كتاب الدعوات அத்தியாயம் : துஆக்கள் – ரியாளுஸ்ஸாலிஹீன்

துஆவின் சிறப்புகள்

قال اللَّه تعالى:  وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

அல்லாஹ் கூறுகின்றான் :
என்னைப் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்
அல்குர்ஆன் 40 : 60

وقال تعالى:  ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ

அல்லாஹ் கூறுகின்றான் :
உங்கள் இறைவனைப் பணிவாகவும், இரகசியமாகவும் பிரார்த்தியுங்கள்! வரம்பு மீறுவோரை அவன் நேசிப்பதில்லை.
அல்குர்ஆன் 7 : 55

وقال تعالى: وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

அல்லாஹ் கூறுகிறான் :
(நபியே!) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். என்னிடம் பிரார்த்திக்கும் போது பிரார்த்திப்பவரின் பிரார்த்தனைக்கு பதிலளிக்கிறேன். எனவே அவர்கள் என்னிடமே பிரார்த்திக்கட்டும். என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்“ (எனக் கூறுவீராக!)
அல்குர்ஆன் 2 : 186

وقال تعالى:  أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ.

அல்லாஹ் கூறுகிறான் :
கடும் துன்பதிற்குள்ளாக்கப் பட்டவன் பிராரத்தனை செய்யும் போது அதற்குப் பதிலளித்து, துன்பத்தை நீக்குபவன் (அல்லாஹ்வைத் தவிர) யார்?
அல்குர்ஆன் 27 : 62

1465- وَعن النُّعْمانِ بْنِ بشيرٍ رضِي اللَّه عنْهُما عَنِ النَّبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : « الدُّعاءُ هوَ العِبَادةُ  رواه أبو داود والترمذي وقالا حديث حسن صحيح

ஹதீஸ் எண் : 1465
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘துஆ’ என்பது வணக்கமாகும்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பசீர் (ரலி), நூல்கள் : அபூதாவுத் (1264), திர்மிதீ (2895, 3170, 3294)
இமாம் திர்மிதீ, அபூதாவுத் ஆகிய இருவரும் இது “ஹஸன் ஸஹீஹ்” தரத்தில் அமைந்து ஹதீஸ் என்று கூறியுள்ளனர்.

1466- وعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عَنْهَا قَالَتْ : كَان رسُول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَسْتَحِبُّ الجوامِعَ مِنَ الدُّعاءِ ويَدَعُ ما سِوى ذلكَ رَوَاه أَبو داود بإِسنادٍ جيِّد

ஹதீஸ் எண் : 1466
நபி (ஸல்) அவர்கள் குறைந்த வார்த்தைகளில் ஒருங்கிணைந்த (பொருள்களைத் தரும்) துஆக்களை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள். அது அல்லாதவற்றை விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : அபூதாவுத் (1267)
அபூதாவுத் அவர்கள் இதனை வலிமையான அறிவிப்பாளர் தொடரில் பதிவு செய்துள்ளார்.

1467. – وعَنْ أَنَسٍ رَضي اللَّه عنْهُ قَالَ : كانَ أَكْثَرُ دُعَاءِ النبيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « اللَّهُمَّ آتِنَا في الدُّنْيَا حَسَنَةً وفي الآخِرةِ حَسنَةً وَقِنَا عَذابَ النَّارِ  مُتَّفَقٌ عليهِ
زاد مُسلِمٌ في رِوايتِهِ قَال :وكَانَ أَنَسٌ إِذا أَرَاد أَنْ يَدعُوَ بِدعوَةٍ دَعَا بها وَإِذا أَرَادَ أَن يَدعُو بدُعَاءٍ دَعا بهَا فيه

ஹதீஸ் எண் : 1467
நபி (ஸல்) அவர்கள் அதிகமாகச் செய்யும் பிரார்த்தனையாகிறது “அல்லாஹும்ம ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆஹிரத்தி ஹசனத்தன் வகினா அதாபன்னார்” (அல்லாஹ்வே! இவ்வுலகிலும் நல்லதைத் தருவாயாக! மறுமையிலும் நல்லதைத் தருவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!) என்பதாகும்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்கள் : புகாரி (6389), முஸ்லிம் (5219)
முஸ்லிமுடைய மற்றொரு அறிவிப்பில் பின்வரும் தகவல் அதிகப்படியாக வந்துள்ளது.
அனஸ் (ரலி) அவர்கள் ஏதேனும் பிரார்த்தனை செய்ய நாடினால் இந்தப் பிரார்த்தனையையே செய்வார்கள். வேறு பிரார்த்தனைகள் செய்யும்போதும் இதைச் சேர்த்துக் கொள்வார்கள்
நூல் : முஸ்லிம் (5219)

1468- وعَن ابنِ مسْعُودٍ رَضي اللَّه عنْهُ أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كَانَ يَقُولُ : « اللَّهُمَّ إِنِي أَسْأَلُكَ الهُدَى وَالتُّقَى وَالعفَافَ والغنَى – رواهُ مُسْلِمٌ

