சூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்

சூனிய நம்பிக்கையும், காஃபிர் ஃபத்வாவும்

எவ்விதத் தொடர்புகளும் இல்லாமல் படைப்பினங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்ற ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும். இது போன்ற ஆற்றல் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது.

சூனியத்தை நம்பக் கூடியவர்கள் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும்  என்று நம்புவதால் அல்லது எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பிறருக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தும் ஆற்றலை சூனியக்காரனுக்கு அல்லாஹ் வழங்குவான் என்று நம்புவதாலும் இது இணைவைப்பு நம்பிக்கையாகும்.

சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணைவைப்பு என்றால் மக்கா, மதீனா புனிதப் பள்ளிகளில் இமாம்களாக தொழுகை நடத்துபவர்களும் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள். எனவே அவர்கள் பின்னால் தொழக் கூடாது என்று கூறுவீர்களா? என்று வழிகெட்ட நவீன ஸலபிக் கொள்கயைினர் கேட்கின்றனர்.

சூனிய நம்பிக்கை இணைவைப்புதான் என்று வாதிட்ட சிலருக்கும் அதில் தடுமாற்றம் ஏற்பட்டு வழிகெட்ட ஸலபிக் கொள்கையினரோடு சேர்ந்து அவர்களின் கேள்வியை இவர்களும் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

குர்ஆன், சுன்னா ஆதாரம் இல்லாத காரியங்கள் புனிதப் பள்ளிகளில் நடைபெற்று வந்தாலும் அதை பித்அத் என்றும், மார்க்கத்திற்கு எதிரானது என்றும் கண்டிப்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் தயங்கியது கிடையாது.

புனிதப் பள்ளிகளில் ரமலான் இரவுத் தொழுகையில் வித்ரின் போது குனூத் என்ற பெயரில் சப்தமிட்டு நீண்ட நேரம் கூட்டுத் துஆவில் ஈடுபடுகின்றனர். இது நபிவழிக்கு எதிரான பித்அத் என்றே நாம் கூறுகிறோம். புனிதப் பள்ளிகளில் நடைபெற்றாலும் இது போன்ற பித்அத்தான தொழுகைகளில் பங்கெடுக்கக் கூடாது என்றே தவ்ஹீத் ஜமாஅத் ஆதாரங்களின் அடிப்படையில் கூறிவருகிறது. குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக புனிதப் பள்ளிகளில் நடைபெறும் காரியங்களை நாம் ஆதரித்தது கிடையாது.

புனிதப் பள்ளிகளில் தொழுகை நடத்தும் இமாம்களாக இருந்தாலும் குர்ஆன், சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் பின்னால் நின்று தொழுவது கூடாது என்று நிரூபணமானால் தனியாகத்தான் தொழவேண்டும் என்றே நாம் கூறுவோம். புனிதப் பள்ளி என்பதினால் அவர்கள் பின்னால் நின்று தொழலாம் என்று நாம் ஒரு போதும் வாதிக்க மாட்டோம்.

அதே நேரத்தில் ஒரு காரியத்தை இணைவைப்புக் காரியம் என்று தீர்மானிப்பதற்கும், தன்னை முஸ்லிமாக, தவ்ஹீத் வாதியாக வெளிப்படுத்தி வாழும் குறிப்பிட்ட ஒருவரை இணைவைப்பவர் என்று தீர்மானிப்பதற்கும் மார்க்கம் சில வரையரைகளை தெளிவாக நமக்குத் வரையறுத்துத் தந்துள்ளது. அந்த வரையறைக்கு உட்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பின்னின்று தொழுவது கூடாது.

விபச்சாரம் நரகில் கொண்டு போய் சேர்க்கும் என்று அடித்துக் கூறுவோம். அதே நேரத்தில் விபச்சாரம் செய்யும் குறிப்பிட்ட ஒருவரை இவர் நரகவாதிதான் என்று நாம் அடித்துக் கூற முடியாது. அதற்கு பல வசனங்கள் மற்றும் நபிமொழிகள் தடையாக உள்ளன.

வட்டி நரகில் சேர்க்கும் காரியம் என்று உறுதியாகக் கூறவேண்டும். அதே நேரத்தில் வட்டியில் ஈடுபடும் குறிப்பிட்ட ஒருவரை இவர் நரகவாதிதான் என்று நாம் உறுதியாகக் கூறமுடியாது. இதற்கும் பல வசனங்கள் மற்றும் நபிமொழிகள் தடையாக உள்ளது.

