வழிகெட்ட ராஃபிளிய்யாக்கள்

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 18

வழிகெட்ட ராஃபிளிய்யாக்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும், வரைமுறைகளையும் பற்றி இமாம் முஸ்லிம் அவர்கள் கூறிய செய்திகளைக் கடந்த இதழில் கண்டோம்.

பொய்யான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இஸ்லாத்தில் புகுத்த வேண்டும் என்பது இஸ்லாமிய விரோதிகளின் மாபெரும் சதித் திட்டமாகும். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக இந்தச் சமுதாயத்தின் சத்திய ஆலிம்கள், உண்மையான நல்லடியார்கள் விழித்துக் கொண்டனர். அவர்கள் அதன் ஆணிவேரைக் கண்டறிந்து அடையாளம் காட்டினார்கள். இந்த சதித் திட்டத்திற்கு எதிராக சங்கைமிகு ஆலிம்கள் சரியான மறுப்பு கொடுப்பதற்காகத் தங்கள் சிந்தனையைச் செலுத்தினார்கள். இதற்காக நல்ல ஆட்சியாளர்களை அவர்கள் நாடினார்கள். முயற்சிகள் பல முனைகளிலும் பலன் தரக்கூடிய வகையில் அமைந்தன.

இந்தப் பொய்களை எதிர்கொள்வதற்குப் பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல் தொடுக்கும் வகையில் கவசங்களை, கேடயங்களை, அற்புதமான ஆயுதங்களை நூல்கள் வடிவில் உருவாக்கினார்கள். சரியான ஹதீஸ்களை, பொய்யான ஹதீஸ்களை விட்டும் பிரிக்கின்ற அளவுகோல்களை ஏற்படுத்தினார்கள்.

நபிமொழி என்ற கோட்டையைச் சுற்றி எந்த ஒரு திருடனும் ஏறிக் குதிக்க முடியாத அளவுக்குப் பெரும் மதில் சுவர்களை எழுப்பினார்கள். தகுதிவாரியாக அறிவிப்பாளர்களைத் தரம் பிரித்தார்கள். கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத அந்தக் காலத்தில் ஹதீஸ் அறிவிக்க வந்த அறிவிப்பாளர்களைப் படம் மட்டும் பிடிக்கவில்லை. ஆனால் அவர்களின் ஆரம்பம் முதல் அஸ்தமனம் வரையில் வாழ்க்கைக் குறிப்புகளை அணு அணுவாக, பல கோடிக்கணக்கான பக்கங்களில் பக்காவாக, பாதுகாப்பாகப் பதிவு செய்து வைத்துவிட்டனர்.

ஹதீஸ் கலையில் ஒரு நுண்ணறிவு மிக்க புலனாய்வுப் பிரிவே செயல்பட்டது. அவர்கள் வைத்திருந்த அளவுகோல்கள் என்னும் அற்புதமான நுண்ணோக்காடிகள், பூதக் கண்ணாடிகள், தொலைநோக்கிகளிலிருந்து எந்த அறிவிப்பாளரும் தப்ப முடியாமல் ஆயினர்.

தாங்கள் பெற்ற பிள்ளைகளை எப்படித் தெரிந்து வைத்திருந்தார்களோ அந்த அளவுக்கு அறிவிப்பாளர்களை அந்த அறிஞர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஓர் அறிவிப்பாளரின் பெயரைச் சொன்னால் போதும். அவர்களின் ஜாதகங்கள் அத்தனையையும் அள்ளிப் போடும் அளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார்கள். ஹதீஸ் கலை எனும் துறையில் எத்தர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் நுழைகின்ற அத்தனை வாசல்களையும், ஓட்டை உடைசல்களையும் அடைத்தார்கள். ஹதீஸ் கலை துறையில் ஒவ்வொரு பிரிவிலும் பெரும் ஆய்வுப் புரட்சி படைத்தனர்.

அறிவிப்பாளர்கள் பற்றிய குறை நிறைக்காகவே ஒரு துறை, ஹதீஸ்களின் குறைகளை மட்டும் கண்டறிவதற்கு ஒரு துறை, அறிவிப்பாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசி ஆராய்வதற்காகவும் அவர்களது சரியான, பலவீனமான ஹதீஸ்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வதற்காகவும் ஒரு துறை, பலவீனமானவர்களை மட்டும் கண்டறிவதற்காக ஒரு துறை, பொய்யர்கள் மற்றும் ஹதீஸ் கலையில் விடப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கு ஒரு துறை என்று பல்வேறு முனைகளில் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களைக் காப்பதற்குப் பாதுகாப்பு வளையங்கள் ஹதீஸ் துறையில் பலமாக நிறுவப்பட்டன.

