கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்

கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்

ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. வழக்கம் போல் மக்கள் எல்லோரும் குர்பானி கொடுத்தார்கள். நாமும் குர்பானி கொடுத்தோம். தனியாகவும், கூட்டாகவும் ஆடு,மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன. இந்தக் குர்பானி ஏன் கொடுக்கப்படுகின்றது?இதற்குப் பின்னணியாக இருப்பது யார்?

உலக இறுதி நாள் வரை வாழ்கின்ற எந்த ஒரு முஸ்லிம் – யூதர் – கிறித்தவர் – இணை வைப்பவர் எவராலும், என்றும் மறக்க முடியாத மாமனிதர் இப்ராஹீம் (அலை) ஆவார்கள்.

ஹஜ் மாதங்களில் ஹஜ் செய்கின்ற ஹாஜிகளின் வணக்கங்கள், நாம் கொடுக்கின்ற குர்பானி ஆகிய அனைத்தும் இப்ராஹீம் (அலை) ,அவர்களது மனைவி ஹாஜர் (அலை), மகன் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் அமைந்தவை தான் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஏன் அவர்களை இந்த அளவுக்கு நினைவு கூர வைத்தான்? அவர்களது வாழ்க்கையை ஏன் இந்த அளவுக்கு எண்ணிப் பார்க்க வைத்தான்? என்று நாம் பார்க்கும் போது, அல்லாஹ் அவர்களை இந்தச் சீரும் சிறப்புமான நிலைக்குக் கொண்டு வந்ததற்குரிய காரணம் அவர்கள் கொண்டிருந்த ஏகத்துவக் கொள்கைப் பிடிப்பு தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏகத்துவம் என்பது அவர்களது கொள்கைப் பிடிப்பாக மட்டும் இருக்கவில்லை. இதயத் துடிப்பாக இருந்திருக்கின்றது. இதை நாம் திருக்குர்ஆனிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதன் முதலில் அல்லாஹ் ஏகத்துவச் சிந்தனையை வழங்குகின்றான்.

இதற்கு முன் இப்ராஹீமுக்கு அவரது நேர் வழியைக் கொடுத்தோம். அவரைப் பற்றி அறிந்தவராக இருந்தோம்.

(அல்குர்ஆன் 21:51)

“என் தந்தையே! செவியுறாத, பார்க்காத, உமக்கு எந்தப் பயனும் அளிக்காததை ஏன் வணங்குகிறீர்?” என்று அவர் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

“என் தந்தையே! உமக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே என்னைப் பின்பற்றுவீராக! உமக்கு நேரான பாதையைக் காட்டுகிறேன்”

“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறு செய்பவனாவான்.

என் தந்தையே! அளவற்ற அருளாளனிடமிருந்து உமக்கு வேதனை வந்து விடுமோ எனவும், ஷைத்தானுக்கு உற்ற நண்பராக ஆகி விடுவீரோ எனவும் நான் அஞ்சுகிறேன் (என்றார்.)

“இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப் படுத்துகிறாயா? நீ விலகிக் கொள்ளா விட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு!” என்று (தந்தை) கூறினார்.

“உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்.

உங்களையும், அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றையும் விட்டு விலகிக் கொள்கிறேன். என் இறைவனையே பிரார்த்தனை செய்வேன். எனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதில் துர்பாக்கியசாலியாக ஆகாமல் இருப்பேன்” (என்று இப்ராஹீம் கூறினார்.)

அவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்கி வந்தவற்றையும் விட்டு அவர் விலகிய போது அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அன்பளிப்பாக வழங்கினோம். இருவரையும் நபியாக்கினோம்.

அவர்களுக்கு நமது அருளையும் அன்பளிப்பாக வழங்கினோம். அவர்களுக்கு உயர்வான புகழையும் ஏற்படுத்தினோம்.

(அல்குர்ஆன் 19:42-50)

இப்ராஹீம் (அலை), இந்தச் சிந்தனையைப் பெற்றதும் தம் தந்தையிடம் அதைப் போதிக்கிறார்கள். அவர்களுடைய தந்தை இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தை ஏற்கவில்லை என்பதால் அத்துடன் மனம் தளர்ந்து இருந்து விடவில்லை. தொடர்ந்து தம்முடைய சமுதாய மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார்கள்.

“நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும்,தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.

“நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்”என்று அவர் கூறினார்.

“நீர் உண்மையைத் தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

“அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 21:52-56)

அவர்களது தெய்வங்களுக்குச் சக்தியில்லை என்பதை வாய் மொழியாகச் சொல்லி விட்டு நின்று விடாமல், அந்தச் சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்பதைச் செயல்பூர்வமாக நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்)

அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.

(அல்குர்ஆன் 21:57-58)

இதைச் செய்தது இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் என்பதை அந்த ஊரார் தெரிந்து கொண்டனர்.

அவ்வளவு தான். இந்தச் செயல் மக்களைக் கொதிக்க வைக்கின்றது. கொதித்துப் போன மக்கள் ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டுகின்றனர்.

“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர்.

“ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர்.

“அவரை மக்கள் மத்தியில் கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்”என்றனர்.

“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.

(அல்குர்ஆன் 21:59-62)

விவரமான பதில்

அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.

உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.

பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர்.

(அல்குர்ஆன் 21:63-65)

இந்தப் பதிலைக் கேட்டு விட்டு, இந்தத் தெய்வங்கள் பேசாது என்று அந்த மக்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த உடன் இப்ராஹீம் (அலை) அவர்கள் திரும்பப் பிடிக்கின்றார்கள்.

“அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.

“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்)

(அல்குர்ஆன் 21:66-67)

இந்த வெளிச்சமான பதிலைக் கேட்டுப் பேச முடியாமல், ஆடிப் போன அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களுக்குத் தீக்குண்டத்தைத் தண்டனையாக்கி, தீர்ப்பு வழங்குகின்றனர்.

அதைக் கண்டு கொஞ்சம் கூட இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆடிப் போய் விடவில்லை. அசைக்க முடியாத பாறையாக நிமிர்ந்து நின்றார்கள். தீயில் தூக்கி எறியப்பட்ட அவர்களைத் தீ கரித்து விடாமல் அல்லாஹ் காத்து விடுகின்றான்.

பகுத்தறிவுப் பகலவனாகிய அவர்களை இன்று வரையிலும், இறுதி நாள் வரையிலும் நினைக்க வைத்திருப்பதற்கு ஒரே காரணம் அவர்களது இந்த ஏகத்துவ உறுதி தான்.

குர்பானி உண்டு கொள்கை இல்லை

இப்ராஹீம் (அலை) அவர்கள் கொடுத்த குர்பானி நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவர்கள் கொண்டிருந்த கொள்கை நம்மிடம் இல்லை.

இன்று நாம் ஏகத்துவத்தை விட்டு விட்டு இறந்து விட்ட பெரியார்களின் தர்ஹாக்களில் தஞ்சமாகி விட்டோம். அவர்கள் அடங்கிய கப்ருகளில் ஐக்கியமாகி விட்டோம்.

அவர்களின் கடவுள்களிடம் சென்று “சாப்பிட மாட்டீர்களா? ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்.

(அல்குர்ஆன் 37:91-92)

இப்ராஹீம் (அலை) அவர்கள் காட்டிய இந்த வழிமுறைப்படி தர்ஹாக்களில் அடங்கிய பெரியார்களிடம் பேசினால் அவர்கள் பதில் தருவார்களா? அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும் உணவுகளை, நேர்ச்சைகளைச் சாப்பிடுவார்களா?

இன்று தர்ஹாக்களில் பெரிய அவ்லியா ஒருவர் அடங்கப் பட்டிருப்பார். அவரைச் சுற்றி குட்டிக் குட்டி அவ்லியாக்களின் கப்ருகள் கட்டப்பட்டிருக்கும். இந்தக் குட்டிக் கப்ருகளை ஒருவர் தட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை ஊர்ப் பஞ்சாயத்தினர் விசாரிக்கும் போது இப்ராஹீம் நபியைப் போன்று அவர் பதில் சொன்னால் அந்த அவ்லியா எழுந்தருளி பளிச்சென்று பதில் சொல்வாரா?

