கிரேக்கத் தத்துவத்தில் இறங்கிய கஸ்ஸாலி

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 13

கிரேக்கத் தத்துவத்தில் இறங்கிய கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இஹ்யாவைப் பற்றி பல்வேறு மார்க்க அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கடந்த ஜூலை இதழில் ஹாபிழ் தஹபீ அவர்களின் விமர்சனத்தையும், விழிப்பூட்டும் எச்சரிக்கையையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியருல் அஃலாமின் நுபலாவில் குறிப்பிடுவதாவது:

கஸ்ஸாலி பல்வேறு அறிஞர்களின் கண்டனத்திற்கும், கடிந்துரைக்கும் உள்ளானார். விதியைப் பற்றிய அவரது அறியாமைக் கருத்தும் கண்டனக் கணைகளுக்கு இலக்கானது.

“விதியைப் பற்றி சில ரகசியங்கள் உண்டு. அதைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்பது கஸ்ஸாலியின் கருத்தாகும்.

விதிக்கு என்ன ரகசியம் இருக்கின்றது? ஆய்வின் மூலம் அதை அடைய முடியும் என்றால் கண்டிப்பாக அதை அடைந்து விடலாம். நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மூலம் அடைய முடியும் என்றால் அதைப் பற்றிக் கூறுகின்ற ஆதாரப்பூர்வமான எந்த ஒரு ஹதீசும் இல்லை. ஆன்மீக நிலை, அகமிய ஞானத்தின் மூலம் அதை அடைய முடியும் என்று கூறினால் அது அர்த்தமற்ற ஓர் அவியல் வாதமாகும்.

விதியின் ரகசியத்தைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கஸ்ஸாலி கூறுகிறார். நாம் விதியில் மூழ்கி விவாதிக்கக் கூடாது என்று வேண்டுமானால் இதற்கு விளக்கம் கொடுக்கலாமே தவிர கஸ்ஸாலியின் இந்தக் கருத்தில் வேறெதுவும் இல்லை.

ஹாபிழ் தஹபீ அவர்கள் மேலும் குறிப்பிடுவதாவது:

இவர் (கஸ்ஸாலி) கிரேக்கத் தத்துவத்தை இழித்தும் பழித்தும் “கிதாப் தஹாஃபுத்’ (தத்துவத்தின் வீழ்ச்சி) என்ற நூலை எழுதினார். அதில் கிரேக்கத் தத்துவவாதிகளின் குறைகளை அம்பலப்படுத்துகின்றார். அதே சமயம் அந்த நூலில் பல இடங்களில் கிரேக்கத் தத்துவவாதிகளின் கருத்துக்களுக்கு உடன்படவும் செய்கின்றார். இவ்வாறு அவர் உடன்படுவதற்குக் காரணம் அவர் அதை உண்மை என்று நம்புவது தான்.

ஹதீஸ் துறையில் அனுபவம் இல்லாதவர்

இவருக்கு ஹதீஸ் துறையில் எந்த ஞானமும் இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் அறிவின் அடிப்படையில் முடிவு செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற நபிவழியைப் பற்றிய போதிய அனுபவமும் இல்லை.

இக்வானுஸ் ஸஃபா (தூய்மையான எடுகளின் சகோதரர்கள்) என்ற நூலை எழுதிய இவருக்கு இயல்பாகவே கிரேக்கத் தத்துவஞானிகள் மீது காதல் இருக்கின்றது.

(இக்வானுஸ் ஸஃபா என்று அழைக்கப்படுபவர்கள் ஆன்மீக ரகசிய அந்தரங்க ஜமாஅத்தினர் ஆவர்.)

இவர்கள் கிரேக்க தத்துவத்தையும் அந்தரங்க ஞானம் என்ற கோட்பாட்டையும் இஸ்லாமியக் கொள்கையுடன் கலப்படம் செய்தனர்.

