திருக்குர்ஆன் சூராக்களின் சிறப்புகள் – ஆயத்துல் குர்ஸீ சிறப்பு

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள்

திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாக கூறப்படும் சிறப்புகள் பற்றி அவை ஆதாரப்பூர்மானதா? பலவீனமானதா என்பதை நாம் பார்த்து வருகிறோம். இத்தொடரில் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255 வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகளை ஆய்வு செய்துள்ளோம்.

வசனங்களின் தலையானது

ஒவ்வொரு பொருளுக்கு ஒரு தலைமை உள்ளது. திருக்குர்ஆனின் தலைமையான அத்தியாயம் பகரா ஆகும். மேலும் இந்த அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் வசனங்களின் தலைமை வசனம் உள்ளது. அதுதான் ஆயத்துல் குர்ஸியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி (2803)

இந்த செய்தி ஹாகிம் (பாகம் 2 பக்கம் 285 286) முஸன்னப் இப்னு அபதுர் ரஸ்ஸாக் (பாகம் 3 பக்கம் 376) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஹகீம் பின் ஜுபைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் அந்த ஹதீஸின் கீழே ” ஹகீம் பின் ஜுபைர் என்பவரை ஷுஅபா அவர்கள் விமர்சித்து அவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் அஹ்மத் அவர்கள் “இவர் பலவீனமானவர், குழறுபடி செய்பவர்’ என்றும், இப்னு மயீன் அவர்கள் “இவர் மதிப்பற்றவர்’ என்றும், ஷுஅபாவிடம் இவருடைய ஹதீஸ்களைப் பற்றி கேட்ட போது “நான் நரகத்தை பயப்படுகிறேன்’ என்றும், இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் “இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் நிராகரிக்கப்பட்டவர்’ என்றும், இமாம் நஸயீ அவர்கள் “இவர் பலவீனமானவர்’ என்றும்,  இமாம் தாரகுத்னீ அவர்கள் “இவர் கைவிடப்பட்டவர்’ என்றும், இமாம் அபூதாவூத் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 383)

எனவே இந்த செய்தியை நாம் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.

பாதுகாப்பு தரும் வசனம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  யார் ஹாமீன் அல் முஃமீன் என்ற அத்தியாயத்தை இலைஹில் மஸீர் வரை காலையில் ஓதுவாரோ மேலும் ஆயத்துல் குர்ஸியையும் காலை நேரத்தில் ஓதுவாரோ அவருக்கு மாலைநேரம் இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாப்படுவார். யார் மாலை நேரத்தில் இவ்விரண்டையும் ஓதுவாரோ அவர் காலைவரை இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்: திர்மிதி (2804)

இந்த ஹதீஸ் தாரமி (3252) ஷுஅபுல் ஈமான் (பாகம் 2, பக்கம் :483) ஷரஹ் சுன்னா (பாகம்: 2, பக்கம்: 349) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தி பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் “(இச் செய்தியில் இடம் பெறும்) அப்துர்ரஹ்மான் பின் அபீ பக்ர் அல்முலைக்கி என்பவரை அவரின் நினைவாற்றல் குறைவின் காரணத்தால் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் விமர்சித்துள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

 இரண்டாவது இதே ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி இவர் “தகுதியற்றவர்’ என்றும். இமாம் இப்னு மயீன் அவர்கள், “இவர் பலவீனமானவர்’ என்றும். இமாம் அஹ்மத் அவர்கள் “ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்’ என்றும். இமாம் நஸயீ அவர்கள் ‘கைவிடப்பட்டவர்’ என்று விமர்சித்துள்ளனர்.

நூல்: மீஸானுல் இஃதிதால்,பாகம்: 4, பக்கம்: 263

வீடுகளை பாதுகாக்கும் வசனம்

யார் பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள நான்கு வசனங்களையும் ஆயத்துல் குர்ஸியையும் அதற்கு அடுத்தவரும் இரண்டு வசனங்களையும் பகராவின் இறுதியில் உள்ள மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஷைத்தானோ அல்லது அவன் வெறுக்கும் எந்த பொருளும் அவனை நெருங்காது. மேலும் இவற்றை பைத்திக்காரன் மீது ஓதினால் அவன் அதிலிருந்து விடுதலையாகமல் இருக்கமாட்டான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : தாரமி (3249,3248)

ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)  அவர்களின் சொந்தக் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

விரண்டோடும் ஷைத்தான்

இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள் நபித்தோழர்களில் ஒருவர் ஒரு நாள் ஜின் இனத்திலுள்ள ஒருவரை சந்தித் போது அந்த ஜின்னுடன் சண்டையிட நேர்ந்தது. இறுதியில் அவர் அந்த ஜின்னை வீழ்த்தி விட்டார். அப்போது அவர் ஜின்னைப்பார்த்து நீ என்ன மெலிந்து காணப்படுகிறாயே உன் இனத்தில் உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்களா அல்லது நீ மட்டும் இப்படி இருக்கிறாயா உன்னுடைய கைகளும் நாயுடைய கைகள் போன்று முடிகள் உள்ளது என்று கேட்டார். அப்போது அந்த ஜின் நானும் அந்த இனத்தில் உள்ளவன்தான், நான் மிகவும் வலிமையுள்ளவன்தான். நீ மறுபடியும் என்னிடத்தில் சண்டை செய் பார்க்கலாம், அப்போது நீ என்னை வீழ்த்தி விட்டால் நான் உனக்கு ஒரு விஷயத்தை கற்றுத்தருகிறேன் என்று கூறியது. அவரும் சரி என்றார். (அப்போதும் சண்டையில் அவர் அதனை கீழே வீழ்த்தி விட்டார்) அப்போது அது உனக்கு ஆயத்துல் குர்ஸி தெரியுமா ? என்று கேட்டது. அவர் தெரியும் என்றார். எந்த வீட்டில் அதனை இரவில் நீ ஓதுகிறாயோ அந்த வீட்டிலிருந்து கழுதையைப் போன்று காற்றை விட்டவனாக ஷைத்ததான் வெளியேறி விடுகிறான். விடியும் வரை அவன் அங்கு வருவதில்லை என்று கூறிச் சென்றது.

