எலிக்கறி சாப்பிடலாமா?

எலிக்கறி சாப்பிடலாமா?

எலிக்கறி சாப்பிடலாமா? கூடாதா? என்பது தொடர்பாக தற்போது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது

எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் வேட்டையாடும் நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3914)

ஒன்றை உண்பது ஹலாலா? ஹராமா? என முடிவு செய்வதற்கு இந்த இரண்டு மட்டுமே அளவுகோலாக சொல்லப்பட்டிருந்தால் ”எலி கறி ” சாப்பிடலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இது அல்லாத பல்வேறு அளவுகோல்கள் திருமறைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளது.

எலிக் கறியைப் பொருத்தவரை அதற்கு அனுமதியில்லை என முடிவு செய்வதற்கு போதுமான சான்றுகள் நபிமொழிகளில் உள்ளன.

1828- حَدَّثَنَا أَصْبَغُ قَالَ : أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ عَنْ يُونُسَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَالِمٍ قَالَ : قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ حَفْصَةُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : خَمْسٌ مِنَ الدَّوَابِّ لاَ حَرَجَ عَلَى مَنْ قَتَلَهُنَّ الْغُرَابُ وَالْحِدَأَةُ وَالْفَأْرَةُ وَالْعَقْرَبُ وَالْكَلْبُ الْعَقُورُ.

ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி (1826, 1827, 1828 & 1829)

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَائِشَةَ – رضى الله عنها – عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِى الْحِلِّ وَالْحَرَمِ الْحَيَّةُ وَالْغُرَابُ الأَبْقَعُ وَالْفَارَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْحُدَيَّا ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, வயிற்றுப் பகுதியிலும், மேற்பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 2254

சில அறிவிப்புகளில் ”குராப்” (காகம்) என்று பொதுவாக கூறப்பட்டிருந்தாலும் மேலும் சில அறிவிப்புகளில் ” அல்குராபுல் அப்கஃ” (வயிற்றிலும் மேற்பகுதியிலும் வெண்ணிறம் கொண்ட காகம்) என தெளிவு படுத்தி வந்துள்ளது. எனவே இந்த குறிப்பிட்ட வகை காகம் மட்டுமே கொல்லப்படவேண்டியதாகும்.

மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளிலும் பாம்பு, வயிற்றுப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து , தேள் ஆகிய உயிரினங்கள் புனித எல்லைக்குள்ளும் , வெளியிலும் கொல்லப்பட வேண்டியவை எனக் கூறப்பட்டுள்ளது.

இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ளவர்களே இவற்றைக் கொல்ல வேண்டும் எனும் போது இஹ்ராம் அணியாதவர்கள் இவற்றைக் கொல்லலாமா? கூடாதா? என்ற கேள்விக்கே இடமில்லை. இரண்டு நிலைகளிலும் உள்ளவர்கள் இந்த உயிரினங்களைக் கொல்ல வேண்டும் என்பது தெளிவாகிறது.

இந்த ஹதீஸ் எலியை உண்பது கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.

கொல்லப்பட வேண்டும் என மார்க்கம் கட்டளையிட்டவை உண்பதற்கும் தடை செய்யப்பட்டவை ஆகும்.

குர்ஆனிலும் சுன்னாவிலும் எவையெல்லாம் கொல்லப்பட வேண்டியவை என்றும், கொல்லப்படக் கூடாது என்றும் தடைசெய்யப்பட்டுள்ளதோ அவை உண்பதற்கும் தடை செய்யப்பட்டவை ஆகும்.

தவளையை நபி (ஸல்) அவர்கள் கொல்லக் கூடாது என்று தடை செய்துள்ளார்கள். எனவே அவற்றை உண்பதும் கூடாது. ஏனெனில் சாப்பிடுவதற்காக மார்க்கம் அனுமதித்த முறைப்படி அறுத்தாலோ அல்லது எம்முறையில் கொன்றாலும் அவை உயிர் நீக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதிலிருந்தே கொல்லப்படக் கூடாது என்று தடுக்கப்பட்டால் அவை உண்பதற்கும் தடுக்கப்பட்டவை ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் கொல்லக் கூடாது என்று தடுத்திருப்பதில் நாம் அறிந்தது உட்பட அறியாத பல காரணங்களும் இருக்கலாம். எனவே இது மட்டும்தான் காரணம் என்பதை நாம் உறுதி செய்ய இயலாது.

