அசத்தியத்திற்கு அஞ்சாமல் ஏகத்துவத்திற்கு அழைப்போம்

உலகில் பல்வேறு இலக்குகளுடன் மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மரணத்திற்குப் பிறகு வாழவிருக்கிற மறுமை என்ற நிரந்தர வாழ்க்கையின் வெற்றியையே இலக்காகக் கொண்டு வாழும் சிலரும் இருக்கின்றனர். அந்த வெற்றியை அடைவதற்காக இறைவனின் கொள்கையை ஏற்று, அதன்படி செயல்படுபவர்களாக அத்தகையோர் உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு இணைவைப்பு போன்ற அசத்தியக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் மக்கள் இருந்தாலும், அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத, இறைச்செய்திக்கு மட்டும் கட்டுப்படும் கொள்கையை ஏந்திய, ஏகத்துவவாதிகளாக லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். அதனால்தான் தமிழகம் கண்ட ஏகத்துவ எழுச்சி, தவ்ஹீத் புரட்சி போன்ற தலைப்புகளில் உரைவீச்சுகளும் வரலாற்று கட்டுரைகளும் ஆவணங்களாகத் தவழுகின்றன. எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!
அல்லாஹ்வின் உதவியால் இறைக் கொள்கைக்கு மிகப்பெருமளவில் வெற்றி கிடைத்து, இணைவைப்புக் கொள்கையிலிருந்து பலர் விலகிக் கொண்டிருந்தாலும், முழுவதுமாக இணைவைப்பு தமிழகத்திலிருந்து இன்னும் அகற்றப்படவில்லை என்பதே நிதர்சன உண்மை.
தமிழகத்தில் இன்றளவும் பல ஊர்களில் வருடாந்திர இணைவைப்பு விழாக்கள், பல வீடுகளில் இணைவைப்பு பொருட்கள், பல பள்ளிவாசல்களில் (?) இணைவைப்பு பாடல்கள், என்று அசத்தியவாதிகளின் செயல்பாடுகளும் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தவறை தடுக்கத் தயக்கம்

அசத்தியவாதிகளின் இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்களின் மூலமாக வழிகேட்டின்பால் செல்லும் அறியாமை மக்கள் ஏராளம். இத்தகைய சூழலில் மாபெரும் அநியாயமான இணைவைப்பின் விபரீதத்தை சுட்டிக்காட்டி, எல்லா மக்களையும் நேரான பாதையின் பக்கம் அழைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஏகத்துவவாதியின் மீதும் இருக்கிறது.
இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்.
அல்குர்ஆன் – 31:13
இந்த மாபெரும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய லட்சக்கணக்கான ஏகத்துவவாதிகளில், சில நூற்றுக்கணக்கானோர் மட்டுமே, தான் ஏற்றுக் கொண்ட இறைக்கொள்கையை உறுதியோடு கடைப்பிடித்து எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் எடுத்துரைக்கின்றனர். ஏனைய அனைவரும் நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் இந்தப் பணியிலிருந்து விலகி நிற்கின்றனர்.
தான் கொண்டிருக்கும் கொள்கைதான் இறைவனின் கொள்கை. அதுதான் மறுமையில் வெற்றியை பெற்றுத் தரும் என்பதையெல்லாம் உணர்ந்திருந்தாலும், இந்த மகத்தான கொள்கையை பிறருக்கு எடுத்துரைக்கத் தயங்குகின்றனர்.
இஸ்லாமிய கொள்கையை புரியாமல் இணைவைப்பில் இருக்கும் மக்களை நரகப் பாதையிலிருந்து மீட்டெடுத்து சொர்க்கப் பாதையை நோக்கி வழிகாட்டும் மகத்தான பணியில் ஈடுபடுவதிலிருந்து பின்வாங்குகின்றனர்.