நூல்: தாரமி (3247)

இதே செய்தி முஃஜமுல் கபீர், பாகம்: 9, பக்கம்: 166, தலாயிலுன் நுபுவ்வா, பாகம்: 8, பக்கம் 193)

இந்த கிதாபுகளில் அந்த நபித்தோழர் உமர்தான் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தி முழுக்க முழுக்க நபித்தோழர் சம்மந்தப்பட்ட விஷயமாக இருக்கிறது. எந்த விதத்திலும் நபி (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட வில்லை. எனவே இதை ஆதாரமாக கொள்ளமுடியாது. மேலும் புகாரியில் நபிகளாரின் அங்கீகாரத்துடன் இதே சிறப்பு உள்ளதாக இடம் பெற்றள்ளது. பின்னர் அது விளக்கப்படும்

இரண்டாவதாக தாரமியின் அறிவிப்பாளர் தொடரில் ஷுஅபி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற வில்லை.

நூல்: மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்: 9, பக்கம்: 71

சிறந்த வசனம்

இப்னு மஸ்வூத் (ரலி) கூறுகிறார்கள் :  வானத்திலோ பூமியிலோ ஆயத்துல் குர்ஸியை விட மகத்தான ஆயத்தை அல்லாஹ் படைக்க வில்லை.

நூல்: திர்மிதி (809)

திருக்குர்ஆனின் ஆயத்துக்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். குறிப்பிட்ட வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமானால் அல்லாஹ்வோ நபி (ஸல்) அவர்களோ தான் கூறவேண்டும். இதில் இந்த இரண்டு வகையும் இல்லாமல் நபித்தோழரின் கூற்றாக இடம்பெற்றுள்ளது. எனவே இந்த செய்தி ஆதாரத்திற்கு ஏற்றவை அல்ல!

அதிக நன்மையை பெற்றுத் தரும் வசனம்

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர் ஒருவரிடத்தில் நீ திருமணம் முடித்து விட்டாயா என்று கேட்டார்கள். அதற்கவர் நான் திருமணம் செய்து கொள்வதற்கு என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை என்றார். உன்னிடத்தில் குல்ஹுவல்லாஹு அஹத் எனும் சூரா இல்லையா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஆம் இருக்கிறது என்றார். நபி (ஸல்) அவர்கள் அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதிக்கு சமமானதாகும் என்றார்கள். உன்னிடத்தில் குல் யா அய்யுஹல் காபிரூன் என்ற சூரா இல்லையா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஆம் இருக்கிறது என்றார். நபி (ஸல்) அவர்கள் அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதிக்கு சமமானதாகும் என்றார்கள். உன்னிடத்தில் இதா ஜாஅ நஸ்ருல்லாஹி என்ற சூரா இல்லையா என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கவர் ஆம் இருக்கிறது என்றார்.  அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதிக்கு சமமானதாகும் என்றார்கள். உன்னிடத்தில் ஆயத்துல் குர்ஸி இல்லையா என்று நபியவர்கள் கேட்டார்கள் அதற்கவர் ஆம் இருக்கிறது என்றார். அது குர்ஆனின் நான்கில் ஒரு பகுதிக்கு சமமானதாகும் என்றார்கள். பின்பு நபியவர்கள் நீ (இதை மஹராக்கி) திருமணம் செய்து கொள் என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல்: அஹ்மத் (12831)

இதே செய்தி ஷுஅபுல் ஈமான்,பாகம்: 2, பக்கம்: 497 என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தியில் ஸலமா பின் வர்தான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் குறை  கூறியுள்ளனர்.

இமாம் அஹ்மத் அவர்கள் “இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர், பலவீனமானவர் என்றும். இப்னு மயீன் அவர்கள் “இவர் தகுதியற்றவர்’ என்றும். இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் இவர் வலிமையானவர் இல்லை. இவருடைய செய்திகளை நான் ஆய்வு செய்தேன். அதில் பெருபான்மையான செய்திகள் நிராகரிக்கப்பட வேண்டியதாக நான் பெற்றுக் கொண்டேன். இவர் அனஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கும் செய்தி மற்ற உறுதியான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் செய்திக்கு ஒத்ததாக இருக்கவில்லை’ என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் அபூதாவூத், நஸயீ ஆகியோர் “பலவீனமானவர்’ என்றும். இமாம் ஹாகிம் அவர்கள் “இவர் அனஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கும் செய்திகளில் பெருபான்மையாக நிராகரிக்கப்பட வேண்டிய செய்திகள் இருக்கிறது’ என்றும்  இமாம் இஜ்லி, தாரகுத்னீ ஆகியோர் “இவர் பலவீனமானவர்’ என்றும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 4 பக்கம் 140)

அறிஞர்கள் குறிப்பிட்டது போல் இந்த செய்தியை அனஸ் (ரலி) அவர்கள் மூலமாகவே அறிவித்துள்ளார். எனவே இந்த செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது.

