்திலிருந்த) எதிரிகளின் செல்வங்களை எடுத்துச் செல்ல முனைந்தார்கள். எதிரிகள் அம்புகளை எய்து எங்களை எதிர் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. நான் நபி(ஸல்) அவர்களை தம் ‘பைளா’ என்னும் வெண்ணிறக் கோவேறுக் கழுதையில் அமர்ந்திருந்த நிலையில் பார்த்தேன். அபுசுஃப்யான் (ரலி) அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் இறைத்தூதராவேன். இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகனாவேன்” என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.
நூல்: புகாரி 3042
ஹுனைன் போர்க்களத்தில் எதிரிகளின் திடீர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இஸ்லாமியப் படை பின்வாங்குகின்றது. அனைவரும் நபி (ஸல்) அவர்களைத் தனியே விட்டுவிட்டுப் பின்வாங்கி விட்டனர். (பார்க்க: புகாரி 4322)
பெரும் பெரும் சஹாபாக்களெல்லாம் பின்வாங்கி விட்டனர், முஹாஜிர்களும் பின்வாங்கிவிட்டனர். அன்சாரிகளும் பின்வாங்கி விட்டனர்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் கூட நபி (ஸல்) அவர்களை விட்டு விட்டுச் சென்றுவிடாமல், யார் போனாலும் போகட்டும் நான் என் நபியுடன் நிற்பேன் என நின்ற வீரர் அபுசுஃப்யான்(ரலி) அவர்கள்.
உஹதுப் போரிலும், அகழ் போரிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிரியாக இருந்தவருக்கு, ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்களுக்குத் துணையாக, அரணாக, பாதுகாவலராக இருக்கும் பாக்கியத்தை இறைவன் கொடுக்கிறான்.
உஹதுப் போர்க்களத்தில் உமர் (ரலி) அவர்களால் “அல்லாஹ்வின் எதிரியே” என திட்டப்பட்ட அதே நபரை, இன்றைக்கு உலக முஸ்லிம்கள் அனைவரும் “ரலியல்லாஹு அன்ஹு வரளூ அன்ஹ்” (இறைவனும் அவரை பொருந்திக் கொண்டான். அவரும் இறைவனைப் பொருந்திக் கொண்டார்) என்று புகழ்கிறார்கள்.
தேய்க்கத் தேய்க்க வைரம் மிளிரும். அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். அதேபோல் எதிர்க்கப்பட எதிர்க்கப்படத் தான் இம்மார்க்கம் ஆர்ப்பரித்து எழும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு அபுசுஃப்யான் (ரலி) அவர்களின் வரலாறு.
இதுதான் இஸ்லாமிய வளர்ச்சியின் காரணம். எதிரியாக இருந்தவரின் கைகளாலே இறைவன் இம்மார்க்கத்தை வளர்ச்சியடையச் செய்வான்.
ஆகவேதான் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இஸ்லாம் எந்தக் குறையுமில்லாமல் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.
எத்தனை ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் சரி, இம்மார்க்கம் முழுமைபெற்றே தீரும். அதுவே இறைவனின் வாக்கு.