நபியை அவமதிக்கும் மவ்லிது

டென்மார்க் பத்திரிகையும் சன்மார்க்க (?) மவ்லிதுகளும்

பி.எம். முஹம்மத் அலீ ரஹ்மானீ

வந்து விட்டது ரபீவுல் அவ்வல் மாதம். நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாள் இடம் பெற்றுள்ள இந்த மாதத்தில் கந்தூரீ, மவ்லூத், எட்ஸெட்ரா எட்ஸெட்ரா என்று இன்னும் பற்பல விஷயங்களும் விஷேசங்களும் வந்து விடும்.

நபியவர்களை கேலிச் சித்திரம் வரைந்து கேவலப்படுத்தி கயமைத் தனம் செய்து விட்ட டென்மார்க் நாட்டிற்கு எதிராகக் கண்டனக் குரலெழுப்பி முடித்துள்ள நம்மை எதிர் கொள்ள வருகிறது இந்த ரபீவுல் அவ்வல். மவ்லூதுக்கும், டென்மார்க் குக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா? அதில் தான் விஷயமே உள்ளது. அது என்ன விஷயம்?

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

(அல்குர்ஆன் 33:6)

இவ்வாறு அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுவது போல் நம் உயிரினும் மேலான நமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை பயங்கரவாதியாகவும் தீவிரவாதியாகவும் சித்தரித்து, தூற்றி, கேலிச் சித்திரம் வரைந்த கயவன் காட்டுமிராண்டி டென்மார்க்கின் ஜில்லேண்ட் போஸ்டன் பத்திரிக்கையைக் கண்டித்தோம்; கத்தினோம்; வீதியிலே நின்று கதறினோம். இந்த மாபாதகச் செயலைக் கண்டு வீறு கொண்டு நம் உள்ளம் கொதித்து, உடல் துடித்தது. ஏன்?

நற்குண சீலரை, குணக் குன்றை மாண்புமிக்கோராய், நூற்றுக்கு நூறாய் மாற்றாரும் போற்றும் புகழ் வேந்தராய் திகழும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை தீவிரவாதி என்றும், பைத்தியக்காரர் என்றும் சித்தரித்ததே இதற்கு காரணம். உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை விட மேலானவராகக் கருதப்படும் இந்த மாமனிதரை இழிவாகச் சித்தரிக்கும் போது அதை எவ்வாறு முஸ்லிம்களால் தாங்கிக் கொள்ள இயலும்?

பணத்திற்காகத் தலைவன் பின்னால் திரியும் தொண்டன் கூட, தன் தலைவனைப் பற்றி ஒருவர் விமர்சிக்கும் போது அதை அவன் தாங்கிக் கொள்வதில்லை. உண்மைத் தலைவரான பெருமானாரைப் பற்றி விமர்சித்தால் எப்படித் தாங்கிக் கொள்வார்கள். தீவிரவாதத்தை ஒடுக்க வந்த நபி (ஸல்) அவர்களை தீவிரவாதி என்று சித்தரிப்பது மாபெரும் அக்கிரமம்.

உத்தம நபியின் உயரிய பண்புகள்

உலகத்தில் யாரிடமும் இல்லாத நற்குணத்தை நபி (ஸல்) அவர்கள் பெற்ற காரணத்தினால் வல்லோன் ரப்புல் ஆலமீனே தன் திருக்குர்ஆனில் போற்றி அவர்களது புகழைப் பறை சாற்றுகிறான்.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன் 68:4)

இன்று பெரும்பாலும் தீவிரவாதச் செயல்களில் ஒரு சில முஸ்லிம்கள் ஈடுபடுவதைப் பார்த்து விட்டு இவர்களது தலைவரான முஹம்மது நபி தீவிரவாதத்தைக் கற்றுக் கொடுத்துள்ளாரோ என்ற நினைப்பே இவர்களை இந்த வழிகேட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.

இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாமல் தீவிரவாதச் செயலில் ஈடுபடுபவர் களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஒரு மதத்தைச் சார்ந்த ஒருவன் விபச்சாரம் புரிவதால் அவன் யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளானோ அவர் அந்த விபச்சாரத்தைக் கற்றுக் கொடுத்தார் என்று அறிவுடைய எவரும் கூற மாட்டார்கள். இதனடிப்படையில் ஒரு சில தீவிரவாதிகளின் செயலை வைத்து பெருமானாரைக் கணக்கிடாமல் பெருமானார் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறை மற்றும் போதனைகளைப் பார்த்து அவர்கள் யார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் அவர்கள் கூறிய பொன்மொழிகளையும் உற்று நோக்கும் போது இவர்களைப் போன்று தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்த்த மனித நேயம் உள்ள எவரும் உலகில் இல்லை என்று சொல்லலாம்.

அமைதியை நிலை நாட்டிய அண்ணல் நபி

“ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்” (அல்குர்ஆன் 5:32) என்ற குர்ஆன் வசனத்தைப் போதித்து தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வெற்றி கண்டவர்.

பிறருக்குத் துன்பம் தராதவனே முஸ்லிம் என்று கூறி அமைதியை நிலைநாட்ட வந்தவர் நபி (ஸல்) அவர்கள்.

எவருடைய நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற மக்கள் நிம்மதி பெறுகிறாரோ அவரே முஸ்லிம் எவர் பிற மக்களின் உடமைகளுக்கும் உதிரத்திற்கும் பாதுகாப்பு அளிக்கிறாரோ அவரே முஸ்லிம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: நஸயீ 4909

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாதே! என்று கூறுவார்கள். இதை வலியுறுத்தும் விதமாக, மக்களுக்கு உன்னால் முடிந்த அளவு நன்மை செய்! முடியாவிட்டால் அவர்களுக்குத் தீமை செய்யாதே! இதுவும் தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இது நபி (ஸல்) அவர்களது மகத்தான மனித நேயத்தையும் அமைதி குணத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர் அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரீ 1445

போர் நெறியைப் போதித்த பெருமானார்

போர் என்று வந்து விட்டாலே சதி செய்து எதிரிகளைத் துவம்சம் செய்து கொன்றொழிக்க வேண்டும் என்று தான் அனைத்து நாட்டவரும் எண்ணுவார்கள். இதை அநியாயம் என்று எவரும் கூற மாட்டார்கள். பெண்கள், சிறுவர்கள் என்ற பாகுபாடின்றி தாக்கத் தொடங்குவார்கள். ஆனால் அந்தப் போரில் கூட, பிஞ்சு உள்ளம் படைத்த சிறியவர்களையும் பூ உள்ளம் கொண்ட பெண்களையும் கொல்லக் கூடாது என போருக்கே இலக்கணம் வகுத்த பொன் மனம் படைத்த இறைத் தூதர் நபி (ஸல்) அவர்கள் தான்.

டென்மார்க் பத்திரிகையும்
சன்மார்க்க (?) மவ்லிதுகளும்

இவ்வளவு சிறப்பும் கொண்ட கண்ணியமிக்க அவர்களை தீவிரவாதியைப் போன்றும் முரட்டு குணம் படைத்தவர் போன்றும் கேலிச் சித்திரம் வரைந்து அவமரியாதை செய்யும் வகையில் பத்திரிக்கையில் வெளியிட்டதால் இதைக் கண்டித்து கண்டனப் போராட்டம் நடத்தினோம்.

ஆனால் அந்தக் கேலிச் சித்திரங்களை வரைந்தவர்கள், நபி (ஸல்) அவர்ளை ஒரு மத போதகராகவோ, புனிதராகவோ நபியாகவோ, நம்பாதவர்கள். கேலியாகவும் நையாண்டியாகவும் சித்தரித்தவர்கள், நபியவர்களை எதிரியாகவும் பகைவராகவும் பாவிப்பவர்கள். இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்காத விஷமக்காரர்கள்.

ஆனால் அவர்களையே விட்டு வைக்காமல் உலக முஸ்லிம்கள் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் மற்றும் பல வகைகளிலும் கண்டித்தோம்.