அது போன்று கொல்லுங்கள் என்று உத்தரவிட்டவற்றையும் உண்பது கூடாது.

நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் பாம்பு, பருந்து, காகம், தேள் , எலி, வெறிநாய் ஆகியவற்றைக் கொல்லுங்கள் என்று நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். கொல்லுங்கள் என்ற கட்டளையில் உண்ணக் கூடாது என்ற கட்டளையும் உள்ளடங்கியுள்ளது.

கொல்லுதல் என்பது இரண்டு வகைப்படும்.

ஒன்று : உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி கூர்மையான கருவியால் அறுத்தல், அது போன்று உண்பதற்காக வேட்டையாடப்படும் பிராணியை மார்க்கம் கற்றுத் தந்த முறைப்படி வேட்டையாடுதல். இம்முறையில் கொல்லப்படுபவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை ஆகும். இதற்கு ”தப்ஹ்” (ذبح)எனப்படும்.
இரண்டு : அடித்தோ, வெட்டியோ, நசுக்கியோ, மிதித்தோ, எரித்தோ மொத்தத்தில் உண்பதற்காக வரையறுக்கப்பட்ட கொல்லும் முறை அல்லாமல் எம்முறையிலும் கொல்லுதல். இதற்கு ”கத்ல்” ((قتل எனப்படும்.
இவ்வாறு கொல்லப்படுபவை அனைத்தும் உண்பதற்கு தடைசெய்யப்பட்டவை ஆகும்.

இவ்வாறு இரண்டு முறைகள் உள்ளன என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே, கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.

அறிவிப்பவர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3955)

மேற்கண்ட நபி மொழியில் ”கொல்லுதல்” என்பதற்கு ”கத்ல்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது உண்பதற்கான பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும்,வேட்டையாட வேண்டும் என்று மார்க்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதோ அது அல்லாத முறைகளில் கொல்லப்பட்டவைகளைக் குறிக்கும்.
”அறுத்தல்” என்பதற்கு ”தப்ஹ்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது உண்பதற்கான பிராணிகளை எவ்வாறு அறுக்க வேண்டும்,வேட்டையாட வேண்டும் என்று மார்க்கம் வரையறுத்துள்ளதோ அதற்கு உட்பட்டு கொல்லப்பட்டவைகளைக் குறிப்பதாகும்.

எவ்வாறு கொன்றால் சாப்பிடலாம் என்று மார்க்கம் வரையறுத்து தந்துள்ளதோ அந்த அடிப்படைகளைத் தாண்டி கொல்லப்படுபவை அனைத்துமே ஹராம் ஆகும். இதனை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.)

(அல்குர்ஆன் 5 : 3)

மேற்கண்ட வசனத்தில் வரையறுத்த முறையைத் தாண்டி கொல்லப்பட்ட உயிரிழந்த அனைத்துப் பிராணிகளும் ஹராம் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

அறுக்கப்பட்டதா? கொல்லப்பட்டதா? எனச் சந்தேகம் வந்தால் கூட அவற்றை உண்பது ஹராம் ஆகும்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் ; புகாரி (2054)

வேட்டையாடும் போது அம்பையோ ஈட்டியையோ அல்லாஹ்வின் பெயர் கூறி எறியும் போது அதன் கூர்மையான பகுதி தாக்கினால்தான் அது அறுக்கப்ப்பட்டது. உண்பதற்கு ஹலாலானது. அல்லாஹ்வின் பெயர் கூறியே எறிப்பட்டாலும் அதன் கூர்மையான பகுதியால் தாக்கப்படாமல் அந்த ஈட்டி அல்லது அம்பு அதன் மீது விழுந்ததினால் அது செத்துப் போனால் அது அடித்துக் கொல்லப்பட்டது. அதை உண்பது ஹராம் ஆகும்.
”தீங்கிழைக்கும் ஐந்து உயிரினங்களைக் கொல்ல வேண்டும்” என்ற நபிமொழியில் இடம் பெறும் ”கத்ல்” என்ற வார்த்தை வரையறுக்கப்பட்ட முறையைத்தாண்டி கொல்லப்படுதல் என்ற பொருளில்தான் இந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.