ஹதீஸ் எண் : 1468
நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா வத்துகா வல்அஃபாஃப வல் கினா” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே! நான் உன்னிடத்தில் நேர்வழியையும், இறையச்சத்தையும், தன்மான உணர்வையும், போதுமென்ற தன்மையையும் கேட்கிறேன்)
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : முஸ்லிம் (5265)

1469- وعَنْ طارِقِ بنِ أَشْيَمَ رضِيَ اللَّه عَنْهُ قالَ : كَانَ الرَّجلُ إِذا أَسْلَمَ عَلَّمَهُ النَّبيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم الصَّلاةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدعُوَ بهَؤُلاءِ الكَلِمَاتِ : « اللَّهُمَّ اغفِرْ لي وَارْحمْني واهْدِني وعافِني وارْزُقني – رواهُ مسلمٌ
وفي رِوايَةٍ لَهُ عَنْ طارقٍ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَأَتاهُ رَجُلٌ فَقَالَ : يا رَسُولَ اللَّهِ كيْفَ أَقُولُ حِينَ أَسْأَلُ رَبِّي ؟ قَالَ : « قُلْ : اللَّهُمَّ اغْفِرْ لي وَارْحَمْني وَعَافِني وَارْزُقني فَإِنَّ هَؤُلاءِ تَجْمَعُ لَكَ دُنْيَاكَ وَآخِرَتَكَ

ஹதீஸ் எண் : 1469
நபி (ஸல்) அவர்கள், ஒருவர் (புதிதாக) இஸ்லாத்தை தழுவினால் அவருக்குத் தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு “அல்லாஹும் மக்ஃபிர்லீ வர்ஹம்னீ, வஹ்தினீ, வஆஃபினீ, வர்ஸுக்னி” என்ற வாக்கியங்களைக் கூறி பிரார்த்திக்குமாறு அவருக்கு கட்டளையிடுவார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக, எனக்குக் கருணைபுரிவாயாக. எனக்கு நேர்வழிகாட்டுவாயாக, எனக்கு ஆரோக்கியமளிப்பாயாக, எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக)
அறிவிப்பவர் : தாரிக் பின் அஷ்யம் (ரலி), நூல் : முஸ்லிம் (5228)
மற்றொரு அறிவிப்பில் தாரிக் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது :
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹும் மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ” (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக. இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை” என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் (5229)

1470- وَعَنْ عَبْدِ اللَّهِ بنِ عمرو بن العاصِ رضيَ اللَّه عنْهُمَا قَالَ : قَال رَسُولُ اللَّـهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صرِّفْ قُلوبَنَا عَلَى طَاعَتِكَ – رَوَاهُ مُسْلِمٌ

ஹதீஸ் எண் : 1470
நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூப் ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅத்திக” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே! உள்ளங்களைத் திருப்பக்கூடியவனே! எங்களுடைய உள்ளங்களை உனக்கு கீழ்படிவதற்குத் திருப்புவாயாக!)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (5161)

1471- وَعَنْ أَبي هُريَرةَ رَضيَ اللَّه عَنْهُ عن النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم قَالَ : « تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ الْبَلاءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَماتَةِ الأَعْدَاءِ – متفقٌ عليه وفي رِوَايةٍ : قالَ سُفْيَانُ : أَشُكُّ أَنِّي زِدْتُ وَاحِدَةً مِنها

ஹதீஸ் எண் : 1471
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (6616), முஸ்லிம் (5246)
முஸ்லிமுடைய அறிவிப்பில் “இந்த நான்கில் ஒன்றை நான்தான் கூடுதலாக அறிவித்துவிட்டேனோ என்று சந்தேகப்படுகிறேன்” என சுஃப்யான் பின் உயைனா அவர்கள் கூறினார் என இடம் பெற்றுள்ளது.

1472- وَعَنْهُ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقُولُ : « اللَّهمَّ أَصْلِحْ لي دِيني الَّذي هُوَ عِصْمَةُ أَمْرِي وأَصْلِحْ لِي دُنْيَايَ التي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لي آخِرَتي الَّتي فِيها معادي وَاجْعلِ الحيَاةَ زِيادَةً لي في كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الموتَ راحَةً لي مِنْ كُلِّ شَرٍ –  رَوَاهُ مسلِمٌ

ஹதீஸ் எண் : 1472
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துவந்தார்கள்: “அல்லாஹும்ம! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ. வஜ்அலில் ஹயாத்த ஸியாதத்தன் லீ ஃபீ குல்லி கைர். வஜ்அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்.
(பொருள்: அல்லாஹ்வே! எனது (அனைத்து) செயல்பாட்டிற்கும் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்துவாயாக! நான் திரும்பி வரவுள்ள மறுமையை எனக்குச் சீர்படுத்துவாயாக! வாழ்க்கையை, எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்வதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக! மரணத்தை, எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (5264)