அது போன்றுதான் சூனியத்தினால் எவ்விதத் தொடர்புகளும் இல்லாமல் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணைவைப்பு என்று நாம் உறுதியாகக் கூறுகிறோம். அதே நேரத்தில் வெளிப்படையில் இறைவனுக்கு இணையில்லை என்று கூறும் ஒருவர் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பினால் அவர் இணைவைப்பாளர்தான் என்று நாம் தீர்மானித்து விடமுடியாது. அவ்வாறு கூறுவதற்கு பல தடைகள் உள்ளன. அந்த தடைகள் நீங்கிவிடும் என்றால் அவரை இணைவைப்பாளர் என்று நாம் தீர்மானிக்கலாம்.

மவ்லூது ஓதுபவர்கள், மத்ஹபுச் சட்டங்களை மார்க்கமாக நம்புபவர்கள் எனப் பலரின் விசயத்திலும் இந்த வரையறைகளைத்தான் நாம் பல்லாண்டுகளாகக் கூறிவருகிறோம்.

மவ்லிதில் இணைவைப்பு உள்ளது என்று நாம் உறுதியாகக் கூறுவோம். அதே நேரத்தில் அல்லாஹ்விற்கு இணை இல்லை என்று வாதிக்கும் ஒருவர் மவ்லூது வரிகளின் பொருள் தெரியாமல் அதை ஓதிவருவார் என்றால் அவருக்கு அதற்குரிய ஆதாரங்களை தெளிவாக எடுத்துரைத்து அதற்கு அவருடைய தெளிவான பதிலை அறியும் வரை அவரை இணைவைப்பாளர் என்று கூறக்கூடாது என்பதே நமது நிலைப்பாடாகும்.

அதே நேரத்தில் மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகளின் பொருளை நன்றாக அறிந்து கொண்டே ஒருவன் அது சரிதான் என்று வாதிப்பான் என்றால் அவன் இணைவைப்பவன் என்று தீர்மானிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அல்லாஹ்விற்கு இணையில்லை, துணையில்லை என்று வாதிக்கும் ஒருவர் ஒரு இணைவைப்பான காரியத்தைச் செய்தால் அவர் இணைவைப்பாளர்தான் என்று தீர்மானிப்பதற்கு சில அடிப்படைகளை மார்க்கம் வகுத்துத் தந்துள்ளது. அந்த அடிப்படைகளை நாம் காண்போம்.

இணைவைப்பு என்பதை அறிந்து செய்தல்

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒருவர் ஒரு காரியத்தைச் செய்கிறார். அதில் இணைவைப்பு உள்ளது என்பதை அறிந்து செய்தால்தான் அவர் இணைவைப்பாளராகக் கருதப்படுவார். இணைவைப்பு உள்ளது என்பதை அறியாமல் ஒரு காரியத்தைச் செய்தால் அவர் இணைவைப்பாளராகக் கருதப்படமாட்டார்.

இணைவைப்புக் காரியங்களையும், பெரும்பாவங்களையும் செய்தவர்களுக்கு அதற்குரிய ஆதாரங்களைத் தெளிவுபடுத்திய பிறகும் அவர்கள் செய்த காரணத்தினால்தான் அவர்கள் நரகத்திற்குரியவர்கள் ஆனார்கள் என்பதை திருமறைக்குர்ஆனின் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.

ஒரு தூதரை அனுப்பாதவரை (யாரையும்) நாம் தண்டிப்பதில்லை.

அல்குர்ஆன் 17 : 165

தூதர்கள் வந்த பிறகு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) எந்த ஆதாரமும் மக்களுக்கு இருக்கக்கூடாது என்பதற்காகவே நற்செய்தி கூறுபவர்களாகவும், எச்சரிக்கை செய்பவர்களாகவும் தூதர்கள் (அனுப்பப்பட்டனர்.) அல்லாஹ் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4 : 165

ஒவ்வொரு கூட்டத்தினரையும் நரகில் போடப்படும் பொழுதெல்லாம் அதன் காவலர்கள் அவர்களிடம்அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கவர்கள்ஆம்! அச்சமூட்டி  எச்சரிக்கை செய்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எதையும் இறக்கிவைக்வில்லை. நீங்கள் பெரும் வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றீர்கள் என்று கூறினோம்எனக் கூறுவார்கள். நாங்கள் செவியுற்றிருந்தாலோ, அல்லது சிந்தித்திருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 67 : 9, 10, 11)

