S.M.தமீம் யாசர் (இஸ்லாமிய கல்லூரி மாணவர்)
அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை நமக்கு முன்மாதிரி என்று கூறுகிறான்.
உங்களுக்கு (அதாவது) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவைகளற்றவன்; புகழுக்குரியவன்.
திருக்குர்ஆன் 60:6
மேலும், அவர்களுக்கு பல சிறப்புகளையும் வழங்கியுள்ளான். எந்த அளவிற்கென்றால் இந்த உலகத்தில் வாழ்ந்த மனிதராக இருந்தாலும்,வாழ்கின்ற மனிதராக இருந்தாலும்,இனி வாழ்விருக்கும் மனிதராக இருந்தாலும் ஒட்டுமொத்த மனிதகுலத்திலேயே அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை மட்டும் தான் உற்ற தோழனாக ஆக்கிருக்கிறான்.
தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.
திருக்குர்ஆன் 4:125
இப்படி அவர்களுக்கு பல சிறப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையை நமக்கு பாடமாகவும்,படிப்பினையாகவும் இறைவன் ஆக்கியுள்ளான்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் ஏராளமான படிப்பினைகள் இருக்கிறது. அதில் அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனையைப் பற்றி அல்லாஹ் நமக்கு குர்ஆனில் விவரிக்கிறான்.
அதனை நாம் பார்க்கின்றபொது நம்மை மெய்சிளிர்க்க செய்து சிந்திக்க தூண்டுகிறது.
சிறந்த மனிதராக இருந்தாலும்,அல்லாஹ்வின் தூதராக இருந்தாலும், ஏன் அல்லாஹ்வின் தோழனாகவே இருந்தாலும் மனிதன் என்றாலே அல்லாஹ்வின் அடிமைதான் என்பதை ஒவ்வொரு நேரத்திலும் தெளிவுபடுத்துகிறார்கள்.
உள்ளங்களை புரட்டுபவன் அல்லாஹ் தான். அவன் நாடினால் யாரையும் தடம்புரளச் செய்துவிடுவான் என்பதை உணர்ந்திருந்த இப்ராஹீம (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பல கட்டங்களில் பலவிதமான பிரார்த்தனையை செய்துள்ளார்கள். அவற்றினை ஓவ்வொன்றாக பார்ப்போம்.
சிலை வணக்கத்தை விட்டு பாதுகாப்பு
“இறைவா! இவ்வூரை அபயமளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 14:35
ஏகத்துவத்தின் தந்தையாக திகழும் இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் சிலைவனக்கத்தை செய்தார்களா? சிலை வணக்கத்திற்கு எதிராக அதை எதிர்த்து சமுதயத்தாரிடமும், தந்தையுடனும் கடும் பிரச்சாரத்தினை அறிவுப்பூர்வமாக மேற்கொண்டார்கள். அதை பற்றி அல்லாஹ் நமக்கு பின்வருமாறு கூறுகிறான்.
“நீங்கள் வணங்கும் இந்தச் சிலைகள் என்ன?” என்று அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கேட்ட போது, “எங்கள் முன்னோர்கள் இவற்றை வணங்கக் கண்டோம்” என்று அவர்கள் கூறினர்.
நீங்களும், உங்களின் முன்னோர்களும் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார்.
“நீர் உண்மையைத்தான் கூறுகிறீரா? அல்லது விளையாடுகிறீரா?” என்று அவர்கள் கேட்டனர்.
“அவ்வாறில்லை. வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனே உங்கள் இறைவனாவான். நான் இதற்குச் சாட்சி கூறுபவன்” என்று அவர் கூறினார்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் திரும்பிச் சென்ற பின் உங்கள் சிலைகளை உடைப்பேன்” (என்றும் கூறினார்) அவர்கள் பெரிய சிலையிடம் திரும்ப வர வேண்டும் என்பதற்காக, அவற்றில் அதைத் தவிர மற்றவற்றை அவர் துண்டு துண்டாக்கினார்.
“நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? அவன் அநீதி இழைத்தவன்” என்று அவர்கள் கூறினர். “ஓர் இளைஞர் அவற்றை விமர்சிப்பதைச் செவியுற்றுள்ளோம். அவர் இப்ராஹீம் என்று குறிப்பிடப்படுவார்” எனக் கூறினர்.