1473- وَعنْ علي رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : قال لي رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « قُلْ : اللَّهُمَّ اهْدِني وَسدِّدْني  وَفي رِوَايةٍ : « اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدى وَالسَّدَادَ – رواهُ مسلم

ஹதீஸ் எண் : 1473
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்மஹ்தினீ, வ சத்தித்னீ” (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக! என்று என்னிடம் கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா வஸ்ஸதா” (இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் நேர்மையையும் வேண்டுகிறேன்) என்று சொல்வீராக! என்றார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர் : அலி (ரலி), நூல் : முஸ்லிம் (5271)

1474- وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : كَانَ رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : يَقُولُ : اللَّهُمَّ إِنِّـي أَعُوذُ بِكَ مِنَ الْعجْزِ والكَسَلِ وَالجُبْنِ وَالهَرَمِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيا وَالمَمَاتِ
وفي رِوايةٍ : « وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ –  رَوَاهُ مُسْلِمٌ

ஹதீஸ் எண் : 1474
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி, வல்ஹரமி, வல்புக்ல். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்” என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பேறித் தனத்திலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (5243)
புகாரி (6369) உடைய அறிவிப்பில் (மேற்கண்ட துஆவில்) “வளலஇத் தைனி, வ ஃகலபத்திர் ரிஜால்” (கடன் சுமையிலிருந்தும் மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்பதையும் (சேர்த்துக்) கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

1475- وَعن أَبي بكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّه عَنْه أَنَّه قَالَ لِرَسولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : عَلِّمني دُعَاءً أَدعُو بِهِ في صَلاتي قَالَ : قُلْ : اللَّهمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْماً كثِيراً وَلا يَغْفِر الذُّنوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِر لي مغْفِرَةً مِن عِنْدِكَ وَارحَمْني إِنَّكَ أَنْتَ الْغَفور الرَّحِيم யு متَّفَقٌ عليهِوفي رِوايةٍ : « وَفي بيْتي யு وَرُوِي : « ظُلْماً كَثِيراً – وروِيَ « كَبِيراً –  بِالثاءِ المثلثة وبِالباءِ الموحدة فَيَنْبغِي أَن يُجْمَعَ بَيْنَهُمَا فَيُقَالُ : كَثيراً كَبيراً

ஹதீஸ் எண் : 1475
அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் கஃபூருர் ரஹீம்“ என்று கூறுங்கள்! என்றார்கள்
(பொருள் : இறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய்)
நூல்கள் : புகாரி (834), முஸ்லிம் (5241)
மற்றொரு அறிவிப்பில் (முஸ்லிம் 5241) “நான் எனது தொழுகையிலும் எனது இல்லத்திலும் பிரார்த்திக்க ஒரு பிரார்த்தனையைக் கற்றுத்தாருங்கள்” என்று அபூபக்கர் (ரலி) கேட்டதாக இடம் பெற்றுள்ளது.
“ழுல்மன் கஸீரன்” என்று ஒரு அறிவிப்பிலும் (புகாரி 834), “ழுல்மன் கபீரன்” என்று ஒரு அறிவிப்பிலும் (முஸ்லிம் 5241) வந்துள்ளது. எனவே இரண்டையும் இணைத்து “ழுல்மன் கஸீரன், கபீரன்” என்று ஓதுவது ஏற்றமானதாகும்.

1476- وَعَن أَبي موسَى رضَيَ اللَّه عَنْه عَنِ النَّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم أَنَّه كَانَ يَدعُو بهَذا الدُّعَاءِ : «اللَّهمَّ اغْفِر لي خَطِيئَتي وجهْلي وإِسْرَافي في أَمْري وما أَنْتَ أَعلَم بِهِ مِنِّي اللَّهمَّ اغفِرْ لي جِدِّي وَهَزْلي وَخَطَئي وَعمْدِي وَكلُّ ذلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَما أَسْررْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي أَنْت المقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ وَأَنْتَ عَلى كلِّ شَيْءٍ قَدِيرٌ – متفقٌ عليه

ஹதீஸ் எண் : 1476
நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்துவந்தார்கள்:
“அல்லாஹும் மஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வமா அன்த்த அஃலமு பிஹி மின்னீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ ஜித்தீ வ ஹஸ்லீ, வ கத்தயீ, வ அம்தீ. வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வமா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு. வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்”
(பொருள்: இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற் கொண்ட விரயத்தையும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்தததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவையாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும், பகிரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.)
அறிவிப்பவர் : அபூ மூசா (ரலி), நூல்கள் : புகாரி (6398), முஸ்லிம் (5263)

