வாழ்வுரிமைக்கே வாக்குரிமை

வாழ்வுரிமைக்கே வாக்குரிமை

நாடு விடுதலையடைந்த பிறகு 1992ஆம் ஆண்டு வரை தமிழக முஸ்லிம்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்கு வங்கியாகவே இருந்தனர். 1992ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இஸ்லாமிய சமுதாயம் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டது. எனினும் இதன் பலனாய் முஸ்லிம் சமுதாயத்தின் வாக்குகள் திராவிடக் கட்சிகளை நோக்கியே சென்றன.

இக்கால கட்டத்தில் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்த தவ்ஹீத் ஜமாஅத், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. ஆரம்பத்தில் ஏகத்துவப் பிரச்சாரம் என்ற வட்டத்தில் மட்டும் நின்ற தவ்ஹீத் ஜமாஅத், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர் சமுதாயப் பணி என்ற இலட்சியத்தையும் கையிலெடுத்து தனது வட்டத்தை வரிவாக்கம் செய்தது. அதன் எதிரொலி தான் தமுமுக என்ற இயக்கத்தின் உதயமாகும்.

தவ்ஹீதுவாதிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் தமிழகத்தில் அரசியல்ரீதியாக ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்தப் புரட்சியின் விளைவாக 1998ல் தேர்தல் புறக்கணிப்பு என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

1997ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காவல்துறை கோவையில் 19 முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்றது.

முஸ்லிம்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற காவல்துறை கயவர்களின் மீது – காட்டு மிருகங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் கருணாநிதி என்று சமுதாயம் காத்திருந்தது. ஆனால் கருணாநிதியோ அந்தக் காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமல்ல! முஸ்லிம்களின் உயிரைப் பறித்து, உதிரம் குடித்த காட்டுவிலங்குகளுக்கு விருது வழங்கிக் கவுரவித்தார். எரிகின்ற முஸ்லிம்களின் இதயங்களில் எண்ணையை ஊற்றினார்.

அந்தப் பாதிப்பையும் கொதிப்பையும் வெளிப்படுத்தும் விதமாகத் தேர்தல் புறக்கணிப்பை தமுமுக சார்பில் அறிவித்தோம். அதனுடைய வீரிய பிரச்சாரம் மக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இது தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவிலும் பிஜேபிக்கு சாதகமான பலனை அளித்தது. அந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி தோல்வியடைந்து, அதிமுக அணி வென்றது.

அதிமுக ஆதரவில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாரதீய ஜனதா அரசை 13 மாதங்களில் ஜெயலலிதா கவிழ்த்தார். 1999ஆம் ஆண்டு நாடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலைச் சந்தித்தது. 1999 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலையொட்டி ஜூலை 4, 1999ல் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தினோம். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருந்து கொண்டு, அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தோம்.

2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படாததாலும், திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததாலும் எந்தக் கட்சியையும் முழுமையாக ஆதரிக்காமல் சமுதாய ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்து ஆதரித்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

இதன் பின்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. எனவே இடஒதுக்கீட்டை மையமாக வைத்து திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தோம். இவையனைத்தும் தமுமுக தவ்ஹீதுவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்.

இதன் பின்னர் தேர்தல் காலங்களில், களங்களில் கண்ட அரசியல் தலைவர்கள் சந்திப்பு, மரியாதைகள் போன்றவை தமுமுகவை பதவி மோகத்தில் தள்ளியது. அதனால் தவ்ஹீதுவாதிகள் தமுமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உருவானது. இந்த ஜமாஅத், 2006, ஜனவரி 29 அன்று குடந்தை குலுங்கும் அளவுக்கு மாபெரும் பேரணியை நடத்தியது.

அதன் விளைவாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நீதிபதி ராஜரத்தினம் தலைமையில் இடஒதுக்கீட்டிற்கான ஆணையம் அமைத்தார். அந்த அடிப்படையில் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருந்த கோபம் காரணமாக திமுக வென்றது. தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு இல்லாமல் இருந்தால் அதிமுக பலமான எதிர்க்கட்சியாக வந்திருக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் அப்போது எழுதினார்கள்.

திமுக ஆட்சிக் காலத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கியது. இதற்கு நன்றிக்கடனாக தவ்ஹீத் ஜமாஅத் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதவரளித்தது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

2011 சட்டமன்றத் தேர்தலிலும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை உயர்த்தித் தரும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாஅத் எடுத்தது. தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கோரிக்கையை அதிமுக கண்டுகொள்ளவில்லை. திமுக ஏற்றுக் கொண்டது. இதனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திமுகவை ஆதரித்தது. மின்வெட்டு, ஊழல் போன்ற திமுக எதிர்ப்பு அலையில் திமுக தோல்வியைத் தழுவினாலும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுக அசைந்து கொடுக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் காலத்தில் தான் சமுதாயத்தின் கோரிக்கையை ஏறிட்டுப் பார்க்கும்; என்னவென்று கேட்கும். இதைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகமே ஸ்தம்பிக்கின்ற வகையில் ஜனவரி 28, 2014 அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு மண்டலங்களில் தமிழகம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

இதன் விளைவாக அதிமுக அரசு, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில பிற்பட்டோர் நல வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது. அரசியல் சட்டப்படி, இதுதான் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கான வழிமுறையாகும். இந்த அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தனது ஆதரவை அளிக்கின்றது.

இதுவரை இஸ்லாமிய சமுதாயம் தனது வாக்குரிமையை உணராமல் இருந்தது. விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு உதவாக்கரை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை உருவாக்குவதற்காக சமுதாயத்தின் வாக்குகள் பாழாகிக் கொண்டிருந்தன; பயனற்றுப் போயின.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இப்போது இடஒதுக்கீடு என்ற சமுதாய நலனை மையமாகக் கொண்டு, வாழ்வுரிமையை ஆதாரமாகக் கொண்டு அதன் வாக்குரிமை சுழல்கின்றது.

இரு திராவிடக் கட்சிகளுமே இடஒதுக்கீடு எனும் முஸ்லிம்களின் வாழ்வுரிமையை தேர்தல் களத்தில் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சட்டமன்றம், நாடாளுமன்றம் சென்று சாதிக்காமல் சந்தியில் நின்று தவ்ஹீத் ஜமாஅத் சாதித்திருக்கின்றது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! இனி இந்த இடஒதுக்கீடு எனும் வாழ்வுரிமை கிடைக்க ஒட்டுமொத்த சமுதாயமும் ஓரணியில் நின்று அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகளின் ஒன்றிரண்டு எம்.பி. சீட்டுக்களைப் பார்க்காமல் நாளைய நமது தலைமுறையின் மருத்துவ, பொறியியல், தொழிற்கல்வியின் சீட்டுக்களையும் அரசு வேலைவாய்ப்புகளையும் கவனத்தில் கொண்டு, சமுதாய நலனை முன்னிறுத்தி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். நமது வாழ்வுரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

இப்போது சட்டமன்றத்தில் இருக்கின்ற இரண்டு மமக உறுப்பினர்கள் சமுதாயத்திற்காக எதையும் கிழித்துவிடவில்லை. தாங்கள் சார்ந்திருந்த கூட்டணிக் கட்சியைப் புகழ்வதிலும், எதிர்க்கட்சியை விமர்சிப்பதிலும் தான் தங்கள் பதவிக்காலத்தைக் கழிக்கிறார்களே தவிர இடஒதுக்கீட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை. சமுதாயத்தின் பெயரைச் சொல்லி, தமது ஆதாயத்தை மட்டும் பார்க்கும் இவர்களுக்கு வாக்களிப்பது சமுதாயம் தன்னையே நாசத்தில் தள்ளுவதற்குச் சமமாகும்.

மமகவின் நிலை இதுவென்றால், தேர்தல் சமயத்தில் மட்டும் முஸ்லிம் கட்சி என்ற வேஷம் போடும் எஸ்டிபிஐ கட்சி, பாரதீய ஜனதா வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழகத்தில் வடசென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறும் எஸ்டிபிஐ, இனவெறியைப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பார்கள்; கோயில் – தர்கா திருவிழாக்களுக்கும், பொங்கல் தீபாவளி பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்லி டிஜிடல் பேனர் வைப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் நாங்கள் முஸ்லிம் கட்சி அல்ல, எல்லா சமுதாயத்திற்கும் பொதுவான கட்சி என்பார்கள். ஆனால் தேர்தல் போட்டி என்று வந்தால் முஸ்லிம் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். இவர்களின் சந்தர்ப்பவாதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் பேரம் பேசி, இவர்களுக்கு சீட் கிடைக்காததால் இப்போது சமுதாய வேஷம் தரித்துக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. இவர்களை ஆதரிப்பதால் முஸ்லிம் வாக்குகள் பிரிந்து, அது நரேந்திர மோடியின் வெற்றிக்கே வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக, திமுக இரண்டு பெரிய கட்சிகளுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளன. எனவே இந்தத் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. வெற்றி வாய்ப்பு இல்லாத பாரதீய ஜனதா கட்சியும் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தி, முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

அதிமுக, திமுகவிலுள்ள முஸ்லிம் வாக்குகள் கணிசமாகப் பிரிந்தால் அது அங்கு போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சாதகமாகவே அமையும். இது தெரிந்து, வேண்டுமென்றே பாரதீய ஜனதாவை வெற்றிபெற வைக்கும் நோக்கில் இவர்கள் அந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் இவர்கள் அதிகப்பட்சமாக பத்தாயிரம் வாக்குகள் வாங்கினாலும் அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. இதை வைத்து அடுத்த தேர்தல்களில் இவர்கள் திமுக, அதிமுகவுடன் பேரம் பேசுவதற்கு வேண்டுமானால் இந்த வாக்குகள் பயன்படும். சமுதாயத்திற்கு இதனால் கேடு தான் விளையும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பத்தாயிரம் வாக்குகள் பெற்ற மமக இதைத் தான் செய்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே இந்த சந்தர்ப்பவாதிகளுக்கு வாக்களிப்பது பாரதீய ஜனதாவுக்கு நேரடியாக வாக்களிப்பதற்குச் சமம். நம்முடைய கைகளாலேயே நாசத்தைத் தேடிக் கொள்ளும் மோசமான செயல் இது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:29

இஸ்லாம் என்றாலே சமுதாயத்திற்கு நன்மையை நாடுவது தான்.

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே நலம் நாடுவது தான்என்று கூறினார்கள். நாங்கள், “யாருக்கு (நலம் நாடுவது)?” என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத் தாரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 57

நம்முடைய வாழ்வுரிமைக்கு வாக்களித்து, நம்முடைய சமுதாய நலனைக் காப்போம்; நாசத்தைத் தவிர்ப்போம்.