அர்ஷின் கீழிருந்து எடுக்கப்பட்ட வசனம்

நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பகரா குர்ஆனின் உயர்ந்த பகுதியாகும். அதனுடைய அதிலுள்ள ஒவ்வொரு வசனங்களுடனும் எண்பது மலக்குமார்கள் இறங்கியிருக்கிறார்கள். “அல்லாஹு லாயிலாஹா இல்லா ஹுவ அல் ஹய்யுல் கய்யூம்’ என்ற ஆயத் அர்ஷின் கீழிலிருந்து எடுக்கப்பட்டு அதை சூரத்துல் பகராவோடு இணைக்கப்பட்டுள்ளது. யாஸின் அத்தியாயம் திருக்குர்ஆனின் இதயமாகும். யார் அல்லாஹ்வை நாடி, மறுமை வீட்டை எதிர்பார்த்து ஓதுவாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும். அதை நீங்கள் உங்களில் இறந்தவருக்கு ஓதுங்கள் என்று கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (19415)  

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் பெயர் குறிப்பிடாத தந்தை, மகன் ஆகிய இருவர்கள் இடம் பெற்றுள்ளார். இவ்விருவர்கள் யார்? இவர்களின் தகுதி என்ன? என்பது அறியப்படாததால் இச் செய்தி பலவீனம் அடைகிறது.

பைத்தியத்தை நீக்கும் வசனம்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் இருக்கிறது என்றார். என்ன நோய் என்றார்கள். பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவரை தன்னிடம் கொண்டு வா என்று சொன்னார்கள். அவர் அவரை கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவையும் சூரத்துல் பகராவின் முதல் நான்கு வசனங்களையும் “இலாஹ‚கும் இலாஹ‚வ் வாஹித்’ என்ற வசனத்தையும் ஆயத்துல் குர்ஸியும் சூரத்துல் பகராவின் கடைசி வசனம் ஆல இம்ரான் என்ற அத்தியாயத்தில் ஷஹிதல்லாஹ‚ அன்னஹ‚ லாயிலாஹா இல்லா ஹ‚வ என்ற வசனத்தையும் சூரத்துல் அஃராபில் “இன்ன ரப்ப குமுல்லாஹ‚ல்லாஹ‚ல்லதி’ எனத் தொடங்கும் வசனத்தையும் சூரத்துல் முஃமினின் கடைசி வசனமான “பதஆலல்லாஹ‚’ எனத் தொடங்கும் வசனமும் சூரத்துல் ஜின்னில் “வ அன்னஹ‚ தஆலா’ எனத் தொடங்கும் வசனமும் சூரத்துல் ஸாப்பாத்தில் முதல் பத்து வசனமும் சூரத்துல் ஹஷ்ரில் கடைசி மூன்று வசனமும் குல் ஹ‚வல்லாஹ‚ என்ற வசனமும் முஅவ்விததைன் எனும் குல் அவூது பிரப்பில் பலக்கும் குல் அவூது பிரப்பின்னாஸ் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள். பின்பு அந்த மனிதர் நோய்யுராதவரைப் போன்று எழுந்தார்.

அறிவிப்பவர்: உபை பின் கஅபு (ரலி)

“நூல்:அஹ்மத் (20237)

இதே செய்தி ஹாகிம் (பாகம்: 4, பக்கம்: 458) ல் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் உமர் பின் அலி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இவர் கடுமையாக தத்லீஸ் செய்பவர். (தனக்கு முன்னால் உள்ள நபரை விட்டு அறிவிக்கும் பழக்கம் உள்ளவர்) இவர் ஹத்தஸனா எனக்கு நேரடியாக அறிவித்தார் என்று சொல்லும் வரை இவரின் செய்தியை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும். உமர் பின் ஷைபா அவர்கள் இவர் தத்லீஸ் செய்பவர் என்றும். இதே குறையை இமாம் ஸாஜி அவர்களும் கூறியிருக்கிறார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம் 7 பக்கம் 427)

இரண்டாவது இந்த செய்தியில் யஹ்யா பின் அபீ ஹய்யா என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரையும் அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

இப்னு ஸஃது அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்றும். இமாம் யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்றும். இவருடைய செய்திகள் நிராகரிக்கப்பட வேண்டியது என்றும். இப்னு மயீன் அவர்கள் பலவீனமானவர் என்றும் உஸ்மான் தாரமி அவர்கள் இஹ்ர் “பலவீனமானவர்’ என்றும். இஜ்லி அவர்கள் பலவீனமானவர் என்றும். அம்ரு பின் அலி அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் விமர்சனத்திற்குள்ளானவர் என்றும். ஜவ்ஸஜானி அவர்கள் இவருடைய செய்தியை பலவீனம் என்றும் யஃகூப் பின் சுப்யான் அவர்கள் பலவீனமானவர் என்றும். இதே போன்று இமாம் அபூதாவூத் நஸயீ அவர்களும் ஸாஜி அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும். இப்னு அம்மார் பலவீனமானவர் என்றும். இதே போன்று அபூ அஹ்மத் அவர்கள், இப்னு ஹிப்பான் ஆகியோர் பலவீனமானவர் பட்டியலில் இணைத்திருக்கிறார். இவர் பலவீனமானவர்களிடமிருந்து கேட்ட செய்திகளை நல்வரிடமிருந்து கேட்டதாக அறிவிப்பார்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம்: 11, பக்கம்: 177

எனவே இந்த செய்தியையும் ஆதரமாக ஏற்று செயல்படுத்தமுடியாது.