“அவரை மக்கள் பார்வைக்கு கொண்டு வாருங்கள்! அவர்கள் சாட்சி கூறட்டும்” என்றனர்.
“இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?” என்று அவர்கள் கேட்டனர்.
அதற்கவர், “இல்லை! அவற்றில் பெரிய சிலையே இதைச் செய்தது. அவை பேசுபவையாக இருந்தால் (உடைக்கப்பட்ட) அவற்றிடமே விசாரித்துக் கொள்ளுங்கள்!” என்று அவர் கூறினார்.
உடனே விழிப்படைந்து “நீங்கள் தாம் (இவற்றை வணங்கியதன் மூலம்) இழைத்தீர்கள்” என்று தமக்குள் பேசிக்கொண்டனர்.
பின்னர் தலைகீழாக அவர்கள் மாறி, “இவை பேசாது என்பதை நீர் அறிவீரே!” என்றனர்.
“அல்லாஹ்வை விடுத்து உங்களுக்கு எந்தப் பயனும் தீங்கும் தராதவற்றை வணங்குகின்றீர்களா?” என்று கேட்டார்.
“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றுக்கும், உங்களுக்கும் கேவலமே! விளங்க மாட்டீர்களா?” (என்றும் கேட்டார்.) “நீங்கள் (ஏதேனும்) செய்வதாக இருந்தால் இவரைத் தீயில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்றனர்.
திருக்குர்ஆன் (21:52-68)
இது போன்று இன்னும் பலவகையில் சிலை வணக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்த இப்ராஹீன் (அலை) அவர்களே, என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள்.
நாம் தான் சத்திய கொள்கையில் இருக்கின்றோமே அதை மக்களுக்கும் எடுத்து சொல்கின்றோமே, நாம் ஏன் அல்லாஹ்விடம் சிலை வழிபாட்டை விட்டு பாதுகாப்பு தேடவேண்டும் என்று அவர்கள் இருக்கவில்லை.
சத்திய பிரச்சாரத்தை செய்யக்கூடிய நானாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அல்லாஹ்வின் கருணையும்,நாட்டமும் இல்லையென்றால் (தீய பாதையில்) இணைவைப்பில் பயணத்தை தொடரும் நிலைதான் ஏற்படும் என்பதை அறிந்திருந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
திருக்குர்ஆன் 39:65,66
எனவே தான் இந்த வசனத்திற்கேற்ப இணைவைத்தால் நல்லறம் அழிந்து விடுமே என அஞ்சி அல்லாஹ்விடம் இப்ராஹீம் நபி அவர்கள் சிலை வணக்கத்தை விட்டு பாதுகாப்பு தேடியுள்ளார்கள்.
இதே போன்று நாமும் அல்லாஹ்விடம் இணைவைப்பை விட்டு பாதுகாப்பு தேடவேண்டும். நாம் தான் இணைவைப்பைவிட்டு ஏகத்துவத்திற்கு வந்துவிட்டோமே என்று அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவதிலிருந்து அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.
கட்டுப்பாட்டை கேட்டல்
இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையை பற்றி மற்றோரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
“எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ (என்றனர்.)
திருக்குர்ஆன் 2:128
இப்ராஹீம்(அலை) அவர்களின் கட்டுப்பாட்டை அல்லாஹ்வே திருமறையில் கூறுகிறான்.
அவரது இறைவன் “கட்டுப்படு!’ என்று அவரிடம் கூறிய போது “அகிலத்தின் இறைவனுக்குக் கட்டுப்பட்டேன்” என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 2:131
அதற்கு அவர்களின் வாழக்கை முழுவதும் நிரம்பியிருக்கிறது.
தனது பிள்ளையை அல்லாஹ் அறுக்க கட்டளையிட்ட போது பலவருடம் பிள்ளை இல்லாமலிருந்து இப்போதுதான் பிள்ளை இருக்கிறது அந்த பிள்ளையையும் அறுக்கவேண்டுமா? என்று யோசிக்காமல், அல்லாஹ்வின் கட்டளை! இதை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று (இப்ராஹீம்) கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று (இஸ்மாயீல்) பதிலளித்தார்.
