மார்க்கத்தை மறந்ததால் ஆட்சியை இழக்கும் அரபுத் தலைவர்கள்

மார்க்கத்தை மறந்ததால் ஆட்சியை இழக்கும் அரபுத் தலைவர்கள்

துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது.

இஸ்லாமிய நாடான எகிப்தின் ஆட்சி ஃபிர்அவ்னிடமிருந்து மீட்கப்பட்டு மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை உரிமையாளர்களாக்கினோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும், அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம்.

அல்குர்ஆன் 7:137

பின்னர் அந்நிய சக்திகளிடமிருந்து மீட்கப்பட்டு முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திடம் வழங்கப்பட்டது. இந்தச் சமுதாயங்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம் அவர்களிடமிருந்த ஏகத்துவக் கொள்கை தான்.

இந்த ஏகத்துவத்தை மறந்ததால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள துனிஷியாவில் இதுவரை 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய ஜைனுல் ஆபிதீன் என்பவர் நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்.

அதுபோல் ஏகத்துவக் கொள்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட எகிப்தையும் ஃபிர்அவ்னை விடக் கேடாக ஆட்சி செய்கின்ற அதிபர் ஹோஸ்னி முபாரக், கலவரத்தை அடக்குவதற்காக முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் கைது செய்து சிறையிலடைத்தும் கொண்டிருக்கின்றார். இந்தக் கொடுமைகளை நிறுத்தி ஹோஸ்னி முபாரக் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

இந்தப் புரட்சி தங்கள் நாடுகளிலும் தொற்றிக் கொண்டு விடுமோ என்று பயப்படுகின்ற இஸ்லாமிய நாடுகள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு தாங்கள் நாடுகளில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான இஸ்லாமிய ஆட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும்.