பூமியின் பொய் களஞ்சியம் இஹ்யா

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                  தொடர்: 8

பூமியின் பொய் களஞ்சியம் இஹ்யா

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பற்றி ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலா என்ற நூலில் எழுதியிருந்ததைக் கடந்த இதழில் கண்டோம்.

ஹாபிழ் தஹபீ அவர்களின் பிரம்மாண்டமான, பிரமாதமான இந்தக் குறிப்பு, முஸ்லிம்களின் மாபெரும் தலைவரான இப்னு தாஷிபீன் அவர்கள் சென்ற நேரிய பாதையை மிகத் தெளிவாக விளக்குகின்ற வரலாற்றுப் பதிவாகும்.

இறையியல், தத்துவவியல் மற்றும் சாபத்திற்கும் கோபத்திற்கும் இலக்கான சூபிஸக் கோட்பாடு போன்றவை எங்கிருந்து வந்தாலும் அந்த பித்அத் நூற்களை ஒழித்துக் கட்டுவதை அந்தத் தலைவர் தனது உயர்ந்த லட்சியமாகக் கொண்டிருந்தார்.

அந்த லட்சியவாதிக்கு எதிராக பித்அத்வாதிகள் ஓர் அவதூறைப் பரப்பினர்.

“எரிக்கப்பட்ட இஹ்யா உலூமித்தீன், இன்னும் இதுபோன்ற நூற்கள் அவரது ஆட்சிக்கு சங்குகளாகவும் சாவுமணிகளாகவும் இருந்தன. அந்நூல்களின் பக்கங்களைப் புரட்டுவோர் அவரது ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்யப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சமும் அபாயமும் தான் அவரை அந்நூல்களை எண்ணை ஊற்றி எரிக்கத் தூண்டியது”

இதுதான் இப்னு தாஷிபீன் அவர்களுக்கு எதிராக சூபிஸ ஆதரவாளர்கள் பரப்பும் அவதூறும் அபத்தமும் ஆகும்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக இது அறவே உண்மை கிடையாது. உண்மையில், எந்த வழியிலாவது தங்கள் ஆட்சியை, அரசாங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கருதியவர்கள் இந்த அபாயகரமான நூற்களைத் தான் தங்கள் ஆட்சியின் ஆதாரத் தளங்களாகக் கொண்டிருந்தனர். கடந்த கால வரலாற்றுப் பக்கங்களைப் படிப்பவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகத் தெரியும்.

அசத்தியவாதிகளின் ஆதாரத் தளங்கள்

“ஆட்சியைத் தக்க வைக்க விரும்பிய ஆட்சியாளர்கள் இந்த அசத்தியப் பாதைகளையும் அவை அடங்கிய நூற்களையும் தக்க வைக்க வேண்டும் என்று விரும்பினர். காரணம் இஹ்யா போன்ற இந்த நூற்களில் இடம்பெற்றுள்ள பித்அத்கள், குடிமக்களின் கவனத்தைத் திருப்பி, ஆட்சியாளர்களின் அநியாயங்கள், அராஜகங்களின் பக்கம் அவர்களது கவனம் வந்து விடாமல் தடுத்துவிட்டன” என்று எகிப்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் அல் மக்ரஸீ என்பவர் தெரிவிக்கின்றார்.

இந்த பித்அத்துகளை ஆதாரத்தளங்களாகக் கொண்டு ஆட்சியைக் காப்பாற்றியவர்கள் தான் ராபிளிய்யா, ஃபாதிமிய்யா, பஹாவிய்யா போன்ற வழிகெட்ட கூட்டத்தினர்.

