மனம் ஏற்றுக் கொள்ளாத  மார்க்கச் சட்டங்கள்

மனம் ஏற்றுக் கொள்ளாத  மார்க்கச் சட்டங்கள்

ஆப்ரின் சிதிரா

இவ்வுலகில் விரலிட்டு எண்ண முடியாத ஏராளமான கடவுள் கொள்கைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட, மனிதனுக்கு இயலாத பல காரியங்களை மார்க்கம் என்ற பெயரால் கட்டளையிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே வாழ்க்கைக்கு ஏற்ற இனிமையான எளிமையான உயரிய கோட்பாடுகளையும், நேரிய சட்ட திட்டங்களையும் கொண்டுள்ள ஓர் உன்னதமான மார்க்கமாகும். ஏனெனில் இது மனோஇச்சைகளாலோ, கற்பனைகளாலோ தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் கிடையாது. ஈடு இணை இல்லாத இறைவனால் வழங்கப்பட்ட ஈடற்ற மார்க்கமாகும்

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே!

திருக்குர்ஆன் 3:19

முஸ்லிம் என்பவன் யார்?

இம்மார்க்கத்திற்கு இஸ்லாம் என இறைவனே பெயரிட்டது போல இம்மார்க்கத்தை ஏற்றிருப் பவர்களுக்கும்  முஸ்லிம் என்று இறைவன் பெயரிட்டுள்ளான். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையில் நடப்பவரே முஸ்லிம் ஆவார்.

இதோ அல்லாஹ் கூறுகிறான்.

எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை; இவ்வாறே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்’’ என்றும் கூறுவீராக!

திருக்குர்ஆன் 6:163

இறைவன் தந்த இந்த அழகிய மார்க்கத்தில் இருக்கும் நாம் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். வாழ்வு சீர்பெற, செம்மையாக அமையப் பலவிதமான போதனைகளை நம் மார்க்கம் வகுத்துள்ளது. ஆனால் நம்மவர்களோ சாதகமானதை ஏற்று, பாதகமானதை விட்டு விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக நம் கொள்கைச் சொந்தங்களாலும் கூட சில விஷயங்களை ஏற்க முடிவதில்லை. அவ்வாறு மனம் ஏற்க மறுக்கும் மார்க்கச் சட்டங்களில் சில…

மணமகள் தேர்வில்…

வரதட்சணை இல்லாத, ஆடம்பரம் இல்லாத கல்யாணம் தான் நபிவழித் திருமணம் என்பதே பெரும்பான்மையான மக்களின் நிலைப்பாடு. ஆனால் திருமணத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் மார்க்கம் காட்டித்தந்த அடிப்படையில் அமைவதே நபிவழித் திருமணம் ஆகும். மக்களுக்கு மத்தியில் நடக்கும் திருமணத்தை பார்க்கும் போது இங்கே திருமணமா? அல்லது திருவிழாவா? என்று வியந்து போகும் அளவிற்கு ஆடம்பரமான மிக விமரிசையான திருமணங்கள் பலவற்றை நாம் பார்த்திருக்கின்றோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் அந்த ஆடம்பரங்கள் குறைந்து எளிமையான திருமணங்கள் அரங்கேறுவதை தற்போது காணமுடிகிறது. எனினும் முழுமையான இலக்கை அடையவில்லை. ஏனெனில் திருமணத்தில் வரதட்சணை, மணவிருந்து போன்ற வெளிப்படையாகத் தெரியும் அனாச்சாரங்களைத் தவிர்க்கும் முஸ்லிம்கள் மறைமுகமாக உள்ள சில விஷயங்களை மறந்துவிடுகின்றனர்.

திருமணத்தில் அஸ்திவாரமாக, ஆரம்பமாக இருப்பது மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்வது தான். வீட்டிற்கு வரும் மருமகள் அழகாக, அந்தஸ்து உள்ளவளாக, சுண்டினால் இரத்தம் வரும் நிறத்தில் இருக்க வேண்டும் என்று மனம் சொல்கிறது. ஆனால் மார்க்கமோ நல்லொழுக்கமுள்ளவளாக, மார்க்கம் தெரிந்தவளாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதோ மார்க்கம் சொல்வதைக் கேளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் நான்கு நோக்கத்திற்காகத் திருமணம் முடிக்கப்படுகிறாள்.