எந்த ஒரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் விலகிக் கொள்ள வேண்டியவற்றை அவர்களுக்குத் தெளிவுபடுத்தும் வரை, அவர்களை வழிகேட்டில் விடுவதில்லை. அல்லாஹ் எல்லாப்  பொருளையும் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் 9 :115

மேற்கண்ட இறைவசனங்கள் அனைத்துமே மக்களுக்கு ஆதாரங்களைத் தெளிவு படுத்திய பிறகுதான் அவர்கள் செய்தபாவத்திற்காக அல்லாஹ் அவர்களைத் தண்டிக்கின்றான், வழிகேட்டில் விடுகின்றான் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

நம்பிக்கை சரியாக இருக்கும் நிலையில் ஒன்றைப் பாவம் என்று அறியாமல் செய்வதினால் அதற்கு எந்தத் தண்டனையும் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல்பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை’ என்று கூறிவிட்டு, பிறகு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அதை விற்றுவிடச் சொன்னேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்துவிட, அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3220)

மது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறியாமல் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களுக்கே அதை அன்பளிப்பாகத் தர முன்வந்துள்ளார். அவர் அறியாதவராக இருந்த காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் அவருடைய செயலை குற்றமாகக் கருதவில்லை.

இறைவனுக்கு இணையில்லை என்பதை வெளிப்படுத்தி வாழும் ஒருவர் அறியாமையினால் இணைவைப்புக் காரியத்தைச் செய்தால் அது இணைவைப்பாகக் கருதப்படாது. என்பதற்கு பல்வேறு சான்றுகள் நபிமொழிகளில் உள்ளன.

நபித்தோழர்களில் ஒருவராக இருந்த அபூ வாகித் அல்லைஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நபி (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொண்ட போது, எங்களை ஹவாஸின் பகுதியை நோக்கி அழைத்துச் சென்றார்கள். அப்போது (புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்த) நாங்கள் நிராகரிப்போருக்குரிய ஒரு இலந்தை மரத்தை கடந்து சென்றோம். அதனைச் சுற்றிலும் அவர்கள் தங்கியிருந்து வணக்க வழிபாடுகள் செய்வார்கள். அதனை ”தாத்து அன்வாத்” என்று அழைப்பார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு தாத்து அன்வாத் இருப்பதைப் போன்று எங்களுக்கும் தாத்து அன்வாத்தை ஏற்படுத்துங்கள்!” என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் ”அல்லாஹூ அக்பர்” (அல்லாஹ்வே மிகப்பெரியவன்). இது (முன்னோர்களின்) வழிமுறையாகும். மூஸாவிடத்தில் பனூ இஸ்ராயீல்கள் ” ‘அவர்களுக்கு ஒரு கடவுள் இருப்பது போன்று நமக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக” என்று கேட்டது போன்றல்லவா நீங்கள் கேட்டு விட்டீர்கள்: ”நீங்கள் மடமையிலே இருக்கும் ஒரு சமுதாயம்’ (அல்அஃராப் 7: 138). ‘நீங்கள் முன் சென்றவர்களின் வழி முறையைப்பின் பற்றுவீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர். அபுவாகித் அல்லைஸி (ரலி)

நூல். திர்மிதீ 2180 இப்னு ஹிப்பான் (6702)

இஸ்லாத்தை புதிதாக ஏற்ற நபித்தோழர்கள் தாத்து அன்வாத்  ஏற்படுத்துவது இணைவைப்பு  என்பதை அறியாமல் அதைக் கேட்ட போது நபியவர்கள் அவர்களுக்கு அது இணைவைப்பு என்பதை தெளிவுபடுத்தினார்கள். அவர்கள் அறியாமையால் கேட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.  நீஙகள் இறைமறுப்பாளர்களாகிவிட்டீர்கள் என்று கூறவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடிவிட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார். தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், (“இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை” என்று சொல்வதற்குப் பதிலாக) “இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்” என்று தவறு தலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : முஸ்லிம் (5300)

“இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்”  என்பது இணைவைப்பு வாசகம் ஆகும். ஆனால் இதைக் கூறியவர் ஒரு நல்லடியார். ஏகத்துவவாதி. அவர் சந்தோஷத்தில் தவறுதலாகத்தான் இந்த வார்த்தையைக் கூறுகிறார். இதனால் இறைவன் அதைக் குற்றமாகக் கருதவில்லை.