அதுபோன்ற ஒரு கடுகளவு அவசியமோ நிர்ப்பந்தமோ அமீருல் முஃமினீன் இப்னு தாஷிபீன் அவர்களுக்கு இருந்ததில்லை. அரவது ஒரேயொரு குறிக்கோள், பித்அத்தைத் தாங்கி நிற்கின்ற இந்த ஏடுகளை, குறிப்பாக இந்த இஹ்யாவைக் கொளுத்துவது தான். இந்தத் தூய நோக்கத்தைக் களங்கப்படுத்துவதற்கும் கறைப்படுத்துவதற்கும் தான் இதற்கு அரசியல் சாயம் பூசுகின்றனர். இது அப்பட்டமான தில்லுமுல்லாகும்.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் இந்த எதிரிகள் இறக்கை கட்டிப் பறக்கவிட்ட மற்றொரு பொய், “இப்னு தாஷிபீனை ஆட்சியாளராகக் கொண்ட முராபிதீன்களுக்கு எதிராக கஸ்ஸாலி கையேந்தி துஆச் செய்தார். அதனால் தான் அவரது ஆட்சி கவிழ்ந்து போனது” என்ற செய்தி.

இது பித்அத்வாதிகள் பரப்புகின்ற பித்தலாட்டமான செய்தியாகும். இதுபோன்ற கட்டங்களில் ஏகத்துவவாதிகளுக்கு எல்லாம் வல்ல இறைவன் இடுகின்ற கட்டளை இதுதான்.

நீதியையும், நன்மையையும், உறவினருக்குக் கொடுப்பதையும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவற்றையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். (அல்குர்ஆன் 16:90)

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 7:28)

கஸ்ஸாலியின் இஹ்யாவில் கட்டுக்கட்டாகக் கொட்டிக் கிடப்பது என்ன? வெட்கக்கேடான, வெறுக்கத்தக்க தீமைகள். நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் இட்டுக்கட்டிக் கூறியிருக்கும் பொய்கள்.

இந்தப் பொய்களுக்கும் தீமைகளுக்கும் எதிராக ஓர் இறை நம்பிக்கையாளன் நீதியை நிலைநாட்டும் வகையில் பொங்கி எழவேண்டும். போர்க்குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பணியைச் செய்த இப்னு தாஷிபீன் மீது அவிழ்த்து விடப்படும் அவதூறுகளைக் களைய வேண்டும்.

ஸ்பெயினில் எரிக்கப்பட்ட இஹ்யா பிரதிகள்

அல் ஃபிக்ருஸ் ஸாமி என்ற நூலில் இடம்பெறும் ஒரு செய்தியின் அடிக்குறிப்பு இதோ:

இப்னு தாஷிபீன் அவர்கள் தமது தந்தையாரைப் போன்று முழுக்க முழுக்க மார்க்க அறிஞர்களின் ஆலோசனையின்படியும் அறிவுரைப்படியும் நடந்தார். சட்டப் பிரச்சனை அனைத்தையும் இந்த ஆலிம்களிடமே அனுப்பி வைத்தார். அந்த ஆலிம்கள் இஹ்யா உலூமித்தீனைக் கொளுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்த மாத்திரத்தில் தனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஹ்யாவின் ஒரு பிரதி கூட எஞ்சிவிடாமல் எரிக்க உத்தரவு பிறப்பித்தார்.

கண்ணில் பட்ட அத்தனை பிரதிகளையும் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். அதன்படி ஸ்பெயின் நாட்டில் பரவிக்கிடந்த அத்தனை பிரதிகளும் குர்துபா பள்ளியின் பெருவளாகத்தில் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. அதன் பின்னர் அம்பாரமாய் குவிந்து கிடந்த அந்தப் புத்தகக் குவியலின் மீது எண்ணெய் ஊற்றப்பட்டு, எரியூட்டப்பட்டது.

இதுபோன்று மொராக்காவில் உள்ள மராகிஷ் நகரத்தில் திரட்டப்பட்ட இஹ்யா பிரதிகளும் கொளுத்தப்பட்டன. குர்துபா பள்ளிவாசலில் தொடங்கிய கொளுத்தும் படலம் ஒன்றன்பின் ஒன்றாக அவரது ஆட்சிக்குக் கீழிருந்த அனைத்துப் பட்டணங்கள் முதல் பட்டிதொட்டி வரை தொற்றித் தொடர்ந்தது. இஹ்யாவின் பிரதிகள் பற்றி எரிந்தது.

