2018ஆம் ஆண்டு ரமலான் மாதம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெருநாள் அறிவிப்பு குறித்த மறுஆய்வுக் கூட்டம் முதல் அமர்வு 27.09.18 அன்று திருச்சியிலும் இரண்டாம் அமர்வு 17. 10. 2018 புதன் அன்று தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையிலும் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொரு மாதமும் பிறை அறிவிப்பு செய்வதுடன் நோன்பு மற்றும் பெருநாள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பெருநாளில் தமிழகமெங்கும் திடல் தொழுகைக்கு ஏற்பாடும் செய்து வருகிறது. இவ்விஷயங்களில் ஜமாஅத்தின் வழிகாட்டலை மக்கள் எதிர்பார்த்து செயல்படுகின்றனர்.
இந்த ஆண்டு ரமலான் 29 ஆம் நாள் முடிந்த உடன் 30 ஆம் இரவில் ஷவ்வால் மாதத்திற்கான பிறைத் தகவல் வருகிறதா என மாநிலத் தலைமை தமிழகம் முழுவதும் எதிர்பார்த்தது. ஆனால் பிறைபார்த்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எங்கிருந்தும் வரவில்லை. எனவே ரமலானை முப்பதாக முழுமைப்படுத்துவோம் என்ற அறிவிப்பை தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டது.
இந்த அறிவிப்பு மக்களைச் சென்றடைந்து இரவுத் தொழுகை முடித்து சஹர் ஏற்பாடுகளுடன் படுக்கைக்குச் செல்லும் நேரத்தில், நாகர்கோவிலில் கோட்டார் பகுதியில் சில பெண்கள் பிறை பார்த்தாகவும் அது நம்பகமானத் தகவல் எனவும் தலைமையின் கவனத்திற்கு வந்தது. சிறிது நேரத்தில் அச்செய்தி சமூக வலைத்தளங்களிலும் பரவுகிறது.
உடனே அச்செய்தியை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை மாநிலத் தலைமை மேற்கொண்டது. பிறை பார்த்ததாக கூறிய பெண்களை சந்தித்து மாவட்ட, கிளை நிர்வாகிகள் மூலம் விசாரித்து தகவலின் உண்மைத்தன்மையை மாநிலத் தலைமை உறுதிப்படுத்தியது. விடிந்தால் பெருநாள் என்பது உறுதியானது.
இவ்வாறு உறுதிப் படுத்தும் போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டது. இந்நிலையில் பெருநாள் அறிவிப்பு செய்தால் அச்செய்தி அனைத்து மக்களையும் அதிகாலைக்குள் சென்றடைந்து அவர்கள் பெருநாள் தொழுகையை பெற்றுக் கொள்ள முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
பொறுப்பாளர்கள் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
பொறுப்பிலுள்ளவர்கள் அனைத்து மக்களின் நலனையும் நாட வேண்டும். பெருநாளின் அருள் வளமும் மகிழ்ச்சியும் அனைவரும் பெற்றுக் கொள்ளவேண்டும். அதன் தொழுகையில் அனைவரும் பங்கு பெற வேண்டும். பெருநாளின் பாக்கியத்தை சிலர் பெற்றும் சிலர் பெறாமலும் போய்விடக் கூடாது. மக்களுக்கு அவர்களின் காரியங்களை இலகுவாக்க வேண்டும். சிரமமாக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்களின் இந்த கட்டளைகளை மனதிற் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எங்கு பிறை பார்த்தாலும் அது தமிழகம் முழுவதையும் கட்டுப்படுத்தும் என்ற நமது நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நாளை பெருநாள் ஆகும். ஆகவே அன்று நோன்பு நோற்க்கக் கூடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
பெருநாள் தொழுகையை பொறுத்த மட்டில் பெருநாள் தினத்தில் செய்யப்படும் முதல் செயல் பெருநாள் தொழுகையாகும் என்ற அடிப்படையில் அதிகாலை 7.30 -8.00 மணிக்குள்ளாக அனைத்து மக்களுக்கும் பிறை பார்த்த செய்தியை கொண்டு சேர்த்து தொழுகைக்கு திரட்டுவது சிரமம் ஏற்படும் என தலைமை கருதியது.
நள்ளிரவு நேரம். அவகாசமும் குறைவு. தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை நடந்தது. வாட்ஸ்ஆப்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டது.
பெருநாள் தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் பல அடிப்படைகளை வலியுறுத்தி உள்ளார்கள்.
வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்செய்தி புகாரி (324) வது செய்தியாக பதிவாகி உள்ளது.