இறுதி நாள் வரை எழ மாட்டார்கள்

நிச்சயமாக அவர்கள் இறுதி நாள் வரை எழ மாட்டார்கள். எந்த ஒரு பதிலையும் இறுதி நாள் வரை தரவும் மாட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சிலைகள் பதில் அளிக்காததைப் போன்று இறந்து விட்ட அவ்லியாக்களும் பதில் தர மாட்டார்கள் என்பது உண்மையாக இருக்க இந்த அவ்லியாக்களை, நேரடியாக அவர்களது சமாதிகளுக்குச் சென்றோ அல்லது இங்கிருந்து கொண்டோ அழைத்தால் அவர்கள் எப்படிப் பதிலளிப்பார்கள்? இது பக்கா ஷிர்க் – இணை வைப்பு இல்லையா?

கல்லறைகளும் கற்சிலைகளும் சமமா?

“இறந்து விட்ட அவ்லியாக்கள் செவியுற மாட்டார்கள்” என்ற உண்மையை நாம் சொல்லும் போது அறிஞர் (ஆலிம்?) பெருமக்கள், “இப்ராஹீம் நபி பேசியது சிலைகளுடன் தான். சிலைகளின் நிலையை அவ்லியாக்களுடன் ஒப்பிடுவது சரியாகுமா?” என்று குரோர்பதிக் கேள்வியைக் கேட்பார்கள்.

இதற்கு அல்லாஹ் ஆணித்தரமான, அழுத்தம் திருத்தமான பதிலைத் தருகின்றான்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

(அல்குர்ஆன் 7:194)

“உங்களைப் போன்ற அடியார்கள்” என்ற இந்த வார்த்தை ஒரு போதும் கல், களி மண்,பொன், வெள்ளி மற்றும் மெழுகுச் சிலைகளைக் குறிக்காது. மனிதர்களைத் தான் குறிக்கும் என்பது மிகத் தெளிவான விஷயமாகும். இதைப் பின்வரும் வசனங்கள் இன்னும் தெளிவுபடுத்தி விடுகின்றன.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப் படுவார்கள்’என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:20,21)

இதன் மூலம் கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கேட்பதும், கப்ருகளுக்கு முன்னால் நின்று கேட்பதும் சமம் தான் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகி விடுகின்றது.

மதுவும் மாத்திரைகளும்

இதை இந்த ஆலிம்கள் உணரத் தவறி விடுகின்றனர். இவர்களிடம் ஒருவர் போய், “போதை மாத்திரைகள் சாப்பிடலாமா?” என்று கேட்டால் போதையின்றி, நிதானமாகப் புத்திசாலித் தனத்துடன் பதிலளிக்கின்றார்.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள்,ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

(அல்குர்ஆன் 5:90)

இந்த வசனத்தின் அடிப்படையில் போதை மாத்திரை ஹராம் என்று கூறி விடுகின்றார்.

அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கம்ர் என்ற வார்த்தையைத் தானே பயன்படுத்தியிருக்கிறான்? அது திரவப் பொருள் தானே? அது பருகப்பட வேண்டுமல்லவா? போதை மாத்திரைகள் என்பது கம்ர் என்ற வட்டத்திற்குள் வருமா?என்றெல்லாம் கேள்வி கேட்டு, போதை மாத்திரை பயன்படுத்தலாம் என்று இந்த ஆலிம்கள் தீர்ப்பு வழங்குவதில்லை.

இங்கு இவர்களுடைய பார்வையில் கருப் பொருள் போதை தான். போதை திரவப் பொருள் வடிவிலோ, திடப் பொருள் வடிவிலோ, வாயு வடிவத்திலோ இருந்தாலும் சரி தான். அது சிறு மூளையைச் செயலிழக்கச் செய்யும் என்பதால் கூடாது என்று சொல்கின்றனர்.

கலப்படமற்ற இந்தப் பார்வையை அவ்லியாக்கள் விஷயத்தில் இந்த ஆலிம்கள் செலுத்துவதில்லை.

