வணக்கத்திலும் அரசியல்

வணக்கத்திலும் அரசியல்

தமுமுகவினர் நம்முடன் இருந்த வரை நமது பிறை நிலைப்பாட்டை ஏற்று, பிறை பார்த்து நோன்பு வைத்து, பிறை பார்த்துப் பெருநாள் கொண்டாடினர். அதன் பின்னர் கடந்த ஆண்டுகளில் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டனர்.

கூறு கெட்டத்தனமாக ஊரை விட்டுப் பிரிந்து தனியாகப் பெருநாள் கொண்டாடியது மக்களிடம் பெரும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இது தங்களின் வாக்குச் சீட்டுக்கு வேட்டு வைத்து விடும்; ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்கு உலை வைத்து விடும் என்று சிந்திக்க ஆரம்பித்தனர். அத்துடன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகைத் திடலுக்கு வரும் கூட்டம் அவர்களுக்கு ஓர் உறுத்தலையும் பொறாமையையும் ஏற்படுத்தியது.

அதற்காக ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கேற்றாற்போல் தவ்ஹீத் ஜமாஅத் 18ஆம் தேதி பெருநாள் அறிவித்தது. அது தான் தாமதம்! அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்தது போல் உடனே கணிப்பைத் தூக்கி எறிந்து விட்டு, குராஃபிகளுடன் சேர்ந்து பெருநாள் கொண்டாடும் முடிவுக்கு வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு வரும் மக்கள் வெள்ளத்தைத் திசை திருப்பி விடலாம் என்ற மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதில் சுன்னத் ஜமாஅத்தினரில் உள்ள நல்லவர்கள், நாம் தனியாகப் பிரிந்து பெருநாள் கொண்டாட நேர்ந்ததை எண்ணி உண்மையில் வருத்தம் அடைந்தனர். ஆனால் இவர்களோ குதூகலம் அடைந்தனர். சில ஊர்களில் பாப்புலர் கோஷ்டியுடன் சேர்ந்து தொழுகை நடத்தினர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்தபடி பெரிதாக ஒன்று கூட்டம் கூடிவிடவில்லை.

தொழுகையில் அரசியல்

இதில் கொடுமை என்னவென்றால், கணிப்பின் அடிப்படையில் 16ஆம் தேதி பெருநாள் தொழுகை தொழுதவர்களும் 17ஆம் தேதி தொழுகையில் வந்து கலந்து கொண்டனர். எதற்காக? முதல் நாள் தொழுதது கொள்கைக்காகவாம். மறுநாள் தொழுதது மக்களுக்குக் கூட்டத்தைக் காட்டுவதற்காகவாம்.

அதாவது, நாங்களும் உங்களோடு தான் பெருநாள் கொண்டாடுகிறோம்; அதனால் எங்களுக்கே ஓட்டுப் போடுங்கள். இதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இருக்க முடியுமா?

இவர்கள் வணக்கத்திலும் அரசியல் ஆதாயம் பார்க்கின்றார்கள். இதிலிருந்து இவர்களது லட்சணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

குர்பானியில் அரசியல்

இவர்களுடைய அரசியல் இத்துடன் நிற்கவில்லை. குர்பானியிலும் அரசியல் வேலையைக் காட்டினார்கள். குர்பானிக்கு ஓர் ஒட்டகத்தை வாங்கிக் கொண்டு, அதில் தங்கள் இயக்கத்தின் பேனரைக் கட்டி, தெருத் தெருவாக ஊர்வலமாகச் சுற்ற வைத்தனர்.

கொடி ஏற்றிய யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வது போன்று தமுமுக பேனரை முதுகில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

ஒட்டகத்திற்குப் பின்னால் வந்த சிறுவர்கள் கூட்டம் இவர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. கூடவே, “உங்கள் ஓட்டு ரயில் இஞ்சின் சின்னத்திற்கே’ என்ற பேனரையும் கட்டியிருந்தால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு உதவியாக இருந்திருக்கும். இது அவர்களுக்கு நினைவில் இல்லை போல் தெரிகிறது. எனவே தமுமுக பேனரை மட்டும் கட்டிக் கொண்டு ஒட்டக ஊர்வலம் நடந்தது.

ஏற்கனவே குமரி மாவட்டத்தில் வீடு வீடாக வசூல் செய்து ஒட்டகக் குர்பானி கொடுத்தவர்கள் தான் இவர்கள்.

இப்படி ஒரு மலிவு விளம்பரத்தையும், மட்டரகமான அரசியலையும் மார்க்க வணக்கத்தில் கொண்டு நுழைக்கும் கழிவு கெட்ட அரசியல்வாதிகளை நாம் இதுவரை கண்டதில்லை.

பொய்யன்டிஜே

தமுமுகவினர் இப்படி வணக்கத்தை அரசியல் வியாபாரமாக ஆக்கி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கையில் பொய்யன்டிஜேயின் ஆட்டம் மிக வித்தியாசமாக அமைந்தது. பிறையைப் பற்றிய மார்க்க ஆய்வுக் களமாக (?) இந்தப் பெருநாளை அமைத்துக் கொண்டது.

தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் மக்களுக்குக் குழப்பம் ஏற்படுத்துவதற்காக தனது அமைப்பின் பெயரை இந்திய அளவில் விரித்தது போன்று பிறையையும் இந்திய அளவில் விரித்து விட்டதாக அறிவித்தனர்.

இந்தியாவில் எங்கு பிறை பார்த்தாலும் ஏற்போம் என்றனர். (அமைப்பு விஷயத்தில் நம்மை ஏமாற்ற நினைத்து, தற்போது ஏமாந்து போய் வழக்கம் போல் மிம்பரில் நின்று அழுது புலம்புவது தனி விஷயம்)

மாலேகான் பிறையை அறிவித்த டவுண் காஜி, தவ்ஹீத் ஜமாஅத்தின் கிடுக்கிப் பிடியில் புழுவாக நெளிந்து கொண்டிருக்கின்றார். இந்த விளக்கெண்ணெய்கள் ஒரு விளக்கமும் இல்லாமல் இந்தியப் பிறை என்று அறிவித்துள்ளனர்.

இவர்களுடைய இந்திய அமைப்பு சந்தி சிரித்தது போல் பிறை அறிவிப்பும் சந்தி சிரிக்கப் போகின்றது. அடுத்த ஆண்டு டவுண் காஜியோ அல்லது சுன்னத் ஜமாஅத்தினரோ இந்தியப் பிறையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இவர்களது நிலை எப்படியிருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

இவர்களது இயக்கத்திலும் தலைமை முஃப்தி அல்லாமா அப்துல் ஹமீது என்பவர், ஊர் பிறை, மாநிலப் பிறை, இந்தியப் பிறை எல்லாவற்றையும் தாண்டி உலகப் பிறைக்கு ஃபத்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஷரீஅத் சட்ட மாமேதையின் (?) ஃபத்வாவையும் தவ்ஹீத் ஜமாஅத் இணைய தளத்தில் அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இதற்கு பொய்யன்டிஜேவினர், பாரதீய ஜனதாவைப் போல் “அது அவரது சொந்தக் கருத்து’ என்று கூறி தப்பிக்க நினைக்கின்றனர்.

பாரதீய ஜனதாவுக்காவது ஒரு கொள்கை, கோட்பாடு இருக்கின்றது. இவர்களுடைய கொள்கை, கோட்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றையெல்லாம் சிந்தித்தால் அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. இவர்களும் நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு அமைப்பு நடத்துவது தான் வேதனை!