இதே ஹதீஸ் சில வார்த்தை மாற்றங்களுடன் தாரமீ 3246 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் யாரசூலுல்லாஹ்! குர்ஆனில் மகத்துவம் மிக்க ஆயத் எதுவென்று கேட்டார். “ஆயத்துல் குர்ஸி’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யாரசூலுல்லாஹ்! உங்களுக்கும் உங்கள் சமுதாயத்துக்கும் எந்த வசனம் சேர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். பகரா அத்தியாயத்தின் கடைசி இரண்டு ஆயத்துகள் என்று கூறிவிட்டு, அந்த ஆயத்துகள் அல்லாஹ் தனது அர்ஷின் கீழ் உள்ள அருளின் பொக்கிக்ஷத்தில் இருந்து வந்தவை. அவற்றை இந்த சமுதாயத்திற்காக கொடுத்திடுக்கிறான். இது இவ்வுலகம், மறு உலகத்தின் அனைத்து நன்மைகளை பெற்று தரவல்லது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: தாரமி (3246)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அய்பஃ இப்னு அப்தில் கலாயி என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கிறார். ஆனால் இவர் நபி (ஸல்) அவர்களை சந்திக்க வில்லை. இதை நான் இஸாபா என்ற நூலில் தெளிவுபடுத்தி உள்ளேன் என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் இமாம் அஸ்தி அவர்கள் இவரைப்பற்றி குறிப்பிடும் போது இவருடைய ஹதீஸ்கள் ஆதராப்பூர்வமானது இல்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

நூல: லிஸானுல் மீஸான்,பாகம்: 1, பக்கம்: 476

எனவே இந்த செய்தியையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

நன்மைகளை எழுதி தீமைகளை அழிக்கும் வசனம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக் குப்பின்னும் ஓதுவாரோ ஏழு வானங்கள் பிளந்து விடும். அல்லாஹ் அவற்றை சொன்ன வரை பார்க்கும் பிளந்த வானங்கள் இணையாது. பிறகு ஒரு மலக்கை அனுப்பி அந்த நேரத்திலிருந்து மறுநாள் காலை வரை அவனுடைய நன்மையை எழுதச் செய்கிறான். அவனுடைய தீமைகளை அழிக்கச் செய்கிறான்.

நூல்: அல்காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 1, பக்கம்: 305

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் யஹ்யா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இப்னு அதீ அவர்கள், இந்த செய்தி பொய்யானது. இவர் நல்லவர்களை மூலம் பொய்யான செய்திகளை அறிவிப்பவர். இப்னு ஹிப்பான் அவர்கள் “நல்லவர்கள் மூலம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர்’ என்று விமர்சனம் செய்துள்ளனர்.

நூல: காமில் பீ லுபாயிர் ரிஜால், பாகம்: 1, பக்கம்: 305

 வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஓத வேண்டிய வசனம்

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள், வீட்டினுள் நுழைந்தால் வீட்டின் மூலைகளில் ஆயத்துல் குர்ஸியை ஓதுவார்கள்.

நூல்: முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம்: 6, பக்கம்: 127

முஸ்னத் அபீ யஃலா, பாகம்: 13, பக்கம்: 165

மார்க்கத்தில் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்கள் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே! எனவே நபித்தோழரின் செயல் நமக்கு முன்மாதிரி இல்லை. மேலும் இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உபைத் என்பவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். ஆனால் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம்  அவர் எதையும் செவியுறவில்லை. (நூல்: மஜ்மவுஸ்ஸவாயித் பாகம்:10, பக்கம்: 128) எனவே இந்தச் செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அல்லாஹ் தேர்ந்தெடுத்த வசனம்

அல்லாஹ் தன்னுடைய வார்த்தைகளில்  குர்ஆனைத் தேர்ந்தெடுத்தான். குர்ஆனில் சூரத்துல் பகராவைத் தேர்ந்தெடுத்தான். சூரத்துல் பகராவில் ஆயத்துல் குர்ஸியைத் தேர்ந்தெடுத்தான். ஊர்களில் ஹரமை (மக்காவை) தேர்ந்தெடுத்தான். ஹரமில் மஸ்ஜிதைத் தேர்ந்தெடுத்தான். அதில் கஅபத்துல்லாஹ் (இருக்கும்) வீட்டை தேர்ந்தெடுத்தான் என்று அப்துல்லாஹ் பின் மர்வான் கூறினார்.

நூல்: முஸன்னப் இப்னு அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 3, பக்கம்: 367)

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மர்வான் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும் என்பதால் அப்துல்லாஹ் பின் மர்வான் அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

குடும்பத்தை பாதுகாக்கும் வசனம்

பகரா அத்தியாயத்தின் ஆரம்ப நான்கு வசனங்களையும் ஆயத்துல் குர்ஸியையும் ஆயத்துல் குர்ஸியின் பின்வரும் இரண்டு ஆயத்துகளையும் பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்களையும் யாரேனும் ஓதினால் அவரையும் அவர் குடும்பத்தையும் அந்நாளில் ஷைத்தான் நெருங்க மாட்டான். மேலும் அவன் வெறுக்கும் எந்த ஒன்றும் நெருங்காது. இவற்றைப் பைத்தியம் பிடித்தவருக்கு ஓதினால் அவர் நிவாரணம் அடையாமல் இருக்க மாட்டார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: தாரிமீ (3249)

ஷுஅபுல் ஈமான்-பைஹகீ, (பாகம்: 5, பக்கம்: 417, பாகம்: 2, பக்கம்: 464)

ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே நபித்தோழர்களின் கூற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

தீங்கிலிருந்து பாதுகாப்பு தரும் வசனம்

ஆயத்துல் குர்ஸியையும், நாற்பதாவது அத்தியாயமான முஃமின் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்தையும் யார் ஓதுவாரோ அவர் அன்றைய தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: அமலுல் யவ்மி வ லைலா (பாகம்: 3, பக்கம்: 316)

கிதாபுத்துஆ – தப்ரானி, பாகம்: 1, பக்கம்: 122

இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவர் பலவீனமானவர். இவரை யஹ்யா பின் மயீன், நஸயீ, அபூஹாத்திம் ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. (நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 16, பக்கம்: 553)

இதே செய்தி திர்மிதியிலும் 2804வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. அதிலும் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்ற பலவீனமான அறிவிப்பாளரே இடம் பெற்றுள்ளார்.