இந்தத் தவறான கொள்கை ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் நடுவில் பஸராவில் தோன்றியது. இவர்கள் இந்தக் கொள்கை தொடர்பாக ஐம்பது ஏடுகளை இயற்றியுள்ளனர். அந்த ஏடுகளுக்குரிய அட்டவணையையும் தயார் செய்தனர். இவர்களின் முதன்மையான நோக்கம் ஏகத்துவ அடிப்படையில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியை நீர்த்துப் போகச் செய்து நிர்மூலமாக்குவது தான். இது நீங்காத கொடிய நோய்! தணியாத அரிப்பு! உயிர் கொல்லும் கொடிய விஷம்!

கஸ்ஸாலி பெரிய அறிவாளிகளின், சிறந்தவர்களின் பட்டியலில் இல்லையென்றால் அவர் அழிந்து தான் போக வேண்டும். எச்சரிக்கை! எச்சரிக்கை! இந்த நூல்களின் அபாயங்களிலிருந்து எச்சரிக்கை!

மார்க்கத்தில் இல்லாதவைகளை முதன்முதலில் தோற்றுவித்த ஒரு சாரார் உண்டு! அவர்களின் சந்தேகங்களுக்கு நீங்கள் இரையாகிவிடாமல் உங்களது மார்க்கத்தைக் கொண்டு நீங்கள் தப்பி ஓடிவிடுங்கள். அவ்வாறு இல்லையெனில் நீங்கள் தடுமாற்றத்திலும், தட்டழிவிலும் வீழ்ந்துவிடுவீர்கள். வெற்றியையும் ஈடேற்றத்தையும் நாடுபவர் அல்லாஹ்வை வணங்குவதில் தன்னைப் பிணைத்துக் கொள்வாராக! அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுவதில் நீடித்து நிலைத்திருப்பாராக!

இஸ்லாத்தில் உறுதிப்பாட்டைக் கடைப்பிடித்து தன்னுடைய எஜமானாகிய அல்லாஹ்விடத்தில் முற்றிலும் பணிந்து விழுவாராக! நேர்வழியில் சென்ற நபித்தோழர்களைப் போன்று கொள்கையை நிறைவாகப் பெறுவாராக!

அல்லாஹ்வே உதவி புரிபவன். மார்க்க அறிஞரின் நல்லெண்ணத்தின் காரணமாக தான் நாடும் போது அல்லாஹ் அவரை மன்னித்து வெற்றிபெறச் செய்கிறான்.

இவ்வாறு ஹாபிழ் தஹபீ அவர்கள் கஸ்ஸாலியைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்கள்.

மக்ராவியின் விளக்கம்

இஹ்யாவில் உள்ள அதிகமான செய்திகள் இக்வானுஸ்ஸஃபா என்ற கூட்டத்தின் ஏடுகளுக்கு ஒத்திருக்கின்றது என்று ஒப்பீடு செய்து ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். உண்மையில் தஹபீ அவர்கள் கூறியிருப்பது போன்று அது ஒரு நீங்காத, நிவாரணமில்லாத கொடிய நோயாகும். அல்லாஹ் நமக்கு நிவாரணத்தை அளிப்பானாக!

என்ன தான் நல்ல செய்திகள் இஹ்யாவில் ததும்பினாலும் தடம் பதித்தாலும், இந்த உயிர்க் கொல்லி உள்ளே இருந்தால் அதனால் என்ன நன்மை விளையப் போகின்றது? இஹ்யாவில் நன்மை இருக்கின்றது என்று சொன்ன தஹபீ அவர்கள், உயிர்க் கொல்லி என்ற உதாரணத்தைக் கூறுவதன் மூலம் சரியான வழியை சமுதாயத்திற்குக் காட்டிவிடுகின்றார்கள்.

