வல்லவன் வானத்தில் இருக்கிறான்

வல்லவன் வானத்தில் இருக்கிறான்

இப்படி ஓர் அழகிய உருவமிக்க அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதைப் அறிந்து கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 67:16, 17

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மைஎன்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 2:144

வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் வருடங்கள் அளவுடையது.

அல்குர்ஆன் 32:5

இவ்வசனங்கள் அல்லாஹ் வானத்தில் இருப்பதாகக் கூறுகின்றன. இது தொடர்பான ஹதீஸ்களையும் பார்ப்போம்.

என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்து வந்தாள்.

ஒரு நாள் நான் சென்று பார்த்த போது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்று விட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்து விட்டேன்.  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற போது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்து விடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்!என்று சொன்னார்கள்.

நான் அவளை அழைத்துச் சென்ற போது அவளிடம், “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், “வானத்தில்என்று பதிலளித்தாள். அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்என்றாள். அவர்கள் (என்னிடம்), “அவளை விடுதலை செய்து விடுங்கள்! ஏனெனில், அவள் இறை நம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)

நூல்: முஸ்லிம் 836

வானத்தை நோக்கி ஏறும் மலக்குகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ்வான)வர்களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், “அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்என்று பதிலளிப்பார்கள்.

நூல்: புகாரி 555

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறு சிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவு கூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் – அவர்களை நன்கறிந்திருந்தும் – “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், “பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக் கொண்டும் இருக்கின்றனர்என்று கூறுகின்றனர். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4854

இதே கருத்தில் முஸ்னத் அஹ்மதில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. அதில், “அவர்களில் (மலக்குகளில்) ஒருவர் மற்றறொருவருக்கு மேலாகச் சென்று அர்ஷை அடைந்து விடுகின்றனர்” என்று இடம் பெறுகின்றது. அதாவது வானத்தை நோக்கி ஏறிச் செல்கின்றனர் எனக் கூறப்படுகின்றது. (ஹதீஸ் எண்: 8350)

வானத்து நாயனின் நம்பிக்கையாளர்

அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள். (அந்த நால்வர்) உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல் கைல் (ரலி), நான்காமவர் அல்கமா (ரலி) அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரலி) ஆகியோராவர்.

அப்போது நபித் தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளனஎன்று சொன்னார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 4351

வேண்டாம் வானத்திலிருப்பவனின் கோபம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள் மீது கணவன் திருப்தி கொள்ளும் வரை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2595

வானவனை நோக்கிப் பறக்கும் உயிர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரணிப்பவரிடம் மலக்குகள் வருகின்றனர். அவர் நல்லடியாராக இருந்தால், “நல்ல உடலில் இருந்த நல்ல ஆத்மாவே! வெளியேறுக! புகழப்பட்டதாக வெளியேறுக! நல்லருள், நறுமணம், கோபமடையாத நாயனைக் கொண்டு நீ நற்செய்தி பெறுக!என்று மலக்குகள் கூறுகின்றனர். ஆத்மா வெளியேறுகின்ற வரை இவ்வாழ்த்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும். பிறகு அது வானத்திற்கு ஏற்றப்பட்டு, அதற்காக வானம் திறக்கப்பட்டு, இவர் யார் என விசாரிக்கப்படும். அப்போது அவர்கள், இன்னார் என்று சொல்வார்கள். “நல்ல உடலில் இருந்த நல்ல ஆத்மாவே! வருக! புகழப்பட்டதாக நுழைக! நல்லருள், நறுமணம், கோபமடையாத நாயனைக் கொண்டு நற்செய்தி பெறுக!என்று சொல்லப்படும். மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் இருக்கின்ற வானத்திற்கு இறுதியாக அது கொண்டு செல்லப்படுகின்ற வரை இவ்வாழ்த்து சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இறந்தவர் கெட்ட மனிதராக இருந்தால், “கெட்ட உடலில் இருந்த கெட்ட ஆத்மாவே! வெளியேறுக! இழிவுபடுத்தப்பட்டதாக வெளியேறுக! கொதிநீர், சீழ் சலத்தையும் அதன் ரகத்தில் அமைந்திருக்கும் பல்வேறு வேதனைகளைக் கொண்டும் நீ நற்செய்தி பெறுக!என்று மலக்கு கூறுவார். ஆத்மா வெளியேறுகின்ற வரை இந்த இழியுரை சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும். பிறகு அது வானத்திற்கு ஏற்றப்படும். ஆனால் அதற்கு வானம் திறக்கப்படாது. “இது யார்?” என்று விசாரிக்கப்படும். இன்னார் என்று சொல்லப்படும். அப்போது, “கெட்ட உடலில் இருந்த கெட்ட ஆத்மாவுக்கு எந்த வரவேற்பும் இல்லை. நீ இழிவுபடுத்தப்பட்டதாகத் திரும்பு! ஏனெனில் உனக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படாதுஎன்று சொல்லப்படும். வானத்திலிருந்து அது திரும்ப அனுப்பப்பட்டு பிறகு கப்ருக்குள் சென்று விடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: இப்னுமாஜா 4252

மனித உயிர் கைப்பற்றப்பட்டதும் வானத்திற்கு மேல் இருக்கும் அல்லாஹ்விடம் செல்கின்றது என்பதை இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்து விட்டால், வானவர்கள் இறைக் கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும் போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்களிடம்) “நம் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றார்கள்.

அதற்கு அவர்கள் வினவியோரிடம், “(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் -அவன் உயர்ந்தவன்; பெரியவன்”- என்று கூறுவர். ஷைத்தான்கள் ஒருவர், மற்றொருவருக்கு மேல் இருந்து (ஒட்டுக் கேட்டுக்) கொள்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 4800, திர்மிதி 3147

வானுலக் செய்திகள்

அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்:

ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் “இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மாமனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்என்று பதிலளித்தனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால், அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது.

பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றனர். அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறு சிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர்.

முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. உள்ளது உள்ளபடி சோதிடர்கள் தெரிவிப்பது உண்மையாகும். ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4136

குறிப்பு: இது ஆரம்பத்தில் இருந்த நிலையாகும். பின்னர் ஒட்டுக் கேட்பதில் இருந்து தடுக்கப்பட்டு விட்டனர். இப்போது சோதிடர்கள் கூறுவது நூற்றுக்கு நூறு பொய்யாகும். இதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

(ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார். (அல்குர்ஆன் 72:9)

வானை நோக்கி ஏறும் வார்த்தைகள்

யாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும்.

அல்குர்ஆன் 35:10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் சில வானவர்களும், பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து (இறங்கி) வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்றுசேருகின்றார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றார்கள். அவர்களிடம் அல்லாஹ் “என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்?” என்று -உங்களைப் பற்றி அவன் நன்கறிந்த நிலையிலேயே- கேட்கின்றான். “அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம்; அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7429

இவை அனைத்தும் நம்மைப் படைத்த ரட்சகன் வானில் இருக்கிறான் என்று எடுத்துக் கூறுகின்றன.