1477- وعنْ عَائِشَةَ رَضِيَ اللَّه عَنهَا أَنَّ النَّبي صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كَانَ يقُولُ في دُعَائِهِ : « اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ ما عمِلْتُ ومِنْ شَرِّ ما لَمْ أَعْمَلْ – رَوَاهُ مُسْلِم

ஹதீஸ் எண் : 1477
நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் “அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து வ ஷர்ரி மா லம் அஃமல்” என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும், நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (5260)

1478- وعَنِ ابنِ عُمَر رَضِيَ اللَّه عَنْهُما قَالَ : كانَ مِنْ دُعاءِ رسُولِ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم « اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجاءَةِ نِقْمَتِكَ وَجميعِ سخَطِكَ யு روَاهُ مُسْلِمٌ

ஹதீஸ் எண் : 1478
“அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஃமத்திக்க, வ தஹவ்வுலி ஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ சகத்திக்க” என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது.
(பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் (5289)

1479- وَعَنْ زَيْدِ بنِ أَرْقَم رضَي اللَّه عَنْهُ قَالَ : كَانَ رَسُولُ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقَولُ : «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ وَ الجُبُنِ والبُخْلِ وَالهَرم وعَذَاب الْقَبْر اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيرُ مَنْ زَكَّاهَا أَنْتَ ولِيُّهَا وَموْلاَهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلمٍ لا يَنْفَعُ ومِنْ قَلْبٍ لاَ يخْشَعُ وَمِنْ نَفْسٍ لا تَشبَعُ ومِنْ دَعْوةٍ لا يُسْتجابُ لهَا யு رواهُ مُسْلِمٌ

ஹதீஸ் எண் : 1479
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:
“அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா”
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கஞ்சத்தனத்திலிருந்தும் தள்ளாதவயதிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த் தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அறிவிப்பவர் : ஸைத் பின் அர்கம் (ரலி), நூல் : முஸ்லிம் (5266)

1480- وَعنِ ابنِ عبَّاسٍ رَضِيَ اللَّه عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كَانَ يَقُولُ : « اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وعلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وإِلَيْكَ حَاكَمْتُ فاغْفِرْ لي ما قَدَّمْتُ وما أَخَّرْتُ وَمَا أَسْررْتُ ومَا أَعلَنْتُ أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ لا إِلَهَ إِلاَّ أَنْتَ زادَ بعْضُ الرُّوَاةِ : « ولا حَولَ ولا قوَّةَ إِلاَّ بِاللَّهِ – متفَقُ عليهِ

ஹதீஸ் எண் : 1480
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள் : அல்லாஹும்ம! லக்க அஸ்லம்த்து, வ பிக்க ஆமன்த்து, வ அலைக்க தவக்கல்த்து, வ இலைக்க அனப்து, வ பிக்க காஸம்த்து, வ இலைக்க ஹாகம்த்து. ஃபக்பிர்லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வமா அஸ்ரர்த்து, வமா அஃலன்த்து. அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு. லா இலாஹ இல்லா அன்த்த. வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
(பொருள்: இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன் மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே வழக்காடுவேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச்செய்த, பிந்திச்செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னிப்பாயாக! நியே முற்படுத்துபவன். பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை புரியும் ஆற்றலோ இல்லை)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரி (1120), முஸ்லிம் (1417)

1481- وَعَن عَائِشَةَ رَضِيَ اللَّه عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كَانَ يَدعو بهؤُلاءِ الكَلِمَاتِ : «اللَّهُمَّ إِني أَعوذُ بِكَ مِن فِتنةِ النَّارِ وعَذَابِ النَّارِ وَمِن شَرِّ الغِنَى وَالفَقْر – رَوَاهُ أَبو داوَد والترمذيُّ وقال : حديث حسن صحيح وهذا لفظُ أَبي داود

ஹதீஸ் எண் : 1481
“அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் ஃபித்னத்தின்னார், வஅதாபின்னார், வமின்ஷர்ரில் கினா வல்ஃபக்ர்” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே! நரகத்தின் சோதனையிலிருந்தும், நரகவேதனையிலிருந்தும், செழிப்பு மற்றும் வறுமையின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : அபூதாவுத் (1319), திர்மிதீ (3417)
மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் அறிவிப்பாகும்.

1482- وعَن زيادِ بْن عِلاقَةَ عن عمِّه وهو قُطبَةُ بنُ مالِكٍ رَضِيَ اللَّه عَنْهُ قَال : كَانَ النَّبيُّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يقُولُ : « اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِن منْكَرَاتِ الأَخلاقِ والأعْمَالِ والأَهْواءِ – رواهُ الترمذي وقال : حديثُ حَسَنٌ