அப்துல் ஃகாஃபிர் என்பவரின் கருத்தை மேற்கோள் காட்டி ஹாபிழ் தஹபீ மேலும் கூறுவதாவது:

கீமிய்யத்துஸ் ஸஆதா வல் உலூம் (ஈடேற்றம் மற்றும் ஞானங்களின் வேதியியல்) என்ற தனது நூலில் கஸ்ஸாலி, பாரசீக மொழியின் வார்த்தைகளைப் போட்டு நிரப்பியிருக்கின்றார். அது தொடர்பான உதாரணங்கள் மற்றும் சட்டங்களை அவர் விளக்கும் போது, ஷரீஅத்தின் வெளிப்படையான சட்டங்களுக்கு நேர்முரணான விளக்கங்களைத் தெரிவித்திருக்கின்றார்.

அவர் இப்படி ஒரு நூலை இயற்றுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். இதுபோன்ற விளக்கவுரையை எழுதாமல் புறக்கணித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

அப்துல் ஃகாஃபிர் அவர்கள் கீமியத்துஸ் ஸஆதா விஷயமாக கஸ்ஸாலியைக் கடுமையாகப் பிடித்து விட்டார். “எனது ஆசிரியர் கஸ்ஸாலி, கிரேக்கத் தத்துவவாதிகளை வயிற்றுக்குள் விழுங்கி விட்டார். அவர்களைத் தனது வயிற்றை விட்டும் வாந்தி எடுத்து வெளியே தள்ளிவிட வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவரால் முடியவில்லை” என்று கஸ்ஸாலியின் மாணவரான அபூபக்ர் பின் அல்அரபி தெரிவிக்கின்றார். இந்த அளவுக்கு கஸ்ஸாலியின் ஆக்கங்கள் தொடர்பான பல விஷயங்களை அப்துல் ஃகாஃபிர் தன் கைவசம் வைத்திருக்கின்றார் என தஹபீ குறிப்பிடுகின்றார்.

கஸ்ஸாலியின் ஆக்கங்களில் உள்ளது தான் இஹ்யா உலூமித்தீன். இது இந்த பூபாகத்தின் கிழக்கு, மேற்கில் வசிக்கின்ற சமுதாய மக்களை சரியான குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

இமாம் இப்னுஸ்ஸலாஹ் அவர்களின் விமர்சனம்

கஸ்ஸாலியின் பல்வேறு ஆக்கங்கள் உள்ளன. அவை ஆட்சேபணைக்கு இலக்காகின்றன. இதற்குக் காரணம் அவற்றில் தெரிவித்திருக்கும் அரிதான கருத்துக்கள் தான். “மன்திக்’ என்ற தர்க்கரீதியிலாகப் பேசுகின்ற கல்வி உண்டு. இது கிரேக்கர்களிடமிருந்து இறக்குமதியான கல்வியாகும். இந்தக் கல்வி தொடர்பாக கஸ்ஸாலி கூறிய கருத்து கடுமையான விமர்சனத்திற்கும், ஆட்சேபணைக்கும் உள்ளானது.

இந்தக் கல்வி பற்றி கஸ்ஸாலி குறிப்பிடுகையில், “இதுதான் அத்தனை கல்விகளுக்கும் முன்னணிக் கல்வியாகும். இதை நன்கு அறியாதவர் எந்தக் கல்வியையும் உறுதியாகத் தெரியாதவர் ஆவார்” என்று தெரிவிக்கின்றார்.

இது முற்றிலும் மறுக்கப்பட வேண்டிய கருத்தாகும். தெளிவான சிந்தனை உள்ள ஒவ்வொருவரும் இயல்பிலேயே தர்க்கரீதியாகப் பேசுபவர் தான். அதே சமயம் தர்க்கரீதியாகப் பேசுகின்ற எத்தனையோ இமாம்கள் தலைதூக்க முடியாமல் கிடந்திருக்கின்றார்கள்.

