பின்பற்ற முடியாததா நபியின் வாழ்க்கை?

மகரந்தச் சேர்க்கையும்  மாநபி வாழ்க்கையும்

பின்பற்ற முடியாததா நபியின் வாழ்க்கை?

சென்ற இதழின் தொடர்ச்சி…

கே.எம். அப்துந் நாசிர்

சிலர் நபியவர்களின் வாழ்க்கையை உலக விஷயம், மார்க்க விஷயம் என்று பிரித்துப் பார்ப்பது கூடாது. நபியவர்கள் செய்த அனைத்தையும் பின்பற்றுவது தான் மார்க்கக் கடமை என்று கூறுகின்றனர்.

அதாவது நபியவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்துள்ளதால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத்து தான்.

நபியவர்கள் கோதுமை சாப்பிட்டுள்ளார்கள் என்று எண்ணி நாமும் கோதுமை மட்டும் சாப்பிடுவதும் சுன்னத்து தான்.

நபியவர்கள் இரத்தக் காயத்திற்கு சாம்பலைப் பூசினார்கள் என்றால் நாம் அவ்வாறு செய்வது சுன்னத்து தான் என்று வாதிக்கின்றனர்.

இவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் உள்ளனர் என்பதற்கு மேற்கண்ட அவர்களின் கூற்றே சான்றாகும்.

நபியவர்கள் மார்க்க அடிப்படையில் ஒன்றைச் செய்தால் அதற்கு மாற்றமாகச் செய்வது பித்அத் ஆகும். பித்அத்கள் அனைத்தும் வழிகேடு. வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்று நபியவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

லுஹர் தொழுகையை நபியவர்கள் நான்கு ரக்அத் தொழுது காட்டினால் நாம் ஐந்தாகத் தொழுதாலும் மூன்றாகத் தொழுதாலும் அது தொழுகையாகாது. மார்க்கத்தை மாற்றும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஒருவன் லுஹர் தொழுகை மூன்று ரக்அத் என்று மாற்றினால் அவன் வழிகேடன் ஆவான்.

ஒட்டகத்தில் செல்வது மார்க்கம் என்றால் அது அல்லாத வேறு வாகனங்களைப் பயன்படுத்துவது பித்அத் ஆகும். எனவே தற்போது உலக முஸ்லிம்களில் 95 சதவிகிதம் பேர் நரகவாசிகள், பித்அத் செய்பவர்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

ஹஜ்ஜுக்குச் செல்லும் போது ஒட்டகத்தில் தான் செல்ல வேண்டும் என்று கூறுவார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் கால கட்டத்திலேயே அல்லாஹ் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் நபியவர்களுக்குப் பின்னால் எந்த ஒன்றும் மார்க்கச் சட்டம் ஆகமுடியாது. நபியவர்களுக்குத் தெரியாத மார்க்க விஷயம் ஒன்றும் இஸ்லாத்தில் கிடையாது.

அதே நேரத்தில் நபியவர்களுக்குத் தெரியாத பல வாகனங்கள் இன்றைக்கு உலகத்தில் உள்ளன. விமானம், பேருந்து, கார், பைக், சைக்கிள், ஆட்டோ என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒட்டகத்தில் செல்வதும் மார்க்க விஷயம் என்றால் நபியவர்களுக்குத் தெரியாத பல வாகனங்கள் இன்று உலகத்தில் தோன்றியுள்ளதே! முஸ்லிம்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்களே!

அப்படியென்றால் இஸ்லாமிய மார்க்கம்  நபியவர்கள் காலத்தோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்ற இறை வசனத்தின் பொருள் தான் என்ன?

மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டேன் என்று உரைக்கும் திருமறைக் குர்ஆன் வாகனங்களில் நபியவர்கள் காலத்தில் இல்லாத புதியவைகளும் பின்னால் உருவாகும் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளது.

குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.

அல்குர்ஆன் 16:8

உலக விஷயம் வேறு; மார்க்க விஷயம் வேறு!

மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது; உலகம் புதுமை அடையும்.

மார்க்கத்தில் நபியவர்களுக்குத் தெரியாதது கிடையாது; உலகத்தில் நபியவர்களுக்குத் தெரியாத பல விஷயங்களை நாம் அடைந்துள்ளோம்.