ஹதீஸ் எண் : 1482
“அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின் முன்கிராத்தில் அஹ்லாக்கி வல்அஃமாலி வல்அஹ்வாயி” என்று நபியவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே! வெறுக்கத்தக்க குணங்கள், செயல்கள், மனோஇச்சைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.)
அறிவிப்பவர் : குத்பா பின் மாலிக் (ரலி), நூல் : திர்மிதீ (3515)
குறிப்பு : திர்மிதீயின் அறிவிப்பாளர் தொடரில் “சுஃப்யான் பின் வகீஃ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். என்றாலும் ஹாகிம் போன்ற பல நூற்களில் இது ஆதாரப்பூர்மான அறிவிப்பாளர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1483- وعَن شكَلِ بنِ حُمَيْدٍ رَضِيَ اللَّه عَنْهُ قَال : قُلْتُ يا رَسولَ اللَّهِ : عَلِّمْني دُعاءً. قَالَ : « قُلْ : اللَّهُمَّ إِني أعوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي وَمِن شَرِّ بصَرِي وَمِن شَرِّ لسَاني وَمِن شَرِّ قَلبي وَمِن شَرِّ منِيِّي – رواهُ أبو داودَ والترمذيُّ وقالَ : حديثٌ حسنٌ

ஹதீஸ் எண் : 1483
“அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு துஆவைக் கற்றுத் தாருங்கள்! என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மின் ஷர்ரி ஸம்யீ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிசானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யீ” என்று நீ கூறு” எனப் பதிலளித்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே ! என்னுடைய செவிப்புலனின் தீங்கிலிருந்தும், என்னுடைய பார்வையின் தீங்கிலிருந்தும், என்னுடைய நாவின் தீங்கிலிருந்தும், என்னுடைய உள்ளத்தின் தீங்கிலிருந்தும், என்னுடைய மர்மஸ்தானத்தின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் கோருகிறேன்)
அறிவிப்பவர் : ஷகல் இப்னு ஹுமைத் (ரலி), நூல்கள் : அபூதாவுத் (1327), திர்மிதீ (3414)

1484- وَعَن أَنسٍ رَضِيَ اللَّه عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم كَانَ يَقُولُ : « اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ وَالجُنُونِ والجُذَامِ وسّيءِ الأَسْقامِ – رَوَاهُ أَبو داود بإِسنادٍ صحيحٍ

ஹதீஸ் எண் : 1484
“அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் பரஸி, வல்ஜுனூனி, வல்ஜுதாமி, வஸய்யியில் அஸ்காமி” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே ! குஷ்ட நோயிலிருந்தும், பைத்தியத்திலிருந்தும், தொழுநோயிலிருந்தும், இன்னும் மோசமான வியாதிகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்)
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அபூதாவுத் (1329)
இதனை அபூதாவுத் ஆதாரப்பூர்மான அறிவிப்பாளர் தொடருடன் பதிவு செய்துள்ளார்.

1485- وعَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّه عَنْهُ قَالَ : كانَ رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم يَقولُ : اللَّهمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الجُوعِ فإِنَّهُ بِئْسَ الضَّجيعُ وَأَعُوذُ بِكَ من الخِيانَةِ فَإِنَّهَا بئْسَتِ البِطانَةُ – رواهُ أبو داودَ بإِسنادٍ صحيحٍ

ஹதீஸ் எண் : 1485
நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் ஜூயி, ஃபஇன்னஹு பிஃஸல் லஜீவு, அவூது பிக்க மினல் ஹியானத்தீ, ஃபஇன்னஹா பிஃஸத்தில் பிதானா” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே! நான் உன்னிடம் பசி(க் கொடுமை)யில் இருந்து பாதுகாவல் தேடுகிறேன். ஏனெனில் அது (மனிதனுடன்) ஒட்டிக்கொள்பவற்றில் மிகக் கெட்டதாகும். மோசடித் தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். ஏனெனில் அது ரகசியத்தை பாதுகாப்பவற்றில் மிகக் கெட்டதாகும்.)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவுத் (1323)
குறிப்பு : இது பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் “முஹம்மத் பின் அஜ்லான்” என்பார் இடம் பெறுகிறார். மேலும் அபூஹுரைரா (ரலி) வழியாக வரும் செய்திகளில் இவர் குழப்பமடைந்துவிட்டார்.

1486- وَعن عليٍّ رَضِيَ اللَّه عَنْهُ أَنَّ مُكَاتَباً جاءهُ فَقَالَ إِني عجزتُ عَن كتابتي فَأَعِنِّي قالَ : أَلا أُعَلِّمُكَ كَلِماتٍ عَلَّمَنيهنَّ رَسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم لَو كانَ عَلَيْكَ مِثْلُ جبلٍ دَيْناً أَدَّاهُ اللَّهُ عنْكَ ؟ قُلْ : « اللَّهمَّ اكْفِني بحلالِكَ عَن حَرَامِكَ وَاغْنِني بِفَضلِكَ عَمَّن سِوَاكَயு.رواهُ الترمذيُّ وقال : حديثٌ حسنٌ