பிரச்சாரத்திலிருந்து பின்வாங்குவது பலவீனமான ஈமான்

பிரச்சாரப் பணியில் ஏற்பட்ட இந்தப் பின்னடைவிற்கு மிக முக்கியக் காரணம், ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களின் உள்ளத்தில் ஏற்பட்டுவிட்ட பயம்தான். அளவு கடந்த உலக ஆசையினாலும், மறுமை நம்பிக்கையில் உறுதி இல்லாததினாலும் அசத்தியவாதிகளுக்குப் பயந்து கொண்டு, சத்தியப் பிரச்சாரத்தை விட்டு விரண்டு ஓடுகின்றனர். அசத்தியத்தைத் தவறு என்று சுட்டிக் காட்டாமல் இருக்கின்றனர். பிரச்சாரக் களத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள மறுக்கின்றனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை கண்டால் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அதற்குச் சக்தி இல்லாதவர் தனது நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலாதவர் தனது உள்ளத்தால் வெறுத்து ஒதுங்கட்டும். அதுதான் (உள்ளத்தால் வெறுத்து ஒதுங்குவது தான்) ஈமானில் மிகவும் பலவீனமான நிலை.
அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி)
நூல்: முஸ்லிம் 78
நான் இந்த ஏகத்துவப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு, அசத்தியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தால் எனக்குப் பல எதிர்ப்புகள் வருமே! பல அவதூறுகளையும் பொய்யான விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடுமே! பல உறவுகளையும் நட்புகளையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுவிடுமே! நான் இறந்தால் கூட என் உடலை அடக்கம் செய்வதற்கு மையவாடியில் அனுமதி வழங்கப்படாதே!
இதுபோன்ற உள்ளக் கதறல்களால் ஈமானை பலவீனமாக்கிக் கொள்கின்றனர். ஈமான் கொண்டவர்களில் இதுபோன்ற பலவீனமான நிலையில் இருப்பவர்களைவிட எல்லா சூழலிலும் ஈமானில் உறுதியுள்ளவர்களைத் தான் அல்லாஹ் நேசிப்பான் என்பதை மறந்துவிட்டனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறை நம்பிக்கையாளர்தான் பலவீனமான இறை நம்பிக்கையாளரைவிட அல்லாஹ்விடத்தில் மிகவும் சிறந்தவரும் நேசத்திற்குரியவரும் ஆவார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: முஸ்லிம் 5178

சோதனை இல்லாமல் சுவனம் இல்லை

எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் இறை மார்க்கமான ஏகத்துவத்தை எடுத்துரைத்து, நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொண்டே இருப்பேன் என்ற உறுதிப்பாட்டோடு இருப்பவர்களுக்கு சிரமங்களும், அச்சத்தியவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்களும் கண்டிப்பாக வரும். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, மென்மேலும் இந்த சத்தியப் பிரச்சாரக் களத்திலேயே வீரியத்தோடு நீடிப்பது சிரமம் தான். அந்தச் சிரமத்தை அனுபவித்து தான் நாம் சுவனத்தை அடைய முடியும் என்பதையும் மறந்து விடக்கூடாது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 6487
உங்களில் போரிடுவோர் யார் என அல்லாஹ் வெளிப்படுத்திக் காட்டாமலும், பொறுமையாளர்கள் யார் என வெளிப்படுத்திக் காட்டாமலும் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என எண்ணிக் கொண்டீர்களா?
அல் குர்ஆன் – 3:142
“உங்களுக்கு முன்சென்றோர் (அடைந்த சோதனைகளைப்) போன்று உங்களுக்கும் வராமல் நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? அவர்களுக்கு வறுமையும் நோயும் ஏற்பட்டது. இறைத் தூதரும், அவருடனிருந்த இறைநம்பிக்கை கொண்டோரும், “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று கூறுமளவுக்கு உலுக்கப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் உதவி அருகில் இருக்கிறது.
அல் குர்ஆன் – 2:214
சுவனம் தான் இலக்கு என்ற நம்பிக்கையில் உண்மையுள்ளவர்களாக இருந்தால் அசத்தியவாதிகளைக் கண்டு அஞ்சாமல் சத்தியப் பிரச்சாரத்தில் நீடிக்க வேண்டும்.

அச்சத்தை அகற்றிய மூஸா(அலை)