இவ்வாறு அல்ஃபிக்ருஸ் ஸாமி என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

காழி (நீதிபதி) இயாழ் அவர்கள் குறிப்பிடுவதாவது:

கஸ்ஸாலி வினோதமான, வித்தியாசமான கருத்தோட்டங்களையும் கண்ணோட்டங்களையும் கொண்டவர். நிறைய நூற்களை எழுதியவர். சூபிஸ வழியில் வரம்பு கடந்து சென்றவர்.

சூபிஸ சிந்தனைக்கு வரிந்து கட்டிக் கொண்டு, காட்டுத்தனமாக வக்காலத்து வாங்குபவர். இந்த அசத்தியக் கொள்கையை நிலைநாட்ட முழுநேர அழைப்பாளராகச் செயல்பட்டவர். இந்தக் கொள்கையை நிலைநிறுத்துவதற்காக பிரபலமான ஆக்கங்களை இயற்றியிருக்கின்றார். அந்த ஆக்கங்களில் வழிகேடுகளை வாரியிறைத்திருக்கின்றார். இதனால் சமுதாய மக்களின் சிந்தனைகள் பாழாகி விட்டன. அவரது அந்தரங்கத்தை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

மார்க்க அறிஞர்கள் அவரது நூல்களை எரிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். அந்தத் தீர்ப்பை இப்னு தாஷிபீன் அப்படியே செயல்படுத்தினார். இஹ்யாவின் பக்கம் நெருங்கக்கூடாது என்று மக்களுக்குக் கட்டளையிட்டார். மக்கள் அக்கட்டளையை ஏற்று அப்படியே செயல்பட்டனர்.

இவ்வாறு அபூ அலீ அஸ்ஸதஃபீ தமது முஃஜமில் தெரிவிப்பதாக ஹாபிழ் தஹபீ அவர்கள், ஸியரு அஃலாமின் நுபலா நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.

மாணவர்களின் விழிப்புணர்வு

மார்க்கத்தைத் தூய வடிவில் கற்கின்ற மாணவக் கண்மணிகள் இஹ்யாவைப் பற்றிய விழிப்புணர்வு பெற்று மிகக் கடுமையாக அதை விமர்சனம் செய்தனர்.

கஸ்ஸாலியின் அந்த நூல் – இஹ்யா உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை உயிர்ப்பித்தல்) அல்ல. மாறாக அது, இமாதத்து உலூமித்தீன் (மார்க்க ஞானங்களை மரணிக்கச் செய்தல்) ஆகும் என்று அந்த மாணர்வக்ள வர்ணித்தனர். கஸ்ஸாலிக்கு வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருந்த அக்கால அறிஞர் கபாப் போன்றோரிடம் மாணவர்களின் இந்த எதிர்ப்பலைகள் ஏவுகணைகளாகப் பாய்ந்து கொண்டிருந்தன.

இந்த வகையில் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாமிய மார்க்கத்தின் உயிர்மூச்சான ஏகத்துவக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கக் கிளம்பிய கோணல் கொள்கையையும் சமுதாயத்தைச் சூழ்ந்து முற்றுகையிட வந்த குருட்டுக் கூட்டத்தையும் அடையாளம் கண்டு அதன் கழுத்தைப் பிடித்து நெறிக்கின்ற கலையைத் தெரிந்த அந்த மாணவர்கள் போராளிகளாகப் புறப்பட்டு வந்தமைக்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மாணவர்களின் இந்த ஏக்கம் இறையருளால் இனிதாகவே நிறைவேறியது. அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

எத்தனையோ முஸ்லிம்கள் தனியாகவும் அணியாகவும் இந்த வழுக்கல் பாறையான இஹ்யாவின் மூலம் வழுகி பாதாளத்தில் வீழ்ந்துவிட்டனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆப்பிரிக்கா, ஸ்பெயின், மொராக்கோ அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்புகள் அடங்கிய அல்மிஃயாருல் முஅர்ரப் என்ற நூல் குறிப்பிடுகின்றது.