தலைமுக்காடு இல்லாத பெண்கள் கூட இரவல் வாங்கி அணிந்து கொண்டாவது பெருநாள் திடலுக்கு வரவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். பார்க்க புகாரி 324 வது ஹதீஸ்
மேலும் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு பெருநாள் தொழுகையில் பங்கெடுக்க வேண்டும் என்பதையும் மார்க்கம் வலியுறுத்துகிறது.
“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ (633)
பிறைபார்த்து நோன்பு நோற்க வேண்டும், பிறை பார்த்து பெருநாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் ”நீங்கள் நோன்பையும், நோன்புப் பெருநாளையும், ஹஜ்ஜுப் பெருநாளையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று மக்களுக்கு கூறுகின்றார்கள்.
நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது பிறை பார்க்காமல் நோன்பையோ, பெருநாளையோ , தீர்மானிப்பதாக நிச்சயமாக இருக்க முடியாது.
அப்படியென்றால் ”நீங்கள் முடிவு செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வழங்கும் அதிகாரம் நிச்சயமாக மக்களுக்கு இலகுவை நாடக்கூடிய ஒரு விசயம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
”நீங்கள் நோன்பை முடிவு செய்து கொள்ளுங்கள், நீங்கள் பெருநாளை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பதின் மூலம் நபி வழிக்கு முரணில்லாத வகையில் எப்பகுதியிலிருந்து பிறைத் தகவல் வந்தால் ஏற்று ஒன்று படலாம் என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட நபிமொழித் திகழ்கிறது.
அது போன்று பிறைத்தகவல் தாமதமாக கிடைக்கும் போது மக்கள் அனைவரும் ஒன்றுபட முடியாத சூழல் ஏற்படும் என்றால் ஒருநாள் தாமதமாக பெருநாளைக் கொண்டாடுவோம் என்று தீர்மானிக்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது.
மக்கள் ஒன்றுபடுதற்கான சாத்தியக் கூறுகளை மக்களுக்கு பொறுப்பாளர்களாக உள்ளவர்கள்தான் தீர்மானிக்க முடியும்.
நபி (ஸல்) அவர்கள் வாழும் காலகட்டத்தில பிறைபார்த்த சாட்சிகளின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள்தான் நோன்பு வையுங்கள், பெருநாள் கொண்டாடுங்கள், முடியாத நிலையில் மறுநாள் பெருநாள் கொண்டாடுங்கள் என்று மக்களுக்கு அறிவிப்பு செய்துள்ளார்கள்.
பிறைபார்த்த தகவல் கிடைத்தவுடன் மக்கள் சிரமமில்லாத வகையில் ஒன்றுபட முடியுமென்றால் உடனே பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறும் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
அது போன்று மக்கள் ஒன்று பட்டு நிறைவேற்ற முடியாத நிலையில் பிறைத் தகவல் வரும் போது நபி (ஸல்) அவர்கள் மறுநாள் பெருநாள் கொண்டாடுமாறு கட்டளையிட்டார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.
மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் காலையில் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமைர்
நூல்கள் இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீயின் அல்குப்ரா, பைஹகீ, தாரகுத்னீ,அல்முன்தகா, இப்னு ஹிப்பான், நஸயீ, அஹ்மத்
மேற்கண்ட ஹதீஸில் பிறை பார்த்தவர்கள் பிறை பார்த்த தகவலை ஷவ்வால் பிறை ஒன்றின் பகலினுடைய கடைசி நேரத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி கூறிய காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் இரண்டின் காலையில் பெருநாள் தொழுகையை தொழுமாறு அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
எல்லாக் காலத்திலும் எழும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் குர்ஆன் சுன்னாவில் தீர்விருக்கிறது என்று உறுதியாக நம்பக்கூடிய நமக்கு அப்போதைய சூழலுக்கு வாகனக் கூட்டம் தொடர்பான ஹதீஸில் தீர்வு தந்தது. அந்த ஹதீஸில் தாமதமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பெருநாள் தொழுகையை மறுநாள் தொழ நபியவர்கள் கட்டளையிட்டதன் அடிப்படையில் தகுந்த காரணமிருந்தால் பெருநாள் தொழுகையை மறுநாள் தொழ அனுமதியுள்ளது என்ற தீர்வு கிட்டியது.
அந்த நடுநிசி வேளையில் குறுகிய அவகாசத்தில் இந்த தீர்வே சிறந்ததாகப் பட்டது. இஜ்திஹாத் என்னும் ஆய்வில் பெறப்பட்ட முடிவுக்கு கூலியுண்டு என்ற நபியவர்களின் உத்திரவாதத்தின் படி இறையச்சத்தை முன்னிறுத்தி சமுதாயத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஷவ்வால் ஒன்றில் தொழ முடியாத ஒரு சூழல் ஏற்படுமானால் ஷவ்வால் இரண்டில் தொழுது கொள்ளலாம் என்ற அடிப்படையிலே, பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு வெள்ளிக் கிழமை நோன்பை விடுமாறும் சனிக் கிழமை பெருநாள் கொண்டாடுமாறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.