சோதனை நேரத்தில் ஓதும் வசனம்

யார் சோதனையான நேரத்தில் ஆயத்துல் குர்ஸியையும், சூரத்துல் பகராவின் கடைசி வசனங்களையும் ஓதுவாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அமலுல் யவ்மி வ லைலா, பாகம்: 2, பக்கம்: 154

இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் ஆமிர் பின் முத்ரிக் என்பவர் பலவீனமானவராவார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 288)

மேலும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் மஃமர் பின் ஸஹ்ல் என்பவருடைய குறிப்பு கிடைக்கவில்லை. எனவே இந்தச் செய்தி மேலும் பலவீனமடைகிறது.

இறைவன் பொறுப்பேற்றுக் கொள்ளும் வசனம்

யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவருடைய உயிரை அல்லாஹ் கைப்பற்ற பொறுப்பேற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 173)

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் கஸீர் பின் மர்வான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இப்னு மயீன் அவர்கள், இவர் உறுதியற்றவர் என்று கூறியுள்ளார். இப்னு அதீ அவர்கள், இவர் பொய்யான  செய்திகளை அறிவிப்பவர் என்று கூறி அந்தச் செய்திகளைப் பட்டியலிட்டுள்ளார். முஹம்மத் அவர்கள், இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். அப்துல் கரீம் என்பவர், யஹ்யா பின் மயீன் அவர்களிடம் இவரைப் பற்றிக் கேட்டார். அதற்கவர், “நீ அவரின் பக்கம் சென்றால் கல்லால் எறியும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாகப் பல பொய்யான செய்திகளை அறிவித்திருக்கிறார்” என்று சொன்னார்.

நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 5, பக்கம்: 352

மேலும் இந்தச் செய்தியில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவருடைய கிதாபு எரிந்ததற்குப் பிறகு மூளை குழம்பிவிட்டது. இவரிடமிருந்து இப்னு முபாரக், இப்னு வஹப் அறிவித்த ஹதீஸ்கள் மற்றவர்களிடம் அறிவித்த செய்திகளை விட சிறந்ததாகும்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 319

இந்தச் செய்தியை இவரிடமிருந்து இப்னுல் முபாரக், இப்னு வஹப் போன்றோர் அறிவிக்காத காரணத்தினால் மேலும் பலவீனமடைகிறது.

ஷஹீதின் தரத்தை பெற்றுத் தரும் வசனம்

யார் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்னும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் நபிமார்களோடு இணைந்து போர் செய்து மரணமடைந்தவரின் அந்தஸ்தை அடைந்தவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அமலுல் யவ்மி வ லைலா, பாகம்: 1, பக்கம்: 235

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் ஹுமைதிப்னி இப்ராஹீம், இஸ்மாயீல் பின் அய்யாஷ், தாவூத் பின் இப்ராஹீம், என்பவர்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களை ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

அப்துல் ஹுமைத் என்பவரிடம் ஹதீஸ்கள் எழுதப்பட்ட புத்தகம் இருந்தது. அது காணாமல் போன பிறகு அவரின் நினைவாற்றல் கெட்டு விட்டது. (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்)

இந்தச் செய்தி நினைவாற்றல் கெட்டதற்குப் பிறகு கூறியதா? அல்லது முன்னால் கூறியதா? என்ற குறிப்புகள் இடம் பெறவில்லை. அடுத்ததாக இந்தச் செய்தியில் இடம் பெறும் தாவூத் பின் இப்ராஹீம் அத்துஹலீ என்பவரின் நம்பத்தன்மை பற்றி எந்தக் குறிப்பும் அறிவிப்பாளர் விமர்சன நூல்களில் இடம் பெறவில்லை. எனவே இவர் யாரென அறியப்படாதவர் பட்டியலில் இடம் பெற்று, பலவீனமடைகிறார்.

அடுத்ததாக இதில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் சிரியா நாட்டவர் வழியாக அறிவிக்கும் செய்திகள் மட்டும் நம்பகமானவை என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் முடிவு. இந்தச் செய்தியை அவர் தாவூத் பின் இப்ராஹீம் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார். இவர் சிரியாவைச் சார்ந்தவரா? அல்லது வேறு ஊரைச் சார்ந்தவரா? என்ற குறிப்பு இல்லாததால் இந்தச் செய்தி மேலும் பலவீனம் அடைகிறது.

பாதுகாப்பைத் தரும் வசனம்

நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.  அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான்.  அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன்.  அதற்கவன்,  “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான்.  அவனை நான் விட்டுவிட்டேன்.

விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள்.

“மீண்டும் வருவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன்.  அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன்.  “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறினேன்.  அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்!” என்றான்.  அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்.

விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.  நான், “அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்!” என்றேன்.  “நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்றார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான்.  அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன். (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்!” என்று கூறினேன். 

அதற்கவன், “என்னை விட்டு விடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!” என்றான்.   அதற்கு நான், “அந்த வார்த்தைகள் என்ன?” என்று கேட்டேன்.  “நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!” என்றான்.  அவனை நான் விட்டுவிட்டேன்.

விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால்  அவனை விட்டுவிட்டேன்!” என்றேன்.  “அந்த வார்த்தைகள் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  “நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்!’ என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன். – நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர் – அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும்  உம்மிடம் உண்மையைத் தான் அவன் சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.  “தெரியாது!” என்றேன்.  “அவன் தான் ஷைத்தான்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்: புகாரி 2311)

இதே செய்தி புகாரியில் 3275, 5010 ஆகிய எண்களிலும், ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் சுனனுல் குப்ரா பாகம்: 6, பக்கம்: 237, இப்னு குஸைமா, பாகம்: 4, பக்கம்: 91, அமலுல் யவ்மி வ லைலா, பாகம்: 1, பக்கம்: 531 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

இந்தச் செய்தியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஷைத்தானைப் பார்த்ததாகவும் அவனைப் பிடித்ததாகவும் இடம் பெற்றுள்ளது.

நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். (அல்குர்ஆன் 7:27)

இந்த வசனத்தில் ஷைத்தான்களை நாம் பார்க்க முடியாது என்று இடம் பெற்றுள்ளது. எனவே இந்த வசனத்திற்கு முரணில்லாத வகையில், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தது மனித ஷைத்தான் என்று கூறலாம். ஏனெனில் மனிதர்களில் தீயவர்களை திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் இரண்டாவது அத்தியாயம் 14ஆவது வசனத்தில் நயவஞ்சகர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இதே போல் தீய கவிதைகளை பாடிக் கொண்டிருந்த கவிஞனை “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள்” என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 4548)

எனவே அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தது தீய மனிதன் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உபை பின் கஅப் (ரலி) அவர்களும் ஷைத்தானும்

இதே போல உபை பின் கஅபு (ரலி) அவர்களும் ஷைத்தானை பிடித்ததாகவும், அவருக்கும் ஆயத்துல் குர்ஸியைக் கற்று கொடுத்ததாகவும் இடம் பெற்றுள்ளது.

உபை பின் கஃபு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

எனது தந்தைக்குப் பேரீத்தம் பழம் காயப் போடப்படும் ஒரு இடம் இருந்தது. அதில் அவர்களின் பேரீத்தம் பழங்கள் போடப்பட்டு இருந்தன. இதை அவர் (தந்தை) பாதுகாத்து வந்தார். (ஒரு தடவை பேரீச்சம் பழங்கள்) குறைவதைக் கண்டார். ஒருநாள் இரவில் அதைக் கண்காணித்தார். அப்போது இளம் வயதுள்ள வாலிபனைப் போன்று ஒரு மிருகத்தைக் கண்டார். (அவர் சொல்கிறார்) நான் அதற்கு ஸலாம் சொன்னேன். அது என் ஸலாமுக்கு பதில் சொன்னது. நீ மனித இனத்தைச் சார்ந்தவனா அல்லது ஜின் இனத்தைச் சார்ந்தவனா? என்று கேட்டேன். அது, ஜின் இனம் என்று கூறியது. உனது கையை கொடு என்று  கேட்டேன். அந்தக் கை நாயினுடைய கையை போன்றும் நாயினுடைய முடியைப் போன்றும் இருந்தது. இதுதான் ஜின்னின் படைப்பு, என்னை விட ஜின் பலம் வாய்ந்தவர் இல்லை என்று அறிந்து கொண்டேன். நீ எதற்காக இதைச் செய்தாய் என்று கேட்டேன். நீ ஸதகாவுடைய பொருளை விரும்புவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால் நான் அதிலிருந்து எடுத்துச் செல்லலாம் என்று செய்தேன் என்று கூறியது. உங்களிடம் இருந்து எங்களை எப்படிப் பாதுகாத்து கொள்வது? என்று அதனிடம் கேட்டேன். ஆயத்துல் குர்ஸியின் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அது கூறியது. அதனால் அதை விட்டு விட்டேன்.

மறுநாள் எனது தந்தை நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கெட்டவன் உண்மையை உரைத்தான் என்றார்கள்.

நூல்: இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 63)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் ஸல்ம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இப்னு ஹிப்பானைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானோர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார் என்பதால் இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

புரைதா (ரலி) அவர்களும் ஷைத்தானும்

இதே சம்பவம் புரைதா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனக்கு உணவுப் பொருள்கள் இருந்தன. அதில் குறைவு ஏற்படுவதை பார்த்து ஒரு நாள் இரவில் (பாதுகாக்க எண்ணி நின்றேன்). அப்போது ஒரு பேய் உணவு இருக்கும் இடத்திற்கு வந்தது. அதை நான் பிடித்து உன்னை ரசூல் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லும் வரை விடவே மாட்டேன் என்று கூறினேன். அப்போது அவள், “நான் அதிகமாக வறுமையில் இருக்கும் பெண். என்னை விட்டு விடு, இனிமேல் வரவே மாட்டேன்” என்று சத்தியம் செய்து கூறினாள். அதனால் நான் விட்டு விட்டேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவள் பொய் கூறி விட்டாள் என்றார்கள். மீண்டும் உணவு குறைந்தது. அப்போது அவள் அந்த உணவிடத்தில் இருந்தாள். அவளை நான் பிடித்தேன். அப்போதும் அவள் முந்திய தடவை கூறியது போன்று கூறினாள். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவள் பொய் கூறுபவள், பொய் சொல்லி விட்டாள் என்றார்கள். மீண்டும் என்னுடைய உணவில் குறைவு ஏற்பட்டது. அவளுக்காக மறைந்திருந்தது அவளை பிடித்தேன். “இனி உன்னை விட்டு விடவே மாட்டேன். நான் உன்னை நபி (ஸல்) இடத்தில் கொண்டு செல்ல இருக்கிறேன்” என்றேன். அவள், “என்னை விட்டு விடு! நான் உனக்கு ஒன்றை கற்றுத் தருகிறேன். அதை நீ கூறினால் எங்களில் எவரும் உன்னை நெருங்க மாட்டார்கள். நீ படுக்கைக்குச் சென்றால் உன் மீதும் உன்னுடைய பொருளின் மீதும் ஆயத்துல் குர்ஸியை ஓதிக் கொள்” என்றாள். அதனால் நான் அவளை விட்டு விட்டேன். இதை நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் அறிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவள் பொய் கூறுபவளாக இருந்தாலும் உண்மை சொல்லி விட்டாள்” என்றார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: தலாயிலுன் நுபுவ்வா -பைஹகி, பாகம்: 8, பக்கம்: 176