மார்க்க மேதையின் மதிப்பீடு

அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் அல்வலீத் அத் தர்தூஷி என்ற மாலிக்கி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர், அப்துல்லாஹ் பின் அபுல் முளஃப்பர் என்பாருக்கு, கஸ்ஸாலியைப் பற்றி ஒரு பதில் கடிதம் எழுதியிருந்தார். அதில் கஸ்ஸாலியைப் பற்றிய தனது மதிப்பீட்டைத் தெரிவித்திருந்தார். அந்த மதிப்பீட்டை இப்போது பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் முளஃப்பரே! நீங்கள் கஸ்ஸாலியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவரையும் அவரது வார்த்தையையும் வைத்து அவரைக் கல்விமான்களில் ஒருவராக எண்ணினேன். அவரது சிறப்புகள் அவரைச் சீர்தூக்கி நிறுத்தின. அறிவு, விளக்கம், பயிற்சி ஆகியவை நீண்ட நாட்களாக அவரிடம் குடிகொண்டிருந்தன. அவரது ஆயுட்காலத்தின் பெரும்பங்கு இப்படியே கழிந்தது. பிறகு அகமிய ஞானம், அதன் உதயம் என்ற தடுமாற்றப் பாதையை நோக்கி அவர் பயணமானார். உள்ளத்து உதிப்புகள், மறைமுக ஞானங்கள் என்ற பெயரில் ஷைத்தானின் ஊசலாட்டத்திற்குள் அவர் நுழைந்தார். அந்த ஊசலாட்டங்களுக்கு தத்துவ சாயம் பூசினார்.

கஸ்ஸாலியின் தடுமாற்றம்

ஃபிக்ஹ் வல்லுனர்கள், கடவுள் கோட்பாட்டாளர்கள் பக்கமும் அவர் தாவிச் சென்றார். இப்படி தடுக்கி, தடுமாறி மார்க்கத்தை விட்டு முற்றிலும் விலகி வெளியே செல்ல முனைந்தார். பிறகு இஹ்யா என்ற நூலை எழுதத் துவங்கி அதில் பல்வேறு துறைகளையும் நிலைகளையும் பற்றிப் பேசினார். சூபிஸ சிந்தனைகளையும் அடையாளங்களையும் வானளாவப் புகழ்ந்து தள்ளினார். அவருக்கு அந்தத் துறை பற்றி ஞானம் இல்லை. அதைப் பற்றிய விளக்கமும் இல்லை. இதனால் வீணாகப் போய்விட்டார். முஸ்லிம்களின் ஆலிம்கள் வழியிலும் அவர் சென்றபாடில்லை. துறவிகளின் துறையிலும் நின்றபாடில்லை.

பொய்களின் கருவூலம்

இஹ்யா என்ற அந்த நூலை நபி (ஸல்) அவர்கள் மீது புனைந்து சொல்கின்ற பொய்ச் செய்திகளின் கிட்டங்கியாகவும் கிடங்காகவும் ஆக்கினார். பூமியில் வெளிவந்த நூல்களில் பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது அதிகமான பொய்களை அவிழ்த்து, அள்ளி விட்ட புத்தகம் ஒன்று இருக்குமானால் அது இஹ்யாவைத் தவிர வேறெதுவும் இருக்கமுடியாது. அந்த அளவுக்குப் போலி ஹதீஸ்களின் புதைகுழியாக அந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

தத்துவக் கருத்துக்களின் பெயரில் அமைந்த கழிவுகளின் தளமாக, மன்சூர் ஹல்லாஜ் போன்ற அத்வைத அஞ்ஞானிகள் கக்கிய கருப்புச் சிந்தனைகளின் விஷக் கருவூலமாக அவரது இஹ்யா மாறியது.