  1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
  2. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.

ஆகவே மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்.

நூல்: புகாரி 5090

இறைத்தூதர் முதன்மைப்படுத்திய மார்க்கம் முற்றாய் மறைந்து போய் மனம் சொல்வதே முதன்மையாக்கப்படுகின்றது. மார்க்கம் தெரியாத வர்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால், மார்க்கத்தைத் தெரிந்து கொண்ட கொள்கைவாதிகளும் கூட இந்த ஹதீஸிற்குச் செயல் வடிவம் கொடுப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆண்கள் அழகையும் அந்தஸ்தையும் எதிர்பார்த்து இந்த ஹதீஸை மறுக்கின்றனர்; மறக்கின்றனர் என்றெல்லாம் விமர்சனங்களைத் தொடுக்கும் பெண்களே! நீங்கள் இந்த ஹதீஸை செயல்முறைப்படுத்துகிறீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 தமது மகன், தமது சகோதரன், தம் குடும்பத்தார் என்று வரும் போது உங்கள் நிலைபாடு என்ன? உறவினர்களும், சம்பந்த வீட்டுக்காரர்களும், சமூகத்தாரும் இழிவாகக் கருதிவிடக்கூடாது; கௌரவக்குறைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை மையமாகக் கொண்டே ஒரு பெண் தேர்வு செய்யப்படுகின்றாள். அவர்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் நிறைந்த ஒரு பெண்ணுக்கு மார்க்கம் தெரியவில்லை என்றாலும், இணை வைப்பாளராக இருந்தாலும் சரி அது பொருட்டாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்கள் பார்க்கும் இத்தகுதியை இறைவன் பார்ப்பதில்லை. இதோ இறைவன் கூறுகிறான்.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள்.

திருக்குர்ஆன் 24:26

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:221

இங்கே பெண்களை மட்டும் குறிப்பிடுவதால் ஆண்கள் தவறிழைப்பதில்லை என்று நாம் கூறவில்லை. ஆண்களைப் போன்று பெண்களும் இத்தவறில் கூட்டாகி உள்ளனர் என்பதையே நாம் சுட்டிக்காட்டுகிறோம்.

மனம் வெறுக்கும் திருமணம்

திருமணம் என்று சொன்னாலே வீட்டளவிலாவது விருந்து வைக்க வேண்டும்; உற்றார் உறவினர்களை அழைப்பதும் கட்டாயக் கடமை என்ற நிலையை நம்மவர்கள் உருவாக்கி உள்ளனர். வாழையடி வாழையாக இது ஒரு சம்பிரதாயமாகப் பார்க்கப்படுவதால் ஒவ்வொருவரும் இவ்விஷயத்தில் வலிந்து சிரமத்தை ஏற்றுக் கொள்கின்றனர். ஒரு மணி நேரத்தில் நடந்து முடியும் ஒரு சுபக் காரியம் நம்மீது ஒரு சுமையாகவே மாறிவிட்டது. ஆனால் நம் மார்க்கமோ எளிமையானது; எளிமையை போதிக்கக்கூடியது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால், அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே, (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள். நற்செய்தியையே சொல்லுங்கள்.

நூல்: புகாரி 39

வணக்கத்திலும் கூட நமக்கு நாமே சிரமத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். வணக்கத்திற்கே இது தான் அளவுகோல் என்றால் உலக விஷயங்களில் எந்தளவிற்கு எளிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று சற்று சிந்தியுங்கள்! அனைத்திலும் எளிமையைக் கடைபிடித்த நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த திருமணத்தைப் பாருங்கள்!

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள) வந்துள்ளேன்’’ என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு தம் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்து வையுங்கள்!” என்று சொன்னார்.

