விமர்சனங்களும் விளக்கங்களும்

விமர்சனங்களும் விளக்கங்களும்

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்

கண்களால் பிறை பார்க்கப்பட்ட தகவல் தத்தமது பகுதியில் இருந்து வந்தால் தான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 633

 இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். ஆனால் இலங்கையைச் சார்ந்த சில மவ்லவிகளும் தமிழகத்தைச் சார்ந்த  சில மேதாவிகளும் (?) இதனை பலவீனம் என்று கூறி வருகின்றனர்.

இந்த ஹதீஸ் பலவீனம் என்பதற்கு அவர்கள் வைக்கின்ற சான்றுகள் சரியானவை தாமா? என்பதை நாம் காண்போம்.

திர்மிதியில் கீழ்க்கண்ட அறிவிப்பாளர்கள் வழியாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பாளர் தொடர்

  1. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.
  2. அபூ ஹுரைரா (ரலி) கூறியதாக ஸயீதுல் மக்புரி அறிவிக்கிறார்.
  3. ஸயீதுல் மக்புரி கூறியதாக உஸ்மான் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
  4. உஸ்மான் பின் முஹம்மத் கூறியதாக அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ அறிவிக்கிறார்.
  5. அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ கூறியதாக இஸ்ஹாக் பின் ஜஃபர் பின் முஹம்மத் அறிவிக்கிறார்.
  6. இஸ்ஹாக் பின் ஜஃபர் பின் முஹம்மத் கூறியதாக இப்ராஹிம் இப்னுல் முன்திர் அறிவிக்கிறார்.
  7. இப்ராஹிம் இப்னுல் முன்திர் கூறியதாக இமாம் புகாரி அறிவிக்கிறார்.
  8. இமாம் புகாரியிடம் நேரில் செவியுற்று திர்மிதி இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் தொடரில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பவர் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அறிவிக்கிறார். இந்த வழியாக வந்தால் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என இமாம் இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்துள்ளார். இது தான் இந்த ஹதீஸ் பலவீனம் எனக் கூறுபவர்கள் எடுத்து வைக்கும் வாதமாகும்.

ஆனால் இமாம் இப்னு ஹிப்பான் உடைய இந்த விமர்சனம் ஏற்றுக் கொள்ளத் தகுந்ததாக இல்லை. இதை நாமாகக் கற்பனை செய்து கூறவில்லை. ஹதீஸ் கலையை ஆய்வு செய்யக் கூடிய இமாம்களே இவ்வாறு கூறியுள்ளனர்.

இமாம் இப்னுல் கய்யூம் அவர்கள் தமது நூலில் இப்னு ஹிப்பானின் விமர்சனத்திற்குப் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்.

“உஸ்மான் பின் முஹம்மத் அவர்களிமிருந்து இந்த அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பார் அறிவிக்கின்ற அறிவிப்புகளை ஒரு பொருட்டாக  எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பார் ஹதீஸ்களில் ஒன்றுமில்லாதவராவார்” என்ற இமாம் இப்னு ஹிப்பானின் விமர்சனம் மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். ஏனெனில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பாரை ஒரு பெரும் கூட்டமே நம்பகமானவர் என்றுரைத்து அவரைப் பாராட்டியுள்ளனர். இமாம் அஹ்மத், நஸயீ, அபூ ஹாதிம், இப்னுமயீன், இப்னுல் மதீனி, இஜ்லீ, இப்னுல் ஹர்ராஸ், திர்மிதி, அல்பர்கிய்யூ, ஹாகிம், இமாம் புகாரி ஆகியோர் இவரை நம்பகமானவர் என உறுதிப்படுத்தியவர்களில் உள்ளோராவர். இப்னு ஹிப்பான் மட்டும் தனித்து, மேற்கண்ட தன்னுடைய விமர்சனத்தைக் கூறியுள்ளார். இதன் காரணமாகத் தான் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் தமது தஹ்தீப் என்ற நூலில், “இப்னு ஹிப்பான் வேறு யாரையோ நாடுவது போன்று தெரிகிறது. (இவ்விமர்சனத்திற்கு உரியவர்) யார் என்று அவருக்கு குழப்பமாக்கப்பட்டு விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல்: இப்னு கய்யும் அல்ஜவ்ஸிய்யா  பாகம்: 3, பக்கம்: 8

மேலும் இதே நூலில் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அப்துல்லாஹ்பின் ஜஃபர் அறிவிக்கின்ற ஹதீஸை இமாம் இப்னு தைமிய்யா மிகச் சிறந்த அறிவிப்பாளர் தொடர் என்று கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.

மேலும் இமாம் தஹாவி  அவர்கள் தம்முடைய பயானு முஸ்கிலில் ஆஸார் என்ற நூலில்  அல்மக்ரமீ என்பார் ஹதீஸ்களில் மிகவும் புகழப்படுபவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இமாம் தஹபீ அவர்கள் “தவறாக விமர்சனம் செய்யப்பட்ட நம்பகமானவர்கள்” (மன் துகுல்லிம ஃபீஹி வகுவ முவஸ்ஸகுன்) என்ற பெயரில் ஒரு நூலைத் தொகுத்துள்ளார்கள். அதில் தவறாக விமர்சனம் செய்யப்பட்டவர்களின் பெயர்களைத் தொகுத்துள்ளார்கள்.

அப்பட்டியலில் அப்துல்லாஹ் பின் ஜஃபர் அல்மக்ரமீ என்பாருடைய பெயரையும் குறிப்பிட்டு ஒரு பெரும் கூட்டமே இவரை நம்பகமானவர் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்னு ஹிப்பான் இவரைப் பலவீனப்படுத்தியுள்ளார். மேலும் இப்னு முயீன் இவரை நல்லவர் என்று கூறியுள்ளார். (பாகம்: 1, பக்கம்: 107) என்ற தகவலை இடம் பெறச் செய்துள்ளார்கள்

மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஃபர் பலவீனமானவர் என்ற காரணத்தைக் கூறித் தான் உஸ்மான் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அவர் அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார். பலவீனம் என்ற காரணத்தைக் குறிப்பிடுவதால் அப்துல்லாஹ் பின் ஜஃபரின் அனைத்து அறிவிப்புகளையும் மறுக்க வேண்டும்.

புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூது, இப்னுமாஜா, அஹ்மது, தாரமீ போன்ற அனைத்து நூல்களிலும் இடம் பெற்றிருக்கும் இவரது அனைத்து அறிவிப்பு களையும் இவர் இடம் பெற்ற காரணத்தினால் பலவீனம் எனக் கூற இந்த மேதாவிகள் தயாரா? மேலே பெயர் கூறப்பட்ட நூற்களில் மட்டும் இவரது அறிவிப்புகள் 52 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

ஜகாத் விஷயத்தில் இமாம் அல்பானீ ஸஹீஹ் என்று கூறியுள்ளதை ஆதாரமாகக் காட்டிய சிலரும் மேற்கண்ட ஹதீஸைத் தங்களுடைய சுய இலாபத்திற்காக பலவீனம் என்று கூறி வருகின்றனர். ஆனால் மேற்கண்ட ஹதீஸை அல்பானீ அவர்கள் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். இமாம் அல்பானீ ஸஹீஹ் என்று கூறிய இந்த ஹதீஸை மறுப்பதற்கு இவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? என்பதை அவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

எனவே மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பதே சரியானதாகும்.