தொடர்: 3 இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

தொடர்: 3

இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் 29:48

ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் இந்த வசனத்திற்கு ஓர் அழகான விளக்கத்தை வழங்குகின்றார்கள்.

முஹம்மதே! இந்தக் குர்ஆனை உங்களுடைய சமுதாயத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் நீண்ட காலம் அவர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அப்போது எந்தவொரு நூலைப் படிக்கவும் எழுதவும் உங்களுக்குத் தெரியாது.

இன்னும் சொல்லப்போனால் நீங்கள் எழுதப் படிக்கத் தெரியாத, “உம்மி’ மனிதர் தான் என்ற உண்மையை உம்முடைய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். அவர்களைப் பற்றி இந்த இலக்கணம், முந்தைய வேதங்களிலும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

அதை அல்லாஹ் தனது திருமறையில் 7:157 வசனத்தில் விவரிக்கின்றான்.

இந்த இயற்கைத் தன்மையிலும் இலக்கணத்திலும் தான் நபி (ஸல்) அவர்கள் இறுதி வரை இருப்பார்கள். அதாவது இறுதி நாள் வரை அவர்களுக்கு ஒரு வரியை, ஏன் ஓர் எழுத்தைக் கூடத் தம் கையால் எழுதத் தெரியாது. எனினும் நபி (ஸல்) அவர்களுக்காக எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வஹீயை எழுதுவார்கள். பல நாட்டுத் தலைவர்களுக்கும் கடிதங்களை எழுதுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் எதையும் எழுதியது கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடிதத்தை எடுத்து, இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தமாகும்… என ஹுதைபிய்யா தினத்தில் எழுதினார்கள்.

இவ்வாறு ஒரு ஹதீஸ் புகாரியில் 2700வது செய்தியாக இடம்பெறுகின்றது. இதை ஆதாரமாகக் கொண்டு பிற்கால ஃபிக்ஹ் அறிஞர்களான அல்காளி அபுல் வலீத் அல்பாஜியும், அவரது ஆதரவாளர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என வாதிடுகின்றனர்.

இவ்வாறு கருதுவதற்குக் காரணமாக அமைந்தது புகாரியில் இடம்பெறும் இந்த அறிவிப்பு தான். இதே செய்தி புகாரியின் மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட (எழுத்தாளர்) எழுதினார்’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி எழுத்தர் தான் கடிதத்தை எழுதினார் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கைப்பட கடிதம் எழுதினார்கள் என்று பாஜியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்த மாத்திரத்தில் மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள ஃபிக்ஹ் அறிஞர்களின் கடுமையான கண்டனத்திற்கு இலக்கானார்கள். இதன் காரணமாக அவர்கள் பாஜியின் கருத்திலிருந்து விலகி, அதற்காகப் பல்வேறு அவைகளில் உரையாற்றி விளக்கமும் அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு எழுதத் தெரியாது. ஆனால் அவர்கள் அற்புதத்தின் அடிப்படையில் எழுதினார்கள் என்பது தான் நமக்குத் தெரிந்த வரை பாஜியின் ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அவனது இரண்டு கண்களுக்கு மத்தியில் காஃபிர் (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 5220

இவ்வாறு காஃபிர் என்று எழுதப்பட்டிருப்பதை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் படிப்பார்கள் என்று அஹ்மதில் (16902) இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடுவது வஹீ என்ற அற்புதத்தின் அடிப்படையில் தான். அதே போன்று தான் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போதும் நபி (ஸல்) அவர்கள் தமது அற்புதத்தின் அடிப்படையில் எழுதினார்கள். இது தான் பாஜியின் ஆதாரமாகும்.

நபி (ஸல்) அவர்கள் எழுத்தைக் கற்காமல் மரணிக்கவில்லை என்று ஒரு ஹதீஸை சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இது தான் ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு அளிக்கும் விளக்கமாகும்.

குறிப்பு: ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் குறிப்பிட்டது போன்று, “ஸும்ம அஹத ஃப கதப’ – “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடிதத்தை எடுத்து எழுதினார்கள்’ என்ற வாசகம் புகாரி 2700வது ஹதீஸில் உள்ளது.

ஆனால் “ஸும்ம அமர ஃப கதப’ – “நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட (எழுத்தாளர்) எழுதினார்’ என்ற வாசகம் நாம் தேடிப் பார்த்த வரையில் புகாரியில் இல்லை.

இப்னு கஸீர் குறிப்பிடும் இந்த வாசகம் தான் இல்லையே ஒழிய, அவர்கள் குறிப்பிடும் கருத்தில் புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடிய போது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள் அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்ட படி தான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தமாகும்” என்று எழுதினார்கள். மக்காவாசிகள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்க மாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக் கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, “இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்’ என்று எழுதுங்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம்,

அல்லாஹ்வின் தூதர்என்னும் சொல்லை அழித்து விடுங்கள்என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒரு போதும் அழிக்க மாட்டேன்என்று மறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். (நூல்: புகாரி 3184)

நபி (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது

நபி (ஸல்) அவர்களுக்கு படிக்கத் தெரியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இது உண்மையில் அசாத்தியம்; நடக்க முடியாதது என்றாலும் ஒரு பேச்சுக்கு இவ்வாறு வைத்துக் கொள்வோம். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களிடம் இஹ்யா உலூமித்தீன் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் படித்து முடிக்கின்றார்கள். அதில் அவர்கள் ஒரு தவறைக் கூடக் காணவில்லை என்ற இந்தச் சம்பவம் உண்மை என்றால் இதனால் ஏற்படக் கூடிய விளைவு என்ன?