உம்முல் அலா (ரலி) கூறியதாவது: “(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), “ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்” எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?” என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், “இவர் இறந்து விட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

(நூல்: புகாரி 1243)

”அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்’ என்று உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ் ஒருவரைக் கண்ணியப்படுத்துவானா? இல்லையா? என்பதை அல்லாஹ் மட்டுமே கூறமுடியும். இறைவனுடைய அதிகாரத்தில் உள்ள விசயத்தை அறியாமல் உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறிவிடுகிறார்கள். தவ்ஹீத் வாதியாக வாழ்ந்த உம்முல் அலா (ரலி) அவர்கள் அவ்வார்த்தையில் உள்ள இணைவைப்பை அறியாமல் கூறிய காரணத்தினால் அவர்களை இணைவைப்பாளர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற் கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்” என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 5175)

“அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி.“ என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறுகிறார். அவ்வாறு கூறுவது கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர்  தெளிவுபடுத்துகிறார்கள்.

தவ்ஹீத் வாதியாக வாழ்ந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒருவார்த்தையில் இணைவைப்பு இருப்பதை அறியாமல் அந்த வார்த்தையைக் கூறியதால் அவர்களை இணைவைப்பாளர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. ஏனெனில் அறியாமல் கூறுவதினால் இணைவைப்பு ஏற்படாது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்திய பிறகும் ஒருவர் அந்த வார்த்தை சரிதான் என்று வாதிப்பார் என்று சொன்னால் அவர் இணைவைப்பாளர் ஆவார்.

ஒரு யூத சமுதாயத்தைச் சார்ந்தவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து “நீங்களும் இணைக்கடவுள்களை உருவாக்குகின்றீர்கள். நீங்களும் இணைகற்பிக்கின்றீர்கள்” என்று கூறிவிட்டு (அதற்குச் சான்றாக) “அல்லாஹ் நாடியதும், (முஹம்மதாகிய) நீர் நாடியதும் நடந்தது” என்றும், ”கஅபாவின் மீது சத்தியமாக” என்றும் (முஸ்லிம்களாகிய) நீங்கள் கூறுகிறீர்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், சத்தியம் செய்ய நாடினால் “கஅபாவின் இறைவன் மீதாணையாக” என்று கூறுமாறும், “அல்லாஹ் நாடியது நடந்தது பின்னர் (நபியாகிய) நீங்கள் நாடியது நடந்தது” என்று கூறுமாறும் நபித் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர் : குதைலா பின்த் ஸைஃப் (ரலி) நூல் : நஸாயீ (2713)

”கஅபாவின் மீது சத்தியமாக” அல்லாஹ் நாடியதும், (முஹம்மதாகிய) நீர் நாடியதும் நடந்தது” என்ற வாசகங்களை கூறும் பழக்கம் நீண்ட காலமாக இருந்துள்ளது. தவ்ஹீத் வாதிகளாக வாழ்ந்த நபித்தோழர்கள் இதில் உள்ள இணைவைப்புக் கருத்தை கவனிக்காமலேயே நீண்டகாலம் இந்த வார்த்தையைப் புழங்கியுள்ளார்கள். இதனால் அவர்களை இணைவைப்பாளர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.

தவ்ஹீத் கொள்கையை ஏற்ற ஒருவர் ஒன்றில் உள்ள இணைவைப்பை அறியாமல் நீண்டகாலம் அதைச் செய்தாலும் அவர் இணைவைப்பாளராகக் கருதப்படமாட்டார்.

எனவே வெளிப்படையில் ஏகத்துவக் கொள்கையை ஏற்று வாழும் ஒருவர் நாம் இணைவைப்பு என கருதுவதைச் செய்தால் உடனடியாக அவரை இணைவைப்பாளர் என்று கருதிவிடக் கூடாது. அதற்குரிய ஆதாரங்களை அவருக்கு தெளிவு படுத்திய பிறகும் தான் கூறுவதுதான் சரி என்று வாதிட்டால் மட்டுமே அவரை இணைவைப்பாளர் என்று தீர்மானிக்க வேண்டும்.

நிர்பந்தத்தில் இணைவைப்பைச் செய்தால் அவர் இணைவைப்பாளர் அல்ல

அது போன்று நம்பிக்கை சரியாக இருக்கும் நிலையில் நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒரு பாவத்தையோ, இணைவைப்புக் காரியத்தையோ செய்து விட்டால் அது பாவமாகவும், இணைவைப்பாகவும் கருதப்படாது.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் அவனை மறுப்போர் மீதும், இறைமறுப்பை மனநிறைவோடு உள்ளத்தில் ஏற்றுக் கொள்வோர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டாகும். யாருடைய உள்ளம் இறைநம்பிக்கையினால் முற்றிலும் திருப்தியடைந்திருக்கும் நிலையில் நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகிறோரோ அவரைத் தவிர. (அவர் மீது குற்றமில்லை.)