இஹ்ராமுடைய நிலையில் உள்ளவர்கள் உணவிற்காக தரையில் வேட்டையாடுவது ஹராம் ஆகும். ஒரு பிராணியை வேட்டையாடி சாப்பிட வேண்டுமென்றால் அது மார்க்கம் குறிப்பிட்ட முறையில் வேட்டையாடப்பட்டிருக்க வேண்டும்.
”தீங்கிழைக்கக் கூடிய ஜந்து உயிரினங்களை இஹ்ராம் நிலையில் உள்ளவர்களும் கொல்லலாம்” என்றால் அது உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினம் இல்லை என்பது தெளிவாகிறது.
அது போன்று ”இஹ்ராமுடைய நிலையில் உள்ளவர்களும் கொல்லுங்கள்” என்று கட்டளையிடுவதின் மூலம் அடித்தோ, வெட்டியோ, நசுக்கியோ கொல்லும் முறையைத்தான் நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள் .

பின்வரும் செய்தியிலிருந்தும் அதனை அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இஹ்ராம் கட்டிய ஒருவர் எந்த உயிரினங்களைக் கொல்லலாம்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் “வெறிநாய், எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவற்றைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுவந்தார்கள்’ என்று என்னிடம் கூறினார்” என்றார்கள். இவற்றை ஒருவர் தொழுகையில் இருக்கும்போதும் கொல்லலாம் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் (2262)

தொழுகையில் இருக்கும் போதும் இந்த ஐந்து உயிரினங்களைக் கொல்லலாம் என்று இப்னு உமரின் இந்த செய்தி குறிப்பிடுகிறது.
ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது பாம்போ, தேளோ வரும் என்றால் எப்படிக் கொன்றால் அது சீக்கிரம் சாகுமோ அந்த முறையில்தான் அதனைக் கொல்வார். அதனைப் பிடித்து பிஸ்மி கூறி கூர்மையான கருவியால் அறுத்துக் கொண்டிருக்கமாட்டார்.

இவ்வாறு ”உண்பதற்காக வரையறுக்கப்பட்ட முறையைத் தாண்டி” வேறு முறைகளில் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டால் அவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை இல்லை என்பைதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
இதிலிருந்து எலியை உண்பது அனுமதியல்ல என்பது தெளிவாகிறது.

எலியை உண்பது ஹலாலாக இருக்குமென்றால் உண்ணத் தக்க ஒன்றை கொல்லுமாறு நபியவர்கள் கட்டளையிடுவார்களா?

எலி உண்ணத் தக்க பிராணி என்று வாதிப்பவர்கள் அதை பண்ணை வைத்து வளர்ப்பது ஹலால் என்று ஃபத்வா கொடுப்பார்களா?

நபி (ஸல்) அவர்கள் கொல்லுங்கள் என்றோ , கொல்ல வேண்டாம் என்றோ தடை செய்தவை தவிர மற்ற பிராணிகளைப் பொறுத்த வரை அவை வேறு வகையில் உண்பதற்கு தடை செய்யப்பட்ட வரையறைக்குள் வரவில்லையென்றால் அவை ஹலாலானவை ஆகும்.

தீங்கு தரக் கூடியவற்றை உண்பது ஹராம் ஆகும்.

எலி, பருந்து, காகம், தேள், வெறிநாய், பாம்பு ஆகியவற்றை ”ஃபவாஸிக்” தீங்கு இழைக்கக் கூடியவை என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

”ஃபாஸிக்” என்றால் ”வெளியேறக் கூடியவன்” என்று பொருளாகும். இதனுடைய பெண்பால் ஒருமை ”ஃபாஸிகா” என்பதாகும். இதன் பொருள் ”வெளியேறக் கூடியவள்” என்பதாகும். இந்த ”ஃபாஸிகா” என்பதின் பன்மைச் சொல்தான் ”ஃபவாஸிக்” என்பதாகும். ”வெளியேறக்கூடிய பெண்கள்” என்பது இதன் பொருளாகும்.

பாவம் செய்யக் கூடியவர்கள் இறைவனின் கட்டளையை விட்டும் வெளியேறுவதால் அவர்கள் ”ஃபாஸிக்” பாவி என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறார்கள்.

ஓரினச் சேர்க்கை எனும் கேடான, அசிங்கமான செயலைச் செய்த லூத் சமுதாயத்தவர்களை திருமறைக் குர்ஆன் பாவிகள் என்று குறிப்பிடுகிறது.

{ وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَاهُ مِنَ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ تَعْمَلُ الْخَبَائِثَ إِنَّهُمْ كَانُوا قَوْمَ سَوْءٍ فَاسِقِينَ} [الأنبياء: 74]

லூத்துக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். அசிங்கமான காரியங்களைச் செய்து வந்த கிராமத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். அவர்கள் கெட்ட கூட்டமாகவும், பாவிகளாகவும் இருந்தனர்.

(அல்குர்ஆன் 21 : 74)

மேற்கண்ட வசனத்தில் ”அசிங்கமான காரியங்கள்” என்பதற்கு ”ஹபாயிஸ்” என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இறைவன் தடுத்த கேடான காரியங்களைச் செய்யும் மனிதர்களுக்கு பாவிகள் என்று கூறப்படுகிறது.
அந்த வார்த்தையை இரவலாகப் பெற்று கேடுவிளைவிக்கும் காரியங்களைச் செய்யும் உயிரினங்களுக்கு ஃபவாஸிக் என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

وإنما سميت هذه الحيوانات فَوَاسِقَ على الإستعارة لخبثهن -لسان العرب (10/ 308

இந்த உயிரினங்களின் கேடுகளினால் ஃபவாஸிக் என்ற வார்த்தையை இரவலாகப் பெற்று அவற்றுக்கு (ஃபவாஸிக் என்று) பெயரிடப்பட்டுள்ளது.

(லிஸானுல் அரப் பாகம் 10 பக்கம் 308)

ஃபவாஸிக் என்றால் பாவிகள் என்று பொருள். மேற்கண்ட உயிரினங்கள் மனித குலத்திற்கு கேடு உண்டாக்குவதினால் அந்த வார்த்தை மூலம் இந்த உயிரினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஐந்து உயிரினங்களும் கேடு தரக் கூடியவை என்பது தெளிவாகிவிட்டது.

ஒன்றை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கேடு தரக் கூடியவை என்று குறிப்பிட்டுவிட்டால் அவை உண்பதற்கும் ஹராமாகிவிடும்.

நபியவர்களைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

{وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ } [الأعراف: 157]

தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். கேடுதரக்கூடியவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார்.

அல்குர்ஆன் 7 : 157

அல்லாஹ்வும் , அவனது தூதரும் எவற்றையெல்லாம் கேடுதரக் கூடியவை என்று குறிப்பிட்டு விட்டார்களோ அவை அனைத்துமே தடை செய்யப்பட்டவை ஆகும்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு செயலை கேடு தரக் கூடியது என்றோ அசிங்கமானது என்றோ குறிப்பிட்டால் அந்தச் செயலை செய்வது ஹராம் ஆகும்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு உயிரினத்தை கேடுதரக் கூடியது என்று குறிப்பிட்டால் அவற்றை உண்பது ஹராம் ஆகும்.

கேடு தரக் கூடியவை என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டு விட்டாலே அவை தடை செய்யப்பட்டவைதான். எந்த வகையான கேடு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

பல்லியைச் சாப்பிடலாமா?

. மேற்கண்ட உயிரினங்களை ”தீங்கு இழைக்கக் கூடியது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்றே பல்லியையும் தீங்கு இழைக்கக் கூடியது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் ; முஸ்லிம் (4507)

மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் பல்லியைக் கொல்வதற்கு மார்க்கம் அதிகம் ஆர்வமூட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4510)

பல்லியை கோரைப் பல் இல்லாத காரணத்தினால் உண்ணலாம் என எவ்வாறு வாதிட முடியாதோ அது போன்று எலியையும் வாதிட முடியாது.

குறுக்கு விசாரணையும் விளக்கமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரி (3316)

மேற்கண்ட செய்தியில் ” தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.” என்று நபி (ஸல்) கூறியதாக வந்துள்ளது.
இதன் அடிப்படையில் எலியினால் ஏற்படும் தீங்கு என்பது தீவிபத்து மட்டும்தான். அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எலிகறியை உண்பதினால் தீங்கு ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. என எலி கறி சாப்பிடலாம் என சிலர் வாதம் வைக்கின்றனர்.

ஆனால் இந்த வாதம் மிகவும் பிழையானதாகும். ஏனெனில் எலியினால் ஏற்படும் பல கேடுகளில் ஒன்றைத்தான் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்களே தவிர தீவிபத்து ஏற்படுத்துவது மட்டும்தான் எலியினால் ஏற்படும் கேடு என்று கூறவில்லை.

”தீயவர்கள் கொலை செய்வார்கள்” என்றால் தீயவர்களின் பல பண்புகளில் கொலை செய்வதும் ஒன்று என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். தீயவர்கள் கொலையை தவிர வேறு எந்த பாவத்தையும் செய்யவேமாட்டார்கள் என்ற கருத்தை இந்த வாசகம் தராது. அப்படி யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.

அது போன்றுதான் ”தீங்கிழைக்கக் கூடியது திரியை இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடும்” என்றால் கேடுவிளைவிக்கும் எலி இந்தக் கேட்டை செய்து விடும் என்றுதான் புரிந்து கொள்ள இயலுமே தவிர இதைத் தவிர வேறு எந்த கேட்டையும் விளைவிக்காது என்று புரிந்து கொள்ள முடியாது.

அதுமட்டுமல்ல தீவிபத்து ஏற்படுவது மட்டும்தான் எலியினால் ஏற்படும் கேடு என்றால் எதற்காக புனித எல்லைக்குள்ளும், புனித எல்லைக்கு வெளியில் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட வேண்டும். தீவிபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிலாமே.

அனைத்து இடங்களிலும் எலியைக் கொல்லச் சொல்வதிலிருந்தே அதனால் பலவிதமான கேடுகள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இயலும்.

எலி விளை நிலங்களில் பயிர்களின் விளைச்சலை நாசமாக்கிவிடுகிறது. உணவு தானியங்களை தின்று தீர்த்துவிடுகிறது. அது போன்று எலியினால் பல்வேறு நோய்கிருமிகள் பரவி மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இது போன்ற ஏரளாமான கேடுகள் மனிதர்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. எனவே தீ விபத்தை தவிர வேறு எந்தக் கேடுகளும் எலிகளால் ஏற்படாது என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

எலியினால் தீ விபத்து ஏற்படும் என்ற காரணத்தினால்தான் அதற்கு ”தீங்கிழைக்கக் கூடியது” என பெயர் சூட்டப்பட்டதாக பின்வரும் செய்தியில் இடம் பெற்றுள்ளது.

யஸீத் இப்னு அபீ நுஐம் அவர்கள் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் ”எதற்காக எலிக்கு ஃபுவைசிகா (தீங்கிழைக்கக்கூடியது) என்று பெயர்வைக்கப்பட்டது? அவர்கள் அபூ ஸயீத் (ரலி) கூறினார்கள்.
ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை வீட்டோடு எரிப்பதற்காக விளக்கின் திரியை இழுத்துச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் அதன் பக்கம் எழுந்து சென்று அதைக் கொன்றார்கள். இஹ்ராம் அணிந்தவர் அணியாதவர் அனைவரும் அதைக் கொல்வதற்கு அனுமதியளித்தார்கள்.

நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார் (பாகம் 2 பக்கம் 166)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எலி திரியை இழுத்துச் சென்று வீட்டை எரிக்க முனைந்ததால் அதைக் கொல்ல உத்தரவிட்டார்கள் என்பதுதான் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நபி காலத்தில் நடந்ததாக அவர்கள் கூறும் செய்தியில் உள்ள கருத்தாகும். இதற்காகத்தான் அதற்கு ஃபுவைசிக்கா எனப் பெயரிடப்பட்டது என்பது இதிலிருந்து அபூ ஸயீத் (ரலி) அவர்கள் சுயமாக விளங்கிக் கூறியதாகும் . ஏனெனில் எலியினால் தீவிபத்து ஏற்படுத்தவதினால்தான் அதற்கு நபி (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கக்கூடியது எனப் பெயரிட்டதாக அபூ ஸயீத் (ரலி) குறிப்பிடவில்லை.

மேலும் இந்தச் செய்தி அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “யஸீத் இப்னு அபீ ஸியாத் ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை அஹ்மத் பின் ஹன்பல், அலீ இப்னுல் மதீனி, இஜ்லி உட்பட அதிகமானோர் பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர். எனவே இதனை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள இயலாத.

”பிஸ்க்” என்பதினால் எலி ஹராம் ஆகுமா?

எலியை உண்பது ஹராம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிலர்
குர்ஆனில் தடைசெய்யப்பட்ட உணவுகள் “ஃபிஸ்க்” என்று கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து தோன்றிய “ஃபவாஸிக்“ என்ற வார்த்தையினால் எலி, காகம், பருந்து, பாம்பு, தேள், வெறிநாய் ஆகியவை கூறப்பட்டுள்ளது. இதனால்தான் ஹதீஸில் கூறப்பட்டவை ஹராமாகிறது என்று சிலர் வாதம் வைக்கின்றனர்.

“ஃபிஸ்க்“ என்று வரும் குர்ஆன் வசனங்களைக் காண்போம்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.

(அல்குர்ஆன் 5 : 3)

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும்.

(அல்குர்ஆன் 6 : 121)

“தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 6 : 145)

மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் தடை செய்தவற்றை உண்பது பாவம் என்று கூறப்பட்டுள்ளது. பாவம் என்பதற்கு “ஃபிஸ்க்” என்ற வார்த்தை வந்துள்ளது.

“ஃபிஸ்க்“ என்றால் “இறைக்கட்டளையை மீறுதல், இறைவனுக்கு மாறு செய்தல்“ என்ற பொருளில் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன் தடை செய்தவற்றை உண்பதினால் மனிதன் இறைவனுக்கு மாறு செய்கின்ற பாவத்தைப் பற்றி குர்ஆன் வசனங்கள் பேசுகிறது.

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட ஆட்டை உண்பதினால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படப்போவதில்லை. ஆனால் 6 : 121 வது வசனத்தில் அல்லாஹ் அதனை உண்பது “பிஸ்க்” என்கிறான்.

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுப்பது பாவம் என்பதினால்தான் அல்லாஹ் அதை உண்பதை “ஃபிஸ்க்“ என்று கூறுகிறான். இதிலிருந்தே குர்ஆன் வசனங்கள் “பிஸ்க்” என்று கூறுவது இறைக்கட்ளையை மீறுவதைத்தான் என்பது தெளிவாகிறது.

எலி, காகம்,பாம்பு, தேள், வெறிநாய், பருந்து ஆகியவை மனிதனுக்கு தீங்கு செய்பவை என்பது பற்றி ஹதீஸ் பேசுகிறது.

வசனங்களில் கூறப்பட்டிருப்பது போன்று “எலியை உண்பது ஃபிஸ்க் (பாவம்)“ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டிருந்தால் இவர்கள் ஃபிஸ்க் என்ற வார்த்தையின் மூலம் எலியை உண்பது ஹராம் என்று கூறுவது பொருத்தமான வாதமாகும்.

ஆனால் எலியானது “பாஸிக்“ (தீங்கு தரக்கூடியது) என்ற பொருளில்தான் ஹதீஸ்களில் வந்துள்ளது.

இவ்வாறு இருக்கையில் குர்ஆனில் “பிஸ்க்“ என்று வந்துள்ளது. எலி “ஃபாஸிக்“ என்று கூறப்பட்டுள்ளது. எனவே எலி ஹராம் என்று கூறுவது பொருந்தா விளக்கம் ஆகும்.

ஹராமாக்கப்பட்டவைகள் என்ற பட்டியலில்தான் குர்ஆனில் கூறப்பட்டவைகளும், இந்த ஹதீஸில் கூறப்பட்டவைகளும் ஒன்று சேர்கிறதே தவிர “ஃபிஸ்க்” என்ற வார்த்தையின் அடிப்படையில் அவை ஒன்று சேரவில்லை.

அன்னை ஆயிஷா (ரலி) எப்படி முடிவு செய்தார்?

سنن البيهقي الكبرى (9/ 317)
19153 – وأخبرنا أبو عبد الله الحافظ أنبا عبد الله بن جعفر بن درستويه الفارسي ثنا يعقوب بن سفيان الفارسي ثنا إسماعيل بن أبي أويس حدثني أبي عن يحيى بن سعيد عن عمرة بنت عبد الرحمن وعن هشام بن عروة عن عروة عن عائشة رضي الله عنها أنها قالت : إني لأعجب ممن يأكل الغراب وقد أذن رسول الله صلى الله عليه و سلم في قتله للمحرم وسماه فاسقا والله ما هو من الطيبات

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : காகத்தை உண்பவர்களை (எண்ணி) நான் ஆச்சரியப்படுகிறேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமில் உள்ளவருக்கு அதைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கு “ஃபாஸிக்“ தீங்கிழைக்கக்கூடியது என்று பெயரிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது ”தூய்மையானவைகளில்” உள்ளது அல்ல.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : பைஹகி

இதன் அறிவிப்பாளர் தொடரில் ”அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உவைஸ்“ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

யஹ்யா இப்னு முயீன், அம்ருப்னு அலீ, அலி இப்னுல் மதீனி, நஸாயீ, அபூ சுர்ஆ, அபூ ஹாதிம் போன்ற பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டு்ளளனர். (தஹ்தீபுல் கமால்)

ஒரு வாதத்திற்கு இதை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் “ஃபிஸ்க்” என்ற வார்த்தையை வைத்து அன்னை ஆயிஸா (ரலி) தீர்மானித்ததாக இச்செய்தியில் வரவில்லை.

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு உயிரினத்தை கேடுதரக் கூடியது என்று குறிப்பிட்டால் அவற்றை உண்பது ஹராம் ஆகும். இதன் அடிப்படையில்தான் “ஃபாஸிக்“ என்ற வார்த்தையை வைத்து “தூய்மையற்றவை“ என்பதை முடிவு செய்து அதன் அடிப்படையில்தான் உண்ணக்கூடாது என அன்னை ஆயிஷா (ரலி) தீர்மானித்துள்ளார்கள்.

இது தொடர்பாக நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.

அது போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் இதே போன்று கூறியதாக இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது.

سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 394)
3248- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ ، حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : مَنْ يَأْكُلُ الْغُرَابَ ؟ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : فَاسِقًا ، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ.

இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஷரீக்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஏராளமான அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 394)
3249- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : الْحَيَّةُ فَاسِقَةٌ ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ ، وَالْغُرَابُ فَاسِقٌ. فَقِيلَ لِلْقَاسِمِ : أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ : مَنْ يَأْكُلُهُ ؟ بَعْدَ قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ فَاسِقًا.

காசிம் இப்னு முஹம்மது இப்னு அபீ பக்ர் எ்னபாரிடம் ”காகத்தை சாப்பிடலாமா?” எனக் கேட்க்கப்பட்ட போது “நபியவர்கள் “ஃபாஸிக்“ என்று கூறிய பிறகு அதை யார் சாப்பிடுவார்?“ என்று கூறியதாக இப்னு மாஜாவில் இடம் பெறும் அறிவிப்பும் பலவீனமானதாகும்.
இந்த அறிவிப்பில் “மஸ்வூதி“ என்பார் மூளை குழம்பியவர் ஆவார். இவரிடம் இருந்து அறிவிக்கும் “முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஸன்னா அல்அன்சாரி“ என்பார் “மஸ்வூதி“ என்பாரிடமிருந்து அவர் மூளை குழம்புவதற்கு முன்னால் கேட்டாரா? பின்பு கேட்டாரா? என்பதை முடிவு செய்வதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை.
காசிம் என்பாரின் சொந்தக் கருத்தாக வரும் சில அறிவிப்புகள் சரியாக உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அவர் “ஃபிஸ்க்“ என்ற வார்த்தையை வைத்து ஆய்வு செய்ததாக குறிப்பிடவில்லை. “ஃபாஸிக்“ என்ற வார்த்தையை வைத்து முடிவு செய்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார்.

இஹ்ராம் அணிந்தவர் கொல்லலாம் என்பதில் பெறப்படும் விளக்கம்

இஹ்ராம் அணிந்த ஒருவர் தரையில் உணவிற்காக வேட்டையாடுவது ஹராம் ஆகும்.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும்போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்!

(அல்குர்ஆன் 5 : 95)

இஹ்ராமுடன் இருக்கும்போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன் 5 : 96)

மேற்கண்ட வசனங்களில் உண்பதற்கு தகுதியான பிராணிகளைத்தான் வேட்டைப் பிராணிகள் என்று கூறப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் உள்ளவர்கள் உணவுக்காக வேட்டைப் பிராணிகளைக் கொல்வதும், தரையில் வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ளவர் ஹதீஸ்களில் குறிப்பிடப்படும் உயிரினங்களைக் கொல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்களாக இருந்தால் நபியவர்கள் அவற்றைக் கொல்வதற்கு அனுமதி வழங்கியிருப்பார்களா?

இதிலிருந்தும் எலி என்பது உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். (6 : 119)