குர்ஆனும் இஹ்யா உலூமித்தீனும் ஒன்று என்ற நிலை ஏற்படும். ஏனென்றால் குர்ஆனில் தான் அதன் ஆரம்பம் முதல் முடிவு வரை எந்தவொரு தவறும் வராது. அதுபோன்று நபி (ஸல்) அவர்களின் ஹதீசும் இஹ்யாவும் ஒன்று என்றாகி விடும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் தமது மனோ இச்சைப்படி எதையும் பேச மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து வருவது சத்தியம் மட்டும் தான். இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஹ்யா உலூமித்தீன் என்பது மார்க்கத்தில் மூன்றாவது வஹீ என்ற நிலைக்கு வந்து விடுகின்றது.

நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் தங்களது செயல்பாடுகளையும் கருத்துக்களையும் கூறுபவர்களாக இருந்தனர். நபித்தோழர்கள் சிலர் சரியாகவும் சொல்லியிருக்கின்றனர். தவறாகவும் சிலர் சொல்லியிருக்கின்றனர். இதைக் கீழ்க்காணும் ஹதீஸில் பார்க்கலாம்.

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம் வரைப் போய்ச்சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்று விடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (மூன்றாவதாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக் கொண்டு அதனுடன் மேலே சென்று விட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக் கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டதுஎன்று சொன்னார்.

அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “அந்த மேகம் தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக் கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக் கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்து வருகின்ற சத்திய(மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக் கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்து விடுகிறார்என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப் போவதில்லை)என்றார்கள்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 7046

தமது நல்ல தோழர்களின் முடிவில் தவறு ஏற்படுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கின்றார்கள். இதற்கு ஏராளமாக உதாரணங்கள் உள்ளன.

ஆனால் சூபிஸக் கொள்கைவாதிகள், விலாயத் (இறைநேசம் என்ற பதவி) நபித்துவத்தை விடச் சிறந்தது என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இதை சூபிஸவாதிகளின் தலைவன் முஹ்யித்தீன் இப்னு அரபியும், மற்ற வழிகெட்ட சூபிஸத் தலைவர்களும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

அடிப்படையே இல்லாத இஹ்யாவில் உள்ள ஹதீஸ்களை நபி (ஸல்) அவர்கள் படித்தார்களா? அப்படி அடிப்படையே இல்லாத ஹதீஸ்கள் இஹ்யாவில் அதிகம் உள்ளன. அவை 940 ஹதீஸ்களுக்கு மேல் உள்ளன. இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் இஹ்யாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. பலவீனமான ஹதீஸ்கள் இஹ்யா முழுவதையும் சுற்றி வளைத்துள்ளன.

நபித்தோழர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் இஹ்யாவில் அளந்துவிடப்பட்ட பொய்களின் பரிமாணத்தை நீங்கள் கேட்கவே வேண்டாம். முன்னோர்கள் மீது புனையப்பட்ட பொய்களின் புதைகுழி தான் இஹ்யா உலூமித்தீன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: முஃகீரா (ரலி)

நூல்: புகாரி 1291, 1364, 3461

புகாரியிலும் இன்னும் ஏராளமான நூற்களிலும் பதிவான “முதவாதிர்’ என்ற தரத்தில் உள்ள இந்த ஹதீஸின் நிலை என்ன? நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸிலிருந்து பின்வாங்கி விட்டார்களா? சூபியாக்களும் அவர்களின் பக்தர்களும் இதற்குப் பதிலளிப்பார்களா?

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கஸ்ஸாலி, இஹ்யாவில் பின்னியுள்ள பேரிடர்களையும் பெரும் சோதனையையும் நபி (ஸல்) அவர்கள் கவனித்தார்களா?

இவர்கள் கருதுவது போன்று, இமாலயப் பொய் கேந்திரமான இஹ்யாவைப் பார்த்து விட்டு நபி (ஸல்) அவர்கள் ஒப்புதல் கொடுத்திருந்தால் அவர்களின் நபித்துவமும் தூதுத்துவமும் ரத்தாகிப் போயிருக்கும். அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும்; அவனை கண்ணியமும் மகத்துவமும் படுத்த வேண்டும் என்று எந்தத் தூய, கலப்பற்ற தவ்ஹீத் கொள்கையின்பால் மக்களை அழைத்தார்களோ அந்தக் கொள்கையில் நபி (ஸல்) அவர்கள் பொய் சொல்லி விட்டார்கள் என்றாகி விடும். தீய விளைவுக்கு இட்டுச் செல்கின்ற இந்தப் பேச்சை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

நான் கூறியுள்ள இந்தக் கருத்தைப் பொய் என்று கருதுவோர் அல்லாஹ்வின் பரக்கத்திற்குரிய இந்த ஆய்வை துவக்கத்திலிருந்து கடைசி வரைக்கும் தயவு செய்து முழுமையாகப் பார்வையிடுவாராக! முழு ஈடுபாட்டுடன் இஹ்யாவில் இதை உரசுவாராக! காய்தல் உவத்தல் இன்றி, மனமாச்சரியங்கள், மனோ இச்சைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஆழ்ந்த கவனத்துடன் இஹ்யாவைப் படித்துப் பார்க்கட்டும்.

மலை மலையாகக் குவிந்து கிடக்கின்ற ஷைத்தானின் சிந்தனைகள், சித்திரங்களை விட்டு முழுமையாக விலகி ஒருமுனைப்புடன் இதில் ஆய்வு செய்யட்டும்.

குர்ஆன், ஹதீஸ் என்ற இரு மூலாதாரங்களிலிருந்து எந்தச் சான்றுமில்லாத கதைகளும், கற்பனைகளும் தான் சூபியாக்கள் மற்றும் அவர்களின் சீடர்கள் பயணிக்கின்ற பாதைகளாக இருக்கின்றன.