ஹதீஸ் எண் : 1486
“விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிய அடிமை ஒருவர் அலி (ரலி) அவர்களிடம் வந்து “நான் என்னுடைய விடுதலைப் பத்திரத் (தொகையை செலுத்துவதற்கு) இயலாதவனாகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்று வேண்டினார். அதற்கு அலி (ரலி) அவர்கள் “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்த சில வார்த்தைகளை உனக்கு நான் கற்றுத் தரவா?. உனக்கு மலை போன்று கடன் இருந்தாலும் அல்லாஹ் அதை உனக்கு நிறைவேற்றிவிடுவான்?” என்று கூறி “அல்லாஹும் மக்ஃபினீ பிஹலாலிக்க அன்ஹராமிக்க, வக்னினீ பிஃபள்லிக்க அம்மன் ஸிவாக்க” என்று (பிரார்த்தனை செய்) எனக் கூறினார்கள்.
பொருள் : அல்லாஹ்வே! நீ அனுமதித்தவற்றைக் கொண்டு நீ தடுத்தவற்றை விட்டும் என்னைப் போதுமாக்கிவிடு !. இறைவா ! உன் அருளின் மூலம் உன்னல்லாதவர்களை (நாடிச் செல்வதை விட்டும்) என்னை தன்னிறைவு பெற்றவனாக்கிவிடு !)
அறிவிப்பவர் : அலி (ரலி), நூல் : திர்மிதீ (3486),
இது ‘‘ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ் என இமாம் திர்மிதீ கூறியுள்ளார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “அப்துர்ரஹ்மான் பின் அல் இஸ்ஹாக் பின் ஹாரிஸ்” என்பார் இடம் பெற்றுள்ளார்.இவர் பலவீனமானவர் ஆவார்.

1487- وعَنْ عِمْرانَ بنِ الحُصينِ رَضي اللَّه عنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم علَّم أَباهُ حُصيْناً كَلِمتَيْنِ يدعُو بهما : « اللَّهُمَّ أَلهِمْني رُشْدِي وأَعِذني مِن شَرِّ نفسي –  رواهُ الترمذيُّ وقَالَ : حديثٌ حسنٌ

ஹதீஸ் எண் : 1487
என்னுடைய தந்தை பிரார்த்தனை செய்வதற்காக, நபி (ஸல்) அவர்கள், இரண்டு வார்த்தைகளைக் கற்றுக்கொடுத்தார்கள் (அவையாகிறது) : “அல்லாஹும்ம அல்ஹிம்னீ ருஷ்தீ, அயித்னீ மின்ஷர்ரி நஃப்ஸீ”
(பொருள் : யா அல்லாஹ்! எனக்குரிய நேர்வழியைக் எனக்குக் காட்டுவாயாக! என்னுடைய ஆத்மாவின் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக !)
அறிவிப்பவர் : இம்ரான் இப்னுல் ஹுசைன் (ரலி), நூல் : திர்மிதீ (3405)
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் “ஷபீப் பின் ஷைபா” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

1488- وَعَن أَبي الفَضلِ العبَّاسِ بنِ عَبْدِ المُطَّلِبِ رضِي اللَّه عنْهُ قال : قُلْتُ يارسول اللَّهِ : عَلِّمْني شَيْئاً أَسْأَلُهُ اللَّه تَعَالى قَالَ : « سَلِ اللَّه العافِيةَ  فَمكَثْتُ أَيَّاماً ثُمَّ جِئتُ فَقُلْتُ : يا رسولَ اللَّه : علِّمْني شَيْئاً أَسْأَلُهُ اللَّه تعالى قَالَ لي : « يَا عبَّاسُ يا عمَّ رَسولِ اللَّهِ سَلِ اللَّه العافيةَ في الدُّنْيا والآخِرةِ -رَواهُ الترمذيُّ وقَالَ : حديثٌ حسنٌ صَحيحٌ

ஹதீஸ் எண் : 1488
“அல்லாஹ்வின் தூதரே நான் அல்லாஹ்விடம் வேண்டுவதற்காக ஏதேனும் ஒரு (துஆவை) எனக்கு கற்றுத் தாருங்கள்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் வேண்டினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”அல்லாஹ்விடம் அமைதி நிலை தரும்படி கேளுங்கள்” என்று கூறினார்கள். பிறகு மீண்டும் சில நாட்கள் கழிந்த பிறகு (மீண்டும் நபியவர்களிடம்) வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விடம் வேண்டுவதற்காக ஏதேனும் ஒரு (துஆவை) எனக்கு கற்றுத் தாருங்கள்” என்று வேண்டினேன். நபியவர்கள் என்னிடம் : “அப்பாஸே! இறைத்தூதரின் தந்தை உடன் பிறந்த சகோதரரே! “இவ்வுலகிலும் , மறுமையிலும் அமைதி நிலையைத் தரும்படி அல்லாஹ்விடம் கேளுங்கள்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிஃப் (ரலி), நூல் : திர்மிதீ (3436)
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “யஸீத் பின் அபீஸியாத்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