இச்செய்தியில் இடம் பெறும்  அஹ்மத் பின் உபைத் என்பவர் பற்றியும், அலீ பின் அஹ்மத் பின் அப்தான் என்பவர் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இவர்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாததால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று எடுத்துக் கொள்ள முடியாது.

உஸைத் (ரலி)அவர்களும் ஷைத்தானும்

இதே போன்ற சம்பவம் நபித்தோழர் உஸைத் அஸ்ஸாயிதி (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உஸைத் அஸ்ஸாயிதி (ரலி) அவர்களுக்கு மதீனாவில் புலாஆ என்று சொல்லக் கூடிய ஒரு கிணறு இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்கள் உமிழ்ந்து நல்ல செய்தியையும் கூறியிருந்தார்கள். உஸைத் (ரலி) அவர்கள் தன்னுடைய தோட்டத்திலுள்ள ஒரு மரத்தை வெட்டி தன்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். பேய் அவருடைய தண்ணீர் பாத்திரத்தையும் அவருடைய பேரீத்தம் பழங்களையும் திருடி நாசப்படுத்தியது. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். “உஸைதே! நீ அவளிடத்தில் சென்று பிஸ்மில்லாஹி ஹபஸனீய் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன் ரசூலுல்லாஹ் என்னைத் தடுத்து விட்டார்கள்) என்று சொல். இவ்வாறு அதன் மீது நீ சொல்லி விட்டால் அவளை தடுத்து விடும்” என்றார்கள். (இவ்வாறு கூறியதால் அந்த பேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை) அந்தப் பேய், “என்னை நபி (ஸல்) அவர்களிடத்தில் கொண்டு செல்வதை விட்டு விடு. நான் உனக்கு ஒரு உடன் படிக்கை தருகிறேன். உன்னுடைய வீட்டின் பக்கம் நெருங்க மாட்டேன். உன்னுடைய பழத்தினை திருட மாட்டேன், நான் உனக்கு அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு ஆயத்தைக் கற்றுத் தருகிறேன். நீ அதை உன்னுடைய வீட்டில் ஓதிக் கொள்! உன்னுடைய வீட்டின் அருகே பேய் நெருங்காது! உன்னுடைய பாத்திரத்தில் அதை ஓதிக் கொள்! நாங்கள் பாத்திரத்தை திறக்க முடியாது. பின்பு அந்த ஒப்பந்தத்தை அவர் திருப்தி கொள்ளும் பொருட்டு கொடுத்தது. அது அவருக்குக் கற்றுக் கொடுத்தது ஆயத்துல் குர்ஸியாகும். பின்பு அது காற்று பிரிந்த நிலையில் ஓடிவிட்டது.

நூல்: முஃஜமுல் கபீர், பாகம்: 19, பக்கம்: 263

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகத்தன்மை அறியப்படாதவராவார்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப் (பாகம்: 1, பக்கம்: 313)

இரண்டாவதாக, இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மாலிக் பின் ஹம்ஸா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி அவர்கள் பலவீனமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 5

அபூஅய்யூப் (ரலி) அவர்களும் ஷைத்தானும்

இதே போன்ற சம்பவம் அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களுக்கும் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களுக்குச் சிறிய அறை ஒன்று இருந்தது. அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன. அங்கே ஒரு பேய் வந்து அதை எடுத்துச் சென்றது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயரால்  கேட்கிறேன் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படு!” என்று அதைக் கண்டால் கூறு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுநாள் அபூ அய்யூப் பேயை பிடித்தார். இனிமேல் திரும்பி வர மாட்டேன் என்று அது சத்தியம் செய்ததும் அதை அவிழ்த்து விட்டார். நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது உனது கைதி என்னவானான் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். திரும்பி வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்தான் (அதனால் விட்டு விட்டேன்) என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவன் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் பொய் சொல்வான் என்று கூறினார்கள். பிறகு மற்றொரு தடவை அவனை பிடித்தார். உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லாமல் விடவே மாட்டேன் என்று அவனிடம் கூறினார். அதற்கு அவன், “நான் சில செய்திகளை உனக்குக் கூறுகிறேன் ஆயத்துல் குர்ஸியை உனது வீட்டில் ஓது! ஷைத்தானோ மற்றவர்களோ உன்னை நெருங்க முடியாது” என்று கூறினான். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது உனது கைதி என்னவானான்? என்று கேட்டார்கள். அவர் நடந்ததைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவன் பொய்யனாக இருந்தாலும் அவன் கூறியது உண்மையே” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி (2805)

இதே செய்தி அஹ்மத் (22488), ஹாகிம், பாகம்: 3 பக்கம்: 519, இப்னு அபீ ஷைபா , பாகம்: 6, பக்கம்: 94, முஃஜமுல் கபீர், பாகம்: 4, பக்கம்: 162. 163, தஹாவி-முஸ்கிலுல் ஆஸார், பாகம்: 2, பக்கம்: 282 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த செய்தியில் இப்னு அபீலைலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