இது பற்றி பின்னர் நிதானமாகவும் விரிவாகவும் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போதே முடிவு செய்யப்பட்டது.
எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலை வேறாக இருந்தது. அங்குள்ள மக்களுக்கு பிறை பார்க்கப்பட்ட செய்தி ஏற்கனவே பரபரப்பாகிவிட்டதால் அவர்கள் தலைமையின் வழிகாட்டலுக்காக காத்திருந்தனர். பெருநாள் தினத்திலேயே தொழுதுவிடும் வாய்ப்புள்ள போது அன்றே தொழுதுவிட வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்த விதிவிலக்கான சூழல் குமரி மாவட்டத்தில் இல்லை. ஆகவே விதிவிலக்கான சட்டத்தை குமரி மாவட்டத்திற்கு பொருத்த முடியாது. அவர்கள் அன்றே பெருநாள் தொழ வழிகாட்டப்பட்டது.
இதற்கிடையே இந்த முடிவை சிலர் விமர்சிக்கத் துவங்கினர். அவர்களது விமர்சனங்களில் எந்த அடிப்படையும் இல்லாதிருந்தது. ஜமாஅத்தின் முடிவிற்கு நோக்கம் கற்பித்ததை தவிர அவர்களால் ஆதாரங்களை தந்து மறுக்கமுடியவில்லை.
அரசியல் காரணத்திற்காக அப்படி முடிவெடுத்தார்கள்; மக்களை திருப்திபடுத்த அப்படி முடிவெடுத்தார்கள்; இறையச்சமில்லாமல் அப்படி முடிவெடுத்தார்கள் என்று நமது உள்ளத்தை பிளந்து பார்த்து குறை பேசினார்கள். தலைமை நினைத்தால் மக்களை கூட்டியிருக்க முடியும் என்று நம்மால் எதை செய்யமுடியும் எதை செய்யமுடியாது என்பதை அவர்கள் முடிவு செய்து சொன்னார்கள்.
அவர்களின் விமர்சனங்களை நாம் அலட்சியம் செய்த போதிலும் மார்க்க விஷயமாக இருப்பதால் அப்போது நிலவிய சூழ்நிலையையும் நமது முடிவின் அடிப்படைகளையும் அப்போதே மக்களுக்கு தெளிவுபடுத்திவிட்டோம்.
மேலும் ஏற்கனவே தீர்மானித்திருந்த படி மீளாய்வுக் கூட்டம் இரு கட்டமாக கூடி ஆய்வு செய்தது. தலைமையின் அறிவிப்பை கவனத்தில் கொள்ளாமல், இனி ஒரு காலத்தில் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று புதிதாக ஆய்வு செய்து அதன் முடிவை தலைமையின் அறிவிப்போடு ஒப்பிட்டு பார்ப்பது என்று ஆய்வு துவங்கியது.
பெருநாளின் முதல் செயலாக நபியவர்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவார்கள் என்று வந்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பெருநாள் தொழுகையை தாமதமின்றி காலையிலேயே தொழுதுவிட வேண்டும் என்று நாம் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். கடந்த காலங்களில் காலை 10.00 -10.30 மணிக்கு பெருநாள் தொழுகையை தொழுது வந்த மத்ஹப்வாதிகளை குறை கூறியுள்ளோம். சுன்னாவிற்கு புறம்பாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளோம்.
காலை 7.30–8.00 மணிக்குள் தொழ முடியாமல் போனால் என்ன செய்வது? பெருநாள் தொழுகையை சற்று தாமதப்படுத்தலாமா? தாமதப்படுத்தலாம் என்றால் எவ்வளவு நேரம் தாமதப்படுத்தலாம்? எதுவரை தாமதப்படுத்தலாம்?
ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரமும் முடிவு நேரமும் இருக்கும். பெருநாள் தொழுகையின் ஆரம்ப நேரம் தெரியும். முடிவு நேரம் என்ன?
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை பகலின் ஆரம்பத்தில்தான் நிறைவேற்றியுள்ளார்கள்.
حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ قَالَ : أَخْبَرَنِي زُبَيْدٌ قَالَ : سَمِعْتُ الشَّعْبِيَّ ، عَنِ الْبَرَاءِ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا (صحيح البخاري )
நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை தொழுகையை நிறைவேற்றுவதாகும். பிறகு திரும்பி வந்து குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகும். யார் (இதைச்) செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : பராவு பின் ஆஸிப் (ரலி) நூல் : புகாரி (951)
سنن أبي داود ـ محقق وبتعليق الألباني – (1 / 416)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْبَجَلِىُّ حَدَّثَنَا أَسْبَاطٌ عَنِ الأَعْمَشِ عَنْ عَطَاءِ بْنِ أَبِى رَبَاحٍ قَالَ صَلَّى بِنَا ابْنُ الزُّبَيْرِ فِى يَوْمِ عِيدٍ فِى يَوْمِ جُمُعَةٍ أَوَّلَ النَّهَارِ ثُمَّ رُحْنَا إِلَى الْجُمُعَةِ فَلَمْ يَخْرُجْ إِلَيْنَا فَصَلَّيْنَا وُحْدَانًا وَكَانَ ابْنُ عَبَّاسٍ بِالطَّائِفِ فَلَمَّا قَدِمَ ذَكَرْنَا ذَلِكَ لَهُ فَقَالَ أَصَابَ السُّنَّةَ.
இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகையைப் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவித்தார்கள். பின்னர் நாங்கள் ஜுமுஆ தொழுவதற்குச் சென்றோம். ஆனால் அவர் ஜுமுஆ தொழுகைக்கு வரவில்லை. நாங்கள் தனியாகவே தொழுதோம். இந்நிகழ்ச்சி நடக்கும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தாயிஃப் நகரத்தில் இருந்தார்கள். அவர் மதீனா வந்ததும் அவரிடம் இதைப் பற்றி நாங்கள் கூறினோம். அதற்கு அவர், “இப்னு ஸுபைர் (ரலி) நபிவழிப்படியே நடந்துள்ளார்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதா பின் ரபாஹ்
நூல்: அபூதாவூத் 905
பெருநாள் அன்று முதல் வேலையாக பெருநாள் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் குறிப்பிடுகிறது. இவ்வாறு செய்பவர்தான் நபிவழியைப் பின்பற்றியவர் என்றும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
காலையின் ஆரம்ப பொழுது மட்டும்தான் பெருநாள் தொழுகையின் நேரமா என்றால் இல்லை.
2341 – حَدَّثَنَا مُسَدَّدٌ وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِىِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ اخْتَلَفَ النَّاسُ فِى آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بِاللَّهِ لأَهَلاَّ الْهِلاَلَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- النَّاسَ أَنْ يُفْطِرُوا زَادَ خَلَفٌ فِى حَدِيثِهِ وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلاَّهُمْ. (سنن أبي داود)
இரமலானுடைய கடைசி நாள் தொடர்பாக மக்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள். இரண்டு கிராமவாசிகள் வந்து ”அல்லாஹ்வின் மீது ஆணையாக நேற்று மாலை நாங்கள் இருவரும் பிறைபார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களை நோன்பை விடுமாறும் காலையில் அவர்களுடைய தொழும் திடலிற்கு செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : நபித்தோழர்கள் சிலரிடமிருந்து ரிப்யீ இப்னு ஹிராஷ் அவர்கள்
நூல் : அபூதாவூத் (2341)
977 حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي وَحْشِيَّةَ عَنْ أَبِي عُمَيْرِ بْنِ أَنَسٍ عَنْ عُمُومَةٍ لَهُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَكْبًا جَاءُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَشْهَدُونَ أَنَّهُمْ رَأَوُا الْهِلَالَ بِالْأَمْسِ فَأَمَرَهُمْ أَنْ يُفْطِرُوا وَإِذَا أَصْبَحُوا أَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ * رواه ابوداؤد
ஒரு வாகனக் கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் நேற்று பிறை பார்த்ததாக சாட்சி சொன்றார்கள். நபி (ஸல்) அவர்களை நோன்பை விடுமாறும் விடிந்ததும் காலையில் அவர்கள் தங்களின் தொழும் திடலுக்குச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள்.
அறிப்பவர் : உமைர் இப்னு அனஸ் அவர்கள் நபித்தோழர்களாக இருந்து தனது தந்தையின் சகோதரர்களிடமிருந்து அறிவிக்கின்றார்.
நூல் : அபூதாவூத் (977)
மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை காலையிலே தொழுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.
காலை என்று நாம் மொழி பெயர்த்துள்ள வார்த்தைக்கு அரபி மூலத்தில் يغدو (யக்தூ) என்று வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது غدا (கதா) என்ற வார்த்தையின் எதிர்காலச் சொல் ஆகும். இதன் மூலச் சொல் غدو (குதுவ்வுன்) என்பதாகும்.