திருக்குர்ஆன் 37:102
அதே போன்று மகனையும்,மனைவியையும் பாலைவனத்தில் விட்டு வந்தார்கள்.
இப்படி அல்லாஹ்வே சிறப்பித்து கூறும் இப்ராஹீம் நபி அவர்கள் எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராக ஆக்குவாயாக என்று அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
நம்முடைய பார்வையில் அல்லாஹ்வுக்கு கட்டுப்படாமல் இருப்பது என்பது மற்ற மனிதர்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால், அல்லாஹ்வே தேர்வு செய்து தன்னுடைய உற்ற தோழன் என்று கூறியிருக்கும் இப்ராஹீன் நபி அவர்கள் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். ஆனால் இப்ராஹீம் நபி அவர்கள் அல்லாஹ் நாடினாலே தவிர என்னால் கட்டுப்பட்டு இருக்க முடியாது என்பதை இப்பிரார்த்தனை மூலம் நமக்கு பரைசாற்றுகிறார்கள்.
மேலும், அல்லாஹ்விடம் எங்கள் வழிபட்டுமுறைகளை எங்களுக்கு காட்டித்தருவாயாக எங்களை மன்னிப்பாயாக என்றும் பிரார்த்திக்கிறார்கள்.
நாங்கள் எப்படி வணங்க வேண்டும் என்பதை நீ தான் எங்களுக்கு காட்டித்தரவேண்டும். நாங்களாக உன்னை வணங்க முடியாது. நபியாகவே இருந்தாலும் எப்படி வணங்க வேண்டும் என்பதை அல்லாஹ் தான் காட்டித்தரவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறார்கள்.
இன்றைய சமுதாயம் இஸ்லாத்தின் பெயரால் தாங்களாகவே பல வணக்கங்களை உருவாக்கி, அதன் அடிப்படையில் செயல்படுவதை பார்க்கின்றோம். ஆனால் வணக்க முறைகளை நபிமார்கள் கூட கட்டளையிட முடியாது அல்லாஹ்தான் காட்டித்தர வேண்டும். அதைத்தான் இறை தூதர்கள் மக்களுக்கு விளக்குவார்கள் என்பதை இதில் இருந்து அருமையாக விளங்க முடிகிறது.
அடுத்து என்னை மன்னிப்பாயாக என்று கேட்கிறார்கள்.
இன்று பல பாவமான காரியங்களை செய்து விட்டு, அதை தவறு என்று கூட உணராமல் தனது தவறை நியாயப்படுத்துவதை பார்க்கின்றோம்.
இப்படிப்பட்ட மக்கள் மத்தியில் வாழும் நமக்கு இப்ராஹீம் நபியின் இந்த பிரார்த்தனை சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இப்ராஹீம் நபி தனது வாழ்கையில் இணைவைப்பு இல்லாமலும் மானக்கேடான காரியங்கள் இல்லாமலும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவறாகவும் தோழராகவும் இருக்கும் நிலையிலும்
இந்த பிரார்த்தனையை கேட்டு நான் மனிதன் அல்லாஹ்வின் அடிமை என்பதை பிரார்த்தனை மூலம் பிரகடனப் படுத்துகிறார்கள்.
தொழுகையை நிலைநாட்ட பிரார்த்தித்தல்
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!
திருக்குர்ஆன் 14:40
மார்க்கம் பிரச்சாரம் செய்யும் நபர்கள் கூட இன்று தொழுகை போன்ற வணக்க முறைகளில் பின்தங்கி இருப்பதை பார்கின்றோம். ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் வணக்க முறையில் சரியாக இருந்தும் கூட இறைவனிடம் என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக என்று கேட்கிறார்கள்.
இன்று தொழுகை முறையாக இல்லாமல் இருந்தும் தொழுகைக்கு பின்னால் பிரார்த்தனைக்கு கூட நேரம் இல்லை என்று கூறும் இன்றைய இஸ்லாமியர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது இபுராஹீம் நபியின் தொழுகை சார்ந்த பிரார்த்தனை.
எனவே,நாமும் நம்முடைய ஒவ்வொரு செயல்களை பற்றியும் அல்லாஹ்விடம் கையேந்த வேண்டும்.
அதேபோல எங்கே நாம் அல்லாஹ்விடம் கேட்ட பிரார்த்தனை ஏற்கப்படாமல் போய்விடுமோ என்று அஞ்சி இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக என்றும் கேட்டுள்ளார்.