அறிஞர் யஹ்யா பின் ஸயீத் அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியதாக  இமாம் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்கள். இமாம் அஹ்மத் அவர்கள், இவர் மனன சக்தி குன்றியவர், ஹதீஸை குழப்பக் கூடியவர் என்றும், இமாம் ஷுஃபா அவர்கள், இவரை விட மனன சக்தியில் மோசமான ஒருவரை நான் கண்டதில்லை என்றும், இமாம் யஹ்யா பின் மயீன் அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும், இதே போல் அபூ ஸுர்ஆ அவர்களும், இமாம் அபூஹாத்திம் அவர்களும், இவர் மனன சக்தி குன்றியவர், இவருடைய செய்தியை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இமாம் நஸயீ அவர்கள், இவர் பலவீமானவர் என்றும், இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் வெளிப்படையாகத் தவறிழைப்பவர், மனன சகதியில் கோளாறு உள்ளவர் எனவே இவருடைய செய்தியில் நிராகரிக்கப்பட வேண்டியவை அதிகமாகி விட்டது என்றும், தாரகுத்னி, இப்னு ஜரீர், தப்ரீ, ஆகியோரும், இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இப்னுல் முதைனி அவர்கள் இவர் மனன சக்தி கோளாறு உள்ளவர், வெளிப்படையாக தவறிழைப்பவர் என்றும், இதே போன்று இமாம் ஸாஜி அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம்: 9, பக்கம்: 268)

எனவே இவர் அறிவிக்கும் இந்தச் செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதே செய்தி ஹாகிமில் (பாகம்: 3, பக்கம்: 519) இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹிம் பின் பக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய குறிப்புகள் நாம் பார்த்த வரை கிடைக்கவில்லை.

இதே செய்தி முஃஜமுல் கபீரில் (பாகம்: 2, பக்கம்: 162) இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அல்ஹுஸைன் தஸ்தூரி என்பவரும் இப்னு அபீ லைலா என்பவரும் இடம் பெற்றுள்ளனர்.

முதலாவதாக ஹுஸைன் தஸ்தூரி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய எந்தக் குறிப்பும்  கிடைக்கவில்லை. எனவே இவருடைய இந்தச் செய்தியையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இப்னு அபீலைலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய அறிஞர்களின் விமர்சனத்தை முன்னர் கூறியிருக்கிறோம்.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களும் ஷைத்தானும்

இதே சம்பவம் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களுக்கும் நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஒரு சப்தத்தைக் கேட்டார்கள். அதைப் பிடித்து, நீ யார் என்று கேட்டார்கள்.  நான் தான் ஷைத்தான் என்று கூறினான். நான் நபியவர்களிடத்தில் அழைத்துச் செல்கிறேன் அவர்களிடத்தில் பதில் கூறு என்றார்கள். அதற்கவன் நான் இனிமேல்  வரவே மாட்டேன், என்னை விட்டு விடு என்றான். அவனை விட்டு விட்டார். மறுநாள் நபி (ஸல்) அவர்களிடத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சென்றார்கள். உன்னுடைய கைதி என்னவானான் என்று கேட்டார்கள். நான் விட்டு விட்டேன் என்றேன். மறுநாள் இரவிலும் அதே சப்தத்தை கேட்டார்கள். அதைப் பிடித்து நபி (ஸல்) இடத்தில் அழைத்துச் செல்ல நாடினார்கள். இனிமேல் திரும்பும் வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கூறினான். அவனை விட்டு விட்டார்கள். மூன்றாவது இரவிலும் அதே சப்தத்தைக் கேட்டு அதைப் பிடித்து நபி (ஸல்) அவர்களிடத்தில் அழைத்துச் செல்ல நாடினார்கள். நான் இனிமேல் திரும்பவும் வர மாட்டேன் என்னை விட்டு விடு என்று சத்தியம் செய்து கூறினான். முஆத் (ரலி) அவர்கள் விட மறுத்து விட்டார்கள். நீ என்னை விட்டு விடு! நான் உனக்கு ஒரு ஆயத்தைக் கற்றுத் தருகிறேன். நீ அதை ஓதினால் நாங்கள் அந்த இடத்தை நெருங்க மாட்டோம் என்று கூறி ஆயத்துல் குர்ஸியை கற்றுக் கொடுத்தான். இதனால் அவர் அவனை விட்டு விட்டார். மறு நாள் நபியிடத்தில் மூஆத் (ரலி) அவர்கள் சென்ற போது உன்னுடைய கைதி என்னவானான் என்றார்கள். அதற்கவர் அவன் தனக்கு அறிவித்ததைச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவன் பொய்யனாக இருந்தாலும் உண்மை கூறிவிட்டான் என்றார்கள்.

நூல்: முஸ்னத் ஸாமிஈன் பாகம்: 2, பக்கம்: 416

முஃஜமுல் கபீர், பாகம்: 20, பக்கம்: 101,

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவரும் உகைல் பின் முத்ரிக் என்பவரும் யாரென அறியாபடாதவர்கள். எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது

இதே செய்தி சில வார்த்தை மாற்றங்களுடன் முஃஜமுல் கபீரில் (பாகம்: 20, பக்கம்: 51) இடம் பெற்றுள்ளது.

ஆனால் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் பின் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இப்னு ஹாத்திம் அவர்கள், இவரை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்கள்.

நூல்: முஃனி பீ லுஃபா (பாகம்: 2, பக்கம்: 740)