இதுதான் கஸ்ஸாலியைப் பற்றி இப்னுஸ்ஸலாஹ் செய்கின்ற விமர்சனமாகும்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் விமர்சனம்

இப்னு தைமிய்யா அவர்களிடம் இஹ்யா உலூமித்தீன், கூத்துல் குலூப் (உள்ளங்களின் உணவு) என்ற நூல்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த பதில் வருமாறு:

பொறுமை, நன்றி, இறைநேசம், தவக்குல் போன்ற பண்புகள் தொடர்பான செய்திகளை எடுத்துச் சொல்வதில் இந்த நூற்களில் ஒன்று மற்றொன்றைத் தழுவியது தான். கூத்துல் குலூபின் ஆசிரியர் அபூதாலிப், ஹதீஸ் மற்றும் அதன் கலையைப் பற்றிய நல்ல விபரமும் விளக்கமும் உள்ளவர்.

சூபிஸம், ஆன்மீகம் பேசுகின்ற கஸ்ஸாலி போன்ற ஆட்களின் பேச்சையும், அபூதாலிபின் பேச்சையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது அபூதாலிபின் பேச்சு நியாயமானதாகவும் அழகாகவும், பித்அத்தை விட்டு மிகவும் தூரமானதாகவும் அமைந்திருக்கின்றது. அதே சமயம் கூத்துல் குலூபில் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும், மறுக்கப்பட வேண்டிய வேறு பல செய்திகளும் மண்டிக் கிடக்கின்றன.

இஹ்யாவைப் பொறுத்தவரை அந்நூலில் மனிதனை நாசத்தில் தள்ளுகின்ற பெருமை, தற்பெருமை, முகஸ்துதி, பொறாமை போன்ற தீய பண்புகளை, விபரீதங்களை கஸ்ஸாலி கூறுகின்றார். இவற்றில் பெரும்பான்மையான கருத்துக்கள் அல்ஹாரிசுல் முஹாஸிமி என்பவர் எழுதிய “அர்-ரிஆயா’ என்ற நூலிலிருந்து தடமாற்றம் செய்யப்பட்ட கருத்துக்களாகும்.

அவற்றில் ஏற்கத்தக்கவையும் உண்டு. மறுக்கத்தக்கவையும் உண்டு. விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையும் உண்டு. மொத்தத்தில் இஹ்யாவில் பல பயன்கள் உள்ளன. ஆனால் இதில் இகழப்படவேண்டிய, இழிக்கப்பட வேண்டிய கோட்பாடுகள் பரவிக் கிடக்கின்றன. காரணம் அவை ஏகத்துவம், நபித்துவம், மறுமை தொடர்பாக கிரேக்கத் தத்துவ ஞானிகளின் தகிடுதத்த வார்ப்புகளைக் கொண்டவை.

இஹ்யாவின் ஆக்கம் இப்னு சீனாவின் தாக்கம்

கஸ்ஸாலி எழுதிய நூல்கள் மீது மார்க்க அறிஞர்கள் தங்களது கண்டனக் கணைகளைப் பாய விடுகின்றார்கள். கஸ்ஸாலியைப் பிடித்த நோயே இப்னு சீனா என்றழைக்கப்படும் அலிசென்னாவின் “ஷிஃபா’ என்ற நூல் தான். இந்த நூல் கஸ்ஸாலியிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நூலில் பலவீனமான ஹதீஸ், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏராளம் இடம் பெற்றுள்ளன. சூபிய்யாக்களின் மாய தத்துவங்கள், மயக்கும் மந்திர ஜாலங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அத்துடன் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உள்ளங்களைச் சீர்படுத்துகின்ற பாதையில் உறுதியாக நின்ற நல்லவர்களின் கருத்துக்களும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. குர்ஆன் ஹதீசுக்கு ஒத்த வணக்க வழிபாடுகள், ஒழுக்கப் பண்பாடுகள் இஹ்யாவில் இடம்பிடித்திருக்கின்றன. இதனால் தான் அறிஞர்களுக்கு மத்தியில் இதைப் பற்றிய முடிவு தெரிவிப்பதில் கருத்துவேறுபாடுகள் உள்ளன.

இது ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் விமர்சனமாகும்.