இதில் எல்லா மக்களும் தவ்ஹீத்வாதிகளும் சுன்னத் ஜமாஅத்தினர் எனப்படுவோரும் சேர்ந்தே எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

இப்படியெல்லாம் கண்டிக்கின்ற நாம் பல காலம் நம்மவர்களில் சிலர் மவ்லூத் என்ற பேரில் நபியவர்களைப் புகழ்கிறோம் என்ற ரீதியில் நபி (ஸல்) அவர்களை இழிவாகவும் கேலியாகவும் பாடியும் ஓதியும் வருகிறார்களே அவர்களை என்ன செய்வது? அதற்குள் உள்ளதை அறியாத பாமர மக்களும் நபியவர்களைக் கேலி செய்கிறார்கள்.

மாநபியை அவமதிக்கும் மவ்லூத் பாடல்கள்

தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப் பெற்று அமர்க்களப்படும் மவ்லித் கிதாபுகள் இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாட்டிற்கும் குர்ஆனில் உள்ள கருத்துக்களுக்கும் நேரடியாக மோதக் கூடியவை. நபியவர்களின் சொற்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் நேர் மாற்றமானவைகள். இது மட்டுமின்றி அதிலுள்ள வரிகள் நபியவர்களை கேலியும் கிண்டலும் செய்யக் கூடியதாகவும் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம். பொதுவாக ஒருவரை நாம் மதிக்கிறோம் என்றால் முதலில் அவரது கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். அவர் கூறிய அடிப்படையில் செயல்பட வேண்டும். இதற்கு மாற்றமாக அவர் கூறியதை செவியில் வாங்கிக் கொள்ளாமல் தான் விரும்பியதை எல்லாம் செய்து விட்டு “நான் அவரை மதிக்கிறேன்” என்று கூறினால் அவர் மிதித்தவராகக் கருதப்படுவாரே தவிர ஒரு போதும் மதித்தவராகக் கருதப்பட மாட்டார்.

இவ்வாறே மவ்லிதை ஓதுபவர்கள் செய்து வருகிறார்கள். அதிலும் தாங்கள் நபி (ஸல்) அவர்களின் விசுவாசி; அவரின் உயிருக்கு உயிரான நேசர்கள்; அவரைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று கூறிக் கொண்டே மாற்றம் செய்தால் இது மிகத் தெளிவான நயவஞ்சகத் தனமாகும். இவ்வாறு தான் இந்தப் பாடலைப் பாடுபவர்களும் கருதப்படுவார்கள். யாநபி பைத் என்ற பாடல் தமிழகமெங்கும் பிரசித்தி பெற்றது. அதிகமான மக்கள் கல்யாணம் போன்ற எல்லா விதமான நல்ல காரியத்தை ஆரம்பிக்கும் போதும் இந்தப் பாடலை படிக்காமல் துவங்க மாட்டார்கள். அந்த அளவுக்குப் பிரசித்திப் பெற்றது.

இந்தப் பாடலைப் பாடும் போது எழுந்து நின்று கொண்டு ஓதுவார்கள். காரணம் என்னவென்றால் இவ்வாறு பாடும் போது நபியவர்கள் வருவார்களாம். அவர்கள் வரும் போது அவர்களுக்கு மரியாதை செய்யும் முகமாக எழுந்து நிற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இவ்வாறு நிற்பதே அவர்களை அவமரியாதை செய்வதையே காட்டுகிறது. காரணம் எந்த மனிரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள். (பார்க்க அபூதாவூத் 4418)