இந்த அரபிச் சொல்லுக்கு என்ன பொருள்? இந்த சொல்லை அன்றைய மக்கள் எப்படி விளங்கி வைத்திருந்தார்கள் என்பதை அரபி மொழி அறிஞர்களின் விளக்கத்திலிருந்துதான் விளங்கிக் கொள்ளமுடியும். இந்த வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத்தும் சரியென ஏற்று கடைப்பிடித்து வருகிறது.
ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரையான தம்முடைய ஃபத்ஹூல் பாரி என்ற நூல் இந்த ”அல்குதுவ்வு” என்ற வார்த்தையின் பொருளை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
فتح الباري – ابن حجر (2/ 148)
والأصل في الغدو المضى من بكرة النهار
அல்குதுவ்வு என்பதின் அசலாகிறது பகலின் ஆரம்பத்தில் செல்வதாகும்.
ஃபத்ஹூல் பாரி பாகம் 2 பக்கம் 148
فتح الباري – ابن حجر (2/ 369)
والغدو من أوله إلى الزوال
அல்குதுவ்வு என்பது பகலின் ஆரம்பத்திலிருந்து சூரியன் உச்சி சாயும் வரையிலாகும்.
நூல் : ஃபத்ஹுல் பாரி பாகம் 2 பக்கம் 369
فتح الباري – ابن حجر (6/ 14)
والغدوة بالفتح المرة الواحدة من الغدو وهو الخروج في أي وقت كان من أول النهار إلى انتصافه
”அல்கத்வத்து” என்றால் காலையில் ஒரு தடவை செல்லுதல் என்று பொருளாகும். இதன் மூலச் சொல் ”அல்குதுவ்வு” என்பதாகும். பகலின் ஆரம்பத்திலிருந்து அதன் பாதி (அதாவது உச்சி நேரம்) வரை எந்த நேரத்தில் வெளியில் சென்றாலும் அது ”அல்குதுவ்வு” என்பதின் பொருளாகும்.
ஃபத்ஹூல் பாரி பாகம் 6 பக்கம் 14
”அல்குதுவ்வு” என்பது பகலின் ஆரம்பத்திலிருந்து சூரியன் உச்சி அடையும் வரை உள்ள நேரத்தைக் குறிப்பதாகும் என்பது மேற்கண்ட அவ்வார்த்தைக்கான இப்னு ஹஜர் அவர்களின் விளக்கத்திலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
எனவே பெருநாள் தொழுகையின் நேரம் பகலின் ஆரம்பத்திலிருந்து சூரியன் உச்சியை அடையும் வரையிலாகும் என்பதை இதிலிருந்து அறிய முடிகிறது. சூரியன் உச்சியை அடைவதற்கு முன்பு வரை பெருநாள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். என்றாலும் பகலின் ஆரம்ப நேரத்தில் தொழுவதுதான் சிறந்ததும் நபிவழியுமாகும். அரிதான சந்தர்ப்பங்களில் சூரியன் உச்சியை அடைவதற்கு முன்பு வரை தாமதித்து கொள்ளலாம். இதுவே இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்ட முதல் முக்கிய தீர்வு.
குறிப்பு : பிறை தாமதமாக வரும் நெருக்கடியான கட்டத்தில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி சாதராண சூழ்நிலையிலேயே பத்து மணி, 11 மணி என்று தொழுத பழையக் கலாச்சாரத்தை திறந்து விட்டு விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஜமாஅத்தின் அறிவிப்பும் ஆய்வின் முடிவும்
சூரியன் உச்சியை அடையும் வரை பெருநாள் தொழுகையின் முடிவு நேரம் உள்ளது என்பதை ரமலான் பெருநாள் அறிவிப்பின் போது நாம் அறிந்திருக்கவில்லை. மற்றவர்களும் அறிந்திருக்கவில்லை. மற்றவர்கள் அறிந்திருந்தால் அதனை சுட்டிக் காட்டியிருப்பார்கள். அப்போது நாம் அனைவரும் அறிந்திருந்த சட்ட நெறியின்படி அந்த முடிவு எடுக்கப்பட்டதால் அன்றைய நிலையில் அது சரியே!
ஆனால் இனி வரும் காலங்களில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பெருநாள் அன்று சூரியன் உச்சி சாயும் முன் தொழமுடியுமானால் அன்றைய தினமே தொழுதுவிட வேண்டும். அந்த நேரத்திற்குள் தொழமுடியாத நிலை ஏற்படுமாயின் மறுநாள் பெருநாள் தொழுகையை தொழுவது குற்றமில்லை என்ற முடிவும் இந்த ஆய்வில் எட்டப்பட்டது.