நபி (ஸல்) அவர்கள், (மஹ்ராகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை, அல்லாஹ்வின் தூதரே!’’ என்றார். நபி (ஸல்) அவர்கள் உன் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா? என்று பார்! என்றார்கள். அவரும் சென்று பார்த்துவிட்டு, திரும்பி வந்து ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எதுவும் கிடைக்கவில்லை அல்லாஹ்வின் தூதரே!’’ என்று சொன்னார். இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா? என்று பார்! என நபி (ஸல்) அவர்கள் சொல்லி அனுப்பினார்கள். அவர் மீண்டும் சென்று விட்டு திரும்பி வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இரும்பாலான  மோதிரம் கூட கிடைக்கவில்லை. ஆனால், இதோ! இந்த எனது வேட்டி உள்ளது’’ என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இந்த வேட்டியை நீர் அணிந்து கொண்டால் அவர் மீது எதுவுமிருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது எதுவுமிருக்காது. ஆகவே (இவளுக்கு மஹ்ர் செலுத்த) ஏதேனும் தேடுக’’ என்றார்கள். அவர் (தேடிவிட்டு வந்து) ஒன்றும் கிடைக்கவில்லை என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடுக” என்று சென்னார்கள் அப்போதும் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், குர்ஆனில் ஏதேனும் உம்முடன் (மனனமாக) உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம் இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் எனச் சில அத்தியாயங்களின் பெயரைக் குறிப்பிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உம்முடன் (மனனமாய்) உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5135

மணப்பந்தல் இல்லை, மணமேடை இல்லை, ஆடம்பரங்கள் இல்லை, ஆர்ப்பரிக்கும் கூட்டங்கள் இல்லை. நடந்ததோ ஓர் எளிய திருமணம். அழகிய முன்மாதிரியாகிய இறைத்தூதர் அவர்களே முன்னின்று நடத்திய திருமணத்தை மேற்கோள் காட்டினாலும், அதை ஏற்க மனம் முன்வருவதில்லை.

‘அதற்காக சொந்தபந்தங்கள் இல்லாமல் நற்காரியத்தை நடத்த முடியுமா? உறவுகள் இல்லாதவர்களுக்கு மட்டும் இது சாத்தியம். நபிவழித் திருமணம் என்ற பெயரில் அனைத்து சம்பிரதாயங்களும், சடங்குகளும், ஆடம்பரங்களும் குறைந்து விட்டன. இதில் உறவுகளையும் கூட அழைக்கக் கூடாதா? அது எப்படி முடியும் சாத்தியமே இல்லை’ என்று நம் சகோதரிகள் கொந்தளிப்பார்கள், குமுறுவார்கள் தமது ஆதங்கத்தை கொட்டித் தீர்ப்பார்கள்.

ஆம்! நம் உள்ளம் இதை ஏற்றுக் கொள்ளாது, விரும்பாது தான். ஏனெனில் குடும்பத்தாரும், சமூகத்தாரும் சுற்றிச் சூழ ஆடம்பரங்கள், கேளிக்கைகள் நிறைந்தது தான் திருமணம் என்று நாம் காலம்காலமாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதனால் தான் நபிவழி அடிப்படையில் ஒரு திருமணம் நடந்தாலும் கூட இது கல்யாண வீடா? கருமாதி வீடா? எந்த ஒரு சொந்த பந்தமும் இல்லாமல் நடக்கும் கல்யாணம் ஒரு கல்யாணமா? என்று நம்மைச் சேர்ந்தவர்களே விமர்சிக்கும் நிலை உருவாகிவுள்ளது.

மார்க்கம் கற்றுத் தந்ததாக இருந்தாலும் அதை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. திருமணத்தை பெரிய பிரம்மாண்டமான ஒரு காரியமாக நமது உள்ளம் சித்தரித்து வைத்துள்ளது. ஆனால் நம் மார்க்கமோ அதை ஓர் உடன்படிக்கை என்கிறது. இதோ இறைமறை இயம்புகிறது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்?