அவர்களின் கட்டளைக்கு மாற்றமாக, “நீங்கள் நிற்கக் கூடாது என்று சொன்னீர்கள். ஆனால் நாங்கள் நிற்கத் தான் செய்வோம்” என்று கூறுவதைப் போன்று உள்ளது. அந்த பாடலின் துவக்கமே, “யா நபி ஸலாம் அலைக்கும் யாரஸூல் ஸலாம் அலைக்கும்” என்று மொட்டையாகவே வருகிறது. அந்தப் பாடலுக்குப் பெயரே யாநபி பாடல் என்றே கூறப்படும். இந்த வரியைக் கவனியுங்கள். அதில் “யா நபியல்லாஹ், யா ரஸூலுல்லாஹ்” என்று முறையாக இல்லாமல் குறையாக, மரியாதை இல்லாமல், நபி (ஸல்) அவர்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவர்கள் அவர்களை அழைப்பது போன்று உள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல் அதில் வரும் ஏழாவது அடியில் “யாமுஹம்மத்” என்று நபியவர்களின் பெயரைச் சொல்லி மிகவும் விகாரமாகவே மரியாதையில்லாமல் அழைக்கப்படுகிறது. பொதுவாக மக்களின் பழக்க வழக்கம் என்னவென்றால் தாங்கள் யாரை கண்ணியமாக மதிக்கிறார்களோ அவர்களை அழைக்கும் போது பெயர் கூறி அழைக்க மாட்டார்கள்.

தாய், தந்தை, ஆசிரியர் இன்னும் அவர்கள் பெரியவராக மதிப்பவர்களை பெயர் கூறி அழைப்பதை மரியாதைக் குறைவாகக் கருதுவார்கள். தன் கணவரின் பெயரைச் சொல்லவோ கூப்பிடவோ மாட்டார்கள். இவ்வாறு கூப்பிடக் கூடாது என மார்க்கத்தில் தடையெல்லாம் ஒன்றும் இல்லை. என்றாலுமே இது நடைமுறை வழக்கில் ஒழுக்ககேடாக இருந்து வருகிறது.

இவ்வாறிருக்க, தன் தாய் தந்தையையோ அல்லது தன் பிள்ளையையோ இவ்வாறு அழைக்க எந்த ஒரு சராசரி மனிதனும் விரும்புவானா? விரும்ப மாட்டான். ஆனால் அனைவரையும் விட உயர்ந்த நபி (ஸல்) அவர்களை இவ்வாறு அழைக்க இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? உயிரை விட மேலான இறைத்தூதர் அவர்களை இவ்வாறு பெயர் கூறி அழைப்பதை எப்படி பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்க முடியும்? அதுவும் அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் நபி (ஸல்) அழைத்துக் கூப்பிடும் ஒழுங்கைப் பற்றிக் கூறுகையில்,

உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள் (அல்குர்ஆன் 24:63) இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை அப்பாஸ் (ரலீ) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். “அரபு மக்கள் யா முஹம்மத், யாஅபல் காசிம்’ என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நபியவர்களைக் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் அவ்வாறு கூறக் கூடாது என அல்லாஹ் அவர்களைத் தடுக்கிறான்” என கூறுகிறார்கள். இமாம் இப்னு கஸீர் அவர்கள் தமது தப்ஸீரில் இதை கூறுகிறார்கள். தமிழகமெங்கும் உள்ள மதரஸாக்கள் அனைத்திலும் பாடத் திட்டத்திலுள்ள தப்சீர் ஜலாலைன் என்ற கிதாபில் இந்த வசனத்திற்கு இப்படித் தான் கருத்துக் கூறப் பட்டுள்ளது. அப்படி அமைந்த கவிதை வரிகள் தான் அந்த யாநபிப் பாடலில் இருக்கிறது. அதை நன்கு படித்துத் தெரிந்த ஆலிம், அறிஞர்கள் தான் இந்த வரிகள் அடங்கிய மவ்லூத் பாடல்களைப் படித்து வருகிறார்கள். இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்த அறிஞர்கள் இதை ஆதரிக்கிறார்கள் என்றால் பணத்திற்காகத் தான் ஓதுகிறார்கள் என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இது சாதாரண மக்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கலாம். சரி மக்களுக்குப் புரியாது. படித்த ஆலிம்களுக்குமா புரியவில்லை? அல்லது புரிந்தும் தெரியாதவர்கள் போன்று நடிக்கிறார்களா? அல்லாஹ்வுக்கே வெளிச்சம். பகிரங்க இணை வைப்பு