1489- وعنْ شَهْرِ بْنِ حوشَبٍ قَالَ : قُلْتُ لأُمِّ سَلَمَةَ رَضِي اللَّه عَنْهَا يا أُمَّ المؤمِنِين مَا كَانَ أَكْثَرُ دُعَاءِ رسُول اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم إِذا كانَ عِنْدكِ ؟ قَالَتْ : كانَ أَكْثَرُ دُعائِهِ : « يا مُقلبَ القُلوبِ ثَبِّتْ قلْبي علَى دِينِكَ –  رَواهُ الترمذيُّ وقال حَديثٌ حسنٌ

ஹதீஸ் எண் : 1489
நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நபியவர்கள் உங்களிடத்தில் இருக்கும்போது மிக அதிகமாகச் செய்த பிரார்த்தனை எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “யா முகல்லிபல் குலூபி ஸப்பித் கல்பீ அலா தீனிக்க” என்றுதான் அதிகம் பிரார்த்தனை செய்வார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ருப்னு ஹவ்சிப், நூல் : திர்மிதீ (3444)
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இந்த ஹதீஸை அறிவிக்கும் “ஸஹ்ருப்னு ஹவ்சிப்” என்பவர் பலவீனமானவர் ஆவார். ஆனால் நபியவர்கள் இந்தப் பிரார்த்தனை அதிகம் செய்வார்கள் என்ற செய்தி அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக திர்மிதீ (2066) வது ஹதீசில் உறுதியான அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1490- وعن أبي الدَّرداءِ رَضيَ اللَّه عَنْهُ قَالَ : قَالَ رَسولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « كانَ مِن دُعاءِ دَاوُدَ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ من يُحِبُّكَ وَالعمَل الذي يُبَلِّغُني حُبَّكَ اللَّهُمَّ اجْعل حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِن نَفسي وأَهْلي ومِن الماءِ البارد –  روَاهُ الترمذيُّ وَقَالَ : حديثٌ حسنٌ

ஹதீஸ் எண் : 1490
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஹுப்பக்க, வஹுப்ப மய் யுஹிப்புக்க, வல்அமலல்லதீ யுபல்லிகுனீ ஹுப்பக்க, அல்லாஹும் மஜ்அல் ஹுப்பக்க அஹப்ப இலய்ய மின் நஃபஸீ, வஅஹ்லீ, வமினல் மாயில் பாரித்” என்பது நபி தாவூத் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனைகளில் ஒன்றாகும்.
(பொருள் : அல்லாஹ்வே! நான் உன்னிடம் உன்னுடைய நேசத்தையும், உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும், உன் நேசத்தை எனக்குப் பெற்றுத் தரும் நற்செயலையும் வேண்டுகிறேன். இறைவா! என்னுடைய உயிரை விடவும், குடும்பத்தை விடவும், குளிர்ந்த நீரை விடவும் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாக உன்னுடைய நேசத்தை ஆக்குவாயாக !)
அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி), நூல் : திர்மிதீ (3412)
குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடர் “அப்துல்லாஹ் பின் ரபீஆ அத்திமிஷ்கி” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

1491- وعن أَنَسٍ رضِيَ اللَّه عَنْهُ قَالَ : قال رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : « أَلِظُّوا بِياذا الجَلالِ وَالإِكرامِ – رواه الترمذي وروَاهُ النَّسَائيُّ مِن رِوايةِ ربيعةَ بنِ عامِرٍ الصَّحابيِّ قَالَ الحاكم : حديثٌ صحيحُ الإِسْنَادِ
« أَلِظُّوا –  بكسر الَّلام وتشديد الظاءِ المعجمةِ معْنَاه : الْزَمُوا هذِهِ الدَّعْوَةِ وأَكْثِرُوا مِنها

ஹதீஸ் எண் : 1491
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “யாதல் ஜலாலி வல் இக்ராம்” (கண்ணியமும், மகத்துவமும் உடையவனே) என்(று கூறிப் பிரார்த்திப்ப)தை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : திர்மிதீ (3447, 3448)
ரபீஆ பின் ஆமிர் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் நஸாயீ அவர்கள் இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.
இது ஆதாரப்பூர்மான அறிவிப்பாளர் தொடர் என்று ஹாகிம் கூறியுள்ளார்.
குறிப்பு : அனஸ் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் செய்தி பலவீனமானதாகும். யஸீத் இப்னு அபான் அர்ராகஸீ என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். திர்மிதியின் மற்றொரு (3525) அறிவிப்பில் முஅம்மல் பின் இஸ்மாயீல் என்ற பலவீனமான அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். என்றாலும் “ரபீஆ பின் ஆமிர் (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் முஸ்னத் அஹ்மதில் (16935) இடம் பெற்றிருக்கும் அறிவிப்பு ஆதாரப்பூர்மானதாகும்.