சத்தியத்தை எடுத்துரைக்கும் பணியை முன்னெடுக்கும்போது, அசத்தியவாதிகளின் ஆட்பலத்தையும் அதிகாரத்தையும் கண்டு, அஞ்சுவது இயல்புதான். என்றாலும் அந்த நேரத்தில் இறைவன் மீதான உறுதியான நம்பிக்கையை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் பலப்படுத்த வேண்டும்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் இறைக் கட்டளைக்கிணங்க ஏகத்துவப் பிரச்சாரத்தை செய்வதற்குச் சென்றபோது, அதிகாரத்தாலும் ஆட்பலத்தாலும் பலமான ஃபிர்அவ்னை எதிர்கொண்டார்கள்.
அவன் மிகப்பெரும் கொடுங்கோல் மன்னனாக இருந்தான்.
அவனை எதிர்த்துப் பேசக்கூட அனைவரும் அஞ்சி நடுங்கும் நிலை.
ஆதலால் மூசா நபி அவனிடம் அழைப்புப் பணியைச் செய்து, ஏகத்துவத்தை எடுத்துரைத்து, இணைவைப்பை ஒழித்து, அநியாயத்தை தட்டிக் கேட்கப் பயந்தார்கள். தன்னோடு ஹாரூன் (அலை) அவர்களையும் துணைக்கு நியமிக்குமாறு இறைவனிடத்தில் கேட்டார்கள்.
“என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கூறுவதை அஞ்சுகிறேன். என் உள்ளம் நெருக்கடிக்குள்ளாகி விடும். எனது நாவு சரளமாகப் பேச வராது. எனவே ஹாரூனுக்கும் தூதர் எனும் தகுதியை வழங்குவாயாக! அவர்களுக்கு என்மீது ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. அதனால் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்” என அவர் கூறினார். (அதற்கு இறைவன்,) “அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நமது சான்றுகளுடன் செல்லுங்கள். நாம் உங்களுடன் செவிமடுத்தவராக இருப்போம். நீங்கள் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதர்கள்! எங்களுடன் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அனுப்பிவிடு!’ என்று கூறுங்கள்” எனக் கூறினான்.
அல் குர்ஆன் 26:12-17
இருவராக இருந்த போதும் ஆரம்பத்தில் பிரச்சாரக் களத்தில் ஈடுபடப் பயந்தார்கள். மிக அச்சுறுத்தலான, ஆபத்தான பிரச்சாரக்களம் அது. அந்த நெருக்கடியான சூழலில் அல்லாஹ் அவ்விருவருக்கும் கூறிய மற்றொரு செய்தியையும் பாருங்கள்.
“எங்கள் இறைவனே! அவன் எங்களைத் துன்புறுத்துவதையோ அல்லது எங்கள்மீது வரம்பு மீறுவதையோ (எண்ணிப்) பயப்படுகிறோம்”என இருவரும் கூறினர். “நீங்கள் இருவரும் பயப்படாதீர்கள்! நான் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன். இருவரும் அவனிடம் செல்லுங்கள்! “நாங்கள் உனது இறைவனின் தூதர்கள்; எங்களுடன் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அனுப்பிவிடு! அவர்களை வேதனைப்படுத்தாதே! உன் இறைவனிடமிருந்து சான்றை உன்னிடம் கொண்டு வந்திருக்கிறோம். நேர்வழியைப் பின்பற்றுவோர்மீது அமைதி நிலவட்டும். ‘பொய்யெனக் கூறி, புறக்கணிப்போருக்கே தண்டனை உண்டு’ என எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறுங்கள்” என (இறைவன்) கூறினான்.
அல்குர்ஆன் – 20:45, 46
அவ்விரு இறைத்தூதர்களிடமும் ஒருவித அச்சம் ஏற்பட்டபோதிலும், அல்லாஹ் அவர்களுக்குத் தனது உதவி இருப்பதாக வாக்களித்து தைரியமூட்டினான். இருவராக இருந்தாலும் அஞ்சாமல் சத்தியத்தை ஓங்கி ஒலிப்பதற்குக் கட்டளையிடுகிறான். இணைவைப்பு, அநியாயம் போன்ற அசத்தியங்களை அழிப்பதற்கு ஆணையிடுகிறான்.
அதன் பிறகு மூசா (அலை) அவர்கள் திறமையாக அழைப்புப் பணி செய்து, இறையுதவியால் இறுதியில் வெற்றி கண்டதையும் அந்த வரலாற்றின் தொடர்ச்சி கூறுகிறது.
இந்த வரலாற்றை எடுத்துரைப்பதன் மூலம், அசத்தியத்தைக் கண்டு அஞ்சாமல் அழைப்புப் பணியில் ஈடுபடுவது வெற்றியை பெற்றுத் தரும் என்ற பாடத்தை அல்லாஹ் நமக்கு நடத்துகிறான். எனவே அசத்தியத்திற்கு அஞ்சாமல் சத்தியத்தை எல்லா கட்டங்களிலும் எடுத்துரைக்க வேண்டும்.