பஸராவில் இக்வானுஸ் ஸஃபா – தூய்மை சகோதரர்கள் என்ற சூபிஸ சித்தாந்தப் பேர்வழிகள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டில் முளைத்திருந்தனர். அந்த மூடர்களின் முட்டாள்தனமான சிந்தனைகளைப் பயிரிடுகின்ற விளைநிலமாக இஹ்யா அமைந்திருந்தது.

இறைத்தூதரை இழிவுபடுத்துதல்

மூளை குழம்பிய இந்தக் கூட்டம், “நபித்துவம் என்பது அல்லாஹ் தன் அடியார்களில் யாரையேனும் தேர்வு செய்து தூதராக்குவதில்லை. மாறாக, அடியார்கள் நபித்துவத்தை, தூதுத்துவத்தைத் தேடிப் போவதன் மூலம் கிடைக்கும் பதவி’ என்ற குருட்டுக் கொள்கையைக் கொண்டவர்கள்.

இந்தக் குருட்டுக் கூட்டத்தின் கொள்கைப்படி, இறைத்தூதர்கள் எனப்படுவோர் சதாரண, சாமானிய மனிதனை விட எந்தவிதத்திலும் சிறந்தவர் அல்லர். அந்த சாமானிய மனிதன் என்றால் யார்?

அவர் நற்குணங்களைத் தன்னகத்தில் கொண்டவர். மனமென்னும் வாகனத்தின் மட்டரகமான சிந்தனைகளை அடக்கி ஆண்டவர். காட்டுத்தனமான ஆன்மாவின் ஆசையைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர். இப்படி இத்தனை குணங்கள் ஒருசேரப் பெற்ற, தன் ஆத்மாவை தன்வயப்படுத்திய இவர் தான் மக்களை அந்த நற்குணங்கள் மூலம் வழிநடத்துகின்றார். இவரை விட நபி ஒன்றும் பெரிய சிறப்பிற்குரியவர் இல்லை.

இவ்வாறு இந்த விஷமிகள் வாதிடுகின்றனர். இத்துடன் இவர்கள் நிற்கவில்லை. அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு இறைத்தூதரை அனுப்பியதையும் மறுக்கின்றனர். அற்புதங்கள் எல்லாம் வெறும் தந்திரங்கள், தகிடுதத்தங்கள் என்றும் கூறுகின்றனர். இத்தகைய விஷமிகளின் சிந்தனையைத் தான் கஸ்ஸாலி தனது இஹ்யாவில் பிரதிபலிக்கின்றார்.

கழிவு நீரில் கழுவுபவர்

அல்லாஹ் இஸ்லாத்தைக் கண்ணியப்படுத்தி விட்டான். தன்னுடைய ஆதாரங்களைத் தெளிவுபடுத்திவிட்டான். தக்க ஆதாரங்களைக் கொண்டு சாக்குப் போக்குகளைக் களைந்து விட்டான்.

ஏகத்துவ வழிகளைக் கொண்டும், தர்க்க வாதங்களைக் கொண்டு மார்க்கத்தைக் காப்பாற்ற முனைவோர், தூய ஆடைகளை சிறுநீர் கொண்டு துவைப்பவரைப் போல் ஆவர். கஸ்ஸாலியின் போக்கு இதுபோன்று தான் அமைந்துள்ளது.

கஸ்ஸாலி தனது இஹ்யாவில் ஒருவிதமான உத்தியைக் கையாளுகின்றார். இஹ்யாவை வாசிக்கின்ற தனது வாசகனுக்கு, தனது எழுத்து நடையின் இடையில் திடுக்கிட வைக்கும் இடி முழக்கத்தையும் பரவசப்படுத்தும் மின்னல் வெளிச்சத்தையும் கொடுத்து அவனை சூபிஸப் பாதைக்கு ஆசை காட்டி, ஆர்வமூட்டி லாவகமாக அழைத்துச் செல்கின்றார்.