1492- وعن أَبي أُمامةَ رضيَ اللَّه عنْهُ قَالَ : دَعا رسُولُ اللَّهِ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم بِدُعَاءٍ كَثيرٍ لم نَحْفَظْ مِنْهُ شَيْئاً قُلْنا يا رَسُولَ اللَّهِ دعوت بِدُعاءٍ كَثِيرٍ لم نَحْفَظ منْهُ شَيْئاً فقَالَ : « أَلا أَدُلُّكُم على ما يَجْمَعُ ذَلكَ كُلَّهُ ؟ تَقُولُ : « اللَّهُمَّ إِنِّي أَسْأَلُك مِن خَيرِ ما سأَلَكَ مِنْهُ نبيُّكَ مُحَمَّدٌ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وأَعُوذُ بِكَ من شَرِّ ما اسْتَعاذَ مِنْهُ نَبيُّكَ مُحمَّدٌ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم وَأَنْتَ المُسْتَعَانُ وعليْكَ البلاغُ ولا حَوْلَ ولا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ யு رواهُ الترمذيُّ وقَالَ : حديثٌ حَسَنٌ
ஹதீஸ் எண் : 1492
நபி (ஸல்) அவர்கள் அதிகமான பிரார்த்தனைகளைச் செய்தார்கள். அவற்றில் நாங்கள் எதையும் மனனம் செய்யவில்லை. “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதிகமான துஆக்களைச் செய்கின்றீர்கள். நாங்கள் அவற்றில் எதையும் மனனம் செய்யவில்லை” என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் “அவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு துஆவை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டுவிட்டு “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் கைரி மா சஅலக்க மின்ஹு நபிய்யுக முஹம்மதுன் ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம். வஅவூது பிக்க மின்ஷர்ரி மஸ்தஆத மின்ஹு நபிய்யுக்க முஹம்மதுன் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வஅன்த்தல் முஸ்தஆனு வஅலைக்கல் பலாகு வலாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹி” என்று நீங்கள் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.
(பொருள் : அல்லாஹ்வே! உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னிடம் வேண்டிய நன்மைகளை நான் உன்னிடம் வேண்டுகிறேன். உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) எவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடினார்களோ அவற்றின் தீங்கிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். நீதான் உதவி செய்யக்கூடியவன், (நாடியவற்றை) அடையச் செய்வதும் உன் மீதே இருக்கிறது. அல்லாஹ்வைக் கொண்டே தவிர தீமையை விட்டு விலகுதலும் இல்லை நன்மைகளைச் செய்வதற்கு ஆற்றலும் இல்லை)
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி), நூல் : திர்மிதீ (3443)
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் “அல்லைஸ் பின் அபீசுலைம்” என்பார் பலவீனமானவர் ஆவார்.

1493- وَعَن ابْنِ مسْعُودٍ رضِيَ اللَّه عنْهُ قَالَ : كَانَ مِن دُعَاء رَسُولِ اللَّه صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مُوجِباتِ رحْمتِكَ وَعزَائمَ مغفِرتِكَ والسَّلامَةَ مِن كُلِّ إِثمٍ والغَنِيمَةَ مِن كُلِّ بِرٍ وَالفَوْزَ بالجَنَّةِ وَالنَّجاةَ مِنَ النَّارِ –
رواهُ الحاكِم أبو عبد اللَّهِ وقال : حديثٌ صحيحٌ على شرط مسلِمٍ

ஹதீஸ் எண் : 1493
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மூஜிபாத்தி ரஹ்மத்திக்க, வஅஸாயிமி மஃக்ஃபிரத்திக்க, வஸ்ஸலாமத்த மின்குல்லி இஸ்மின் வல்கனீமத்த மின்குல்லி பிர்ரின், வல்ஃபவ்ச பில்ஜன்னத்தி, வந்நஜாத்தி மினன்னாரி” என்பது நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாகும்.
பொருள் : அல்லாஹ்வே ! உன்னுடைய அருளை உறுதியாகப் பெற்றுத் தரும் காரியங்களையும் உன்னுடைய மன்னிப்பை உறுதியாகப் பெற்றுத் தரும் காரியங்களையும், அனைத்துப் பாவமான காரியங்களிலிருந்து பாதுகாப்பையும். ஒவ்வொரு நன்மையான காரியத்திலும் உள்ள வெற்றிப் பொருளையும், சொர்க்கத்தைக் கொண்டுள்ள வெற்றியையும், நரகத்திலிருந்து பாதுகாப்பையும் உன்னிடம் வேண்டுகிறேன்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : ஹாகிம் (1925)
இது முஸ்லிமின் நிபந்தனைப்படி அமைந்த ஆதாரப்பூர்மான ஹதீசாகும் என ஹாகிம் கூறுகிறார்.
குறிப்பு : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான “ஹுமைதுல் அஃரஜ்” என்பார் பலவீனமானவர் ஆவார்.