ஆயத்துல் குர்ஸீ என்பது அல்குர்ஆனில் 2:255வது வசனமாக இடம்பெற்றுள்ளது. இதை ஓதுவதற்குப் பல்வேறு சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவற்றில் ஒன்றாக, ஆயத்துல் குர்ஸியை ஓதுவதன் மூலம் ஷைத்தான் நம்மை நெருங்கமாட்டன் என உணர்த்தும் செய்தியை நபித்தோழர்களில் ஒருவரான அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரியில் ஹதீஸ் எண் 2311ல் இடம்பெற்றுள்ளது.
இதை ஆதாரமாகக் கொண்டு நாம் கடந்த காலங்களில் பல்வேறு சொற்பொழிவுகளிலும் நூற்களிலும் பேசியும் எழுதியும் வந்துள்ளோம்.
அந்தச் செய்தி பின்வருமாறு:
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். நான் அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்” என்று கூறினேன். அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது” என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடும் வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் அவன் வருவான்” என்றார்கள். மீண்டும் வருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அ(வனைப் பிடிப்ப)தற்காகக் காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன்.
“உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்” என்று கூறினேன். அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்” என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்” என்றேன். “நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்” என்றார்கள்.
மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்த போது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்” என்று கூறினேன்.
அதற்கவன், “என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்” என்றான். அதற்கு நான், அந்தச் சொற்கள் என்ன? என்று கேட்டேன். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்” என்றான். அவனை நான் விட்டுவிட்டேன்.
விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்” என்றேன். “அந்தச் சொற்கள் என்ன?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை தொடக்கத்திலிருந்து கடைசிவரை ஓதும். அவ்வாறு ஓதினால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் அவன் கூறினான்” எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்-
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத்தான் அவன் சொல்லியிருக்கின்றான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். தெரியாது என்றேன். “அவன்தான் ஷைத்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2311)
மேற்கண்ட ஹதீஸின் கருத்தைக் கவனிக்கும்போது அபூஹுரைரா(ரலி) அவர்கள் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானைக் கண்டதாகப் புரிந்து கொள்வதை விட கெட்ட மனிதனைக் கண்டதாகப் புரிந்து கொள்வதற்கு மிக நெருக்கமாக இருந்தது.
ஏனெனில் மனிதர்களால் ஜின் இனத்தவர்களை எளிதாகக் காண இயலாது என திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் ஷைத்தான் உங்களைச் சோதனைக்குள்ளாக்கிவிட வேண்டாம். அவ்விருவரின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்களின் ஆடைகளை அவர்களிடமிருந்து அகற்றினான். அவனும் அவனது இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாத விதத்தில் உங்களைப் பார்க்கின்றனர். இறைநம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை நேசர்களாக ஆக்கியுள்ளோம்.
அல்குர்ஆன் – 7:27
ஷைத்தானையும் அவன் சார்ந்திருக்கும் ஜின் இனத்தாரையும் மனிதன் எளிதாகக் காணமுடியாது என இவ்வசனம் கூறுகிறது.
ஆனால் புகாரியின் அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஷைத்தானை நேரில் கண்டதாகவும் அவனுடன் உரையாடியதாகவும் அவனைப் பிடிக்க முற்பட்டதாகவும் வருகிறது. இது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு முரணாகத் தெரிகிறது.
இரண்டுக்கும் முரண் இல்லாத வகையில் புரிய வேண்டுமெனில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கண்டது ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானை அல்ல! மாறாக, கெட்ட மனிதனையே கண்டார்கள் என விளங்கினோம்.
பொதுவாக திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் கெட்ட மனிதர்கள், தீங்கிழைக்கும் விலங்குகள், விஷ ஜந்துகள் ஆகியவற்றுக்கு ஷைத்தான் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால் மேற்கண்ட ஹதீஸில் ஆயத்துல் குர்ஸீயை கெட்ட மனிதனே எடுத்துக் கூறியுள்ளான் என நாமும் விளங்கி மக்களுக்கும் விளக்கிச் சொன்னோம்.
தற்போது மேற்கண்ட ஹதீஸை மறு ஆய்வுக்கு உட்படுத்துகிற பொழுது இந்த ஹதீஸ் பலவீனமானது என அறிய முடிகின்றது.
இந்த ஹதீஸில் இடம்பெறும் உஸ்மான் பின் அல்ஹைஸம் எனபவர் பலவீனமானவர் ஆவார். இவரைப் பற்றி ஹதீஸ்துறை சார்ந்த அறிஞர்கள் பலர் விமர்சித்துள்ளனர்.