அஞ்சவேண்டியது அசத்தியவாதி தான்
இறைச் செய்திக்கு மாற்றமான இணைவைப்புக் கொள்கையைத் தானும் கடைப்பிடித்து, அதையே பிறருக்கும் வழிகாட்டும் அசத்தியவாதிகள்தான், தங்களின் வழிகாட்டினால் இம்மையிலும் மறுமையிலும் அச்சப்பட வேண்டியவர்கள். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வே அச்சத்தை ஏற்படுத்துவான்.
அல்லாஹ் எதன்மீது சான்றை இறக்கி வைக்கவில்லையோ அதை அவனுக்கு இணையாக்கியதால் இறைமறுப்பாளர்களின் உள்ளங்களில் அச்சத்தைப் போடுவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அநியாயக் காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
அல்குர்ஆன் – 3:151
அதனால் தான் ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் சமகாலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்களிடம் நீங்கள் அசத்தியக் கொள்கையில் அஞ்சாமல் நிலைக்கும் போது சத்தியத்தில் இருக்கும் நான் ஏன் உங்களைப் பார்த்து அஞ்ச வேண்டும்? என்று ஆவேசமாகக் கேள்வி தொடுத்தார்கள்.
அவரது சமுதாயத்தினர் அவருடன் வாதம் செய்தனர். “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் வாதம் செய்கிறீர்கள்? அவனே எனக்கு நேர்வழி காட்டினான். நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன். எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர (எந்தத் தீங்கும் ஏற்படாது.) எனது இறைவன் ஒவ்வொரு பொருளையும் ஞானத்தால் சூழ்ந்திருக்கிறான். நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று (இப்ராஹிம்) கேட்டார்.
“உங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கி வைக்காதவற்றை அவனுக்கு நீங்கள் இணையாக்க அஞ்சாதபோது, நீங்கள் இணையாக்குபவற்றுக்கு நான் எப்படி அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தோராக இருந்தால், இரு பிரிவினரில் அச்சமின்றி இருக்க அதிகத் தகுதியுடையோர் யார்?” (என்று கேட்டார்.) இறைநம்பிக்கை கொண்டு, தனது இறைநம்பிக்கையுடன் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தைக் கலந்து விடாமல் இருப்போருக்கே பாதுகாப்பு உண்டு. அவர்களே நேர்வழி அடைந்தவர்கள்.
அல்குர்ஆன் – 6:80-82
ஏகத்துவவாதிகளுக்கு இறைவனிடமிருந்து பாதுகாப்பு இருப்பதால் அவர்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. இணை வைப்பாளர்கள் தான் தங்களின் அசத்தியக் கொள்கையினால் அச்சப்படுவதற்குத் தகுதியானவர்கள்.
எனவே இணைவைப்பை எதிர்க்கும் எந்த ஏகத்துவவாதியும் எதற்கும் அஞ்சாமல் இறைவனைச் சார்ந்திருந்து உறுதியாக வீரியத்தோடு சத்தியப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.
ஏகத்துவச் கொள்கைக்கு எதிரானவர்கள், இறைச்செய்தியை மட்டும் பின்பற்றும் சத்தியவாதிகளைக் கண்டு அச்சப்படத்தான் வேண்டும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலமும் இறைவன் தெரியப்படுத்துகிறான்.
இந்த அறிவுரையை விட்டும் புறக்கணிப்பவர்களாக இருக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டோடுகின்ற கழுதைகளைப் போல் உள்ளனர்.
அல்குர்ஆன் – 74:49-51
எனவே ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் சத்தியக் கொள்கையை எத்தி வைப்பதற்குத் தயங்காமல் அல்லாஹ்வின்மீது நம்பிக்கை வைத்துப் பிரச்சாரக் களத்தில் வீரியத்தோடு செயல்பட்டால் அசத்தியவாதிகள் அலறத்தான் நேரிடும்.

