வேதத் தூதரின் வேதியியல் விளக்கம்

வேதத் தூதரின் வேதியியல் விளக்கம்

இரு கண்ணாடித் தொட்டிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டிலும் சம அளவில் கலக்கப்பட்ட சுண்ணாம்பு நீரை ஊற்றுங்கள். ஒரு தொட்டியில் சைக்கிள் டயருக்குக் காற்றடிக்கும் பம்பை வைத்து காற்றை ஊதுங்கள். இன்னொரு தொட்டியில் ஸ்ட்ரா மூலம் நீங்கள் காற்றை ஊதுங்கள். என்ன நடக்கின்றது? இரண்டு பாத்திரங்களில் உள்ள சுண்ணாம்பு நீரும் பால் நிறத்தில் மாறும். ஆனால் ஒரு வித்தியாசம் ஏற்படும்.

வாயினால் ஊதிய, அதாவது நமது மூச்சுக் காற்றுடன் கலந்த அந்தச் சுண்ணாம்பு நீர் மிக மிக விரைவாக பால் நிறத்தைப் பெறுகின்றது. ஆனால் நமது சுவாசக் குழாயில் செல்லாத வெளிக் காற்று கலந்த நீர் மெதுவாகவே பால் நிறத்தை அடையும்.

இதில் என்ன மர்மம் அடங்கியிருக்கின்றது? இதை இந்த வரைபடம் உங்களுக்கு விளக்கும்.

மனித இனம், மிருக இனம், தாவர இனம் போன்ற அத்தனை உயிரினமும் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது.

இந்த ஆக்ஸிஜனைப் பெறுவதற்காக நாம் வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுத்து உடனே வெளியே விடுகிறோம்.

நம்முடைய உடல் உயிரணுக்களால் அமைந்தது. ஒவ்வோர் உயிரணுவும் தனக்குரிய பணியைச் செய்து கொண்டிருக்கிறது. இந்த உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் தேவை. அந்த ஆக்ஸிஜன் தான் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமக்குத் தேவையான சக்தியை உயிரணுக்கள் எடுப்பதற்கு உதவுகிறது.

இந்த ஆக்ஸிஜன் காற்று மூலமாக, நாசித் துவாரம் வழியாக நுரையீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நுரையீரலுக்கு வந்த இந்த ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, உயிரணுக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது. அந்த உயிரணுக்கள் ஆக்ஸிஜனைப் பெற்றுக் கொண்டு கெட்ட காற்றை, கார்பன் டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றது. இந்தக் கார்பன்டை ஆக்ஸைடு உடலுக்குள் தங்கினால் அது மிகப் பெரும் கேட்டை உருவாக்கி விடும்.

நாம் உடற்பயிற்சி செய்வதற்காக ஓடுகிறோம். அப்போது நம்முடைய உயிரணுக்கள் மிகக் கடுமையாக வேலை செய்கின்றன. அவற்றுக்கு அப்போது ஆக்ஸிஜன் அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த ஆக்ஸிஜன் தேவைக்கு ஏற்ப இரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கும்.

நாம் ஓடும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ நமது இருதயம் வேகமாக அடிக்கும்; அதன் துடிப்பு அதிகரிக்கும்; நமக்கு மூச்சிறைக்கும். ஏன்? இரத்த வேகத்திற்குத் தக்க இருதயம் செயல்பட்டாக வேண்டும் என்பதால் தான்.

இந்த மூச்சிறைப்பின் காரணமாக அதிகமான உடலிலிருந்து அதிகமான கார்பன்டை ஆக்ஸைடு வெளியாகின்றது. உடற்பயிற்சிகளின் போது நாம் அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறோம். அதிகமான கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். சாதாரண நேரத்தை விட இது போன்ற உடற்பயிற்சிகளின் போது அதிகமான ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, அதற்குத் தக்க கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகிறோம். வேகமாகச் செல்லும் வாகனத்திற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவது போல் நமது உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் என்ற எரிபொருள் தேவைப்படுகிறது.

நம்முடைய உடலில் உயிரணுக்கள் எவ்வாறு ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, கார்பன்டை ஆக்ஸைடை வெளியே விடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இதை எப்போது கண்டு பிடித்தார்கள்?

ஸ்காட்லாண்ட்டின் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞர் ஜோசப் பிளாக்  (1728-1799) என்பவர் 1754ம் ஆண்டு கார்பன்டை ஆக்ஸைடை அடையாளம் கண்டார்.

ஜோசப் பிரிஸ்ட்லே (1733-1804) என்பவர் 1774ம் ஆண்டு ஆக்ஸிஜனைக் கண்டுபிடிக்கிறார்.

ஆக, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடைப் பற்றிய விபரம் 18ம் நூற்றாண்டில் தான் மனித இனத்திற்குத் தெரிய வருகின்றது. இந்த விபரத்தை 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மத் (ஸல்) அவர்களால் எப்படிச் சொல்ல முடியும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (எதையும்) பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறப்புறுப்பை வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூ கத்தாதா (ரலி)

நூல்: புகாரி 153

18ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு செய்தியை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரால் எப்படிக் கூற முடிந்தது?

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த வேதியியல் கருத்தைக் கூறுகிறார்கள் என்றால் அவர்கள் ஓர் இறைத் தூதர் தான் என்பதை இதிலிருந்து நிரூபணமாகின்றது.

அதனால் தான் அவர்கள் கொண்டு வந்த திருக்குர்ஆன், அறிவியல் உலகை நோக்கி இன்றும் உயிரோட்டமான ஓர் அறைகூவலை விடுகின்றது.

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

அல்குர்ஆன் 2:23

நாம் இந்த ஆய்வை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் என்பதற்காக! அதனால் தான், பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சு விட வேண்டாம் என்று இயற்கைக்கு எதிரான இந்தக் காரியத்தை இது தடுக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த ஆய்வுரை இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.