நல்லொழுக்கமுடைய பிள்ளைகளுக்காக பிரார்த்தனை
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)
திருக்குர்ஆன் 37:100
பல அந்தஸ்து உள்ளவர்களின் பிள்ளைகள் கூட நல்லொழுக்கம் இல்லாதவர்களாக இருப்பதை பார்கின்றோம்.
எனவே தான், இப்ராஹீன் நபி அவர்கள், நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக என்று கேட்கிறார்கள்.
இன்னும், நபியாக இருந்தாலும் பிள்ளை பாக்கியத்தை தருவது என்பது அல்லாஹ் தான்.
பிள்ளைகள் கூட நல்லொழுக்கம் உடைய பிள்ளைகளாக இருப்பது என்பது மிகவும் அறிதாகத்தான் காணப்படுகிறது.
நபி நூஹ்(அலை) அவர்கள் நபியாக இருந்தும் அவரது பிள்ளை ஏகத்துவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறிகின்றோம்.
இதன் காரணமாகத் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! என்று கேட்டார்.
நாம் தான் நபியாக இருக்கின்றோமே நமது பிள்ளையை நாமே நல்ல முறையில் வளர்த்து விடலாம் என்று இல்லாமல் அல்லாஹ் நாடினால் தான் நல்ல பிள்ளைகளாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கேட்கிறார்கள்.
நாமும் இது போன்று இறைவனிடம் நல்ல பிள்ளைகளை தருவாயாக, நல்ல பிள்ளைகளாக மாற்றுவாயாக என்று நமது வாரிசுகளுக்காக கேட்க வேண்டும்.
பணியை ஏற்பதற்காகவேடி செய்த பிரார்த்தனை
அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்’ (என்றனர்.)
திருக்குர்ஆன் 2:127
ஒரு காரியத்தை அல்லாஹ்வின் கட்டளை படி நிறைவேற்றிய பின்னர் அந்த காரியத்தை குறித்து, எங்களிடமிருந்து இப்பணியை ஏற்றுக் கொள்வாயாக! என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள்.
நாம் கட்டளையை நிறைவேற்றிவிட்டோம். எனவே நமது கடமை முடிந்து விட்டது என்று சென்று விடாமல், நாம் செய்த இந்த செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா? அதற்காக நமக்கு நன்மை கிடைக்குமா? என்பதை சிந்தித்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
நம்முடைய சமுதாயத்தில் தொழுகை இன்னபிற வணக்க முறைகளை செய்யும் போது பல குறைபாடுகளோடு செய்கிறோம். நாம் செய்த செயல்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டானா? என்பது நமக்கு தெரியாது. அவ்வாறஉ இருந்தும் அது பற்றிய கவலையில்லாமல் இருக்கின்றோம்.
அவ்வாறு இல்லாமல், நமது பணி அல்லாஹ்விடம் ஏற்கப்படுமா? என்பதை கவனத்தில் கொண்டு அதற்காகவும் அல்லாஹ்விடம் கையேந்த வேண்டும்.
சொர்க்கத்தின் வாரிசாக வேண்டி பிரார்த்தனை
இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!
திருக்குர்ஆன் 26:85
நாம் நபியாக இருக்கின்றோம். எனவே சொர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்காமல், இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக! என்று அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் கேட்கிறார்கள்.
இந்த பிரார்த்தணையின் மூலமாகவும் நம்மால் மிக தெளிவாகவும், அழகாகவும் அறிய முடிகிறது நபியாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் தான் சொர்க்கத்தின் வாரிசாக ஆக்கும் என்று.
அன்பார்ந்த அல்லாஹ்வின் அடியார்களே! இனி வரக்கூடிய காலங்களில் இப்ராஹீன் நபியின் இந்த வரலாற்று படிப்பினையைப் பெற்று பிரார்த்தனையினஅ முக்கியத்துவத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் அதிமதிகமாக பிரார்த்தனை செய்ய கூடிய நன்மக்களாக நாம் இருக்க வேண்டும்.
சொர்க்கத்தின் வாரிசுகளில் நம்மையும் ஒருவராக அல்லாஹ் ஆக்குவானாக!