இது மட்டுமல்ல! “அல்லாஹ்விடம் மட்டுமே பாவமன்னிப்பு கேட்க வேண்டும்; வேறு யாரிமும் கேட்கக் கூடாது; எல்லாப் பாவங்களையும் அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்; அந்த ஏக வல்ல நாயன் அல்லாஹ்விடம் ஒரு நாள் ஒன்றுக்கு 100 தடவை நான் இஸ்திக்ஃபார் தேடுகிறேன்” என்று கூறிய அந்த இறைத்தூதரிடத்திலேயே, “கஃப்பிரூ அன்னீ துனூபீ வஃபு லீ அன் சய்யிஆ(த்)தீ” (நீர் என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்திடுவீர். நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் பாவங்களை மன்னிப்பவர்) என்றெல்லாம் கூறும் வரிகளும் இந்தப் பாடலில் தான் இருக்கிறது இது மட்டுமல்ல! இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இப்படி நபியவர்களின் போதனைகளுக்கே வேட்டு வைக்கின்ற, இஸ்லாத்தின் அடிப்படைக்கே உலை வைக்கின்ற ஒரு பாடலை வைத்து, நபி (ஸல்) அவர்களைத் துதிப்பதாக, புகழ் பாடுவதாயிருந்தால் அது எப்படிப் புகழாகும்? நபி (ஸல்) அவர்களை இகழ்வதாகவே அது அமையும். தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் இதுவும் கேலி தானே! அதைத் தான் முஸ்லிம்களாகிய இவர்கள் செய்கிறார்கள் கேலியும் கிண்டலும்

சுப்ஹான மவ்லீதின் முதல் பாடலான “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற பாடலைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!

ஒருவருக்கு ஸலாம் கூறுவதாக இருந்தால் ஒன்றிரண்டு தடவை அல்லது மூன்று தடவைகள் கூறலாம். இது தான் ஹதீஸிலும் நடைமுறை வழக்கிலும் இருக்கிறது. மூன்று தடவைக்கு மேல் கூறினால் என்னாகும்? நீங்களே யோசியுங்கள். கேலியாகவும் நையாண்டியாகவும் ஆகி விடும். அப்படித் தான் அந்தப் பாடலும் அமைகிறது.

உதாரணமாக, ஒரு பள்ளியில் பணி புரியும் ஜிப்பா, தலைப்பாகை அணிந்த பேஷ் இமாமை நோக்கி, ஒருவரோ அல்லது பலரோ நின்று கொண்டு ராகம் போட்டு, “ஜிப்பா போட்ட இமாமே! ஸலாமலைக்கும். தலைப்பாகை கட்டிய இமாமே! ஸலாமலைக்கும். பள்ளியின் அழகான தாடியுள்ள ஆலிம்ஷாவே! ஸலாமலைக்கும்” என்று அவர் எந்த கோலத்தில் இருக்கிறாரோ அதையெல்லாம் சொல்லி ஸலாம் ஸலாம் என்று சொன்னால் எப்படி இருக்கும்? நையாண்டியாக, கேலியாக இருக்குமல்லவா? இவ்வாறு தானே மவ்லூத் பாடலிலும் படிக்கிறார்கள். ஒருவரிடம் உள்ளதை உள்ளபடியே சொல்லும் போது கூட, இவ்வாறு தொடர்ந்து கூறினால் கேலியாகத் தோன்றுவதோடு கோபமும் வேகமும் ஏற்படும். அதிலும் இல்லாததையும் பொல்லாததையும் கூறும் போது கேட்கவே வேண்டாம்.

இவ்வாறு நபியவர்களைப் பார்த்து சொல்லக் கூடாத, படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுக்கு நபியவர்களை ஒப்பாக்கி, “அஸ்ஸலாமு அலைக யாமுப்ரிஸ் ஸகாமி” (நோய் நீக்குபரே உமக்கு ஸலாம்) “யாஜாலில் குரூப்” (கஷ்டத்தைப் போக்குபவரே உமக்கு ஸலாம்) என்றெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கிக் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் நபியவர்களோ தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது, அல்லாஹ்வை நோக்கி, “நீயே குணப்படுத்துபவன். உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் எதுவுமில்லை” (ஹதீஸ் சுருக்கம் புகாரீ 5675) என்று கூறியிருக்க அதற்கு மாற்றமாக அபத்தமாகப் பாட்டு படிப்பது எப்படிப் புகழ்வதாக ஆக முடியும்?

அது போன்றே மரியாதைக்காக நின்று ஓதும் மவ்லூத் பாடல்களில் யா குத்பா என்ற பாடலிலும் நபி (ஸல்) அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அநதப் பாடலின் வரிகள் இதோ:

ஸல்லல் இபாஹு மதா மல் கவ்சுல் அஃலமு காம்
அலா முஹம்ம தினில் ஆலீ லி கைரி மகாம் மகா ரட்சகர் என்ற பொருளைக் கொண்ட கவ்ஸுல் அ,ஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அருள் புரியட்டும் என்பதே இதன் கருத்து. நபியவர்களின் தரத்தையும் தகுதியையும் குறைக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது போன்று இந்தப் பாடல் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களது புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அப்துல் காதிர் ஜீலானிக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் என்று கூறினால் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த மவ்லிதை எழுதியவர் திட்டமிட்டு பெருமானாரை இழிவு படுத்தியிருக்கின்றார். முஹம்மத் (ஸல்) அவர்களை விட முஹய்யித்தீனை உயர்வாக எழுதியிருக்கின்றார்.

இதுபோன்ற பாடலை வைத்துத் தான் நபியைப் புகழ்வதாக சிலர் கூறுகிறார்கள். இப்படிப் பாடுவது நபியவர்களை இழிவு படுத்துவதாகவே ஆகும்.

நபி (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி கார்ட்டூன் வரைந்தவன் கரத்தை வெட்டு என்று கோஷம் எழுப்பிய நாம் இந்த மவ்லிதுகளைப் படித்து வரும் ஆலிம்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அறியாமல் செய்யும் தவறா?

சிலர், “அந்த மவ்லூத் வரிகள் எப்படி இருந்தாலும், எந்த எண்ணத்தில் எழுதப்பட்டாலும் நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் பாடுகிறோம். பெரியார்கள் மீது கொண்ட பிரியத்தினால் தான் ஓதி வருகிறோம். குற்றம் எங்கள் மீது கிடையாது” என்று கூறுகிறார்கள். “இதை நன்கு தெரிந்த ஆலிம்கள் மீதும் அதை எழுதியவர்கள் மீதுமே சாரும். எங்களுக்கு ஏதும் இல்லை” என்றும் கூறுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இவர்கள் அவ்வாறு கூறி தப்பி விட முடியாது. ஏனெனில், “மவ்லிதுகள் கூடாது; இது போன்ற பாட்டு கவிதை என்பது இஸ்லாத்தில் ஆராதனையாகவோ வணக்கமாகவோ இல்லை; பாட்டுப் பாடி புண்ணியம் கருதி நபிமார்களையோ, பெரியார்களையோ புகழ்வது பித்அத் (வழிகேடு); மேலும் அவ்வாறு செயல்படுவது மாற்றார்களின் கலாச்சாரம்; அதை விடுத்து அல்லாஹ்வும் அவன் தூதர் நபியவர்களும் காட்டிய முறையில் ஸலவாத் போன்ற வணக்க வழிபாடுகளை செயலாற்றுங்கள்” என்று நல்லதை ஏவி, தீயதைத் தடுத்துக் கொண்டும், போதனை புரிந்து கொண்டும் ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கின்றது.

இந்தக் கூட்டம் இருக்கும் காலமெல்லாம் இது போன்று சமாதானம் கூறி தட்டிக் கழிக்க முடியாது. “நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் செய்தோம். எண்ணமே வாழ்வு” என்றெல்லாம் கூறிட முடியாது.
அல்லாஹ் தன் திருமறையில் மூமின்களே! என அழைத்த முதல் வசனம் இது தான். அது என்ன? இதோ:

நம்பிக்கை கொண்டோரே! ராஇனா எனக் கூறாதீர்கள்! உன்ளுர்னா என்று கூறுங்கள்! செவிமடுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 2:104)