கல்வி, கலை அறிவியல் வளர்ச்சியின் முடிசூட்டி, கொடி கட்டிப் பறக்கின்றோம் என்று தம்பட்டம் அடிக்கின்ற நவீன கணிணி யுக வல்லுநர்கள், இந்த ஹதீஸ் துறையில் சற்று உற்று நோக்க வேண்டும். கணிணி இல்லாத அந்தக் காலத்தில் இப்படி ஓர் ஆவணப் புரட்சியா? என்று அதிசயித்துப் போவார்கள்; அதிர்ச்சியில் உறைந்து போவார்கள்.

அவர்கள் கொண்டிருந்த அந்த அளவுகோல்கள், ஆவணப் புரட்சி இன்றைய காலத்தில் உள்ள இந்தப் பாவிகளுக்கு சாத்தியமில்லை. அவர்கள் கொண்டிருந்த கல்வி, அர்ப்பணிப்பு, பேணுதல் போன்ற பண்புகளை இவர்களும் கொண்டிருந்தால் இவர்களாலும் இதைச் சாதிக்க முடியும். ஆனால் அப்படிப்பட்டவர்கள் கிடைப்பது அரிதிலும் அரிதாகும்.

இப்போது இஸ்லாத்தின் எதிரிகள் தீட்டிய சதித் திட்டத்தை விரிவாக அல்லாமல் ஓர் எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.

குர்ஆன், ஹதீஸ் பாதையைத் தவிடுபொடியாக்குகின்ற வேலையை மட்டும் அவர்கள் செய்யவில்லை. மக்கள் நாசமான பாதையில் இருந்து கொண்டிருந்தார்கள். ஆனால் “அவர்கள் இருக்கும் பாதை குர்ஆன், ஹதீஸ் பாதை தான்; அதைத் தான் முஸ்லிம்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் சரியான வழியில் தான் இருக்கின்றார்கள்’ என்ற மாயையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

கஸ்ஸாலியின் இஹ்யாவும் இந்த வேலையைத் தான் மக்களிடம் செய்து கொண்டிருக்கின்றது என்பதைப் பின்னர் நாம் பார்ப்போம். முதலில் சதிகாரர்களின் சதியைப் பட்டியலிடுவோம்.

ராஃபிளிய்யா என்ற ஷியா பிரிவினர்

இவர்களிடமிருந்து தான் ஒட்டு மொத்த மதம் மாறும் குழுக்களும் தோன்றின. வழிகேடுகளின் ஊற்றுக்கண்கள் இந்த சாராரிடமிருந்து தான் பிறந்து, பிரிந்தன.

“(ஷியாக்களின்) சிறப்புகள்’ தொடர்பான பொய்யான ஹதீஸ்களின் தொடக்கமே ஷியாக்களிடமிருந்து தான் உருவானது. தங்கள் எதிர் அணியினர் மீது கொண்டிருந்த பகைமையின் காரணமாக தங்கள் (ஷியா) அணிக்கு ஆதாரவான பல்வேறு ஹதீஸ்களை தொடக்கத்தில் இவர்கள் தான் இட்டுக்கட்டினார்கள்.

இவ்வாறு நஹ்ஜுல் பலாகா என்ற நூலின் விரிவுரையில் அதன் ஆசிரியர் இப்னு அபில் ஹதீத் தெரிவிக்கின்றார்.

ராபிளிய்யா என்ற பிரிவினரில் கதாபிய்யா என்று ஒரு சாரார் உள்ளனர். இவர்களுடைய சாட்சியத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. காரணம், தங்கள் கருத்தை ஆதரிப்பவர்களிடம் பொய் சாட்சியம் சொல்லலாம் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று இமாம் ஷாஃபி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மனோ இச்சையைப் பின்பற்றுகின்ற சாராரில் ராபிளிய்யாக்களை விட மிக அதிகமாகப் பொய் சொல்கின்ற எவரையும் நான் கண்டதில்லை என்றும் இமாம் ஷாஃபி கூறுவதாக இமாம் கதீப் தெரிவிக்கின்றார்கள்.

மனோ இச்சையைப் பின்பற்றுபவர்களில் உண்மை சொல்பவர்களும் இருக்கின்றார்கள். அதனால் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கதாபிய்யா என்ற ராபிளிய்யா கூட்டத்தின் சாட்சியத்தை ஏற்க முடியாது. இதுபோன்று கத்ரிய்யா என்ற சாராரின் சாட்சியத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், ஒரு பொருள் உருவாகின்ற வரை அந்தப் பொருள் அல்லாஹ்வுக்குத் தெரியாது என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் என்று ஹனபி மத்ஹபைச் சேர்ந்த அபூயூசுப் தெரிவிக்கின்றார்.