யார் முடிவு செய்வது.?
பிறையை தீர்மானிக்கும் விஷயத்தில், தவ்ஹீத் ஜமாஅத், அதன் ஆரம்ப காலத்தில் ஒரு நெறிமுறையை கடைபிடித்து வந்தது. ஒவ்வொரு பகுதி மக்களும் தமது பிறை பார்க்கும் எல்லைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம், தமது பகுதியில் பிறை பார்க்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தமது நோன்பு மற்றும் பெருநாளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது.
அப்போது மாவட்டத்திற்கு மாவட்டம் பெருநாள் வேறுபட்டது. சில மாவட்டங்களில் கிளைகள் வேறுபட்டு நின்றன. தமிழக மக்களின் நலன் கருத்தில் கொண்டு, பெருநாளின் மகிழ்ச்சியில் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாட, மார்க்கம் நமக்கு வழங்கியுள்ள அனுமதியின் படி தமிழகம் முழுவதும் நமது எல்லை எனத் தீர்மானித்தோம்.
இது தொடர்பாக பிறை ஓர் விளக்கம் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டது.
தனித்தனியாக செய்யும் வணக்க வழிப்பாடுகளுக்கும் கூட்டாகச் சேர்ந்து செய்யும் வணக்க வழிப்பாடுகளுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளது.
கூட்டாகச் சேர்ந்து செய்யும் வணக்க வழிப்பாடுகளின் நேரங்காலங்களை அவரவர் முடிவு செய்யமுடியாது. எந்த நேரத்தில் ஜமாஅத் தொழுகை நடக்கும் என்பதை ஒருவரோ ஒரு குழுவோதான் முடிவு செய்யும். மற்றவர்கள் அதற்கு கட்டுப்பட வேண்டும்.
இதன் பிரகாரம் தமிழகத்தில் எங்கு பிறை பார்க்கப்பட்டாலும் அது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையால் உறுதி செய்யப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகாட்டலை ஏற்கும் மக்கள் அனைவரும் ஒரு சேர நோன்பு நோற்றும் பெருநாள் கொண்டாடியும் வந்தனர்.
கடந்த நோன்பு பெருநாளில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகம் ஒட்டு மொத்த தமிழகத்தின் நிலைமையைக் கவனித்து சனிக்கிழமை தொழுமாறு அறிவிப்பு செய்தாலும் ஒரு சில கிளைகள் மற்றும் மாவட்டங்கள் எங்களுக்கு ஷவ்வால் ஒன்றிலேயே தொழுது கொள்ளும் வாய்ப்பு இருந்ததாக மாநில நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டினர்.
எனவே இனி வரும் காலங்களில் பிறை பார்த்த தகவலை மாநிலத் தலைமை உறுதி செய்து அறிவிக்க நீண்ட தாமதம் ஏற்பட்டால், மாநிலத் தலைமை பெருநாள் அறிவிப்பை மட்டும் வெளியிடும் என்றும் அன்றைய தினமே மக்களிடம் தகவலை கொண்டு சேர்த்து தொழுகை நடத்திவிட முடியுமா என்பதை மாவட்ட நிர்வாகங்களின் முடிவுக்கு விட்டுவிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
வாகனக் கூட்டம் ஹதீஸ்
வாகனக் கூட்டம் குறித்து வந்துள்ள ஹதீஸில் பெருநாள் தொழுகையை மறுநாள் தொழ சலுகை வழங்கப்பட்டுள்ளது. பிறை தகவல் தாமதமானதால் இந்த சலுகையை நபியவர்கள் வழங்கியுள்ளார்கள் என்பது அந்த ஹதீஸின் நேரடிச் சட்டமாகும்.
தகுந்த காரணமிருந்தால் பெருநாள் தொழுகையை மறுநாள் தொழலாம் என்பது அந்த ஹதீஸிலிருந்து ஆய்ந்து பெறப்படும் சட்டமாகும். அது அதன் மையக் கருத்தாகும்.
அந்த ஹதீஸை கூர்ந்து நோக்கும் போது பிறை தகவல் தாமதமாகவில்லை என்பதும் முடிவெடுக்க தெரியாமல் நபியவர்களின் வழிகாட்டலை பெற வந்ததில் தான் தாமதம் என்பதும் புலனாகிறது.
ஒரு காரணத்திற்காக வழங்கப்படும் ஒரு சலுகை அது அல்லாத, அதன் தன்மையை கொண்ட வேறொரு தகுந்த காரணத்திற்காகவும் வழங்கப்படும் என்பது பொதுவான விதியாகும்.
எனவே, கலவரம், ஊரடங்கு உத்தரவு போன்ற தகுந்த காரணங்களினால் ஷவ்வால் ஒன்றில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற முடியாமல் ஷவ்வால் இரண்டில் நிறைவேற்றும் சூழல் ஏற்பட்டால் ஷவ்வால் இரண்டில் தொழுது கொள்ளலாம் என்பதும் அதை அந்த மாவட்டம் மற்றும் கிளைகள் முடிவு செய்து கொள்ளலாம் என்பதும் ஆய்வில் கலந்து கொண்ட பெரும்பாலோனரின் கருத்தாகும்.
வாகனக் கூட்டம் ஹதீஸில் பிறை தகவல் தாமதமானதால் பெருநாள் தொழுகையை மறுநாள் தொழ நபியவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். ஆகவே அதைத் தவிர வேறெந்த காரணத்திற்காகவும் பெருநாள் தொழுகையை மறுநாள் தொழக் கூடாது. கலவரம், ஊரடங்கு உத்தரவு போன்ற எந்தக் காரணங்களானாலும் வீடுகளிலேயே இரண்டு மூன்று நபர்களாக சேர்ந்தாவது அன்றே பெருநாள் தொழுகையை தொழுதுவிட வேண்டும் என்பது ஆய்வில் கலந்து கொண்ட ஒரு அறிஞரின் கருத்தாகும்.
இதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இரு கருத்துகளையும் மக்கள் முன் சமர்ப்பித்துவிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
ஆய்வுகளில் இரு கருத்து
குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபி மொழிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து முடிவெடுக்கும் போது சில நேரங்களில் இரு விதமான புரிதல்கள் ஏற்படுவது இயல்பே. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ளது.
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ قَالَ : حَدَّثَنَا جُوَيْرِيَةُ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَنَا لَمَّا رَجَعَ مِنَ الأَحْزَابِ لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الْعَصْرَ إِلاَّ فِي بَنِي قُرَيْظَةَ فَأَدْرَكَ بَعْضُهُمُ الْعَصْرَ فِي الطَّرِيقِ فَقَالَ بَعْضُهُمْ لاَ نُصَلِّي حَتَّى نَأْتِيَهَا وَقَالَ بَعْضُهُمْ بَلْ نُصَلِّي لَمْ يُرَدْ مِنَّا ذَلِكَ فَذُكِرَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُعَنِّفْ وَاحِدًا مِنْهُمْ. (صحيح البخاري)
அகழ்ப் போரிலிருந்து திரும்பிய போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், பனூகுறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்களில்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழவேண்டாம் என்று கூறினார்கள்.
வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் அடைந்தனர். அப்போது சிலர், பனூகுறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையை தொழவேண்டாம் என்று கூறினர். மற்ற சிலர், (தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள்’ என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவே, நாம் தொழுவோம் என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (946)
وَحَدَّثَنِى عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِىُّ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ نَادَى فِينَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمَ انْصَرَفَ عَنِ الأَحْزَابِ « أَنْ لاَ يُصَلِّيَنَّ أَحَدٌ الظُّهْرَ إِلاَّ فِى بَنِى قُرَيْظَةَ ». فَتَخَوَّفَ نَاسٌ فَوْتَ الْوَقْتِ فَصَلُّوا دُونَ بَنِى قُرَيْظَةَ. وَقَالَ آخَرُونَ لاَ نُصَلِّى إِلاَّ حَيْثُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَإِنْ فَاتَنَا الْوَقْتُ قَالَ فَمَا عَنَّفَ وَاحِدًا مِنَ الْفَرِيقَيْنِ.( صحيح مسلم)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப் போரை முடித்துத் திரும்பிய நாளன்று, “பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை உங்களில் எவரும் லுஹ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம்” என்று எங்களிடம் (கூறி, பனூ குறைழா குலத்தாரை நோக்கி விரைவாகப் புறப்படுமாறு) அறிவித்தார்கள்.
அவ்வாறு சென்றவர்கள் சிலர் (தொழுகையின்) நேரம் தவறிவிடுமோ என அஞ்சினர். எனவே, பனூ குறைழா குலத்தார் வசிக்குமிடத்திற்கு முன்பே தொழுதுவிட்டனர். வேறுசிலர் தொழுகையின் நேரம் நமக்குத் தவறினாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்ட இடத்திலேயே தொழுவோம் என்று கூறி (தொழுகையைத் தாமதப்படுத்தி)னர்.
பின்னர் (இரு பிரிவினர் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) அவ்விரு பிரிவி னரில் எவரையும் அவர்கள் குறை கூற வில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : முஸ்லிம் (3632)
(புகாரியின் அறிவிப்பில் அஸர் என்றும், முஸ்லிமின் அறிவிப்பி்ல் லுஹர் என்றும் இடம் பெற்றிருப்பது ஹதீஸின் நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தாது. இரண்டில் ஒரு தொழுகை என்று புரிந்து கொண்டால் போதுமானது)
மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு வாக்கியத்தை நபித்தோழர்களில் ஒரு பிரிவினர் ஒரு கருத்திலும், மற்றொரு பிரிவினர் வேறு கருத்திலும் புரிந்து கொள்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் இரு சாராரில் யாரையும் கண்டிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கண்டிக்காமல் விட்டதிலிருந்தே இரண்டுமே சரி என்ற கருத்தையே நாம் புரிந்து கொள்ள முடியும்.
குர்ஆன் மற்றும் நபி மொழியை ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்யும் போது இருவிதமான கருத்துக்களுக்கு அதில் முகாந்திரம் இருக்குமென்றால், இரண்டு கருத்துக்களுக்குமே அது ஆதாரமாகத் திகழுமென்றால் எந்தக் கருத்தை எடுத்துக் கொண்டாலும் இருசாராருமே குர்ஆன் சுன்னாவை பின்பற்றியவர்களாகத்தான் கருதப்படுவார்கள். ஆனால் அடிப்படை குர்ஆன், சுன்னாவாகவும், அதில் இரண்டு கருத்துக்கும் முகாந்திரம் உள்ளதாகவும் இருக்க வேண்டும். இல்லாத கருத்தை இருப்பதாகத் திணித்து வழிகேடர்கள் வாதிடுவதை இது எடுத்துக் கொள்ளாது.
கிராமவாசிகள் ஹதீஸ் குறிப்பிடுவது என்ன?
கடந்த ரமலானில் முகநூலில் வெளியிடப்பட்ட பெருநாள் அறிவிப்பில் கிராமவாசிகள் தொடர்பான செய்தி முதலில் குறிப்பிடப்பட்டு பின்னர் அந்தச் செய்தி நீக்கப்பட்டது.
இதனைக் காரணமாக வைத்து கிராமவாசிகள் செய்தியை தவ்ஹீத் ஜமாஅத் இருட்டடிப்பு செய்து விட்டனர் என்றும் வஹியை மறைத்துவிட்டனர் என்றும் சிலர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது பழிசுமத்துகின்றனர்.
நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்து அன்று நள்ளிரவில் நடந்த ஆலோசனையில் கிராமவாசிகள் தொடர்பான செய்தியும் பேசப்பட்டது.
கிராமவாசிகள் செய்தியும் அவர்கள் பெருநாளைக்கு மறுநாள் தொழுத்தாகவே சொல்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் பிறை ஓர் விளக்கம் என்ற நூலில் கிராமவாசிகள் அன்றே தொழுதார்கள் என்ற கருத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது. எனவே புது வாதங்களை பின்னொரு நாளில் பேசிக்கொள்ளலாம் என்று கிடப்பில் போடப்பட்டது.
கலந்துரையாடலில் பேசப்பட்ட அந்த ஹதீஸும் முகநூல் அறிக்கை தயார் செய்யும் போது இடம் பெற்றுவிட்டது. அதில் பிறை ஓர் விளக்கம் என்ற நூலில் உள்ள மொழி பெயர்ப்பு அப்படியே சேர்க்கப்பட்டது.
மறுநாள் தொழுது கொள்ளலாம் என்பதற்கான ஆதாரங்களைக் குறிப்பிடும் போது அன்றே தொழுது கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ள ஆதாரத்தைக் குறிப்பிட்ட காரணத்தினால் பொருத்தமில்லாமல் உள்ளது என்ற அடிப்படையிலும் இது தொடர்பாக அறிஞர்களின் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையிலும் கிராமவாசிகள் செய்தி நீக்கம் செய்யப்பட்டது. இதில் வஹியை மறைக்க வேண்டும் என்ற நோக்கம் கடுகளவும் இல்லை.
எனவே கிராமவாசிகள் தொடர்பான ஹதீஸும் ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.
கிராமவாசிகள் தொடர்பான செய்தியில் மறுநாள் தொழுதைத்தான் குறிக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஆய்வுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. கிராமவாசிகள் தொடர்பான ஹதீஸிற்கு விரிவுரை எழுதியவர்களும் கிராமவாசிகள் செய்தி பெருநாளைக்கு மறுநாள் தொழுத்தைதான் குறிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மாற்றுக் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. போதிய நேரமின்மையால் இது தொடர்பாக மற்றொரு அமர்வில் ஆய்வு செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.