தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.
سنن الترمذي
1644 – حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي يَزِيدَ الخَوْلَانِيِّ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” الشُّهَدَاءُ أَرْبَعَةٌ: رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ، لَقِيَ العَدُوَّ، فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ، فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ القِيَامَةِ هَكَذَا ” وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ، قَالَ: فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «وَرَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الإِيمَانِ لَقِيَ العَدُوَّ فَكَأَنَّمَا ضُرِبَ جِلْدُهُ بِشَوْكِ طَلْحٍ مِنَ الجُبْنِ أَتَاهُ سَهْمٌ غَرْبٌ فَقَتَلَهُ فَهُوَ فِي الدَّرَجَةِ الثَّانِيَةِ، وَرَجُلٌ مُؤْمِنٌ خَلَطَ عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا لَقِيَ العَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ فِي الدَّرَجَةِ الثَّالِثَةِ، وَرَجُلٌ مُؤْمِنٌ أَسْرَفَ عَلَى نَفْسِهِ لَقِيَ العَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ فِي الدَّرَجَةِ الرَّابِعَةِ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَطَاءِ بْنِ دِينَارٍ. سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ: قَدْ رَوَى سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ هَذَا الحَدِيثَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ، وَقَالَ: عَنْ أَشْيَاخٍ مِنْ خَوْلَانَ، وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ أَبِي يَزِيدَ. وقَالَ عَطَاءُ بْنُ دِينَارٍ: «لَيْسَ بِهِ بَأْسٌ»
….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.
திர்மிதீ 1568, அஹ்மத் 145
ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.
அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.
صحيح البخاري
134 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا سَأَلَهُ: مَا يَلْبَسُ المُحْرِمُ؟ فَقَالَ: «لاَ يَلْبَسُ القَمِيصَ، وَلاَ العِمَامَةَ، وَلاَ السَّرَاوِيلَ، وَلاَ البُرْنُسَ، وَلاَ ثَوْبًا مَسَّهُ الوَرْسُ أَوِ الزَّعْفَرَانُ، فَإِنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الخُفَّيْنِ، وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الكَعْبَيْنِ»
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806
இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். மற்ற நேரங்களில் தொப்பி அணியலாம் என்ற அனுமதிக்குத் தான் இது ஆதாரமாகுமே தவிர அணிய வேண்டும் என்பதற்கு ஆதாரமாகாது.
இவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போது, வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார்.
வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.
سنن أبي داود
691 – حدَّثنا عبد الله بن محمد الزهريُّ، حدَّثنا سفيانُ بن عيينةَ، قال: رأيت شَريكاً صلَّى بنا في جِنازةٍ العصرَ، فوضَع قَلَنسُوَتَهُ بينَ يَدَيهِ، يعني في فريضةِ حَضَرَت
ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது.
நூல்: அபூதாவூத் 592
தொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது.
صحيح البخاري
فَمَا هُوَ إِلَّا أَنْ كَبَّرَ فَسَمِعْتُهُ يَقُولُ: قَتَلَنِي – أَوْ أَكَلَنِي – الكَلْبُ، حِينَ طَعَنَهُ، فَطَارَ العِلْجُ بِسِكِّينٍ ذَاتِ طَرَفَيْنِ، لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ يَمِينًا وَلاَ شِمَالًا إِلَّا طَعَنَهُ، حَتَّى طَعَنَ ثَلاَثَةَ عَشَرَ رَجُلًا، مَاتَ مِنْهُمْ سَبْعَةٌ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ المُسْلِمِينَ طَرَحَ عَلَيْهِ بُرْنُسًا، فَلَمَّا ظَنَّ العِلْجُ أَنَّهُ مَأْخُوذٌ نَحَرَ نَفْسَهُ
உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான்
பார்க்க : புகாரியில் 3700
தொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை(?)யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலைகுலையச் செய்ய முடியாது.
மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால்
தொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை.
சில நபித்தோழர்கள் அணிந்துள்ளனர்.
வெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர்; தொழுகைக்காக அல்ல.
அந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
தொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலைகுலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை.
தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.
தொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.
صحيح البخاري
352 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ: «صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ وَثِيَابُهُ مَوْضُوعَةٌ عَلَى المِشْجَبِ»، قَالَ لَهُ قَائِلٌ: تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ؟، فَقَالَ: «إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ وَأَيُّنَا كَانَ لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடை யளித்தார்கள்.
நூல்: புகாரி 352
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.
صحيح البخاري
353 – حَدَّثَنَا مُطَرِّفٌ أَبُو مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي المَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ، وَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ»
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள்.
நூல்: புகாரி 353
இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.
நம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
அது போல் ஒருவர் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும், ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
தலைப்பாகை
தலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை.
தலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
صحيح البخاري
205 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர் : அம்ரு பின் உமைய்யா (ரலி)
நூல் : புகாரி 205
صحيح مسلم
3377 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالاَ أَخْبَرَنَا وَكِيعٌ عَنْ مُسَاوِرٍ الْوَرَّاقِ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ حُرَيْثٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- خَطَبَ النَّاسَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2421
صحيح مسلم
3375 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِىُّ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمَّارٍ الدُّهْنِىُّ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- دَخَلَ مَكَّةَ – وَقَالَ قُتَيْبَةُ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ – وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2418
இப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்கள் உளூச் செய்த போதும், உரை நிகழ்த்திய போதும், பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது.
எனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர்.
மேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.
ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை.
எனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம்; விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.