கதாபிய்யா என்றால் யார்? என்று இப்ராஹீம் அவர்களிடம் கேட்கப்பட்டது. இவர்கள் ராபிளிய்யாவின் ஒரு வகையினர் என்று அவர் கூறியதாக அபூஅய்யூப் தெரிவிக்கின்றார்.

“ஹதீஸ்களை நான் யாரிடமிருந்து செவியுற வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்கள்?” என்று அபூ இஸ்மா என்பார் இமாம் அபூஹனீபாவிடம் வினவிய போது, “ஷியாவைத் தவிர மனசாட்சிப்படி நடக்கின்ற ஒவ்வொரு நீதமானவரிடத்திலும் கேட்டுக் கொள். காரணம் ஷியாக்களுடைய அடிப்படைக் கொள்கை, முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்களை வழிகெடுப்பது தான்’ என்று கூறினார்கள். இதை இமாம் கதீல் அறிவிக்கின்றார்.

(நூல்: அல்கிஃபாயா)

பித்அத்தை பிரச்சாரம் செய்கின்ற அழைப்பாளராக இல்லாத பித்அத்வாதிகளிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டுப் பதிவு செய்யலாம். ஆனால் ராபிளிய்யாக்களைத் தவிர! காரணம் அவர்கள் பொய் சொல்கின்றார்கள் எனறு யஸீத் பின் ஹாரூன் தெரிவிக்கின்றார். (நூல்: அல்முன்தகா)

இமாம் மாலிக்கிடம், ராபிளிய்யாவைப் பற்றிக் கேட்கப்பட்ட போது, “அவர்களுடன் பேசாதீர்கள். அவர்களிடமிருந்து ஹதீஸ்களையும் அறிவிக்காதீர்கள். காரணம் அவர்கள் பொய் பேசுகின்றார்கள்” என்று சொன்னதாக அஷ்ஹப் வழியாக யூனுஸ் பின் அப்துல் அஃலா தெரிவிக்கின்றார். (நூல்: அல்முன்தகா)

ராபிளிய்யாவைத் தவிர நான் சந்தித்த அத்தனை பேரிடமிருந்து கல்வியைக் கற்றுக் கொள்கிறேன். ராபிளிய்யாக்கள் ஹதீஸை இட்டுக்கட்டுவது மட்டுமல்லாமல் அதை மார்க்கமாக ஆக்கிக் கொண்டார்கள் என்று ஷரீக் தெரிவிக்கின்றார்கள். (நூல்: அல்முன்தகா)

மக்களை (அறிஞர்களை) நான் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ராபிளிய்யாக்களைப் பொய்யர்கள் என்று தான் குறிப்பிடுகின்றார்கள் என அஃமஷ் தெரிவிக்கின்றார். (நூல்: அல்முன்தகா)

மின்ஹாஜுல் நதாமா என்ற நூலைப் பற்றி என்ற நூலைப் பற்றி ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, தமது மின்ஹாஜுஸ் ஸுன்னாவில் குறிப்பிட்டதாவது: இதன் ஆசிரியர் ராபிளிய்யாக்களின் தலைவர்களான இப்னு நுஃமானில் முஃபீத், அவரது மாணவர்கள் தராஜிகி, அபுல்காஸிம் மவ்சூவி, தூஸி போன்றோரின் பாதையில் சென்றுள்ளார். ராபிளிய்யாக்கள் அடிப்படையில் ஆய்வு, விவாதம், ஆதாரங்கள் ரீதியான அறிவோ, அனுபவமோ இல்லாதவர்கள். ஹதீஸ்களைப் பற்றியும் அறவே ஞானம் இல்லாதவர்கள். ஸஹீஹ் லயீப் மத்தியில் ஹதீஸ்களைப் பிரித்துப் பார்க்கின்ற விபரமும் இல்லாதவர்கள். அவர்கள் ஆதாரமாகக் கொள்வது சங்கிலித் தொடர் (இஸ்னாத்) அறுந்து போன செய்திகளைத் தான்.

இந்த செய்திகளில் அதிகமானவை இட்டுக்கட்டப்பட்ட பொய்ச் செய்திகள். இன்னும் சொல்லப் போனால் இறைமறுப்பான செய்திகளாகும்.

அபூமிக்னப், லூத் பின் யஹ்யா போன்ற ஆட்களின் அறிவிப்புகளை மட்டும் தான் இவர்களது ஆலிம்கள் நம்புவார்கள்.

ராபிளிய்யாக்கள் (ஷியாக்கள்) மக்களில் அதிகமாகப் பொய் சொல்பவர்கள் என ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்தக் கருத்தில் உள்ளனர்.

இது ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்ற கருத்தின் சாரம்சமாகும்.