மேற்கண்ட வசனத்திலிருந்து இந்த விஷயங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபியவர்கள் வாழும் காலகட்டத்தில் மனிதன் என்ற அடிப்படையிலும், அன்றைய கால மக்களின் உலகப் பழக்க வழக்கங்கள் அடிப்படையிலும் செய்த காரியங்கள் மார்க்கம் என்று கூறினால் இஸ்லாம் பின்பற்ற முடியாத மார்க்கமாகவும். நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரியற்ற வாழ்க்கையாகவும் ஆகிவிடும். இதைக் கூட இவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.

இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் வசதியான வீடுகளில் வசிக்கின்றனர். ஏசி, வாஷிங் மிஷின், ஏர்கண்டிஷனர், மின்விசிறி போன்ற வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். விபத்துகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்களையும், வசதிகளையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் நபியவர்கள் கூரை வீட்டில்தான் வசித்துள்ளார்கள். நபியவர்கள் இரத்தக் காயங்களுக்கு சாம்பலைத் தான் பூசியுள்ளார்கள். இவ்வாறு தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறினால் இன்றைய உலகில் ஒரு சதவிகிதம் மக்கள் கூட இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாது. நபிகள் நாயகத்தை முன்மாதிரியாகக் கொள்ள முடியாது. இதைக் கூட விளங்காதவர்களாகத் தான் இந்த ஆலிம்கள் உள்ளனர்.

உடும்புக் கறியும் உண்மை விளக்கமும்

நபியவர்கள் வெறுத்ததை நாமும் வெறுக்க வேண்டும் என்பது தான் மார்க்கச் சட்டம். ஆனால் அதே சமயம் நபியவர்கள் வெறுத்த ஒன்று இறைச் செய்தியின் அடிப்படையில் வெறுத்ததாக இருக்க வேண்டும்.

அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் வெறுத்ததையும் நாம் மார்க்கம் என்று கருதி வெறுத்தால் இறைவன் ஹலாலாக்கிய ஒன்றை ஹராமாக்கிய மிகப்பெரும் பாவத்தில் வீழ்ந்து விடுவோம். இதனைப் பின்வரும் செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது “இது உடும்பு இறைச்சிஎன்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இது ஹராமா?” எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லைஎன்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 5391, 5400, 5537

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை. எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.

நபியவர்கள் வெறுத்ததை நாம் வெறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் யாராவது உடும்புக் கறி ஹராம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? அப்படி வழங்கினால் அவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியுமா?

நபியவர்கள் உடும்பு இறச்சியை வஹீ அடிப்படையில் சாப்பிடாமல் இருந்திருந்தால் அது ஹராம். நாம் அதைச் சாப்பிடுவதும் ஹராம்.

நபியவர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற அடிப்படையில் சாப்பிடாமல் இருந்ததால் அது வஹீ அடிப்படையில் உள்ளது அல்ல.

இதன் காரணமாகத் தான் நபியவர்கள் சாப்பிடாவிட்டாலும் நபித்தோழர்கள் உடும்பு இறைச்சியைச் சாப்பிட்டார்கள். இது இறைத்தூதருக்கு மாறு செய்தல் என்று யாராவது கூறமுடியுமா?

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

  1. மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.
  2. இறைவனின் செய்தியைப் பெற்று, தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இவ்வாறு இருக்கும் போது இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணை வைப்பாக ஆகிவிடும் என்பதையும் உணர வேண்டும்.

மார்க்கத்தில் இறைக்கட்டளை! உலக விஷயத்தில் ஆலோசனை!

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

அல்குர்ஆன் 7:3

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

அல்குர்ஆன் 6:106

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

அல்குர்ஆன் 43:43, 44

மேற்கண்ட வசனங்களில் இறைக் கட்டளைகளை மட்டும்தான் இறைத் தூதர் பின்பற்ற வேண்டும் என்றும், இறைவன் அல்லாதவர்களைப் பொறுப்பாளர்களாக்கி, அவர்களுடைய கருத்துக்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

ஆனால் பின்வரும் வசனத்தில் ஸஹாபாக்களோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்றும், எடுக்கப்படும் முடிவில் உறுதி கொள்ள வேண்டும் என்றும் நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்

அல்குர்ஆன் 3:159

இறைவனைத் தவிர வேறு யாரையும் பொறுப்பாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஒரு வசனம் கட்டளையிடுகிறது.

பிறருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனிதர்களாகிய ஸஹாபாக்களுடன் ஆலோசனை செய்து எடுக்கும் முடிவில் உறுதி கொள்ள வேண்டும் என்று மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இவை முரண்பாடு போல் தோன்றினாலும் இந்த இரண்டு வசனங்களுக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் கிடையாது.

இறைக்கட்டளையை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். வேறு யாருடைய கருத்தையும் பின்பற்றக் கூடாது என்பது மார்க்க விஷயத்தில்!

ஸஹாபாக்களோடு ஆலோசனை செய்ய வேண்டும் என்பது உலக விஷயத்தில்!

மார்க்கம் என்பது இறைச் செய்தி மட்டும் தான். அதில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

 உலக விஷயத்தில பயனுள்ள யாருடைய கருத்தையும் ஏற்றுக் கொள்ளலாம். மார்க்கமல்லாத விஷயங்களில் நபியவர்கள் கூட பிறருடைய கருத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்பது தான் மேற்கண்ட வசனங்களின் சாரம்சம்.

இறை மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காகத் தான் இறைத்தூதர் வந்தார்கள். எனவே இறைச் செய்தியின் அடிப்படையில் அவர்கள் வாழ்ந்து காட்டியவை நமக்கு முன்மாதிரியாகும்.

நாம் இறைத்தூதரின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பது இறைச் செய்திகளின் அடிப்படையில் அவர்கள் போதித்தவை தான் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நபியவர்கள் உயிரோடு வாழும் காலகட்டத்தில் பல்வேறு உலக விஷயங்களிலும், வழக்குகளிலும் நபித்தோழர்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்; கட்டளையிட்டுள்ளார்கள். நபியவர்கள் கட்டளையிட்டுவிட்டால் தீர்ப்பு வழங்கி விட்டால் அது மார்க்கமாகி விடும். இப்போது நாம் அதை உலக விஷயம் என்று கருதுவது கூடாது.

உதாரணமாக ஹுதைபியா உடன்படிக்கை என்பது நபியவர்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் செய்த ஒன்றாகும். இதன் காரணமாகத் தான் நபித்தோழர்கள் விரும்பாத நிலையிலும் நபியவர்கள் ஒப்பந்தங்களைச் செய்தார்கள். நபித்தோழர்களும் அதற்குக் கட்டுப்பட்டார்கள். நபியவர்கள் வாழும் போது எதையெல்லாம் கட்டளையிட்டுவிட்டார்களோ அவை அனைத்துமே மார்க்க விஷயம் தான்.

இரண்டு நபித்தோழர்களுக்கு மத்தியில் நீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்படும் போது நபியவர்கள் இருவருக்கும் மத்தியில் தீர்ப்பு வழங்கினார்கள். நபியவர்கள் தீர்ப்பு வழங்கிவிட்டால் அதற்கு கட்டுப்படுவது மார்க்கச் சட்டமாகிவிடும்.

இறைத்தூதர் முடிவும் இறைவனின் கண்டனமும்

சில சந்தர்ப்பங்களில் இறைவனின் வஹீ வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போது இறைவனே கண்டித்து திருத்தியுள்ளதையும் குர்ஆனில் நாம் காணமுடியும்.

சில சந்தர்ப்பங்களில் இறைவனிடமிருந்து வந்த (வஹீ) செய்திக்கு முரணாக சில முடிவுகளை எடுத்தனர். இவ்வாறு எடுத்த போதும் இறைவன் கண்டித்துள்ளான். இறைவனால் கண்டிக்கப்பட்ட இது போன்ற விஷயங்களை நாம் பின்பற்றக் கூடாது.

தேனை இறைவன் நமக்கு ஹலாலாக்கியுள்ளான். ஆனால் தமது மனைவியின் மீதுள்ள கோபம் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனி தேன் சாப்பிட மாட்டேன் என்று கூறி, தம் மீது தேனை ஹராமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் இறைவன் இதைக் கண்டித்துத் திருத்துகிறான்.