இமாம் அபூ ஹாத்திம் அர் ராஸி:
قال أبو حاتم: كان صدوقا غير أنه بأخرة كان يتلقن ما يلقن -تهذيب التهذيب .3/ 81
உஸ்மான் பின் அல்ஹைஸம் என்பவர் உண்மையாளர். எனினும் அவர் தமது இறுதிக்காலத்தில் அவரிடம் எடுத்துரைத்ததை ஏற்று அறிவிப்பாராக ஆனார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:3, பக்கம் 81
இமாம் தாரகுத்னீ:
صدوق كثير الخطأ -تهذيب التهذيب .3/ 81
உண்மையாளர். (ஹதீஸை அறிவிப்பதில்) அதிகம் தவறிழைப்பவர்.
இமாம் தாரகுத்னீ அவர்களின் இந்த விமர்சனத்திற்கான விளக்கம்:
இமாம் தாரகுத்னீ அவர்கள் தொடர்பாக ஒரு நூலை அப்துல்லா ரஹீலீ என்பவர் தொகுத்துள்ளார். அதில் அறிவிப்பாளர்கள் தொடர்பாக இமாம் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்களுக்கான விளக்கங்களைக் கூறுகிறார். அதில் தாரகுத்னீ அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை
صدوق ثقة
எனக் கூறுவதற்கும்
صدوق كثير الخطأ
எனக் கூறுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு கூறுகிறார்.
பொதுவாக இமாம் தாரகுத்னீ அவர்கள் ஒருவரை صدوق – உண்மையாளர் என கூறியிருந்தால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் என்று அர்த்தமல்ல.அவர் நல்ல மனிதர் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரைப் பற்றி இமாம்
“صدوق ثقة”
என்று கூறினால் உண்மையாளர் நம்பகமானவர் என்று பொருள் கொள்வதுடன் அவரது அறிவிப்புகளை ஏற்றுக்கொள்ளலாம்.
ஒருவரைப் பற்றி இமாம்
“صدوق كثير الخطأ”
உண்மையாளர். அதிகமாகத் தவறிழைப்பவர் எனக் கூறியிருந்தால் அவர் நம்பகமான அறிவிப்பாளர் கிடையாது எனவும் அவர் அறிவிக்கும் செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுக்கப்படாது என்று பொருளாகும்.
நூல்:கிதாபுல் இமாம் அபுல் ஹஸன் தாரகுத்னீ. பக்கம் 332
இமாம் அஹ்மத் பின் ஹம்பல்:
وقال الساجي: صدوق، ذكر عند أحمد بن حنبل، فأومأ إلى أنه ليس بثبت مات سنة عشرين ومائتين – إكمال تهذيب الكمال 9/ 191
உஸ்மான் பின் ஹைஸம் அவர்களை அஹ்மத் பின் ஹன்பல் அவர்களிடம் குறிப்பிட்ட போது அவர் உறுதியானவர் இல்லை என்று சுட்டிக்காட்டினார்கள்.
இக்மாலுத் தஹ்தீபில் கமால்
பாகம்:9 பக்கம்:191.
இவ்வாறு பலரால் விமர்சனத்திற்கு உள்ளான உஸ்மான் பின் அல்ஹைஸம் அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமடைகிறது.
இந்தப் பலவீனமான செய்தியை இமாம் புகாரி அவர்கள் ஏன் பதிய வேண்டும் எனக் கேள்வி எழலாம். இமாம் புகாரி அவர்கள் உஸ்மான் பின் அல்ஹைஸம் வழியாக 14 செய்திகளைத் தமது நூலில் கொண்டு வருகிறார். அவை அனைத்தும் நேரடி ஹதீஸ் ஆதாரமாக இல்லாமல் வலுவான ஹதீஸில் உள்ள சில கருத்துக்களுக்கு ஒப்பாக துணைச் சான்றாகத்தான் இவரது அறிவிப்புகளைக் கொண்டு வருகிறார்.
அதிலும் குறிப்பாக மேற்கண்ட ஆயத்துல் குர்ஸீ தொடர்பான செய்தியை உஸ்மான் தமக்கு அறிவித்ததாக நேரடித் தகவலாக அறிவிக்காமல் உஸ்மான் சொன்னதாக ஒரு தகவலாகப் (முஅல்லக்காக) பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
فتح الباري – ابن حجر (4/ 488)
2187 – قوله وقال عثمان بن الهيثم هكذا أورد البخاري هذا الحديث هنا ولم يصرح فيه بالتحديث وزعم بن العربي أنه منقطع واعاده كذلك في صفة إبليس وفي فضائل القرآن لكن باختصار وقد وصله النسائي والإسماعيلي وأبو نعيم
இந்த ஹதீஸில் ‘கால உஸ்மான் பின் ஹைஸம்’ (உஸ்மான் பின் ஹைஸம் சொன்னார்) என்று புகாரி கொண்டுவந்துள்ளார். நேரடியாகக் கேட்டார் என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. (எனவே இந்தச் செய்தியை) தொடர்பு அறுந்த செய்தி என்று இப்னுல் அரபி நினைக்கிறார். இப்லீஸ் பற்றி வர்னணைகள், திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற பாடத்திலும் இவ்வாறு இமாம் புகாரி குறிப்பிட்டுள்ளார். எனினும் இமாம் நஸாயீ, இஸ்மாயீலீ, அபூநுஐம் ஆகியோர் இதை மவ்ஸூலாக (நேரடியாகக் கேட்டதாக) அறிவித்துள்ளார்கள்
எனவே இது அறிவிப்பாளர் தொடர் முழுமை பெறாத செய்தியாகவும் உஸ்மான் பின் அல்ஹைஸம் என்ற பலவீனமான அறிவிப்பாளர் வழியாகப் பதிவு செய்யப்பட்ட செய்தி என்பதாலும் இந்த ஹதீஸ் பலவீனமானதாகிறது. ஆகவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள இயலாது.
ஆயத்துல் குர்ஸி தொடர்பான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்
புகாரியின் அறிவிப்பு பலவீனமாக இருப்பினும் நஸாயி இமாமுக்குரிய ஸுனன் அல் குப்ரா என்ற ஹதீஸ் நூலில் அறிவிப்பாளர் தொடர் முழுமை பெற்ற நம்பகமான ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த ஹதீஸ் பின்வருமாறு :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஃபித்ரா) ஸகாத் பேரீத்தம்பழங்களைப் பாதுகாத்து வந்தார்கள். (ஒருநாள்) ஒரு கையளவு அதிலிருந்து எடுக்கப்பட்டதைப் போன்ற ஓர் அடையாளத்தைக் கண்டார்கள். எனவே அதைப் பற்றி நபிகளாரிடம் எடுத்துக் கூறினார்கள். (அதற்கு நபியவர்கள்) “நீர் அவனைப் பிடிக்க நாடுகிறீரா?” எனக் கேட்டுவிட்டு “உன்னை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன் (இறைவன்) தூயவன்” எனக் கூறு! என்றார்கள். நானும் (அவ்வாறு) கூறினேன். உடனே ஒரு ஜின் எனக்கு முன்பாக நின்றது என அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் அவனைப் பிடித்து, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்ல முயன்றேன். அதற்கவன், “ஜின்களில் உள்ள ஏழைகளுக்காகவே அதை எடுத்தேன். இனி நான் மீண்டும் வரவேமாட்டேன்!” என்று கூறினான்.(ஆனால்) அவன் மீண்டும் வந்தான். எனவே அதைப் பற்றி நபிகளாரிடம் எடுத்துக் கூறினேன். (அதற்கு நபியவர்கள்) “நீர் அவனைப் பிடிக்க நாடுகிறீரா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “உன்னை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன் (இறைவன்) தூயவன்” எனக் கூறு! என்றார்கள். நானும் (அவ்வாறு) கூறினேன்.உடனே நான் அவனுடன் இருக்கும் நிலையில், அவனை நபிகளாரிடம் கொண்டு செல்ல முயன்றேன். அவன் மீண்டும் வரமாட்டேன் என வாக்களித்ததால் அவனை விட்டுவிட்டேன்.
(ஆனால்) அவன் மீண்டும் வந்தான்.எனவே அதைப் பற்றி நபிகளாரிடம் எடுத்துக் கூறினேன். (அதற்கு நபியவர்கள்) “நீர் அவனைப் பிடிக்க நாடுகிறீரா?” எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். “உன்னை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வசப்படுத்தியவன் (இறைவன்) தூயவன்” எனக் கூறு! என்றார்கள். நானும் (அவ்வாறு) கூறினேன். உடனே நான் அவனுடன் இருக்க, “நீ திரும்ப வராமாட்டேன் என வாக்களித்தாய். ஆனால் நீ பொய்யுரைத்துவிட்டு மீண்டும் வந்துள்ளாய்! நான் உன்னைக் கட்டாயம் நபிகளாரிடம் கொண்டு செல்வேன்” என்றேன்.