இல்முல் முஆமலா – இல்முல் முகாஷஃபா

இஹ்யாவைப் படிப்பவர்கள் அவரது வசன நடையில், வார்த்தை ஜாலத்தில் வசமானதும், “இதுவரை நீ கண்டது இல்முல் முஆமலா – அதாவது குண நலன்கள், கொடுக்கல் வாங்கல் பற்றி வெளிப்படையான ஞானம் ஆகும். இதற்கப்பால் தான் நீ பார்க்கப் போவது இல்முல் முகாஷஃபா – அதாவது அகமிய, அந்தரங்க ஞானம் ஆகும்.

அதை ஏடுகளின் வரிகளில் எழுத முடியாது. இதயங்களிலிருந்து பெறுகின்ற ரகசிய ஞானம் ஆகும். அந்த ஞானத்தைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஆன்மீகப் பயிற்சி, பக்குவத்தில் கிடைக்கின்ற ஞானமாகும்.

இதற்கு எதிரான மாற்றுச் சிந்தனையும் மார்க்கச் சிந்தனையும் கொண்டவர்கள், இருப்பதை விட்டும் விலகி, இல்லாத கற்பனையில் தங்கள் உள்ளங்களை மாட்டியவர்கள் ஆவர். இம்மாதிரியான கல்வி ஞானம் உள்ளங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.

இப்படியெல்லாம் கஸ்ஸாலி கதையளக்கின்றார்.

இஹ்யா –  ஆட்கொல்லி நூல்

அபுல் முளஃப்பரே! இஹ்யாவை தீயிட்டுக் கொளுத்துவது பற்றி உங்களது ஆதங்கத்தை கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

இந்நூலின் விபரீதத்தை இதோ நான் உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் மக்களுக்கு மத்தியில் இது பரவிவிடும்.

இந்த நூல் மக்களை ஆட்கொண்டு, அவர்களைக் கொல்லக்கூடிய ஆலகால விஷமாகும். இந்த உண்மை அவர்களுக்குத் தெரியாது. இந்நூலில் கஸ்ஸாலி சொல்லியிருக்கின்ற செய்திகளை மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள் என்றும், வழிதவறி விடுவார்கள் என்றும் தூய கொள்கைவாதிகள் அத்தனை பேருக்கும் அச்சம் உள்ளது.

கொளுத்தப்பட்ட குர்ஆன் பிரதிகள்

நபித்தோழர்கள் காலத்தில் குர்ஆன் ஒன்று திரட்டும் பணி நடைபெற்றது. அப்போது சரியான குர்ஆன் பிரதியை வைத்துக் கொண்டு, கூடுதல் குறைவு உள்ள குர்ஆன் பிரதிகளைக் கொளுத்திவிட்டனர்.

அவ்வாறு கொளுத்தவில்லை என்றால் அதன் விபரீதம் என்னவாகியிருக்கும்? மக்களிடத்தில் அந்தப் பிரதிகள் பரவி, அவற்றில் உள்ளவாறு மக்கள் மனனம் செய்திருப்பார்கள். இதனால் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் முட்டி மோதி அழியும் அபாயமும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கும். இதை முன்மாதிரியாகக் கொண்டு தான் இஹ்யாவின் பிரதிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

நானே இஹ்யாவுக்கு எதிராக தனித்துக் களமிறங்க முடிவு செய்து, அவர் செய்திருக்கின்ற பிசகுகளையும் பித்தலாட்டங்களையும் வெளிக்கொணர்ந்து ஒவ்வொரு எழுத்தாக அடையாளம் காட்ட உள்ளேன்.

இஹ்யாவுக்கு மாற்று நூல்கள்

இஹ்யா என்ற நூல் அல்லாமல் எத்தனையோ சரியான கொள்கையுடைய நூல்கள் இருக்கின்றன. அவை நம்முடைய கொள்கைச் சகோதரர்களுக்கும் நல்லவர்களுக்கும் போதுமானவையாகும். அவர்களுக்குத் தேவைப்படுகின்ற தேவைகளை அவை தீர்த்து வைத்துவிடும்.