ராஇனா’ என்ற சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். எங்களைக் கவனித்து வழி நடத்துங்கள்’ என்பது ஒரு பொருள். எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே’ என்பது மற்றொரு பொருள். யூதர்களில் நயவஞ்சகர்கள் தம் மனதுக்குள் இரண்டாவது அர்த்தத்தை நினைத்துக் கொண்டு ராஇனா’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறி அற்ப திருப்தியடைந்து கொண்டார்கள். முஸ்ம்களோ முதல் அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்தி வந்தனர்.
எனவே தான் முதல் அர்த்தத்தை மட்டும் தரக்கூடிய உன்ளுர்னா’ என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பயன்படுத்துமாறு முஸ்லிம்களுக்குத் திருக்குர்ஆன் கட்டளையிட்டது.

முஸ்லிம்கள் நல்ல எண்ணத்தில் தான் கூறினார்கள் என்றாலும் “யூதர்கள் பயன்படுத்தியதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது” என அல்லாஹ் தடுத்து விட்டான் என்றால் “நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் செய்கிறோம்” எனக் கூறி, தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை எவரும் செய்தால் அது அதிகப் பிரசங்கித்தனமாகும்.
பெருமானாருக்கு மாறு செய்தால்…

நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதற்குச் சமம். அவர்களுக்கு மாறு செய்வது அல்லாஹ்விற்கு மாறு செய்ததாக ஆகும். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“யார் எனக்கு கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்விற்குக் கட்டுப் பட்டு விட்டார். யார் எனக்கு மாறு செய்து விட்டாரோ அவர் அல்லாஹ்விற்கு மாறு செய்து விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7137

இந்த உலகத்தில் நாம் நல்ல அமல்களைச் செய்வதன் நோக்கமும் இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பதன் நோக்கமும் மறு உலக வாழ்வில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இதற்காகத் தான் சிரமப்பட்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். நமது முக்கிய குறிக்கோளாக இருக்கக் கூடிய இந்த சொர்க்கம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்வதால் கிடைக்காமல் போய் விடுகிறது.

“என்னுடைய சமுதாயத்தில் (என்னை) மறுத்தவனைத் தவிர அனைவரும் சுவனம் செல்வார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! (உங்களை) யார் மறுப்பார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு யார் கட்டுப்படுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார். யார் எனக்கு மாறு செய்கிறாரோ அவர் (என்னை) மறுத்து விட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7280

எனவே நாம் அவர்கள் கூறிய விஷயங்களுக்குக் கட்டுப்படாமலோ, அவர்கள் தடுத்த காரியங்களைச் செய்தோ அல்லது அவர்கள் காண்பித்துத் தராத செயல்களை உருவாக்கியோ நாம் நரகம் சென்று விடக் கூடாது என்பதில் கண்ணுங் கருத்துமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் இந்த எச்சரிக்கையைத் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு துன்பம் ஏற்படுவதையோ துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.

(அல்குர்ஆன் 24:63)

ஒருவரை நேசிக்கிறோம் என்றால் அந்த நேசத்திற்குரியவர் என்ன விரும்புகிறாரோ அதைத் தான் செய்ய வேண்டும். நாமாக நம் இஷ்டத்திற்கு எதையும் செய்வது உண்மையான நேசமாக இருக்காது. அது போலிப் பிரியமாகத் தான் இருக்கும். இதனால் அல்லாஹ் தன் திருமறையில்

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப் பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்3:31)

என்றைக்காவது ஒரு முறை பெருமானாரைக் கேலி செய்யும் டென்மார்க் போன்ற நாடுகளை எதிர்த்த நாம், வருடம் வருடம் நபி (ஸல்) அவர்களின் மதிப்பைக் குறைக்கும் இந்த மவ்லிதை எப்போது எதிர்க்கப் போகிறோம்? எப்போது மவ்லித் புத்தகங்கள் குப்பைத் தொட்டிகளுக்குச் செல்லும்? இனிமையான அந்த நாள் கூடிய சீக்கிரம் இறைவனின் கிருபையால் வரத் தான் போகிறது.