அதற்கவன், “என்னை விட்டு விடு! நான் உமக்கு சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன். அவற்றை நீர் கூறினால் ஜின்களில் எந்த ஒரு ஆணோ பெண்ணோ உம்மை நெருங்கமாட்டார்கள்” என்றான். அந்த வார்த்தைகள் எவை? எனக் கேட்டேன். அவை ‘ஆயத்துல் குர்ஸி’ எனவும் அதைக் காலையிலும் மாலையிலும் ஓதுவீராக என்றான். நான் அவனை விட்டுவிட்டேன். அதைப் பற்றி நான் நபிகளாரிடம் எடுத்துக்கூறினேன்.அதற்கு நபியவர்கள் என்னிடம், ‘(ஆயத்துல் குர்ஸி) அது அத்தகைய(சிறப்புடைய)து! என நீர் அறியவில்லையா!’ எனக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: ஸுனன் நஸாயி அல்குப்ரா(7963).
இந்தச் செய்தியின் அடிப்படையில் ஆயத்துல் குர்ஸீயை ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானே கற்றுக் கொடுத்தான் என்பதை அறிய முடிகிறது.
மேற்கண்ட ஹதீஸின்படி நமது ஆய்வின் தலைப்புக்கு ஏற்றமான பதில் கிடைக்கப் பெற்றாலும் இந்த ஹதீஸிலிருந்து எழும் பல்வேறு கேள்விகளும் அதற்கான பதில்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்.
மேற்கண்ட ஹதீஸில் எழும் கேள்விகளுக்கான பதில்களை அறிந்து கொள்ளும் முன் அந்த ஹதீஸின் சாரம்சம்த்தைப் பார்ப்போம்.
ஹதீஸின் சுருக்கம்:
ஸக்காத் பொருட்களான பேரீத்தம்பழக் குவியலுக்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பொறுப்பாளியாக இருக்கிறார். அக்குவியலில் யாரோ ஒருவர் ஒரு கையளவு பழங்களை அள்ளியதை உணர்கிறார். அந்த மர்ம நபரை அறிய முற்படுகிறார். இதுகுறித்து நபிகளாரிடம் தெரிவிக்கிறார். அந்த மர்ம நபர் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என முன்பே அறிந்திருந்த நபியவர்கள் அவரைப் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பார்ப்பதற்கும் பிடிப்பதற்கும் ஒரு பிரத்தியேக வார்த்தையைக் கற்றுத் தருகிறார்கள். அதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியவுடன் ஒரு ஜின் அவர் கண் முன்னே தோன்றுகிறது. அதைப் பார்க்கிறார். அந்த ஜின்னிடம் பேசுகிறார். அதைப் பிடிக்க நினைக்கிறார். அந்த ஜின் அபூஹுரைரா(ரலி) அவர்களை ஏமாற்றித் தப்பித்து விடுகிறது.இந்த நிலை மூன்று தினங்களாகத் தொடர்கிறது.இறுதியில் அவன் தப்பிக்க ஆயத்துல் குர்ஸீயின் சிறப்பைக் எடுத்துக் கூறித் தப்பித்து விடுகிறான். ஆயத்துல் குர்ஸீயின் சிறப்பை நபிகளாரும் அங்கீகரிக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தில் எழும் பல்வேறு ஐயங்களையும் அதற்கான விடைகளையும் குர்ஆன், ஸுன்னா ஒளியில் அறிந்து கொள்வோம்.
ஐயமும் தெளிவும்
கேள்வி: 1
இந்த ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஜின்னைத் தன் கண்ணால் பார்த்ததாக வருகிறதே? ஜின்கள் மனிதக் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற அல்குர்ஆன் 7:27 வசனத்திற்கு இந்தச் செய்தி முரணாகத் தெரிகிறதே?
பதில்: பொதுவாக மனிதர்களால் ஜின்களைக் பார்க்க இயலாது என்பதை அல்குர்ஆன் 7:27 வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஜின்னைக் கண்டதாக வரும் செய்தியில் அவர் ஜின்னைப் பார்த்ததாக வரவில்லை. பேரீத்தம்பழங்களை யாரோ அள்ளியதாகத்தான் உணர்கிறார்.அதை நபிகளாரிடம் தெரிவிக்கையில் அவனை நீ பிடிக்க நாடுகிறாயா? எனக் கேட்டு, அவனைப் பார்ப்பதற்கும் பிடிப்பதற்கும் பிரத்தியேக வாசகத்தை நபிகளார் கற்றுத் தந்த அடிப்படையில்தான் அபூஹுரைரா (ரலி) அவர்கள் காண்கிறார்கள். அந்த பிரத்தியேக வாசகத்தை ஓதாவிட்டால் அபூஹுரைரா (ரலி) அவர்களால் அந்த ஜின்னைப் பார்த்திருக்கவோ அதனுடன் பேசியிருக்கவோ முடியாது. எனவே இது அல்குர்ஆன் 7:27 வசனத்திற்கு முரண் ஆகாது.
கேள்வி: 2
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஓதிய பிரத்தியேக வார்த்தைகளை நாம் ஓதினால் அந்த ஜின்னைப் பார்க்கவோ அதனுடன் பேசவோ இயலுமா?
பதில்: முடியாது! ஏனெனில் இந்த சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைரா(ரலி) அவர்களிடம், நீ அவனைப் பிடிக்க விரும்புகிறாயா எனக் கேட்டதிலிருந்தும் அதற்காக ஒரு வாசகத்தைச் சொல்லிக் கொடுத்ததிலிருந்தும் இது அபூஹுரைரா(ரலி) அவர்களுக்கு மட்டும் உரித்தானது என்பதை உணரலாம். அதுமட்டுமின்றி இந்த வாசகம் பேரீத்தம்பழங்களைத் திருடிய அந்த ஜின்னை ஒரு தடவை மட்டும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பார்ப்பதற்கு விதிவிலக்கானது எனவும் புரிந்து கொள்ளலாம்.மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய அதே ஜின்னை அபூஹுரைரா (ரலி) அவர்கள் மறுதடவை பார்ப்பதற்கு நபிகளார் இந்த வாசகத்தைச் சொல்லி அனுப்புகிறார்கள்.
இந்த நிகழ்வுக்குப் பின் அபூஹுரைரா (ரலி) அவர்களே நினைத்தாலும் அந்த ஜின்னை எங்கேயும் எப்போதும் பார்க்க இயலாது எனும் போது நாம் எப்படி பார்க்க இயலும்?
கேள்வி: 3
இந்த ஹதீஸில் நபிகளார் அபூஹுரைரா(ரலி) அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாசகத்தில் ‘சுப்ஹான மன் ஸஹ்ஹரக்க லி முஹம்மத்’ என்று வருகிறது. அதன் பொருளாக ‘முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு உன்னை (ஜின்னை) வசப்படுத்திக் கொடுத்தவன் (இறைவன்) தூயவன்’ என வருகிறதே அப்படியெனில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஜின் இனத்தார்கள் வசப்படுத்தப்பட்டுள்ளார்களா?
பதில்:
سَخَّرَ
– சஹ்ஹர என்ற அரபு வார்த்தைக்கு வசப்படுத்தினான் என்று பொருளாகும்.வசப்படுத்துதல் என்ற அர்த்தம் இருந்தாலும் அந்த வார்த்தை இடம்பெறும் இடத்திற்குத் தகுந்தாற்போல் அதன் விளக்கம் வேறுபடும்.அதற்கான சில உதாரணங்களைக் காண்போம்.
وَسَخَّرَ لَكُمُ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ دَآئِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
அவன், உங்களுக்காக இடைவிடாது இயங்குபவையாக சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியுள்ளான். மேலும், உங்களுக்காக இரவையும், பகலையும் வசப்படுத்தியுள்ளான்.
அல்குர்ஆன் 14:33
மேற்கண்ட வசனத்தில் சூரியனையும் சந்திரனையும் இரவையும் பகலையும் அல்லாஹ் நமக்கு வசப்படுத்தித் தந்ததாகக் குறிப்பிடுகிறான்.
இங்கே வசப்படுத்துதல் என்பதை கட்டுப்படுத்துதல், நிர்வகித்தல், விரும்பியவாறு பயன்படுத்திக் கொள்ளுதல் என்ற பொருள் கொள்ள முடியாது. மாறாக சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகியவற்றின் பயன்களை நாம் அனுபவித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மட்டும்தான் நமக்கு வசப்படுத்தப்பட்டுள்ளது.
وَٱلْبُدْنَ جَعَلْنَـٰهَا لَكُم مِّن شَعَـٰٓئِرِ ٱللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌۭ ۖ فَٱذْكُرُوا۟ ٱسْمَ ٱللَّهِ عَلَيْهَا صَوَآفَّ ۖ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا۟ مِنْهَا وَأَطْعِمُوا۟ ٱلْقَانِعَ وَٱلْمُعْتَرَّ ۚ كَذَٰلِكَ سَخَّرْنَـٰهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
உங்களுக்கு(க் குர்பானி) ஒட்டகங்களை அல்லாஹ் ஏற்படுத்திய அடையாளங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை இருக்கிறது. எனவே, நிறுத்தி வைத்து, அவற்றின்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள்; அவற்றின் விலாப்புறங்கள் விழுந்து விட்டால், அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; இரந்து கேட்போருக்கும், (இரந்து கேட்காத) ஏழைகளுக்கும் உணவளியுங்கள்! நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவற்றை இவ்வாறு உங்களுக்கு வசப்படுத்தியுள்ளோம்.