இந்த நூலின் மீதுள்ள ஆசையில் விழுபவர்கள் அப்பாவியான நல்ல மனிதர்கள் ஆவர். அவர்கள் அறிவுப்பூர்வமாகவும் மார்க்க ஆதாரப்பூர்வமாகவும் இந்நூலைச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அல்லாஹ் பற்றிய கடவுள் கொள்கையையும் அவனது தூய பண்புகளின் தன்மைகள் பற்றியும் அவர்கள் அறியாதவர்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தைக் குத்திக் குதறுவதற்கும், அதன் அடிப்படைகளைப் பலவீனப்படுத்துவதற்கும், படைத்தவனுக்குரிய பண்புகளை மறுப்பதற்கும், அற்புதங்களைக் கொச்சைப்படுத்துவதற்கும் புறப்பட்ட மனித ஷைத்தான்கள் பற்றி இவர்கள் கொஞ்சம் கூட அனுபவப்பட்டிருக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நோக்கி வருகின்ற ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தி, அவனது மார்க்கத்தைக் காத்து நிற்கின்ற கலைகள் தொடர்பான சரியான ஞானமில்லாதவர்கள், தனக்கு விளக்கமில்லாத ஒன்றைப் பின்பற்றுவது ஒருபோதும் அவருக்குத் தகுமானதல்ல! அறவே அதைப் பின்பற்றுவதற்கு அனுமதியுமில்லை. விளக்கமில்லாமல் தனக்கு ஆதரவானதைப் பின்பற்றுவதும் எதிரானதை இகழ்வதும் சரியல்ல என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் அல்வலீத் அத் தர்தூஷி அவர்கள் எழுதிய பதில் கடிதம் அல்மிஃயாருல் முஅர்ரப் என்ற நூலில் இடம்பெறுகின்றது.

அல்லாஹ் இந்த இமாம் அவர்களுக்கு அருள்புரிவானாக! கஸ்ஸாலியைப் பற்றியும் அவரது இஹ்யாவைப் பற்றியும் ஓர் அருமையான தோற்றத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

இஹ்யா என்ற நூலின் மூலத்தையும், அது முளைக்கும் இடத்தையும் விலாவாரியாக எடுத்துக்காட்டி விளாசித் தள்ளியிருக்கின்றார்கள். இஹ்யாவுக்கு மாற்று நூலைக் காண்பதற்கும் அறிவுறுத்துகின்றார்கள்.

இஹ்யாவைப் புகழ்வதோ அல்லது அதற்கு முட்டுக் கொடுக்கவோ முனைபவர், சரியான இஸ்லாமிய கோட்பாட்டைப் புரியாதவர். ஹதீஸ் நூற்களுடன் தொடர்பு இல்லாதவர் அல்லது இஹ்யாவின் புகழை மட்டும் செவியுற்றுவிட்டு, அதில் உள்ளடங்கியிருக்கும் சோதனைகளைக் கொஞ்சம் கூடப் படிக்காமல் அதை ஒரு பூதாகரமான ஆதாரமாக நம்புபவர்கள் என்பது தான் அதன் அர்த்தம்.

தன்னுடைய காலத்திலும், தனக்குப் பின்னாலும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இஹ்யாவினால் ஒரு பேராபத்து இருக்கின்றது. அதனால் அதை எரிக்க வேண்டும் என்பதில் இமாம் தர்தூஷி அவர்கள் தெளிவாக இருந்திருக்கின்றார்கள்.

தர்தூஷியின் இந்த மதிப்பீட்டை விளக்க வேண்டும் என்றால் அதற்குப் பல பாகங்கள் தேவைப்படும். அல்லாஹ்வின் உதவி கொண்டு நாம் உடனடியாக இங்கு பின்னால் கொண்டு வரவிருக்கும் ஒருசில உதாரணங்கள் வாயிலாக இது நன்கு புலப்படும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்