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 66:1

நான் அனுமதித்ததை நீ எப்படி ஹராமாக்கலாம்? என்று இறைவன் கேட்டதிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாகவே இவ்வாறு ஹராமாக்கினார்கள் என்பதை அறியலாம். மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களில் பெரும்பாலோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவது உண்மை என்பதை உள்ளூற அறிந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் உயர்ந்த நிலையில் உள்ள தங்களையும் இவர் சமமாக நடத்துகிறாரே என்பது தான் உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வதற்குத் தடையாக அமைந்தது.

எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும், தங்களையும் சமமாக நடத்தாமல் தங்களுக்குத் தனி மரியாதை அளித்தால் இஸ்லாத்தை ஏற்பதில் தங்களுக்குப் பிரச்சனை இல்லை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் இந்த மனநிலையை மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இதில் சற்று உடன்பட்டார்கள்.

ஆனால் இறைவனுக்கு இது பிடிக்கவில்லை. இதைக் கண்டித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறினான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.

அல்குர்ஆன் 18:28

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

அல்குர்ஆன் 80:1-10

அவர்களின் இந்த நடவடிக்கை வஹீயின் அடிப்படையில் அமையவில்லை என்பதை இறைவனே சுட்டிக் காட்டுவதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள், வெளிப்படையாக முஸ்லிம்களைப் போலவே நடந்து வந்தனர். தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களிலும் பங்கு பெற்று வந்தனர்.

ஆனால் போருக்குச் செல்லும் நிலை வந்தால் ஏதாவது பொய்க் காரணம் கூறி, போரில் பங்கெடுக்காமல் இருப்பதற்கு நபிகள் நாயகத்திடம் விதிவிலக்குப் பெற்றுக் கொண்டனர்.

இது பற்றி இறைவனின் முடிவு என்ன? என்பதற்குக் காத்திராமல் அவர்களின் பொய்ச் சமாதானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இது தவறு எனப் பின்வருமாறு இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

(முஹம்மதே!) அருகில் கிடைக்கும் பொருளாகவும், நடுத்தரமான பயணமாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் பயணம் அவர்களுக்குச் சிரமமாகவும், தூரமாகவும் இருந்தது. “எங்களுக்கு இயலுமானால் உங்களுடன் புறப்பட்டிருப்போம்என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகின்றனர். தங்களையே அவர்கள் அழித்துக் கொள்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்பதை அல்லாஹ் அறிவான். (முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?

அல்குர்ஆன் 9:42,43

எனது கட்டளைக்குக் காத்திராமல் நீர் எப்படி அனுமதியளிக்கலாம் என்று கேட்டு மேற்கண்ட செயல் தவறு எனச் சுட்டிக் காட்டுகிறான்.

பணயத் தொகை பெற்றுக் கொண்டு போர்க் கைதிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடுவித்தனர். இறைவனின் கட்டளையை எதிர்பாராமல் இவ்வாறு செய்தது தவறு என்று இறைவன் கண்டித்துத் திருத்துகிறான்.

பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப் பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

அல்குர்ஆன் 8:67,68

வஹீ வருவதற்கு முன் தாமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. வஹீக்கு மாற்றமாக கவனக் குறைவாக அவர்கள் எடுத்த முடிவையும் இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்த நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்பு தேடக் கூடாது என்று அல்லாஹ் இறைவசனத்தை அருளிய பிறகும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் மரணித்த போது அவனுக்காகப் பாவமன்னிப்புக் கோரினார்கள். பிறகு அல்லாஹ் அதையும் கண்டித்து திருமறை வசனத்தை அருளினான். இதனை புகாரி (4670, 4671, 4672 ஆகிய) ஹதீஸ்களில் காணலாம்.

எனவே நபியவர்கள் இறைச் செய்தியின் அடிப்படையில் நமக்கு போதித்தவை தான் இஸ்லாம் ஆகும். அவற்றைப் பின்பற்றுவது கடமையாகும். மனிதன் அடிப்படையிலும், அன்றைய காலப் பழக்கவழக்கங்களின் அடிப்படையிலும் நபியவர்கள் போதித்தவை மார்க்கச் சட்டம் ஆகாது. அவற்றில் நன்மையிருந்தால் நாம் பின்பற்றிக் கொள்ளலாம். இதனை விளங்கிப் பின்பற்றி வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக!