இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்?

எம். ஷம்சுல்லுஹா

இமாம் கஸ்ஸாலி என்று அழைக்கப்படுகின்ற கஸ்ஸாலிக்கு உலக அளவில் ஒரு தாக்கமிருக்கின்றது. அது இந்திய அளவில் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழகத்தில் அவரது தாக்கம் எல்லை தாண்டி ஊடுறுவியிருக்கின்றது.

“வானத்தின் ரட்சகனே! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்த அற்பனின் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!”

என்று இங்குள்ள ஆலிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளிவாசல்களில் நடைபெறுகின்ற பாடசாலைகளில், மழலையர் பள்ளிக்கூடங்களில் பயில வருகின்ற பிஞ்சுகளின் நெஞ்சுகளில் இந்த நஞ்சை ஊற்றியும் ஊட்டியும் விடுகின்றனர்.

பாலர் பாடசாலையுடன் கஸ்ஸாலி வெறி நிற்பதில்லை. பட்டம் வழங்குகின்ற அரபிக் கல்லூரிகளிலும் இந்த வெறி இவர்களது தலையில் ஏறி இவர்களைத் தட்டழியச் செய்கின்றது.

மூன்றாவது அல்லது நான்காவது வகுப்பில் கஸ்ஸாலியின் மின்ஹாஜுல் ஆபிதீன் என்ற நூலை பாடத்தில் வைத்திருக்கின்றனர். 5, 6, 7 ஆகிய வகுப்புகளில் அவர் எழுதிய இஹ்யா உலூமித்தீன் என்ற நூலின் நான்கு பாகங்களை பாடத்தில் வைத்திருக்கின்றனர்.

கல்வி என்றாலே கஸ்ஸாலி தான். கஸ்ஸாலி என்றால் கல்விக் கடல் என்று கஸ்ஸாலி மீது அவர்களுக்கு போதை ஏறியிருக்கின்றது. இந்தப் போதையை மாணவ சிகாமணிகளின் மூளையில் ஏற்றி விடுகின்றார்கள்.

அந்தப் போதைக்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

கஸ்ஸாலி, மூஸா நபியைக் கனவில் கண்டாராம். அந்தக் கனவில் மூஸா நபி, “உமது பெயரென்ன?’ என்று வினவுகின்றார்கள். அதற்கு கஸ்ஸாலி, “முஹம்மத் பின் முஹம்மத் பின் முஹம்மத் அல் கஸ்ஸாலி அத்தூஸீ” என்று பதில் சொல்கின்றார். “உன் பெயரைத் தானே கேட்டேன். நீ முப்பாட்டன் பெயர் வரை அடுக்குகின்றாயே?” என்று மூஸா நபி கேட்கின்றார். இதற்கு, “அல்லாஹ் உங்களிடம் “மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?’ (20:17) என்று மட்டும் தான் கேட்டான். ஆனால் நீங்களோ “இது எனது கைத்தடி. இதன் மீது ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் எனது ஆடுகளுக்கு இலை பறிப்பேன். எனக்கு வேறு பல தேவைகளும் இதில் உள்ளன’ (20:18) என்ற பதிலை அடுக்கியுள்ளீர்கள்” என்று கஸ்ஸாலி சொன்னாராம். மூஸா (அலை) அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டார்களாம்.

இப்படி ஒரு சம்பவத்தைச் சொல்லி, சிறந்த தூதர்களில் ஒருவரான மூஸா (அலை) அவர்களை மட்டப்படுத்தி, கஸ்ஸாலியை உயர்த்திக் காட்டுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தம்மை மூஸா நபியை விடவும், யூனுஸ் நபியை விடவும் உயர்த்திப் பேசாதீர்கள் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், “உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அந்த யூதர், “உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார்.

அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்த (சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச்சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2411, 3408

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3416

ஆனால் இவர்களோ, சூபிஸம் என்ற பெயரில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான ஒரு சித்தாந்தத்தைப் பேசிய, நபி (ஸல்) அவர்கள் பெயரால் பல புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்ட கஸ்ஸாலியை, மூஸா நபியை விட உயர்த்திப் பேசுகின்றார்கள். இந்த அளவுக்கு கஸ்ஸாலி மீதான போதை இவர்கள் கண்ணை மறைக்கின்றது.

கஸ்ஸாலியை மதிப்பீடு செய்ய அவரது நூல்களில் அவர் கொண்டு வந்துள்ள பொய்யான ஹதீஸ்கள் போதும். ஹதீஸ் துறையில் முதவாத்திர் (தலைமுறை தலைமுறையாய் ஒருமித்து அறிவிக்கின்ற செய்தி) என்ற தரம் ஒன்று உண்டு. அந்த ஹதீசுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது தான் கீழ்க்கண்ட ஹதீஸாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 110

இது புகாரி, முஸ்லிம் இன்னும் மற்ற ஏராளமான நூல்களில் இடம்பெற்றுள்ளது. 70க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கின்றார்கள்.

இப்படிப்பட்ட ஹதீஸின் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு, தன் மனம் போன போக்கில், எழுதுகோல் செல்கின்ற வாக்கில் 940க்கு மேற்பட்ட பொய்யான ஹதீஸ்களை இஹ்யா நூலில் பதிவு செய்துள்ளார். இந்த ஹதீஸ்களுக்கு எந்த ஆதாரமும், அடிப்படையும் இல்லை. இவையல்லாமல் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஒரு எண்ணிக்கை தேறும். பலவீனமான ஹதீஸ்கள் ஒரு தொகை தேறும். இப்படிப்பட்ட இஹ்யா உலூமித்தீனை, போலியான, பொய்யான ஹதீஸ்களைக் கொண்டு நிரப்பிய – பரப்பிய ஒருவரை எப்படி ஓர் அறிஞராக ஏற்றுக் கொள்ள முடியும்? எப்படி மக்கள் தலைவராக வர்ணிக்க முடியும்?

இந்த ஒன்றுக்காகவே இவர் முதலில் ஓரங்கட்டப்படவும் ஒதுக்கப்படவும் வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாற்றமாக உயரத்திலும் உச்சத்திலும் வைக்கப்பட்டிருக்கின்றார்.

இரண்டாவதாக இவர் ஓரங்கட்டப்பட வேண்டியது இவர் போதிக்கின்ற சூபிஸம் என்ற கொள்கைக்காக! சூபிஸம் என்பது குர்ஆனில் இல்லாத, நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒரு புதிய வழிகெட்ட கொள்கையாகும். மறைந்த அறிஞர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் குறிப்பிடது போன்து “சூஃப்’ என்ற வார்த்தையே அந்நிய வார்த்தையாகும். அரபிய வார்த்தை அல்ல. இது இஸ்லாத்தில் இல்லாத கொள்கையாகும்.

இந்தக் கொள்கையை மையமாக வைத்துத் தான் கஸ்ஸாலி தனது நூலான இஹ்யாவைப் படைத்திருக்கின்றார். இந்த அடிப்படையிலும் இது நிராகரிக்கப்பட வேண்டிய நூலாகும்.

இவர்களின் வேதம் இஹ்யா?

இன்று தமிழக ஆலிம்கள் பொய்யான ஹதீஸ்களை சர்வ சாதாரணமாக எழுதியும் பேசியும் வருகின்றார்கள். இப்படிப்பட்ட ஹதீஸ்களைப் பற்றிப் பேசும் போதும், எழுதும் போதும் இவர்களிடம் எந்தவித உறுத்தலும் உள்ளச்சமும் இல்லை.

பொதுவாக நமது ஏகத்துவம் இதழில் அசத்தியவாதிகள் வெளியிடும் மாத இதழ்களின் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் இந்தப் பத்திரிகைகள் தான் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத செய்திகளை, அவர்கள் சொன்னதாக, பொய்யான ஹதீஸ்களைத் துணிந்து வெளியிடுகின்றன. அதை இந்தக் காலத்திலேயே அடையாளம் காட்டத் தவறிய குற்றத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக இம்மாத இதழ்களின் பெயரைக் குறிப்பிட்டு, “நபி மீது பொய், நரகமே தங்குமிடம்’ என்ற தலைப்பில் ஏகத்துவத்தில் சில பக்கங்களை ஒதுக்கி, அடையாளம் காட்டி வருகிறோம் என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

இந்த ஆலிம்கள் இப்படிப் பொய்யான ஹதீஸ்களை அடித்து விடுவதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற, கஸ்ஸாலி இறக்கிய இஹ்யா உலூமித்தீன் என்ற இவர்களது வேதம் தான்.

இதில் வரக்கூடிய அத்தனை கருத்துக்களையும் ஆய்வுக்கும், அலசலுக்கும் உட்படுத்தாமல் அப்படியே மேடையில் அள்ளிக் கொட்டுவார்கள். இந்த வேதம் தான் நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து பொய்யான, போலியான ஹதீஸ்களைச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் ஓர் அடிப்படைக் காரணமாகும்.

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

அல்குர்ஆன் 15:9

அல்லாஹ் தனது திருக்குர்ஆனில், இறைச் செய்தியைப் பாதுகாப்பதாகச் சொல்கின்றான். அல்லாஹ்வின் இந்தப் பாதுகாப்பு குர்ஆனுக்கு மட்டுமல்ல. நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கும் உண்டு. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் சொல்லும் ஒரு வஹீயாகும்; இறைச் செய்தியாகும். இதைப் பின்வரும் வசனங்களில் பார்க்கலாம்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.

அல்குர்ஆன் 53:3

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 42:51

இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவித்த ஒவ்வொரு அறிவிப்பாளரின் வாழ்க்கைக் குறிப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படி சுமார் 5 லட்சம் பேரின் வாழ்க்கை ஆய்வுக்குள்ளானது. இந்தத் துறையில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மகத்தான சேவையையும் மாபெரும் பணியையும் ஆற்றியிருக்கின்றார்கள்.

புனிதப் போராளிகள்

எல்லைப் படைக் காவலர்களைப் போன்று இந்தப் போராளிகள் ஹதீஸ் என்ற எல்லைக்குள் நுழைகின்ற பொய்யான ஹதீஸ்களைத் தாக்கி அழித்துள்ளார்கள். அந்தப் போராளிகளில் ஒருவர் தான் ஹாபிழ் இராக்கி என்று அறியப்பட்ட அப்துர்ரஹீம் பின் அல்ஹுஸைன் ஆவார். இவர் ஹிஜ்ரி 725 (கி.பி. 1325)ஆம் ஆண்டு பிறந்தார். ஹிஜ்ரி 806 (கி.பி. 1404)ல் இறந்தார்.

ஹாஃபிழ் இராக்கி அவர்கள் இஹ்யா என்ற நூலுக்கு உள்ளே புகுந்து பொய்யான, பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளம் காட்டினார்கள். இன்று கம்ப்யூட்டர் யுகத்தில் உள்ளவர்களையே ஹதீஸ் துறை திக்குமுக்காடச் செய்கின்றது. ஆனால் அதிர வைக்கும் அச்சு எந்திரங்களின் வளர்ச்சி இல்லாத காலத்தில் ஸஹீஹ் (சரியானது) லயீஃப் (பலவீனமானது) என்று இஹ்யாவில் இடம்பெற்ற ஹதீஸ்களைத் தரம் பிரித்த அவர்களின் தியாக உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நம்மால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அல்முஃங்னீ அலா ஹம்லில் அஸ்ஃபார் ஃபில் அஸ்ஃபார் ஃபீ தக்ரீஜீ மாஃபில் இஹ்யாஇ மினல் அக்பார்

“இஹ்யாவில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களுக்கு மூல நூல்களைத் தேடும் பயணத்தில் பல நூல்களைப் புரட்டுவதைத் தவிர்க்கின்ற ஒரு தன்னிறைவு நூல்”

என்ற நீண்ட பெயரில் ஒரு நூலை இயற்றியுள்ளார்கள்.

அந்த நூலின் முன்னுரையில் அவர்கள் குறிப்பிடுகின்ற ஒரு செய்தியைப் பார்ப்போம்.

நான் இஹ்யா உலூமித்தீனில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் தொடர்பான ஆய்வை 51ல் அதாவது ஹிஜ்ரி 751ல் முடிக்கும் போது அதில் உள்ள சில ஹதீஸ்களுக்கு மூல நூல்களைக் குறிப்பிடுவது எனக்கு மிகச் சிரமமானது. அதனால் 761ஆம் ஆண்டு வரை மூல நூலைக் குறிப்பிடுவது எனக்குத் தாமதமானது. இறுதியில் அவற்றில் எனக்குத் தெரியாமல் போன பல ஹதீஸ்களுக்குரிய மூல நூல்களை அடைவதில் நான் வெற்றியும் அடைந்தேன்.

இவ்வாறு ஹாஃபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பெயரில் ஒரு பொய்ச் செய்தி புகுந்துவிடக் கூடாது என்பதற்காக ஹதீஸ் தொடர்பான மூல நூற்களைத் தேடும் பயணத்தில் ஹாஃபிழ் இராக்கி அவர்கள் தமது வாழ்நாளில் பத்து ஆண்டுகளைத் தொலைத்திருக்கின்றார்கள் என்பதை இந்த முன்னுரையெனும் பொன்னுரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

புனித ஹதீஸில் ஒரு பொய் ஹதீஸ் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக அன்னார் மேற்கொண்ட பொறுமையையும் போர்க்குணத்தையும் இதில் நாம் காண முடிகின்றது.

அதே வேளையில் கஸ்ஸாலி, நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆள்வதில், மேற்கோள் காட்டுவதில் எந்தவொரு பேணுதலையும் கடைப்பிடிக்கவில்லை என்பதையும் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

எரிக்கப்பட்ட இஹ்யா உலூமித்தீன்

இதன் காரணத்தால் அமீருல் முஃமினீன் என்றழைக்கப்பட்ட யூசுப் பின் தாஷிஃபீன் அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் இஹ்யா உலூமித்தீன் என்ற நூலின் அனைத்துப் பிரதிகளையும் எரிக்கும்படி உத்தரவிட்டார்கள்.

யார் இந்த யூசுப் பின் தாஷிஃபீன்?

எகிப்து, சிரியா, ஹிஜாஸ் நாடுகளின் ஆட்சியாளராக இருந்து அய்யூபிய அரசாட்சியை நிறுவிய ஸலாஹுத்தீன் யூசுப் பின் அய்யூப் (பிறப்பு: ஹிஜ்ரி 532 – கி.பி. 1138, இறப்பு: ஹிஜ்ரி 589 – கி.பி. 1193) அவர்களை நாம் அனைவரும் அறிவோம். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியத்தையும் கவுரவத்தையும் தேடித் தந்தவர். பைத்துல் முகத்தஸை கிறித்தவர்களிடமிருந்து மீட்டுத் தந்த மாபெரும் வீரர். இந்த மாவீரர் “கிழக்கத்திய யூசுப்’ என்று அறியப்பட்டார்.

யூசுப் பின் தாஷிஃபீன்  (பிறப்பு: ஹிஜ்ரி 400 – கி.பி. 1009, இறப்பு: ஹிஜ்ரி 500 – கி.பி. 1106) மக்ரிப் என்ற மொராக்கோ நாட்டின் “மேற்கத்திய யூசுப்’ என்று அழைக்கப்பட்டார். இவரது ஆட்சி தெற்கே கானா வரையிலும், வடக்கே ஸ்பெயின் வரையிலும் நீண்டிருந்தது. இவரது ஆட்சியை முராபிதீன் ஆட்சி (ஆப்ம்ர்ழ்ஹஸ்ண்க் ஊம்ல்ண்ழ்ங்) என்று அழைப்பார்கள்.

முராபித் என்பது ரிபாத் – உறுதியாக இருத்தல் என்ற மூலச் சொல்லிலிருந்து வந்த வார்த்தையாகும். இந்த வார்த்தை திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் இடம்பெறுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.

அல்குர்ஆன் 3:200

உண்மையில் இந்தப் பெயருக்குப் பொருத்தமான இம்மக்கள் திகழ்ந்தனர்.

யூசுப் பின் தாஷிஃபீன், உறுதி மிக்க நம்பிக்கையாளராக, இறையச்சம் நிறைந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மக்களிடத்தில் “மன்னர்’ என்ற பெயரெடுக்காமல் “அமீருல் முஃமினீன்’ என்ற பெயரெடுத்த தலைசிறந்த ஆட்சியாளர். இவருடைய ஆட்சியில் தான் ஆலிம்கள் இஹ்யா உலூமித்தீனுக்கு எதிராக ஏகோபித்துக் கிளம்பினர். உண்மையான அந்த உலமாக்களின் வேண்டுகோளின்படி இஹ்யா உலூமித்தீனைக் கொளுத்த உத்தரவிட்டார்.

ளீகூரீடுறீளீறீ ளீகூஹீளுலூளுனீ கூஹீசுளு வீஹீலூளீமீ ருகூணூசூ ளீகூகுலூஞூ சூஞூ ளுறீகூ ரீசூலூசு ளீகூசூலீசூஞூலூஞூ றீஞூ ஸீளீணுழுலூஞூ

“அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் உத்தரவின் பேரில் இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டிய உண்மைக் காரணங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கின்றார்கள்.

இஹ்யாவின் தாக்கம் தமிழகத்தில் எல்லை தாண்டி ஊடுறுவியிருப்பதால் அதை உடைக்க வேண்டும் என்பதற்காக இன்ஷா அல்லாஹ் அதன் தமிழாக்கத்தை வரும் இதழில் அளிக்க இருக்கிறோம்.