திருக்குர்ஆன் 4:21

சகோதரிகளே! உறவுகளே வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. உறவுகளை உபசரிக்கும் ஓர் உன்னத மார்க்கத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றாலும் உறவுகளைக் காரணம் காட்டி எளிமையான இம்மார்க்கத்தைச் சுமையாக ஆக்கி நமக்கு நாமே நெருக்கடியை ஏற்படுத்திவிட கூடாது என்றே குறிப்பிடுகிறோம்.

கவனிக்கத் தவறிய ஹிஜாப்

பெண்களைக் கண்ணியப்படுத்தவும் அவர்களது கற்பைப் பாதுகாக்கவும் அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட ஓர் அழகிய சட்டம் தான் ஹிஜாப். ஹிஜாப் என்றால் கருப்பு நிற ஆடை அணிவது தான் என்றும் வெளியில் செல்லும் போது மட்டுமே அதைப் பேணவேண்டும் என்றும் பெரும்பாலானவர்கள் விளங்கி வைத்துள்ளனர்.

அதனால் தான் மணம் முடிக்கத் தகுந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருக்கும் போது கூட ஹிஜாப் முறையைப் பேணுவதில்லை. இதற்குக் காரணம் அந்நிய ஆடவர்கள் யார்? என்பதை உணராமல் இருப்பது தான். அல்லாஹ் நெருங்கிய உறவுகளை பட்டியலிடுகிறான்.

 தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

திருக்குர்ஆன் 24:31

மேலே குறிப்பிட்டவர்களைத் தவிர மற்ற அனைவரும் அந்நிய ஆடவர்கள் தான். அவர்கள் எத்தகைய உறவாக இருந்தாலும் சரியே!

ஹிஜாப் சட்டத்தைப் புரிந்து வைத்துள்ள பெண்களும் கூட, பெரியம்மா மகன், சின்னம்மா மகன் முன்னிலையில் ஹிஜாபைப் பேணாமல் சர்வசாதாரணமாக நிற்பது, அவர்களைத் தொட்டுப் பேசுவது, அவர்களுடன் வெளியே செல்வது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இது தவறு என்று தெரிந்தும் கூட அதைத் திருத்திக்கொள்ள முன்வருவதில்லை.

சிறு வயது முதலே ஒரே வீட்டில் ஒன்றாக வளர்ந்திருக்கிறோம். சகோதர சகோதரிகளாகப் பழகியிருக்கிறோம் அப்பேற்பட்ட உறவுகளை அந்நியமாக்க முடியுமா? என்ற முகத்தாட்சணை  தான் இதற்குக் காரணம். அந்நியர்களை அண்ணனாக மனம் ஏற்றுக் கொண்டதால் தான் மார்க்கச் சட்டத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

என் அண்ணன், என் தம்பி என்று உரிமையோடு உறவு பாராட்டினாலும் மாதிரி உறவுகள் ஒருபோதும் மஹ்ரமான உறவுகள் ஆகாது. நேற்று வரை சகோதரர்களாக இருந்தவர்கள் நாளை வாழ்க்கைத் துணையாகவும் மாறலாம் என்பதை மனதில் ஆழப்பதிவு செய்ய வேண்டும்.

ஹிஜாப் முறையுடன் மார்க்கம் அனுமதித்த அடிப்படையில் உறவைப் பேணி வாழ வேண்டும். இல்லையேல் பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதை போன்ற பாதக சூழல் உருவாகி விடும். மார்க்கத்தை தெரிந்து கொண்டவர்களே இத்தகைய தவறில் நீடித்திருப்பது கவலைக்குரியதே. மார்க்கம் என்று வரும்போது  அங்கே நம் சுய விருப்பங்களுக்கு இடமில்லை. மனம் சொல்வது ஒருபோதும் மார்க்கம் ஆகாது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுயவிருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

மனம் சொல்வதைக் கேட்டு ஷைத்தானின் சூழ்ச்சிகளுக்குக் கட்டுப்படாமல், மன இச்சைகளைப் புறந்தள்ளி மார்க்கக் கட்டளைகளுக்கு செவி சாய்ப்போமாக!