  1.  சிலைகளுக்கு உயிரில்லை.
  2.  செவியுறாது.
  3.  பதில் தராது

உயிரில்லாமை, செவியுறாமை, பதில் தராமை ஆகிய தன்மைகளால் சிலைகளிடம் கேட்கக் கூடாது என்று கூறும் இந்த ஆலிம்கள் இதே தன்மைகளைக் கொண்ட இறந்து விட்ட அவ்லியாக்களிடம் எதையும் கேட்கக் கூடாது, அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது, யாமுஹய்யித்தீன் என்று இருட்டில் உட்கார்ந்து, குருட்டு திக்ரு செய்யக் கூடாது என்று ஏன் பிரச்சாரம் செய்வதில்லை. மது சம்பந்தமாக ஒரு பார்வை! அவ்லியாக்களை அழைத்து திக்ர் செய்வதில் வேறொரு பார்வையை ஏன் இந்த ஆலிம்கள் பார்க்கிறார்கள்?

உயிரில்லாத, செவியுறாத, பதில் தராத எவற்றிடமும், எவரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்பது தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்ட கொள்கையாகும். இந்தக் கொள்கையின் படி வாழ்ந்து குர்பானி கொடுத்தால் அது இப்ராஹீம் நபியின் குர்பானியாகும். இல்லையேல் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத் தூதராவதற்கு முன்பு குறைஷிகள் கொடுத்த குர்பானியைப் போன்றது தான்.

குறைஷிகளின் குலவழிக் குர்பானி

அரபியர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் பிள்ளைகள் தாம் என்பதை நாம் நன்கு அறிவோம். அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தார்கள். ஹஜ்ஜும் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதை அல்லாஹ் ஏற்கவில்லை. காரணம், அது கொள்கை வழிக் குர்பானி அல்ல! குல வழிக் குர்பானியாகும். ஆம்! “எங்களது தந்தை இப்ராஹீம் நபி குர்பானி கொடுத்தார்கள். அது போல் நாங்களும் கொடுக்கிறோம்”என்று தான் அன்றைய அரபிகள் குர்பானி கொடுத்தனர்.

இதே போன்று தான் நாமும் இன்று குர்பானி கொடுக்கிறோம். இப்ராஹீம் நபியின் கொள்கையை விட்டு விட்டோம். இதை எப்படி அல்லாஹ் ஏற்பான்?

இறந்து விட்ட பெரியார்களை “யா முஹய்யித்தீன், யா முஹய்யித்தீன்” என்று அழைத்துப் பிரார்த்திக்கிறார்கள்.

இற்நதவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள், செவியுறுகின்றார்கள், பதிலளிக்கின்றார்கள் என்று நம்புகின்றனர்.

இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் பிரசவம் போன்ற பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளில் கூட யா முஹய்யித்தீன் என்று அழைக்கிறார்கள். இது போன்ற காரணங்களால் இவர்கள் ஏகத்துவத்தை இழந்து விட்டார்கள்.

இவர்கள் கொண்டிருக்கும் இந்த நம்பிக்கையைத் தான் மக்காவில் வாழ்ந்த,இவர்களால் காஃபிர்கள் என்றும் முஷ்ரிக்கீன்கள் என்றும் அழைக்கப்படும் அன்றைய மக்கத்து மக்கள் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு நாம் குறிப்பிடுகையில், “எங்களையும் மக்கத்துக் காஃபிர்களையும் எப்படி ஒன்றாக ஒப்பிடலாம்?” என்று கேட்பார்கள்.

நிச்சயமாக மக்கத்து காஃபிர்களுக்கு ஒத்த தன்மை இவர்களிடம் நிறையவே உள்ளன.

மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வை எப்படி நம்பியிருந்தார்கள் என்று பார்ப்போம்.

படைத்தவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?

(அல்குர்ஆன் 43:87)

தங்களைப் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்கள் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை இந்த வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

வானத்தைப் படைத்தவன் அல்லாஹ்

“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்” எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 43:9)

வானத்தையும், பூமியையும் படைத்த அஜீஸ் – அலீம் என்று அல்லாஹ்வை நம்பியிருந்தார்கள்.

அர்ஷுடைய நாயன் அல்லாஹ்

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக!

“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக!

“அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன் 23:85-87)

பூமி அல்லாஹ்வுக்குச் சொந்தம்; ஏழு வானங்களுக்கும் அவனே அதிபதி; அர்ஷுடைய நாயன் அல்லாஹ் என்றும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

மழையைப் பொழிவிப்பவன் மண்ணை விளைவிப்பவன்

“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன் 29:63)

ஆபத்தில் அபயம் தருபவன்

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன் 31:32)

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 29:65)

மழையைத் தருபவன், மண்ணை விளைவிப்பவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. அத்துடன் கடலில் கப்பல் பயணம் செல்கையில் மலை போன்ற அலைகள் வரும் சமயத்தில் அத்தகைய ஆபத்தில் காப்பவன் அல்லாஹ் தான் என்றும் நம்பியிருந்தார்கள்.

இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட இம்மக்கள் தான் குர்பானி கொடுத்தார்கள்;ஹஜ்ஜும் செய்தார்கள். தம் தந்தை இப்ராஹீம் வழியில் இவற்றைச் செய்து வந்தார்கள். இவர்களின் ஹஜ்ஜையும், குர்பானியையும் அல்லாஹ் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்களை இணை வைப்பாளர்கள், இறை மறுப்பாளர்கள் என்று கூறி நிரந்தர நரகவாசிகளாக்கி விட்டான். ஏன்? அவர்கள் செய்த பாவம் என்ன?

பரிந்துரைக்காகவே அவ்லியாக்கள்

இந்த அவ்லியாக்கள் தங்களைப் படைத்தவர்கள், மழையைத் தருபவர்கள், மண்ணை விளைவிப்பவர்கள், வானம், பூமியைப் படைத்தவர்கள் என்று அம்மக்கள் சொல்லவில்லை. அவ்வாறு அவர்கள் நம்பவுமில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்”என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

இறைவனிடம் நெருக்கி வைப்பவர்களே இறை நேசர்கள்

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

இந்த ஒரு காரணத்திற்காகத் தான் அம்மக்களை இணை வைப்பாளர்கள், இறை நிராகரிப்பாளர்கள் என்று அல்லாஹ் தீர்ப்பளித்து விட்டான்.

முஸ்லிம்கள் என்ற பெயரில் முஷ்ரிக்குகளாக…

இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வை படைத்தவன், உணவளிப்பவன், மழை தருபவன்,மண்ணை விளைவிப்பவன் என்றெல்லாம் நம்புகின்றார்கள். ஆனால் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி போன்றவர்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள்; அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று கூறுகின்றார்கள். இந்த அடிப்படையில், இந்த நம்பிக்கையில் மக்கத்து காஃபிர்களை நூற்றுக்கு நூறு இவர்கள் ஒத்துப் போய் விடுகின்றனர்.

இறந்து போன ஒருவரை, இறுதி நாள் வரை எழுந்திருக்க முடியாத ஒருவரை இருட்டில் உட்கார்ந்து கொண்டு ஆயிரம் தடவை கூவிக் கூவி அழைக்கிறார்கள்.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடை கின்றனர்.

(அல்குர்ஆன் 39:45)

அல்லாஹ் என்று சொல்லும் போது அமைதியாக இருக்கின்றார்கள். முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி என்று சொல்லும் போது கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் கூறுகின்றார்கள். இது மக்கா காஃபிர்களின் தன்மை தான்.

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும்,செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

(அல்குர்ஆன் 17:46)

தவ்ஹீது பயானுக்கு வாருங்கள் என்று சொன்னவுடன், “தவ்ஹீது பயானா? அவர்கள் அவ்லியாக்களைப் பற்றிப் பேச மாட்டார்கள்” என்று வராமல் இன்று பின் வாங்குவதைப் பார்க்கிறோம். இது மக்கா காஃபிர்களின் நூறு சதவிகிதத் தன்மையல்லவா?

“எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா?

(அல்குர்ஆன் 7:70)

நாம் இம்மக்களிடம் அழைப்புப் பணி செய்யும் போது, “இவர்கள் நஜாத்காரர்கள், நம் முன்னோர்கள் நடத்தி வரும் தர்ஹாக்களை வேண்டாம் என்பார்கள், கந்தூரி கூடாது என்பார்கள்” என்று நமக்கு எதிராக இவர்கள் சொல்வது அப்படியே மக்கா காஃபிர்களின் கருத்துக்கு ஒத்ததாக இருப்பதை மறுக்க முடியுமா?

அன்று பிறந்த பாலகனா? அழுக்குப் பிள்ளைகளா?