அல்குர்ஆன் 22:36
மேற்கண்ட வசனத்தில் கால்நடைகளை அல்லாஹ் நமக்கு வசப்படுத்திக் கொடுத்ததை அறியலாம். இங்கே வசப்படுத்துதல் என்பது அப்பிராணிகளை வளர்ப்பது, கட்டுப்படுத்துவது, நமது தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்வது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இப்படி அந்த வார்த்தை இடத்திற்கேற்ப மாறுபட்ட விளக்கத்தைக் கொடுப்பதைப் போல் ஆயத்துல் குர்ஸீ தொடர்பான ஹதீஸில் உள்ளபடி நபிகளார் ஜின்னை வசப்படுத்தியுள்ளார்கள் என்றால் ஜின்னைக் கட்டுப்படுத்துவது, நிர்வகிப்பது, அடக்குவது, அவைகளிடம் அதிகாரம் செலுத்தி வேலை வாங்குவது, அடங்காத ஜின்களை தண்டிப்பது என்ற பொருளின்படி வசப்படுத்தியுள்ளார்களா அல்லது ஜின்களைக் காணுதல், அவர்களுக்கு மார்க்கத்தை எடுத்துக் கூறுதல், அவர்களின் தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் என்ற பொருளில் வசப்படுத்தப்பட்டுள்ளார்களா என அறிந்து கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ «إِنَّ عِفْرِيتًا مِنَ الْجِنِّ تَفَلَّتَ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ صَلَاتِي فَأَمْكَنَنِي اللهُ مِنْهُ فَأَخَذْتُهُ فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي فَرَدَدْتُهُ خَاسِئًا.யு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். ‘இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக’ (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி).
ஸஹீஹ் புகாரி : 461.
மேற்கண்ட செய்தியில் நபிகளாரிடம் ஒரு ஜின் குறுக்கிட்டபோது அதைப் பிடிப்பதற்கு மட்டும் இறைவன் வசப்படுத்தியுள்ளான் எனவும் அந்த ஜின்னை கட்டிவைக்கவோ தண்டிக்கவோ இயலவில்லை என்பதை அறியமுடிகிறது.ஏனெனில் ஜின்களை அடக்குவதும் அதை நிர்வகிப்பதும் நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட சிறப்பம்சமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே ஆயத்துல் குர்ஸீ ஹதீஸில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஜின் வசப்படுத்தப்பட்டதாக வரும் வாசகத்தில் ஜின்னை நபிகளார் பார்க்கும் வகையிலும் அதன் தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில்தான் வசப்படுத்தப்பட்டுள்ளதாகப் புரிந்து கொள்ளலாம்.
இதில் மற்றொரு அடிப்படையையும் நினைவில் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு மட்டும் தூதராக அனுப்பபடவில்லை. மாறாக ஜின் இனத்தாருக்கும் சேர்த்துத்தான் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் அறிந்து கொள்ளலாம்.
(நபியே!) இந்தக் குர்ஆனைச் செவியேற்பதற்காகச் சில ஜின்களை உம்மிடம் நாம் வரச் செய்ததை நினைவு கூர்வீராக! அவை அங்கு வந்தபோது “வாய் மூடியிருங்கள்!” என்று (தமக்குள்) கூறிக் கொண்டன. (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்டதும் அவை எச்சரிக்கை செய்பவையாகத் தமது சமுதாயத்தினரிடம் திரும்பிச் சென்றன.
“எங்கள் சமுதாயத்தினரே! மூஸாவுக்குப் பிறகு இறக்கப்பட்டுள்ள ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். (அது) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகும். அது வாய்மையை நோக்கியும், நேரான பாதையை நோக்கியும் வழிகாட்டுகிறது” என்று கூறின.
“எங்கள் சமுதாயத்தினரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதில் கூறுங்கள்! அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களின் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். உங்களைத் துன்புறுத்தும் வேதனையிலிருந்து காப்பாற்றுவான்”
“யார் அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளிக்கவில்லையோ, அவன் பூமியில் தப்பிப்பவனாக இல்லை. அவனுக்கு அல்லாஹ்வையன்றி எந்தப் பாதுகாவலரும் இல்லை. அவர்கள் பகிரங்க வழிகேட்டில் உள்ளனர்” (என்றும் ஜின்கள் கூறின.)
அல்குர்ஆன் 46:29-32
மனிதர்களுக்கு நபிகளார் இறைத்தூதராக இருப்பது போல் ஜின்களுக்கும் நபியவர்களே தூதராக இருப்பதனால் அந்த இனத்தைக் காணவும் அவர்களிடம் பேசவும் அவர்களுக்கு சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுவதற்கும் ஏற்ற வகையில் நபிகளாருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இதுதவிர வேறு எந்த வகையிலும் ஜின்களை நிர்வகிக்க நபிகளாருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படவில்லை.