உண்மையான உறுதிக்கு உறுதியாகும் உதவி

உண்மையை உலகறிய உரைக்கும் சரியான கொள்கையுடையவர்கள், அக உறுதியோடு பிரச்சாரம் செய்தால் அல்லாஹ், அவர்களை மென்மேலும் வலுப்படுத்துவான்.
உறுதியான (ஏகத்துவக்) கொள்கையைக் கொண்டு இறைநம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ், தான் நாடியதைச் செய்கிறான்.
அல்குர்ஆன் – 14:27
“எங்கள் இறைவன் அல்லாஹ்” என்று கூறி, பின்னர் உறுதியாக நிலைத்து இருந்தோரிடம் “பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்” என்று (கூறி) வானவர்கள் இறங்குவார்கள்.
அல் குர்ஆன் – 41:30
ஏகத்துவக் கொள்கையை எதிர்ப்புகளை எதிர் கொண்டு, எதிரிகளை எதிர்த்து நின்று எத்தி வைத்தால் இறைவன் பல விதங்களில் நமக்கு உதவி செய்வான் என்பதாக இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு அறியத் தருகிறான். அந்த உதவிகளை தற்போது ஏகத்துவத்தை ஏற்றவர்கள் கண்கூடாகக் கண்டும் வருகிறோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களாலும் எதிர்க்கப்படும் நிலை இருந்தும், பல்வேறு சோதனைகளைத் தாண்டி மென்மேலும் வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதே சத்தியத்திற்கு அல்லாஹ் கொடுக்கும் உதவியாகத் தெரியவில்லையா?
இறை உதவி கிடைத்துக் கொண்டிருக்கும் போது, இணைவைப்புக் கொள்கையின் மூலம் நரகப் பாதையை நோக்கிப் பயணிப்பவர்களை மீட்டெடுக்கும் பணியைத் தவறவிட்டால் அதைவிடப் பெரிய நஷ்டம் எது?

இறைவாக்கின்மீது நம்பிக்கை வைப்போம்

ஏகத்துவத்திற்குத் தான் இறுதி வெற்றி என்ற இறைவனின் வாக்குறுதிகளை ஆணித்தரமாக ஆள் மனதில் பதிய வைப்பதன் மூலம் சொர்க்கப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் பிரச்சாரப் பணியில் பயணிக்கலாம்.
அந்த வாக்குறுதிகள் இதோ உங்கள் நினைவூட்டலுக்கு..
“சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக் கூடியதாகவே உள்ளது” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் – 17:81
அசத்தியத்தின் அழிவு எப்படி நிகழ்கிறது என்பதற்குச் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் உதாரணம்.
திருச்சி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக அஹ்லு சுன்னத் வல் ஜமாத் கொள்கை விளக்க ஒருநாள் மாநாடு ஜூலை 14ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது.
“கப்ருகளுக்குச் சென்று அவ்லியாக்களிடம் நம் தேவைகளைக் கேட்கும் காரியம், ‘உன்னையே வணங்குகிறோம்! உன்னிடமே உதவி தேடுகிறோம்’ என்ற சூரத்துல் ஃபாத்திஹாவில் உள்ள இறை வசனத்திற்கு மாற்றமானது” என்ற ஏகத்துவக் கருத்து அந்த மாநாட்டில் ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகியால் ஒலிக்கப்பட்டது.
இச்சம்பவம் நடந்த இரு தினங்களிலேயே, ஜமாத்துல் உலமா சபையின் தலைமை அந்த சத்தியக் கருத்தைப் பேசியவரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
அடிப்படைக் கொள்கை விஷயத்திலேயே தங்கள் உலமா சபையினர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டு, பலவீனப்பட்டுக் கொண்டிருப்பதை இந்த நிகழ்வு நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏகத்துவத்திற்கு எதிரான இணை வைப்பை அல்லாஹ் இவ்வாறு இன்னமும் பலவீனப்படுத்தி தாழ்ந்ததாகத்தான் ஆக்குவான். அதுதான் அல்லாஹ்வின் வாக்கு.
இறைமறுப்பாளர்களின் வார்த்தையைத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன், நுண்ணறிவாளன்.
அல்குர்ஆன் – 9:40
இவ்வளவு பலவீனமான நிலையில் உள்ள இணைவைப்புக் கொள்கையையும், இணைவைப்பாளர்களையும் கண்டு அஞ்சி ஏகத்துவப் பிரச்சாரத்திலிருந்து சில ஏகத்துவவாதிகள் விலகி நிற்பது, ஏகத்துவக் கொள்கைக்கு இறைவன் கொடுத்திருக்கும் பலத்தை உணராததையே காட்டுகிறது.
இறைவனின் இதுபோன்ற வாக்குறுதிகளை உணர்ந்து, ஏகத்துவவாதிகள் அனைவரும் தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் சத்தியக் கொள்கையை பிறருக்கும் எடுத்துரைக்கும் மனப்பான்மையை உடையவர்களாக அல்லாஹ் ஆக்குவானாக!