அல்குர்ஆன் 16 : 106

வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர்  மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 2 : 173)

என்னுடைய உம்மத்தினர் அறியாமல் செய்த தவறுகள், மறதியாகச் செய்தவை, நிர்பந்தத்தில் செய்த பாவங்கள் ஆகியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : இப்னுஹிப்பான் (7219)

எனவே இறைவனுக்கு இணையில்லை என்ற கொள்கையை தெளிவாக வெளிப்படுத்தி வாழும்  குறிப்பிட்ட ஒருவர் ஒரு இணைவைப்புக் காரியத்தைச் செய்கிறார். தான் நிர்ப்பந்த்த்தின் காரணத்தினாலே அவ்வாறு செய்தேன் என்று கூறுவாரேயானால் அவர் இணைவைப்பாளராக மாட்டார் என்பதே மார்க்கத்தின் நிலைப்பாடு.

இணைவைப்பை பகிரங்கமாகச் செய்தல்

தன்னை தவ்ஹீத்வாதியாக வாதிக்கும் ஒருவரை இணைவைப்பாளர் எனத் தீர்மானிக் வேண்டுமென்றால் அவர் இணைவைப்புக் காரியத்தை வெளிப்படையாகச்  செய்ய வேண்டும்.

நாமாக அப்படித்தான் இருப்பார். இப்படித்தான் இருப்பார் என யூகத்தை ஆதாரமாக்கக் கூடாது.

உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும் போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

நூல் : புகாரி (7056)

குர்ஆன் சுன்னாவில் ஆதாரமுள்ள ”பகிரங்கமான இறைமறுப்பை” கண்டால்தான் இஸ்லாமிய ஆட்சியாளருக்கு கட்டுப்படக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

வெளிப்படையில் தவ்ஹீத் வாதியாக தன்னை கூறிக் கொள்ளும் ஒருவரை இணைவைப்பாளர் என்று தீர்மானிக்க வேண்டுமானால் அவர் அந்த இணைவைக்கும் காரியத்தை நன்றாக அறிந்து , பகிரங்கமாக, எவ்வித நிர்பந்தமும் இல்லாமல் செய்தால்தான் அவரை இணைவைப்பாளர் என்று தீர்மானிக்க வேண்டும்.

மார்க்கம் வரையறுத்துள்ள இந்த வரையறைகளை கவனத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் யூகத்தின் அடிப்படையில் ஒருவரை இணைவைப்பாளர் என்றோ, காஃபிர் என்றோ வாதிட்டால் அவ்வாறு கூறியவர் காஃபிர் ஆகிவிடுவார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி (6103)

எனவே தன்னை முஸ்லிமாக வாதிக்கும் ஒருவரை காஃபிர் என்று கூறுவதில் மிகுந்த கவனமும், தெளிவான ஆதாரங்களும் அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்ற நம்புவது இணைவைத்தலாகும். அதே நேரத்தில் வெளிப்படையில் இணைவைப்பை எதிர்த்து வாழும் ஒருவர் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று கருதுவாரானால் அவருக்கு ஆதாரங்களைத் தெளிவு படுத்தி அதன் எதன் அடிப்படையில் கருதுகிறார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து அவர் இணைவைப்பாளர் என்பதற்குரிய தெளிவான ஆதாரங்கள் பகிரங்கமாக இருந்தால் மட்டுமே அவரை இணைவைப்பாளர் என்று தீர்மானிக்க வேண்டும்.

இந்த வரையறைதான் மக்கா இமாம் உட்பட அனைவருக்கும் உரிய வரையறையாகும். இதற்கு உட்பட்டு யார் சூனிய நம்பிக்கையை வாதிக்கிறாரோ அவர் இணைவைப்பாளரே. அவர் பின்னால் நின்று தொழுவதும், அவர் மரணித்தால் அவருக்கு பாவமன்னிப்புத் தேடுவதும் கூடாது. மேலும் இணைவைப்பவர்களுக்கு மார்க்கம் கூறும் அனைத்து சட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும்.

மார்க்கம் கூறும் வரையறைகள் தெளிவாக இல்லையென்றால் அவர்களை காஃபிர் எனக் கூறி நம்முடைய மறுமை வாழ்வை நாம் பாழ்படுத்திக் கொள்வது கூடாது.