கேள்வி: 4
ஆயத்துல் குர்ஸீ தொடர்பான ஹதீஸின் படி பேரீத்தம்பழங்களில் ஒரு கையளவு களவு போகிறது. அதை எடுத்த ஜின் தமது ஏழை ஜின்களுக்குத் தேவைப்படுவதால் எடுப்பதாகக் கூறுகிறது. நபிகளார் காலத்தில் பேரீத்தம்பழம் திருடுபோனது போன்று இன்றும் நமது உணவுக் குவியல்களில் ஜின்கள் கைவைப்பார்களா? அவர்களின் திருட்டால் நமக்கு இழப்பு ஏற்படுமா? ஜின் இனத்தவர்களால் மனிதர்களுக்கு இதுபோன்ற பொருளிழப்பு செய்ய இயலுமா?
பதில்: இது சற்று விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இதற்கான விடையை அறிந்து கொள்ளும் முன் ஜின் இனத்தவர்களில் உள்ள ஷைத்தான்களின் ஆற்றல் என்ன? அந்த ஷைத்தான்களால் மனிதர்களுக்கு எத்தகைய தீங்குகளைச் செய்ய இயலும் என்பதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
ஷைத்தானால் மனிதனின் உள்ளத்தில் தீய எண்ணங்களைத் தூவி அவனை வழிகெடுக்க முயற்சிப்பதைத் தவிர வேறு எந்தத் தீங்கையும் ஷைத்தானால் செய்ய இயலாது என்பதைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
ஒற்றை அதிகாரம்
“அல்லாஹ் உண்மையான வாக்குறுதியையே உங்களுக்கு அளித்தான். நானும் உங்களுக்கு வாக்களித்தேன். ஆனால் உங்களுக்கு மாறு செய்து விட்டேன். ‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் எனக்குப் பதிலளித்தீர்கள்’ என்பதைத் தவிர எனக்கு உங்கள்மீது எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைக் குறை கூறாதீர்கள்! உங்களையே குறை கூறிக் கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு உதவுபவன் அல்ல! நீங்களும் எனக்கு உதவுவோர் அல்ல! இதற்கு முன்பு நீங்கள் என்னை இணையாக்கியதை நான் மறுத்து விட்டேன். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது” என்று தீர்ப்பளிக்கப்படும்போது ஷைத்தான் கூறுவான். (அல்குர்ஆன் 14:22)
இப்லீஸின் இலக்கு
அவனை அல்லாஹ் சபித்தான். “நான் உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை எடுத்துக் கொண்டு அவர்களை வழிகெடுப்பேன். அவர்களிடம் தவறான எண்ணங்களை ஏற்படுத்துவேன். அவர்களுக்கு நான் ஏவுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். மேலும் நான் அவர்களுக்கு ஏவுவேன்; அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மாற்றம் செய்வார்கள்” என்று (ஷைத்தான்) கூறினான். யார் அல்லாஹ்வை விட்டுவிட்டு ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொண்டானோ அவன் தெளிவான நஷ்டத்தை அடைந்து விட்டான்.அவர்களுக்கு அவன் வாக்களித்து, அவர்களிடம் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறெதையும் ஷைத்தான் வாக்களிக்கவில்லை.
அல்குர்ஆன் (4:119, 120)
மனிதர்களே! பூமியில் இருப்பவற்றில் தூய்மையாகவுள்ள அனுமதிக்கப்பட்டவற்றை உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவனே உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.தீயதையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின்மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே அவன் உங்களுக்கு ஏவுகிறான்.
அல்குர் ஆன் 2:168,169
மனிதனை வழிகெடுப்பதைத் தவிர ஷைத்தானுக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை மேற்கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அதிலும் குறிப்பாக இறைநம்பிக்கை கொண்ட அடியார்களை ஷைத்தானால் வழிகேட்டில் வீழ்த்தவும் இயலாது என பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
“நீ சென்றுவிடு! அவர்களில் யாரும் உன்னைப் பின்பற்றினால், உங்களுக்கு நரகமே நிறைவான கூலியாகும். உனது சப்தத்தின் மூலம் அவர்களுள் உன்னால் இயன்றவர்களை வழிதவறச் செய்! உனது குதிரைப் படையையும், காலாட் படையையும் அவர்கள்மீது ஏவிவிடு! அவர்களுடன் செல்வங்களிலும், குழந்தைகளிலும் கூட்டாகிக் கொள். அவர்களிடம் வாக்குறுதியை அளி!” என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு ஷைத்தான் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் வாக்களிப்பதில்லை.