இவர்கள் தான் மக்கா சென்று விட்டு இப்ராஹீம் நபியின் ஏகத்துவத்தை நினைவு படுத்துகின்ற நினைவகங்களுக்குச் சென்று ஹஜ்ஜும் செய்து விட்டு வருகின்றனர். ஹஜ்ஜை முடித்த கையோடு அஜ்மீருக்கும், நாகூருக்கும், பொட்டல்புதூருக்கும் இவர்கள் செல்வது எதைக் காட்டுகிறது?

அல்லாஹ்வை மட்டும் அழைப்பதற்காக இப்ராஹீம் நபியவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட இந்த ஆலயத்திற்குப் போய் விட்டுப் புண்ணியவான்களாகத் திரும்புவதற்குப் பதிலாக, ஷிர்க் எனும் பாம்பு குடி கொண்டிருக்கும் புதர்களாக,பயனற்றுப் போன பதர்களாகத் திரும்ப வருகின்றனர்.

அன்று பிறந்த பாலகர்களாகத் திரும்ப வருவதற்குப் பதிலாக அழுக்குப் பிள்ளைகளாகத் திரும்ப வருகின்றனர். அது போல் இவர்களது குர்பானியும் குறைஷிகளின் குலவழிக் குர்பானியாகவே அமைந்திருக்கின்றது. கொள்கை வழிக் குர்பானியாக இல்லை என்று அதனால் தான் கூறுகின்றோம்.

இன்னும் சொல்லப் போனால் மக்கா காஃபிர்களை விட மட்டரகமான கொள்கையை இவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் மக்கா காஃபிர்கள் ஆபத்துக் கட்டத்தில் அல்லாஹ்வைத் தான் துணைக்கு அழைத்தார்கள். ஆனால் இவர்களோ ஆபத்தான காலத்திலும் முஹய்யித்தீனை அழைக்கின்றார்கள்.

மக்கத்துக் காஃபிர்கள் அவ்லியாக்களாகக் கருதியது இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) போன்றவர்களைத் தான்.

(பார்க்க புகாரி 1601)

ஆனால் இவர்களோ முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை அல்லவா கடவுளாக்கி இருக்கின்றார்கள்? இருட்டில் உட்கார்ந்து கொண்டு ஆயிரம் தடவை அவரை அழைத்துப் பிரார்த்தனை செய்கிறார்கள். இதைக் கண்டித்துப் பேசி, ஒதுங்க வேண்டிய ஆலிம்கள் இதில் போய் கலந்து கொள்கின்றனர். இவர்கள் எப்படி இப்ராஹீம் நபியின் ஏகத்துவத்தைப் பின்பற்றியவர்களாக முடியும்?

அல்லாஹ்வை விடுத்து முஹம்மத் (ஸல்) அவர்களை, முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, அஜ்மீர் காஜா, நாகூர் ஷாஹுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் போன்றோரை அழைப்பது இணை வைப்பாகும். “அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள்; நமது அழைப்பை செவிமடுக்கின்றார்கள்” என்று நம்புவது இறை மறுப்பாகும்.

இத்தகைய இணை வைப்பு, இறை மறுப்பு இரண்டும் அல்லாஹ்வை எதிர்த்துப் போர் புரியும் துணிகரச் செயல்களாகும். இப்படிப்பட்டவர்கள் கொடுக்கும் குர்பானி எப்படி அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும்? ஏனெனில் குர்பானியின் நிபந்தனையே இறையச்சம் தானே!

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன் 22:37)

எனவே குர்பானி மட்டுமல்ல! உங்களுடைய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அனைத்து வணக்கங்களும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இந்த இணை வைப்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையெனில் உங்களது அமல்கள் அனைத்தும் பாழாகிப் போய் விடும்.

“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன் 39:65)

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

(அல்குர்ஆன் 4:48)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதியிழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை

(அல்குர்ஆன் 5:72)

இந்த இணை வைத்தல் பெரும் பாவம் என்பதால் சுவனம் நிரந்தரத் தடையாகி விடும். நரகம் நிரந்தரத் தங்குமிடமாகி விடும். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

ஏகத்துவம் பிப்ரவரி 200