“என் (நல்) அடியார்களின்மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை” (என்றும் இறைவன் கூறினான்). உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்.
அல்குர்ஆன் 17:63-65
மறுமையில் ஜின்களைச் சேர்ந்த ஷைத்தான்கள் அல்லாஹ்வின் விசாரணைப் பிடியில் சிக்கும்போது மனிதர்களை வழிகெடுத்த குற்றத்தைப் பற்றியே விசாரிக்கப்படுகிறார்கள். மாறாக அவர்கள் வேறெந்தத் தீங்கை இழைத்ததாகவும் அதன் காரணமாக விசாரணைக்கு உள்ளானதாகவும் கூறப்படவில்லை. இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.
அவர்கள் அனைவரையும் அவன் ஒன்றுதிரட்டும் நாளில் “ஜின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களை (வழிகெடுத்து) அதிகப்படுத்திக் கொண்டீர்கள்” (என்று இறைவன் கூறுவான்.) மனித இனத்திலுள்ள அவர்களின் நண்பர்கள், “எங்கள் இறைவனே! எங்களில் சிலர், சிலரைக் கொண்டு பயனடைந்தனர். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள். “நரகமே உங்கள் தங்குமிடமாகும். அல்லாஹ் நாடியதைத் தவிர அதில் நிரந்தரமாக இருப்பார்கள்” என்று அவன் கூறுவான். உமது இறைவன் நுண்ணறிவாளன்; நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 6:128
இப்லீஸ் நடத்தும் இஜ்திமா
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்) நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து “நான் இன்னின்னவாறு செய்தேன்” என்று கூறுவான்.
அப்போது இப்லீஸ், “(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை” என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, “நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை” என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச் செய்து, “நீதான் சரி(யான ஆள்)” என்று (பாராட்டிக்) கூறுவான்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (5419)
இப்லீஸின் தரப்பினர் ஒவ்வொரு நாளும் என்னென்ன குழப்பம் செய்தோம், எத்தனை பேரை வழிகெடுத்தோம் என்றுதான் பேசிக் கொண்டிருக்கின்றனர். யாரை அடித்தோம், யார் வீட்டில் திருடினோம் என்ற பாதிப்புகளைச் செய்ததாக எங்கும் பேசியதில்லை என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து தெளிவாகிறது.
மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் கெட்ட ஜின்களால் மனிதர்களின் மனதில் கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த முடியும் என்ற தீங்குகளைத் தவிர வேறு எந்தப் பாதிப்பையும் அவர்களால் செய்ய இயலாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஆயத்துல் குர்ஸீ தொடர்பான ஹதீஸை அனுகுவோம்.
இந்த ஹதீஸில் பேரீத்தம் பழக்குவியலில் ஒரு கையளவு களவு போனதாக வரும் செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது? ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தான்கள் இவ்வாறு திருடி நமக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படுத்த மாட்டார்கள் எனும்போது இந்த சம்பவத்தைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.
அதாவது அல்லாஹ் ஆயத்துல் குர்ஸீயின் சிறப்பு தொடர்பாக ஒரு செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக உணர்த்த ஒரு நிகழ்வை ஏற்படுத்தியுள்ளான்.
ஜின்களை மனிதர்களில் ஒருவரான அபூஹுரைரா (ரலி) பார்க்க இயலாது என்பதால் பேரீத்தம் பழக்குவியலில் ஒரு கையளவு குறையச் செய்து யாரோ ஒரு மர்ம நபர் எடுத்ததாக அல்லாஹ் உணர்த்துகிறான். அதன் பிறகு அதை நபிகளாரிடம் எடுத்துக் கூறிய போது அவனைப் பிடிக்க நாடுகிறாயா என நபிகளார் கேட்டு, அதற்கு வழிமுறைகள் சொல்லிக் கொடுத்ததும் இதுபோன்று மூன்று தடவைகளும் நபிகளார் சொல்லிக் கொடுத்ததிலிருந்தும் இறுதியில் ஆயத்துல் குர்ஸீ தொடர்பான சிறப்பை அந்த ஜின் வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிந்து கொண்ட நிகழ்வுகளையும் பார்க்கும்போது இது அல்லாஹ்வால் நிகழ்த்தப்பட்ட சிறப்பு ஏற்பாட்டைப் போலவே உணரமுடிகிறது.
இந்த அடிப்படையில் புரிந்து கொண்டால் ஷைத்தானால் நமக்கு எந்தப் பொருளிழப்பும் ஏற்படாது எனவும் நமது பொருட்களை ஷைத்தானால் திருட முடியாது என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
